news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

காமராசருக்குப் படிக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றாலும், தமிழ்நாடு மாணவர்கள் அனைவருக்கும் இலவசக் கல்வி கிடைக்கவேண்டும் என்பதற்காக 12,000 பள்ளிக்கூடங்களைத் திறந்தார். காமராசர் அமைத்த அடித்தளத்தால்தான் தற்போது தமிழ்நாடு கல்வியில் முன்னேறிய மாநிலமாகத் திகழ்கிறது.  பட்டியலின மக்கள் கோயிலுக்குச் சென்று வழிபடவேண்டும் என்பதற்காகப் பட்டியலினத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்பவரை இந்து சமய அறநிலையத்துறைக்கு அமைச்சராக்கினார். அரசியலில் நேர்மையாக இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் காமராசர்.”

- உயர்திரு. முனைவர் கோ. விசுவநாதன், வி..டி. வேந்தர்

மாணவர்கள் நலம் சார்ந்த பல்வேறு கல்வித் திட்டங்களை அமல்படுத்துவது அரசின் கடமை. இந்திய அளவில் நடத்தப்படும் பல போட்டித் தேர்வுகளில் நமது மாணவர்கள் சாதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். கல்வித் தரம் உயர்ந்தால்தான் அது சாத்தியமாகும். அறிவார்ந்தவர்கள் நம் தமிழ்நாட்டு இளைஞர்கள். ஆனால், அவர்களை நல்ல வகையில் வழிநடத்தவேண்டும். மாணவர்களின் திறமைகளையும் ஆளுமையையும் வளர்ப்பதுதான் கல்வித்திட்டத்தின் முதன்மையான நோக்கமாக இருக்கவேண்டும். உண்மையான தீர்வுக்கு நாம் கல்வியை எவ்வாறு பார்க்கிறோம், அதிலிருந்து நாம் என்ன சாதிக்க விரும்புகிறோம் என்பதில் சமூக விழிப்புணர்வு தேவை.”

- உயர்திரு. ஆர். நடராஜ், மேனாள் காவல்துறை தலைவர்

கல்வி நிலையங்களை அமைக்க அரசியல் கட்சிகள் முன்வந்தால் நாம் வரவேற்க வேண்டும். வேதங்கள், புராணங்கள், சாஸ்திரங்களைப் போதிக்க தேர்தல் ஆணையம் உள்பட யாரும் ஆட்சேபம் தெரிவிக்க முடியாது. அதேநேரம், எந்த ஓர் அரசியல் கட்சியும் தீண்டாமையை ஊக்குவித்தால், அது கண்டிப்பாகக் குற்றமே! மஜ்லிஸ் கட்சியின் விதிமுறைகளின்படி சிறுபான்மையினர் உள்பட சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளோருக்காகப் பணியாற்றுவதே நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையினருக்குச் சில குறிப்பிட்ட உரிமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. ‘வகுப்புவாதத்தைத் தூண்ட மாட்டோம்என்ற உறுதிமொழியை ஒரு கட்சியோ அல்லது அதன் வேட்பாளரோ மீறும் நிகழ்வுகள் நடக்கின்றன என்பதை மறுக்க முடியாது. ஆகவே, வகுப்புவாதம், பிராந்தியவாதம் போலவே சாதி ரீதியிலான கருத்துகளை நம்பி செயல்படும் அரசியல் கட்சிகளும் நாட்டுக்குச் சமமான அளவில் ஆபத்தானவை.”

- உச்ச நீதிமன்றம், புதுடெல்லி

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

இந்தி ஆதிக்கத்திற்கு எதிராகத் தமிழ்நாட்டு மக்கள் நடத்திவரும் போராட்டம் உணர்வுமயமானது மட்டுமல்ல; அறிவுப்பூர்வமானது, தர்க்கப்பூர்வமானது. இந்தியாவின் பன்மைக் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்கானது, வெறுப்பின்பாற்பட்டது அல்ல; இந்தித் திணிப்பால் ஏராளமான இந்திய மொழிகள் அழிந்த வரலாற்றை அறியாமலும், இந்தியாவை இந்தி நாடாக்கும் செயல்திட்டத்தைப் புரிந்துகொள்ளாமலும், இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்ற பசப்பு வார்த்தைகளைக் கிளிப்பிள்ளைகளைப்போல ஒப்பித்துக் கொண்டிருக்கும் இங்குள்ள அப்பாவிகள் சிலர் இனியாவது திருந்தவேண்டும். மராட்டியத்தின் எழுச்சி அவர்களின் அறிவுக் கண்களைத் திறக்கும்.”

- மாண்புமிகு திரு. மு.. ஸ்டாலின். தமிழ்நாடு முதலமைச்சர்

இன்று நான் ஏற்றுள்ள மிகப்பெரும் பொறுப்புக்கு என் பள்ளியும் ஆசிரியர்களுமே காரணம். பள்ளியில் கற்ற கல்வியும் ஒழுக்கமும் வாழ்வுக்கு வழிகாட்டியாக உள்ளன. பொதுமேடைகளில் பேசும் துணிச்சல், பள்ளியில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி மற்றும் கலைநிகழ்ச்சிகள் மூலம்தான் எனக்குக் கிடைத்தது. அந்த வாய்ப்புகள் என் நம்பிக்கையை அதிகரித்தன. நான் தாய்மொழியில் கல்வி கற்றேன், தாய்மொழிக் கல்வி, கருத்தியல் புரிதலை அதிகரிப்பதோடு வாழ்வியலை வலுப்படுத்தும்.”

- மாண்புமிகு திரு. பி.ஆர். கவாய், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

பள்ளி மாணவர்களிடம் சாதிய மற்றும் சமூக வேறுபாடு உணர்வுகள் அடிப்படையில் வன்முறைகள் உருவானதைத் தவிர்ப்பதும், நல்லிணக்கம் மற்றும் நற்பண்புகளை வளர்ப்பதும் மிகவும் இன்றியமையாததுவகுப்பறையில் மாணவர்களை 15 நாள்களுக்கு ஒருமுறை வரிசைமாற்றி அமர வைக்க வேண்டும். மாணவர்களின் வருகைப் பதிவேட்டில் அவர்களின் சாதி தொடர்பான விவரங்கள் இடம்பெறக்கூடாது. மாணவர்களின் சாதியைக் குறிப்பிட்டு ஆசிரியர்கள் அழைப்பதோ, கருத்துத் தெரிவிக்கவோ கூடாது. மேலும், மாணவர்களின் உதவித்தொகை குறித்த விவரங்களை வகுப்பறைகளில் அறிவிக்கக்கூடாது. அதேபோல, மாணவர்கள் தங்கள் கைகளில் வேறுபாடுகளை அடையாளப்படுத்தக்கூடிய வண்ணக்கயிறுகள், மோதிரங்கள் அணிவதற்குத் தடை விதிப்பதுடன், போதைப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட மாணவரை மறுவாழ்வு மையத்தில் சேர்க்க அவர்களின் பெற்றோர்களுக்குப் பரிந்துரைக்க வேண்டும். அதனுடன் மாணவர்களுக்குப் பள்ளி அளவில் வழிகாட்டி ஆசிரியரை நியமிக்க வேண்டும்.”

- உயர்திரு . கண்ணப்பன், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர்

news
இந்திய செய்திகள்
இளைஞர்கள் எதிர்காலத் திரு அவையின் தூண்கள்!

திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு ஆயர் பேரவையின் இளைஞர் பணிக்குழுத் தலைவர் மேதகு ஆயர் நசரேன் சூசை, மாணாக்கர்கள் அனைவரும் இயக்கமாகச் சேர்ந்து தங்களைச் சுற்றியுள்ள சமூக அவலங்களை உற்றுப்பார்த்து, ‘அது ஏன் நிகழ்கிறது?’ என்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டும் என்றும், அதற்குத் தங்களால் இயன்ற செயல்பாடுகளை இளம் கத்தோலிக்க இளைஞர்கள் இயக்கம் முன்னெடுக்க வேண்டும் என்றும் அழைப்புவிடுத்தார்.

news
இந்திய செய்திகள்
கொல்கத்தா உயர் மறைமாவட்டத்தின் புதிய வாரிசு பேராயர் எலியாஸ் பிராங்க்

1962, ஆகஸ்டு 15 கர்நாடகாவின் பந்த்வாலில் பிறந்த எலியாஸ் பிராங்க் மங்களூரு மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர். 1993, ஏப்ரல் 23 அன்று கொல்கத்தா மறைமாவட்டத்திற்குக் குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டார். இவரைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2023, ஜூலை 3 அன்று அசன்சோலின் ஆயராக நியமித்தார். 2023, ஆகஸ்டு 24 அன்று ஆயராகத் திருநிலைப்படுத்த அவர் தற்போதைய கொல்கத்தாவின் பேராயர் தாமஸ் டிசோசாவுக்கு உதவியாகவும், அவருடைய பணிக்காலத்திற்குப் பின் பேராயராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

மருத்துவச் சிகிச்சை என்பது பொதுமக்களுக்குச் சேவையாற்றுவதற்கான வழி மட்டுமே அல்ல; அது நாட்டுக்கே சேவையாற்றுவதற்கான வழியாகும். மருத்துவர்கள் நோயை மட்டும் குணப்படுத்துவதில்லை; அவர்கள் ஆரோக்கியமான சமூகத்திற்கு அடித்தளம் இடுகின்றனர். அதேவேளையில், மருத்துவர்கள்-நோயாளிகளுக்கு இடையே சீரான தகவல்தொடர்பு இருப்பதற்கான பயிற்சி மருத்துவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். தங்களின் தொழில்முறை வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே நோயாளிகளின் வலியை உணர்ந்து குணப்படுத்துவதன் முக்கியத்துவம் மருத்துவர்களுக்கு எடுத்துரைக்கப்பட வேண்டும்.”

- மாண்புமிகு, திரௌபதி முர்மு, குடியரசுத் தலைவர்

ஒரு குற்றச் சம்பவம் நிகழ்ந்தால் அது குறித்து விசாரிக்க உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். விசாரணையின்போது உடல் ரீதியாக யாரையும் துன்புறுத்தக்கூடாது. முறையாக அழைப்பாணை கொடுக்காமல் யாரையும் அழைத்து விசாரிக்கக்கூடாது. இரவு 7 மணிக்கு மேல் விசாரணைக்குக் காவல் நிலையத்துக்கு அழைத்து வரக்கூடாது. விசாரணைக்காக யாரையாவது காவல் நிலையத்தில் வைத்திருந்தால், அப்போது காவல் நிலையத்தில் கண்டிப்பாக ஆய்வாளர் இருக்கவேண்டும். பெண்கள், குழந்தைகளிடம் பகல் நேரத்தில் மட்டுமே விசாரணை செய்ய வேண்டும். குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் நபர்களை இரவு 7 மணிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவேண்டும்.”

- திரு. சங்கர் ஜிவால் டி.ஜி.பி, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்

சிந்து சமவெளி நாகரிகம், எகிப்திய நாகரிகம், கிரேக்க நாகரிகம், உரோம நாகரிகம், சீன நாகரிகம், சுமேரிய நாகரிகம் ஆகியவை நகரங்களில் பழமையானவை. வரலாறுகள் அறியப்பட்டவரை சிந்து சமவெளி எகிப்திய, மயன் நாகரிகங்களுக்கு மத்தியில் கிடைத்திருக்கிற சுமேரிய நாகரிகம்தான் நீண்டது, மூத்தது என்று அறியப்பட்டது. இத்தகைய நாகரிகத்தின் தொடர் நீட்சியாக இதன் பண்பாடு, பழக்க வழக்கம், வழிபாட்டு முறைகளில் தமிழர் அடையாளங்களைக் கண்டறிந்ததாக மொழிவழியாகவும், நாகரிகத்தின் வழியாகவும் நிரூபிக்கப்பட்டது. சிந்து சமவெளிப் பகுதிகளிலும் தமிழ்நாட்டில் கீழடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கிடைத்த பானை ஓடுகளில் உள்ள ஒற்றுமைகளை வைத்துப் பார்க்கும்போது சிந்து சமவெளி நாகரிகம் என்பது திராவிட நாகரிகம்தான் என்பது உறுதியாகிறது.”

- முனைவர் திரு. வைகைச் செல்வன், முன்னாள் அமைச்சர்

news
இந்திய செய்திகள்
ஒடிசாவில் கிறித்தவ மக்கள்மீது தாக்குதல்!

கிழக்கு இந்திய மாநிலமான ஒடிசாவில், மல்கின்கிரி மாவட்டம் கோடமடேரு கிராமத்தில் வாழும் கிறித்தவ  மக்களை 2000 பேர் கொண்ட ஒரு கும்பல் தாக்கியதில், ஏறக்குறைய 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் எனவும், 20-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கின்றனர் என்றும் செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், ஒடிசாவில் பல்வேறு பகுதிகளில் இலக்கு வைக்கப்பட்டுத் தாக்குதல் நடத்தி வருவதாகவும் கிறித்தவச் சமூகங்களின் பாதுகாப்பு என்பது மிகவும் ஆபத்தில் உள்ளதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கப்படுகின்றன.