என் இனிய நம் வாழ்வு வாசகப் பெருமக்களே!
இனிய வணக்கம்.
தமிழ்நாடு கத்தோலிக்க ஆயர் பேரவையின் அச்சு ஊடகப் பணியகமாம் "நம் வாழ்வு" பதிப்பகத்தின் இந்தப் புதியவலைதளம் வழியாக உங்களைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
1975 ஆம் ஆண்டு தொடங்கி, தமிழ் கூறும் நல்லுலகில் அரை நூற்றாண்டு காலம் சமூக – ஆன்மிக - அரசியல் - வாழ்வியல் வழிகாட்டியாகத் தடம் பதித்து, கத்தோலிக்க இதழியல் பணியின் முன்னோடியாகவும், சமத்துவ சமூகமாற்றத்தின் விடியலுக்கான இறையரசு மதிப்பீடுகளை முன் வைக்கும் ஊடகமாகவும் "நம் வாழ்வு" வார இதழ் வெளிவந்து கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள். 50 ஆண்டுகாலம் அச்சு ஊடகமாகப் பயணித்த இவ்விதழ், இப்பொன் விழா ஆண்டில் இன்று காலத்தின் தேவை அறிந்து இன்றைய இளைய தலைமுறையின் எண்ம தொழில்நுட்பத் துறையில் தடம் பதித்து, வாசகப் பெருமக்கள் வானளாவ உயர்வுகாண, இப்புதிய வலைதளத்தில் வலம் வரவிருக்கிறது.
இன்றைய இளைய தலைமுறையினரிடத்தில் வாசிப்பு குறைந்து வருகிறது என்ற ஆதங்கம் பலரிடத்தில் இருந்தாலும் எண்ம தொழில்நுட்பத் துறையின் வலைதளங்களில், சமூக ஊடகங்களில், இளையோர் இன்னும் வாசிப்பை நேசிக்கிறார்கள் என அறியும்போது உள்ளம் பேருவகை அடைகிறது. இந்த ஆவலை அதிகரிக்கும் வண்ணம், நம் வாழ்வு பதிப்பகம் வெளிக்கொணரும், "நம் வாழ்வு" - எனும் வார இதழ், "கல்விச் சுரங்கம்" - எனும் மாத இதழ் மேலும் நம் வாழ்வுப் பதிப்பகம் வெளியிடும் எண்ணற்ற நூல்கள் யாவற்றையும் ஒருங்கே காணும் தளமாக இப்புதிய வலைதளம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
வார - மாத இதழ்களை வாஞ்சையோடு நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளவும், அதன் சந்தாதாரர்களாக நீங்கள் தொடரவும், உங்கள் சந்தா தொகையைப் புதுப்பித்துக் கொள்ளும் வாய்ப்பையும் நம் வாழ்வு பதிப்பகத்தின் புத்தகங்களை இவ்வலைதளத்தின் மூலமாகவே பதிவு செய்து பெற்றுக் கொள்ளவும் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அதிவிரைவில் இப்புத்தகங்கள் Kindle Version - ஆகவும் வெளிவரவிருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியையும் இவ்வேளையில் தெரிவித்துக் கொள்கிறேன்.
"கூர்முனைப் புரட்சியால் சீர்மிகு உலகமைப்போம்!" எனும் இலட்சியக் கூற்றுடன் புறப்பட்டிருக்கும் "நம் வாழ்வு" இதழின் நோக்கமும் இலக்கும் குன்றாமல் குறையாமல் இருக்க பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வரும் இவ்வேளையில், நீங்களும் பேருதவி தந்து உறுதுணையாக எம்முடன் பயணிக்க அன்போடு அழைக்கின்றோம்.
வாருங்கள், நாளைய பொழுது நமதே! பரந்து விரிந்த வாசிப்பு கொண்ட புதிய சமூகத்தைப் படைத்திடுவோம். அதற்கு நம் வாழ்வு துணை வரும் என நம்பிடுவோம்!
வாசிப்போம் "நம் வாழ்வு"; வளமாகும் உம் வாழ்வு!
ஊடக வழி இறைப்பணியில்,
அருள்முனைவர் செ. இராஜசேகரன்
முதன்மை ஆசிரியர் - நம் வாழ்வு', 'கல்விச் சுரங்கம்' இதழ்கள்.
இயக்குநர் - தமிழ்நாடு ஆயர் பேரவையின் அச்சு ஊடகப் பணியகம்.