“நாம்
மருத்துவராகலாம், பொறியாளராகலாம், வழக்கறிஞராகலாம், விஞ்ஞானியாகலாம், ஏன் நாட்டின் உயர்ந்த பீடத்தில் இருக்கலாம், ஆனால், முதலில் மனிதர்களாக மாறவேண்டும். மனிதர்களாக நம்மை மாற்றுவதுதான் கல்வியின் நோக்கம்; கற்றலின் நோக்கம். எல்லாத் தாய்மார்களும் பத்து மாதம் சுமந்து ஒரு உயிரை வெளி உலகத்திற்கு அனுப்பும்போது, அந்த உயிரினத்தை எது மனிதனாக மாற்றிக்காட்டுகிறதோ, அதற்குப் பெயர்தான் கல்வி; அதற்குப் பெயர்தான் கற்றல். அந்த நிலையை நோக்கி மானுடம் பயணிக்கவேண்டும்.”
- குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல
அடிகளார்
“எந்தத்
தேசத்தின் வளர்ச்சியையும் மக்களால் மட்டுமே சாத்தியப்படுத்த முடியும். அதிலும் மக்களை ஒன்றுபடுத்தாமல் வளர்ச்சியைச் சாத்தியப்படுத்த முடியாது. இதற்கு ஒற்றுமைதான் அவசியம் என்றால், அதற்கான முன்நிபந்தனை சமூகநீதியாக மட்டுமே இருக்கமுடியும். நீதியற்ற சமூகத்தில் எவ்வாறு மனப்பூர்வமாக மக்கள் ஒருங்கிணைவார்கள்? மறுக்கப்பட்டவர்களுக்கு உரிமை இல்லாமல் ஒற்றுமையும் சாத்தியம் இல்லை; வளர்ச்சியும் சாத்தியமில்லை.”
- திரு. சி. மகேந்திரன்,
இந்திய
கம்யூனிஸ்ட்
கட்சி
“சுமார்
2000 ஆண்டுகளுக்கு முன்பே தற்போதைய தலைமுறையினருக்கும் ஏற்ற வகையில், அறிவுரைகளை திருவள்ளுவரால் வழங்க முடிந்திருக்கிறது என்றால், அது மிகவும் ஆச்சரியத்திற்குரியதாகும். திருக்குறளில் கடவுள் குறித்தோ, தலைவர்கள் குறித்தோ, அரசர்கள் குறித்தோ, எந்தவிதக் குறிப்புகளும் இடம்பெறவில்லை. அதனால்தான் அதை ‘புதுமறை’ என்கிறோம். 5400 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்று கீழடி ஆராய்ச்சிகள் கூறினாலும்கூட, இன்றைக்கும் இளமை ததும்பும் மொழியாகத் தமிழ் திகழ்கிறது. எனவே, மாணவர்கள் தமிழ் மொழியை நன்கு கற்றுக்கொள்ளவேண்டும்.”
- திரு. ஒளவை ந.
அருள்,
தமிழ்
வளர்ச்சித்துறை
இயக்குநர்
“தற்போதைய
தலைமுறையினரிடம் ஆழ்ந்த வாசிப்புப் பழக்கம் இல்லை. அவ்வாறு இல்லாமல் நம்முடைய வேர்களைத் தேடிப்போகவேண்டும். திராவிட இயக்கத்திற்கும் தமிழ் இயக்கத்திற்கும் நட்பு முரண்பாடு உண்டு; பகை இல்லை. ஆனால், அதற்கு எதிர்மறையான கருத்துகள் தற்போது பரப்பப்பட்டு வருகின்றன. தமிழ் மற்றும் தமிழர்களின் உரிமைகளைக் காக்க இரு இயக்கங்களும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கவேண்டும்.”
- திரு. ஆளூர் ஷாநவாஸ்,
சட்டப்பேரவை
உறுப்பினர்