பேரறிஞர் அண்ணா எழுதிய நாடக நூல் ‘நீதி தேவன் மயக்கம்.’ இராவணன் இரக்கமில்லா அரக்கன் என்ற கம்பரின் தீர்ப்பு! தீர்ப்பைச் சீராய்வு செய்ய இராவணனே நாடகக் காட்சிகளில் தனக்காக வாதிடுகிறான். நாடகத்தின் இறுதிக் காட்சியில் இராவணனின் கேள்விகளுக்கு விடை தெரியாமல் நீதிதேவன் மயக்கம் அடைகிறான். இந்தியச் சமூக அமைப்பில் இராவணன் திராவிடத்தின் குறியீடாகக் கட்டமைக்கப்படுகிறான்.
தேசத்தில்
மறுக்கப்படுகிற சமூக நீதிக்கு உரிமைக் குரல்கள் எழுப்பப்படுவது தார்மீகமும், அடிப்படை அறனும், நீதி பரிபாலனம் மீதான முழு நம்பிக்கையையும் கொண்டதாகும். அது சமூகச் சமத்துவத்திற்கும், மானுடத் தர்மத்திற்கும் உட்பட்டது. நீதிமன்றங்களே இந்திய
அரசியலமைப்பில் சாமானிய மக்களின் இறுதி நம்பிக்கை. வழக்கறிஞர்கள் மூலம் தங்கள் கண்ணீர் துடைக்கப்படும் என்ற நம்பிக்கையில் பாமர மக்கள் நீதியரசர்கள் முன் வருகிறார்கள்.
நீதி
தேவதை யாருக்காகவும், எதற்காகவும் நீதியை வளைக்கக்கூடாது; தராசின் தட்டுகள் சரியாக இருக்க, துலாக்கோல் மையப்பட வேண்டும். நீதியின் முன் அனைவரும் சமம், யார் எனத் தெரியக் கூடாது என நீதி தேவதையின்
கண்களில் கறுப்புத் துணி. அந்தக் கறுப்புத் துணி வேறு வண்ணம் மாறிடக் கூடாது என்பதே நம்
ஆதங்கம்.
மதுரை
உயர் நீதிமன்றக் கிளையில், தமிழ்நாடு அரசின் தேர்வாணையம் குறித்த வழக்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு வருகிறது. வழக்கில் முன்பே, இடைக்காலத் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஒருவர் அமர்வில் இருக்கிறார். தமிழ்நாடு அரசிற்காக வாதிடுகிற மூத்த வழக்கறிஞர் வில்சன் இதைச் சுட்டிக்காட்டி வாதத்தைத் துவங்குகிறார். கடுங்கோபம் கொண்ட மற்றொரு நீதிபதி ஆர். சுப்பிரமணியம், வில்சன் கேட்காத, ஆட்சேபம் தெரிவிக்காத நீதிபதி குறித்த விவரங்களைத் தானே கற்பனை செய்து, ‘நீங்கள் யார் அதை முடிவு செய்ய?’ எனக் கண்ணியக் குறைவாகப் பேசுகிறார்.
இந்தக்
காட்சிகள் யாரோ ஒருவரால், நீதிமன்ற அனுமதியின்றி
பதிவு செய்து, எடிட் செய்யப்பட்டு, சமூக ஊடகங்களில் ‘வில்சனுக்கு நீதிபதியிடம் விழுந்த டோஸ்’ என்ற வகையில் பரப்பப்படுகிறது. இந்த வீடியோவைப் பார்த்த முன்னாள் நீதியரசர் அரி பரந்தாமன், “நீதிபதி கோபமாகப் பேசுகிறார். தவறாகப் புரிந்துகொண்டது குறித்து மூத்த வழக்கறிஞர் வில்சன் தன்னிலை விளக்கம் அளிக்கிறார்” என்று
கூறுகிறார்.
முன்னாள்
நீதியரசர் சந்துரு ஒருபடி மேலே போய் சொல்கிறார்: “நீதிபதியின் உள்மனத்தில் இருப்பதைப் பேசக்கூடாது. நீதிபதி ‘நீ ராஜ்யசபா உறுப்பினர்தானே?
அங்கே போய் இப்படிப் பேசு’ எனக் கடுமை காட்டுகிறார்” என்கிறார்.
தமிழ்நாடு
- புதுச்சேரி வழக்கறிஞர்
சங்கமும், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கமும் “வழக்கறிஞர்களைக் கண்ணியத்தோடு நடத்த வேண்டும்; நீதிமன்றத்தின் கண்ணியம் காக்கப்பட விதிமுறைகளை வகுக்க வேண்டும்; உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியின் தலைமையில் குழு அமைத்து நீதிமன்ற நடவடிக்கைகளைக் கண்காணிக்க வேண்டும்”
என்ற கோரிக்கைகளை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் முன் வைத்தனர்.
அகில
இந்திய வழக்கறிஞர் சங்கச் செயலாளர் ஆதிஷ்
அகர்வாலாவும், தங்கள் சங்கம் சார்பாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் கோரிக்கையும், புகாரும் வைத்தார். இம்மியளவும் கண்டனங்கள் பதியப்படவில்லை என்பதே வழக்கறிஞர்களின் கையறு நிலை. நீதிபதி வழக்கை வேறு அமர்விற்கு மாற்றியும், ‘நீதிமன்ற அனுமதியின்றி நீதிமன்ற நடவடிக்கைகளைப் பதிவு செய்தது யார்?’ என விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
கொஞ்சம்
பின்னோக்கிப் போவோம்: தமிழ் நாட்டின் தெற்கு, வடக்கு மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் வண்ணக் கயிறுகள் கட்டிக்கொண்டு பள்ளிகளுக்கு வருவது வழக்கமாக இருந்தது. இது சாதிய ரீதியான குழு மோதல்களுக்கு வழிவகுத்தது. அடிதடிகள் பள்ளி வளாகத்தில், தெருக்களில் நடந்தன. தமிழ்நாடு அரசு நீதியரசர் சந்துரு தலைமையில் குழு அமைத்துத் தீர்வு தேடியது. ‘வண்ணக் கயிறுகள் கட்டத் தடை’ எனப் பரிந்துரைக்கப்பட்டு, அரசாணைகள் வந்தன.
அந்நேரத்தில்
வேறு ஒரு வழக்கில், தேவை இல்லாமல் வழக்கிற்குச் சம்பந்தம் இல்லாமல் பேசிய நீதிபதி ஆர். சுப்பிரமணியம், “அந்த அறிக்கை
வந்ததிலிருந்துதான் நெற்றியில் விபூதி வைத்துக்கொண்டு, நீதிமன்றம் வருகிறேன்”
எனத் தெளிவாகக் கூறிவிட்டார்.
இதுபோன்றே
கடந்த மாதங்களில் நடந்த ஜக்கி வாசுதேவ் குறித்த வழக்கும் கவனம் கொள்ளக்கூடியதே. தன் இரண்டு மகள்களைச் சட்ட விரோதமாக கோவை ஈஷா யோகா மையத்தில் அடைத்து வைத்திருப்பதாக அவர்களது தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு அளித்தார். கோவை, ஈஷா யோகா மையத்தின் மீதுள்ள வழக்குகளுக்காக அங்குள்ளவர்களை விசாரிக்க காவல்துறைக்குச் சென்னை உயர்
நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவுக்குத் தடை கோரிய கோவை ஈஷா யோகா மையத்தின் கோரிக்கை வழக்கின்போது, அந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தனக்கு மாற்றிக்கொண்டது. வழக்கு விசாரணை அறிக்கை தற்போது உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கோவை,
ஈஷா யோகா மையத்தின்மீது வன அழிப்பு, வன
இட ஆக்ரமிப்பு, யானைத் தடம் அழிப்பு, அனுமதியின்றி விதிமுறைகளை மீறிக் கட்டடங்கள் கட்டுவது, பாலியல்
குற்றச்சாட்டுகள், போதை பொருள்கள் உபயோகம், ஆள்கள் காணாமல் போதல், அரசின் அனுமதியின்றித் தகன மேடை அமைத்தது எனச் சட்ட விரோதக் குற்றச்சாட்டுகள் அதிகம். ஏராளமான வழக்குகள் பதியப்பட்டு, நகராமல் நிற்கின்ற நிலை. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஜக்கி வாசுதேவ் குறித்து தமிழ்நாடு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறிய பொதுவெளிக் குற்றச்சாட்டுகள் அப்படியே உள்ளன. எந்தச் சக்தியாலும் அசைக்க முடியாத மாமனிதராக ஜக்கி
இருக்கிறார்.
உச்ச
நீதிமன்றம் அவரது கடந்த மாத வழக்கில் இவ்வாறு சொல்கிறது: “ஈஷா போன்ற ஒரு நிறுவனத்திற்குள் நீங்கள் இராணுவத்தையோ அல்லது காவல்துறையையோ அனுமதிக்க முடியாது.”
இது
யாரின், எந்த மனநிலையைக்
காட்டுகிறது? என்பதை உங்கள் யூகங்களுக்கே விட்டு விடுகிறேன். ஆயிரம்
குற்றச்சாட்டுகள் உள்ள ஈசா, சட்டப்படி தன்னை நிரூபித்து வெளி வந்தால் மட்டுமே, சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்படும் என்பதே நடுநிலையாளர்களின் நம்பிக்கை.
இருப்பினும்
வரலாற்றுச் சம்பவம் ஒன்றை இங்குப் பதிந்தே தீர வேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கிறது. 03.06.1984 அன்று அமிர்தசரஸ் பொற்கோவிலில் ‘நீல நட்சத்திர நடவடிக்கை’
என்ற பெயரில் இந்திய இராணுவம் உள்ளே புகுந்தது. சொல்லப்பட்ட காரணம்: ‘காலிஸ்தான் எனும் தனி சீக்கிய நாடு
கோரும் தீவிரவாதிகள் பொற்கோவிலில் இருந்தார்கள்; அதன் தலைவர் பிந்தரன் வாலேவும் இருந்தார்’
என்பதே.
பொற்கோவில்
சீக்கிய மத நூலான ஆதி
கிரந்தம் வைக்கப்பட்டுள்ள புனித இடம். பொற்கோவில் சீக்கியர்களின் மத நம்பிக்கையின் முழு
அடையாளம். இன்றும் சீக்கியத் தன்னார்வலர்களால் தினம் இலட்சம் பேருக்கு உணவளிக்கிற கோவில். அத்தகைய பொற்கோவிலில் குண்டு மழை பொழிந்தது. இதனால், இந்திய இராணுவத்தில் கலவரம், இந்திரா காந்தி படுகொலை, ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை என இரத்தம் தோய்ந்த
வரலாற்றின் கறுப்புப் பக்கங்கள்.
வரலாறு
ஒருபோதும் பின்னோக்கிப் போகாது; போகவும் கூடாது.
இந்தியத் திருநாட்டின் 50-வது உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து அண்மையில் ஓய்வுபெற்றுள்ள நீதிபதி D.Y. சந்திரசூட் அவர்களிடம் ஓர் இந்திய சாமானியன் எழுப்பும் சில பல கேள்விகள்.
தேர்தல்
பத்திரங்கள் வழக்கை உடனடியாக விசாரித்து முடிக்காமல், பல்லாயிரக்கணக்கான கோடிகளை ஆளும் கட்சி வசூல் செய்து முடித்த பின்னர், ‘அது சட்ட விரோதமானது’ என்று
தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிநாயகம் சந்திரசூட் அமர்வு, பத்திரம் மூலம் பெறப்பட்ட பணத்தைத் திரும்ப வசூலிப்பதற்கோ அல்லது தவறாக நன்கொடை என்ற பெயரில் வசூல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள்மீது விசாரணை செய்வதற்கோ நடவடிக்கை மேற்கொள்ளப்படாதது ஏன் என்ற கேள்விக்கு என்ன பதில்?
சண்டிகர்
நகர மேயர் தேர்தலை முறைகேடாக நடத்திய அயோக்கியத்தனமான அதிகாரியைக் குற்றவாளி என்று அறிவித்துவிட்டு, அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே என்று விஷயம் தெரிந்த வர்கள் யாரும் கேட்கமாட்டார்களா?
மகாராஷ்டிராவில்
அரசியல் சட்டத்திற்கு விரோதமாக ஷிண்டே-பட்னாவிஸ்-அஜித் பவார் பாவக் கூட்டணியை ஆட்சியில் அமர்த்திய ஆளுநரின் செயல்கள் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று தீர்ப்பளித்துவிட்டு, நடவடிக்கை எடுக்கும் பொறுப்பைச் சபாநாயகரிடம் தூக்கிக் கொடுத்துவிட்டு, முறையாக நடவடிக்கை எடுக்காத சபாநாயகர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், முறையற்ற அரசைப் பதவிக் காலம் முழுவதும் ஆட்சியில் இருக்க அனுமதித்தது மாபெரும் வரலாற்றுப் பிழை என்று நாளைய சரித்திரம் சொல்லாதா?
மலைவாழ்
மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய 84 வயது ஸ்டேன்ஸ் சுவாமியை, ‘நக்சலைட் தீவிரவாதி’
என்று பொய் வழக்கில் கைது செய்து, விசாரணையே இல்லாமல் சிறையிலடைத்து, சிறையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வேளையில், “என் மக்கள் மத்தியில் நான் சாக விரும்புகிறேன்; அதற்காக என்னைப் பிணையில் விடுங்கள்”
என்று அவர் மன்றாடியபோது, உச்ச நீதிமன்றம் பிணை வழங்காமல், அவர் சிறையிலேயே இறந்து போனாரே... அந்த வழக்கு என்ன ஆனது என்று எந்த நீதிநாயகமும் இதுவரை கேட்கவில்லையே! இது நியாயம்தானா? என்று அவரது ஆன்மா கேட்காதா?
இந்தியாவின்
மிகப்பெரிய பணக்காரரான அதானியும், அவரது நிறுவனங்களும் பங்குச் சந்தையிலும், கம்பெனிச் சட்ட வாரியத்திலும் மிகப்பெரிய முறைகேடுகளில் ஈடுபட்டதாக அமெரிக்காவின் ஹிட்டன்பர்க் நிறுவனம் அறிக்கை அளித்தபோது, ‘அந்த அறிக்கை தவறாக இருந்தால் அமெரிக்காவில் நீதிமன்றங்களில் ஹிட்டன்பர்க் மீது நடவடிக்கை எடுங்கள்’
என்று அதானியிடம் சொல்லாமல், ஒரு நிபுணர் குழுவை நியமித்து, அந்தக் குழுவும் எங்களால் முழுமையாக விசாரித்து உண்மையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறிய பின்னரும், அந்த அறிக்கையையே சாதகமாக்கிக்கொண்டு அதானி நிறுவத்திற்கு நன்னடத்தைச் சான்று வழங்கி அளிக்கப்பட்ட தீர்ப்பு முறையானதுதானா?
காஷ்மீர்
மாநிலத்தை மூன்று யூனியன் பிரதேசங்களாக மாற்ற சம்பந்தப்பட்ட மாநில சட்டமன்றத்தின் அனுமதி வேண்டும் என்ற அரசியல் சட்டத்தின் 371 பிரிவின் முக்கிய உள்ளடக்கத்தைப் புறந்தள்ளி, சட்டமன்றம் கலைக்கப்பட்டிருந்த வேளையில், குடியரசுத் தலைவரே குடியரசுத் தலைவரைக் கலந்து அந்த மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றியது செல்லும் என்ற தங்களது தீர்ப்பு மிகவும் விநோதமானது மற்றும் வேடிக்கையானது என்று அரசியல் சாசன விற்பன்னர்கள் கூறுகிறார்களே, அது உங்கள் செவிகளை எட்டியதா?
எந்த
விசாரணையும் இல்லாமல், தீர்ப்பும் சொல்லப்படாமல் நான்கு ஆண்டுகளாக உமர் காலித் எனும் ஏழை இஸ்லாமிய இளைஞர் சிறையிலடைக்கப்பட்டுள்ளாரே...
அவருக்கு இந்த நாட்டின் குடிமகன் என்ற முறையில் உரிமைகள் ஏதாவது உண்டா? என்று மனித உரிமை ஆர்வலர்கள் கேட்கும் கேள்விகளின் சப்தம் எங்கள் காதுகளைச் செவிடாக்குகின்றனவே! உச்ச நீதிமன்றத்தின் காதுகளுக்கு அது எட்ட இன்னும் எத்தனை நாள்கள் ஆகும்?
சாரி!
மை லார்ட்...
உச்ச
நீதிமன்றத்திலும், பல உயர் நீதிமன்றங்களிலும்
சில நீதி அரசர்கள் நடந்துகொள்வதும், அவர்கள் பேசுவதும் நீதிபரிபாலனத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்குகின்றன. நாங்கள் எல்லாரையும் குறைசொல்லவில்லை. விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரது செய்கை நீதி பரிபாலனத்தினையே களங்கப்படுத்துவதைத் தாங்கள் அறியவில்லையா? அப்படிப்பட்டவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் தயங்குவது ஏன்?
சமீபத்தில்
தனக்கு முன் வாதாடிக்கொண்டிருக்கும் ஒரு பெண் வழக்கறிஞரைப் பார்த்து ஓர் உயர் நீதிமன்ற நீதிபதி கேட்ட கேள்வி எவ்வளவு ஆபாசமானது! அதற்கு ஒரு கண்டனம் மட்டுமே போதுமானதா?அந்த நீதிபதி வருத்தம் தெரிவித்தால் சரியாகிவிடுமா? அவரை நீக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்பதை அறிவோம். அந்த நீதிபதி ஆறு மாதங்களுக்கு எந்த வழக்கையும் விசா ரிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தின் அத்தனை நீதிபதிகளும் ஓர் அமர்வில் அமர்ந்து ஓர் உத்தரவு போடமுடியாதா?
தங்களது
பள்ளி வாசல்களுக்குள் இஸ்லாமியர்கள் தொழுகை செய்து கொண்டிருக்கும்போது, பாசிச வெறிகொண்ட வன்முறையாளர் கூட்டம் உள்ளே புகுந்து ‘ஜெய் ஸ்ரீராம்’
என்று கோஷம் போடும்போது, ‘சமூக அமைதியைக் கெடுத்தார்கள்’ என்று
அவர்கள்மீது காவல்துறை வழக்கு தொடர்ந்தால், ‘ஜெய் ஸ்ரீராம் என்று முழங்குவது சமூக அமைதியைக் கெடுக்காது’ என்று
கூறி, அவர்கள்மீது போட்ட வழக்கை ஓர் உயர் நீதிமன்ற நீதிபதி இரத்து செய்தாரே... அப்படிப்பட்ட தீர்ப்புகளெல்லாம் இந்நாட்டின் சிறுபான்மை மக்களுக்குச் சட்டத்தின் ஆட்சி மீதும், நீதிமன்றங்களின் மீதும் இருக்கின்ற நம்பிக்கையைக் குலைத்துவிடாதா? இப்படித் தீர்ப்பு எழுதுகின்றவர்களையும் நாங்கள் ‘நீதி நாயகம்’ என்று எத்தனை நாள்கள் அழைக்க வேண்டும்?
இவைகளெல்லாம்
ஓய்வு பெறப்போகும் உங்களுக்கான கேள்விகள் மட்டுமல்ல, உங்களைத் தொடர்ந்து உங்களது ஆசனத்தில் அமர இருக்கின்றவருக்கும், உச்ச நீதிமன்றத்தின் அனைத்து நீதி அரசர்களுக்கும் வைக்கப்படும் கேள்விகள் மட்டுமல்ல; கோரிக்கைகளும் கூட!
சமீப
காலமாக பா.ச.க.
மத்தியில் அதிகாரத்திற்கு வந்த பின்னர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் வழக்கறிஞர் பிரிவான அகில பாரதிய அதிவக்த பரிஷத் (Akhil Bharatiya Adhivakta Parishad - ABAP) அமைப்பின் ஆளுகையும், செல்வாக்கும் நீதித்துறையில் மிக அதிகமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். டெல்லியிலும், மாநிலத் தலைநகர்களிலும் அடிக்கடிக் கூட்டப்படும் இந்த அமைப்பின் கூட்டங்களில் இந்நாள் மற்றும் மேனாள் உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கலந்துகொண்டு, இந்த அமைப்பின் உறுப்பினர்களுக்குப் பாடம் எடுப்பதும், விவாதம் நடத்துவதும் வாடிக்கையாக நடக்கின்றன. 1992-ஆம் ஆண்டு தத்தோபந்த் தெங்காடி எனும் ஆர்.எஸ்.எஸ். தலைவரால் ஐந்து உறுப்பினர்களைக் கொண்டு துவங்கப்பட்ட இந்த அமைப்பில் இன்று 15,000 உறுப்பினர்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் தொடுக்கின்ற வழக்குகளையும், அவர்கள்மீது தொடுக்கப்படுகின்ற வழக்குகளையும் இந்த அமைப்பைச் சார்ந்த வழக்கறிஞர்கள்தாம் நடத்துகின்றனர். பா.ச.க.
ஆளும் மாநிலங்களிலும், ஒன்றிய அரசு நிர்வாகத்திலும் இந்த அமைப்பினர்தாம் அரசுத் தரப்பு வழக்கறிஞர்களாகப் பெரும்பாலும் நியமனம் செய்யப்படுகின்றனர். இன்று உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் 33 நீதிபதிகளில், ஒன்பது பேர் இந்த அமைப்பின் நிகழ்ச்சிகளில் முக்கிய விருந்தினராகக் கலந்துகொள்கிறார்கள் (பி ஆர் கவாய்,
சூரியகாந்த், ஜே கே மகேஷ்வரி,
பி வி நாகரத்னா, பங்கஜ்
மித்தல், இராஜேஷ் பிண்டல், கே வி விஸ்வநாதன்,
உஜல் புயான், பி பி வராலே).
மாநிலங்களில் இந்த அமைப்பினர் நடத்தும் நிகழ்ச்சிகளில் பல உயர் நீதிமன்ற
நீதிபதிகள் அடிக்கடிக் கலந்துகொள்கின்றனர். சமீபத்தில் திண்டுக்கல்லில் இந்த அமைப்பினர் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் நமது உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரும் முக்கிய விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இந்த
அமைப்பை தெங்காடியோடு சேர்ந்து உருவாக்கியவர்களின் பெயர்களைக் கேட்டால் ஆச்சரியமாக இருக்கும். மேனாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஈ.எஸ். வெங்கட
ராமையா (இவரது மகள் நாகரத்னா தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதி), மேனாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பிஸி கன்னா (வரப்போகும் தலைமை நீதிபதியின் தந்தையின் சகோதரர்), மேனாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி உதய் லலித்தின் தந்தை உமேஷ் தலித், பஞ்சாப் ஹரியானா மாநிலத்தின் தலைமை நீதிபதியாக இருந்த இரமாஜாய்ஸ் என்று பல மேனாள் நீதி
அரசர்கள் இதன் காப்பாளர்களாகச் செயல்பட்டு வருகின்றனர். இன்று இந்த அமைப்பைச் சார்ந்த பல வழக்கறிஞர்கள் பல
உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்திய பார் கவுன்சிலின் தலைவர் மானன் மிஷ்ராவும் இந்த அமைப்பைச் சார்ந்தவரே.
அரசியல்
சட்டத்தை மாற்றாமல், தங்களுக்கு அனுசரணையாகச் செயல்படும் நீதித்துறையின் மூலமே தங்களது அடிப்படைக் கொள்கைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்று ஆர்.எஸ்.எஸ். உறுதியாக இருப்பதாக அவர்களோடு தொடர்பில் இருக்கின்றவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
ஒன்றிய
சட்ட அமைச்சரைப் பார்ப்பதற்காக ஒரு மாநிலச் சட்ட அமைச்சர் சென்றிருந்தபோது அந்த அலுவலகத்தில் அவர் கண்ட காட்சியில் அவர் அதிர்ந்து போனாராம்! அமைச்சரின் பார்வையாளர் அறை முழுவதும் இருக்க இடமில்லாமல் உட்கார்ந்திருந்த அநேகர் உயர் நீதிமன்ற நீதிபதிகளாம்! தங்களது பதவி மாறுதல்களுக்காகவும், பதவி உயர்வுக்காகவும் சட்ட அமைச்சரைச் சந்திக்க வந்திருப்பதாக அங்கிருந்த ஒருவர் கூறியதாகக் கூறினார்.
சுதந்திரம்
பெற்று, சனநாயகம் கிடைத்து, நம்மை நாமே சட்டத்தின் ஆட்சி மூலம் ஆளும் அதிகாரம் பெற்று இன்னும் நூறு ஆண்டுகளைக்கூட நிறைவு செய்யவில்லை. அவைகளைத் தொலைத்துவிடுவோமோ என்று பயமாக இருக்கிறது! அரசியல் கொள்கைகள் மற்றும் தத்துவங்களால் ஈர்க்கப்பட்ட நீதித்துறை (Indoctrinated judiciary)
சனநாயகத்தின், சட்டத்தின் ஆட்சியின் அழிவின் துவக்கம்!
கண்ணதாசன்
பாடியதுதான் நினைவுக்கு வருகிறது:
‘மங்கை சூதானால் கங்கையில் குளிக்கலாம்!
கங்கையே
சூதானால் என்ன செய்வது?’
சாரி! மை
லார்ட்ஸ்!
அண்மையில் அக்டோபர் 22 அன்று வெளிவந்த நாளிதழ்கள் சமயச் சார்பின்மை தொடர்பான மூன்று செய்திகளைத் தந்துள்ளன. மூன்றினுள் சமயச் சார்பின்மை பற்றிய நம்பிக்கை தரும் செய்தியும் உண்டு; அவநம்பிக்கையைத் தக்கவைக்கும் செய்தியும் உண்டு. ‘சமயச் சார்பின்மை’ என்பது வெறும் முழக்கமல்ல; சமயச் சார்பின்மை சமயச் சார்பற்ற சனநாயகச் சக்திகளின் தேர்தல் நேரத்து அறிவிப்புகளில் ஒன்றுமல்ல.
விடுதலை
பெற்ற இந்தியா இரு நாடுகளாகப் (Two nations)
பிரிக்கப்பட்ட நிலையிலும், இரு நாடுகளில் ஒன்று மத அடிப்படையில் உருவான
போதும், இந்திய அரசியல் நிர்ணய சபை ‘அரசமைப்பின் மூலம்’ இந்தியாவை இறையாண்மையோடு கூடிய சனநாயகக் குடியரசாகவே அறிவித்தது. ஆம்! அரசியல் சாசனத்தின் முகப்புரையில் சமயச் சார்பின்மை மற்றும் சமத்துவம் (Socialism) என்ற
வார்த்தைகள் இடம் பெறவில்லை என்பதும் உண்மைதான். இந்திய அரசமைப்பின் முகப்புரையில் 1976-ஆம் ஆண்டு திருமதி. இந்திராகாந்தி அவர்களின் ஆட்சிக் காலத்தில்தான் சமயச் சார்பின்மை (Secular), சமத்துவம்
(Socialism) என்ற
இரண்டு சொற்களும் இணைக்கப்பட்டன.
“விடுதலை பெற்ற இந்தியா சந்திக்கவிருக்கும் சவாலாக எதனைக் கருதுகிறீர்கள்?” என்ற வினாவைப் பண்டித நேருவிடம் முன்வைத்தபோது அவர், “ஒரு சமயம் சார்ந்த நாட்டில் சமயச் சார்பற்ற சமூகத்தைக் கட்டுவதே”
(create a sender state in a religious
society) என்று பதிலளித்தார். இச்சவாலைக் கையிலெடுத்து, சமயச் சார்பின்மையை வலிந்து நிலைநிறுத்தியவர்களில் முதன்மையானவருள் பண்டித நேரு என்றும் போற்றுதற்குரியவர். இரு வேறுபட்ட முரண்பட்ட கொள்கைகளில் வளர்ந்த தேசிய இயக்கத்துள் ஒன்றான இந்து தேசியர்கள் சமயச் சார்பின்மையையும், சமத்துவத்தையும் எப்போதுமே ஏற்காதவர்கள். இந்திய அரசியல் சாசனம் தந்த சமயச் சார்பின்மையை ‘போலி மதச்சார்பின்மை’ (Psecedo Secular) என்று கேலி செய்பவர்கள்; சமத்துவம் இவர்களின் முதல் எதிரி. ஆர்.எஸ்.எஸ். என்ற மூலஅமைப்பும், அதன் துணைப் பரிவாரங்களும் இவைகளோடு ஆர்.எஸ்.எஸ்-சின் அரசியல் முன்னணியான அன்றைய பாரதிய சனசங்கமும், இன்றைய பாரதிய சனதா கட்சியும் என்ன கூறி வந்தன?
‘நாங்கள் முழுப் பெரும்பான்மை அடையும் நிலையில் அரசமைப்பை மாற்றுவோம்’ என்ற
பாரதிய சனதா கட்சி, வாஜ்பாய் தலைமையில் ஆட்சியேற்றபோது, தாம் ஏற்கெனவே உறுதியளித்தபடி, அரசமைப்பை மாற்றியமைக்க நீதியரசர் வெங்கட செல்லையா தலைமையில் குழுவொன்று அமைத்தது. இக்காலத்தில் நல்வாய்ப்பாக இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்தவர் திரு. கே.ஆர். நாராயணன்.
இக்குழு உருவாக்கத்திற்கு அனுமதியளித்த நாராயணன், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளை மாற்றக்கூடாது என்பதில் உறுதி காட்டினார். இக்குழுவும் தன் பரிந்துரையை அடிப்படைக் கூறுகளில் எந்தவித மாற்றமும் செய்யாமலேயே சமர்ப்பித்தது. ஆனால், இன்று அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கையற்ற ஒரு கட்சி ஆட்சிக் கட்டிலேறி ஆண்டுகள் பத்தான நிலையில், அரசமைப்பின் அடிப்படைக்கூறுகளை நாளும் சிதைத்து வருதலை இந்தியா பார்த்து வருகிறது.
இந்திய
அரசமைப்பின் முகப்புரையில் சமயச் சார்பின்மை மற்றும் சோசலிசம் என்ற வார்த்தைகள் ஏற்கெனவே இடம்பெறா நிலையில் இவ்வார்த்தைகள் அகற்றப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர் திரு. சுப்பிரமணிய சுவாமி. இவ்விரு கோட்பாடுகளும் மதவாதக் கொள்கைகளுக்கு எதிரானவை என்பதால் எதிர்த்த இவர்கள், ஏற்கெனவே உருவாக்கப்பட்ட அரசியல் சாசன முகப்புரையில் இடம்பெறாமையால் நீக்கப்பெற வேண்டும் என்று பொய்க்காரணம் காட்டி வழக்காடினர். உச்ச நீதிமன்றம் இங்கும் சரியாகவே தீர்ப்பளித்தது.
“சமயச் சார்பின்மை இந்திய அரசமைப்பின் மறுக்க முடியா அடிப்படைக் கூறு” மீண்டும் மதச் சார்பின்மை எப்போதுமே அரசமைப்பின் அடிப்படைக் கூறாகவே இருக்கிறது. சமத்துவம், சகோதரத்துவம்
போலவே சமயச் சார்பின்மையும் அடிப்படைக் கூறாகவே இருக்கிறது. சோசலிசம் என்ற கொள்கையை மேலைநாட்டுக் கண்ணோட்டத்தில் பார்த்தல் தவறு என்றும், சமவாய்ப்பு மற்றும் சமூக வளங்களைச் சமமாகப் பகிர்தலே இந்திய சோசலிசம் என்றும் உச்ச நீதிமன்றம் உறுதியாகத் தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
உச்ச
நீதிமன்றம் வழங்கிய இத்தீர்ப்பில் சனநாயகச் சக்திகள் பெருமகிழ்வு கொள்ளலாம். 2014-ஆம் ஆண்டு இந்திய நாட்டின் ஆட்சி பாரதிய சனதா வசம் சென்றபோது, ஏற்கெனவே எழுந்த அரசமைப்பின் முகப்புரையின் சாராம்சம் குறித்த அச்சம் மக்கள் சிலரிடம் இருந்தது. அவ்வச்சத்தை உண்மையாக்கும் வகையில் அவ்வாண்டு நடைபெற்ற குடியரசு விழாவுக்கான அரசின் அழைப்பிதழில், அரசமைப்பின் பிரதான கூறுகளான சமயச் சார்பின்மையும், சமத்துவமும் விடப்பட்டிருந்தன என்று சொல்வதைக் காட்டிலும், திட்டமிட்டுக் களவாடப்பட்டன என்றே சொல்லலாம். திட்டமிட்டு நடத்தப்பட்ட இக்களவாடலுக்குக் காரணமான அரசு எந்தவித வருத்தமும் தெரிவிக்கவில்லை.
அரசமைப்புச்
சட்டத்தின்மீது கைவைத்து உறுதி மொழியேற்று, பதவியேற்கும் சங்கப் பரிவாரங்கள், அரசமைப்பு முகப்புரையின் கூறுகள் அனைத்தையும் நாளும் மீறிக்கொண்டே அரசியல் அமைப்பு தினக் கொண்டாட்டத்தை அறிவிக்கின்றன. அரசமைப்புச் சட்டத்தை, தான் வேதமாகப் போற்றுவதாக மோடி கூறுகிறார். மதவாதப் பாரதிய சனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சனநாயகமும், அரசமைப்பும் பறிபோய்விடும் என்ற அச்சத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பியது கண்டு, மோடி கோபம் கொண்டார். எதிர்க்கட்சிகளைக் கண்டபடி வசைபாடி கேலி செய்தார்.
சமயச் சார்பின்மை
என்றால்
என்ன?
சமயச்
சார்பின்மை என்பது சமயத்தை மறுப்ப தல்ல; சமயம் முன்வைக்கும் கடவுளையும் மறுப்ப தல்ல! மாறாக, பன்முகச் சமயங்களை உடைய ஒரு நாட்டில் சமயங்களின் சமத்துவத்தை மதிப்பது மத அடிப்படையில் மக்களைப்
பாகுபடுத்தாமல், பெரிய சமயங்களையும் சிறிய எண்ணிக்கையிலான சமயங்களையும் சமமாக மதிப்பது.
மதச்சுதந்திரம்
இங்குப் போற்றப்படும் உரிமையுள் மிகப்பெரிது. மதத்தைத் தழுவவும், தழுவிய மதத்தைக் கடைப்பிடிக்கவும், கடைப்பிடிக்கும் மதத்தைப் பரப்புரை செய்யவும் அனைவருக்கும் உரிமையுண்டு. அதேவேளை, இயங்கும் மதங்களுக்கும், ஆளும் அரசுக்கும் எத்தொடர்பும் இல்லை. மதம் அரசின் கொள்கையை வகுக்க முடியாது. சனநாயக அரசின் நிறுவனங்கள் எவற்றிற்கும் மதக்கொள்கைகள் ஆதாரமாக இருப்பதில்லை, இருக்கவும் முடியாது.
“நான் சார்ந்த மதத்தை உளமார மதிக்கிறேன். என் மதத்தைக் காக்கும் வகையில் உயிரை விடவும் தயாராக இருக்கிறேன். இது என்னுடைய தனிப்பட்ட நம்பிக்கை. அரசுக்கும், இந்த நம்பிக்கைக்கும் எத்தொடர்பும் இல்லை. அரசு குடிமக்களின் சமயச் சார்பற்ற நிலைகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்தட்டும். மக்களின் நலவாழ்வு, ஆரோக்கியம், சமூகத் தொடர்பு, வெளியுறவு என்பனவற்றில் அரசு கவனம் செலுத்தட்டும். என் மதத்தில் தலையிட அரசுக்கு உரிமை இல்லை” என்றார் மகாத்மா காந்தி.
1945 -ஆம் ஆண்டில்
நேருவோ, “நான் முழுமையாக நம்புகிறேன். நாம் அமைக்கவிருக்கும் அரசு உறுதியாகச் சமயச் சார்பற்ற அரசாகத்தான் இருக்கும். அந்த அரசு இந்த நாட்டின் எந்தச் சமயங்களோடும் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாது. ஆனால், அனைத்துச் சமயங்களும் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கும்” என்றார்.
தொடர்ந்து சொல்கிறார்... “சமயச் சார்பற்ற அரசு பெரும்பான்மை சமூகம்மீது வைக்கப்பெறும் ஒரு நம்பிக்கை என்பது பெரும்பான்மை சமூகம் மதச் சிறுபான்மையினரிடம் கரிசனையோடும் பரிவோடும் நடந்துகொள்வதில் இருக்கிறது” என்றார்.
மத
நம்பிக்கையுடைய காந்தி, தான் சார்ந்த மதத்தின் கோட்பாடுகளில் உறுதியான நம்பிக்கையுடையவராயினும், அரசு சமய நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் கடுமையாக எதிர்க்கிறார். சமயச் சார்பற்ற அரசையே வரவேற்கிறார். பண்டித நேரு, காந்தியின் உற்றச் சீடனாக இருந்தாரெனினும், நேரு கடவுள் பற்றிய சிந்தனையற்றவர் (Gnostics); நிலவும்
எச்சமயத்தோடும் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாதவர். அவர் சமயச் சார்பின்மையின் தேவையை வலியுறுத்துவதோடு, சமயங்களிடையே நிலவ வேண்டிய நல்லுறவு பற்றியும் பேசுகிறார். “இந்தியா சமயச் சார்பற்ற அரசாக மாற்றம் பெறுகையில் கடவுளையோ, மதங்களின் ஏற்புடைமையையோ மறுக்கிறோம் என்று பொருளில்லை. இந்தியப் பாரம்பரியம் எப்போதுமே ஏதோ ஒரு சமயத்தை ஏற்கும் குணமுடையது என்றாலும், இந்தியச் சமூகம் ஏதோ ஓர் ஒற்றைச் சமய கட்டுப்பாட்டிற்குள் அடங்காது என்பதுதான் உண்மை. எந்தக் குறிப்பிட்ட சமயத்திற்கும் அரசு தனி அங்கீகாரம் வழங்கக்கூடாது. அம்மாதிரியான சிறப்பு அங்கீகாரம் என்பது சனநாயகத்தையே அவமதிப்பதாகும் என்பதோடு மானுட உரிமைகளுக்கும் எதிரான போக்காகும். குடிமகன் ஒருவன் தான் சார்ந்த சமய நம்பிக்கையால் பாகுபடுத்தப்படக் கூடாது. பொது வாழ்வில் அனைத்துக் குடிமக்களும் தம் நம்பிக்கையின் சிறப்பைப் பகிர்ந்துகொள்ள அனுமதிக்க வேண்டும்”
என்றார் டாக்டர் இராதாகிருஷ்ணன்.
மேலும்,
உச்ச நீதிமன்ற நீதியரசர், முஸ்லிம்களின் மதராசா கல்விக் கூடங்கள் குறித்த தீர்ப்பு, சமயச் சார்பற்ற அரசு மதச் சிறுபான்மையினருக்கு அளித்துள்ள உரிமையைக் கேள்விக்குள்ளாக்கியது அதிர்ச்சியைத் தருகிறது. ‘மதச் சிறுபான்மையினர் நடத்தும் கல்விக்கூடங்கள் மீதான சட்ட ஒழுங்குகள் சமயச் சார்பின்மைக்கு எதிரானதல்ல’ என்ற
நீதியரசர் சந்திரசூட் அவர்களின் தீர்ப்பு, உருவாக்கவிருக்கும் விளைவு என்னவாயிருக்கும்? சிறுபான்மையினர் தாம் விரும்பியவாறு கல்வி நிறுவனங்களை நிறுவவும், நிர்வகிக்கவுமான உரிமைகள் மதச் சிறுபான்மையினரின் பண்பாட்டு உரிமைகளைக் காக்கும் கருவியாகக் கருதப்படுகையில், உச்ச நீதிமன்றத்தின் இப்பார்வை என்ன மாதிரி பாதிப்பைத் தரும்? சிறுபான்மையினர் சிந்திக்க வேண்டும்.
சமயச் சார்பின்மையின்
சோக
முடிவு
விடுதலை
பெற்ற இந்தியா கட்டிக்காத்த சமயச் சார்பின்மை இன்று மதத்தின் பெயரால் ஆளப் பெறுகிறது. பெரும்பான்மை இல்லாத மதத்தின் பெயரால் மதப் பெரும்பான்மைவாதம் கட்டமைக்கப்பட்டு, மதச் சிறுபான்மையினர் அரசியல், சமூக ரீதியாக ஒதுக்கப்படுகின்றனர். அரசமைப்பின் முகப்புரை இந்தியத் தேசியத் தத்துவம் (National Philosophy)
எனக் கருதப்பட்டு, வளர்த்தெடுக்கப்பட வேண்டிய நிலையில், தேசம், தேசப்பற்று என்ற பெயரில் ‘ஜெய் ஸ்ரீராம்’,
‘பாரத மாத்தா கீ ஜே’ போன்ற முழக்கங்களே தேசிய முழக்கங்களாகி விட்டது. வாழ்த்துச் சொற்கள் பகைச் சொற்களாக நிலவும் அவலம். இராம சென்ம பூமியில் இராமருக்கான கோவில் கட்டி முடிப்பது சமயச் சார்பற்ற அரசின் தேர்தல் நிலைப்பாடாக இருக்க முடியாது. மதச்சிறுபான்மையினரின் 400 ஆண்டுகால வரலாற்றையுடைய வழிபாட்டுத் தலம் ஒன்று மதம் சார்ந்த ‘பக்தர்களால்’ தகர்க்கப்பட்டதோடு,
மதப்பகையால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்நிகழ்வு ‘இந்து தேசிய எழுச்சி’ என்று கொண்டாடப்படவும், அழிவின்மீது கட்டி எழுப்பப்பட்ட கோவிலுக்கான மதரீதியான சடங்கினைச் சமயச் சார்பற்ற அரசின் பிரதமரே பிரதமப் பூசாரியாய் நின்று செய்து முடிப்பதன் பொருள் என்ன?
இந்திய
அரசமைப்பினை வேதமெனப் புகழ்ந்த இந்தியப் பிரதமர், மதத்தால் வேறுபட்டவர்களை ‘சுதேச விரோதிகள்’
என்று வசைபாடுகிறார். குடியுரிமை குடிமக்களின் அடிப்படை உரிமையாயிருக்க, குடியுரிமை பெற்ற குடிமக்கள் மதரீதியாகப் பாகுபடுத்தப்படுகின்றனர்.
சமயச்
சார்பின்மையை உலகுக்கு அறிமுகப்படுத்திய பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில், சமத்துவமும், சகோதரத்துவமும் பிரிக்கவியலாப் பண்புகளாயிருந்தன. மதவாதம் தூக்கிப் பிடிக்கப்படும் இந்நாட்டில், நாம் கண்ட சமயச் சார்பின்மை ‘சமயங்களைச் சமமாக நடத்துவது’
என்ற உயரிய நோக்கம் சிதைந்து வருகிறது.
சமூகத்தால்
இயங்கும் சமயம் என்ற நிலை மாறி, சமயத்தால் இந்தியச் சமூகம் என்ற நிலை ஏற்பட்டு வருவது இன்றைய சோகத்தின் உச்சம்.
நேற்று மாதிரி
இன்றில்லை;
ஆகவே...
‘தாய்’ வார இதழின் ஆசிரியர் திரு. வலம்புரி ஜான் அவர்கள் ஒரு சிறந்த கவிஞர், பேச்சாளர், எழுத்தாளர். ‘நம் வாழ்வு’ வார இதழின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிப்பவர். 20.12.1981 அன்று 1981- இல் வெளிவந்த கத்தோலிக்க இதழ்கள் பற்றி நம் வாழ்வில் அவர் எழுதிய அற்புதமான படைப்பு!
“நான்
எழுதுகிறவன், எழுத்தை ஆள்கிறவன் அல்லன். என் ஆட்சி ஆரம்பிப்பதற்கு இன்னமும் காலம் இருக்கிறது. இப்போது எனது எழுதுகோல் தொட்டிலில் கிடக்கிறது. என்றாலும், அது ஒரு நாள் சிம்மாசனம் ஏறும்.
நான்
ஏன் எழுதுகிறேன்? எழுதாமலிருக்க முடியவில்லை. ஆகவே எழுதுகிறேன். குயிலுக்குப் பாடாமல் இருக்க முடியவில்லையே! மயிலுக்கு ஆடாமலிருக்க முடியவில்லையே! அதைப் போல...
நான்
எழுதிய கவிதை வெளிச்சத்தைப் பார்த்து பதினெட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போது நாகர்கோவிலிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘தென் ஒலி’ என்கிற மாத இதழிலேதான் அந்தக் கவிதை வெளிவந்திருக்கிறது. அது வியாகுல மாதாவைப் பற்றியது.
அது
ஒரு செப்டம்பர் மாதம் என்பது மாத்திரம் நினைவிலிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை அதில் நினைவில் நிற்பதற்கு ஒன்றுமில்லை. பூவும், பிஞ்சுமான எனது நினைவுகளால் புலர்வான முற்றத்தில் நான் போட்ட முதல் கோலம் அது.
அப்போதெல்லாம்
‘சர்வ வியாபி’ என்றொரு பத்திரிகை வரும். அதிலிருந்த விவகாரங்களிலிருந்து எனது நினைவுகள் எப்போதோ தப்பித்து விட்டன. ஒன்று மாத்திரம் நினைவிருக்கிறது. அது நமக்குள் நாமே படித்துக்கொள்கிற பத்திரிகை. மற்ற சமயத்தினர் அதை மறந்தும் பார்க்கமாட்டார்கள். காரணம், அதன் கிட்டப் பார்வைதான்.
மறைதிரு
‘வெனிஷ் அடிகளார்’
நடத்திய ‘நற்கருணை வீரன்’ என்ற பத்திரிகையை எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அதை நான் பள்ளிப் பிள்ளைகளிடத்திலே விற்றதுண்டு. சிறுவர் இதழ்களில் சிறப்பாக வந்த கிறித்தவ இதழ் இதுதான். அதில் வந்த கதைகள் நலம் தரும் கனிகள்.
‘ஞான தூதன்’ நான் நீண்ட நாளாகப் பார்த்தும், சில வேளை படித்தும் வருகிற பத்திரிகை. எங்கெங்கே, எவரெவர்கள் இறந்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள இந்தப் பத்திரிகை ஒன்றே எனக்கு இப்போதும் உதவுகிறது. அரை நூற்றாண்டுக்கு மேலாக நடந்து வருகிற பத்திரிகை இது. அதன் உள்ளடக்கம் வெகுவாக இப்போது மாறித்தான் இருக்கிறது!
ஞான
தூதனில் ‘உங்கள் கேள்விகள் - பதில்கள் வசந்த்’ என்கிறவர் தருகிறார். கடந்த பத்தாண்டு காலத்தில் ‘தூதனின்’ முகம் வெகுவாக மாறியிருக்கிறது என்பதற்கு இந்தக் ‘கேள்வி-பதில்’ அழுத்தமான எடுத்துக்காட்டாகும். இதிலே வருகிற ‘கேள்வி-பதில்கள்’
கிறித்தவர்களுக்குப்
பத்திரிகை நடத்தவரும், பதில் சொல்ல வரும் என்பதற்குச் சான்றாக விளங்குகிறது.
பாண்டிச்சேரியிலிருந்து,
‘வில்லியனூர் விடி வெள்ளி’ என்றொரு பத்திரிகை வருகிறது. இதில் பி.எல். சாமி
போன்ற தமிழறிஞர்களெல்லாம் எழுதுகிறார்கள். இதில் வருகிற கவிதைகள் ‘மரபுக் கவிதைகள்’
என்றாலும், மறக்க முடியாத கவிதைகள்!
சலேசியச்
சகோதரர்கள் நடத்தும் ‘அரும்பு’ விரும்பும்படி இருக்கிறது. ‘காகிதத்தைப் பார்த்தால் கழுதைக்குச் சாப்பிடத் தோன்றுகிறது. கவிஞனுக்கோ கவிதை படைக்கத் தோன்றுகிறது’ என்று
எப்போதோ நான் சொன்னதை எடுத்துப் போட்டிருந்தார்கள். கோலிக்குண்டாகக் குறுகிப்போன ஓர் உலகத்தில் ஆரஞ்சுப் பழமாக விரிந்த அற்புதமான மனிதர்கள் இவர்கள்!
கிறித்தவப்
பத்திரிகைகள் எந்த அளவிற்கு மாறியிருக்கின்றன என்பதற்கு ‘நம் வாழ்வு’ ஓர் உதாரணம். சட்டையாகிய அட்டையிலிருந்து சில விவகாரங்களும் இதிலே புதிதாக முளைத்திருக்கின்றன. வேர்கள் பழமையானவை, பூக்கள் புதுமையானவை என்பதற்கு ‘நம் வாழ்வு’தான் வரலாற்றுச் சான்றாக இருக்கிறது.
‘காக்கைக் கூடுகள்’ எழுதி கவனத்தில் நிலைத்துவிட்ட ஐசக் அருமைராஜன், ‘விசப் பானங்கள்’
என்று எழுதுகிறார். ‘மேற்கே உதித்த சூரியன்’ தலைப்பே நன்றாக இருக்கிறது. ராசி. அழகப்பன் எழுதிய ‘ஒரு புதிய தலைமுறை தோன்றும்போது...’ என்ற சிறுகதை நெஞ்சில் விதைக்கப்பட்ட நெருப்புத் துண்டு. ‘வாசகர் மேடை’ என்பதில் ‘அக்கிரமத்தின் சங்கிலிகளை அறுத்து விடு, அழுத்தியிருக்கும் நுகத் தடிகளை இறக்கு - ஒடுக்கப்பட்டவர்களை உரிமை மக்களாக விடுதலை செய்’ என்ற வரிகளைப் பார்த்ததும் என் கண்களில் நீர் துளிர்த்தது.
‘மனை மலர்’,
‘தீபிகை’, ‘பூக்கூடை’ இப்படி
எத்தனையோ கிறித்தவப் பத்திரிகைகள் வந்து கொண்டிருக்கின்றன. இவற்றின் மீது தீர்ப்புச் சொல்லுகிற வேலை எனக்கு வேண்டாம். இருந்தாலும் பொதுவாக, கிறித்தவப் பத்திரிகைகளைப் பார்க்கிறபோது காலத்திற்கேற்றபடி அவை மாறி வந்திருக்கின்றன; மாற முடியாத பத்திரிகைகள் மறைந்திருக்கின்றன என்றே சொல்லலாம்.
மற்ற
சமயத்தவர்களுக்கெல்லாம்கூட
ஞானம் உண்டு என்பதை நாம் ஏற்றுக்கொள்வதற்கே இத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. இன்னமும்கூட பாருங்கள், ‘மகாகவி பாரதிக்கு’
ஒரு நூற்றாண்டு விழா வருகிறது. நமது பத்திரிகைகள் அதைப் பற்றி எழுதியதாகத் தோன்றவில்லை.
ஒரு வேளை கவிஞர் பொ.ம. ராசா
மணி எழுதியிருக்கிறாரோ என்னவோ?
நதி
வேகமாகக் கடந்து கொண்டிருக்கிறது. அது ஒரு காலநதி. அது மரங்களைக் கேட்டுக் கொண்டு போக இயலாது. அதில் ஒன்று நாம் மூச்சடக்கிக் கொண்டு மூழ்க வேண்டும். இல்லாவிட்டால் முயன்று நீந்த வேண்டும். இல்லாவிட்டால் மிதந்தாவது
போக வேண்டும். ஓரத்திலிருந்து கொண்டிருந்தால் ஒதுக்கப்பட்டவர்களாவோம்.
இதை
நமது பத்திரிகைகள் உணர்ந்து கொண்டால் நல்லது! இல்லாவிட்டால் காலம் அந்த வேலைக்கு வந்துவிடும்!
மறைமாவட்ட
ஆயரும், கன்னியர்கள் சிலரும் ஒருமுறை என்னிடம் பேச்சுக் கொடுத்தார்கள். ‘ஒரு குறிப்பிட்ட கிறித்தவப் பத்திரிகையைவிட இரயில்வே கைடு படிக்கும்படியாயிருக்கிறது’ என்று
தெரிவித்தேன். இது நடந்தது நான்கு வருடங்களுக்கு முன்பு. இப்போதும் அந்தப் பத்திரிகை தன்னை மாற்றிக்கொள்ளாமலே இருக்கிறது.
பொதுவாக
நமக்குள் நாமே வாசித்துக் கொண்டிருப்பதற்காக ஒரு பத்திரிகை நடத்த வேண்டிய அவசியமில்லை. நமது பத்திரிகைகள் எல்லாம் சந்தாதாரர்களுக்குச் சேர்கின்ற பத்திரிகைகளே! பெரும்பான்மையாகக் கடைகளுக்கு வருவது இல்லை. இயேசுவின் திருமறை எல்லாத் திசைகளிலும் இருப்பவர்களை எட்டிப்பிடிக்க வேண்டும் என்பது நமது நோக்கம் என்கிறோம். நமது பத்திரிகைகள் அதற்கான கருவிகளாக இல்லை.
வாய்க்கால்கள்
சரியில்லாமல் இருக்கிறபொழுது வயல்கள் வறண்டு போவதில் என்ன ஆச்சரியமிருக்கிறது? அதிகமான மறுவுலகச் சிந்தனைதான் நமது பத்திரிகைகளை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதாக நான் உணர்கிறேன். நேற்று மாதிரி இன்றில்லை; ஆகவே, இன்று மாதிரி நாளை இராது என்பதில் நமக்கு அழுத்தமான நம்பிக்கை இருக்கிறது. நமது பத்திரிகைகளுக்குள் விரிவாகி வருகிற சமூகப் பார்வை ‘வைகறை விடியலுக்கு’ விடிவெள்ளி
போல முளைத்திருக்கிறது.”
ஏழைகளின் அழுகுரலை வசப்படுத்தும் ஆண்டவர்!
திருத்தந்தையின் சிந்தனைத் தாக்கம்
திரு
அவை கொண்டாடும் எட்டாவது ஏழைகள் ஞாயிறுக்கான (17.11.2024) செய்தி மடலில் “ஏழைகளின் வாயினின்று எழும் விண்ணப்பம் கடவுளின் செவிகளை எட்டும்”
(சீராக் 21:5) என்பதை மையச்
சிந்தனையாகத் திருத்தந்தை
தந்திருக்கிறார்.
நமது
இறைவேண்டல் இறை சன்னிதானத்தை அடையும் என்பது கிறித்தவர்களின் எதிர்நோக்கு. அதிலும் ஏழையின் இறைவேண்டல் நிச்சயம் இறைவனைச் சேரும். ஏழைகளுக்காக நாமும் மன்றாடும்போது, அவர்களின் துன்பங்களில் ஒன்றிக்கிறோம் என்பதையும் திருத்தந்தை இந்தச் சுற்றுமடல் வழியாகத் தெளிவுபடுத்துகிறார்.
சீராக்
ஆசிரியர் பென்சீரா எருசலேமில் கி.மு. இரண்டாம்
நூற்றாண்டில் வாழ்ந்த ஞானமுள்ள மனிதர். தன்னுடைய ஞானத்தேடல் பயணத்தில் ‘இறைவனின் இதயத்தில் ஏழைகள் சிறப்பிடம் பெறுகிறார்கள்’ என்கிற
அடிப்படை உண்மையை வெளிப்படுத்துகிறார். ஏழைகளுக்கு நீதி வழங்கும் வரை பொறுமையின்றி இறைவன் இருக்கிறார் என்பதையும் பதிவு செய்கிறார்.
“தங்களைத் தாழ்த்துவோரின் வேண்டுதல் முகில்களை ஊடுருவிச் செல்லும்; அது ஆண்டவரை அடையும்வரை அவர்கள் ஆறுதல் அடைவதில்லை. உன்னத இறைவன் சந்திக்க வரும்வரை அவர்கள் நற்பயிற்சியில் தளர்ச்சியடைவதில்லை; அவர் நீதிமான்களுக்குத் தீர்ப்பு வழங்குகிறார்; தம் தீர்ப்பைச் செயல்படுத்துகிறார். ஆண்டவர் காலம் தாழ்த்தமாட்டார்” (சீராக்
35:17-19).
அக்கறையுள்ள
தந்தையாய் கடவுள் இருப்பதால் பிள்ளைகளின் துயரங்களை அறிகிறார். ஏழைகள், விளிம்புநிலையினர், துயரப்படுவோர், மறக்கப்பட்டோர் அனைவரின் நிலைகளையும் உணர்ந்து பாதுகாக்கிறார். கடவுளின் கண்களில் நாம் ஏழைகளாய் இருப்பதால் அவரது இதயத்துக்கு நெருக்கமானவர்களாக மாறிவிடுகிறோம்.
கடவுளின்
முன்பு நாம் அனைவரும் பிச்சைக்காரர்கள் என்பதை மறந்து, தலைவர்கள் போல பலர் நம்மைக் காட்டிக்கொள்கிறோம். பெரியவன், பெயர் பெற்றவன், சொத்துகளுக்கு அதிபதி என்று அடையாளப்படுத்துகின்ற இந்த உலகில், ஏழைகளின் உரிமைகளையும் மாண்பையும் மதிக்காமல் இங்கு எவரும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. ஆற்றல் மிக்க தலைவர்கள் என்று நினைத்துப் போர்களை ஏற்படுத்தும் ஆணவமிக்கத் தலைவர்கள் கடவுளின் பார்வையில் ஏழையராகத்தான் இருக்கிறார்கள்.
போர்
தளவாடங்களால் எவ்வளவு மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்? எவ்வளவு அப்பாவி மக்கள் பலியாகிறார்கள்? இவர்களும் இறைவனின் சாயலாக நமக்குத் தெரியவேண்டும்; நமது ஆதரவை அவர்கள் பெறவேண்டும். ஒவ்வொரு
கிறித்தவரும் ஏழையின் விடுதலைக்காக, வளர்ச்சிக்காக, கடவுளின் கருவிகளாக இருக்குமாறு அழைக்கப்பட்டுள்ளோம். ஏழைகளின் அழுகுரலை வசப்படுத்தவும் கவனத்தோடு கேட்கவும், அவர்கள் உதவிக்கு வரவும் வேண்டுகிறது (நற்செய்தியின் மகிழ்ச்சி, 187).
இறைவேண்டல்
ஆண்டில் ஏழைகளின் இறைவேண்டல் நமதாகவும், அவர்களோடு இணைந்து வேண்டுவதும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. இன்று ஏழைகள் அனுபவிக்கிற மிக மோசமான நிலை என்பது அவர்களுக்கு ஆன்மிகக் கவனத்தைக் கொடுக்காததுதான். கடவுளின் நட்பை, இறையாசிரை, வார்த்தையை, அருளடையாளங்களின் கொண்டாட்டத்தை இறைநம்பிக்கையில் வளர்ச்சி மற்றும் முதிர்ச்சிகொண்ட ஒரு பயணத்தை அவர்களுக்கு அளிக்கத் தயங்கக்கூடாது. ஏழைகளுக்கான தனிக்கவனம் அவர்களுக்குச் சிறப்பான சமயப் பராமரிப்பாக மாறவேண்டும் (நற்செய்தியில் மகிழ்ச்சி, 200)
ஏழை
என்பதை ஏற்றுக்கொள்ளத் தாழ்ச்சி மிகவும் தேவை. “உண்மையான ஏழையாக வாழ்வதே சமூகத்தில் நல்லது” என்கிறார் புனித அகுஸ்தினார். ஊதாரி மகனைப் போல, ஏழையர் கடவுளின் இரக்கமிகு அன்புக்காக ஏங்கி நிற்கிறார்கள். கடவுள் அவர்களை ஒருபோதும் கைவிடமாட்டார் என்னும் உறுதிப்பாட்டில் ஏழையர் நிலைத்திருக்கிறார்கள்.
நமது
வேண்டுதல் கேட்கப்படாதபோது கடவுள் அக்கறையற்றவர் என நினைத்துவிடக்கூடாது. மாறாக, அவரது
விருப்பத்திற்கு நம்மை நாம் கையளிக்க முன்வர வேண்டும். “இறைவனின் நீதித்தீர்ப்பு ஏழைகளுக்கு உரித்தானது” (சீராக்
21:5) என்பதை மனத்தில் கொள்ள வேண்டும். வறுமையில்தான் எதிர்நோக்கின் பாடல் புலப்படும். எப்போதெல்லாம் நமது உள்ளார்ந்த வாழ்வு சுயநல
விருப்புகளால் நிறைந்திருக்கிறதோ அப்போது பிறருக்கு, குறிப்பாக ஏழைகளுக்கு இடம் இருப்பதில்லை; கடவுளின் குரல் கேட்கப்படுவதும் இல்லை; நன்மை செய்வதற்கான விருப்பமும் மங்கி விடுகிறது (நற்செய்தியில் மகிழ்ச்சி, 2).
ஏழைகளின்
உடனிருப்பை உணர்த்தும் அற்புதமான நாள் இந்த நாள். ஏழையரின் இறை விண்ணப்பத்திற்கு நாம் செவிசாய்த்துச் செயல்பட இந்த நாள் அழைப்பு விடுக்கிறது. ஏழைகளுக்காகச் செவிமடுக்கும் மனிதர்களுக்காக நன்றி சொல்வோம். அன்னை தெரேசா ஏழை எளியவருக்காக அவர்களின் துன்பத்தில் கூடவே நின்று பணியாற்றியதற்கு இறைவேண்டலும் ஓர் அடிப்படைக் காரணம் என்பதையும் நாம் மறக்கக் கூடாது என்பதையும் திருத்தந்தை இங்கே நினைவூட்டுகிறார்.
உறுதியான
செயல்பாடு இல்லாத இறைவேண்டல் வீணானது. “நம்பிக்கையும் செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாயிருக்கும்” (யாக்கோபு
2:17). உண்மையான இறைவேண்டல் அனுதினமும் இல்லை என்றால், நமது செயல்கள் வெறுமையான ஒன்றாகவே மாறிவிடும் (திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட்).
பிரான்சிலிருந்து
உரோமைக்குத் திருப்பயணியாக வந்த புனித பெனடிக்ட் ஜோசப் அவர்கள் துறவற இல்லங்களின் புறக்கணிப்பால் பாதிக்கப்பட்டாலும், ஏழைகளோடு ஏழையாக வாழ்ந்தவர். ‘கடவுளின் நாடோடி’ என்று அழைக்கப்பட்டவர். நற்கருணை முன் அதிக நேரம் செலவிட்டவர். புதிய ஏற்பாட்டையும், ‘கிறிஸ்துவழி வாழ்வு’ என்ற புத்தகத்தையும் ஆழமாய்ப் படித்து, தன் வாழ்வையே செபமாகக் கடவுள் முன் உயர்த்தி நின்றவர் இந்தப் புனிதர்.
எதிர்நோக்கின்
திருப்பணிகளாகப் பயணிக்கும் நாம் அன்பின் சிறிய காரியங்களில் கவனம் செலுத்துவோம் (மகிழ்ந்து களிகூறு, 145). தேவையில் இருக்கும் மனிதர்களைக் கடந்து போகாமல், அவர்களை நின்று சந்திப்போம்; அவர்களை அரவணைப்போம்; புன்னகைப்போம்; ஆறுதலின் வார்த்தைகளை உதிர்ப்போம். இந்த அர்ப்பணமிகு செயல்பாடுகளுக்கு இறைவேண்டல் மிக அவசியம். போர்களால் சூழப்பட்ட உலகில் அமைதிக்காக மன்றாடுவோம். இயேசுவின் அடிச்சுவட்டைப் பின்பற்றி ஏழைகளின் நண்பர்களாய் வாழும் நிலையை உருவாக்குவோம்.
‘ஏழைகளின் கன்னி’ என்று பெல்ஜியம்
நாட்டின் பேனக்ஸில் தன்னை அறிமுகப்படுத்திய அன்னை மரி ஏழைகளோடு தோள் கொடுக்கும் நம் பயணத்திலும் உடன் இருப்பார் என்ற நம்பிக்கையில் ஏழைகள் ஞாயிறை ஏழைகளோடு இணைந்து ஏழைகளாகக் கொண்டாடுவோம்.
அடுத்த
சில தினங்களில் நாட்டின் 51-வது தலைமை நீதிபதியாக நீதிநாயகம் சஞ்சீவ் கன்னா பதவியேற்க இருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய நீதிநாயகம் தனஞ்சய யஷ்வந்த் சந்திர சூட் வரும் நவம்பர் 11 அன்று ஓய்வு பெற்றிருக்கிறார்.
இந்திய
அரசியல் சாசனச் சட்டம் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள தானே உருவாக்கி வைத்திருக்கும் சனநாயக நிறுவனங்களுள் உச்சநீதிமன்றமே முதன்மையானதும், முக்கியமானதும் ஆகும். இந்திய அரசியல் அமைப்பில் சட்டங்களை உருவாக்கும் நாடாளுமன்றத்தையும், அந்தச் சட்டங்களை நிறைவேற்றும் அரசு நிர்வாக இயந்திரத்தையும் கண்காணித்து, அவைகளின் செயல்பாடுகளை அரசியல் சட்ட வரம்பிற்குள் இருப்பதை உறுதி செய்து, நெறிப்படுத்தி, இந்திய நாட்டின் குடிமக்களது அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்து, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் மகத்தான அதிகாரம் நமது உச்சநீதிமன்றத்திற்கு மட்டுமே உண்டு.
ஒரு
புதிய தலைமை நீதிபதி பொறுப்பேற்கும்போதும், இருந்தவர் பணி ஓய்வு பெறும்போதும், உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகள் பற்றியும், அங்கே பணியாற்றும் நீதிபதிகளின் நடைமுறைகள் குறித்தும், ஒட்டுமொத்த நீதித்துறையின் எதிர்காலம் குறித்தும் நம்மால் சிந்திக்காமலும், பேசாமலும் இருக்க முடியவில்லை.
இந்நாள்களில்
வாழும் இந்தியர்கள் உண்மையிலேயே மிகவும் பாக்கியம் செய்தவர்கள்! நமது பிரதமரும், நமது தலைமை நீதிபதியும் தெய்வத்தோடு நேரில் பேசி, தெய்வத்தின் அருள் கடாட்சம் பெற்றபின்னரே தங்களது கடமைகளின் நிமித்தம் செய்ய வேண்டிய பணிகளைச் செய்கிறார்கள். “நான் உயிரியல் ரீதியாகப் பிறக்கவில்லை; இறைவனின் திட்டத்தை நிறைவேற்றவே இறைவனால் இங்கு அனுப்பப்பட்டுள்ளேன்” என்று
நம் பிரதமர் கூறியபோது நாம் எல்லாரும் மெய்சிலிர்த்துப் போனோமே! அதைப்போல நமது தலைமை நீதிபதியும் மிக முக்கியமான வழக்குகளில் தீர்ப்பளிக்கும் போதெல்லாம் ஸ்ரீராமனின் திரு உருவத்தின் முன் அமர்ந்து, தியானித்து அந்த வழக்கு சம்பந்தமாகத் தனக்கு என்ன அருளப்பட்டதோ அதையே தீர்ப்பாக எழுதுகின்ற தெய்வீக வல்லமை பெற்றவர். நாடே எதிர்பார்த்துக் காத்திருந்த பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளிக்குமுன் பகவான் இராமரிடம், “இந்த வழக்கிற்குத் தீர்வு ஒன்று சொல்லுங்கள் தெய்வமே!” என்று அவர் மன்றாடினதாகவும், அவ்வாறு பெறப்பட்டதுதான் அந்தத் தீர்ப்பு என்றும் நமது தலைமை நீதிபதி கூறிய பின்னர்தான் நமக்குப் பல விசயங்கள் புரிந்தன.
வழக்கமாக
உச்சநீதிமன்றம் பெரும் அமர்வாக அமர்ந்து தீர்ப்பளிக்கும்போது பகிரப்பட்ட
பெரும்பான்மைத் தீர்ப்பை எந்த நீதிபதி எழுதினார் என்பதும், அதில் உடன்பட்டவர்கள் யார் என்பதும் குறிப்பிடப்பட்டு, உடன்படாதவர்கள் தனியாகத் தங்களது தீர்ப்பினையும் வழங்குவதுதான் உச்சநீதிமன்றத்தின் நடைமுறை. ஆனால், பாபர் மசூதி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினை யார் எழுதினார் என்று தெரிவிக்கப்படவே இல்லை. ‘இறைவன் தந்த தீர்ப்பு’
என்று எழுத முடியாதல்லவா?
ஆனால்,
டெல்லி உயர் நீதிமன்றத்தின் மிகச் சிறந்த நீதிபதி என அறியப்பட்ட நீதி
அரசியார் சார்மா அவர்கள், தலைமை நீதிபதி சந்திரசூட் அவர்களின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. சட்டப்படியும், நியாயத்தின்படியும் தவறான தீர்ப்பின் பொறுப்பினை ஸ்ரீராமரின் மீது போட்டுவிட முயற்சிக்கும் அவர், அரசியல் சட்டத்தின் மீது தலைமை நீதிபதி ஏற்றுக்கொண்ட உறுதி மொழியை மீறியதோடு மட்டுமல்லாமல், இந்திய நாட்டு மக்களுக்கு எதிராகவும் பெரும் துரோகத்தை இழைத்துள்ளார் என்று சந்திரசூட்டைப் பகிரங்கமாக அவர் கண்டித்தார்.
விடைபெறுகின்ற
தலைமை நீதிபதி சந்திர சூட் கடந்த சில நாள்களாக பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு
உரையாற்றும்போது தனது பணிக்காலத்தின்போது தலைமை நீதிபதியாக மற்றும் நீதிபதியாகத் தனது செயல்பாடுகளைப் பற்றியும், உச்சநீதிமன்றத்திற்குத் தனது பங்களிப்பு பற்றியும் மிகவும் பெருமிதப்பட்டு, தனக்குத்தானே சிலாகித்துக் கொள்கிறார். அந்த உரிமை அவருக்கு உண்டு. அதே நேரத்தில் உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகளை அன்றாடம் உன்னிப்பாகக் கவனித்து வருகின்ற சட்ட விற்பன்னர்கள், மேனாள் உச்சநீதிமன்ற-உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள், அரசியல் சட்ட நிபுணர்கள், அனுபவம் நிறைந்த ஊடகவியலாளர்கள், பொதுநல வழக்குகள் மூலம் நாட்டு மக்களின் உரிமைகளுக்காகப் போராடுகின்ற சமூக ஆர்வலர்கள், மனித உரிமைப் போராளிகள், ஆளும் அதிகார வர்க்கத்தின் எதேச்சதிகாரத் துரைத்தனத்தால் பாதிக்கப்பட்ட எதிர்க்கட்சியினர், பெரும் கார்ப்பரேட் முதலாளிகளின் சுயநலச் சுரண்டலால் வாழ்வாதாரங்களை இழந்தவர்கள்... இந்தத் தலைமை நீதிபதியின் பணிக்காலத்தில் அவரது செயல்பாடுகள் குறித்தும், ஒட்டுமொத்த நீதித்துறையின் செயல்பாடுகள் குறித்தும் என்ன மதிப்பீடுகளை வைத்துள்ளனர் என்பதையும் நாம் பதிவு செய்ய வேண்டும் அல்லவா?
கடந்த
மாதத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது, தனது இல்லத்தில்
நடந்த விநாயகர் ஆரத்திக்குத் தலைமை நீதிபதி பிரதமரை அழைத்தார். நீதிபதியும், அவரது மனைவியும் பிரதமரின் இருபுறமும் நின்றுகொண்டு, விநாயகருக்குப் பிரதமர் தீப ஆராதனை செய்வதும், நீதிபதியின் மனைவியார் சுலோகங்கள் சொல்வதும், தலைமை நீதிபதி அந்தப் பூஜைக்கு மணியடிப்பதுமான காட்சிகள் தேசிய ஊடகங்கள் அனைத்திலும் ஒளிபரப்பப்பட்டு, சமூக ஊடகங்களிலும் பெரும் வைரலாகி கோடிக்கணக்கான மக்கள் பார்த்தனர்.
தலைமை
நீதிபதியின் வீட்டில் நடந்த அந்த நிகழ்வு குறித்து பெரும் விமர்சனங்கள் எழுந்தன. உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞர் சங்கம் உள்பட பல மேனாள் நீதி
அரசர்களும், பத்திரிகையாளர்களும் ‘இது நல்ல மரபல்ல’ என்று சுட்டிக்காட்டினார்கள்.
நரேந்திர
மோடிக்கும், சந்திர
சூட் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் தெய்வ நம்பிக்கையும், வழிபாடு செய்யும் உரிமைகளும் இருக்கக்கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. ஆனால், பிரதமரும், தலைமை நீதிபதியும் தெய்வ வழிபாடு செய்யும்போது நான்கு காமெராக்கள் சுற்றிநின்று படம்
எடுத்து ஒளிபரப்ப வேண்டிய அவசியம் என்ன என்று சிலர் கேட்கும்போது, அதில் உள்ள நியாயத்தை நம்மால் மறுக்க முடியவில்லை. அதிலும், அதற்கு அடுத்த வாரம் மகாராஷ்டிராவில் பா.ச.க.
வையும், அவர்களது அரசையும் பாதிக்கக்கூடிய சிவசேனா
கட்சி வழக்குகள் உள்பட ஒன்றிய அரசு சம்பந்தப்பட்ட பல முக்கியமான வழக்குகளில்
தலைமை நீதிபதி தீர்ப்பு சொல்ல இருந்தபோது, இப்படிப் பிரதமருடன் ஒரு தனிப்பட்ட சந்திப்பு சரியானதல்ல என்று சிலர் கூறுவதையும் மறுப்பதற்கில்லை.
சில
நாள்களுக்குப் பின்னர் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், பிரதமர் தனது இல்லத்திற்கு வந்தபோது இந்த வழக்குகள் சம்பந்தமாகத் தாங்கள் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை என்று பரிதாபமாக ஒரு தன்னிலை விளக்கம் கொடுத்தபோது, தலைமை நீதிபதி தனது பதவியின் மாட்சிமைமிக்க கம்பீரத்தைச் சற்று இழந்துவிட்டதாகவே நான் பார்க்கிறேன். சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு புரிந்துகொள்ளக் கூடியதுதானே!
உச்சநீதிமன்றம்
உருவாக்கப்பட்ட நாளிலிருந்து அந்த வளாகத்தில் நீதி தேவதையின் சிலை ஒன்று நிறுவப்பட்டிருந்தது. கிரேக்க-எகிப்திய கலாச்சாரங்களில் நீதியின் தெய்வமாக வணங்கப்பட்டது இந்த நீதி தேவதையின் சிலை. உலகம் முழுவதும் நீதி வழுவாத நெறிமுறையின் அடையாளமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. பல நாடுகளின் நீதிமன்றங்களில்
இந்தச் சிலை வைக்கப்பட்டுள்ளது. வேண்டியவர்கள்-வேண்டாதவர்கள், பெரியவர்கள்-சிறியவர்கள் என்ற வேறுபாடுகளையெல்லாம் பார்க்காமல், நீதி பரிபாலனம் செய்வது மட்டுமே நீதிமன்றங்களின் கடமை என்பதை உணர்த்துகின்ற வகையில், அதன் கண்கள் கறுப்பு துணியால் கட்டப்பட்டிருக்கும். ஒருபால் கோடாத நீதியின் தராசை ஒரு கையிலும், நீதியின் மாண்பையும், மாட்சிமைமிக்க அதன் அதிகாரத்தையும் விளக்குகின்ற வகையில் மற்றொரு கையில் ஓங்கிய வாளுடன் நிற்கும்.
இந்தச்
சிலையை ஒரே நாளில் சம்பந்தப்பட்ட யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் எடுத்துவிட்டு, தனது விருப்பப்படி மற்றொரு சிலையைத் தலைமை
நீதிபதி சந்தர சூட் அங்கே வைத்து விட்டார். திறந்த கண்களுடன், நெற்றியில் திலகத்துடன், வாள் அகற்றப்பட்ட கையில் சட்டப் புத்தகத்துடனும், பட்டுச் சேலை கட்டிய ஒரு பெண் சிலை தற்போது அங்கே வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையின் தத்துவப் பின்னணியும், வரலாற்றுப் பின்புலமும் என்ன? என்று யாருக்கும் புரியவில்லை. நமது இதிகாசங்களிலும், கலாச்சாரத்திலும் இந்தத் தோற்றத்தில் ஒரு நீதி தேவதை இருந்ததாக எந்த இடங்களிலும் இல்லை. எந்த அடிப்படையில் இந்தச் சிலை உருவாக்கப்பட்டது என்பதையும் அவர் தெரிவிக்கவில்லை.
“காலனி ஆதிக்கத்தின் எச்சமாக பழைய சிலை இருந்தது. அதனால் அதை எடுத்துவிட்டு பாரத கலாச்சாரம் கொண்ட ஒரு பெண்ணின் சிலை வைக்கப்பட்டுள்ளது” என்று
சொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பழைய சிலை ஆங்கிலேய கலாச்சாரம் சார்ந்ததன்று. அது ஆசிய நாகரிகப் பண்பாட்டுக்கூற்றை உள்வாங்கியது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பாரபட்சமற்ற நீதிபரிபாலனத்தின் அடையாளமாக உலகெங்கிலும் கொண்டாடப்படுவது. அதனை எடுத்துவிட்டு தனது சொந்தக்
கற்பனையை இந்தியத் திருநாட்டின் உச்சநீதிமன்றத்தின் அடையாளமாக அவர் நிறுவியதை ‘உள்நோக்கமுடையது’ என்றும்,
‘நாட்டின் உச்சகட்ட நீதிபரிபாலன நிறுவனத்திற்கு ஒரு பண்பாட்டுச் சாயம் பூச அவர் முற்படுகிறார்’ என்றும்
உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞர்கள் சங்கம் உள்பட பலர் சொல்வதை உதாசீனப்படுத்தமுடியவில்லை.
இந்திய
நாட்டின் அரசியல் வானில் வகுப்புவாத மதவெறி எனும் இருள்சூழ்ந்து, அரசியல் சாசனச் சட்டத்தின் விழுமியங்கள் அனைத்தும் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டு,
சட்டத்தின் ஆட்சியும், மக்களாட்சித் தத்துவமும் அழிவின் ஆரம்பப் பாதையில் நிற்கும்போது, அதனைத் தடுத்து நிறுத்தி, இந்தியா என்று நாம் கொண்டாடும் தத்துவத்தைப் பாதுகாத்துத் தர பணிக்கப்பட்டிருக்கும் உச்சநீதிமன்றத்தை, நீதிநாயகம் சந்திர
சூட் எப்படி வழிநடத்தினார் என்ற கேள்வியை, வரும் தலைமுறைகள் கேட்குமல்லவா? அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?