தமிழ்நாடு ஆயர் பேரவையின் இரங்கல் செய்தி
முன்னாள்
இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் மறைவிற்குத் தமிழ்நாடு ஆயர் பேரவையின் சார்பாக அதன் தலைவரும், சென்னை-மயிலை உயர் மறைமாவட்டப் பேராயருமான மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி
அவர்களின் இரங்கல் செய்தி:
அனைவருக்கும்
பேரிழப்பாய் மாறிப்போன டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த வருத்தங்களை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.
‘இந்தியப் பொருளாதாரத்தின் சிற்பி’ என்று பெருமையுடன் அழைக்கப்படும் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுடைய மறைவு இந்திய மக்களுக்கு மட்டுமல்லாது, குறிப்பிடும்படியாக, தமிழ்நாட்டு மக்கள் எல்லாருக்கும் ஒரு பேரிழப்பாகும். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் முனைவர் பட்டம் பெற்று, பொருளாதாரப் பேராசிரியராய் தன்னுடைய பணியை ஆரம்பித்த மன்மோகன் சிங் அவர்கள், பொருளாதார மேதையாய் சிறந்து விளங்கி, ஒன்றிய அரசு சார்ந்த பதவிகளை வகித்தவராய் பயணித்து, நம் நாட்டின் நிதி அமைச்சராய் (1991-1996) விளங்கி, அதன் பின்பு இந்திய நாட்டின் பிரதமராய் (2004-2014) பணியாற்றியது நம் அனைவருக்கும் பெருமை அளிக்கிறது.
நிதி
நிர்வாகத்திலும் பொருளாதாரச் சீர்திருத்தத்திலும் இந்தியாவைச் சரியான பாதைக்கு அழைத்து வந்த பெருமை இவரையே சாரும். அளப்பரிய விதத்திலே அறிவார்ந்த நபராய் இருந்தாலும், அனைத்துக் காரியங்களிலும் தன்னடக்கத்தோடு நடந்து கொண்டது இவருடைய பெருந்தன்மையை எடுத்துக்காட்டுகின்றது. இந்திய நாட்டின் பிரதமராக இவர் இருந்த காலத்தில் ஏற்படுத்திய பொருளாதாரச் சீர்திருத்தம், பல ஏழை மக்களின்
வாழ்வை முன்னேற்றத்தின் பாதையில் அழைத்துச் சென்றது என்பதை யாரும் மறுக்க முடியாது.
நாட்டினுடைய
பல்வேறு சவால்களை இவர் அமைதியுடனும் அதேசமயத்தில், மனத்துணிவுடனும், ஞானத்துடனும் எதிர்கொண்டதற்காய் இந்திய மக்களின் நினைவில் என்றும் வாழ்வார். பலதரப்பட்ட மக்களின் அதிலும் குறிப்பாக, ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக இவர் கொணர்ந்த பல திட்டங்களில் 100 நாள் வேலைவாய்ப்புத்
திட்டம் கிராமப்புற மக்களுக்கு மிகப்பெரும் உதவியாக இருக்கின்றது. சிறுபான்மை மக்களின் நலனிலும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார் டாக்டர் மன்மோகன் சிங். பொதுநலனை அனைத்திற்கும் மேலாக முதன்மை நலனாய் வைத்து இவர் செயல்படுத்திய திட்டங்கள் எல்லாம் மற்றவர் நலனில் இவர் காட்டிய அக்கறையை எடுத்துரைத்தன.
இவருடைய
வாழ்வும் வழிகாட்டலும் வரும் தலைமுறையினருக்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி உண்மைக்கும் அமைதிக்கும் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கும் அதற்கான செயல்பாட்டிற்கும் அவர்களை அழைத்துச் செல்லும் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை.
இறைவன்
இவர் ஆற்றிய பணிகளுக்குப் பரிசளித்து, இவருக்கு நிலைவாழ்வைத் தந்தருள தமிழ் நாடு ஆயர் பேரவையின் சார்பாக என் இறைவேண்டல்களை உரித்தாக்குகிறேன். இவரது மறைவினால் வாடுகின்ற குடும்ப உறவுகள், நட்பின் உறவுகள் இன்னும் இவர் சார்ந்த கட்சியினுடைய உறுப்பினர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு ஆயர் பேரவையின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவர்
ஏற்படுத்திய மாற்றங்கள் குளத்தில் எறியப்பட்ட கல் போன்று பல அதிர்வலைகளை ஏற்படுத்தி,
இந்தியாவைப் புதிய வளர்ச்சியின் பாதையில் அழைத்துச் செல்லட்டும். அனைவருக்கும் இறைவேண்டுதலுடன் கூடிய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரின் ஆன்மா அமைதியில் இளைப்பாறட்டும்.
மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி, பேராயர், சென்னை-மயிலை உயர் மறைமாவட்டம்