“நாகை
மாவட்டத்தைச் சார்ந்த 31 மீனவர்களையும், அவர்களது மூன்று இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் அண்மையில் சிறைப்பிடித்துள்ளனர். இதேபோல, மற்றொரு சம்பவத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களும், அவர்களது நாட்டுப் படகும் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன. மீனவர்களின் வாழ்க்கையும் அவர்களது வாழ்வாதாரமும் கடலுடன் பிரிக்க முடியாத வகையில் பின்னிப் பிணைந்துள்ளது. மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தமிழ்நாட்டின் மீனவச் சமூகத்தினரிடையே ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு கைது நடவடிக்கையின் போதும், மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழப்பதுடன், அவர்களது குடும்பத்தினரிடையே ஆழ்ந்த அச்ச உணர்வும் பாதுகாப்பற்ற நிலையும் ஏற்படுகிறது. தற்போதைய நிலவரப்படி 114 மீனவர்களும், 247 படகுகளும் இலங்கைவசம் உள்ளன. எனவே, இலங்கை அரசால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ்நாடு மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிப்பதற்கு உடனடியாக உரிய தூதரக நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொள்ளவேண்டும்.”
உயர்திரு. மு.க.
ஸ்டாலின்,
முதலமைச்சர்,
தமிழ்நாடு
“இந்திய மரபில் திருமணம் என்பது நீண்ட காலம் நீடிக்கும் புனித உறவாகும். திருமணத்தின் புனிதம் ஒருதலைப்பட்சமான அடக்குமுறை அல்லது அமைதியான துன்பத்தைத் தாங்கிக்கொள்வதில் இல்லை. திருமண உறவின் உண்மையான அர்த்தம் பரஸ்பரம் மரியாதை, நட்பு, கருணையில்தான் உள்ளது. பெண் குடும்ப மரியாதையையும், திருமண புனிதத்தையும் காக்க வேண்டும் என்பதற்காக வாழ்நாள் முழுவதும் அவமதிப்பு, இழிவு, புறக்கணிப்பைத் தாங்குகின்றனர். சகிப்புத்தன்மை தங்களது கடமை என்ற எண்ணத்தில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உணர்வு
ரீதியாகவும் நடக்கும் துன்புறுத்தல்களை அமைதியாகச் சகித்துக்கொண்ட இந்தியப் பெண்கள் பலர் உள்ளனர். திருமணம் என்பது ஆண்களுக்கு அதிகாரத்தை அளிக்கிறது என்ற தவறான நம்பிக்கையை விட்டு அகலவேண்டும். தனது மனைவியின் நலன், பாதுகாப்பு, தேவைகள், மரியாதை ஆகியவை திருமண உறவின் முக்கியப் பொறுப்புகள் என்பதைக் கணவர் உணர வேண்டியது அவசியம். திருமண உறவு என்ற பெயரில் அவமரியாதையை நியாயப்படுத்த முடியாது. குடும்பம் என்ற பெயரில் கணவர் தனது மனைவியைத் தனிமைப்படுத்தி, உணவையும் உடனிருப்பையும் மரியாதையையும் பறித்துவிட்டதால் அது துன்புறுத்துதல் என்ற வரம்பையும் தாண்டிவிடுகிறது.
உயர் நீதிமன்ற
நீதிபதி
விக்டோரியா
கௌரி
“பேருந்துகளில் பயணிகள் ஏறும்போதே பயணச்சீட்டு வாங்க சில்லறை கொடுக்க வேண்டும் என நிர்ப்பந்தம் செய்யக்கூடாது.
பயணச்சீட்டைப் பெற பயணிகள் அளிக்கும் பணம் மற்றும் நாணயங்களைப் பெற்று உரிய மீதித் தொகையை வழங்குமாறு மாநகரப் போக்குவரத்து கழக நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. பணிமனைகளில் பணியின்போது நடத்துநர்களுக்கு வழங்கப்படும்
முன்பணத்தைப் பயணிகளிடம் பயணச்சீட்டு வழங்கும்போது முறையாகப் பயன்படுத்தவேண்டும். பயணிகளிடம் சில்லறை தொடர்பான விவாதங்களைத் தவிர்த்து, கனிவுடன் நடந்துகொள்ளவேண்டும். இது தொடர்பாகப் புகார்கள் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட நடத்துநர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.”
மாநகரப் போக்குவரத்துக்
கழக
இணை
மேலாண்
இயக்குநர்