news
ஞாயிறு தோழன்
திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு (முதல் ஆண்டு) (டிசம்பர் 07) எசா 11:1-10; உரோ 15:4-9; மத் 3:1-12

திருப்பலி முன்னுரை

அன்பின் காலமான இந்தத் திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிறு, மனமாற்றம் பெற்று நல்மக்களாய் வாழ திருமுழுக்கு யோவான் வழியாக நமக்கு அழைப்புவிடுக்கிறது. குறைகள் இல்லாத மனிதன் இல்லை; அதைக் குறைக்கத் தெரியாதவன் மனிதனே இல்லை. மனமாற்றம் நம் வாழ்க்கை புனிதத்தை நோக்கிச்செல்லப் பேருதவியாக இருக்கிறது. நம் உள்ளத்தில் புதைந்து கிடக்கும் பொறாமை, கோபம், தவறான எண்ணங்கள், ‘தான்என்ற ஆணவம், சுயநலம், தவறு என்று தெரிந்தும் துணிந்து செய்தல், பிறர்நலனில் அக்கறையின்மை போன்ற மனிதத்தைச் சிதைக்கும் செயல்களிலிருந்து விடுபட்டுநமது வார்த்தைகளில், வாழ்க்கையில், சிந்தனைகளில், பார்வையில் மாற்றம் பெற்று, தூய வாழ்வு வாழ இந்தத் திருவருகைக் காலத்தில் முயற்சி எடுப்போம்.

திருமுழுக்கு யோவான் நீதியின், உண்மையின், சமத்துவத்தின், தூய வாழ்வின் குரலாகச் செயல்பட்டு, கிறித்தவர்களாகிய நமது வாழ்வு எவ்வாறு அமைந்திடல் வேண்டும் என்பதைத் தெளிவாகக் கூறுகின்றார். இச்சமூகத்திலும் வாழும் தளங்களிலும் இறைவனின் குரலாக நாம் மாறுவோம்; உண்மையான மனமாற்றத்தை நமது செயல்களால் அறிவிப்போம். உள்ளம் என்னும் ஆலயத்தை ஒப்புரவு அருளடையாளத்தால் தூய்மை செய்வோம். அல்லவைகள் அகற்றி, நல்லவற்றில் நிலைத்து, மனமாற்றம் பெற்று வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

ஆண்டவரின் வருகை மகிழ்ச்சியையும் அமைதியையும் விதைக்கும். பிளவுகள், பிணக்குகள் அனைத்தையும் வேரறுத்துச் சமத்துவத்தை ஏற்படுத்தும், ஏற்றத்தாழ்வுகள் அனைத்தும் களையப்பெற்று, அனைத்து மக்களும் வாழ்வு பெறுவர். இல்லாதோர்-இயலாதோர்-தாழ்நிலையில் உள்ளோர் அனைவரும் ஆண்டவரின் மீட்பை அனுபவிப்பர் என்றுகூறி ஆண்டவரின் வருகையின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

கடவுளின் பிள்ளைகளாகிய நாம் அனுதினமும் அளவற்ற நன்மைகளை ஆண்டவரிடமிருந்து பெற்றுக்கொள்கிறோம். நாம் வேண்டுகின்ற, விரும்புகின்ற அனைத்தையும் தேவையான நேரத்தில் நிறைவேற்றி, எக்குறையுமின்றிக் காத்துவருகின்றார். எத்தனைமுறை தவறுகள் செய்தாலும் மன்னித்துத் தாயன்போடு ஏற்றுக்கொள்கின்றார். தந்தைக்குரிய அன்போடும் வாஞ்சையோடும் வழிநடத்தி வரும் இறைவனின் பேரிரக்கத்திற்கு நன்றிகூற அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பின் ஆண்டவரே! எம் திரு அவையை வழிநடத்திவரும் திரு அவைத் தலைவர்கள் அனைவரும் திருமுழுக்கு யோவானைப் போன்று கிறிஸ்துவின் வருகையை வீரியத்துடன் விதைக்கவும், சான்றுபகரும் வாழ்க்கை வாழவும் தேவையான வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. இரக்கத்தின் ஆண்டவரே! உமது வருகைக்காகத் தயாரித்துக் கொண்டிருக்கும் நாங்கள் அனைவரும்  எமது உள்ளத்திலுள்ள கோபம், பகை, போட்டி, தூய்மையற்ற வார்த்தை, வேறுபாடுகள் அனைத்தையும் களைந்து, தூய வாழ்வு வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. நீதியின் ஆண்டவரே! எம் நாட்டுத் தலைவர்கள் அனைவரும் தன்னலம் துறந்து, மக்கள் நலனில் அக்கறை கொண்டு வாழவும், ஏழை மக்கள் வாழ்வு பெறுவதற்கு ஏதுவான திட்டங்களைக் கொண்டு வரவும், மக்கள் அனைவரையும் சமத்துவத்தோடு வழிநடத்தவும் தேவையான ஞானத்தைத் தந்து காத்திடவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. ஞானத்தின் ஊற்றான ஆண்டவரே! எம் பங்கில் உள்ள குழந்தைகள் அனைவரும் ஆண்டவரைப் பற்றிய அறிவில் நாளும் வளரவும், ஆன்மிகத்தில் வளரவும், திரு அவை கற்பிக்கும் நெறிமுறைகளில் வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
திருவருகைக் காலம் முதல் ஞாயிறு (முதல் ஆண்டு) (30-11-2025) எசா 2:1-5; உரோ 13:11-14; மத் 24:37-44

திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் அன்பிற்கினியவர்களே, திருவருகைக் காலத்தின் முதல் வாரத்தில் அடியெடுத்து வைக்கும் நம் ஒவ்வொருவரையும் இன்றைய வழிபாடும் வாசகங்களும்எதிர்நோக்கின் இறைமக்களாகவாழ அழைக்கின்றன. எதிர்நோக்கு என்பது நம்பிக்கையோடு ஒரு காரியத்தை எதிர்பார்ப்பதாகும். இதை முதல் வாசகத்தில் ஆமோஸ், இறைவனின் ஆட்சி எவ்வாறு இருக்கும் என்பதனையும், எவ்வாறு அதை நாம் எதிர்நோக்கிக் காத்திருக்க வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்துகிறது. இரண்டாம் வாசகத்தில் புனித பவுலடியார், நாம் எதிர்நோக்கிக் காத்திருந்த இறையாட்சி கிறிஸ்து இயேசுவின் வருகையால் நிறைவாழ்வையும், இறையாட்சியின் மக்களாக நம் விசுவாச வாழ்வு வாழ வேண்டும் என்பதையும் விவரிக்கிறது. நற்செய்தியில் புனித மத்தேயு இறை நம்பிக்கையோடு எதிர்பார்ப்பவர்களுக்குக் கிடைக்கும் அருளின் அளவை எடுத்துரைக்கிறார். நாம் நம் வாழ்வில் பல்வேறு தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் கொண்டுள்ளோம். அனைவரும் சுயநலத் தேவைகளாய் அல்லாது, சுயநல எதிர்பார்ப்புகளாய் மட்டுமல்லாமல், பொது நலத்துடன் பிறர்நலம் பேணும் தேவையாகவும் எதிர்பார்ப்பாகவும் இருக்க இறைவனை வேண்டி எதிர்நோக்கின் திருப்பயணிகளாக இப்பலியில் இணைவோம்.

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா இறைவனின் அமைதி நிறைந்த இறையாட்சியைப் பற்றி எடுத்துரைக்கின்றார். அனைத்து மக்களும் இறைவனின் ஆலயத்திற்குச் சென்று அவர் வழிகளை அறிந்து நடக்க வேண்டுமென அழைக்கப்படுகிறார்கள். இதுவே நம் மனத்திலும், நம் மத்தியிலும் ஒற்றுமை, சமாதானம், அன்பு நிறைந்த வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்று எடுத்துக்கூறும் இம்முதல் வாசகத்திற்குக் கவனமுடன் செவிமடுபோம்.

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் அடியார் நாம் எப்போதும் விழிப்பாயிருக்க அழைப்பு விடுகிறார். ஆண்டவரின் வருகை நம் அண்மையில் இருப்பதால் நம்முடைய வாழ்க்கை ஒளியிலும் உண்மையிலும் நிறைந்திருக்க வேண்டும்; தீய பழக்கங்களை விட்டுவிட்டு இயேசுவை அணிந்து அன்பில் நிலைத்திருக்க நாம் தயாராக வேண்டும் என நினைவூட்டும் இந்த இரண்டாம் வாசகத்திற்குக் கவனமுடன் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. எங்கள் அன்புத் தந்தையே இறைவா! எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், துறவறத்தார் ஆகிய நாங்கள் அனைவரும் நல்லாயனாம் இயேசுவைப் பின்பற்றிச் சமாதானத்தின் தூதர்களாகவும் அன்பின் வழிகாட்டுதலாகவும் நீதியின் கருவிகளாகவும் வாழ வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அனைத்தையும் படைத்தாளும் இறைவா! எங்கள் பங்குத்தந்தை, பங்கில் பணிபுரியும் அனைத்து அருள்சகோதர-சகோதரிகளையும் உம் பாதம் சமர்ப்பிக்கின்றோம். தாங்கள் கற்றுக்கொண்ட பணியைத் திறம்பட நிறைவேற்றி, உமக்கு உண்மையுள்ள ஊழியராய் இறுதிவரை நிலைத்திருக்கும் வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. வளமான வாழ்வைத் தருகின்ற இறைவா! இந்நாள் வரையில் நீர் எங்களுக்குச் செய்து வருகின்ற சகல நன்மைகளையும் நன்றியோடு நினைவு கூர்கின்றோம். எங்களையும், எங்கள் பெற்றோர், உற்றார்-உறவினர், நண்பர்கள் அனைவரையும் மென்மேலும் ஆசிர்வதித்து வழிநடத்த வேண்டுமென்றும், படிக்கின்ற பிள்ளைகளுக்கு அறிவையும் சிறந்த ஞானத்தையும் தந்தருள வேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. உண்மையின் இறைவா! எங்கள் தொழில் முயற்சிகளை ஆசிர்வதித்து, எங்கள் உழைப்பிற்கு ஏற்ற நற்பலன்களைத் தந்து, எங்களுக்குப் போதுமான செல்வங்களைத் தந்து எங்கள் வாழ்வு வளம் பெறச் செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. இரக்கத்தின் வாழ்வே இறைவா! குடும்பங்களில் நோயினால் துன்பப்படும் மனிதர்களையும் ஆறுதல் தேடும் உள்ளங்களையும், வன்முறைகளால், பசியால் வாடும் ஒவ்வொருவரையும் நீர் நிறைவாக ஆசிர்வதித்துக் குணமளிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழா (மூன்றாம் ஆண்டு) 2சாமு 5:1-3; கொலோ 1:12-20; லூக் 23:35-43

திருப்பலி முன்னுரை

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவில் அன்பானவர்களே, அன்னையாம் திரு அவையோடு இணைந்து உங்கள் அனைவரையும்இயேசு கிறிஸ்து உலகிற்கெல்லாம் அரசர்என்ற மாபெரும் விழாவிற்கு அன்போடு வரவேற்கிறோம்.

நம் அரசரான இயேசு கிறிஸ்துவின் ஆட்சியானது இடத்தைச் சார்ந்த ஆட்சியோ, அதிகாரத்தைக் கொண்ட ஆட்சியோ, பதவிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்சியோ அல்ல; மாறாக, அது இதயங்களைச் சார்ந்த, அன்பையும் பரிவிரக்கத்தையும் அடித்தளமாகக் கொண்ட ஆட்சி. கிறிஸ்துவின் ஆட்சி சமத்துவத்தையும் அமைதியையும் நீதியையும் விரும்பும் ஆட்சி. அவரது ஆட்சி தம் ஆடுகளுக்காய் உயிரையும் கொடுக்கும் ஆட்சி.

இத்தகைய மாபெரும் அரசரின் விழாவில் பங்குபெற இறைவன் கொடுத்த அழைப்பிற்காய் நன்றிகூறுவோம்அகில உலகின் அரசராகிய இயேசுவின் பிள்ளைகளாகிய நாம் உலகப் போக்கின்படி வாழாமல், நம் தலைவராம் இயேசுவைப் போன்று கனிவும் மனத்தாழ்மையும் உடையவர்களாய், பணிவிடை புரிபவர்களாய், மன்னிப்பைக் கொடுப்பவர்களாய், நீதியை விதைப்பவர்களாய், குறிப்பறிந்து கொடுக்கும் நல்ல ஆயனாய் வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

இஸ்ரயேல் மக்களை வழிநடத்த ஆண்டவரால் அருள்பொழிவு செய்யப்பட்ட தாவீது ஆண்டவருக்குப் பணிந்து பணிபுரிகின்றார். நாமும் அருளடையாளங்கள் வழியாக ஆண்டவருக்குப் பணிந்து, இச்சமூகத்திற்கு மகிழ்ச்சியையும் அன்பையும் கொடுக்கும் பிள்ளைகளாய் வாழ்ந்திட அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

இயேசு மீட்பராகவும் மெசியாவாகவும் கடவுளின் மகனாகவும் நல்ல ஆயனாகவும் சிறந்த அரசராகவும் பாவங்களைப் போக்கும் செம்மறியாகவும்  இருந்து, தலைமைத்துவத்தின் மகத்துவத்தை விதைத்துள்ளார். அவரது பாதுகாப்பில் வாழும் நாம், அவரது தலைமைத்துவத்தை நமதாக்கிட அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. நல்ல ஆயனே எம் இறைவா! எம் திரு அவைத் தலைவர்கள் அனைவரும் உமது அடிச்சுவடுகளைத் தன்வயமாக்கிடவும், மக்களின் தேவை அறிந்து செயல்படவும் தேவையான அருள் வரங்களைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. அமைதியின் அரசரான ஆண்டவரே! எம் நாட்டு தலைவர்கள் அனைவரும் போட்டி, பொறாமை, சுயநலம் அகற்றி மக்கள் நலனில் அக்கறை கொண்டு நல்ல தலைவர்களாய் வாழ்ந்திட வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அன்பின் அரசராகிய இயேசுவே! எம் குடும்பங்கள் அனைத்தும் உலகின் அரசராகிய உம்மீது நம்பிக்கை கொண்டு வாழவும், உன்னதராகிய உம் பாதையில் சோர்வின்றிப் பயணிக்கவும், தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. நீதியின் அரசராகிய ஆண்டவரே! இவ்வுலகில் வாழும் இளையோர் தொலைத்தொடர்புக் கருவிகளிலும் நுகர்வுக் கலாச்சாரத்திலும் தொலைந்து போகாமல், உம் மதிப்பீடுகளின் வழியில் வாழ தேவையான வரங்களைத் தந்து  காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 33 - ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) (16-11-2025) மலா 4:1-2; 2தெச 3:7-12; லூக் 21:5-19

திருப்பலி முன்னுரை

விழிப்பாய் இருக்கவும், இறைவன்மீது கொண்டுள்ள நம்பிக்கையில் ஆழப்படவும் பொதுக்காலத்தின் இறுதி ஞாயிறு நமக்கு அழைப்புவிடுக்கிறது. கடவுளின் பிள்ளைகளாகிய நாம் அனைவரும்  வாயில் வாய்மையும், செயலில் நேர்மையும், உள்ளத்தில் உண்மையான அன்பும், அனைத்து மக்களோடு நல்லுறவும், ஏழைகளோடு தோழமையும், வார்த்தையில் மென்மையும், மனத்தில் தூய்மையும், எண்ணத்தில் உயர்வும், கண்களில் கருணையும் கொண்டு வாழும்போது இறுதிநாளில் இறைவன் முன்னிலையில் கலக்கமின்றி மகிழ்வோடு நிற்கலாம்.

வாழ்க்கை என்பது ஒருமுறைதான்; அதில் அன்பை மட்டும் அதிகமாகச் செலவு செய்வோம். மன்னிப்பைத் தேடிச்சென்று கொடுப்போம். இன்னார் என்று இல்லாமல், நாம் சந்திக்கும் அனைவருக்கும் அன்பையும் மகிழ்ச்சியையும் உடனிருப்பையும் உறவையும் கொடுக்க முன்வருவோம். குறிப்பாக, உலக வறியோர் தினத்தைக் கொண்டாடும் இந்நாளில், ஏழைகளின் முகத்தில் இறைவனைக் காண்போம்.

ஏழைகளுக்காக மன்றாடும்போதும், அவர்களுக்காகப் பிறரன்புச் செயல்களில் ஈடுபடும்போதும் நாம் கடவுளோடு ஒன்றிக்கிறோம் என்பதை உணர்ந்துகொள்வோம். ஏழைகளுக்கு உதவுவதில் முன்மாதிரியாய் இருந்து, தேவையில் இருப்போருக்கு விரைந்துசென்று உதவிய அன்னை மரியாவின் பரிந்துரையை நாடுவோம். அச்சம் தவிர்த்து இறுதிநாளில் மானிட மகனை எதிர்கொள்வோம், நம்பிக்கையோடு இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

நம்முடைய வாழ்க்கையின் இறுதிநாள்களைப் பற்றிச் சிந்திக்க இன்றைய முதல் வாசகம் நமக்கு அழைப்பு விடுக்கிறது. நம்முடைய வாழ்நாள்களில் எதை விதைக்கின்றோமோ, அதையே அறுவடை செய்வோம். சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும் மாசற்றவர்களாய் வாழ்ந்து இறையில் சங்கமிக்க இறைவார்த்தைக்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசசகம் முன்னுரை

இன்றைய வாசகத்தில் நாம் எப்படி வாழ வேண்டும்? எவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? எவ்வாறு  உழைக்க வேண்டும்? என்பதைத் தன்னுடைய வீரியமுள்ள வாழ்க்கையால் தூய பவுல் நம் உள்ளத்தில் விதைக்கிறார். மற்றவர்களுக்குச் சுமையாய் இல்லாமல், சுகம் கொடுப்பவர்களாய் வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. ‘நீயே ஆசியாய் விளங்குவாய்என்று மொழிந்த ஆண்டவரே! எம்  திரு அவைக்கு நீர் தேர்ந்தெடுத்துக் கொடுத்தத் தலைவர்கள் உமது பணியைச் சிறப்பாகச் செய்வதற்குத் தேவையான ஞானத்தையும் ஆற்றலையும் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. பாதுகாக்கும் பரம்பொருளே எம் இறைவா! உமது பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் எங்களுடைய வாழ்க்கையாலும் வார்த்தையாலும் உம்மை அறிவிக்கவும், உடன் வாழும் சகோதர- சகோதரிகளுக்கு உதவி செய்து வாழவும், தேவையான நல்மனத்தை எமக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எங்களோடு வாழும் ஆண்டவரேபங்கு மக்களாகிய நாங்கள் அனைவரும் பங்கின் வளர்ச்சியில் எப்போதும் துணைநிற்கவும், இணைந்து உழைக்கவும், அனைத்தையும் கடந்து கடவுளின் பிள்ளைகள் என்ற உறவில் வாழவும், தேவையான அருள்வரங்களைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. நல்லாயனே எம் இறைவா! எம் குடும்பங்களில் உள்ள இளையோர் அனைவரும் உம் வார்த்தைகளைப் படிக்கவும், இறைநம்பிக்கையில் நாளும் வளரவும், திரு அவை காட்டுகின்ற நெறிகளில் வளரவும் தேவையான அருள்வரங்களைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
இலாத்தரன் பெருங்கோவில் நேர்ந்தளிப்பு விழா (09-11-2025) எசே 47:1-2,8-9,12; 1கொரி 3:9-11,16-17; யோவா 2:13-22

திருப்பலி முன்னுரை

அன்பானவர்களேஇன்று நாம் தூய இலாத்தரன் பெருங்கோவில் நேர்ந்தளிப்பு விழாவைக் கொண்டாடுகிறோம். இந்த நாளில் இறைவனின் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்ட நாம், இறைமையை வெளிப்படுத்துவது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும். நம் உடல் இறைவன் வாழும் இல்லம். ஊழியூழி காலமாகத் திரு அவையின் வழிகாட்டுதலாலும், திருமுழுக்குஒப்புரவு, நற்கருணை போன்ற அருளடையாளங்கள் வழியாகவும், கிறிஸ்துவின் உடலாலும் இரத்தத்தாலும் நம் உடலே இறைவனின் இல்லமாக அர்ச்சிக்கப்பட்டுள்ளது.   இறைவனின் இல்லமாகிய இந்த உடலின் புனிதத்தை மாசுபடாமல் பேணிக்காப்பதும், பெற்ற அருளை வீணாக்காமல் பாதுகாப்பதும் நம் கடமையாகும். நம் சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும் பார்வையாலும் உள்ளம் என்னும் ஆலயத்தை மாசுபடுத்தாமல் பாதுகாப்போம். நமது இதயத்துடிப்பாக இருந்து நம்மை இயக்குவிக்கின்ற தூய ஆவியின் குரலுக்குச் செவிகொடுத்து வாழ்வோம். நம் உடல் என்னும்  ஆலயத்தை அன்பு, அமைதி, சமத்துவம். சகோதரத்துவம், உண்மை, நீதி, நேர்மை, மன்னிப்பு போன்ற மதிப்பீடுகளால் அழகுசெய்வோம். நம்மிலும் மற்றவரிலும் வாழ்கின்ற இறைவனைக் கண்டுகொள் வோம்நாம் அமர்ந்திருக்கும் இந்த ஆலயத்தையும் நமது உள்ளத்தையும் அமைதி என்ற புண்ணியத்தால் பாதுகாத்து, ஆலயத்தின் மகத்துவம் அறிந்து கடவுளை அனுபவித்து வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

ஆலயம் என்பது ஆண்டவன் வாழும்  தூய இல்லம். இந்த ஆலயத்தை நோக்கி வருகின்றபோது திருச்சிலுவையிலிருந்தும் நற்கருணையிலிருந்தும் அன்பையும் அருளையும் ஆசிரையும் பெற்றுக் கொள்கிறோம். இறைவனின் அருள் வழிந்தோடும் இந்த ஆலயத்தில், அவர் அருளைப் பெற்று இறைவனுக்குச் சான்றுபகர்ந்து வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

நாம் அனைவரும் கடவுள் எழுப்பும் கட்டடம். இயேசுவே இக்கட்டடத்திற்கு அடித்தளமாய் இருக்கின்றார். நம் உடலுக்கு உயிராக இருக்கின்ற தூய ஆவியின் குரலுக்கு அன்றாடம் செவிகொடுத்து வாழும்போது, நமது வாழ்க்கை சான்றுபகரக்கூடியதாக அமையும் என்பதில் ஐயமில்லை. இறைவனின் கோவிலாகிய நாம் நம்முள் இருக்கும் இறைவனைக் கண்டுகொள்ள அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிகொடுப்போம்.

மன்றாட்டுகள்

1. ‘நானே உங்களைத் தேர்ந்து கொண்டேன்என்று மொழிந்த ஆண்டவரே! திரு அவையை வழி நடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், இல்லறத்தார் அனைவரையும் உமது தூய ஆவியினால் தூய்மையாக்கிக் காத்திட வேண்டுமென்று   இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

2. எம்மோடு வாழ்கின்ற ஆண்டவரே! எம் நாட்டுத் தலைவர்கள் அனைவரும் மக்கள் நலனில் அக்கறை கொண்டு வாழவும், மக்கள் என்ற சொத்தைப் பேணிக்காக்கவும்  தேவையான  ஞானத்தையும் விவேகத்தையும் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அன்பான ஆண்டவரேஇறைமக்களாகிய நாங்கள் ஒவ்வொருவரும் இறைவன் குடியிருக்கும் இல்லம் என்பதை உணர்ந்தவர்களாய் தூய உள்ளத்தோடு வாழ தேவையான அருள்வரங்களைத் தந்து காத்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

4. எம் வாழ்வின் அடித்தளமே இறைவா! சோர்ந்து போன இதயங்களுக்கு ஆறுதலளிக்கும் உமது வாழ்வு தருகின்ற வார்த்தையான நீரூற்றைக் கண்டுகொள்ளவும், அந்த நீரைப் பருகி, அதில் நிலைத்திருந்து நிலைவாழ்வுக்குக்  கடந்து செல்லக்கூடிய வழியை எமக்குக் காட்டிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
இறந்த நம்பிக்கையாளர் அனைவர் விழா (மூன்றாம் ஆண்டு) (02-11-2025) சாஞா 3:1-9; உரோ 5:5-11; யோவா 6:37-40

திருப்பலி முன்னுரை

இன்றைய நாளில் அன்னையாம் திரு அவை இறந்த நம்பிக்கையாளர்களை நினைத்து அவர்களுக்காகச் செபிக்கவும், நிலையற்ற இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், நிலையான வாழ்வைத் தரக்கூடிய ஆண்டவரில் நம்பிக்கை கொண்டு வாழ நமக்கு அழைப்புவிடுக்கிறது. இன்று நாம் நம்மோடு பயணித்தவர்கள், நமக்கு வாழ்க்கையைக் கற்றுத்தந்தவர்கள், நம்மைப் பெற்றவர்கள், நமது துன்பங்களில் துணையிருந்தவர்கள் என எத்தனையோ உறவுகளை இழந்திருப்போம். அவர்களின் இறப்பு ஆழ்ந்த வலியையும் வேதனையையும் தந்தாலும் அவர்கள் கடவுளின் மாட்சியில் பங்குகொள்ள நம்பிக்கையோடு செபிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

வாழ்க்கை என்பது இறைவன் நமக்குத் தந்துள்ள உன்னதமான கொடை. இந்த மதிப்புமிக்க மண்ணக வாழ்வில் நாம் செய்யும் நற்செயல்கள் விண்ணக வாழ்வின் பரிசாகின்றன. இன்று நம் முன்னோர்களை நினைத்துப் பார்க்கும் நாளிலே, அவர்கள் விட்டுச் சென்ற மதிப்பீடுகளை நமதாக்குவோம். எதிர்நோக்கின் திருப்பயணிகளாகப் பயணித்துக் கொண்டிருக்கும் நாம் இயேசுவின் விழுமியங்களை வாழ்வாக்குவதன் வழியாக இம்மையில் நிறைவையும் மறுமையில் நிலைவாழ்வையும் கொடையாகப் பெற்றிட முயல்வோம்.

இன்றைய நாளில் சிறப்பாக, யாரும் நினையாத ஆன்மாக்களுக்காக நாம் திருப்பலி ஒப்புக்கொடுத்து அவர்களுக்காக இறைவனிடம் மன்றாடுவோம். இறப்பு கற்றுத்தரும் பாடங்களை உணர்ந்து நமது வாழ்க்கைப் பாதையைச் சரிசெய்வோம். இறைவனடி சேர்ந்த நமது உறவுகள் அனைவரும் இறைவனின் பேரின்பவீட்டில் இளைப்பாற இத்திருப்பலியில் சிறப்பாகச் செபிப்போம்.

முதல் வாசகம் முன்னுரை

இந்த உலகில் பிறர் வாழ்வு பெறுவதற்காக உழைத்த நீதிமான்களின் ஆன்மாக்கள் கடவுளின் கையில் உள்ளன. கடுந்தொல்லை எதுவும் அவர்களைத் தீண்டாது. தனக்காக மட்டுமே வாழ்வோர் இறைவனைக் காண்பது, அவரது பேரின்பத்தைத் துய்ப்பது கடினம் என்று கூறி நமது உள்ளத்தையும் உறவுகளையும் புதுப்பித்து, தூயவர்களாய் வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

இயேசு ஒளியாக நம்மோடு பயணிக்கிறார். நாம் தூயவர்களாய் வாழ நம்முடைய தூய வாழ்வால் வழிகாட்டுகின்றார். அன்புறவில் நாம் நிலைத்து வாழ அன்பிற்காக உயிரையும் கொடுத்து அன்பை இவ்வுலகில் நிலைத்திடச் செய்தார். அவரின் வாழ்க்கைப் பாதையை நமதாக்கி வாழும்போது அவரோடு பேரின்பத்தில் இருப்போம் என்பதில் ஐயமில்லை என்று கூறி இயேசுவோடு இணைந்து வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! எம் திரு அவையின் வளர்ச்சிக்காய் உழைத்து மரித்த திருத்தந்தை, ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவிகள் அனைவருக்கும் விண்ணகப் பேரின்பத்தைத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. கருணையின் தெய்வமே! நிலையற்ற இந்த உலகில் அழிந்து போகக்கூடிய செல்வங்களில் அதிக நாட்டம் கொள்ளாமல், நிலையான அமைதியைத் தரக்கூடிய உம்மில் வாழத் தேவையான ஞானத்தைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. கருணையின் தெய்வமேஎம் குடும்பங்களில் இறந்த பெற்றோர்கள், உடன்பிறப்புகள், உறவுகள் அனைவரின் தவறுகளை எல்லாம் நீர் மன்னித்து, உமது பேரிரக்கத்தால் நிலையான இளைப்பாற்றியைத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. அன்பின் இறைவா! எமது நாட்டின், எமது பங்கின், எமது குடும்பத்தின் வளர்ச்சிக்காய் உழைத்து மரித்த அனைத்து நம்பிக்கையாளரும் யாரும் நினையாத ஆன்மாக்களும் உம்மை முகமுகமாய்த் தரிசிக்கும் பேற்றினைக் காணவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.