news
இந்திய செய்திகள்
திருத்தந்தை பிரான்சிஸ் அழியாத் தடங்களை விட்டுச் சென்றுள்ளார்!

கிறிஸ்துவில் அன்பார்ந்த சகோதரர்களே, சகோதரிகளே!

நமது அன்பிற்குரிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இறைவனடி சேர்ந்ததை எண்ணி மீளாத் துயரிலும் வருத்தத்திலும் இருக்கின்றோம். அவரது மறைவு நமக்கு மாபெரும் இழப்பாகும்.

உண்மையான மக்களின் மேய்ப்பராகத் திருத்தந்தை பிரான்சிஸ் தனது வாழ்க்கையை நற்செய்தி அறிவிப்பதிலும், ஏழைகள் மற்றும் புறக்கணிக்கப்பட்டவர்களின் நலனுக்காகப் போராடுவதிலும், இரக்கம், நீதி மற்றும் இயற்கையின்மீது அக்கறை கொண்டு வாழ்வதிலும் தன்னையே இந்த உலகிற்கு அர்ப்பணித்தார். கத்தோலிக்கர்களின் ஆன்மிகத் தலைவராக அவர் திரு அவையை ஞானத்துடனும் தாழ்மையுடனும் திறந்த இதயத்துடனும் வழிநடத்தினார். மக்களை இறைவனுக்கு அருகில் அழைத்துச் செல்லவும், அன்பும் ஒற்றுமையும் நிலவவும் எப்போதும் பாடுபட்டார்.

பேதுருவின் வழித்தோன்றலாக 2013 முதல் 2025 வரை திரு அவையை வழிநடத்தியவர் என்ற நிலையில், அவரது படிப்பினைகள் என்றென்றும் மதிப்புடன் நினைவுகூரப்படும். ஒன்றிப்பின் சமூகமாகத் திரு அவையை மாற்றவேண்டும் எனும் அவரது பார்வை, அதாவது செவிமடுத்தல், தேர்ந்து தெளிதல், ஒருங்கிணைந்து பயணித்தல், ஒன்றிப்பை ஏற்படுத்துதல் எனும் அவரது பார்வை திரு அவையில் அனைத்து நிலைகளிலும் அழியாத் தடங்களை விட்டுச் சென்றுள்ளன. ஏழைகள் மற்றும் சமுதாயத்தின் விளிம்புகளில் வாழும் மக்கள் குறிப்பாக, புலம்பெயர்ந்தோர்மீது அவர் கொண்டிருந்த ஆழமான இரக்கம் என்றும் நினைவில் நிலைத்திருக்கும். மேலும், நாடுகளுக்கு இடையிலான உரையாடல்களை ஊக்குவித்த அவரது பங்களிப்பும் மிகச் சிறப்பானதாகும்.

சமயங்களுக்கு இடையிலான உரையாடலில் அவர் காட்டிய உணர்வுப்பூர்வமான அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கதும், மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும் உள்ளது. ‘இறைவா உமக்கே புகழ் (‘Laudato Si’) என்ற திருத்தூதுஊக்க உரை மூலம், இயற்கையைப் பாதுகாக்க அவர் விடுத்த அழைப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

நம் நாட்டை மிகவும் அன்பு செய்த திருத்தந்தை இந்தியாவிற்கு வருவதற்கு மிகவும் விரும்பினார். ஏழைகள் மற்றும் புறக்கணிக்கப்பட்டவர்களைக் கவனிக்க வேண்டும் என்பதையும், ஒன்றிப்பின் திரு அவையைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதையும் தொடர்ந்து நினைவூட்டினார். 2025, சனவரியில் புவனேஸ்வரில் நடைபெற்ற 36-வது இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டின்போது, திருத்தந்தை இந்திய ஆயர்களுக்கு அனுப்பிய செய்தியில், அவர்கள் தங்கள் பணிகளில் ஏழைகள் மற்றும் விளிம்புநிலையிலிருப்போருக்கு முதன்மை இடம் கொடுத்துஆலயத்தின் கதவுகளைத் திறந்துவிடக் கேட்டுக்கொண்டார். மேலும், அவர் திரு அவையில் ஒன்றிப்பின் பயனை ஒவ்வொரு திரு அவையும் மேம்படுத்தி, இணைந்து பயணித்தலின் கனியைப் பெற்றுக்கொள்ள ஆயர்களை ஊக்குவித்தார். திருத்தந்தை தன் பணிக்காலத்தில் புனித குரியாகோஸ் எலியாஸ் சவாரா, புனித எப்ரேசியா எலுவதிங்கள் (2014), புனித ஜோசப் வாஸ் (2015), புனித மரியம் திரேசியா சீராமெல் (2019), புனித தேவசகாயம் (2022) ஆகிய ஐந்து இந்தியர்களைப் புனிதராக உயர்த்தியுள்ளார்.

இந்தப் பெரும் துயரத்தை நாம் அனுபவிக்கும் இவ்வேளையில், எல்லா மறைமாவட்டங்கள், பங்குகள், துறவற இல்லங்கள் மற்றும் குடும்பங்கள் ஒன்பது நாள்கள் துக்க அஞ்சலியை அனுசரிக்கவும், திருத்தந்தை பிரான்சிஸின் ஆன்ம இளைப்பாற்றிக்காகச் சிறப்பு இறைவேண்டல்களை நடத்தவும் நான் அழைக்கிறேன். நாம் அனுபவிக்கும் துயரத்தின் அடையாளமாக, அனைத்து ஆலயங்களிலும் ஆலய மணிகளை ஒலிக்கச் செய்யக் கேட்டுக்கொள்கிறேன். இது நம் துயரத்தையும், நம் உன்னதத் திருத்தந்தையின் மறைவையும் அறிவிக்கும் செயல்பாடாக அமையும். திருத்தந்தையின் நினைவால் தங்கள் வசதிக்கேற்ப ஒருநாள் அனைத்து மறைமாவட்ட அருள்பணியாளர்கள், துறவிகள், இறைமக்கள் தங்கள் பேராலயத்தில் கூடி திருத்தந்தையின் ஆன்ம இளைப்பாற்றிக்காகச் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றக் கேட்டுக்கொள்கிறேன். இது உலகமெங்கும் உள்ள திரு அவையுடன் நம் ஆழ்ந்த ஒற்றுமையின் வெளிப்பாடாக இருக்கும். அன்பும் இரக்கமும் நிறைந்த ஆண்டவர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு நிலையான இளைப்பாற்றியை அருள்வாராக! இக்கடினமான சூழலில் புனித கன்னி மரியாவின் பரிந்துரையால் திரு அவை அமைதியும் வலிமையும் பெறுவதாக!

 

news
இந்திய செய்திகள்
இந்திய அருள்சகோதரிகளுக்கு விழிப்புணர்வு தரும் பயிற்சிப் பட்டறைகள்

இந்தியாவில் உள்ள கத்தோலிக்க அருள்சகோதரிகள் பாலியல் முறைகேடுகள், மனநலப் பாதிப்புகள் மற்றும் தற்கொலைப் போக்குகள் உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்ளப் பயிற்சிப் பட்டறை ஒன்று அண்மையில் கோவாவில் நடைபெற்றது. இந்தியக் கத்தோலிக்கப் பெண் துறவு சபைகள் அமைப்பானது (CRWI) பெங்களூரில் உள்ள கிறிஸ்து பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்திய இந்தப் பயிற்சிப் பட்டறையில் 50 அருள்சகோதரிகள் கலந்துகொண்டு பயன்பெற்றுள்ளனர். மனநலம், கடுந்துன்ப மதிப்பீடு, ஆற்றுப்படுத்துதல், அறநெறிமுறைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் வழியாக அருள்சகோதரிகள் மீள்தன்மையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது என்றும், கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல், மனநலம் மற்றும் நலவாழ்வு குறித்த இந்தப் பயிற்சித் திட்டத்தால் ஏறக்குறைய 350 அருள்சகோதரிகள்  பயனடைந்துள்ளனர் என்றும் இந்த அமைப்பு கூறியுள்ளது.

news
இந்திய செய்திகள்
பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் பணிக்குழுவில் முதல் பெண் இணைச் செயலர்!

கர்நாடகப் பிராந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் (KRCBC) தலைவரும், பெங்களூரு உயர் மறைமாவட்டத்தின் பேராயருமான பீட்டர் மச்சாடோ, டாக்டர் இசபெல்லா செல்வராஜ் சேவியர் அவர்களை ஏப்ரல் 7 அன்று பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் (SC\\ST\\BC) பணிக்குழுவின் புதிய இணைச் செயலாளராக நியமித்துள்ளார்.

டாக்டர் இசபெல்லா பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் பணிக் குழுவில் இந்தப் பொறுப்பை ஏற்கும் முதல் பெண் என்பதால், இது ஒரு வரலாற்றுச் சாதனை. இதன் செயலராக இருந்த அருள்பணி. யாகப்பா அவர்களுக்குப் பதிலாக இணைச் செயலாளரான திரு. ஆல்பன்ஸ் ஜி. கென்னடி தற்போது இதன் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரும் இப்பணியில் அமர்த்தப்படும் முதல் பொதுநிலையினர் என்ற பெருமையைப் பெறுகிறார்.

டாக்டர் இசபெல்லா செல்வராஜ் சேவியர் மனித உரிமைகளுக்காக எப்போதும் குரல் எழுப்புபவர். தார்வாடில் (Dharwad) இவர் நிறுவியுள்ளசாதனாமகளிர் மற்றும் குழந்தைகள் நலச்சங்கம் மற்றும் மனித உரிமைகள் மையம் 2001-ஆம் ஆண்டிலிருந்து, பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மேலும், மனிதக் கடத்தல், குழந்தைத் திருமணம், சுரண்டல் போன்ற சமூகப் பிரச்சினைகளுக்கு எதிராகவும் போராடி வருகிறது. திறமைமிக்கக் கல்வியாளரான இவர் உளவியல், இந்தி, சமூகவியல் மற்றும் சமூகப் பணியில் முதுகலைப் பட்டங்களும், வாஷிங்டன், D.C.-இல் ஆன்மிகம் மற்றும் தலைமைப் பணி குறித்து முனைவர் பட்டமும் (Ph.D.) பெற்றவர்.

2005-ஆம் ஆண்டு முதல் சமூகச் சேவைக்காக இவர் 11 விருதுகளைப் பெற்றுள்ளார். 2016-ஆம் ஆண்டு இவர் இந்திய ஆயர் பேரவையின் கீழ் (CBCI) இயங்கும் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் பணிக்குழுவின் ஒரு பகுதியான தலித் கிறித்தவப் பெண்களின் மாற்றத்திற்கான (Dalit christian women for change) இயக்கத்தின் தேசியத் தலைவராகப் பணியாற்றியவர்
news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

லெமூரியா கண்டம் என்பது 4000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததாக வரலாறு கூறுகிறது. உலகின் முதல் கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றைக் கொண்டது தமிழ்மொழி. உலகின் முக்கியப் படைப்புகளைக் கொடுத்த மனிதர்களைத் தந்ததும் தமிழ் மொழியே. தமிழ்நாட்டு மக்கள் சமத்துவத்தையே எப்போதும் விரும்புகிறார்கள்.”

- உயர்திரு. ஆர். மகாதேவன், உச்ச நீதிமன்ற நீதிபதி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் இருந்து மோடி அரசு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். தனது நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாக்க மற்ற நாடுகள் மீது டிரம்ப் வரி விதிப்பை மேற்கொண்டுள்ளார். இந்தியாவும் தனது சந்தை மற்றும் பொருளாதாரத்தைப் பாதுகாக்க, சீனா உள்ளிட்ட பிற நாடுகள் மீது அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். நாட்டின் பொருளாதார நிலைமை மிகப்பெரிய சவாலாக உள்ளது. பொருளாதாரம் குறித்து அரசு தரப்பில் பொய்யான விவரங்களே வெளியிடப்படுகின்றன.”

- உயர்திரு. அகிலேஷ் யாதவ், சமாஜ்வாதி கட்சித் தலைவர்

கடந்த 2020-ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு கொரோனா பெருந்தொற்று காரணமாக 2021-இல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், 2025-ஆம் ஆண்டு தொடங்கியும் இதுவரை மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதற்கான எந்த ஏற்பாடுகளும் இல்லை. தற்போது மத்திய அரசிடம் இதரப் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை குறித்த எந்த விவரமும் இல்லை. எனவே, மக்கள்தொகைக் கணக்கெடுப்போடு சாதிவாரிக் கணக்கெடுப்பையும்  ஒன்றிய அரசு உடனடியாக நடத்த வேண்டும்.”

- உயர்திரு. முகமது சலீம், மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்

news
இந்திய செய்திகள்
கிறித்தவ விரோத வன்முறைகள்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் புனித சிலுவை நர்சிங் கல்லூரியில் மாணவியைக் கட்டாய மதமாற்றம் செய்ய முயன்றதாக அக்கல்லூரி முதல்வர் அருள்சகோதரி பின்சி ஜோசப்மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த கல்லூரியின் முதல்வர், மாணவியின் குற்றச்சாட்டுகள் கல்விக் குறைபாடுகளை மறைக்கும் முயற்சியாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். இந்த விவகாரம் மாநிலத்தில் மதமாற்றத் தடைச்சட்டம் மற்றும் கிறித்தவ விரோத நிகழ்வுகள் அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டுகிறது. 2024-ஆம் ஆண்டில் சத்தீஸ்கரில் கிறித்தவர்களுக்கு எதிரான 165 வன்முறை நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. இது உத்தரப்பிரதேசத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது.

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

கல்வி என்பது தங்களுக்குத் தெரியாத செய்திகளைக் கற்றுக் கொடுப்பதாகும். விளையாட்டு என்பதும் கல்வியின் ஒரு பகுதிதான். தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை விளையாட்டு கற்றுத் தருகிறது. தோல்விகள் இல்லையேல், முன்னேற்றம் இல்லை. மாணவர்கள் எண்ணிய இலக்கை அடைய முடியும் என்ற உறுதியுடன் கடின உழைப்பை மேற்கொண்டால், உறுதியாக விரும்பியதை அடையலாம். ஆகவே, அதற்கான அடிப்படைக் கட்டமைப்புகளை அவர்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.”

- உயர்திரு. எம்.எம். சுந்தரேஷ், உச்ச நீதிமன்ற நீதிபதி

இந்தியாவில் உயர் கல்விக்காகச் செலவிடப்படும் தொகை மிகவும் குறைவு. புதிய கல்விக் கொள்கையில் உயர் கல்விக்கு உள்நாட்டு உற்பத்தி வருவாயில் 6 விழுக்காடு செலவழிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நான்கு ஆண்டுகள் ஆகியும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. நடப்பு நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் கூட 2.5 விழுக்காடு மட்டுமே கல்விக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நமது நாடு தனி நபர் வருமானத்தில் 155-வது இடத்தில் உள்ளது. வளர்ந்த நாடாக இந்தியா மாறவேண்டும் என்றால் ஒன்றிய, மாநில அரசுகள் கல்விக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்.”

 - உயர்திரு. கோ. விசுவநாதன், வி..டி. வேந்தர்

ஒன்றிய பா... அரசு ஏழை மக்கள்மீது ஏராளமான வரிகளைச் சுமத்தி வருகிறது. மற்றொருபுறம் பெருநிறுவன முதலாளிகளுக்குச் சலுகைகள் வழங்கி, அவர்களுடன் மறைமுகக் கூட்டணி வைத்துள்ள அரசாக உள்ளது. மேலும், நாடு முழுவதும் மக்களைப் பிளவுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. ‘வக்புவாரியச் சட்டத் திருத்தத்தின் மூலம் ஒன்றிய பா... அரசு பிளவுவாத அரசியலை உருவாக்கி ஒருபகுதி மக்களைத் தனிமைப்படுத்தி, தாக்குதல் நடத்தி வருகிறது. சிறுபான்மைச் சமூகங்களைத் தனிமைப்படுத்தும் வகுப்புவாத அரசியலிலும் பொய்ப் பிரச்சாரத்திலும் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது.”

- மாண்புமிகு. பினராயி விஜயன், கேரள முதலமைச்சர்