slider slider slider
நம் வாழ்வு
நம் வாழ்வு இதழின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்
நம் வாழ்வு
நம் வாழ்வு - நல்லவர்களின் நாடித்துடிப்பு
நம் வாழ்வு
நல்லவர்களின் நாடித்துடிப்பு
அண்மைச் செய்திகள்
தோமா கால் பதித்த தேசம் – 08
சிறப்புக்கட்டுரை
தோமா கால் பதித்த தேசம் – 08

காந்தாரம் நோக்கி தன் சீடர்களோடு தோமா வழி நடந்து செல்கையில் மக்கள் சிலரும் அவரைப் பின்தொடர்ந்தனர். அவ்விதம் அவர் செல்லும் வழியில் இறந்து கிடந்த ஓர் இளைஞனைச் சுற்றி சிலர் கூடியிருப்பதைக் கண்ட சீடர்கள், அருகே சென்று பார்த்தபோது அந்த இளைஞன் நீலம் பாய்ந்த உடலோடு வாயில் நுரைதள்ளி இறந்து கிடப்பதைக் கண்டனர். அவ்விளைஞன் கிடந்த இடத்திற்குச் சற்றுத் தள்ளி ஒரு பெரிய பாம்புப் புற்று இருப்பதை உடன் சென்ற மக்கள் கவனித்ததும், பாம்பு கடித்துதான் அந்த இளைஞன் இறந்திருக்கிறான் என்பதைப் புரிந்துகொண்டனர்.

இறந்துகிடந்த இளைஞனின் உடலுக்கு அருகே சென்ற தோமா செபிக்கத் தொடங்கினார். அவர் செபிக்கத் தொடங்கியதுமே கரிய நிற நாகம் ஒன்று புற்றுக்குள்ளிலிருந்து எட்டிப் பார்த்து, மெல்ல வெளியே வர ஆரம்பித்தது. அது தோமாவின் அருகில் வந்து படமெடுத்து நின்றபடி, தான் அந்த இளைஞனைக்  கடித்ததற்கான காரணத்தைக் கூறியது: “நான் பாம்பு வடிவில் இருக்கும் சாத்தான். நான் ஒரு பெண்ணைக் காதலித்தேன். அதே பெண்ணை இந்த இளைஞனும் காதலித்தான். இவனுடைய சொல் பிடிக்காததால் இவ்வழியே வரும்போது இவனைக் கடித்துக் கொன்றேன்என்றது.

பாம்பின் வடிவில் இருந்த சாத்தானின் கூற்றைக் கேட்ட தோமா, “இயேசுவின் பெயரால் உனக்குக் கட்டளையிடுகிறேன். இந்த இளைஞனின் உடலில் உள்ள நஞ்சை உறிஞ்சி வெளியே எடுஎன்றார்.

தோமாவின் உத்தரவைக் கேட்ட பாம்பு உடனே இளைஞன் உடலில், தான் கடித்த இடத்தில் தன் வாயை வைத்து அவன் உடலில் கலந்திருந்த நஞ்சை உறிஞ்சத் தொடங்கியது. அது நஞ்சை உறிஞ்ச உறிஞ்ச இளைஞனின் உடலில் பரவியிருந்த நஞ்சு பாம்பின் உடலுக்குள் மீண்டும் திரும்ப அதன் உடல் பருமனாகி விரிந்துகொண்டே இருந்தது. அதேநேரம் இளைஞன்  உடலின் நீல நிறம் மாறி, மெல்ல அவன் உடலில் அசைவு தெரியலாயிற்று. நஞ்சை உறிஞ்சிய பாம்பு அந்த நஞ்சாலேயே உடல் வீங்கி வெடித்து இறந்தது. சற்று நேரத்தில் இளைஞன் உயிர்பெற்றவனாய் எழுந்து தோமாவின் பாதத்தில் விழுந்து நன்றி கூறினான்.

நடந்த அற்புதங்களைக் கண்ட மக்கள் அனைவரும் மிகுந்த ஆச்சரியத்துடன் தோமா போதிக்கும் கடவுளாகிய இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டனர். தோமாவோடு இணைந்து இறைவனைப் போற்றியதோடு புகழ்ப் பாடல்களையும் பாடினர்.

தோமா உண்மையில் இயேசுவின் மற்ற திருத்தூதர்களைக் காட்டிலும் மாறுபட்ட சூழ்நிலையிலேயே நற்செய்தி அறிவித்து வந்தார். மற்ற சீடர்கள் மத்தியதரைக் கடலைச் சுற்றியுள்ள நாடுகளில் இயேசுவின் நற்செய்தி அறிவிப்பு இப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் எருசலேமை விட்டுத் தொலைதூரம் கீழைநாடு நோக்கிப் பயணித்து நற்செய்தி அறிவிக்க வந்தவர் தோமா. இவர் இயல்பிலேயே மனத்திடம் நிறைந்தவர்; ஐயம் தெளிவுறும் ஆர்வம் மிக்கவர்; நம்பிக்கை உறுதிமிக்கவர் என்பதைத் திருவிவிலியத்தில் இவர் சார்ந்த மூன்று நிகழ்வுகள் நமக்கு அறிவிக்கின்றன.

இறையாட்சியை அறிவிப்பதன் பொருட்டு இயேசுவிற்கு நாட்டில் எதிரிகள் பெருகிவரும் சூழலில், பிரித்தானியாவில் நண்பன் இலாசரின் இறப்பை உணர்ந்த இயேசு அங்கே செல்ல முடிவெடுக்கிறார். வெளியே நடமாடினால் இயேசுவின் உயிருக்கு ஆபத்து என்ற நிலையில் சீடர்கள் தடுக்க முயல, அப்போது உடன் சீடரிடம் தோமா, “நாமும் செல்வோம், அவரோடு இறப்போம் (யோவா 11:16) எனக் கூறிய வீரமிக்க வார்த்தைகளில் அவரிடம் மனவுறுதி தென்பட்டது.

கடைசி இராவுணவில் தம் பன்னிரண்டு சீடர்களிடம் நடக்கவிருப்பவை பற்றியும், அவர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் பற்றியும் கூறிய இயேசு, மேலும் தாம் தந்தையிடம் செல்லவிருப்பதாகவும், அதற்கான வழி சீடர்களுக்குத் தெரியும் என்றும் குறிப்பிடுகிறார். இந்நிலையில், “ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது; அப்படியிருக்க நீர் போகுமிடத்திற்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்துகொள்ள இயலும்?” (யோவா 14:5) என்ற கேள்வியைத் தோமா முன்வைத்தபோது, “வழியும் உண்மையும் வாழ்வும் நானேஎன்ற பதிலை இயேசுவிடம் பெறுவதில் அவருக்கிருந்த ஐயத்தெளிவிற்கான ஆர்வம் தென்படுகிறது.

இயேசு தாம் உயிர்த்து தோமாவைத் தவிர மற்ற சீடர்களைச் சந்தித்த நிலையில், இதைக் கேள்வியுற்ற தோமா அவநம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். “அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்புகளைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை விட்டாலன்றி நான் நம்பமாட்டேன் (யோவா 20:25) என்று நம்பிடத் தயங்கிய நிலையில், அவர் ஆணித்தரமாக நம்புவதற்கு ஆண்டவர் இயேசுவே முன்வந்து காட்சி தந்தபோது, “என் ஆண்டவரே! என் தேவனே!” என்று அவர் அடிபணிந்து இயேசுவிடம் முழுமையாகச் சரணடைந்த காட்சியில் தோமாவின் நம்பிக்கை உறுதியாகிறது.

இவ்விதம் மனிதனிடம் தெளிவு, நம்பிக்கை உறுதி, வீரம் இவற்றோடு தன் தலைவரின் பணி செய்ய இந்தியப் பகுதிக்கு வந்த துணிவு நிறைந்த தோமா, அச்சம் சிறிதுமின்றி தான் செல்லும் வழியெங்கும் மக்களுக்குப் போதித்துக் கொண்டே சென்றார். தன் சீடர்களுடன் காந்தாரம் நோக்கிய கால்நடைப் பயணம் தொடர்கையில் மக்கள் இருந்த ஒரு பகுதியில் இதுநாள்வரை அவர்கள் கேள்விப்பட்டிராத கடவுளைப் பற்றி அங்கே போதிக்கத் தொடங்க, சிறியதாகக் கூடிய கூட்டம் தோமாவையே ஆர்வமுடன் கவனித்துக் கொண்டிருந்தது. இவ்விதம் போதித்திருந்த வேளையில் மக்கள் கூட்டத்திற்கு முன்னால் கழுதை ஒன்று வந்து நின்றது.

தன் முன்னே வந்து நின்ற கழுதையை நோக்கினார் தோமா. கடவுள் அருளோடு அவ்விலங்கைப் பேச அவர் அனுமதிக்க, வாய் திறக்கப்பட்ட அந்த விலங்கு, “கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவின் தூதரே, நீர் போகுமிடத்திற்கு உம்மைச் சுமந்து செல்வதற்காகவே நான் வந்திருக்கிறேன்என்று, தான் அங்கு வந்த காரணத்தைச் சொன்னது. கழுதை பேசுவதைக் கேட்டு மக்கள் வியப்படைந்தனர்.

தோமாவோ, “நான் அழைக்காமலேயே வந்திருக்கிறாயே... நீ யார்?” என்று கேட்டார். கழுதை கூறிய பதில் அங்கிருந்த மக்களுக்குப் புரியவில்லை. சீடர்களுக்கோ அரைகுறையாகப் புரிந்தது. அது கூறியது: “கடவுள் எங்கள் இனத்தின்மீது எப்போதும் இரக்கம் உள்ளவர். பிலயாம் இறைவாக்கினரிடம் பேசியதும், உம் தலைவர் எருசலேம் நகருக்குள் நுழைகையில் அவரைச் சுமந்து சென்றதுமான கழுதைகளின் இனம்தான் நான். இப்போது உம்மைச் சுமக்கக் காத்திருக்கிறேன்.”

விலங்கின் சொற்களைக் கேட்ட தோமாவின் சீடர்கள், தோமாவின் தலைவர் என்று குறிப்பிடப்படுபவர் இயேசு கிறிஸ்துவே என்பதைப் புரிந்துகொண்டனர். ஆனால், ‘யார் இந்த இறைவாக்கினார் பிலயாம்?’ என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனாலும் ஆச்சரியமான அந்த நிகழ்வால் அங்கே அப்போதைக்குக் கேள்வி எழவில்லை.

திருவிவிலிய நூலில் பழைய ஏற்பாட்டினை வாசித்தறியாதோர் அறிந்துகொள்ள வேண்டியவர் இந்தப் பிலயாம். மோசே தலைமையிலான இஸ்ரேல் மக்கள் விடுதலைப் பயணத்தின்போது, தாங்கள் செல்லும் வழியெங்கும் அயல்நாட்டவர் எதிர்ப்பையே சந்தித்து வந்தனர். பாலஸ்தீனாவின் தென் கிழக்குப் பகுதியில் வாழ்ந்த மோவாப் நாட்டு மன்னன் பாலாக்கு, இஸ்ரயேலரின் வலிமையை அறிந்து, அவர்களின் எதிர்ப்பை எப்படி எதிர்கொள்வது என்று குழம்பியவனாய் இதற்கான தந்திர வழியைத் தேடினான். பெகோர் என்பவரின் மகனான பிலயாம் என்ற இறைவாக்கினர் ஆசிர் வழங்குவதிலும் சபிப்பதிலும் வல்லமை மிக்கவர் என்பதால், அவரைக் கொண்டு எதிரிகளான இஸ்ரயேலரைச் சபிக்கத் திட்டமிட்டான். அதற்காகத் தூதுவர்களை அவரிடம் அனுப்பி வைத்தான்.

ஆமாபு ஆற்றின் கரையருகே வாழ்ந்திருந்த பிலயாமை பாலாக்கின் தூதுவர்கள் சந்தித்தபோது, ஆண்டவர் தனக்குச் சொன்னபடி அவர்களுடன் செல்ல பிலயாம் மறுத்துவிட்டார். ஆனாலும், தொடர்ந்து அரசரின் வற்புறுத்தலால் பிலயாம், கடவுளுக்கு எதிரான மனநிலையோடு அவனைச் சந்திக்கப் புறப்பட்டார். தான் வளர்ந்து வந்த கழுதைக்குச் சேணம்பூட்டி தன் பயணம் தொடங்கினார். சினம் கொண்ட கடவுள் பிலயாமுக்குப் பாடம் புகட்ட விரும்பினார்.

கடவுளின் தூதர் கையில் வாளோடு கழுதைக்கு மட்டுமே தெரியும்படி வழிமறித்தபோதெல்லாம் முரண்டுபிடித்த கழுதையை அடித்தார். ஓரிடத்தில் இரு மதில் சுவர்களுக்கு மத்தியில் தூதர் நிற்க, பிலயாமைச் சுமந்த கழுதை சுவரில் முட்டி, பிலயாம் காலைச் சுவரோடு நெருக்கித் தேய்த்தது. மூன்றாம் முறையாக அடி வாங்கிய கழுதை கடவுள் கட்டளையால் வாய் திறக்கப்பட, “இப்படி மூன்று முறை அடி வாங்குவதற்கு நான் என்ன தவறு செய்தேன்?” என்று கேட்டது. அதற்குப் பிலயாம், “வரும் வழியில் என்னை ஏளனப்படுத்தியபடி வருகிறாய்என்றார். கழுதையோ, “இன்றுவரை என் வாழ்நாளெல்லாம் உம்மைச் சுமந்து வருகிறேனே, எப்போதாவது நான் இப்படி நடந்ததுண்டா?” என்று கேட்க, ‘இல்லைஎன்றார் பிலயாம். அப்போதுதான் அவருக்குக் கண் திறந்தது. கடவுளின் தூதரைக் கண்டவர் முகங்குப்புற விழுந்து வணங்கினார். கடவுளின் விருப்பத்திற்கு மாறாகத் தான் செய்யவிருந்த தவறை உணர்ந்தார். அதற்குப்பின் மன்னன் பாலாக்கைச் சந்தித்த பிலயாம், நான்கு முறையும் குறி சொல்கையில் இஸ்ரயேலரை ஆசிர்வதித்தார் (எண் 22:23,24).…

இவ்விதம் பிலயாம் என்ற இறைவாக்கினரோடு பேசிய கழுதையைத்தான் தன் முன்னோர் என்று தோமாவிடம் பேசிய விலங்கு கூறியது. தனது போதனையை முடித்த தோமா, “விலங்கினைப் பேச வைத்த ஆண்டவரே, உமக்கே மாட்சியும் மகிமையும்என்றவராய் கழுதையின் மீது அமர்ந்து தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

நகர்ப்புற நுழைவு வாயிலை நெருங்குவதற்குமுன் கழுதையினின்று இறங்கிய தோமா, “இனி நீ உன் இருப்பிடத்திற்குச் செல்லலாம்என்று அதற்குக் கட்டளையிட்டார். ஆனால், அங்கு நடந்ததோ வேறு! தோமா தன்னை விட்டு இறங்கியதும், தான் வந்த நோக்கம் நிறைவேறியதுபோல் கழுதை அங்கேயே தன் உயிரைவிட்டது. இறந்துவிட்ட கழுதையைக் கண்ட மக்கள் அதற்கு உயிர்ப்பிச்சை தருமாறு தோமாவை வேண்டினர். அவரோபேச வைத்த கடவுளே, இதனை இறக்கவும் அனுமதித்துள்ளார். இதனை நல்லடக்கம் செய்யுங்கள்என்றார். அவர் சொற்படியே சீடர்கள் அவ்விலங்கை நல்லடக்கம் செய்தனர்.

இயேசுவின் நற்செய்தியைப் பரப்புவதில் முதன்மையாளராக விளங்கிய புனித பவுலைப்போல் தெளிவான சிந்தனை, அழுத்தம், திருத்தமான பேச்சாற்றல், நினைத்ததை விளக்கமாக எழுதும் ஆற்றல் எனத் தலைமைப் பண்புக்குரிய தகுதிகள் தோமாவுக்கு இல்லாதிருந்தாலும், அவருக்கு இருந்த ஒரே தகுதி இயேசுவின்மீது கொண்ட அளவில்லாத பற்றும், அவருடைய கொள்கைகள்மீது வைத்த அசைக்கமுடியாத பிடிப்புமே. கல்வியறிவில் அவர் குறைபாடு உள்ளவராயிருந்தாலும்படிக்காத மேதைஎன்று கூறுமளவிற்கு வாழ்க்கையிலும், சமயம் சார்ந்த விசயங்களிலும் அனுபவ அறிவு நிறைந்தவராக இருந்தார். இயேசுவின் நற்செய்தியை உலகெங்கிலும் பரப்பவேண்டும் என்ற வெறி மட்டுமே தோமாவிடம் மிதமிஞ்சி இருந்தது.

இந்த நிலையில் அவருக்குச் செல்லும் இடமெல்லாம் வரவேற்பு இருக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. ஒருசில சீடர்களுடன் அவர் காந்தாரத்திற்குள் நுழையும்போது அவரை வரவேற்பவர் எவருமில்லை. ஆனால், அவர் தான் போதித்துக்கொண்டே செல்கையில் நோயாளிகளைக் குணப்படுத்தியது, பேய்களை ஓட்டியது போன்ற புதுமைகளால் ஈர்ப்புக்குள்ளாகிய மக்கள் அவர் பின்னால் திரண்டனர். அவர் போதனைகளை ஆர்வமாகக் கேட்டனர். மக்கள் மனம் மாறுமளவிற்குத் தொடர்ந்து அங்கே மேலும் சில புதுமைகள் நிகழ்த்த வேண்டிய சூழ்நிலையும் அவருக்கு ஏற்பட்டது.

(தொடரும்)

கருத்தொற்றுமை தேவை! (காவல் அன்னை - தொடர் கதை 21)
சிறுகதை
கருத்தொற்றுமை தேவை! (காவல் அன்னை - தொடர் கதை 21)

வாங்க யாழினி, உட்காருங்கஎன்றார் இஸ்மாயில்.

டாக்டர் சார், இப்ப என்னோட பெர்சனல் விசயமாய் பேச வந்திருக்கேன். ஃப்ரியா இருக்கீங்களா, பேசலாமா?” என்றாள் சிரித்தபடி யாழினி.

தாராளமாய்ப் பேசலாம். அன்னைக்கி கிரீன் பார்க்கிலே பெர்த்டே பங்சன் நல்லா இருந்தது. அதுக்குப் பிறகு இப்பதானே பேசுறோம்என்றார் இஸ்மாயில்.

தேங்க்ஸ் டாக்டர். இப்ப நான் என்னோட திருமணம் பத்தி சொல்லப் போறேன். நீங்கதான் இதைக் கலந்துபேசி முடிச்சு வைக்கணும்என்றாள் யாழினி.

தாராளமாய்ச் சொல்லுங்க யாழினி. என்னால் முடிந்த உதவியைப் பண்றேன். அதிலென்ன உங்களுக்குச் சந்தேகம்?” என்றார் டாக்டர் இஸ்மாயில்.

நான் முதல் முதலிலே டாக்டர் சேவியரைப் பார்த்ததும், அவருடைய மனைவி அமெரிக்காவில் இறந்தது கேட்டு அவர்மேல் பரிதாபம் ஏற்பட்டது...” என்று ஆரம்பித்தாள் யாழினி.

அப்படியா யாழினி! யாருக்கும் சேவியரைப் பார்த்தால் அப்படித்தான் தோணும்என்று சிரித்தார் இஸ்மாயில்.

அதன் பிறகு அவருடைய வீட்டிற்குச் சென்ற பிறகு மேலும் மனத்தில் இரக்கமும் கவலையும் ஏற்பட்டனஎன்றாள் யாழினி.

பாவம்! அவனோட வாழ்வில் இப்படி நடந்திருக்கக்கூடாது. படிக்கும்போதே ரொம்ப நல்லாப் படிப்பான். எல்லாரோடும் நல்லா அன்பாய்ப் பழகுவான். என்ன செய்ய... விதியை மாற்ற முடியாதே!” என்றார் டாக்டர் இஸ்மாயில்.

அது உண்மைதான். வாழ்க்கையில் இப்படி நடந்தால் வெறுப்பும் விரக்தியும் அதிகம் ஏற்பட்டு விடும். ஆனால், அது இல்லாமல் சேவியர் சுறுசுறுப்பாய் வேலை செய்கிறார். பேஷண்டுகளிடம் அன்பாய் பழகிக் கவனித்துக்கொள்கிறார். இது எனக்கு வியப்பாய் இருந்ததுஎன்றாள் யாழினி.

வெரிகுட் யாழினி! எனக்கு அவன் ஆத்மார்த்தமான நல்ல நண்பன். சாதி, மதமெல்லாம் தாண்டி நாங்க தொடர்ந்து பாசமுடன் பழகி நட்புடன் வாழ்ந்து வருகின்றோம். இது பலருக்கு ஆச்சரியமாகவும் இருக்கும்; சிலருக்கு வெறுப்பாகவும் இருக்கும்என்று சிரித்தார் இஸ்மாயில்.

இதே நிலைதான் எனக்கும் ஏற்பட்டது. பரிவு, கவலை, இரக்கம் என்பது மாறி, சேவியர் மேல் எனக்கு அன்பு ஏற்பட்டது. இதுபற்றி நான் பல நாள்கள் யோசித்து, பிறகுதான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன்என்றாள் யாழினி.

என்ன முடிவெடுத்திருக்கீங்க யாழினி?” என்று சிரித்தபடி கேட்டார் டாக்டர் இஸ்மாயில்.

டாக்டர் சேவியரைக் கல்யாணம் பண்ணிக்கிறதுன்னு நான் முடிவு பண்ணிட்டேன் டாக்டர்என்று சிரித்தாள் யாழினி.

நல்ல முடிவு யாழினி. ஒரு நல்லவரை கல்யாணம் பண்றதுக்கு என்னோட வாழ்த்துகள். ஆனால், இது சாத்தியமாகுமா? உங்க வீட்லே சம்மதிப்பாங்களா டாக்டர்என்றார் சிரித்தபடி இஸ்மாயில்.

அதுக்குத்தான் உங்ககிட்ட சொல்றேன். நீங்கதான் டாக்டர் சேவியர்கிட்டே பேசணும். அவரோட வீட்லே பிரச்சினை இல்லே. ஆனால், எங்க வீட்லே எதிர்ப்பாங்க. அவங்கள்ட்டே நீங்க பேசித்தான் சம்மதிக்க வைக்கணும்என்றாள் யாழினி.

வெரிகுட் ஐடியா! நானும் பாத்திமாவும் உங்க வீட்லேபோய் கன்வின்ஸ் பண்றோம். அவங்க என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்என்றார் இஸ்மாயில்.

நீங்க விவரத்தைப் பேசி, எப்படியாவது அவங்களை ஒத்துக்க வையுங்க. என் அம்மாவைப் பற்றி பிரச்சினை இல்லே! அப்பாதான் சாதி, மதம்னு சொல்லிக் குதிப்பார்என்றாள் யாழினி.

(தொடரும்)

வாரம் ஒரு குறள் – 12
சிறப்புக்கட்டுரை
வாரம் ஒரு குறள் – 12

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார் (குறள் 10)

குறள் விளக்கம்: இறைவனுடைய திருவடிகளைப் பொருந்தி  நினைக்கிறவர், பிறவியாகிய பெருங்கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.

சிந்தனை: கடவுள் வாழ்த்துஎன்ற அதிகாரத்தின் பத்தாவது குறளை நாம் சிந்திக்கின்றோம். ஒரு சொற்பொழிவாளர் கூறிய கருத்து இது. திருவள்ளுவர் ஒரே கருத்தைப் பத்து குறள்களில் விளக்குகின்றார். கடவுளைப் பற்றிச் சொல்ல பத்து குறள், கல்வியைப் பற்றிச் சொல்ல பத்து குறள். அப்படியென்றால், நம் அனைவரையும் பற்றி அவர் சிறப்பாக அறிந்திருக்கின்றார் என்று எண்ணத் தோன்றுகின்றது.

இந்த மனிதர்களுக்கு  ஒரு கருத்தை ஒருமுறை சொன்னால் போதாது; அதைப் புரிந்துகொள்ளமாட்டார்கள்; இவர்களிடம் பத்து முறை சொன்னால்தான் மண்டையில் ஏறும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு தலைப்பிலும் பத்து குறள்கள் கொடுத்திருக்கின்றாரோ... என்று எண்ணத் தோன்றுகிறது.

பத்தாவது குறளில், இந்த வாழ்க்கை கடலைப் போன்றது. அதுவும் பெருங்கடல் என்று குறிப்பிடுகின்றார் வள்ளுவர். கடல் என்று சொல்கின்றபோது, அதன் ஒரு கரை மட்டுமே நமக்குத் தெரியும் மறுகரை நம் கண்களுக்குப் புலப்படாது. இதுதான் நமது வாழ்க்கை. நம் வாழ்க்கையில் இக்கரையாகிய பிறப்பு நமக்குத் தெரியும்; அக்கரையாகிய இறப்பு நமக்குத் தெரியாது. எனவேதான் இந்த வாழ்க்கையைப் பெருங்கடல் என்கிறார்.

ஒருவர் இந்த வாழ்க்கையில் சீரும் சிறப்புமாக வாழ்ந்து கரையைக் கடக்க வேண்டுமென்றால், அவர்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கவேண்டும். இறைவனின் பாதத்தைப் பற்றிப் பிடிக்கவேண்டும். அப்படிப்பட்டவர்கள்தான் இந்த வாழ்க்கையைச் சீரும் சிறப்புமாகக் களிப்பர் என்பதைக் குறிப்பிடுகின்றார்.

இறைவன் பாதம் சேராதவர்கள் அமைதியும் நிறைவும் கொண்ட வாழ்க்கையை நடத்த முடியாது என்கிறார்.

இன்றைய நடைமுறை வாழ்க்கையில், இறைநம்பிக்கையாளர்களின் வாழ்க்கைக்கும், இறைநம்பிக்கை அற்றவர்களின் வாழ்க்கைக்கும் எத்தனையோ வித்தியாசம் இருக்கிறது அல்லவா!

பிறவிப் பெருங்கடலைக் கடக்க இறைநம்பிக்கை அவசியம் எனச் சிந்திக்கும்போது, மாற்கு நற்செய்தி 6:47-51 வரையிலான இறைவார்த்தைகள் நமக்கு நினைவுக்கு வருகின்றன:

பொழுது சாய்ந்த பிறகும் படகு நடுக்கடலில் இருந்தது. ஆனால், அவர் தனியே கரையில் இருந்தார். அப்போது எதிர்க்காற்று அடித்தது. சீடர்கள் தண்டு வலிக்கப் பெரிதும் வருந்துவதைக் கண்ட அவர் கடல்மீது நடந்து அவர்களை நோக்கி வந்தார்; அவர்களைக்  கடந்து செல்ல விரும்பினார். அப்போது ஏறக்குறைய நான்காம் காவல் வேளை. அவர் கடல்மீது நடப்பதைக் கண்டு, ‘அது பேய்என்று எண்ணி அவர்கள் அலறினார்கள். ஏனெனில், எல்லாருமே அவரைக் கண்டு அஞ்சிக் கலங்கினர். உடனே இயேசு அவர்களிடம் பேசினார். ‘துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்என்றார். பிறகு அவர்களோடு படகில் ஏறினார். காற்று அடங்கியது. அவர்கள் மிக மிக மலைத்துப் போயினர்.”

சீடர்கள் பெருங்காற்றைக் கண்டு அஞ்சியபோது, அந்நேரத்தில் ஆண்டவர் கடல்மீது நடந்து அவர்களிடம் வந்தார். அவர் படகில் ஏறியதும் காற்று அடங்கியது.

இயேசு தம் சீடர்களிடம் வந்ததும் அவர்கள் துன்பம் விலகியது. அவர்கள் பயணம் அமைதியில் தொடர்ந்தது. எனவே, நம் வாழ்க்கைப் பயணத்தில் இறைவன் நம்மோடு இருப்பாரெனில், நம் வாழ்க்கை பேரும் புகழுமாய் திகழும்.

நாமும் மகிழ்வோடு கடந்து செல்வோம்; இறைவனின் திருப்பாதத்தைப் பற்றிக்கொள்வோம்.