காலை
5:30 மணி. ஜோசப் தான் பயணித்த புறநகர் இரயிலில் குளிர் காற்று பலமாக வீசியதால் உடலில்
சற்றே நடுக்கம் ஏற்படுவதை உணர்ந்தார். 25 ஆண்டுகளாக, அதிகாலையில் வேலைக்குச் செல்ல, பழகிப்போன காற்று என்றாலும், வயதாக, வயதாக
உடம்பில் மாற்றங்கள். அவருக்கு ஓட்டுநர் வேலை. அந்த வாரம், சென்னையிலிருந்து பாண்டிச்சேரிக்கு,
பாயிண்ட்-டு-பாயிண்ட் பேருந்தை ஓட்டுவதற்காக வீட்டிலிருந்து பேருந்து நிலையம்வரை இரயிலில்
பயணித்துக் கொண்டிருந்தார்.
தனது
அருகில் ஒரு வாலிபப் பையன் அமர்ந்து இருந்தான். காதில் ஹெட்போன்களைச் சொருகி, தனது
ஸ்மார்ட்போனில் பாடல்களைக் கேட்டு இலயித்து இருந்தான். இரயிலின் இரைச்சல் தவிர்க்கவும்,
மிக முக்கியமாகத் தனது தலையில் ஓடும் எண்ணங்களை அமைதிப்படுத்தவும், தனக்கும் ஒரு ஸ்மார்ட்போன்
இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஜோசப் நினைத்தாலும்,
அவரது மனம் அதற்கு ஒருநாளும் அனுமதி கொடுத்ததில்லை. அவர் தான் பயன்படுத்திய தனது பழைய பொத்தான் கைப்பேசியைத் தன் சட்டைப் பையிலிருந்து
எடுத்துப் பார்த்தார். அது தன் வயதைப் போலவே தேய்ந்து போயிருந்தது. ‘0’ பொத்தான் கிட்டத்தட்ட
தேய்ந்து கீழே விழும் நிலையில் இருப்பதைக் கவனித்தார். கடந்த பத்து ஆண்டுகளாக அந்தத் தொலைப்பேசி தனக்கு எவ்வளவு உண்மையாக
இருந்திருக்கிறது என்று பெருமைப்பட்டுக் கொண்டார்.
இரயிலிலிருந்து
இறங்கிய பிறகு, ஜோசப் டிப்போவிற்கு நடந்து
சென்று, தனது பேருந்தில் ஏறி, தலையிலும் முதுகிலும் வலி நிவாரணி மருந்தைத் தடவினார். வயதாக வேலை செய்ய
மனம் விரும்பினாலும், உடல் ஒத்துழைக்க மறுக்கிறதே! வெயில், மழை என்ஜின் வெப்பம் என எல்லாச்
சூழலிலும், உழைத்துத் தேய்ந்துபோன உடம்பு அல்லவா!
ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டு, தனது ஷிப்ட்டைத் தொடங்கினார். உடம்பில் சோர்வு; ஆனால்,
வீட்டில் உள்ள தனது மூன்று மகள்களைக் கரையேத்தணுமே! படிப்பு, திருமணம் எனச் செலவுகள்
ஏராளம் இருக்கிறதே! தன் மூன்று மகள்களையும் நினைத்தவுடன், உடல் பலவீனம் கரைந்து, பேருந்து நான்காம் கியரில் நிதானமாக வேகம் எடுத்தது. அவர்கள் மேல் அவ்வளவு பாசம்.
இரவு
வீட்டிற்கு வந்தபோது இரண்டாவது மகள், “அப்பா, எனக்கு IT கம்பெனியில்
வேலை கிடைச்சிடுச்சு” என்றாள். அதைக் கேட்டு அவர் மகிழ்ந்தவர், “சந்தோசம்டா” என்றார். எல்லாரும்
மகிழ்ச்சியடைந்தனர். மூத்தவள் யு.பி.எஸ்.சி. தேர்வுகளுக்குத் தயாராகி வந்தாள். ஆனால்,
தன் வாழ்க்கையில் கடினமான பாதையைத் தேர்ந்தெடுத்து
விட்டோமோ எனத் திடீரென்று அவளுக்குள் ஒரு சிந்தனை. ஆனாலும் ஒரு கணம் சகோதரியின் பயணம்
இப்படி எளிதாக அமைந்துவிட்டதே என்று மகிழ்ந்தாள்.
இரவு
உணவின்போது இரண்டாம் மகள் தனது சம்பள விவரங்களைப்
பகிர்ந்துகொண்டாள். ‘முதல் வேலையில் இவ்வளவு சம்பளமா?’ எனக் கேட்டு அம்மா வியந்தாள்.
விளையாட்டாகத் தன் தந்தையைக் கிண்டல் செய்த மகள், “ஒரு மாதத்தில் நான் சம்பாதிக்கும்
அளவுக்கு, அப்பா ஐந்து மாதங்கள் வேலை செய்ய வேண்டும்” என்று
கூறிச் சிரித்தாள். உணர்ச்சியற்ற இந்தக் கருத்துக்கு அவளுடைய அம்மா உடனே அவளைக்
கண்டித்தாள்; ஆனால், ஜோசப் அதை எளிதாக எடுத்துக்கொண்டு, “ஏன் அவளைத் திட்டுற?” என மனைவியிடம்
கூறினார். மூத்தவள் தன் தந்தையின் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக் கவனித்து, அவரைக்
கவலையுடன் பார்த்தாள். தன் தந்தை இந்தக் குடும்பத்திற்காக எவ்வளவு தியாகம் செய்திருக்கிறார்
என்பதை அவள் புரிந்து இருந்தாள்.
இரண்டாவது
மகள் அதோடு நிற்கவில்லை. “அப்பா, நீங்க ரொம்பவே உழைச்சிருக்கீங்க, ஆனா உங்க வேலையில
எந்த முன்னேற்றமும் இல்லை. வாழ்க்கையில சாதிக்கக் கஷ்டப்பட்டு உழைப்பது எவ்வளவு முக்கியம்னு
உங்க வாழ்க்கை சொல்லுது. ஆனா இப்ப எல்லாம் கஷ்டப்பட்டு உழைக்கிறது முக்கியம் இல்லைப்பா.
ஸ்மார்ட்டா இருக்கணும்ப்பா. சீக்கிரம் நிறைய காசு சம்பாதிக்கணும்” என மகிழ்ச்சியின் உச்சத்தில் வார்த்தைகளை அள்ளி வீசிக்
கொண்டிருந்தாள்.
இந்தமுறை
அவரால் அவளது வார்த்தைகளைத் தாங்கிக்கவே முடியவில்லை. அவள் கூறிய வார்த்தைகள் அவரைக்
கூனிக் குறுக வைத்தன. ‘இவ்வளவு வருஷமா இரவும் பகலும் கஷ்டப்பட்டு உழைச்சு என்ன
பயன்? காலம் முழுவதும் ஒரே வேலை’ என மனசுக்குள்ளயே சொல்லிக் கொண்டார்.
‘இப்பவெல்லாம் கடின வேலை முக்கியம் இல்லைப்பா. ஸ்மார்ட்டா இருக்கணும்ப்பா’ என மகள் கூறினது அவர் காதில் ஒலித்துகொண்டே இருந்தது. நீண்ட நேர வேலை, களைப்பு, உடல் வலி... அவரைப் படுக்கைக்கு
அழைத்துச் செல்ல, அதே சிந்தனையோடு கண்ணயர்ந்து
உறங்கினார்.
மறுநாள்
காலை மூத்த மகள் விழித்தெழுந்து, அப்பா வேலைக்குப் போயிட்டாரான்னு பார்க்கச் சென்றாள்.
ஆனால், அவர் இன்னும் படுத்திருப்பதைக் கவனித்தாள்.
அவரை நோக்கி நடந்து வந்தப்போ மேஜையில மோதி தடுமாற
அவருடைய பழைய பட்டன் போன் தரையில் விழ,
போன்ல இருந்த ‘0’ பட்டன் கழண்டு கீழே விழுந்தது. அதைக் கையில்
எடுத்துவிட்டு, “அப்பா எழுந்திரிங்கப்பா, வேலைக்கு போகணும்ல” என அப்பாவை எழுப்பினாள். அவர் எழுந்திருக்கவே இல்லை.
மூத்த
மகள் உறைந்துபோய் நின்றாள். இந்த முறை அவள் மீண்டும் சத்தமாக “அப்பா!” என்று கூப்பிட்டாள்.
ஆனால், எந்தப் பதிலும் இல்லை. சத்தம் கேட்டு அம்மாவும், மற்ற இரண்டு மகள்களும் ஓடிவர,
அவர் அசையாமல் படுத்திருப்பதைக் கண்டு உறைந்தார்கள். அவரோடு போட்டிப் போட்டு உழைத்த
அவரது மூச்சுக்காற்றும் அவரோடு சேர்ந்து நிரந்தரமாக உறங்கிப்போயிருந்தது. குடும்பம் உடைந்து போயிருந்தது.
குற்ற உணர்ச்சியில் மூழ்கியிருந்த இரண்டாவது மகளால் அழுகையை நிறுத்தவே முடியவில்லை.
முந்தைய இரவில் அவள் பேசிய வார்த்தைகள் அவள் மனத்தில் எதிரொலித்தன.
எல்லாக்
காரியங்களும் முடிந்தன. இரண்டாவது மகள் குற்ற
உணர்வோடு தன் அப்பாவின் அறைக்குச் சென்று, அவரது படுக்கையைக் கைகளால் மென்மையாகத் தடவி,
அப்பா இருப்பதைப் போல நினைத்து “அப்பா” என்று அழைத்தாள். ஒரு பழைய டைரி
அவர் தலையணைக்கு அடியில் இருப்பதைக் கண்டாள். அதைத் திறந்தாள். அதில் பில்கள்,
குடும்பக் கணக்குகள் மற்றும் மூன்று மகள்களுக்கும் திருமணச் செலவுக்காக அவர் முன்பே
திட்டமிட்டுப் போடப்பட்ட சிட் ஃபண்ட் விவரங்கள், அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க
வாங்கி வைத்திருக்கும் தங்க பத்திரங்களின் விவரங்கள், தனது தாய்க்கு மருத்துவக் காப்பீடு,
வைப்பு நிதியின் வட்டியில் மாதாந்திர தனிப்பட்ட
உதவித்தொகை போன்ற பல விவரங்கள். படித்த அவள் முகத்தில் இருந்து வழிந்த கண்ணீர் டைரியின் பக்கங்களை நனைத்தது. அதை தன் மார்பில்
வைத்து அணைத்துக்கொண்டு விம்மி விம்மி அழுதாள்.
வீட்டின்
காலிங் பெல் ஒலித்தது. அறையை விட்டு வெளியே வந்தாள். அலுவலகத்திலிருந்து அப்பாவுடைய
நண்பர் வந்திருந்தார். அம்மாவிடம் காசோலை ஒன்றைக்
கொடுத்து, “இது ஜோசப் போட்டிருந்த அவரது உயிர்
காப்பீட்டிலிருந்து பெற்ற பணம். நான் இறந்த பிறகு இந்தப் பணத்தை வாங்கி வீட்டில் கொடுத்துடு
நண்பா என
என்னிடம் கூறியிருந்தார். தங்கமான மனுஷன்மா! குடும்பம்தான் எப்போதுமே அவரது
சிந்தனைம்மா. அனாவசியமான செலவு எதையும் செய்ய மாட்டார். தன் குடும்பத்துக்காகச் சேமிப்பு,
சேமிப்பு. அதுதான் எப்போதுமே அவரது சிந்தனை. உங்களுக்காக ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்துச் செய்தார். அவரு
இறக்கலம்மா. நீங்க சிரமப்படக்கூடாதுன்னு எல்லாத்தையும்
உங்களுக்காகச் செய்து வைத்திருக்கிறார். அவரது
நினைவுகள் உங்களோடு எப்போதும் இருக்கும்படி
செய்துவிட்டு போயிருக்கிறார்” எனக் கூறிவிட்டு சென்றார்.
இதைக்
கேட்ட இரண்டாவது மகள் தன் கையில் வைத்திருந்த அழுக்கடைந்து, ஆங்காங்கே கிழிந்து போயிருந்த
அந்த அப்பாவின் டைரியைக் கட்டி அணைத்துக்கொண்டு
ஓடி அப்பாவின் அறைக்குள் போய் கதவைத் தாளிட்டு
‘ஓ’வெனக் கதறி அழுதாள். “அப்பா, என்னை மன்னிச்சுடுங்க அப்பா.
நீங்கதாப்பா ஸ்மார்ட்! எப்போதும் சூப்பர் ஸ்மார்ட்பா! திரும்பி உயிரோட வாங்கப்பா. நான்
உங்களைக் கட்டி பிடிச்சு ‘நீங்க ஸ்மார்ட்’னு
சொல்லணும்பா” என்று கதறிய அவள் கூக்குரல் விண்ணை எட்டியது.
தேய்ந்து
போன, அந்தப் பழைய பொத்தான் போன் அவரது அறையின் மேசையில் ஓர் அழகான கதாபாத்திரமாய்,
அவர் பெருமை சொல்லும் காட்சிப் பொருளாய் அலங்கரித்துக்
கொண்டிருந்தது.