நம் வாழ்வு - வார இதழின் வரலாறு…

திரு அவையின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட நிகழ்வு அது. 1962 - ஆம் ஆண்டு அக்டோபர் 11 - ஆம் நாள் கூடியது இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம். இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க இம்மாபெரும் நிகழ்வு, திரு அவையின் மாடக் கதவுகள் திறக்கப்பட புதிய தென்றல் உலா வர வழி வகுத்தது. திரு அவையில் மாற்றுச் சிந்தனைகளும் செயல்முறைகளும் தோன்றத் துவங்கின. டிசம்பர் 4, 1963 - ஆம் ஆண்டு, திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களின் ஒப்புதலோடு “வியப்புக்குரிய பல" (Inter Mirifica) எனும் சமூகத் தொடர்பு கருவிகள் பற்றிய சங்க ஏடு வெளிவந்தது. “சூழ்நிலைகளின் தேவைகளுக்கு ஏற்ப, சமூகத் தொடர்புக் கருவிகளை பல்வேறு திருத்தூதுப் பணிகளில் பயன் தரும் முறையில் கையாளத் திரு அவையின் மக்கள் அனைவரும் ஒருமித்த உள்ளத்தோடு திட்டமிட்டு, தாமதமின்றி முழு ஆற்றலுடன் முயல வேண்டும்" (எண்: 13) என அழைப்பு விடுத்தது. ஆகவே, “பொறுப்புணர்வு மிக்க அச்சு வெளியீடுகள் முதலில் ஊக்குவிக்கப்பட வேண்டும்; கிறித்தவ உணர்வில் வாசகர்களை வளரச் செய்ய உண்மையான கத்தோலிக்க அச்சுத் துறையை நிறுவி வளர்க்க வேண்டும்" என ஊக்குவித்தது. இப்பொதுச் சங்கத்தின் குரலுக்குச் செவிமடுக்கும் வண்ணம், ஊடக வழி இறைப்பணி ஆற்றவும்... மக்களைச் சமூக - ஆன்மீக - அரசியல் தளத்தில் விழிப்புணர்வு தந்து ஒன்றிணைக்கவும் மாபெரும் தொலை நோக்குப் பார்வையுடன், 1975 - ஆம் ஆண்டு சனவரி 9 - ஆம் நாள் தமிழ்நாடு ஆயர் பேரவை பிரசவித்த முதல் ஊடகக் குழந்தை தான் “நம் வாழ்வு”.

news-details

இது நந்தவனத்தில் உலாவந்த தென்றல் அல்ல... உறங்கும் விழிகளுக்கு வெளிச்சமாய், இருளின் பாதையில் பேரொளியாய், அடிமை வாழ்வில் உரிமைக் குரலாய், உரிமை மீட்கும் விடுதலைப் போராளியாய், ஆன்ம உணவு ஊட்டும் ஞானப்பெட்டகமாய், உலக அறிவூட்டும் அறிவுக் களஞ்சியமாய் மலர்ந்தது... வளர்ந்தது... எங்கும் வளம் வந்தது. அந்நாளில், தமிழ்நாடு ஆயர் பேரவைத் தலைவர் மதுரைப் பேராயர் மேதகு ஜஸ்டின் திரவியம் அவர்களின் வழிகாட்டுதலின்பேரில், கோவை ஆயர் மேதகு விசுவாசம் ஆண்டகை அவர்கள் ஊடகப் பணி குழுத் தலைவராகப் பொறுப்பேற்றாலும், கோட்டாறு மறைமாவட்ட ஆயர் மேதகு மரியானுஸ் ஆரோக்கியசாமி ஆண்டகை அவர்கள் இவ்விதழின் நிர்வாக அமைப்பை ஏற்படுத்தவும், இவ்விதழ் வடிவமைப்பை நிர்வகிக்கவும், ஆசிரியர் குழுவைத் தேர்ந்தெடுக்கவுமானப் பணிகளை முன்னெடுக்கப் பணிக்கப்பட்டார்.

அதன் அடிப்படையில் பேரருள்தந்தை மரியருள் தம்புராசு அவர்கள் அந்நாளைய மதுரை உயர் மறைமாவட்ட ‘கத்தோலிக்க சேவை’ மாத இதழின் ஆசிரியர், ‘நம் வாழ்வின்’ முதல் முதன்மை ஆசிரியராகப் பொறுப்பேற்றார். அவரோடு இணைந்து இணை ஆசிரியராக ஏ. ஆ. சம்மனசு அவர்களும், ஆசிரியர் குழுவாக... பேராசிரியர் சு. குழந்தைநாதன், கவிஞர் ளு. அமலன், பொ. ம. ராஜாமணி, ஆ.சு. அடைக்கலசாமி, ளு. லெயோ ஜோசப், அருள்தந்தை ஆரோக்கியசாமி, அருள்தந்தை லூர்துராஜ் ஆகியோர் ஆசிரியர் குழுவாகவும் நியமிக்கப்பட்டார்கள். இவ்விதழின் முதல் பதிப்பாசிரியராகவும் வெளியிட்டு மேலாளராகவும் பேரருள்தந்தை அந்தோணி டிவோட்டா அவர்கள் நியமிக்கப்பட்டார்கள். தமிழக ஆயர் பேரவையின் கனவு நனவான அந்நாளில், இவ்விதழ் தமிழகமெங்கும் தவழ ஆயர்பேரவை பேராதரவு நல்கியதுடன், தங்கள் மறைமாவட்டம் தோறும் இவ்வார இதழுக்கான பொறுப்பாசிரியர்களாக அருள்பணியாளர்களை நியமித்தது. அந்தந்த மறைமாவட்ட மேய்ப்புப் பணி நிலையத்தின் இயக்குனர்கள் ஒருங்கிணைப்பாளர்களாகவும், ஆலோசகர்களாகவும் நியமிக்கப்பட்டார்கள்.

பிறந்த இக்குழந்தை “நீடுழி வாழவும், வாசகர்கள் எண்ணிக்கையில் வளரவும்" ஆசி வழங்கினார் மதுரைப் பேராயர் மேதகு ஜஸ்டின் திரவியம் ஆண்டகை அவர்கள். சென்னை - மயிலை உயர் மறை மாவட்டப் பேராயர் மேதகு பு. அருளப்பா அவர்கள் “இந்த மாபெரும் முயற்சி விரைவில் நாளிதழாக மலர வேண்டும்" என்று விருப்பம் தெரிவித்தார். தஞ்சை ஆயர் மேதகு சுந்தரம் ஆண்டகை அவர்கள் “அன்பிலும் அமைதியிலும் ஒருமித்து பாரத நாட்டை தட்டி எழுப்ப இந்த இதழ் நற்பணி புரிவதாக" என்று வாழ்த்தினார். தந்தை தம்புராஜ் அவர்களின் மேற்பார்வையில் வெளிவந்த இந்த இதழ் அனைத்து மக்களுக்கும் சென்றடையும் வகையில் திரு அவைச் செய்திகள், ஆன்மீகம் - சமூக - அரசியல் விழிப்புணர்வுக் கருத்துகள், அறிவியல் சிந்தனைகள் இளையோரை ஈர்க்கும் புத்தாக்கச் சிந்தனைகள் எனப் பல்சுவை கொண்டு வெளிவந்தது. ஐந்தாண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய அருள்தந்தை தம்புராசு அவர்களைத் தொடர்ந்து, அருள்தந்தை அல்போன்ஸ் பெர்னார்டு அவர்கள் ஆசிரியராகப் பொறுப்பேற்று இன்னும் பல புதிய சிந்தனைகளுடன் நம்வாழ்வு வார இதழை மூன்றாண்டுகள் வழிநடத்தினார். அவரைத் தொடர்ந்து, அருள்தந்தை அமலநாதன் அவர்கள் ஆசிரியராகப் பொறுப்பேற்று சிறப்புடன் ஆறு ஆண்டுகளும், அருள்தந்தை அந்தோணி ரோசாரியோ அவர்கள் ஏழு ஆண்டுகளும் பன்முக சிந்தனைகள் கொண்ட படைப்புகள் மூலம் நம்வாழ்வு வார இதழை வளர்ச்சிப்பாதையில் வழிநடத்தினார்கள்.

சென்னை - அர்மேனியன் தெருவில் அலுவலகம் கொண்டு தொடங்கப்பட்ட இந்த இதழ், நிர்வாகக் காரணங்களுக்காக முதன்மை ஆசிரியர்கள் பணியாற்றிய இடத்திற்கே அவ்வப்போது இடமாற்றம் செய்யப்பட்டு கோட்டாறு, திருச்சி எனப் பயணித்து இறுதியில் சென்னைக்கே மீண்டும் திரும்பி வந்தது. ஆசிரியர்களின் புரட்சிகரச் சிந்தனைகளுக்கு ஏற்ப மறுமலர்ச்சியும் மாற்றமும் கண்ட நம் வாழ்வு வார இதழ், அருள்தந்தை வின்சென்ட் சின்னத்துரை அவர்கள் 1997 - ஆம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகு பெரும் வளர்ச்சி கண்டது. இதை நிறுவனம் ஆக்கப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன; பொருளீட்டப்பட்டன; பணிகள் தொடங்கப்பட்டன. இக்காலக் கட்டத்தில் நம் வாழ்வு வார இதழ் தனது புத்தகப் படைப்புகளை பதிப்பகம் வழியாக வெளிக்கொணரத் தொடங்கியது.

சென்னை - மயிலை உயர்மறைமாவட்டப் பேராயர் மேதகு அருள்தாஸ் ஜேம்ஸ் ஆண்டகை அவர்களின் கனிவான உள்ளத்தால் நம் வாழ்வு அலுவலகம் இயங்கும் இந்த இடமானது தமிழ்நாடு திரு அவையின் அச்சு ஊடகப் பணிக்காக ஒப்பந்த உரிமையில் வழங்கப்பட்டது. உரோமை மறைபரப்புப் பணித்தளத்தின் பொருளாதார உதவியுடன் அருள்தந்தை வின்சென்ட் சின்னத்துரை அவர்களால் இந்த வளாகமானது கட்டமைக்கப்பட்டு, 2000 - ஆவது ஆண்டில் நம் வாழ்வின் வெள்ளி விழா கொண்டாட்டத்தின் நினைவாக நிறுவனம் ஆக்கப்பட்டது. 2004 -ஆம் ஆண்டு இவ்விதழின் முதன்மை ஆசிரியராகப் பொறுப்பேற்ற அருள்முனைவர் மதுரை ஆனந்தம் அவர்கள் இக்கட்டிடப் பணிகளை நிறைவு செய்து, அலுவலகம் இயங்கிடப் பேருதவி புரிந்தார். தந்தை ஆனந்தம் அவர்களின் பெரும் முயற்சியால் 2005 -ஆம் ஆண்டு சனவரி 19 -ஆம் நாள் கட்டிடப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, நம் வாழ்வு வெளியீட்டுச் சங்கத் தலைவர் மேதகு ஆயர் டிவோட்டா அவர்களால் திறக்கப்பட்டு, சென்னை மயிலை உயர் மறைமாவட்டத்தின் நிர்வாகியாக இருந்த ஆயர் மேதகு லாரன்ஸ் பயஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. சாந்தோம் கலைத் தொடர்பு வளாகத்தில் செயல்பட்ட வந்த நம்வாழ்வு வார இதழ் அன்று முதல், தனக்கென்று தனி அலுவலகத்தில் செயல்படத் துவங்கியது. அவ்வேளையில் தந்தை தஞ்சை டோமி அவர்கள் துணை ஆசிரியராக நியமிக்கப்பட்டார்கள். தந்தை மதுரை ஆனந்த் அவர்களின் காலத்தில் மறைமாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டார்கள், பொதுக் கடைகளில் “நம் வாழ்வு” விநியோகம் செய்யப்பட்டன; தமிழக மறைமாவட்டங்களில் வாசகர் வட்டம் நடத்தப்பட்டன; எழுத்தாளர் பயிற்சிப் பட்டறைகள் நடைபெற்றன. இக்காலகட்டத்தில் முதன்மை ஆசிரியருக்குத் துணையாக அருள்தந்தை ஜான் மெல்கீஸ் (2007), அருள்தந்தை விஜய் நிர்மல் ஞானிராஜ் (2007), அருள்தந்தை செல்வா சே.ச (2008), அருள்தந்தை இராஜசேகரன் (2010) ஆகியோர் துணை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டார்கள். இக்காலக் கட்டத்தில் முதன்மை ஆசிரியரும் துணை ஆசிரியரும் பங்குகள் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்களைச் சந்தித்து நம் வாழ்வு சந்தாதாரர்கள் ஆக்கும் பணியை மேற்கொண்டார்கள். இதனால், நம் வாழ்வு வளர்ச்சி மிகச் சிறப்பாக இருந்தது.

2011 - ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதன்மை ஆசிரியராகப் பொறுப்பேற்ற தந்தை தஞ்சை டோமி அவர்களின் காலத்தில் “கல்விச் சுரங்கம்” என்ற மாணவர் மாத இதழ் “நம் வாழ்வின்" துணை இதழாக தொடங்கப்பட்டது. இக்காலத்தில் அருள்தந்தை எட்வர்ட், அருள்தந்தை ஜான் போஸ்கோ, அருள்தந்தை அபில் ழழுசூ, அருள்தந்தை ஜேம்ஸ் தம்புராஜ், அருள்தந்தை ஆரோக்கியராஜ், அருள்பணி. அந்தோணிமுத்து ஆகியோர் துணை ஆசிரியராகவும், அருள்தந்தை இராஜசேகரன் இணை ஆசிரியராகவும் பணியாற்றினார்கள். 2017 -ஆம் ஆண்டு அருள்தந்தை விஜய் நிர்மல் ஞானிராஜ் முதன்மை ஆசிரியராகப் பொறுப்பேற்றார். அவருடன் அருள்தந்தை விக்டர், அருள்தந்தை குருஸ் கார்மல், அருள்தந்தை மரிய அந்தோணி, அருள்தந்தை ஜான்பால் ஆகியோர் துணை ஆசிரியர்களாகப் பணியாற்றினார்கள். இக்காலத்தில்ரூபவ் நம் வாழ்வு அரசு நூலகங்களுக்குச் செல்லவும், சென்னை புத்தகக் கண்காட்சியில் பங்கெடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

கொரோனா பெருந்தொற்றின் காலத்தில் (2019-2020) பத்திரிகை வளர்ச்சியும் அதன் பரவலாக்கமும் பெரிதும் பாதிக்கப்பட்டு கடும் சவாலை எதிர்கொண்டது. இவ்வேளையில் கல்விச் சுரங்கம் என்னும் மாத இதழ் பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதே வேளையில் ஊடக வலைதள மூலமாக நம் வாழ்வு பத்திரிகை மக்களைச் சென்றடைய ஏற்பாடு செய்யப்பட்டது. 2023 -ஆம் ஆண்டு ஜூன் இரண்டாம் நாள் “கூர்முனைப் புரட்சியால் சீர்மிக்கு உலகமைப்போம்" என்னும் விருது வாக்கோடு அருள்முனைவர் இராஜசேகரன், இவ்விதழின் ஒன்பதாவது முதன்மை ஆசிரியராகவும், தமிழ்நாடு ஆயர் பேரவையின் அச்சு ஊடகப் பணியகத்தின் இயக்குனராகவும் பொறுப்பேற்றார். அருள்தந்தை ஜான்பால், அருள்தந்தை ஞானசேகரன், மற்றும் அருள்தந்தை அருண் பிரசாத் ஆகியோர் துணை ஆசிரியராகப் பணியாற்ற, நம் வாழ்வு மீண்டும் பல தலங்களில் பன்முக வளர்ச்சி காணத்துவங்கியது. நம் வாழ்வு வார இதழின் தரம் உயர்த்தப்பட்டுத் தரமான கட்டுரைகள், நேர்த்தியான வடிவமைப்பில் தரம் உயர்ந்த தாளில் அச்சிடப்பட்டு பலருடைய பாராட்டுகளையும் பெற்று வருகிறது. புதிய எழுத்தாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு கடந்த ஓராண்டில் 30 புதிய எழுத்தாளர்கள் கத்தோலிக்க இறைச் சமூகத்திற்கு அடையாளப் படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

“கல்விச் சுரங்கம்” மாணவர் மாத இதழ், 2023 செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் வெளிக்கொணரப்பட்டது. வாசகர் வட்டம், எழுத்தாளர் பயிற்சிப் பட்டறை, புத்தக வாசிப்புத் திருவிழா, ஊடக உலகம் - மாணவர் பயிற்சிப் பாசறை, திருத்தொண்டர்களுக்கான இதழியல் பயிற்சி, நீங்களும் எழுத்தாளராகலாம் எனும் யாவருக்குமான போட்டிகள், நம் வாழ்வு புரவலர் திட்டம், மறைமாவட்ட மாத இதழ்களின் ஆசிரியர் கூட்டமைப்பு எனப் பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும் 2025 -ஆம் ஆண்டின் பொன்விழா கொண்டாட்டத்தின் முன்னோட்டமாக 2024 -ஆம் ஆண்டு சனவரி 5 -ஆம் நாள் நம் வாழ்வு தலைமைச் செயலகம் புதுப்பிக்கப்பட்டு வெளியீட்டுச் சங்க தலைவர், தமிழ் நாடு ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி ஆண்டகை அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. அந்நாளில் “பொன்விழா ஆண்டை நோக்கி” எனும் அறைகூவலுடன் பொன்விழா ஆண்டுக்கான இலட்சினை அறிமுகப்படுத்தப்பட்டது.

இப்பொன்விழா ஆண்டிற்கு மகுடமாய் எமது மேனாள் முதன்மை ஆசிரியரும், இந்நாள் சிவகங்கை மறைமாவட்ட ஆயருமான மேதகு முனைவர் லூர்து ஆனந்தம் ஆண்டகை அவர்கள் நம் வாழ்வு வெளியீட்டுச் சங்கப் புதிய தலைவராக பொறுப்போற்றிருப்பது மட்டற்ற மகிழ்வுக்குரியது! மேலும், இப்பொன்விழா நினைவாக அலுவலக வளாகத்தில் பொன்விழா புத்தக நிலையம் தொடங்கப்பட்டு, மாதா தொலைக்காட்சி நிலைய இயக்குனர் அருள்முனைவர் டேவிட் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு இயங்கி வருகிறது. அத்துடன், இந்த நவீன தொழில்நுட்ப உலகில் இளையோரையும் வாசிப்பாளர்களாக்க நம் வாழ்வு எண்ம தொழில்நுட்ப (Digital) தளங்கள் அனைத்திலும் தடம் பதித்திருக்கிறது. நம் வாழ்வின் புதிய வலைதளம் உருவாக்கப்பட்டு, நம் வாழ்வு செயலி அறிமுகப்படுத்தப்பட்டு நம் வாழ்வு இளையோர் கரங்களில் தவழ ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மாதா தொலைக்காட்சி வழியாக வாரம் தோறும் பத்திரிகை மக்களுக்கு விளம்பரக் காட்சிகளாக நினைவூட்டப்படுகிறது. உலக ஊடக தினம் மாதா தொலைக்காட்சி நிலையத்தாரோடு சேர்ந்து கொண்டாடப்படுகிறது. இன்று புதுப் பொலிவும் புத்தெழுச்சியும் கொண்டு கருத்து வளமிக்கக் கட்டுரைகளுடன் சிந்தனைச் சிறகடித்து தரம் உயர்த்தப்பட்டு வெளிவந்துகொண்டிருக்கும் இவ்விதழின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தாராள உள்ளத்தோடு பொருளுதவி தந்திட “நம் வாழ்வு பொன்விழா புரவளர்த் திட்டத்தில்” இணைந்து தாராள பொருளுதவி தந்திட அன்புடன் வேண்டுகிறோம்! “நம் வாழ்வு" நமது இதழ்! நமது குரல்! வாருங்கள்... இணைந்து பயணிப்போம் “கூர்முனைப் புரட்சியால் சீர்மிகு உலகமைப்போம்!"

ஊடக வழி இறைப் பணியில்,
அருள்முனைவர் செ. இராஜசேகரன்
‘நம் வாழ்வு’ வார இதழ் - முதன்மை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர்.
‘கல்விச் சுரங்கம்’ மாத இதழ் - முதன்மை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர்.
இயக்குநர் - தமிழ்நாடு கத்தோலிக்க ஆயர் பேரவையின் அச்சு ஊடகப் பணியகம்.