இரவின் அமைதியில் சில நேரங்களில் சுவர்களில் மோதி எதிரொலிக்கும் கடிகாரத்தின் ‘டிக் டிக்’ சத்தம்கூட பெரும் இடிமுழக்கமாக உருவெடுப்பது உண்டு. ஆனால், அதைவிட அச்சுறுத்தலானது நம் இதயத்திற்கு நெருக்கமான மனிதரின் வாயிலிருந்து புறப்படும் பேச்சற்ற மௌனம்.
சில
காயங்களுக்குச் சத்தம் இருக்கும்; சில காயங்களுக்குச் சத்தமே இருக்காது. கத்தியால் ஏற்பட்ட காயத்தைப் பார்க்கலாம்; கடுமையான வார்த்தையால் ஏற்பட்ட காயத்தை நினைவுகூரலாம். ஆனால், ஒருவர் நம்மிடம் பேசாமல் விட்டுச் சென்ற காயத்தை எங்கே போய் தேடுவது?
வடுக்கள்
பெரும்பாலும் வார்த்தைகளால் ஏற்படுகின்றன. அதனால்தான் கடுமையான சொற்கள், அவமானப்படுத்துதல், திட்டுதல், கோபமான பேச்சு போன்றவை மட்டுமே மனித மனத்தைக் காயப்படுத்துவதாக எண்ணுகிறோம்.
சொல்
என்பது ஒரு கொடை. அது நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள மாபெரும் பொறுப்பு. சொற்களுக்கு வாசனை இல்லாமல் இருக்கலாம்; எடையும் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவற்றிற்குக் கத்தியைவிடக் கூர்மையான முனையும், அம்பைவிட ஆழமாகத் துளைக்கும் வலிமையும் உண்டு.
‘ஒரு சொல் கொல்லும்; ஒரு சொல் வெல்லும்’
என்பார்கள். அதனால்தான் தெய்வப் புலவர் திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே,
‘தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால்
சுட்ட வடு’
(குறள் 129)
என்று
பதிவு செய்தார். ஆனால், இந்தக் குறளில் நாம் கவனிக்கத் தவறிய மறுபக்கம் ஒன்று உண்டு; அது நாவினால் சுட்ட வடு மட்டுமல்ல, நாவைத் திறக்காததால் ஏற்பட்ட வடுவும்கூட!
சில
வடுக்கள் நாம் கேட்ட வார்த்தைகளால் வந்தவை; சில வடுக்கள் நாம் கேட்காத வார்த்தைகளால் வந்தவை. ஆம், சொல்லப்பட்ட வார்த்தையைவிட, சொல்லப்படவேண்டிய நேரத்தில் சொல்லப்படாத ஒரு வார்த்தையே மனித மனங்களை அதிகமாகக் காயப்படுத்துகிறது. ஒருவரைப் பேசாமல் ஒதுக்கிவிடுவதும், நேர்மையின் பக்கத்தில் நிற்கவேண்டிய இடத்தில் அமைதி காப்பதும் தண்டனையின் உச்சபட்ச வடிவம்!
ஒருவர்
நம்மிடம் கோபமாகப் பேசியதைக்கூட ஏதோ ஒருநாளில் நாம் மறந்துவிடலாம்; கோபத்தின் காரணம் புரியும்போது மன்னிப்பும் வழங்கப்படலாம். ஆனால், நாம் அழுதபோது அருகில் இருந்தும் பேசாமல் இருந்தவர், நாம் எதிர்பார்த்தபோது வராமல் இருந்தவர், நாம் தோல்வியடைந்தபோது ஒரு வார்த்தை ஆறுதல் சொல்லாதவர், நம்மைப் பலரும் குற்றப்படுத்தியபோது நமக்காக ஒரு வார்த்தைகூட பேசாதவர் - இவர்களின் மௌனம் சொல்லப்பட்ட ஆயிரம் வார்த்தைகளைவிட ஆழமாகக் காயப்படுத்துகிறது.
‘பேசாதிருந்தீரோ? பேடிமை கொண்டீரோ?
சாத்திரங்கள்
சொன்னீர்;
சபையினிலே
நீதி சொன்னீர்;
மாபாதகம்
நடக்கும் போதினிலே மௌனமுற்றீர்!’
- மகாகவி
பாரதியாரின் ‘பாஞ்சாலி சபதம்’ வரிகள் இவை. அநீதி நடக்கும் அவையில் மாபெரும் சான்றோர்களும் வீரர்களும் வாய்மூடி மௌனமாக இருந்த பேடிமையைக் கண்டு பாஞ்சாலி எழுப்பிய உணர்வுமிக்க அந்த வினாக்கள் இன்றளவும் அநீதிக்கு எதிராக ஒலிக்கும் சாட்டையடிகள்!
‘உங்களை நான் ரொம்ப நம்பினேன். என்னைப் பற்றி உங்களுக்கு நன்றாகாவே தெரியும். அப்படி இருக்கும்போது ஒரு வார்த்தை எனக்காகப் பேசியிருக்கலாமே!’ - இந்த ஒரு வாக்கியத்திற்குள் எத்தனை ஆண்டுகளின் அன்பு இருக்கிறது! எத்தனை நம்பிக்கை இருக்கிறது! எத்தனை ஏமாற்றம் இருக்கிறது!
ஒரு
குழந்தை பள்ளியில் தோல்வியடைந்து வீட்டிற்கு வருகிறது. தன் தந்தையிடம் ஏதோ சொல்ல வருகிறது. தந்தையோ கைப்பேசியில் மூழ்கியிருக்கிறார். ‘பிறகு பேசலாம்’ என்றுகூட சொல்லவில்லை; ஒரு பார்வையும் இல்லை. குழந்தை எதுவும் சொல்லாமல் தன் அறைக்குள் செல்கிறது. அன்று வீட்டில் எந்தக் கடுமையான வார்த்தையும் பேசப்படவில்லை. ஆனால், ஓர் ஆறாத வடு உருவாகிவிட்டது. அந்தக் குழந்தை தந்தையிடம் எதிர்பார்த்தது ‘சரி பரவாயில்லை, அடுத்தமுறை பார்த்துக்கொள்ளலாம்’ என்ற
ஒரு வார்த்தையாகக்கூட இருக்கலாம். ஆனால், ‘நான் தோற்றபோது என்னுடன் யாரும் இல்லை’ என்ற அந்த வலி, அந்தக் குழந்தை வளர்ந்த பிறகும் தொடரலாம்.
ஒரு
மகள் திருமணத்திற்குப் பிறகு தன் தாயிடம் தொலைப்பேசியில் கணவன் வீட்டில் சந்திக்கும் ஒரு பிரச்சினையைப் பகிர்ந்துகொள்கிறாள். அவளுக்குத் தீர்வு வேண்டியதில்லை; ‘நீ தனியாக இல்லை,
நான் இருக்கிறேன்’ என்று
தாய் சொல்லும் ஒரு வார்த்தை மட்டுமே. ஆனால் தாயோ, ‘அது உன் குடும்ப பிரச்சினை, நீயே பார்த்துக்கொள்’ என்று
சொல்லி உரையாடலை முடித்துவிடுகிறார். அந்த மகள் அடுத்த முறை தனது கண்ணீரைத் தாயிடம் சொல்லாமல் போகலாம். அவள் தாயை வெறுப்பதால் அல்ல; தனது வலியை எடுத்துச் சென்றபோது, அங்கே தனக்கான இடம் இல்லை என்பதை உணர்ந்ததால்.
குடும்பங்களில்
இப்படித்தான் பல மௌனங்கள் மெதுவாகச்
சுவர்களாக மாறுகின்றன. பேசாமல் இருப்பது எப்போதும் அமைதி அல்ல; சில நேரங்களில் அது சொல்ல முடியாத கோபம், சில நேரங்களில் பழிவாங்குதல், சில நேரங்களில் ‘நீ எனக்கு முக்கியமில்லை’ என்று
சொல்லும் வார்த்தையற்ற வன்முறை.
சமூகத்திலும்
இந்த மௌனத்தின் வடுக்கள் ஆழமாகவே இருக்கின்றன. ஒருவரை அவமதிப்பது மட்டும் அநீதி அல்ல; அவருக்கு அநீதி நடக்கும்போது உண்மை தெரிந்தும் பார்த்துக்கொண்டிருப்பதும் ஒரு கேள்விக்குரிய மௌனம். சில நேரங்களில் அநீதிக்கு எதிராகச் சொல்லப்படும் ஒரு வார்த்தை, ஒரு மனிதனுக்கு நீதியை மட்டும் தருவதில்லை; அவர் ‘இன்னும் தனியாக இல்லை’ என்ற நம்பிக்கையையும் தருகிறது.
வீட்டில்
ஒருவர் மௌனமாக இருக்கும்போது, ‘அது அவருடைய இயல்பு’ என்று கடந்து செல்லாமல், ‘அவருடைய உள்ளத்தில் என்ன நடக்கிறது?’ என்று கேட்கவேண்டும். ஒருவேளை நம் வீட்டில் யாரோ ஒருவர் நம்மிடம் பேசுவதை நிறுத்தியிருக்கலாம். அவர்மீது கோபப்படுவதற்கு முன் ஒருமுறை நம்மையே கேட்போம்:
“அவர் பேச வந்தபோது நான் எத்தனை முறை கேட்காமல் இருந்தேன்?”, “அவர் என்னை நம்பி வந்தபோது நான் எத்தனை முறை அமைதியாக இருந்தேன்?”, “அவருக்காக ஒரு வார்த்தை பேச வேண்டிய நேரத்தில் நான் எங்கே இருந்தேன்?”
இந்தக்
கேள்விகள் எளிதானவை அல்ல; ஆனால், உடைந்த உறவுகளை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டுமென்றால், இந்தக் கேள்விகளிலிருந்துதான் தொடங்கவேண்டும்.
ஏனெனில்,
நாம் பேசிய சில வார்த்தைகளுக்காக மன்னிப்பு கேட்டுவிடலாம். ஆனால், பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் விட்டதற்காக யாரிடம் போய் மன்னிப்பு கேட்பது? சில நேரங்களில் சொல்லாமல் விட்ட ஒரு வார்த்தை, பல ஆண்டுகளாக உருவாக்கிய
இடைவெளியை எப்படி அளப்பது? நாம் பேசாமல் விட்ட வார்த்தைகளை நாம் மறந்துவிடலாம்; ஆனால், அந்த வார்த்தைக்காகக் காத்திருந்தவர்கள்? அவர்கள் மறக்கவே மாட்டார்கள். அந்த மௌனம் அவர்களுடைய மனத்தில் இன்னும் ஆறாத காயமாக உயிரோடு இருக்கலாம்.
அதனால்தான்,
இன்றே பேச வேண்டியவர்களிடம் பேசிவிடுவோம். நம்மை நேசிப்பவர்களிடம் ‘நான் உன்னை நம்புகிறேன்’, ‘நீ
தனியாக இல்லை’,
‘என்ன நடந்தாலும் பேசலாம்’,
‘நான் இருக்கிறேன்!’ என்று சொல்லத் தயங்கவேண்டாம். இந்தச் சிறிய வார்த்தைகள் ஒரு மனிதரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மருந்தாக மாறும்.
சில
காயங்களுக்கு மருந்துகள் தேவை; ஆனால், பல காயங்களுக்கு ஒரே
ஒரு வார்த்தை மட்டும் போதும் - ‘நான் இருக்கிறேன்!’ இந்த வார்த்தையைச் சொல்லவேண்டிய நேரம் கடந்துபோவதற்கு முன் சொல்லிவிடுவோம்.
ஏனெனில்,
வடுக்கள்... எல்லாம் கத்துவதில்லை; சில வடுக்கள் அமைதியாக அழுகின்றன. சில வடுக்கள் ஒரு வார்த்தைக்காகக் காத்திருக்கின்றன! ஆனால், சில வடுக்கள் இன்னமும் நம்மை நோக்கிப் பேசிக்கொண்டிருக்கின்றன!
நமது தாய்ப்பூமி இதுவரை இல்லாத அளவிலான அழுத்தத்தை எதிர்கொண்டு வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவிலான வெப்பம், அழிவை ஏற்படுத்தும் வெள்ளங்கள், வறட்சிகள், காட்டுத்தீ மற்றும் பிற தீவிர வானிலை நிகழ்வுகள், காலநிலை அமைப்பு பெருகிய முறையில் நிலையற்றதாகி வருவதை எச்சரிக்கின்றன.
வெப்பமயமாதலின்
ஒவ்வொரு கூடுதல் சிறு அளவும் மனித உயிர்களுக்கு ஏற்படும் அபாயங்களை அதிகரிக்கிறது; சமத்துவமின்மையை மேலும் ஆழப்படுத்துகிறது. மேலும், சூழலியல் அமைப்புகளின்மீது அதிகரித்து வரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. எனவே, காலநிலை நெருக்கடி என்பது வெறும் சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டுமல்ல; அது உயிர்வாழ்வு, நீதி மற்றும் நமது பொதுவான எதிர்காலம் குறித்த கேள்வியாகும்.
பூமி
சுமார் 450 கோடி ஆண்டுகள் பழமையானது; ஆனால், ஹோமோ சேப்பியன்ஸ் (நவீன மனித இனம்) சுமார் 3 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றியது. வேளாண்மை சுமார் 10,000 முதல் 12,000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இதன் மூலம் நிலையான மனிதக் குடியிருப்புகள் செழிக்கத் தொடங்கின. காலப்போக்கில், மனிதச் சமூகங்கள் இயற்கை வளங்களை அதிக அளவில் மாற்றியும் சுரண்டியும் வந்துள்ளன. தொழில்துறைப் புரட்சிக்குப் பின்னர் குறிப்பாக, புதைபடிவ எரிபொருள்களைப் பிரித்தெடுத்து எரிப்பதன் மூலம் இந்தச் சுரண்டலின் அளவும் வேகமும் மிகப்பெரிய அளவில் அதிகரித்தன.
பூமியின்
புவியியல் வரலாற்றில் இயற்கைக் காரணிகளான விண்கல் மோதல்கள், எரிமலைச் செயல்பாடுகள் மற்றும் பெரிய அளவிலான காலநிலை மாற்றங்கள் போன்றவற்றால் ஏற்பட்ட ஐந்து முக்கியமான பேரழிவு, இன அழிவு நிகழ்வுகளை
அறிவியலாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
இன்று,
மனிதச் செயல்பாடுகள் முன்னெப்போதும் இல்லாத அளவில் உயிரினப் பல்வகைமையை இழக்கச் செய்கின்றன என்று அறிவியலாளர்கள் எச்சரிக்கின்றனர். இந்த நெருக்கடி பெரும்பாலும் ஆறாவது பேரின அழிவு என விவரிக்கப்படுகிறது. நிலைத்தன்மையற்ற நுகர்வு, வாழிட
அழிவு, மாசுபாடு, வளங்களின் அளவுக்கு மீறிய சுரண்டல் மற்றும் பசுமைக்குடில் வாயு உமிழ்வுகள் ஆகியவை இதற்கான முக்கியக் காரணிகளாகும்.
காலநிலை
நெருக்கடி ஏற்கெனவே மனிதர்களுக்கும் சூழலியலுக்கும் தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன. வெப்ப அலைகள், காட்டுத்தீ, வெள்ளங்கள், வறட்சிகள் மற்றும் மாறி வரும் மழைப்பொழிவு முறைகள் ஆகியவை சுகாதாரம், வாழ்வாதாரம், வேளாண்மை, நீர்ப்பாதுகாப்பு, உயிரினப் பல்வகைமை மற்றும் மீன்வளங்களை அச்சுறுத்துகின்றன. காலநிலை மாற்றம் சில தொற்று நோய்கள் பரவுவதற்கு ஏற்ற சூழ்நிலைகளையும் அதிகரிக்கக்கூடும். குறிப்பாக, சுற்றுச்சூழல் சீரழிவும் மனிதர்கள், வனவிலங்குகள் இடையேயான தொடர்புகளும் அதிகரித்து, வெளிப்பாட்டை உயர்த்தும் இடங்களில் இது நிகழலாம். ஒன்றோடொன்று தொடர்புடைய இந்த நெருக்கடிகள், மனிதர்களின் நலனையும் பூமியின் நலனையும் பிரித்துப் பார்க்க முடியாது என்பதை நினைவூட்டுகின்றன.
உருவாகி வரும்
எல்
நினோ
அச்சுறுத்தல்
இந்தப்
பின்னணியில், 2026-ஆம் ஆண்டில் உருவாகி வரும் ‘எல் நினோ’ நிகழ்விற்குத் தீவிரக் கவனம் தேவை. ‘எல் நினோ’ என்பது மீண்டும் மீண்டும் ஏற்படும் ஒரு காலநிலை நிகழ்வாகும். மத்திய மற்றும் கிழக்கு வெப்ப மண்டல பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்திற்கு மாறாக அதிகரிப்பதுடன், வர்த்தகக் காற்று மற்றும் வளிமண்டலச் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்களும் இதனுடன் இணைந்திருக்கும். இந்த மாற்றங்கள் உலகின் பல பகுதிகளில் பல
மாதங்களுக்கும், சில சமயங்களில் அதற்கும் மேலான காலத்திற்கும் மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலை முறைகளை மாற்றக்கூடும்.
உலக
வானிலை அமைப்பு (WMO) தெரிவித்துள்ளபடி, ஆகஸ்டு 2026-க்குள்
எல் நினோ உறுதியாக நிலைபெற்றிருந்தது. மேலும், அது தொடர்ந்து வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. WMO-வின் அண்மைய
முன்னறிவிப்பு, ‘எல் நினோ’ பிப்ரவரி 2027 வரை நீடிக்கும் சாத்தியம் கிட்டத்தட்ட 100% எனக் குறிப்பிடுகிறது.
இந்த நிகழ்வு 2026-ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் உச்சத்தை அடையும் முன் மிகவும் வலுவான நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் - நவம்பர் 2026 காலத்திற்கான முன்னறிவிப்புகள், நினோ 3.4 கடல் மேற்பரப்பு வெப்பநிலை மாறுபாடு சுமார் 3.6°C ஆக இருக்கும்
எனக் காட்டுகின்றன. இருப்பினும், வட்டாரத் தாக்கங்கள் மாறுபடும்.
சொற்களைத்
துல்லியமாகப் பயன்படுத்துவது முக்கியம். ‘சூப்பர் எல் நினோ’ என்பது பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாகும். ஆனால், WMO இதை அதிகாரப்பூர்வ
அறிவியல் வகைப்பாடாகப் பயன்படுத்துவதில்லை. தற்போதைய நிகழ்வை ‘மிகவும் வலுவான எல் நினோ’ என்று குறிப்பிடுவதே பொருத்தமானது. மேலும், எல் நினோவின் வலிமை ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒரே அளவிலான தாக்கத்தைத் தானாகவே ஏற்படுத்தும் என்று பொருள்கொள்ள முடியாது. உள்ளூர் விளைவுகளையும், பிற காலநிலைக் காரணிகளையும் சார்ந்துள்ளன.
மிகவும்
வலுவான எல் நினோ, மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலை முறைகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் சாத்தியத்தை அதிகரிக்கக்கூடும். உலகின் வெவ்வேறு பகுதிகளில் தீவிர வெப்பம், வறட்சி மற்றும் கனமழைக்கான அபாயங்களும் அதிகரிக்கலாம். இந்தியப் பெருங்கடல் இருமுனை நிலை (Indian Ocean Dipole) போன்ற பிற காலநிலை இயக்கிகளுடனான தொடர்பு, வட்டாரச் சூழலின் தாக்கங்களை மேலும் மாற்றக்கூடும். எனவே, முன்கூட்டிய எச்சரிக்கை, உள்ளூர் தயார்நிலை மற்றும் அறிவியல் அடிப்படையிலான திட்டமிடல் ஆகியவை அத்தியாவசியமானவை.
தற்போதைய
நிலைமை நம்மிடையே அச்சத்தை உருவாக்கக்கூடாது; ஆனால், தயார் நிலையை உருவாக்கவேண்டும். அரசுகள், வெப்ப அலைகள், வெள்ளங்கள், வறட்சிகள், பயிர் இழப்புகள், நீர் பற்றாக்குறை, காட்டுத்தீ, பொதுச் சுகாதார அவசரநிலைகள், உயிரினப் பல்வகைமை இழப்பு மற்றும் மீன்வளங்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கான தயார்நிலையை வலுப்படுத்தவேண்டும். உள்ளாட்சி நிர்வாகங்கள், முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களைச் சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். பள்ளிகள், மருத்துவமனைகள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பேரிடர் மீட்பு அமைப்புகள் நடைமுறைக்கு ஏற்ற அவசரத் திட்டங்களை வைத்திருக்கவேண்டும்.
சமூக
மற்றும் தனிநபர் மட்டங்களில், நாம் தண்ணீரைச் சேமிக்கலாம்; மரங்களையும், உள்ளூர் சூழலியல் அமைப்புகளையும் பாதுகாக்கலாம்; தேவையற்ற ஆற்றல் நுகர்வைக் குறைக்கலாம்; வீணான நுகர்வைத் தவிர்க்கலாம்; காலநிலைத் தாக்கங்களைத் தாங்கக்கூடிய வேளாண்மையை ஆதரிக்கலாம்.
மிக
முக்கியமாக, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அடிப்படையில் வாழ்வாதாரப் பிரச்சினைகளே என்பதை நாம் உணரவேண்டும். அரசியல், பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகள் அரசுகளும் நிர்வாகங்களும் மாறும்போது மாறக்கூடும்; ஆனால், சூழலியல் சேதம் பல தசாப்தங்களுக்கும், சில சமயங்களில்
பல தலைமுறைகளுக்கும் நீடிக்கக் கூடும். நீர், மண், காடுகள், உயிரினப் பல்வகைமை மற்றும் நிலையான காலநிலை ஆகியவை சீரழிக்கப்படும்போது, மனித வாழ்வின் அடித்தளங்கள் பலவீனமடைகின்றன.
சூழலியல்
மனமாற்றத்திற்கான ஓர் அழைப்பான காலநிலை நெருக்கடி, நமது கொள்கைகளை மட்டுமல்லாமல் நமது வாழ்வியல் முறையையும் மாற்றுமாறு நமக்குச் சவால் விடுக்கிறது. அளவுக்கு மீறிய நுகர்வைவிட போதுமான தன்மையையும், சுரண்டலைவிட பொறுப்பான பாதுகாப்பையும், தனிமனிதவாதத்தைவிட ஒற்றுமையையும் மதிக்கும் ஒரு பண்பாடு நமக்குத் தேவை.
காலநிலை
நடவடிக்கை என்பது நீதிக்கான நடவடிக்கையாகவும் இருக்கவேண்டும்; ஏனெனில், உலக வெப்பமயமாதலுக்கு மிகக் குறைவாகப் பங்களித்தவர்களே அதன் விளைவுகளை மிகக் கடுமையாகச் சந்திப்பவர்களாகப் பல நேரங்களில் உள்ளனர்.
அக்டோபர் ஆறாம் தேதி மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ளன. 2026 - சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. இவ்விரு தொகுதிகளிலும் வென்றது. வெற்றி வேட்பாளர்கள் சட்டசபையைக் கூட எட்டிப் பார்க்காமல் எண்ணி இருபது நாள்களில் தங்கள் பதவியைத் துறந்தார்கள். ‘ஏன் பதவி விலகினார்கள்?’ என்ற கேள்விக்கு அவர்களிடமோ, எவரிடமோ பதில் இல்லை.
எதிர்க்கட்சிகள் இடைத்தேர்தல்கள் குதிரைபேர அரசியலின் பிரதிபலிப்பு என்கிறார்கள். இடதுசாரிகள், ‘பாரதிய சனதா கட்சியின் குதிரை பேரத்திற்கும், அ.தி.மு.க.-வின் சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி விலகலுக்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன; அதைக் குதிரைபேரம் என்று உறுதியாகக் கூறமுடி யாது’ என வெளியிலிருந்து வழக்கம்போல் ஆதரவு தருகிறார்கள். இருப்பினும், ‘இந்த இடைத்தேர்தல் இயற்கையானது அல்ல; திணிக்கப்பட்ட தேர்தல்’ எனவும் இடதுசாரிகள் வர்ணிக்கிறார்கள்.
இடதுசாரி அணியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் மற்றும் லெனினிஸ்ட்) கட்சிகள், இணைந்து புதிய கூட்டணியாகக் களம் காண்கிறார்கள். சில தமிழ்த் தேசிய அமைப்புகளும் இவர்களுக்கு ஆதரவு தருகிறார்கள்.
தமிழ்நாட்டு இடைத்தேர்தல் களத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, த.வெ.க. கூட்டணி, ‘நாம் தமிழர்’ கட்சி என நான்கு அணிகளோடு, இடதுசாரிகள் என ஐந்து முனைப் போட்டி நடைபெறுகிறது. த.வெ.க. வினர் கடைசி இரண்டு நாள்களில் ஒரு தொகுதிக்கு ஒருநாள் என நடைபெறும் முதல் வரின் ‘மாஸ்’ பிரச்சாரத்தால் வெற்றி பெறுவோம் என அதீத நம்பிக்கையில் உள்ளார்கள்.
விதிவிலக்கு நிகழ்வுகளைத் தவிர்த்து, அண்மைக் காலங்களில் நடந்த இடைத்தேர்தல் வெற்றி என்பது, ஆளுங்கட்சிக்குச் சாதகமானது என்பதால், அந்தப் பொன் விதியை த.வெ.க.-வினர் முழுவதும் நம்புகிறார்கள். த.வெ.க. முன்னோடிகளுக்கு ஆளும் அரசு அறுதிப் பெரும்பான்மை பெறுவதில் இவ்விரு தொகுதிகளின் வெற்றி முக்கியம், என்பதால் ஆள், அம்பு, சேனை என வலுவாகக் களம் வருவார்கள்.
தி.மு.க.-வைப் பொறுத்தவரை, ஆளுங் கட்சியை அசைத்துப் பார்க்க கிடைத்த வாய்ப்பை நழுவவிடமாட்டார்கள். ஐம்பது வாக்காளருக்கு ஒரு கழகப் பொறுப்பாளர் எனத் தங்கள் நுண் மேலாண்மைத் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டார்கள். கடந்த தேர்தலில் தாராபுரத்தில் ஒன்றிய அமைச்சர் முருகனைத் தோற்கடிக்க சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர் என மொத்த வாக்கு வங்கிகளைக் குறிவைத்து ஒருங்கிணைத்த முன்மாதிரியைப் பின்பற்றத் தொடங்கிவிட்டார்கள்.
அ.தி.மு.க. வென்ற தொகுதியை விட்டுவிட முடியாது. இவ்விரு தொகுதி இடைத்தேர்தல் வெற்றிகளும் கட்சித் தொண்டர்களுக்குப் புத்துயிர் அளிக்கும் என்பதால் அ.தி.மு.க.வும் களத்தில் போராடும். மதுராந்தகம் தொகுதியைப் பொறுத்தவரை பாட்டாளி மக்கள் கட்சி வாக்குகள் அ.தி. மு.க.வை வெற்றிக்கோட்டிற்கு நகர்த்தும் என நம்புகிறார்கள். உள்கட்சிப் பூசல்கள் என்ற பின்னடைவை மறுக்க முயலாது எனப் பத்திரிகை நண்பர்கள் மெல்ல கூறுகிறார்கள்.
‘நாம் தமிழர்’ கட்சியின் தேர்தல் பிரச்சாரம், பொதுக் கருத்து உருவாக்கம், தமிழ் - தமிழர் என்பதில் களம் நெருப்பாய் இருக்கும். ஐந்தாவது அணியான இடதுசாரிகள் மற்ற பெரும் கட்சிகளின் அழுத்தங்களை மீறி கரையேறுவது கடினம்.
2026
- சட்டமன்றத் தேர்தலில் மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதி வாக்குகளை ஆய்வோம்.
அ.தி.மு.க., தி.மு.க., த.வெ.க. என மூன்று அரசியல் கட்சிகளும் பத்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஒன்றையொன்று மெதுவாகக் கீழ் இழுத்துள்ளன. ஆகவே கூட்டணிகள் மாற்றத்தால் எதுவும் நடக்க வாய்ப்புகள் அதிகம்.
2026-சட்டமன்றத் தேர்தலில் தாராபுரம் (தனி) அ.தி.மு.க. வேட்பாளருக்கும், அடுத்து வந்த தி.மு.க. வேட்பாளருக்கும் 16,727 வாக்குகள் வித்தியாசம் உள்ளன. அடுத்த த.வெ.க. வேட்பாளர் வெற்றி வேட்பாளரைவிட 34,662
வாக்குகள் குறைவாகப் பெற்றுள்ளார். இப்பெரு வெற்றி வாக்குகளை எப்படி தி.மு.க. மற்றும் த.வெ.க. மெல்லத் தள்ளி முன்னேறும் என்பது பெருங்கேள்வியாகும்.
2026
- சட்டமன்றத் தேர்தலுக்கும், அக்டோபர் மாதத் தேர்தலுக்கும் ஏறக்குறைய ஆறு மாதங்கள் இடைவெளி உள்ளன. தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பெருங்கூட்டணியாக இருந்த தி.மு.க., தே.தி.மு.க., கொங்கு நாடு மக்கள் கட்சி, மக்கள் நீதிமையம், இரு இஸ்லாமிய அமைப்புகள் எனத் தேர்தல் களத்தில் நிற்கிறது. அ.தி.மு.க. அணியோ, எந்த மாற்றங்களும் இல்லாமல் இடைத் தேர்தலில் பலம் காட்டுகிறது.
த.வெ.க.-வைப் பொறுத்தவரை ஆளுங்கட்சி என்ற அரசு இயந்திர பலத்தோடு காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மறுமலர்ச்சி தி.மு.க., ஐ.யூ.எம்.எல்.ஏ. எனத் தன் புதிய கூட்டணியோடு இரு தொகுதிகளிலும் வென்றுவிடுவோம் என மார்தட்டுகிறார்கள்.
த.வெ.க. ஆட்சி அமைந்து நான்கு மாதங்கள் கடந்து, ஐந்தாவது மாதம் நடக்கிறது. இடைப்பட்ட இந்த நாள்களின் நாட்டு நடப்பைக் காண்போம். மக்களின் முக்கியப் பிரச்சினை விலைவாசி உயர்வாகும். உணவுப் பொருள்களின் விலை 20 விழுக்காடு உயர்ந்துவிட்டது. விலைவாசி கட்டுப்படுத்தப்படவில்லை என்பதே உண்மையாகும். 200 யூனிட் இலவச மின்சாரம் என்றாலும், மின் கட்டணம் இரு மடங்காகிவிட்டது என்ற பொதுமக்களின் குரல்களைப் பின்தள்ள இயலாது. மாநிலம் முழுவதும் பல மணிநேர மின்வெட்டு, குறைந்த அழுத்த மின்சாரம் என்ற புகார்களுக்கு விடிவு இல்லை என்பதே நடப்பாகும். கடந்த ஆட்சியில் நடந்த சட்டம்-ஒழுங்கை விமர்சித்த முதல்வர், இன்று அது சமூகம் சார்ந்த பிரச்சினை, தனிமனித ஒழுக்கம் சார்ந்தது, போதைப் பழக்க விளைவுகள் எனப் பின்வாங்குகிறார்.
விவசாயக் கடன் ரத்து, காவிரி நீரில் கர்நாட காவில் இருந்து உரிய பங்கைப் பெறாமல் விட்டது, மேகதாது அணை பிரச்சினை, முதல்வரின் உள்வட்ட நபர்களுக்கு அரசு பதவி வழங்கியது எனக் கடும் குற்றச்சாட்டுகளை த.வெ.க. அரசு எதிர்கொண்டுள்ளது. முதல்வர், அமைச்சர்கள், ஆளும் சட்டமன்ற உறுப்பினர்களின் மொழியறிவு, அடிப்படை அறிவு குறித்த சட்டசபை நிகழ்வுகள், வெறுப்பு அரசியல் என்ற வாதங்கள் அடுக்கப்படுகின்றது. நடைபெறுகிற இடைத்தேர்தல்கள் கூட குதிரைபேர அரசியலின் பின்விளைவு எனக் கண்டனங்கள் எழுகின்றன.
த.வெ.க. ஆட்சிக்கு வந்த பின்பு வரும் இடைத் தேர்தல் என்பதால் மாநில அரசின் மீதான மக்கள் கொண்ட நம்பிக்கையின் ‘எடைத் தேர்தலாகும்.’ ஆளும் தரப்பும் எதிர்தரப்பும் தேர்தல் பிரச்சாரங்களில் தங்கள் தரப்பு நியாயங்களை வைக்கலாம். தேர்தல் சனநாயகத்தில் மக்களே இறுதி எஜமானர்கள் என்பதால் அவர்கள் தீர்ப்பே இறுதித் தீர்ப்பாகும்.
ஒவ்வொரு குடிமகனும் தங்கள் வாக்கின் வலிமையை அறிந்து வாக்களித்தால், இந்திய சனநாயகம் வலிவும் பொலிவும் பெறும். அது இடைத் தேர்தல்களுக்கும் பொருந்தும்.
மனித மனம், நீர்க்குமிழி போன்றது. ஆகவே அது எளிதில் உடைந்துவிடுகிறது. உடைந்த மனத்தின் வலிகள் கவிதை வரிகளாகின்றன:
எதிரில்
வந்தால்..
எவரையும்,
ஞாபகம்
வரக் கூடாது.
அந்த
அளவிற்கு..
மறக்கவேண்டும்.
மனிதர்களை...’
இந்திய
அளவில் 153 மில்லியன் மூத்த குடிமக்களின் அழுகுரல் இவ்வாறே ஒலிக்கிறது. இந்திய
மக்களின் 10 விழுக்காட்டினரான மூத்தோரின் குரலைப்
புறந்தள்ள இயலாது. 2036-இல் மூத்தோர் எண்ணிக்கை 20 விழுக்காடாக உயரும் எனப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் தற்போதே 20 விழுக்காடு மூத்த குடிமக்கள் உள்ளனர். உலகில் முதலிடமாக மோனேகா நாட்டில் 37%, இரண்டாவதாக ஜப்பான்
நாட்டில் 30% மூத்த குடிமக்கள்
வாழ்கிறார்கள்.
மூத்தோரின் பின்னணியில்...
‘மயக்கமா கலக்கமா?
மனத்திலே
குழப்பமா?
வாழ்க்கையில்
நடுக்கமா?’
என்ற
பாடல் வரிகள், நடுக்கமாக ஒலிக்கின்றன.
எமது
கல்லூரிப் பேராசிரியர் 44 ஆண்டுகளுக்கு முன் எம்மிடம் பகிர்ந்த தகவல்கள்
நினைவிலாடுகின்றன. தேசியத் தலைவர் ஒருவரை அவர் குறிப்பிடுகிறார். அந்தத் தலைவர் நாடாளுமன்றம், சட்டமன்றம் என இரண்டிலும் போட்டியிடுவார்.
வேட்பு மனுதாக்கல் செய்துவிட்டு, பிரச்சாரம் செய்யமாட்டார், வாக்கு கேட்கமாட்டார். ஆனால், அவர் போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் பிரமாண்ட வெற்றி பெறுவார். அவ்வளவு மக்கள் செல்வாக்கு மிக்கவர்.
மூத்த
தலைவரான அவர், தன் கடைசி ஆறு ஆண்டுகளில் மனிதர்கள் எவரையும் சந்திக்காமல் தனிமையில் வாழ்ந்தார். அவர் இறந்த அன்று எனது பேராசிரியர் கண்ணாரக் கண்டதைக் கூறுகிறார்: “அன்றைய ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் அழுது புலம்பி, தலைவிரிகோலமாய், பைத்தியம் பிடித்தவர்கள்
போல அலறி தெருக்களில் ஓடுவதைப் பார்த்தேன்.” இதுதான் மனித வாழ்க்கை. அந்த மாமனிதரின் வாழ்நாள்களின் இறுதிக் காலத்தில் தனிமையில் வாழ்ந்தார் என்பதே வரலாறு.
பல
வேளைகளில், கோவை மாநகரின் செல்வச் செழிப்பிற்குக் காரணமான ஒரு வகுப்பு, பெரும் குடிமக்களைப் பத்திரிகைகளில் பெருந் தொழில் அதிபர்களாக வர்ணிக்கப்பட்ட பெருமக்களை அவர்களது வீட்டு முற்றங்களில் தனியே அமர்ந்திருக்கப் பார்த்திருக்கிறேன். ‘அவரா இவர்?’ என அதிசயம் அடைந்துள்ளேன்.
சில வேளைகளில், அவர்களிடம் பேசியிருக்கிறேன். ஒருமுறை ஒருவரது மகன் கூறினார்: “தம்பி, அப்பா வள... வளன்னு பேசுவார், தப்பா எடுத்துக்காதீங்க” என்றார்.
நான்
வெளியே வந்து காரில் செல்லும்போது அவரிடம் திருப்பிக் கூறினேன்: “அண்ணா, இந்த கோயம்புத்தூரில் எல்லா பெரிய கம்பெனி பாகப்பிரிப்பிற்கும் பஞ்சாயத்து பேசியவருக்கும் பேச ஆள் இல்லாத நிலையா?” என்றேன்.
கிராமப்புறங்களில்
இந்நிலைக்கு மாறுபட்ட நிலையைக்
காண்கிறோம். கிராமத் திண்ணைகளிலும் கிராமச் சத்திரங்களிலும் சிலுவைத் திட்டுகளிலும் ஆலய மண்டபங்களிலும் வயது வித்தியாசமின்றி மூத்தோரை முன்னிலையில் வைத்து,
ஊர் சபை நடப்பதை ஆச்சரியமுடன் பார்க்கிறோம். கிராமத்தில் மூத்தோரும் இளையோரும் எந்தவித
அழுத்தங்களும் இல்லாமல் மக்களுடன் கலந்திருப்பது வியப்பிற்குரிய வாழ்வியல் நடைமுறையாகும்.
ஊருக்குப் புதிதாகச் செல்லும் நம்மை மூத்தோர் எளிதில் எதிர்கொள்தல், எளிதில் பேசுதல், பழகுதல் நடைமுறைக் கிராமம் சார்ந்த சமூக அமைப்பாகும்.
பெருநகரங்கில்
இருந்ததுபோல, எல்லா சிறு நகரங்களும் நகரமயத்தில் மாறிவிட்டன. மனிதர்கள் தனித்தனி தீவுகளில் வாழ்கிறார்கள். நாகரிகம் என்ற பெயரில் ஒருவரையொருவர் அறிந்துகொள்ளவோ, புரிந்து வாழவோ விரும்புவதில்லை.
ஒரு
நாளில் மும்பை மாநகரில் ஒரு புகழ்பெற்ற அடுக்கு மாடிக் குடியிருப்பில் இவ்வாறான உரையாடலைக் கேட்டேன். அடுத்த வீட்டுப் பெண்மணி ஓராண்டுக்குப் பின் பக்கத்து வீட்டிற்கு ஏதோ தகவல் அளிக்க வருகிறார். அவர் சென்ற பின் அக்குடும்பத் தலைவியும் குடும்பத் தலைவரும், ‘வந்தது பக்கத்து வீட்டுப் பெண்ணா? அல்லது அவரது அம்மாவா?’ என ஐயப்பட்டார்கள். நாம் கேட்டோம்,
“ஒரு வருடமாக உங்களுக்குப் பக்கத்து வீட்டில் யாரைத் தெரியும்?” என்றோம். அவர்கள் கூறிய பதில்: “அந்த வீட்டுத் தாத்தாவை மட்டும் தெரியும்.”
நாமே
25 வருடங்களுக்கு முன் தெருவில் வசிப்போர் அனைவரையும் அறிவோம். இன்று நாம் பக்கத்து வீட்டு மனிதர்களைக் காணும்போது சிறு புன்னகையால் கடப்பது பழக்கமாகிவிட்டது. வீட்டுப் புதுப்பித்தலில், இடிபட்ட எம் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து, ஆயிரமாயிரம் கதைகள் பேசிய எம் தெருப் பெண்கள் என் அம்மாவைப் போலவே மாயமாகி விட்டார்கள், மறைந்துவிட்டார்கள்.
ஒரு
காலத்தில் எம் தெருவில் 100 வீடுகள், ஒரே குடும்பமாக உண்டு, உறங்கி, திருவிழாக்கள் கொண்டாடிய வசந்த காலங்கள் எங்கேயெனக் கண்ணீரோடு தேடுகிறேன். காலங்கள் ஓடுவதில்லை, பறக்கின்றன. மனிதர்கள் சமூக அமைப்பில் இருந்து விலகிவிட்டார்கள். குடும்பங்கள் என்ற எல்லைக்குள், ஒரு வட்
டத்தில் அடைந்துவிட்டார்கள்.
காலத்தே
மனம் சக மனிதர்களைத் தேடுகிறது, பொருள்
தேடிய, செல்வம் தேடிய, புகழ் தேடிய பயணம் வயது மூப்பால் தடையாகிறது. மனம் அமைதியைத் தேடுகிறது. அமைதியில் பெற்ற ஆற்றலை முதிய மனம் மறுக்கிறது. மனிதர்களின் அரவணைப்பை, அன்பை, ஆறுதல் வார்த்தைகளை, ஆழமான, கனிவான உரையாடல்களை விரும்புகிறது.
எல்லா
முதுமையின் கேள்விகளுக்கும் பதில் திருவிவிலியத்தில் புதைந்து விரிகிறது. காலங்கள் குறித்த சபை உரையாளரின் நிலையாமை,
இயலாமை குறித்து நினைவிற்கு
வருவது தவிர்க்க இயலாத ஒன்றாகும்.
‘அன்பிற்கு ஒரு காலம்
வெறுப்பிற்கு
ஒரு காலம்
போருக்கு
ஒரு காலம்
அமைதிக்கு
ஒரு காலம்!’
தினமும்
நடைப்பயிற்சியின் போது அரண்மனை போன்ற வீடுகளின் முன் ஒரு முதியவரையோ, மூதாட்டியையோ பல வீடுகளில் காண்கிறேன்.
அவர்கள் எந்தவிதச் சலனமுமின்றி வெறுமையாகப் பொதுவில் கண்களை மூடி சலனமின்றி அமர்ந்திருப்பதைக் காண்கிறேன். பல வேளைகளில், அவர்களது
சிரிப்பு, அவர்களது குரல் எப்படி இருக்குமென யோசித்திருக்கிறேன். அவர்கள் சக மனிதர்களின் முகம்கூட
காண மறுக்கிறார்கள். விழிக்கு விழி பார்ப்பதைத் தவிர்க்கிறார்கள்.
பல
வருடங்களாக இவ்வாறான இருபதிற்கும் உள்பட்ட மூத்த குடிமக்களைப் பார்க்கின்றேன். அதில் சிலரைச் சோகமுடன் காண்கிறேன். ஒரேயொரு பெரியவர் மட்டும் புன்னகை செய்து தலையாட்டுவதைத் தினமும் இரசிக்கிறேன். அவர் அங்கு அமர்ந்திருக்காத நாள்களில், மறுமுறை பார்க்கும் வரை யாரிடம் அவரைப் பற்றிக் கேட்பது எனப் பதற்றப்படுகிறேன்.
மூத்த
குடிமக்களுக்காக ‘சுமைதாங்கி’ திரைப்படத்தில்
கவிப்பேரரசு கண்ணதாசன் அவர்களின் பாடல்
வரிகளைச் சமர்ப்பிக்கிறேன். இது என் மனம் படும் பாடுகளையும் சேர்த்து மூத்தோருக்கு ஆறுதலாக, தேற்றுதலாக,
அரவணைப்பாக அமையும் எனக் கருதுகிறேன்.
‘வாழ்க்கை என்றால்
ஆயிரம் இருக்கும்.
வாசல்தோறும்
வேதனை இருக்கும்.
வந்த துன்பம்
எதுவென்றாலும்...
வாடி நின்றால்
ஓடுவது இல்லை!’
பிறகு
என்னதான் செய்ய முடியும்? பாடல் வரிகளே பதில் சொல்கின்றன.
‘எதையும் தாங்கும்
இதயம் இருந்தால்
இறுதி வரை
அமைதி இருக்கும்.’
அமைதியை
வைத்து என்ன செய்ய முடியும்? அமைதியை எப்படித் தேடுவது?
‘நாளைய பொழுதை
இறைவனுக்கு அளித்து...
நடக்கும் வாழ்வில்
அமைதியைத் தேடு!’
அண்மையில் புதுதில்லி செங்கோட்டையில் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி அவரின் அரசு, ஆயுதம் தாங்கிய நக்சல்களை ஒழித்துவிட்டதாகவும்; ஆனால், ‘திமாகி’ நக்சல்கள் இன்னும் அழிக்கப்பட வேண்டியுள்ளது எனவும் அறிவித்தது (‘திமாகி’ என்றால் ‘Brainy’ மூளையுள்ளோர் என்று பொருளாம்!)
“திமாகிகள் மிக
ஆபத்தானவர்கள்!
முந்தைய
அரசுகள்
இவர்களை
அரசின்
ஆலோசகர்களாக
நியமித்திருந்தனர்.
இப்போது இதே ‘திமாகிகள்’ இன்று இந்தியச்
சமூகத்தைத்
தவறான
பாதைக்கு
இட்டுச்
செல்கின்றனர்.
இந்திய
இளைஞர்களை
வளர்ச்சி
நோக்கில்
செல்லும்
இந்தியாவிலிருந்து
திசை
மாற்றி
அழைத்துச்
செல்கின்றனர்.
இந்தியக்
குடிமக்கள்
இச்சக்திகளை
அடையாளம்
கண்டு
(Identity) கொள்வதோடு, தனிமைப்படுத்தவும்
(Isolate) வேண்டும்”
(தி இந்து, ஆகஸ்டு
31, 2026 - கவிதா கிருஷ்ணன்).
(நம்
வாழ்வின் வாசகர்கள் மேலே குறிப்பிடப்பட்ட கட்டுரையைப் படிக்கவேண்டும் என்பது என் விருப்பம்)
பிரதமர்
மோடியின் பொறுப்பில் 2014-இல் விடப்பட்ட இந்திய அரசு குடிமக்களை ஏமாற்றி வழங்கப்பட்ட அரசு; குடிமக்களை மூளைச்சலவை செய்து திணிக்கப்பட்ட அரசு; சனநாயக நெறிகளைத் துளிகூட நம்பாத ஒரு குழுவிடம் ஏமாற்றப்பட்ட, குடிமக்களால் தரப்பட்ட அரசு!
கண்ணீர்
விட்டு வளர்த்த சுதந்திரப் பயிரை, சுதந்திரம் அளித்த அரசியல் விடுதலையை, இந்தியச்
சமூகம் காலங்காலமாய் கட்டிக் காத்த வர்ண பேதத்தை, வர்ண பேதத்தைத் தர்மமாக்கப் பேணி வந்த சூழ்ச்சியை நிர்மூலமாக்க எழுந்த இந்திய அரசமைப்பை ஒற்றைத் தேர்தல் மூலம் நிர்மூலமாக்கிய சங்கப் பரிவாரங்களின் பிளவுவாதக் கருத்தியலைக் கேள்வி கேளாமல் ஏற்றுக்கொண்டு, இன்றும் தொடர் ஆட்சிசெய்து வருகைக்குத் துணை நிற்பவர்கள் ‘தேச பக்தர்கள்.’ இத்தேசபக்தர்களுக்கு எதிரானோர் அனைவரும் சில ஆண்டுகளுக்கு முன் நகர்ப்புற நக்சல்களாயினர் (Urban naxals).
இன்று
நகர்ப்புற நக்சல்களுக்குப் புது நாமம் சூட்டப்பட்டுள்ளது. இவர்கள் ‘திமாகி’ நக்சல்கள்! ‘வளர்ச்சி’
என்ற பெயரில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரக் கட்டமைப்பைக் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைத்த பெருமைமிகு இவ்வரசின் போக்கைக் கேள்விக்குள்ளாக்குவோர் நக்சல்களாம்! இவர்கள் நகர்ப்புற நக்சல்கள்; இப்பொழுது திமாகி நக்சல்கள்! குடிமக்கள் வெறும் வாக்களிக்கும் இயந்திரமல்ல; இவர்களுக்கு மூளையுண்டு என்று அங்கீகரித்த மோடிக்கு நன்றி கூறுவோம்.
இந்தியா
அறிவித்த மதச்சார்பின்மை புதைக்கப்பட்டபோது, மதம் சார்ந்த பிற்போக்கு அரசியலுக்கு இராமர் கோவில் மூலம் ‘நியாயம்’ தரப்பட்டபோது, பண்டித நேரு காக்க முயன்ற சமயச் சார்பின்மையின் அடித்தளம் தகர்க்கப்பட்ட போதெல்லாம் மௌனித்து நின்றோர் ‘தேசபக்தர்கள்!’ கேள்வி கேட்டவர் பலரல்லர்; ஒரு சிலர்தாம்! அவர்கள் நகர்ப்புற நக்சல்கள்! இல்லையெனில் திமாகி நக்சல்கள்!
கடந்த
12 ஆண்டு மோடியின் ஒற்றைக் கருத்தியல் ஆட்சிக்காலமாக வளர்க்கப்பட்டு வரும் பொய்மைக் கருத்தியலின் சாயல் இன்னும் அழியாத நிலையில், இச்சாயல் தரும் போதை இன்னும் மாறாத நிலையில், இன்றும் தொடர்ந்து மந்தை மனநிலையில் பின்தொடர்கிறது இக்கூட்டம். இவர்கள் தேசபக்தர்கள்! மனித உரிமைகளைக் காக்க, மனித உரிமைக் காப்பு மூலம் சனநாயகத்தைக் காக்க வாழ்நாளை அர்ப்பணிக்கும் கூட்டம் இவர்களுக்கு ‘நக்சல்கள்!’
அவதூறுகளால்,
இழிவான பிரச்சார யுக்திகளால் - விமர்சிக்கும் சனநாயக சக்திகள் அனைவரையும் ஒதுக்கவும் ஓரங்கட்டவும் ஒடுக்கவும் முனையும் மோடி அரசின் அனைத்து நிறுவனங்களும் ஒருங்கிணைந்து அரசின் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுதல் மிகப்பெரிய பயங்கரவாதமில்லையா?
மக்களுக்குப்
பதில் கூறவேண்டிய (Accountability) அரசு,
தன் கடமையை மறந்தும், துறந்தும் செயல்படும்போது, பதில் கேட்டுப் போராடுவோர் நக்சல்கள் என்றால், போராடுவோரின் நியாயமான கோரிக்கைகள் எதேச்சதிகாரப்போக்கில் புறந்தள்ளப்படுகிறபோது எழுப்பப்பெறும் அபயக் குரல்களே ஆள்வோருக்கு எச்சரிக்கை மணியாக எதிரொலிக்கின்றது.
ஆள்வோர்
ஏன் அலறுகின்றனர்? உண்மையைச் சந்திக்கத் தயங்குகின்றபோதெல்லாம் இவர்கள் எதிரிகளாக்கப்பெறுவோரை ‘நக்சல்கள்’
என்றும், ‘தேசத்துரோகிகள்’ என்றும்,
‘பாகிஸ்தான் ஆதரவாளர்’
என்றும் முத்திரை குத்தி, அவர்கள்மீது பயங்கரவாதத்தை ஏவி, அதற்கு வேறொரு பெயர் சூட்டி நாடகமாடுதலைப் பார்க்க முடிகிறது. பல்கலைக்கழகங்கள் மதவாத அரசின் கருத்துநிலை பிரச்சாரக் கருவிகளாய் மாற்றப்பட்டுவிட்ட நிலையில், புது தில்லியின் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தைக் கைவசம் எடுத்துக்கொள்ளும் முயற்சியில் போராட்டத்தை முன்னெடுத்த மாணவர்கள் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். உமர் காலித், சர்ஜில் இமாம், குல்பிஷா பாத்திமா, நாடசா நிர்வால், தேவங்கனா கவிதா என்போரெல்லாம் பயங்கரவாதிகளாக, முறையான விசாரணையின்றி இன்னும் சிறையில் வாடுகின்றனர். ‘நீட்’ தேர்வு முறைகேட்டைக் கண்டித்து ஜந்தர் மந்தரில் போராடிய இளைஞர்களும் இவர்களுக்குப் பயங்கரவாதிகளே.
மதவாதிகளுக்கு,
மத அடிப்படைவாதம் பேசும் சனாதனிகளுக்குச் சமனற்றச் சமூக அமைப்பை எப்படியேனும் காத்துத் தீரவேண்டியதே உயிர்க் கொள்கை. அத்தகையோருக்கு ‘மாற்றம்’ என்ற சிற்றொலி செவிப்புலனுக்குப் பயங்கரவாதக் குரலாகத்தான் கேட்கும்.
ஐக்கிய
நாட்டவையின் இனப்பாகுபாட்டு ஒழிப்பிற்கான குழு ஒன்று அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கை (‘தி இந்து’, ஆகஸ்டு 26, 2026) இந்திய அரசின் முகத்திரையைக் கிழித்துள்ளது. ஐ.நா.வின்
இக்குழு (UNCERD) இந்தியாவில்
நடக்கும் மிகப்பெரிய அளவிலான மனித உரிமை மீறல்களைக் கண்டு (Violations) கவலைகொள்கிறது. சமய ரீதியான சிறுபான்மையினர், பூர்வக்குடிகள், பழங்குடிகள், பட்டியலினப் பழங்குடிகள், தலித் மக்கள் மற்றும் குடிமக்களல்லாதோர் (Non - Citizens) என்போர்மீது,
சட்டத்தைப் பாதுகாப்பவர்களாலேயே நடத்தப்பட்டு வரும் மீறல்கள் கவலையளிப்பதாக அறிவித்துள்ளது. இவ்வறிக்கை வெளியிடப்பட்ட நாளன்று (ஆகஸ்டு 11-12) இந்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேஷாவும் அவையில் இருந்தார் என்பது வேடிக்கை கலந்த உண்மையே.
உலக
அளவில் மனித உரிமை மீறல்களை, நலிந்தோர் மீதான பாடுபாடுகளை, ஒதுக்கலை, ஒடுக்கலை நாளும் நடத்தி வரும் மோடி அரசு, யாரைப் ‘பயங்கரவாதிகள்’ என்று,
‘நக்சல்கள்’ என்று
அடையாளப்படுத்துகிறது?
இன்றைய
ஆளும் கட்சியின் தலைமை அமைப்பாம் ஆர்.எஸ்.எஸ்., இன்று உலகளவில் அம்பலப்பட்டுப் போன கதையை நியூயார்க் மேயரின் ஒளிவு மறைவற்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பற்றியும், அதன் தலைவருக்குக் காட்டிய எதிர்ப்பையும் தொடர்ந்து கவனிப்போர் அறிவர். இந்தியச் சனநாயகம் மதச்சார்பற்ற குடியரசின் கொள்கைகளுக்கு முரணான ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்குவதை (Inclusion) மறுத்து
ஒதுக்கும் (Exclusionary) தன்மையுடையது
என்று வெளிப்படையாகவே ஊடகவழி பேசினார் நியூயார்க் மேயர். மோகன் பாகவத் அவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்வைச் சட்ட ரீதியாகத் தடுக்கும் தன்மை இல்லையெனினும், பாகவத் சார்ந்த அமைப்பின் கொள்கையில் சனநாயகம், சமயச்சார்பின்மை இல்லை என்பதைத் தெளிவாகவே எடுத்துரைத்தார் அவர்.
நக்சல்கள் பயங்கரவாதிகளா?
இந்தியாவில்
விடுதலை பெற்ற காலத்திலிருந்து ஆட்சிப் பொறுப்பேற்ற அரசுகள் உழைக்கும் மக்களின் விடியலுக்கு எதுவும் செய்யவில்லை. வர்க்க ரீதியாகப் பிளவுண்ட சமூக அமைப்பின்மீது கட்டப்பட்ட அரசு, வர்க்க ரீதியான சமூக அமைப்பை அரசின் திட்டங்களால், பொருளாதாரக் கொள்கைகளால், ஆளும் வர்க்க நலனையே அரசுகள் முன்னிறுத்தின. தேர்தல் மூலம் மக்களிடம் பொய்யான நம்பிக்கையை வளர்த்து, வர்க்க ரீதியாகப் பிளவுண்ட அமைப்பில் மக்களுக்கான மாற்றம் எதுவும் நிகழாத நிலையில், சமூக அமைப்பில் மாற்றம் வேண்டி உருவான இயக்கம்தான் வங்காள மாநிலத்தில் ‘நக்சல்பாரி’ எனும்
இடத்தில் தோன்றிய நக்சல்பாரியக்கம்!
இந்த
இயக்கம் சமூகத்தின் அடிப்படையை மாற்றுவதற்குப் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் துணைகொண்டு உருவானது. ‘சனநாயக அரசு’ என்ற பெயரில் மக்களை ஒடுக்கி வரும் அரசுகளைப் பயங்கரவாத அரசாகச் சித்தரித்து, ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுத்தது. இவ்விளைஞர் கூட்டம் நாடு முழுவதும் பரவியது. ஆயுதம் தாங்கிய இவ்விளைஞர்களின் போராட்ட முறை வன்முறை வடிவு கொண்டாலும், இவ்விளைஞர்
எழுச்சியும், அது நாடு முழுவதும் உருவாக்கிய அதிர்வலைகளும் மிகப்பெரிது.
ஆயுதம்
தாங்கி, சமூக மாற்றம் விரும்பிப் போராடிய இப்போராளிகளின் போராட்ட முறைகளில் நமக்குக் கருத்து வேறுபாடு இருக்கலாம்; ஆனால், தம்மை இழந்து, களத்தில் மடிந்த இப்போராளிகளின் கருத்தியலில், அக்கருத்தியலில் அவர்கள் கொண்ட உறுதிப்பாட்டில் நாம் வேறுபட முடியாது.
எழுபதுகளில்
தொடங்கிய இப்போராட்டம், இன்றுவரை நாடு முழுவதும் பல மாநிலங்களில் செயல்படுவதும்
உண்மையே. இப்போராளிகளை ஒடுக்குவதில் தொடர்ந்து வந்த அனைத்து அரசுகளுமே ஒரே நிலைப்பாட்டைத்தான் கொண்டிருந்தன. எனினும் இவ்வரசுகளின் முயற்சி முழுமையாக வெற்றி பெறாத நிலையில், இன்றைய மதவாத பா.ச.க.
அரசு, சட்டீஸ்கர் போன்ற சில மாநிலங்களில் வலுவாகச் செயல்பட்டு வரும் மாவோயிஸ்டுகளை முழுமையாக அழித்துவிட்டதாகச் சொல்லிக்கொள்கிறது. இக்குழுக்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாகச் சொல்லிவரும் அமித்ஷாவின் கூற்றிற்கான சரியான பதிலை வரலாறுதான் கூறவேண்டும்.
ஆயுதம்
தாங்காமல், பேனா முனையால் மாற்றம்
வேண்டி போராடுவோர், நாளும் மீறப்பெறும் மனித உரிமைகளைக் காக்கும் வகையில் அரசு தரும் சட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட்டு வரும் மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள், எழுபதுகளில் உருவான இளைஞர்களின் எழுச்சியைத் தொடர்ந்து நாடு முழுவதும் உருவான பல்வேறு மக்கள் இயக்கங்கள், குடிமைச் சமூக அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் இயக்கங்கள், பெண்ணுரிமை அமைப்புகள் எல்லாமே வெறும் கோரிக்கைகளை முன்வைத்து மட்டும் குரல் எழுப்பாமல், சமூக சீர்திருத்தத்தோடு, சமூக மாற்று முழக்கங்களையும் முன்வைத்துப் போராடுகின்றன.
எதேச்சதிகாரம்
என்ற ஒற்றைமொழியில், சனாதனம் என்ற பழமைவாதக் கொள்கையை முன்வைத்து ஆட்சி நடத்திவரும் மதவாதிகளுக்கு மேலே காட்டப்பட்ட அனைத்து வகை அமைப்புகளும் அறிவுஜீவி நக்சல்பாரிகள்தாம்!
பழமைவாதிகள்
- அதிலும் மத அடிப்படைவாதிகள் (Fundamentalist)
எப்போதுமே மாற்றத்திற்கு எதிரிகளே! மாற்றம் வேண்டுவோர், இவர்களின் இருப்பிற்கு எதிரிகளே. இவர்கள் காட்டும் ஒற்றைவழி என்பது மாற்றத்தைக் கண்டு அஞ்சும் வழி!
பழமையும்,
பழமையைக் காக்க உருவாக்கப்பட்ட கருத்தியலும், மாற்றாகச் சிந்திப்போரை நவீன அரசின் பயங்கர ஆயுதங்களால் வீழ்த்த முற்படுவர்; இதன் ஒரு பகுதியே ‘அறிவுசார் நக்சல்’ என்ற புதிய நாமகரணம். எச்சரிக்கை கொள்வோம்!
‘அன்புத் தாய்மார்களே! அருமைப் பெரியோர்களே! இனிய குழந்தைகளே...!’
தமிழ்நாட்டின்
பட்டிமன்ற மேடைகளில், வானொலி அலைவரிசைகளில், தொலைக்காட்சித் திரைகளில் பல்லாண்டுகளாகத் தேன்மழையாய்ப் பொழிந்த அந்தக் கம்பீரக் குரல் இனி மேடைகளில் ஒலிக்கப்போவதில்லை.
‘தமிழே வருக!’ என்று இந்தியக் குடியரசுத் தலைவரும், அறிவியலின் தந்தையுமான டாக்டர் ஏ.பி.ஜே.
அப்துல் கலாம் அவர்களையே எழுந்து நின்று வரவேற்கச் செய்த தமிழ்ச்சான்றோன், மதுரை மண்ணின் மாபெரும் தமிழ் அடையாளமான பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் தனது 90-வது அகவையில் (செப்டம்பர் 11, 2026) காலமானார் என்ற செய்தி உலகெங்கும் வாழும் தமிழர்களின் நெஞ்சங்களில் பேரிடியாய் விழுந்துள்ளது.
பட்டிமன்ற
சாம்ராஜ்ஜியத்தின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த அவர்தம் மறைவு, தமிழ் இலக்கிய வானில் ஒரு பேரொளி, தமிழ்ச் சுடரொளி மறைந்ததற்கு ஒப்பானதாகும். மதுரை மண் சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது பழங்காலம் என்றால், பாப்பையாவைத் தங்க வைத்து தமிழ் வளர்த்தது இக்காலம். பட்டிமன்ற உலகிற்குத் தனது சிம்மக்குரலால் அரச மரியாதை தேடித்தந்த அந்தப் பெருந்தகையின் வாழ்வையும் தமிழ்ப் பணியையும் போற்றி நினைவுகூர்வது காலத்தின் கடமையாகும்.
வறுமையின் நிழலில்
பூத்த
தமிழ்க்கமலம்
மதுரை
மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சாத்தங்குடி என்னும் சிற்றூரில், 1936-ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 22-ஆம் நாள், திருவாளர்கள் அ. சுந்தரம் - பாக்கியம்
இணையருக்கு ஒன்பதாவது மகனாக அவதரித்தார் சாலமன் பாப்பையா. ஆலைத் தொழிலாளியான தந்தையின் சொற்ப வருமானத்தில், பன்னிரண்டு குழந்தைகள் கொண்ட பெரிய குடும்பத்தில் பிறந்தமையால், அவர்தம் குழந்தைப் பருவம் பொருளாதார வசதிகளின்றி கடும் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தது.
கல்வியைக்
கற்பதே இவருக்குப் பெரும் போராட்டமாக அமைந்தது. இருப்பினும், உள்ளத்தில் கனன்ற தமிழ்ப்பற்றும் உழைப்பும் சான்றோர்களின் துணையும் இவரை உயர்த்தின. பள்ளிப் பருவத்திலேயே பேச்சுப் பயிற்சிக் கூடங்களில் பயின்று, ஆசிரியர்கள் அளிக்கும் உரைகளை மனனம் செய்து மேடைகளில் முழங்கினார். நாடகங்களிலும், திருவள்ளுவர் கழக மேடைகளிலும் இவர்தம் பேச்சுத்திறன் மெல்ல மெல்ல மிளிரத் தொடங்கியது.
பொருளியல் மாணவன்...
தமிழ்த்துறைத்
தலைவன்!
மதுரை
அமெரிக்கன் கல்லூரியில் பொருளியல் துறையில் இளங்கலைப் பட்டம் (B.A.) பெற்ற இவர்,
தமிழ்மொழியின் மீது கொண்ட தணியாத தாகத்தால் மதுரை தியாகராசர் கல்லூரியில் புதிதாகத் தொடங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் முதுகலைத் தமிழ் (M.A. Tamil) வகுப்பில் சேர்ந்து பயின்றார். அதுவே இவர்தம் வாழ்வின் பொன்னான திருப்புமுனையாக அமைந்தது.
பின்னர்,
தான் பயின்ற அமெரிக்கன் கல்லூரியிலேயே தமிழ்ப் பயிற்றுநராகத் தனது கல்விப் பணியைத் தொடங்கிய பாப்பையா, தம் திறமையாலும் புலமையாலும் அதே கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராக உயர்ந்து, ஓய்வுபெறும் வரை மாணாக்கர்களுக்குத் தமிழ் அமுதினை ஊட்டினார். வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள் அடங்கிக் கிடந்த தமிழ் இலக்கியத்தை, சாமானிய மக்களும் பருகி மகிழும்படி மேடைகளுக்குக் கொண்டுவந்த பெரும்பேறு பேராசிரியருக்கு வாய்த்தது.
பட்டிமன்ற மரபில்
புதிய
பொற்காலம்
1960-களில் தீவிரமடைந்த
இவர்தம் மேடைப் பயணம் எட்டையபுரம் பாரதி விழா, குன்றக்குடி அடிகளார் தலைமையிலான பட்டிமன்றங்கள் எனப் பரிணமித்தது. 1970-களில் கல்லூரிகளின் இலக்கிய மன்றங்களில் தவிர்க்க முடியாத பெயராக மாறினார். தொடக்கத்தில் சிறந்த பேச்சாளராக வலம்வர விரும்பியவருக்கு, காலத்தின் கட்டாயத்தால் அமைந்த நடுவர் பொறுப்பே இவர்தம் வாழ்நாள் அடையாளமாக உருவெடுத்தது.
தமிழ்நாட்டில்
பட்டிமன்றம் என்னும் வடிவம் பேராசிரியருக்கு முன்பே செழித்து வளர்ந்திருந்த போதிலும், அதைச் செவ்வியல் இலக்கிய மேடைகளிலிருந்து வெகுசன மக்களின் ‘குடும்ப மன்றமாக’ மாற்றிய பெருமை பேராசிரியர் பாப்பையாவையே சாரும்.
தொலைக்காட்சி
ஊடகத்தின் எழுச்சிக் காலத்தில் விடுதலைப் பெருநாள், தீபாவளி, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு போன்ற நன்னாள்களில் இவர்தம் பட்டிமன்றங்கள் ஒளிபரப்பப்பட்டபோது, அவை தமிழ்நாட்டின் ஒவ்வோர் இல்லத்திலும் பண்டிகைக் கொண்டாட்டத்தின் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாகவே மாறின.
செந்தமிழைச் செழுந்தமிழாக்கிய
எளிய
நடை
பேராசிரியர்
சாலமன் பாப்பையாவின் இணையற்ற வெற்றிக்கு மிக முக்கியக் காரணம் இவர்தம் அரிய மொழிநடையாகும். சங்க இலக்கியம், திருக்குறள், கம்பராமாயணம், சிலப்பதிகாரம் எனத் தமிழ் செவ்வியல் இலக்கியங்களில் ஆழங்கால்பட்ட புலமை பெற்றிருந்த போதிலும், மேடைகளில் கடினமான செந்தமிழைக் கையாளாமல், பாமரனும் எளிதில் உணரும் வண்ணம் அன்றாட வாழ்வியல் நிகழ்வுகளோடு பிணைத்து உரைப்பதே இவர்தம் தனித்துவப் பாணியாகும். அதிலும் குறிப்பாக, மதுரையின் இயல்பான பேச்சழகும், இயல்பான நகைச்சுவை நயமும் மிளிர இவர் ஆற்றிய உரைகள், இலக்கியப் பரிச்சயமற்ற கடைக்கோடி மனிதரையும் தமிழின்பால் ஈர்த்தன. நகைச்சுவையை ஓர் ஆயுதமாகக் கொண்டு, மக்கள் மனங்களில் சிந்தனை விதைகளைத் தூவியவர் இவர்.
சிரிக்க வைத்துச்
சிந்திக்க
வைத்த
செம்மல்
சாலமன்
பாப்பையாவின் பட்டிமன்றத் தலைப்புகள் காலத்தின் தேவைக்கேற்ப உருமாற்றம் பெற்றன. வெறும் இலக்கிய விவாதங்களாக மட்டுமன்றி, கணவன்-மனைவி உறவு, பெற்றோர்-பிள்ளைகள் பாசம், நவீனத் தொழில்நுட்பம், சமூக மாற்றம், தலைமுறை இடைவெளி போன்ற மனித வாழ்வியலோடு நெருங்கிய தலைப்புகளை இவர் கையில் எடுத்தார்.
இருதரப்பு
பேச்சாளர்களும் தங்களின் அடுக்கடுக்கான வாதங்களை முன்வைத்த பிறகு, நடுவராக இருந்து இவர் அளிக்கும் இறுதித் தீர்ப்பே பட்டிமன்றத்தின் மகுடமாகத் திகழும். யாரையும் புண்படுத்தாமல், இரு தரப்பிலும் உள்ள நயங்களை எடுத்துரைத்து, நகைச்சுவை மிளிர இவர் வழங்கும் சமூகச் செய்திகள் நிறைந்த தீர்ப்புகள், பட்டிமன்றத்தை வெறும் வாதப்போட்டியிலிருந்து அறிவார்ந்த குடும்பப் பொழுதுபோக்காக உயர்த்தின.
அத்தோடு
நிறுத்திவிடாமல், திரு. ராஜா, திருமதி. பாரதி பாஸ்கர் போன்ற எண்ணற்ற அடுத்த தலைமுறைப் பேச்சாளர்களை அடையாளப்படுத்தி, தமிழ் மேடைக்கு ஒரு புதிய தலைமுறையையே உருவாக்கிய ஆசானாகவும் இவர் விளங்கினார்.
இலக்கியப் பணியும்
திரைப்பட
அனுபவமும்
பட்டிமன்ற
மேடைகளைத் தாண்டி, இவர்தம் எழுத்துப்பணியும் மகத்தானது. ‘திருக்குறள் உரையுடன்’
என்ற இவர்தம் நூல், சாமானிய மக்களும் குறளின் ஆழத்தைப் புரிந்துகொள்ளும் வண்ணம் எளிய நடைமுறை விளக்கங்களுடன் எழுதப்பட்ட அரிய படைப்பாகும். மேலும் ‘பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - ஒரு பார்வை’,
‘உரை மலர்கள்’,
‘உரைக்கொத்து’, ‘புறநானூறு
புதிய வரிசை வகை’ உள்ளிட்ட பல நூல்களைத் தமிழுக்குக்
கொடையாக அளித்துள்ளார்.
‘பாய்ஸ்’,
‘சிவாஜி’ போன்ற
படங்களின் மூலம் வெள்ளித்திரையிலும் தோன்றித் தனது கலைத் தடத்தைப் பதித்தார். எனினும், பட்டிமன்றத் தமிழ்ப் பேராசிரியராகவே மக்கள் மனத்தில் இன்றும் என்றும் நீங்காத இடம்பெற்றார்.
விருதுகளும் அங்கீகாரமும்
தமிழுக்கு
இவர் ஆற்றிய ஒப்பற்ற சேவையினைப் பாராட்டி, தமிழ்நாடு அரசு 2000-ஆம் ஆண்டில் ‘கலைமாமணி’
விருது வழங்கிப் போற்றியது. 2010-இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ‘முத்தமிழ்ப் பேரறிஞர்’
பட்டமளித்துச்
சிறப்பித்தது. இவர்தம் வாழ்நாள் தமிழ்ப் பணியைப் போற்றும் வகையில், இந்திய ஒன்றிய அரசு 2021-ஆம் ஆண்டில் நாட்டின் உயரிய குடிமகன் விருதுகளில் ஒன்றான ‘பத்மஸ்ரீ’
விருதை வழங்கிச் சிறப்பித்தது.
வறுமையில்
பிறந்து, கல்விக்காகப் போராடி, பேராசிரியராக உயர்ந்து, நாட்டின் உயரிய விருதைப் பெற்ற இவர்தம் வாழ்வு, முயல்வார்க்கு ஊக்கமளிக்கும் வரலாற்றுச் சான்றாகும். இவர்தம் நிழலாகவும், வெற்றிக்குப் பின்புலமாகவும் திகழ்ந்த மனைவி திருமதி. ஜெயபாய் அவர்கள் 2025 சனவரியில் இயற்கை எய்திய நிலையில், தற்போது பேராசிரியரும் தம் வாழ்வியல் பயணத்தை நிறைவு செய்துள்ளார்.
இது என்றும்
அழியா
தமிழ்ச்
சுவடு!
பேராசிரியர்
சாலமன் பாப்பையா வெறும் பட்டிமன்ற நடுவர் மட்டுமல்லர்; தலைமுறைகளை இணைத்த தமிழ்ப் பாலம். வானொலி, தொலைக்காட்சி, இணையம் என ஊடகங்கள் எத்தனையோ
மாறினாலும், மக்களின் மனங்களை வெல்லும் இவர்தம் எளிய தமிழும், நயமிக்க நகைச்சுவையும் மாறவேயில்லை.
‘தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின்
தோன்றாமை நன்று’
(குறள் 236)
என்ற
ஐயன் வள்ளுவரின் வாக்கிற்கு இலக்கணமாய் வாழ்ந்து மறைந்துள்ளார் பேராசிரியர். தமிழ்நாட்டின் பட்டிமன்ற வரலாற்றை இனி யார் எழுதினாலும், சாலமன் பாப்பையா என்னும் பெயரின்றி அந்த வரலாறு முழுமையடையாது. தமிழ் வாழும்வரை, தமிழ்ப் பேசும் மக்கள் மனங்களில் இவர்தம் கம்பீரக் குரலும், கள்ளமில்லாச் சிரிப்பும் என்றென்றும் நிலைத்திருக்கும்!
தமிழைச்
சாலப் பரிந்து நேசித்த...
ஐயா
சாலமன் பாப்பையாவே!
நீவிர்
சென்று வாரும்...
தமிழ்
உம்மால் என்றும் நின்று வாழும்!
பட்டிமன்றச்
சிம்மக்குரலுக்குத்
தமிழ்
உலகத்தின் வீரவணக்கம்!
முதன்மை ஆசிரியர்