news
வத்திக்கான் செய்திகள்
“அதிக அன்போடு இறைநகரைக் கட்டியெழுப்புங்கள்”

பிரேசிலின் போர்ட்டலேசா நகரில் ஜூலை 22 முதல் 26 வரை நடைபெற்றஅல்லேலூயாகத்தோலிக்க இசை விழாவில் பங்கேற்ற இளையோருக்குத் திருத்தந்தை லியோ அனுப்பிய சிறப்பு காணொளிச் செய்தியில், தூய ஆவியாரின் வல்லமையால் தங்களின் இளமைப் பருவத்தை நற்செய்தி அறிவிப்பின் ஆற்றலாக மாற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், “ஒவ்வொருவரும் நாம் பெரிதும் விரும்பும் அமைதியின் நகரை அல்லது புனித அகஸ்டின் கூறியதுபோல இறைவனின் நகரைக் கட்டியெழுப்பும் வாழும் கற்களாக மாறவேண்டும்என்று ஊக்கப்படுத்தியுள்ளார்.

நமது ஆழமான விருப்பங்களுக்குப் பதிலளிப்பவர் இயேசுவே என்பதை உலகிற்கு அறிவிக்கவேண்டும். கிறிஸ்து இல்லாத வாழ்வு அருளற்ற வாழ்வு என்பதைத் துணிவோடு பிரகடனம் செய்வோம்எனவும் அழைப்பு விடுத்துள்ளார். அவ்வாறே, செபத்தின் மூலம் நம்பிக்கைச் சுடரைத் தொடர்ந்து எரிய வைக்கவேண்டும் என்றும், சமூக ஊடகங்களையும் செயற்கை நுண்ணறிவையும் மிதத்தோடும் ஒழுக்கத்தோடும் நல்வழியில் பயன்படுத்த புனித கார்லோ அகுத்திஸை முன்மாதிரியாகக் கொள்ளுமாறும் இளையோருக்குத் திருத்தந்தை அறிவுறுத்தியுள்ளார்.

news
வத்திக்கான் செய்திகள்
“தொழில்நுட்பம் உண்மைக்கும் பொதுநலனுக்கும் சேவை செய்யவேண்டும்” - திருத்தந்தை லியோ

சிலியின் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 27-28 தேதிகளில் நடைபெற்றசெயற்கை நுண்ணறிவின் சவால்கள்என்ற உலகக் கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்குத் திருத்தந்தை லியோ அனுப்பிய செய்தியில், “தொழில்நுட்ப வளர்ச்சியால் கிடைக்கும் புதிய வாய்ப்புகளுக்கு இடையே, மனிதக் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையிலும், உண்மைக்கும் பொதுநலனுக்கும் சேவை செய்யும் வகையிலும் செய்தித்தொடர்புகள் அமையவேண்டும்என அழைப்பு விடுத்துள்ளார்.

திருத்தந்தையின்மகத்தான மானுடம்(Magnifica Humanitas) என்ற சுற்றுமடலின் அடிப்படையில், செயற்கை நுண்ணறிவின் அறநெறி மற்றும் பண்பாட்டுத் தாக்கங்கள் குறித்து இலத்தீன் அமெரிக்கப் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் ஆலோசித்தனர். சாண்டியாகோ பேராயர் கர்தினால் பெர்னாண்டோ சோமாலி தொடக்க உரையாற்றுகையில், “சமூக ஊடகங்கள் மனித உறவுகளையும் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் தளங்கள். தொழில்நுட்ப வளர்ச்சியை விட மனிதக் கண்ணியமும் உண்மையுமே மிக முக்கியம்என்று வலியுறுத்தினார். தொழில்நுட்ப மற்றும் அறிவியல் வளர்ச்சி அனைத்திற்கும் மனிதனின் மீறமுடியாத கண்ணியமே முதன்மை அடிப்படையாகவும் இறுதி இலக்காகவும் இருக்கவேண்டும் என்று கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

news
வத்திக்கான் செய்திகள்
“அழகு நமது பார்வையை விண்ணை நோக்கி உயர்த்த உதவுகிறது” - திருத்தந்தை லியோ

காஸ்டெல் காண்டோல்போ அப்போஸ்தலிக்க அரண்மனை முற்றத்தில், அல்பானோ மறைமாவட்டம் சார்பில் திருத்தந்தையின் கோடைக்கால வருகையைப் போற்றும் வகையில் நடைபெற்ற இசைக் கச்சேரியின் நிறைவில் உரையாற்றிய திருத்தந்தை, “நாம் அழகு குறைந்து காணப்படும் ஓர் உலகில் வாழ்கிறோம். போர்கள், வெறுப்பு, வேலையின்மை எனப் பல பிரச்சினைகள் சூழ்ந்த இந்நாள்களில், இதுபோன்ற கலைநிகழ்ச்சிக்காக நாம் ஒன்றுகூடுவது ஒரு பெரிய வரமாகும்என்று தெரிவித்துள்ளார்.   இசை, கலை மற்றும் அழகு ஆகியவை தற்போதைய கடினமான சூழல்களுக்கு அப்பாற்பட்டு நமது பார்வையைக் கடவுளை நோக்கி உயர்த்தவும், மனித மாண்பை மீட்டெடுக்கவும் உதவுகின்றன என்றும் திருத்தந்தை குறிப்பிட்டார். அண்மையில் தான் மேற்கொண்ட ஸ்பெயின் பயணத்தின் நோக்கமும் இதுவே என்றும் அவர் நினைவுகூர்ந்தார்.

வயலின் கலைஞர் மார்கோ ரோக்லியானோ மற்றும் பியானோ கலைஞர் ரொசானா டோமாசி கோல்கர் ஆகியோரின் சிறப்பான இசைத் திறமையைப் பாராட்டிய திருத்தந்தை, இறைவனின் படைப்பில் உறைந்துள்ள பேரழகை இந்த இசையின் மூலம் உணர முடிந்ததாகக் கூறி, கலைஞர்களுக்கும், அல்பானோ மறைமாவட்டத்திற்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

news
வத்திக்கான் செய்திகள்
“ஆயுதக் குறைப்பால் மட்டுமே அமைதியை உருவாக்க முடியும்” - திருத்தந்தை லியோ

அணு ஆயுதப் பெருக்கத்தால் அல்ல; மாறாக, படிப்படியான ஆயுதக் குறைப்பால் மட்டுமே உலக அமைதியை உருவாக்க முடியும்என்று திருத்தந்தை லியோ தெரிவித்துள்ளார். வத்திக்கான் பதிப்பகம் வெளியிட்டுள்ளஆயுதங்களற்ற நிலை: அமைதி ஒரு கொடைஎன்ற அவரது புதிய நூலில் இக்கருத்துகள் இடம்பெற்றுள்ளன. உலக அளவில் உக்ரைன், மத்திய கிழக்கு, சூடான் மற்றும் ஏமன் உள்ளிட்ட 103 நாடுகள் போரில் ஈடுபட்டுள்ள சூழலைச் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை, “மூன்றாம் உலகப்போர் துண்டு துண்டாகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதுஎன்று கவலை தெரிவித்துள்ளார். அணு ஆயுதப் போட்டியும், நவீனத் தொழில்நுட்பச் சேர்க்கையும் மனிதகுலத்தின் இருப்பிற்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக எச்சரித்துள்ளார். அமைதி என்பது தனிநபரின் அன்றாட நடத்தையிலிருந்தும், மன்னிக்கக்கூடிய மனப்பக்குவத்திலிருந்தும் தொடங்குகிறது என்றும், அது அணு ஆயுதங்களின் அச்சுறுத்தலால் ஒருபோதும் சாத்தியமாகாது. இயந்திரங்கள் முடிவெடுக்கும் நவீன உலகில் மனிதச் சான்றாண்மையே பேரழிவைத் தவிர்க்கும். எனவே, வன்முறையற்றப் பாதையில் பயணித்து அமைதியைக் கட்டியெழுப்ப உலக மக்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.

news
வத்திக்கான் செய்திகள்
சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்தோனேசிய மரியன்னை திருப்பயணம்!

இந்தோனேசியாவின் புளோரஸ் தீவில் உள்ள லபுவான் பாஜோ மறைமாவட்ட ஆயர் மாக்சிமஸ் ரெகஸ், ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள புகழ்பெற்றகோலோ கோயேதிருவிழாவை முன்னிட்டு, விண்ணேற்பு அன்னை திருவுருவத்தின் வாராந்திர மாபெரும் திருப்பயணத்தைத் தொடங்கி வைத்துள்ளார். இவ்வாண்டின் திருப்பயணம் அன்னை மரியாவின் மீதான பக்தியோடு சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் இணைக்கும் உன்னத நோக்கத்துடன், ‘இறைப்படைப்பின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க ஒன்றிணைந்த திருப்பயணம்என்ற கருப்பொருளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவை எதிர்கொள்ளும் வகையில் கடற்கரை தூய்மைப் பணி, தென்னை மரக்கன்றுகள் நடுதல் போன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுடன் இது தொடங்கப்பட்டுள்ளது. இத்திருப்பயணத்தின் வழியெங்கும் நிலவிய மதநல்லிணக்கம் ஒரு முக்கிய மைல்கல்லாகும். அன்னை மரியாவின் திருவுருவப் பவனி இசுலாமியர் வாழும் கிராமத்தைக் கடந்தபோது, அங்குள்ள மக்கள் பாரம்பரிய நடனமாடி அன்போடு வரவேற்றனர். ஆகஸ்டு 10 முதல் 15 வரை நடைபெறவுள்ள இறுதி விழாக்களில் இத்தீவின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இளைஞர்களும் சமூகமும் ஒன்றிணைய உள்ளனர்.

news
வத்திக்கான் செய்திகள்
“செயற்கை நுண்ணறிவு மனித இதயத்தை உருவாக்க முடியாது”

இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் செய்தித் தொடர்புப் பிரிவு (CBCI-OSC) மற்றும்நிஸ்கார்ட்கல்வி நிறுவனம் இணைந்து, திருத்தந்தை 14-ஆம் லியோவின்மகத்தான மானுடம்திருமுகத்தின் வழிகாட்டுதலில், ‘செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மனித கண்ணியம்குறித்த உலகளாவிய கருத்தரங்கை நடத்தின. இதில் திரு அவைத் தலைவர்கள், இறையியலாளர்கள், ஊடக வல்லுநர்கள் பலர் கலந்துகொண்டு, அதிவேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பச் சூழலில் மனித விழுமியங்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர். கருத்தரங்கில் வத்திக்கான் செய்தித்துறை இயக்குநர் டாக்டர் நடாஷா கோவேக்கர் முதன்மை உரையாற்றினார். அப்போதுஎவ்வளவு அதிநவீன கணினி அமைப்பாக இருந்தாலும், மனித இதயத்தை உருவாக்க முடியாதுஎன்று குறிப்பிட்ட அவர், “தொழில்நுட்ப வளர்ச்சி எப்போதும் மனிதரை மையமாகக் கொண்டதாகவே இருக்கவேண்டும்என வலியுறுத்தினார்.