சேர்
என ஆன்மாக்களைச் சேர்த்து,
மகிழ்
என மனங்களை மயங்கவைத்து,
பெருவழியில்லாமல்
சிறுவழி தொடர்ந்த
சிறுமலர்
தெரேசாவின் நூற்றாண்டு விழா!
நான்
ஆண்டவருக்கு முற்றும் உரிமையானவள். அவருக்கு மகிழ்ச்சி கொடுக்கக்கூடிய ஒரு விளையாட்டுப் பொருளாய் இருந்து, இறை விருப்பத்தை அன்பினால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்பதை இறைவார்த்தைப் பின்னணியில் வாழ்ந்து காட்டியவர் சிறுமலர் தெரேசா. இறைவன் அன்பாக இருக்கிறார்; அன்பின் முழுவடிவமாக இருக்கிறார் எனத் தன் இதயத் துடிப்பிலும் பேச்சிலும் மூச்சிலும் இறைவனை அன்பால் அனுபவித்தவர்.
மண்ணகத்தில் நன்மைகள்
செய்து
விண்ணகத்தை
இரசித்தவர்!
மதிநுட்பமுள்ள
அன்பு மகளாய் எழுந்து நின்று, அன்பினால் அனைத்தையும் வென்று, ‘விண்ணிலிருந்து மலர் மாரிப் பொழிவேன்’
என்று ஓங்கி ஒலித்த வார்த்தையே இன்று செயல்வடிவம் பெற்றுக்கொண்டே இருக்கிறது. நதியானது ஓரிடத்தில் ஊற்றெடுத்துப் பல பாதைகளில், பல
வேகங்களில், பல கோணங்களில், காடு
மேடு கடந்து, கடலோடு சேர்ந்து எழுச்சி காண்பதுபோல, மனத்தை எளிமையாலும் செபங்களாலும் முழு இறைநம்பிக்கையாலும் நனைத்து, விண்ணக வீட்டை எட்டிப்பிடித்தவர் பிரான்ஸ் நாட்டின் சின்ன ராணி! இன்று 21-ஆம் நூற்றாண்டு புனிதையாக இளையோர் மனத்தில் எழுச்சியூட்டிக் கொண்டிருக்கிறார்.
ஒளிநிறைந்த அருள்விளக்கு
உன்னதத்தில்!
தெரேசா
கூறுவார், “நான் தூய திரு அவையின் குழந்தை. நான் செல்வத்தையோ, பெயரையோ, புகழையோ கேட்கவில்லை; என் அன்னையாம் திரு அவையின் முகத்திலிருந்து வெளிப்படும் ஒளியின் பிரதிபலிப்பாகவே என் மகிமை இருக்கும். தாயாம் திரு அவையின் அருள்கொடைகளின் வாய்க்காலாக இருக்க விரும்புகிறேன்.” கார்மேல் மடத்தின் நான்கு சுவருக்குள் அடைக்கப்பட்டு, சாதாரணமான வாழ்வு வாழ்ந்த நம் சிறுமலர் சகோதரி ஏற்படுத்திய இந்தத் தாக்கம் நம்மை எழுச்சிகொள்ளச் செய்கிறது.
தெரேசா
பொதுவாழ்வை விட்டு விலகாமல் தன் பணியை மிகவும் பெருந்தன்மையுடனும் உறுதியுடனும் நிறைவேற்றினார். அதனால் அவர் வீரமிக்க ஒரு துறவற வாழ்வை வாழ்ந்து மறைந்தவர் என்று திருத்தந்தை 11-ஆம் பத்திநாதர் கூறுகிறார். தெரேசா அன்பின் சிறுவழியைப் பின்பற்ற நம்மை அழைக்கிறார். அமைதியையும் நட்பையும் விதைக்கும் ஒரு புன்னகையாக அல்லது ஓர் அன்பு செயல் நம்மை விட்டு நழுவிச்செல்லாமல் பார்த்துக்கொள்ள அழைக்கிறார். ஒரு மறைபரப்புப் பணியாளராக வாழ்ந்து, மறைச்சாட்சியாக உயிர் துறக்கும் கனவுகளுடன் வாழ்ந்த இளம்பெண் தெரேசா, நம் துறவற இல்லங்களில் மேற்சொல்லும் செபங்கள் வழியாக அந்தக் கனவுகளை நிறைவேற்ற முடியும் என்பதை இயேசு தனக்கு உணர்த்தினார் என்று தனது குறிப்பேட்டில் பதிவு செய்துள்ளார்.
பாரில்
மறைந்தும் மணம் பரப்பும் சின்ன இராணியின் விழுமியங்கள் நூற்றாண்டைக் கொண்டாடும் காலகட்டத்தில், நம் கார்மேல் இல்லங்களிலும் மலரட்டும்! வளரட்டும்! ‘இயேசு
மட்டுமே என் ஒரே அன்பு’ என்ற தெரேசாவின் வார்த்தை நம்மை இறையன்பில் இணைக்கட்டும்.