வேலூர் மறைமாவட்டப் புதிய
ஆயர்
மேதகு முனைவர் அம்புரோஸ் பிச்சைமுத்து அவர்களுடன்
ஒரு
நேர்காணல்:
அருள்முனைவர்
செ. இராஜசேகரன்
• அன்பு ஆயர் அவர்களே! இறைவன் தங்களை ஆயர் நிலைக்குத் தேர்ந்துகொண்டு, வேலூர் மறைத்தளத்தில் பணியமர்த்தியுள்ளது கண்டு ‘நம் வாழ்வு’ வாசகர்கள் சார்பாகத் தங்களை மனதார வாழ்த்துகிறோம்! இறைவனுக்கு நன்றி கூறுகிறோம்! வேலூர் மறைமாவட்டத்தின் ஆயராகத் திருத்தந்தையால் நியமிக்கப்பட்டது குறித்து தங்களுக்கு ஏற்பட்ட உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்!
“முதலிலே ‘நம் வாழ்வு’ ஆசிரியர் குழுவிற்கும், வாசகர்களுக்கும், உங்களுடைய உடன் பணியாளர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் செய்தி அறிந்தவுடன் என்னில் இருந்ததெல்லாம் ‘நன்றி உணர்வே!’ பெரிதும் வியக்கும் பல தருணங்களை, நிகழ்வுகளைக்
கடவுள் எனது வாழ்வில் ஏற்படுத்தியிருக்கிறார், ஏற்படுத்துகிறார். இந்தப் பெரும் வியப்பு எனக்கு மட்டுமல்ல, பிறருக்குமானதாகவும் இருக்கும். இந்தக் குறிப்பிடத்தக்க வியப்பையும் கொடுத்த கடவுளுக்கு நான் நன்றி செலுத்துகிறேன். என்மீது நம்பிக்கை கொண்ட திருத்தந்தைக்கு என் நன்றி உணர்வினைச் சமர்ப்பிக்கின்றேன். இந்த நிலைக்காக என் தகுதி குறித்து அலசி ஆராய்ந்த அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். வேலூர் மறைமாவட்டத்தில் ஆயர் வேண்டும் என்று ஆசித்து செபித்த நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றியைச் சமர்ப்பிக்கின்றேன். எனவே, நன்றி உணர்வே என்னைப் பற்றிக்கொண்டது, ஆட்கொண்டது.
இரண்டாவதாக,
ஒருவித ‘பொறுப்புணர்வை’ உணர்கின்றேன்.
ஆயர் பணி என்பது ஏதோ படிநிலை உயர்வு என்றில்லாமல், மாறாக எனக்குக் கூடுதலான பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்கின்ற உணர்வு என்னை ஆட்கொண்டிருக்கின்றது.
மூன்றாவதாக,
‘செப உணர்வு’.
இது என்னாலான ஒரு செயல் அல்ல; மாறாக, இது கடவுளுடைய திட்டம். கடவுளுடைய இத்திட்டத்திற்கு என்னையே முழுவதும் உட்படுத்த வேண்டும் என்ற உணர்வு என்னில் மேலோங்குகிறது. “ஏனெனில் உங்களுக்காக நான் வகுத்திருக்கும் திட்டங்கள் எனக்குத் தெரியுமன்றோ! அவை வளமான எதிர்காலத்தையும், நம்பிக்கையையும் உங்களுக்கு அளிப்பதற்கான நல்வாழ்வின் திட்டங்களேயன்றி, கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள் அல்ல’ என்கிறார் ஆண்டவர்”
(எரே 29:11). இந்த ஓர் இறைத்திட்டம் இன்னும் என் நிலை மறந்து கடவுளின் துணையையே நம்ப வேண்டுமென்று இட்டுச் செல்கின்றது. கடைசியாக, ஒருவித கூட்டு உணர்வு; அதாவது, நான் தனியாக இல்லை; மற்றவர்களும் என்னோடு இருக்கின்றார்கள், மக்கள் என்னோடு இருக்கிறார்கள், அருள்பணியாளர்களும் துறவியரும் என்னோடு இருக்கின்றார்கள் என்கின்ற ஒருவித எதிர்நோக்கோடு கூடிய கூட்டுறவு,
கூட்டுணர்வு என்னை ஆட்கொண்டிருக்கிறது. எனவே, தோழமையில் ஆண்டவரின் திட்டத்தைச் செயலாக்கம் செய்ய முடியும் என்கின்ற நம்பிக்கை என்னிலே இருக்கின்றது.”
•
அன்பு ஆயர் அவர்களே, தங்களுடைய
குடும்பம் மற்றும் பள்ளிப்
படிப்பைப்
பற்றிக்
கூறுங்கள்...…
1966 -ஆம் ஆண்டு,
மே மாதம் 3 -ஆம் தேதி செய்யூரில்
பிறந்தேன். என் பெற்றோர் திருவாளர் பிச்சைமுத்து - திருமதி லூர்துமேரி. மிகவும் இயல்பான, ஆரவாரம் இல்லாத ஓர் அமைதியான குடும்பம். ஒரு குருவுடைய பெற்றோர் என்று பலரும் அறிய இயலாத வகையில் ஒரு சாதாரணமான, மிகவும் எதார்த்தமான குடும்ப வாழ்வை நடத்தியவர்கள். உறவுகள், சுற்றம் என்று பார்க்கின்றபோது, இது ஒரு பெரிய குடும்ப உணர்வை என்னிலே தந்தது. அதுவே மிகப்பெரிய அனுபவங்களைத் தந்தன. இந்துகள் மத்தியில் வாழும் இடமாக எனது வீடு இருந்தாலும், குடும்ப உணர்வில்தான் மற்றவரோடு வாழ்ந்தோம் என்கின்ற அந்த ஓர் எதார்த்தச் சூழல். இப்போது இரண்டு அண்ணன்களின் குடும்பமும், என் அக்காவின் குடும்பமும் பல்வேறு இடங்களில் வாழ்கிறார்கள்.
எனது
ஊர் பல பள்ளிகளைக் கொண்டிருக்கின்றது.
அதனால் என்னவோ படித்தவர்கள் அதிகம். அதனுடைய தாக்கம் இந்தச் சமூக சூழ்நிலையைச் சரியான விதத்திலே கொண்டு செல்ல மக்களுக்கு ஏதுவாக இருந்தது, இருக்கின்றது. ஏற்றத்தாழ்வுகளை எல்லாம் களையக்கூடிய சூழலைக் கொண்டு மக்கள் முழுமூச்சோடு இருப்பதை என்னால் உணர முடிகிறது. தனிப்பட்ட விதத்தில் இந்தச் சமூகச் சூழலுக்கு, அதனுடைய தீமைகளுக்கு ஆளானேன் என்று சொல்கின்ற அனுபவம் எனக்கு இல்லை. இது கல்வியினுடைய முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.
எனது
எட்டாம் வகுப்பு வரை (1971 முதல் 1979 வரை) ஆலய வளாகத்தில் அமைந்திருக்கின்ற தூய மரியன்னை பள்ளியிலே பயின்றேன். அந்த ஆசிரியர்களுடைய முழு மனித வளர்ச்சிக்கான பயிற்சி என்னை உருவாக்கியது. முதலாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை எனக்குப் பாடம் சொல்லித் தந்த ஆசிரியர்களின் பெயர்களெல்லாம் இன்னும் பசுமையாகவே இருக்கின்றது. அதில் குறிப்பாக, இரண்டு தலைமை ஆசிரியர்கள் திருவாளர் பத்திநாதன், திருவாளர் லூர்துசாமி. இருவரும் அந்தக் காலத்திலேயே முதுகலைப் படிப்பு முடித்தவர்கள். ஒரு நடுநிலைப் பள்ளியாக இருந்தாலும், மிகத் தகுதி வாய்ந்த தலைமை ஆசிரியர்களை எங்கள் பள்ளி கொண்டிருந்தது. அவர்களை இந்த நேரத்தில் நன்றியோடு நினைவுகூர்ந்து, அவர்களுக்காகவும் செபிக்கின்றேன். பிறகு செய்யூரிலே அமைந்திருக்கின்ற அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாவது, பத்தாவது பயின்றேன். அது மற்றொரு பரிணாமத்தை என்னிலே புகுத்தியது. பிற ஊர்களிலிருந்து வருகின்ற சக மாணவர்களோடு பழகக்கூடிய
வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அன்றைய நாள்களில் ஓர் அரசுப் பள்ளி எப்படி இருந்திருக்கும் என்று உங்களால் எண்ணிப்பார்க்க முடியும். அதுவும் சவாலான ஒரு காலம். ஆயினும், ஒரு நல்ல அனுபவமாக எனக்கு அது இருந்தது!
பிராட்வேயிலுள்ள
புனித கபிரியேல் மேல் நிலைப் பள்ளியில் 11 மற்றும் 12 -ஆம் வகுப்பிற்காகச் சேர்ந்தேன். அதுவும் குருமாணவர் பயிற்சி இல்லம். எனது சக தோழர்களோடும் குருமாணவர்களோடும்
சேர்ந்து படித்த தருணம் இன்னும் நினைவில் இருக்கிறது. இப்போதும் கூட எனது வகுப்புத் தோழர்களான அருள்பணியாளர்கள் ராக் சின்னப்பா, லூர்துசாமி, ஜேம்ஸ் ஆகியோர் மிகச் சிறப்பாகப் பணிபுரிந்து வருகின்றனர். அங்குதான் எனக்கு முதன் முதலில் சலேசியர்களுடைய வழிகாட்டுதல் கிடைத்தது.”
•
தங்களுடைய இறை அழைத்தல்
மற்றும்
குருத்துவப்
பயிற்சி
பற்றிக்
கூறுங்களேன்......
“எனது பங்குத்தந்தை நினைவில் வாழும் அருள்பணி கே.எம். தாமஸ் அவர்கள். நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது அவர் பங்குத்தந்தையாக நியமிக்கப்படுகின்றார். அதிலிருந்து எனது வாழ்வில் முக்கியப் பங்குவகித்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. அதேசமயம், குளூனி அருள்சகோதரிகளுடைய அணுகுமுறையும் எனக்கு உறுதுணையாக இருந்தது. ஆலய வளாகத்தில் அதிக நேரம் செலவிட்ட காலம். பீடச்சிறுவனாகத் திருவழிபாட்டிலும், மாலை செபங்களிலும் கலந்து கொண்ட அந்த அற்புதமான காலம். பத்தாம் வகுப்பில் இருந்தபோது எங்கள் பங்குத்தந்தை இறையழைத்தல் முகாமிற்கு அனுப்பி வைத்தார். எல்லாமே இயல்பாக நடந்தது. பிறகு அந்த முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்டு, சாந்தோம் புனித தோமா இளங்குருமடத்தில் 1981 -இல் இணைந்தேன். முழுமையான உருவாக்கப் பயிற்சியின்போது அருள்பணியாளர்கள் இன்னையா, அருள்ராஜ் அவர்களின் பயிற்சி கடினமாக இருந்தாலும், மிகவும் தேவையானது என்பதைப் பிறகு புரிந்து கொள்ள முடிந்தது. தினமும் மாலை செபம் முடித்து பேராயர் அருளப்பா அவர்களுடைய வகுப்புகள் இன்னும் பல தெளிவுகளைத் தருபவையாக
இருந்தன. அவரது கண்டிப்பு கலந்த அன்பு இன்றும் மறக்க முடியாத ஒன்று.
பிளஸ்
டூ முடித்து ஆயத்தப் பயிற்சியில் (Orientation Course) நுழைந்தேன்.
அந்த நேரத்திலே ஒரு வித்தியாசமான பயிற்சி எனக்குக் கிடைத்தது. அருள் பணியாளர் D. வின்சென்ட், பால்
ஜூலியன், லாரன்ஸ்ராஜ் தங்களையே முழுமையாக ஈடுபடுத்தி எங்களுக்குப் புதிய சூழலுக்கு ஏற்ற ஒரு பயிற்சிப் பாசறையாக இளங்குருமடத்தை அமைத்திருந்தனர். மெய்யியல் பயில
பூவிருந்தமல்லி குருமடத்திற்குச்
சென்றோம். 1988-89-களில் களப் பணிக்காகக் கோவளம் பங்குத்தளம் அமைந்தது. குறிப்பாக, அங்குப் பங்குத்தந்தையாக
இருந்த பி.கே. மேத்யூ
என்னை ஊக்குவித்து சுதந்திரமாகப் பணி செய்யத் தூண்டியதால் அது எனது வாழ்வில் ஒரு திருப்பத்தையும் ஏற்படுத்தியது. அவரது தாராள மனது, உபசரிக்கும் குணம் என் மனத்தில் இன்றும் ஆழமாகவே இருக்கிறது. அதுவும் இயல்பாக நான் மாறுவதற்கு உறுதுணையாக இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
1989 முதல் 1993 வரை கிராமச்சூழலில்
மக்களின் மனநிலையை இறையியலாக்கும் ஒரு தெளிவோடு நாங்கள் எங்களது இறையியல் பயிற்சியை மேற்கொண்டோம். அப்பொழுது இருந்த பேராசிரியர்களுடைய சமூகக் கண்ணோட்டம், எதிர்காலத் திரு அவைக்கான ஒரு நீரோட்டமாகவும் இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. வார இறுதி நாள்களில் ஆவடி, தி.நகர் - சீனிவாச
நகர், பிராட்வே-செயின்ட் மேரிஸ் போன்ற பங்குத் தளங்களிலே பணிபுரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. திருத்தொண்டர் பயிற்சியின்போது சாஸ்திரி நகர் பங்குத்தந்தையாக இருந்த அருள்பணி. அருள் தேவதாஸ் அவர்களுடைய புரிதல், ஊக்குவிப்பு மிகச் சிறப்பானதாகவே அமைந்தன. அந்த மக்களுடைய அன்பும், அவருடைய பாசமும் எனது குருத்துவ வாழ்க்கைக்கு ஓர் அடித்தளமாக அமைந்தன.”
• தங்களுடைய அருள்பணி
வாழ்வு
பற்றிப்
பகிர்ந்துகொள்ளுங்கள்...…
“1993 -ஆம் ஆண்டு, மார்ச் 25 -ஆம் தேதி - கிறிஸ்து பிறப்பு அறிவிப்புப் பெருவிழா நாள் அன்று நாங்கள் ஆறு பேர் குருத்துவ அருள்பொழிவு பெற்றோம். அப்போது பேராயர் கஷ்மீர் ஞானாதிக்கம் சென்னை-மயிலை உயர் மறைமாவட்டப் பேராயராக இருந்தார். அன்றைய நாள் சென்னை-மயிலை உயர் மறைமாவட்டத்திற்கு மிகச்சிறப்பான நாள். பேராயர் அவர்கள் தங்கள் குருத்துவ அருள்பொழிவின் நாற்பதாம் ஆண்டு நாளைக் கொண்டாடினார்கள். அன்றைய நாளில் பேராயர் அருளப்பா அவர்கள் பணி ஓய்வு பெற்றார். அன்றைய நாளில்தான் பேராயர் கஷ்மீர் அவர்கள் பேராயர் பொறுப்பையும் ஏற்றார்கள். இவ்வாறு பல்வேறு முக்கியமான சிறப்புகளைக் கொண்ட ஒரு நாளாக சென்னை-மயிலை உயர் மறைமாவட்ட வரலாற்றில் அமைந்தது. காரணம், வழக்கமாக உயிர்ப்புப் பெருவிழாவுக்குப் பிறகு இரண்டாம் வாரத்தில்தான் குருத்துவ அருள் பொழிவு நிகழும். ஆனால், எங்களுக்குச் சிறப்பான நாளைத் தேர்ந்தெடுத்திருந்தனர்.
குருவாகத்
திருநிலைப்படுத்தப்பட்டபின்,
முதலாம் ஆண்டு சாந்தோம் பேராலயத்தில் உதவிப் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டேன். தந்தை சத்தூர் அவர்கள் எனக்குப் பங்குத்தந்தையாக இருந்தார். அவருடைய உடல்நலக் குறைவின் காரணமாக அருள்பணி. இராயண்ணா அவர்கள் என்னை வழி நடத்தினார். முதலாம் ஆண்டு பங்குப்பணி என்னில் பல தாக்கங்களை ஏற்படுத்தியது.
நீங்கள் அறிந்த படி, சாந்தோம் பேராலயம் பலதரப்பட்ட மக்களையும் உள்ளடக்கிய ஓர் இறைச்சமூகம். புனித தோமையாரின் புனித இடம், தூய மயிலை மாதாவின் பிரசன்னம், முன்னாள் பேராயர்களின் கல்லறைகள் என அனைத்துமே வாழ்வின்
எதார்த்தத்தையும், கடவுளின் திட்டத்தையும் எனக்கு எண்பித்தன. அதன் பிறகு 1994-95 -ஆம் ஆண்டில், பல்லாவரம் - தூய சவேரியார் ஆலயப் பங்கிற்கு உதவிப் பங்குத் தந்தையாகச் சென்றேன். தந்தை பிரிட்டோ அவர்கள் பங்குத்தந்தையாக இருந்தார். அந்தப் பங்கு ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த, விசாலமான இறைச்சமூகம். இராஜாஜி நகர், பொழிச்சலூர் போன்ற பங்குகள் அப்போது இதன் கிளைப் பங்குகளாக இருந்தன. ஒரு பாசமான இறைச்சமூகத்தையும், அந்தப் பங்கில் வளரும் நிலையிலிருந்த ஒரு பள்ளியையும் கொண்ட பங்கு. அருள்பணி. பிரிட்டோ அவர்களின் சகோதர பாசத்தையும், புதிய பணிகளை முன்னெடுக்க ஊக்குவிக்கும் விதத்தையும், அதிலும் குறிப்பாக, பிரிஜிடைன் தலைமை அன்னை எமல்டாவின் ஆன்மிக வழிகாட்டுதலையும் என்னால் மறக்க இயலாது. காரணம், நான் குருமடம் அழைக்கப்பட்டபோது அதற்கான ஆயத்தப் பணிகளில் அவருடைய வழிகாட்டுதல் எனக்குத் துணையாக இருந்தது.
குருமடத்திற்குப்
பேராசிரியராகச் சென்றபோது இராமாபுரம், போரூர் பங்குகளுக்குப் பணிசெய்ய வாய்ப்பு கிடைத்தது. பேராசிரியர் பணி மற்றும் உயர் படிப்புக்குச் சென்ற பிறகு நேரடியான ஒரு பங்கு அனுபவத்தைப் பெற வேண்டும் என்ற நோக்கிலே என் விருப்பத்தை ஆயரிடம் தெரிவித்தபோது, செங்கை மறைமாவட்டப் பேராலயத்தின் பங்குத் தந்தையாகவும், மறைமாவட்ட முதன்மைக் குருவாகவும் நியமிக்கப்பட்டேன். அறிமுகம் இல்லாத நபராகப் பங்கிற்குச் சென்றேன். முதலிலே சற்று தயக்கம் எனக்கும், இறைச்சமூகத்திற்கும். ஆனால், நாளடைவில் எல்லாமே நன்றாக அமைந்தன. பல்வேறு
பணிகளை உதவிப் பங்குத்தந்தையரோடு மேற்கொண்டதில் ஐந்து ஆண்டுகள் மிக வேகமாகவே சென்றன. அதுவும் ஒரு மகிழ்ச்சியான தருணமாகவே இருந்தது.
அதன்
பிறகு ஒரகடம் என்னும் மறைத்தளம். எனது பணிவாழ்வில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்திய மக்கள். சாதாரண, எளிமையான, அன்புள்ள, பக்தியுள்ள மக்கள்; இறைவார்த்தையைக் கையிலும் நெஞ்சிலும்
சுமந்திருக்கும் மக்கள். பல திறமைகளைக் கொண்ட
சிறார்கள், நற்செய்திப் பணிக்கான கிளைப்பங்குகள் யாவும்
ஓர் அனுபவமே! அங்கே கிளைப்பங்காக ஆரம்பாக்கம் இருந்தது. அன்பான
மக்கள், அதிலும் குறிப்பாக ஆலயப் பணிகளில் ஆர்வமிக்க பெண்கள் மற்றும் சிறுவர்களுடைய முழு ஈடுபாடு கொண்ட ஓர் இறைச்சமூகம்.
அதன்
பிறகு பங்குப் பணியாளனாக பல்லாவரம் - தூய சவேரியார் ஆலயத்திற்குச் சென்றேன். அந்த நேரத்தில்தான் எனக்கு மற்றொரு பொறுப்பும் தரப்பட்டது. அதாவது, திருத்தந்தையின் இந்திய மறைத்தூதுப் பணியகத்தின் இயக்குநராகப் பணியமர்த்தப்பட்டேன். பங்குப் பணியில் முழுமையான கவனம் செலுத்த முடியாவிட்டாலும் ஓராண்டு காலம் என்னால் முடிந்த அளவுக்கு எனது பணிகளை ஆற்றினேன். தலத் திரு அவையின் இறைச்சமூகம் எத்தனை முக்கியமானது, ஒவ்வொரு சகோதரனும்-சகோதரியும், பெற்றோரும்- பெரியோரும், இளையோரும்-சிறுவர் சிறுமியரும் குழந்தைகளும் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை உணர்ந்து கொண்டேன். இறைப்பணி
என்பது மக்களுக்கானது; மக்கள் மிக மிக முக்கியமானவர்கள்; அவர்கள் இல்லையேல் நம் பணிக்கு அர்த்தமே இல்லை என்ற உணர்வு எனக்குப் புரிந்தது. அதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன். சுருக்கமாகச் சொல்லப் போனால், மக்கள் இல்லையேல் என் பணிக்கு அர்த்தம் இல்லை என்ற ஓர் உணர்வு.
உதவிப்
பங்குத்தந்தையாக ஏறக்குறைய 16 இளங்குருக்கள் என்னோடு பணியாற்றியுள்ளனர். அவர்களுடைய திறமைகளைக் கண்டுணர்ந்து, முறையாக அவர்களை ஊக்கப்படுத்தினால் பல அற்புதங்களை அவர்கள்
புரிவார்கள் என்ற அனுபவத்தையும் நான் பெற்றேன். மக்களை மையப்படுத்திய ஆன்மிகம், அதிலும் குறிப்பாக, பக்த சபைகள் எவ்வளவு முக்கியம் என்பதை அனுபவப்பூர்வமாகக் கண்டுணர்ந்தேன். இளையோர், சிறுவர் - சிறுமியர் இவர்கள் நாளைய திரு அவைக்கு அல்ல; மாறாக,
இன்றைய திரு அவைக்கு அவர்கள் தேவை! இன்றைய பங்குப் பணிகளுக்கு அவர்கள் தேவை என்பதை உணர்ந்தேன். அருள்பணியாளர்களும் துறவியரும் இணைந்து பணியாற்றினால் மக்களின் மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் என உணர்ந்தேன். இயேசுவை
மையப்படுத்திய ஆன்மிகமே மக்களை மையப்படுத்திய அன்புப்பணிக்கு நம்மைத் தூண்டும் என்பதே எனது அனுபவம்.”
•
குருமாணவர் உருவாக்கப் பணியில்
தங்களுடைய
பங்களிப்பு
சிறப்பாக
அமைந்திருந்தது.
அது
பற்றிக்
கூறுங்களேன்...…
“1996-இல் எனது மேற்படிப்பிற்குச் செல்வதற்கு முன் ஓராண்டு பணிமுன்னோட்டக் காலம் எனப்படும் (Probation Period) பேராசிரியராகக்
குருமடம் சென்றேன். அங்கு சலேசியக் குருக்கள் மற்றும் மறைமாவட்டக் குருக்கள் பேராசிரியராக இருந்தார்கள். அப்பொழுது அருள்பணி. மரிய கனகா இல்லத்தந்தையாக இருந்தார். அருள்பணி.
லாரன்ஸ் பயஸ் (தற்போது தருமபுரி ஆயர் அவர்கள்) மெய்யியல் துறைத் தலைவராக இருந்தார்கள். இருவரும் மற்றப் பேராசிரியர்களும் சிறப்பாக வழி நடத்தினார்கள். என்னை உருவாக்குவதிலும் மேற்படிப்புக்கான தயாரிப்பிலும் மிகவும் எனக்கு வழிகாட்டியவர்கள் இவர்களே! அவர்களை நன்றியோடு நான் இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அப்போதைய குருமாணவர்களையும் உள்ளன்போடு நினைத்துப் பார்க்கிறேன். பிறகு இரண்டு ஆண்டுகள் பெல்ஜியத்திலும், மூன்றாண்டுகள் உரோமையிலும் உயர் படிப்பை முடித்தேன். 2001 முதல் 2008 வரை பூவிருந்தவல்லி - திரு இருதயக் குருமடத்தில் குருமாணவர்களோடும் பேராசிரியர்களோடும் அங்குப் பணிபுரிகின்ற பணியாளர்களோடும் பெரும் மகிழ்வோடு பணியாற்றினேன். மகிழ்ச்சியான
நாள்கள் அவை. அருள்பணி. S.J. அந்தோணிசாமி,
அருள்பணி. Y.J. இக்னேசியஸ்
பிரசாத் இருவரும் இல்லத் தந்தையர்களாக இருந்த காலகட்டத்தில் நான் உதவி இல்லத்தந்தையாக இருந்தது மகிழ்ச்சிக்குரிய தருணமாக அமைந்தது. நூலகம் மற்றும் பதிவாளர் பொறுப்பையும் மேற்கொண்டிருந்தேன். நூலகத்தைக் கணினி மயமாக்கியதில் பெரும் மகிழ்ச்சி. அப்போது இருந்த சகோதரர்கள் குறிப்பாக, தஞ்சை மறைமாவட்டத்தைச் சார்ந்த சகோ. குழந்தை எனக்குச் செயலராக இருந்து மிகவும் உதவி புரிந்தது குறிப்பிடத்தக்கது.
‘Self-formation is the best formation!’ - இதுதான் எனது தாரக மந்திரமாக இருந்தது. ‘The candidate is the AGENT of the formation’ என்கின்ற
கருத்தை அடிக்கடி வலியுறுத்துவேன். வெளியிலிருந்து வகுப்பிற்கு வரும் மற்ற துறவற சபை குருமாணவர்கள் உள்பட தொடக்கத்தில் எனது மனநிலையோடு குருமாணவர்கள் போராடினாலும், எல்லாம் அவர்கள் மீதுள்ள அன்பினாலும், அக்கறையினாலும் என்பதனை நாளடைவில் உணர்ந்தவர்களாக, பிறகு என்னை முழுமையாக நேசிப்பவர்களாக இருப்பதை நான் கண்கூடாகக் காணமுடிந்தது. அது பெருமையாகவே இருந்தது.
எனது
25 -ஆம் ஆண்டு குருத்துவ வெள்ளி விழாவை நான் சிறப்பாகக் கொண்டாடவில்லை. ஆனால், படப்பை பங்கில் இருந்தபோது என்னுடைய குருமாணவர்களை, அதாவது ஏழு, எட்டு ஆண்டுகள் என்னோடு குருமடத்தில் இருந்தவர்களை அழைத்திருந்தேன்.
வெளிநாட்டில் இருந்த மாணவர்கள் வாழ்த்துத் தெரிவித்ததோடு இங்கு இந்தியாவில் இருந்த பல்வேறு மறைமாவட்டங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்களில் 93 குருக்கள் (என் குருமாணவர்கள்) கலந்துகொண்டார்கள். இது குருமாணவர் உருவாக்கப் பணியில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசாகவே கருதுகிறேன். அவ்வாறே, என்னோடு மிக நெருக்கமாகப் பணிபுரிந்த அருள்பணி. பீட்டர் சூசைமாணிக்கம், அருள்பணி. கிறிஸ்டோபர் ஆகியோருடைய நட்பையும், தோழமையையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.
இளம்
குருமாணவர்களை வழிநடத்துவது என்பது ஓர் உன்னதமான பணி. அதேசமயம் இது ஒரு கூட்டுப்பணி என்பதை நான் உணர்ந்தேன். பேராசிரியர் அனைவரும் இணைந்து கூட்டு முயற்சியில் இவ்வுருவாக்கப் பணியில் ஈடுபட வேண்டும் என்பது எனது அனுபவம். குறிப்பாக, ஏழை குருமாணவர்களை நாமே அடையாளம் கண்டு அவர்களுக்கு எந்தவிதக் குறையும் இல்லாமல் பேண வேண்டும் என்பது நமது கடமையாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். அவர்கள் நம்மிடம் வருவதைவிட, நாமே அவர்களை அடையாளம் கண்டு இத்தகைய உதவிகளைச் செய்ய வேண்டும் என உணர்ந்தேன். ஒரு
பேராசிரியர் பணி என்பது வெறும் பாடம் எடுப்பது மட்டுமல்ல; மாறாக, அவர்களுடைய வாழ்க்கையில் நாம் தொடர்புடையவர்களாக இருக்க வேண்டும் என விரும்பினேன்.
சமூக
விடுதலை பற்றி அதிகமாகப் பேசிய தருணத்தில் எனது எண்ணமெல்லாம் தனிமனித விடுதலையை ஒவ்வொரு குருமாணவனும் அனுபவிக்க வேண்டும் என்பது எனக்கு முக்கியமானதாகத் தென்பட்டது. அதே வேளையில், அவர்களுடைய குழந்தைப் பருவ மனக்காயங்களிலிருந்து அவர்கள் விடுதலை பெற பேராசிரியர்கள் ஆற்றுப்படுத்தும் வழிமுறைகளையும் கண்டுணர வேண்டும் என்பதும் முக்கியமானதாகத் தென்பட்டது. கண்டிப்பாக அதுவே சமூக விடுதலைக்கு அடித்தளமாகவும் கூர்மை நோக்குடைய மேய்ப்புப் பணிக்கு உரமாகவும் அமையும் என்பதையும் நான் உணர்ந்தேன்.”
•
திருத்தந்தையின் இந்திய மறைத்தூதுப்
பணியின்
பொறுப்பாளராகப்
பணியாற்றியது
பற்றி
உங்களுடைய
அனுபவங்கள்...…
“இதுவும் திடீரென எனக்குக் கிடைத்த ஒரு வியப்பு. இது முற்றிலும் வேறுபட்ட ஒரு புது வகையான பணி. எனக்கு அதிக அனுபவம் இல்லாத ஒரு பணி. ஆனால், பின்னாளில் மிகப்பெரிய அனுபவமாக அது அமைந்தது. இந்தியாவில் உள்ள அனைத்துக் கத்தோலிக்க மறைமாவட்டங்களுக்கும் குறிப்பாக, இலத்தீன் வழிபாட்டு முறையில் 132 மறைமாவட்டங்களுக்கும் நேரடியாகவும் மற்ற வழிபாட்டு முறையில் உள்ள மறைமாவட்டங்களுக்குக் கூடுதல் வழிகாட்டியாகவும் பணியாற்றக்கூடிய ஒரு களம் அது. நல்லதொரு தளம் இது. இப்பணி ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தந்தது. இந்தியச் சூழலில் - பல்வேறு கலாச்சார பண்பாடுகள், சமுதாய
வேறுபாடுகள், பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் இவற்றையெல்லாம் புரிந்துகொள்ள ஒரு சிறப்பான வாய்ப்பாக இது இருந்தது.
இந்தியாவைப்
பொருத்தவரையில், மறைப்பணிக்கான களம் இன்னும் அதிகமாகவே இருக்கிறது என்கின்ற ஓர் எதார்த்தச் சூழலைக் காணமுடிகிறது. இந்திய ஆயர் பேரவையோடு பணிபுரிய சிறந்த வாய்ப்பாக அமைந்தது. உரோமைக்கும், இந்தியத் தலத்திரு அவைக்கும் இடையே ஓர் உறவுப் பாலமாகப் பயணிக்கக்கூடிய ஒரு வாய்ப்பையும் இந்தப் பொறுப்பு வழங்கியிருக்கிறது. புதிய திட்டங்கள், அணுகுமுறைகள், அமைப்பு முறைகள் என அனைத்து முயற்சிகளையும்
மேற்கொண்டோம். இந்திய ஆயர் பேரவை நிர்வாகிகளிடமிருந்து பெரும் ஒத்துழைப்பும், அரவணைப்பும் கிடைத்தது. அனைவருக்கும் இவ்வேளையில் என் நன்றியை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
என்னோடு
இணைந்து Pontifical Mission Organization (PMO) - இல் பணியாற்றியவர்கள் குறிப்பாக, மண்டலப் பொறுப்பாளர்களாகவும் (Region PMO), மறைமாவட்டப்
பொறுப்பாளர்களாகவும்
(Diocesan PMO), பணியாற்றியவர்களையும்
மற்றும் இந்தப் பணித்தளத்தோடு தொடர்பு கொண்ட அத்தனை உடன் உழைப்பாளர்களையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.
இவ்வேளையில்,
திருத்தந்தையின் மறைத்தூதுப் பணியகம் மற்றும் மறைத்தூதுக் கழகங்களைப் பற்றி ஒருசில கருத்துகளையும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அதாவது, திருத்தந்தையின் மறைத்தூதுக் கழகங்கள் (அ) பணியகம் (known as Pontifical Mission Societies (PMS) in
worldwide) நான்கு
கிளைகளைக் கொண்டது.
1. Pontifical
Society for the Propagation of the Faith (PSPF): மறைபரப்பு ஞாயிறு வாயிலாக மக்கள் மத்தியில் மறைபரப்புப் பணியின் அவசியத்தை உணர்த்திச் செபிக்கவும் பொருளுதவி செய்யவும் பணிகளை மேற்கொள்ளும் ஓர் அமைப்பு. இது உலக அளவில் மறைப்பணி மேம்பாட்டிற்காக குறிப்பாக, மறைமாவட்ட மேய்ப்புப் பணிகளுக்குப் பொருள் உதவிபுரிந்து வருகிறது.
2. Pontifical
Society of St Peter the Apostle (PSSPA):
இது அருள்பணியாளர்கள், வேதியர்கள் மற்றும் அர்ப்பண வாழ்வில் ஈடுபடும் துறவறத்தாரின் ஆன்மிக மற்றும் கல்வி சார்ந்த உருவாக்கப் பணிகளுக்காகப் பொருளுதவி செய்யும் அமைப்பு.
3. Pontifical
Society of Missionary Childhood Associations (MCA): இது குழந்தைகளே, குழந்தைகளுக்கு உதவ முன்வரும் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தும் அமைப்பு. குழந்தைகளுக்கான நலத்திட்டங்களுக்குப் பொருளுதவி புரியும் அமைப்பு.
4. Pontifical Missionary Union
of the
Clergy, the Religious and the Consecrated Laity (PMU): குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலைத் திருத்தொண்டர்களுக்கான பயிற்சிக்குப் பொருளுதவி செய்யும் அமைப்பு. இவ்வமைப்பு உலகளவில் பொதுநிலையினர் மத்தியில் இறையழைத்தலை ஊக்குவிக்கும் பயிற்சிகளை முன்னெடுக்கும்.
திருத்தந்தையின்
தலைமையின்கீழ் இயங்கும் மறைத்தூதுப் பணிகளில் இந்த நான்கு அமைப்புகளும் ஒன்றிணைந்து புதிய மறைத்தளங்களில் மறைபரப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட செபங்களும் பொருளுதவிகளும் நாம் தந்திட நம்மை ஊக்கப்படுத்துகின்றன. இறைமக்களாக நாம் செபிப்பதோடு இறைப்பணி தொடர்வதற்கான பொருளுதவிகளை வழங்குவதால் புதிய மறைப்பணிகளும் புதிய மறைத்தளங்களும் வலுவூட்டப் பெறுகின்றன.
மறை
மாநில அளவில் (Regional Level), தேசிய
அளவில் (National Level), பிராந்திய அளவில் (Continental Level), சர்வதேச
அளவில் (International Level) நிர்வாகக்
கட்டமைப்பு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நான்கு படிநிலைகளிலும் உள்ள அலுவலகத்தோடும் அலுவலகப் பணியாளர்களோடும் அமைப்பு முறையோடும் தொடர்பு கொண்டிருக்கக்கூடிய ஒரு வாய்ப்புக் கிடைத்தது. திரு அவையின் மறைபரப்புப்பணி பற்றிய விசாலமான ஒரு பார்வை, ஆழமான அனுபவம், சில சவால்கள் - எல்லாமே ஒரு தனித்துவமான ஒரு புதிய அனுபவமே!
பிராந்திய
உறுப்பினர்கள் அண்மையில் பிராந்திய பொறுப்பாளர்களாக ஐந்து நபர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். அவர்கள் திருத்தந்தையின் மறைபரப்புப்பணி உயர்மட்டக் குழு ஆலோசனை உறுப்பினராக இருப்பார்கள். அதில் நானும் ஒருவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். இது இந்திய நாட்டிற்குப் பெருமை தரக்கூடிய ஒன்று. மேலும், நாம் மேற்கொள்ளும் மறைப்பணிகளால் நமது நாட்டிற்குக் கிடைத்திருக்கும் ஓர் அங்கீகாரம் என்றே கருதுகிறேன்.”
•
வேலூர் மறைமாவட்டத்திற்காகத் தாங்கள்
கொண்டுள்ள
கனவு...…
“திறந்த மனத்தோடு செல்கிறேன். அருள்பணியாளர்கள், துறவியர், இறைமக்களோடு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு செல்கிறேன். பொதுநிலையினரை வலுப்படுத்த வேண்டும்; பங்கேற்புத் திரு அவையாக வேலூர் மறைமாவட்டம் திகழவேண்டும் என்ற ஆசையோடு செல்கிறேன். ‘இரக்கத்தோடும் எதிர்நோக்கோடும்’ என்
மறைமாவட்டத்தை வழிநடத்த வேண்டும் என்ற எண்ணம் என்னில் மேலோங்கியிருக்கிறது. விளிம்புநிலை மக்கள், ஏழை மக்கள் இவர்களைக் குறித்து மறைமாவட்டமாக இணைந்து அவர்களைத் தூக்கிவிட வேண்டிய மனநிலையை எல்லாரிடமும் உருவாக்க வேண்டும், எல்லாரும் சேர்ந்து இந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும், அத்தகைய திரு அவையைக் கட்டி எழுப்ப வேண்டும் என்ற எண்ணம் என்னில் மேலோங்கியிருக்கிறது. இது பொருளாதாரத் தன்னிறைவு, தற்சார்பு சம்பந்தப்பட்டது. அனைவரும் ஒன்றிணைந்து புதிய மறைப்பணி முன்னெடுப்புகளை இந்திய ஆயர் பேரவையின் மேய்ப்புப்பணித் திட்டத்தோடு மேற்கொள்ள வேண்டும் என்ற மனநிலையோடு செல்கிறேன்.”
•
பொன்விழாக் காணும் ‘நம்
வாழ்வு’ வார இதழின்
வாசகர்களுக்குத்
தங்களுடைய
செய்தி...…
“பொன்விழாக் காணும் தமிழ்நாடு திரு அவையின் - நல்லவர்களின் நாடித்துடிப்பு ‘நம் வாழ்வு’ வார இதழின் நிர்வாகத்தினருக்கு எனது மனமார்ந்த பொன்விழா வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன். நம் வாழ்வின் நீண்ட நெடிய வளர்ச்சியைப் பார்க்கிறேன். முன்னாள் ஆசிரியர்கள், அங்குப் பணிபுரிந்த பணியாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகள். தற்போது இவ்விதழில் புதிய பரிணாமத்தைப் பார்க்கிறேன். இப்பொழுது இருக்கின்ற முதன்மை ஆசிரியரையும், அவரோடு இணைந்து பணியாற்றும் உடன் ஆசிரியர்களையும் மனதாரப் பாராட்டுகிறேன். நீங்கள் எழுத்தின் வலிமையைத் தொடர்ந்து சமூகத்திற்கு உணர்த்தி வருகிறீர்கள். உங்களது படைப்புகளும், வெளிவரும் கட்டுரைகளும் நமது களஎதார்த்தத்தைச் சிறப்பாகவே அடையாளப்படுத்துகின்றன. அது தாக்கத்தை ஏற்படுத்துவதைப் பார்க்கிறேன். நான் ஒவ்வொரு வாரமும் உங்கள் தலையங்கத்தை வாசிக்கத் தவறுவதில்லை. அது இந்திய, தமிழ்நாடு அளவில் அந்தந்த வார நடப்பு நிகழ்வுகளை முழுமையாக அறிந்திடச் செய்கிறது. வாழ்த்துகள்! ‘நம்முடைய எழுத்து எவரையுமே பாதிக்கவில்லை என்றால் அது எதற்கு?’ என்ற கேள்வியை எழுப்புவார் அருந்ததிராய். ஆகவே, நமது எழுத்துகள் எவரையேனும் பாதிக்க வேண்டும். சிந்தனையைத் தூண்ட வேண்டும். செயல்பாட்டிற்கு அழைத்திட வேண்டும். அத்தகைய கோணத்தில் இறைவார்த்தையில் ஊன்றிய சமூக-அரசியல் பணிக்கு நம்மை வழிநடத்தும் ‘நம் வாழ்வு’க்கு என் வாழ்த்துகளும் நன்றியும்.
அருள்பணி மற்றும் நிர்வாகப் பணிகளில் மேதகு ஆயர் அவர்கள் நீண்ட அனுபவம் பெற்றவர். இவரிடம் அளிக்கப்பட்ட பணிகளை அனைவரும் பாராட்டும் வண்ணம் நிறைவு செய்துள்ளார். ‘இரக்கமும் எதிர்நோக்கும்’ (MERCY AND HOPE) என்ற விருதுவாக்கைத் தன் இறைப்பணி இலக்காக எடுத்துள்ளார். இவர் மக்கள் நலத்திட்டங்களை இரக்கத்துடன் மட்டுமல்ல; அன்புடனும், அக்கறையுடனும் செயல்படுத்தி உள்ளார். இறைவன் மீது தளரா நம்பிக்கை கொண்டவர். இறைநம்பிக்கையும், தன்னம்பிக்கையும் இவரை உலகில் பெரும் தலைவராக உயர்த்தியுள்ளது.
மேதகு
ஆயர் அம்புரோஸ் பிச்சைமுத்து அவர்களை ஆயராகப் பெற்றதற்கு வேலூர் மறைமாவட்டம் பேறுபெற்றது. இறைவனுக்கு நன்றி கூறுகிறது. இரண்டாம் வத்திக்கான் சங்கம் மற்றும் திரு அவைச் சட்டங்கள் ஆயரின் மக்கள் பணிகளைத் தெளிவாக வரிசைப்படுத்தியுள்ளது. ‘திரு அவையில் ஆயரின் அருள்பணி’
என்ற ஏட்டிலும், திரு அவைச் சட்டத் தொகுப்பிலும் ஆயரின் பல்வேறு மக்கள் பணிகளைப் பற்றி விளக்கப்படுகிறது.
சங்கப் பார்வையில்
ஆயரின்
மக்கள்
பணிகள்
திரு
அவையின் மையமான பொதுநிலையினர் உரிமைகளை ஏற்றுக் கொண்டு திரு அவையிலும் சமூகத்திலும் அவர்களைத் தலைமையேற்கச் செய்வது ஆயரின் கடமையாகும். இரண்டாம் வத்திக்கான் சங்கம் ‘திரு அவையில் ஆயரின் அருள்பணி’
என்ற ஏட்டில் சிறப்பாக அவருடைய அருள்பணிகள் அளிக்கப்பட்டுள்ளன. மறைமாவட்ட ஆயர்கள் திருத்தந்தையின் பிரதிநிதிகள் அல்லர்; கிறிஸ்துவின் பிரதிநிதிகள். எனவே, தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட கடவுளின் மக்களைக் கிறிஸ்துவின் பெயரால் தங்களுக்கே உரித்தான ஆட்சியுரிமையுடன் வழிநடத்துகின்றனர் என்று அதன் முன்னுரையில் அளிக்கப்பட்டுள்ளது.
“கிறித்தவக் கோட்பாட்டை, ஆயர்கள் காலத்தின் தேவைகளுக்கு ஏற்ற முறையில் எடுத்துக் கூறவேண்டும். அதாவது, மக்கள் மனத்தை அச்சுறுத்தி அலைக்கழிக்கும் பிரச்சினைகளுக்கும் கேள்விகளுக்கும் தகுந்த பதில் அளிக்கும் வகையில் அது அமைதல் வேண்டும். மனிதர் யாவரின் மீதும் திரு அவை கொண்டுள்ள அன்னைக்குரிய அக்கறையை அவர்கள் எண்பிக்க வேண்டும். குறிப்பாக, ஏழைகளிடத்திலும், தாழ்த்தப்பட்டோரிடத்திலும் அவர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், அவர்களுக்கு
நற்செய்தி அறிவிக்கவே ஆண்டவர் அவர்களை அனுப்பினார்” (ஆயரின்
அருள் பணிகள் 13).
“நிறை வாழ்வுக்கு மக்களை இட்டுச் செல்லும் பொறுப்புடைய ஆயர்கள் ஒவ்வொருவருடைய தனி அழைப்பிற்கேற்றார்போல் திருப்பணிநிலையினர்,
துறவறத்தார், பொதுநிலையினருடைய தூய்மையை வளர்க்க முயலவேண்டும். அன்பிலும் மனத்தாழ்மையிலும் எளிய வாழ்விலும் தூய்மை நிலையின் எடுத்துக்காட்டாகத் தாம் திகழ வேண்டும் என்பதை அவர்கள் மனத்திற்கொள்ள வேண்டும்”
(ஆயரின் அருள்பணிகள் 15).
“நம்பிக்கை கொண்டோரின் நலனை நல்ல முறையில் அவரவர் நிலைமைக்கேற்ப பேணுவதற்கு ஆயர்கள் தங்கள் மக்கள் வாழும் சமூகச் சூழ்நிலைகளில் அவர்களின் தேவைகள் யாவை என்பதைச் சரியாக அறிய முயல வேண்டும். அதற்காகத் தகுந்த வழிகளைக் குறிப்பாக, சமூக ஆய்வுகளைக் கையாள வேண்டும். அனைவர்பாலும் ஆயர்கள் அக்கறை காட்ட வேண்டும். இவ்வருள்பணி பொறுப்பை ஆற்றும்போது கிறிஸ்துவின் மறையுடலை வளர்ப்பதில் செயல்முறையில் ஒத்துழைக்க நம்பிக்கை கொண்டோருக்கு உள்ள
உரிமையையும் கடமையையும் மதித்து, திரு அவைச் செயல்களில் அவர்களுக்குரிய பங்கை அவர்களுக்கே விட்டுவிட வேண்டும்”
(ஆயரின் அருள்பணிகள் 16).
திரு அவைச்
சட்டம்
காட்டும்
ஆயரின்
மக்கள்
பணிகள்
“அன்பு, தாழ்ச்சி, வாழ்வில் எளிமை ஆகியவற்றில் புனிதத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்க, தாம் கடமைப்பட்டவர் என்பதை மறைமாவட்ட ஆயர் மனத்தில் கொண்டு, ஒவ்வொருவருக்கும் உரிய அழைத்தலுக்கு ஏற்ப கிறித்தவ விசுவாசிகளின் புனிதத்தை எல்லா விதங்களிலும் மேம்படுத்த அவர் முயற்சி செய்ய வேண்டும். இறைவனின் மறைபொருள்களின் முதன்மையான பகிர்ந்தளிப்பவராக அவர் இருப்பதால், அவருடைய கண்காணிப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ள கிறித்தவ நம்பிக்கையாளர்கள் அருளடையாளங்களின் கொண்டாட்டம் வழியாக அருளில் வளரவும் மற்றும் பாஸ்கா மறைபொருளை உணர்ந்து வாழவும் அவர் இடைவிடாமல் முயற்சிசெய்ய வேண்டும்”
(தி.ச. 387).
“ஆயர் தமது மறைமாவட்டத்தில் பல்வேறு வகையான திருத்தூதுப் பணிகளைப் பேணிவளர்க்க வேண்டும். தமது மறைமாவட்டம் முழுவதிலும் அல்லது தனிப்பட்ட மறைவட்டங்களிலும் அனைத்துத் திருத்தூதுப் பணிகளும், அவை ஒவ்வொன்றின் தனிப்பட்ட இயல்பைக் கருத்தில் கொண்டு, அவரது வழிநடத்துதலின்கீழ் ஒருங்கிணைக்கப்படுவதை அவர் கவனித்துக்கொள்ள வேண்டும்”
(தி.ச. 394).
இயேசு
கிறிஸ்து குருவாக இருந்து மக்களைப் புனிதப்படுத்துகிறார். ஆசிரியராக இருந்து மக்களுக்குப் போதிக்கிறார். அரசராக இருந்து மக்களை ஆள்கின்றார். இம்முப்பெரும் பணிகளில் பொதுநிலையினரும் தங்களுக்கு உரித்தான வகையில் பங்கு பெறுகின்றனர். இதனைத்தான் திருச்சங்கமும் ‘கிறிஸ்துவின் குருத்துவ, இறைவாக்கு உரைக்கும் அரச அலுவல்’ எனக் கூறுகின்றது. 1983-ஆம் ஆண்டின் புதிய சட்டத்
தொகுப்பில் இம்முப்பெரும் பணிகளில் பொதுநிலையினரின் புனிதப்படுத்தும் பணி, போதிக்கும் பணி மற்றும் ஆளுகைப் பணி என்று மூன்று பணிகளையும் ஆற்றுவதற்கு உரிமை அளித்துள்ளது. இவ்வுரிமைகளைத் திரு அவையில் பொதுநிலையினர் செயல்படுத்த ஆக்கமும் ஊக்கமும் அளித்தல் வேண்டும்.
“திருமுழுக்கால் பெற்ற புதுவாழ்வினால் கிறித்தவ விசுவாசிகள் இப்புனிதப்படுத்தப்படும் பணியில் தங்கள் பங்கைப் பெறுகின்றனர். கிறித்தவ வாழ்வில், மணவாழ்வில் வாழ்ந்து காட்டுவதன் மூலமாகவும், தங்கள் பிள்ளைகளின் ஞானக்கல்விக்கு ஏற்பாடு செய்வதன் மூலமாகவும், எங்கும் தூய்மையாகச் செயல்பட்டு பொதுநிலையினர் உலகையே கடவுளுக்கு அர்ப்பணிக்கின்றனர்” (திரு
அவை 34).
“கிறிஸ்து இறைவாக்கு உரைக்கும் அலுவலைத் தொடர்ந்து ஆற்றுகிறார். அவர் தம்முடைய பெயராலும் அதிகாரத்தாலும் கற்பிக்கும் திரு
அவை ஆட்சியாளர் மூலம் மட்டுமல்ல, பொதுநிலையினர் வழியாகவும் இவ்வலுவலை
ஆற்றி வருகிறார். வாழ்வென்னும் சான்றாலும் போதனையாலும் கிறிஸ்துவைப் பிறருக்கு எடுத்துரைக்கும் போது நற்செய்தி அறிவிப்புப்பணி தனிச்சிறப்பு பெறும்”
(திரு அவை 35).
“கிறிஸ்து இறையாட்சியைப் பறைசாற்றினார். அவர் தம்முடைய ஆட்சியை மட்டுமல்ல, பொதுநிலையினர் வழியாகவும் பரப்ப விரும்புகிறார். இவ்வாட்சி உண்மையின் ஆட்சி, வாழ்வின் ஆட்சி, தூய்மையின் ஆட்சி, அருளின் ஆட்சி, நீதியின் ஆட்சி, அன்பின் ஆட்சி, அமைதியின் ஆட்சி ஆகும்”
(திரு அவை 36).
மேதகு
ஆயர் அம்புரோஸ் பிச்சைமுத்து அவர்கள் மக்கள் நலப்பணிகளைத் திறம்பட ஆற்றியவர். வேலூர் மறைமாவட்ட ஆயராகத் திருச்சங்கம் மற்றும் திரு அவைச் சட்டம் காட்டும் பணிகளைவிட மேலாகவே மக்கள் வளர்ச்சிப் பணிகளை நிச்சயம் செய்வார். ஆயரின் பணி சிறக்க இறைவனை இறைஞ்சுகிறோம்.
(17.11.1985 ‘நம் வாழ்வு’ இதழில் திருத்தந்தையின் வருகை குறித்து சென்னை- மயிலை பேராயர் மேதகு அருளப்பா பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியின் ஒரு பகுதி)
இந்திய
ஆயர் பேரவையின் அழைப்பின் பேரிலும், மறைந்த இந்திரா காந்தி அவர்கள் திருத்தந்தையைச் சந்தித்தபோது அழைத்ததன் பேரிலும், நமது குடியரசுத் தலைவர் ஜெயில்சிங்கின் அழைப்பின் பேரிலும் திருத்தந்தை, அடுத்த ஆண்டு (1986) பிப்ரவரி முதல் தேதியிலிருந்து 10 -ஆம் தேதி வரை இந்தியாவில் தமது திருப்பயணத்தை மேற்கொள்கிறார்.
இந்தியாவிற்கு
வருகை தரும் இரண்டாவது திருத்தந்தை இவர். இதற்கு முன்பாக 1964 ஆம் ஆண்டு திருத்தந்தை ஆறாம் சின்னப்பர் பம்பாய்க்கு வருகை தந்தார். அவரைத் தொடர்ந்து திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்கள் இந்தியாவிற்கு வருகை தருகிறார்.
திருத்தந்தை வருகை
தரும்
இடங்களும்
நாள்களும்
பிப்ரவரி
1, 2 ஆகிய தேதிகளில் டெல்லி.
3, 4 ஆகிய தேதிகளில்
கொல்கத்தா, ராஞ்சி, ஷில்லாங்.
5-ஆம்
தேதி சென்னை, திருச்சூர், கோட்டயம், திருவனந்தபுரம்.
9, 10 தேதிகளில் பம்பாய்,
பூனா.
பிப்ரவரி
5 அன்று காலை 11 மணிக்கு கொல்கத்தாவிலிருந்து சென்னை வரும் திருத்தந்தை, விமான நிலையத்திலிருந்து புனித தோமையார் மலைக்குச் செல்கிறார். அங்கிருந்து அண்ணாசாலை வழியாக இராஜாஜி மண்டபம் வருகிறார். அங்கு கிறித்தவரல்லாத பிற சமயத் தலைவர்களுடன் உரையாடுகிறார்.
பின்பு
சாந்தோமிலுள்ள பேராயர் இல்லத்தில் மதிய உணவு, ஓய்வு.
மாலை
3 மணிக்கு புனித தோமையார் பேராலயத்திற்குச் சென்றுவிட்டு, மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகில் அமைக்கப்பட இருக்கும் பிரமாண்ட மேடையில் 200க்கும் மேற்பட்ட ஆயர்கள், குருக்களுடன் திருப்பலி நிறைவேற்றுவார். திருப்பலி முடிந்தவுடன் நேராக விமான நிலையம் சென்று கேரள மாநிலத்திற்குப் புறப்படுவார்.
‘தமிழ்நாட்டிற்கு வருகை தரும் முதல் திருத்தந்தை’ என்ற
வரலாற்றுப் பெருமையைப் பெற்றிருக்கிறார் திருத்தந்தை இரண்டாம்
ஜான்பால். ‘ஒற் றுமைக்கு இறைவன் விடுக்கும் அழைப்பு’ என்பது திருத்தந்தையின் இந்தியப் பயணத்திற்கான மையக்கருத்து.
புனித
பேதுருவைத் தொடர்ந்து வரும் 264-வது திருத்தந்தையும், 80 கோடி கத்தோலிக்க மக்களின் தலைவருமான திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் சென்னை வருவது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும்.
திருத்தந்தையின்
வருகையைக்
குறித்து
இவர்களின்
உணர்வுகள்
என்ன?
(02.01.1986)
“தாய்த்
திரு அவையின் தலைவரை அருகில் நின்று தரிசிப்பதில் உண்மையிலேயே ஆனந்தம் அதிகம்தான். இலட்சக்கணக்கான
மக்கள் தங்களது தார்மீகத் தலைவரைக் காண கரைபுரண்டு வரும் வேளையில், விடிந்தால் முடிந்துபோகிற அரசியல் கூட்டங்களைப் போல் இது அமைந்து விடக்கூடாது. ஆன்மிக மறுமலர்ச்சியும், சமூக ஈடுபாடும் தலத்திரு அவையில் ஊக்கம்பெற திருத்தந்தை மாபெரும் உந்துசக்தியாக இருப்பார் என்பது எனது நம்பிக்கை. நமக்குள்ளே இருக்கிற பிரிவினைகளைக் களைந்துவிட திருத்தந்தையின் வருகை உதவி புரிய வேண்டும்.”
- தியாக்கோன் வின்சென்ட் சின்னதுரை,
திரு
இருதய
குருத்துவக்
கல்லூரி,
சென்னை
“வெளிநாட்டிலிருந்து பிள்ளைகளைப் பார்க்க வரும் அன்புத்தந்தையை வரவேற்கப் போகிற உணர்வுதான் எனக்கு ஏற்படுகிறது. தன்னைத் துப்பாக்கியால் சுட்டவனைக்கூட மன்னித்துவிட்டதால் அவர் மீதுள்ள மதிப்பும், அவரது அருள்பொழியும் வதனத்தைப் பார்க்க வேண்டுமென்கிற ஆசையும் அதிகமாகிறது. அவரில் இயேசுவின் வாரிசையே காண்கிறேன்.”
- ஹெலன் நிர்மலா, சென்னை
“திருத்தந்தை ஆறாம் சின்னப்பர் இந்தியாவுக்கு வந்தபோது எனக்கு வயது 11. பணக்காரர்களும், பெரியவர்களும் சொகுசுப் பேருந்து மூலம் அவரைப் பார்க்கச் சென்றபோது, நிராகரிக்கப்பட்ட எனது ஏக்கங்கள் இன்று நிறைவேறப் போகின்றன என்பதில் விவரிக்க முடியாத மகிழ்ச்சி. இந்திய மண்ணிலும் இறை இயேசு உண்மையாய் வாழ்கின்றார் என்பதைத் திருத்தந்தையின் வருகை நிரூபிக்கும் என்பது எனது நம்பிக்கை.”
- தி. செல்வராஜ், காவல்துறை பணிமனை
ஆய்வு,
சென்னை
“ஏதோ தேவதைக் கதைகளில் படித்தவர்களை நேரில் பார்க்கப் போவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. சின்ன வயதிலிருந்தே வீட்டிலும், மறைக்கல்வி வகுப்புகளிலும் அடிக்கடி
போப்பாண்டவர்களைப் பற்றிச் சொன்னாலும், அவர்கள் கடவுளைப்போல் காண முடியாத மறைபொருள் போலவே இருந்து வந்தார்கள். ஆதலால் இப்போதுகூட வாழ்வில் இனிமேல் பார்க்கவே முடியாத ஒரு பொக்கிஷத்தைப் பார்க்கப் போவது போன்ற உணர்வு ஏற்படுகிறது.”
- ஜோஸ்பின், சென்னை
திருத்தந்தை சென்னையில்
ஆற்றிய
மறையுரையின்
சுருக்கம்
(16.02.1986)
“இந்தியத் துணைக் கண்டத்தில் நான் தொடங்கியுள்ள திருத்தூதுப் பயணத்தில், இன்று புகழ்பெற்ற பண்பாடுகளையும், ஆழ்ந்த கடவுள் பக்தியுள்ள பாரம்பரியங்களையும் கொண்டுள்ள தமிழ்நாட்டின் தலைநகராகிய சென்னைக்கு நான் வந்துள்ளது குறித்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இதே தமிழ்நாட்டில் நற்செய்திப் பணியாற்றி, அதற்காக மறைச்சாட்சியாக மரித்த புனித அருளானந்தரை நினைவுகூர்ந்து இத்திருப்பலியை நிறைவேற்றுவதில் பேருவகை கொள்கிறேன். இந்நேரத்தில் இங்குத் திரளாக வந்திருக்கும் ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர், பொதுநிலையினர் அனைவரையும் வாழ்த்துகிறேன். அரசு அதிகாரிகளுக்கும், தொழில், கல்வி, கலாச்சாரம் இவற்றில் ஈடுபாடு கொண்டு பணியாற்றும் அனைவருக்கும் என் வாழ்த்துகள். இங்குள்ள ஏனைய கிறித்தவ சகோதர-சகோதரிகளுக்கும், மற்ற பல்வேறு சமயங்களைச் சார்ந்த மக்களுக்கும் என் வாழ்த்துகள்.
அன்புள்ள
சகோதர சகோதரிகளே! கிறிஸ்துவோடு இறந்தோமானால் அவரோடு வாழ்வோம் என்பது மட்டுமல்ல, நிலைத்து நின்றால்தான் அவரோடு வாழ்வோம் என்பதையும் மனத்தில் கொள்வோமாக. மேய்ப்பரும் அர்ச்சகரும் இறைவாக்கினருமாகிய கிறிஸ்து நமக்கு விடுத்துள்ள அழைப்பினால் அப்போஸ்தலர்களுடைய உள்ளங்களை எவ்வாறு தொட்டாரோ அப்படியே நம்மையும் தொட்டு தூய ஆவியின் முத்திரையைப் பெற்றுக்கொள்ளச் செய்திருக்கிறார். சிறப்பாக, புனித தோமையார், புனித பிரான்சிஸ் சவேரியார், புனித அருளானந்தர் இவர்களுடைய உள்ளங்களில் நிகழ்ந்த அற்புதச் செயல்கள் நம் உள்ளங்களிலும் நிகழ்வதாக! இந்நாட்டிலுள்ள திரு அவைக்காகவும், எம் அன்புக்குரிய இந்திய நாட்டிற்காகவும், அதன் மக்களுக்காகவும் அவர்கள் தேவைகளுக்காகவும் இப்புனிதர்கள் இறைவனிடம் பரிந்து பேசுவார்களாக. அன்புச் சகோதரரே, நீங்கள் எல்லாரும் கடவுளின் வார்த்தைக்குச் சாட்சிகளாகவும், கிறிஸ்து உலகத்திற்கு வெளிப்படுத்திய மீட்பு அளிக்கும் செய்தியாகிய அன்பிற்கும், இரக்கத்திற்கும் சாட்சிகளாகவும் வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்
என்பதை நினைவில் கொள்ளுங்கள்.”
(இம்மறையுரையைத் தமிழில் மொழிபெயர்த்து
உரை
நிகழ்த்தியவர்
கோட்டாறு
ஆயர்
மேதகு மரியானுஸ் ஆரோக்கியசாமி
ஆண்டகை
அவர்கள்)
இயற்கை கொஞ்சும் அழகுடன் அமைந்த மணிப்பூரில் இன்று பெண்களின் கதறல் சத்தம் விண்ணை முட்டி எதிரொலிக்கிறது.
பங்களாதேஷ்,
சீனா மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளுக்கிடையில் மலைப்பிரதேசங்களையும், சமவெளிகளையும் கொண்ட மாநிலம் மணிப்பூர். இந்தப் பகுதியின் மலைகளின் எண்ணிக்கையை விட, அங்குள்ள பிரச்சினைகளின் எண்ணிக்கை அதிகம். பல ஆண்டுகளாக நீடித்து
வந்த மணிப்பூர் இனக்குழுக்களுக்கிடையேயான பிரச்சினை, கடந்த ஆண்டு மே 3 அன்று கலவரமாக வெடித்தது. ஒன்றரை ஆண்டுகாலமாக மணிப்பூரில் நீடித்து வந்த இந்தப் பயங்கரவாத நிகழ்வுகள், கடந்த சில நாள்களாக மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கிவிட்டன.
இந்தக்
கலவரங்களில் பெரும்பாலும் ஒன்றுமறியாத பெண்களும், குழந்தைகளும் மிகக் கொடிய வகையில் தாக்கப்படுகின்றனர்; கொல்லப்படுகின்றனர். மணிப்பூர் கலவரத்தை, ‘மெய்தி’ மற்றும் ‘குகி’ என்ற இரண்டு இனக்குழுக்களுக்கிடையேயான பிரச்சினை என்று சாதாரணமாக நம்மால் தள்ளிவிட முடியாது. ஒவ்வோர் இனக்குழுவும் இயந்திரத் துப்பாக்கித் தாங்கி போராட்டகாரர்களை உருவாக்குகின்றது. சாதாரண மக்களுக்கு இத்தனை உயர்ரகத் துப்பாக்கிகள் எப்படிக் கிடைக்கின்றன? இராணுவத்தை எதிர்த்துப் போராடுவதற்கான பயிற்சியும், பயிற்சிக்கான நிதி உதவியும் இவர்களுக்கு எங்கிருந்து கிடைக்கின்றன? என்ற மர்மங்கள் மணிப்பூர் கலவரத்தை நாடு தழுவிய பிரச்சினையாக மாற்றியுள்ளது.
மணிப்பூரில்
கலவரம் என்பது புதிதல்ல. 1993-ஆம் ஆண்டு ‘குகி’ இன மக்களுக்கும், நாகாக்களுக்குமிடையான
நிலப் பிரச்சினை கலவரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கள் உயிரை இழந்தனர். பலரது இல்லங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. அதைத்
தொடர்ந்து 2001 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளிலும் மணிப்பூர் மண்ணில் வன்முறைகள் வெடித்தன.
இதுவரை
மணிப்பூரில் நிகழ்ந்த மற்ற கலவரங்களைக் காட்டிலும் மே 3, 2023 அன்று ‘குகி’களுக்கும், ‘மெய்தி’களுக்கும் இடையே தொடங்கிய கலவரம் மிகவும் வேகமாக மணிப்பூர் முழுவதும் பரவத் தொடங்கியது. மேலும், அதன் தாக்கம் அதன் அண்டைய மாநிலங்களான நாகாலாந்து, அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் பிரதிபலிக்கின்றது.
மணிப்பூரில்
சமவெளிப் பகுதியில் வசிக்கும் ‘மெய்தி’ இன மக்கள், தங்களை
மலைவாழ் பட்டியலினத்தவர் பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றனர். மணிப்பூரின் உயர் நீதிமன்றம் ‘மெய்தி’களின் கோரிக்கையைப் பரிசீலிக்க உத்தரவிட்டதில் இந்தக் கலவரத்திற்கு அடித்தளம் போடப்பட்டது. உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால், தங்களின் உரிமைகள் பறிக்கப்படும் என்பதையும், தங்களின் வாழ்விடங்களை ‘மெய்தி’ இன மக்கள் எடுத்துக்கொள்வர்கள்
எனவும் கருதிய ‘குகி’ இனச் சமூகச் செயற்பாட்டாளர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். உச்ச நீதிமன்றம், மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை மிகவும் கடுமையாக விமர்சித்தது. ‘குகி’ இன மக்கள் பல்வேறு
விதமான போராட்டங்களில் ஈடுபட்டனர். இவர்களை எதிர்த்து ‘மெய்தி’ இன மக்களும் போராட்டக்
களத்தில் களமிறங்கினர்.
இதையடுத்து
மணிப்பூரில் இந்த இரண்டு இனக் குழுக்களுக்குமிடையே வன்முறை வெடித்தது. இதுவரை ஏறக்குறைய 221 நபர்கள் கலவரத்தில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
60,000-க்கும் மேற்பட்டோர் தங்களின் வாழ்விடத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
220 தேவாலயங்களும்,
17 கோவில்களும் இடிக்கப்பட்டுள்ளன. இவையனைத்திற்கும்
மேலாக ஜூலை 19, 2023-இல் வெளியான பெண்களின் நிர்வாண ஊர்வலக் காணொளி, பார்ப்போர் அனைவரின் கண்களையும் குளமாக்கியது. இதுபோன்று மணிப்பூர் கலவரத்தின் தொடக்கம் முதல் இன்று வரை பெண்கள் சொல்ல முடியாத பல துயரங்களை அனுபவித்து
வருகின்றனர்.
இந்தக்
கலவரத்தின் காரணம் மிக தெளிவாக இருப்பினும், இக்கலவரம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதற்கான காரணங்கள் அவ்வளவு தெளிவாக இல்லை. மத்தியிலும், மணிப்பூரிலும் ஆட்சி புரியும் மதவாத ஆட்சியாளர்கள் மணிப்பூரை இவ்வுலகின் பார்வையிலிருந்து மறைக்க முயற்சி செய்கின்றனர். கலவரத்திற்கான காரணங்களைச் சமன் செய்யாமல், தங்களுடைய இராணுவத்தின் செயல்கள் மூலம் மணிப்பூரைப் போர்ச்சூழல் நிறைந்த மற்றொரு காஷ்மீராக மாற்றுகின்றனர். இந்தக் கலவரத்தினிடையே அது உருவானதற்கான காரணங்கள் மறைக்கப்படுகின்றன.
மணிப்பூரில்
60 சதவீதமாக உள்ள ‘மெய்தி’ இன மக்கள், 10 சதவிகிதச்
சமவெளிப் பரப்பில் வசிக்கின்றனர். மீதமுள்ள ‘குகி’ இன மக்கள் பெரும்பாலும்
மலைப்பிரதேசங்களில் வாழ்கின்றனர். இவர்களுள் ‘மெய்தி’ இனத்தோர் பெரும்பாலானோர் இந்துகள் என்பதும், ‘குகி’கள் பெரும்பாலும் கிறித்துவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மணிப்பூரில் பெரும்பான்மை இனத்தவராக இருக்கும் ‘மெய்தி’கள் உயரியப் பதவிகளிலும், சீரான பொருளாதார முன்னேற்றத்துடனும் சமவெளிப் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். மணிப்பூரின் 60 சட்டமன்ற உறுப்பினர்களுள், 40 பேர் ‘மெய்தி’கள். மணிப்பூரின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுமே ‘மெய்தி’ கள்தான். இதன் மூலம், ‘மெய்தி’கள் சமூகத்தில் எந்த அளவு ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்பதை அறியலாம்.
சமூக
முன்னேற்றம் அடைந்த ‘மெய்தி’கள், சமூகத்தால் புறந்தள்ளப்பட்ட பட்டியல் இன மலைவாழ் மக்களின்
உரிமைகளைத் தங்களுக்கும் அளிக்க வேண்டும் என்று போராடியதே மணிப்பூர் பிரச்சினையின் மூலமாகும். இன்று இதை மறந்து மணிப்பூர் கலவரம் பல்வேறு திசைகளில் சென்று கொண்டிருக்கின்றது.
தொடக்கத்தில்
இனக் குழுக்களிடையேயான உரிமைப் போராட்டமாகத் தொடங்கிய இப்பிரச்சினைக்கு மதவாதச் சக்திகள் மதச்சாயம்
பூசினர். மணிப்பூர் கலவரத்தின் காரணங்களை மழுங்கடிக்க மதவாதச் சக்திகள் இரு இனத்திற்குமான மதப்பிரிவினையைத் தீமூட்டி விட்டனர். போராட்டக்காரர்கள் தங்களின் கோரிக்கைகளை மறந்து, ஒருவர் மற்றவருக்கான வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில் ஆலயங்களையும், வழிபாட்டுத்தலங்களையும் முழுமையாகச் சேதப்படுத்தினர். ‘மெய்தி’ இனக்குழுவைச் சார்ந்த மணிப்பூரின் முதல்வர் பீரேன்
சிங்கும் ‘மெய்தி’ இன மக்களுக்கு ஆதரவாக
ஒருதலைப்பட்சமாகச் செயல்படுகின்றார் எனக் குற்றம் சாட்டப்பட்டார். அவரின் செயல்களும் இதற்கு ஏற்றவாறே இருந்தன.
நாட்டின்
பல முக்கியப் பிரச்சினைகளுக்கு மௌனம் சாதிக்கும் பிரதமர், நாட்டையே உலுக்கும் இப்பிரச்சினைக்கும் தொடர்ந்து மௌனம் சாதிக்கின்றார். நாட்டின் பெரும்பான்மை இந்துகளையும், சிறுபான்மையினரையும் ஒருசேரப் பகைத்துக் கொள்வது, தங்களின் தேர்தல் அரசியலைப் பாதிக்கும் என்பதால் மதவாத ஒன்றிய அரசு மணிப்பூர் பிரச்சினையைப் பற்றிப் பேசுவதைத் தவிர்க்கின்றது.
இதற்கிடையில்
இரண்டு இனக்குழுக்களும் தங்களுக்கென ஆயுதமேந்திய போராட்டக் குழுக்களை உருவாக்குகின்றார்கள். இவர்களுக்கு மணிப்பூரின் எல்லையோர நாடுகள் ஆயுதமளித்து ஆதரிக்கின்றன என்ற கருத்து நிலவுகின்றது. ஒருபுறம் மணிப்பூரின் ஆயுதக் கலாச்சாரத்திற்கு அண்டை நாடுகளின் ஆதிக்கம்தான் காரணம் என்று கூறும் ஒன்றிய அரசு, மறுபுறம் ‘நாட்டின் பாதுகாப்பில் நாங்கள் சமரசம் செய்து கொள்ளமாட்டோம்’ என்று
முன்னுக்குப்பின் முரணாகப் பேசி மணிப்பூரின் நிலையை மேலும் மோசமாக்குகின்றது.
மதவேற்றுமை,
அண்டை நாடுகளின் தலையிடல், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் தொய்வான நடவடிக்கைகள் மற்றும் ஆயுதமேந்திய போராட்ட அமைப்புகள் என்ற பல்வேறு காரணங்களால் மணிப்பூர் கலவரம் இன்றுவரை கொளுந்து விட்டு எரிகின்றது. எரிகின்ற அந்த நெருப்பில் வெந்துபோவது அப்பாவிகள்தாம். அதிலும், குறிப்பாக பெண்களே!
ஜிரிபாம்
மாவட்டத்தைச் சேர்ந்த 31 வயது பெண்ணை ‘மெய்தி’ போராட்டக்காரர்கள் பாலியல் வன்புணர்வு செய்து, தீயிட்டுக் கொளுத்தினர். இதற்குப் பதிலளிக்க ‘குகி’ போராட்டக்காரர்கள் இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு பெண்ணைச் சுட்டுக்கொன்றனர். மேலும், காணாமல் போன பெண்களும், குழந்தைகளும் ஆங்காங்கே சடலமாகக் கண்டெடுக்கப்படுகின்றனர். இதுபோன்று பெண்கள் தொடர்ச்சியாக வன்புணர்வு செய்யப்படுவதும், கொல்லப்படுவதும் வன்முறையின் - அநாகரிகத்தின் உச்சம். இவற்றை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இந்தக் கொடுமைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அமைதிக்காக வீதிகளில் இறங்கி போராடுகின்றனர். மேலும், மணிப்பூரின் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், முதல்வர் மற்றும் அவர்களின் இல்லங்களை முற்றுகையிடுகின்றனர். உரிமைகளைப் பாதுகாக்கத் தொடங்கப்பட்ட போராட்டத்தில் பல உயிர்களும், ஒன்றும்
அறியாத பெண்களின் மானமும் பறிக்கப்படுகின்றன. ‘இந்தியர் அனைவரும் என் சகோதர, சகோதரிகள்’
என்று உறுதிமொழியெடுக்கும் நாம், நம் சகோதரிகளின் கண்ணீர் துடைக்க நம் கரம் உயர்த்துவோம்.
வன்முறை
ஓயட்டும்; அமைதி திரும்பட்டும்!
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்களுக்கான தேர்தல் பிரச்சாரங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. வழக்கம் போல நமது பிரதமரும், அவரது உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தங்களது வேட்பாளர்களுக்காக வரிந்து கட்டிக்கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்கள். நீட்டி முழக்கி, கண்கள் எல்லாம் கோவைப் பழம் போல சிவக்க, ஆவேசத்துடன் அவர்கள் பேசும்போது, அவர்களைப் பற்றி எல்லாம் தெரிந்த நமக்கே அவர்கள் இருவரும் பேசுவதெல்லாம் உண்மை என்று நம்பத் தோன்றுகிறது!
நம்மையே
அவர்கள் ஒரு கணம் அசைத்துப் பார்க்கிறார்கள் என்றால், அக்கூட்டத்தில் நேரடியாகப் பங்கேற்று, அவர்களுடைய பேச்சுகளைக் கேட்கின்ற அப்பாவி பொதுமக்களுடைய நிலைமை எப்படி இருக்கும் என்று நம்மால் யூகிக்க முடிகிறது. ஆனால், இரண்டு பேரும் சொல்லி வைத்தாற்போல் மருந்துக்குக் கூட ஓர் இடத்திலும் ஒரு முறைகூட உண்மை பேசவில்லை.
அரசியல்
மேடைகளில் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்களை உண்மையைப் போல பேசுவதை ஒரு கலையாகவே தங்கள் தொண்டர்களுக்குத் தனிப்பயிற்சியாகத் தரும் ஓர் இயக்கத்தின் முன்னணித் தலைவர்களாகிய அவர்கள் வேறு எப்படிப் பேசுவார்கள்?
மோடியும்,
அமித்ஷாவும் அந்த இயக்கத்தின் தலைவர்களாகவே மட்டும் இருந்து, இப்படிப் பொதுமேடைகளில் அபாண்டமாகப் பொய்களைப் பேசினார்கள் என்றால் அதைப்பற்றி நாம் அதிகம் பொருட்படுத்தப்போவதில்லை. ஆனால், ஒருவர் உலகின் மிகப்பெரிய அளவில் உள்ள சனநாயக நாட்டின் பிரதமர்; மற்றொருவர் 140 கோடி இந்தியர்களின் பாதுகாப்பான வாழ்க்கைக்கும், சமூக அமைதிக்கும் பொறுப்பு ஏற்க வேண்டியவர். அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், அவர்களது அனைத்து அசைவுகளும் நகர்வுகளும் கோடிக்கணக்கான மக்களது வாழ்க்கையையும், ஒட்டுமொத்த இந்தியாவின் நலனையும் உள்நாட்டிலும், உலக அளவிலும் பெருமளவில் பாதிக்கும் என்பதை அறிந்து பேசுகிறார்களா? அல்லது அறியாமல் பேசுகிறார்களா? என்று நமக்குப் புரியவில்லை. அறிந்து பேசினால் இது மாபாதகம்; அறியாமல் பேசினால் மகா கேவலம்!
‘இந்திய அரசியல் சாசனச் சட்டப்படி நடப்பேன்’
என்று இறைவன் பெயரால் உறுதிமொழி எடுத்த நம் பிரதமர், எப்படி ஒவ்வொரு பிரச்சாரக் கூட்டத்திலும் வெறுப்பையும், துவேஷத்தையும் மூட்டை மூட்டையாக விதைக்கிறார்? இனம், மதம், மொழி, மாநிலம் என்ற வேறுபாடுகள் பாராமல் நாட்டு மக்கள் அனைவரையும் இந்தியர்களாகவே பார்க்கவும், ஏற்றுக்கொள்ளவும் கடமைப்பட்ட பிரதமரும், உள்துறை அமைச்சரும் இந்நாட்டின் மண்ணின் மக்களான முப்பது கோடி சிறுபான்மை இசுலாமியர்களை ஏன் இவ்வளவு அந்நியப்படுத்துகிறார்கள்? ஏன் அவர்களை இந்நாட்டின் பெரும்பான்மையான இந்து மக்களுக்கு எதிரான ஜென்மப் பகைவர்களாகக் கட்டமைக்கிறார்கள்?
நடந்து
முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது குஜராத்தில் பிரச்சாரம் செய்த பிரதமர், “இந்தியா கூட்டணி வென்றால் உங்களிடம் இரண்டு எருமைகள் இருந்தால் ஒன்றை எடுத்து முஸ்லிம்களிடம் கொடுத்துவிடுவார்கள்” என்று
பேசினார். இந்த முறை ஜார்க்கண்ட்டில் பேசும்போது பழங்குடியின மக்களைப் பார்த்து “உங்கள் பெண்களையெல்லாம் ‘அவர்களே’ திருமணம் செய்து கொள்வார்கள். குழந்தைகளைப் பெற்று அனைவரையும் இஸ்லாமியராக மதமாற்றம் செய்து, பழங்குடியினத்தையே இல்லாமல் செய்துவிடுவார்கள்” என்று
எச்சரித்தார்.
பழங்குடி
மக்களின் மக்கள்தொகை குறைந்து, இஸ்லாமியர்களது மக்கள்தொகை கூடிவிட்டது; பழங்குடி மக்கள் வாழும் நிலப்பரப்பு சுருங்கி, இஸ்லாமியர்கள் வாழும் நிலப்பரப்பு அதிகமாகிவிட்டதென்றும் பொய்யான செய்திகளை எவ்வித ஆதாரங்களும் இன்றி வாய் கூசாமல் கூறினார்.
மகாராஷ்டிராவில்
பேசிய பிரதமர், “நடக்கப் போகும் தேர்தல் ஒரு சட்டமன்றத்திற்கான தேர்தல் மட்டுமல்ல; சத்ரபதி சிவாஜி மகராஜைக் கொண்டாடுகிறவர்களுக்கும், அவுரங்கசீப்பைப் போற்றுகிறவர்களுக்கும் இடையே நடக்கின்ற தேர்தல்” என்றார். அவர் மனத்தில் ஏன் இவ்வளவு வக்கிரம்?
அதைப்போல
மகாராஷ்டிராவில் அமித்ஷா ஒரு படி அதிகமாகச் சென்று இந்து மக்களைப் பார்த்து, “இந்தியா கூட்டணி வென்றால் உங்கள் நிலங்களையெல்லாம் எடுத்து வக்பு வாரியச் சொத்துகளாக மாற்றிவிடுவார்கள்” என்று
பயமுறுத்தினார். மேலும், “பட்டியல் இன, பழங்குடி மற்றும் இதர பிற்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கான இடஒதுக்கீட்டை இரத்து
செய்து அந்த இடங்களையெல்லாம் இசுலாமியருக்கு வழங்க இருக்கிறார்கள்” என்றும்
எச்சரித்தார். மற்றும் சில இடங்களில் அரசுப் பணிகளின் ஒப்பந்தங்களில் ஒரு பகுதியை இசுலாமியர்களுக்கு ஒதுக்கீடு செய்ய சட்டம் இயற்ற காங்கிரஸ் திட்டமிடுகிறது என்றும் பா.ச.க.
பிரச்சாரம் செய்கிறது.
அறுபது
ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியிலும், அடல் பிகாரி வாஜ்பாயின் கூட்டணி ஆட்சியில், ஒரு சிறுபான்மை இஸ்லாமியர் குடியரசு தலைவராகவும், ஒரு சிறுபான்மை சீக்கியர் பிரதமராக இருந்து நடத்திய ஆட்சியிலும் இந்துகளுக்கு இப்படிப்பட்ட எந்தக் கேடும் நடக்காமல் அவர்கள் பத்திரமாகவும்
பாதுகாப்பாகவும் வாழ்ந்தபோது, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முழுமையான சித்தாந்தப் பயிற்சி பெற்ற சுயம்சேவக்குகள் குடியரசு தலைவராகவும், பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருக்கின்றபோது, இந்துகளுக்கு இப்படிப்பட்ட கொடுமைகளெல்லாம் நடந்துவிடும் என்று பிரதமரும் உள்துறை அமைச்சரும் சொல்வதை யார் நம்புவார்கள்?
2014-இல் பிரதமர்
இப்படிப் பேசியிருந்தால்கூட அனுபவம் இன்மையால் இப்படிப் பேசுகிறார் என்று நாம் கடந்து சென்றிருப்போம். ஆனால், பதினோர் ஆண்டுகளாக, அசைக்க முடியாத பெரும்பான்மையுடன், எதிர்த்துக் கேள்வியே கேட்க முடியாத அதிகாரத்துடன் ஆட்சி செய்த மோடியும், அமித்ஷாவும் இப்படிப் பேசுவதுதான் மிகப்பெரிய வேடிக்கை!
பங்களாதேஷிலிருந்து
பலர் சட்டவிரோதமாக ஜார்க்கண்டில் குடியேறியதால் அங்கு இசுலாமியர்களின் மக்கள்தொகை கூடிவிட்டது என்று குற்றம் சாட்டும் மோடியும் அமித்ஷாவும் யாரை ஏமாற்ற நினைக்கின்றனர்? நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கும் அதிகாரம் ஒன்றிய அரசிடம்தானே உள்ளது! அந்நியரின் சட்டவிரோதக் குடியேற்றத்தை நீங்கள் இருவரும் ஏன் தடுக்கவில்லை? அப்படிச் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை நீங்கள் ஏன் வெளியேற்றவில்லை? அப்படி வெளியேற்றும் நடவடிக்கைகளை நீங்கள் எடுத்து,
அதற்கு ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனவா?
நம்
நாட்டு இசுலாமியரோ அல்லது அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளோ, அயல்நாடுகளிலிருந்து சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறும்
இசுலாமியருக்குக் குடியுரிமைகள் வழங்கவேண்டும் என்று உங்களிடம் என்றாவது கேட்டார்களா? இப்படி எந்தச் சூழலும் இல்லாத நிலையில், சட்டவிரோதக் குடியேற்றங்கள்மீது
பதினோர் ஆண்டுகளாக மோடியும் அமித்ஷாவும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையே... ஏன்? மோடியும், அமித்ஷாவும் செய்த பாவங்களை எதிர்க்கட்சியினர் மீது ஏன் சுமத்த வேண்டும்?
பதினோர்
ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்ட பா.ச.க.வுக்குத் தங்களது சாதனைகள் என்று சொல்லிக்கொள்ள ஏதுமில்லை! ஏழை
எளிய மக்களின் வாழ்வாதாரங்களை
உயர்த்த எந்தச் சிறப்புத் திட்டங்களையும் அவர்கள் நிறைவேற்றவில்லை. இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் எந்தப் பெரிய முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. விவசாயிகளின் கடன்களையும், படித்து விட்டு வேலை
கிடைக்காத மாணவ-மாணவியரின் தவணை தவறிய கல்விக் கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டும் என்ற நியாயமான கோரிக்கையினையும் நிறைவேற்றித்
தரவில்லை. தேய்ந்துகொண்டே
வரும் சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில்களை அழிவிலிருந்து காப்பாற்ற எந்த முயற்சிகளும் மேற்கொள்ளவில்லை. மாநிலங்களுக்கு முறையான நிதிப்பங்கீட்டை வழங்காமல், நன்றாகச் செயல்படும் மாநிலங்களையும் திவாலாகும் நிலைக்குத் தள்ளியது
என்று அவர்கள் செய்யத் தவறியவைகளை நீண்ட பட்டியலாக எழுதிக்கொண்டே இருக்கலாம்.
‘பதினோர் ஆண்டுகள் அவர்கள் என்னதான் செய்தார்கள்?’ என்று ஒரு கேள்வி எழும். எப்போதோ படித்த ஒரு புதுக்கவிதை என் நினைவுக்கு வருகிறது. பதினோர் ஆண்டுகள் இவர்கள் என்ன செய்தார்கள் என்ற பட்டியல். என்
நினைவில் நின்றதை எழுதுகிறேன். இதுதான் அவர்களின் செயல்பாடு,
‘காட்டிலிருந்து பழங்குடிகளை விரட்டு!
கடலிலிருந்து
மீனவர்களை விரட்டு!
நகரங்களிலிருந்து
குடிசைவாழ் மக்களை விரட்டு!
டெல்டாவிடமிருந்து
விவசாயிகளை விரட்டு!
சிறு
நகரங்களில் இருந்து சிறுதொழில்,
சிறு
வணிகரை விரட்டு!
மாநிலங்களில்
இருந்து
மண்ணின்
மக்களை விரட்டு!
ஊர்தோறும்
சேரி மக்களை ஓட ஓட விரட்டு!
சிறுபான்மை
மக்களின் வாழ்வாதாரங்களைப் பிடுங்கிக்கொண்டு அவர்களைச் சித்திரவதை செய்!
பாசிச
வன்முறை சக்திகளைக் கட்டவிழ்த்துவிட்டு பட்டியல் இன மக்களை மானபங்கப்படுத்தி
வன்கொடுமை செய்!
காட்டைக்
கொழுத்து! கடலை நஞ்சாக்கு!
பூமியின்
மறுபுறம் வரை துளையிடு!
வாயு,
கரி, எண்ணெய் என எதையும் விடாதே!
இயற்கை
வளங்களைப் பன்னாட்டு
கம்பெனிகளின் பகல் கொள்ளைக்குத் திறந்துவிடு!
அரசு
உடைமைகள் அனைத்தையும் அம்பானிக்கும் அதானிக்கும் தானம் கொடு!
ஏழை
மக்களின் சேமிப்புகள் அனைத்தையும்
பெரு முதலாளிகளுக்கு
வாராக்கடனாக அள்ளி விடு!
பேச்சுரிமையைப்
பறி! எழுத்துரிமையைப் பறி!
வாழ்வுரிமையைப்
பறி! போராட்ட உரிமையைப் பறி!
சாதி
வெறிக்குச் சாம்பிராணி போடு!
மதவெறிக்கு
ஊதுபத்தி கொளுத்து!
ஏழைகளுக்காகப்
போராடுகின்றவனை உயிருள்ளவரையில் சிறையில் போடு!
நாட்டின்
வளங்களை அனுதினமும் கொள்ளையடி!
அக்கொள்ளைக்குத்
துணைபோவதுதான்
தேசபக்தி
என்று சொல்!
கார்ப்பரேட்டுகள்,
காவிகளின் கால்களை நக்கிக் குடி!
அதை
நாட்டின் மானம் காக்கும் செயல்
என
உன் ஊடக அடிமைகள் ஊருக்குச் சொல்லட்டும்!
எதிர்த்துக்
கேட்போர்
இந்த
மண்ணிலேயே இருக்கக்கூடாது!
அவர்களை
‘இந்து விரோதி’ என அடையாளப்படுத்து!
கல்வியைக்
காவி மயமாக்கு!
இதிகாசத்தை வரலாறு
எனப்
பாடப் புத்தகங்களில் எழுது!
உண்மையான
வரலாற்றின்
மூலங்களையெல்லாம்
அழித்து விடு!
இதைத்
தட்டிக் கேட்பவனை
‘அர்பன் நக்ஸல்’ என்று பிரச்சாரம் செய்!
ஊடகம்
யாவையும் ஊமையாக்கு!
உனக்கு
மட்டும் ஊது குழலாக்கு!
சனநாயக
நிறுவனங்களையெல்லாம்
உன்
ஏவலாள்களால் நிரப்பு!
இந்த
அக்கிரமங்களையெல்லாம்
நியாயப்படுத்த நீதித்துறையை வளைத்துப் போடு!
அதுவும்
முடியவில்லையென்றால் புது சட்டம் போடு!’
இப்படித்தானே
பதினோர் ஆண்டுகளாக ஆட்சி நடக்கிறது! ‘இதையெல்லாம் நாங்கள் செய்தோம்’
என்று அவர்களால் சொல்ல முடியுமா? அதற்காகத் தான் இந்த நாட்டின் சிறுபான்மையின மக்களைப் பெரும்பான்மை மக்களின் எதிரிகளாகக் கட்டமைக்கிறார்கள்!
சிலரைச்
சில நாள்கள் ஏமாற்றலாம்.
பலரைப்
பல நாள்கள் ஏமாற்றலாம்.
ஆனால்,
எல்லாரையும் எப்போதும் ஏமாற்றிக்கொண்டே இருக்க முடியாது!
‘நம்
வாழ்வு’ நாகர்கோவிலுக்கு
இடம்பெயர்ந்தது குறித்து ‘நம் வாழ்வு’ இதழின் இணை ஆசிரியர் எம்.
ஏ.
ஜோ
அவர்கள் எழுதிய சிறப்புக் கட்டுரை (19.05.1985).
‘நம் வாழ்வு’ நாகர்கோவிலுக்கு இடம் பெயர்ந்திருக்கிறது. காரணம்... சில சங்கடங்கள், சில நிர்ப்பந்தங்கள்.
‘நம் வாழ்வு’ இதழின் நலனில் உண்மையான அக்கறை கொண்ட பலர் இந்த இடமாற்றத்தைப் பற்றி வேதனையோடு என்னிடம் பேசியிருக்கிறார்கள். ‘நம் வாழ்வு இதழின் எதிர்காலத்தை நினைத்து அவர்கள் வெகுவாய்ப் பயப்படுகிறார்கள்.
அவர்கள்
பயப்படுவதற்குக் காரணங்கள் இருக்கின்றன. நாகர்கோவிலுக்குப் போனால் இது மற்றொரு கோட்டாறு மறைமாவட்டப் பத்திரிகையாக மாறிப் போகும் என்று அவர்கள் கவலைப்படுகிறார்கள்.
மறைமாவட்டப்
பத்திரிகைகள் யாவும் ‘ஆமாம் சாமி’ கிரகத்தைச்
சார்ந்திருந்த வேளையில், புதியதொரு சுதந்திரத்தோடு ‘நம் வாழ்வு’ நீதிக்குக் குரல் கொடுத்து, பழமைகளைத் துணிவோடு களைந்துவிட்டு, இளமைக்கும் புதுமைக்கும் திறமைக்கும் ஊக்கம் தந்து, தனக்கென்று ஒரு பாதையை, ஒரு பாணியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
குற்றங்களைச்
சுட்டிக்காட்டும் இறைவாக்கினருக்கு எப்போதுமே இருப்பதுபோல ‘நம் வாழ்வு’க்கும் எதிர்ப்புகள் இருந்துகொண்டேயிருந்தன. இதனால் நம் வாழ்வை மிரட்டியவர்கள் இருந்திருக்கிறார்கள். முறைத்துக் கொண்டும், முணுமுணுத்துக் கொண்டும் திரிந்தவர்கள் நிறைய இருந்திருக்கிறார்கள். இவர்களையும்
மீறி இதுவரை தன் உயிரையும், குரலையும் எப்படியோ காத்துக்கொண்ட ‘நம் வாழ்வு’ இப்போது கோட்டாறு ஆயரின் வீட்டு வாசலுக்குப் போய்விட்டால், தன் சுதந்திரத்தை இழந்து விடும்; பத்தோடு பதினொன்றாய் ஆகிவிடும் என்று இவர்கள் பயப்படுகிறார்கள்.
இந்தப்
பயங்கள் எல்லாம் தேவையற்ற பயங்கள் என்று நிரூபித்துக் காட்டும் கடமை நம் வாழ்வின் தோள்களில் இப்போது விழுந்திருக்கிறது.
இப்படி
மற்றோர் ஊருக்குக் குடிமாற வேண்டியதன் அவசியமே சில நிர்ப்பந்தங்களால் ஏற்பட்டதுதான்.
சில
வயிற்று வியாதிக்காரர்களுக்குக் காரமே ஒத்துக்கொள்ளாதல்லவா? அதுபோல நம் வாழ்வில் இருந்த சிறிது காரமும் சிலருக்கு ஒத்துக்கொள்ளவே இல்லை. எல்லாமே தித்திப்பாய், எதனையும் வரவேற்று, எல்லாரையும் பாராட்டி, எல்லாருக்கும் நல்ல பிள்ளையாய் ‘நம் வாழ்வு’ இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, அப்படி அது இல்லாமல் போனதால் கோபப்பட்டு இவர்கள் குமுறினார்கள். ஒழிந்து போகாவிட்டாலும் பரவாயில்லை... இங்கிருந்து வெளியேறினால் சரி என்ற இவர்களின் ஆற்றல் மிகுந்த ஆசை ஒரு காரணம்.
துவக்கத்தில்
‘நம் வாழ்வு’ அச்சிடப்பட்ட நல்லாயன் அச்சகம் விற்கப்பட்டதிலிருந்து, இதழுக்கென்று சொந்தமாய் ஓர் அச்சகம் இல்லாமற்போனது மற்றொரு காரணம்.
தரைக்குக்
கீழே சாமான்களை அடைத்து வைக்கவேண்டிய கிடங்கு - கொசுவும் இருளும் சூழ்ந்த அறையே சில ஆண்டுகளாய் அலுவலகமாக இருந்த அவலத்தை மாற்ற முயன்று தோற்றுப்போனது மற்றொரு காரணம்.... இப்படிச் சில நிர்ப்பந்தங்கள்....
‘நம் வாழ்வு’ நாகர்கோவிலுக்குப் போனதால் சில புதிய நம்பிக்கைகள் துளிர்ப்பதற்கும் காரணங்கள் இருக்கின்றன.
ஆதியிலிருந்து
இன்றுவரை கோட்டாறு ஆயர் ஆரோக்கிய சாமி அவர்களே நம் வாழ்வின்மீது உண்மையான அக்கறை கொண்டு உதவி வந்திருக்கிறார்கள். அன்னாரின் அருகாமையும் ஆர்வமும் அக்கறையும் இதழுக்குத் தொலைவிலிருந்து அவர் செய்ய முடியாத பல நன்மைகளை இப்போது
சாத்தியமாக்கக் கூடும்.
துடிப்புடன்
வேகமாய் நடைபோட்ட ‘நம் வாழ்வு’ பொருளாதாரச் சேற்றில் வகையாய்ச் சிக்கிக்கொண்ட பிரச்சினையை மிகத் திறமையாய்ச் சமாளித்து மீட்டு வந்திருக்கும் ஆசிரியர் அமலநாதனே தொடர்ந்து ஆசிரியராய் இருக்கப் போகிறார். இனி வரும் பிரச்சினைகளையும் உறுதியாய் நின்று, வென்று காட்டுவார் என்று நாம் நம்ப முடியும்.
ஆசிரியர்
குழுவில் புதியவர்கள் வரப்போவது புதிய சிந்தனைகளுக்கு இடமளிக்கும்.
நம்
வாழ்வில் இணை ஆசிரியனாய்ப் பணியாற்ற ஈராண்டுக் கால ஒப்பந்தத்தில் வந்தவன் நான். அடியேன் வந்து இரண்டு ஆண்டுகள் முடிவதால் இப்பொறுப்பினின்று விடைபெற்றுக்கொள்கிறேன்.
புதுக்குடித்தனம்
துவங்கும் புது வாழ்வு இன்னும் செழித்துச் சிறந்து, சாதனைகள் படைக்க நெஞ்சார வாழ்த்துகிறேன்.
இடம் மாறினாலும்
இதயங்களிலிருந்து
இடம்
மாறவில்லை!
(‘நம் வாழ்வு’ இதழ் நாகர்கோவிலை நோக்கி இடம்பெயர்ந்த நாள்களில் அன்றைய முதன்மை ஆசிரியர் அருள்பணி. அமலநாதன் அவர்கள் எழுதிய ஆசிரியர் பக்கம் (09.06.1985)
‘நம்
வாழ்வு’ அலுவலகம்
இடம் மாறியதால் வாசகர்களின் இதயங்களிலிருந்தும் இவ்விதழ் இடறி விழுந்துவிடுமோ என்ற அச்சம் என்னுள்ளத்தில் இருந்துகொண்டே இருந்தது. ஆனால், அந்த அச்சம் வெறும் பிரமைதான் என்பதை வாசகர்கள் உணர்த்திக் கொண்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் கடிதங்கள் - நம் வாழ்வின் புதுப்பிறப்பு பற்றியும், புதிய அம்சங்களைப் பற்றியும், அச்சு வேலைப்பாடுகளைப் பற்றியும் பாராட்டி எழுதப்பட்டவை - இதயத்திற்கு இதமாக இருக்கின்றன.
அலுவலகம்தான்
இடம்மாறியிருக்கிறதே தவிர, ‘நம் வாழ்வு’ மாறவில்லை, மாறாது. ‘தான் தமிழக இறைமக்களின் பொதுச்சொத்து’ என்கிற
தனது நிலையை ‘நம் வாழ்வு’ ஒருபோதும் மறக்காது. வரிக்கு வரி இதனை அழுத்திக் கூற நான் ஆசைப்படுகிறேன்.
‘என் உயிரினும் மேலான வாசகர்கள்’
- வலம்புரியாரின்
வார்த்தைகள் இவை.
‘பத்திரிகையின் உயிர்மூச்சு வாசகர்கள்தான்’
நம்
வாழ்வின் வளர்ச்சியிலும், தளர்ச்சியிலும் கைகொடுத்த தெய்வங்கள் வாசகர்களாகிய நீங்கள்தான்....
‘நம் வாழ்வு’ வானத்து உச்சியை எட்டிவிட நீங்கள் ஒவ்வொருவரும் ஏணிகளாக இருக்கின்றீர்கள்....
ஏற்றிய
ஏணியை எட்டி உதைக்கும் பழக்கம் நம் வாழ்வுக்கு இல்லை.
நம்
வாழ்வின் இதயத் துடிப்புக்கூட உங்கள் பெயரைச் சொல்லியே ஒலிக்கின்றது.
நீங்கள்
தொடர்ந்து கொடுக்கும் ஆதரவில் ‘நம் வாழ்வு’ வெற்றிக்குமேல் வெற்றி நடைபோடும் என்பது மறுக்க முடியாத உண்மை....
“படியுங்கள், படித்துக்கொண்டேயிருங்கள்...
இறக்கும்வரை படித்துக்கொண்டே இருங்கள்”
என்கிறார் பிராஷ்யூ என்ற அறிஞர்.
படிப்பதோடு
நிறுத்திக்கொள்வது மடமை
படித்தபின்
சிந்திப்பதுதான் பெருமை
சிந்தித்தபின்
செயல்படுவது நம் கடமை....
வாசகர்களாகிய
நீங்கள் படித்து, சிந்தித்து, செயல்படுகிறீர்கள் என்பதற்கான அடையாள முத்திரைகள்தான் நீங்கள் அனுப்பிய அஞ்சல் அட்டைகள்.... பிராஷ்யூவின் வார்த்தைகளையே மீண்டும் சொல்கிறேன்... ‘படித்துக்கொண்டேயிருங்கள்’. காரணம்,
நிறையப் படிப்பதன் மூலம் அறிவு வளர்கிறது. அறிவின் மூலம் பண்பாடு வளர்கிறது....