news
கவிதை
கவிதைச் சாரல்

கைதூக்கி விட யாருமில்லை

என்பதாலோ

அங்கீகரிக்க மறுக்கிறார்கள்

என்பதாலோ

உன் தனித்துவம்

மறையப் போவதில்லை!

அமுதாய் ஊறும்

உன் திறன்களைத் தள்ளிட

யாராலும் இயலாது!

 

அஞ்ஞானம் 

அடிமைப்படுத்துகிறது

ஞானம்

அடங்கிப்

போகின்றது!

 

வலியது என்றே

வட்டமடித்துக்

கொள்கின்றன

கழுகும் காகமும்!

 

கடினமான சூழல்தான்

வலிமையான

ஆளுமைகளைப்

பிரசவிக்கும்!

 

பயன்தராத

செல்வம் விற்றுப்

பயன்தரு

கல்வி கற்கப் பின்

பயன்தரும்

கல்வியை விற்றுப்

பயனுறு செல்வம்

சேர்ப்பதும்

சேர்த்தலின்

சுழற்சியோ?

 

கான்கிரீட் காடுகளில்

மரிக்கிறது

புல் பூண்டுகளும்

காடு கழனிகளும்!

சிலரின் வறண்ட

கரடு முரடான

இதயங்கள் போலே!

 

உன்மீது வீசப்படும்

கல்லைச்  சிலையாக்கு!

சொல்லை வில்லாக்கு!

வானம் வசப்படும்!

 

பேசத் தெரியாத

காலமும் பேசும்!

பேசத் தெரிந்த

பலவற்றிற்கும்

பதில் சொல்வது

காலமே!

 

மலைமுகடும்

மழை மேகமும்

உணர்த்தும்

மித வேகத்தின் 

மழை மேகத்தின்

உயரத்தை!

 

பதக்கங்களும்

புத்தகங்களும்

பட்டயமும்  கேடயமும்

சான்றிதழும்

சன்மானமும்

மீண்டும் மீண்டும்

சிலருக்கே எனும்போது

அதன் நம்பகத்தன்மை

மதிப்பிழந்து போகிறது!

 

முத்துகள்

முந்துவதில்லை!

நிறைகுடம் ததும்பாது!

தன் நிழல் அறியா

ஆலயக் கலசங்களாய்

ஆயிரமாயிரம் பேராமே!

 

நம் நிஜங்கள்

தோற்கும் இடத்தில்

நம் நிழல் கூட

மண்டியிடக் கூடாது!

நம் உண்மை நிலை

தோற்கும் இடத்தில்

நம் பொய் முகம்

ஒன்றும்

ஜெயிக்கப் போவதில்லை!

news
கவிதை
அலையாய் எழு!

நிலவினில் குளிக்கிறாய்!

கரைதொடத் தவிக்கிறாய்!

முயன்று முயன்று

வெண்மையாய் நுரைக்கிறாய்

கடலலையே!

கலையாக் காவியமாய்

மனமதை நிறைக்கிறாய்!

மன்மதன் எய்ததினால்

வான்மதகையே சுமக்கிறாய்!

தென்றலை இரசிக்கிறாய்!

மெல்லலை விரிக்கிறாய்!

சிந்தை கலங்கிட

மலையென உயர்கிறாய்!

கல்லான மனத்திலும்

கனாக்களை விதைக்கிறாய்!

நீந்திடும் மீனினம் கரை சேரவா

அலையாய் அலைகிறாய்?

பிரிய மனமில்லாமல்

நீண்டே திரிகிறாய்!

நிலவெனும் தாரகை நின் தாழ்

நீந்தி மகிழ்கிறாள்!

மின்னிடும் விண்மீன்களும்

கண்ணிமைக்காது பார்க்கும்

உன்னழகையே...

குழவியின் தீண்டலாய்

கரைதனைத் தொடுகிறாய்!

நொடிக்கு நொடி

மனம் ஆயிரம் பேசும்...

நீ உடைந்து மறைவது போல்

மறந்தும் போகும்...

மிதந்திடும் தோணியாய்

வாழ்க்கையும்....

உன்போல் கரைசேர

முயன்றதால்

கண்ணீரின் சுவையும்

உன்னினமே!

அலைகளின் படிகளில்

நடந்திட வா!

நடந்தே வானமும் கடந்திட வா!

தொடுவானம் உந்தன் எல்லைதானோ?

எழுந்து வா!

இனி உன் நாள்!

எல்லாம் உன்னால்!

news
கவிதை
தீண்டல்

மலர்கள் மலர்ந்துகொண்டே

இருக்கின்றன!

மௌனமாய், அழகாய்

மலர்ந்துகொண்டே

இருக்கின்றன

அக்கினிப் பிழம்புச் சொற்கள்

அவற்றின் உரமாயின.

தீ நாக்கு மலர்களைச்

சுடுவதில்லை.

அம்மலர்களின் துயரம்

அவை பெற்ற

வடுக்கள் குறித்து அல்ல;

மலர்களை முத்தமிட்டுச் செல்லும்

வண்ணத்துப் பூச்சிகளுடன்

கைகோர்த்து

உயரப் பறக்க விடாமல்

தடுக்கும் வேர்கள் குறித்துதான்.

ஆனால் வேர்களினின்றி மலர்களில்லையே!

அம்மலர்கள் மௌனமாய்,

அழகாய் மலர்ந்துகொண்டே இருக்கின்றன

வண்ணத்துப்பூச்சியின்

அடுத்த தீண்டலை எதிர்பார்த்து!

news
கவிதை
மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு இரங்கற்பா!

கத்தோலிக்கத்

திரு அவையின்

உரோமை ஆயனே!

 

உலகத் திரு அவையின்

நல் தகப்பனே!

அன்பால் வென்ற

அருள்திருவே!

அகிலத்தை அன்பால்

அணைத்தாயே!

 

கல்வியில் சிறந்திட

வேதியியல் பயின்றவரே !

இறைவன் நிகழ்த்திய

வேதியியல் மாற்றத்தால்

இறையியல்

கற்றுத் தெளிந்தீரே !

வேதியியலும்

இறையியலும் கலந்த

ஒரு படித்தான கலவையாய்

மாற்றம் மண்ணில்

விதைத்தீரே !

 

மரபுகளை உடைத்து

மனிதத்தை வென்றாயே!

மனிதர் வாழ

வழி பல சொன்னாயே!

எளிமையின் வடிவாய்

எளியோரின் தோழனாய்

ஏழ்மை நீக்கச்

சொன்னாயே!

 

புலம்பெயர்வோர்

இடர் நீக்க

போர்கள் இல்லா

பூமி காண

மண்டியிட்டுச் செபித்து

நாடாளுவோரின்

இதயம் திறக்கச் செய்தாயே!

 

வத்திக்கான் தலைவரே

விந்தைகள் நிகழ்த்திய

வித்தகக் குருவே!

உலகாளும் மாந்தரெல்லாம்

உம்முன் பணிந்து நின்றாரே!

ஆசிர் வேண்டி பணிந்தாரே!

 

வெள்ளை ஆடை வேந்தனே!

வேற்றுமை பாரா புனிதனே!

திரு அவையின் தவறுக்கு

தந்தை நிலையில்

பொறுப்பேற்று

ஒப்புரவு பெற்றீரே!

உண்மையை

உரக்கச் சொல்லி

உத்தம குருவாய்

வாழ்ந்தீரே!

 

அன்னை மரியின் அன்பனே

அருள்பணியின் காவலனே

அர்ப்பண வாழ்வை வாழ்ந்தவரே

இளைப்பாறட்டும்

உம் ஆன்மா

இறைவனின் இல்லத்தில்

புனித நிலை காத்த

புண்ணியனே

புனிதராய் உயர்ந்திட

இறையருள்

வேண்டுகிறோம்!

news
கவிதை
எழுந்து வா எந்தையே, எம் திருத்தந்தையே!

எம் திருத்தந்தையே

உம் பெயர்தான் புரட்சியா?

புரட்சிதான் பிரான்சிசா

திருத்தந்தை  பிரான்சிசா! 

திரு அவை பீடத்தில்  

ஆட்சி மன்றத்தில்

புதுமை புகுத்தினாய்

புரட்சி செய்தாய்! 

பெண் இனமும்   

தலைமையேற்க

பார் போற்ற

வியக்க வைத்தாய்! 

பொது நிலையினரை

அரவணைத்தாய்

ஆட்சி மன்றத்தில்

அமர வைத்தாய்! 

உன் முகம் காண

நேரிலே காண

ஒருமுறை காண

காத்திருந்தோமே! 

கண்டம் விட்டு

கண்டம் பறந்தாய்!

இந்தியத் துணைக்கண்டம்

ஏன் மறந்தாய்?

போர் நிறுத்தம்

உன்  உயிர் மூச்சு

காசாவில் போர் 

நின்றது உன் மூச்சு 

உக்ரைன் போர் 

நிறுத்திடத் துடித்தாய்!

நிறுத்திடும் முன்னே  

உன் துடிப்பை நிறுத்தினாய்!  

யூபிலி ஆண்டு

தொடங்கி வைத்தாய்!

முடித்து வைக்குமுன்

ஏன் சென்றாய்?

அறியவில்லை நாங்கள்

உயிர்ப்புப் பெருவிழாவன்று  

மரணப்  படுக்கையிலிருந்து

எழுந்து வருவாயென்று

அறிவோம் நாங்கள்

உயிர்ப்புப் பெருவிழா

அடுத்து வருவது

விண்ணேற்புப் பெருவிழா!

அறியவில்லையே

நாங்கள்  

உயிர்ப்புப் பெருவிழாவன்று  

எம்மிடையே வந்த நீ

உடன் விண்ணகம் செல்வாயென 

உனது எளிமையை  

இனி எங்குத் தேடுவோம்?

உன் சிரித்த முகத்தை  

இனி என்று காண்போம்?

எழுந்து வா எந்தையே!

சிறிது காலம் மட்டும்

இருந்து போ

எம்மிடையே

எம் திருத்தந்தையே!

news
கவிதை
திருத்தந்தையே திரும்பி வாரும்! திரு அவையில் திருத்தங்கள் தாரும்!

திருத்தந்தையர்களில்

நீர் ஒரு திருப்புமுனை!

 

ஏழைகளுக்காகப்

போராடிய போராளியே!

ஏழைகளை நேசித்த

இயேசுவின் தாசரே!

மரபுகளை உடைத்தெறிந்த

மகாத்மாவே!

 

பெண்ணியம் போற்றியதோடு

ஆட்சிப்பீடத்தில்

அதிகாரம் கொடுத்த

அருள் வள்ளலே!

 

எளியோரின் நலனில்

இயேசுவாகவே வாழ்ந்தீரே!

சுவாசம் உள்ளவரை

ஏழைகளைச்

சுவாசித்த சுதனே!

 

முதியவர்களைச் சுமையாகக் கருதியவர்கள்

மத்தியில்

தாத்தா-பாட்டி

தினமாகக்

கொண்டாட வழிவகுத்தீரே!

 

ஏழைகளுக்காக

உதித்த உதய சூரியனே!

 

கூட்டொருங்கியக்கத்

திரு அவையின்

கொள்கைத்

திறவுகோலே!

 

மனிதமே புனிதம் என்பதனை

மானுடத்திற்குச் சொல்ல வந்த

மகா காவியமே!

 

பெண்களின்

பாதங்களைக் கழுவிய

பெருந்தகையாளரே!

 

விளிம்பு நிலை மக்கள்

வெளிச்சம் பெற வந்த விடியலே!

 

சிறையில் இருப்போரையும்

சிநேகித்தவரே!

 

உலகில் அமைதி நிலவ

அதிபர்கள் காலில் விழுந்த

திருத்தந்தைகளில்

நீர் ஓர் அதிசயமே!

 

என் சீலைகளைத் தவிர்த்து

ஏழைகளுக்கு உதவ

ஒப்பனை அறைகள்

கட்டப் பணித்தவரே!

 

இரக்கம் நிறைந்தவர் என்பதாலோ

இறை இரக்க ஞாயிறு(க்)குமுன்

இரக்கமிக்க ஆண்டவர் அழைத்தாரோ!

திரு அவையின்

திருப்புமுனை

திருத்தந்தையே!

திரும்பி வாரும்!

(சீர்)திருத்தம்

தாரும்!