news
கவிதை
கடவுளின் பணியாளர் மைக்கேல் அன்சால்தோ

பாண்டிச்சேரியின் பொற்கரையில்

வானம் பாடும் கடலொலி சேரும் நிலத்தில்,

ஒரு மேய்ப்பன் நடந்தான் மெதுவாய், அமைதியாய் -

அவனின் முகத்தில் கிறிஸ்துவின் அன்பு ஒளிவிட்டது.

 

மனிதர் புகழும் மாலையின்றி,

நம்பிக்கையைக் கையில் தாங்கி வந்தான்;

ஏழைகளிலும் துன்பத்திலும் தாழ்ந்தோரிலும் -

அவன் கண்டான் கிறிஸ்துவின் முகத்தினைத் தெளிவாய்,

 

அனாதை குழந்தைகள், துயர் நெஞ்சங்கள்,

அவனது கரங்களில் அடைந்தன ஆறுதல்;

அவனது கைகள் ஆனது அவர்களின் அன்றாட அப்பம்,

அவனது செபங்கள் ஆனது அவர்களின் இரவின் பாதுகாப்பு,

 

இக்னேஷியஸின் ஒளியில் வழிநடந்தவன்,

கடவுளின் சித்தம் மட்டுமே அவன் வழி;:

அன்பு, பணிவு, உழைப்பு அவனின் அர்ப்பணிப்பு -

கருணையின் பணியாளனாய் வாழ்ந்தான் அவன்!

 

அவனது இதயத்தில் எரிந்தது நித்திய தீபம் -

இளம் அலோசியின் தியாக ஒளி:

அன்பின் தீயாய், தங்கம் போல ஒளிர்ந்த புனித

அன்சால்தோவுக்குப் புனித வழி காட்டினான்!

 

நூற்றாண்டுகள் நீங்கினாலும், பேரரசுகள் மறைந்தாலும்,

அவனது ஆவி இன்னும் கிசுகிசுக்கிறது மெல்ல -

நம்பிக்கை தீயாய், அன்பு விதையாய்,

ஒவ்வொரு சேவையிலும் கடவுள் உயிராய் வாழ்கிறார்!

 

மைக்கேல், கிறிஸ்துவின் ஏழைகளின் நண்பனே,

உன் ஒளி என்றும் மங்காது நிலைக்கும்;

காலம் அழிக்க முடியாத சுடராக நீ விளங்குவாய் -

கடவுளின் கருணையின் கண்ணாடியாக, நித்தியமாக!

news
கவிதை
கவிதைச் சாரல்கள்

வாழ்க்கை

உன்னை

உலர்த்திக்

காய வைக்கும்

போதெல்லாம்

பிசுபிசுக்கும்

உன் உப்பு வியர்வையில்

உன்னை நீயே

ஆசுவாசப்படுத்திக் கொள்!

உன் வியர்வைச் சிறகுகளை

நனைத்துக் கழுவிட

சாரல் மழை ஒன்று

விரைவில் வருமெனும்

நம்பிக்கையோடு!

 

நாற்காலியின்

கால்கள்

நீள்தலும்

உழைப்பாளியின்

கரங்கள்

சுருங்குதலும்

நீதியின் முரண்!

 

ஆயிரம்

விளக்குகளைக்

கையில் ஏந்தி

வெளிச்சத்தில்

நிற்பதை விட

ஒரு விளக்கைக்

கையில் ஏந்தி

இருளில் நிற்பதே

மேலானது!

 

வலிகளைத்

தாங்கும்

பொறுமையே

வழிகளைக்

கண்டறிவதற்கான

திறமையே!

 

விலை கொடுத்து

வாங்கப்படும்

எதுவும்

விலை

இருக்கும் வரை

மட்டுமே

விலை போகும் !

 

நேசித்தாலும்

நெகிழ்ந்தாலும்

உடைத்தாலும்

நொறுக்கினாலும்

அடித்தாலும்

அவமானப்பட்டாலும்

கவலைப்பட்டாலும்

கலங்கினாலும்

உனக்காகக்

கடைசிவரை

துடிப்பது

உன் இதயம்

மட்டுமே!

 

விலைமதிப்பற்றவை

எல்லாம்

விலை

போகாதவைகளே!

 

கைப்பேசி

உறவுகளுக்காய்

கைக்கெட்டும்

தூரத்தில் உள்ள

உறவுகளைத்

தொலைவில்

நிறுத்திவைத்துத்

தொலைந்ததென்று

தேடுவதையே

எந்த விண்கலம் கொண்டு

ஆராய இயலும்?

 

அவமானம்

உன்னைக்

கூறு போடும்

போதெல்லாம்

பதில் இல்லா

வெகுமானப்

புன்னகையாலே

அதன் மதில்களை

நொறுக்கி விடு!

 

நினைவுகள்

கடினமானவை!

அதனால்தான்

என்னவோ

நகர்ந்துகொண்டே

இருக்கின்றன

கடினப்பட்டுக்

கடந்திட

கால்கள் இன்றி!

 

பிறந்து விட்டோம்

என்பதற்காய்ப்

பொழுதைக் கழிக்காதே!

இனி பிறக்கப் போவதில்லை

என்றே

இறுதிவரை போராடு!

சாதனைகள்

உன் பிறவிப் பயனாகட்டும்!

சரித்திரங்கள் உன் பெயர்

சொல்லட்டும்!

 

நிலவில் சந்திரயான்!

நிலுவையில் ஆதித்யன்!

நிமிர முடியாக் கடனில்

இந்தியன்!

 

பிறருக்கு

நம்பிக்கையைக் கொடுங்கள்!

அதுவே உங்களையும்

வலிமையாக்கும்!

 

தேடப்படாதவை

தொலைந்து போனதாகவே

இருக்கட்டும்

என்று துணிந்து

முன்னேறுவதே

தன்னம்பிக்கையின்

முன்னெடுப்பு!

news
கவிதை
கடந்து போகும் வாசங்கள்!

செப்டம்பர் - 2

எனக்குப் பிறந்த நாள்!

குடும்பத்தார்கள்

உறவுகள், நண்பர்கள்

நினைவூட்டிக் கொண்டாடும்

வயதைக் கடந்துவிட்டேன்.

 

அரசுப் பள்ளிகளைத் தவிர

வேறு எந்த நிறுவனத்திலும்

இயக்கத்திலும்

பணியாற்றியதில்லை.

ஆதரவாளன்.

பங்கேற்பாளன்தான்.

 

என் மகள் அகிலா மட்டும்

எல்லா ஆண்டுகளிலும்

நினைவுகூர்ந்து வாழ்த்துவாள்!

 

65 வயது தொடங்குகிறது.

நினைவுகளில் வந்துபோகும்

சில நூறு முகங்கள்.

அவ்வப்போது

தொடர்பிலிருக்கும்

சில பத்து முகங்கள்.

 

ஆயுளில் ஒரு மாத சிறைவாசம்.

15 வயதில்

இளம் மாணவர் இயக்கத்தில்

தொடங்கிய பொதுவாழ்வு.

சில இயக்கங்களோடு

2025-வரை நீடிக்கிறது.

 

பெரிதாய் ஒன்றும்

கிழித்துவிடவில்லை.

 

வரலாற்றைப் படைத்தவர்கள்

வரலாற்றைப் படைக்கிறவர்கள்!

வரலாற்றைப் படைக்கப்

போகிறவர்கள்அணியில்

கடைசியில் நிற்கிறேன்.

 

காட்டாற்றைப்போல

கடுகிச் செல்லும்

காலவெள்ளத்தின்

ஒரு சிறுதுளி நான்.

 

ஏறத்தாழ... 800 கோடிகளில் ...

ஒரு சிறு புள்ளி.

 

நல்லவேளை ...

விழாக்கள், கேளிக்கைகள்

விருந்துகள், விருதுகள், பரிசுகள்,

பந்தாக்கள் இல்லாமலிருப்பது

மிகவும் சுகமானது.

 

அப்படி நடந்தால்

போலிகளாய்பல

செய்ய வேண்டியிருக்கும்.

வாழ்வில் திருப்தியாய்

ஏராளம் செய்ய

முடியாமல் போனாலும்

சொல்வதற்குச் சில இருக்கின்றன

எனது மூன்று நூல்கள்:

1. வெள்ளந்தி வாத்தியார்

2. மக்கள் இயக்குநர் (எஸ்.பி.ஜனநாதன்)

3. ஆண்டோ எனும் அருங்கலைஞன்.

 

ஏறத்தாழ 20 ஊர்கள்

20 வீடுகளில்

வாழ்ந்திருக்கிறேன்.

10 பள்ளிகளில்

பணி செய்திருக்கிறேன்.

 

இயல்பான, நிலைபெற்ற

வாழ்க்கையில்லை.

ஒரு நாடோடியைப்போல

அலைந்து திரிந்திருக்கிறேன்

அலைக்கழிக்கப்பட்டிருக்கிறேன்.

 

இருந்தாலும் ...

மனம் நிறைவாய்த்தான்

இருக்கிறது.

அரசுப்பணியில் இருந்ததால்

அனைத்தையும் கடக்க முடிந்தது.

 

பெற்றோர் புறக்கணிப்பும்

உறவினர் ஏளனமும்

பின்தொடர்ந்திருந்தாலும்

எழுத்தும் இலக்கும்

என்னைக் காப்பாற்றிவிட்டன.

 

சாதாரண பார்வையில்

தேறவில்லை என்றாலும்

சாதிக்கும் முயற்சிகளில்

இன்னமும் இருக்கிறேன்.

 

என் இளவல்கள்

இன்னும் என்னைக்

கனவுகளோடுதான்

பார்க்கிறார்கள்.

திரும்பிப் பார்க்கிறேன்

திருப்தியாய்தான் இருக்கிறது.

 

எனக்குத் தெரியும்...

மானசீகமாய் வாழ்த்து

சொல்பவர்கள்

கரம் நீட்டி குலுக்க

நினைப்பவர்கள்

ஏதாவது செய்திருக்கலாமோ

என்று எண்ணியவர்கள்

அருகில் இருந்திருக்கலாம்

என்று அன்போடு

ஆசைப்படுபவர்கள்

எல்லாருக்கும் நன்றி!

 

பிரபஞ்சம் அனுமதித்தால்

நாம் மீண்டும்

புன்னகையோடு சந்திப்போம்!

news
கவிதை
இணையவழி இறைசெய்தியாளரே ...!

விளையாட்டில் ஆர்வமும், ஊழியத்தில் ஆனந்தமும் உடையவரே!

சலிப்படைந்தோரையும் விழிப்படைய செய்த இறை இனிமையே!

இளந்தலைமுறையினரில் மகுடமான

இந்நூற்றாண்டின் பெருமையே!

திவ்யநற்கருணை புண்ணியத்தை வாழ்ந்தும்

வாழ்வாக்கவும் முனைந்தவரே!

அதிகதிகமாய் இறை உடனிருப்பில் மகிழ்வு கண்டவரே!

பெற்றோரையே இறைபதம் சேர்ப்பித்த அதிசயமே அற்புதமே!

கணினியைத் தன்வசப்படுத்தி இறைசெய்திக்கு உட்படுத்தியவரே!

ஒவ்வொரு வேளையிலும் ஒவ்வொரு பணியிலும்

நற்கருணை நாதரை நாடியவரே!

ஒப்புரவின் மகத்துவத்தில் உறவாடி உயிர்நாடி

வாழ்ந்த தனிப்பெரு அழகே! எம் இளையோர் மனமாற்றம் பெறவே வாழ்ந்து காட்டிய இளம் புனிதரே!

விண்ணக நெடுஞ்சாலையில் தங்குதடையின்றிப் பயணித்த புனிதரே! உம் எண்ணம்போல் யாம் வாழ துணையாகிடுவீரே

புனித கார்லோ அக்குதிஸ்,

உம் பொன்மொழிபோல் யாம் துலங்க மன்றாடுவீரே....!

news
கவிதை
எல்லாமும் நீயே இறைவா!

எல்லாமும் நீயே இறைவா!

என் உள்ளத்தில் மலர்கின்ற ஒளியாய்

தூய மலராய் மலர்ந்த தெரேசா போல

அன்பின் பாதையில் நான் நடக்க உந்துகிறாயே!

 

குழந்தை போல் உன்னையே நம்பி

மனிதக் கண்ணில் சிறியவளாய் தெரியினும்

வானின் நறுமணமாய் விரிந்தவளாய்

வாழ்த்துகிறேன் உமது கிருபையை!

 

ஓர் எளிய புனிதை - தூய தெரேசா

உலகச் சுகங்களைத் தேடியவள் இல்லை

மாறாக ஒவ்வொரு சிறு தியாகமும்

வானின் பக்கம் ஏற்றும்

மாடிப்படியாகவே நினைத்தாள்!

 

அன்பு செய்வதுதான் என் வழிஎன்றவள்

ஒரே சிறு புன்னகை கூட

ஓர் ஆழ்ந்த பிரார்த்தனையாக

உன்னிடம் ஏறும் பரிசாய் செய்தாள்!

 

வாழ்க்கையின் துன்பங்கள் நோய்கள்

அவமதிப்புகள் உள்மன உறுத்தல்கள்

அனைத்தையும் உன்னிடம்

காணிக்கையாக்கினாள்

புதுமலராய் மலர்ந்தவளாய்!

 

தன் வாழ்க்கையை

முழுமையாக அர்ப்பணித்தவள்

சிறிய கார்மேகமாய்

வானத்தில் மறைந்தவள்

ஆனால் இன்று மழையாகக்

கிருபையைப் பொழிபவள்

உலகமெங்கும் நறுமணத்தைப் பரப்பும்

மலராய் விளங்குபவள்!

 

இறைவா! எனக்கும் தாரும்

அந்த நம்பிக்கையை!

அவளின் அன்பு பாதையைப்

பின்பற்றும் வலிமையை

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செயலிலும்

உனக்கு மட்டுமே வாழ்வது போல்

வாழச் செய்யும் அறத்தை!

 

அன்பு ஒரு பண்பாடல்ல;

அது ஒரு பூரண அர்ப்பணம் -

அதைத் தெரிந்தவள் தூய தெரேசா!

சிறியவளாய் இருந்தாலும்

வானத்தின் மாபெரும்

நட்சத்திரமாய் ஒளிர்ந்தவள்!

 

எல்லாமும் நீயே இறைவா...

என் இதயத்தின் வாசல்

நீ திறந்ததேயாக!

தூய தெரேசாவைப் போல நானும்

உன்னை நம்பி நடக்கட்டும்

என் பயணம்!

news
கவிதை
சிறுமலரின் சிறுவழி, இன்று நமக்குப் புதுவழி!

சிறுமலரின் சிறுவழி

இன்று நமக்குப் புதுவழி

சிறுநிலா சாய்ந்த போது

மெல்ல வந்து பூத்தது ஒரு மலர்!

 

சிறு மலராய் பூத்தவள்!

சின்ன அன்பால் ஈர்த்தவள்

விண்மீனாய் மெல்ல எழுந்தவள்

விடிவெள்ளியாய்

என்றும் மலர்ந்தவள்!

 

ஒளிபொருந்திய சிறு புன்னகையால்

ஒய்யாரமாய் வலம் வந்தமையால்

சிறிய செயலொன்றாலே

சீரிய அன்பு பெருகுமென்றாள்!

 

சிறுவழியில் நடந்தவள்

சிற்பமாய் வாழ்ந்தவள்

சின்ன உதவிகள் செய்தவள்

சின்ன உள்ளம் கொண்டவள்!

 

எளிமையின்

உருவமுடையவள் - தெரேசாள்

குழந்தை

உள்ளமுடையவள் - தெரேசாள்

சிறிய பாதை தந்தவள் - தெரேசாள்

பெரிய மனம் கொண்டவள் - தெரேசாள்!

 

சின்ன அன்பும்

சிந்தைத் தூய்மையும்

அன்பனின் அருளும் இரக்கமிகையும்

பாசமெனும் வாசல் கொண்டமையால்

பரமனைப்

பருவ வயதிலே அடைந்தாள்!

 

சிறிய செயல் புன்னகை ஒன்றும்

வாழ்வில் பெரும் மாற்றம் தரும்

அவள் வாழ்ந்தது

வார்த்தையினால் அல்ல;

அன்பின் செயலால் உருமாறினாள்!

 

துன்பத்தில் கூட நம்பிக்கை

தனிமையில் கூட

இறைவன் கை

தூய்மை கொண்ட

அந்த நெஞ்சம்

தெய்வத்தைத் தேடி

அடைந்தது தஞ்சம்!

 

அவள் வழி பெரிதல்ல

பூமியின் பிரச்சினைகளும் பெரிதல்ல

ஆனால், அந்தச் சிறுவழி

கடின வழியுமல்ல

வானம் தொடும்

ஓர் எளிய வழியுமல்ல!

 

மூழ்கவில்லை துன்பக்கடலில்

அவள் இறைவனின் கரத்தை ஏணியாக்கினாள்

என் வழி முழுவதும்

நம்பிக்கை என்றாள்

அன்பு ஒன்றே

என் முதல் பணி என்றாள்!

 

சிறிய செயல்களில் அன்புடைமை

பெரியவரிடத்தில் தாழ்ச்சியுடைமை 

கடவுளின் மீது நம்பிக்கையுடைமை

இயற்கையின் மீது ஆர்வமுடைமை

 

சிறுமலர் மானிடத்தின் வழிகாட்டி

அழிவற்ற அன்பின் ஆலயம் கட்டி

அவள் வழி நமக்குப் புதுவழிகாட்டி

சிறுவழியால்

இறையரசைச் சுட்டிக்காட்டி!  

 

அந்த மலரின் பாதை

பார்க்கச் சிறியது போலும்

ஆனால் அதில் நடப்போருக்கோ

புதிதாய்ப் பிறக்கும் பாதைகள்!

 

தூய வாழ்வு வாழ்ந்தவள் - பிறர்

துன்பம் நீக்கப் பிறந்தவள் - தன்

துயர் என்றும் மறந்தவள் - அன்பில்

தூண் போல் உயர்ந்து நிற்பவள்!

 

சிறுமலரின் சிறுவழி - எந்நாளும்

எங்களை நடத்தும் இறைவழி

அது நமக்கு உணர்த்தும் பெருவழி

அதுதான் அன்பு என்னும் தனிவழி!

 

கிறிஸ்துவை அன்பு செய்த ராணியே!

துன்பத்தை

வரமாகப் பெற்ற சிறுமலரே!

மரியாயின் அருள் பெற்ற ராணியே!

வேதனையை

வரமாகப் பெற்ற சிறுமலரே!

 

இறைநம்பிக்கையில் வாழ்ந்தவளே!

ஆன்மாக்களை அவரில் மீட்டெடுத்தவளே!

தாழ்ச்சி பொறுமையின் சிகரமே!

தரணிக்கு நீ ஓர் இலக்கணமே!

 

குழந்தை உள்ளம் கொண்டவரே!

என்றும் நீங்கா இடம் பெற்றவரே!

சிறுமலரின் சிறுவழி - இன்று

எங்களுக்குப் புதுவழி!

வாழியவே சிறுமலரே!