எங்கள் வகுப்புத் தோழர்கள் 24 பேர். ஒவ்வொருவரும் வெவ்வேறு நிலையில் உயர்ந்தவர்களாக, சிறந்தவர்களாக, பன்முகத் திறமைகள் கொண்டவர்களாக இருந்து, தாயாம் திரு அவைக்குப் பல்வேறு இடங்களில், பல்வேறு பணிகளில் உயர்ந்து, சிறந்து விளங்கிப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
எங்கள்
வகுப்புத் தோழர்களில் முதலாவதாக,
தற்போதைய அந்தமான் போர்ட்பிளேயர் ஆயர் மேதகு விசுவாசம் செல்வராஜ் அவர்கள் 21.08.2021 அன்று ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
எங்கள்
வகுப்புத் தோழர்களின் குழுவின் மற்றொரு மணிமகுடம் வேலூர் மறைமாவட்டப் புதிய ஆயர் மேதகு முனைவர் அம்புரோஸ் பிச்சைமுத்து அவர்கள்.
1981-ஆம் ஆண்டிலிருந்து
இன்றுவரை மேதகு முனைவர் அம்புரோஸ் பிச்சைமுத்து ஆயர் அவர்களோடு தோழராகப் பயணித்தது உண்மையிலேயே மறக்க முடியாத நாள்கள், வருடங்கள் நல் அனுபவங்கள்!
சென்னை
திரு இருதயக் குருகுலத்தில் இருக்கும்போதிலிருந்தே பல முக்கியப் பொறுப்புகளையும்,
பதவிகளையும் ஏற்று, சீரும், சிறப்புமாய்ப் பணியாற்றி, தனது தனித்துவத்தை, தலைமைப் பண்பை உயர்த்திப் பிடித்தவர் நண்பர் மேதகு ஆயர் முனைவர் அம்புரோஸ் பிச்சைமுத்து அவர்கள். அந்தக் காலகட்டத்தில் நண்பராம் இவரது சொல், செயல்பாடுகளைக் கண்டு, அனுபவித்து, பெருமைப்பட்டு, பாராட்டி மகிழ்ந்த காலங்கள், நேரங்கள் என்னால் மறக்க முடியாதது.
மேதகு
ஆயர் அம்புரோஸ் பிச்சைமுத்து அவர்கள் எளிமையை விரும்புகிறவர். அத்துடன் பொறுமையோடு, சீரிய சிந்தனையோடு காரியங்களைத் திட்டமிட்டு, சிறப்பாகச் செயல்பட்டு வெற்றிகரமாக முடிக்க வல்லவர். பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை
எழுதியவர். பல இடங்களில் கருத்தரங்குகளை,
வகுப்புகளை, கலந்தாய்வுகளை வழிநடத்தியவர். தத்துவவியலில் அதிக
நாட்டமும், ஆர்வமும் கொண்ட
இவர், தனது முனைவர் பட்டத்தை முடித்து, தனது சிந்தனையைச் சீரிய சிந்தனையாகக் கூர்மைப்படுத்திக் கொண்டு சிந்திப்பதோடு மட்டுமல்லாது, குருமடத்திலும், மறைமாவட்ட மக்கள் பணியிலும் அனைவரையும் புரிந்துகொண்டு அவர்களுக்கு ஏற்ற, உரிய ஆலோசனைகளை, வழிகாட்டுதல்களை அளிப்பவர். அதனால் பலன் பெற்ற பலருள் நண்பராகிய நானும் ஒருவன்.
குடும்பத்திலும்
சரி, பங்குத்தளங்களிலும் சரி, பாராட்ட வேண்டிய நேரங்களில் பாராட்டியும், உற்சாகப்படுத்தியும், கண்டிக்க வேண்டிய சமயங்களில் திருத்தம் செய்து பலரது உள்ளங்களையும் கவர்ந்தவர் நண்பர் மேதகு ஆயர் முனைவர் அம்புரோஸ் பிச்சைமுத்து அவர்கள். ‘அன்பு இருக்கும் இடத்தில் கண்டிப்பு இருக்கும்’
என்பது உண்மையே! சில நேரங்களில் தனிப்பட்ட என் வாழ்வில் நண்பர் என்ற நிலையில் நான் இதை அனுபவித்திருக்கின்றேன்.
வேலூர்
மறைமாவட்டத்தின் புதிய ஆயராகப் பொறுப்பேற்கும் மேதகு முனைவர் அம்புரோஸ் பிச்சைமுத்து அவர்களோடு 1981-ஆம் ஆண்டிலிருந்து 2024 வரை 43 ஆண்டுகள் நண்பராகப் பயணிப்பது மறக்க முடியாதவை. பல நற்குணங்களை, பண்புகளைத்
தன்னகத்தே கொண்டுள்ள ஆயர் அவர்கள் நிச்சயமாக வேலூர் மறைமாவட்டத்தில் குருக்கள், துறவறத்தார், இளைஞர் மற்றும் இறைமக்கள் உயர்வுக்காக ‘இரக்கமும் எதிர்நோக்கும்’ என்னும்
குறிக்கோளோடு தன் ஆயர் பணியை ஆரம்பித்து ஆண்டவர் அருளோடும், மறைமாவட்டப் பாதுகாவலி கிறித்தவர்களின் சகாய அன்னையின் பாதுகாவலோடும் சீரும் சிறப்புமாய் பணியாற்றிட வகுப்புத் தோழர்கள் நாங்கள் உளமார வாழ்த்தி செபிக்கிறோம்!
இறைவன் தம் மக்களுக்காகப் பணி செய்ய நம்மிடமிருந்து அவரது பணியாளர்களாக ஆயர்களை ஏற்படுத்துகிறார். இவ்வரிசையில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் குருமட வாழ்விலும், குருத்துவப் பணியிலும் கைகோர்த்து நடந்த பாசமிகு நண்பர் பேரருள்திரு. அம்புரோஸ் பிச்சைமுத்து அவர்கள் ஆயர் நிலைக்கு உயர்த்தப்பட்டது கண்டு பெருமகிழ்வோடு வியந்து பாராட்டுகிற இவ்வேளையில், அவரோடு பழகின மற்றும் அவரில் கண்ட நற்பண்புகளை உங்கள் பார்வைக்கு முன்வைக்கிறேன்.
பங்குத்தளங்களில்
சிறந்த மேய்ப்பனாய் விளங்கியவர் இவர். சென்னை-மயிலை உயர் மறைமாவட்டத்தில் உதவிப் பங்குத்தந்தையாகப் பணிபுரிந்த போதும், செங்கை மறைமாவட்டத்தில் ஒரகடம், படப்பை மற்றும் மறைமாவட்டப் பேராலயப் பங்கில் பணிபுரிந்த போதும், நிர்வாகியாகவும் மனிதநேயமுள்ள தந்தையாகவும் பற்பல தேவையிலிருந்த மக்களைச் சந்தித்தும், பக்தசபை மற்றும் பொதுநிலையினர் இயக்கங்களுக்கு ஊக்கமளித்து அவர்களின் தனித்துவத்தை மதித்து வாழ்ந்தவர்.
பங்குகளில்
வீடுகள் சந்திப்பு, பொதுநிலையினருக்கான பயிற்சி, அத்தோடு தியானங்கள், தவக்காலத்தில் ஆன்மிக எழுச்சிக்கான முயற்சிகள், உதாரணமாக, செங்கை புனித சூசையப்பர் பேராலயத்தில் தவக்காலத்தின் 40 நாள்களும் மாலையில் 8.00 மணி முதல் 9.00 மணி வரை ‘ஆண்டவரோடு ஒரு மணி நேரம்’ என்ற மௌன செபமுயற்சியை ஏற்படுத்தி, மக்கள் தங்களது வேலை முடித்து ஆலயத்திற்கு வந்து செலவிடவும், வீடுகளில் இருப்பவர்கள் தங்கள் குடும்பப் பணிகளையெல்லாம் முடித்துவிட்டு இறைவனில் இணையவும் பேராலயத்தில் இம்முயற்சியை உருவாக்கினார்.
நட்பிற்கும்,
உறவுகளுக்கும் கைகோர்ப்பவர் இவர். “நட்பிற்காக எந்தவிதமான நெருக்கடியையும் துன்பத்தையும் நாம் ஏற்றுக்கொள்ளலாம்...” (We can take any Risk for Friendship) என்பவர். இப்படி நட்பை மதிப்பதற்கும், அதற்கு நாம் எந்த அளவிற்குச் சென்று நேரம், பொருள் இவற்றையும், எந்தச் சுணக்கமும் இல்லாமல் கொடுக்கலாம் என வாழ்பவர் நண்பர்
அம்புரோஸ். இதற்கு எடுத்துக்காட்டாக நட்பிற்காகக் கடைக்கோடிப் பகுதிகளில் பணி செய்தாலும், என்னை வந்து சந்தித்து, என்னோடு தங்கி எனது பணியில் என்றென்றும் துணை நின்றவர்.
உடன்
பணிபுரியும் உதவித் தந்தையர்கள் மற்றும் அவர் வயதொத்த குருக்கள், அவரைவிட மூத்த குருக்கள், அவரிடம் பயின்ற இளம்குருக்கள், மறைமாவட்டம் அதையும் தாண்டி உள்ள மற்ற குருக்கள் எனக் குருக்களின் தோழமையைப் போற்றுகிறவரும், உற்சாகத்துடன் அவர்களுக்கு வழிகாட்டியாக, அதோடு பொருளாதார உதவிகள், உளவியல் வழிகாட்டுதலையும் செய்து, அவர்களின் பணி சிறக்க எப்போதும் இணைந்து நின்று செயல்பட்டதை நான் பார்த்திருக்கிறேன்.
பெரியோர்களை
மதிக்கும் பாங்கும், தனது ஒத்த வயது நண்பர் குருக்களுடன் இனிமையாகப் பழகுதலும், வயதில் இளையவரோடு நகைச்சுவை கலந்த நல்ல உறவுகளில் கைகோர்த்தும் சிறந்து விளங்குபவராகக் கண்ணியமான மனிதராகத் திகழ்கிறார்.
மென்மையும்,
எளிமையும் கொண்டவர் இவர். வட
இந்தியாவில் பணிபுரிகின்ற ஓர் அருள்பணியாளர் கடந்த வாரம், இவர் ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்ற செய்தியை அறிந்து, ‘இவர்தான் தகுதியான மனிதர்’ என்று தெரிவித்து, அவர் பகிர்ந்துகொண்ட அனுபவம் இது:
“நான் வட மாநில மறைமாவட்டத்தில்
மறைபரப்புப் பணியின் பொறுப்பாளராகப் பணிபுரிகிறபோது, அலுவலக ரீதியாகத் தொலைப்பேசியில் அவரைத் தொடர்புகொண்டேன். அவரது தொலைப்பேசி உரையாடலில் மிகவும் மென்மையாகவும், அதிகாரத் தொனி இல்லாமலும் நட்புறவுடன் பேசினார். அதைப் பார்த்து வியந்தேன். ஏனெனில், இப்படிப்பட்ட அணுகுமுறையை நான் எதிர்பார்க்கவில்லை. எப்படியும் இதுபோன்ற மனிதரை நேரில் பார்த்தாக வேண்டும் என்று முயற்சி செய்து பெங்களூருக்குச் சென்றபோது, அவரது அலுவலகம் மற்றும் அவருடனான தனிப்பட்ட உரையாடல் ஓர் எளிய மனிதரைச் சந்தித்த அனுபவத்தை எனக்குக் கொடுத்தது”
என்று தெரிவித்திருந்தார்.
புதிய
ஆயர் ஆடம்பரம் இல்லாத எளிய வாழ்வு வாழ்பவர். தன்னுடைய மேற்படிப்பு மற்றும் கற்றுத் தேர்ந்த கல்வி உயர்வில் பேராசிரியராக, நல்லதொரு தத்துவவியல் விளக்க உரையாளராகப் பல வருடங்கள் தத்துவவியல்
மற்றும் இறையியல் பாடப்பிரிவுகளில் கல்வி அறிவை ஊட்டுகிறவர். குருமடம் மற்றும் மறைமாவட்டங்களில் பல்வேறு உயர் பொறுப்புகளும், பதவிகளும் இவரை அலங்கரித்தாலும், என்றைக்கும் ஆடம்பரமோ, தற்பெருமையோ எதையும் வெளிப்படுத்தாத எளிய வாழ்க்கை முறையைத் தனது ஆளுமையின் சாட்சியாகக் கொண்டவர். தனது பணி வாழ்வில் பலபேருக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறவர். இப்பண்புகள்தாம் அவரை இந்நிலைக்கு உயர்த்தியது என நான் கருதுகிறேன்.
இவரது
ஆன்மிக ஆழமும், நிர்வாக நேர்மையும் சிறப்பு மிக்கவை. தனது ஆன்மிக வாழ்வில் ஆழ்ந்த படிப்பு, கல்விப் பணி மற்றும் நிர்வாகப் பொறுப்புகள், அவற்றைச் சார்ந்த தொடர்புகளில் அதிகமான நேரம் ஈடுபட்டாலும், ஆன்மிகத்தில் தனக்கெனச் சிறந்த வழியைக் கைக்கொண்டு வாழ்கிறவர். தனிசெபம், குழுமச் செபங்கள் என அடுத்தவரை ஆன்மிகத்தில்
கொண்டு செல்வதில் முனைப்பாய் இருப்பவர். குருமாணவர்களை நெறிப்படுத்தும் வழிகாட்டியாக இருந்து வளர்த்தெடுத்தவர். நிர்வாகம் மற்றும் மேய்ப்புப் பணியில் தன்னுடைய ஆளுமையினால் சிறந்த திட்டமிடுதலும் தெரிவிக்க வேண்டிய கருத்துகளில் தெளிவும் தனக்கே உரிய பாணியில் அதனை வெளிப்படுத்தும் விதமும் இவருக்கு நிகர் இவரே!
சமூக
நீதி, சமூக அக்கறை மற்றும் சமுதாயத்தை மேம்படுத்துகிற முன்னேற்றப் பாதையில் அதிகம் கவனம் செலுத்துகிற பணியாளராக, இவற்றோடு தன்னை அர்ப்பணித்த குருத்துவத்தில் என்றும் மகிழ்ந்து எச்சூழ்நிலையிலும் அதிராமல், பதறாமல் சமநிலையோடு பணிசெய்கிற ஒருவராகத்தான் இவரை என் நட்புறவில் பார்த்து இருக்கிறேன்; வியந்திருக்கிறேன்!
வேலூர் மறைமாவட்டத்தில் எல்லாரையும் அன்பு செய்து, அரவணைத்து இயேசுவின் விடுதலை விழுமியங்களை இம்மண்ணில் இன்னும் அதிகமாய்... ஆழமாய் விதைக்க... விடியலை நோக்கி என்றும் அனைவரையும் இணைக்க... இயக்க, ஆயராகச் சிறப்பு அழைப்புப் பெற்று திருநிலைப்படுத்தப்படவிருக்கும் அன்பு ஆயர் மேதகு அம்புரோஸ் அவர்களை மனமார வாழ்த்துகிறேன். ஆயர் பணி சிறக்க செபிக்கிறேன்.
என்
மெய்யியல் பேராசிரியராகத் துவங்கிய எங்கள் அறிமுகம் இன்றும் என்னுடைய நல்லாசானாக, நல்வழிகாட்டியாகத் தொடர்வது மகிழ்ச்சியே. ஆயர் அம்புரோஸ் அவர்களின் அதிகமான அறிவு, அடர்த்தியான ஞானம், ஆழமான
ஆன்ம தாகம், சமரசம் செய்துகொள்ளாத கொள்கைப் பிடிப்பு, அன்பும் உண்மையும் கலந்த நிர்வாகத்திறன், முடிவெடுப்பதில் நிதானம்... இவற்றையெல்லாம் நான் பார்த்து வியந்திருக்கிறேன், பின்பற்ற முயற்சித்திருக்கிறேன். ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி தன் இறை அழைப்பையும், அர்ப்பணத்தையும் மட்டுமே முன்னிலைப்படுத்திப் பயணிக்கும் அவரின் பக்குவம் மிகவும் போற்றுதற்குரியது. இதுவே அவரின் அடையாளமாகவும் திகழ்கின்றது.
மறைமாவட்டத்தின்
ஒருங்கிணைந்த ஆன்மிக மையத்தின் அதிபராக நான் வேப்பூரில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது,
குருமாணவர்களுக்கு வகுப்பெடுக்க பகுதி நேர பேராசிரியராகத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார். அப்போதெல்லாம் பெரும்பாலான நேரங்களில் எங்கள் உரையாடலும், கலந்தாய்வும் இறையழைத்தல் பற்றியும், குருமாணவர்கள் அதை எப்படி உள்வாங்குகிறார்கள்? அதைக் குறித்தத் தேடலில் எப்படித் தங்களை உட்படுத்துகிறார்கள்? என்பதைப் பற்றியும் சற்று அழுத்தமாகவே பேசுவார். இது இறையழைத்தல் என்னும் மாபெரும் கொடையைக் குறித்து அவரின் புரிதலையும் எல்லாரும் அதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்கிற அவரின் வேட்கையையும் நமக்கு விளக்கும். ஆயர்
அம்புரோஸ் அவர்களின் இறையழைத்தல் வாழ்வை மூன்று பரிமாணங்களில் பார்க்கலாம். அதுவே அவரின் தனித்த அடையாளங்களாக இன்றளவும் இருக்கின்றன.
1. தனித்துவப் பாதை
இறை
அழைப்பை அறிவுத்தளத்தில் தேடாமல் அதை இறைவனோடும், இயற்கையோடும், இணை மனிதனோடும் கொள்ளும் உண்மை உறவில் தொடர்ந்து உணர முனைவதும் அனுபவிப்பதும் தன் இறை அழைப்பை ஆண்டுக் கொண்டாட்டமாகச் சுருக்காமல் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அன்றாடம் கொண்டாடுவதும் வாழ்வதும் இறை அழைத்தலைத் தன்னை உயர்த்திக்கொள்ள அன்று; மாறாக, தன்னைத் தாழ்த்தி தகுதியாக்கிக் கொண்டு பணிவாழ்வில் அடுத்தவரை உயர்த்த நினைப்பதும்தான் அவரின் தனித்துவம், அடையாளம்.
2. தலைமைத்துவ நேர்மை
இயேசு
கிறிஸ்துவின் தலைமைத்துவப் பண்புகளையும், ஆயர்த்துவ வாழ்வையும் உள்வாங்கிய வாழ்வு ஆயர் அம்புரோஸின் அழைத்தல் வாழ்வு. இலக்கு மக்களை அதிகாரப்படுத்துகிற, குருமாணவர்களை நெறிப்படுத்துகிற, ஆளுமைப்படுத்துகிற, குருக்களையும் துறவியரையும் - தன் முன்மாதிரி வாழ்வால் உந்தித்தள்ளுகிற, உறுதிப்படுத்துகிற தலைமை இவரின் தலைமை. அதில் ஒரு நேர்மையும் உண்டு. எந்தப் பொறுப்பையும் கடமையுணர்வோடு செய்வதுதான் அந்த நேர்மை. இதுதான் இவரின் அடையாளம். மறைமாவட்ட, மாநில, தேசிய அளவில் தன் தலைமைப் பண்பை நேர்மையோடும் நேர்த்தியோடும் வெளிப்படுத்தியவர் இவர்.
3. புனிதத்துவ வாழ்வு
தான்
பெற்றுக்கொண்ட இறை அழைப்பைத் தன் சுயநலத்தினாலோ, மனித ஆசைகளினாலோ, மனித சூழ்ச்சிகளினாலோ மாசுபடாமல் காத்து, புனித வாழ்வு வாழ்பவர் ஆயர் அம்புரோஸ். இறை அழைப்பு கொண்டிருக்கும் புனிதத்தையும், அப்புனிதம் புரட்சிப் பணியால்தான் நிலைக்கும் என்ற நம்பிக்கையையும் ஆழமாகவே அறிந்திருப்பவர், நடைமுறைப்படுத்துபவர். அழைப்புக்கேற்ற புனித வாழ்வைத் தொடர்ந்து வாழ அழைப்பின் முழுமை அடைந்திருக்கிறார்.
இப்படிப்பட்ட
தனி அடையாளங்களோடு தனக்கென்று சரியான பாதை ஒன்றை அமைத்துக் கொண்டு, தயங்காமல் தளராமல் துணிவோடு இயேசுவின் வழியில் பயணம் செய்யும் ஆயர் அம்புரோஸ் அவர்கள் இன்னும் பல உச்சங்களைத் தொட
வாழ்த்துகிறேன்.
வேலூர் மறைமாவட்டத்தின் ஏழாவது ஆயராகப் பொறுப்பேற்கவுள்ள பேரருள்முனைவர் அம்புரோஸ் பிச்சைமுத்து அவர்களின் ஆயர் திருநிலைப்பாட்டு நிகழ்வினை (டிசம்பர் 9-ஆம் தேதி, 2024) மிகுந்த மகிழ்வோடும் ஆர்வத்தோடும் பெருமிதத்தோடும் எதிர்நோக்கி இருக்கின்றோம்.
சென்னை-மயிலை உயர் மறைமாவட்டத்தின் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டு, பணியாற்றி, செங்கல்பட்டு மறைமாவட்டம் உதயமாகியபொழுது, அதன் அங்கமாகி, மிகுந்த மதிப்புப் பெற்ற அருள்பணியாளராகச் செயல்பட்டு, அத்தலத்திரு அவையின் ஆயரின் பொதுப்பதில் குருவாகவும், மறைமாவட்டப் பள்ளிகளின் கண்காணிப்பாளராகவும், நான்கு பங்குத்தளங்களில் பங்குப் பணியாளராகவும், இந்திய அரசு - ஆட்சிப் பணியாளர்களை உருவாக்கும் பயிற்சியகத்தின் இயக்குநராகவும், அருள்பணியாளர்களின் மன்றச் செயலராகவும் பாங்குடனே செயல்பட்டவர் நமது அன்பு ஆயர்.
சென்னை,
பூவிருந்தவல்லி திரு இருதயக் குருமடத்தின் தத்துவவியலின் பேராசிரியர், உதவி இல்லத்தந்தை என அருள்பணியாளர்கள் உருவாக்கப் பயிற்சியில்
ஆசானாகவும் உருவாக்கப் பணியாளராகவும் பணியாற்றிய பாங்கு அவரின் மாணவ அருள்பணியாளர்களின் உள்ளத்தில் பசுமை நிறைந்த நினைவுகளாக உள்ளது.
தந்தை
அவர்களின் பணியை அறிந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தந்தையின் மறைத்தூதுப் பணியகத்தின் தேசிய இயக்குநராக அவரை நியமனம் செய்தார். இந்திய இலத்தீன் வழிபாட்டு முறையின் ஆயர் பேரவையின் மறைபரப்புப் பணியின் செயலராகப் பணியாற்றி, மறைத்தூதுப் பணிகளின் ஆர்வத்தை, முக்கியத்துவத்தை, பங்களிப்பை, அப்பணியகத்தின் இதழின் (Proclaim) வழியாகவும்,
கலந்துரையாடல்கள், அமர்வுகள், குருமட வகுப்புகள், மறைமாவட்டச் சந்திப்புகள், தொலைத்தொடர்பு சாதனங்கள் வழியாக இந்தியத் திரு அவை முழுவதும் கொண்டு சென்றார். உரோமைச் செயலகத்தில் அமைந்துள்ள திருத்தூது ஆட்சிப் பீடத்தின் மறைபரப்புப் பணியகத்தின் உயர்மட்ட ஆலோசகர் குழுவின் உறுப்பினராக நியமனம் பெற்றார்.
திரு
அவையின் வளர்ச்சியில் ஆயர் வெளிப்படுத்திய ஆர்வம், அருள்பணியாளர்களின் உருவாக்கத்தில் அவரின் போதிக்கும் திறனும், முதிர்ச்சியும், அனுபவமும் பங்குப் பணியாளராக மக்களோடு இணைந்து பணியாற்றும் கூட்டுப் பணியும் இன்று வேலூர் மறைமாவட்டத்தின் தலைமைப் பணியாளராக, மேய்ப்பராக, கிறிஸ்துவின் பிரதிநிதியாக, திருத்தூதர்களின் வழித்தோன்றலாக, மறைத்தூதுப் பணியை முன்னெடுப்பவராக, ஆடுகளின் முடை அறிந்த ஆயனாக அவர் திரு அவையின் தலைமைப் பொறுப்பினை ஏற்பது உள்ளபடி மிகுந்த மகிழ்வினையும், பெருமிதத்தையும், நிறைவையும் தருகின்றது. திரு அவையின் முப்பெரும் பணிகளான போதிக்கும், புனிதப்படுத்தும், வழிநடத்தும் பணிகளைக் கடந்த காலங்களில் செவ்வனே செய்திட்டு, பலமான அனுபவங்களைப் பெற்றதாலே இத்தலைமைப் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அழகியல் பேராசிரியர்
-
அழகியத் திரு
அவையின்
அன்பு
ஆயர்
தத்துவவியலின்
- அழகியல் பேராசிரியராகக் குருமாணவர்கள் மத்தியில் மிகவும் அறியப்பட்ட மேதகு ஆயர் அம்புரோஸ், எல்லா மனிதர்களையும் மதித்து, படைப்புகளையும், இயற்கையையும் அழகியல் பார்வையோடு கண்டு, அன்பு செய்து, உருவாக்குவதில் தனித்திறமை கொண்டவர். அவரின் பணியிடங்களில், அலுவலகங்களில், ஆலயப் பராமரிப்பில், திருப்பலியின் தயாரிப்பு உடைகளில், திருத்தூயகப் புனிதப் பொருள்களின் தூய்மையையும், புனிதத்தையும், மதிப்பையும் வழங்கி, அதன் தயாரிப்பில் போதிய நேரத்தையும் கொடுத்து, அக்கறையையும், அதீதக் கவனத்தையும் வெளிப்படுத்தியவர். ஆயராக, திரு அவையின் புனிதப்படுத்தும் பணியை நிறைவேற்றி, இறைவனின் மறைபொருள்களை முதன்மையாகப் பகிர்ந்து, வழிபாட்டு வாழ்வை வெளிப்படுத்தவும் மேம்படுத்தவும் பாதுகாக்கவும் இன்னும் சிரத்தையுடனும் ஆர்வத்துடனும் அவர் செயல்படுவார் என்பது வெள்ளிடை மலை.
எல்லா
மனிதருக்கும் சுயமதிப்பும், சுய ஆளுமையும் உண்டு என நன்கு அறிந்து,
நிலைப்பாடுகொண்டு, அதனை ஒவ்வொருவரும் பெற்றிட வலியுறுத்துபவர். சுயமதிப்பிற்கான முக்கியத்துவத்தை மாணவர்கள், அருள்பணியாளர்கள் மத்தியில் உருவாக்கிட விருப்பம் கொண்டு அதனை உள்ளத்தில் விதைத்து, அதன்படி செயல்பட வழிநடத்துவதில் நமது ஆயருக்கு நிகர் அவரே.
ஒருவர்
சுயமதிப்பை இழந்து தனிப்பட்ட வாழ்வில் பயன்பெறுவதை இம்மியும் அனுமதிக்காதவர். எல்லாரிடத்திலும் இதை வலியுறுத்திச் செயல்பட உந்தித்தள்ளுவதை நான் நன்கு அறிவேன். கடை நிலையில் உள்ளோர்மேல் அவரின் கரிசனையும், அவர்களின் சுய மதிப்பிற்காகவும் ஆளுமைக்காகவும் அவரின் நிலைப்பாடும் செயல்பாடுகளும் பலரையும் புடமிட்டு உருவாக்கியது.
செவிமடுத்தலும்,
உரையாடலும்
16-வது
உலக ஆயர் மாமன்றத்தின் மூன்று ஆண்டுகள் நிகழ்வு நிறைவுற்று, இறுதி ஆவணம் வெளிவந்த இச்சூழலில், திரு அவை எல்லாருக்கும் தாழ்ச்சியோடு செவிமடுத்து அனைவருடனும் உரையாடி, தலத்திரு அவையின் முடிவுகளையும், செயல்பாட்டினையும் கூட்டு முயற்சியோடு அனைவரையும் உள்ளடக்கிப் பணியாற்றச் செய்வதே முதன்மையான செயல்திட்டமாகக் கொண்டுள்ளது.
இக்காலச்சூழலில்
மேதகு ஆயர் அம்புரோஸ் அவர்களின் ஆயர் பணி முக்கியத்துவம் பெறுகின்றது. உறவு உரையாடலில், பணி உரையாடல்களில் அவர் மேற்கொள்ளும் முயற்சிகளை, செயல்பாடுகளை நானும் அறிவேன். செவிமடுத்து உரையாடுவதில் அவர் சிறந்த தலைவர். தன்னைச் சந்திக்கும் மக்களை, குருமாணவர்களை, அருள்பணியாளர்களை அமரச்செய்து, மதிப்பளித்து, செவிமடுத்து, உரையாடி, தீர்வுகளைக் காண்பதிலும் வழிகாட்டுதலைப் பெறுவதிலும் வழங்குவதிலும் சிறப்புக் கவனத்தைத் தருபவர். உரையாடல்களை, அவர்களின் வாழ்வின் வழித்தடமாக அமைத்து, ஊக்கமூட்டி, பயனுள்ள சந்திப்பாக, அனுபவமாக மாற்றும் அவரின் தலைமைத்துவம் ஆயர் மாமன்றத் தீர்மானங்களையும், விருப்பங்களையும், வழிகாட்டுதலையும் நிச்சயம் செயல்படுத்தும் என உளமார நம்புகின்றேன்.
இறுதியாக, திருத்தந்தை
பிரான்சிஸ், 70-வது இத்தாலிய ஆயர் பேரவையின் கூட்டத்தில் (06, அக்டோபர் 2014) ஆயர்களிடத்தில் உரையாடியபொழுது ‘Parrahesia’ என்னும் கிரேக்க
வார்த்தையைக் குறிப்பிட்டு இன்றைக்குத் திரு அவையின் தலைமைப் பொறுப்பில் செயல்படும் ஆயர்கள், உயர்மட்டக் கூட்டங்களில், திரு அவையின் வளர்ச்சிக்கான உரையாடல்களில், விவாதங்களில், மக்களின் தேவைகளை, கவலைகளை, வேதனைகளை உள உறுதியோடு உண்மையை
எடுத்துரைத்துச் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார். Parrahesia – என்பது பேச்சு சுதந்திரம் மட்டுமல்ல, பொதுநன்மைக்காக உண்மையை உரக்கச் சொல்லும் மனவுறுதி. மேதகு ஆயர் அம்புரோஸ் அவர்கள் Parrahesia என்ற
சொல்லின் அர்த்தத்தைக் கற்றறிந்து எல்லாச் சூழ்நிலையிலும் உள உறுதியோடு, தெளிவோடு,
தூய ஆவியின் உந்துதலோடு, சூழலைத் தெளிவாக அறிந்து, கூர்மையான அறிவோடும் அனுபவத்தோடும் பகுத்தறிந்து, தவறுகளைத் தயக்கமின்றி சுட்டிக்காட்டி, உரையாடல்களில் ஆக்கமிகு குறுக்கீடு செய்பவர்.
புதிய
ஆயர் தனது வாழ்நாளில் அனைத்து நிகழ்வுகளிலும் உண்மைக்குச் சான்று பகர்ந்து, அதனை உள உறுதியுடன் வெளிப்படுத்துபவர்.
தொடர்ந்து ஆயர் அம்புரோஸ் அவர்கள் இறைமக்களை உண்மையின் மனுவுருவாம் இயேசுவை நோக்கிய இறையாட்சிப் பயணத்தில் வீறு நடை போட உளமார வாழ்த்துகின்றோம்.
திருவிவிலியத்தின் போதனைகளிலும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சிந்தனைகளிலும் அடிப்படையாக இருக்கிற ‘இரக்கமும் எதிர்நோக்கும்’ என்னும் சொற்களைத் தன் ஆயர் பணியின் இலக்கு வாக்கியமாக ஏற்கிறார் வேலூர் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் மேதகு அம்புரோஸ் பிச்சைமுத்து அவர்கள்.
‘இரக்கம்’ கடவுளின் முகமாகத் திகழ்கிறது. இதையே இயேசு தம் இறையாட்சிப் பணியாலும் போதனையாலும் வல்ல செயல்களாலும் வெளிப்படுத்தினார். இறையியல் மதிப்பீடுகளில் ஒன்றாகத் திகழும் எதிர்நோக்கு நாம் பொறுமை, நேர்முக எண்ணம் கொண்டு ஒருவர் மற்றவரை வலுப்படுத்தவும் நலப்படுத்தவும் தூண்டுகிறது. இதயத்துடன் கூடிய மும்முனை இணைக்கோடு மூவொரு கடவுள், கிறிஸ்துவின் முப்பணி, மானிடரின் முப்பரிமாண உறவுகளையும் குறிக்கிறது. ‘ஆவே மரியா’ மற்றும் திருவிவிலியம் மரியாவின் பரிந்துரையையும், ஆயருக்குரிய இறைவார்த்தைப் பணியையும் பிரதிபலிக்கிறது. மூவொரு கடவுளுடைய இரக்கத்தை அடித்தளமாகக் கொண்டு தன் ஆயர் பணியைக் கட்டியெழுப்பும் மேதகு அம்புரோஸ் அவர்கள் மரியாவின் முன்மாதிரியைப் பின்பற்றி இறைவார்த்தையை அறிவித்து எதிர்நோக்கை வழங்குகிறார்.
பொருள் விளக்கம்
மேதகு
ஆயர் அம்புரோஸ் அவர்களின் ‘இரக்கமும் எதிர்நோக்கும்’ என்னும்
ஆயர்பணி இலக்குவாக்கியம் திருவிவிலியப் போதனைகளையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சிந்தனையையும் பின்புலமாகக் கொண்டுள்ளது.
இரக்கம்: திருவிவிலியத்தில் இரக்கம் என்பது கடவுளை முதன்மையாக வரையறுக்கும் ஒரு பண்பு. நற்செய்தி நூல்களில் நாம் காணும் இயேசுவின் பணி, மனித நொறுங்கு நிலைக்கான கடவுளின் பதிலிறுப்பே இரக்கம் என முன்மொழிகிறது. கடவுளின்
இரக்கத்தை அனுபவிக்க அனைவரையும் அழைக்கிறார் இயேசு. “இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் இரக்கம் பெறுவார்கள்” (மத்
5:7). ‘கிறித்தவ நம்பிக்கையின் மையம் இரக்கம்’ என்று வலியுறுத்துகிற திருத்தந்தை பிரான்சிஸ், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டை (2015-16) அறிவித்து, “தந்தையுடைய இரக்கத்தின் முகமே இயேசு கிறிஸ்து”
(‘இரக்கத்தின் முகம்’,
1) என மொழிந்தார். மேலும், “அன்பு மற்றும் மன்னிப்பின் வெளிப்பாடாகத் தெரிகிற இரக்கம் என்னும் குணமே தேவையிலிருப்பவர்களையும் சமூகத்தின் விளிம்புநிலையில் இருப்பவர்களையும் நோக்கி நம்மை நகர்த்தி, அவர்களுக்கு ஒப்புரவை வழங்கத் திரு அவையைத் தூண்டுகிறது” என்கிறார்.
எதிர்நோக்கு:
இறையியல் மதிப்பீடுகளில் (1கொரி 13:13) இரண்டாவதாகவும் மையமாகவும் திகழ்கிற ‘எதிர்நோக்கு’ நம்பிக்கையையும்
அன்பையும் இணைக்கிறது. “எதிர்நோக்கு ஒரு போதும் ஏமாற்றம் தராது”
(உரோ 5:5) என்று எழுதுகிற பவுல், கிறித்தவர்களாகிய நமக்கு எதிர்நோக்கு என்பது வெறும் எதிர்பார்ப்பு அல்ல; மாறாக, கடவுளின் பிரமாணிக்கத்திலும் வாக்குறுதியிலும் நாம் கொண்டிருக்க வேண்டிய பற்றுறுதி. குறிப்பாக, துன்பம் அல்லது சவால்கள் நடுவே நாம் கொண்டிருக்க வேண்டிய பொறுமை என்கிறார். ‘அனைவரும் உடன்பிறந்தோர்’ என்னும்
தன் சுற்றுமடலில், “கடவுளின் கொடையாகத் திகழ்கிற எதிர்நோக்கு, எதிர்காலம் நோக்கி நம் இதயத்தைத் திறப்பதுடன் நிகழ்காலத்தின் துன்பங்களைத் தாண்டிய பார்வையை நமக்குத் தருகிறது”
(எண். 55) என்கிறார்.
இந்த
எதிர்நோக்கு வெறும் தனிப்பட்ட பண்பாக அல்லாமல் குழும உணர்வாக இருப்பதால், கூட்டியக்கத்துக்கான பாதையில் திரு அவையை வழிநடத்துவதோடு அனைவரோடும் ஒன்றிப்பை ஏற்படுத்த வழிவகுக்கிறது. எதிர்வரும் புனித ஆண்டு யூபிலி 2025, ‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ என
நாம் ஒருவர் மற்றவரோடு இணைந்து பயணிக்க அழைக்கிறது.
இரக்கம்,
எதிர்நோக்கு என்னும் மதிப்பீடுகள் நம் தனிப்பட்ட மற்றும் குழும ஆன்மிக வாழ்வுக்கான அடித்தளமாகத் திகழ்வதுடன், திரு அவையின் கூட்டியக்கப் பயணத்தில் ஒருமைப்பாடு, பங்கேற்பு, பணி ஆர்வம் ஆகியவற்றை வளமையடையச் செய்கிறது. ‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ என
இணைந்து பயணிக்கும் திரு அவையோடு தன்னை இணைத்து, வேலூர் தலத்திரு அவையின் ஆயராகப் பணியாற்றி, இரக்கத்தில் வேரூன்றி எதிர்நோக்கில் கனிதர விரும்புகிறார்.
மும்முனை இணைக்கோடு:
தொடக்கமும் முடிவும் இல்லாமல் ஒன்று மற்றொன்றோடு கொண்டுள்ள பிணைப்பைக் குறித்துக்காட்டும் பழம்பெரும் இந்த அடையாளம் - தந்தை, மகன், தூய ஆவியார் எனும் மூவொரு கடவுளையும், இறைவாக்கினர், குரு, அரசர் எனும் இயேசுவின் முப்பெரும் பணிகளையும் குறிக்கிறது. இப்பணிகளில் கடவுளின் இரக்கத்தை எடுத்துக்காட்டி, கடவுளின் நலத்தையும் மன்னிப்பையும் நமக்குப் பெற்றுத் தந்த இயேசு, வாழ்வின் போராட்டங்களையும் தாண்டிய எதிர்நோக்கை வழங்குகிறார். மேலும், இந்த அடையாளம் ஒவ்வொரு கிறித்தவரின் முப்பரிமாணப் பிணைப்பை, அதாவது கடவுளோடும் தன்னோடும் தன்னைச் சுற்றியுள்ள இயற்கை மற்றும் மனிதர்களோடும் உள்ள பிணைப்பையும் நினைவூட்டுகிறது.
இதயம்: மும்முனை இணைக்கோட்டு உருவத்தின் மையமாகத் திகழ்கிற இதயம் இரக்கத்தை வலியுறுத்துகிறது. ‘இந்த இரக்கத்தையே இயேசுவின் திரு இருதயம் பிரதிபலிக்கிறது’ என்கிறார்
திருத்தந்தை பிரான்சிஸ் (‘அவர் நம்மேல் அன்பு கூர்ந்தார்’, எண்
77). கடவுளின் இரக்கத்தைத் தழுவிக்கொண்டு நிலைவாழ்வு பற்றிய எதிர்நோக்குடன் நாம் வாழும்போது, நாம் பெறுகிற உள்ளார்ந்த மாற்றத்தை இது குறிக்கிறது. தன்னாய்வு, மனமாற்றம், கடவுளின் அருளுக்கான திறந்த உள்ளம் ஆகியவற்றால்தான் இரக்கத்தையும் எதிர்நோக்கையும் நாம் இணைக்க முடிகிறது.
மரியே வாழ்க:
‘ஆவே மரியா’
(மரியே வாழ்க!) அடையாளம், வேலூர் மறைமாவட்டத்தின் பாதுகாவலியாம் கிறித்தவர்களின் சகாயம் என்னும் அன்னை கன்னி மரியாவைக் குறிக்கிறது. ‘ஆம்’ என்னும் ஒற்றைச் சொல்லால் இறைத்திருவுளம் நிறைவேற்றத் தன்னையே முன்மொழிந்த மரியாவின் தயார்நிலையைக் கொண்டிருக்கிறார் ஆயர் அம்புரோஸ். எதிர்நோக்கு என்பது வெறும் உள்ளத்து விருப்பம் அல்ல; மாறாக, கடவுளின் தொடர் பிரமாணிக்கத்தில் ஊன்றி, பொறுமையோடு காத்திருக்கும் மனப்பக்குவம் எனச் சொல்லும் மரியா, கூட்டியக்கத்தின் பண்புகளான செவிமடுத்தல், வரவேற்றல், புரிந்துகொள்ளுதல், உடன்நடத்தல் ஆகியவற்றின் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.
திருவிவிலியம்:
இலச்சினையின் மையமாகத் திகழ்கிற திறக்கப்பட்ட திருவிவிலியம் மேற்காணும் அடையாளங்கள் திருவிவிலிய வெளிப்பாட்டில் ஊன்றியிருக்கின்றன எனக் குறித்துக்காட்டுவதுடன், இரக்கமும் எதிர்நோக்கும் திருவிவிலியத்தில் நாம் காணும் அடிப்படையான மனித அனுபவங்கள் என்று எடுத்துரைக்கின்றன. மேலும், ஆயருக்குரிய முதன்மைப் பணியான நற்செய்தி அறிவிப்புப் பணியையும், திரு அவை நம்பிக்கையின் பாதுகாவலராக அவர் திகழ வேண்டிய பொறுப்புணர்வையும் (காண். 2திமொ 4:5) இது குறிக்கிறது.
மேற்காணும்
நான்கு அடையாளங்களையும் இணைத்துப் பார்க்கும்போது, மேதகு ஆயர் அம்புரோஸ் அவர்கள், ‘இரக்கமும் எதிர்நோக்கும்’ நிரம்பி
வழிகிற இதயம் மூவொரு கடவுளில் நிலை நிற்க வேண்டும் என விரும்புகிறார். கிறித்தவர்களின் சகாயமும் வேலூர்
மறைமாவட்டத்தின் பாதுகாவலியாகவும் திகழ்கிற அன்னை கன்னி மரியாவால் தூண்டப்பெற்று, மரியாவின் நம்பிக்கை மற்றும் சீடத்துவத்தைப் பின்பற்றும் நம் ஆயர் இறைவார்த்தைக்குச் செவிமடுப்பவராக, அதைப் பின்பற்றி அறிவிப்பவராக முன்வருகிறார்.
வேலூர் மறைமாவட்டப் புதிய
ஆயர்
மேதகு முனைவர் அம்புரோஸ் பிச்சைமுத்து அவர்களுடன்
ஒரு
நேர்காணல்:
அருள்முனைவர்
செ. இராஜசேகரன்
• அன்பு ஆயர் அவர்களே! இறைவன் தங்களை ஆயர் நிலைக்குத் தேர்ந்துகொண்டு, வேலூர் மறைத்தளத்தில் பணியமர்த்தியுள்ளது கண்டு ‘நம் வாழ்வு’ வாசகர்கள் சார்பாகத் தங்களை மனதார வாழ்த்துகிறோம்! இறைவனுக்கு நன்றி கூறுகிறோம்! வேலூர் மறைமாவட்டத்தின் ஆயராகத் திருத்தந்தையால் நியமிக்கப்பட்டது குறித்து தங்களுக்கு ஏற்பட்ட உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்!
“முதலிலே ‘நம் வாழ்வு’ ஆசிரியர் குழுவிற்கும், வாசகர்களுக்கும், உங்களுடைய உடன் பணியாளர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் செய்தி அறிந்தவுடன் என்னில் இருந்ததெல்லாம் ‘நன்றி உணர்வே!’ பெரிதும் வியக்கும் பல தருணங்களை, நிகழ்வுகளைக்
கடவுள் எனது வாழ்வில் ஏற்படுத்தியிருக்கிறார், ஏற்படுத்துகிறார். இந்தப் பெரும் வியப்பு எனக்கு மட்டுமல்ல, பிறருக்குமானதாகவும் இருக்கும். இந்தக் குறிப்பிடத்தக்க வியப்பையும் கொடுத்த கடவுளுக்கு நான் நன்றி செலுத்துகிறேன். என்மீது நம்பிக்கை கொண்ட திருத்தந்தைக்கு என் நன்றி உணர்வினைச் சமர்ப்பிக்கின்றேன். இந்த நிலைக்காக என் தகுதி குறித்து அலசி ஆராய்ந்த அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். வேலூர் மறைமாவட்டத்தில் ஆயர் வேண்டும் என்று ஆசித்து செபித்த நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றியைச் சமர்ப்பிக்கின்றேன். எனவே, நன்றி உணர்வே என்னைப் பற்றிக்கொண்டது, ஆட்கொண்டது.
இரண்டாவதாக,
ஒருவித ‘பொறுப்புணர்வை’ உணர்கின்றேன்.
ஆயர் பணி என்பது ஏதோ படிநிலை உயர்வு என்றில்லாமல், மாறாக எனக்குக் கூடுதலான பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்கின்ற உணர்வு என்னை ஆட்கொண்டிருக்கின்றது.
மூன்றாவதாக,
‘செப உணர்வு’.
இது என்னாலான ஒரு செயல் அல்ல; மாறாக, இது கடவுளுடைய திட்டம். கடவுளுடைய இத்திட்டத்திற்கு என்னையே முழுவதும் உட்படுத்த வேண்டும் என்ற உணர்வு என்னில் மேலோங்குகிறது. “ஏனெனில் உங்களுக்காக நான் வகுத்திருக்கும் திட்டங்கள் எனக்குத் தெரியுமன்றோ! அவை வளமான எதிர்காலத்தையும், நம்பிக்கையையும் உங்களுக்கு அளிப்பதற்கான நல்வாழ்வின் திட்டங்களேயன்றி, கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள் அல்ல’ என்கிறார் ஆண்டவர்”
(எரே 29:11). இந்த ஓர் இறைத்திட்டம் இன்னும் என் நிலை மறந்து கடவுளின் துணையையே நம்ப வேண்டுமென்று இட்டுச் செல்கின்றது. கடைசியாக, ஒருவித கூட்டு உணர்வு; அதாவது, நான் தனியாக இல்லை; மற்றவர்களும் என்னோடு இருக்கின்றார்கள், மக்கள் என்னோடு இருக்கிறார்கள், அருள்பணியாளர்களும் துறவியரும் என்னோடு இருக்கின்றார்கள் என்கின்ற ஒருவித எதிர்நோக்கோடு கூடிய கூட்டுறவு,
கூட்டுணர்வு என்னை ஆட்கொண்டிருக்கிறது. எனவே, தோழமையில் ஆண்டவரின் திட்டத்தைச் செயலாக்கம் செய்ய முடியும் என்கின்ற நம்பிக்கை என்னிலே இருக்கின்றது.”
•
அன்பு ஆயர் அவர்களே, தங்களுடைய
குடும்பம் மற்றும் பள்ளிப்
படிப்பைப்
பற்றிக்
கூறுங்கள்...…
1966 -ஆம் ஆண்டு,
மே மாதம் 3 -ஆம் தேதி செய்யூரில்
பிறந்தேன். என் பெற்றோர் திருவாளர் பிச்சைமுத்து - திருமதி லூர்துமேரி. மிகவும் இயல்பான, ஆரவாரம் இல்லாத ஓர் அமைதியான குடும்பம். ஒரு குருவுடைய பெற்றோர் என்று பலரும் அறிய இயலாத வகையில் ஒரு சாதாரணமான, மிகவும் எதார்த்தமான குடும்ப வாழ்வை நடத்தியவர்கள். உறவுகள், சுற்றம் என்று பார்க்கின்றபோது, இது ஒரு பெரிய குடும்ப உணர்வை என்னிலே தந்தது. அதுவே மிகப்பெரிய அனுபவங்களைத் தந்தன. இந்துகள் மத்தியில் வாழும் இடமாக எனது வீடு இருந்தாலும், குடும்ப உணர்வில்தான் மற்றவரோடு வாழ்ந்தோம் என்கின்ற அந்த ஓர் எதார்த்தச் சூழல். இப்போது இரண்டு அண்ணன்களின் குடும்பமும், என் அக்காவின் குடும்பமும் பல்வேறு இடங்களில் வாழ்கிறார்கள்.
எனது
ஊர் பல பள்ளிகளைக் கொண்டிருக்கின்றது.
அதனால் என்னவோ படித்தவர்கள் அதிகம். அதனுடைய தாக்கம் இந்தச் சமூக சூழ்நிலையைச் சரியான விதத்திலே கொண்டு செல்ல மக்களுக்கு ஏதுவாக இருந்தது, இருக்கின்றது. ஏற்றத்தாழ்வுகளை எல்லாம் களையக்கூடிய சூழலைக் கொண்டு மக்கள் முழுமூச்சோடு இருப்பதை என்னால் உணர முடிகிறது. தனிப்பட்ட விதத்தில் இந்தச் சமூகச் சூழலுக்கு, அதனுடைய தீமைகளுக்கு ஆளானேன் என்று சொல்கின்ற அனுபவம் எனக்கு இல்லை. இது கல்வியினுடைய முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.
எனது
எட்டாம் வகுப்பு வரை (1971 முதல் 1979 வரை) ஆலய வளாகத்தில் அமைந்திருக்கின்ற தூய மரியன்னை பள்ளியிலே பயின்றேன். அந்த ஆசிரியர்களுடைய முழு மனித வளர்ச்சிக்கான பயிற்சி என்னை உருவாக்கியது. முதலாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை எனக்குப் பாடம் சொல்லித் தந்த ஆசிரியர்களின் பெயர்களெல்லாம் இன்னும் பசுமையாகவே இருக்கின்றது. அதில் குறிப்பாக, இரண்டு தலைமை ஆசிரியர்கள் திருவாளர் பத்திநாதன், திருவாளர் லூர்துசாமி. இருவரும் அந்தக் காலத்திலேயே முதுகலைப் படிப்பு முடித்தவர்கள். ஒரு நடுநிலைப் பள்ளியாக இருந்தாலும், மிகத் தகுதி வாய்ந்த தலைமை ஆசிரியர்களை எங்கள் பள்ளி கொண்டிருந்தது. அவர்களை இந்த நேரத்தில் நன்றியோடு நினைவுகூர்ந்து, அவர்களுக்காகவும் செபிக்கின்றேன். பிறகு செய்யூரிலே அமைந்திருக்கின்ற அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாவது, பத்தாவது பயின்றேன். அது மற்றொரு பரிணாமத்தை என்னிலே புகுத்தியது. பிற ஊர்களிலிருந்து வருகின்ற சக மாணவர்களோடு பழகக்கூடிய
வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அன்றைய நாள்களில் ஓர் அரசுப் பள்ளி எப்படி இருந்திருக்கும் என்று உங்களால் எண்ணிப்பார்க்க முடியும். அதுவும் சவாலான ஒரு காலம். ஆயினும், ஒரு நல்ல அனுபவமாக எனக்கு அது இருந்தது!
பிராட்வேயிலுள்ள
புனித கபிரியேல் மேல் நிலைப் பள்ளியில் 11 மற்றும் 12 -ஆம் வகுப்பிற்காகச் சேர்ந்தேன். அதுவும் குருமாணவர் பயிற்சி இல்லம். எனது சக தோழர்களோடும் குருமாணவர்களோடும்
சேர்ந்து படித்த தருணம் இன்னும் நினைவில் இருக்கிறது. இப்போதும் கூட எனது வகுப்புத் தோழர்களான அருள்பணியாளர்கள் ராக் சின்னப்பா, லூர்துசாமி, ஜேம்ஸ் ஆகியோர் மிகச் சிறப்பாகப் பணிபுரிந்து வருகின்றனர். அங்குதான் எனக்கு முதன் முதலில் சலேசியர்களுடைய வழிகாட்டுதல் கிடைத்தது.”
•
தங்களுடைய இறை அழைத்தல்
மற்றும்
குருத்துவப்
பயிற்சி
பற்றிக்
கூறுங்களேன்......
“எனது பங்குத்தந்தை நினைவில் வாழும் அருள்பணி கே.எம். தாமஸ் அவர்கள். நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது அவர் பங்குத்தந்தையாக நியமிக்கப்படுகின்றார். அதிலிருந்து எனது வாழ்வில் முக்கியப் பங்குவகித்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. அதேசமயம், குளூனி அருள்சகோதரிகளுடைய அணுகுமுறையும் எனக்கு உறுதுணையாக இருந்தது. ஆலய வளாகத்தில் அதிக நேரம் செலவிட்ட காலம். பீடச்சிறுவனாகத் திருவழிபாட்டிலும், மாலை செபங்களிலும் கலந்து கொண்ட அந்த அற்புதமான காலம். பத்தாம் வகுப்பில் இருந்தபோது எங்கள் பங்குத்தந்தை இறையழைத்தல் முகாமிற்கு அனுப்பி வைத்தார். எல்லாமே இயல்பாக நடந்தது. பிறகு அந்த முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்டு, சாந்தோம் புனித தோமா இளங்குருமடத்தில் 1981 -இல் இணைந்தேன். முழுமையான உருவாக்கப் பயிற்சியின்போது அருள்பணியாளர்கள் இன்னையா, அருள்ராஜ் அவர்களின் பயிற்சி கடினமாக இருந்தாலும், மிகவும் தேவையானது என்பதைப் பிறகு புரிந்து கொள்ள முடிந்தது. தினமும் மாலை செபம் முடித்து பேராயர் அருளப்பா அவர்களுடைய வகுப்புகள் இன்னும் பல தெளிவுகளைத் தருபவையாக
இருந்தன. அவரது கண்டிப்பு கலந்த அன்பு இன்றும் மறக்க முடியாத ஒன்று.
பிளஸ்
டூ முடித்து ஆயத்தப் பயிற்சியில் (Orientation Course) நுழைந்தேன்.
அந்த நேரத்திலே ஒரு வித்தியாசமான பயிற்சி எனக்குக் கிடைத்தது. அருள் பணியாளர் D. வின்சென்ட், பால்
ஜூலியன், லாரன்ஸ்ராஜ் தங்களையே முழுமையாக ஈடுபடுத்தி எங்களுக்குப் புதிய சூழலுக்கு ஏற்ற ஒரு பயிற்சிப் பாசறையாக இளங்குருமடத்தை அமைத்திருந்தனர். மெய்யியல் பயில
பூவிருந்தமல்லி குருமடத்திற்குச்
சென்றோம். 1988-89-களில் களப் பணிக்காகக் கோவளம் பங்குத்தளம் அமைந்தது. குறிப்பாக, அங்குப் பங்குத்தந்தையாக
இருந்த பி.கே. மேத்யூ
என்னை ஊக்குவித்து சுதந்திரமாகப் பணி செய்யத் தூண்டியதால் அது எனது வாழ்வில் ஒரு திருப்பத்தையும் ஏற்படுத்தியது. அவரது தாராள மனது, உபசரிக்கும் குணம் என் மனத்தில் இன்றும் ஆழமாகவே இருக்கிறது. அதுவும் இயல்பாக நான் மாறுவதற்கு உறுதுணையாக இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
1989 முதல் 1993 வரை கிராமச்சூழலில்
மக்களின் மனநிலையை இறையியலாக்கும் ஒரு தெளிவோடு நாங்கள் எங்களது இறையியல் பயிற்சியை மேற்கொண்டோம். அப்பொழுது இருந்த பேராசிரியர்களுடைய சமூகக் கண்ணோட்டம், எதிர்காலத் திரு அவைக்கான ஒரு நீரோட்டமாகவும் இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. வார இறுதி நாள்களில் ஆவடி, தி.நகர் - சீனிவாச
நகர், பிராட்வே-செயின்ட் மேரிஸ் போன்ற பங்குத் தளங்களிலே பணிபுரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. திருத்தொண்டர் பயிற்சியின்போது சாஸ்திரி நகர் பங்குத்தந்தையாக இருந்த அருள்பணி. அருள் தேவதாஸ் அவர்களுடைய புரிதல், ஊக்குவிப்பு மிகச் சிறப்பானதாகவே அமைந்தன. அந்த மக்களுடைய அன்பும், அவருடைய பாசமும் எனது குருத்துவ வாழ்க்கைக்கு ஓர் அடித்தளமாக அமைந்தன.”
• தங்களுடைய அருள்பணி
வாழ்வு
பற்றிப்
பகிர்ந்துகொள்ளுங்கள்...…
“1993 -ஆம் ஆண்டு, மார்ச் 25 -ஆம் தேதி - கிறிஸ்து பிறப்பு அறிவிப்புப் பெருவிழா நாள் அன்று நாங்கள் ஆறு பேர் குருத்துவ அருள்பொழிவு பெற்றோம். அப்போது பேராயர் கஷ்மீர் ஞானாதிக்கம் சென்னை-மயிலை உயர் மறைமாவட்டப் பேராயராக இருந்தார். அன்றைய நாள் சென்னை-மயிலை உயர் மறைமாவட்டத்திற்கு மிகச்சிறப்பான நாள். பேராயர் அவர்கள் தங்கள் குருத்துவ அருள்பொழிவின் நாற்பதாம் ஆண்டு நாளைக் கொண்டாடினார்கள். அன்றைய நாளில் பேராயர் அருளப்பா அவர்கள் பணி ஓய்வு பெற்றார். அன்றைய நாளில்தான் பேராயர் கஷ்மீர் அவர்கள் பேராயர் பொறுப்பையும் ஏற்றார்கள். இவ்வாறு பல்வேறு முக்கியமான சிறப்புகளைக் கொண்ட ஒரு நாளாக சென்னை-மயிலை உயர் மறைமாவட்ட வரலாற்றில் அமைந்தது. காரணம், வழக்கமாக உயிர்ப்புப் பெருவிழாவுக்குப் பிறகு இரண்டாம் வாரத்தில்தான் குருத்துவ அருள் பொழிவு நிகழும். ஆனால், எங்களுக்குச் சிறப்பான நாளைத் தேர்ந்தெடுத்திருந்தனர்.
குருவாகத்
திருநிலைப்படுத்தப்பட்டபின்,
முதலாம் ஆண்டு சாந்தோம் பேராலயத்தில் உதவிப் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டேன். தந்தை சத்தூர் அவர்கள் எனக்குப் பங்குத்தந்தையாக இருந்தார். அவருடைய உடல்நலக் குறைவின் காரணமாக அருள்பணி. இராயண்ணா அவர்கள் என்னை வழி நடத்தினார். முதலாம் ஆண்டு பங்குப்பணி என்னில் பல தாக்கங்களை ஏற்படுத்தியது.
நீங்கள் அறிந்த படி, சாந்தோம் பேராலயம் பலதரப்பட்ட மக்களையும் உள்ளடக்கிய ஓர் இறைச்சமூகம். புனித தோமையாரின் புனித இடம், தூய மயிலை மாதாவின் பிரசன்னம், முன்னாள் பேராயர்களின் கல்லறைகள் என அனைத்துமே வாழ்வின்
எதார்த்தத்தையும், கடவுளின் திட்டத்தையும் எனக்கு எண்பித்தன. அதன் பிறகு 1994-95 -ஆம் ஆண்டில், பல்லாவரம் - தூய சவேரியார் ஆலயப் பங்கிற்கு உதவிப் பங்குத் தந்தையாகச் சென்றேன். தந்தை பிரிட்டோ அவர்கள் பங்குத்தந்தையாக இருந்தார். அந்தப் பங்கு ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த, விசாலமான இறைச்சமூகம். இராஜாஜி நகர், பொழிச்சலூர் போன்ற பங்குகள் அப்போது இதன் கிளைப் பங்குகளாக இருந்தன. ஒரு பாசமான இறைச்சமூகத்தையும், அந்தப் பங்கில் வளரும் நிலையிலிருந்த ஒரு பள்ளியையும் கொண்ட பங்கு. அருள்பணி. பிரிட்டோ அவர்களின் சகோதர பாசத்தையும், புதிய பணிகளை முன்னெடுக்க ஊக்குவிக்கும் விதத்தையும், அதிலும் குறிப்பாக, பிரிஜிடைன் தலைமை அன்னை எமல்டாவின் ஆன்மிக வழிகாட்டுதலையும் என்னால் மறக்க இயலாது. காரணம், நான் குருமடம் அழைக்கப்பட்டபோது அதற்கான ஆயத்தப் பணிகளில் அவருடைய வழிகாட்டுதல் எனக்குத் துணையாக இருந்தது.
குருமடத்திற்குப்
பேராசிரியராகச் சென்றபோது இராமாபுரம், போரூர் பங்குகளுக்குப் பணிசெய்ய வாய்ப்பு கிடைத்தது. பேராசிரியர் பணி மற்றும் உயர் படிப்புக்குச் சென்ற பிறகு நேரடியான ஒரு பங்கு அனுபவத்தைப் பெற வேண்டும் என்ற நோக்கிலே என் விருப்பத்தை ஆயரிடம் தெரிவித்தபோது, செங்கை மறைமாவட்டப் பேராலயத்தின் பங்குத் தந்தையாகவும், மறைமாவட்ட முதன்மைக் குருவாகவும் நியமிக்கப்பட்டேன். அறிமுகம் இல்லாத நபராகப் பங்கிற்குச் சென்றேன். முதலிலே சற்று தயக்கம் எனக்கும், இறைச்சமூகத்திற்கும். ஆனால், நாளடைவில் எல்லாமே நன்றாக அமைந்தன. பல்வேறு
பணிகளை உதவிப் பங்குத்தந்தையரோடு மேற்கொண்டதில் ஐந்து ஆண்டுகள் மிக வேகமாகவே சென்றன. அதுவும் ஒரு மகிழ்ச்சியான தருணமாகவே இருந்தது.
அதன்
பிறகு ஒரகடம் என்னும் மறைத்தளம். எனது பணிவாழ்வில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்திய மக்கள். சாதாரண, எளிமையான, அன்புள்ள, பக்தியுள்ள மக்கள்; இறைவார்த்தையைக் கையிலும் நெஞ்சிலும்
சுமந்திருக்கும் மக்கள். பல திறமைகளைக் கொண்ட
சிறார்கள், நற்செய்திப் பணிக்கான கிளைப்பங்குகள் யாவும்
ஓர் அனுபவமே! அங்கே கிளைப்பங்காக ஆரம்பாக்கம் இருந்தது. அன்பான
மக்கள், அதிலும் குறிப்பாக ஆலயப் பணிகளில் ஆர்வமிக்க பெண்கள் மற்றும் சிறுவர்களுடைய முழு ஈடுபாடு கொண்ட ஓர் இறைச்சமூகம்.
அதன்
பிறகு பங்குப் பணியாளனாக பல்லாவரம் - தூய சவேரியார் ஆலயத்திற்குச் சென்றேன். அந்த நேரத்தில்தான் எனக்கு மற்றொரு பொறுப்பும் தரப்பட்டது. அதாவது, திருத்தந்தையின் இந்திய மறைத்தூதுப் பணியகத்தின் இயக்குநராகப் பணியமர்த்தப்பட்டேன். பங்குப் பணியில் முழுமையான கவனம் செலுத்த முடியாவிட்டாலும் ஓராண்டு காலம் என்னால் முடிந்த அளவுக்கு எனது பணிகளை ஆற்றினேன். தலத் திரு அவையின் இறைச்சமூகம் எத்தனை முக்கியமானது, ஒவ்வொரு சகோதரனும்-சகோதரியும், பெற்றோரும்- பெரியோரும், இளையோரும்-சிறுவர் சிறுமியரும் குழந்தைகளும் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை உணர்ந்து கொண்டேன். இறைப்பணி
என்பது மக்களுக்கானது; மக்கள் மிக மிக முக்கியமானவர்கள்; அவர்கள் இல்லையேல் நம் பணிக்கு அர்த்தமே இல்லை என்ற உணர்வு எனக்குப் புரிந்தது. அதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன். சுருக்கமாகச் சொல்லப் போனால், மக்கள் இல்லையேல் என் பணிக்கு அர்த்தம் இல்லை என்ற ஓர் உணர்வு.
உதவிப்
பங்குத்தந்தையாக ஏறக்குறைய 16 இளங்குருக்கள் என்னோடு பணியாற்றியுள்ளனர். அவர்களுடைய திறமைகளைக் கண்டுணர்ந்து, முறையாக அவர்களை ஊக்கப்படுத்தினால் பல அற்புதங்களை அவர்கள்
புரிவார்கள் என்ற அனுபவத்தையும் நான் பெற்றேன். மக்களை மையப்படுத்திய ஆன்மிகம், அதிலும் குறிப்பாக, பக்த சபைகள் எவ்வளவு முக்கியம் என்பதை அனுபவப்பூர்வமாகக் கண்டுணர்ந்தேன். இளையோர், சிறுவர் - சிறுமியர் இவர்கள் நாளைய திரு அவைக்கு அல்ல; மாறாக,
இன்றைய திரு அவைக்கு அவர்கள் தேவை! இன்றைய பங்குப் பணிகளுக்கு அவர்கள் தேவை என்பதை உணர்ந்தேன். அருள்பணியாளர்களும் துறவியரும் இணைந்து பணியாற்றினால் மக்களின் மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் என உணர்ந்தேன். இயேசுவை
மையப்படுத்திய ஆன்மிகமே மக்களை மையப்படுத்திய அன்புப்பணிக்கு நம்மைத் தூண்டும் என்பதே எனது அனுபவம்.”
•
குருமாணவர் உருவாக்கப் பணியில்
தங்களுடைய
பங்களிப்பு
சிறப்பாக
அமைந்திருந்தது.
அது
பற்றிக்
கூறுங்களேன்...…
“1996-இல் எனது மேற்படிப்பிற்குச் செல்வதற்கு முன் ஓராண்டு பணிமுன்னோட்டக் காலம் எனப்படும் (Probation Period) பேராசிரியராகக்
குருமடம் சென்றேன். அங்கு சலேசியக் குருக்கள் மற்றும் மறைமாவட்டக் குருக்கள் பேராசிரியராக இருந்தார்கள். அப்பொழுது அருள்பணி. மரிய கனகா இல்லத்தந்தையாக இருந்தார். அருள்பணி.
லாரன்ஸ் பயஸ் (தற்போது தருமபுரி ஆயர் அவர்கள்) மெய்யியல் துறைத் தலைவராக இருந்தார்கள். இருவரும் மற்றப் பேராசிரியர்களும் சிறப்பாக வழி நடத்தினார்கள். என்னை உருவாக்குவதிலும் மேற்படிப்புக்கான தயாரிப்பிலும் மிகவும் எனக்கு வழிகாட்டியவர்கள் இவர்களே! அவர்களை நன்றியோடு நான் இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அப்போதைய குருமாணவர்களையும் உள்ளன்போடு நினைத்துப் பார்க்கிறேன். பிறகு இரண்டு ஆண்டுகள் பெல்ஜியத்திலும், மூன்றாண்டுகள் உரோமையிலும் உயர் படிப்பை முடித்தேன். 2001 முதல் 2008 வரை பூவிருந்தவல்லி - திரு இருதயக் குருமடத்தில் குருமாணவர்களோடும் பேராசிரியர்களோடும் அங்குப் பணிபுரிகின்ற பணியாளர்களோடும் பெரும் மகிழ்வோடு பணியாற்றினேன். மகிழ்ச்சியான
நாள்கள் அவை. அருள்பணி. S.J. அந்தோணிசாமி,
அருள்பணி. Y.J. இக்னேசியஸ்
பிரசாத் இருவரும் இல்லத் தந்தையர்களாக இருந்த காலகட்டத்தில் நான் உதவி இல்லத்தந்தையாக இருந்தது மகிழ்ச்சிக்குரிய தருணமாக அமைந்தது. நூலகம் மற்றும் பதிவாளர் பொறுப்பையும் மேற்கொண்டிருந்தேன். நூலகத்தைக் கணினி மயமாக்கியதில் பெரும் மகிழ்ச்சி. அப்போது இருந்த சகோதரர்கள் குறிப்பாக, தஞ்சை மறைமாவட்டத்தைச் சார்ந்த சகோ. குழந்தை எனக்குச் செயலராக இருந்து மிகவும் உதவி புரிந்தது குறிப்பிடத்தக்கது.
‘Self-formation is the best formation!’ - இதுதான் எனது தாரக மந்திரமாக இருந்தது. ‘The candidate is the AGENT of the formation’ என்கின்ற
கருத்தை அடிக்கடி வலியுறுத்துவேன். வெளியிலிருந்து வகுப்பிற்கு வரும் மற்ற துறவற சபை குருமாணவர்கள் உள்பட தொடக்கத்தில் எனது மனநிலையோடு குருமாணவர்கள் போராடினாலும், எல்லாம் அவர்கள் மீதுள்ள அன்பினாலும், அக்கறையினாலும் என்பதனை நாளடைவில் உணர்ந்தவர்களாக, பிறகு என்னை முழுமையாக நேசிப்பவர்களாக இருப்பதை நான் கண்கூடாகக் காணமுடிந்தது. அது பெருமையாகவே இருந்தது.
எனது
25 -ஆம் ஆண்டு குருத்துவ வெள்ளி விழாவை நான் சிறப்பாகக் கொண்டாடவில்லை. ஆனால், படப்பை பங்கில் இருந்தபோது என்னுடைய குருமாணவர்களை, அதாவது ஏழு, எட்டு ஆண்டுகள் என்னோடு குருமடத்தில் இருந்தவர்களை அழைத்திருந்தேன்.
வெளிநாட்டில் இருந்த மாணவர்கள் வாழ்த்துத் தெரிவித்ததோடு இங்கு இந்தியாவில் இருந்த பல்வேறு மறைமாவட்டங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்களில் 93 குருக்கள் (என் குருமாணவர்கள்) கலந்துகொண்டார்கள். இது குருமாணவர் உருவாக்கப் பணியில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசாகவே கருதுகிறேன். அவ்வாறே, என்னோடு மிக நெருக்கமாகப் பணிபுரிந்த அருள்பணி. பீட்டர் சூசைமாணிக்கம், அருள்பணி. கிறிஸ்டோபர் ஆகியோருடைய நட்பையும், தோழமையையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.
இளம்
குருமாணவர்களை வழிநடத்துவது என்பது ஓர் உன்னதமான பணி. அதேசமயம் இது ஒரு கூட்டுப்பணி என்பதை நான் உணர்ந்தேன். பேராசிரியர் அனைவரும் இணைந்து கூட்டு முயற்சியில் இவ்வுருவாக்கப் பணியில் ஈடுபட வேண்டும் என்பது எனது அனுபவம். குறிப்பாக, ஏழை குருமாணவர்களை நாமே அடையாளம் கண்டு அவர்களுக்கு எந்தவிதக் குறையும் இல்லாமல் பேண வேண்டும் என்பது நமது கடமையாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். அவர்கள் நம்மிடம் வருவதைவிட, நாமே அவர்களை அடையாளம் கண்டு இத்தகைய உதவிகளைச் செய்ய வேண்டும் என உணர்ந்தேன். ஒரு
பேராசிரியர் பணி என்பது வெறும் பாடம் எடுப்பது மட்டுமல்ல; மாறாக, அவர்களுடைய வாழ்க்கையில் நாம் தொடர்புடையவர்களாக இருக்க வேண்டும் என விரும்பினேன்.
சமூக
விடுதலை பற்றி அதிகமாகப் பேசிய தருணத்தில் எனது எண்ணமெல்லாம் தனிமனித விடுதலையை ஒவ்வொரு குருமாணவனும் அனுபவிக்க வேண்டும் என்பது எனக்கு முக்கியமானதாகத் தென்பட்டது. அதே வேளையில், அவர்களுடைய குழந்தைப் பருவ மனக்காயங்களிலிருந்து அவர்கள் விடுதலை பெற பேராசிரியர்கள் ஆற்றுப்படுத்தும் வழிமுறைகளையும் கண்டுணர வேண்டும் என்பதும் முக்கியமானதாகத் தென்பட்டது. கண்டிப்பாக அதுவே சமூக விடுதலைக்கு அடித்தளமாகவும் கூர்மை நோக்குடைய மேய்ப்புப் பணிக்கு உரமாகவும் அமையும் என்பதையும் நான் உணர்ந்தேன்.”
•
திருத்தந்தையின் இந்திய மறைத்தூதுப்
பணியின்
பொறுப்பாளராகப்
பணியாற்றியது
பற்றி
உங்களுடைய
அனுபவங்கள்...…
“இதுவும் திடீரென எனக்குக் கிடைத்த ஒரு வியப்பு. இது முற்றிலும் வேறுபட்ட ஒரு புது வகையான பணி. எனக்கு அதிக அனுபவம் இல்லாத ஒரு பணி. ஆனால், பின்னாளில் மிகப்பெரிய அனுபவமாக அது அமைந்தது. இந்தியாவில் உள்ள அனைத்துக் கத்தோலிக்க மறைமாவட்டங்களுக்கும் குறிப்பாக, இலத்தீன் வழிபாட்டு முறையில் 132 மறைமாவட்டங்களுக்கும் நேரடியாகவும் மற்ற வழிபாட்டு முறையில் உள்ள மறைமாவட்டங்களுக்குக் கூடுதல் வழிகாட்டியாகவும் பணியாற்றக்கூடிய ஒரு களம் அது. நல்லதொரு தளம் இது. இப்பணி ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தந்தது. இந்தியச் சூழலில் - பல்வேறு கலாச்சார பண்பாடுகள், சமுதாய
வேறுபாடுகள், பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் இவற்றையெல்லாம் புரிந்துகொள்ள ஒரு சிறப்பான வாய்ப்பாக இது இருந்தது.
இந்தியாவைப்
பொருத்தவரையில், மறைப்பணிக்கான களம் இன்னும் அதிகமாகவே இருக்கிறது என்கின்ற ஓர் எதார்த்தச் சூழலைக் காணமுடிகிறது. இந்திய ஆயர் பேரவையோடு பணிபுரிய சிறந்த வாய்ப்பாக அமைந்தது. உரோமைக்கும், இந்தியத் தலத்திரு அவைக்கும் இடையே ஓர் உறவுப் பாலமாகப் பயணிக்கக்கூடிய ஒரு வாய்ப்பையும் இந்தப் பொறுப்பு வழங்கியிருக்கிறது. புதிய திட்டங்கள், அணுகுமுறைகள், அமைப்பு முறைகள் என அனைத்து முயற்சிகளையும்
மேற்கொண்டோம். இந்திய ஆயர் பேரவை நிர்வாகிகளிடமிருந்து பெரும் ஒத்துழைப்பும், அரவணைப்பும் கிடைத்தது. அனைவருக்கும் இவ்வேளையில் என் நன்றியை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
என்னோடு
இணைந்து Pontifical Mission Organization (PMO) - இல் பணியாற்றியவர்கள் குறிப்பாக, மண்டலப் பொறுப்பாளர்களாகவும் (Region PMO), மறைமாவட்டப்
பொறுப்பாளர்களாகவும்
(Diocesan PMO), பணியாற்றியவர்களையும்
மற்றும் இந்தப் பணித்தளத்தோடு தொடர்பு கொண்ட அத்தனை உடன் உழைப்பாளர்களையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.
இவ்வேளையில்,
திருத்தந்தையின் மறைத்தூதுப் பணியகம் மற்றும் மறைத்தூதுக் கழகங்களைப் பற்றி ஒருசில கருத்துகளையும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அதாவது, திருத்தந்தையின் மறைத்தூதுக் கழகங்கள் (அ) பணியகம் (known as Pontifical Mission Societies (PMS) in
worldwide) நான்கு
கிளைகளைக் கொண்டது.
1. Pontifical
Society for the Propagation of the Faith (PSPF): மறைபரப்பு ஞாயிறு வாயிலாக மக்கள் மத்தியில் மறைபரப்புப் பணியின் அவசியத்தை உணர்த்திச் செபிக்கவும் பொருளுதவி செய்யவும் பணிகளை மேற்கொள்ளும் ஓர் அமைப்பு. இது உலக அளவில் மறைப்பணி மேம்பாட்டிற்காக குறிப்பாக, மறைமாவட்ட மேய்ப்புப் பணிகளுக்குப் பொருள் உதவிபுரிந்து வருகிறது.
2. Pontifical
Society of St Peter the Apostle (PSSPA):
இது அருள்பணியாளர்கள், வேதியர்கள் மற்றும் அர்ப்பண வாழ்வில் ஈடுபடும் துறவறத்தாரின் ஆன்மிக மற்றும் கல்வி சார்ந்த உருவாக்கப் பணிகளுக்காகப் பொருளுதவி செய்யும் அமைப்பு.
3. Pontifical
Society of Missionary Childhood Associations (MCA): இது குழந்தைகளே, குழந்தைகளுக்கு உதவ முன்வரும் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தும் அமைப்பு. குழந்தைகளுக்கான நலத்திட்டங்களுக்குப் பொருளுதவி புரியும் அமைப்பு.
4. Pontifical Missionary Union
of the
Clergy, the Religious and the Consecrated Laity (PMU): குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலைத் திருத்தொண்டர்களுக்கான பயிற்சிக்குப் பொருளுதவி செய்யும் அமைப்பு. இவ்வமைப்பு உலகளவில் பொதுநிலையினர் மத்தியில் இறையழைத்தலை ஊக்குவிக்கும் பயிற்சிகளை முன்னெடுக்கும்.
திருத்தந்தையின்
தலைமையின்கீழ் இயங்கும் மறைத்தூதுப் பணிகளில் இந்த நான்கு அமைப்புகளும் ஒன்றிணைந்து புதிய மறைத்தளங்களில் மறைபரப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட செபங்களும் பொருளுதவிகளும் நாம் தந்திட நம்மை ஊக்கப்படுத்துகின்றன. இறைமக்களாக நாம் செபிப்பதோடு இறைப்பணி தொடர்வதற்கான பொருளுதவிகளை வழங்குவதால் புதிய மறைப்பணிகளும் புதிய மறைத்தளங்களும் வலுவூட்டப் பெறுகின்றன.
மறை
மாநில அளவில் (Regional Level), தேசிய
அளவில் (National Level), பிராந்திய அளவில் (Continental Level), சர்வதேச
அளவில் (International Level) நிர்வாகக்
கட்டமைப்பு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நான்கு படிநிலைகளிலும் உள்ள அலுவலகத்தோடும் அலுவலகப் பணியாளர்களோடும் அமைப்பு முறையோடும் தொடர்பு கொண்டிருக்கக்கூடிய ஒரு வாய்ப்புக் கிடைத்தது. திரு அவையின் மறைபரப்புப்பணி பற்றிய விசாலமான ஒரு பார்வை, ஆழமான அனுபவம், சில சவால்கள் - எல்லாமே ஒரு தனித்துவமான ஒரு புதிய அனுபவமே!
பிராந்திய
உறுப்பினர்கள் அண்மையில் பிராந்திய பொறுப்பாளர்களாக ஐந்து நபர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். அவர்கள் திருத்தந்தையின் மறைபரப்புப்பணி உயர்மட்டக் குழு ஆலோசனை உறுப்பினராக இருப்பார்கள். அதில் நானும் ஒருவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். இது இந்திய நாட்டிற்குப் பெருமை தரக்கூடிய ஒன்று. மேலும், நாம் மேற்கொள்ளும் மறைப்பணிகளால் நமது நாட்டிற்குக் கிடைத்திருக்கும் ஓர் அங்கீகாரம் என்றே கருதுகிறேன்.”
•
வேலூர் மறைமாவட்டத்திற்காகத் தாங்கள்
கொண்டுள்ள
கனவு...…
“திறந்த மனத்தோடு செல்கிறேன். அருள்பணியாளர்கள், துறவியர், இறைமக்களோடு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு செல்கிறேன். பொதுநிலையினரை வலுப்படுத்த வேண்டும்; பங்கேற்புத் திரு அவையாக வேலூர் மறைமாவட்டம் திகழவேண்டும் என்ற ஆசையோடு செல்கிறேன். ‘இரக்கத்தோடும் எதிர்நோக்கோடும்’ என்
மறைமாவட்டத்தை வழிநடத்த வேண்டும் என்ற எண்ணம் என்னில் மேலோங்கியிருக்கிறது. விளிம்புநிலை மக்கள், ஏழை மக்கள் இவர்களைக் குறித்து மறைமாவட்டமாக இணைந்து அவர்களைத் தூக்கிவிட வேண்டிய மனநிலையை எல்லாரிடமும் உருவாக்க வேண்டும், எல்லாரும் சேர்ந்து இந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும், அத்தகைய திரு அவையைக் கட்டி எழுப்ப வேண்டும் என்ற எண்ணம் என்னில் மேலோங்கியிருக்கிறது. இது பொருளாதாரத் தன்னிறைவு, தற்சார்பு சம்பந்தப்பட்டது. அனைவரும் ஒன்றிணைந்து புதிய மறைப்பணி முன்னெடுப்புகளை இந்திய ஆயர் பேரவையின் மேய்ப்புப்பணித் திட்டத்தோடு மேற்கொள்ள வேண்டும் என்ற மனநிலையோடு செல்கிறேன்.”
•
பொன்விழாக் காணும் ‘நம்
வாழ்வு’ வார இதழின்
வாசகர்களுக்குத்
தங்களுடைய
செய்தி...…
“பொன்விழாக் காணும் தமிழ்நாடு திரு அவையின் - நல்லவர்களின் நாடித்துடிப்பு ‘நம் வாழ்வு’ வார இதழின் நிர்வாகத்தினருக்கு எனது மனமார்ந்த பொன்விழா வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன். நம் வாழ்வின் நீண்ட நெடிய வளர்ச்சியைப் பார்க்கிறேன். முன்னாள் ஆசிரியர்கள், அங்குப் பணிபுரிந்த பணியாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகள். தற்போது இவ்விதழில் புதிய பரிணாமத்தைப் பார்க்கிறேன். இப்பொழுது இருக்கின்ற முதன்மை ஆசிரியரையும், அவரோடு இணைந்து பணியாற்றும் உடன் ஆசிரியர்களையும் மனதாரப் பாராட்டுகிறேன். நீங்கள் எழுத்தின் வலிமையைத் தொடர்ந்து சமூகத்திற்கு உணர்த்தி வருகிறீர்கள். உங்களது படைப்புகளும், வெளிவரும் கட்டுரைகளும் நமது களஎதார்த்தத்தைச் சிறப்பாகவே அடையாளப்படுத்துகின்றன. அது தாக்கத்தை ஏற்படுத்துவதைப் பார்க்கிறேன். நான் ஒவ்வொரு வாரமும் உங்கள் தலையங்கத்தை வாசிக்கத் தவறுவதில்லை. அது இந்திய, தமிழ்நாடு அளவில் அந்தந்த வார நடப்பு நிகழ்வுகளை முழுமையாக அறிந்திடச் செய்கிறது. வாழ்த்துகள்! ‘நம்முடைய எழுத்து எவரையுமே பாதிக்கவில்லை என்றால் அது எதற்கு?’ என்ற கேள்வியை எழுப்புவார் அருந்ததிராய். ஆகவே, நமது எழுத்துகள் எவரையேனும் பாதிக்க வேண்டும். சிந்தனையைத் தூண்ட வேண்டும். செயல்பாட்டிற்கு அழைத்திட வேண்டும். அத்தகைய கோணத்தில் இறைவார்த்தையில் ஊன்றிய சமூக-அரசியல் பணிக்கு நம்மை வழிநடத்தும் ‘நம் வாழ்வு’க்கு என் வாழ்த்துகளும் நன்றியும்.