news-details
தலையங்கம்
தண்ணீர்... தண்ணீர்... காலநிலை மாற்றம் உணர்த்தும் எச்சரிக்கை!

இயற்கை மனிதகுலத்திற்கு அளித்த மிக உன்னதமான கொடை நீர். ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற ஐயன் திருவள்ளுவரின் கூற்று, வெறும் அறநெறி உரை அன்று; அது மனிதச் சமூகத்தின் அடித்தளத்தைக் குறிப்பிடும் புவிசார் வாழ்வியல் உண்மை. அதுவே,  நம்மைப் பல்வேறு வழிகளில் இணைக்கிறது. 

நிலத்தடி நீர் நிலைகள் பல்வேறு தரப்பினருக்கும் வாழ்வாதாரமாக அமைந்துள்ளது. தற்போது பெய்யும் மழை நீரே, நாளை குடிநீராகவும் பாசன ஆதாரமாகவும் நிலத்தடி நீராகவும் மாறுகிறது. நீர் ஒரு பகிரப்பட வேண்டிய வளமாகும்; அத்துடன் நமது எதிர்காலச் சந்ததியினருக்கு அதை பாதுகாப்பாக வழங்கிடவேண்டிய கடமையும் பெரும் பொறுப்பும் நமக்குண்டு.

21-ஆம் நூற்றாண்டின் மிகக் கடுமையான சவாலாக உருவெடுத்துள்ள காலநிலை மாற்றம், உலகளாவிய சூழலியல் அமைப்பைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது. புவி வெப்பமயமாதலின் நேரடி விளைவாக மழைப்பொழிவுச் சுழற்சி சீர்குலைந்து, ஒருபுறம் கடுமையான வறட்சியும், மறுபுறம் பேரழிவை ஏற்படுத்தும் வெள்ளப்பெருக்கும் மாறி மாறித் தாக்குகின்றன.

இத்தகைய உறைபனி உருகுதல், கடல்மட்ட உயர்வு மற்றும் தீவிரக் காலநிலை மாறுபாடுகளுக்கு இடையே, நன்னீர் மூலங்கள் மிக வேகமாகக் குறைந்து வருகின்றன. உலகெங்கிலும் பெருகிவரும் மக்கள்தொகை, அதிவேக நகரமயமாக்கல் மற்றும் தொழில்மயமாக்கல் ஆகியவற்றுடன் காலநிலை மாற்றமும் கைகோர்த்துக்கொண்டதால், உலகளவில் ‘நீர் நெருக்கடி’ ஒரு சமூக-அரசியல் அவசர நிலையாக உருவெடுத்துள்ளது.

இந்நீர் பற்றாக்குறை வெறும் இயற்கை சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல; மாறாக, அது மனித உரிமைகள், சமூகநீதி மற்றும் நாடுகளின் இறையாண்மை சார்ந்த அரசியல் களம் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

நன்னீர் என்பது பூமியின் பல்வேறு உயிர்க்கோளங்களின் உயிரோட்டத்தைத் தீர்மானிக்கும் முதன்மைக் காரணி. வெப்ப மண்டல மழைக்காடுகள் முதல் ஈரநிலங்கள் வரை அனைத்துச் சூழலியல் மண்டலங்களும் மழைப்பொழிவு மற்றும் நீரின் இருப்பையே பெரிதும் நம்பியுள்ளன.

இத்தகைய சூழலில், அண்மையில் (செப்டம்பர் 22 முதல் 26 வரை) புதுடில்லியில் நடைபெற்ற ‘ஒன்பதாவது - உலக நீர் வார’ நிகழ்வுகள் பல வழிகாட்டுதல்களையும் விழிப்புணர்வையும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளன. மத்திய ஜல் சக்தி (நீர்வளம்) அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் அரசுகள், நிபுணர்கள், தொழில்துறையினர், உலக நட்புறவு நாடுகள் எனப் பல்வேறு தளங்களில் இருந்து அனுபவம் நிறைந்த வல்லுநர்கள் தங்களுடைய அனுபவம், தொழில்நுட்பம், நீர் மேலாண்மை பற்றிய கருத்துகளைப் பரிமாறிக் கொண்டது, எதிர்காலத்திற்கான கூட்டுறவை உருவாக்கும் ஒரு தளமாக அமைந்திருந்தது.

மத்திய நீர் வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டில் குறிப்பிட்டுள்ளதுபோல, “வருங்காலத் தலைமுறையினருக்காக ஒவ்வொரு துளி நீரையும் நாம் ஒருங்கிணைந்து பாதுகாக்கவேண்டும்.” ஆயினும், கடந்த 20-ஆம் நூற்றாண்டில் மட்டும் மனிதனின் பேராசையினாலும், முறையற்ற நீர் மேலாண்மையினாலும் உலகின் 50 விழுக்காட்டிற்கும் அதிகமான ஈரநிலங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. நிலத்தடி நீர் மற்றும் மேற்பரப்பு நீர்நிலைகள் அதிகளவில் உறிஞ்சப்பட்டு, தொழிற்சாலைக் கழிவுகளால் நச்சுமயமாக்கப்படுகின்றன. இதன் காரணமாக, உலகளவில் பாலைவனமாக்கல் அதிகரித்து, சுற்றுச்சூழல் சேவைகள் பெருமளவில் பாதிக்கப் பட்டுள்ளன.

மனித சமுதாயத்தில் நீரின் பயன்பாடு பல்வேறு துறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உலக வங்கித் தரவுகளின்படி, உலகளாவிய நன்னீர் பயன்பாட்டில் 72% பங்கைக் கொண்டு முதலிடத்தில் இருப்பது வேளாண்மைத் துறையாகும். ஆனால், இதில் பெரும்பகுதி திறனற்ற பாசன முறைகளால் வீணடிக்கப்படுகிறது. இதற்குத் தீர்வாகத் துல்லியப் பாசனம், தொலைவு உணர்தல், மண் ஈரப்பதக் கண்காணிப்பு போன்ற தொழில்நுட்பங்கள் ஊக்குவிக்கப்படவேண்டும்.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO) தரவுகளின்படி, உலக நன்னீரில் 19% தொழில்துறையால் பயன்படுத்தப்படுகிறது. நீர்மின் திட்டங்கள், அனல்மின் நிலையங்கள், சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் உற்பத்திப் பிரிவுகள் நீரைப் பயன்படுத்துகின்றன. தொழில்துறை நீரை நுகர்வதைவிட, இராசயனக் கழிவுகளையும் வெப்பமடைந்த நீரையும் சுத்திகரிக்காமல் நீர்நிலைகளில் கலந்து சூழலியல் அமைப்பைக் கடுமையாகச் சீரழிக்கிறது.

மேலும், உலகளாவிய நன்னீரில் 12% வீட்டு உபயோகத்திற்காகப் பயன்படுகிறது. குடித்தல், சமையல், சுகாதாரம் மற்றும் குளியலுக்கு ஒரு மனிதனுக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 50 லிட்டர் நீர் தேவைப்படுகிறது. வளர்ந்த நாடுகளில் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் அனைத்து நீரும் குடிநீர் தரத்திலேயே உள்ளது; ஆனால், அதில் மிகச் சிறிய விழுக்காடே குடிப்பதற்குப் பயன்படுகிறது.

இன்றைய சூழலில் சுமார் 1.2 பில்லியன் மக்கள் ‘புவியியல் அடிப்படையில் நீர் பற்றாக்குறை’ நிலவும் பகுதிகளிலும், 1.6 பில்லியன் மக்கள்  உள்கட்டமைப்பு மற்றும் நிதி பற்றாக்குறை காரணமாக  நிலவும் ‘பொருளாதார நீர் பற்றாக்குறை’  பகுதிகளிலும் வாழ்கின்றனர்.

வளரும் நாடுகளில் போதுமான நீர் சுத்திகரிப்பு வசதிகள் இல்லாததால், கடுமையான சுகாதாரக் கேடுகள் விளைகின்றன. 2024-ஆம் ஆண்டின் தரவுகளின்படி, 2.2 பில்லியன் மக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி இல்லை; 3.4 பில்லியன் மக்களுக்குச் சுத்திகரிக்கப்பட்ட சுகாதார வசதிகள் இல்லை; 1.7 பில்லியன் மக்களுக்கு அடிப்படைக் கைகழுவும் சுகாதார வசதிகள் கூட இல்லை.

யுனிசெஃப் அறிக்கையின்படி, கழிவுநீரில் உள்ள Vibrio cholerae மற்றும் Salmonella போன்ற பாக்டீரியாக்களினாலும் நுண்ணுயிரிகளினாலும் பரவும் வயிற்றுப்போக்கு நோயால், உலகளவில் 5 வயதிற்குட்பட்ட 4,43,000 குழந்தைகள் ஆண்டுதோறும் உயிரிழக்கின்றனர். ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் மரணத்திற்கு இது மூன்றாவது முக்கியக் காரணம் எனக் குறிப்பிடப்படுகிறது.

காலநிலை மாற்றத்தின் அதிர்வுகளையும், நீர் மேலாண்மைப் போதாமையையும் புரிந்துகொள்ள சென்னை மாநகரம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். ஆண்டிற்கு 700 மி.மீ. முதல் 1,100 மி.மீ. வரை கணிசமான மழைப்பொழிவைப் பெற்றபோதிலும், சென்னை நகரம் தொடர்ந்து தீவிர நீர்ப் பாதுகாப்பினைக் கடைப்பிடிக்கவில்லை.

தென்னிந்தியாவில் குறிப்பாக, தமிழ்நாட்டில் மழைநீரைச் சேமிக்கப் பழங்காலத்திலிருந்தே ‘சங்கிலித் தொடர் ஏரிகள்’ பயன்படுத்தப்பட்டன. வற்றாத ஜீவநதிகள் இல்லாத தமிழ்நாட்டில், பருவமழைக் காலங்களில் ஆறுகளில் பெருகிவரும் உபரிநீரை மண் கால்வாய்கள் மூலம் ஏரிகளுக்குத் திருப்பிவிடும் உன்னதமான பொறியியல் முறை நடைமுறையில் இருந்தது. ஓர் ஏரி நிறைந்தவுடன், அதன் உபரிநீர் அடுத்த ஏரிக்குச் செல்லும் வண்ணம் வடிவமைக்கப்பட்ட இத்தொழில்நுட்பம், சிமெண்ட் அல்லது இயந்திரங்கள் இன்றி முழுமையாக மனித உழைப்பால் உருவாக்கப்பட்டது.

1970-களில் தென்னிந்தியாவின் பாசனத்தில் 92 விழுக்காட்டைப் பகிர்ந்த ஏரிப் பாசனம், தற்காலப் பேராசையினாலும், ஆழ்துளைக் கிணறுகளின் கட்டுப்பாடற்றப் பெருக்கத்தினாலும், பராமரிப்பின்மையினாலும் இன்று வெறும் 5.18 விழுக்காடாகச் சுருங்கிப்போனது வரலாற்றுச் சோகம்.

காலநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிர்கொள்ளவும், நீர் பற்றாக்குறையைப் போக்கவும் நவீன நீர் மேலாண்மை நுட்பங்கள் அவசியமாகின்றன.

ஆகவே, நீர் மேலாண்மை என்பது வெறும் தொழில்நுட்பம் சார்ந்த பொறியியல் பணி அல்ல; மாறாக, அது தீவிரமான சமூக-அரசியல்-வாழ்வியல் சார்ந்ததாகும். நீர்வளப் பகிர்வில் ஏழை மக்களும், பெண்களும், விளிம்புநிலைச் சமூகத்தினரும் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர். காலநிலை மாற்றத்தின் கொடூரமான விளைவுகளை முதன் முதலில் சந்திப்பவர்கள் இந்த விளிம்புநிலை மக்களே!

காலநிலை மாற்றத்தின் அச்சுறுத்தலிருந்து தப்பிக்கவும், நீர் பாதுகாப்பை உறுதி செய்யவும் அரசுகள், குடிநீர் உரிமையை அடிப்படை மனித உரிமையாகச் சட்டப்பூர்வமாக்கவேண்டும். பண்டைய தமிழ்நாட்டின் ‘குடிமராமத்து’ பாணியில், உள்ளூர் சமூகங்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் பூர்வீகக் குடியினரை நீர் மேலாண்மை முடிவுகளில் தீவிரமாகச் சேர்க்கவேண்டும். வேளாண்மை, தொழில்துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைகள் தனித்தனியாக இயங்காமல், ஒருங்கிணைந்த நீர்வள மேலாண்மையை நடைமுறைப்படுத்த வேண்டும்.

மேலும், ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற நிலையைத் தாண்டி, ‘நீரின்றி அமையாது நீதி’ என்ற சூழலை நோக்கி உலகம் இன்று நகர்ந்து கொண்டிருக்கிறது. காலநிலை மாற்றம் விடுத்துள்ள எச்சரிக்கையை உணர்ந்து, இயற்கை வளங்களைச் சுரண்டுவதை நிறுத்தி, மரபுசார் அறிவையும் நவீன தொழில்நுட்பத்தையும் இணைத்து நீர் மேலாண்மையை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றத் தவறினால், மனித சமுதாயம் வரலாற்றின் பேரழிவைச் சந்திக்க நேரிடும்.

சாமானியனின் தாகம் தீர்ப்பதே 21-ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த அரசியலாக இருக்க முடியும்!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்