வெற்றியின் ஆயுதம் செபமாலை
துன்பங்களின்
ஆயுதம் செபமாலை
பணிவை
தந்திடும் செபமாலை
தினமும்
செபிப்போம் செபமாலை!
அன்னையின்
அரவணைப்பில் என்றும் வாழத் துடிக்கும் அன்னையின் செல்வங்களே! ‘செபமாலை மாதம்’ என்னும் இத்திங்களே அன்னையின் பிறப்பு விழாவை அடுத்து அவருக்கு இந்த மாதம் முழுவதும் செபமாலை மூலம் சிறப்பு செய்வது என்பது திரு அவையின் மூலம் இறைவன் நமக்குக் கொடுத்திருக்கும் இன்னும் ஒரு வாய்ப்பு. இதை விமர்சனம் செய்யும் சிலர் உள்ளனர்.
‘வெற்றி மாலையா? செபமாலையா?’ அதாவது ‘முட்டையிலிருந்து கோழியா? கோழியிலிருந்து முட்டையா?’ என்ற உங்கள் நிலைப்பாட்டில் நான் தலையிடவில்லை. பண்டைய நாள்களில் போருக்குச் சென்று வெற்றி பெற்று வருகையில் கொன்றை மாலைதான் வெற்றி மாலையாக அரசனுக்குச் சூட்டி, தோரணம் கட்டி கன்னிப் பெண்கள் வரவேற்பார்கள். இதற்கும் நமக்கும் என்ன?
புனித
தோமினிக் 1214-இல் அல்பிஜூனியர்களைக் கத்தோலிக்கர்களாக மாற்ற மூன்று நாள் ஒரு குகையில் தனிமையில் தவம் செய்தார். அப்போது மரியா காட்சியில் தோன்றி, செபமாலையைக் கொடுத்து, “செபி, அவர்கள் மனம் மாறுவார்கள்” என்றார்.
செபித்தார், வெற்றி பெற்றார்.
1571-இல் துருக்கியர்களுக்கும்
கிறித்தவர்களுக்கும் நடந்த போரில் செபமாலை செபித்த பின்பு வெற்றி பெற்றார்கள். எனவேதான் வெற்றி பெற்ற அக்டோபர் மாதம் ஏழாம் நாளை திருத்தந்தை ஐந்தாம் பக்திநாதர் ‘வெற்றி மாதா’ விழாவாக அறிவித்தார். இவ்வாறு வெற்றி மாதாவாகக் கொண்டாடிய விழாவைத் திருத்தந்தை 11-ஆம் கிளமெண்ட் மாற்றி 1573-இல் செபமாலை மாதா விழாவாகக் கொண்டாடப் பணித்தார்.
கிட்டதட்ட
அதே காலகட்டத்தில் இயேசு சபைக் குருக்கள் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு பணி செய்தார்கள். அப்போதே கருமுதன் என்ற சிற்றரசன் இங்கு ஆட்சி செய்த காலத்தில் கிறித்தவர்கள் இருந்தார்கள். அவர்கள் சிற்றாலயம் அமைத்து அதில் செபமாலை அன்னையின் சுரூபம் வைத்து வணங்கியதாக வரலாற்றில் காண்கிறோம். ஆனால், இப்போதுள்ள செபமாலை மாதா சுரூபம் மணிலாவில் இருந்து வந்தது என அறிகிறோம். மாதா
சுவாமிநாதருக்குக் காட்சி தந்த கால கட்டத்தில் செபமாலை மாதா பக்தி கருமுத்தன் நகரில் இருந்தது என்பது வரலாறு கூறும் உண்மை.
செபமாலை
பக்தி முயற்சி புதிய ஏற்பாடு நற்செய்தியினையும், திரு அவையின் பாரம்பரியப் போதனையையும் மீண்டும் மீண்டும் தியானிக்கச் செய்கிறது. இதன்மூலம் ஆண்டவர் இயேசுவின் வாழ்க்கை, திரு அவையின் வளர்ச்சி, அதில் மரியாவின் பங்கேற்பு... இவை இடம்பெறுகின்றபோது, இறைவார்த்தை வாசிப்பிற்கு இணையாக இம்முயற்சி உள்ளது.
இன்று
அன்னையின் திருக்காட்சிகளில் குறிப்பாக, பிரான்சிஸ் - லூர்து நகர் காட்சி, போர்ச்சுக்கல் - பாத்திமா நகர் காட்சிகளில் அன்னை செபமாலையுடன் செபித்த நிலையைக் காண்கிறோம். அதேசமயத்தில் காட்சி கண்ட சிறுவர்கள் மற்றவர்களையும் செபமாலையைச் செபிக்க அழைக்கிறார். இதிலிருந்து அதன் முக்கியத்துவத்தையும் அறிய முடிகிறது.
செபமாலை
செபிப்பது உறவுகள் உறுதிபெற என்பதை உணர்ந்து செபிப்போம். மரியா எலிசபெத்தைச் சந்தித்தது, காணாமல் போன மகனைத் தேடிச் சென்றது, கானாவூர் திருமணத்தில் ஏற்பட்ட துன்பத்தை அகற்றியது, இயேசுவைப் பின்தொடர்ந்த பெண்களை ஒருங்கிணைத்தது, கல்வாரிப் பயணத்தில் துணை நின்றது, பயந்து நடுங்கிய திருத்தூதர்களை ஒருங்கிணைத்துச் செபித்தது போன்ற நிகழ்வுகளில் மரியா உறவுக்குக் கைகொடுக்கிறார். இதற்குக் காரணம் மரியா இறைவார்த்தையை உள்ளத்தில் இருத்திச் சிந்தித்ததுதான். அதனால்தான் மரியாவை எலிசபெத்தும் (லூக் 1:42-43), கூட்டத்திலிருந்த பெண் ஒருத்தியும் (லூக் 11:27) பாராட்டுகிறார்கள்.
மகிழ்ச்சி
நிறை மறையுண்மைகளை நாம் தியானித்துச் செபிக்கும்போது, ‘இறைவனோடு எனது உறவு நிலை எப்படி உள்ளது?’ எனச் சிந்தித்துச் சீர்தூக்கிச் செம்மைப்படுத்த உதவுகிறது.
துயர்
நிறை மறையுண்மைகளைத் தியானித்துச் செபிக்கும்போது, பிறரோடு எனது உறவு, இயேசுவின் மேல் உள்ள அன்பை, அவரது கட்டளைகளை எப்படிச் செயல்படுத்துகிறேன்? எனச் சிந்தனை செய்து, மற்றவர்களோடு எனது உறவுப் பாலம் எப்படி உள்ளது என்பதை அறிந்து வாழ்ந்திட துணை செய்கிறது.
ஒளியின்
மறையுண்மைகளைத் தியானிக்கும்போது, எனது உறவு இயற்கையோடு எப்படி உள்ளது? என்பதை அறிய முடிகிறது. அங்கே நதி, மலை, கடல், புல்வெளி, வீடு என்று இயற்கை மணம் கமழ்கிறது. அந்த மணத்துடன் ஒன்றித்து வாழ்கிறேனா? எனச் சீர்தூக்கிப் பார்க்க அழைக்கிறது.
மாட்சி
நிறை மறையுண்மைகள் வழியாக, நாம் இறைவனோடு உறவுகொள்ள முடிகிறது. நாம் மண்ணிற்காக அல்லது விண்ணிற்காகப் படைக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து, தியானித்துச் செபிக்கும்போது இறைவனோடு தொடர் சங்கிலி போல் உறவோடு வாழ முடிகிறது. ஏனெனில், மண்ணில் பிறந்த மரியா விண்ணகத்திற்கு ஆன்ம உடலோடு சென்றது போல் நாமும் செல்வோம் என்ற நம்பிக்கை வழி நம் இறையுறவு வளர்கிறது. எனவே, செபமாலை உறவுகளின் சங்கமம், உன்னதமான உறவுகளை நமக்குத் தரும் சிறந்த செபம்.
புனித
ஜான் மரிய வியான்னி, புனித லூயிஸ் தே மாண்ட்போர்ட், புனித
அல்போன்ஸ் லிகோரி, புனித பியோ போன்றோர் செபமாலை பக்தி கொண்டவர்களாக இருந்து இன்று புனிதர்களாக உள்ளார்கள். புனித கேப்ரியல், “செபமாலை சாத்தானை நடுங்கச்
செய்கிறது; அனைவரும் செபமாலை செபித்தால் சாத்தான் உலகில் இருக்க வாய்ப்பில்லை” என்கிறார்.
எனவே,
அனைவரும் செபமாலை செபிப்போம்; அப்போது அன்னை திருத்தூதர்களோடு சேர்ந்து செபித்ததுபோல் நம்மோடும் சேர்ந்து செபிக்கிறார் என்பதை உணர்ந்து, அவரது அரவணைப்பில் இறையாசிர் பெறுவோம்.