news
கவிதை
கனவு நனவாகும்

எள்ளளவும்  ஏற்றம் தராமல் இரக்கமின்றி

                கல்லான இதயமேந்தி கடுகளவும் கருணையின்றி

                வரையறுத்து வதைக்கப்பட்டு வாடி நிற்கவைத்து

                சிறைவைத்து சித்ரவதைக்குள்ளாக்கி மேல்குடி நானே!

 

உடல்நைந்தோர் உள்ளம் உடைந்தோர் உருக்குலைந்தோராக்கி

                மங்கையர்கள் மனம் நொந்து பேசாமடைந்தகளாக்கி

                நலங்கொழிய வைத்து நற்சிந்தனை யின்றி கொல்வர்

                தொடுகின்ற எண்ணமெல்லாம் தீதாய் ஓங்கி!

 

விடுகின்ற மூச்செல்லாம் கொடுமைக் காற்றாய்

                வில்லொத்த பார்வையில் கொள்ளித் தீயாய்

                பாவச் சேற்றில் புழுவாய் நெளிவர்

                இந்தக் காலத்தில் இருளான சூழலில்

 

மருந்தாக விலங்கொடியாதோ விடுதலையொளி வாராதோ

                எண்ணுவது உயர்வு ஏற்றமென்பதும் திண்ணம்

                பெண்ணே நீயின்று பேறுபெற்றாயெனும் பேரொளி

                கண்ணான எனதுருவாக்கம் இனிதாகத் தொடர்வாய்!

 

மண்ணுலகில் மனிதம் தழைத்து ஓங்கிடவே

                என்றுதித்தாய் இறைமகனே இருள் போக்கிடவே

                அன்றலர்ந்த முல்லையாகக் கொள்ளை இன்பமானாய்

                சுமையான துயரத்தைச் சுகமானதாக்கும் ஒளியானாய்!

 

விலங்கொடிக்கும் விடுதலையாக வந்துதித்த வெளிச்சமே

                எல்லையில்லா ஏற்றமிகு நம்பிக்கை தந்தாய்

                வில்லாகத் தொடர்வோம் உமது வழியில்

                ஆராரோ பாடி உறங்கவிடோம் உறங்கமாட்டோம்

                உமது கனவு நிறைவேறும் நாள்வரைப் பயணிப்போம்!

news
கவிதை
கண்வளராய்!

வாடைக் குளிரினிலே

வந்திருக்கும் பாலமுதே

கோடைப் பலாச் சுளையைக்

கொண்டு வாரேன் - கண்வளராய்!

 

செம்மறியன் பாலெடுத்து

செந்தேனில் குலைத்தெடுத்து

அம்மணிகள் கொண்டுவாரார்

அழாமல்நீர் கண் ணுறங்கு!!

 

தோள் சுமந்து குட்டிகளுடன்

தொல்லிடையார் குடும்பத்தார்

பாலூட்ட வாரார்கள்

பால் மண()மே! கண்வளராய்!

 

சிங்கார வீடின்றி

சின்னஞ்சிறு முன்னிட்டினில்

வந்ததிரு மாஞ்சிட்டே

வளர்மதியே, கண்வளராய்!!

 

அன்னை மரி வடிவழகே

அன்புதிர்க்கும் தேனடையே

பொன்னானமணிப்புரிகள்

பூரிக்கவே கண்வளராய்!

 

பெத்தேலிக மா மணியே

பேரின்ப நல்லூற்றே

பெற்றம்நீ பிறந்த மண்ணில்

பெருமகிழ்ச்சிக்காய் கண்வளராய்!

 

பட்டினிலே தூங்கவைத்தால்

பலதோஷம் பாயுமென்று

கொட்டிலிலே தூங்கவைத்தார்

ஈசாயின் தளிரே கண்வளராய்!

 

மெத்தையிலே புரண்டெழுந்தால்

மேனியெல்லாம் நோகுமென்று

கந்தையிலே பொதிந்து படுக்கவைத்தாய்

கற்பகமே, மரிக்கொழுந்தே கண்வளராய்!

news
கவிதை
புதிதாய்ப் பிறப்போம்

புதிய எண்ணம் கொண்டிடுவீர்

புதிய சொல்லைப் பேசிடுவீர்

புதிய செயலில் இறங்கிடுவீர்

புதிய வாழ்வைத் தொடங்கிடுவீர்!

 

உனக்கும் பிறர்க்கும் நன்மைதரும்

உத்தம னாக வாழநினை!

உன்னைப் போலுன் அயலானை

உண்மை யுடனே அன்புசெய்!

 

புதிய உலகைப் படைப்பதற்குப்

புதிய சிந்தனை வேண்டுமன்றோ!

எதிலும் புதுமை கண்டிடவே

எழுச்சி யுடனே செயலாற்று!

 

கள்ளம் இல்லா உள்ளத்தைக்

கட்டி எழுப்பு எந்நாளும்!

எள்ளும் நிலையில் வீழாதே!

ஏற்றம் காண முனைந்துவிடு!

 

இழுக்கில் லாமல் வாழ்வதற்கு

என்றும் உனது மனத்திலுள்ள

அழுக்கை அகற்றி நற்செயலால்

ஆன்மா மகிழ செயல்படுவாய்!

 

வஞ்சனை என்றும் வேண்டாமே!

வாய்மை ஒன்றே போதுமன்றோ!

நெஞ்சம் நிறைந்து தீங்கிழைக்கும்

நிலையை மாற்றி மனம்மாறு!

 

சமூக நீதியைக் காக்கின்ற

சமத்துவ எண்ணம் தனைக்கொள்ளு!

அமைதி வழியில் பயணிக்க

அச்ச மின்றி நடைபோடு!

 

மனித நேய மீட்பரது

மாண்பு மிக்கப் பிறப்புவழி!

இனிதே வாழ இறங்கிடுவாய்!

இன்பம் பொங்க நின்றிடுவாய்!

 

பெண்மைப் பேணு எந்நாளும்!

பெருமை பேசா நாவைக்கொள்!

அண்மைச் செய்தி அன்பென்று

ஆண்டவர் வழியை நீதேடு!

 

சாதி வெறிகள் எதற்கையா?

சமய வெறிகள் வேண்டாமே!

ஆதி காலத் தேவனருள்

அண்டி வந்திட நீபாடு!

 

நாட்டைக் காத்தில் கடனன்றோ!

நாளும் உழைத்தல் பயனன்றோ!

வீட்டைக் காக்க விடியலினை

விரைந்து சென்று நீதேடு!

 

புதிய மனித ராகிடுவீர்!

புத்தொளிப் பெற்று வாழ்ந்திடுவீர்!

சதிக்கும் எண்ணம் உதிக்காமல்

சமாதா னத்தை நீதேடு!

 

உலகில் அமைதி உருவாக

உன்னத தேவன் பிறந்தாரே!

கலகம் இல்லாப் புத்துலகை

கவன முடனே உருவாக்கு!

 

மனிதர் புதிதாய்ப் பிறந்திட்டால்

மண்ணில் என்றும் மகிழ்ச்சிநிலை!

அநீதர் வழியில் சேராமல்

அமைதி வழியில் பணியாற்று!

news
கவிதை
அன்னை மரியா நம் தாய்!

அன்பை ஆடையாக்கி

அமைதியை அணிகலன்களாக்கி

எளிமையை இயல்பாக்கி

பாசத்தை மனத்தில் தேக்கி...


துணிவைத் துணையாக்கி

தாய்மையை உறவாக்கி

நன்மையைப் பொதுவாக்கி

உண்மையைப் பணிவாக்கி...

 

தியாகத்தை உயிராக்கி

மகிழ்ச்சியைப் பொதுவாக்கி

தாழ்ச்சியை வழியாக்கி

வாழ்வைத் தெளிவாக்கி...

 

வாழ்ந்ததைச் சரித்திரமாக்கி

மறுக்க முடியாத உண்மையாக்கி

மனுக்குலத்திற்கு  மாதிரியாகி

மகனைச் சுட்டும் வழிகாட்டியாகி

 

தாயாய் தவமாய் தரணிகண்ட

தாயை வணங்கி

பெருமை கொள்வோம்!