இறையியலாளர்
முதுமுனைவர் தந்தை பெலிக்ஸ் வில்பிரட் அவர்கள் இந்தியத் தலத்திரு அவையில் உலகறிந்த 21 -ஆம் நூற்றாண்டின் சிறந்த இறையியலாளர். இவர் பழகுவதற்கு இனியவர்; மிகுந்த தன்னடக்கம் நிறைந்தவர்; பன்மொழி வித்தகர்; சிறந்த படைப்பாளி; மேற்கத்திய மொழிகளில் புலமை பெற்றவர்.
திருச்சி
புனித பவுல் குருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர், உலகின்
தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் கற்பித்து, இறையியல் துறையில் பல ஆய்வுக் கட்டுரைகளை
வழங்கியவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் கிறிஸ்தியல் துறையின் பேராசிரியராக, துறைத் தலைவராகப் பணியாற்றி, பல முனைவர் பட்ட
ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டியவர். வத்திக்கானின் அகில உலக இறையியல் பணிக்குழுவின் உறுப்பினராக இருந்தவர். ஆசிய ஆயர் பேரவையின் இறையியல் பணிக்குழுவின் நிர்வாகச் செயலராகப் பணியாற்றியவர். ஆசியத் திரு அவையில் உள்ள இறையியலாளர்களுள் மிக முக்கியமான ஒருவராக இருந்த இவர், திரு அவையின் உலகளாவிய எண்ணங்களைப் பிரதிபலிக்கக்கூடியவராகவும்
அதைச் சீர்தூக்கிப் பார்க்கக் கூடியவராகவும் தனது பங்களிப்பை முழுமையாக வழங்கியவர்.
2024-ஆம் ஆண்டு
அக்டோபர் மாதம் நடைபெற்ற உலக ஆயர் மாமன்ற முதல் அமர்வின் முடிவுகளை ஆராயும் இறையியல் வல்லுநர் குழுவில் தமிழ்நாடு திரு அவை சார்பாகப் பங்கெடுத்து, திரு அவைக்குப் பெருமை சேர்த்தவர். உலக ஆயர் மாமன்றத்தால் வெளியிடப்பட்டுள்ள தயாரிப்பு ஏட்டின் (Preparatory Document) வரைவைத்
தயாரிக்கும் நிபுணர் குழுவிலும் இவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
இத்தகைய
சிறப்புப் பெற்ற பேராசிரியர் முதுமுனைவர் தந்தை பெலிக்ஸ் வில்பிரட் அவர்கள் தற்போது சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் ஆசிய பன்முகக் கலாச்சார மையத்தை (Asian Centre for Cross Cultural Studies) நிறுவி, அதன் இயக்குநராகவும், ஆசிய கிறித்தவத்தின் உலகளாவிய இதழின் (International Journal of Asian Christianity) முதன்மை ஆசிரியராகவும் இருந்து, இறையியலாக்கப் பணிகளை முன்னெடுத்து வருகிறார். இவரின் திடீர் மறைவு, தமிழ்நாடு திரு அவைக்கு மட்டுமல்ல, இந்திய, ஆசிய, உலகத் திரு அவைக்கே பேரிழப்பு. இவரின் மறைவில் துயறுரும் குடும்பத்தினர், குழித்துறை-கோட்டாறு மறைமாவட்டத்தினர் அனைவருக்கும் தமிழ்நாடு ஆயர் பேரவை ஆழ்ந்த இரங்கலையும் இறைவேண்டலையும் தெரிவித்துக்கொள்கிறது. அன்னாரின் ஆன்மா இறைவனில் என்றும் அமைதி பெறட்டும்.
+ ஜார்ஜ் அந்தோணிசாமி
பேராயர்,
சென்னை-மயிலை உயர் மறைமாவட்டம்
தலைவர்,
தமிழ்நாடு ஆயர் பேரவை (TNBC)
துணைத்
தலைவர்- இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவை (CCBI)