news
உலக செய்திகள்
“விளையாட்டு அமைதிக்கான தூதுவன்”- திருத்தந்தை லியோ

இத்தாலியின் தாரான்டோ நகரில் ஆகஸ்டு 21 முதல் செப்டம்பர் 3 வரை நடைபெற்று வரும் 20-வது மத்திய தரைக்கடல் விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு, திருத்தந்தை லியோ பகிர்ந்துள்ள தனது வாழ்த்துச் செய்தியில், “இப்போட்டிகள் மத்திய தரைக்கடல் பகுதி மக்கள் மத்தியிலும், உலக அளவிலும் அமைதி மற்றும் சகோதரத்துவத்தைப் பறைசாற்றும் ஓர் அடையாளமாகத் திகழவேண்டும்என்று தெரிவித்துள்ளார். போட்டிகளை மனிதக் குடும்பத்தின் சந்திப்பாக மாற்றும்போது விளையாட்டு முழுமை பெறுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இப்போட்டிகளில் வத்திக்கானின்அத்லெடிகா வத்திக்கானாஅமைப்பைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும் பங்கேற்கின்றனர். 26 நாடுகளைச் சார்ந்த சுமார் 4000 வீரர்கள் 33 விளையாட்டுப் பிரிவுகளில் போட்டியிடுகின்றனர்.

news
உலக செய்திகள்
“இளைஞர்களே, மாபெரும் கனவுகளைக் காணுங்கள்”- திருத்தந்தை

இளைஞர்கள் தனித்துவமான நம்பிக்கை, நோக்கம் மற்றும் சேவை உள்ளத்துடன் தைரியமாகக் கனவு காண ஊக்குவிக்கும் வகையில் திருத்தந்தை 14-ஆம் லியோ, இத்தாலியிலுள்ள அசிசி நகருக்குப் மேய்ப்புப்பணிப் பயணம் மேற்கொண்டார். ‘பிரான்சிஸ்கன் இளைஞர் சந்திப்புஎன்ற நிகழ்வின் நிறைவாக அமையும் இந்தப் பயணத்தில், ஐரோப்பா முழுவதிலிருந்தும் வருகை தரும் 18 முதல் 33 வயதுடைய ஆயிரக்கணக்கான இளைஞர்களைத் திருத்தந்தை சந்திக்கவுள்ளார். புனித மேரி ஆஃப் தி ஏஞ்சல்ஸ் பேராலய வளாகத்தில் நடைபெறும் இந்நிகழ்வில், இளைஞர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் திருத்தந்தை, தொடர்ந்து சிறப்புத் திருப்பலியையும் தலைமை தாங்கிச் சிறப்பிக்கவுள்ளார். வாழ்க்கையின் விரக்தியினாலும், நவீனச் சவால்களினாலும் எதிர்காலத்தைக் குறித்துக் கனவு காணத் தவறும் இன்றைய இளைய சமுதாயத்திற்கு புனித பிரான்சிஸின் எளிமையானபுனிதமான தேடல் கொண்டவாழ்க்கை முறை பெரும் வழிகாட்டியாக இருக்கும் என அமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

news
உலக செய்திகள்
“எண்மத் தகவல் தொடர்பு உண்மைக்கும் மனிதக் கண்ணியத்திற்கும் சேவையாற்ற வேண்டும்”- திருத்தந்தை லியோ

குருவாண்டாவின் கிகாலி நகரில் நடைபெற்று வரும் அகில உலகக் கத்தோலிக்க ஊடக அமைப்பானசிக்னிஸ் (signis) உலக மாநாட்டில் பங்கேற்பாளர்களுக்குத் திருத்தந்தை லியோ அனுப்பிய செய்தியில், “எண்மத் தொழில்நுட்பங்களும் ஊடக உத்திகளும் உண்மை, மனிதக் கண்ணியம், அமைதி மற்றும் இயற்கை சூழலைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு இயங்கவேண்டும்என்று கேட்டுக்கொண்டுள்ளார். தனதுமாண்புமிகு மானுடம்(magnifica humanitas) எனும் சுற்றுமடலை மேற்கோள்காட்டிப் பேசிய திருத்தந்தை, ‘கலாச்சார இணக்கம் மற்றும் சுற்றுச்சூழல் நலனுக்கான டிஜிட்டல் தகவல் தொடர்புஎன்ற மையப்பொருளில் நடைபெறும் இம்மாநாடு, நற்செய்தி விழுமியங்களான அமைதி, மனிதக் கண்ணியம் மற்றும் இயற்கை வளங்களைப் பேணுவதில் புதிய உத்வேகத்தை அளிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

news
உலக செய்திகள்
‘முதியோர் சுமையல்ல, போற்றப்பட வேண்டிய கொடை’

அண்மையில் கொண்டாடப்பட்ட 6-வது உலக தாத்தா-பாட்டியர் மற்றும் முதியோர் நாளை முன்னிட்டு, வத்திக்கான் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்தகுடும்பம் மற்றும் வாழ்வுக்கானஆணையத்தின் முதியோர் பணிப் பொறுப்பாளர் விட்டோரியோ ஸ்கெல்ஸோ, “முதியோர் பராமரிக்கப்படவேண்டிய சுமையல்ல; மாறாக, போற்றப்பட வேண்டிய கொடை. சேவைகளை அமைப்பது மட்டும் போதாது; உறவுகளைக் கட்டியெழுப்பவேண்டும். அப்போதுதான் இறைவனால் நாம் மறக்கப்படவில்லை என்ற உண்மை, குடும்பத்தாலும் பங்குச் சமூகத்தாலும் நாம் மறக்கப்படவில்லை என்ற தினசரி அனுபவமாக மாறும்என்று கூறினார். “ஒதுக்கித்தள்ளும் கலாச்சாரத்தைக் கைவிட்டு, தனிமையில் வாழும் முதியோரைச் சந்திக்க அழைப்பு விடுத்தார். முதியோர் தங்களின் பலவீனத்திற்கு அஞ்சாமல், உலக அமைதிக்காகத் தொடர் செபம் செய்யும் பணியை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும், இளையோரும் முதியோரும் இணைந்து செயல்படும் தலைமுறைக்கு இடையேயான உறவே திரு அவையின் வாழ்வை வளப்படுத்தும் என்றும் கூறினார்.

news
உலக செய்திகள்
“உக்ரைனில் நீதியான அமைதிக்கான சூழல் உருவாக்கப்படவேண்டும்”

இலத்தீன் வழிபாட்டுமுறை கத்தோலிக்கத் திரு அவையின் மறுசீரமைப்பின் 35-ஆம் ஆண்டு விழாவில் திருத்தந்தையின் தூதராகப் பங்கேற்க, திருப்பீடத்தின் வெளியுறவுத்துறைச் செயலர் பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் உக்ரைன் சென்றுள்ளார். உக்ரைன் வான்வெளி மூடப்பட்டுள்ளதால், அவர் போலந்து வழியாகச் சாலை மார்க்கமாக உக்ரைனை அடைந்தார். எல்விவ் நகரில் பேராயர், “போரின் நீதியான முடிவு என்பது ஐரோப்பாவின் இப்பகுதியில் அமைதியை மீட்டெடுப்பதாகும்என்றார். உக்ரைனிய மக்களின் தியாகங்களையும் துயரங்களையும் திருத்தந்தை லியோ மற்றும் திரு அவை மறந்துவிடவில்லை என்றும், நீதியான அமைதிக்கான தகுந்த சூழலை நாம் உருவாக்கவேண்டும் என்ற அவர், போரில் உயிரிழந்தவர்களுக்காகத் தேசிய அளவிலான மௌன அஞ்சலியிலும் பங்கேற்றார். போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனிய கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்திற்குச் சென்று அங்குள்ள மாணவர்களின் சமூகப் பணிகளையும், மாற்றுத்திறனாளிகளுக்கான ஆதரவுத் திட்டங்களையும் கேட்டறிந்தார்.

news
உலக செய்திகள்
“போர்க்காற்று, நம்பிக்கையை அணைத்துவிடக்கூடாது”- திருத்தந்தை லியோ

உலகில் வீசும் போர்க்காற்று அமைதிக்கான நம்பிக்கையை அணைத்துவிடக்கூடாது. நாடுகள் மீண்டும் தூதரகப் பேச்சுவார்த்தைக்குத் திரும்பவேண்டும்என்று திருத்தந்தை லியோ வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் உக்ரைனில் நிலவி வரும் தீவிரப் போர்ச்சூழல் குறித்துத் தனது கவலையைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, “போர் வன்முறையையும் மரணத்தையும் விதைத்து, அப்பாவி மக்களைப் பாதிக்கிறது. இந்தச் சூழலிலும் நாம் நம்பிக்கையை இழக்கக்கூடாது. நாடுகள் தங்களுக்குள் இருக்கும் மோதல்களைப் பேச்சுவார்த்தை மற்றும் நிர்வாக வழிகள் மூலமே தீர்க்க வேண்டும்; அதுவே நிலையான அமைதிக்கு வழிவகுக்கும்என்றார். ‘கடல் ஞாயிறுதினத்தை முன்னிட்டு இராணுவப் பதற்றங்களால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மாலுமிகள், மீனவர்கள் மற்றும் துறைமுகத் தொழிலாளர்களுக்குத் தனது ஆதரவையும் செபங்களையும் தெரிவித்தார். நிறைவாக, போலந்து நாட்டின் ஜாஸ்னா கோரா அன்னை மரியா திருத்தலத்திற்குப் புனிதப் பயணம் மேற்கொண்டுள்ள பல்லாயிரக்கணக்கான இறைமக்களுக்குத் தனது ஆசிரையும் வாழ்த்துகளையும் திருத்தந்தை வழங்கினார்.