“பிரதமர்
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மிகவும் அபாயகரமானது. அதன் முகவராகத் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. மக்களின் வாக்குரிமைக்கும் நாட்டின் சனநாயகத்திற்கும் அச்சுறுத்தலாக பா.ச.க.
உருவெடுத்துள்ளது. அக்கட்சி ஆட்சியிலிருக்கும் வரை மக்களின் உரிமைகளுக்கு எவ்விதப் பாதுகாப்பும் இல்லை.”
- திரு. மல்லிகார்ஜூன
கார்கே,
காங்கிரஸ்
தேசியத்
தலைவர்
“மக்கள்
பிரதிநிதிகள் எல்லாருமே அவர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டிய கடமை கொண்டவர்கள். எனவே, நாடாளுமன்றக் கூட்டத்தொடர் என்பது ஆக்கப்பூர்வமான முறையில் மக்கள் பிரச்சினைகளை அவர்கள் நலன் சார்ந்து விவாதித்துத் தீர்வு காணும் கூட்டத்தொடராக அமைய வேண்டும் என்பதுதான் எல்லாருடைய எதிர்பார்ப்பு. இதை நிறைவு செய்யவேண்டிய பொறுப்பும் கடமையும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இரண்டு தரப்புகளுக்குமே
உண்டு. ஒவ்வொரு விநாடியும் மக்கள் வரிப்பணம்! அதை நாம் விரயம் செய்தால் அவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக நேரிடும் என்ற பொறுப்பும் கடமையும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கவேண்டும்.”
- முனைவர் கோ. விசுவநாதன்
வேந்தர், வி.ஐ.டி.
பல்கலைக்கழகம்
“தமிழ்நாடு
முழுவதும் உள்ள 414 வட்டாரங்களில் 500 வெற்றிப் பள்ளிகள் உருவாக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒரு சிறந்த அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டு, அது வெற்றிப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட உள்ளது. மாதிரிப் பள்ளிகளில் உள்ளதைப் போன்ற நவீன வசதிகள் அங்கு ஏற்படுத்தப்படும். உண்டு - உறைவிட வசதிகள் மட்டும் இடம்பெறாது. அந்தப் பள்ளியில் வாரந்தோறும் உயர்கல்வி வழிகாட்டி வகுப்புகள் நடைபெறும். நீட், ஜே.இ.இ.
போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி வழங்கப்படும். இந்தப் பயிற்சி வகுப்புகளில் அந்த வட்டாரத்தில் உள்ள அனைத்து +2 மாணவர்களும் தங்கள் சுய விருப்பத்தின்படி இணைந்து பயன்பெறலாம். இந்த வெற்றிப் பள்ளிகள் மூலமாக, சுமார் 50,000 மாணவர்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.”
- திரு. பி. சந்திரமோகன்,
பள்ளிக் கல்வித்துறைச் செயலர்