news
சிறப்புக்கட்டுரை
தோமா கால் பதித்த தேசம் – 08

காந்தாரம் நோக்கி தன் சீடர்களோடு தோமா வழி நடந்து செல்கையில் மக்கள் சிலரும் அவரைப் பின்தொடர்ந்தனர். அவ்விதம் அவர் செல்லும் வழியில் இறந்து கிடந்த ஓர் இளைஞனைச் சுற்றி சிலர் கூடியிருப்பதைக் கண்ட சீடர்கள், அருகே சென்று பார்த்தபோது அந்த இளைஞன் நீலம் பாய்ந்த உடலோடு வாயில் நுரைதள்ளி இறந்து கிடப்பதைக் கண்டனர். அவ்விளைஞன் கிடந்த இடத்திற்குச் சற்றுத் தள்ளி ஒரு பெரிய பாம்புப் புற்று இருப்பதை உடன் சென்ற மக்கள் கவனித்ததும், பாம்பு கடித்துதான் அந்த இளைஞன் இறந்திருக்கிறான் என்பதைப் புரிந்துகொண்டனர்.

இறந்துகிடந்த இளைஞனின் உடலுக்கு அருகே சென்ற தோமா செபிக்கத் தொடங்கினார். அவர் செபிக்கத் தொடங்கியதுமே கரிய நிற நாகம் ஒன்று புற்றுக்குள்ளிலிருந்து எட்டிப் பார்த்து, மெல்ல வெளியே வர ஆரம்பித்தது. அது தோமாவின் அருகில் வந்து படமெடுத்து நின்றபடி, தான் அந்த இளைஞனைக்  கடித்ததற்கான காரணத்தைக் கூறியது: “நான் பாம்பு வடிவில் இருக்கும் சாத்தான். நான் ஒரு பெண்ணைக் காதலித்தேன். அதே பெண்ணை இந்த இளைஞனும் காதலித்தான். இவனுடைய சொல் பிடிக்காததால் இவ்வழியே வரும்போது இவனைக் கடித்துக் கொன்றேன்என்றது.

பாம்பின் வடிவில் இருந்த சாத்தானின் கூற்றைக் கேட்ட தோமா, “இயேசுவின் பெயரால் உனக்குக் கட்டளையிடுகிறேன். இந்த இளைஞனின் உடலில் உள்ள நஞ்சை உறிஞ்சி வெளியே எடுஎன்றார்.

தோமாவின் உத்தரவைக் கேட்ட பாம்பு உடனே இளைஞன் உடலில், தான் கடித்த இடத்தில் தன் வாயை வைத்து அவன் உடலில் கலந்திருந்த நஞ்சை உறிஞ்சத் தொடங்கியது. அது நஞ்சை உறிஞ்ச உறிஞ்ச இளைஞனின் உடலில் பரவியிருந்த நஞ்சு பாம்பின் உடலுக்குள் மீண்டும் திரும்ப அதன் உடல் பருமனாகி விரிந்துகொண்டே இருந்தது. அதேநேரம் இளைஞன்  உடலின் நீல நிறம் மாறி, மெல்ல அவன் உடலில் அசைவு தெரியலாயிற்று. நஞ்சை உறிஞ்சிய பாம்பு அந்த நஞ்சாலேயே உடல் வீங்கி வெடித்து இறந்தது. சற்று நேரத்தில் இளைஞன் உயிர்பெற்றவனாய் எழுந்து தோமாவின் பாதத்தில் விழுந்து நன்றி கூறினான்.

நடந்த அற்புதங்களைக் கண்ட மக்கள் அனைவரும் மிகுந்த ஆச்சரியத்துடன் தோமா போதிக்கும் கடவுளாகிய இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டனர். தோமாவோடு இணைந்து இறைவனைப் போற்றியதோடு புகழ்ப் பாடல்களையும் பாடினர்.

தோமா உண்மையில் இயேசுவின் மற்ற திருத்தூதர்களைக் காட்டிலும் மாறுபட்ட சூழ்நிலையிலேயே நற்செய்தி அறிவித்து வந்தார். மற்ற சீடர்கள் மத்தியதரைக் கடலைச் சுற்றியுள்ள நாடுகளில் இயேசுவின் நற்செய்தி அறிவிப்பு இப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் எருசலேமை விட்டுத் தொலைதூரம் கீழைநாடு நோக்கிப் பயணித்து நற்செய்தி அறிவிக்க வந்தவர் தோமா. இவர் இயல்பிலேயே மனத்திடம் நிறைந்தவர்; ஐயம் தெளிவுறும் ஆர்வம் மிக்கவர்; நம்பிக்கை உறுதிமிக்கவர் என்பதைத் திருவிவிலியத்தில் இவர் சார்ந்த மூன்று நிகழ்வுகள் நமக்கு அறிவிக்கின்றன.

இறையாட்சியை அறிவிப்பதன் பொருட்டு இயேசுவிற்கு நாட்டில் எதிரிகள் பெருகிவரும் சூழலில், பிரித்தானியாவில் நண்பன் இலாசரின் இறப்பை உணர்ந்த இயேசு அங்கே செல்ல முடிவெடுக்கிறார். வெளியே நடமாடினால் இயேசுவின் உயிருக்கு ஆபத்து என்ற நிலையில் சீடர்கள் தடுக்க முயல, அப்போது உடன் சீடரிடம் தோமா, “நாமும் செல்வோம், அவரோடு இறப்போம் (யோவா 11:16) எனக் கூறிய வீரமிக்க வார்த்தைகளில் அவரிடம் மனவுறுதி தென்பட்டது.

கடைசி இராவுணவில் தம் பன்னிரண்டு சீடர்களிடம் நடக்கவிருப்பவை பற்றியும், அவர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் பற்றியும் கூறிய இயேசு, மேலும் தாம் தந்தையிடம் செல்லவிருப்பதாகவும், அதற்கான வழி சீடர்களுக்குத் தெரியும் என்றும் குறிப்பிடுகிறார். இந்நிலையில், “ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது; அப்படியிருக்க நீர் போகுமிடத்திற்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்துகொள்ள இயலும்?” (யோவா 14:5) என்ற கேள்வியைத் தோமா முன்வைத்தபோது, “வழியும் உண்மையும் வாழ்வும் நானேஎன்ற பதிலை இயேசுவிடம் பெறுவதில் அவருக்கிருந்த ஐயத்தெளிவிற்கான ஆர்வம் தென்படுகிறது.

இயேசு தாம் உயிர்த்து தோமாவைத் தவிர மற்ற சீடர்களைச் சந்தித்த நிலையில், இதைக் கேள்வியுற்ற தோமா அவநம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். “அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்புகளைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை விட்டாலன்றி நான் நம்பமாட்டேன் (யோவா 20:25) என்று நம்பிடத் தயங்கிய நிலையில், அவர் ஆணித்தரமாக நம்புவதற்கு ஆண்டவர் இயேசுவே முன்வந்து காட்சி தந்தபோது, “என் ஆண்டவரே! என் தேவனே!” என்று அவர் அடிபணிந்து இயேசுவிடம் முழுமையாகச் சரணடைந்த காட்சியில் தோமாவின் நம்பிக்கை உறுதியாகிறது.

இவ்விதம் மனிதனிடம் தெளிவு, நம்பிக்கை உறுதி, வீரம் இவற்றோடு தன் தலைவரின் பணி செய்ய இந்தியப் பகுதிக்கு வந்த துணிவு நிறைந்த தோமா, அச்சம் சிறிதுமின்றி தான் செல்லும் வழியெங்கும் மக்களுக்குப் போதித்துக் கொண்டே சென்றார். தன் சீடர்களுடன் காந்தாரம் நோக்கிய கால்நடைப் பயணம் தொடர்கையில் மக்கள் இருந்த ஒரு பகுதியில் இதுநாள்வரை அவர்கள் கேள்விப்பட்டிராத கடவுளைப் பற்றி அங்கே போதிக்கத் தொடங்க, சிறியதாகக் கூடிய கூட்டம் தோமாவையே ஆர்வமுடன் கவனித்துக் கொண்டிருந்தது. இவ்விதம் போதித்திருந்த வேளையில் மக்கள் கூட்டத்திற்கு முன்னால் கழுதை ஒன்று வந்து நின்றது.

தன் முன்னே வந்து நின்ற கழுதையை நோக்கினார் தோமா. கடவுள் அருளோடு அவ்விலங்கைப் பேச அவர் அனுமதிக்க, வாய் திறக்கப்பட்ட அந்த விலங்கு, “கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவின் தூதரே, நீர் போகுமிடத்திற்கு உம்மைச் சுமந்து செல்வதற்காகவே நான் வந்திருக்கிறேன்என்று, தான் அங்கு வந்த காரணத்தைச் சொன்னது. கழுதை பேசுவதைக் கேட்டு மக்கள் வியப்படைந்தனர்.

தோமாவோ, “நான் அழைக்காமலேயே வந்திருக்கிறாயே... நீ யார்?” என்று கேட்டார். கழுதை கூறிய பதில் அங்கிருந்த மக்களுக்குப் புரியவில்லை. சீடர்களுக்கோ அரைகுறையாகப் புரிந்தது. அது கூறியது: “கடவுள் எங்கள் இனத்தின்மீது எப்போதும் இரக்கம் உள்ளவர். பிலயாம் இறைவாக்கினரிடம் பேசியதும், உம் தலைவர் எருசலேம் நகருக்குள் நுழைகையில் அவரைச் சுமந்து சென்றதுமான கழுதைகளின் இனம்தான் நான். இப்போது உம்மைச் சுமக்கக் காத்திருக்கிறேன்.”

விலங்கின் சொற்களைக் கேட்ட தோமாவின் சீடர்கள், தோமாவின் தலைவர் என்று குறிப்பிடப்படுபவர் இயேசு கிறிஸ்துவே என்பதைப் புரிந்துகொண்டனர். ஆனால், ‘யார் இந்த இறைவாக்கினார் பிலயாம்?’ என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனாலும் ஆச்சரியமான அந்த நிகழ்வால் அங்கே அப்போதைக்குக் கேள்வி எழவில்லை.

திருவிவிலிய நூலில் பழைய ஏற்பாட்டினை வாசித்தறியாதோர் அறிந்துகொள்ள வேண்டியவர் இந்தப் பிலயாம். மோசே தலைமையிலான இஸ்ரேல் மக்கள் விடுதலைப் பயணத்தின்போது, தாங்கள் செல்லும் வழியெங்கும் அயல்நாட்டவர் எதிர்ப்பையே சந்தித்து வந்தனர். பாலஸ்தீனாவின் தென் கிழக்குப் பகுதியில் வாழ்ந்த மோவாப் நாட்டு மன்னன் பாலாக்கு, இஸ்ரயேலரின் வலிமையை அறிந்து, அவர்களின் எதிர்ப்பை எப்படி எதிர்கொள்வது என்று குழம்பியவனாய் இதற்கான தந்திர வழியைத் தேடினான். பெகோர் என்பவரின் மகனான பிலயாம் என்ற இறைவாக்கினர் ஆசிர் வழங்குவதிலும் சபிப்பதிலும் வல்லமை மிக்கவர் என்பதால், அவரைக் கொண்டு எதிரிகளான இஸ்ரயேலரைச் சபிக்கத் திட்டமிட்டான். அதற்காகத் தூதுவர்களை அவரிடம் அனுப்பி வைத்தான்.

ஆமாபு ஆற்றின் கரையருகே வாழ்ந்திருந்த பிலயாமை பாலாக்கின் தூதுவர்கள் சந்தித்தபோது, ஆண்டவர் தனக்குச் சொன்னபடி அவர்களுடன் செல்ல பிலயாம் மறுத்துவிட்டார். ஆனாலும், தொடர்ந்து அரசரின் வற்புறுத்தலால் பிலயாம், கடவுளுக்கு எதிரான மனநிலையோடு அவனைச் சந்திக்கப் புறப்பட்டார். தான் வளர்ந்து வந்த கழுதைக்குச் சேணம்பூட்டி தன் பயணம் தொடங்கினார். சினம் கொண்ட கடவுள் பிலயாமுக்குப் பாடம் புகட்ட விரும்பினார்.

கடவுளின் தூதர் கையில் வாளோடு கழுதைக்கு மட்டுமே தெரியும்படி வழிமறித்தபோதெல்லாம் முரண்டுபிடித்த கழுதையை அடித்தார். ஓரிடத்தில் இரு மதில் சுவர்களுக்கு மத்தியில் தூதர் நிற்க, பிலயாமைச் சுமந்த கழுதை சுவரில் முட்டி, பிலயாம் காலைச் சுவரோடு நெருக்கித் தேய்த்தது. மூன்றாம் முறையாக அடி வாங்கிய கழுதை கடவுள் கட்டளையால் வாய் திறக்கப்பட, “இப்படி மூன்று முறை அடி வாங்குவதற்கு நான் என்ன தவறு செய்தேன்?” என்று கேட்டது. அதற்குப் பிலயாம், “வரும் வழியில் என்னை ஏளனப்படுத்தியபடி வருகிறாய்என்றார். கழுதையோ, “இன்றுவரை என் வாழ்நாளெல்லாம் உம்மைச் சுமந்து வருகிறேனே, எப்போதாவது நான் இப்படி நடந்ததுண்டா?” என்று கேட்க, ‘இல்லைஎன்றார் பிலயாம். அப்போதுதான் அவருக்குக் கண் திறந்தது. கடவுளின் தூதரைக் கண்டவர் முகங்குப்புற விழுந்து வணங்கினார். கடவுளின் விருப்பத்திற்கு மாறாகத் தான் செய்யவிருந்த தவறை உணர்ந்தார். அதற்குப்பின் மன்னன் பாலாக்கைச் சந்தித்த பிலயாம், நான்கு முறையும் குறி சொல்கையில் இஸ்ரயேலரை ஆசிர்வதித்தார் (எண் 22:23,24).…

இவ்விதம் பிலயாம் என்ற இறைவாக்கினரோடு பேசிய கழுதையைத்தான் தன் முன்னோர் என்று தோமாவிடம் பேசிய விலங்கு கூறியது. தனது போதனையை முடித்த தோமா, “விலங்கினைப் பேச வைத்த ஆண்டவரே, உமக்கே மாட்சியும் மகிமையும்என்றவராய் கழுதையின் மீது அமர்ந்து தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

நகர்ப்புற நுழைவு வாயிலை நெருங்குவதற்குமுன் கழுதையினின்று இறங்கிய தோமா, “இனி நீ உன் இருப்பிடத்திற்குச் செல்லலாம்என்று அதற்குக் கட்டளையிட்டார். ஆனால், அங்கு நடந்ததோ வேறு! தோமா தன்னை விட்டு இறங்கியதும், தான் வந்த நோக்கம் நிறைவேறியதுபோல் கழுதை அங்கேயே தன் உயிரைவிட்டது. இறந்துவிட்ட கழுதையைக் கண்ட மக்கள் அதற்கு உயிர்ப்பிச்சை தருமாறு தோமாவை வேண்டினர். அவரோபேச வைத்த கடவுளே, இதனை இறக்கவும் அனுமதித்துள்ளார். இதனை நல்லடக்கம் செய்யுங்கள்என்றார். அவர் சொற்படியே சீடர்கள் அவ்விலங்கை நல்லடக்கம் செய்தனர்.

இயேசுவின் நற்செய்தியைப் பரப்புவதில் முதன்மையாளராக விளங்கிய புனித பவுலைப்போல் தெளிவான சிந்தனை, அழுத்தம், திருத்தமான பேச்சாற்றல், நினைத்ததை விளக்கமாக எழுதும் ஆற்றல் எனத் தலைமைப் பண்புக்குரிய தகுதிகள் தோமாவுக்கு இல்லாதிருந்தாலும், அவருக்கு இருந்த ஒரே தகுதி இயேசுவின்மீது கொண்ட அளவில்லாத பற்றும், அவருடைய கொள்கைகள்மீது வைத்த அசைக்கமுடியாத பிடிப்புமே. கல்வியறிவில் அவர் குறைபாடு உள்ளவராயிருந்தாலும்படிக்காத மேதைஎன்று கூறுமளவிற்கு வாழ்க்கையிலும், சமயம் சார்ந்த விசயங்களிலும் அனுபவ அறிவு நிறைந்தவராக இருந்தார். இயேசுவின் நற்செய்தியை உலகெங்கிலும் பரப்பவேண்டும் என்ற வெறி மட்டுமே தோமாவிடம் மிதமிஞ்சி இருந்தது.

இந்த நிலையில் அவருக்குச் செல்லும் இடமெல்லாம் வரவேற்பு இருக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. ஒருசில சீடர்களுடன் அவர் காந்தாரத்திற்குள் நுழையும்போது அவரை வரவேற்பவர் எவருமில்லை. ஆனால், அவர் தான் போதித்துக்கொண்டே செல்கையில் நோயாளிகளைக் குணப்படுத்தியது, பேய்களை ஓட்டியது போன்ற புதுமைகளால் ஈர்ப்புக்குள்ளாகிய மக்கள் அவர் பின்னால் திரண்டனர். அவர் போதனைகளை ஆர்வமாகக் கேட்டனர். மக்கள் மனம் மாறுமளவிற்குத் தொடர்ந்து அங்கே மேலும் சில புதுமைகள் நிகழ்த்த வேண்டிய சூழ்நிலையும் அவருக்கு ஏற்பட்டது.

(தொடரும்)

news
சிறப்புக்கட்டுரை
வாரம் ஒரு குறள் – 12

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார் (குறள் 10)

குறள் விளக்கம்: இறைவனுடைய திருவடிகளைப் பொருந்தி  நினைக்கிறவர், பிறவியாகிய பெருங்கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.

சிந்தனை: கடவுள் வாழ்த்துஎன்ற அதிகாரத்தின் பத்தாவது குறளை நாம் சிந்திக்கின்றோம். ஒரு சொற்பொழிவாளர் கூறிய கருத்து இது. திருவள்ளுவர் ஒரே கருத்தைப் பத்து குறள்களில் விளக்குகின்றார். கடவுளைப் பற்றிச் சொல்ல பத்து குறள், கல்வியைப் பற்றிச் சொல்ல பத்து குறள். அப்படியென்றால், நம் அனைவரையும் பற்றி அவர் சிறப்பாக அறிந்திருக்கின்றார் என்று எண்ணத் தோன்றுகின்றது.

இந்த மனிதர்களுக்கு  ஒரு கருத்தை ஒருமுறை சொன்னால் போதாது; அதைப் புரிந்துகொள்ளமாட்டார்கள்; இவர்களிடம் பத்து முறை சொன்னால்தான் மண்டையில் ஏறும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு தலைப்பிலும் பத்து குறள்கள் கொடுத்திருக்கின்றாரோ... என்று எண்ணத் தோன்றுகிறது.

பத்தாவது குறளில், இந்த வாழ்க்கை கடலைப் போன்றது. அதுவும் பெருங்கடல் என்று குறிப்பிடுகின்றார் வள்ளுவர். கடல் என்று சொல்கின்றபோது, அதன் ஒரு கரை மட்டுமே நமக்குத் தெரியும் மறுகரை நம் கண்களுக்குப் புலப்படாது. இதுதான் நமது வாழ்க்கை. நம் வாழ்க்கையில் இக்கரையாகிய பிறப்பு நமக்குத் தெரியும்; அக்கரையாகிய இறப்பு நமக்குத் தெரியாது. எனவேதான் இந்த வாழ்க்கையைப் பெருங்கடல் என்கிறார்.

ஒருவர் இந்த வாழ்க்கையில் சீரும் சிறப்புமாக வாழ்ந்து கரையைக் கடக்க வேண்டுமென்றால், அவர்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கவேண்டும். இறைவனின் பாதத்தைப் பற்றிப் பிடிக்கவேண்டும். அப்படிப்பட்டவர்கள்தான் இந்த வாழ்க்கையைச் சீரும் சிறப்புமாகக் களிப்பர் என்பதைக் குறிப்பிடுகின்றார்.

இறைவன் பாதம் சேராதவர்கள் அமைதியும் நிறைவும் கொண்ட வாழ்க்கையை நடத்த முடியாது என்கிறார்.

இன்றைய நடைமுறை வாழ்க்கையில், இறைநம்பிக்கையாளர்களின் வாழ்க்கைக்கும், இறைநம்பிக்கை அற்றவர்களின் வாழ்க்கைக்கும் எத்தனையோ வித்தியாசம் இருக்கிறது அல்லவா!

பிறவிப் பெருங்கடலைக் கடக்க இறைநம்பிக்கை அவசியம் எனச் சிந்திக்கும்போது, மாற்கு நற்செய்தி 6:47-51 வரையிலான இறைவார்த்தைகள் நமக்கு நினைவுக்கு வருகின்றன:

பொழுது சாய்ந்த பிறகும் படகு நடுக்கடலில் இருந்தது. ஆனால், அவர் தனியே கரையில் இருந்தார். அப்போது எதிர்க்காற்று அடித்தது. சீடர்கள் தண்டு வலிக்கப் பெரிதும் வருந்துவதைக் கண்ட அவர் கடல்மீது நடந்து அவர்களை நோக்கி வந்தார்; அவர்களைக்  கடந்து செல்ல விரும்பினார். அப்போது ஏறக்குறைய நான்காம் காவல் வேளை. அவர் கடல்மீது நடப்பதைக் கண்டு, ‘அது பேய்என்று எண்ணி அவர்கள் அலறினார்கள். ஏனெனில், எல்லாருமே அவரைக் கண்டு அஞ்சிக் கலங்கினர். உடனே இயேசு அவர்களிடம் பேசினார். ‘துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்என்றார். பிறகு அவர்களோடு படகில் ஏறினார். காற்று அடங்கியது. அவர்கள் மிக மிக மலைத்துப் போயினர்.”

சீடர்கள் பெருங்காற்றைக் கண்டு அஞ்சியபோது, அந்நேரத்தில் ஆண்டவர் கடல்மீது நடந்து அவர்களிடம் வந்தார். அவர் படகில் ஏறியதும் காற்று அடங்கியது.

இயேசு தம் சீடர்களிடம் வந்ததும் அவர்கள் துன்பம் விலகியது. அவர்கள் பயணம் அமைதியில் தொடர்ந்தது. எனவே, நம் வாழ்க்கைப் பயணத்தில் இறைவன் நம்மோடு இருப்பாரெனில், நம் வாழ்க்கை பேரும் புகழுமாய் திகழும்.

நாமும் மகிழ்வோடு கடந்து செல்வோம்; இறைவனின் திருப்பாதத்தைப் பற்றிக்கொள்வோம்.

news
சிறப்புக்கட்டுரை
சுமையா? சுமைதாங்கியா? (இளமை ஒரு சவால்! – 12

பிள்ளைகள் வளர்ந்து, பெற்றோர் ஆகின்றார்கள். பிள்ளைகளை வளர்த்துச் சுமந்த பெற்றோர் முதிர்ந்து பிள்ளைகளாகிப் போகிறார்கள்.

பிள்ளைகளை வளர்ப்பதை நாம் சுமை என்று கருதுவதில்லை. ஏன்? வருங்காலத்தில் பிள்ளைகள் நம்மைச் சுமக்கும் என்கிற நம்பிக்கைதான் காரணம்.

பழங்காலக் கூட்டுக் குடும்பங்களில் இந்த நம்பிக்கை ஓரளவுக்கு நிறைவேறியது. சொத்துரிமையும் அதிகாரமும் பெற்றோரிடம் இருந்ததால் அவர்கள் மதிக்கப்பட்டார்கள்.

இன்று நாம் நம் பெற்றோரை மதிக்கிறோமா? அவர்களுக்கு இன்னும் சுமையாக இருந்து அவதிப்படுத்துகிறோமா? அவர்களை அன்போடு சுமக்கும் சுமைதாங்கிகளாக இருக்கிறோமா?

இன்றைய இளைஞர்களின் சமுதாயப் பொருளாதார நிலையைப் பொறுத்து இந்தக் கேள்விக்கான விடையும் மாறக்கூடும்.

பொறுப்புணர்வோடும் சுயக்கட்டுப்பாட்டுடனும் வளராத, வளர்க்கப்படாத பிள்ளைகள் தங்கள் பொருளாதார நிலையைச் சரிப்படுத்திக்கொள்ள பெற்றோரையே நச்சரிக்கிறார்கள். முதிய வயதிலும் பெற்றோருக்குச் சுமையாகவே மாறிப்போகிறார்கள். தங்கள் சுயநலத்திற்காகப் பெற்றோரை அவதிக்கு ஆளாக்கும் பல இளைஞர்களின் அவலங்களைப் பார்க்கிறோம். ஆனால், இது அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடப்பவைதான்நம் மன உறுத்தலுக்கு இது ஓர் ஆறுதல்.

மிகுந்த சுயகட்டுப்பாட்டுடன் படித்து  முன்னேறிவிடும் இளைஞர்களில் பலர் பெற்றோரைச் சார்ந்திருப்பதில்லை. வெளியூர், வெளிநாடு என்று உயர, தனிமையை நோக்கிப் பறந்துவிடுகிறார்கள். இவர்கள் நிச்சயம் பெற்றோருக்குச் சுமையாக இருப்பதில்லை. பலர் பெற்றோருக்குத்  தேவையான பொருளாதார, மருத்துவ வசதிகளையும் நன்றாகக் கவனித்துக்கொள்கிறார்கள்.

அடிக்கடி பெற்றோரைச் சந்திக்கவோ, நேரத்தைச் செலவிடவோ இவர்களால் முடிவதில்லை. இவர்களது பெற்றோர் கொஞ்சம் ஏக்கத்தோடு  காலம் தள்ளுவது தவிர்க்க முடியாத காரியம்தான். ஆனால், நம் இளைஞர்களில்  பெரும்பாலோர் நடுத்தரப் பொருளாதார நிலைகளில்தான் உள்ளனர். சந்தைச் சமூகத்தின் ஆடம்பரத் தேவைகளை ஈடுகட்ட முடியாமல் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

அடிப்படைத் தேவைகளைவிட சந்தை தூண்டும் ஆசைகளுக்கு அடிமையாகி, வரவுக்கு மேல் செலவு செய்து அவதிப்படுகிறோம். நம்மோடு நம் பெற்றோரையும் சேர்த்து அவதிப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

நகரத்தில் நாம் வசதியாக வாழ முயற்சிக்கின்றோம். நம் பெற்றோர் கிராமங்களில் சிரமப்படுகிறார்கள்.

நாம் வீடு வாங்க ஆசைப்படுகின்றோம்; அதற்காகப் பெற்றோர் தங்கள் கையிருப்பைச் செலவு செய்யும் நிலை வருகிறது. சில நேரங்களில் பெற்றோர் தங்கள் வீட்டையும், வீட்டு நிலத்தையும் விற்க வேண்டி வருகிறது.

ஒரு முதிய நண்பர் ஓய்வூதியம் பெறுகிறார். தங்கள் ஓய்வூதியம் முழுவதையும் தன் ஒரே மகனிடம் கொடுத்துவிட்டு, அவன் குடும்பத்தோடு தங்கிக்கொள்ளலாம் என்று பையன் சொல்கிறான் என்று சோகத்தோடு கூறினார்.

இன்றைய நிலையில் பல குடும்பங்களில் கணவன்-மனைவி இருவரும் வேலைக்குப் போக வேண்டிய நிலை உருவாகிவிட்டது. வீட்டு வேலைகளைக் கவனித்துக்கொள்வதும், பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வதும் தாத்தா-பாட்டியர் வேலையாகிப் போகிறது. பேரப்பிள்ளைகளோடு இருப்பது முதியவர்களுக்கு ஒரு சுகம்தான். ஆனால், அதுவே வயதுக்கு மீதிய வேலைச்சுமையாக மாறிவிடாமல் இருக்கவேண்டுமே! நிறைய குழந்தைகள் இருப்பது ஒரு காலத்தில் பெற்றோருக்கு வலிமை சேர்த்தது. இன்று நான்கு பிள்ளைகள் தனித்தனிக் குடும்பத்தில் வசிக்கும்போது, வயதான பெற்றோர் எங்கே தங்குவது? ஒரு வீட்டில் ஒரு மாதம் என்று சில முதியவர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். இன்னும் சில வீடுகளில் அம்மா ஒரு வீட்டில், அப்பா இன்னொரு வீட்டில்! இவ்வளவையும் தாண்டி பிள்ளைகள் வசதியாக இருந்தாலும், அவர்களை வசதிக்கு ஆளாக்கிய பெற்றோர், முதியோர் இல்லங்களில் வாழும் அவலங்களும் அரங்கேறுகின்றன.

இளைய தலைமுறை கொஞ்சம் நிதானமாகச்  செயல்பட்டால் இந்த வகை அவலங்களைத் தவிர்க்கலாம். நாம் அசுர வேகத்தில் வசதிகளைப் பெருக்கிக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. அளவுக்கு மீறிக் கடன்பட வேண்டிய தேவையும் இல்லை. கொஞ்சம் நிதானமாகத் திட்டமிட்டால் நம் பெற்றோரின் அன்பும் ஆசியும் நமக்குக் கிடைக்கும். நம் பிள்ளைகளும் தாத்தா-பாட்டியரின் அன்பைச்  சுவைப்பார்கள். முதிய பருவத்தில் தங்கள் பெற்றோரை மதிக்கவேண்டும் என்பதையும்  கற்றுக்கொள்வார்கள்.

ஒரு குடும்பத்தில், பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் மூலம் தாத்தா-பாட்டியரின் செலவுகளுக்காக மாதந்தோறும் பணம் கொடுப்பது வழக்கம். அந்தப் பிள்ளைகள் வளர்ந்த பிறகு தங்கள் பெற்றோரின் தேவைகளைப் புரிந்துகொண்டு செயல்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை! அதற்கான பயிற்சிதான் இளமையிலேயே கிடைத்துவிடுகிறதே! என்னைச் சுமந்து வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை முதுமைக் காலத்தில் நான் மதித்து நடப்பேன். என் துணைவரின் பெற்றோரின் அன்பையும் ஆசியையும் நான் பெறுவேன். எங்கள் பெற்றேரின் அன்பு எங்களுக்கும் எங்கள் பிள்ளைகளுக்கும் அவசியம்.

news
சிறப்புக்கட்டுரை
வகுப்பறைக்குச் சிறகுகள் தருவதா? சுமை ஏற்றுவதா?

காலை மணி அடித்தது. ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்தார். மாணவர்கள் எழுந்து நின்றார்கள்.

வணக்கம், ஆசிரியரே!”

அவர் புன்னகையுடன் அவர்களைப் பார்த்தார். மேசையின்மீது பாடப்புத்தகம் இருந்தது. அருகில் கைப்பேசி இருந்தது. கணினியில் இன்னும் சில பதிவுகள் காத்திருந்தன. முடிக்க வேண்டிய படிவங்கள் இருந்தன. பதிவேற்ற வேண்டிய தரவுகள் இருந்தன. இன்னும் சில நிர்வாகப் பணிகள் நினைவுக்கு வந்தன.

சில நிமிடங்களுக்கு முன்புதான் அவர் வகுப்பறைக்குள் நுழைந்திருந்தார். ஆனால், அவரது மனம் ஏற்கெனவே பல இடங்களில் ஓடிக்கொண்டிருந்தது. மாணவர்கள் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குத் தேவையானது ஓர் ஆசிரியர். ஆனால், அந்த நிமிடத்தில் ஆசிரியருக்குள் இருந்தது ஒரு கேள்வி: ‘நான் இன்று இவர்களுக்குப் பாடம் கற்பிக்கப் போகிறேனா? அல்லது இன்னும் சில மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பதிவுகளை முடிக்கப் போகிறேனா?’

ஆசிரியர் என்றால் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது கரும்பலகை. கையில் சுண்ணக்கட்டி, முன்னால் மாணவர்கள், மனத்தில் ஒரு பாடம். ஆனால், இன்றைய ஆசிரியரின் நாள் அதோடு முடிவதில்லை. கைப்பேசி செயலிகளில் அன்றாடப் பதிவுகள், மாணவர்களின் பல்வேறு தரவுகள், திட்டங்களுக்கான கணக்குகள், படிவங்கள், அறிக்கைகள், நிர்வாகப் பணிகள்... ஒரு பணியை முடித்தவுடன் மற்றொரு பணி காத்திருக்கிறதுதொழில்நுட்பம் கல்வியை எளிதாக்க வந்தது. ஆனால், சில நேரங்களில் தொழில்நுட்பத்தின் பின்னால் ஓடும் ஆசிரியருக்கு மாணவர்களோடு பேசுவதற்கே நேரமில்லாமல் போகிறது. ஒரு மாணவனின் மதிப்பெண் பதிவாகிறது. ஆனால், அவனுடைய மனநிலை பதிவாகிறதா? ஒரு மாணவியின் வருகை பதிவாகிறது. ஆனால், அவள் ஏன் தொடர்ந்து அமைதியாக இருக்கிறாள் என்று யாராவது பதிவு செய்கிறார்களா? ஒரு பள்ளியின் தரவுகள் முழுமையாக இருக்கலாம்; ஆனால், அந்த வகுப்பறையின் மனிதத் தன்மை முழுமையாக இருக்கிறதா?

ஆசிரியர் என்பவர் பாடத்தை மட்டும் கற்பிப்பவர் அல்லர். ஒரு மாணவன் தோல்வியடைந்தபோது, ‘மீண்டும் முயற்சி செய்என்று சொல்பவர். ஒரு மாணவி தன்னம்பிக்கையை இழந்தபோது, ‘உன்னால் முடியும்என்று நம்பிக்கை கொடுப்பவர். வீட்டில் சொல்ல முடியாத ஒரு பிரச்சினையை, பள்ளியில் ஆசிரியரிடம் வந்து பகிரும் குழந்தையின் மௌனத்தைக் கேட்பவர். அதனால்தான் கல்வி என்பது வெறும் தகவல்களை வழங்குவது அல்ல; ஒரு மனிதனை உருவாக்குவது. அதற்கு நேரம் தேவை, பொறுமை தேவை, உறவு தேவை, அதற்கும் மேலாக, ஆசிரியரின் மன அமைதி தேவை.

ஆனால், இன்று அந்த மன அமைதியும் பல நேரங்களில் கேள்விக்குறியாகிறது. பணிப் பாதுகாப்பு குறித்த அச்சம்; மறு வரையறை மற்றும் பணியிட மாற்றங்கள் குறித்த குழப்பம்; பல ஆண்டுகளாக வகுப்பறையில் அனுபவத்தோடு பணியாற்றிய ஆசிரியர்களின் தகுதி குறித்த கேள்விகள். ஒரே தேர்வு அல்லது ஒரு நிர்வாக முடிவு, பல ஆண்டுகளின் அனுபவத்தை மீண்டும் அளவிடத் தொடங்கும்போது, அது ஒரு பணியாளரின் வாழ்க்கையை மட்டுமல்ல; அவரது சுயமரியாதையையும் தொடுகிறது.

பல ஆண்டுகளாக மாணவர்களை உருவாக்கிய ஒருவர், ‘நாளை நான் இதே வகுப்பறையில் இருப்பேனா?’ என்று எண்ணிக்கொண்டே பாடம் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால், அவருடைய மனம் முழுமையாக மாணவர்களிடம் இருக்குமா? மற்றொரு கேள்வியும் எழுகிறது. கல்வி என்பது மொழியோடு இணைந்தது அல்லவா! ஓர் ஆசிரியர் ஒரு பாடத்தைக் கற்பிக்கும்போது, அவர் வெறும் தகவலை மாணவரிடம் கொண்டு சேர்ப்பதில்லை. அவன் அறிந்த மொழியில், அவன் புரிந்துகொள்ளும் விதத்தில், அவன் வாழும் சூழலோடு இணைத்து, அந்த அறிவை அவனுடைய அனுபவமாக மாற்றுகிறார். அதனால்தான் ஆசிரியர் என்பவர் ஒரு பாடத்தைச் சொல்லும் மனிதர் மட்டுமல்லர். அவர் ஒரு பாலம்! அறிவுக்கும் வாழ்க்கைக்கும் இடையே ஒரு பாலம். கனவுக்கும் நிஜத்திற்கும் இடையே ஒரு பாலம். மாணவனின் இன்றைய நிலைக்கும், அவன் நாளைய மனிதனாக மாறுவதற்கும் இடையே ஒரு பாலம். அந்தப் பாலத்தின்மீது நாம் சுமைகளை மட்டுமே ஏற்றிக்கொண்டே சென்றால், அது எவ்வளவு நாள் தாங்கும்?

ஓர் ஆசிரியரின் கைகளைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். அந்தக் கைகள் தேர்வுத் தாள்களைத் திருத்துகின்றன; பாடக்குறிப்புகளை எழுதுகின்றன; மாணவனின் தவற்றைத் திருத்துகின்றன; சில நேரங்களில், அழும் குழந்தையின் தோளில் ஆறுதலாகத் தங்குகின்றன. அந்தக் கைகளில் இன்னும் எத்தனை படிவங்களை நாம் வைக்கப் போகிறோம்? எத்தனை தரவுகளை, எத்தனை அறிக்கைகளை, எத்தனை நிர்வாகச் சுமைகளை...? ஓர் ஆசிரியரின் கையில் மீண்டும் ஒரு புத்தகத்தை வைக்க வேண்டிய நேரம் இது.

ஆசிரியர் தினம் வந்துவிட்டால் நாம் என்ன செய்கிறோம்? மலர் கொடுக்கிறோம், வாழ்த்து சொல்கிறோம், விருது வழங்குகிறோம். ‘ஆசிரியர்கள் நாட்டின் தூண்கள்என்று மேடைகளில் பேசுகிறோம். அவை எல்லாம் நல்லவையே. ஆனால், ஆசிரியரை உண்மையாக மதிப்பது என்பது ஒரு நாளில் மலர் கொடுப்பது மட்டும் அல்ல; அவருடைய பணியைப் புரிந்துகொள்வது, தேவையற்ற சுமைகளைக் குறைப்பது, வகுப்பறைக்கான நேரத்தை மீட்டுக் கொடுப்பது, அவருடைய சுயமரியாதையைப் பாதுகாப்பது. அவர் சுதந்திரமாகச் சிந்திக்கவும் கற்பிக்கவும், மாணவர்களோடு உறவை உருவாக்கவும் இடம் கொடுப்பது. இதுதான் உண்மையான ஆசிரியர் தின வாழ்த்து.

இறுதியில், ஓர்ஆசிரியரிடம் நாம் ஒரு கேள்வி கேட்கலாம்: “நீங்கள் எதற்காக ஆசிரியப் பணியைத் தேர்ந்தெடுத்தீர்கள்?”

ஒருவேளை அவர் இப்படிச் சொல்லலாம்: “ஒரு குழந்தையின் வாழ்க்கையில் நான் ஒரு சிறிய மாற்றத்தையாவது ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக.”

இந்தப் பதிலுக்குள் கல்வியின் முழு அர்த்தமும் அடங்கியிருக்கிறது. அதனால், ஆசிரியர்களிடம் நாம் கேட்கவேண்டியது, “இன்னும் என்ன செய்ய முடியும்?” என்பது மட்டுமல்ல; சில நேரங்களில், “உங்களுடைய பணியைச் சிறப்பாகச் செய்ய நாங்கள் என்ன சுமையை உங்களிடமிருந்து இறக்க வேண்டும்?” என்றும் கேட்கவேண்டும்.

ஏனெனில், ஓர் ஆசிரியரின் மனம் சுதந்திரமாக இருக்கும்போதுதான், ஒரு மாணவனின் சிந்தனைக்கும் சிறகுகள் முளைக்கும்.

இந்த ஆசிரியர் தினத்தில் அவர்களுக்குப் பாராட்டு வார்த்தைகளை மட்டும் கொடுக்காமல், அவர்களின் சுமைகளைக் குறைப்போம்; அவர்களின் நேரத்தை மீட்டுத் தருவோம்; அவர்களின் சுயமரியாதையைப் பாதுகாப்போம்; அவர்களின் வகுப்பறைக்கு மீண்டும் சுதந்திரம் கொடுப்போம்.

ஆசிரியர்களின் கைகளில் சுமைகளை ஏற்றாமல்... அவர்களின் கனவுகளுக்குச் சிறகுகள் தருவோம்.

news
சிறப்புக்கட்டுரை
ஆனால்... உதடுகளின் புன்னகைக்குப் பின்னால்! (வாழ்வின் மறுபக்கம் - 2)

ஒருவரைப் பார்க்கிறோம். முகம் முழுவதும் புன்னகை. முகத்தில் புன்னகை இருந்தால், ‘அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார்என்று முடிவு செய்துவிடுகிறோம். சிரித்துப் பேசினால், ‘எந்தக் கவலையும் இல்லாதவர்என்று நினைத்துவிடுகிறோம். குடும்பத்தோடு புகைப்படம் எடுத்திருந்தால், ‘அவர்களுடைய வாழ்க்கை மிகவும் அழகாக இருக்கிறதுஎன்று சொல்லிவிடுகிறோம்.

ஆனால், ஒரு முகம் ஒரு வாழ்க்கையின் முழு கதையல்ல; ஒரு புன்னகை ஒருவருடைய மகிழ்ச்சியின் முழு அளவுகோலும் அல்ல; சில நேரங்களில் உதடுகள் சிரித்துக்கொண்டிருக்கும்; ஆனால், மனம் யாருக்கும் தெரியாமல், ஆயிரம் துண்டுகளாக உடைந்து கொண்டிருக்கும்.

சில நேரங்களில் உதடுகள் சொல்வதைவிட, கண்கள் அதிகமாகப் பேசும். சில நேரங்களில் கண்கள்கூட உண்மையைச் சொல்லாது. ஏனெனில், மனிதன் தனது வலியை மறைக்கவும் கற்றுக்கொள்கிறான். குறிப்பாக, தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்காக வாழ வேண்டிய கட்டாயம். எனவே, அழுவதற்கான இடத்தையும் நேரத்தையும் வாழ்க்கை அவர்களுக்கு விட்டுக் கொடுப்பதில்லை. எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான நற்றிணையில் வரும் ஓர் அழகிய வரி:

அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்

முல்லை சான்ற கற்பின்

மெல் இயற் குறுமகள் உறைவின், ஊரே     (பாடல் 142).

அடர்ந்த இருளில் தன் தனிமையின் துயரத்தை எண்ணி கண்ணீர் வடிக்கும் தலைவி, வீட்டு வாசலில் விருந்தினர் தட்டும் சத்தம் கேட்டவுடன் தன் சோகத்தையும் குறையையும் மறைத்து முகமலர்ந்து அவர்களை வரவேற்கும் இல்லறப் பண்பை இச்சங்க இலக்கியப் பாடல் நுட்பமாகப் பதிவுசெய்கிறது.

ஒரு புன்னகை ஒரு மனிதரின் மகிழ்ச்சியை மட்டுமே சொல்லாது; சில நேரங்களில் அது அவர் மறைத்திருக்கும் கண்ணீரையும் சொல்லும். சில புன்னகைகள் மகிழ்ச்சியில் பிறக்கின்றன; சில புன்னகைகள் வலியைத் தாண்டிப் பிறக்கின்றன. இவை அன்பின் வெளிப்பாடு; இன்னும் சில நேரங்களில் அது தன்னைத்தானே தாங்கிக்கொள்ளும் மன உறுதி. நம்மில் எத்தனை பேர் இப்படிப்பட்ட மனிதரைத் தினமும் பார்க்கிறோம்!

கணவன் வேலை இழந்திருக்கலாம்; வீட்டுக் கடன் இருக்கலாம்; குழந்தையின் கல்விக் கட்டணத்தைச் செலுத்த இயலாமல் தவித்துக்கொண்டிருக்கலாம்; உடல்நிலை சரியில்லாமல் இருக்கலாம்; உறவுகளுக்குள் புரிந்துகொள்ள முடியாத இடைவெளி இருக்கலாம். இருந்தாலும், காலையில் குழந்தைகளை எழுப்பி, அவர்களுக்குச் சாப்பாடு கொடுத்து, ‘நீ நல்லா படி... நல்லா இருப்பே!’ என்று சொல்லிக்கொண்டே சிரிக்கும் ஒரு தாய்... அவரிடம்அம்மா, நீ மகிழ்ச்சியா இருக்கியா?’ என்று கேட்டால், ‘ஆமாம்எனக்கென்ன குறை?’ என்று சொல்லிக்கொண்டு, அடுத்த நாளை நோக்கி நடக்கிறார். அந்தஎனக்கென்ன குறை?’ என்பதற்குள் எத்தனை இரவுகளின் கண்ணீர் இருக்கிறது என்பது யாருக்குத் தெரியும்?

குழந்தைகள் தூங்கிய பிறகு தனியாக அழுதுவிட்டு, மறுநாள் காலை எதுவுமே நடக்காதது போலப் புன்னகையுடன் எழுந்திருக்கும் அன்னையர் எத்தனை பேர்! அவர்கள் பலவீனமானவர்கள் அல்லர்; உண்மையில், அவர்கள் நம்மால் எளிதில் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு வலிமையானவர்கள். ஒரு தாய் தன் குழந்தையிடம், ‘நீ கவலைப்படாதே... அம்மா இருக்கேன்!’ என்று சொல்லும்போது, அந்த வார்த்தைகளில் குழந்தைக்கான ஆறுதல் மட்டுமல்ல, தன்னையே தாங்கிக்கொள்ளும் ஒரு தாயின் மன உறுதியும் இருக்கிறது.

ஒரு தந்தையை எடுத்துக்கொள்வோம்; வருமானம் போதவில்லை; மாதத்தின் கடைசி வாரம்; மளிகைக் கடைக்காரரிடம் பாக்கிப் பணம் கொடுக்க வேண்டியுள்ளது; வாங்கியப் பொருள்களுக்கு மாதத் தவணை (EMI) கட்டவேண்டியுள்ளது; வீட்டுக் கடனின் தொகை நெருக்குகிறது; மேலுமோர் எதிர்பாராத செலவு வந்து நிற்கிறது; அலுவலகத்தில் மேலதிகாரியின் அழுத்தம் வேறு... இத்தனைக்கும் நடுவில், இரவு வீட்டிற்குள் நுழையும்போது குழந்தை ஓடி வந்து, ‘அப்பா!’ என்று கட்டிப்பிடிக்கிறது. அந்தக் குழந்தையின் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியைப் பார்த்தவுடன், தந்தை தன் கவலைகளை மறைத்துவிட்டுச் சிரிக்கிறார்.

ஐயன் வள்ளுவன் கூறும்,

இடுக்கண் வருங்கால் நகுக அதனை

அடுத்தூர்வது அஃதொப்ப தில் (குறள் 621)

என்ற வரிகள் இங்கே இன்னும் ஆழமான பொருளைப் பெறுகின்றன.

ஆயிரம் வலிகள் வந்தாலும், ‘நான் உடைந்து போகமாட்டேன்என்று ஒரு மனிதர் தனக்குள் எடுக்கும் தீர்க்கமான முடிவின் வெளிப்பாடுதான் அந்தப் புன்னகை. புன்னகை என்பது வலியை மறப்பதற்கான வழி அல்ல; வலியைத் தாங்கிக்கொள்வதற்கான ஆற்றல். அது மனத்தின் தீர்க்கமான உறுதிப்பாடு.

சிரிப்பு என்பது பெரும்பாலும் மகிழ்ச்சியின் அடையாளம் அல்ல; அது மனிதர் தன் கண்ணீரை மறைக்கக் கண்டறிந்த மிகச்சிறந்த கேடயம்\" என்பார்கள். அதனால்தான் சில புன்னகைகள் சாதாரணமானவை அல்ல; அவை போராடிப் பெற்றவை. வலி இல்லாத மனிதர் வலிமையானவர்கள் அல்லர்; வலி இருந்தும் விழாமல் நிற்பவர்களே வலிமையானவர்கள்.

வாழ்க்கையில் மறைக்கப்பட்ட ஒவ்வொரு வலியும் பலவீனத்தின் அடையாளமல்ல. சில வலிகள் அன்பின் காரணமாக மறைக்கப்படுகின்றன. அவை பல நேரங்களில் சத்தமாக வெடிப்பதில்லை; ஆனால், அமைதியாக வளர்கின்றன. கணவன்-மனைவிக்குள் பேசப்படாத வார்த்தைகள், பிள்ளைகளிடம் சொல்லப்படாத கவலைகள், பெற்றோரிடம் பகிரப்படாத தோல்விகள், சகோதரர்களுக்குள் உருவாகும் தூரங்கள், எல்லாரும் இருந்தும் அனுபவிக்கின்ற தனிமைகள்... இவையெல்லாம் வீட்டின் சுவர்களுக்குள் அமைதியாக வாழ்கின்றன. வெளியில் பார்க்கும்போது அந்தக் குடும்பம் மிகவும் சாதாரணமாகத் தோன்றலாம்; பண்டிகை நாளில் அனைவரும் ஒன்றாகப் புகைப்படம் எடுக்கலாம்; பிறந்தநாள் கொண்டாடலாம்; சமூக ஊடகத்தில் வாழ்த்துகளைப் பகிரலாம். ஆனால், அந்தப் புகைப்படத்திற்குப் பின்னால் யார் யாரிடம் பேசாமல் இருக்கிறார்கள்? யார் யாரை மன்னிக்க முடியாமல் இருக்கிறார்கள்? யார் யாரிடம் அன்பு கேட்டு அமைதியாகக் காத்திருக்கிறார்கள் என்பதெல்லாம் நமக்குத் தெரியாது.

நாம் ஒருவரின் வாழ்க்கையின் முகப்புப் பக்கத்தை மட்டுமே பார்க்கிறோம். அவர்களின் அடுத்த பக்கங்களில் என்ன இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. “நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒரு கடினமான போராட்டத்தை எதிர்கொண்டு இருக்கலாம். எனவே, எப்போதும் அன்போடும் இரக்கத்தோடும் இருக்கவேண்டும்என்னும் ஸ்காட்லாந்து எழுத்தாளர் இயான் மேக்லாரனின் கூற்று இதையே நினைவூட்டுகிறது.

சிலர் வலியோடு சிரிக்கிறார்கள்; சிலர் கண்ணீரோடு வாழ்கிறார்கள்; சிலர் உடைந்த இதயத்தோடு மற்றவர்களைத் தேற்றுகிறார்கள். தாங்கள் ஆறுதல் தேவைப்படுகிற நேரத்திலும், ‘பரவாயில்லை... எல்லாம் சரியாகிவிடும்என்று மற்றவர்களிடம் சொல்கிறார்கள். இதுதான் மனித மனத்தின் அற்புதம். உலகம் பார்க்கும் மனிதனும், அவனுக்குள் வாழும் மனிதனும் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

நம்மைச் சுற்றியுள்ள பலர் உதடுகளில் புன்னகையையும், இதயத்தில் ஆயிரம் வலிகளையும் சுமந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்த உதடுகளின் புன்னகைக்குப் பின்னால், சொல்லப்படாத ஒரு வலி இருக்கிறது! அந்த வலிதான் மனவுறுதி; அந்த வலிதான் நம்பிக்கை! ஆனால், அந்த வலிகளில்தான், விடியலை நோக்கி நடக்கத் துணியும் ஒரு தீர்க்கமான மனமும் உறுதியும் மறைந்திருக்கின்றன!

எனவே, வாழ்க்கையின் மறுபக்கத்தையும் பார்க்கக் கற்றுக்கொள்வோம். முகத்தை மட்டும் பார்க்காமல் மனத்தையும் பார்க்கலாம்; சிரிப்பை மட்டும் கேட்காமல் மௌனத்தையும் கேட்கலாம்அவர்களுடைய புன்னகையை மதிக்கக் கற்றுக்கொள்வோம்; அதன் பின்னால் இருக்கும் வலியையும் மதிக்கலாம். அவர் சொல்லாத கதைக்கு இடம் கொடுக்கலாம்; அவர் மறைத்த கண்ணீருக்கு மரியாதை கொடுக்கலாம். ஏனெனில், நம்மைச் சுற்றி நடமாடும் பலர் உடைந்தவர்கள் அல்லர்; உடைந்த மனங்களோடு கூட அழகாக வாழக் கற்றுக்கொண்டவர்கள்!

(பயணம் தொடரும்...)

news
சிறப்புக்கட்டுரை
படைப்பின் காலம் (Season of Creation) – வான்கொடையை வற்றாது காப்போம்!

இயற்கை என்பது வெறும் அகவமைப்போ, நாம் நுகர்வதற்கானப் பொருளோ அன்று; மாறாக, அது இறைவனின் அருள்கொடை; நாம் அதன் பிரிக்க முடியாத ஓர் அங்கம்!

21-ஆம் நூற்றாண்டின் மனிதச் சமூகம் தொழில்நுட்பப் புரட்சியிலும், கட்டுப்பாடற்ற நுகர்வுப் போக்கிலும் மூழ்கியிருக்கும் இக்காலகட்டத்தில், சூழலியல் சமநிலையின்றி பூமிப்பந்து தவித்துக் கொண்டிருக்கிறது. காலநிலை மாற்றத்தின் பேரழிவுகள், நீர்நிலைகளின் வறட்சி, மனிதப் பேராசையால் ஏற்படும் சூழலியல் சீரழிவுகள் ஆகியவற்றிற்கு மத்தியில், கத்தோலிக்கத் திரு அவையும் உலகளாவிய கிறித்தவச் சமூகங்களும்படைப்பின் காலத்தை(Season of Creation) ஒரு புனிதமான ஆன்மிகச் சமூகப் பொறுப்பாகக் கொண்டாடுகின்றன.

2026-ஆம் ஆண்டின் படைப்பைப் பராமரிப்பதற்கான 11-வது உலக இறைவேண்டல் தினத்தை முன்னிட்டு (செப்டம்பர் 1) திருத்தந்தை லியோ அண்மையில் சிறப்புமிக்க உரையாற்றியுள்ளார். அதன் அடிப்படையில், படைப்பின் காலத்தின் ஆழமான ஆன்மிகப் பொருள், அமைதிக்கும் சூழலியலுக்கும் இடையிலான பிணைப்பு மற்றும்நீரைப் பாதுகாப்போம்எனும் காலத்தின் கட்டாயக் கோரிக்கை குறித்த ஒரு விரிவான சிந்தனைப் பகிர்வு ஆகியவை இன்றைய காலத்தின் அடிப்படைத் தேவையாக உள்ளன.

படைப்பின் காலம்: தோற்றமும் ஆன்மிக அவசியமும்

வரலாற்று ரீதியாக, படைப்பின் காலம் என்பது செப்டம்பர் 1-ஆம் நாள் தொடங்கி அக்டோபர் 4-இல் வரும் புனித பிரான்சிஸ் அசிசியாரின் திருவிழா வரை ஐந்து வாரங்கள் தொடரும் ஒரு சிறப்புமிக்கக் காலகட்டமாகும்.

1989-ஆம் ஆண்டு கீழைத் திரு அவையின் அகில உலகத் தலைவர் முதலாம் திமித்ரியோஸ் என்பவரால் செப்டம்பர் 1 ‘படைப்பிற்கான இறைவேண்டல் நாள்அறிவிக்கப்பட்டது. பின்னர் 2007-இல் ஐரோப்பியத் திரு அவைகளின் கூட்டமைப்பால் இது ஐந்து வாரக் கொண்டாட்டமாக நீடிக்கப்பட்டு, 2015-ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கத்தோலிக்கத் திரு அவையிலும் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது.

திருத்தந்தை லியோ அவர்கள் ‘Missa pro custodia creationis\\\' (படைப்பைப் பாதுகாப்பதற்கான திருப்பலி) எனும் புதிய வழிபாட்டு முறையை உரோமன் திருப்பலிப் புத்தகத்தில் முறைப்படி இணைத்து, அகில உலகத் திரு அவையும் சூழலியல் பாதுகாப்பிற்காக ஒன்றிணைந்து செபிக்கப் பாதையமைத்துள்ளார்.

படைப்பின் காலம் என்பது ஏதோ ஓர் அரசியல் கொள்கையோ அல்லது வெறும் சமூக அமைப்புகளின் பிரச்சாரமோ அன்று; மாறாக, அது கிறித்தவ நம்பிக்கையின் மையப்பகுதியாகும். இயற்கையின் பேரழகைக் கண்டு வியப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், அதன் படைப்பாளராகிய இறைவனை நோக்கி நமது பார்வையை உயர்த்துவதே இக்கால கட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

நீரைப் பாதுகாப்போம்!

செப்டம்பர் மாத இறைவேண்டல் கருத்தாகத்நீரைப் பாதுகாப்போம்என்பதைத் திருத்தந்தை லியோ அறிவித்துள்ளார். வத்திக்கானில் வெளியிட்ட செய்தியில், “தண்ணீர் எல்லைகளற்ற உரிமையாகும்; அது அனைவருக்கும் உரிய பொதுவான கொடைஎன்று அவர் அழுத்தம் திருத்தமாக இயம்பியுள்ளார்.

வாழ்வளிக்கும் நீர் (Living Waters) என்பது பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை, “நீர் என்பது வணிகப் பொருளன்று; அது உலகளாவிய மானுட உரிமைஎன்றும், “அது கிணறு மற்றும் பாத்திரங்களில் தேங்கியே இருப்பது அல்ல; மாறாக, அது தேக்கமின்றி ஓடும் வாழ்வின் ஊற்றுஎன்றும், அது நிலத்தை வளப்படுத்தி, பூக்களை மலரச் செய்து, சுழற்சியைக் காக்கும் ஜீவநதி என்றும், யோவான் நற்செய்தியில் கிறிஸ்துவே அத்தகைய தாகம் தீர்க்கும்ஜீவ தண்ணீராகதிகழ்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நீரின் தத்துவமும் அசிசியின் பார்வையும்

புனித பிரான்சிஸ் அசிசியார் தனதுசூரியனின் கீதம்(The Canticle of the Sun) நூலில், நீரைத்தங்கை நீர்(Sister Water) என்று அழைக்கின்றார். அது பயனுள்ளது, தாழ்மையானது, விலைமதிப்பற்றது மற்றும் தூய்மையானது என்று அவர் போற்றுகிறார். ஆனால், இன்றைய நுகர்வுக் கலாச்சாரத்தில், குடிநீர் வணிகப் பொருளாக்கப்பட்டு, ஏழை எளிய மக்கள் தூய்மையான நீரின்றி மைல்கணக்கில் நடந்து செல்லும் அவலம் நிலவுகிறது. குழாய் கசிவுகளைச் சரிசெய்தல், நீரைக் குறைவாகப் பயன்படுத்துதல், நீர்நிலைகளை மாசடையாமல் தடுத்தல் போன்ற தனிநபர் பொறுப்புகளை நாம் தட்டிக் கழிக்க முடியாது என்று திருத்தந்தை லியோ சுட்டிக்காட்டுகிறார்.

ஆயுத மோதல்களும் சூழலியல் அழிவும்: ஒரு நச்சுச் சுழற்சி

2026-ஆம் ஆண்டின் படைப்பைப் பராமரிப்பதற்கான இறைவேண்டல் தினச் செய்தியில், திருத்தந்தை லியோ ஒரு மிக முக்கியமான உண்மையை உலகிற்கு முன்வைத்துள்ளார்: ‘ஆயுத மோதல்களுக்கும் சுற்றுச்சூழல் சீரழிவிற்கும் இடையிலான ஆழமான பிணைப்பு.’ இறைவாக்கினர் எசாயாவின்அவர்கள் தங்கள் வாள்களைக் கொழுக்களாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள் (2:4) என்ற இறைவார்த்தையை இவ்வாண்டின் மையக்கருத்தாகத் திருத்தந்தை அறிவித்துள்ளார்.

போரினால் ஏற்படும் காயங்கள், போர்க்களத்தைத் தாண்டி பூமியின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் சேதப்படுத்துகின்றன. இது மனித இதயத்தின் ஆன்மிக மற்றும் நன்னெறி வீழ்ச்சியைக் காட்டுகிறது. பேராசை, ஆதிக்கம் செலுத்தும் மனப்பான்மை மற்றும் உடனடி இலாப நோக்கமே இந்த அழிவுகளுக்குக் மூலக்காரணமாகும்.

உண்மையான சூழலியல் மனமாற்றம்

படைப்பின் காலத்தில் நாம் செய்யவேண்டிய முதன்மைப் பணி, அன்றாட வாழ்வின் இரைச்சல்களிலிருந்து விலகிஅமைதி நிலைக்கு(Silent Mode)  மாறுவதாகும். மனித நடவடிக்கைகளால் ஏற்படும் இரைச்சல்களைக் குறைத்தால் மட்டுமே, இயற்கை எழுப்பும் மெல்லிசைக் குரலையும், அதன் வழியே பேசும் இறைவனின் குரலையும் நம்மால் கேட்க முடியும். புனித பிரான்சிஸ் அசிசியார் இயற்கை உலகை தனியான ஒன்றாகப் பார்க்காமல், மனிதர்களாகிய நாமும் அதன் குடும்பத்தில் ஒரு பகுதி என்று உணர்ந்தார். விண்மீன்கள், கதிரவன், நிலவு, நீர், நெருப்பு, தாய் பூமி ஆகிய அனைத்தும் நமக்குச் சகோதர-சகோதரிகளாகும்.

நாம் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள்

ஆழ்ந்த தியானம்: இயற்கை உலகைப் பார்த்து வியப்பதன் மூலமாக, அதைப் படைத்த இறைவனின் எல்லையற்ற அன்பை உணர்தல்.

தனிநபர் நுகர்வைக் குறைத்தல்: எளிமையான வாழ்முறையைக் கையாண்டு, வளங்களை வீணாக்குவதைத் தவிர்த்தல்.

வாள்களைக் கொழுக்களாக மாற்றுதல்: வன்முறையையும் பேராசையையும் கைவிட்டு, அழிவுச் சக்திகளை ஆக்கப்பூர்வமான வாழ்வாதாரப் பணிகளுக்குத் திருப்புதல்.

ஏழைகளின் கதறலுக்குச் செவிமடுத்தல்: சூழலியல் சீரழிவால் முதலில் பாதிக்கப்படுவது ஏழை எளிய மக்களே. எனவே, பூமியின் கதறலையும் ஏழைகளின் கதறலையும் ஒன்றிணைத்துக் கேட்டல்.

இன்னமும் காலம் கடந்துவிடவில்லை!’ (It is not yet too late) என்று உரத்த குரலில் நம்பிக்கை அளிக்கிறார் திருத்தந்தை லியோ. நமது அழிவுப் பாதையிலிருந்து விலகி, வாழ்வின் பாதைக்குத் திரும்ப படைப்பின் காலம் நம்மை அன்போடு அழைக்கிறது.

பாலைவனங்களைச் சோலைகளாகவும், பிரிவினைகளைச் சமூகப் பிணைப்பாகவும், வன்முறையை அமைதியாகவும் மாற்றும்சூழலியல் மன மாற்றத்தைநாம் ஒவ்வொருவரும் நமது உள்ளங்களில் தொடங்குவோம். இயற்கையைத் தாயாகவும், அதன் வளங்களை இறைவனின் கொடையாகவும் போற்றி, ‘தங்கை நீரைமாசாக்காமல் காத்து, எக்காலமும் படைப்பின் அழகில் இறைவனைக் கண்டு இறைப்புகழ் பாடுவோம்!

என் ஆண்டவரே! உமது படைப்புகள் அனைத்திற்காகவும், சிறப்பாகச் சகோதரன் கதிரவனுக்காகவும், சகோதரி நீருக்காகவும் உமக்குப் புகழும் மாட்சியும் உரித்தாகுக!” - புனித பிரான்சிஸ் அசிசியார்.