news
இந்திய செய்திகள்
கொச்சி மறைமாவட்டத்திற்குப் புதிய ஆயர்

கொச்சி மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அருள்தந்தை ஆண்டனி கட்டிப்பரம்பில் அவர்களை நியமித்து திருத்தந்தை லியோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இம்மறைமாவட்டத்தின் ஆயராக மேதகு ஜோசப் கரியிலின் பதவி விலகலைத் தொடர்ந்து தந்தை ஆண்டனி கட்டிப்பரம்பில் புதிய ஆயராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கொச்சி மறைமாவட்டத்தில் 78 பங்குகளை உள்ளடக்கிய 1,82,324 கத்தோலிக்கர்கள், 134 மறைமாவட்டக் குருக்கள், 116 துறவறக் குருக்கள் மற்றும் 545 துறவற சகோதரிகள் உள்ளனர். தற்போது இம்மறைமாவட்டத்தின் நீதித்துறை ஆயர் பதில் குருவாகப் பணியாற்றி வரும் இவர், தத்துவம் மற்றும் இறையியலில் உயர்கல்வி பெற்றுள்ளார். மேலும், உரோமில் உள்ள உர்பானியானா பல்கலைக்கழகத்தில் விவிலிய இறையியலில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். கும்பளம் புனித ஜோசப் ஆலயத்தின் பங்குத் தந்தையாகப் பணியாற்றினார்.

ஆயராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில் பலரும் இவருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

news
இந்திய செய்திகள்
திருத்தந்தை லியோ இந்திய வருகைக்கான அழைப்பு!

இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் (CBCI) தலைவரும், திருச்சூர் பேராயருமான மேதகு ஆண்ட்ரூஸ் தாழத் அவர்கள், அண்மையில் வத்திக்கானில் நடைபெற்ற பொதுவான சந்திப்பின்போது திருத்தந்தையை இந்தியாவிற்கு வருகை தருமாறு ஓர் அதிகாரப்பூர்வ அழைப்புக் கடிதத்தை வழங்கியுள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது பேராயர், இந்தியத் திரு அவையின் தற்போதைய நிலை, அதன் பணி, சவால்கள் மற்றும் பங்களிப்புகளை விளக்கும் ஒரு விரிவான அறிக்கையையும், SWOT பகுப்பாய்வையும் திருத்தந்தையிடம் சமர்ப்பித்துள்ளார். மேலும், “திருத்தந்தையின் இந்திய வருகை குறித்து நான் இந்திய அரசுடனும் ஆலோசிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இந்தச் சந்திப்புக் குறித்து பேராயர் ஆண்ட்ரூஸ் தாழத் குறிப்பிடுகையில், திருத்தந்தை லியோ இவ்வழைப்பை அன்புடன் ஏற்றுக்கொண்டு, இந்தியத் திரு அவைக்கும் மக்களுக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசிரை வழங்கியதாகப் பகிர்ந்துகொண்டார்.

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

கொரோனா தொற்றுக்கான சிகிச்சையின்போது, அந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் உயிரிழந்தது உண்மையானால், அதற்கான காப்பீட்டுத்தொகையை அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவேண்டும் என்று காப்பீட்டு நிறுவனங்களை ஒன்றிய அரசு கட்டாயப்படுத்தவேண்டும். இலாபத்திற்காக மட்டும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர் என்ற ஊகம் சரியானதல்ல. மருத்துவர்களைப் பாதுகாக்காவிட்டாலோ, அவர்களுக்குத் துணையாக நிற்காவிட்டாலோ நீதித் துறையைச் சமுதாயம் மன்னிக்காது.”                

உச்ச நீதிமன்றம்

உலகம் எந்த வேகத்தில் மாற்றத்தை அடைகிறதோ, அதே வேகத்தில் நாமும் மாறவேண்டும். இதில் சிறிது கவனக்குறைவு ஏற்பட்டால்கூட நாம் பின்தங்கியிருப்பதாகக் கூறிவிடுவார்கள். அதேபோல், தலைமைத்துவம் என்பதற்கு அவர்கள் உருவாக்கும் நேர்மறையான தாக்கம்தான் அடையாளம். செயற்கை நுண்ணறிவு (..) காலத்தில் நேர்மைதான் அறிவை அளவிட உதவும். வெற்றிக்கும் ஒழுக்கத்திற்கும் இடையே சமநிலை தேவை. எத்தனை மாற்றங்கள், வளர்ச்சிகள் வந்தாலும், சில அடிப்படைகள் எப்போதும் மாறாது. அதில் மாணவர்கள் உறுதியாக இருக்கவேண்டும்.”    

திரு. மு..ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்

இரயில் நிலையங்களில், வங்கிகளில் மற்றும் ஏனைய பொது இடங்களில் தமிழில் தொடர்ந்து பேசாமல்விட்டால், சமரசம் செய்துகொண்டு ஆங்கிலத்திலோ அல்லது புதிதாக வேலைக்கு வந்து இருப்பவர்கள் பேசுகிற இந்தியில் பேசத்தொடங்கினால் தமிழ் என்னவாகும்? அது குறித்த விழிப்புணர்வு இல்லை; அப்படிச் செய்கிறோம் என்கிற உணர்வும் இல்லை. தொடர்ந்து பல்வேறு தமிழ் சொற்களைப் பயன்படுத்தவேண்டும்; தமிழ் தெரிந்தவரிடம் தமிழில் மட்டுமே பேசவேண்டும்; தமிழ் தெரியாதவர்களிடமும் தமிழைக் கற்றுக்கொடுக்கும் விதம் அவர்கள் நம் மாநிலத்தில் இருந்தால் செய்யவேண்டும். சமரசம் செய்து கொள்கிறோம், நல்லவர்களாக நடந்துகொள்கிறோம் என்று நம் மொழியை விட்டுக்கொடுத்து, பிற மொழியைப் பயன்படுத்துகிறபோது நம் மொழி அழிவதைத் தடுக்க இயலாது.”    

திரு. சோம வள்ளியப்பன், பொருளாதார நிபுணர்

news
இந்திய செய்திகள்
“திரு அவை மீதான அன்புதான் பணியின் அடித்தளம்!” - ஆயர் மேதகு ஜோஸ் செபாஸ்டியன்

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறைமாவட்ட ஆயர் மேதகு ஜோஸ் செபாஸ்டியன் தன்னுடைய மறைமாவட்டத் துறவிகள் நம்பிக்கை, அன்பு மற்றும் இறைப்பணியில் நிலைத்து நிற்க அழைப்பு விடுத்துள்ளார். அண்மையில் தனது மறைமாவட்டத் துறவிகளைச் சந்தித்த ஆயர், ஆபிரகாம் மற்றும் இயேசுவின் வாழ்க்கையைச் சுட்டிக்காட்டி இவ்வழைப்பை விடுத்துள்ளார்.

இன்றைய சூழலில், துறவியர்கள் உலகத்தின் ஈர்ப்புகள், பணிபுரியும் நிறுவனங்களின் அழுத்தங்கள் மற்றும் தங்கள் சொந்த நம்பிக்கையில் சோர்வுகள் ஏற்படும்போது, கடவுளின் வாக்குறுதியில் ஆபிரகாம் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்ததுபோல இருக்கவேண்டும் என வலியுறுத்தினார்.

துறவியர்களிடையே குறைந்துவரும் நம்பிக்கை, தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட நிகழ்வுகள், ஆன்மிக நலனைவிட தனிப்பட்ட நலனுக்கு அளித்து வரும் முக்கியத்துவம் ஆகியவற்றை வேதனையோடு சுட்டிக்காட்டிய ஆயர், இயேசு கிறிஸ்துவின் மீதான நமக்குள்ள அன்புதான் திரு அவைக்கு நாம் செய்யும் பணியின் அடித்தளம் என்றும், அவரின் அன்புக்கு நம்மையே நாம் அர்ப்பணிக்கவேண்டும் என்றும்  வலியுறுத்தினார்.

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் தனியார் பல்கலைக்கழகச் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டதில் அரசு உதவிபெறும் கல்லூரிகளைத் தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றுகிற இச்சட்டம், உயர்கல்வியைத் தனியார்வசம் ஒப்படைப்பதாக அமையும் என்கிற அச்சம் எழுந்திருக்கிறது. இதனால் எளிய குடும்பங்களைச் சார்ந்த குறிப்பாக, பட்டியல் சாதி/பழங்குடி பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் உயர்கல்வி உரிமை கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. அரசு அல்லது அரசு உதவிபெறும் கல்லூரிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் இட ஒதுக்கீடு சதவிகிதத்திற்கும் தனியார் பல்கலைக்கழகங்களில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டிற்கும் பெரிய இடைவெளி உள்ளது. ஆகவே, இச்சட்டத்திருத்தம் இட ஒதுக்கீடு மீதும், சமூகநீதி மீதும் கடும் பாதிப்பை எதிர்காலத்தில் ஏற்படுத்தும்.”

திரு. ஜி. இராமகிருஷ்ணன், அகில இந்தியக் கட்டுப்பாட்டுக் குழுத்தலைவர். சி.பி..(எம்)

கேரளத்தில் கலாச்சாரத்தையும் மத நல்லிணக்கத்தையும் சீர்குலைக்க சங்கப் பரிவாரங்கள் முயற்சித்து வருகின்றன. இதற்காகவே சபரிமலை உள்ளிட்ட  மத பாரம்பரியத்தில் தலையிட்டு, பிரச்சினைகளைத் தூண்டுகின்றனர். சபரிமலையில் ஐயப்ப சுவாமிக்கும் வாவர் சுவாமிக்கும் நாம் இடமளித்துள்ளோம். இதுவே நமது பாரம்பரியம். ஆனால், முஸ்லிம் ஒருவர் அந்த இடத்தில் இருப்பதைச் சங்கப் பரிவார் விரும்பாது. ஆர்.எஸ்.எஸ்., பா... முன்னிறுத்தும் கொள்கைகள் கேரளத்தில் முக்கியத்துவம் பெற்றால், அதற்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் கேரளத்தின் தனி அடையாளத்தையும் பெருமையையும் அழித்துவிடும்.”

திரு. பினராயி விஜயன், கேரள மாநில முதல்வர்

இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை இணக்கமான முறையில் முன்னேறி வருகிறது. இந்த ஒப்பந்தத்தால் நாட்டின் விவசாயிகள், மீனவர்கள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் நலன்கள் விட்டுத்தரப்படாது. அவர்கள் நலன்கள் பாதுகாக்கப்படும். அமெரிக்காவின் வரிவிதிப்பால் உலக அளவில் வர்த்தக ரீதியாக நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது. அதேவேளையில், இந்தியாவின் சரக்கு மற்றும் சேவைகளுக்கு உலகம் முழுவதும் தேவை உள்ளது. எனவே, நிகழ் நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சியடையும்.”

திரு. பியூஸ் கோயல், மத்திய வர்த்தக துறை அமைச்சர்

news
இந்திய செய்திகள்
இந்திய இறையியலாளர்கள் அமைப்பில் முதல் பெண் தலைவர்! - பாலினச் சமத்துவத்திற்கான ஓர் அழைப்பு!

புனேயில் நடைபெற்ற இந்திய இறையியலாளர்கள் அமைப்பின் (ITA) ஆண்டிறுதிக் கூட்டத்தில், அதன் புதிய தலைவராக, சவனோட் சிலுவை சகோதரிகளின் சபையைச் சேர்ந்த அருள்சகோதரி ஈவ்லின் மொன்டேய்ரோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய இறையியலாளர்கள் அமைப்பின் வரலாற்றில் ஒரு பெண் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. தொலைநோக்குப் பயிற்சி அனுபவம் கொண்ட இறையியல் பேராசிரியரான அருள்சகோதரி ஈவ்லின்,  ITA-வின் துணைத் தலைவராகப் பணியாற்றியவர். இறையியலாளர் மற்றும் சமூகத் தொடர்பாளர் ஆஸ்ட்ரிட் லொபோ இந்தத் தேர்வு குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், “இதுவரை ஆண்கள் மட்டுமே இருந்த ஒரு துறையில், ஒரு பெண்ணின் குரல் கேட்கப்பட தேவையான மதிப்பும் பார்வையும் நம்பிக்கையும் ஈவ்லினிடம் உள்ளதுஎன்று குறிப்பிட்டார்.