news
ஞாயிறு மறையுரை
ஆகஸ்டு 09, 2026 பொதுக்காலம் 19-ஆம் ஞாயிறு - 1அர 19:9அ, 11-13அ; உரோ 9:1-5; மத் 14:22-33 (அவர்மீது நம் கண்களைப் பதியவைப்போம்!)

அருள்முனைவர் அந்தோணி ஜோசப் அவர்கள் செங்கல்பட்டு மறைமாவட்டத்தைச் சார்ந்தவர். தற்பொழுது பெங்களூரில் அமைந்துள்ள புனித பேதுரு பாப்பிறை உயர்கல்விப் பயிலகத்தில் (St. Peter’s Pontifical Insititute) திரு அவைச் சட்டப் பேராசிரியராகவும் பதிவாளராகவும் பணியாற்றி வருகின்றார். மேலும், தமிழ்நாட்டுத் திரு அவைச் சட்ட அறிஞர்கள் சங்கத்தின் செயலாளராகவும், செங்கல்பட்டு மறைமாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் பணியாற்றுகின்றார்.

உரோமை, பாப்பிறை உர்பானியா பல்கலைக்கழகத்தின் திரு அவைச் சட்டத்தில் முனைவர் பட்டமும், வத்திக்கானின் உரோமை திருப்பீடப் பேராலயத்தில் சிறப்புப் பட்டயப் படிப்புகளையும் நிறைவு செய்துள்ளார். இவர் திரு அவை நீதிமன்ற நடவடிக்கைகள் சார்ந்த ஓர் ஆங்கிலப் புத்தகத்தையும், திரு அவைச் சட்டம் சார்ந்த அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளையும், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மறையுரை, திரு அவைப் போதனைகள், இறையியல் மற்றும் ஆன்மிகச் சிந்தனைகள் கொண்ட படைப்புகளை வெளியிட்டுள்ளார்.

தற்போது ‘நம் வாழ்வு வார இதழில் மறையுரை வழங்க முன்வந்துள்ள அருள்முனைவர் அந்தோணி ஜோசப் அவர்களை ‘நம் வாழ்வு அன்போடு வரவேற்கிறது.

- முதன்மை ஆசிரியர்

நம்பிக்கை வாழ்வினை வளர்த்திட, ஆழமாய் வாழ்ந்திட, வேரூன்றி விருட்சமாய் வளர்ந்து, நம்பிக்கை கனிகளை வழங்கிட, புதுமைகளையும் அசாதாரண நிகழ்வுகளையும் எதிர்நோக்கி வாழ்வது நம்பிக்கை வாழ்வின் உண்மையான அர்த்தங்களையும் மதிப்பீடுகளையும் மங்கச் செய்யும். புதுமைகள் மட்டுமே நம்பிக்கையை மிகுதியாக்கும் என ஒரு நம்பிக்கையாளர் கருதினால், அந்த நம்பிக்கை ஆழமற்ற, மேலோட்டமான நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றது. புதுமைகளால் மட்டுமே கிறித்தவ நம்பிக்கை மிகுதியாகின்றதா? ஆனால், அன்றாட வாழ்வின் நிகழ்வுகளும் இறைப்பராமரிப்பும் அமைதியும் உடனிருப்பும் நமது நம்பிக்கையை மிகுதியாக்கும் காரணிகள் என்பதை இன்றைய வாசகங்கள் தெளிவுபடுத்துகின்றன.

எலியாவின் கவலையும் அச்சமும்

முதல் வாசகம் எலியாவின் ஓரேபு மலை அனுபவத்தைப் பற்றி உரைக்கின்றது. பொய் இறைவாக்கினர்களைக் கொன்றுவிட்டு, வேற்றுத் தெய்வங்களின் வழிபாட்டினை வெறுமையாக்கி, யாவே இறைவனின் உடனிருப்பையும் வார்த்தைகளையும் மெய்ப்பிக்கின்றார். அதனால் அந்நாட்டு அரசனின் கோபத்திற்கு உள்ளாகி அவர் எலியா இறைவாக்கினரைக் கொன்றொழிக்க முடிவெடுத்துச் செயல்பட்டபொழுதுஅவரிடமிருந்து தப்பி ஓடுகின்றார். காகத்தின் வழியாக அப்பமும் தண்ணீரும் பெறப்பட்டு இறைப்பராமரிப்பை உணர்கின்றார். அவர் ஓரேபு மலையைச் சென்றடைந்தபொழுது  இறைவன் அவர்முன் கடந்து வருவது இறைவனால் அறிவுறுத்தப்பட்டு, மலையின் குகையிலிருந்து வெளியே வந்து நிற்கின்றார். மேகத்தூண்களிலும், நெருப்புப் பிழம்புகளிலும், வானிலிருந்து தோன்றுகின்ற இடி முழக்கங்களிலும் பேரிரைச்சல்களிலும் பூமியை உலுக்குகின்ற நிலநடுக்கங்களிலும் இறைவன் பிரசன்னத்தை அறியலாம் எனக் காத்திருந்த எலியாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அவரது உள்ளம் மன அமைதியின்மை என்னும் இரைச்சலால், பயம் என்னும் நடுக்கத்தால் நிறைந்திருந்த தருணத்தில், இறைவன் தம்மை இன்னும் அதிகமான இரைச்சல் மிகுந்த சூழ்நிலையில் வெளிப்படுத்த விரும்பவில்லை. இறைவனின் பிரசன்னத்தில் நின்று மனபலம் பெறவேண்டும் என்று எண்ணிய எலியா இறைவாக்கினருக்கு இறைவன் மெல்லிய தென்றலில் வெளிப்படுத்துகின்றார். இறைவனின் வெளிப்பாடு அசாதாரண சூழலில், நிகழ்வுகளில், பிரமிப்பும் பிரமாண்டமும் மட்டும் நிறைந்தது அல்லஅந்நிலைக்கு, அச்சூழலுக்கு ஏற்ப அவரின் வெளிப்பாடு அமைதியிலும், மெல்லிய தென்றலிலும் மெல்லிய குரலிலும் அமைந்துள்ளது; அக்குரல்  எலியாவை உறுதிப்படுத்தியது; மீண்டும் இறைவாக்குப் பணிக்கு அவரை உந்துகின்றது.

ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்டேன்...’ எனத் தொடங்கும் இன்றைய திருப்பாடல் 85, இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் இறைவனின் குரலும் உடனிருப்பும் அவர்களுக்கு நல்லதை மட்டுமே வழங்கியது என்பதை எடுத்துரைக்கின்றது. ‘அவரின் குரலுக்குச் செவிமெடுக்கும் நாட்டிற்கு நல்வினை அமையும், வாழ்வு பிறக்கும்என்னும் வரிகள் இன்றைய வாசகங்களோடு பொருந்திச் செல்கின்றது. எலியாவிற்கு மனவுறுதியும், நற்செய்தியில் இவர்களுக்கு நம்பிக்கையையும் இறைவனின் குரலின் வழியாகக் கிடைக்கின்றது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய பவுல் இறைவன் மாட்சியை, பிரசன்னத்தை அவரைக் கடவுளாக ஏற்றுக்கொண்ட மக்கள் மத்தியில் வெளிப்படுத்தியதை நினைவுகூர்ந்து, இறைவாக்குகளும் உடன்படிக்கையும் திருச்சட்டங்களும் இஸ்ரயேல் மக்களின் அன்றாட வாழ்வின் இறைமகனின் பிரசன்னத்தை உணர்த்தும் வெளிப்பாடுகளாகவே அமைந்திருந்தன எனக் கோடிட்டு விளக்குகின்றனர். அனுதின வாழ்வின் சூழலில் துன்பங்களும் வேதனைகளும் போராட்டங்களும் நிலைகுலையச் செய்யும் தருணங்களில், இஸ்ரயேல் மக்களிடத்தில் ஒப்படைக்கப்பட்ட உடன்படிக்கையும் இறைவாக்குகளும்  அவர்களை உறுதிப்படுத்தின.

இன்றைய நற்செய்தி வரிகளுக்கு முன்பாக இயேசு முதலில் 5,000 மனிதர்களைச் சந்தித்து உணவளிக்கின்றார். அவர்களின் பசியை அறிந்து அவர்களுடன் நின்று, தோழமையை வெளிப்படுத்திப் பசியாற்றுகின்றார். பிறகு இரவில் தனித்துச் சென்று இறைத்தந்தையுடன் உரையாடுகின்றார். அதிகாலைப் பொழுதில் தம்மைச் சார்ந்த சீடர்களைச் சந்திக்கக் கடலுக்குள் செல்கின்றார். இவ்வாறு இயேசுவின் செயல்பாடு சந்தித்தல், உரையாடுதல், உடனிருத்தல் என அமைகின்றது.

சீடர்களின் கலக்கமும் இயேசுவின் உடனிருப்பும்

அலைகளால் படகு அலைக்கழிக்கப்பட்டு, கரையிலிருந்து நெடுந்தொலைவு சென்றுவிட்டதால் சீடர்கள் கலக்கம் அடைகின்றனர். துன்பத்தில், அபாயகரமான சூழலில், ஆர்ப்பரித்து எழும் அலைகளின் மத்தியில் சீடர்கள் தாங்கள் தனித்துவிடப்பட்டதாக உணர்கின்றனர். அச்சூழலைத் தனியாக எதிர்கொள்ள வேண்டியதாக அஞ்சினர். இயேசு அவர்களை விட்டு வெகுதூரத்தில் இருப்பதாகக் கருதிய நிலையில், இயேசு அவர்களை நோக்கி வருகின்றார். ‘துணிவோடு இருங்கள்; அஞ்சாதீர்கள்என நம்பிக்கையை வளர்க்கின்றார்.

நமது வாழ்விலும் பல நேரங்களில் பெரும்புயல் போன்ற சூழல்கள் போராட்டங்கள், மனக்கவலைகள், இழப்புகள்... இவற்றில் சிக்கி மன அமைதியை இழக்கும்பொழுதும், செய்வதறியாது திகைக்கும்பொழுதும் இறைவன் நம்மைவிட்டு வெகுதூரத்தில் இருப்பதாக உணர்கின்றோம். இறைவன் மௌனமாய் இருப்பதாய் நினைக்கின்றோம். மௌனத்திலும் செயலாற்றும், உறைந்துபோன இறைமகனாகவே அவரை நினைக்கின்றோம்.

இயேசுவைத் தொடக்கத்தில் சீடர்களால்கண்டுகொள்ளமுடியவில்லை. இருள் சூழ்ந்த கடல், பயம் நிறைந்த கண்கள், புயல் காற்று நிறைந்திருந்த அலைகள்... இவற்றின் பேரிரைச்சல் மத்தியில் இயேசு அவர்களை நோக்கிச் செல்வதை அவர்களால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. இயேசுநான் உங்களோடுதான் இருக்கிறேன்என்ற இயேசுவின் மெல்லிய - சாந்தமான குரல் அவர்களின் காதில் விழவில்லை. பயமும் அச்சமும் கலக்கமும் அவர்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிய தருணத்தில்தான் இயேசுவின் உடனிருப்பை, அருகாமையை உணர்கின்றனர். துடுப்புகளை இயக்கிய சீடர்களின் கரங்களில் இறைவனின் கரமும் உடனிருக்கின்றது.

நம்மைக் கவலையும் சோதனையும் வேதனையும் அலைக்கழிக்கும்போது இயேசுவின் மெல்லிய, நம்பிக்கை தரும் உடனிருக்கும் வார்த்தைகள், நம் செவிகளைக் கூர்மையாக்கவேண்டும். அச்சூழலில்தான் நமது நம்பிக்கை பலப்படும்.

பேதுருவின் துணிச்சலும் ஆழமற்ற நம்பிக்கையும்

இயேசு கடல்மீது சீடர்களை நோக்கி நடக்கும்பொழுது மற்ற சீடர்கள் பயத்தில் உறைந்திருந்தபொழுது பேதுரு மட்டுமே துணிச்சலோடு பேசுகின்றார். அவரது துணிச்சல் மிகுந்த விருப்பத்தினால் தானும் கடல்மீது நடக்க அனுமதிக்க இயேசுவிடம் உரையாடுகின்றார். குறைவான, குறைந்த நேரமே தாக்குப்பிடித்த அவரது ஆழமற்ற நம்பிக்கையால் கடலில் மூழ்குகின்றார். இயேசுவை நோக்கிச் செல்லவேண்டும் என எண்ணிய அவரது விருப்பம் அவர் கடல்மீது நடந்திட காரணமாய் அமைந்தது. ‘இயேசுதான் அவர்என மெய்பிக்கத் தானும் கடல்மீது நடந்திடும் புதுமையை அனுபவிக்க விரும்பிய பேதுரு, திடீரென ஏற்பட்ட அச்சத்தினால் இயேசுவின்மீது தான் பதித்த கண்கள் விலகியதால் நீரில் மூழ்குகின்றார். புதுமையை மட்டும் கொண்டு நம்பிக்கையை உறுதிப்படுத்த விரும்பிய பேதுருவால் அலைகளை எதிர்கொள்ள இயலவில்லை.

புதுமைகள் மட்டுமே நம்பிக்கையின் அடித்தளமாய் அமைவதில்லை. புதுமைகள் மட்டுமே நம்பிக்கையை உருவாக்குவதில்லை. புதுமைகளின் அடித்தளத்தில் அமைந்திடும் நம்பிக்கையினால் மட்டுமே ஊன்றி நிலைத்து வாழ்ந்திட முடியாது. அவை அடையாளங்கள் மட்டுமே! இயேசுவின் மீதும் அவரது வார்த்தைகள் மீதும் அவரது உடனிருப்பின் மீதும் நம்பிக்கை கொண்டு செயல்படுவதும்தான் உண்மையான நம்பிக்கையின் அடித்தளம்.

நம்பிக்கை தளரும்போது குரல் எழுப்புவோம்

பேதுருவின் நம்பிக்கை இயேசுவை விட்டு விலகி கடல் அலைகள் மீதும், ‘நான் நடக்கின்றேனா?’ என அவரது கண்கள்மீதும் திரும்புகின்றபொழுது மூழ்குகின்றார். ‘ஆண்டவரே காப்பாற்றும்என இயேசுவை நோக்கிக் குரலெழுப்பும்பொழுது, இயேசுவின் கரங்கள் அவரை நோக்கி நீண்டு பேதுருவை மீட்கிறது. நமது வேதனையின் கூக்குரலுக்கு எப்போதும் இறைவன் செவிமடுக்கின்றார். அவரது குரலும் கரங்களும் நம்மைப் பலப்படுத்துகின்றன.

திருத்தந்தை புனித 23-ஆம் யோவான் இவ்வாறு குறிப்பிடுகின்றார்: “உங்களது அச்சங்களையும் பயங்களையும் அல்ல; உங்களது நம்பிக்கையையும் கனவுகளையும் கலந்தாலோசியுங்கள்.”

பதற்றமான, கலக்கமான சூழ்நிலையில் நமது இதயத்தின் எண்ணங்களையும் அதிலுள்ள பயத்தையும் கண்முன் கொண்டு அவரை ஆலோசிப்பதற்குப் பதிலாக, நமது நம்பிக்கையையும், கடந்தகால நிகழ்வுகளில் அவற்றை எதிர்கொண்ட இறையனுபவத்தையும் மெல்லிய தென்றலிலும் உயர்த்திப் பிடித்து நிற்கின்ற இறைவனின் பிரசன்னத்தை உணர்வோம்.

news
ஞாயிறு மறையுரை
ஆகஸ்டு 02, 2026 ஆண்டின் பொதுக்காலம் 18-ஆம் ஞாயிறு - எசா 55:1-3; உரோ 8:35,37-39; மத் 14:13-21 (பசிபோக்கும் பேரன்பு... பரிவின் பகிர்வு!)

வாழ்க்கை என்பது வெறுமனே நுகர்வது மட்டுமல்ல; பிறரோடு இணைந்து பகிர்வதுதான் அதன் உன்னதத் தத்துவம். மகாத்மா காந்தியடிகள், “இவ்வுலகம் மனிதரின் தேவைக்கான அனைத்தையும் கொண்டுள்ளது; ஆனால், அவரது பேராசைக்கு அல்லஎன்று குறிப்பிட்ட கூற்று, இன்றைய ஞாயிறு வழிபாட்டின் மிக முக்கிய மையமாகத் திகழ்கிறது. நாம் வாழும் இந்த உலகம் எல்லாருக்குமானது. பசியும் தாகமும் மனித வாழ்வின் எதார்த்தங்கள் என்றால், அந்தப் பசியைப் போக்குவதும் தாகத்தைத் தணிப்பதுமே ஆன்மிகத்தின் மிக முக்கியக் கடமையாகும். இறைவனின் அன்பு என்பது வெறும் வார்த்தைகளில் வெளிப்படுவது அல்ல; அது பசித்த வயிறுகளுக்கு உணவாகவும், தாகமுற்ற நெஞ்சங்களுக்கு நீராகவும் மாறும்போதே முழுமை பெறுகிறது.

ஆண்டின் பொதுக்காலம் 18-ஆம் ஞாயிறை இன்று சிறப்பிக்கின்றோம். மனிதரின் அடிப்படைத் தேவைகளை அறிந்து, அதைத் தம் எல்லையற்ற இரக்கத்தால் நிறைவு செய்யும் கடவுளை இன்றைய வழிபாடு நமக்கு மையப்படுத்திக் காட்டுகிறது. இன்றைய இறைவார்த்தைகள் நம்மிடம் உள்ளவற்றைப் பிறரோடு பகிர்ந்துகொள்ளும் உன்னத மனநிலையே உண்மையான ஆன்மிகம் என்பதையும், அத்தகைய பகிர்வில் இறைவனின் மாறாத பராமரிப்பும் பேரன்பும் எங்ஙனம் வெளிப்படுகிறது என்பதையும் மிக அழகாக விளக்குகிறது.

வறுமையும் பசியும் மனிதரை வாட்டும்போது, கடவுள் தூரமாய் நின்று வேடிக்கை பார்ப்பவர் அல்லர்; மாறாக, அவர் மனிதரின் துன்பங்களில் பங்குகொண்டு, அவர்களின் பசியைப் போக்கும் பரிவுள்ள தந்தை. பசியற்ற ஓர் உலகைப் படைக்க இறைவன் நம்மைத் தூண்டும் இந்த நாளில், அவரது மாறாத கொடையையும், நம்மிடம் அவர் எதிர்பார்க்கும் தாராள மனத்தையும் தியானிக்க நாம் அழைக்கப்படுகிறோம்.

இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எசாயா வழியாக ஆண்டவர் தாகமாய் இருப்போரையும், கையில் பணமில்லாத ஏழையரையும் ஒரு மாபெரும் விருந்திற்கு அன்போடு அழைக்கிறார். திருவிவிலியப் பின்னணியில்விருந்துஎன்பது வெறுமனே உண்பதைக் குறிப்பதல்ல; மாறாக, அது இறைவனின் எல்லையற்ற பராமரிப்பையும் இரக்கத்தையும், மனிதகுலத்தோடு அவர் ஏற்படுத்திக்கொள்ளும் உடன்படிக்கையையும் குறிக்கும் குறியீடாகும். இந்த விருந்தில் பங்குகொள்ளப் பணமோ, தகுதியோ தேவையில்லை; மாறாக, கடவுள்மேல் கொண்டிருக்கக்கூடிய தாகமும், ஆன்மிக வறுமையுமே தகுதியாகக் கருதப்படுகிறது. “எனக்குச் செவிகொடுங்கள், என்னிடம் வாருங்கள்என அழைக்கும் கடவுள், அழியக்கூடிய உலகப் பொருள்களுக்காக உழைப்பதைக் காட்டிலும், நிலை வாழ்வு தரும் இறைவார்த்தைக்காகத் தாகம்கொள்ள நம்மை அழைக்கிறார்.

இத்தகைய இறைவனின் பேரன்பை எவராலும் நம்மிடமிருந்து பிரித்துவிட முடியாது என்பதை இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தின் வழியாக மிக ஆணித்தரமாகப் பறைசாற்றுகிறார். நாம் இவ்வுலகில் வாழும்போது ஏழ்மை, நோய், சமூக ஏற்றத்தாழ்வுகள், வன்முறைகள் போன்ற பலவித சோதனைகளையும் வேதனைகளையும் சந்திக்க நேரிடலாம். இவற்றிற்குப் பின்னால் நம்மை வீழ்த்த நினைக்கும் தீயசக்திகள் இயங்கினாலும், இயேசுவின் சிலுவைத் துன்பங்கள் வழியாக வெளிப்பட்ட கடவுளின் அன்பு நமக்குள்ளே இருக்கும்போது நாம் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. சாவே நம்மைச் சரிய வைத்தாலும், கிறிஸ்து இயேசுவின் வழியாக நாம் வெற்றி வாகை சூடுவோம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை பவுல் நமக்குத் தருகிறார். எனவே, துன்பங்களைக் கண்டு ஓடுவதல்ல ஆன்மிகம்; கிறிஸ்துவின் அன்பை உள்ளத்தில் தேக்கி வைத்து, எந்த ஒரு சவாலையும் வென்றெடுப்பதே உண்மையான நம்பிக்கை என்பதை பவுலின் வரிகள் உணர்த்துகின்றன.

இந்த நம்பிக்கையின் உச்சக்கட்ட வெளிப்பாடாகவும், இறைவனின் பராமரிப்பின் அடையாளமாகவும் நற்செய்தியில் இயேசு ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவளிக்கும் வல்ல செயல் விவரிக்கப்படுகிறது. இயேசுவின் பணி வாழ்வில் செய்த ஏராளமான வல்ல செயல்களில், நான்கு நற்செய்தி நூல்களிலும் ஒருமித்த கருத்தோடு பதிவு செய்யப்பட்டுள்ள ஒரே ஒரு வல்ல செயல் இதுமட்டுமே என்பது இதன் ஆழமான முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. ஆண்களின் எண்ணிக்கை ஐயாயிரம், ஐந்து அப்பங்கள், இரண்டு மீன்கள், மீதமிருந்த பன்னிரண்டு கூடைகள் என எவ்வித மாற்றமுமின்றிச் சீடரின் மனத்தில் ஆழமாகப் பதிந்திருந்த இந்த நிகழ்வு, யோவான் நற்செய்தியில் ஒரு புதிய பார்வையைத் தருகிறது.

பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்த சூழலில், இயேசு மலைமேல் ஏறி அமர்ந்து இந்த வல்ல செயலைச் செய்தது, பழைய ஏற்பாட்டில் விடுதலைப் பயண நிகழ்வில் அங்குப் பசியாயிருந்து பயணம் செய்த இஸ்ரயேல் மக்களுக்கு யாவே இறைவன் வானத்திலிருந்து மன்னாவைப் பொழியச் செய்த விருந்தை நமக்கு நினைவுப்படுத்துகிறது. இங்கு இயேசு தம்மைப் பின்தொடர்ந்து வந்த மக்களுக்கு, ஒரு புதிய மோசேயாக, உடலுணவு மட்டுமல்லாமல், இறைவார்த்தையாகிய உணவையும், ஆன்மாவை ஊட்டும் தெய்வீக உணவையும் வழங்கும் இறைமகனாகத் தம்மை வெளிப்படுத்துகிறார்.

அப்பத்தைப் பலுகச் செய்தாரா அல்லது பகிரச் செய்தாரா? என்ற தற்காலத் திருவிவிலிய ஆய்வாளரின் கேள்வி, நம் சிந்தனையை இன்னும் அர்த்தமுள்ளதாக்குகிறது. ஒன்றுமில்லாமையிலிருந்து உலகைப் படைத்த இறைமகனுக்கு அப்பங்களைப் பலுகச் செய்வது ஒன்றும் கடினமான காரியமல்ல; எனினும், தம் போதனையால் மக்களின் சுயநல மனங்களை மாற்றி, அவர்கள் தமக்கெனப் பதுக்கி வைத்திருந்த உணவுகளைப் பிறரோடு பகிரச் செய்ததே இயேசு செய்த மாபெரும் வல்ல செயலாகும். அந்திரேயா சுட்டிக்காட்டிய ஒரு சிறுவனின் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமே இந்த மாபெரும் விருந்திற்குத் தொடக்கப் புள்ளியாக அமைகிறது. தன்னிடம் உள்ளதை மறைக்காமல், கள்ளமில்லா மனத்தோடு அந்தச் சிறுவன் கொடுத்த சிறிய கொடையே, பல்லாயிரக்கணக்கான மக்களின் பசியைப் போக்கி, பன்னிரண்டு கூடைகள் மீதமாகும் அளவிற்குப் பெருகியது. இயேசு கடவுளைப் போற்றி, உணவைப் பிட்டுப் பகிர்ந்தளித்தபோது, அங்கே மனிதநேயமும், இறைவனின் எல்லையற்ற அருளும் இணைந்து வரலாற்று வல்ல செயலாக மாறியது.

இன்றைய எதார்த்த சூழலில் உலகை நாம் உற்றுநோக்கும்போது, பசியும் பட்டினியும் இன்னும் ஒழிந்தபாடில்லை என்பது வேதனையான உண்மை. உலகில் பற்றாக்குறை இருப்பதற்குக் காரணம், இறைவனின் படைப்பில் குறைபாடு இருப்பதல்ல; மாறாக, மனிதரின் பகிர்ந்துகொள்ளும் குணத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடே ஆகும். உணவைப் பணமாக மாற்றும் பேராசையும், பதுக்கல் கலாச்சாரமும் பெருகிவிட்ட இந்தச் சமூகத்தில், ஒருபுறம் உணவு வீணாக்கப்படுவதும், மறுபுறம் வறியவர் உணவின்றித் தவிப்பதும் தொடர்கதையாக இருக்கிறது. இயேசுவின் இந்த வல்ல செயல், பதுக்கி வைக்கும் சுயநலப்போக்கை விடுத்து, மனிதநேயமும் பகிர்வும் கொண்ட சமூகமாக நாம் மாறவேண்டும் என்ற சவாலை இன்றைய உலகிற்கு முன்வைக்கிறது.

இயேசுவின் இந்த உன்னத செயல் வழியாக நம் வாழ்வை மெருகூட்டக்கூடிய மூன்று முக்கியமான பாடங்கள்:

முதலாவதாக, உணவுப் பற்றாக்குறைக்குக் காரணம் பகிராக்குறையே என்பதை உணர்ந்து, நம்மிடம் உள்ளவற்றைப் பிறரோடு பகிர்ந்துகொள்ளும் தாராள உள்ளத்தைப் பெறவேண்டும். அன்னை தெரேசா அவர்கள், “உன்னால் நூறு பேருக்கு உணவளிக்க முடியாவிட்டாலும், ஒரே ஒருவருக்கு மட்டுமாவது உணவளிஎன்று கூறிய உன்னத வரிகளை நாம் இங்கு நினைவுகூர வேண்டும். நம்மிடம் இருக்கும் குறைவான பொருள்களையும் மனிதநேயத்தையும் கொண்டு பிறருக்கு உதவ முன்வரவேண்டுமே தவிர, பொருளாதார இயலாமையை ஒரு சாக்காகக் கூறக் கூடாது.

இரண்டாவதாக, இறையாட்சியின் விழுமியமான பசிப்பிணிப் போக்கும் பணியில் நாம் பொறுப்பேற்க வேண்டும். இயேசுவின் பரிவன்பைக்கொண்டு, ஏழையரைக் கடவுள் காப்பார் என்று கடந்துபோகாமல், நாமே இறைவனின் கரங்களாக மாறி உதவ வேண்டும். ஒருவர் பசியுற்றிருக்கக் கண்டும் காணாமல் இருப்பது நமது பொறுப்பற்ற நிலையாகும். பசியும் பட்டினியுமற்ற உலகை உருவாக்க, பிறரின் தேவையை உணர்ந்து உதவ முன்வருவதே இறைவன் விரும்பும் உண்மையான ஆன்மிகம்.

மூன்றாவதாக, உணவை வீணாக்காமல் பாதுகாக்கும் பொறுப்புணர்வை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். வல்ல செயலின் இறுதியில்ஒன்றும் வீணாகாதபடி எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்என்று இயேசு கூறியது, இன்றைய நுகர்வுக் கலாச்சாரத்திற்கு மிக முக்கியமான பாடம். திருத்தந்தை பிரான்சிஸ் கூறியதுபோல, உணவை வீணாக்குவது என்பது வறியோரின் தட்டிலிருந்து உணவைத் திருடுவதற்குச் சமமான பெரும் குற்றமாகும். எனவே, நிறைவான வாழ்வு என்பது பதுக்குவதில் இல்லை; மாறாக, பாதுகாப்பதிலும் பகிர்வதிலும்தான் உள்ளது என்பதை நாம் மறக்கக்கூடாது.

நிறைவாக, இயேசு காட்டிய இந்த உன்னதப் பகிர்வுப் பாதை நம்முடைய வாழ்க்கைப் பாதையாக மாறவேண்டும். பரிவுள்ள மனம் இருந்தால், பற்றாக்குறையை நீக்குவது மட்டுமல்லாமல், அளவு கடந்த நிறைவையும் உருவாக்க இயலும் என்பதைத்தான், மீதமுள்ள உணவால் நிரப்பப்பட்ட பன்னிரண்டு கூடைகள் நமக்கு உணர்த்துகின்றன. சுயநலம், சுரண்டல், பதுக்கல் போன்ற தீய பண்புகள் ஒழிக்கப்படுமேயானால், எல்லாருடைய தேவையும் போகத் தாராளமாக உணவு மிஞ்சும். எனவே, நாம் நம் சுயநலக்கூடுகளை உடைத்து, பரிவோடு பகிர்ந்து வாழ்வோம். இல்லாமை என்பது இந்நானிலத்தில் இல்லாமையாகட்டும்.

news
ஞாயிறு மறையுரை
ஜூலை 26, 2026 ஆண்டின் பொதுக்காலம் 17-ஆம் ஞாயிறு - 1அர 3:5,7-12; உரோ 8:28-30; மத் 13:44-52 (விலையேறப்பெற்ற புதையலும் விண்ணக ஞானமும்)

நாம் வாழும் தற்கால உலகம் எதற்கோ ஓடிக்கொண்டிருக்கிறது. இலாபம், இழப்பு, வர்த்தகம், சந்தை மதிப்பு என்ற எல்லைகளுக்குள்ளேயே மனித உறவுகளும், வாழ்வின் மாண்புகளும் சுருக்கப்பட்டுவிட்டன. எல்லாவற்றிற்கும் விலை குறிக்கப்படும் இந்த நுகர்வுப் பண்பாட்டுச் சூழலில், ‘விலை மதிப்பு (Price) என்பதற்கும், ‘உள்ளார்ந்த மதிப்பு(Value) என்பதற்கும் உள்ள ஆழமான வேறுபாட்டைப் புரிந்துகொள்ள நாம் தவறிவிடுகிறோம். மனிதரைக்கூட அவர்களின் தகுதி, சாதி, பின்புலத்தை வைத்து மதிப்பிடும் ஒரு குறுகிய மனப்பான்மை நம்மைச் சூழ்ந்திருக்கிறது. இத்தகைய உலகப் போக்கிலிருந்து விடுபட்டு, நம் கண்முன்னே காணும் விலைமதிப்பில்லா இறையாட்சி எனும் புதையலையும், வாழ்வின் உன்னத முத்துகளையும் அடையாளம் காணும் ஆன்மிகப் பக்குவத்தை அடைவதே இன்றைய நாளின் முதன்மையான தேவை.

ஆண்டின் பொதுக்காலம் 17-ஆம் ஞாயிறு திருவழிபாடு, நம்மைத் தற்காலிக இன்பங்களிலிருந்து விடுவித்து, நிலையான இறையாட்சி எனும் புதையலை நோக்கி நம் இதயங்களைத் திருப்பிட அழைப்புவிடுக்கிறது.

நாம் பல வேளைகளில் திருமுழுக்கு வழி கிறித்தவ வாழ்வு வாழ்கின்றோமே தவிர, இறையாட்சியின் உண்மையான நெறிகளின்படி வாழ்வதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. வழிபாடுகளில் பங்கேற்பதும், திருநூல்களைக் கற்பதும், புனிதரைப் போற்றுவதும், திரு அவைச் சட்டங்களைக் கடைப்பிடிப்பதும் மட்டுமே முழுமையான கிறித்தவ வாழ்வாகிவிடாது; மாறாக, இறையாட்சியின் அருள்வாழ்வு என்பது தியாகங்களை ஏற்பதும், இலாபங்களைத் தவிர்ப்பதும், அநீதிகளுக்கு நடுவில் இழப்புகளைப் பொருள்படுத்தாமல் நீதிக்காகக் குரல் கொடுப்பதுமே ஆகும். இந்த உன்னதமான இறையாட்சி நெறியை நம் வாழ்வில் கண்டுகொள்ளவும், அதை முழுமையாகத் தழுவிக்கொள்ளவும் தேவையான தெய்வீக ஞானத்தைத் தேடுவதே இன்றைய நாளின் ஒட்டுமொத்த வழிபாட்டு அழைப்பாகும்.

இந்த உன்னத அழைப்பை ஏற்று வாழ்ந்த ஒரு வரலாற்று மாந்தராக முதல் வாசகத்தில் சாலமோன் அரசரை நாம் காண்கிறோம். இஸ்ரயேல் அரச வரலாற்றில் மிக முக்கியமான, ஒப்பற்ற அரசராகக் கருதப்படும் சாலமோன், மெய்யறிவின் அடையாளமாக விளங்குகிறார். கிபயோனில் உள்ள ஒரு தொழுகை மேட்டில் அவர் பலி ஒப்புக்கொடுக்க வந்தபோது, ஒருநாள் இரவு கடவுள் அவருக்குக் கனவில் தோன்றுகிறார். விவிலியப் பின்னணியில் கனவு என்பது இறைவனின் முக்கியமான வெளிப்பாடாகும். அப்போது, கடவுள் சாலமோனிடம்உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்கிறார். ஓர் இளம் அரசராக, தன் தந்தை தாவீதின் அடியொற்றிப் பயணிக்கும் சாலமோன், தன் தந்தைக்கும் கடவுளுக்கும் இடையிலிருந்த தூய உறவை நினைவூட்டுகிறார். தன்னை மிகச் சிறியவன் என்று தாழ்த்தி, இத்தனை பெருந்திரளான மக்களுக்குத் தீர்ப்பு வழங்க தனக்கு மெய்யறிவு தேவை என்பதை உணர்கிறார். நீண்ட ஆயுளையோ, செல்வத்தையோ, எதிரிகளின் அழிவையோ கேட்காமல், ‘நன்மை-தீமையைப் பகுத்தறியும் ஞானம் நிறைந்த இதயத்தைத் தந்தருளும்என்று அவர் மன்றாடுகிறார். இதனால் கடவுள் சாலமோன்மீது மிகுந்த பேரன்பு கொண்டவராக, அவர் வேண்டியபடியே அவருக்கு ஞானத்தை அருளி, சாலமோனைப்போலச் சிறந்த ஞானி எவரும் இருந்ததில்லை என்று கூறி புளகாங்கிதம் அடைகிறார்.

சாலமோன் தேடிய ஞானமும் தெய்வீக அழைப்பும் தற்செயலானவை அல்ல; மாறாக, அவை காலங்களுக்கு முன்பே இறைவனால் திட்டமிடப்பட்டவை என்பதை பவுலடியார் ஆழமாக விளக்குகிறார். கடவுளிடம் அன்புகூர்பவர்களின் நன்மைக்காகவே தூய ஆவியார் அனைத்துச் சூழல்களிலும் ஒத்துழைக்கிறார். நாம் எவருக்கும் இரண்டாந்தரமானவர் இல்லை; காலங்களுக்கு முன்பே முன் குறிக்கப்பட்டு, அழைக்கப்பட்டு, ஏற்புடையவராக்கப்பட்டவர் என்ற பேருண்மையை பவுல் பறைசாற்றுகிறார். “மனிதரின் உண்மையான மேன்மை அவரது ஆன்மிகத் தேடலில் உள்ளதுஎன்ற சிந்தனைக்கேற்ப, கிறிஸ்துவை முதன்மையாகக் கொண்ட சகோதரத்துவச் சமூகமாக மலரவும், சவால்களை எதிர்கொள்ளும் துணிவைப் பெறவும் இந்த ஆன்மிகப் புரிதல் நமக்கு எல்லையற்ற நம்பிக்கையைத் தருகிறது.

இந்தத் துணிவும் நம்பிக்கையும் எத்தகைய தியாகத்திற்கும் நம்மை இட்டுச்செல்லும் என்பதை நற்செய்தியில் இயேசு மூன்று அழகிய உவமைகள் வழியாகத் தெளிவுபடுத்துகிறார். மத்தேயு நற்செய்தியின் உவமைகளின் அதிகாரமாகிய 13-ஆம் அதிகாரத்தின் இறுதியில் புதையல், முத்து மற்றும் வலை ஆகிய உவமைகளை இயேசு கற்பிக்கிறார். இதில் புதையல் மற்றும் முத்து உவமைகள், இறையாட்சியைக் கண்டுபிடிப்பதால் ஏற்படும் பேரின்பத்தைப் பேசுவதால்இரட்டை உவமைகள்என அழைக்கப்படுகின்றன.

பழங்காலத்தில் வங்கிகள் இல்லாத சூழலில், போர்கள் மற்றும் புரட்சிக் காலங்களில் மக்கள் தங்கள் விலைமதிப்பற்ற பொருள்களை நிலத்தில் புதைத்து வைப்பது வழக்கம். அவ்வாறு புதைக்கப்பட்ட, தற்செயலாகக் கண்டெடுக்கப்படும் புதையலை ஒருவர் கண்டதும், பெரும் மகிழ்ச்சியோடு தனக்குரிய யாவற்றையும் விற்று அந்நிலத்தை வாங்கிக்கொள்கிறார். மறுபுறம், முத்தைத் தேடி அலையும் வணிகர் ஒருவர், விலைமதிப்பற்ற நல் முத்தைக் கண்டதும், தன் உடைமைகள் அனைத்தையும் விற்று அதைத் தனதாக்கிக்கொள்கிறார். புதையல் தற்செயலாகக் கிடைத்தது, முத்து தேடிக் கிடைத்தது. ஆனால், இரண்டிலும் பொதுவான கூறு என்னவென்றால், அவற்றைக் கண்டடைந்ததால் ஏற்பட்ட அளவிடற்கரிய மகிழ்ச்சியும், அதற்காக அவர்கள் செய்த முழுமையான தியாகமுமே ஆகும். இறையாட்சி என்னும் ஒப்புயர்வற்ற செல்வத்தைப் பெறுவதற்கு, நம்மிடம் உள்ள அனைத்தையும் இழக்கத் துணியும் ஒருவர், விண்ணகத்தில் என்றும் அழியாத செல்வந்தராக மாறுகிறார்.

இயேசு கூறும் வலை உவமை உலக முடிவின் இறுதித் தீர்ப்பைப் பற்றிய எச்சரிக்கையை நமக்குத் தந்தாலும், அது இறையாட்சி ஞானத்தின் ஆழமான மேன்மையை நமக்குக் கற்றுத்தருகிறது. கடலில் வீசப்படும் வலை நல்ல, கெட்ட மீன்களை வாரி வருவதுபோல, உலக முடிவில் இறைத்தூதர் நேர்மையாளர்களிடமிருந்து தீயோரைப் பிரிப்பார் என்று இயேசு விளக்குகிறார். ஆனால், இறுதித் தீர்ப்பு நாள் வரும்வரை யாரையும் தீயோராகத் தீர்ப்பிடவோ அல்லது எவரையும் வெறுத்து ஒதுக்கவோ மனிதராகிய நமக்கு எவ்வித உரிமையும் இல்லை என்பதைத் தெளிந்துணர்வதே உண்மையான மெய்யறிவு ஆகும்.

இந்தத் திருவிவிலிய விழுமியங்களை இன்றைய எதார்த்தச் சூழலோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது, உலகப் புகழையும் அழியும் செல்வத்தையும் மட்டுமே தேடி அலையும் நாம், ஆன்மிகப் பார்வை குறைபாட்டால் நம் கண்முன்னே குடும்பங்களில் மறைந்து வாழும் தாத்தா-பாட்டியராகிய உன்னதப் புதையல்களையும் விலைமதிப்பற்ற முத்துகளையும் அடையாளம் காணத் தவறுகிறோம். அவர்களைப்பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறியும் (Use and throw) கலாச்சாரத்தில் ஊறிப்போய்விட்டோம். உண்மையில், இன்று நம் குடும்பங்களில் நாம் தொலைத்துவிட்ட, போற்றிப் பாதுகாக்கத் தவறிய உயிருள்ள அனுபவக் கருவூலங்கள் நம்முடைய தாத்தா-பாட்டியரே. இப்பேருண்மையைத் திரு அவை ஆழமாக உணர்ந்ததால்தான் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதம் 26-ஆம் தேதி இயேசுவின் தாத்தா-பாட்டியான புனிதர்கள் அன்னா மற்றும் சுவக்கீன் ஆகியோரின் நினைவு நாளையொட்டி வரும் ஞாயிறைதாத்தா-பாட்டியர்தினமாகக் கொண்டாடுகிறது. ஆகவே, இந்நாளில் நம் குடும்பத்தின் உன்னதப் புதையல்களான முதியோரைப் போற்றிப் பாதுகாத்து, நம் நெஞ்சார்ந்த அன்பையும் நன்றியையும் அவர்களுக்கு என்றும் உரித்தாக்குவோம்.

இறுதியாக, இன்றைய வழிபாடு நமக்கு உணர்த்தும் முக்கியப் பாடங்கள்: முதலாவதாக, இறையாட்சி விழுமியங்களுக்காக அனைத்தையும் இழக்கும் துணிவு நமக்குத் தேவைப்படுகிறது. புதையலையும் முத்தையும் கண்டோர் தங்கள் உடைமைகள் அனைத்தையும் விற்கத் துணிந்ததுபோல, நாமும் இறையாட்சியின் நீதிக்காகவும் உண்மைக்காகவும் நம்முடைய தற்காலிக இலாபங்களையும், சுயநல வசதிகளையும் இழக்கத் தயாராவோம்.

இரண்டாவதாக, பிறரைத் தீர்ப்பிடாமல் மன்னிக்கும் கனிவு நிறைந்த நெஞ்சத்தை நாம் வளர்க்க வேண்டும். வலை உவமை உணர்த்துவதுபோல, இறுதித் தீர்ப்பு இறைவனுக்கு மட்டுமே உரியது. அதை உணர்ந்து, பிறரின் பலவீனங்களை ஏளனம் செய்யாமல், அவர்களை அன்போடு ஏற்று, தவறும் வேளைகளில் தாராளமாக மன்னிக்கும் நற்பண்பை நம் வாழ்வில் சாட்சியமாக்குவோம்.

மூன்றாவதாக, தற்காலிக இன்பங்களைத் தாண்டிய நிலையான தேடல் நம்முடையதாக மாற வேண்டும். சாலமோன் அரசர் உலகச் செல்வங்களைக் கேளாமல் இறைஞானத்தைக் கேட்டுப் பெற்றதுபோல, நாமும் எளிதில் அழியும் உலகக் காரியங்களையும் நுகர்வுப் பண்பாட்டையும் மையமாகக் கொள்ளாமல், என்றுமே அழியாத விண்ணகப் புதையலாகிய இறைவனையே நமது முதன்மை இலக்காக்கிக் கொள்வோம்.

நிறைவாக, மறைந்துபோகும் உலகப் புகழ், செல்வங்களைத் தாண்டி, நன்மை தீமை பகுத்தறியும் இறையாட்சி எனும் ஞானத்தையும், மனிதரை இறைச்சாயலாகக் காணும் தூய கண்களையும் தர இறைவனிடம் உருக்கமாக மன்றாடுவோம். புனிதர்களான அன்னா-சுவக்கீன் திருநாளான இன்று, “உன்னை ஒருபோதும் மறக்கமாட்டேன் (எசா 49:15) என்ற இறைவாக்கிற்கு ஏற்ப, நம் சொந்தக் குடும்பங்களில் வாழும் தாத்தா-பாட்டியரை ஒப்புயர்வற்ற விண்ணகப் புதையலாகவும் விலைமதிப்பற்ற நல்முத்தாகவும் கண்டுகொள்வோம். வயதில் முதிர்ந்த நம் உன்னத உறவுகளை அன்புசெய்து போற்றிப் பாதுகாக்கத் தேவையான தியாக உள்ளத்தையும் துணிவையும் இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் எப்போதும் நிறைவாகத் தந்தருள்வாராக!

news
ஞாயிறு மறையுரை
ஜூலை 19, 2026 ஆண்டின் பொதுக்காலம் 16-ஆம் ஞாயிறு - சாஞா 12:13,16-19; உரோ 8:26-27; மத் 13:24-43 (கதிரும் களையும் நிறைந்த உலகும் இறையாட்சியின் பொறுமையும்)

நமது அன்றாட வாழ்க்கைச் சூழலில் எப்போதும் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கின்றன. நேர்மறை எண்ணம் கொண்ட நல்ல மனிதருக்கு மத்தியில், சுயநலம் கொண்ட மனிதரையும் நாம் பார்க்கிறோம். ஒருபுறம், அறநெறிகளும் நற்பண்புகளும் போற்றப்படும் அதே நேரத்தில், மறுபுறம் வதந்திகளும் ஏமாற்று வேலைகளும் மலிந்தே கிடக்கின்றன. எதிலும் உடனடித் தீர்வைக் கோரும் இந்தத் துரித யுகத்தில், தீமைகளை உடனுக்குடன் வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்ற ஆவேசம் நம்மிடம் எழுகிறது. இந்தச் சூழலில், ‘ஏன் நல்ல மனிதர் துன்பப்படவேண்டும்? ஏன் தீயோர் செழிப்பாக இருக்க வேண்டும்?’ என்ற கேள்விகளும் மனித வரலாற்றின் தொடர்கதையாகின்றன. ஆனால், தீமையற்ற உலகை உடனடியாக உருவாக்க நினைக்கும் மனிதரின் அவசர மனநிலை, பல நேரங்களில் நல்லவற்றிற்கே தீங்காக முடிந்துவிடுகிறது என்பதே உலக எதார்த்தம்.

ஆண்டின் பொதுக்காலம் 16-ஆம் ஞாயிறை இன்று நாம் சிறப்பிக்கின்றோம். நம் வாழ்வில் நன்மையும் தீமையும், வளர்ச்சியும் சவால்களும், கதிர்களும் களைகளும் பின்னிப் பிணைந்துள்ள நிலையில், அவற்றைப் பொறுமையோடு அணுகும் ஆன்மிகப் பக்குவத்தை நாம் வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று இன்றைய திருவிவிலிய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன.

ஞானநூலிலிருந்து எடுக்கப்பட்ட முதல் வாசகம், கடவுளின் பேராற்றலையும், அவரது வல்லமையையும் குறித்த ஒரு புதிய ஆன்மிகப் பாடத்தை நமக்குத் தருகிறது. கடவுள் எல்லாம் வல்லவர், அவரை எதிர்த்து நிற்க எவராலும் முடியாது. ஆனாலும், அவரது ஆற்றல் தீமையாளரை உடனடியாக அழிப்பதில் வெளிப்படுவதில்லை; மாறாக, பொறுமையிலும் மன்னிப்பிலும்தான் அது வெளிப்படுகிறது. “உமது ஆற்றலே நீதியின் ஊற்று. நீர் ஆற்றல் மிக்கவராய் இருப்பதால் கனிவோடு தீர்ப்பு வழங்குகிறீர்; மிகுந்த பொறுமையோடு எங்களை ஆள்கிறீர் (சாஞா 12:16,18) என்று வாசிக்கும்போது, இறைவனின் நீதி எத்தகையது என்பதை நாம் ஆழமாக உணர்கிறோம்.

நாம் பல நேரங்களில் தீமைகளைக் கண்டதும், உடனடியாக அவற்றை வேரோடு பிடுங்கி எறியவேண்டும் என்று துடிக்கிறோம். ஆனால், நம்மைப் படைத்தவர் பொறுமையின் சிகரமாக விளங்கி, தண்டனை வழங்குவதைவிட, மனிதர் மனம் திருந்த வாய்ப்பளிப்பதையே பெரிதும் விரும்புகிறார். கடவுளின் இந்த மென்மையான அணுகுமுறை, நம்மைப் போன்ற மனிதருக்கு ஒரு பெரிய எச்சரிக்கையாகவும், அதேநேரத்தில் ஆறுதலாகவும் இருக்கிறது.

மத்தேயு நற்செய்தியில் இயேசு கூறும்களைகள்உவமை நம் வாழ்வின் இந்த எதார்த்தத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது. ஒருவர் தன் வயலில் நல்ல விதைகளை விதைக்கிறார்; ஆனால், அவருடைய பகைவன் வந்து கோதுமைக்கு இடையே களைகளை விதைத்து விட்டுப் போய்விடுகிறான். கோதுமையும் களைகளும் அறுவடை வரை சேர்ந்தே வளர்கின்றன (மத் 13:28-30). இதை நாம் எப்படிப் புரிந்துகொள்வது?

இயேசுவின் சீடர்களில் சிலர், இறையாட்சிச் சமூகத்தில் நல்ல மனிதரோடு தீயவர் எப்படி ஒன்றாய் இணைந்து வாழமுடியும்? என்று எண்ணினர். அத்தகைய சமூகத்தில் தீயோருக்கு இடமில்லை என்றும், அவர்கள் உடனடியாகப் புறம்பாக்கப்படவேண்டும் என்றும் கருதினர். ஆனால், இயேசுவோ தம் தோழமைச் சமூகத்தில் நல்லோருக்கும் தீயோருக்கும் இடம் உண்டு என்றே கற்பித்தார். ஏனெனில், நம் விண்ணகத் தந்தைநல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்பவர் (மத் 5:45) அல்லவா!

தீயோர் எனப்படுவோர் திருந்த வேண்டியவர்கள்; அவர்களுக்குத் திருந்துவதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து கொடுக்கப்படவேண்டும். மனமாற்றம் என்பதே இயேசுவின் இறையாட்சிப் பணியின் மையப்போதனை ஆகும். எனவே, தீயோராகக் கருதப்படுவோர் இயேசுவின் அன்பிலிருந்து தூக்கி எறியப்பட வேண்டியவர்கள் அல்லர்; மாறாக, அவர்கள் மனம்மாற வாய்ப்பு அளிக்கப்பட வேண்டியவர்கள். ஆகவே, தீயோர் மனமாற்றம் பெறும்வரை அவர்கள் நல்லாரோடு சேர்ந்திருப்பது தவிர்க்க இயலாது. எனவே, ‘நல்லவர்களிடமிருந்துதீயவர்களைபிரித்துவிட வேண்டும் எனக் கோருவது கிறிஸ்துவின் இறையாட்சிப் பார்வை அன்று.

கிறிஸ்துவின் இறையாட்சிப் பார்வை மிக ஆழமான ஒரு பாடத்தை முன்வைக்கிறது. தொடக்கத் திரு அவையில் கிறித்தவச் சமூகம் தங்களைஇறையாட்சியின் மக்களாகவேகருதியது. தங்களிடையே இருக்கும் தீயோரைக் காணும்போது, கடவுள் அவர்களை இறுதி காலத்தில் அப்புறப்படுத்துவார் என நம்பினர். எனினும், காலம் செல்லச் செல்ல அவர்களின் பொறுமை குறைந்துகொண்டே போனது. ‘தீயோரை அப்புறப்படுத்த இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்கவேண்டும்? இறையாட்சியின் பணியாளராகிய நாமே அப்பணியை இப்போதே செய்யக்கூடாதா?’ என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பினர். எனினும், இயேசுவின் போதனை அவர்களுக்குத் தெளிவாய் இருந்தது.

தீயோரை நல்லோரிலிருந்து பிரிப்பதும், தண்டிப்பதும் கடவுளின் வேலை; மனிதரைத் தீர்ப்பிடுவது இறைவனின் உரிமை. நல்லோரிடமிருந்து தீயோரை அப்புறப்படுத்தும் செயலைச் சமூகம் செய்ய முடியாது, செய்யவும் கூடாது என்பது இயேசுவின் போதனை. அது மட்டுமல்ல, ஒருவர் நல்லவரா? தீயவரா? எனத் தீர்மானிப்பதும், எச்செயல் தீயது? எது நல்லது? என முடிவெடுப்பதும் எளிதான செயல் அன்று; அவ்வாறு தீர்மானிப்பதற்கு நம்மிடம் சரியான அளவுகோல்கள் இல்லை; அவ்வாறு தீர்மானிப்பதற்குத் தகுதி உடையவர் இறைவன் ஒருவரே. கடவுள் தமது திட்டத்தின்படி அப்பணியைத் தாம் விரும்பும் காலத்தில் செய்வார்.

மனித உறவுகளில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது, ஒருவரை முற்றிலுமாக ஒதுக்கிவிடுவது அல்லது உறவை முறித்துக் கொள்வது எளிது. ஆனால், அந்த உறவில் இருக்கும் நல்லவற்றை, அதாவது நற்கோதுமைகளை உணர்ந்து, பொறுமையோடு அதனை வளர்ப்பதே உண்மையான இறையாட்சி. ‘நானும் கடவுளும்என்று தனித்து வாழும் முறை இறையாட்சி அல்ல; சமூகத்தோடு இணைந்து அன்பு, அமைதி, மகிழ்ச்சி, பரிவு, கனிவு, நம்பிக்கை, நன்னயம் போன்ற பண்புகளை உள்ளடக்கிய முறைதான் இறையாட்சி. சிறிய விதைகளுள் ஒன்றான கடுகு விதை வளர்ந்து பெரிய மரமாகிப் பறவைகளுக்கும் மனிதருக்கும் நிழலையும் கனியையும் ஈந்து வாழவைப்பது போன்ற வாழ்வு முறை இது. புளிப்பு மாவுபோல மறைந்திருந்து, ஒட்டுமொத்த வாழ்வுக்கும் பொருளும் சுவையும் தந்து, பிறரை வாழவைக்கும் உன்னத வாழ்க்கை முறையே இறையாட்சி.

இன்றைய திருவழிபாடு நமக்கு மூன்று மிக முக்கியமான வாழ்வியல் பாடங்களை உணர்த்துகின்றது.

முதலாவதாக, தீமைக்கு எதிராக நாம் கோபப்படுவது அல்லது வன்முறையைக் கையாள்வது நிரந்தரத் தீர்வாகாது. மாறாக, நன்மையை வளர்ப்பதன் மூலம் மட்டுமே தீமையை முறியடிக்க முடியும். நமது கவனம் முழுவதும் தீமையை அழிப்பதில் அல்ல; நன்மையைப் பெருக்குவதில்தான் இருக்க வேண்டும். நம் வாழ்வில் களைகளைப் பிடுங்குவதைவிட, கதிர்களை ஆரோக்கியமாக வளர்ப்பதுதான் நமது முதன்மைப் பணியாக இருக்கவேண்டும். அப்போது தீமைகள் தானாகவே மறைந்துவிடும்.

இரண்டாவதாக, குற்றம் செய்வோரைத் தண்டிக்கவேண்டும் என்பது நம்முடைய பார்வையாக இருக்கிறது. அதற்காகப் பல வேளைகளில் நாம் முனைப்போடு செயல்படுகிறோம். பிறர் குற்றங்களே நம் கண்களுக்குப் பெரிதாகத் தெரிகின்றன (மத் 7:3). ஆனால், இயேசு குறைகளையும் குற்றங்களையும் புரிந்துகொண்டு, மனிதரை அப்படியே ஏற்றுக்கொள்கிறார்; அவர்களை மன்னிக்கவும் அவர் ஒருபோதும் தயங்கியதில்லை. எனவே, பிறரின் குற்றம் குறைகளை மன்னிக்க நாமும் எப்போதும் தயாராக இருக்கவேண்டும்.

மூன்றாவதாக, கடுகு விதையின் அளவு மிகச் சிறியதாக இருந்தாலும், அந்தச் செடி மரமாகி வானத்துப் பறவைகளுக்கும் பலருக்கும் வாழ்வாதாரத்தை வழங்குகிறது. மிகச் சிறிய புளிப்பு மாவு, மிகப்பெரிய அளவு மாவைப் புளிப்பேற்றுகிறது. அதுபோல, நல்லதிற்கான முதல் முயற்சியையும் சிறிய செயலையும் அளவு கருதியோ, முக்கியத்துவம் இல்லை என்றோ நாம் ஒதுக்கிவிட முடியாது. நாம் செய்யும் சிறிய நற்செயல்கள்கூட காலப்போக்கில் மிகப்பெரிய இறையாட்சியின் விருட்சங்களாக வளரும்.

நிறைவாக, நாம் குறைகள் நிறைந்த சமூகச் சூழலில்தான் வாழ்கிறோம். இறையாட்சி என்பது வன்முறையாலோ, அதிகாரத்தாலோ நிலைநாட்டப்படுவதில்லை. மாறாக, அது அன்பு, பொறுமை, விட்டுக் கொடுத்தல், மன்னிப்பு மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றால் மட்டுமே கட்டியெழுப்பப்படுகிறது. கோதுமைக்கும் களைக்கும் இடையிலான இந்தப் போராட்டம் உலகின் இறுதி நாள்வரை தொடரத்தான் செய்யும். எனவே, நம் உள்ளத்தில் இருக்கும் நற்பண்புகளைப் பாதுகாத்துக்கொள்ளவும், சமுதாயத்தில் இருக்கும் தீமைகளைக் கண்டு சோர்ந்து போகாமல் இருக்கவும் புதிய ஆற்றல் வேண்டி மன்றாடுவோம். தீமைகளின் நடுவே நாம் வாழ நேர்ந்தாலும், நாம் நல்ல கோதுமைகளாகவே நிலைத்திருப்போம்.

news
ஞாயிறு மறையுரை
ஜூலை 12, 2026 ஆண்டின் பொதுக்காலம் 15-ஆம் ஞாயிறு - எசா 55:10-11; உரோ 8:18-23; மத் 13:1-23 (விதைக்கப்படும் வார்த்தையும் விழித்தெழும் இதயங்களும்)

மனித வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் வார்த்தைகள் மிக உன்னதமான கருவிகளாகவும், அதேவேளையில் கூர்மையான ஆயுதங்களாகவும் செயல்பட்டு வந்திருக்கின்றன. ஒரு நல்வார்த்தை வீழ்ந்து கிடக்கும் ஆன்மாவை உயிர்ப்பிக்கும் ஆற்றல் கொண்டது; ஒரு தீய வார்த்தை ஓங்கி வளர்ந்த வாழ்வை ஒரு கணத்தில் சிதைக்கும் வல்லமை பெற்றது. ஆனால், இன்றைய நவீன உலகில் காட்சி ஊடகங்களின் அசுர வளர்ச்சியும், சமூக வலைதளங்களின் பெருக்கமும் வார்த்தைகளின் உழவை முற்றிலும் மாற்றி அமைத்திருக்கின்றன. நொடிக்கு நூறு தகவல்கள் நம் கண்களையும் காதுகளையும் கடந்து செல்லும் இந்தத் தகவல் தொழில்நுட்பப் பெருவெளியில், வார்த்தைகள் தங்களின் ஆழத்தையும் புனிதத்தையும் இழந்து, வெறும் சத்தங்களாக மாறிக்கொண்டிருக்கின்றன.

எங்கும் பரவிக்கிடக்கும் எதிர்மறைச் சிந்தனைகளும், போலியான கவர்ச்சிகளும் மனித உள்ளங்களில் அவநம்பிக்கை என்னும் நச்சுக் காற்றைப் பரப்பி வருகின்றன. இந்த அதீத காட்சி ஊடகத் தாக்கத்தால், ஆழமான சிந்தனைகளுக்கோ அல்லது அமைதியான இறைவார்த்தை தியானத்திற்கோ மனித இதயங்களில் இடமில்லாமல் போகிறது. வார்த்தைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய முக்கியத்துவமும் மரியாதையும் குறைந்துபோன இன்றைய எதார்த்த சூழலில், இறைவனின் வார்த்தை எவ்வாறு நம் வாழ்வில் செயலாற்றப் போகிறது என்ற மாபெரும் வினா நம் முன்னால் எழுகிறது.

இத்தகையதோர் உலகியல் பின்புலத்தில், இறைவனால் விதைக்கப்பட்ட வார்த்தையை ஏற்கும் அளவுக்கு நம் இதயங்கள் ஆன்மிக விழிப்புணர்வு பெறவேண்டும் என்ற பெரும் உண்மையை உணர்த்தி, ஆண்டின் பொதுக்காலம் 15-ஆம் ஞாயிறு கொண்டாட்டம் நம்மை ஆழமான ஆன்மிகச் சிந்தனைக்கு அழைக்கிறது.

இன்றைய இறைவாக்குகள், இறைவார்த்தையின் இயல்பும் அதன் எல்லையற்ற ஆற்றலும் பற்றி மிக அழகாக வெளிப்படுத்துகின்றன. இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட முதல் வாசகத்தில், கடவுளிடமிருந்து புறப்பட்டு வந்து மனித இதயங்களில் விதைக்கப்படும் வார்த்தை வெறும் வெற்று ஒலியோ அல்லது தற்காலிகமான கட்டளையோ அல்ல; மாறாக, அது ஒரு முழுமையான செயல்வடிவம் என்பது தெளிவாக்கப்படுகிறது. எசாயா இறைவாக்கினர் வானத்திலிருந்து இறங்கி வரும் நீரையும் பனியையும் வெறும் வீழ்ச்சியாகப் பார்க்காமல், அவை விண்ணகத்திலிருந்து பூமிக்கு இறங்கி வரும் ஆசிராகக் காண்கிறார். அவ்வாறு இறங்கி வரும் மழையும் பனியும் மீண்டும் வானத்திற்கு வீணாகச் செல்வதில்லை; அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, நிலத்தின் தன்மையையே மாற்றியமைக்கின்றன.

இந்த இயற்கைச் செயல்பாடு மிகவும் அமைதியாகவும், மறைமுகமாகவும் நடந்தாலும், அது பூமியின் வெளியமைப்பையே மாற்றும் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அது விதைப்பவருக்கு விதையையும், உண்பவருக்கு உணவையும் கொடுத்து, வாழ்வின் சுழற்சியை உறுதிசெய்கிறது. இதேபோலத்தான் கடவுளின் வாயிலிருந்து புறப்பட்டு மனித இதயங்களில் விதைக்கப்படும் வார்த்தையும் தன் நோக்கத்தில் ஒருபோதும் தோற்பதில்லை. அது கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றி, எதற்காக அனுப்பப்பட்டதோ அந்தப் பணியில் முழு வெற்றியடைந்துதான் அவரிடம் திரும்பும்.

இதையே கடவுள் எசாயா வழியாகத் தம் மக்களுக்கு நினைவூட்டுகிறார். அவரது வார்த்தை என்பது அவருடைய விருப்பம், சட்டம் மற்றும் உறுதிமொழிகளின் தொகுப்பாகும். அது மனிதரின் மனங்களாகிய நிலங்களைப் பண்படுத்தி, உலகியல் மயக்கத்தில் உறங்கிக் கிடக்கும் மனங்களில் மறைந்து கிடக்கும் நன்மைகளையும் தெய்வீக ஆற்றல்களையும் வெளிக்கொணர்ந்து, மனிதரைப் பண்புள்ளவர்களாய் விழித்தெழச் செய்யவல்லது. இந்த விதைக்கப்பட்ட வார்த்தையின் செயலாற்றலை மனித உள்ளங்களோடு ஒப்பிட்டு, இயேசு நற்செய்தியில் விதைப்பவர் உவமையின் வாயிலாக எத்தகைய இதயங்கள் விழித்தெழுகின்றன, எத்தகைய இதயங்கள் உறங்குகின்றன என்ற இறையியல் விளக்கத்தைத் தருகிறார். மனித இதயங்களை நான்கு வகையான நிலங்களாகப் பிரித்து, வார்த்தையின் தேவையை விவரிக்கிறார்.

வழியோரம் விழுந்த விதைகள், இறைவார்த்தையைக் கேட்டும் அதன் ஆழத்தைப் புரிந்துகொள்ளாமல் ஆன்மிக உறக்கத்தில் இருக்கும் மனிதரைக் குறிக்கின்றன. இத்தகைய சூழலில், சாத்தான் என்னும் தீயோன் மிக எளிதாக வந்து, அவர்கள் உள்ளத்தில் விதைக்கப்பட்ட வார்த்தையைக் கவர்ந்து செல்கிறான். சாத்தானின் இந்த அழிவு வேலை வெளியில் தெரிவதில்லை; மாறாக, விழிப்பற்ற மனித இதயத்தில் அது நடக்கிறது என்பதை மத்தேயு நமக்குச் சுட்டிக்காட்டுகிறார்.

அடுத்ததாக, பாறைப் பகுதியில் விழுந்த விதைகள், இறைவார்த்தையை மிக வியப்போடும் மகிழ்ச்சியோடும் கேட்டு உடனடியாக ஏற்கும் இதயங்களைக் குறிக்கின்றன. ஆனால், இவர்களிடம் நம்பிக்கையின் ஆழமான வேர்கள் இருப்பதில்லை. இதனால், இவர்களின் ஆன்மிக விழிப்புணர்வு தற்காலிகமானதாக மாறிவிடுகிறது.

மூன்றாவதாக, முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகள், உலகியல் போட்டிகளுக்குள்ளும் ஆடம்பர மோகத்திற்குள்ளும் சிக்கி, விதைக்கப்பட்ட வார்த்தையைத் தொலைத்துவிட்டு, பயன் தர இயலாமல் இருக்கும் இதயங்களைக் குறிக்கின்றன. இங்கு முட்செடிகள் என்பவை உலகச் சவால்கள், கவலைகள் மற்றும் செல்வத்தின் மீதான பேராசை என்று மத்தேயு விளக்குகிறார். இந்த முட்செடிகள் இறைவார்த்தையைவிட உயரமாக வளர்ந்து, அதன் சுடரை அணைத்து, அதன் தாக்கத்தைக் கட்டுப்படுத்தி நெருக்கிவிடுகின்றன. இன்பம் தரக்கூடிய தற்காலிக சக்திகள் அதிகமாக இருக்கும்படியால், நம்பிக்கையின் வேர்கள் விரைவில் காய்ந்து போகின்றன. முட்செடிகளின் நெருக்குவாரம் பலமாக இருந்தாலும், வார்த்தையை ஏற்று விழித்தெழும் நல்ல நிலத்தைத் நோக்கி ஆண்டவரின் பார்வைகள் இன்றும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

இறுதியாக, நல்ல நிலத்தில் விழுந்த விதைகள், இறைவார்த்தையைக் கேட்டு, அதனை ஆழமாய் ஆன்மாவில் புரிந்துகொண்டு, தங்கள் வாழ்வில் நூறு மடங்காகவும், அறுபது மடங்காகவும், முப்பது மடங்காகவும் பலன் தரும் இதயங்களைக் குறிக்கின்றன. இவர்களின் இந்த மிகுதியான பலனே, அவர்கள் உலகிற்கு அளிக்கும் சாட்சிய வாழ்வாகும். அவர்களின் தகுதிக்கு ஏற்ப அந்தப் பயன் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

இறைவார்த்தையைத் தம் வாழ்வின் நல்நிலமாக ஏற்றுக்கொள்பவர்களுக்கு அருள்மாரி பொழியப்படும் என்பது திண்ணம் என்றாலும், உலக மாயைகளிலும் கவலைகளிலும் மூழ்கி இதயத்தை விழித்தெழச் செய்ய மறுப்பவர்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளும் நழுவிச் செல்லக்கூடும். எனவே, இயேசுவின் இறையாட்சியைப் புரிந்துகொள்வதும், அந்த வார்த்தையின் ஊடுருவலைத் தம் உள்ளத்தில் அனுமதிப்பதுமே ஒருவரின் வாழ்வை நூறு மடங்காகப் பலன்தரும் நல்ல நிலமாக மாற்றும் வல்லமை கொண்டது.

இத்தகைய மனிதனின் ஆன்மிக விழிப்புணர்வோடு இந்த உலகப் படைப்பும் எவ்வாறு பிணைக்கப்பட்டுள்ளது என்பதைத் திருத்தூதர் பவுல் மிக ஆழமாக விளக்குகிறார். மனிதர் உயர்வடையும்போது படைப்பும் புனிதமடைகிறது; மனிதர் பாவத்தில் வீழும்போது படைப்பும் வீழ்ச்சியடைகிறது என்ற யூத நம்பிக்கையின் அடிப்படையில், படைப்பு அனைத்தும் மெசியா காலத்து முழு வெற்றிக்காகப் பேறுகால வேதனையோடு காத்திருக்கிறது. தூய ஆவியின் முதற்கனிகளைப் பெற்றிருக்கும் நாமும், கடவுள் நம்மைத் தம் பிள்ளைகளாக முழுமையாகத் தத்தெடுக்கும் அந்த மாட்சிமையின் நாளுக்காகப் படைப்பைப் போலவே ஆவலுடன் காத்திருக்கிறோம். இன்றைய வழிபாட்டின் பின்னணியில், நம் இதயங்களை விழித்தெழச் செய்ய மூன்று பாடங்கள் அவசியமாகின்றன.

முதலாவதாக, நாம் நம்முடைய அக நிலத்தை நாளும் சுய ஆய்வு செய்து பக்குவப்படுத்த வேண்டும். வழியோர நிலமாக இறைவார்த்தையை அசட்டையாகக் கடந்து போகிறோமா? அல்லது பாறை நிலமாக இருந்து சோதனைகளின்போது நம்பிக்கையை இழக்கிறோமா? என்பதை ஆராய்ந்து, நம் இதயத்தின் கடினத்தன்மையை ஆன்மிகத் தியானத்தாலும் செபத்தாலும் உடைத்து விழிப்படையச் செய்யவேண்டும்.

இரண்டாவதாக, நுகர்வோர் கலாச்சாரமும் செல்வத்தின் மீதான ஆசையும் கொண்ட உலகியல் முட்களை நாம் களைந்தெறியவேண்டும். உலகப் போக்குகள் நம்மைத் திசைதிருப்பினாலும், உலகக் கவலைகளை இறைவனின் பாதத்தில் சமர்ப்பித்து இறைவார்த்தைக்கு நம் வாழ்வில் முதலிடம் கொடுக்கும்போது, நம்பிக்கையின் வேர்கள் காய்ந்து போகாமல் பாதுகாக்கப்பட்டு நம் இதயம் ஆன்மிக விழிப்புணர்வு பெறுகிறது.

மூன்றாவதாக, தூய ஆவியின் முதற்கனிகளைப் பெற்ற நாம், சாட்சிய வாழ்வின் மூலம் முப்பது, அறுபது, நூறு மடங்கு நற்கனிகளைத் தர அழைக்கப்படுகிறோம். நம்முடைய அன்பும் நீதியும் பிறரன்புச் செயல்களுமே நாம் தரும் நற்கனிகள் என்பதால், படைப்பு அனைத்தும் கடவுளின் பிள்ளைகளின் மாட்சிமிகு சுதந்திரத்திற்காகக் காத்திருப்பது போல, நம்முடைய நற்செயல்களின் வழியாய் இந்த உலகிற்கு விடுதலையையும் ஒளியையும் கொண்டு வரவேண்டும்.

நிறைவாக, இறைவார்த்தை ஆற்றல் வாய்ந்தது; அது வெறுமையாகத் திரும்புவதில்லை. சவால்களும் திசைதிருப்பல்களும் சூழ்ந்திருந்தாலும், கடவுளின் வார்த்தையை வாழ்வின் அடித்தளமாக்கி, தூய ஆவியின் துணையோடு நற்கனிகள் தரும் சாட்சிகளாய் விழித்தெழுவோம். அப்போது, படைப்பு எதிர்நோக்கும் அந்த மாட்சியின் சுதந்திரத்தை நாமும் பெற்று, கடவுளின் பிள்ளைகளாய் மிளிர்வது உறுதி.

news
ஞாயிறு மறையுரை
ஜூலை 05, 2026 ஆண்டின் பொதுக்காலம் 14-ஆம் ஞாயிறு - செக் 9:9-10; உரோ 8:9,11-13; மத் 11:25-30 (அன்பு நுகமாய் நம் சுமைதாங்கும் இறைவன்

இன்று மனித வாழ்க்கை என்பது ஏதோ ஒரு பாரத்தைச் சுமந்துகொண்டு ஓடும் ஓட்டப்பந்தயமாக மாறிவிட்டது. காலையில் கண் விழிப்பதில் தொடங்கி, இரவு தூங்கச் செல்லும்வரை கவலைகளும் போராட்டங்களும் நம்மை நிழல் போலத் தொடர்கின்றன. பொருளாதார நெருக்கடி, பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த அச்சம், தீராத உடல் நோய்கள், உறவுகளுக்குள் விரிசல், மன அழுத்தம் என நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு கனமான சுமையோடுதான் வாழ்கிறோம். இந்தப் பாரங்களிலிருந்து விடுபட தற்காலிகப் பொழுதுபோக்குகள், போதைப்பழக்கங்கள், உலகப் பொருள்கள் தரும் போலி அமைதியைத் தேடி ஓடி ஏமாற்றத்தையே பரிசாகப் பெறுகிறோம்.

இத்தகைய எதார்த்தமான வாழ்வியல் சூழலில்தான் இன்று நாம் ஆண்டின் பொதுக்காலம் 14-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம். நம் சுமைகளைத் தீர்க்கும் உண்மையான சுமைதாங்கி இறைவன் மட்டுமே என்பதை இன்றைய திருவழிபாடு நமக்கு ஆழமாக உணர்த்துகிறது.

சுமைகளைச் சுமப்பது ஒவ்வொருவர் வாழ்விலும் தவிர்க்கமுடியாத எதார்த்தம் என்றாலும், பெரும்பாலான நேரங்களில் தேவையற்ற சுமைகளை நமக்கு நாமே சுமத்திக்கொண்டு, அவற்றின் பாரத்தால் நொறுங்கிப் போகிறோம். ஆனால், வாழ்வில் நாம் சுமக்கவேண்டிய தேவையான சுமைகளை நாம் ஒருபோதும் தனியே சுமப்பதில்லை; இறைவனும் நம்முடன் இணைந்து தோள் கொடுக்கிறார் என்ற உண்மையை நம்பி ஏற்றுக்கொள்ளும் ஆன்மிகப் பக்குவத்தை இன்றைய திருவழிபாடு நமக்குக் கற்றுத்தருகிறது.

திருவிவிலியத்தின் ஒருசில கூற்றுகள், எத்தனை முறை கேட்டாலும் நம் இதயத்தில் புதியதொரு பொருளையும் ஆழமான ஆறுதலையும் தர வல்லவை. “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் (மத் 11:28) என்ற இயேசுவின் இதயப்பூர்வமான அழைப்பு, இத்தனை நூற்றாண்டுகளாகப் பல கோடி மக்களுக்கு விடிவெள்ளியாகத் திகழ்ந்து வருகிறது.

இருப்பினும், உலகச் சுமைகளைச் சமாளிக்க நாம் நமது சொந்த அறிவுத்திறனால் பல வழிகளைக் கண்டுபிடித்துவிட்டதாக எண்ணுவதால்தான், இதமளிக்கும் இவ்வழைப்பை நம்பி ஏற்றுக்கொள்ளப் பல நேரங்களில் தயங்குகிறோம். உலகமோ, நமது பாரங்களைத் தற்காலிகமாக மறக்கடிக்கப் பொய்யான விளம்பரங்களையும், போலி நுகங்களையும் நமக்குப் பரிசளிக்கிறது. ஆனால், இயேசுஉங்கள் சுமைகளைப் பறந்தோடச் செய்வேன்என்று எதார்த்தத்திற்குப் புறம்பான போலி வாக்குறுதியை ஒருபோதும் தரவில்லை; மாறாக, உலகப் போக்கிற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய நுகத்தை அதாவது, தப்பி ஓடாமல் அவரோடு இணைந்து சுமக்கும் உன்னத வாழ்வுமுறையை முன்வைக்கிறார்.

யூதத் தலைவர்கள் மோசேயின் சட்டங்களை மக்களுக்குப் பாரமான நுகமாக மாற்றினர். சட்டங்கள் அனைத்தும் யூத மக்களின் சுமைகளை எளிதாக்குவதற்குப் பதில், அழுத்தி அழிப்பதாக இருந்தன. அவ்வேளையில், இயேசுஎன் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்; ஏனெனில் நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன் (மத் 11:29) என்று கூறி, புதியதொரு சீடத்துவ நெறியை அறிமுகப்படுத்துகிறார். இவ்வழைப்பில் இயேசு பயன்படுத்தும் நுகம் என்ற உருவகத்தை இரு வழிகளில் சிந்திக்கலாம்.

முதலில், திருவிவிலியக் காலத்தில் நுகம் என்பது விலங்குகளை நசுக்கும் பாரமாகவும், மோசேயின் சட்டங்களின் கடுமையான சுமையாகவும் பார்க்கப்பட்டது. ஆனால், இயேசு தம் நுகத்தின் ஒரு பக்கத்தைத் தம் தோளில் தாமே சுமந்து கொண்டு, மறுபக்கத்தை மட்டும் நம்மைப் பிடிக்கக் கூறுகிறார். இதனால், அவரோடு இணையும் உன்னத உறவின் உடனிருப்பில் நம் வாழ்வின் எத்தகைய பெரும் பாரமும் இலகுவாக மாறிவிடுகிறது.

இரண்டாவது, கிறித்தவச் சீடத்துவம் என்பது சிலுவைகளோ, எதார்த்த வாழ்வின் போராட்டங்களோ இல்லாத ஒரு மாய உலகமல்ல. நாம் சந்திக்கின்ற துன்பங்களை இயேசுவோடு இணைந்து, அவரோடு பிணைக்கப்பட்டுச் சுமப்பதால், அது நம்மை நசுக்காமல் ஆன்மாவிற்கு அமைதி தரும் ஒரு சுகமான ஆன்மிகப் பயணமாக மாறிவிடுகிறது. கிறித்தவச் சீடத்துவம் என்பது சட்டங்களற்ற வாழ்க்கையுமல்ல; அதேநேரம் நம்மை நசுக்கும் அடிமைத்தனமும் அல்ல. சீடத்துவத்தில் நுகம் இருக்கும்; ஆனால், அது கழுத்தை அழுத்தாது. சுமை இருக்கும்; ஆனால், அது அன்பினால் இனிமையாக இருக்கும் என்ற ஆன்மிக எதார்த்தத்தை இயேசு இங்கே சுட்டிக்காட்டுகிறார்.

துன்பங்களின்போது தூரமாய் நிற்காமல், நம் தோளோடு தோள் நின்று பாரத்தைச் சுமக்கும் இஸ்ரயேலின் கடவுள் என்பதையே இயேசுவின் இதமான வரிகள் விவரிக்கின்றன. இயேசு விடுக்கும் இந்த உன்னத அழைப்பை முழுமனத்துடன் நம்பி, அவரை அணுகி, தங்கள் சுமைகளைச் சிறிது நேரம் இறக்கிவைத்து, இளைப்பாறுதல் தேடியவர்கள் வரலாற்றில் பலர்.

புனிதரான திருத்தந்தை 23-ஆம் ஜான்வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தைத் துவக்கிய வேளையில், ‘திரு அவைக்குள் புதிய காற்று உள்ளே நுழையட்டும்என்ற தொலைநோக்குப் பார்வையோடு பல்வேறு மாற்றங்களுக்கு வழிவகுத்தார். அப்போது அவர் எதிர்கொண்ட அளப்பரிய நிர்வாகச் சுமைகளால் சோர்ந்து போகாமல், ஒவ்வோர் இரவும்ஆண்டவரே, இயேசுவே! நான் இப்போது உறங்கச் செல்கிறேன்; இது உமது திரு அவை, இதனை நீர் பாதுகாத்தருளும்என்று தன் நுகத்தை இறைவனிடம் ஒப்படைத்தார். அதேபோல், இரண்டாம் உலகப் போரின் வரலாற்று நெருக்கடியான வேளையில், அமெரிக்க அதிபர் டுவைட் டேவிட் ஐசனோவர், “இறைவா, என்னால் முடிந்த அளவு நல்ல முறையில் இன்று நான் செயல்பட்டுள்ளேன். நாளை விடியும்வரை, நீர் இனி செயலாற்றும்என்ற செபத்துடன் உறங்கச் சென்றார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் உலகத் துயரங்கள் தன்னை அழுத்தும்போது, தன் விண்ணப்பங்களை ஒரு காகிதத்தில் எழுதிஉறங்கும் புனித யோசேப்புவின்திருச்சுரூபத்திற்கு அடியில் வைத்துவிட்டு, கவலைகளை மறந்து அமைதியாகத் தூங்கும் ஆன்மிகப் பழக்கத்தைக் கொண்டிருந்தார். இவர்கள் அனைவரும் இயேசுவின் அன்பு நுகத்தை ஏற்றதால், இவர்களின் பாரங்கள் இனிமையானவையாக மாறின.

இன்றைய முதல் வாசகத்தில் (செக் 9:9-10) இறைவாக்கினர் செக்கரியா முன்னறிவிப்பதுபோல, நம் அரசர் குதிரைகளின் மீதேறி மக்களுக்குச் சுமையாக வருபவர் அல்லர்; மாறாக, எளிய கழுதைக் குட்டியின்மீது ஏறி, மக்களின் இடுக்கண்களில் உடன் வாழ வரும் ஓர் அமைதியின் வேந்தர் என்பதை உணரலாம்.

ஆகவே, திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய கடிதத்தில் (உரோ 8:9,11-13) குறிப்பிட்டுள்ளதுபோல, நாம் உலக ஆசைகளுக்கும் சுய நலத்திற்கும் அடிமையாகி, நம் வாழ்வை ஊனியல்பிற்கு உட்படுத்தும்போது, கவலைகளும் பாவ உணர்வுகளும் நம்மை அழுத்தத் தொடங்குகின்றன. ஆனால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த தூய ஆவியார் நமக்குள்ளே வாழும்போது, நாம் அந்தப் பாரங்களிலிருந்து உண்மையான விடுதலை பெறுகிறோம். ஆவியானவரின் துணை இருந்தால், எத்தகைய எதார்த்த வாழ்வின் போராட்டங்களையும் நம்மால் எளிதாக வெல்ல முடியும். ஏனெனில், அவர் நம் பலவீனங்களில் நமக்குத் துணைநின்று, நம் சுமைகளைத் தாங்கும் ஆற்றலை வழங்குகிறார்.

மேற்குறிப்பிட்ட சிந்தனைகளின் அடிப்படையில் இன்றைய நாளில் வாழ்விற்கான மூன்று படிப்பினைகளைக் கற்றுக்கொள்வோம்.

முதலில், இன்றைய வணிக உலகம் காட்டும் தற்காலிகப் பொழுதுபோக்குகளும் போலி மயக்கங்களும் நம் வாழ்வின் சுமைகளை மறக்கவும் மறுக்கவும் தூண்டக்கூடிய தப்பித்தல் வழிகளேயன்றி, நிரந்தரத் தீர்வல்ல. எனவே, நம் அன்றாடக் கவலைகளையும் எதிர்காலம் குறித்த அச்சங்களையும் நம் சொந்தத் தோள்களில் சுமந்து கலங்காமல், உண்மையான சுமைதாங்கியாகிய இயேசுவின் பாதத்தில் முழுமையாக ஒப்படைக்கக் கற்றுக்கொள்வோம்.

இரண்டாவது, எல்லாவற்றையும் நம் சொந்த அறிவாற்றலால் மட்டுமே சாதித்துவிடலாம் என்ற அகந்தைதான் நம் தலையில் தேவையற்ற மனப் பாரங்களை ஏற்றி நம்மை நொறுக்குகிறது. உலகக் கணக்குகளைக் கடந்து, ஒரு குழந்தை தன் பெற்றோரை முழுமையாக நம்புவதுபோல, துன்பங்களின்போது நம்மோடு தோள்கொடுக்கும் இறைவனின் கனிவையும் மனத்தாழ்மையையும் அணிந்து, அவரது பராமரிப்பின்மீது மாறாத நம்பிக்கை வைப்போம்.

மூன்றாவது, கிறித்தவச் சீடத்துவம் என்பது சிலுவைகளோ, போராட்டங்களோ இல்லாத பாதையல்ல; மாறாக, சுயநலம் சார்ந்த ஊனியல்பை வென்று, இயேசுவோடு இணைந்து பிணைக்கப்பட்டுச் சுமப்பதால் இலகுவாக மாறும் ஒரு புனிதப் பயணம். அவர் தரும் அன்புச் சட்டங்களுக்கு உட்பட்டு, அவரது புதிய நுகத்தை மகிழ்வோடு ஏற்று வாழ நம்மையே அர்ப்பணிப்போம்.

நிறைவாக, நம் கடவுள் நம்மைத் தூர நின்று பார்ப்பவர் அல்லர்; நம் இதயத்தின் பாரங்களை ஆழமாக அறிந்தவர். அன்பு நுகமாய் நம் சுமைதாங்கும் இறைவன்மீது முழு நம்பிக்கை வைத்து, நம் கவலைகள் அனைத்தையும் அவரிடம் கொடுத்து, அவர் தரும் உண்மையான அமைதியோடும் விடுதலையோடும் அன்றாட வாழ்வைத் தொடர்வோம்.