என் நெஞ்சிற்கினிய "நம்வாழ்வு" வாசகப் பெருமக்களே,
"நம் வாழ்வு" வார இதழின் புதிய பொலிவுடன் வெளிவரும் இந்த வலைதளத்தின் வழியாக உங்களைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.
1975 -ஆம் ஆண்டு பிறப்பெடுத்த "நம் வாழ்வு" எனும் இந்நங்கை, இன்று தனது 50 - வது அகவையை எட்டிப் பிடித்திருக்கிறாள். அழகும், வனப்பும், வசீகரமும் கொண்டு அனைவரையும் தன் பக்கம் கவர்ந்திழுக்கும் அழகு நங்கையாம் இவள் தமிழுக்கும், திரு அவைக்கும், சமூகத்திற்கும் பெரும் பங்காற்றுவதுடன் நீதிக்கும், நேர்மைக்கும், உண்மைக்கும், சமத்துவத்திற்கும், சகோதரத்துவத்திற்கும் அழைப்பு விடுக்கும் நற்செய்தித் தூதுவராகவும், உள்ளூர் வெளியூர் பன்னாட்டு அரசியல் எதுவாக இருந்தாலும் குற்றம் இருப்பின் சுட்டிக்காட்டத் தயங்காத வீரத்திருமகளாகவும் தமிழர் வாழும் உலக உருண்டை முழுவதிலும் வலம் வருவது பெருமைக்குரியதே.
நல்லவர்களின் நாடித்துடிப்பான “நம் வாழ்வின்” முதன்மை ஆசிரியராக மற்றும் வெளியீட்டாளராக 2004 முதல் 2011 வரை ஏழு ஆண்டுகள் "எழுச்சிமிகு எழுத்துக்களால் ஏற்றமிகு உலகு செய்வோம்" என்னும் அறைகூவலோடு வாரம்தோறும் உங்களைச் சந்தித்ததைச் சற்றே திரும்பிப் பார்க்கிறேன். "நம் வாழ்வு" வார இதழ் தமிழகம் வாழும் எல்லா கத்தோலிக்கரையும் தமிழகம் கடந்து வாழும் எல்லாத் தமிழர்களின் கரங்களையும் சென்றடைய பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதைத் தாங்கள் அறிவீர்கள். அதன் நீட்சியாகத் தற்போது இந்த வலைதளம் புதுப்பொலிவுடன் வடிவமைக்கப்பட்டு எளிய முறையில் யாவரும் பயன்படுத்தும் வகையில் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. “நம் வாழ்வு” அச்சு இதழ், இன்று வலைதள இதழாக வெளிவருவது காலத்தின் தேவை.
அறிவியல் தொழில்நுட்பப் புரட்சியால் இன்று எண்ம தொழில்நுட்பத் தளங்களில் (Digital Platforms) பயணிக்கும் இளையோர் மற்றும் உலகெங்கும் பரவிக் கிடக்கும் தமிழ் நெஞ்சங்களையும் “நம் வாழ்வு” சென்றடையும் வண்ணம் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இப் பொன்விழா ஆண்டிலும் இனிவரும் காலங்களிலும் “நம் வாழ்வு” பல வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் பல முயற்சிகளை முன்னெடுத்து வரும் எனது முன்னாள் துணை ஆசிரியரும் இந்நாள் முதன்மை ஆசிரியருமான அருள்தந்தை இராஜசேகரனை மனதார வாழ்த்துகிறேன். “நம் வாழ்வு” வெளியீட்டுச் சங்கத்தின் தலைவர் என்ற முறையில் முதன்மை ஆசிரியரையும், துணை ஆசிரியர்களையும், அனைத்துப் பணியாளர்களையும் பாராட்டுகிறேன். “நம் வாழ்வு” வளர்ச்சிக்காக இவர்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.
இவ்வலைதளம் வழியாக "நம் வாழ்வு" இதழோடு தொடர்புபடுத்திக் கொள்ளும் வாசகர்கள் உங்கள் ஒவ்வொருவரையும் வாழ்த்துகிறேன். இவ்விதழ் இன்னும் பலரைச் சென்றடைய நீங்களும் கருவியாக அமைய வேண்டுகிறேன். அனைவருக்கும் இறை ஆசீர்.
இறையன்பில்,
மேதகு முனைவர் லூர்து ஆனந்தம்
சிவகங்கை மறை மாவட்ட ஆயர்
தலைவர், நம் வாழ்வு வெளியீட்டுச் சங்கம்