news
இந்திய செய்திகள்
மிஷன் 2033
செப்டம்பர் 11-ஆம் தேதி புனித ஜான் சுகாதார அறிவியல் நிறுவனத்தில்  ‘Journeying towards a Synodal Church: Mission 2033’ என்ற தலைப்பில் நடந்த கூட்டத்தின்போது CCBI-இன் தலைவர் கர்தினால் பிலிப் நேரி ஃபெரோ அவர்கள் மிஷன் 2033 என்னும் தேசிய மேய்ப்புப்பணித் திட்டத்தை வெளியிட்டார். இந்தியாவிலுள்ள கத்தோலிக்கத் திரு அவையின் 5,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய, ஒரு வருட உழைப்பின் பலனாக இத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. ‘இத்திட்டம் ஒரு கூட்டுத் திட்டம். இது தூய ஆவியாருடன் எழும் உரையாடல்களின் பலன்’ என்று கர்தினால் ஃபெரோ கூறினார். இதனை நனவாக்க ஒவ்வொருவரும் பங்களிக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
news
இந்திய செய்திகள்
CCBI வழிபாட்டு ஆணையத்தின் புதிய செயலர்
பெங்களூரில் செப்டம்பர் 10-11 ஆகிய தேதிகளில் நடைபெற்ற CCBI-யின் செயற்குழுக் கூட்டத்தில், வழிபாட்டு முறைக்கான CCBI ஆணையத்தின் புதிய செயலாளராக அருள்பணி. ருடால்ப் ராஜ் பின்டோ, O.C.D.  நியமிக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் 1, 1976 அன்று மங்களூரின் குர்பூரில் பிறந்த இவர் தத்துவ ஆய்வுகளை மைசூரிலுள்ள புஷ்பாஷ்ரமாவிலும், மங்களூரின் ஜேப்புவில் உள்ள புனித ஜோசப் இன்டர் டையோசீசன் குருமடத்தில் இறையியலும் பயின்றவர். 2003-இல் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்ட இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆலோசனை உளவியலில் எம்.எஸ்.சி. பட்டமும்,  உரோம் புனித அன்செல்மோவின் போண்டிஃபிகல் அதீனியத்தில் இருந்து வழிபாட்டில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

இணையவழி விளையாட்டுகள் இயற்கைக்கு மாறாக மாணவர்களை மாற்றுகின்றன. நிழல் உலகில் அவர்கள் வாழ்வது போன்ற சூழலை உருவாக்குகிறது. உடல், மனரீதியாக மாணவர்களின் வளர்ச்சியை இவை வெகுவாகப் பாதிக்கின்றன. சீனா, ஜப்பானில் இளைஞர்கள், இளஞ்சிறார்களுக்கு ஆன்லைன் விளையாட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு விளையாட்டு மிகவும் அவசியம்தான். அவர்கள் வெளியில் சென்று விளையாடுவதை ஊக்குவித்து, சமூக ஊடகப் பயன்பாட்டில் இருந்து அவர்களை விலகி இருக்கச் செய்ய வேண்டும். இதில் பெற்றோர், ஆசிரியர்களின் கடமை முக்கியமானது. மாணவர்களின் நடத்தைகளைக் கண்காணித்து, அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். மாணவர்களிடம் முடிந்தவரை கைபேசியைக் கொடுக்காமல் இருப்பது நல்லது. புதிய தொழில்நுட்பங்களை மாணவர்கள், இளைஞர்கள் ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த வேண்டும்.”

- திரு. நா. முருகானந்தம், தலைமைச் செயலர்

நாட்டில் கல்வி வளர்ச்சி அடைந்தால்தான் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். சீனாவில் கல்விக்கு அதிக நிதி ஒதுக்குவதால் அங்கு கல்வி நல்ல வளர்ச்சி அடைந்து, பொருளாதாரம் மேம்பட்டுள்ளது. இந்தியாவிலும் கல்விக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். அப்போதுதான் கல்வி வளர்ச்சி அடையும். கல்வி வளர்ச்சி அடைந்தால்தான் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். இந்தியாவில் குறைந்தபட்சம் பெண்களுக்குப் பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி வழங்க வேண்டும்.”

- திரு. விசுவநாதன், வி..டி. பல்கலைக்கழக வேந்தர்

மாணவர்கள் வாழ்க்கையில் எதிர்வரும் சவால்களை விடாமுயற்சியுடன் எதிர்கொள்ளும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல், தொடர்ந்து விடாமுயற்சியுடன் கடும் உழைப்பின் மூலம் வெற்றிபெற வேண்டும். முழு மன உறுதி மற்றும் ஈடுபாட்டுடன், தேர்ந்தெடுத்த செயலைத் தொடர்ந்து முயன்றால் கண்டிப்பாக வெற்றி பெறலாம்.”

- திரு. பி. வீரமுத்துவேல், சந்திரயான்-3, திட்ட இயக்குநர்

news
இந்திய செய்திகள்
நிவாரணப் பணியில் மறைமாவட்டம்!

தெற்கு ஆந்திர மாநிலத்தில் ஆகஸ்டு 28 முதல் 31 வரை பெய்த கன மழையால் சுமார் 6.44 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடலோர மாநிலத்தின் நந்தமுரி தாரக ராமராவ், குண்டூர், கிருஷ்ணா, ஏலூரு, பல்நாடு, பாபட்லா மற்றும் பிரகாசம் மாவட்டங்களில் உள்ள 193 நிவாரண முகாம்களில் சுமார் 42,707 பேர் தங்கியுள்ளனர். 33 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மீட்புப் பணிகளில் கத்தோலிக்க மறைமாவட்டமும் இணைந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளாகத் தன்னார்வலர்களாகச் சேவையாற்றி வரும் வலுவான மகளிர் குழுக்களைக் கொண்ட மறைமாவட்டத்தின் ஆரம்ப மதிப்பீட்டின்படி, 2,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரணப் பொருள்கள் அளிக்கப்பட்டன.

news
இந்திய செய்திகள்
நிவாரணப் பணியில் மறைமாவட்டம்!

தெற்கு ஆந்திர மாநிலத்தில் ஆகஸ்டு 28 முதல் 31 வரை பெய்த கன மழையால் சுமார் 6.44 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடலோர மாநிலத்தின் நந்தமுரி தாரக ராமராவ், குண்டூர், கிருஷ்ணா, ஏலூரு, பல்நாடு, பாபட்லா மற்றும் பிரகாசம் மாவட்டங்களில் உள்ள 193 நிவாரண முகாம்களில் சுமார் 42,707 பேர் தங்கியுள்ளனர். 33 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மீட்புப் பணிகளில் கத்தோலிக்க மறைமாவட்டமும் இணைந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளாகத் தன்னார்வலர்களாகச் சேவையாற்றி வரும் வலுவான மகளிர் குழுக்களைக் கொண்ட மறைமாவட்டத்தின் ஆரம்ப மதிப்பீட்டின்படி, 2,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரணப் பொருள்கள் அளிக்கப்பட்டன.

news
இந்திய செய்திகள்
பொய் பரப்புரை செய்கின்ற ஆளுநர்!

தமிழ்நாடு ஆயர் பேரவையின் வன்மையான கண்டனம்!

கடந்த 07-09-2024 சனிக்கிழமை அன்று சென்னை-மயிலாப்பூரில் அமைந்திருக்கின்ற P.S. கல்விக் குழுமத்தின் பொன்விழாக் கொண்டாட்டத்தின்போது உரையாற்றிய மாண்புமிகு ஆளுநர் R.n. ரவி அவர்கள், ‘புதிய பாரதம் மிக எழுச்சியுறுவதாய் உள்ளதுஎன்றும், ‘இதற்குச் சமஸ்கிருதக் கல்வி முக்கியப் பங்காற்றுகிறதுஎன்றும் வழக்கம்போல் தன்னுடைய பொய் பிரச்சாரத்தைப் பதிவு செய்திருக்கிறார். சிறுபான்மையினருக்கு எதிராகச் செயல்பட்டு வரும் ஆளுநர் ரவி, இத்தகைய உண்மைக்குப் புறம்பான கருத்தைத் தெரிவித்து இருக்கிறார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் அவர்கள் சிறுபான்மைச் சமூகத்தின் மீதும், சமயச் சார்பற்ற இந்திய மக்கள் மீதும் தனக்கு இருக்கும் வெறுப்பையும் காழ்ப்புணர்ச்சியையும் வெளிப்படுத்தும் விதமாகப் பேசியிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. ‘ஆங்கிலேய அரசாங்கம் கிறிஸ்தவ மிஷனரிகளுடன் இணைந்து, பாரதத்தின் அடையாளத்தை அழிக்க முற்பட்டதுஎன்றும், ‘பாரதத்தின் உணர்வைக் குறைப்பதற்கு இந்தியக் கல்வி முறையை அழித்துள்ளனர்என்றும் கூறியிருக்கிறார். அத்தோடுநம்முடைய செல்வங்களையும், கலைப் பொக்கிஷங்களையும் திருடிச் சென்று விட்டனர்எனவும், ‘நமது நாட்டில் உள்ள மக்களுக்குத் தவறான ஓர் அடையாளத்தை உருவாக்க, வரலாற்றைத் திரித்து தவறான வரலாற்றைப் புகுத்தினர்; இது நன்கு திட்டமிடப்பட்ட ஒரு சதிச்செயல்என்றும் பொய் பிரச்சாரம் பரப்பியிருக்கிறார்.

மாண்புமிகு ஆளுநரின் இக்குற்றச்சாட்டுகள் நமக்குப் புதிதல்ல. மேற்சொன்ன அனைத்திலும் பல விஷமக் கருத்துகள் பொதிந்துள்ளன. இக்கூற்றில் ஒரு சூட்சுமம் ஒளிந்துள்ளது. ஆங்கிலேயர்களும் கிறிஸ்தவர்களும் ஓரணியாகவும், மற்றவர்கள் எதிரணியாகவும் இருந்ததாகக் கூறுவது முற்றிலும் வரலாற்றுத் திரிபாகும்.

ஆளுநர் என்பவர் மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதற்கும் மாநில அரசுடன் இணைந்து செயல்பட கடமைப்பட்டவர். ஆனால், ஆளுநர் ரவி பொய் பரப்புரையை மேற்கொண்டு மீண்டும் மீண்டுமாகச் சிறுபான்மைச் சமூகத்தையும், அதிலும் குறிப்பாக, கிறிஸ்தவச் சமூகத்தையும் இழிவுபடுத்தி வருவது வெட்கத்திற்குரியது.

அனைத்து மதங்களையும், மரபுகளையும் கிறிஸ்தவர்கள் பெரிதும் மதிக்கின்றனர். கிறிஸ்தவர்கள் மக்களையும் மண்ணையும், அதன் வாழ்வியலையும் கலாச்சாரத்தையும் பெரிதும் பற்றிக்கொண்டவர்கள். மாநிலத்தின் ஒற்றுமையோடும் அமைதியோடும் வளர்ச்சியை நோக்கி நடைபோடும் மக்களின் நடுவில், வெறுப்பு அரசியல் ஒன்றைத் திட்டமிட்டுச் செயல்படுத்தி வருகிறார். மக்களிடையே பிரிவினையை விதைத்து, மத மோதல்களையும், சமூக மோதல்களையும் தூண்டி விடுவதற்காகச் சிறுபான்மையினரின் உரிமைகளையும் மாண்பையும் கொச்சைப்படுத்தி பேசி வருகிறார்.

இந்தியச் சமூகத்திற்கு மிஷனரிமார்கள் ஆற்றிய கல்வித் தொண்டு, சமூகத் தொண்டு, மருத்துவத் தொண்டு ஆகியவை பற்றி இந்திய மக்கள் நன்கு அறிவர். இந்தியா இன்று உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்பதற்குச் சிறுபான்மைச் சமூகமும், மிஷனரிகளும் ஆற்றிய அளப்பரியக் காரியங்களை யாரும் மறுக்கவும் மாட்டார்கள், மறக்கவும் மாட்டார்கள். இன்றளவும் அப்பணிகள் தொடர்கின்றன என்பதில் மாற்றுக் கருத்தில்லை. உண்மையை மூடி மறைத்து, பொய் பிரச்சாரங்களைத் தொடர்ந்து பேசி, அமைதியற்ற ஒரு நிலையை ஏற்படுத்தி வரும் ஆளுநரைக் கிறிஸ்தவர்களின் சார்பாகவும், குறிப்பாகத் தமிழ்நாட்டிலுள்ள சிறுபான்மைச் சமூக மக்களின் சார்பாகவும், நட்புறவோடும், ஒற்றுமையோடும் வாழும் அனைவரின் சார்பாகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம். சாதி, மதப் பிளவுகளைக் கடந்து மக்கள் ஒன்றுபட மாண்புமிகு ஆளுநர் வழிகாட்ட வேண்டும். தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருப்பதைச் சீர்குலைப்பதிலிருந்து விலகி, தான் வகிக்கும் பதவிக்குரிய மேன்மையான, அரசியல் சாசன பணிகளை மட்டுமே ஆற்றிட கேட்டுக்கொள்கிறோம்.

ஆளுநரின் உண்மைக்குப் புறம்பான இப்பேச்சை தமிழ்நாடு ஆயர் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் இனிமேலும் நடக்காத வண்ணம் அவர் கண்ணியமாகப் பேசவும், அனைவரையும் சமமாக நடத்தவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி

சென்னை-மயிலை உயர்மறைமாவட்டப் பேராயர்

தலைவர், தமிழ்நாடு ஆயர் பேரவை