news
கவிதை
நலிந்தோருக்கு நல்வாழ்வு!

அன்பின் ஒளியாம் அவனியில் வந்தீர்;

அருளின் வடிவாய் எளியோரைக் கண்டீர்

இன்பம் தனைநீர் என்றும் பாராமல்

துன்பம் துடைப்பதே பணியெனக் கொண்டீர்!

 

கல்விக் கண்திறக்கும் கருணையின் கரங்கள்

இல்லாமை போக்கும் இறைவனின் வரங்கள்

பெண்களின் வாழ்வுயரப் பெரும்பாடுபட்டீர்

மண்ணில் மாந்தர்க்கு மறுவாழ்வு தந்தீர்!

 

ஆதரவு அற்றவருக்கு அன்னையாய் திகழ்ந்தீர்

ஆறுதால் மொழியாய் ஆனந்தம் தந்தீர்

சாதிகள் பாராமல் சேவையைச் செய்தீர்

சமூக நீதிக்காய் சளைக்காமல் நின்றீர்!

 

தங்கள் நலமே ஒருபோதும் கருதா

தருமம் ஒன்றே தலைசிறந்த தென்றீர்

எங்கும் நிறைந்திடும் இறைவனின் ஒளியாய்

கொன்சாகா அன்னையே வாழ்க நீர் என்றுமே!

 

நற்செய்தி கல்வி சமூகப்பணி வழியிலே

நலிந்தோருக்கு தந்தீர் நலமான வாழ்வையே

ஐந்தைம்பது ஆண்டுகளாய் ஆற்றிய பணிகளை

அகிலமும் போற்றுமே! சேவை தொடர என்றும் வாழ்த்துமே!

 

news
கவிதை
இறையாட்சியின் சாட்சிகள்

இறையாட்சியின் அரும் சாட்சியாக வாழ்ந்த

இலட்சியச் செம்மல் மைக்கேல் அன்சால்தோ

இயேசு சபையின் இணையில்லாச் சொத்து!

 

ஏனென்றால் -

இயேசு சபையானது பல்வேறு காரணங்களினால் இரத்து செய்யப்பட்ட

காலச் சூழலமைவானது

இடறல் கொண்டதாக இருக்கும்போதே,

 

அலோசியஸ் கொன்சாகாவின்

இனிய நாமத்துடன் புதியதொரு

துறவற சபையினை இடம்பெறச் செய்தார்,

திரு அவையின் வரலாற்றிலே!

அன்சால்தோ அடிகளாரின்

அடிச்சுவடுகளைப் பின்பற்றி

அசிசியாரின் அருள்சகோதரிகளாக

அலோசியஸ் கொன்சாகா சபையினர்

அரும்பெரும் பணிகள் பல

ஆற்றி வருகின்றார்கள் 250 ஆண்டுகளாக!

 

அவர்களின் எதிர்காலமும் அதற்கான

அவர்களின் எதிர்நோக்குகளும்,

அவர்களின் எதிர்பார்ப்புகளையும் விஞ்சி அமைந்திட,

ஆவியின் ஆற்றலால், இறை இயேசு தாமே

ஆசிர் வழங்கிட அரவணைத்திட வாழ்த்திடும்...

news
கவிதை
தாயாய் அரவணைக்கும் கொன்சாகா!

துறவியாக வாழ ஆசை கொண்ட தருணம்

ஆர்வமாய் அரவணைத்த கொன்சாகா தாய்

வழிநடத்திய பாதைகள்தந்த அனுபவங்கள்.

கற்றுக் கொடுத்த பாடங்கள்ஏராளம்ஏராளம்!

 

பிறந்த மண்ணை விட்டு வட மாநிலத்தில்

பணியாற்ற - அதுவும் முதன்முறை

மூன்று சகோதரிகளுடன் பயணித்த

இரயில் பயணம்

நிறைத்தது கண்களை கண்ணீரால்

அந்தக் கண்ணீரும் ஆனந்த கண்ணீரானது

பெற்ற அனுவங்களால்...

செப்பனிடப்பட்ட தருணங்களால்!

 

புது இடம் புது மொழி

புதுக் கலாச்சாரம் புது உணர்வு

மத மொழி இன வேறுபாடு இருப்பினும்

இறைவனின் அன்பை

குழந்கைகளுக்கு எடுத்துரைக்க

பெரியவர்களை அனுபவித்து உணர வைக்க!

 

இறைவனே இல்லை என்றவர்களின் நம்பிக்கையைத் தட்டியெழுப்ப

வாய்ப்பு மனவலிமை விசுவாசம் - இவற்றை

கற்றுத் தந்தது

எம் கொன்சாகா சபை!

 

இயேசுவை அறிவித்தால் தண்டனை ஒருபுறம்;

இயேசுவை அறியத் துடிக்கும் மக்கள் மறுபுறம்;

இரண்டின் மத்தியில் இறையரசைப் பரப்ப

எம் சபை ஊட்டியது வலுவை

இவ்வலுவுடன் ஆற்றினேன் நற்செய்திப்பணி!

கல்விப்பணியிலும் குழந்தைகளின்

மனத்தில் நற்பண்புகளை விதைத்து

இறை விழுமியங்களை மலரச் செய்து

உண்மையின் பிரதிபலிப்பாக மாற்ற

வாய்ப்பு தந்த எம் கொன்சாகா சபைக்கு

250-ஆம் ஆண்டு கொண்டாடும் இத்தருணத்தில்

எம் சபையை வாழ்த்தி - இன்னும்

பல பணிகளைச் சிறப்பாக செய்ய

இறையருள் வேண்டி இறைஞ்சுகிறேன்!

news
கவிதை
என் வாழ்வில் கொன்சாகா சபை!

சமத்துவத்தின் சாட்சிகள் - 250 ஆண்டுகள்

மாபெரும் கொன்சாகா சபையில் நான் ஓர் அங்கம்.

FSAG எங்கள் இருநூற்றைம்பது ஆண்டு தங்கம்!

 

உள்ளத்தில் உறுதி, உயிருள்ள கொள்கைகள்,

அதனால் நிலைக்கும் எங்கள் உன்னதப் பாதைகள்.

பிறப்பினால் பேதமில்லை, பிரிவினைகள் இல்லை,

சமத்துவம் ஒன்றே  என்றும் எங்களுக்கு எல்லை!

 

சபையின் ஒவ்வொருவரும் சரிசமமாய் நிற்போம்,

அன்பை மட்டுமே அளவுகோலாய்க் கொள்வோம்.

நீதி நிலைத்திருக்கும் எங்கள் கொள்கை;

நியாயத்தின் வழி நடப்பதே எங்கள் வாழ்க்கை!

 

தலைமுறை கடந்தும் காக்கின்றோம் ஒற்றுமையை!

அதுவே எங்கள் வாழ்வுக்கு கடவுள் தந்த முழுமை!

வரலாறு கடந்தும் நாங்கள் வலிமையாய் நிற்போம்!

அந்த நல்ல குணங்களால் இன்னும் சிறப்போம்!

 

சவால்கள் பல கடந்து, சாயாமல் வாழ்கிறோம்!

ஏனெனில் FSAG தந்த மதிப்பைப் போற்றுகிறோம்!

அன்பும் அறமும் எங்கள் இரு கண்கள்!

அதுவே வழிகாட்டும் கலங்கரை விளக்கம்!

 

கொன்சாகாவின் நெறி எங்கள் சுவாசம்!

அதுவே எங்கள் விசுவாசம்!

இன்னும் பல நூற்றாண்டுகள் ஓங்கி வளரட்டும்!

எங்கள் சமத்துவச் சபை எங்கும் ஒளிரட்டும்!

நான் ஒரு கொன்சாகா சபையின் உறுப்பினர்

என்பதில் பெருமிதம் கொள்கிறேன்!

வாழ்க... கொன்சாகா! வளர்க.... கொன்சாகா!

news
கவிதை
கடவுளின் பணியாளர் மைக்கேல் அன்சால்தோ

பாண்டிச்சேரியின் பொற்கரையில்

வானம் பாடும் கடலொலி சேரும் நிலத்தில்,

ஒரு மேய்ப்பன் நடந்தான் மெதுவாய், அமைதியாய் -

அவனின் முகத்தில் கிறிஸ்துவின் அன்பு ஒளிவிட்டது.

 

மனிதர் புகழும் மாலையின்றி,

நம்பிக்கையைக் கையில் தாங்கி வந்தான்;

ஏழைகளிலும் துன்பத்திலும் தாழ்ந்தோரிலும் -

அவன் கண்டான் கிறிஸ்துவின் முகத்தினைத் தெளிவாய்,

 

அனாதை குழந்தைகள், துயர் நெஞ்சங்கள்,

அவனது கரங்களில் அடைந்தன ஆறுதல்;

அவனது கைகள் ஆனது அவர்களின் அன்றாட அப்பம்,

அவனது செபங்கள் ஆனது அவர்களின் இரவின் பாதுகாப்பு,

 

இக்னேஷியஸின் ஒளியில் வழிநடந்தவன்,

கடவுளின் சித்தம் மட்டுமே அவன் வழி;:

அன்பு, பணிவு, உழைப்பு அவனின் அர்ப்பணிப்பு -

கருணையின் பணியாளனாய் வாழ்ந்தான் அவன்!

 

அவனது இதயத்தில் எரிந்தது நித்திய தீபம் -

இளம் அலோசியின் தியாக ஒளி:

அன்பின் தீயாய், தங்கம் போல ஒளிர்ந்த புனித

அன்சால்தோவுக்குப் புனித வழி காட்டினான்!

 

நூற்றாண்டுகள் நீங்கினாலும், பேரரசுகள் மறைந்தாலும்,

அவனது ஆவி இன்னும் கிசுகிசுக்கிறது மெல்ல -

நம்பிக்கை தீயாய், அன்பு விதையாய்,

ஒவ்வொரு சேவையிலும் கடவுள் உயிராய் வாழ்கிறார்!

 

மைக்கேல், கிறிஸ்துவின் ஏழைகளின் நண்பனே,

உன் ஒளி என்றும் மங்காது நிலைக்கும்;

காலம் அழிக்க முடியாத சுடராக நீ விளங்குவாய் -

கடவுளின் கருணையின் கண்ணாடியாக, நித்தியமாக!

news
கவிதை
கவிதைச் சாரல்கள்

வாழ்க்கை

உன்னை

உலர்த்திக்

காய வைக்கும்

போதெல்லாம்

பிசுபிசுக்கும்

உன் உப்பு வியர்வையில்

உன்னை நீயே

ஆசுவாசப்படுத்திக் கொள்!

உன் வியர்வைச் சிறகுகளை

நனைத்துக் கழுவிட

சாரல் மழை ஒன்று

விரைவில் வருமெனும்

நம்பிக்கையோடு!

 

நாற்காலியின்

கால்கள்

நீள்தலும்

உழைப்பாளியின்

கரங்கள்

சுருங்குதலும்

நீதியின் முரண்!

 

ஆயிரம்

விளக்குகளைக்

கையில் ஏந்தி

வெளிச்சத்தில்

நிற்பதை விட

ஒரு விளக்கைக்

கையில் ஏந்தி

இருளில் நிற்பதே

மேலானது!

 

வலிகளைத்

தாங்கும்

பொறுமையே

வழிகளைக்

கண்டறிவதற்கான

திறமையே!

 

விலை கொடுத்து

வாங்கப்படும்

எதுவும்

விலை

இருக்கும் வரை

மட்டுமே

விலை போகும் !

 

நேசித்தாலும்

நெகிழ்ந்தாலும்

உடைத்தாலும்

நொறுக்கினாலும்

அடித்தாலும்

அவமானப்பட்டாலும்

கவலைப்பட்டாலும்

கலங்கினாலும்

உனக்காகக்

கடைசிவரை

துடிப்பது

உன் இதயம்

மட்டுமே!

 

விலைமதிப்பற்றவை

எல்லாம்

விலை

போகாதவைகளே!

 

கைப்பேசி

உறவுகளுக்காய்

கைக்கெட்டும்

தூரத்தில் உள்ள

உறவுகளைத்

தொலைவில்

நிறுத்திவைத்துத்

தொலைந்ததென்று

தேடுவதையே

எந்த விண்கலம் கொண்டு

ஆராய இயலும்?

 

அவமானம்

உன்னைக்

கூறு போடும்

போதெல்லாம்

பதில் இல்லா

வெகுமானப்

புன்னகையாலே

அதன் மதில்களை

நொறுக்கி விடு!

 

நினைவுகள்

கடினமானவை!

அதனால்தான்

என்னவோ

நகர்ந்துகொண்டே

இருக்கின்றன

கடினப்பட்டுக்

கடந்திட

கால்கள் இன்றி!

 

பிறந்து விட்டோம்

என்பதற்காய்ப்

பொழுதைக் கழிக்காதே!

இனி பிறக்கப் போவதில்லை

என்றே

இறுதிவரை போராடு!

சாதனைகள்

உன் பிறவிப் பயனாகட்டும்!

சரித்திரங்கள் உன் பெயர்

சொல்லட்டும்!

 

நிலவில் சந்திரயான்!

நிலுவையில் ஆதித்யன்!

நிமிர முடியாக் கடனில்

இந்தியன்!

 

பிறருக்கு

நம்பிக்கையைக் கொடுங்கள்!

அதுவே உங்களையும்

வலிமையாக்கும்!

 

தேடப்படாதவை

தொலைந்து போனதாகவே

இருக்கட்டும்

என்று துணிந்து

முன்னேறுவதே

தன்னம்பிக்கையின்

முன்னெடுப்பு!