‘கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு’ என்ற ஒளவையாரின் மூதுரைக்கு இலக்கணமாக, அறிவுத் தேடலையே தன் முழு மூச்சாகக் கொண்டு வாழ்ந்த மரபு இத்தமிழ்ச் சமூகத்திற்கு உரியது. உலகப் பொதுமறையாம் திருக்குறளையும், பகுத்தறிவுப் பகலவன் பெரியாரின் சிந்தனைகளையும், புரட்சிக் கவிஞர்களின் விடுதலை வரிகளையும் நெஞ்சில் ஏந்திய வரலாற்றுச் சிறப்புமிக்க மண் இது.
சங்க
காலம் தொட்டே கடல் கடந்து வணிகமும், கலைப் பரிமாற்றமும் செய்து, இயற்கை வளத்தோடும் இலக்கிய நயத்தோடும் உலகளாவிய சிந்தனையோடு இயங்கிய தமிழ்ச் சமூகம், இன்று 21-ஆம் நூற்றாண்டின் அதிவேக எண்மத் தொழில்நுட்ப (டிஜிட்டல்) யுகத்திலும், உலகமயமாதலின் பிடியிலும் பயணித்துக் கொண்டிருக்கிறது.
இருப்பினும்,
இன்றைய தமிழ்ச் சமூகம், அறிவுத் தேடலிலும் பகுத்தறிவுச் சிந்தனையிலும் எத்தகைய நிலையில் உள்ளது? சமூகத்தில் நிலவும் இப்போதைய தொய்வு, அறியாமையினால் விளைந்ததா? அல்லது அறிவுசார் செயல்பாடுகளில் ஏற்பட்ட ஆர்வமின்மையினால் நிகழ்ந்ததா? என்ற வினாக்களுக்கு விடைதேட வேண்டிய அவசியம் இன்று எழுந்துள்ளது.
இன்றைய
தமிழ்ச் சமூகத்தின் தேக்க நிலைக்குக் காரணம் ‘அறியாமை’ என்று கூறுவது முற்றிலும் அடிப்படையற்ற வாதம் என்றே நான் எண்ணுகிறேன். தமிழ்நாட்டின் கல்வியறிவு விகிதம் இந்தியச் சராசரியைவிட மிக உயர்ந்து, தேசிய அளவில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. திறன்பேசிப் பயன்பாடு மற்றும் இணைய ஊடுருவலில் தமிழர்கள் உலகளாவில் முதன்மை நிலையில் உள்ளனர்.
அறிவியல்,
அரசியல், உலக நிகழ்வுகள் என எந்தவொரு துறையைப்
பற்றிக் கேட்டாலும் உடனுக்குடன் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யும் அளவிற்குத் தகவல் பரிமாற்றமும், சமூக விழிப்புணர்வும் பெரிதும் இன்று சாத்தியமாகியுள்ளன. எனவே, இன்றைய சமூகத்தின் பலவீனத்திற்குப் பின்னால் இருப்பது தகவல்கள் கிடைக்காத ‘அறியாமை’அன்று; மாறாக, தகவல்களைக் கையாளும் விதத்தில் ஏற்பட்டுள்ள சீர்கேடே என்கின்றனர் கல்வியாளர்கள்.
ஆகவே,
இன்றைய தமிழ்ச் சமூகம் எதிர்கொள்ளும் முதன்மையான சவால் ‘அறிவுசார் ஆர்வமின்மை’ என்றே
பலரும் கருதுகின்றனர். எதையும் ஆழமாகக் கற்காமல், மேலோட்டமாகத் தெரிந்துகொண்டு நிறைவடையும் ஒருவித அறிவுச் சோம்பல் சமூகத்தில் பரவியுள்ளது கவலைக்குரியதே! 15 நொடி காணொளிகளிலும், இருவரி மீம்ஸ்களிலும் உலகத்தின் தத்துவங்களையும் அரசியலையும் சுருக்கிப் பார்க்கும் பழக்கம் இன்று தீவிரமடைந்துள்ளது. ஒரு புத்தகத்தை முழுமையாகப் படிக்கும் பொறுமையோ அல் லது ஒரு முழுமையான கட்டுரையைக் கூர்ந்து வாசிக்கும் ஆர்வமோ இன்று எவரிடமும் இல்லை.
அமெரிக்காவின்
நியூயார்க் நகரில் உள்ள ‘சிட்டி யுனிவர்சிட்டி ஆஃப் நியூயார்க்’ (CUNY) பல்கலைக்கழகப்
பேராசிரியர் ஃபரிதுல் ஆலம் சுட்டிக்காட்டுவதுபோல, மனிதச் சமூகம் ‘எழுத்திற்குப் பிந்தைய சமூகம்’ என்ற புதிய பரிமாணத்தை நோக்கிச் செல்கிறது. இது எழுத்து முற்றிலும் மறைந்து போகும் காலம் அன்று; மாறாக, எழுத்து தன் பழைய மையத்தன்மையை இழந்து பேச்சு, படம், ஒலி, காணொளி மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றோடு இணைந்து இயங்கும் சூழலாகும்.
அன்றும்
இன்றும் ‘எழுத்து’ என்பது வாசிப்பிற்கு ஓர் ஆர்வத்தையும் ஆழத்தையும் தருவது. வாசகர் ஒரு கருத்தை உடனடியாக அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை; அதிலிருந்து விலகி, மீண்டும் மறுபரிசீலனை செய்ய அச்சு ஊடகப் பண்பாடும் பயன்பாடும் வழிவகுத்தது. ஆனால், இன்றைய எண்மத் தொழில்நுட்ப ஊடகங்கள் இந்தச் சுற்றை மிதமிஞ்சிய வேகத்திற்கு உட்படுத்தியுள்ளன. தகவல்களின் பற்றாக்குறை என்று ஏதுமில்லை; மாறாக, கவனத்தின் பற்றாக்குறையே இன்று நிலவுகிறது. ‘எதைப் பெறுவது?’ என்ற கேள்வியைக் கடந்து, ‘எதைப் படிக்கவேண்டும், எதை நம்பவேண்டும்?’ என்ற குழப்பத்தில் தமிழ்ச் சமூகம் சிக்கியுள்ளது.
தமிழர்களின்
தற்கால ஊடகச் சூழல், இளைஞர்களின் சிந்தனைத் திறனைப் பெரிதும் சீரழிக்கிறது என்பதே உண்மை. ஆக்கப்பூர்வமான சமூக விவாதங்களைவிட, திரை நட்சத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கை, அரசியல் கட்சிகளின் (கருத்தியல்) மோதல்கள் இவையே சமூக ஊடகங்களில் முதன்மைப் பொருளாக மாறியுள்ளன.
மேலும்,
இன்றைய (AI) தொழில்நுட்பம் தகவல்களைச் சுருக்கித் தருவதால், மூல நூல்களை வாசிக்கும் பழக்கம் முற்றிலுமாக விடைபெறுகிறது. ‘யார் எழுதுகிறார்?’ என்ற மனிதச் சிந்தனையின் எல்லை மங்கி, தகவல்கள் இயந்திரத்தனமாக நுகரப்படுகின்றன. தர்க்கப்பூர்வமான ஆய்வுகள் இல்லாததால், புலனம் போன்ற செயலிகளில் வரும் வதந்திகளும் போலித்தரவுகளும் எவ்வித ஆய்வுமின்றி அப்படியே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. எனவே, மக்கள் உரிமைகளை மறந்து, போலிப் பிம்பங்களை நுகர்ந்து திருப்தியடையும் அவல நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
தமிழ்ச்
சமூகம் தன் அறிவுசார் பாரம்பரியத்தையும், பகுத்தறிவுச் சிந்தனையையும் மீட்டெடுக்க வேண்டுமெனில், ஆக்கப்பூர்வமான மாற்றங்களைப் பொறுப்புணர்வோடு அரசும் குடிமைச் சமூகமும் கல்வி நிறுவனங்களும் நம் குடும்பங்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.
‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள்
காண்ப தறிவு’ (குறள்
423)
என்ற
வள்ளுவப் பெருந்தகையின் வரிகளுக்கேற்ப, சமூகத்தில் பரப்பப்படும் தகவல்களின் உண்மைத் தன்மையை ஆராயும் பகுத்தறிவை நாம் நம்மில் மீண்டும் உயிர்ப்பிக்கவேண்டும்.
ஆகவே,
‘வீட்டுக்கு ஒரு நூலகம்’ எனும் முழக்கத்தை முன்னெடுத்து, வாசிப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்ப
வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது. கைப்பேசித் திரைகளில் காலத்தைக் கழிக்கும் காளையரின் (இளை யோரின்) நேரத்தைக் குறைக்கவும், குழந்தைப் பருவத்திலிருந்தே நம் குழந்தைகள் புத்தகங்களை நேசிக்கும் பண்பாட்டை வளர்க்கவும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டியது இன்று அவசியமாகிறது. மனப்பாடக் கல்வியையும், தேர்வுக்கான மதிப்பெண் வேட்டையையும் ஒழித்து, ‘ஏன்? எதற்கு? எப்படி?’ என்று வினா எழுப்பும் ‘தர்க்கவியல் சிந்தனையை’
கல்வி நிலையங்களில் புகுத்த வேண்டியுள்ளது.
அவ்வாறே,
சமூக ஊடகங்களில் வெளியாகும் மேலோட்டமான கருத்துகளைக் கடந்து, கொள்கை சார்ந்த, சமூக மேம்பாட்டிற்கான விவாதங்களை இளைஞர்கள் முன்னெடுக்க ஊக்குவிக்கவேண்டும்.
இறுதியாக,
இன்றைய தமிழ்ச் சமூகம் அறியாமையில் மூழ்கிவிடவில்லை; மாறாக, தனக்குக் கிடைக்கப்பெற்ற எல்லையற்ற தகவல் பெருக்கத்தைக் கையாளுவதற்கான ‘அறிவுசார் ஆர்வத்தை’
தற்காலிகமாக இழந்து நிற்கிறது. நிலவுடைமைச் சமூகத்தின் அடித்தளம் முழுமையாக ஆட்டம் காண்பதற்கு முன்பே நவீனச் சமூகமாக மாறிய தமிழ்ச் சமூகம், முழுமையான எழுத்தறிவைப் பெறுவதற்கு முன்பாகவே இன்று வளர்ந்து வரும் எண்மத் தொழில்நுட்பத்தால் ஈர்க்கப்பட்டு பெரும் (ஏ)மாற்றம் கண்டிருக்கிறது.
இத்தகைய
சவாலை எதிர்கொண்டு, போலிப் பிம்பங்களையும், மேலோட்டமான பொழுதுபோக்குகளையும் புறந்தள்ளி, ஆழமான சிந்தனையையும், தர்க்க அறிவையும் நோக்கி நகர்வதே தமிழ்ச் சமூகத்தை உலக அரங்கில் நாளை மீண்டும் தலைநிமிரச் செய்யும் என்றே நம்புவோம்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
‘குலன், அருள், தெய்வம் கொள்கை, மேன்மை,
கலை பயில்
தெளிவு,
கட்டுரை
வன்மை;
நிலம் மலை
நிறைகோல்
மலர்
நிகர்
மாட்சியும்;
உலகியல் அறிவோடு
உயர்குணம்
இனையவும்
அமைபவன் நூல்
உரை
ஆசிரி
யன்னே’
என்கிறது
பவணந்தி முனிவரின் நன்னூல். ஒரு நல்ல ஆசிரியர் எப்படி இருக்கவேண்டும் என்பதை மிகவும் விரிவாக விளக்கும் நன்னூல் - நற்குடிப் பிறப்பு, அருள், தெய்வக்கொள்கை, உயர்குணம், நூல்களைக் கற்றுத் தெளிதல், தெளிவுறப் பேசும் வல்லமை, நிலம், மலை, தராசு, மலர் ஆகிய நான்கையும் போன்ற தன்மைகளும், உலகியல் அறிவும் உடையவரே நல்லாசிரியர் என ஆசிரியருக்கான வரைவிலக்கணம்
தருகிறது.
அதாவது,
தன் பொறுமையால் மாணவனின் அறியாமையைப் பொறுத்து, கல்வி எனும் விளைச்சலைத் தரும் நிலம் போன்றவராகவும், அளப்பரிய அறிவும், தோற்கடிக்க முடியாத மாண்பும் கொண்ட மலை போன்றவராகவும், எந்தப் பக்கமும் சாயாமல், மாணவர்களிடம் நடுநிலைமையோடு நடந்துகொள்ளும் நிறைகோல் (தராசு) போன்றவராகவும், முகமலர்ச்சியோடு, மலர் போன்று மென்மையாகவும் இனிமையாகவும் கல்வியைக் கற்பிப்பவராகவும் ஆசிரியர் இருக்கவேண்டும் எனவும் தெளிவுபடுத்துகிறார் பவணந்தி முனிவர்.
அவ்வாறே,
‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ என்ற பண்பாட்டு வரிசையில், இறைவனுக்கு இணையாக ஆசிரியரை வைத்துப் போற்றிய பூமி இது. தமிழ்க் கலாச்சாரத்தில் ஆசிரியர்களுக்குக் கொடுக்கப்படும் மிக உயர்ந்த மரியாதை குறிப்பிடத்தக்கது. ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்’ என்ற அதிவீரராம பாண்டியனின் நறுந்தொகை கூற்றும், ‘ஒருவனுக்குப் பகுத்தறிவை ஊட்டி, அவனை முழு மனிதனாகச் செதுக்கும் சிற்பியே ஆசிரியர்’
என்ற சுவாமி விவேகானந்தரின் சிந்தனையும் இந்தியச் சமூகத்தின் அடித்தளமாக இன்றும் என்றும் விளங்குகின்றன. மருத்துவர், பொறியாளர், ஆட்சியாளர், விஞ்ஞானி எனச் சமூகத்தின் ‘ஆயிரம் பணிகளையும்’ உருவாக்கும்
தாய், நாற்றங்கால், உற்பத்தி மையம்தான் அறம் நிறைந்த இந்த
ஆசிரியர் பணி! எனவேதான்,
‘குருவாய் வந்து
குணம்பல
பரப்பி
பெருமை காட்டிய
பெரியோன்
போற்றி!’
என
இப்பணிக்கு இறைவனே மானுட வடிவில் ஆசிரியராக (குருவாக) வந்து மெய்யறிவைப் புகட்டுகிறான் என்கிறது மாணிக்கவாசகரின் திருவாசகம். அவ்வாறே, ‘புரட்சிக்கவி’ பாரதிதாசனும்
ஆசிரியப்பணியின் மேன்மையினைக் குறிப்பிடும்போது,
‘அறியாமை இருளகற்றும் அறிவின் விளக்கு!
மனிதனை
மனிதனாக்கும் புனிதப் பணி!’
என்கிறார்.
ஆனால், இன்றைய 21-ஆம் நூற்றாண்டின் நவீனத் தொழில்நுட்ப உலகில், இத்தகைய புனிதமான ஆசிரியர் பணி எத்தகைய சவால்களைச் சந்திக்கிறது என்பதை ஊரறியும், நாடறியும், ஏன் உலகமே அறியும். தடம் மாறிக்கொண்டிருக்கும் இன்றைய இளைய தலைமுறையும், பலவீனப்பட்டு வரும் வகுப்பறைச் சூழலும் நம் சமூகத்திற்கு உணர்த்தும் அவல நிலையும், அவை விடுக்கும் எச்சரிக்கை மணியோசையும் கூர்ந்து கவனிக்கத்தக்கதே!
இன்றைய
குழந்தைகள் மற்றும் மாணவர்களின் உலகத்தைச் சமூக ஊடகங்களும், ஓ.டி.டி.
(OTT) தளங்களும்,
திரையரங்க வன்முறைச் சித்தரிப்புகளும் முற்றிலுமாக ஆக்கிரமித்துவிட்டன. திரைப்பட வன்முறையின் எதிர்மறைத் தாக்கம் உச்சம் தொட்டுவிட்டது. அண்மைக்காலமாகத் திரையில் காட்டப்படும் அதீத வன்முறைகளும், போதைப்பொருள் கலாச்சாரத்தை முதன்மைப்படுத்தும் கதாநாயகப் பிம்பங்களும் மாணவர்களின் பிஞ்சு மனங்களில் நஞ்சை விதைக்கின்றன. வன்முறையை ஒரு ‘கெத்து’ எனவும், அதை வாழ்வியல் அடையாளமாகவும், ஓர் அணுகுமுறையாகவும் கருதும் ஆபத்தான மனநிலை இன்று அவர்களிடம் உருவெடுத்துள்ளது என்கின்றனர் உளவியலாளர்கள்.
இன்ஸ்டாகிராம்
ரீல்ஸ்கள், ஆன்லைன் விளையாட்டுகள் போன்ற சமூக ஊடகங்களால் அவர்கள் பெரிதும் கவரப்பட்டுள்ளனர். இவையே மாணவர்களின் கவனச் சிதறலுக்கு முக்கியக் காரணியாக அமைகின்றன. இதனால் வகுப்பறையில் ஆசிரியரின் உரைகளைக் கூர்ந்து கவனிக்கும் பொறுமை பெருமளவில் இன்று குறைந்துவிட்டது. ‘சுதந்திரம்’ என்ற
பெயரில் பெரியோரையும், கற்றுக்கொடுக்கும் குருவையும் மதிக்கும் பண்பாடு சீர்குலைந்து வருகிறது.
தெலுங்கானாவின்
நல்கொண்டா மாவட்டத்தில் தனியார் பள்ளித் தலைமை ஆசிரியை ரூபா ரெட்டி என்பவர், தனது சொந்தப் பள்ளி மாணவர்களாலேயே பணத்திற்காக அண்மையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிகழ்வு ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியுள்ளது. அறிவு புகட்டும் ஆசிரியருக்கே வகுப்பறையிலும் வளாகத்திலும் பாதுகாப்பு இல்லாத ஓர் அவலநிலை இன்று உருவாவது, நமது சமூகச் சீரழிவின் உச்சக்கட்ட எச்சரிக்கையாகும்.
ஆசிரியர்களின்
பணிச்சூழல் மற்றும் பற்றாக்குறை குறித்து யுனெஸ்கோ (UNESCO) மற்றும்
‘ஆசிரியர்களுக்கான சர்வதேச பணிக்குழு’
வெளியிட்டுள்ள
அண்மைக்கால உலகளாவிய அறிக்கை பல திடுக்கிடும் உண்மைகளை
வெளிப்படுத்தியுள்ளது.
குறிப்பாக, வருகின்ற 2030-ஆம் ஆண்டிற்குள் உலகளவில் சுமார் 4 கோடியே 40 இலட்சம் தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளி ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள் என்ற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், 2015-ஆம் ஆண்டில் 4.62 விழுக்காடாக இருந்த உலகளாவிய ஆசிரியர் விலகல் வீதம், 2022-இல் 9.06 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்றும், பணியில் சேர்ந்த முதல் 5 ஆண்டுகளிலேயே பலர் மன உளைச்சல் மற்றும்
குறைந்த ஊதியம் காரணமாக விலகுகின்றனர் என்ற செய்தியும் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன.
ஆய்வுகள்
சுட்டிக்காட்டுவதுபோல,
ஆசிரியர்களுக்குப் போதிய ஊதியமின்மை, பணிப் பாதுகாப்பு இல்லாமை, அதிகப்படியான நிர்வாகச் சுமைகள் மற்றும் சமூகத்தில் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய மரியாதை குறைதல் ஆகியவையே இத்தகைய உலகளாவிய நெருக்கடிக்கு முக்கியக் காரணங்களாகப் பட்டியலிடப்படுகின்றன.
ஆசிரியர்
பணி என்பது வெறும் பாடப்புத்தகச் செய்திகளை அச்சிடப்பட்ட தாள்களிலிருந்து மாணவர்களின் மூளைக்குள் மாற்றும் இயந்திரத்தனமான வேலை அல்ல; மாறாக, அது ‘மனித மனங்களைச் செதுக்கும் மாபெரும் கலை’.
ஒரு சிறந்த ஆசிரியர் வகுப்பறையில் இருக்கும் திறமையான மாணவனை மட்டுமல்லாமல், கற்றலில் பின்தங்கியிருக்கும் மாணவனையும் கண்டறிந்து, அவனது கற்றல் திறனுக்கு ஏற்பப் பாடங்களை எளிமைப்படுத்தி, தனிப்பட்ட கவனமும் அன்பும் செலுத்துபவர். எனவேதான், “ஆசிரியராக இருப்பது என்பது ஒரு தொழில் அல்ல; மாறாக, அது ஒரு வாழ்க்கை முறை” என்றார் நம் மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.
அப்துல்கலாம்.
ஆசிரியர்கள்
வெறும் கல்வியை மட்டும் வழங்குவதில்லை; ஒழுக்கம், நேர்மை, அனுதாபம், மதிப்பீடுகள், சமூக அக்கறை போன்ற உயரிய பண்புகளை மாணவர்களின் மனங்களில் விதைக்கிறார்கள். பெற்றோரின் கவனிப்பின்மை மற்றும் தவறான நண்பர்களின் சேர்க்கையால் தடம் மாறத் துடிக்கும் மாணவர்களைத் தட்டிக்கொடுத்து நல்வழிப்படுத்தும் ‘வழிகாட்டியாக’ ஆசிரியர்
உருவெடுக்கிறார்.
தடம்
மாறிக்கொண்டிருக்கும்
இன்றைய இளைய தலைமுறையைச் சரியான பாதைக்குக் கொண்டு வரவும், ஆசிரியர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கவும் அவசர நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். முதலாவதாக, ஆசிரியர்-மாணவர் உறவு மீட்கப்படவேண்டும். பழங்காலத்தின் குருகுலக் கல்வி முறை போலன்றி, நவீன உலகத்திற்கு ஏற்ப, பரஸ்பர மரியாதையுடனும் அன்புடனும் கூடிய ஆரோக்கியமான ஆசிரியர்-மாணவர் உரையாடல்கள் வகுப்பறைகளில் ஊக்குவிக்கப்படவேண்டும்.
திரைப்படம்
மற்றும் எண்மத் தொழில்நுட்பத் தளங்களில் தணிக்கைவேண்டும். சிறுவர்களையும் மாணவர்களையும் வன்முறைக்குத் தூண்டும் ஊடக உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்த பெற்றோரும் அரசும் விழிப்புடன் செயல்படவேண்டும். மிகவும் குறிப்பாக, ஆசிரியர்களின் உளவுக்கும் உயிருக்கும் அச்சுறுத்தல் இல்லாத பாதுகாப்பான கல்வி வளாகங்களை உருவாக்குவது அரசின் கடமையாகும். பிள்ளைகளின் நடத்தை மாற்றங்களுக்கு ஆசிரியர்களை மட்டுமே குறை கூறாமல், வீடுகளிலும் நற்பண்புகளையும் பெரியோரை மதிக்கும் பழக்கத்தையும் பெற்றோர் கற்றுத்தரவேண்டும். சிறப்பான விதத்தில் யுனெஸ்கோ பரிந்துரைத்துள்ளபடி, ஆசிரியர்களின் ஊதியம், பணிச்சூழல் மற்றும் தொழில்முறைப் பயிற்சிகளில் அரசுகள் தாராளமாக முதலீடு செய்ய வேண்டும்.
இறுதியாக,
“நமது எதிர்காலம் வகுப்பறைகளின் நான்கு சுவர்களுக்குள்ளேயே வடிவமைக்கப்படுகிறது” என்றார் டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன். ஆசிரியர்களின் கண்ணியத்தைச் சிதைத்து, வன்முறைக்கு ஆட்படுத்தும் ஒரு சமூகம் ஒருபோதும் நாகரிகமடைந்த சமூகமாக மாற முடியாது. ஆசிரியர் சமூகத்திற்கு நாம் அளிக்கும் மரியாதையும் பாதுகாப்பும்தான் நமது நாட்டின் எதிர்காலத் தலைமுறையின் ஒழுக்கத்தைத் தீர்மானிக்கிறது.
ஆகவே,
தடம் மாறிக்கொண்டிருக்கும் இன்றைய இளைய தலைமுறையே! உங்களுக்கு இருளகற்றி அறிவொளி புகட்டி, உங்கள் கனவுகளுக்குச் சிறகுகள் முளைக்கவைக்கும் ஆசிரியர்களைப் போற்றுங்கள்; அவர்களைத் தெய்வத்திற்கு நிகராக மதியுங்கள். அரசு, பெற்றோர், சமூகம் என அனைவரும் ஒன்றிணைந்து
ஆசிரியர் சமூகத்தின் கரங்களைப் பலப்படுத்துவோம்! அதுவே நாம் நமது எதிர்காலத் தலைமுறைக்குச் செய்யும் ஆகச்சிறந்த நன்மையாகும்!
ஆசிரியப் பெருமக்கள்
அனைவருக்கும்
இனிய
ஆசிரியர்
தினவிழா
வாழ்த்துகள்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
விண்ணை முட்டும் கோபுரங்களும், கோடிக்கணக்கில் வர்த்தகம் செய்யும் பன்னாட்டு நிறுவனங்களும், வெளிநாட்டு முதலீடுகளின் புள்ளி விவரங்களும் மட்டுமே ஒரு நாட்டின் பொருளாதார வலிமையைக் காட்டிவிட முடியாது. உண்மையான பொருளாதாரம் என்பது, எளிய மனிதர்களின் உழைப்பிலும், தெருவோரப் பட்டறைகளிலும், சிறிய தொழிற்சாலைகளிலும், கிராமப்புறக் கைவினைப் பொருள்களிலுமே உயிர்ப்போடு இயங்குகிறது.
ஒவ்வோர்
ஆண்டும் ஆகஸ்டு 30-ஆம் தேதி இந்தியத் திருநாடு தேசிய சிறுதொழில் தினத்தைக் (National Small Industry Day) கொண்டாடுகிறது.
நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்டு, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, உள்ளூர் உற்பத்தியையும் பாரம்பரியக் கலைகளையும் பாதுகாக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை (Micro, Small and Medium Enterprises - MSMEs) கௌரவிப்பதே இந்நாளின் நோக்கமாகும்.
ஆனால்,
இன்றைய சூழலில் இந்தக் கொண்டாட்டங்கள் வெறும் காகித அளவிலான சடங்காக மாறியதுதான் கவலைக்குரிய எதார்த்தம். ‘தொழில்துறை வளர்ச்சி’
என்ற பதத்தில் இன்று ஒன்றிய பா.ச.க.
அரசு முழங்கும் முழக்கங்களுக்கும், களத்தில் சிறுதொழில் முனைவோரின் உண்மையான வாழ்க்கைக்கும் இடையே இருக்கும் இடைவெளி மிகவே பெரிது. நாளுக்கு நாள் அது அதிகரித்துக்கொண்டே இருப்பதுதான் பேரவலம்.
இந்தியப்
பொருளாதாரத்தில் சிறுதொழில்துறை ஆற்றும் பங்கு அளப்பரியது; அது மறுக்க முடியாதது மட்டுமன்று; என்றும் மறைக்க முடியாததும் கூட. இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிறு தொழில்துறை 30 விழுக்காட்டிற்கும் அதிகமான பங்களிப்பை அளிக்கிறது என்பதே பேருண்மை. நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 45 விழுக்காட்டிற்கும் மேல் வகித்து, நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருப்பதே இத்துறைதான். மேலும், விவசாயத்திற்கு அடுத்தபடியாக நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு, ஏறக்குறைய சுமார் 11 கோடிக்கும் அதிகமான இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பையும் வாழ்வாதாரத்தையும் வழங்கி வருவதும் இந்தத் துறைதான்.
அவ்வாறே,
பெருநகரங்களில் மட்டுமே குவிந்து கிடக்கும் பொருளாதார வாய்ப்புகளைச் சிறு நகரங்களுக்கும், கிராமப் புறங்களுக்கும் கொண்டு சென்று, மண்டலச் சமநிலை வளர்ச்சியை உறுதி செய்வதும் இந்த எளிய வணிகங்களே! மேலும், சுயசார்பு மற்றும் மகளிர் முன்னேற்றம் போன்றவற்றிக்கு வித்திட்டதும் இத்துறையே! அதாவது, கிராமப்புறச் சுய உதவிக் குழுக்கள் முதல் இரண்டாம் கட்ட நகரங்களின் தொழில்நுட்பத் தொடக்க நிறுவனங்கள் (Start-ups) வரை,
ஏராளமான பெண்களும்-இளைஞர்களும் சொந்தக்காலில் நிற்க இத்துறை பெரும் துணைபுரிகிறது என்பதே உண்மை!
‘சிறுதொழில் நிறுவனங்கள் நாட்டின் முதுகெலும்பு’ என்று
வாய்மொழியாகப் போற்றப்பட்டாலும், கடந்த பன்னிரண்டு ஆண்டு காலமாக மத்திய பா.ச.க.
அரசு எடுத்த தவறான மற்றும் தன்னிச்சையான பொருளாதார முடிவுகளால் இத்துறை சந்தித்த பின்னடைவுகள் வரலாற்றில் என்றும் மறக்க முடியாதவை.
குறிப்பாக,
2016-ஆம் ஆண்டு நவம்பரில் கொண்டு வரப்பட்ட இரவோடு இரவான பண மதிப்பிழப்பு நடவடிக்கை,
ரொக்கப் பணப்புழக்கத்தை மட்டுமே நம்பி இயங்கிவந்த சிறு, குறு நிறுவனங்களின் மீது தொடுக்கப்பட்ட பெரும் தாக்குதலாகும். தினசரி கூலித் தொழிலாளர்கள் வேலை இழந்தனர்; மூலப்பொருள்களை வாங்க முடியாமல் ஆயிரக்கணக்கான பட்டறைகள் மூடப்பட்டன. பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு எளிதாக மாற முடிந்தது; ஆனால், நாட்டின் மூலைமுடுக்குகளில் இருந்த எளிய சிறு வணிகர்கள் மீள முடியாத கடனில் மூழ்கினர்.
மேலும்,
முறையான தயாரிப்புகள் இன்றி, சிக்கலான வரி அடுக்குகளோடு அவசர அவசரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி.
வரிவிதிப்பு, சிறுதொழில் முனைவோருக்குப் பெரும் சுமையாகவே மாறியது. பெரிய நிறுவனங்கள் கணக்கு வழக்குகளைப் பராமரிக்கத் தனித் தணிக் கையாளர்களை நியமித்துக்கொண்டன. ஆனால், சிறிய கடைகளையும் பாத்திரப் பட்டறைகளையும் விசைத்தறிகளையும் வைத்திருந்த எளிய மனிதர்கள், சிக்கலான கணக்கீட்டியல் (ஆடிட்டிங்) முறைகளாலும், தாமதமான வரித் திரும்பப் பெறல் முறையினாலும் நசுக்கப்பட்டனர்.
அவ்வாறே,
அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்த போதிலும், வங்கிகளும் நிதி நிறுவனங்களும் சிறுதொழில் முனைவோருக்கு எளிய முறையில் கடன் வழங்குவதில் கடுமையான நிபந்தனைகளை விதிக்கின்றன. மேலும், பிணையம் இல்லாக் கடன்கள் ஏட்டளவில் மட்டுமே உள்ளன. அதேவேளையில், பல்லாயிரக்கணக்கான கோடிகளைப் பாக்கி வைக்கும் பெரும் கார்ப்பரேட் முதலாளிகளின் கடன்கள் எளிதில் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
இன்றைய
ஒன்றிய அரசின் தொழிற்கொள்கை என்பது ‘அம்பானி, அதானி போன்ற சில குறிப்பிட்ட கார்ப்பரேட் குழுமங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி’
என்ற கண்ணோட்டத்திலேயே இயங்குகிறது. துறைமுகங்கள், விமான நிலையங்கள், தொலைத்தொடர்பு, சில்லறை வர்த்தகம் என அனைத்துத் துறைகளிலும்
ஒருசில பெரிய நிறுவனங்களின் ஆதிக்கமே ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இதனால், பல தலைமுறைகளாகத் தொழில்
செய்துவந்த சிறு உற்பத்தியாளர்கள், கார்ப்பரேட் அரக்கர்களின் விலைப்போட்டியையும், சந்தை ஆதிக்கத்தையும் எதிர்கொள்ள முடியாமல் திணறுகின்றனர்.
மேலும்,
உள்ளூர் கைவினைப் பொருள்கள், தறி நெசவு, மட்பாண்டங்கள் மற்றும் பாரம்பரிய உணவு உற்பத்திகள், கார்ப்பரேட்டுகளின் எந்திரமயமாக்கப்பட்ட பொருள்களின் வருகையால் பாரம்பரியக் கலைகள் வீழ்ச்சியுற்று அழியும் நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளன. சிறுதொழில்கள் அழியும்போது, அவற்றில் பணியாற்றிய பல கோடி உழைப்பாளர்களின்
வாழ்வாதாரம் பறிபோய்விட்டது. இது நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தை மேலும் தீவிரமாக்கியுள்ளது.
இத்தகைய
சூழலில், அரசு தரப்பில் ‘உத்யம் பதிவுத் தளம்’
(Udyam Portal), ‘பிரதமரின்
விஸ்வகர்மா திட்டம்’,
‘Prime Minister\'s Employment Generation Programme (PMEGP)’ போன்ற பல வண்ணமயமான திட்டங்கள்
விளம்பரப்படுத்தப்படுகின்றன.
ஆனால், இவற்றின் பலன்கள் உண்மையில் எளிய கடைக்கோடி மனிதனைச் சென்றடைகிறதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே!
சிக்கலான
‘ஆன்லைன்’ விண்ணப்பச்
செயல்முறைகள் மற்றும் இடைத்தரகர்களின் ஆதிக்கம் காரணமாக, உண்மையான சிறு தொழிலதிபர்கள் இத்திட்டங்களின் பலன்களைப் பெறமுடிவதில்லை. வெறும் புள்ளிவிவரக் கணக்குகளைக் காட்டி ‘வளர்ச்சி அடைந்துவிட்டோம்’ என்று
அரசு கூறுவது சுயமரியாதையோடு உழைக்கும் சிறு வணிகர்களைக் கேலி செய்வதாகவே உள்ளது.
இந்தியப்
பொருளாதாரம் சரியான பாதையில் மீண்டெழ வேண்டுமானால், அரசு உடனடியாகத் தனது அணுகுமுறையினை மாற்றிக்கொள்ள வேண்டும். குறிப்பாக, சிறு, குறு நிறுவனங்களுக்குக் குறைந்த வட்டியில், பிணையற்றக் கடன்கள் தாமதமின்றிக் கிடைக்க வங்கிகளுக்குக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும். சிறு வணிகர்களுக்கு ஏற்ற வகையில் ஜி.எஸ்.டி.
முறையை மிகவும் எளிமைப்படுத்தவேண்டும்; சிறுதொழில்களுக்கான வரி விகிதங்களைக் குறைக்கவேண்டும்.
கார்ப்பரேட்
நிறுவனங்களின் மாபெரும் ஆதிக்கத்திலிருந்து உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கச் சிறப்புச் சந்தை மண்டலங்களையும், கொள்முதல் முன்னுரிமைகளையும் அளிக்க வேண்டும். மேலும், பருத்தி, இரும்பு, நெகிழி போன்ற மூலப்பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தி, சிறு நிறுவனங்களுக்கு நியாயமான விலையில் மூலப்பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும்.
இறுதியாக,
சிறுதொழில் என்பது வெறும் வணிகம் மட்டுமல்ல; அது பல கோடி குடும்பங்களின்
நம்பிக்கை, சுயமரியாதை மற்றும் வாழ்வாதாரம். சிறு தொழில்களை நசுக்கிவிட்டு, அம்பானி, அதானி போன்ற ஒருசில பன்னாட்டு நிறுவனங்களை மட்டும் வாழவைக்கும் தொழில் வளர்ச்சி ஒருபோதும் நீடித்த, நிலையான வளர்ச்சியாகாது. தேசிய சிறுதொழில் தினமான இந்த ஆகஸ்டு 30-இல், வெறும்
புகழாரங்களோடு நின்றுவிடாமல், சிறுதொழில் முனைவோரின் உண்மையான வலியை உணர்ந்து அரசு செயல்படவேண்டும்.
‘சிறுதொழில் வாழ்க!’ என்ற முழக்கம் காகிதங்களில் முழங்குவதைவிட, பட்டறைகளின் சத்தத்திலும், தொழிலாளர்களின் இன்முகத்திலும் எதிரொலிக்கவேண்டும். அப்போதுதான் இந்தியாவின் உண்மையான பொருளாதாரம் நிமிர்ந்து நிற்கும்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
“இன்ன இன்புறும் இனிய இத் திருப்பெயர் தன்னைப்
பன்ன,
இன்புறும் பன்னிய வாயும், உள் வணங்கி
உன்ன
இன்புறும் உன்னிய உன்னமும், இதனைத்
துன்ன
இன்புறும் துன்னிய திசையெலாம் அன்றோ!” (எண் 99)
என்கிறது
வீரமாமுனிவரின் ‘தேம்பாவணி’
எனும் தேன் தமிழ்க் காவியம். அதாவது, இயேசுவின் இனிய திருப்பெயரை உச்சரிப்பதனால் உதடுகளும், நினைப்பதனால் மனமும், அதை அடைவதனால் ஆனந்த வாழ்வும், இத்திருப்பெயர் செல்லும் இடமெல்லாம் கிடைத்திடுமே என்று இயேசுவின் திருப்பெயரின் மகிமையையும், அத்திருப்பெயர் விதைக்கப்படும் இடத்திலும் மக்கள் மனங்களிலும் வாழ்விலும் ஏற்படும் பெரும் மாற்றத்தையும் ஏற்றத்தையும் தாக்கத்தையும் பதிவு செய்கிறார் வீரமாமுனிவர்.
இயேசுவின்
திருப்பெயரைச் சுமந்து, மக்களுக்கு அறிவிக்க மறைபரப்புப் பணியை மேற்கொண்டு இந்திய மண்ணில் தடம்பதித்த திருத்தூதர் தோமா, அவரைத் தொடர்ந்து மதுரை மறைத்தளத்தில் சேசு
சபையார், அதன் வழியில் 17-ஆம் நூற்றாண்டில் புதுவை மண்ணில் மறைபரப்புப் பணியைத் திறம்பட மேற்கொண்டு அழியாத, ஆழமான சுவடுகளைப் பல்வேறு பணித்தளங்களில், பணிக்கூறுகளில் பதித்து, மக்கள் மனங்களில் நீங்காது இடம் பிடித்திருப்பவர்கள் ‘பாரிஸ் அயலக மறைபரப்புச் சபையினர்’(MEP - Missions
Etrangeres de Paris / Paris Foreign Missions Society).
“மறைப்பணி என்பது திரு அவையின் இதயம்” என்கிறார் மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ். தங்களின் தாய்நாடு, தாய் மொழி, உறவு, உடைமைகளைத் துறந்து, பண்பாட்டு நாகரிகங்களை விடுத்து, முகவரியைத் துறந்து புதிய இடங்களை, பணித்தளங்களைத் தழுவிக்கொண்டு, புதிய பண்பாட்டுச் சமூக விழுமியக் கூறுகளைத் தம்வயப்படுத்தி, மக்கள் மொழி பேசி, அவர்களின் மண்சார்ந்த சமூக மேம்பாடுகளில் திட்டமிட்டு, அவர்களின் களம் சார்ந்த அரசியலில் ஈடுபட்டு மனித மாண்பையும், மானுடநேயத்தையும், மகத்தான வாழ்வையும் அவர்கள் காண்பதற்காக இயேசுவின் திருநாமத்தை உரக்க உச்சரித்தவர்கள் இந்த MEP மறைப்பணியாளர்கள்.
‘எங்கள் வாழ்வும் வளமும் இம்மக்களுக்கே’ என்ற
முழக்கத்தோடு நிறைவான அருளையும் பொருளையும் தந்து, மறைத்தளங்களை வளமிக்க நம்பிக்கை கொண்டோரின் தளமாகக் கட்டமைத்ததுடன், மேய்ப்புப் பணிகளுக்கான நேர்த்தியான திட்டங்களும் செயல்பாடுகளும் உருவாக்கியிருப்பதை இந்திய மறைப்பணியின் வரலாற்றுப் பக்கங்களில் எங்கும் காணலாம். இரண்டரை நூற்றாண்டுகள் கடந்து நிற்கும் இந்த மகத்தான மறைப்பணியின் மாண்பினை உணர்ந்து, பாண்டி - கடலூர் உயர் மறைமாவட்டம், MEP சபையினர் புதுவை மறைப்பணித்தளத்தில் மேற்கொண்ட இறைப்பணியை நன்றியுணர்வோடும் மகிமையோடும் பெருமையோடும் கொண்டாடி மகிழ்கிறது. இவ்வேளையில், ‘நம் வாழ்வு’ வார இதழ் சிறப்பிதழை வெளிக்கொணர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது.
MEP மறைப்பணியாளர்களின் இப்பணிகள் உலகெங்கும் வாழும் தமிழ்க்கூறும் நல்லுலகிற்குச் சென்று சேரவேண்டும் என்ற நல்லுணர்வோடு இச்சிறப்பிதழுக்கு ஆசி வழங்கியுள்ள பாண்டி - கடலூர் உயர்மறைமாவட்டப் பேராயர் மேதகு பிரான்சிஸ் கலிஸ்ட் அவர்களுக்கும், இப்பணியை முன்னின்று எடுத்துச் செல்கின்ற யூபிலி வரலாற்றுப் பணிக்குழு உறுப்பினர்களுக்கும், அவர்களை ஒருங்கிணைத்திருக்கும் அருள்முனைவர் L.A. அருள்புஷ்பம்
அவர்களுக்கும் ‘நம் வாழ்வு’ தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
திரு
அவையின் மறைப்பணி மங்காது ஒளி வீசட்டும்! பாண்டி-கடலூர் உயர் மறைமாவட்டத்தில் MEP மறைப்பணியாளர்கள்
உருவாக்கிய மறைப்பணித் திட்டங்களும் இலக்கும்
நோக்கமும் வளர்ந்து உயர்ந்திடவும், அதனால் மக்கள் பணி செழித்திடவும் இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில் வாசகர்கள் சார்பாக ‘நம் வாழ்வு’ மனதார வாழ்த்துகிறது!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர் செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
‘இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும்
வல்ல தரசு’
(குறள் 385)
என்றார்
ஐயன் வள்ளுவர். அதாவது, பொருள் வரும் வழிகளை உருவாக்குவதும், வந்த பொருளைத் தொகுப்பதும், தொகுத்தவற்றைப் பிறர் கவராமல் காப்பதும், காத்தவற்றை அறம், பொருள், இன்பம் நோக்கிச் செலவிடுவதும் ஆகிய இவற்றில் திறமை மிக்கதே சிறந்த அரசாகும்.
அதன்
அடிப்படையில், தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் ஒரு புதிய தொடக்கமாக, தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.)
அரசின் முதல் நிதிநிலை அறிக்கை (2026-2027) அண்மையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ‘மாற்றம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து ஆட்சியைப் பிடித்த ஒரு புதிய அரசு, தாக்கல் செய்யும் முதல் வரவு-செலவுத் திட்டம் என்பதால், இதன் மீதான மக்களின் எதிர்பார்ப்பு மலைபோல் குவிந்திருந்தது.
அறம்,
பொருள், இன்பம் எனும் முப்பால் கோட்பாட்டை மையமாகக் கொண்டு, பத்து தூண்களைக் கொண்ட ‘வெற்றித் தமிழகம் - தொலைநோக்குத் திட்டங்கள்’ என்ற
வகையில் இந்த நிதிநிலை அறிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.
2036-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உயர்த்தும் இலக்கும் இதில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும்,
வள்ளுவன் வகுத்த இலக்கணப்படி, நிதி ஆதாரங்களைப் பெருக்கி, நிதி ஒழுங்கைப் பேணி, மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் பேராற்றல் இந்தப் பட்ஜெட்டில் வெளிப்பட்டுள்ளதா? அல்லது இது வெறும் வாக்குறுதிகளின் வண்ணப்பூச்சாக அமைந்துள்ளதா? என்ற கூராய்வு மிகவும் அவசியமாகிறது.
‘Gen-Z’ எனும் இளைய தலைமுறையினர், மாணவர்கள் மற்றும் மகளிரை இலக்காகக் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ள சில திட்டங்கள் த.வெ.க.
அரசின் தொலைநோக்குப் பார்வையை எடுத்தியம்புகின்றன. குறிப்பாக, கல்லூரி மாணவர்களின் தகவல் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தவும், எண்மத் தொழில்நுட்ப இடைவெளியைக் குறைக்கவும் அறிவிக்கப்பட்டுள்ள ‘வெற்றி மடிக்கணினித் திட்டம்’(ரூ. 2,000 கோடி ஒதுக்கீடு) பாராட்டுக்குரியது. அதேபோல, 12 இலட்சம் கல்லூரி மாணவர்களுக்கும், 1 இலட்சம் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கும் தொழில்முறைத் திறன் பயிற்சி அளிக்கும் ‘வெற்றித் திறன் பயிற்சித் திட்டம்’
(ரூ. 150 கோடி) இளையோரின் வேலைவாய்ப்புத் திறனை உயர்த்தும். தொழில்பயிற்சி நிறுவனங்களில் (ITI), செயற்கை
நுண்ணறிவு (AI) பிரிவுகள்
தொடங்குவது காலத்தின் தேவைக்கேற்ற நகர்வாகும்.
அவ்வாறே,
தமிழ் வளர்ச்சி, விளையாட்டுத் துறை, மின்சார வாகன விற்பனைக்கான ஊக்கத்தொகை மற்றும் கூவம்-அடையாறு நதிகளை மீட்டெடுக் கும் நீண்டகால உறுதிமொழிகள் ஆகியவை வரவேற்கத்தக்கவை. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம், 8 கிராம் தங்கம் மற்றும் பட்டுப்புடவை வழங்கும் திட்டம், இரு மாதங்களுக்கு 500 யூனிட் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு 200 யூனிட் விலையில்லா மின்சாரம் போன்ற அறிவிப்புகள் எளிய மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன.
மேலும்,
கிராமப்புறங்களில் காங்கிரீட் வீடுகள் கட்டுவதற்கான அலகுத் தொகையை ரூ. 3.10 இலட்சத்திலிருந்து ரூ. 5 இலட்சமாக உயர்த்தியிருப்பது (ரூ. 3,500 கோடியில் 70,000 வீடுகள்) வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்குப் பெரும் கொடையாகும். அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை இருந்த காலை உணவுத் திட்டத்தை 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை நீடித்துள்ளது பாராட்டுக்குரியதே!
மிகவும்
குறிப்பிடத்தக்க வகையில், ஊரக வேலை உறுதித் திட்டத்தில் கூடுதலாக 25 நாள்கள் சேர்த்து 150 நாள்கள் வேலை வழங்கும் ‘வெற்றி 150’ திட்டம் மற்றும் நலிவடைந்த பெண்களுக்கு 100% மானியத்தில் ஆடுகள்
வழங்கும் ‘வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்’
(ரூ. 110 கோடி) ஆகியவை கிராமப்புறப் பொருளாதாரத்திற்குப் புத்துயிரூட்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கான 1,000 நடமாடும் மருத்துவ மையங்கள் மூத்தோரைப் பேணுதல், சமூகத்தில் மானுட மாண்பினைக் காத்தல் எனும் அறநெறி மதிப்பீட்டின்மீது இவ்வரசு கொண்டுள்ள தொலைநோக்குச் சிந்தனையை வெளிக்காட்டுகிறது.
ஆயினும்,
அரசியல் ரீதியாகப் பல வாக்குறுதிகளைத் தந்து
அதிகாரத்தைப் பிடித்த இந்த அரசு, நிதி எதார்த்தங்களை எதிர்கொள்ளும்போது தடுமாறுவதையும் இந்த நிதிநிலை அறிக்கை தெளிவாகக் காட்டுகிறது.
குறிப்பாக,
ஒரு மாநிலத்தின் அறிவு மூலதனத்தைப் பெருக்கவேண்டிய அரசு, கல்வித் துறைக்கான நிதியைக் குறைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதாவது, 2025-26 ஆம் ஆண்டில் ரூ. 46,767 கோடியாக இருந்த பள்ளிக் கல்வித் துறைக்கான ஒதுக்கீடு, நடப்பு பட்ஜெட்டில் ரூ. 44,527 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இடைக்காலப் பட்ஜெட்டில் ரூ. 48,534 கோடி சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் இது மிகப்பெரிய வீழ்ச்சியாகும். அதே போல, உயர் கல்வித்துறைக்கு கடந்த ஆண்டில் ரூ. 8,494 கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு, தற்போது ரூ. 8,393 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. வெற்றி மடிக்கணினித் திட்டத்தைக் கொண்டு வந்துவிட்டு, அடிப்படை உள்கட்டமைப்புக்கான நிதியைக் குறைப்பது முரண்பாட்டின் உச்சமாகவே பார்க்கப்படுகிறது.
மேலும்,
குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் மாத உதவித்தொகை ரூ. 2,500 ஆக உயர்த்தப்படும் மற்றும்
ஆண்டுக்கு 6 இலவசச் சமையல் எரிவாயு உருளைகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதியும், பெண்களுக்கான
பேருந்து கட்டணமில்லாப் பயண விரிவாக்கம் மற்றும் வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு மாதம் ரூ. 4,000 உதவித்தொகை குறித்தும்
பட்ஜெட்டில் ஒரு வார்த்தைகூட இல்லை என்பதும் பெரும் ஏமாற்றமாகவே பார்க்கப்படுகின்றன. அவ்வாறே, தற்காலிக மற்றும் ஒப்பந்தப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வது குறித்த அறிவிப்போ, பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யவேண்டும் என்ற விவசாயிகளின் நியாயமான கோரிக்கை குறித்த அறிவிப்போ இதில் இடம் பெறவில்லை என்பதும் பெரும் கவலையளிக்கிறது.
மேலும்,
கூர்ந்து கவனிக்கத்தக்க வகையில் இந்த நிதிநிலை அறிக்கையில், நிதி ஒதுக்கீட்டு முரண்பாடும் வெளிப்படுகிறது. அதாவது, ஒன்றிய அரசின் புதிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் (வி.பி.ஜி.
ராம்ஜி திட்டம்) மாநில அரசு தன் பங்காக ரூ. 5,057 கோடியை ஒன்றிய அரசுக்குச் செலுத்த வேண்டியுள்ளது. இந்நிலையில், கூடுதலாக 25 நாள்கள் வேலை வழங்கி 150 நாள்களாக உயர்த்தும் ‘வெற்றி 150’ திட்டத்திற்கு அரசு ஒதுக்கியுள்ள நிதி வெறும் ரூ. 100 கோடி மட்டுமே என்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
இந்நிலையில்,
“தமிழ்நாடு அரசு இதுவரை வாங்கியுள்ள கடன்களை முழுமையாக அடைத்து முடிக்க, இன்றிலிருந்து குறைந்தது 50 ஆண்டுகள் ஆகும்” என்ற மாநிலத்தின் நிதி நிலைமை குறித்து நிதித்துறைச் செயலர் எம்.ஏ. சித்திக்கின் எச்சரிக்கையும்,
நிதியமைச்சரின் புள்ளிவிவரங்களும் தமிழ்நாட்டின் கடன் மேலாண்மையில் உள்ள ஆபத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. அரசுத் தரப்பில் திறம்பட வரி வருவாயைப் பெருக்காமல், கடனை நம்பியே திட்டங்களைச் செயல்படுத்துவது எதிர்காலச் சந்ததியினரின் தலையில் பேரிடியை இறக்குவதற்குச் சமம். “ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தின் மொத்தக் கடன் சுமை ரூ. 20 இலட்சம் கோடியாக உயரும்” என்ற மேனாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களின் நிதித்துறை சார்ந்த மதிப்பீடுகள், த.வெ.க.
அரசு நிதி நிர்வாகத்தில் சந்திக்கவிருக்கும் பெரும் சவாலை சுட்டிக்காட்டுகின்றன.
இருப்பினும்,
அரசு மற்றும் அரசு சார்ந்த பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகளில் (Tenders) வெளிப்படைத்தன்மையைக்
கொண்டுவர எடுத்திருக்கும் முயற்சிகள் பாராட்டத்தக்கவையே! பிற துறை ஒப்பந்த நிறுவனங்களும் பங்கேற்கலாம் என்ற புதிய முறை, அரசுக்குச் செலவைக் குறைத்தாலும், பணிகளின் தரத்தையும் உறுதியையும் பராமரிப்பதில் அரசு சற்றும் சமரசம் செய்துகொள்ளக்கூடாது என்றே நாம் விரும்புகிறோம்.
இறுதியாக,
மாணவர்கள், இளைஞர்கள், மகளிருக்கான புதிய திட்டங்கள் மூலம் அரசு தன் ‘தொலைநோக்குப் பார்வையை’
நிரூபிக்க முயன்றிருந்தாலும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததும், கல்வி நிதிக்குறைப்பும், விண்ணை முட்டும் கடன் சுமையும் எளிய மக்களின் ‘தொலை தூரக் கனவுகளை’ இன்னும் தூரமாக்கியுள்ளன.
ஆகவே,
நிதி ஒழுங்கோடும், மக்கள் நலச் சிந்தனையோடும் நடைமுறைப்படுத்தப்பட்டால் மட்டுமே இந்த ‘வெற்றித் தமிழகம்’ உண்மையான வெற்றியைச் சுவைக்கும்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
சனநாயகத்தின் உன்னதமான நோக்கம், மக்கள் நலன் சார்ந்த ஆட்சியை அமைப்பதாகும். ஆனால், இன்றைய சூழலில் மத்தியிலும் மாநிலங்களிலும் (தமிழ்நாடு உள்பட) நிலவும் ஆட்சி அமைப்புகள் தங்களின் உண்மையான சனநாயகக் கடமையிலிருந்து விலகி, ஒருசில அதிகாரச் சக்திகள் மற்றும் நிதி மூலதனக் குழுக்களின் கரங்களில் சிக்குண்டு கிடக்கின்றன என்பதுதான் எதார்த்தமான கசப்பு மிகுந்த உண்மை.
இத்தகைய
சூழலில், இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கூட்டாட்சித் தத்துவமும், அமைச்சரவைச் செயலகங்களின் அதிகாரப் பகிர்வுகளும் வெறும் ஏட்டுச் சுரைக்காயாகவே மாறிப்போயின.
‘அரசியல்’ என்பது கொள்கை வழிபட்டது அல்ல; மாறாக, அது முதலீடு, இலாபம், அதிகாரம் என்ற வணிகக் கணிதமாக இன்று சுருங்கிவிட்டது. திரைப்படங்களுக்கு நிதி அளிக்கும் ‘நிதியாளர்கள்’ (Financiers) போல இன்றைக்கு அரசியலையும், அரசியல் கட்சிகளையும், ஏன்... ஆட்சிகளையுமே பின்னணியில் இருந்து இயக்கும் ‘அரசியல் நிதி முதலீட்டாளர்கள்’ (Political Financial Investors) உருவாகிவிட்டார்கள். சிறுமதி கொண்ட இந்த வெகுமதியாளர்களின் பணபலத்தாலும், பின்புல ஆதிக்கத்தாலும் ஆட்சி அதிகாரத்தில் அமர்பவர்கள் மக்கள் பிரதிநிதிகளாகச் செயல்படாமல், வெறும் பொம்மைகளாகப் பல நேரங்களில் உலா
வருகிறார்கள்.
மத்தியிலும்
சரி, மாநிலத்திலும் சரி, இன்றைய ஆட்சி நிர்வாக அமைப்பில் அமைச்சர்களுக்குத் தங்களின் துறை சார்ந்த அடிப்படை அறிவோ, அரசின் சட்டதிட்டங்கள் குறித்த புரிதலோ, ஏன்... ஓர் அமைச்சகத்தின் அன்றாடக் கடமைகள் என்ன என்பது பற்றிய தெளிவோ சிறிதும் இல்லாமல் இருப்பதுதான் இந்தச் சனநாயகத்தின் மிகப்பெரிய அவலம்.
அமைச்சரவை
என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவார்ந்த தலைவர்களின் வழிகாட்டுதலில் இயங்க வேண்டும். ஆனால், தொழில்நுட்பமும் சட்ட நுணுக்கங்களும் நிர்வாகத் திறனும் தேவைப்படும் இக்காலகட்டத்தில், தங்களின் தகுதியைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் வெறும் அரசியல் அறிமுகம், நட்பு, நெருக்கம் போன்றவற்றை மட்டுமே தகுதியாகக் கொண்டு அமைச்சர்களாகிவிடும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் குடிமைப்பணி அதிகாரிகளின் கைகளில் ஆட்சி நிர்வாகம் முற்றிலும் முடங்கிப்போகிறது அல்லது நிழல் உலக நிதி முதலாளிகளின் கட்டளைக்கேற்பக் கோப்புகள் நகரத் தொடங்குகின்றன.
ஒன்றியத்தில்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ச.க.
அரசு எதேச்சதிகாரப் போக்கோடு செயல்படுகிறது என்ற விமர்சனம் பரவலாக உள்ளது. எனினும், தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் ஜோசப் விஜய், அதே மோடி மாடலைத் தனது ஆட்சி மாடலாகக் கொண்டிருப்பதுபோல் தோன்றுவது, மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில்
எந்தவொரு கொடூர நிகழ்வு நடந்தாலும் வாய் திறக்காதவர்களாகவே இருவரும் வலம் வருவது, ‘மக்கள்மைய அரசியலை’ கேள்விக்குறியாக்குவதோடு கேலிக்குள்ளாக்குவதாகவும் இருக்கிறது. தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நிகழும் காவல்நிலைய மரணங்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பழனி கோவில் நிலம் மோசடியாகத் திட்டமிட்டு விற்கப்பட்ட பெரும் அதிர்ச்சியான நிகழ்வு, காவிரி நதிநீர்ப் பிரச்சினை, மேகதாது அணைப் பிரச்சினை, ‘நீட்’ தேர்வு குறித்த மாணவர் போராட்டம்... இவை எதற்கும் அரசு பொறுப்பேற்பதில்லை.
டெல்லியில்
‘நீட்’ தேர்வுக்கு
எதிராக நாடு தழுவிய மாணவர் போராட்டங்கள் கொழுந்துவிட்டு எரியும்போது, முதலமைச்சரும், ஒட்டுமொத்த அமைச்சரவையும் ‘ஜனநாயகன்’
திரைப்படத்தைப்
பார்த்து உணர்ச்சிப்பெருக்கில் மிதக்கிறார்களே தவிர, நாட்டைப் பற்றிய கவலை இல்லை.
தமிழ்நாட்டின்
பல பகுதிகளிலும் சென்னையிலும் ஜந்தர் மந்தர் போராட்டத்திற்கு ஆதரவாக மாணவர்கள் வீதியில் இறங்கிப் போராடியபோது, தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிப்படுத்தவில்லை. இராகுல் காந்தி கைது செய்யப்பட்ட பிறகே பா.ச.க.-வின் பெயரைக் கூடக் குறிப்பிடாமல் ஒரு மென்மையான கண்டன அறிக்கையோடு தன் கடமையை முடித்துக் கொண்டது.
அரசமைப்புச்
சட்டம் வழங்கிய போராட்ட உரிமைகளைக்கூட இவ்விரு அரசுகளும் நசுக்குகின்றன.
பல இடங்களில் போராடிய மாணவர்களையும், அரசியல் கட்சித் தலைவர்களையும் காவல்துறை கடுமையாகத் தாக்கியுள்ளது. ‘தெருவில் இறங்கிப் போராடக் கூடாது’ என்ற அமைச்சர்களின் கூற்று, சனநாயகத்தைப் பற்றிய அவர்களின் அற்பப் புரிதலையே காட்டுகிறது. போராட்டம் என்பதே வீதியில் இறங்கி மக்களுக்காகக் குரல் கொடுப்பதுதானே?
‘நீட்’ தேர்வு முறைகேடுகள் நாடெங்கும் பற்றி எரியும் பிரச்சினையாக இருக்கும்போதும் மௌனம் காப்பதும், விமர்சனங்களை எதிர்கொள்ளத் தயங்குவதும், விமர்சிப்பவர்களைக் கைது செய்வதும் நல்ல தலைமைக்கான அழகல்ல. ஒன்றியத்தில் மோடியை எதிர்க்கும் காங்கிரஸ், தமிழ்நாட்டில் விஜய்க்கு முட்டுக்கொடுப்பது அவர்களின் எதிர்கால அரசியலுக்கே ஆபத்தானது. தி.மு.க.
மீதான வன்மத்தால் சிறுமதியாளர்களின் தூண்டுதலுக்குப் பலியாகி இராகுல் காந்தி எடுத்த இந்தக் கூட்டணி முடிவு தவறானது என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
மேலும்,
தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் இந்த அரசு காட்டும் மெத்தனப் போக்கு பெரிதும் கண்டிக்கத்தக்கது. “மேகதாது அணைப் பிரச்சினையில் டெல்லி எஜமானர்களைப் பகைத்துக்கொள்ளாமலும், ஆட்சிக்கட்டிலைக் காப்பாற்ற காங்கிரசுக்கு எதிராகப் பேசாமலும், தமிழ்நாட்டின் உரிமையை முதலமைச்சர் அடகு வைத்துள்ளார்” என
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி குற்றம் சாட்டியுள்ளது இங்கு கவனிக்கத்தக்கது.
மாநிலங்களவையில்
பா.ம.க. தலைவர்
அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு, “காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவொரு கட்டுமானத்தையும் மேற்கொள்ள கீழ்பாசன மாநிலமான தமிழ்நாட்டின் அனுமதியைப் பெறவேண்டும் என உச்ச நீதிமன்றத்
தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை” என
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் பூஷன் சௌத்ரி அளித்த பதில் தமிழ்நாட்டில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயினும்,
“2018 பிப்ரவரி 16-ஆம் தேதியிட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் சட்ட விதிகளைக் கணக்கில் கொள்ளாமல் மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் அளித்த பதில் ஏமாற்றமளிக்கிறது. அந்தப் பதில் உடனடியாகத் திரும்பப் பெறப்படவேண்டும்; மேகதாது திட்டம் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பிற்கு உட்பட்டது என்பது நிரூபிக்கப்படும் வரை அதற்கு எவ்வித சட்டப்பூர்வ அனுமதியும் வழங்கக்கூடாது” எனப்
பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய், காலம் தாழ்த்தி எழுதியுள்ள கடிதமும் பாராட்டத்தக்கதே!
காவிரி
ஆறு என்பது வெறும் நீர் ஆதாரம் மட்டுமல்ல, தென்னிந்தியாவின் கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம். ஆனால், ஒன்றிய அரசின் இந்தத் துரோகப்போக்கிற்கு எதிராக வெறும் கடிதங்களோடு நிறுத்திக்கொள்ளாமல், வலுவான அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்களை தமிழ்நாடு அரசு முன்னெடுக்கவேண்டுமென்றே மக்கள் விரும்புகின்றனர். மேலும், வேகம் அல்ல விவேகமே இந்த அரசிற்கு வேண்டுமென அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இன்றைய
அரசியல் களம், கொள்கை அற்ற வெறும் ‘நிதி முதலீட்டாளர்களின்’ விளையாட்டு
மைதானமாக மாறிவிட்டது. அரசியலைப் பற்றிய போதிய தெளிவு இல்லாத, மக்கள் நலனில் அக்கறையற்ற, வெறும் விளம்பர வெளிச்சத்தில் மிதக்கும் நபர்களிடம் ஆட்சி அதிகாரம் சிக்கிக்கொண்டது.
இச்சூழலில்,
சிறுமதி கொண்ட வெகுமதியாளர்களால் நமது அரசியல் தினமும் சீரழிந்து கொண்டிருக்கிறது. இந்த அவலநிலை மாறவேண்டுமானால், சமூகப் பொறுப்பும், அரசியல் தெளிவும், சட்ட அறிவும் கொண்ட கற்றறிந்த இளைஞர்கள் துணிவோடு அரசியலுக்கு வரவேண்டும்.
அரசியல்
என்பது வெறும் வாக்கு வங்கி வியாபாரம் அல்ல; மாறாக, அது சமூக மாற்றம் மற்றும் மக்கள் சேவைக்கான கருவி என்பதை உணர்ந்த இளம் தலைமுறை பொறுப்பேற்க முன்வரவேண்டும்.
பணபலமும்,
திரையுலகச் செல்வாக்கும் மட்டுமே தகுதி என்று நினைக்கும் அரசியலை வீழ்த்தி, அறிவு சார்ந்த, கொள்கை சார்ந்த புதிய சனநாயகத்தை உருவாக்க கற்றறிந்த இளைஞர்கள் தலைமை ஏற்கவேண்டிய தருணம்
இதுவே!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்