ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி
வளங்குன்றிக் கால் (குறள் 14)
குறள் விளக்கம்:
மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவரும் ஏர் கொண்டு உழ மாட்டார்.
சிந்தனை:
புயல்காற்று இயற்கைக்கு இடையூறு செய்யும் பெருங்காற்று என்று சொல்வோம். ஆனால், காற்றோடு இணைந்த மழை புயலாகும். இடி, மழை, காற்று, பெருங்காற்று எனப் பல்வேறு பொருள்களைக் கொண்ட இந்தக் காற்றுக்குப் பெருமழை என்ற பொருளும் உண்டு. பெருமழையால் நிலம் செழிக்கும். ‘வாரி பெருக்கி’
அதாவது, ‘உனது வளத்தைப் பெருக்கவேண்டும்’ என்று
512-வது குறளில் வள்ளுவரே கூறியுள்ளார்.
நல்ல
வருவாய் கிடைக்கும் தொழிலையே மக்கள் விரும்புவர். வருவாய் குன்றிவிட்டால், உழவர்கள்
ஏர் கொண்டு உழ மாட்டார்கள். மழைநீர்
இல்லாமல் போனால், இந்த உழவர்கள் வேலையின்றிச் சோம்பியிருப்பார்கள்.
உழவருக்கு
வேலை கொடுப்பதும் வருமானம் தருவதும் வளத்தைச் சேர்ப்பதும் புயலும் பெருமழையும்தான். எனவே, உழவர்களுக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், மனிதர்களுக்கு வேலைவாய்ப்பையும் வருமானத்தையும் வழங்குவது மழைதான் என்பதை வள்ளுவர் அருமையாகக் கூறியுள்ளார்.
‘வாரி வளம் குன்றுதல்’
என்றால் வருமானமும் வளமும் இல்லாமல் போதல் என்று பொருள். மழையின்றிப் போனால் வருமானமும் வளமும் குன்றிப் போகும்.
‘சாங்’ என்கிற ஒரு நாட்டில் ஒரு மனிதர் தன் நிலத்தை உழுது கொண்டிருந்தபோது, அவர் வயலின் நடுவில் இருந்த காய்ந்த மரமொன்றில், வேகமாக ஓடிவந்த முயல் ஒன்று மோதி இறந்து விழுந்தது. உடனே அவர் கலப்பையைத் தூக்கி எறிந்துவிட்டு, மறுபடியும் அதுபோல ஏதாவது முயல் வந்து மோதி இறந்துபோகும் என எதிர்பார்த்துக் காத்திருந்து பட்டினியால்
இறந்துபோனார்.
‘சோம்பேறித்தனத்தினால் உழவை மறந்தவன் பசியினால் சாவான்’ என்பதற்கு மேற்கூறிய நிகழ்வு பொருந்துகிறது. இன்று ‘வெள்ளைக் காலர் வேலை’ அல்லது ‘வியர்வை சிந்தாத வேலை’ செய்யவே மக்கள் விரும்புவதால் ஏர் கலப்பையையும், விவசாய நிலங்களையும் கைவிட்டவர்கள் பலர். விவசாயத்தில் நிலையான வருவாய் கிடைக்காது; வானம் பார்த்தே வருமானம் கிடைக்கும்; வானம் பொய்த்தால் அனைத்தும் நட்டமாகும் என்று கருதி, மக்கள் விவசாயத்தைக் கைவிட்டுவிட்டனர் எனலாம்.
உழவை
மறந்தால் உயிர் வாழ்வது எப்படி? அடிப்படைத் தேவைகளில் முதலாவதான உணவு இன்றி வாழ்வது சாத்தியமாகுமா?
‘மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்’
என்ற திரையிசைப் பாடல் நமக்கு நம்பிக்கை தருகிறது. தக்க காலத்தில் ஆண்டவர் மழையைப்
பொழியச் செய்வார் என்ற நம்பிக்கையைத் தருகிறது. “ஏற்ற காலத்தில் மழையை நான் பெய்யச் செய்வேன்; வயல் தன் பலன்களைத் தரும்; நிலத்தின் மரங்கள் தங்கள் கனிகளைத் தரும்”
(லேவி 26:4) என்று திருவிவிலியம் கூறுகிறது. நம்பிக்கையே வாழ்வைச் செழிக்கச் செய்கிறது.