திருப்பலி முன்னுரை
இன்றைய
இறைவழிபாடு, உடன் வாழும் மனிதரில் இறைவனின் சாயலைக் கண்டுகொள்ளவும், நம்மிடம்
உள்ளதை ஏழைகளோடு பகிர்ந்து வாழவும் நமக்கு
அழைப்புவிடுக்கிறது. மனித வாழ்வில் இரு வேறுபட்ட துருவங்களைச் சித்தரிக்கும் உவமை ‘செல்வரும்-இலாசரும்’
என்ற உவமை. ஏழைகளை ஒதுக்குவது, ஓரம்கட்டுவது, கண்டுகொள்ளாமல் இருப்பது சமூகக் குற்றம் மட்டுமல்ல, படைத்த இறைவனுக்கே செய்யும் மாபெரும் குற்றமாகும். தாழ்ந்தோரை உயர்த்தி, செல்வச் செருக்குடையோரைச் சிதறடித்து, ஒடுக்கப்பட்டோரை ஆண்டவர் உயர்த்துவார் என்பதன் அடையாளமாக இலாசர் என்ற பெயர் கொண்ட முகவரி தரப்பட்டிருக்கிறது. கடவுள் எப்போதும் ஏழையரின்
சார்பாகவும் துன்பப்படுவோரின் குரலாகவும் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்துகிறார் லூக்கா. இன்றைய நற்செய்தியில் செல்வர், ஏழை இலாசரைக் கண்டுகொள்ளவில்லை; பசியால் இருந்த இலாசருக்கு உணவு கொடுக்கவும் இல்லை. தன் அருகில் பசியால் துன்புற்ற மனிதனில் இறைவனைக் காண மறந்துவிடுகிறார். இன்று நாம் வாழும் சமுதாயத்தில் இலட்சக்கணக்கான இலாசர்கள் கண்டுகொள்ளப்படாமல் இருக்கிறார்கள். செல்வத்தைச் சேர்ப்பதிலும், அதைப் பெருக்குவதிலும் பாதுகாப்பதிலும் இருப்பதை விடுத்து, உடன் வாழும் சகோதர-சகோதரிகளுக்கு உறவாய் உடனிருப்போம். அன்புக்காக, அமைதிக்காக, உறவுக்காக, உணவுக்காக, பாசத்திற்காக ஏங்கும் ஏழை
இலாசர்களைத் தேடிச்சென்று உதவி செய்வோம். அடுத்தவருக்கு உதவி செய்வதற்கு நாம் ஓர் அடி எடுத்துவைக்கும்போது, கடவுள் ஓராயிரம் அடி நம்மை நோக்கி எடுத்துவைப்பார். எல்லாமுமான இறைவனை எல்லாரிலும் கண்டு, உதவி செய்து வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.
முதல் வாசகம்
முன்னுரை
தம்
காலத்தில் பரவியிருந்த ஆடம்பர வாழ்வையும் செல்வக் குவிப்பையும் வஞ்சிக்கப்பட்ட ஏழைகளின் வாழ்வாதாரங்களைப் பறித்துக்கொண்டு சுகபோக வாழ்க்கையில் மூழ்கியிருப்பதையும், கடவுளின் குரலாய் நின்று எதிர்த்தார் இறைவாக்கினர் ஆமோஸ். தன்னலத்தைக் கடந்து அடுத்தவரின் நலனில் அக்கறை கொண்டு வாழும்போது, ஆண்டவர் நம்மோடு இருப்பார் என்று கூறி இச்சமுதாயத்தில் இறைவனின் குரலாய் வாழ அழைக்கிறார். கவனமுடன் வாசகத்திற்குச் செவிகொடுப்போம்.
இரண்டாம் வாசகம்
முன்னுரை
நாம்
எவ்வாறு வாழவேண்டும், இறைவன் கொடுத்த இந்த அற்புதமான வாழ்க்கையில் எதைத் தேடவேண்டும், எவற்றைப் பற்றிக் கொள்ள வேண்டும்? எதை நோக்கி அன்றாடம் செல்ல வேண்டும்? என்பதற்கு விடையாக இரண்டாம் வாசகம் அமைகிறது. இறைவனின் பேரன்பிலிருந்து விலகிச் செல்லாமல், அனைத்திலும் அனைவரிலும் இறைவனைக் கண்டு அர்த்தமுள்ள வாழ்வு வாழ அழைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்
1. காக்கும்
தெய்வமே இறைவா! எம் திரு அவைத் தலைவர்கள் அனைவரும் இறைவார்த்தையின் வழியில் நடந்து, மக்களை இறையாட்சியின் பாதையில் வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. அன்பின்
ஆண்டவரே! நாங்கள் ஒருவர் மற்றவருக்கு அன்பின், மகிழ்ச்சியின், உறவின், அமைதியின் தூதுவர்களாய் வாழ்ந்து, மனிதத்தில் புனிதம் காண வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. ‘உங்களைத் திக்கற்றவர்களாய்
விடமாட்டேன்’ என்று
மொழிந்த ஆண்டவரே! குடிப்பழக்கத்தாலும் தவறான வாழ்க்கையாலும் புரிந்துகொள்ளாமையினாலும் துன்புறும் குடும்பங்களுக்குத் தேவையான அன்பை, அமைதியைக் கொடுத்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. ஞானத்தின்
தொடக்கமே எம் இறைவா! எம் குழந்தைகளை இறைப்பற்றும் மனிதநேயமும் மூத்தோரை மதிக்கும் உயர்ந்த பண்பும் கொண்ட குழந்தைகளாக நாங்கள் வளர்த்திடவும், திருமறை போதிக்கும் நெறிமுறைகளைக் கற்றுக்கொடுக்கவும் தேவையான ஞானத்தை எங்களுக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.