news
ஆன்மிகம்
வெற்றிக்காக அல்ல; வளர்ச்சிக்காக! இறை வளர்ப்பின் பாதையில் ஒரு சிறு பயணம்

வெற்றிஎன்ற ஒரு வார்த்தையைக் கேட்டாலே போதும்; நம் கண்முன் பளிங்கு தட்டுகளும், கைத்தட்டல்களும், முதலிடப் பட்டியல்களும் வந்து நிற்கின்றன. பள்ளியில் முதல் மதிப்பெண், அலுவலகத்தில் பதவி உயர்வு, வீட்டில்எல்லாம் சரியாக நடந்ததுஎன்ற திருப்தி... இவை எல்லாமே நம் வாழ்வின் இலக்காகிவிட்டன. ஆனால், ஒரு மென்மையான கேள்வி நம் இதயத்தின் கதவைத் தட்டுகிறது. இறைவன் நம்மிடம் கேட்பது: ‘நீ வென்றாயா?’ அல்லதுநீ வளர்ந்தாயா?’

திருவிவிலியம் முழுவதும் ஓர் உண்மை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி நிற்கிறது. கடவுள் முடிவை அல்ல; பயணத்தைக் கொண்டாடுகிறார். அவர் கிரீடத்தைத் தேடுவதில்லை, வேரைத் தேடுகிறார்.

திருத்தூதர் பவுல் கொரிந்து சபையாருக்கு எழுதிய கடிதத்தில் ஓர் எளிய, ஆனால் ஆழமான ஒப்புமையைப் பயன்படுத்துகிறார்: “நான் நட்டேன்; அப்பொல்லோ நீர் பாய்ச்சினார்; கடவுளே விளையச் செய்தார். நடுகிறவருக்கும் பெருமை இல்லை; நீர் பாய்ச்சுபவருக்கும் பெருமை இல்லை; விளையச் செய்யும் கடவுளுக்கே பெருமை (1கொரி 3:6-7).

இதைவிட நம் தலைப்பிற்குப் பொருத்தமான திருவிவிலிய வரி வேறு ஏதேனும் இருக்குமா? வெற்றியை அளவிடுவது நாம் அல்ல; விதையை நாம் இடலாம், நீரை நாம் ஊற்றலாம்... ஆனால், வளர்ச்சி கடவுளின் கையில்தான் இருக்கிறது.

உங்களுள் நற்செயலைத் தொடங்கியவர், இயேசு கிறிஸ்துவின் நாள்வரை அதை நிறைவுறச் செய்வார் (பிலி 1:6).

கவனியுங்கள்... ‘தொடங்கினவர்... முடிக்க வைப்பார்என்கிறது; ‘வென்றார்என்று சொல்லவில்லை. வளர்ச்சி என்பது ஒரு நிகழ்வு அல்ல; அது ஒரு தொடர்ச்சியான செயல்முறை.

மூங்கிலின் பாடம்

சீனாவில் ஒரு வகை மூங்கில் உண்டு. அதை நட்ட பின்பு நான்கு ஆண்டுகளாக மேலே எதுவும் தெரியாது. வெறும் மண் மேடு மட்டுமே. ஆனால், அந்த நான்கு வருடங்களில் அதன் வேர்கள் தரைக்கடியில் பல மீட்டர்கள் தூரம் பரவிக் கொண்டிருக்கும். ஐந்தாம் ஆண்டில் அந்த மூங்கில் ஆறே வாரங்களில் இருபது அடி உயரம் வளர்ந்து விடுகிறது. அது அதிசயமல்ல; அது தயார்நிலையின் வெளிப்பாடு.

இயேசுவும் இதையே கூறினார். கடுகு விதை ஓர் இரவில் மரமாவதில்லை. அது வளர்கிறது. மெதுவாகக் கண்ணுக்குப் புலப்படாமல்! ஆனால், உறுதியாக நீங்கள்இன்று ஒன்றும் நடக்கவில்லைஎன்று நினைக்கும் காலகட்டத்தில் இருக்கலாம். வேலை தேடிக் கிடைக்காமல், திருமணம் தாமதமாகி, கனவுகள் தொலைதூரத்தில் தெரிய, உங்களைச் சுற்றியுள்ளோர் முன்னேறிக் கொண்டிருக்க நீங்கள் நிற்காமல், அமைதியாக ஓடிக் கொண்டிருக்கலாம். கண்ணுக்குத் தெரியாத வளர்ச்சியும் வளர்ச்சியே.

யாக்கோபு தனது கடிதத்தில் ஆச்சரியமான ஓர் அறிவுரையைத் தருகிறார்: “பல்வேறு சோதனைகளில் விழும்போது, அதை மிகுந்த மகிழ்ச்சியாக எண்ணுங்கள்; ஏனெனில் சோதனை பொறுமையை உருவாக்குகிறது, பொறுமை முதிர்ச்சியை உருவாக்குகிறது (யாக் 1:2-4).

தோல்வியைக் கொண்டாடச் சொல்கிறாரா இவர்? இல்லை. தோல்வி வீணாகாது என்று கூறுகிறார். ஒவ்வொரு விழுதலும் ஒரு வாய்ப்பு; மீண்டும் எழ, இன்னும் ஆழமாக வேர் விட.

மின்விளக்கைக் கண்டுபிடிக்கும் முன் ஆயிரக்கணக்கான முறை தோற்ற தாமஸ் ஆல்வா எடிசன் ஒருமுறை கூறினார்: “நான் தோல்வியடையவில்லை; வேலை செய்யாத பத்தாயிரம் வழிகளைக் கண்டுபிடித்தேன்.” அவருக்கு வெற்றி என்பது இறுதி விளக்கு மட்டுமல்ல; ஒவ்வொரு முயற்சியும் ஒரு படிக்கல்.

ஒரு விவசாயியைப் பாருங்கள். வயலில் விதை தூவும்போது அன்றே அறுவடையை எதிர்பார்ப்பதில்லை. மண்ணை ஆழமாகக் கொத்தி, உரம் இட்டு, மழைக்காகக் காத்திருந்து, பல மாதங்கள் கடந்த பின்னரே கதிர்களைக் கொண்டாடுகிறார். அவர் வேகத்தைக் குறித்துப் புகார் செய்வதில்லை; பருவத்தை மதிக்கிறார்.

ஒரு தாயைப் பாருங்கள். தன் குழந்தை நடக்கக் கற்கும்போது எத்தனை முறை விழுகிறது? ஒவ்வொரு விழுதலையும் அவள் தோல்வியாகப் பார்ப்பதில்லை; வளர்ச்சியின் அடையாளமாகவே பார்க்கிறாள். குழந்தை விழுந்ததைப் பார்த்து அல்ல; மீண்டும் எழுந்து நடப்பதைப் பார்த்தே அவள் கைத்தட்டுகிறாள்.

ஒரு மாணவனைப் பாருங்கள். தேர்வில் தோற்றுவிட்டான். உலகம் அவனைதோல்வியாளன்என்று முத்திரை குத்தலாம். ஆனால், அந்தத் தோல்வி அவனுக்குக் கற்றுத் தந்த பொறுமையும் கடின உழைப்பும் தாழ்மையும் அவன் வாழ்நாள் முழுவதும் சுமக்கும் மறையாத செல்வங்கள். அடுத்தத் தேர்வில் வென்றாலும் தோற்றாலும், அவன் ஒரு பக்குவமான மனிதனாக ஏற்கெனவே வளர்ந்திருப்பான்.

அன்னை தெரேசா அடிக்கடி நினைவுபடுத்துவார்: “கடவுள் நம்மை வென்றவர்களாக இருக்கச் சொல்லவில்லை; உண்மையானவர்களாக, உண்மையான நம்பிக்கையுடன் இருக்கச் சொன்னார். வெற்றியைக் கடவுள் கணக்கிடுவதில்லை; நம்பிக்கையையே அவர் கணக்கிடுகிறார்.”

இடுக்கண் வருங்கால் நகுக அதனை

அடுத்தூர்வது அஃதொப்பது இல் (குறள் 621).

துன்பம் வரும்போது சிரியுங்கள். உங்கள் இதயத்திற்குள் உண்மையான துன்பம் இல்லை என்று அதற்குச் சொல்லுங்கள் என்பது இதன் பொருள். இது வெறும் சமாதான வார்த்தைகள் அல்ல; இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு தமிழ் ஞானி கண்டடைந்த ஆழ்ந்த உண்மை.

திருத்தூதர்  பவுல் தன் வாழ்நாளின் முதிர்ச்சியில் எழுதுகிறார்: “கடந்ததை மறந்துவிட்டு, முன்னிருப்பதைக் கண்முன் கொண்டு, பரிசுபெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன் (பிலி 3:13-14).

கவனியுங்கள்... அவர்வென்றேன்என்று சொல்லவில்லை; ‘ஓடுகிறேன்என்கிறார். அவருக்குக் கிறித்தவ வாழ்க்கை ஓர் ஓட்டப் பந்தயம்; அதுவும் முடிவை அடைவதற்காக மட்டுமல்ல, உண்மையாக ஓடுவதற்காகவே.

இன்று உங்கள் வாழ்வைத் திரும்பிப் பாருங்கள். கடந்த ஆண்டில் நீங்கள்வென்றதுஎத்தனை? ‘வளர்ந்ததுஎத்தனை? இரண்டும் ஒன்றல்ல என்பதை இன்று உணருங்கள்.

ஒரு தேர்வில் தோற்றதையோ, ஒரு வேலையில் தவறியதையோ, ஒரு திட்டம் முடியாமல் போனதையோ எண்ணி இனி வேதனைப்படாதீர்கள். அதற்குப் பதிலாக இந்தக் கேள்வியைக் கேளுங்கள்: ‘இதன் மூலம் நான் என்ன கற்றுக்கொண்டேன்? நான் எவ்வாறு வளர்ந்தேன்?’

news
ஆன்மிகம்
மகத்தான மானுடம்: நற்செய்திக்கு நம்பிக்கைக்குரிய வகையில் இயங்கும் ஓர் அணுகுமுறை

அத்தியாயம் - 1

இந்த அத்தியாயத்தில் திரு அவையின் ஆசிரியம் எப்படி மாறிவரும் காலத்திற்கு ஏற்ப சமுதாயப் படிப்பினையைக் கொடுத்து வந்திருக்கிறது என்று திருத்தந்தை லியோ சுருக்கமாக எடுத்துரைக்கிறார்.

மானிட வரலாற்றினூடே பயணிக்கும் திரு அவை

திரு அவை உலகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட அமைப்பு அல்ல; மாறாக, இது மானிடரின் வாழ்வுப் பிரச்சினைகள், சவால்களோடு இணைந்து பயணித்துக் கொண்டிருக்கிறது. காலத்தின் அறிகுறிகளை விளக்கி உரைப்பதில் தத்துவம், மானிட மற்றும் சமூக அறிவியல் போன்றவைகளின் பங்களிப்பையும், சமூகப் படிப்பினையையும் திறந்த மனத்தோடு பெற்றுக்கொள்கிறது. திரு அவையின் சமுதாயப் படிப்பினை என்பது ஒரு கூட்டுத்துவத் தெளிந்து தேர்தல் ஆகும்.

திருத்தந்தை 6-ஆம் பவுல், வேறுபட்ட வரலாற்றுச் சூழல்களில், எல்லாருக்கும் பொதுவான சமுதாயப் படிப்பினையைக் கொடுக்க இயலாது. எனவே, ஒவ்வொரு கிறித்தவச் சமூகமும் தங்களது நாட்டின் சூழலுக்கு ஏற்ப பொறுப்போடு எதார்த்தங்களை விளக்கிச் சொல்ல அழைக்கிறார்.

திருத்தந்தை 13-ஆம் லியோ காலத்திலிருந்து இன்றுவரை திரு அவைப் படிப்பினையின் வளர்ச்சி

மனித வரலாற்றில் இறைவன் செயல்படுவதை உணர்ந்து, மாறிவரும் புதிய சூழல்களுக்கு ஏற்றவாறு நற்செய்தியின் ஒளியில் திருத்தந்தை 13-ஆம் லியோ தொடங்கி இன்றுவரை திரு அவையின் ஆசிரியம் சமுதாயப் படிப்பினைகளைத் தந்து கொண்டிருக்கிறது. இன்று இது செயற்கை நுண்ணறிவு குறித்துப் புதிய போதனையைத் தருகிறது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் வெளியிடப்பட்ட திரு அவையின் சமுதாயப் படிப்பினை குறித்து திருத்தந்தை லியோ முக்கியக் கருத்துகளைச் சுருக்கமாக முன்வைக்கிறார்:

திருத்தந்தை 13-ஆம் லியோ - Rerum Novarum, 1891 - தொழிலாளர்கள் நிலைமை

19-வது நூற்றாண்டின் தொழில்புரட்சி பின்புலத்தில் ஆலைத் தொழிலாளர்களின் உரிமைகள், உழைப்பின் மேன்மை மற்றும் முதன்மை, நியாயமான குடும்ப ஊதியம் இவற்றைப் பற்றிப் பேசுகிறது இம்மடல். மூலதனம், இலாபம் இவற்றைக் காட்டிலும், தொழிலாளர்கள் முதன்மையானவர்கள், தனிச் சொத்துக்குச் சமூகக் கடமை உண்டு என்கிறார் 13-ஆம் லியோ.

திருத்தந்தை 11-ஆம் பயஸ் - Quadragesimo Anno, 1931 - சமுதாய ஒழுங்கமைப்பு

அன்றைய பொருளாதார நெருக்கடியின் பின்புலத்தில், ஒருசிலர் கையில் பொருளாதாரம் குவிக்கப்பட்டிருப்பதைச் சாடுகிறார் 11-ஆம் பயஸ். சங்கம் அமைக்க தொழிலாளர்களுக்கு உரிமை உண்டு. கீழ்மட்டத்திலுள்ள குழுக்கள் தாமாகவே செய்யக் கூடுமானவற்றில் மேல்மட்டக் குழுக்கள் தலையிடாதிருத்தல்வேண்டும் (Principle of Subsidiarity). இந்தத் துணைநிலைக் கொள்கை, பின்வரும் சமுதாயப் படிப்பினைகளுக்கு மூலைக்கல் போல் அமைகிறது.

திருத்தந்தை 12-ஆம் பயஸ் - 1942 - வானொலிச் செய்தி

இரண்டாம் உலகப் போரும், போரின் அழிவுகளை நாடுகள் சரிசெய்யும் வரலாற்றுப் பின்புலத்தில் உலகளாவிய ஒழுங்கமைப்பு நீதி, அமைதி, மனித மாண்பை அடிப்படையாகக் கொண்டதாக அமையவேண்டும். மேலும், மானிடருக்கு அடிப்படையான, மீறத்தகாத உரிமைகள் உள்ளன என்று வானொலிச் செய்தி மூலம் அறிவுறுத்துகிறார் 12-ஆம் பயஸ்.

திருத்தந்தை 23- ஆம் யோவான் - Mater et Magistra, 1961 - அன்னையும் ஆசிரியையும்

உலகளாவிய சமூகப் பிரச்சினைகளில் குறிப்பாக, பொருளாதாரத் துறையில் தனியாருடைய முன்னெடுப்புகளும், அரசு அதிகாரிகளுடைய ஒத்துழைப்பும் தேவை. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அங்குள்ள எல்லாக் குடிமக்களின் வளர்ச்சிக்கும் பயன்பட வேண்டுமென்பது சமூக நீதியின் பாற்பட்ட கோரிக்கையாகும் என்கிறார் 23-ஆம் யோவான்.

Pacem in Terris – 1968 - அவனியில் அமைதி

இது முதன்முதலாகநல்லுள்ளம் படைத்த எல்லா மனிதருக்கும்என்று எழுதப்பட்ட சுற்றுமடல் ஆகும். இம்மடல் மனித மாண்பையும், அடிப்படை மானிட உரிமைகளையும் கடமைகளையும் இணைக்கிறது. உலகளாவிய ஒழுங்கமைப்பு என்பது உண்மை, நீதி, அன்பு, சுதந்திரம் - இவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்படவேண்டும் என்கிறார் 23-ஆம் யோவான்.

2-ஆம் வத்திக்கான் சங்கம் - 1962 - 65

இன்றைய உலகில் திரு அவைஎன்ற ஏடு திரு அவையானது உலகோடு ஈடுபட்டு, வரலாற்றுச் சூழல் எதார்த்தங்களை விளக்கி உரைக்கிறது. பொருளாதார மற்றும் நிறுவன அமைப்புகள் மனிதரின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காகவும், அவருடைய பொறுப்புள்ள பங்கேற்பையும் முன்னெடுக்கும்போதுதான் நீதியானதாக அமையும். உலகை இறையாட்சியாக உருமாற்றும் பணியானது கிறித்தவ நம்பிக்கையிலிருந்து பிறக்கும் ஒரு கடமை என்கிறது.

திருத்தந்தை 6 -ஆம் பவுல் - Populorum Progressio, 1967 - மக்களின் முன்னேற்றம்

முன்னேற்றம் என்பது குறையுடைய மனிதத்திலிருந்து, நிறையுடைய மனித நிலைக்குக் கடந்து செல்வதாகும். ஒருங்கிணைந்த முன்னேற்றம் பொருளாதாரத்தையும் கடந்து மனித மாண்புக்கு உகந்த சூழல்களை உருவாக்கவேண்டும் என்கிறார் 6-ஆம் பவுல்.

Octogesima Adveniens  - 1971 -  அரசியல் அதிகாரம், கருத்தமைவு, சமூக ஈடுபாடு

இது தொழில்புரட்சிக்குப் பிந்தைய ஏழ்மையின் புதிய வடிவங்கள், மிக வேகமாக மாறிவரும் பண்பாட்டு மாற்றங்கள், தனிமனிதரையும் குழுமங்களையும் எப்படிப் பாதிக்கின்றன என்று பேசுகிறது. நாம் வாழும் சூழலிலிருந்து வேறுபட்ட சூழலில் நற்செய்தி எழுதப்பட்டு அறிவிக்கப்பட்டாலும், இன்றும் அது மனித ஆளுமை, உறவுகள், அதிகாரம், பொதுநன்மை, பொருளாதார - அரசியல் - பண்பாடு பற்றி ஒரு புதிய பார்வையைத் தருகிறது. திரு அவையின் அரசியல் செயல்பாடு இந்த மடலின் மையக் கருத்து எனலாம்.

திருத்தந்தை 2-ஆம் யோவான் பவுல் - Laborem Exercens, 1981 - மானிட உழைப்பு

பொருளாதார உலகமயமாதல் பின்புலத்தில் உழைப்பாளி மனிதராக நடத்தப்படுகிறாரா அல்லது உற்பத்தி இயந்திரத்தின் ஒரு பகுதியாக உபயோகப்படுத்தப்படுகிறாரா? சமுதாயப் பிரச்சினையின் மையமே பொருளாதாரச் செயல்பாடுதான். உழைப்பு, முதலீட்டைவிட முதன்மை வாய்ந்தது என்கிறார் 2-ஆம் யோவான் பவுல்.

Sollicitudo Rei Socialis, 1987 - திரு அவையின் சமூக ஈடுபாடு

ஏழை மக்களுக்கான பொருளாதார முன்னேற்றச் செயல்பாடுகள் ஏற்கெனவே இருக்கின்ற உலகின் வடக்கு-தெற்கு என்ற இடைவெளியைப் பெரிதாக்கி உள்ளதேயொழிய குறைக்கவில்லை. நலமான முன்னேற்றம் மனிதக் கூட்டொருமையில்தான் அடங்கும் என்கிறது. மேலும், இது பாவ அமைப்புகள் பற்றியும் பேசுகிறது.

Centesimus Annus, 1991 - சோசலிசமும் முதலாளித்துவமும்

சோசலிசத்தின் வீழ்ச்சி, முதலாளித்துவத்தின் தீமைகள், சந்தைப்பொருளாதாரம், குடிமக்களின் பங்கேற்பு, சனநாயகத்தின் எழுச்சி, மானிடக் கூட்டுத் தோழமை, சனநாயகம் - சந்தைப் பொருளாதாரம் பற்றிய விமர்சனம், அரசியல் பிரதிநிதித்துவத்திலிருந்து பலரை ஒதுக்கி வைத்தல், சுரண்டலின் புதிய வடிவங்கள் பற்றிப் பேசுகிறது.

திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் - Caritas in Veritate, 2009 - உண்மையில் அன்பு

திரு அவையின் சமுதாயப் படிப்பினையில் உண்மையோடு கூடிய அன்பு மையம் பெறுகிறது. மனித முன்னேற்றம், பொருளாதாரம், சமூகநீதி, உலகமயமாக்கல், சுற்றுச்சூழல், தொழில்நுட்பம் ஆகியவை உண்மையில் அன்பையும், பொது நன்மை நோக்கையும் உறுதிப்படுத்தவேண்டும். இன்றைய தேவை புதியதொரு முழுமையான மனிதநலக் கொள்கையாகும் என்கிறார் 16-ஆம் பெனடிக்ட்.

திருத்தந்தை பிரான்சிஸ் - Laudato Si, 2015 - இறைவா! உமக்குப் புகழ்!

மகிழ்வின் நற்செய்திஎன்ற மறைத்தூது அறிவுரையில், நற்செய்தி அறிவிப்பின் ஓர் இன்றியமையாத கூறு அதன் சமூகப் பார்வை ஆகும் என்கிறது. இதை அடியொற்றிஇறைவா! உமக்குப் புகழ்!’ என்ற சுற்றுமடலில், பூமியாகிய நம் பொது இல்லத்தைப் பொறுப்போடு பேணிக்காக்க வேண்டும்; இப்பூமியின் அபயக் குரலுக்கும், ஏழையரின் கூக்குரலுக்கும் செவிமடுத்து, சுற்றுச்சூழல் நலம் பேணும் மனமாற்றம் பெற்றிடவேண்டும் என்கிறதுஇத்தோடு, படைப்பு அனைத்தும் எல்லாருக்கும் பொதுவானது என்பதையும் நம் உலகில் ஒரு பண்பாட்டுப் புரட்சி நிகழவேண்டும் என்பதையும் மனத்தில்கொள்ளவேண்டும் என்கிறார் பிரான்சிஸ்.

Fratelli Tutti, 2020 - அனைவரும் உடன் பிறந்தோர்

சமூக அமைப்பின் சீரழிவு, போர் மேகச்சூழல், ‘கோவிட் 19’ பின்புலத்தில்அனைவரும் உடன் பிறந்தோரேஎன்ற சுற்றுமடல், மனிதகுலம் முழுவதும் ஒரே குடும்பம் என்கிறது. இனம், மொழி, நாடு, பொருளாதார வேறுபாடுகளைத் தாண்டி, உலகளாவிய சகோதரத்துவமும், சமூக நட்பும் உருவாகவேண்டும் என்கிறார் பிரான்சிஸ். இதை எடுத்துக்காட்ட நல்ல சமாரியரின் உவமையை விரித்துரைக்கிறார். ஒவ்வொரு மனிதரின் மாண்பும் மதிக்கப்படவேண்டும். அன்பு என்பது தனிமனித உறவுகளைத் தாண்டி, சமூக - அரசியல் - பொருளாதார தளங்களில் வெளிப்படவேண்டும், சந்திப்பு பண்பாடு வளர்த்தெடுக்கப்படவேண்டும் என்கிறார் பிரான்சிஸ்.

Dilexit Nos, 2024 - அவர் நம்மை அன்பு கூர்ந்தார்

இயேசுவின் திரு இதயம் மனிதகுலத்தின்மீது கடவுள் கொண்டுள்ள எல்லையற்ற அன்பின் அடையாளம். இந்த அன்பை அனுபவிப்பது மனமாற்றத்திற்கும், பிறரை அன்போடு அணுகுவதற்கும் வழிவகுக்கிறது. பிறரை, குறிப்பாக, காயமடைந்த உலகிலுள்ள ஏழையர், புறக்கணிக்கப்பட்டோர், துன்புறுவோரை அன்போடு அணுகவும் அழைக்கிறார் பிரான்சிஸ்.

இவ்வாறு மாறிவரும் வரலாற்று எதார்த்தங்களை நம்பிக்கையின் ஒளியில் ஒவ்வொரு திருத்தந்தையும், திரு அவைப் படிப்பினையும் விளக்கிச் சொல்கின்றனர். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இவை மனித மாண்பு, உழைப்பின் மேன்மை, படைப்பு அனைவருக்கும் பொதுவானது, கூட்டுத் தோழமை, துணைநிலைக் கொள்கை, படைப்பைப் பேணுதல், அமைதி, சகோதரத்துவம் போன்ற விழுமியங்களை வலியுறுத்துகின்றன.

news
ஆன்மிகம்
தோமா கால் பதித்த தேசம் – 03

இந்தியப் பகுதிக்குப் போகலாமா? வேண்டாமா?’ என்ற குழப்பம் தோமாவிடம் பல நாள்கள் நீடித்துக் கொண்டிருந்தது. இப்படிப்பட்ட நிலையில் ஒருநாள் அவரைத் தேடி யாரோ ஓர் அந்நியன் வந்திருப்பதாகச் சொல்ல, அவனைச் சந்தித்தார் தோமா. வந்தவன் தோமாவுக்கு வணக்கம் செலுத்தினான். முன்பின் அறிந்திராத அம்மனிதனைக் கண்ட தோமா, “நீர் யார்? நான் உமக்கு என்ன செய்யவேண்டும்? என்று கேட்டார்.

வந்தவன்என் பெயர் ஹப்பான். நான் ஒரு வணிகன். நான் தச்சர் தோமாவைப் பார்க்கவேண்டும்என்றான். ‘நான் செய்யும் தொழில் இந்த அந்நிய மனிதனுக்கு எப்படித் தெரியும்?’ என்று யோசித்த தோமா, “நான்தான் தோமா. எங்கிருந்து நீர் வருகிறீர்?” என்று வினவினார்.

பார்த்தியா தேசத்திலிருந்து வருகிறேன்என்ற ஹப்பானிடம், “பார்த்தியாவா? அது எங்கிருக்கிறது?” என்று தோமா கேட்க, “இந்தியப் பகுதிக்கு அருகாமையில் இருக்கிறதுஎன்று அவன் பதில் கூறவும், “இந்தியாவா?” என்று வினவிய தோமா, ‘இந்தியப் பகுதிகளே வேண்டாம் என்றிருக்கும் நிலையில் இந்த அழைப்பு பார்த்தியாவுக்கானதா அல்லது இந்தியாவுக்கானதா?’ என்ற குழப்பம் ஏற்பட்டது.

சிலநொடிகள் அமைதிக்குப்பின்அது சரி, என்னை எப்படி அறிவீர்? உம்மை என்னிடம் அனுப்பி வைத்தது யார்?” என்று கேட்க, “உம்மிடம் அனுப்பி வைத்ததுடன், உம்மை என்னிடம் ஒப்படைத்து உறுதிப் பத்திரமும் கொடுத்திருப்பவர் உம் தலைவராக அல்லவா இருக்கவேண்டும்! உம் தலைவரை நீர் அறிந்ததில்லையா?” என்ற ஹப்பானின் கேள்வியால் திகைத்துப் போன தோமாவிடம் ஹப்பான் சொன்னான், “நான் இந்தியாவின் வடமேற்கிலுள்ள பார்த்தியா தேசத்திலிருந்து வரும் வணிகன். எம் மன்னர் கொண்டோபரஸ் தன் நாட்டில் அரண்மனையைக் கட்ட விரும்பி ஒரு சிறந்த தச்சரை அழைத்து வருமாறு என்னை இங்கே அனுப்பியிருக்கிறார். இங்கு வந்ததும் உம்மைப் பற்றிக் கேள்விப்பட்டேன். ஏர்க்கலப்பைகள், துடுப்புகள், படகுகள், கப்பல் பாகங்கள் செய்வதுடன் கல்தூண்கள், கோயில், அரண்மனை போன்றவற்றை நீர் கட்டுவீர் என அறிந்தேன். அதற்காகவே உம்மை நான் நாடி வந்திருக்கிறேன்என்றான்.

என்னைப் பற்றி யார் மூலம் கேள்விப்பட்டீர்?” என்ற தோமாவின் கேள்விக்கு, “உம் நண்பர்கள் வழியாக அறிந்தேன்என்றவன், மேலும்உம் தலைவர் என்னை அங்காடித் தெருவில் சந்தித்தார். அவர்தாம் உம் பெயரைக் குறிப்பிட்டார். அவர் உமக்கு நெருக்கமானவராம். அவருக்கு நீர் கடமைப்பட்டிருக்கிறீராம். அதனால் உம்மை என்னிடம் ஒப்புவிக்கும் பொறுப்பை அவர் ஏற்றுக் கொண்டுவிட்டார். உம்மைக் குறித்து தம் கைப்பட இந்த உறுதிப் பத்திரத்தை எழுதிக் கொடுத்தார்எனக் கூறி ஒரு பத்திரத்தை தோமாவின்முன் நீட்டினான் ஹப்பான். அதைச் சிந்தனையோடு வாங்கிப் படித்தார் தோமா. அதில்தச்சர் யோசேப்பின் மகன் இயேசு கிறிஸ்துவாகிய நான், யூதா தோமாவைப் பார்த்தியா தேசத்து மன்னர் கொண்டோபாஸ் என்பாரின் வணிகரான ஹப்பான் என்பவரிடம் ஒப்படைக்கிறேன்என்று எழுதப்பட்டிருந்ததைக் கண்டு பரவசமடைந்த தோமா மனம் மாறியவராக, “மாபெரும் தச்சராகிய இயேசுவே! உம் சித்தத்தின்படியே ஆகட்டும். நீர் சொல்லுமிடத்திற்கு நானும் செல்கிறேன்என்றார். அடுத்த சில நாள்களில் தோமா பயணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்.

இந்தியாவிலிருந்து முத்து, மிளகு, ஏலக்காய், கிராம்பு, பருத்தி, பட்டு, வாசனைப் பொருள்கள் ஆகியன மேலைநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட காலம் அது. குறிப்பாக, உரோமானிய நாட்டுடன் மிகச் சிறப்பான முறையில் வணிகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்தியாவிலிருந்து நேரடியாக மட்டுமின்றி, சீன நாட்டிலிருந்து இந்தியா வழியாகப் பலர் வாணிபம் செய்தனர். வணிகர் பலர் பார்த்தியா (ஆப்கானிஸ்தான்), பெர்சியா (ஈரான்), மெசபடோமியா (ஈராக்) போன்ற நாடுகள் வழியாகப் பயணம் செய்து பல்வேறு பொருள்களின் ஏற்றுமதி, இறக்குமதியில் ஈடுபட்டனர். இவர்கள் தரைவழியாகப் பயணித்து வணிகம் செய்வது பாதுகாப்பற்றும் கடினத்துடனும் இருந்ததோடு, அவர்கள் உட்புகும் நாடுகளின் அரசர்களுக்கு அதிக வரிசெலுத்த வேண்டிய நிலைமையும் இருந்தது. இதனால் வணிகர்கள் சிலர் கடல்வழிப் பயணத்தையே பெரிதும் விரும்பினர். இத்தகைய சூழலில், ஹப்பானும் தோமாவும் கடல்வழியே பார்த்தியாவை அடைய முடிவெடுத்தனர்.

பாலஸ்தீன நாட்டின் பெரும்பாலான வணிகர்  அதன் பழமையான துறைமுகமான யோப்பா அல்லது தீர் துறைமுகத்திலிருந்தே கிழக்கிந்திய நாடுகளுக்குப் புறப்படுவார்கள். அவர்கள் எகிப்திலுள்ள அலெக்சாண்ட்ரியா துறைமுகத்தை அடைகையில், பிற வணிகர் பலரும் அங்கே கூடுவர். அங்கிருந்து அவர்களின் பயணம் எகிப்தில் ஆண்டிரோபோலிஸ் நகரைச் சென்றடையும். அங்கிருந்து நைல்நதிப் பள்ளத்தாக்கிலிருந்து செங்கடல் பகுதியில் அமைந்துள்ள துறைமுகங்களை நோக்கிச் செல்லும் பாலைவன வழியிலுள்ள கோப்டோஸ் என்ற கடற்கரை நகரை அடைவர். அங்கிருந்துதான் வணிகர்கள் தங்கள் பொருள்களை ஒட்டகங்களின் மேல் ஏற்றிச் செங்கடலில் அமைந்துள்ள பெர்னிஸ் என்ற துறைமுகத்திற்குக் கொண்டு செல்வர். இந்தியர்களும் அராபியர்களும் வணிகம் செய்ய முக்கிய இடமாகப் பெர்னிஸ் விளங்கியது.

பெர்னிஸ் துறைமுக நகரில் கடல் பயணம் செய்பவர்கள் ஓய்வெடுக்க வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மேலும், வணிகர் தாங்கள் கொண்டு வந்திருந்த பொருள்களை விற்கவும், புதிய பொருள்களை வாங்கவும் வசதி இருந்தது. அங்கிருந்து இந்தியாவிற்கு ஆண்டுக்கு ஒருமுறை கப்பல் போக்குவரத்து நடைபெற்றது. அக்கப்பல்கள் மேற்கு ஆசியாவில் அரேபிய தீபகற்பத்தில் ஏமன் நாட்டிலுள்ள சொகோட்டிரா என்ற தீவிலும், ஏடேன் என்ற பகுதியிலும் நின்று உணவு, நீர் ஆகியவற்றைச் சேகரித்துக்கொண்டு இந்தியா சென்றடைந்தன.

தோமா பாலஸ்தீனாவிலிருந்து பார்த்தியா புறப்பட்ட காலம் அநேகமாக கி.பி. 44-ஆம் ஆண்டாக அளவிடப்படுகிறது. ஹப்பான் வணிகனுடன் அவர் புறப்பட்டு அலெக்சாண்ட்ரியாவைக் கடந்து பயணிக்கையில், பயங்கரக் கடல்காற்று வீசிட மிகுந்த சிரமத்துடன் ஆண்டிரோபோலிஸ் நகரை இருவரும் வந்தடைந்தனர். அவர்கள் அங்கு வந்த நேரம் குழலூதும் சத்தமும், இன்னிசை முழக்கமும் தொடர்ந்து கேட்க, ஏதோ ஒரு விழா நடப்பதற்கான ஆரவாரம் தென்பட்டது. இருவரும் அந்நகருக்குள் நுழைந்திட, ஹப்பான் அங்குள்ளவர்களை விசாரித்தான். அரசனின் மகளுக்கு அன்று திருமணம் நடைபெறுவதாகவும், அவ்விழாவில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம் என்று அரசனால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி கிடைத்தது. காற்று வீசுவதால் காலதாமதம் செய்ய எண்ணிய இருவரும் அவ்விழா நடக்கும் இடம் சென்றபோது, விருந்திற்கு வந்திருந்த மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட வாசனைத் திரவியங்கள், நறுமணப் பொருள்கள், எண்ணெய் ஆகியவற்றை அளவுக்கு அதிகமாகப் பெற்று உடலில் பூசி மகிழ்வதைக் கண்டனர். தூரத்தே குழலூதும் பெண்ணொருத்தி அங்குமிங்குமாக ஓடி நடனம் ஆடிக் கொண்டிருந்தாள்.

பல்வகை உணவும் மதுவும் தாராளமாக வழங்கப்பட்ட சிறப்பான திருமண விருந்து நடந்து கொண்டிருந்தது. தோமா அவற்றில் அதிகம் கவனம் செலுத்தாது, சிலுவை அடையாளம் வரைந்து கொண்டவராய் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தபடி அமர்ந்திருந்தார். குழலோசை இப்போது அருகே கேட்கவே, தலை நிமிர்ந்துப் பார்க்க, அவர் அருகே ஆடிக் கொண்டிருந்தவள் தன் இனம் சார்ந்த எபிரேயப் பெண் என்பதைக் கண்டு கொண்டார். அப்பெண்ணும் தோமாவை ஓர் எபிரேயர் என்பதை இனம் கண்டுகொண்டதால் ஆனந்த மிகுதியால் அவர் முன்னே குழலூதியபடி வெகுநேரம் ஆடலானாள்.

அவள் பார்வை தோமாவின் மீதே பதிந்திருந்தது. ஆனால், தோமா அப்பெண்ணின் நடனத்தை இரசிக்காமல், அவளை ஏறெடுத்தும் பார்க்காமல் வானத்தையே உற்றுநோக்கிக் கொண்டிருந்தார். தன்னைச் சுற்றி நிகழ்ந்து கொண்டிருந்த இன்ப நாட்டங்களில் அவர் மனம் இலயிக்கவில்லை. இதைக் கவனித்துவிட்டான் விருந்தில் மது பரிமாறுபவன். நீண்ட நேரம் ஒரு பெண் அருகே நடனம் ஆடியும், அதனை இரசிக்காமல் வானத்தையே உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் தோமாவின் செயலைக் கண்டு, அப்பெண்ணை அவமரியாதை செய்வதாக எண்ணிக் கொண்டான். ஆத்திரம் பொங்க தோமாவின் அருகே சென்றவன் அவர் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.

தோமா அவனை உற்றுநோக்கியபடி அமைதியான குரலில், “மறுவுலக வாழ்வின் பொருட்டு இறைவன் உன்னை மன்னிக்கக்கூடும்; ஆனால், இவ்வுலகில் அவர் உன்னை மன்னிப்பாரா என்பது இன்னும் சிறிது நேரத்தில் உனக்குப் புரிந்துவிடும். எந்தக் கையால் அறைந்தாயோ, அந்தக் கையை நாய் இழுத்துச் செல்லும்என்று கூற, அவர் மொழி புரியாத மதுபானக்காரன் அவரைக் கண்டு ஏளனமாகச் சிரித்தான். ஆனால், அருகிலிருந்த எபிரேயப் பெண், தோமாவின் எபிரேய மொழியை அறிந்தவளாதலால் அச்சத்திற்குள்ளானாள். எனினும், அவர் தன் நாட்டவர் என்பதாலும், ஆளுமைத் தன்மை மிக்கவராகவும் தெரிந்ததால் தோமாவின் மேல் அவளுக்கு மதிப்பும் ஈடுபாடும் அதிகமாயிற்று. அவரிடம் எபிரேய மொழியில் உரையாட முயன்றாள். தோமாவோ எபிரேய மொழியில் இறைப்பாடல் ஒன்றைப் பாட, பொருள் புரிந்த அப்பெண் அவருக்கு முன்பாகச் சென்று அமர்ந்தாள். ஆனாலும், தோமா தன் பார்வையை எங்கும் செலுத்தவில்லை.

திடீரென்று அந்த விழாவில் கூச்சல் ஏற்பட்டது. தன் வாயில் ஒரு மனிதக் கையைக் கவ்விக்கொண்டு ஓடிய ஒரு நாயைத் துரத்திக்கொண்டு சிலர் ஓடி வந்தனர். அந்த நாயோ விருந்து நடக்கும் இடத்தை நோக்கி ஓடியது. சற்று நேரத்திற்குமுன் தன் நாட்டு மனிதர் கூறிய வார்த்தைகளை எண்ணிப் பார்த்த எபிரேயப் பெண், “இந்த மனிதர் உண்மையில் கடவுளின் தூதராகத்தான் இருக்கவேண்டும்; இவர் சொன்னபடியே இவரை அறைந்தவனின் வலது கையை நாய் கவ்விக்கொண்டு ஓடுகிறதுஎன்று கூச்சலிட்டாள். அவள் பேச்சை நம்பியும் நம்பாமலும் அங்கே கூடியிருந்த மக்கள் குழம்பியிருக்கையில் அங்கு வந்த ஒருவன், “நான்தான் பார்த்தேன். கிணற்றில் நீர் எடுக்க வந்த மதுபானக்காரன்மேல் எங்கிருந்தோ வந்த சிங்கம் ஒன்று பாய்ந்து அவன் உடலைக் கிழித்துப் போட்டுவிட்டது. அவன் உடலில் இருந்த கையைத்தான் நாய் கவ்விக்கொண்டு ஓடுகிறதுஎன்றான்.

தோமாவைக் கண்ட மக்கள் அவரை அச்சத்தோடு பார்த்தனர். அங்கே தோமா இயேசு பற்றி அவர்களுக்குப் போதிக்கலானார். அவரின் போதனையை அம்மக்கள் ஆர்வத்தோடு கேட்டனர். தோமாவின் கடவுள்மீது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படலாயிற்று. தோமாவின் வார்த்தைகளினால் மதுபானக்காரனுக்கு ஏற்பட்ட நிலையைக் கேள்விப்பட்ட அரசன், ஓர் ஆளை அனுப்பி திருமணமாகப் போகும் தன் மகளுக்காகச் செபிக்குமாறு வேண்டி தோமாவுக்கு அழைப்புவிடுத்தான். ஆனால், தோமா செல்லவில்லை. எனினும், அவர் வற்புறுத்தப்பட்டு மணமகனும் மணமகளும் இருந்த அறைக்கு அழைத்துவரப்பட்டார்.

இருவரையும் தனிமையில் கண்ட தோமா அவ்விருவருக்கும் இயேசு பற்றி விளக்கமாக எடுத்துக் கூறினார். “இல்லற வாழ்வைக் காட்டிலும் மணத்துறவு வாழ்வு மேலானது. மணத்துறவு வாழ்வையே கடவுள் விரும்புகிறார். கடவுளுக்கான அர்ப்பணிப்பு வாழ்வில் கிட்டும் மகிழ்ச்சியைப் போல் சிறந்தது உலகில் வேறேதுமில்லைஎன்று அவர்களுக்கு அறிவுறுத்தியபோது, இயேசுவே தோமாவின் வழியாய் தங்களிடம் பேசுவதுபோல் மணமக்கள் உணர்ந்தனர். இருவர்மீதும் தன் கரங்களை வைத்துச் செபித்து, “கடவுள் உங்களோடு இருப்பார்என்று கூறி அவர்களை ஆசிர்வதித்தார்.

தோமா  மணமக்களை ஆசிர்வதித்தது குறித்து மனமகிழ்வு கொண்ட அரசன் அவருக்குப் பரிசுகள் கொடுக்க முனைந்தபோது, தோமா அவற்றை மறுத்துவிட்டுப் புறப்பட்டார். உடன் வந்த ஹப்பான் தோமாவின் செயல்களைக் கண்டு வியப்பில் ஆழ்ந்திருந்தான்.

(தொடரும்)

news
ஆன்மிகம்
மரியாவின் ‘மறைவு வாழ்க்கை’ அன்னையருக்கு எடுத்துக்காட்டு (திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி – 43)

இயேசு ஞானத்திலும் வயதிலும் மற்றும் இறையருளிலும் வளர்ந்து வந்தபோது, மரியா தனது தாய்மையின் அர்த்தத்தையும்கிறிஸ்துவுடன் கடவுளுக்குள் மறைந்திருந்த தன் வாழ்வின் அர்த்தத்தையும் இன்னும் நன்றாகப் புரிந்துகொண்டார்.

1. திருக்குடும்பமானது நாசரேத்தில் வாழ்ந்த ஆண்டுகளைப் பற்றிய நற்செய்தி விவரிப்புகள் மிகவும் அரிதான பல தகவல்களை நமக்கு வழங்குகின்றன. எகிப்திலிருந்து திரும்பிய பின், நாசரேத்தைத் திருக்குடும்பத்தின் நிரந்தர இல்லமாக மாற்ற யோசேப்பு எடுத்த முடிவைப் பற்றி நற்செய்தியாளர் புனித மத்தேயு விவரிக்கின்றார் (மத் 2:22-23). ஆனால், யோசேப்பு ஒரு தச்சன் என்பதைத் தவிர வேறு எந்தத் தகவலையும் அவர் தனது நற்செய்தியில் கொடுக்கவில்லை (மத் 13:55). திருக்குடும்பமானது நாசரேத்திற்குத் திரும்பியதைப் புனித லூக்கா இருமுறை குறிப்பிடுகிறார் (லூக் 2:39-51). எருசலேமிற்கான பயண நிகழ்விற்கு முன்னும் பின்னும் இயேசுவின் குழந்தைப் பருவத்தைப் பற்றிய இரண்டு சுருக்கமான குறிப்புகளைத் தருகிறார்: “குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று, ஞானத்தால் நிறைந்து, கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது (லூக் 2:40); “இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார் (லூக் 2:52).

மரியா தன் இதயத்தில் வைத்துச் சிந்தித்தார்

இயேசுவின் வாழ்க்கையைப் பற்றிய இந்தச் சுருக்கமான குறிப்புகளைக் கூறும்போது, லூக்கா அநேகமாகத் தன் மகனுடன் மரியா கொண்டிருந்த ஆழ்ந்த நெருக்கத்தின் ஒரு காலகட்டத்தைப் பற்றிய நினைவுகளையே குறிப்பிடுகிறார். ‘இயேசுவிற்கும் அருளால் நிறைந்தவருக்கும் இடையேயான அந்த ஒன்றிப்பு பொதுவாக, தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் இருக்கும் உறவைவிட மிகவும் மேலானது. ஏனெனில், அது இயற்கைக்கு அப்பாற்பட்ட நிலையில் வேரூன்றி, இறைத்திட்டத்திற்கு இருவரும் கொடுத்த சிறப்புமிக்க ஒப்புதலால் வலுப்படுத்தப்பட்டது.

ஆகவே, நாசரேத்தின் வீட்டில் நிலவிய அமைதி மற்றும் சமாதானச் சூழலும், கடவுளின் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அவர்களின் இடைவிடாத தேடலும், தாய்க்கும் மகனுக்கும் இடையிலான உறவுக்கு ஓர் அசாதாரணமான மற்றும் தனித்துவமான ஆழத்தை அளித்தன என்று நாம் முடிவு செய்யலாம்.

2. கடவுளால் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு பணியைச் செய்கிறோம் என்ற மரியாவின் உணர்வு, அவருடைய அன்றாட வாழ்க்கைக்கு ஓர் உயர்ந்த அர்த்தத்தைக் கொடுத்தது. அன்றாட வாழ்வின் எளிய, தாழ்மையான வேலைகள் அவர் பார்வையில் ஒரு சிறப்பு மதிப்பைப் பெற்றன; ஏனெனில், அவர் அவற்றை கிறிஸ்துவின் பணிக்கான தனது பங்களிப்பாக நினைத்து அவைகளைச் செய்தார்.

இவ்வாறு, மரியாவினுடைய  எடுத்துக்காட்டான வாழ்வானது குறிப்பாக, வீட்டில் இருந்தபடியே தங்களது அன்றாடப் பணிகளைச் செய்யும் பல பெண்களுடைய அனுபவத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது, அவர்களை ஊக்குவிக்கின்றது. இது ஒரு தாழ்மையான, மறைவான, திரும்பத் திரும்பச் செய்யப்படும் முயற்சியாகும். மேலும், இது பெரும்பாலும் போதுமான அளவு பாராட்டப்படுவதில்லை. ஆயினும்கூட, நாசரேத்தின் வீட்டில் மரியா கழித்த நீண்ட ஆண்டுகள், உண்மையான அன்பின் மகத்தான ஆற்றலையும், அதன் மூலம் கிடைக்கும் மீட்பையும் வெளிப்படுத்துகின்றன. உண்மையில், சேவை மற்றும் அன்பின் ஒரு பணியாகக் கருதப்படும் எண்ணற்ற இல்லத்தரசிகளின் வாழ்க்கையின் எளிமை, ஆண்டவரின் பார்வையில் மிக மிக மதிப்புடையது.

நாசரேத்தில் மரியாவின் வாழ்க்கை சலிப்பால் நிறைந்திருக்கவில்லை என்று நிச்சயமாகக் கூறலாம். வளர்ந்து வரும் இயேசுவுடனான தனது தொடர்பில், தியானம் மற்றும் ஆராதனையின் மூலம் தன் மகனின் மறைபொருளுக்குள் ஊடுருவி அறிய அவர் முயன்றார். இதையே புனித லூக்கா நற்செய்தியாளர் இவ்வாறு விவரிக்கின்றார்: “மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தன் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார் (லூக்கா 2:19-51).

இந்நிகழ்ச்சிகளையெல்லாம் கிறிஸ்து பிறப்பு அறிவிப்பில் தொடங்கி, அதையும் தாண்டி, இது அவருடைய மகன் சம்பந்தப்பட்டதாக இருந்ததால் இந்நிகழ்வுகள் அனைத்திலும் அவர் பார்வையாளராகவும் பங்கேற்பாளராகவும் இருக்கின்றார். அவருடனான நெருக்கத்தின் ஒவ்வொரு நாளும், அவரை இன்னும் நன்றாக அறிந்துகொள்வதற்கும், அவருடைய பிரசன்னத்தின் அர்த்தத்தையும், ஆளுமையின் மறையுண்மைகளையும் இன்னும் ஆழமாகக் கண்டறிவதற்குமான ஓர் அழைப்பாகும்.

3. இயேசுவுடன் தினசரி தொடர்பில் வாழ்ந்ததால், மரியாவிற்கு நம்பிக்கை கொள்வது எளிதாக இருந்திருக்கும் என்று சிலர் நினைக்கலாம். இருப்பினும், இவ்விடத்தில் நாம் ஒன்றை நினைவில்கொள்ளவேண்டும்: அவருடைய மகனின் ஆளுமையின் தனித்துவமான அம்சங்கள் பொதுவாக மறைக்கப்பட்டிருந்தன; அவருடைய செயல்படும்விதம் முன்மாதிரியாக இருந்தபோதிலும், அவர் தன் சம வயதினரைப் போன்றே ஒரு வாழ்க்கையை வாழ்ந்தார்.

நாசரேத்தில் இயேசு வாழ்ந்த முப்பது ஆண்டுகளில், இயேசு தமது இயற்கைக்கு அப்பாற்பட்ட குணங்களை வெளிப்படுத்தவோ அல்லது அற்புதங்களைச் செய்யவோ இல்லை. அவருடைய போதனையின் தொடக்கத்துடன் தொடர்புடைய, அவருடைய ஆளுமையின் முதல் அசாதாரண வெளிப்பாடுகளின்போது ஒரு விளக்கத்தின்படி அவருடைய உறவினர்கள் (நற்செய்தியில்சகோதரர்கள் என்று அழைக்கப்படுபவர்கள்), அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர்; ஏனெனில், அவருடைய நடத்தை இயல்பானதாக இல்லையென உணர்ந்தனர் (மாற் 3:21).

நாசரேத்தின் கண்ணியமும் கடின உழைப்பும் நிறைந்த சூழலில், தன் மகனின் பணியில் கடவுளின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ள மரியா  முயன்றார். இது சம்பந்தமாக, அவருடைய தாயார் குறிப்பாகச் சிந்தித்த ஒரு விசயம் இயேசுவுக்குப் பன்னிரண்டு வயதாக இருந்தபோது எருசலேம் தேவாலயத்தில் அவர் கூறிய இந்த வார்த்தைகள்தான்: “நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்கவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?” (லூக் 2:49). இதைத் தியானித்ததன் மூலம் இயேசுவின் தெய்வீகக் குமாரத்துவத்தின் அர்த்தத்தையும், தன் சொந்தத் தாய்மையின் அர்த்தத்தையும் மரியாவால் நன்கு புரிந்துகொள்ள முடிந்தது. ஏனெனில், தன் மகன், ‘என் தந்தை என்று அழைத்தவருடைய சாயலை வெளிப்படுத்தும் பண்புகளை அவரது நடத்தையில் கண்டறிய அவர் முயன்றார்.

நம் வாழ்வானது கிறிஸ்துவுடன் கடவுளில் மறைக்கப்பட்டுள்ளது

4. நாசரேத் இல்லத்தில் இயேசுவுடன் இணைந்து வாழ்ந்த வாழ்வானது, மரியாவைத் தனதுநம்பிக்கைப் பயணத்தில் (இன்றைய உலகில் திருச்சபை, எண். 58) முன்னேறச் செய்தது மட்டுமல்லாமல், நம்பிக்கையிலும் முன்னேற வழிவகுத்தது. கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு நினைவாலும், சிமியோனின் வார்த்தைகளாலும் வளர்க்கப்பட்டுப் பேணப்பட்ட இந்த நற்பண்பு, அவருடைய பூவுலக வாழ்நாள் முழுவதும் நீடித்தது; அதிலும் குறிப்பாக, நாசரேத்தில் கழித்த முப்பது ஆண்டுகால மௌனத்திலும் மறைவிலும் இது சிறப்பாகப் பின்பற்றப்பட்டது.

நாசரேத்து வீட்டில் கன்னி மரியா இறைநம்பிக்கையை அதிக அளவில் அனுபவித்தார். இறைவன் தமது வாக்குறுதியை நிறைவேற்றும் நேரங்களையோ வழிகளையோ அவர் அறிந்திருக்காவிட்டாலும் தான் ஏமாற்றமடையேன் என்பதை அவர் அறிவார். நம்பிக்கையின் இருளிலும், தன் மகனின் மீட்புப் பணியின் தொடக்கத்தை அறிவிக்கும் வழக்கத்திற்கு மாறான அறிகுறிகள் இல்லாத நிலையிலும், எல்லாச் சான்றுகளையும் கடந்து, இறைவனின் வாக்குறுதி நிறைவேறும் என்று அவர் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.

நம்பிக்கையிலும் எதிர்நோக்கிலும் வளர்ச்சி பெறுவதற்கான ஓர் இடமாக, நாசரேத்தின் இல்லம் அன்பிற்கு உன்னதமான சாட்சி பகரும் ஓர் இடமாக மாறுகிறது. கிறிஸ்து உலகில் பொழிய விரும்பிய அன்பு, எல்லாவற்றிற்கும் மேலாக அவருடைய தாயின் இதயத்தில் பற்றிக்கொண்டு எரிகிறது. சரியாக அந்த இல்லத்தில் தான் தெய்வீக அன்பின் நற்செய்திப் பிரகடனம் ஆயத்தப்படுத்தப்படுகிறது.

நாசரேத்து ஊரைக் கண்முன் கொண்டு இயேசுவின் மற்றும் கன்னி மரியாவின்  மறையுண்மைகளைப் பற்றிச் சிந்திக்கும்போது, நம் வாழ்வின் உண்மைகளைப் பற்றி நாம் சிந்திக்க அழைக்கப்படுகின்றோம். இதையே புனித பவுலடியார் இவ்வாறு நினைவு கூர்கின்றார்: “உங்கள் வாழ்வு அவரோடு இணைந்து, கடவுளிடம் மறைந்து இருக்கிறது (கொலோ 3:3).

இது பெரும்பாலும் உலகின் பார்வையில் எளிமையானதாகவும் முக்கியத்துவம் இல்லாததாகவும் தோன்றலாம்; ஆனால், மரியாவின் முன்மாதிரியைப் பின்பற்றுவதன் மூலம், அது கிறிஸ்துவின் அன்பையும் சமாதானத்தையும் பரப்பி, மீட்பின் எதிர்பாராத சாத்தியக்கூறுகளை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும்.

மூலம்: John Paul II, Mary\'s hidden life is example to mothers, in «L’Osservatore Romano», Weekly Edition in English, 5 February 1997, page 11.

 

news
ஆன்மிகம்
இந்தியா செல்லத் தயங்கிய தோமா (தோமா கால் பதித்த தேசம் – 2)

தூய ஆவியார் வருகையின் துணிவால் சீடர்கள் அனைவரும் ஒருநாள் ஒன்றுகூடி நற்செய்திப் பணி குறித்த ஆலோசனையில் ஈடுபட்டனர். தங்கள் தலைவரின் நற்செய்தியை எங்கே, எவ்விதம் கொண்டு செல்வது என்று வெகுநேரம் ஆலோசித்தனர். உலகமெங்கும் பரவிச் செல்ல முடிவெடுத்த அவர்கள் யார், எந்தப் பகுதிக்குச் செல்வது என்பதில் சிறிது குழப்பம் ஏற்படவே இறுதியாக, சீட்டுப் போட்டுப் பார்த்து எவரெவர் எந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டுமென்று குறிப்பிடப்படுகிறதோ அதன்படி அந்நாடுகளுக்குப் பயணிக்கலாம் எனத் தீர்மானித்தனர். இறைவேண்டுதலோடு திருவுளச் சீட்டும் போடப்பட்டது.  அதன்படி தோமா தான் செல்ல வேண்டியது இந்தியப் பகுதி என்றவுடன் அதனை ஏற்றுக்கொள்ள அவரிடம் பெரும் தயக்கமே தலைதூக்கி நின்றது.

1955-ஆம் ஆண்டு டிசம்பர் 18 அன்று இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்ற புனித தோமா நினைவுநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் காலஞ்சென்ற டாக்டர் இராஜேந்திர பிரசாத் அவர்கள் தம் உரையின்போது இவ்வாறு குறிப்பிட்டார்.

நினைவில் கொள்ளுங்கள்... புனித தோமா இந்தியா வருவதற்குமுன் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் கிறித்தவத்தை அறிந்திருக்கவில்லை. புனித தோமாவின் வருகைக்குப்பின் இந்தியர் கிறித்தவத்தைத் தழுவியதால் மற்ற பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளைப்போல் அல்லாமல் நீண்ட வரலாறும் உயர்ந்த வழிமரபும் கொண்டதாகக் கிறித்தவம் இந்தியாவில் விளங்குகிறது. இது உண்மையில் நாமெல்லாம் பெருமை கொள்ளக்கூடிய செய்தியாகும்.”

குடியரசுத் தலைவரின் கூற்று உண்மைதான். இயேசுமீது பற்று வைத்து, இந்தியாவில் தோமா ஆற்றிய நற்செய்திப் பணிதான் கிறித்தவத்தை இந்நாட்டில் வேரூன்றச் செய்தது.

இயேசுமீதான தோமாவின் பற்று என்பது இயேசுவின் அழைப்பில்தான் நிலைபெற்றது. இயேசுவை தோமா தன் குருவாக ஏற்றுக்கொள்ளும்போது அவருக்கு வயது 29. திருமணம் முடித்திருந்த அவர் ஆரம்பத்தில் தச்சுத் தொழிலையே செய்துவந்தார். பின்னரே அவர் மீன்பிடித் தொழிலுக்கு வந்தார். கலிலேயாவில் தாரிகே என்ற பகுதியில் குடியிருந்து வந்தார். அவருடைய பெற்றோர் திபேரியாவில் வசித்து வந்தனர்.

தோமாவின் பெற்றோர் அவரின் சிறுவயதில் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவித்ததால், தோமாவின் இளம்பருவம் மகிழ்ச்சிகரமானதாக இல்லை. தன் குடும்பச் சூழலில் அவர் சிறுவயதிலேயே கடின மனதுடையவராக வளர்ந்தார். அரமாயிக் மொழி பேசிய தோமா, மற்ற யூதர்களைப் போலவே சராசரி கல்வியறிவு கொண்டிருந்தாலும் எதையும் ஆராய்ந்து பார்க்கும் திறன் கொண்டு விளங்கினார். சிறுவயதிலிருந்தே அறிவியல் மனப்பான்மை அவருள் வளர்ந்தது.

யூதாஎன்ற இயற்பெயர் கொண்ட அவரிடம்தோமாஎன்ற கிரேக்கப் பெயர் பின்னர் இணைந்திட, ‘யூதா தோமாஎன்று அழைக்கப்பட்டார். இதற்குஇரட்டையராகிய யூதாஎன்று பொருள். இதற்கு ஒரு காரணமும் கூறப்படுகிறது. தோமாவுக்கு ஒரு சகோதரி இருந்திருக்கிறார். இருவரும் ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டைப் பிள்ளைகள் என்றும், தோமாவுக்கு ஒன்பது வயது நடக்கும்போது அந்தச் சகோதரி இறந்துவிட்டதாகவும் தெரிகிறது.

நற்செய்தியாளரான மத்தேயு தோமாவை ஏழாவது இடத்திலும், மாற்கு, லூக்கா இருவரும் அவரை எட்டாவது இடத்திலும் குறிப்பிடுகின்றனர். எனினும், தோமாவை மற்ற சீடர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தோமானால் பலவித வேறுபாடுகள் தென்படுகின்றன.

பேதுருவுக்கு அதிகாரம் இருந்தது. யோவான் இயேசுவின் அன்புக்குரிய சீடராக இருந்தார். அந்திரேயாவும், பெரிய யாக்கோபும் இவ்விருவரிடமும் நெருக்கமானவர்களாக இருந்தார்கள். பிலிப்பு, பர்த்தலோமேயு இருவரும் நட்பைப் பகிர்ந்து கொண்டார்கள். யூதா ததேயு, சின்ன யாக்கோபு, கானாவூர் சீமோன் ஆகியோர் இயேசுவின் உறவினர்களாக விளங்கினார்கள். மத்தேயு வரி வசூலிக்கும் பெரிய பொறுப்பிலிருந்து சீடரானவர். யூதா இஸ்காரியோத் பணத்தை வைத்திருக்கும் அளவுக்குப் பெரிய நபராக இருந்தார். ஆனால், தோமா என்ன பின்னணியில் இயேசுவின் சீடராக மாறினார் என்பது தெரியவில்லை.

மேலும், திருத்தூதர்களில் ஏழு பேர் மட்டுமே அவர்கள் அழைக்கப்படுவதற்கு முன்னமே நற்செய்தி நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர். தோமா உள்பட யூதா ததேயு, சின்ன யாக்கோபு, சீமோன், யூதாஸ் இஸ்காரியோத் ஆகிய ஐந்து பேரும் அழைக்கப்பட்ட விதம் நமக்குத் தெளிவாகவில்லை.

பன்னிரு சீடர்களும் இயேசுவோடு இருக்கையில் அவரவர் சில பொறுப்புகளை எடுத்துக்கொண்டனர். பர்த்தலோமேயு திருத்தூதர்களின் பெற்றோரைக் கவனிக்கும் பொறுப்பையும், பிலிப்பு உணவு தயாரிக்கும் பொறுப்பையும், அல்பேயுவின் மகனாகிய சிறிய யாக்கோபு, யூதா ததேயு இருவரும் கூட்டங்களை ஒழுங்குபடுத்துபவர்களாகவும் பொறுப்பேற்றிருந்தனர். யூதாஸ் இஸ்காரியோத் பணக் கணக்குப் பார்க்கும் பொறுப்பில் இருந்தார்.

இயேசுவும் சீடர்களும் நற்செய்திப் போதிப்பதற்கு ஏதுவாக ஊர், இடம், காலம், நேரம் ஆகியவற்றை வடிவமைக்கும் பொறுப்பு தோமாவுக்குக் கிடைத்தது. அவர் தமக்கு ஒப்படைக்கப்பட்ட பணியைத் திறம்படச் செய்தார் என்றும் கூறப்படுகிறது. இயேசுவின் சீடர்களில் துணிவு மிகக்கொண்டவர்கள் பேதுருவும், செபதேயுவின் மகனான பெரிய யாக்கோபும் என்று கருதப்பட்டாலும், தோமாவும் மிகத் துணிவு உடையவராகவே விளங்கினார்.

தோமாவிடம் காணப்பட்ட துணிவு, நம்பிக்கை இரண்டுமே வியப்பூட்டும் விதமாக இருந்தன. ஒருமுறை இயேசு தம் பாடுகளை முன்னறிவிக்கும் போது தலைமைச் சீடரான பேதுரு குறுக்கிட்டு, “ஆண்டவரே, இது உமக்கு வேண்டாம்என்று தடுத்ததை அறிவோம். இயேசுமீது கொண்டிருந்த அன்பின் மிகுதியால் பேதுரு அப்படிக் கூறியிருந்தாலும், அவருக்கும் சற்றே பயம் இருந்தது. பாடுகள் பற்றிக் குறிப்பிடும்போதே பேதுரு இலேசாக அஞ்சினார் என்றால், பாடுகள் பட இயேசு புறப்படும்போதேவாருங்கள், நாமும் போவோம்; அவரோடு இறப்போம்என்று இயேசுவின்மேல் வைத்த பற்றுறுதியோடும், அசாத்தியமான துணிவோடும் தோமா மற்ற சீடர்களை அழைத்தார்.

தோமா இவ்வளவு துணிவுள்ளவராக இருந்தாலும், அவ்வப்போது மனச்சோர்வு கொண்டவராக இருந்தார். அவர் இப்படி இருக்கக் கண்டால் பர்த்தலோமேயு அவரைத் தேற்றுவதைக் கடமையாகக் கொண்டார். பேதுரு தோமாவை நன்கு புரிந்து வைத்திருந்தார். தோமா மனச்சோர்வு கொள்ளும்போது இயேசுவுடன் தொடர்புகொள்வதே கிடையாது என்றும் கூறப்படுகிறது. தோமாவிற்கு இயேசுவிடம் பிடித்தது அவருடைய தடுமாறாத நிலையான மனது என்றால், சந்தேகக் குணமுடைய தோமாவிடம் இயேசுவுக்குப் பிடித்தது தோமாவின் நேர்மைதான்.

தோமாவின் அந்தச் சந்தேக குணம்தான் இரண்டாயிரம் ஆண்டுகளாக உலகம் அவரை, ‘சந்தேகத் தோமா, ஐயப்பாட்டுத் தோமாஎன்று அழைக்க வைத்திருக்கிறது. அவருடைய சந்தேகம்கூட உயிர்த்த இயேசுவை அவர் தரிசித்ததால் ஆசிர்வாதமாக மாறிப்போனது.

உயிர்த்த இயேசுவைச் சந்தித்த மற்ற திருத்தூதர்களுடன் தோமா ஏன் காணப்படவில்லை என்பதற்குச் சரியான விளக்கம் கிடைக்கவில்லை. மனச் சோர்வுகொள்ளும் இயல்புடைய அவர் இயேசுவின் பாடுகளை அறிந்து மனமுடைந்து போனவராய் எங்கேனும் சென்றிருக்கலாம். உயிர்த்த இயேசுவைக் கண்ட ஆனந்தத்தில் மற்ற சீடர்கள்ஆண்டவரைக் கண்டோம்என்றபோதுஆண்டவரின் விலாவில் விரல் விட்டுப் பார்த்தாலன்றி நம்ப மாட்டேன்என்று கூறும்போதே தோமாவின் ஐயக்குணம் வெளிப்பட்டது.

மற்ற திருத்தூதர்முன் இயேசு தோன்றும்போது தோமா அருகில் இல்லை. எம்மாவு கதையில் இயேசுவைச் சந்தித்த சீடர்கள் தெரிவித்த செய்திகளிலும் அவர் முழுநம்பிக்கைகொள்ளவில்லை. அவருக்குள் இருந்த ஒரே பெரிய கவலை, இயேசுவைத் தரிசித்ததன் மூலமாக மற்ற சீடர்கள் அனுபவித்த இறைமகிழ்ச்சியை, இறையனுபவத்தைத் தான் அனுபவிக்க முடியவில்லையே என்பதுதான்.

ஆனால், தோமாவின் நேர்மைமீது பற்றுக் கொண்டிருந்த இயேசு, திருத்தூதர்கள் கூடியிருந்த அறையில் நேரில் தோன்றி தோமாவிடம், தம் விலா காயத்தைத் தொட்டுப் பார்க்க அனுமதியளித்து அவருடைய ஐயத்தைப் போக்கியதுடன், அவருடைய சந்தேகக் குணத்தை மன்னிக்கவும் செய்கிறார். அன்று தெய்வீக உண்மையும், மனித இயல்பிலான ஐயமும் நேருக்கு நேர் சந்திக்கையில், இறையுண்மையின் முன் மனித ஐயம் காணாமல் போகிறது. இதனால்தான் தோமாவால் தன்னையறியாமல்என் ஆண்டவரே, என் கடவுளேஎன்று வாய்விட்டு நம்பிக்கை அறிக்கையிட முடிகிறது. ஐயம் நீக்கப்பட்டது அவருக்கு மட்டுமல்ல; அவர் வழியாகக் கிறித்தவச் சமூகத்திற்கும்தான்.

இந்நிகழ்வு தொடர்பாக ஒரு பாரம்பரியச் செய்தியும் உண்டு. இயேசுவின் விலாக்காயத்தைத் தொட்ட தோமாவின் கரம் செந்நிறக் கறையைக் கொண்டிருந்தது என்றும், அந்தக் கறை தோமா மரிக்கும்வரை இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. எது எப்படியோ, தன் தலைவரின் காயத்தைத் தொட்ட தோமாவின் கரம், வாழ்நாள் முழுக்க இயேசுவை நினைவூட்டுவதாகவே இருந்தது என்றால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. மேலும், இந்த நம்பிக்கை மற்ற திருத்தூதர்களைக் காட்டிலும் வெகுதொலைவில் சென்று நற்செய்திப் பரப்பும் பணிக்கு அவரைத் துணிவுடன் இயங்க வைத்தது என்றால் அது மிகையாகாது என்றே கொள்ளலாம்.

இயேசுவின் நற்செய்தியைப் பரப்ப மிகுந்த ஆர்வம் கொண்ட தோமா தொடக்க காலத்தில் தம் நாடுவிட்டு கண்காணாத தொலைவில் செல்லத் தயக்கம் கொண்டவராகவே இருந்தார். அதனால்தான் எருசலேமில் ஒருநாள் அனைத்துத் திருத்தூதர்களும் ஒன்றுகூடி சீட்டுக் குலுக்கிப் போட்டுத் தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளை முடிவு செய்தபோது, தோமா இந்தியப் பகுதிகளுக்குச் செல்லவேண்டும் என்று சீட்டு விழுந்தவுடன் அவர் மிகவும் தயங்கினார்; அதற்குக் காரணமும் இருந்தது.

அரமாயிக் மொழி மட்டுமே தெரிந்திருந்த யூதனான நான், இந்தியப் பகுதிகளில் எப்படி நற்செய்திப் பணி செய்யமுடியும்? அப்பகுதி மொழிகளின் பெயர்களைக்கூட அறிந்திராத நிலையில் எப்படி அம்மக்களிடம் தொடர்பு கொள்ள முடியும்? அவர்கள் என்னை ஏற்றுக்கொள்வார்களா?’ என்று குழம்பியதோடு அதை மற்ற திருத்தூதர்களிடம் வினாவாகவும் எழுப்பினார்.

கூடியிருந்த மற்றவர்கள்தோமா, இது இறைவனின் சித்தம். உம்மைப் போலத்தான் நாங்களும் நமக்குத் தொடர்பே அல்லாத தேசங்களுக்குச் செல்லவிருக்கிறோம். உமக்கு ஏன் தயக்கம்? உலகெங்கும் போய் நற்செய்தியை அறிவியுங்கள் என்றுரைத்த நம் ஆண்டவரின் கட்டளையைத்தான் நாம் நிறைவேற்றப் போகிறோம்என்று அவரைத் தைரியப்படுத்தினர். ஆனாலும், தோமாவின் தயக்கம் எளிதில் மாறவில்லை, பிடிவாதமும் போகவில்லை.

துணிச்சல் மிக்கவரும், எதையும் ஆராய்ந்து உணர்பவரும், பிடிவாதக் குணமும் உள்ளவரான தோமாவின் மனம் இந்தியப் பகுதிகளுக்குப் போவதை மறுத்துப் பிடிவாதமாக இருந்த நிலையில் ஓர் இரவு இயேசு அவருக்குத் தோன்றிபயப்படாதே தோமா, இந்தியப் பகுதிக்குச் சென்று நற்செய்தியை அறிவி. நான் உன்னோடிருக்கிறேன்என்றுரைக்க, தன்னுடைய உணர்வுகளை மறைத்துப் பழக்கமில்லாத தோமா, “எங்குப் போனாலும் நான் இந்தியா பக்கம் மட்டும் போகமாட்டேன்என்று முரண்டு பிடித்தார். இயேசுவும் அவரின் பிடிவாதத்தைக் கண்டு புன்னகைத்து மறைந்துபோனார்.

இயேசு தோன்றி மறைந்தபின் தோமா இப்போது இரட்டை மனநிலைக்கு ஆளானார். ‘இந்தியப் பகுதிகளுக்குப் போகவே மாட்டேன்என்று பிடிவாதமாய் இருந்தவர் இப்போதுபோவதா? வேண்டாமா?’ என்ற குழப்பத்திற்கு உள்ளானார்.

(தொடரும்)

news
ஆன்மிகம்
அன்னை மரியா தனிப்பட்ட கீழ்ப்படிதலின் மூலம் ஒத்துழைக்கிறார்! - திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி – 42

ஆலயத்தில் சிறுவன் இயேசுவைக் கண்டுபிடித்த நிகழ்வை விளக்கும் திருவிவிலியப் பகுதியானது தனது தெய்வீக மகனின் வாழ்விலும், பணியிலும் மரியா கொண்டிருந்த பங்களிப்பானது வளர்ந்து வருவதை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது.

1. புனித திருமுழுக்கு யோவானின் இறைவாக்கு உரைக்கும் பணியின் தொடக்கத்திற்கு முன்னதாக புனித லூக்கா நற்செய்தியாளர் இயேசுவின் குழந்தைப் பருவ விவரிப்பின் கடைசிப்பகுதியாக அவரது எருசலேம் ஆலயத் திருப்பயணத்தை விவரிக்கின்றார். இது எருசலேமில் இயேசுவின் பல ஆண்டுகால மறைமுகமான வாழ்வை நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டும் வழக்கமானதொரு  சித்தரிப்பாகும்.

இதன்மூலம் தமதுதந்தையின் இல்லத்திற்குள்அவர் மேற்கொள்ளும் இந்த இரண்டாவதுநுழைவிற்குஏற்கெனவே ஆலயத்தில் தமது அர்ப்பணிப்பைக் குறித்திருந்த கடவுளுக்குத் தம்மை முழுமையாக அர்ப்பணித்ததன் அர்த்தத்தை அளிக்கிறார்.

இந்தத் திருவிவிலியப் பகுதியானதுஇயேசு யோசேப்பிற்கும் மரியாவிற்கும் கீழ்ப்படிந்திருந்தார்என்ற லூக்கா நற்செய்தியாளரின் விவரிப்பிற்கு முரணாக இருப்பதாகத் தெரிகிறது (லூக் 2:51). ஆனால், நாம் சற்று உற்றுநோக்கினால், இங்கு அவர் ஒரு மகனாக தமது இயல்பான நிலைக்குத் தன்னிலை உணர்ந்து வேண்டுமென்றே முரண்படுவதாகத் தெரிகிறது. எதிர்பாராத விதமாக மரியா மற்றும் யோசேப்பு ஆகியோரிடமிருந்து ஒரு திட்டவட்டமானதொரு பிரிவினையை ஏற்படுத்துகிறார். தமது நன்னடத்தை விதியாக இயேசு தமது வானகத் தந்தைக்கு மட்டுமே உரியவர் என்று கூறுகிறார்; தமது இவ்வுலகக் குடும்பத்துடனான உறவுகளைப் பற்றி அவர் குறிப்பிடவில்லை.

இயேசுவின் நடத்தையானது வழக்கத்திற்கு மாறான ஒன்றாகத் தோன்றுகிறது

2. இந்நிகழ்வின் வழியாக, மீட்பின் மறையுண்மையைப் புரிந்துகொள்ளும் வகையில் இயேசு தமது தாயைத் தயார்படுத்துகின்றார். எருசலேம் ஆலயத்தில் தங்குவதற்காகச் சிறுவன் இயேசு அவர்களிடமிருந்து விலகியிருக்கும் அந்த மூன்று வியத்தகு நாள்களில், மரியாவும் யோசேப்புவும் இயேசுவின் பாடுகள், இறப்பு மற்றும் உயிர்ப்பின்  கொண்டாட்டத்திற்கெனத் தங்களையே தயாரிக்கும் அதன் முன்சுவையை அனுபவிக்கின்றார்கள்.

எருசலேம் ஆலயத்திற்குப் பாஸ்கா கொண்டாடச் சென்றவர் அங்கேயே தங்கவேண்டும் என்ற தமது ஆசையைத் தமது பெற்றோரிடம் கூறாமலேயே தமது தாயையும் யோசேப்புவையும் சொந்த ஊரான கலிலேயாவுக்குப் புறப்பட அனுமதித்த இயேசு, அவர்கள் அனுபவித்த அந்தத் துன்பத்திற்கான மறைபொருளின் வழியாகப் பின்னாளில் தமது பாஸ்கா அறிவிப்பின் வழியாக அவரது சீடர்களோடு அவர்கள் அனுபவிக்கவிருந்த அந்தப் பாஸ்கா மகிழ்ச்சிக்கு அவர்களை இட்டுச்செல்கின்றார்.

நற்செய்தியாளர் லூக்காவின் விவரிப்பின்படி, ஒருநாள் பயணத்திற்குப் பிறகு நாசரேத்திற்குத் திரும்பிய யோசேப்புவும் மரியாவும் காணாமல்போன இயேசுவின் நிலையைப் பற்றி நினைத்துக் கவலைப்படுகிறார்கள், வேதனைப்படுகிறார்கள். அவர்களின் உறவினர்கள் மற்றும் அறிமுகமானவர்களிடையே சற்று ஏமாற்றத்தோடு அவரைத் தேடுகிறார்கள். எருசலேமிற்குத் திரும்பி வந்து அவரை ஆலயத்தில் கண்டதும், “அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டும், அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டும் இருந்தார் (லூக் 2:46). அதைக்கண்டு அவர்கள் மலைத்துப் போனார்கள். அவரது நடத்தையானது வழக்கத்திற்கு மாறான ஒன்றாகத் தோன்றுகின்றது. மூன்று நாள்களுக்குப் பிறகு அவரை அவர்கள் கண்டுபிடித்தல் என்பது அவரது பெற்றோருக்கு  அவரின் ஆளுமை மற்றும் பணியைப் பற்றிப் புரிந்துகொள்ள உதவியது என்றும் நாம் பொருள் கொள்ளலாம்.

பின்னாளில் தமது பொதுவாழ்வில் செய்ய வேண்டியதை இப்பொழுதே ஓர் ஆசிரியரைப் போன்று அனைவரும் வியக்கும் வகையில் பேசுகின்றார்: “அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்துகொள்ளும் திறனையும், அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர் (லூக் 2:47).  கேட்போரை வியப்பில் ஆழ்த்தும் வகையிலானதொரு ஞானத்தை வெளிப்படுத்திய அவர், தமது மீட்புப் பணியின் சிறப்பியல்புகளாக இருக்கும் உரையாடலுக்கான (the art of dialogue) பயிற்சியை அப்பொழுதே செய்யத் தொடங்குகிறார்.

இயேசுவின் தாய் அவரிடம் இவ்வாறு கூறுகின்றார்: “மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே (லூக் 2:48). இவ்வார்த்தைகளில் பல தாய்மார்கள் தங்கள் குழந்தைகள் ஏற்படுத்தும் துன்பங்களைப் பற்றிக் கேட்கும்குரலின்எதிரொலியை நாம் காணலாம். மேலும், இவ்வார்த்தைகள் சோதனைக் காலங்களில் ஒவ்வோர் ஆணும் பெண்ணும் தமது இதயத்தின் ஆழத்தில் எழுப்பும் கேள்விகளாகும்.

3. மரியாவின் கேள்விக்கு இயேசு தரும் கேள்வி வடிவிலான பதில் இங்கு மிகவும் குறிப்பிடத்தக்கதொன்றாகும்: “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்கவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?” (லூக் 2:49).

இப்பதில் வழியாக அவர் தாம் யார் என்பதன் மறையுண்மையை எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத விதத்தில் யோசேப்பிற்கும் மரியாவிற்கும் வெளிப்படுத்துகிறார். இவ்வகையில் வெளித் தோற்றங்களைக் கடந்து செல்ல அவர்களை அழைப்பதோடு, தமது எதிர்காலத்திற்கான புதிய எல்லைகளையும் அவர்களுக்கு முன்பாக விரித்துக் காட்டுகிறார்.

துயருற்ற தம் தாய்க்கு அளித்த பதிலில், இயேசு தமது நடத்தைக்கான காரணத்தை உடனடியாக வெளிப்படுத்துகிறார். மரியா யோசேப்பைச் சுட்டிக்காட்டிஉன் தந்தைஎன்று குறிப்பிடுகிறார். ஆனால், இயேசுவோ தமது வானகத் தந்தையைக் குறிக்கும் விதமாகஎன் தந்தைஎன்று பதில் அளிக்கிறார்.

தமது தெய்வீகப் பிறப்பைக் குறிப்பிடுகையில், தமது வானகத் தந்தை வாழும் இடமான கோவிலை அவர் வசிக்குமிடமாகக் (natural place) கூற அவர் அதிகம் விரும்பவில்லை. ஏனெனில், அவர் தமது வானகத் தந்தையின் திட்டத்தை நிறைவேற்றுவதிலேயே மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். இவ்வாறு தம் தந்தையின் விருப்பமே, தாம் கீழ்ப்படியவேண்டிய ஒரே நெறிமுறை என்பதை வலியுறுத்த விரும்புகிறார்.

கடவுளின் திட்டத்திற்கு அவர் தம்மை முழுமையாக அர்ப்பணித்ததைக் குறிக்கும் இந்தக் குறிப்பானது, நற்செய்தி உரையில்நான் துன்பப்பட வேண்டும்என்ற வார்த்தைகளால் சிறப்பித்துக் காட்டப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகள் பின்னாளில் அவரது துன்பம் பற்றிய முன்னறிவிப்பிலும் தோன்றலாம் (காண்க: மாற் 8:31).

அதன் பிறகு அவரது வானகத் தந்தை அவரை எங்கு வழிநடத்துகிறாரோ அங்குச் சென்று தமது பணியை நிறைவேற்ற அவரை அனுமதிக்குமாறு அவரது பெற்றோர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

4. நற்செய்தியாளர் லூக்கா, “அவர் சொன்னதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை (லூக் 2:50) என்று குறிப்பிடுகின்றார்.

யோசேப்புவும் மரியாவும் அவரது பதிலின் பொருளையோ, பெற்றோரின் அக்கறைக்கு அவர் பதிலளிக்கும் விதத்தையோ (வெளிப்படையாக நிராகரித்தல்) புரிந்துகொள்ளவில்லை. இந்த மனப்பான்மையின் மூலம் தமது வானகத் தந்தையுடனான நெருக்கத்தின் மறைபொருளின் அர்த்தங்களை வெளிப்படுத்த இயேசு எண்ணுகிறார். மரியா, தான் அனுபவித்துக் கொண்டிருக்கும் சோதனையுடன் அவற்றை எவ்வாறு தொடர்புபடுத்துவது என்று தெரியாமலேயே  அவற்றை உள்ளுணர்வால் அறிகிறார்.

மீட்புப்பணியில் மரியா புதியதொரு பரிமாணத்தை அடைகின்றார்

உண்மையிலேயே இந்தக் கடினமான காலத்தை மரியா எப்படி கடக்கின்றார் என்பதை நற்செய்தியாளர் லூக்காவின் வார்த்தைகள் நமக்குக் கற்பிக்கின்றன. மரியா, “இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தனது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார் (லூக் 2:51) என்கிறார் நற்செய்தியாளர் லூக்கா. இயேசுவின் தாய் இந்த நிகழ்வுகளை, கிறிஸ்து பிறப்பில் அவருக்கு வெளிப்படுத்தப்பட்ட தனது மகனின் மறைபொருளுடன் தொடர்புபடுத்துகின்றார். மேலும், ஆழ்ந்த தியானத்தின் அமைதியில் அவற்றைச் சிந்தித்து இறைவனுக்குத் தன்னையே அர்ப்பணிக்கும் மன நிலையுடன்ஆம்எனக் கூறி, இறைத்திட்டத்திற்கு ஒத்துழைக்கத் தன்னையே அர்ப்பணிக்கின்றார்.

இவ்வாறுமரியா தனது தாய்மையிலிருந்து வரும் இயல்பான நிலையிலிருந்து படிப்படியாக விடுபட்டு, தனது மகனின் பணிக்குத் தன்னை அர்ப்பணிக்க வழிவகுக்கும் நிகழ்வுகளின் சங்கிலியில் முதல் இணைப்பு உருவாக்கப்படுகிறது.

எருசலேம் ஆலயத்தில் தமது பணிக்கு முன்னுரையாக இயேசு தம் தாயைத் தம்முடன் இணைத்துக் கொள்கிறார்; இனி மரியா இயேசுவைப் பெற்றெடுத்த தாய் மட்டுமல்ல; மாறாக, இறைத் தந்தையின் திட்டத்திற்குத் தானே கீழ்ப்படிவதன் மூலம் மீட்பின் மறைபொருளில் ஒத்துழைக்கக்கூடிய ஒரு பெண்மணியாகவும் விளங்குகிறார்.

இவ்வாறு மிகுந்த அர்த்தம் நிறைந்த ஒரு நிகழ்வைத் தன் இதயத்தில் இருத்திக்கொண்டு, அன்னை மரியா, மீட்புப் பணியில் தனது ஒத்துழைப்பின் ஒரு புதிய பரிமாணத்தை அடைகிறார்.

மூலம்: John Paul II, Mary co-operates by personal obedience, in «L’Osservatore Romano», Weekly Edition in English, 22 January 1997, p. 11.