என்
வீட்டு அருகாமையில் ஓரிரு சின்னச் சின்ன மளிகைக் கடைகள் மட்டுமே உள்ளன. யாராவது விருந்தினர்கள் வீட்டிற்கு வந்துவிட்டால் அவசரத்திற்குப் பொருள்கள் வாங்கவேண்டும் என்றால் அருகில் இருக்கும் ஒரு சின்னக் கடைக்குச் சென்று பொருள்கள் வாங்கி வருவேன். அதுதான் அண்ணாச்சி கடை. காலை நேரங்களில் நடை பயணம் செல்லும்போது, அந்தக் கடையில் மனைவி கேட்ட பொருள்களை வாங்கி வருவேன். காலையில் பால் போடும் தம்பி, போடாமல் சில நேரங்களில் தவறிவிட்டால், உடனே நடந்து சென்று அந்தக் கடையில் பால் வாங்கி வருவேன்.
அந்தக்
கடைக்காரர் ஒரு நல்ல மனிதர். கடைக்குச் செல்லும்போதெல்லாம் சிரித்த முகத்துடன் பேசுவார். மிகவும் தன்மையான மனிதர். சில நேரங்களில் நாம் வாங்கச் சென்ற பொருள் அங்கே இருக்காது. ‘இல்லை’ என்று சொல்லாமல், தன்மையோடு பேசி, ‘இந்தப் பொருளை நாளைக்கு
வாங்கி வைக்கிறேன்’ என
மலர்ந்த பூவைப்போல புன்னகையோடு சொல்வார்.
அவருக்கு
இரண்டு அழகான குழந்தைகள். ஒரு பையன், ஒரு பொண்ணு. சில நேரங்களில் அந்த இரு குழந்தைகளும் அவரோடு கடையில் இருப்பதை நான் பார்ப்பதுண்டு. “பசங்க என்ன படிக்கிறாங்க?” எனக் கேட்டேன். “பையன் ஏழாவது படிக்கிறான். பொண்ணு ஐந்தாவது படிக்கிறாள்” என்றார்.
“நன்றாகப் படிக்கிறாங்களா?” எனக் கேட்டேன். ‘ஆம்’ என்று தலையசைத்தார். தொடர்ந்து “நாங்க தான் படிக்கலை. இப்படிச் சின்னக் கடையை வச்சுக்கிட்டு, வர்ற கொஞ்ச வருமானத்தில் கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கோம்; பிள்ளைகளாவது நல்லாப் படிச்சு வாழ்க்கையில் முன்னேறணும், நல்லா சம்பாதிக்கணும். அதான் சார் எங்க ஆசை” என்றார். “ஆமா, ஆமா... நல்ல படிக்க வையுங்க” என்றேன்.
“ஆமா, இந்தக் கடையில் எல்லாச் செலவும் போக எவ்வளவு நிக்கும்?” என்று கேட்டேன். “என்ன சார், மிஞ்சி மிஞ்சிப் போனா எல்லாச் செலவும் போக ஒரு நாளைக்கு ரூபாய் 600-லிருந்து 700 ரூபாய் தான் மிஞ்சும். அதை வைச்சு இந்தப் பிள்ளைகளைப் படிக்க வைச்சு கரையேத்தணும்” என்றார். சொல்லும்
போது அவரது விழிகள் இலையில் விழுந்த நீர்த்துளி போல தத்தளித்ததை என்னால் காண முடிந்தது. “கவலைப்படாதீங்க! எல்லாம் நல்லதே நடக்கும்”
என அவருக்கு ஆறுதல் வார்த்தையைச் சொல்லிவிட்டு, கடின இதயத்தோடு நகர்ந்தேன். அன்றிலிருந்து எனக்கும், அந்தக் கடைக்கும் ஒருவிதமான அன்பின் பிணைப்பு! எப்போதெல்லாம் என் மனைவி வீட்டுச்சாமான்கள் வாங்கச் சொல்லும் போது, அந்தக் கடைக்குச் சென்று வாங்கி வருவேன். சில நேரம் நடந்து போவேன். சில நேரம் என்னுடைய ஒரு பழைய இருசக்கர வாகனத்தில் சென்று வாங்கி வருவேன்.
அப்படியே
போய் வாங்கி வந்தாலும், சில நேரங்களில் சில பொருள்கள் அந்தக் கடையில் இருக்காது. வெறுங்கையோடு திரும்பி வருவேன். வீட்டை
நெருங்க, நெருங்க கால்கள் தடுமாறும். “ஐயோ, என் மனைவியிடம் இன்னைக்கு என்ன வாங்கிக் கட்டிகொள்ளப் போறேனோ தெரியலையே”
என மனத்திலே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வீட்டிற்குள் வருவேன். கடைக்காரர் சொல்வது போலவே, “அந்தப் பொருள் இருக்கு, இந்தப் பொருள் இல்லை. நாளைக்கு வந்துடுமாம்” எனச்
சொல்லி சமாளிப்பேன். “பக்கத்தில் ஒரு நல்ல கடை கூட இல்லை. இங்கே வந்து வீடு கட்றீங்க? ஆத்திர அவசரத்துக்குச் சாமான் வாங்கணும்னா என்ன பண்றது? என வீடு கட்டும்போதே
சொன்னேன். நான் சொன்னதைக் கேட்டீங்களா?” எனச் சூடான எண்ணெயில் பொரியும் அப்பளத்தைப் போல பொரிந்து தள்ளுவாள்.
இருந்தாலும்கூட
அந்தக் கடையை விடுவதில்லை. அவ்வப்போது தேவைப்படும்போது பொருள்கள் வாங்கி வருவேன். கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், நான் பொருள்கள் வாங்குவதன் மூலம் அண்ணாச்சிக்குச் சின்ன வருமானம் என்று மனசுக்குள் ஒரு சந்தோசம்.
அன்று
பால் பையன் வீட்டில் பால் போடவில்லை. காலையில் எழுந்ததும் காபி சாப்பிடவில்லை என்றால் என் மனைவி ருத்ரதாண்டவம் ஆடி விடுவாள். அவள் எழுவதற்கு முன்பே அண்ணாச்சி கடைக்குச் சென்றேன். “அண்ணாச்சி, பால் ஒரு பாக்கெட் கொடுங்க” என்றேன். ”இன்னைக்குப் பால் வண்டி வரலே. பால் வண்டி ரிப்பேர்” என்றார். “மற்றொரு வண்டி வரும். வந்தபின் உங்களுக்குப் போன் பண்றேன்” என்று வழக்கமான பாணியில் பதில் சொன்னார். “எனக்குத்தானே தெரியும் என் வேதனை” என்று மனத்தில் நினைத்து கொண்டு, இன்னைக்குக் காலையிலேயே நமக்கு வேட்டுதான் எனக் கடந்து வந்து கொண்டிருந்தேன்.
வருகிற
வழியில் நண்பர் ஒருவர் “என்ன சார், வாக்கிங் போறீங்களா? காபி குடிச்சிட்டீங்களா?” எனக் கேட்க, “இன்னும் சாப்பிடல சார். பால் வாங்கப் போனேன். பால் வண்டி இன்னும் வரலையாம். அதான் திரும்பி வந்திட்டேன்” எனக்
கூறினேன். “அப்படியா? அதுக்கு ஏன் கவலைப்படுறீங்க? அதுக்குதான் இப்ப ஒரு செயலி, அதான் ஓர் ஆஃப் வந்திருச்சே!
அந்த ஆஃப் மூலமா ஆர்டர் பண்ணினா பத்து நிமிடத்தில் நீங்கள் ஆர்டர் செய்த பொருள்கள் உங்க வீட்டுக்கே வந்துடும். அப்புறம் ஏன் கவலைப்படுறீங்க? அந்த ஆஃப்-ஐ உங்க போன்ல
டவுன்லோடு பண்ணுங்க, ஆர்டர் பண்ணுங்க”
என்றார். “அப்படியா, இந்தா இப்பவே டவுன்லோடு பண்ணி முதல்ல பால் ஆர்டர் பண்ணி, என் மனைவியைச் சந்தோஷப்படுத்தணும்” என்று
மனசில் சொல்லி, அந்த ஆஃப்-ஐ டவுன்லோடு செய்து,
பால் ஆர்டர் பண்ணினேன். பத்தே நிமிடத்தில் பால் வீடு வந்து சேர்ந்தது. வாங்கி என் மனைவியிடம், வெற்றிப் புன்னகையோடு கொடுத்தேன்.
“யாரோ வந்து பால் கொடுத்துட்டுப் போறாங்க. யார் அது?” எனக் கேட்டாள். “உன் பிரச்சினைக்கு முடிவு வந்துருச்சு. உனக்கு அவசரத்துக்கு என்ன பொருள் வேண்டுமானாலும், நீ இனிமேல் என்னை
எதிர்பார்க்க வேண்டாம். இந்த ஆஃப்-ஐ உன் மொபைல்ல
டவுன்லோடு பண்ணியிருக்கிறேன். நீயே ஆர்டர் பண்ணி வாங்கிக்கொள்ளலாம்” எனக்
கூறினேன். அவளும் கொஞ்சம் கொஞ்சமாக ஆர்டர் செய்து வாங்கப் பழகிவிட்டாள்.
இப்போது
என் மனைவி என்னைப் பொருள் வாங்கி வரச்சொல்லி அதிகமாகத் தொந்தரவு செய்வதில்லை. எனக்கு வாக்கிங் போவதும் குறைந்து போனது. இருசக்கர வாகனமும் எடுக்க வாய்ப்பில்லாமல் முடங்கிப்போனது. அண்ணாச்சி கடைக்குச் செல்ல வேண்டிய அவசியமும் இல்லாமல் போனது.
இரண்டு
வாரங்கள் கழிந்தன. அலுவலகம் செல்லும்போது, வழக்கம்போல அண்ணாச்சி கடையைப் பார்த்தேன். அவர் கடை பூட்டி இருந்தது. ஒரு வாரம், இரண்டு வாரம்
கடந்தது, அண்ணாச்சி கடை திறக்கவே இல்லை. ஒருநாள் “ஏன் கடையைத் திறக்கவில்லை?” எனத் தெரிந்துகொள்ள அவர் கடைக்குச் சென்றேன். அவர் வெளியே நின்று கொண்டிருந்தார்.
“என்ன அண்ணாச்சி, கடையே திறக்கல?” எனக் கேட்டேன்.
மெல்லிய
குரலில், “ஏதோ ஓர் ஆஃப் வந்திருக்காம், ஆர்டர் பண்ணுனா பத்து நிமிசத்தில வீட்டுக்கே பொருளைக் கொண்டு வந்து கொடுத்துடுவாங்களாம். நம்ம கடைக்கு வந்து பொருள் வாங்கிக் கொண்டிருந்த பல பேர் இப்ப
அது மூலமா வாங்க ஆரம்பிச்சுட்டாங்க. அப்புறம் என்ன, நம்ம கடையில வியாபாரம் குறைஞ்சு போச்சு. கடையை மூடிட்டேன், வேறு ஏதாவது கூலி வேலை பார்த்துதான் இனிமே பிழைக்கணும். எப்படி என் பிள்ளைகளைப் படிக்க வைச்சு, பெரிய ஆளாக்கப் போறேன்னு தெரியலை” எனக் கண் கலங்கி, மனசு உடைஞ்சுக் கூறினார். அதைக் கேட்டு என் மனம் கனத்துப்போனது.
இன்னும்
கொஞ்சத் தூரம் தள்ளி, மற்றொரு கடை வைத்திருக்கும் கணவனை இழந்த, பிள்ளைகள் இல்லாத ஒரு மூதாட்டியின் கடையைப் பார்த்தேன். ‘அந்தக் கடைக்கு என்ன ஆகுமோ! இதே நிலை வந்துவிடுமோ! வந்தால் அந்த மூதாட்டியின் தின வாழ்க்கை என்ன ஆகும்?’ எனக் கலங்கி, சிந்தித்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தேன். வீட்டை அடைந்ததும் என் மனைவியிடம் எல்லாவற்றையும் கனத்த
இதயத்துடன் பகிர்ந்தேன். அண்ணாச்சி கடைக்கும், எனக்கும் இருந்த அந்த உறவு, காட்சியளித்து மறைந்துபோகும் வானவில்லைப்போல ஆனது. டெக்னாலஜியின் இரசிக்கக்கூடிய முகம் ஒரு புறம்; கொடூர முகம் மற்றொருபுறம். ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கியதில் எனக்கும் ஒரு பங்கு உண்டு என்ற ஒரு குற்ற உணர்வு என் மனத்தை நெருடியது. படிக்கின்ற அண்ணாச்சியின் இரு குழந்தைகளின் முகம் என் கண்முன் வந்து வந்து போனது.
என்
மனைவியை அழைத்தேன். “இனிமேல் நான் வீட்டில் இல்லாதபோது மட்டும் இந்த ஆஃப்பைப் பயன்படுத்து.
ஏதாவது பொருள் வாங்க வேண்டும் என்றால் என்னிடம் சொல்லு. பாட்டி கடை இருக்கிறது. அங்கே நான் சென்று வாங்கி வருகிறேன். நான் வீட்டில் இல்லாதபோது மட்டும்
இந்த ஆஃப்பைப் பயன்படுத்து” எனக்
கூறி, “இப்ப ஏதாவது வாங்க வேண்டுமா சொல்லு, நான் போய் வாங்கி வருகிறேன்”
என்று கேட்டு, பாட்டி கடைக்குச் சென்று பொருள் வாங்கி வந்து கொடுத்தேன். மனசுக்குள் சின்ன ஆறுதல்.
வந்ததும்
தூசி மண்டிக் கிடந்த என் இருசக்கர வாகனத்தைத் துடைத்து, ஒரு மெக்கானிக்கை வரச்சொல்லி சரிசெய்தேன். இப்போது வண்டி ஈசியாக ‘ஸ்டார்ட்’
செய்தது. பாட்டி கடைக்குச் செல்ல வண்டியும் ரெடி ஆயிடுச்சு. மனசுக்குள் சற்று நிம்மதி.
அடுத்த
நாள் அதிகாலை அலுவலகத்துக்குக் கிளம்பினேன்.
போற வழியில் அந்தப் பாட்டி கடையைப் பார்த்தேன். அந்தக் கடை திறந்திருந்தது. காருக்குள் AC காற்று
என் மனத்தைக் கொஞ்சம் குளிரவைத்தது.
எழுத்தில்
இன்னும் வளர உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது. வாட்ஸ் ஆப் எண் - 9047078487.