நிகழ்வு
மைக்கேல் ஆஞ்சலோ என்ற கலைஞன் வடித்த மிகவும் தத்ரூபமான ஒரு சிற்பம்தான் ‘Pieta’ என்பதாகும். இந்த சிற்பத்தில் இயேசுவின் இறந்த உடலை தாய் மரியா தன்னுடைய மடியில் வைத்திருப்பார். இந்த சிற்பத்தை அவர் வடிவமைத்துவிட்டு, மக்களுடைய பார்வைக்கு அதனை வைத்தார். அதைப் பார்த்த நிறையப் பேர் பாராட்டிச் சென்றார்கள். ஒருசிலர் சிற்பத்தில் மரியாவின் முகத்தில் இயேசுவை இழந்த கவலை தெரியவில்லை, அவர் மிகவும் இளமையாக இருப்பது போன்று தெரிகின்றார் என்று விமர்சனம் செய்தார்கள். அவர்களுடைய விமர்சனத்தைக் கேட்டுக்கொண்ட மைக்கேல் ஆஞ்சலோ இவ்வாறு பதில் சொன்னார்: மரியாவின் முகத்தில் துக்கமோ, வேதனையோ தெரியாமல் இருப்பதற்குக் காரணம், அவர் இயேசுவின் இழப்பினால், துக்கப்படவில்லை என்று அர்த்தம் கிடையாது. மாறாக தன்னுடைய மகன் உயிர்த்தெழுவார் என்ற எதிர்நோக்கோடு இருந்தார். அதனால்தான் அவருடைய முகத்தில் துக்கமோ, வேதனையோ தெரியவில்லை. மேலும் மரியா இளமைத் தோற்றத்தோடு இருப்பதற்குக் காரணம் அவருடைய தூய்மையும் மாசற்றதன்மைமே ஆகும். அவையே மரியாவை இளமையோடு இருக்கச் செய்தது.
இவ்வாறு அவர் பதில் சொன்னபிறகு சிற்பத்தை விமர்சனம் செய்தவர்கள் அமைதியாகச் சென்றார்கள்.
வரலாற்றுப் பின்னணி
வியாகுல அன்னையின் விழா பதிமூன்றாம் நூற்றாண்டிலிருந்தே கொண்டாடப்பட்டு வந்ததற்கான வரலாறு இருக்கின்றது. 1221 ஆம் ஆண்டு ஸ்கூனன் (Schonan) என்ற இடத்தில் வியாகுல அன்னைக்கென்று பீடம் ஒன்று எழுப்பப்பட்டது. அதன்பிறகு வியாகுல அன்னையின் பக்தி முயற்சிகளை சர்வைட்ஸ் சபையார் வளர்த்தெடுத்தனர். 1727 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த பதிமூன்றாம் பெனடிக்ட் வியாகுல அன்னையின் விழாவை உலகும் முழுவதும் கொண்டாடப் பணித்தார். 1913 ஆம் ஆண்டு, திருத்தந்தை பத்தாம் பத்திநாதர் இவ்விழாவை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 ஆம் நாள், அதாவது திருச்சிலுவை மகிமை விழாவிற்கு அடுத்த நாளில் கொண்டாடப் பணித்தார். இவ்வாறு தோன்றியதுதான் வியாகுல அன்னையின் பெருவிழாவாகும்.
மரியாவின் ஏழு வியாகுலங்கள்
மரியா, வானத்தூதர் கபிரியேலின் வார்த்தைகளுக்கு ஆம் எனச் சொல்லி, இறைவனின் திருவுளத்திற்கு பணிந்து நடக்கத் தொடங்கியதிலிருந்து, இறந்த இயேசுவை அடக்கம் செய்தது வரை அனுபவித்த வியாகுலங்கள் – துன்பங்கள் – ஏராளம். ஆனாலும் திருச்சபை மரியாவின் வியாகுலங்கள் ஏழு என்று மட்டும் பட்டியலிட்டிருக்கிறது. எனவே, அவை என்னென்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.
சிமியோனின் இறைவாக்கு (லூக் 2:25-35)
மரியாவும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையுமான யோசேப்பும் குழந்தை இயேசுவை எருசலேம் திருக்கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கச் சென்றபோது அங்கிருந்த சிமியோன் குழந்தை இயேசுவைக் கையில் ஏந்தி, “இதோ இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாக இருக்கும். இவ்வாறு பலருடைய எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஓர் வாள் ஊடுருவிப் பாயும்” (லூக் 2:34-35) என்று மரியாவிடம் சொல்லுகிறார். சிமியோனின் இவ்வார்த்தைகள் மரியாவின் உள்ளத்தில் மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தியிருக்கும். ஏனென்றால், இயேசுவின் தாயாக இருப்பதால் துன்பங்கள் வரலாம் என மரியாவுக்கு தெரிந்திருக்கும். ஆனால் அது இவ்வளவு சீக்கிரமாக வரும் என்று அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்.
குழந்தையைத் தூக்கிக்கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடுதல் (மத் 2:13-14)
ஞானிகள் தன்னை ஏமாற்றிவிட்டதை அறிந்த கொடுங்கோலன் ஏரோது குழந்தை இயேசுவைக் கொல்வதற்குக் கட்டளையிடுகின்றான். இதனை கனவின் மூலமாகத் தெரிந்துகொண்ட யோசேப்பு மரியாவையும் குழந்தை இயேசுவையும் தூக்கிக்கொண்டு எகிப்துக்கு ஓடுகிறார். பெத்லகேமிலிருந்து எகிப்து 600 கிலோ மீட்டர் தூரம் இருக்கும். அவ்வளவு தூரத்தையும் பயத்தோடும், வேதனையோடும் கழித்த மரியாவிற்கு இது ஒரு வியாகுலம்தான்.
சிறுவன் இயேசு கோவிலில் காணாமல் போதல் (லூக் 2:43- 47)
தூய அல்போன்ஸ் லிகோரி கூறுவார், “மரியா அடைந்த வியாகுலங்களில் மிகவும் கொடியது இயேசு எருசலேம் திருக்கோவிலில் காணாமல் போனதுதான். ஏனென்றால் மற்ற வியாகுலங்களில் இயேசு மரியாவோடு உடன் இருப்பார். இதில் இயேசு மரியாவோடு இல்லை. தான் ஏதாவது தவறு செய்துவிட்டோமோ, அதனால்தான் இயேசு தன்னைவிட்டுப் பிரிந்துபோய்விட்டாரோ என மரியா நினைத்திருக்கக் கூடும். அது அவருக்கு மிகப்பெரிய வியாகுலமாக இருந்திருக்கும்”. தூய லிகோரி சொன்னது முற்றிலும் உண்மை. இயேசு கோவிலில் காணாமல் போனது மரியாவிற்கு மிகப்பெரிய வியாகுலம்தான்.
இயேசு சிலுவை சுமந்து செல்லுதல் (லூக் 23:27)
கள்வர்களுக்கும் நாட்டைக் காட்டிக்கொடுத்தவர்களுக்கும் கொடுக்கப்படும் சிலுவைச் சாவு, ஒரு பாவமும் அறியாத தன்னுடைய மகனுக்குக் கொடுக்கப்பட்டதை நினைத்து மரியா மிகுந்த வேதனை அடைந்திருக்கலாம். அது அவருக்கு மிகப்பெரிய வியாகுலமாக அமைந்திருக்கும்.
சிலுவையின் அடியில் துணை நின்றது (யோவா 19:41,42)
ஒரு குற்றவாளியைப் போன்று சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும் தன் மகன் இயேசுவைப் பார்ப்பதற்கு மரியாவிற்கு வேதனையிலும் வேதனையாக இருந்திருக்கும். மூன்று ஆண்டுகள் உடனிருந்து இயேசு செய்த அற்புதங்களையும் அதிசயங்களையும் பார்த்த சீடர்கள் ஓடிப்போனது, இயேசுவிடமிருந்து எவ்வளவோ நன்மைகளையும் நலன்களையும் பெற்றுக்கொண்ட மக்கள் அவரைக் கை நெகிழ்ந்தது இவற்றோடு சேர்த்து, தன் மகன் இப்படி வானத்திற்கும் பூமிக்கும் இடையில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறாரே என்று மரியா மிகுந்த வேதனை அடைந்திருப்பார். அது அவருக்கு பெரிய வியாகுலமாக இருந்திருக்கும்.
இறந்த இயேசுவின் உடலை மடியில் கிடத்திவைத்தல் (யோவா 19: 40)
எருசலேம் திருக்கோவிலில் தன்னுடைய மகனைக் காணிக்கையாக ஒப்புக் கொடுத்தபோது சிமியோன் சொன்ன ‘உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவும்’ என்ற வாக்கு இங்கே நிறைவேறி விட்டதை நினைத்து மரியா பெரிதும் வேதனைப் பட்டிருக்கக்கூடும். இறந்த மகனின் உடலை இப்படியா சுமந்திருப்பது என்று மரியாவிற்கு இந்நிகழ்வு பெரிய வியாகுலமாகவே இருந்திருக்கும்.
இயேசுவை கல்லறையில் அடக்கம் செய்தல் (யோவா 19: 41-42)
இறந்த பெற்றோர்களை பிள்ளை அடக்கம் செய்யும் நிலைமாறி, இங்கே இறந்த தன்னுடைய மகனை தாயாகிய மரியா அடக்கம் செய்கிறார். உலகத்தில் இதைவிட கொடுமை என்ன இருந்திருக்கும்?. மரியா தனக்கு ஏற்பட்ட இப்படிப்பட்ட ஒரு வியாகுலத்தை பொறுமையோடு ஏற்றுக்கொள்கிறார்; எல்லாவற்றையும் இறைத் திருவுளமென தாழ்மையோடு ஏற்றுக்கொள்கிறார். மரியாவைப் பொறுத்தளவில் பாடுகள் தான் பரலோகத்திற்கான நுழைவாயில் என்பது ஆழமான விசுவாசமாக இருந்திருக்கும். அதானால் அவர் எல்லாத் துங்களையும் பொறுமையோடு ஏற்றுக்கொண்டார்.