slider slider slider
நம் வாழ்வு
நம் வாழ்வு இதழின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்
நம் வாழ்வு
நம் வாழ்வு - நல்லவர்களின் நாடித்துடிப்பு
நம் வாழ்வு
நல்லவர்களின் நாடித்துடிப்பு
அண்மைச் செய்திகள்
எண்ம தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்ட விதிமுறைகள்
சிறப்புக்கட்டுரை
எண்ம தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்ட விதிமுறைகள்

எண்ம (டிஜிட்டல்) தனிநபர் பாதுகாப்புச் சட்ட விதிமுறைகள் 2025- மத்திய மின்னணு மற்றும் தகவல்    தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

தங்கள் தரவுகளைக் குடிமக்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவும், அந்தத் தரவுகள் தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்யவும் இந்த விதிமுறைகள் வழிவகை செய்கின்றன. அத்துடன் இணையத்தில் அவர்களின் தன்மறைப்பு நிலையைக் (பிரைவசி) காக்க வேண்டும் என்பதும் இந்த விதிமுறைகளின் நோக்கமாக உள்ளது.

தனிநபர் தரவுகள் தொடர்பாக நிறுவனங்கள் கடுமையாகப் பின்பற்றவேண்டிய கால அட்டவணையையும் இந்த விதிமுறைகள் தெளிவாக வரையறுத்துள்ளன. இந்த விதிமுறைகள் 12 முதல் 18 மாதங்களுக்குப் பிறகு முழுமையாக நடைமுறைக்கு வரும்.

இது தொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2023-ஆம் ஆண்டின் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்ட விதிமுறைகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த விதிமுறைகளின்படி, ஒருவரின் தனிப்பட்ட தரவுகள் எதற்காகத் திரட்டப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து வெளிப்படையாக விளக்கி, அதற்குச் சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து எளிமையான முறையில் ஒப்புதல் பெறுவதற்கான நோட்டீசைத் தரவு நிர்வாகப் பொறுப்பாளர்கள் (ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகத் தளங்கள், கூகுள், விளையாட்டுச் செயலி நிறுவனங்கள் போன்றவை) வெளியிடவேண்டும்.

தனிநபர் ஒருவரின் தரவு கசிந்தால், அது குறித்து அந்த நபருக்குத் தரவு நிர்வாகப் பொறுப்பாளர்கள் முறைப்படி எளிமையான மொழியில் தெரியப்படுத்த வேண்டும். அந்தத் தரவு கசிவு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், உதவிக்குத் தொடர்புகொள்ள வேண்டியவரின் விவரங்களுக்கும் தெரிவிக்கப்பட வேண்டும்.

இந்தத் தரவுகளைக் கையாள்வது தொடர்பான சந்தேகங்கள் குறித்து, தனிநபர்கள் கேள்வி எழுப்புவதில் உதவ, தரவுப் பாதுகாப்பு அதிகாரி அல்லது பிரத்யேக அதிகாரியைத் தொடர்பு கொள்வதற்கான விவரத்தைத் தரவு நிர்வாகப் பொறுப்பாளர்கள் தெளிவாகத் தெரியப்படுத்தவேண்டும்.

90 நாள்களில் பதில்: தங்களைப் பற்றிய தரவுகளைத் தனிநபர்கள் அணுகுதல், பிழைகளைத் திருத்துதல், புதுப்பித்தல் அல்லது அளிக்கும் உரிமை, அந்த உரிமையைத் தங்கள் சார்பாகப் பயன்படுத்த மற்றொருவரை தனிநபர்கள் நியமித்தல் போன்ற கோரிக்கைகளுக்கு அதிகபட்சமாக 90 நாள்களுக்குள் தரவு நிர்வாகப் பொறுப்பாளர்கள் பதிலளிக்கவேண்டும்.

தரவுப் பாதுகாப்பு வாரியம்: இணைய வழியில் பிரத்யேக தளம், கைப்பேசி செயலி மூலம் தங்கள் தரவுகள் தொடர்பான புகார்களைப் பொதுமக்கள் அளிக்கவும், அந்தப் புகார்கள் மீதான நடவடிக்கை இந்தக் கட்டத்தில் உள்ளது என்பதைப் பின்தொடர உதவும் வகையிலும், முழுமையான எண்ம நிறுவனமாகத் தரவுப் பாதுகாப்பு வாரியம் செயல்படும். இந்தப் புகார்கள் தொடர்பான முடிவுகளுக்கு எதிராகத் தொலைத்தொடர்பு சச்சரவுக்கான தீர்வு மற்றும் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் (டி.டி.எஸ்..டி.) மேல்முறையீடு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த விதிமுறைகள் மூலம், தங்கள் தரவுகளைப் பயன்படுத்துவதற்கான ஒப்புதலை எந்த நேரத்திலும் இரத்து செய்யும் அதிகாரம் தனிநபர்களுக்குக் கிடைக்கும். விளம்பரம் அல்லது மோசடி செய்யும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் அமைப்புகளைப் பொதுமக்கள் தவிர்க்கவும், எந்தவோர் எண்ம வழியிலும் அவர்களின் தனிநபர் தரவு, காணொளி மற்றும் குரல் பதிவை அனுமதியின்றிப் பெறுவதைத் தடுக்கவும் இந்த விதிமுறைகள் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனிநபர் தரவு கசிவின் தன்மையைப் பொறுத்து அதற்குத் தரவுப் பாதுகாப்பு வாரியம் அபராதம் வசூலிக்கவும் இந்த விதிமுறைகள் வழிவகுக்கின்றன.

சட்ட நடவடிக்கை: தனிநபரின் அனுமதியில்லாமல் அவரின் கைப்பேசி எண் கசிந்து தேவையற்ற அழைப்புகள் வந்தால், அந்த எண்ணை எந்த நிறுவனம் கசியவிட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி, அது குறித்துச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள இந்த விதிமுறைகள் உதவும்.

நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துதல்: ஏதேனும் குற்றம் நிகழ்ந்தால் அதற்கு எதிரான விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற சூழல்களில் பொதுமக்களுக்கு உள்ள உரிமையை இந்த விதிமுறைகள் கட்டுப்படுத்துகின்றன.

மூன்று ஆண்டுகள் பயன்படுத்தாமல் இருந்தால்: பயநராக உள்ள தனிநபர்கள் தங்கள் கணக்கை மூன்று ஆண்டுகளாகப் பயன்படுத்தாமல் இருந்தால், அவர்களின் தனிப்பட்ட தரவை இணையவழி வர்த்தக நிறுவனங்கள், இணையவழி விளையாட்டு நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடகத்தளங்கள் அளிக்கவேண்டும் என்று விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்னை மரியா அனைத்துத் தனித்த பாவங்களிலிருந்தும் விலக்கி வைக்கப்பட்டிருந்தார்! (Mary was free from all personal sin) - திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி - 24
ஆன்மிகம்
அன்னை மரியா அனைத்துத் தனித்த பாவங்களிலிருந்தும் விலக்கி வைக்கப்பட்டிருந்தார்! (Mary was free from all personal sin) - திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி - 24

புனிதத்துவத்தில் மரியாவைப்  பாதுகாப்பதற்காக இளம்வயதில் அவருக்கு வழங்கப்பட்ட சிறப்புச் சலுகையானது நம்பிக்கை மற்றும் அன்பில் அவரின் மிகப்பெரும் வளர்ச்சியைக் காட்டுகின்றது.

1. அமல உற்பவக் கோட்பாட்டு வரையறையானது அவர்முதல் பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்டதிலிருந்துமரியாவின் தொடக்கக் காலம் பற்றி மட்டுமே நேரடியான அக்கறையோடு அணுகுகின்றது. இவ்வாறு, திருத்தந்தையின் ஆசிரியமானது பல நூற்றாண்டுகளாகப் பிரச்சினைக்குள்ளாகியிருந்த முதல் பாவத்திலிருந்து மரியா பாதுகாக்கப்பட்டது பற்றிய  உண்மையை மட்டுமே வரையறுக்க விரும்பியதேயன்றி, ஆண்டவருடைய கன்னித்தாயின் என்றென்றைக்குமான புனிதத்துவம் பற்றி வரையறுப்பதில் அக்கறை கொள்ளவில்லை

இந்த உண்மையானது கிறித்தவ மக்கள் மத்தியில் ஏற்கெனவே ஏற்றுக் கொள்ளப்பட்டதொன்றாக இருந்தது. இது மரியா முதல் பாவத்திலிருந்து  விலக்கிவைக்கப்பட்டவராக மட்டுமல்லாமல், சூழ்நிலை சார்ந்த பாவத்திலிருந்தும் பாதுகாக்கப்பட்டார். மேலும், இவரின் தொடக்கப் புனிதத்துவ வாழ்வு முழுவதையுமே புனிதத்துவத்தால் நிரப்புவதற்காக அவருக்குக் கொடுக்கப்பட்டது என்பதற்குச் சான்றுபகர்கிறது

மரியாவிடம்  பாவமோ, மற்ற குறை பாடோ இருந்ததாகக் கருத முடியாது!

2. திரு அவையானது மரியாவைப் புனிதை என்றும், பாவத்திலிருந்தும் ஒழுக்கக் குறைபாட்டிலிருந்தும் விடுவிக்கப்பட்டவர் என்றும் தொடர்ந்து கருதி வந்துள்ளது. இந்த ஆழமான நம்பிக்கையைத் திரிதெந்து திருச்சங்கமானது, “திரு அவையானது கன்னி மரியாவின் விசயத்தில் வைத்திருக்கின்ற நிலைப்பாட்டைப் போன்று, அவர் சிறப்பானதொரு சலுகையைப் பெற்றிருந்தாலன்றிஅவரின் வாழ்வு முழுவதும், அது மன்னிக்கத்தக்க பாவமாக இருந்தாலன்றி, எல்லா பாவத்தையும் தவிர்க்க முடியாதுஎன்ற கருத்தை  வலியுறுத்தி அதையே தனது நிலைப்பாடாக வெளிப்படுத்துகின்றது (DS 1573). கடவுளின் அருளினால் உருமாற்றப்பட்டுப் புதுப்பிக்கப்பட்ட கிறித்தவன் கூட பாவம் செய்வதற்கான சந்தர்ப்ப சூழல்களிலிருந்து தப்பித்ததில்லை. திரிதெந்து திருச்சங்கம் கூறுகின்றவாறு, பாவத்திலிருந்து தடுக்கக்கூடிய அந்தச் சிறப்புப் பண்பு உறுதியளித்தாலன்றி, கடவுளின்  அருளானது ஒருவருடைய வாழ்வு முழுவதும் அவரின் எல்லாப் பாவங்களிலிருந்தும் அவரைப் பாதுகாக்காது. மரியாவைப் பொறுத்தவரை இதுதான் நிகழ்ந்தது.

திரிதெந்து திருச்சங்கமானது இந்தச் சிறப்புச் சலுகையை வரையறுக்கவில்லை. ஆனால், திரு அவையானது அதைத் தெளிவாக உறுதிப்படுத்துவதாகக் கூறுகிறது. இதற்குTenetஎன்ற இலத்தீன் வார்த்தையைத் திருச்சங்கம் பயன்படுத்துகிறது. அதாவது, திருச்சங்கம் உறுதியாக இதை நம்புகிறது என்பதே இதன் பொருளாகும். இந்த உண்மையை வெறுமனே ஒரு பக்தி சார்ந்த நம்பிக்கை அல்லது கருத்து என்று புறக்கணிப்பதைத் தாண்டி, அதன் தன்மையை கடவுளுடைய மக்களின் நம்பிக்கையில் பொதிந்திருக்கின்ற ஓர் உறுதியான கோட்பாடாக உறுதிப்படுத்துகின்றதுமேலும், இந்த நிலைப்பாடு இயேசுவின் பிறப்பில் வானதூதரால் மரியாவுக்கு  வழங்கப்பட்ட அருளை அடிப்படையாகக்  கொண்ட ஒன்றாகும். “அருள் நிறைந்தவரே (kecharitoméne) என்று மரியாவை அழைப்பதன் வழியாக, வானதூதர் அவரை என்றைக்குமானதொரு நிறைவினாலும் புனிதத்துவத்தின் முழுமையினாலும் நிரப்பப்பட்ட, பாவத்தின் நிழலோ ஒழுக்க அல்லது ஆன்மிகக் குறைபாடோ இல்லாதவொரு பெண்ணாக அங்கீகரிக்கின்றார்.

3. மரியாவின் முழுமையான புனிதத்துவம் பற்றி நிறைவில்லாத எண்ணங்களைக் கொண்ட அநேக ஆரம்பகாலத் திரு அவைத் தந்தையர்கள் (Fathers of the Church) முழுமையற்றத்தன்மையையும் ஒழுக்கக் குறைபாடுகளையும் அவர் கொண்டிருந்ததாகக் கற்பித்தார்கள். இதே நிலைப்பாட்டை ஒருசில அண்மைக்காலத்து ஆசிரியர்களும் கொண்டிருந்தனர். இருப்பினும், மீட்பரின் தாய்க்குப் பாவத்தையோ அல்லது ஒழுக்கக் குறையையோ சுட்டிக்காட்டுவதற்கு அவர்கள் மேற்கோள்காட்டிய திருவிவிலிய வாசகங்கள் அவர்களின் கருத்துகளை நியாயப்படுத்துவதற்கான எந்தவோர் அடிப்படைக் காரணத்தையும் கொடுக்கவில்லை.

பன்னிரண்டு வயதில் தமது தாய்க்கான இயேசுவின் பதில்: “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?” (லூக் 2:49). இயேசுவின் இக்கேள்வியானது சில வேளைகளில் மறைமுகமானதொரு கண்டனமாகவே விளக்கப்பட்டதுஇருப்பினும், இந்த நிகழ்வு பற்றிய கவனமானதொரு வாசிப்பானது, இயேசுவின் தாயும் அவரின் வளர்ப்புத் தந்தையான யோசேப்புவும் அவரைத் தேடுவதற்கான கடமை அவர்களுக்கு இருந்ததால் அச்செயலுக்காக அவர் அவர்களைக் கண்டிக்கவில்லை.

கவலையோடு கூடிய ஒரு தேடலுக்குப் பிறகு இயேசுவிடம் வந்த மரியா, அவரின் செயலைப்பற்றிஏன்?’ என்ற ஒரு கேள்வியை மட்டுமே கேட்கின்றார்: “மகனே, ஏன் இப்படிச் செய்தாய்?” (லூக் 2:48). இந்தக் கேள்விக்கு இயேசு தமது எதிர்ப்பையோ, கண்டனத்தையோ தெரிவிக்காமல், இறைமகன் என்பதன் மறைபொருளைச் சுட்டிக்காட்டி, ‘ஏன்?’ என்ற மற்றோர் எதிர் கேள்வியைத்தான் கேட்கின்றார்.

கானாவூர் திருமண நிகழ்வில் அவர் பேசிய, “அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே!”  (யோவா 2:4) என்கின்ற அவரின் வார்த்தைகளும் கண்டனத்திற்குரியவைகளாக விளக்கமளிக்கப்பட முடியாது. திராட்சை இரசம் தீர்ந்ததினால் மணமக்களுக்கு ஏற்பட்ட சிரமத்தைக் கண்டு மரியா எளிய உள்ளத்தோடும், அந்தப் பிரச்சினையை அவரிடம் ஒப்படைத்தும் இயேசுவிடம் பேசுகின்றார். ஒரு மீட்பர் என்கிற வகையில் தமது தந்தையின் விருப்பத்திற்கு மட்டுமே கீழ்ப்படிய வேண்டும் என்பதை அறிந்திருந்தும், அவருடைய தாயின் உள்ளார்ந்த வேண்டுதலை அவர் நிறைவேற்றுகின்றார். எல்லாவற்றிற்கும் மேலாக, கன்னி மரியாவின் நம்பிக்கையை அவர் நிறைவேற்றுகின்றார். இவ்வகையில் அவரின் மகிமையை வெளிப்படுத்தும் விதமாக, தமது முதல் புதுமையைச் செய்கின்றார்.

4. பின்பு மரியாவும், அவரின் உறவினர்களும் இயேசுவினுடைய பொதுவாழ்வின் தொடக்கத்தில் அவர் கூறிய வார்த்தைகளுக்குச் சிலர் எதிர்மறை விளக்கங்களைக் கொடுத்தனர். அவரிடம், “உம் தாயும் சகோதரர்களும் உம்மைப் பார்க்க விரும்பி வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள்என்று ஒருவர் கூறியபோது, இயேசுவின் பதிலைத்  தொடர்புபடுத்தி, தூய லூக்கா நற்செய்தியாளர் நமக்கு அதற்கான விளக்கத்தை அறிந்துகொள்வதற்கான  திறவுகோலைத் தருகின்றார். அதாவது, இது அவரின் சகோதரர்களைக் குறிக்கும் ஒரு தொடர் என்பதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, மரியாவின் உள்மன உணர்வுகளை அடிப்படையாக வைத்து நாம் அதைப் புரிந்துகொள்ள வேண்டும் (ஒப்பிடுக. யோவா 7:5). அவர்களுக்கு இயேசு, “இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும், என் சகோதரர்களும் ஆவார்கள்  (லூக் 8:21) என்று பதிலளித்தார். இயேசுவின் பிறப்பு அறிவிப்பில் லூக்கா நற்செய்தியாளர் மரியா எவ்வாறு உண்மையில் கடவுளின் வார்த்தையைக் கேட்பதிலும்  தாராள மனத்திலும் முன்மாதிரியாக இருந்தார் என்பதைக் காட்டுகின்றார்இத்தகைய விளக்கமளிக்கையில், அந்நிகழ்வில் தன்னுடைய சொந்தவாழ்வில் கடவுளின் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றிய மரியாவுக்கு ஒரு மிகப்பெரும் புகழ்ச்சியைத் தருகின்றதுஇயேசுவின் வார்த்தைகளானது சகோதரர்களைக் குறிப்பதற்கு எதிரானதாக இருந்தாலும், அவை உடலளவில் மட்டுமல்லாமல், ஆன்மிக அளவிலும் வாழ்ந்த மரியாவினுடைய தாய்மையின் மாண்பு மற்றும் கடவுளின் வார்த்தையை நிறைவேற்றுவதில்  அவரிடமிருந்த நம்பகத்தன்மையையும் புகழ்ந்து பேசுகின்றன

மறைமுகமான இந்தப் புகழ்ச்சியின் வழியாக, இயேசு ஒரு தனிப்பட்ட விளக்கமளிக்கும் முறையைப் (Particular method) பயன்படுத்துகிறார்: இயேசு மரியாவின் நடத்தையில் உள்ளதொரு பெருந்தன்மை பற்றிப் பொதுவானதொரு விளக்கமளிக்கிறார். மேலும், புனிதத்திற்கான வழிமுறையில் மனுக்குலத்தோடு மரியாவுக்குள்ள நெருக்கத்தையும் உடனிருப்பையும் தெளிவாகக் காட்டுகின்றார்.

இறுதியாக, இயேசுவின் தாயைப்பேறுபெற்றவர்என்று அழைத்த அந்தப் பெண்ணுக்கான தமது பதிலாக அமைந்தஇறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறு பெற்றோர்  (லூக் 11:28) என்ற வார்த்தைகள் மரியாவின் தனித்தன்மையைச் சந்தேகிக்காமல், கடவுளின் வார்த்தையை நிறைவேற்றுவதில் அவரிடமிருந்த நம்பத்தன்மையைக் காட்டுகின்றது: திரு அவையும் இதை நன்கு புரிந்துகொண்டு, மரியாவைப்  பெருமைப்படுத்தும் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களில் இந்த இறைவார்த்தையை வைத்திருக்கின்றது. உண்மையில் அந்த நற்செய்தி வாசகமானது அவரின் தாயினுடைய ஆசிர்வதிக்கபட்ட நிலையானது கடவுளோடு அவருக்கிருந்த நெருக்கமான உறவு மற்றும் கடவுளின் வார்த்தைக்கான அவரின் முழுமையான அர்ப்பணத்தில் இருப்பதை மிகத் தெளிவாக நமக்கு எடுத்துரைக்கின்றது

மரியா முற்றிலும் கடவுளுக்குரியவராக இருந்தார்!

5. ‘முற்றிலும் புனிதமானமரியாவுக்கு கடவுள் வழங்கிய சிறப்புச் சலுகையானது அவர் வாழ்வில், அருளால் நிகழ்த்தப்பட்ட மாட்சியைப் போற்றுவதற்கு நம்மை வழிநடத்துகிறது. மேலும், இது மரியா எப்பொழுதும் முற்றிலும் கடவுளுக்குரியவர் என்றும், அந்த நிலையானது எந்தவொரு குறையும் இல்லாத நிலையில் கடவுளுடனான முழுமையான இணக்க நிலையில் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதையும் நமக்கு நினைவூட்டுகின்றது.

ஆகவே, அவரின் பூவுலக வாழ்வானது நம்பிக்கை, எதிர்நோக்கு மற்றும் அன்பில் நீடித்த மற்றும் உயர்ந்ததொரு வளர்ச்சியால் குறிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு, இறை இரக்கத்தின் பிரதிபலிப்பாக, புனிதத்துவத்தின் மற்றும் நற்செய்தியின் முழுமையினுடைய உயர்ந்த மற்றும் உறுதியான வழிகாட்டியாக மரியா இருந்தார்.

மூலம்: John Paul II, Mary was free from all personal sin, in L’Osservatore Romaoo, Weekly Edition in English, 26 Jube 1996, p. 11.

ஆயர்களும் திருத்தந்தையும் (மாமன்றச் சாதனைகள் ஒரு மீள்பார்வை – 10)
ஆன்மிகம்
ஆயர்களும் திருத்தந்தையும் (மாமன்றச் சாதனைகள் ஒரு மீள்பார்வை – 10)

ஆயர்கள் திருத்தூதர்களின் வழித்தோன்றல்கள் என்பது இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கப் படிப்பினை. அவர்கள் தலத் திரு அவை மற்றும் உலகத் திரு அவையின் ஒன்றிப்புறவிற்காகப் பணியாற்றுபவர்கள். தமது பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட இறைமக்கள், அருள்பணியாளர் குழுமம், திருத்தொண்டர்கள், துறவியர், ஏனைய ஆயர்கள், உரேமை ஆயராகிய திருத்தந்தை என்போருடன் கொண்டுள்ள உறவுப் பின்னலில்தான் ஆயரது பணிபுரிந்து கொள்ளப்படவேண்டும். ஆயருடைய இவ்வுறவுகள் அனைத்தின் முதன்மையான நோக்கு மறைத்தூதுப் பணியே.

தமது தலத் திரு அவையில் நற்செய்தி அறிவிப்பு, திருவழிபாடு என்பனவற்றின் முதல் பொறுப்பு ஆயருடையதே. அவரே அதனை வழிநடத்துபவர்; ஏழைகளுக்கான அருள்பணியையும், வலுவற்றோருக்குப் பாதுகாப்பு வழங்குவதையும் அவர் ஊக்குவிப்பவர். இருப்பினும், “ஆயராகத் திருநிலைப்பாடு பெற்றுள்ளவருக்குத் தரப்பட்டுள்ள சிறப்பு உரிமைகளும் கடமைகளும் அவர் அவற்றைத் தனித்து நிறைவேற்றவேண்டும் என்பதற்காக அல்ல (இஅ 69); மாறாக, அவர் பெற்றுள்ள அருளும் அழைப்பும் தனி ஆள்கள் மற்றும் குழுமங்கள்மீது தூய ஆவியார் பொழிந்துள்ள கொடைகளை இனங்கண்டு, ஏற்று, குழும ஒன்றிப்பில் இணைப்பதற்காகவே! “அவர் அருள்பணியாளர்கள் மற்றும் திருத்தொண்டர்களுடன் தாம் கொண்டுள்ள பொது அருளடையாளப் பிணைப்பை வெளிப்படுத்தும் முறையில் அவர்களுடன் இணைந்தே இதைச் செயல்படுத்துகிறார் (இஅ 69). “இப்பணியை அவர் கூட்டுப்பொறுப்புடன் கூடிய ஆளுகை, இறைமக்களுக்குச் செவிகொடுத்துப் போதித்தல், மனத்தாழ்மையோடும் மனமாற்றத்தோடும் புனிதப்படுத்தல் மற்றும் திருவழிபாடு கொண்டாடுதல் என்பவை வழியாகக் கூட்டியக்க முறையில் நிறைவேற்றுகிறார் (முஅ 11b).

ஆயர் இறைக்குடும்பமாகிய திரு அவையில் கூட்டியக்க முறையை உயிரூட்டி இயக்குவதில் அவருடைய பணி இன்றியமையாதது. ஆயராகிய ஒருவரது பணி தெளிதேர்வு செய்வதிலும், முடிவெடுக்கும் முறைமைகளிலும் நேரடியாக அதிகம் ஈடுபட்டுள்ள சிலரது பங்களிப்பின் வழியாக நம்பிக்கையாளர்கள் எல்லாருடைய பங்கேற்பையும் போற்றி வளர்க்கிறது. மேலும், “அனைவருக்கும் கூட்டியக்கத்தின் மாதிரியாகத் திகழ ஆயர் அழைக்கப்பட்டுள்ளார். கூட்டியக்க அணுகுமுறை பற்றிய அவரது உறுதிப்பாடும், தமது அதிகாரத்தை அவர் கையாளும் முறையும் அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், இருபால் பொதுநிலையினர், துறவியர் என்போரது கூட்டியக்கப் பங்கேற்பை ஆழமாகப் பாதிக்கும் என்பது உறுதி (முஅ 12). இதற்கு இன்றியமையாதது அவர்களை அவர் சந்திப்பது. குறிப்பாக, தமது பங்குச் சந்திப்பின்போது மக்களுக்குச் செவிமடுத்து, அவர்களுடைய தேவைகளை அவர் தெரிந்துகொள்வது முக்கியமானது. “ஆயர் தேர்வு முறையில் இறைமக்கள் குரலுக்கு அதிக இடம் தரப்படவேண்டும் என இம்மாமன்றம் விரும்புகிறது (இஅ 70).

ஆயர் பணிக்கு இன்றியமையாதவற்றில் அவர் அதிகக் கவனம் செலுத்துவதும் ஏனைய ஆயர்களுடனும் அருள்பணியாளர்களுடனும் உண்மையான சகோதர உறவை வளர்த்துக்கொள்வதும் அவசியம் (முஅ 12). ஏனெனில், பல ஆயர்கள் தங்கள் மறைத்தூதுப் பணியை முழுமையாக நிறைவேற்ற முடியாத அளவிற்குத் தங்கள் மீதுள்ள எதிர்பார்ப்புகள், நிர்வாகம் மற்றும் சட்டம்சார் கடமைகள் எனும் சுமைகள் தங்களுக்கு இருப்பதாக உணர்கின்றனர். தங்களுக்குப் போதிய ஆதரவு இல்லை எனும் தனிமை உணர்வுக்கும் அவர்கள் ஆளாவது உண்டு. இதனால் ஆயர்களுக்கும் அவர்களது பணியில் ஆதரவும் தோழமையும் தேவைப்படுகின்றன. அண்டை மறைமாவட்டங்களின் ஆயர்களுக்கு இடையே சகோதரத்துவத்தை வளர்ப்பதில்  பேராயரின் பங்களிப்புப் பெரிது.

ஆயர்களுக்கும் பணியிடை உருவாக்க முறைகள் தேவை என மாமன்ற நடைமுறையின்போது பேசப்பட்டது. அதுபோலவே, “துணை ஆயர்களின் பணி, பதிலாள் உரிமையுடன் ஆயர் பிறரிடம் ஒப்படைக்கக்கூடிய பணிகளை விரிவாக்குதல் என்பனவற்றைத் தெளிவுபடுத்தவேண்டிய தேவையும் மாமன்றத்தின்போது எழுந்தது (இஅ 71).

மேலும், ஆயர் பற்றிய கற்பனை சார்ந்த மீஉயர் புரிதலையும், மிகுதியான எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கையாளர்கள் தவிர்ப்பது அவசியம். ஏனெனில், அவரும் வலுகுறைவுகள் உள்ளவரும்-சோதனைகளை எதிர்கொள்ளுபவரும்தான். இதனால் எல்லாருக்கும்போல் அவருக்கும் உதவி தேவைப்படுகிறது. மறுபுறம், உண்மையான கூட்டியக்கத் திரு அவையில் இறைமக்கள் அனைவருடைய செயல்முறை சார்ந்த பங்கேற்பு எனும் ஆதரவு இருக்கும் போது அவரது பணி மிகவும் சிறப்புற நிகழமுடியும் (இஅ 71). மேலும், தமது தலத் திரு அவையை வழிநடத்தும் அதேவேளையில், அதன் வரலாறு, மரபு, அருங்கொடை சார்ந்த வளங்களையும் கண்டறிந்து அவற்றைக் காத்து வளர்க்கவும் ஆயர் அழைக்கப்படுகிறார்.

திரு அவையின் ஒன்றிப்பும் ஆயர் பேரவைகளும்

ஆயர் பேரவைகள் திரு அவைகளுக்கு இடையிலான உறவு ஒன்றிப்பை வெளிப்படுத்துகின்றன; அவை அருள்பணிசார் தேவைகளுக்கு அதிக ஆற்றலுடன் பதிலிறுப்புச் செய்யவும் உதவுகின்றன. “பிணைப்புகளை ஏற்படுத்தவும், திரு அவைகளுக்கு இடையே அனுபவங்களையும் சிறந்த நடைமுறைகளையும் பகிர்வு செய்யவும் பல்வேறு பண்பாடுகளுக்கு ஏற்ப கிறித்தவ வாழ்வையும் நம்பிக்கையின் வெளிப்பாடுகளையும் தழுவியமைக்கவும் அவை அடிப்படையான கருவிகளாக விளங்குகின்றன (இஅ 125). கூட்டியக்கத்தை வளர்ப்பதில் அவை இறைமக்கள் அனைவரின் ஈடுபாட்டுடன் முக்கியப் பங்களிப்புச் செய்கின்றன.

மாமன்றத்திற்கு முன்தயாரிப்பாக நடத்தப்பட்ட கண்டங்களைச் சார்ந்த ஏழு கூடுகைகளும் புதுமையானவை. அவை அவசியமானவையும் பாதுகாக்கப்பட வேண்டிய அதிகப் பயன்களை விளைவித்தவையும் ஆகும். ஒவ்வொரு பெரிய சமூக-பண்பாட்டுப் பகுதிக்கேற்ப கிறித்தவ வாழ்வை அப்பகுதி முழுவதற்கும் ஆழமாகத் தழுவியமைக்க இத்தகைய கண்டம் அளாவிய கூடுகைகள் சிறந்த வழிமுறைகளே. அவைபோலவே மாநில மற்றும் நாட்டு அளவிலான திரு அவைக் கூடுகைகளில் இறைமக்களுள் பல நிலையினரும் இணைந்து வந்து, தெளிதேர்வு செய்வது ஆயர்கள் குழுவாக இணைந்து வந்து முடிவுகள் எடுக்க உதவுகிறது. இவ்வாறு கூட்டியக்க முறையில் திரு அவையின் பணிசார்ந்த முக்கிய முடிவுகளைச் சிலர் செய்தாலும், அதில் அனைவரும் பங்கேற்கின்றனர். இத்தகைய கூடுகைகளின் இறையியல் மற்றும் திரு அவைச் சட்டம்சார் நிலை தெளிவுபடுத்தப்படவேண்டும்.

திரு அவையில் மிகையான மையப்படுத்தலைக் கைவிட்டு நலமான அதிகாரப் பரவலாக்கலையும், பயனுள்ள பண்பாட்டுமயமாக்கலையும் நடைமுறைப்படுத்த ஆயர் பேரவைகள் மற்றும் மாநில, மாவட்டப்  பேரவைகளின் பங்களிப்பு ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். அவ்வப்போது இத்தகைய பேரவைகளைக் கூட்டுவது திரு அவை வரலாற்றில் ஒரு கட்டாயமாகவே  இருந்துள்ளது. இன்றைய இலத்தீன் திரு அவைச் சட்டம் அதற்கு இடமும் அளித்துள்ளது (திரு அவைச் சட்டங்கள் 439-446). அவை அவ்வப்போது கூட்டப்படுவதுடன், அவற்றின் முடிவுகளுக்குத் திரு அவைத் தலைமைப்பீடம் தரும் ஏற்புமுறை சீரமைக்கப்படவேண்டும். முற்றிலும் அருள்பணி அல்லது ஒழுங்குமுறை சார்ந்த அவற்றின் முடிவுகளுக்குத் தலைமைப்பீடம் தனது மௌனத்தால்  ஏற்பு தரும் முறையை நடைமுறைப்படுத்தலாம்.

(தொடரும்)

ஞாயிறு மறையுரை