கருமத்தம்பட்டியின் புனித செபமாலை அன்னை ஆலயத்தின் வேர்கள் பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்குகின்றன. 1595-இல் தந்தை நோபிலி மதுரை மிஷனைத் தொடங்கினார். அவருடன் இணைந்து தந்தை பல்தசார் தென்னிந்தியா முழுவதும் நற்செய்திப் பணியாற்றினார். 1600-இல் சத்தியமங்கலத்தை மையமாகக் கொண்டு தந்தை பல்தசாரும், உபதேசியார் முத்துடையானும் அந்தியூர், கருமத்தம்பட்டி, கணவக்கரை, மேட்டூர், கோயமுத்தூர், தாராபுரம், கரூர், ஈரோடு உள்ளிட்ட பல ஊர்களில் பணியாற்றி, பத்தாயிரம் பேருக்குத் திருமுழுக்கு அளித்தனர். 1608-10-ஆம் ஆண்டளவில் கருமத்தம்பட்டியில் செபமாலை அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயம் இருந்ததாகவும், சுமார் மூவாயிரம் கிறித்தவர்கள் அங்கு வாழ்ந்ததாகவும் தந்தை மெகு எழுதியுள்ளார்.
1626-இல் முத்துடையான்
உபதேசியார் கொல்லப்பட்டு மதுரை மிஷனின் முதல் மறைச்சாட்சியானார். அதே காலகட்டத்தில் உபதேசியார் சவரி புல்லன் கொலை முயற்சியிலிருந்து தந்தை தே கோஸ்தாவின் முயற்சியால்
தப்பினார்; பின்னாளில் இவர் தஞ்சாவூருக்கு மாற்றப்பட்டாலும், கருமத்தம்பட்டியில் நீண்ட காலம் பணியாற்றினார். 1640-இல் கோட்டைக்குள் உயர் குலத்தோருக்கும், கோட்டைக்கு வெளியே மற்றவர்களுக்குமாக இரு தனி கோவில்கள் இருந்தன. அவற்றில் ஒன்று 1684-இல் இடிக்கப்பட்டது. 1644 - 70 காலகட்டத்தில் தந்தை மார்ட்டினுஸ், தந்தை ஆர்க்கோல்லி ஆகியோர் தலைமையில் மறைப்பணி வடக்கே அந்தியூர் முதல் மேற்கே வடக்கஞ்சேரி வரை பரவி, சுமார் 25 பணித்தளங்களும், 150 கிறித்தவக் கிராமங்களும் உருவாயின. இக்காலத்தில்தான் ஜான் தி பிரிட்ஸோ, வீரமாமுனிவர்
போன்ற பெரியோரும் இப்பணியில் ஈடுபட்டனர். 1656-இல் எம்மானுவேல் மார்ட்டினஸ் முதல் பங்குத்தந்தையாகப் பொறுப்பேற்றார். 1683-இல் புனித அருளானந்தர் கருமத்தம்பட்டிக்கு மூன்று முறை வருகை தந்து மக்களைச் சந்தித்தார்.
1684-இல் மைசூர்-தஞ்சாவூர் அரசர்களுக்கிடையேயான போரின் காரணமாக கருமத்தம்பட்டி ஆலயம் இடிக்கப்பட்டது; பக்தியுள்ள கிறித்தவர்கள் அன்னையின் சுரூபத்தை இரவோடிரவாக எடுத்துச்சென்று மறைத்து வைத்தனர். போருக்குப் பின் 500 படைவீரர்கள் காவலிருந்தனர், பின்னர் சாதி-மதக் கலவரங்களால் நிரந்தரமாக இருநூறு வீரர்கள் நிலைகொண்டனர். 1740-இல் தந்தை பிரான்சொன்னெல்லி காலத்தில் மழை பொய்த்ததற்குக் காரணம் கிறித்தவர்கள் எனக் கூறி நாடு கடத்த முயன்றபோதும், கொங்கு சிற்றரசனின் உதவியால் அது தடுக்கப்பட்டது. 1773-இல் திருத்தந்தை பத்தாம் கிளமெண்ட் இயேசு சபையைத் தடை செய்ததால், பாரிஸ் அந்நிய வேதபோதகக் குருக்கள் இப்பணியை ஏற்றனர் (1776). 1797-1803 காலத்தில் தமிழும் சமஸ்கிருதமும் அறிந்த, மருத்துவராகவும் விளங்கிய தந்தை துபியூஸ் காலத்தில் மறைப்பணி சிறப்புற்று, 1803-இல் புதிய ஆலயம் கட்டப்பட்டது. அதன் நுழைவாயில் திப்பு சுல்தானின் அழிவிலிருந்து தப்பி 1995-வரை நிலைத்திருந்தது.
1840-இல் பேர்ட்
அடிகளார் முயற்சியால் ஆலயக் கோபுரமும், இறக்கை கோவிலும் கட்டப்பட்டு, மணிலாவிலிருந்து மணி வரவழைக்கப்பட்டது. இக்காலம் முதல் அக்டோபர் முதல் வாரத்தில் திருவிழா தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போதே கருமத்தம்பட்டி பத்து பணித்தளங்களின் தாய்க்கோவிலாக விளங்கியது. 1845-46-இல் கோவை மறைமாவட்டம் உருவாகி, மரிய ஜோசப் மரியோன் தேவ்பிரசியாக் முதல் ஆயராக நியமிக்கப்பட்டார். குருமடம், பள்ளி ஆகியவை தொடங்கப்பட்டன. 1853-58-களில் காணிக்கை அன்னை சபை தொடங்கப்பட்டு, முதல் இந்தியக் குருக்கள் குருப்பட்டம் பெற்றனர். 1886-இல் கோவை மறைப்பணித்தளம் மறைமாவட்டமாக உயர்த்தப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆயர் அகஸ்டின் ராய் (1904), பின்னர் ஆயர் சி.மா. விசுவாசம்
(1972-79) ஆகியோர் திருவிழாவில் தீவிரமாகப் பங்கேற்றனர். 1980-இல் ஆயர் அம்புரோஸ் ஆண்டகை காலத்தில் புதிய ஆலயம் கட்டப்பட்டது. 2000-த்திற்குப் பின் ஆயர் தாமஸ் அக்குவினாஸ் காலத்தில் செபமாலைக் கோபுரம், அன்னையின் கெபி, ஆராதனை ஆலயம் ஆகியவை உருவாயின.
21-ஆம்
நூற்றாண்டில் இப்புனிதத்தலம் புதிய உயரத்தை எட்டியது. 2013-இல் தொடங்கிய புதிய ஆலயக் கட்டுமானப் பணி நிறைவுற்று, 2017, செப்டம்பர் 29 அன்று ஐந்து ஆயர்களின் தலைமையில் அர்ச்சிக்கப்பட்டது. 2019, ஜூலை 22 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் இவ்வாலயத்தை ‘சிறிய பசிலிக்கா’
(Minor Basilica) நிலைக்கு உயர்த்தி ஆணை பிறப்பித்தார். அக்டோபர் 6-ஆம் நாள் சென்னை-மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இப்புண்ணிய பூமியில் பணியாற்றிய ஆயர் மெல்கியோர் மரியான் தே பிரசியாக் மற்றும்
அருள்பணி. இரவேல் ஆகியோரின் புனிதர் பட்டத்திற்கான திருப்பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. அன்னையை நாடிவரும் பக்தர்களுக்கு இன்றும் பல அற்புதங்கள் நிகழ்ந்து
வருகின்றன. நான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலான இந்த வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில், கருமத்தம்பட்டி அன்னை புனித செபமாலைத் தாயின் 386-வது ஆண்டு திருவிழா இவ்வாண்டு (2026) அக்டோபர் மாதம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.