news
சிறப்புக்கட்டுரை
தகர்க்கப்படும் சனநாயகக் கலாச்சாரம்

நாம் கொண்டாடும் இன்றைய வெற்றி, ஒரு முதல்படியே. மிகப்பெரிய வெற்றிகளையும், மாபெரும் சாதனைகளையும் இனிவரும் காலங்களில் எட்டவிருக்கிறோம் என்பதே உண்மை. நமக்குக் கிட்டிய இம்மாபெரும் வாய்ப்பைச் சரிவரப் பயன்படுத்திக்கொள்ளும்  அளவிற்கு நம்மிடம் வலு உள்ளதா? எதிர்வரும் காலங்கள் எழுப்பும் சவால்களைச் சந்திக்கும் ஆற்றலை வளர்த்துள்ளோமா?”

(ஜவகர்லால் நேரு அவர்கள் இந்தியச் சுதந்திர தினத்தன்று ஆற்றிய உரையின் ஒரு பகுதி)

பண்டித நேரு அவர்கள், விடுதலை பெற்ற இந்தியா  எதிர்கொள்ளும் சவால்களைச் சந்திக்கும் ஆற்றலைப்  பெறவேண்டும் என்று விழைகிறார். இந்தியா விடுதலை பெற்றபோது இந்தியா ஓர் ஒருமித்த சனநாயகக் குடியரசாகத் திகழ முடியுமா? என்ற கேள்வி உலகில் பல இடங்களில், பலராலும் எழுப்பப்பட்டது.

இதுவரை பரீட்சித்துப் பார்க்காத (untried) அரசு, ஏற்றுக்கொள்ள முடியாத நாட்டுப் பிரிவினை, தெளிவற்ற அரசியல் அணிகள், நாடு எதிர்கொண்ட வகுப்புவாத வன்முறைகள், சமூகப் பிளவுகள் - நோபல் பரிசு பெற்ற அமர்த்தியாசென்.

இத்துணை அளவுள்ள பிரச்சினைகளைத் தாண்டி, இந்தியா ஒரு சனநாயகக் குடியரசாகக் கட்டப்பெறல் சாத்தியமா? என்ற கேள்விகளெல்லாம் எழுந்த நிலையிலும், இந்தியா  இன்றும் சனநாயகக் குடியரசாகவே நிற்கிறது.

இந்தியா எனும் நாடு பல்வேறு வேற்றுமைகளுள்ளும், ஒரே அரசியல் அலகாக (Political unit), அதுவும் சனநாயக அமைப்பாகச் செயல்படும் சனநாயகமாக இயங்கவே செய்கிறதுஎன்றார் அமர்த்தியாசென் (1999).

இந்தியத் தலைவர்கள் கனவு கண்ட சனநாயகம், இச்சனநாயகத்தை உள்ளீடாகக் கொண்ட இந்திய அரசமைப்புச் சட்டம், அரசமைப்புச் சட்டத்தை மக்கள் மயப்படுத்தும் வகையில் உருவான சனநாயக நிறுவனங்கள் - இவையெல்லாம் வலுவாகவே உருவாக்கப்பட்ட பின்பும், இந்நிறுவனங்கள் மக்களில் பலருக்கும் எட்டும் (access) தூரத்தில் இருப்பதாகச் சொல்லப்படினும், இன்னும் சாத்தியப்படாதது ஏன்?

ஐக்கிய நாட்டு அவை மனித உரிமைகள் பாதுகாப்பை உறுதிசெய்ய 1948-ஆம் ஆண்டு உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம் உருவாயிற்று. உலகில் விடுதலை பெற்ற நாடுகளில் பல இப்பிரகடனத்தின் முக்கியச் சரத்துகளை அந்தந்த நாட்டின் அரசமைப்புச் சட்டத்தில் இணைத்துக்கொண்டன. விடுதலை பெற்ற இந்தியா உருவாக்கிய அரசமைப்புச் சட்டத்திலும் உலகளாவிய பிரகடனத்தின் கூறுகள் பல இடம்பெற்றிருக்கின்றன. ஐக்கிய நாட்டு அவையின் இவ்வரிய பிரகடனத்தை உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டன.

இப்பிரகடனம் பொதுவான மனித உரிமைப் பாதுகாப்பு அரணாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், மானுட உரிமைகள் மறுக்கப்பட்ட அனைத்துச் சமூகப் பிரிவினருக்குமான மனித உரிமைகளைப் பேணுவதற்கான மனித உரிமைச் சாசனங்கள், உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள் எனப் பல பரிமாணங்களில் மனித உரிமைப் பாதுகாப்புக்கென உரிமைகள் வகுக்கப்பட்டன.

சனநாயகச் சமூகத்தின் பாதியளவான பெண்கள்மீது நிகழ்த்தப் பெறும் பாகுபாட்டிற்கு எதிரான உரிமைகள், குழந்தைகளின் பாதுகாப்பிற்கான உரிமைகள், அகதிகள், பூர்வீகக் குடிகள், கலாச்சார உரிமைகள், பொருளாதார உரிமைகள், குடியுரிமைகள் எனப் பல்வேறு உரிமைகள் சட்டம்போல வகுக்கப்பட்டதுடன், .நா.வின் உறுப்பு நாடுகள் இவ்வுரிமைகளைக் காப்பதற்கான ஒப்புதலும் பெறப்பட்டன. இவ்வுரிமைகள் மீறப்படாமலிருக்கக் கண்காணிப்பு அமைப்புகளும் உருவாயின.

.நா. சபை மூலம் உருவான கண்காணிப்பு அமைப்புகள் தேசிய அளவிலும், உரிமைகள் மீறப்பெறாமல் கண்காணிக்க தேசிய மனித உரிமை ஆணையம், தேசிய சிறுபான்மையினர் ஆணையம், தேசியப் பெண்கள் ஆணையம் என உரிமைப் பாதுகாப்பு ஆணையங்கள் போன்றவற்றைச் சட்டப் பூர்வமாகவே உருவாக்கின. மனித உரிமை வழக்குகளை நடத்துவதற்கான தனி நீதிமன்றங்களும் உருவாக்கப்பட்டன.

இவ்வளவு பெரிய முன்னுரை இக்கட்டுரைக்கு என்ன தேவை?’ என்ற கேள்வி வாசகர்களிடம் எழுந்தால், அதில் தவறொன்றும் இல்லை.

இந்தியச் சனநாயகக் குடியரசுக்கு இன்று அகவை எழுபத்தைந்து. பெருத்த கனவுகளோடும் நம்பிக்கையோடும் உருவாக்கப்பட்ட இந்தியக் குடியரசு இன்றும் சிதையாமல் காப்பாற்றப்படுகிறது என்று  நம்புகிறோம். மகாத்மா நம்பினார்; நேரு நம்பினார்; அம்பேத்கரும் நம்பினார். நாம் கனவு கண்டசனநாயகச் சமயச் சார்பற்ற இந்தியாஇன்றும் வடிவ (forus) அளவில் காப்பாற்றப்பட்டு வருகிறது. இந்திய அரசமைப்புச் சட்டம் உருவான காலத்திலேயே இச்சட்டம் இந்துப் பண்பு (un Hindu) இல்லாதது என்று மதத் தீவிரவாதம் பேசிய சங்கப் பரிவாரங்களால் இகழப்பட்டதுஉலகில் மிகப் பெரிய சட்ட வல்லுநராக மனுஸ்மிருதியைத் தந்த மனுவைத்தான் கோல்வால்க்கர் புகழ்ந்தார்.

இன்னும் இச்சாசன வடிவை, சாசனம் தரும் உள்ளடக்கத்தை நம்பாத ஓர் அமைப்பை இந்தியச் சனநாயகக் குடியரசை ஆளும் பொறுப்பேற்ற பின்பு, அரசியல் சாசனத்தின் மீது உறுதிமொழியேற்று ஆட்சிக் கட்டில் ஏறவேண்டிய நிலையில், இந்தியச் சனநாயகம் காப்பாற்றப்பட்டதாக நாம் நம்பலாமா?

சட்டத்திற்குட்பட்டு ஒரு நிகழ்வைத் தவறாது நடத்திக் காட்டவேண்டிய சூழலில், இன்றைய ஆட்சியாளர் ஏற்கும் நிலைப்பாடு சனநாயக நெறிமுறையைக் காக்குமா? இது நாடகமில்லையா? நாளும் இன்றைய ஒன்றிய அரசு முன்னெடுக்கும் திட்டங்கள், புதிய சட்டங்கள் அனைத்தும் மதவாதக் கருத்தியலோடு ஒத்துச் செல்கின்றன எனும்போது, சனநாயகத்திற்கு இங்கு என்னதான் வேலை?

சனநாயகம் உள்ளடக்கும் அனைத்து விழுமியங்களும் குறுகிய அரசியல் நோக்கில் விலை போகும்போது, சனநாயகம் குடிமக்களின் சம பங்கேற்பை உறுதிப்படுத்தும் வகையில் தரப்பட்ட தேர்தல் முறையும்கூட குடிமக்களில் ஒரு பகுதியினரால் அவமதிக்கப்பெறும்போது சனநாயகம் எங்கே?

மனித உரிமைக் கலாச்சாரம்

சனநாயகம், சனநாயகக் குடியரசு என்பன வெறும் சொல்லாக்கங்கள் அல்ல; ஒரு வாழ்வியல் நெறி. இவ்வாழ்வியல்நெறியைச் சட்டங்களும் சாசனங்களும் மட்டும் காக்கமுடியாது. மனித உரிமைகளைக் காக்க உலகம் முழுவதும் பாதுகாப்புச் சாசனங்களும் சட்டங்களும் உருவாயின. ஏன், நிறுவனங்களும் உருவாயினஇவ்வளவு பாதுகாப்பு அரண்கள் உருவான பின்பும் சட்டங்களும் சாசனங்களும் உருவாக்கப்பட்ட பின்பும் மனித உரிமைகள் தாறுமாறாக மீறப்பட்டு வருகின்றன என்பதுதானே உண்மை!

இந்திய அரசமைப்பின் விதி 17- தீண்டாமை ஒழிக்கப்பட்டதாகக் கூறுகிறதுஅதன் உண்மை என்ன? நாளும் பொழுதும் திராவிடத்தின் தமிழ்நாட்டில் நடைபெறும் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை எவ்வளவு? தீண்டாமையை வன்முறையாக வர்ணித்தவர் மதவாதியால் கொல்லப்படுகிறார். பெண்ணடிமைத்தனம் ஒழியவில்லை. மதவாதிகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் மதச்சிறுபான்மையினர்... இப்படியே அடுக்கிக் கொண்டு போகலாம்.

மனித உரிமைப் பாதுகாப்பிற்கென மிகப்பெரிய முன்னெடுப்புகளை முன்னெடுத்த .நா. அவை, இரண்டாயிரத்தின் இறுதியில் உலக நாடுகளைக்  கூட்டி, மனித உரிமைகளின் இன்றைய நிலை என்ன? என்பது குறித்து ஆய்வு செய்ய முனைந்த போது, .நா.வும் உலக நாடுகளும் அதிர்ந்து போயின.

மனித உரிமைகள் காக்கப் பெறவில்லை என்றாலும் கூட பரவாயில்லை; மனித உரிமைகள் தாறுமாறாக மீறப்பட்டு வருகின்றன என்ற செய்திகளும் தரப்பட்டன. எனவே, .நா. ஒரு முடிவைத் தந்தது. உரிமைகளைச் சட்டங்களாலும் சாசனங்களாலும் காக்க முடியாது.

உரிமைகள் மனித வாழ்வின் வாழ்வியல் நெறியாக, மக்களின் வாழ்வோடு இணைந்த ஒரு கலாச்சாரமாக மாறாதவரை உரிமைகள் சட்டப் புத்தகத்தில் மட்டுமே இடம்பெறும். மனித உரிமைகள் ஒரு பண்பாடாக மாறவேண்டுமானால், பள்ளிப் பருவத்திலேயே குழந்தைகளுக்கு மனித உரிமைகளைக் கல்வியாகக் கொண்டு செல்ல .நா. அறிவுறுத்தியது.

அரசமைப்பே கலாச்சாரமாக...

அரசமைப்பும், அரசமைப்பின் முகப்புரையும் புரட்சிகரமானது. முகப்புரையின் சனநாயகம், சமமின்மை, சமயச் சார்பின்மை, இறையாண்மை, குடியரசு... எவ்வளவு அரிய விழுமியங்கள்! இந்திய அரசமைப்பில் மிகத் தெளிவாகவே இடம்பெற்றுள்ள அரிய பொக்கிசங்கள்! தங்க முலாம் பூசப்பட்ட ஒரு படிவத்தில் எவ்வளவு நாள் வைத்துக் காப்பாற்றப் போகிறோம்? இம்முகப்புரையின் உள்ளடக்கத்தை மக்கள் வாழ்வியல் அறமாக மாற்றுவதற்கு என்ன செய்யப் போகிறோம்?

அரசியல் பங்கேற்பில் தயக்கம் காட்டலாம்; பண்பாட்டுத்தளத்தில் செய்யவேண்டிய பணி நிறையவே உள்ளது. நிறையவே செய்வதற்கான வெளியும் நிறைய உள்ளது. செய்ய என்ன தயக்கம்?

குடிமைச் சமூக அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புகள், சமய ரீதியான அமைப்புகள், திரு அவையின் பல்வகைப் பணித்தளங்கள் இப்பணியை முன்னெடுக்க முடியும்.

மனித உரிமைப் பணி ஏதோ ஒரு தனித்த நிறுவனம் சார்ந்த பணி மட்டுமல்ல; அனைத்துக் குடிமைச் சமூக அமைப்புகளுக்குமானது. அனைவரும் இப்பணியை முன்னெடுக்கும்போது சனநாயகம்  மக்கள் கலாச்சாரமாய் மாறும்.

இன்றைக்கு மதவாத அரசு கலாச்சாரத் தளத்தை அரசியல்மயமாக்கி, உண்மையைத் திரித்து மக்களைத் திசைதிருப்பி வருகிறது. மக்கள் மயப்பட்ட இப்பொய்மைகளை, இப்புனைவுகளை உடைத்து மக்களிடம் உண்மையைக் கொண்டு  செல்ல வேண்டிய கட்டாயம் நிறையவே உள்ளது.

இவ்வுண்மையில் நாம் தெளிவு காட்டினால், திடீரென்று தோன்றி அதிர்ச்சி காட்டும் வெற்று அரசியல் வளர்ச்சி கண்டு அச்சம் கொள்ளும் அவசியம் இருக்காது.

news
சிறப்புக்கட்டுரை
திரைகளுக்கும் சமூகத்திற்கும் இடையே இன்றைய இளைய தலைமுறை

இன்றைய காலச் சூழலுக்கு ஏற்றவாறு இளையோரை உருவாக்குவது குறித்து மேய்ப்புப்பணிச் சிந்தனை

அன்பார்ந்த குருக்களே, துறவிகளே மற்றும் சகோதர சகோதரிகளே!

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும் அமைதியும் உங்களுடன் இருப்பதாக!

ஒவ்வொரு தலைமுறையும் தனக்கே உரிய போராட்டங்களையும் சோதனைகளையும் எதிர்கொள்கிறது. ஆனால், இன்றைய இளைஞர்கள் சந்திக்கும் சவாலானது மனித வரலாற்றிலேயே இதுவரை எண்ணிப் பார்த்திராத ஒன்றாகும். இதற்கு முன்பு எந்தவொரு தலைமுறையும் இந்த அளவிற்குத் தொழில்நுட்பத்தோடு இணைந்தும், அதே நேரத்தில் இவ்வளவு தனிமையோடும் வாழ்ந்ததில்லை. இத்தலைமுறைக்குத் தகவல்கள் நிறைந்திருந்தாலும் ஆழமான சிந்தனையின்றித் தவிக்கிறது. வெளித்தோற்றத்தில்  வீரியமிக்கதாகத் தோன்றினாலும், அகத்தில் பலவீனமான நிலையில் உள்ளது. நவீனத் திரைகளான திரைப்படம், கைப்பேசி, சமூக ஊடகங்கள் அல்லது எண்ம (டிஜிட்டல்) பொழுதுபோக்குகள் என எதுவாக இருந்தாலும்அவை கண்ணுக்குத் தெரியாத வகுப்பறையாகவும், அமைதியான பேச்சாளராகவும், உணர்வுகளை வடிவமைக்கும் கலைஞனாகவும், கலாச்சாரத்தைத் தீர்மானிக்கும் சர்வாதிகாரியாகவும் இன்று மாறியுள்ளது.

இன்றைய இளம் மனங்களுக்குத் தொடர்ச்சியாக ஊட்டப்படுவது ஞானம் அல்ல; மாறாக, சலனங்களும் தூண்டுதல்களுமே. உண்மை அல்ல; வெறும் பிம்பங்களே. பகுத்தறியும் திறன் அல்ல; மாறாக, உணர்ச்சிப்பூர்வமான தூண்டல்களே! திரை என்பது ஒரு புதிய அதிகார மையமாக உருவெடுத்துள்ளது. அதுவே ஆசைகளை வடிவமைக்கிறது, அடையாளங்களைக் கட்டமைக்கிறது, இலக்குகளை உற்பத்தி செய்கிறது, மேலும், ஒழுக்கநெறி உணர்வுகளையும், அவர்களின் தலைமைத்துவத்தையும் கூடத் தீர்மானிக்கிறது.

இன்றைய இளைஞர்களில் பெரும்பாலோர் எதார்த்தத்தை நேரடியாக எதிர்கொள்வதில்லை; மாறாக, திரைகளின் வழியேதான் அதனை அனுபவிக்கிறார்கள். வாழ்க்கை என்பதே பிம்பங்கள், தற்காலப் போக்குகள் (trends), இணையத்தில் பரவும் தற்காலிக உணர்வுகள், சினிமா கற்பனைகள் மற்றும் எண்மத் தொழில்நுட்ப அங்கீகாரங்கள் ஆகியவற்றின் மூலமாகவே அவர்களுக்குக் கடத்தப்படுகிறது. இதன் விளைவாக, அன்றாட வாழ்க்கையின் இயல்பான போராட்டங்களான கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, ஒழுக்கம், பொறுமை, நிராகரிப்பு மற்றும் பொறுப்பேற்பு போன்றவற்றை எதிர்கொள்ளும் துணிவைப் பலர் மெல்ல இழந்து வருகின்றனர்.

மாற்றங்கள் என்பவை உடனடியாக, வியத்தகு முறையில், உணர்ச்சிப்பூர்வமாக மட்டுமே நிகழும் என்ற ஆபத்தான மாயை நம் இளைஞர்களிடையே பரவி வருகிறது. திரைப்படங்கள் நாயகத்தனமான குறுக்கு வழிகளை நல்வாக்காகக் காட்டுகின்றன. சமூக ஊடகங்கள் உழைப்பற்ற அங்கீகாரத்தை அள்ளித் தருகின்றன. எண்மத் தொழில்நுட்பக் கலாச்சாரம் என்பது நற்பண்பை விடத் தோற்றத்திற்கும், நிதானமான சிந்தனையைவிட உடனடி எதிர்வினைக்கும், நேர்மைத்தனத்தை விடப் புகழுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. இதனால், சகிப்புத்தன்மையைவிடத் தப்பித்தலையும், வாழ்வின் சாரத்தைவிடத் தற்காலிகச் சலனங்களையும், நற்பண்பைவிடத் தன்னை வெளிப்படுத்துவதையும் மட்டுமே முதன்மையாகத் தேடும் ஒரு தலைமுறை உருவாகி வருகிறது. “நீங்கள் இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள்; மாறாக, உங்கள் மனம் புதுப்பிக்கப்பெற்று மாற்றம் அடையுங்கள் (உரோ 12:2) என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பே புனித பவுல் நம்மை எச்சரித்துள்ளார். இன்று நாம் சந்திக்கும் நெருக்கடியும் முற்றிலும் இதுவே; சிந்தனைகள் இங்குப் புதுப்பிக்கப்படுவதில்லை; அவை நிரலாக்கம் (programmed) செய்யப்படுகின்றன.

சமூகத்தின் உணர்ச்சிமயமாக்கல்

திரைக் கலாச்சாரத்தின் மிகக் கடுமையான ஆபத்துகளில் ஒன்று, பொது வாழ்க்கையை உணர்ச்சிமயமாக்குவதாகும். உணர்ச்சிகளைத் தூண்டும் பிரச்சினைகள், வியத்தகு கதையாடல்கள், இணையத்தில் பிரபலமாகும் ஹேஷ்டேக்குகள் (hashtags), சினிமா முழக்கங்கள் மற்றும் கூட்டு உத்வேகம் ஆகியவற்றால் இளைஞர் மிக எளிதாகத் திரட்டப்படுகிறார்கள். ஆனால், அவர்களின் நீண்ட கால எதிர்காலம், சமூக நீதி, கல்வி, சுற்றுச்சூழல், மொழி, கலாச்சாரம், ஒழுக்க விழுமியங்கள் மற்றும் நாகரிகப் பாரம்பரியம் ஆகியவற்றைப் பாதிக்கும் ஆழமான பிரச்சினைகள் எழும்போது இதேபோன்ற ஆற்றல் பெரும்பாலும் காணப்படுவதில்லை. இது, எதிர்வினை ஆற்றக்கூடிய  ஆனால், நிதானமாகச் சிந்திக்காத; கூட்டமாகக் கூடக்கூடிய ஆனால், ஒருங்கமையாத; போராடக்கூடிய ஆனால், விடாமுயற்சியுடன் நிலைத்திருக்காத ஒரு சமூகத்தையே உருவாக்குகிறது.

ஓர் ஆரோக்கியமான சமூகத்திற்குக் கேள்வி கேட்கக்கூடிய, பகுத்தாயும் திறன் கொண்ட, நன்மையையும் தீமையையும் பிரித்தறியும் ஆற்றல் கொண்ட, ஆரோக்கியமாக விவாதிக்கவும் விமர்சனப் பூர்வமாகச் சிந்திக்கவும் திறன் கொண்ட இளைஞர் தேவைப்படுகிறார்கள். அதற்கு மாறாக, உணர்ச்சித் தூண்டல்களாலும் டிஜிட்டல் போக்குகளாலும் மட்டுமே இயக்கப்படும் ஒரு தலைமுறையை உருவாக்கிவிடும் அபாயத்தில் நாம் இருக்கிறோம். வாசிப்புப் பழக்கம், தத்துவார்த்தச் சிந்தனை, வரலாற்று விழிப்புணர்வு மற்றும் அறிவுசார் ஒழுக்கம் ஆகியவற்றின் வீழ்ச்சி மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. “பேதைகள் எதையும் நம்புவர்; விவேகிகளோ தங்கள் நடையின்மேல் கண்ணாயிருப்பர்என்கிறது நீதிமொழிகள் (14:15). இன்று அந்த விவேகம் மறைந்து வருகிறது; பகுத்தறியும் திறன் பலவீனமடைந்து வருகிறது; ஞானத்தின் இடத்தை ஆரவாரம் ஆக்கிரமித்துக் கொள்கிறது. பகுத்தறிவை விட உணர்ச்சிகள் ஆதிக்கம் செலுத்தும்போது, மனிதர்களைத் தங்களுக்குச் சாதகமாகத் திசை திருப்புவது எளிதாகிவிடுகிறது. ஆழமான கொள்கைகளின் இடத்தைத் தற்காலப் போக்குகள் மாற்றியமைக்கும்போது, உண்மை என்பது பலவீனமாகி விடுகிறது. கல்விக்கு மாற்றாகப் பொழுதுபோக்கு அமையும்போது, ஒட்டுமொத்த நாகரிகமே பாதிப்பிற்குள்ளாகிறது.

துன்பங்களைக் கண்டு அஞ்சும் ஒரு தலைமுறை

இன்றைய நம் இளையோர் வசதி வாய்ப்புகளில் வளர்ந்து வருகிறார்கள்; ஆனால், சவால்களைத் தாங்கும் மனவலிமையில் (resilience) பெரும்பாலும் சுருங்கிப் போகிறார்கள். எண்மத் தொழில்நுட்ப உலகம் என்பது வலிகளிலிருந்து மிக எளிதாகத் தப்பித்துக்கொள்ள அனுமதிக்கிறது. ஆனால், போராட்டங்கள் இல்லாமல் வாழ்க்கையை வாழ்ந்துவிட முடியாது.

அர்ப்பணிப்பு இல்லாமல் எந்தவொரு நாகரிகமும் கட்டியெழுப்பப்படவில்லை. ஒழுக்கநெறி இல்லாமல் எந்தவொரு புனிதரும் உருவாகவில்லை. துன்பங்களைச் சந்திக்காமல் எந்தவொரு தலைவனும் முதிர்ச்சியடையவில்லை. கிறிஸ்துவே,  “என்னைப் பின்பற்றிவர விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, நாள்தோறும் தன் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும் (லூக் 9:23) என்று முழங்கினார். இன்றைய எண்மத் தொழில்நுட்பக்  கலாச்சாரத்தில் சிலுவை என்பது நாகரிகமானதென்றாகக் கருதப்படுவதில்லை. தியாகம் என்பது பழித்துப் பேசப்படுகிறது. அர்ப்பணிப்பு என்பது அஞ்சப்படுகிறது. சகிப்புத்தன்மை என்பது தவிர்க்கப்படுகிறது. ஆனால், கடின உழைப்பையும் துன்பங்களையும் சகித்துக்கொள்ளக் கற்றுக்கொள்ளாமல், இளையோரால் பொறுப்புள்ள குடிமக்களாகவோ, நம்பிக்கையுள்ள  நம்பிக்கையாளர்களாகவோ, அர்ப்பணிப்புள்ள தம்பதியராகவோ, நேர்மையான தலைவர்களாகவோ அல்லது சமூகத்தின் இரக்கமுள்ள பணியாளர்களாகவோ மாறமுடியாது.

(தொடர்ச்சி அடுத்த இதழில்)

news
சிறப்புக்கட்டுரை
போனில் Full Charge ஆனா, வாழ்க்கை... Low Battery...

இரவு 1.30 மணி. அறையின் விளக்கு அணைந்துவிட்டது. ஆனால், இன்னும் ஒரு வெளிச்சம் மட்டும் முகத்தில் விழுகிறது - அது மொபைல் திரையின் வெளிச்சம். கண்கள் சோர்ந்திருக்கின்றன. மனம் எதையோ சுமந்து கொண்டிருக்கிறது. ஆனால், விரல்கள் மட்டும் தொடர்ந்து Scroll செய்து கொண்டிருக்கின்றன.

ஒரு Reel; மற்றொரு Video; சில Memes; சில Status updates. அப்படியே நேரம் நகர்கிறது. ஆனால், வாழ்க்கை மட்டும் எங்கோ நின்றுபோன மாதிரி தோன்றுகிறது.

இன்று மனிதன் தொழில்நுட்பத்தில் வளர்ந்திருக்கிறான். ஆனால், பல நேரங்களில் இதயத்தில் வெறுமையாகிவிட்டான். மனிதன் இயந்திரங்களோடு இணைந்தான்; ஆனால், இதயங்களோடு இணைவதை இழந்துவிட்டான்.

இன்று பலரின் அலைப்பேசியில் 100% சார்ஜ் இருக்கிறது. ஆனால், மனத்தில் உற்சாகம் இல்லை; உறவுகளில் உயிர் இல்லை; செபத்தில் ஆழம் இல்லை; வாழ்க்கையில் அமைதி இல்லை.

காலையில் கண் திறந்தவுடன் முதலில் பார்க்கப்படுவது இறைவனின் முகமல்ல;… Notification Screen. ‘யாராவது message பண்ணிருக்காங்களா?’ ‘என் போஸ்டுக்கு எத்தனை லைக் வந்திருக்கு?’, ‘அவன் ஆன்லைன்ல இருக்கானா?’....  இப்படித் தொடங்கும் நாள், அதே Screen வெளிச்சத்தோடு இரவிலும் முடிகிறது. ஆனால், அந்த Screen வெளிச்சத்தால் உள்ளத்தின் இருளை அகற்ற முடியவில்லை.

வரலாற்றில் என்றுமில்லாதவாறு நாம் தொடர்புகளின் உச்சத்தில் இருக்கிறோம்; இருப்பினும், இதுவரை இல்லாதவாறு தனிமையின் ஆழத்திலும் வீழ்ந்திருக்கிறோம்என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

முன்பு மனிதர்கள் தனிமையில் இறைவனைத் தேடினார்கள். இன்று தனிமையில் போனைத் தேடுகிறார்கள். சில நிமிடங்கள் அமைதியாக உட்காருவதற்கே இந்தத் தலைமுறை பயப்படத் தொடங்கிவிட்டது. ஏனெனில், அமைதியில்தான் உள்ளத்தின் உண்மையான சத்தங்கள் கேட்கத் தொடங்குகின்றன.

நான் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறேனா? என்னை யாராவது உண்மையாகப்  புரிந்துகொள்கிறார்களா? நான் சோர்ந்து போய்விட்டேனா? என் வாழ்க்கை எதற்காக ஓடிக்கொண்டிருக்கிறதுஇந்தக் கேள்விகளிலிருந்து தப்பிக்கத்தான் நாம் மீண்டும் போன் திரைக்குள் ஓடிவிடுகிறோம்.

அமைதியாக இருந்து நான் இறைவன் என்பதை அறிந்துகொள்ளுங்கள் (திபா 46:10),

இன்று பல உறவுகள் அருகில் இருப்பது போலத் தெரிகிறது. ஆனால், உண்மையில் மனிதர்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் தொலைந்து கொண்டிருக்கிறார்கள். ஒரே வீட்டில் நான்கு பேர் இருந்தாலும், நான்கு பேரின் கண்களும் நான்கு போன் திரைகளில்தான் இருக்கின்றன.

சாப்பிடும்போது, பயணத்தில், தூங்குவதற்கு முன், செப நேரத்திலும் கூட இறைவனுடன் பேச நேரமில்லை; ஆனால், தெரியாத மனிதர்களின் வாழ்க்கையை Scroll செய்ய நேரம் இருக்கிறது. இந்த உலகம் நமக்கு Connection கொடுத்தது; ஆனால், அமைதியை எடுத்துக்கொண்டது.

நாம் ஆன்லைனில் எல்லாருடனும் இணைந்து இருக்கிறோம். ஆனால், நம்முடைய உள்ளத்தோடு மட்டும் தொடர்பை இழந்துவிட்டோம். சில ஸ்டேட்டஸ்களுக்குப் பின்னால் அமைதியான குரல் இருக்கிறது. சிலஐயாம் ஃபைன்-களுக்குப் பின்னால் உடைந்த இதயங்கள் இருக்கின்றன. தொலைப்பேசியில் கேலரி நிரம்பிக்கொண்டே இருக்கிறது; ஆனால், இதயம் காலியாகிக்கொண்டே இருக்கிறது.

இன்று போனில் பேட்டரி குறைந்தால் உடனே சார்ஜரைத் தேடுகிறோம். ஆனால், வாழ்க்கை சோர்ந்துபோனால், இறைவனைத் தேட மறந்துவிடுகிறோம். உண்மையில் மனிதனின் ஆன்மாவுக்கும் ஒரு சார்ஜர் தேவை. அதுதான் செபம்! அதுதான் அன்பு! அது குடும்பத்தோடு மனம் திறந்து பேசும் சில நிமிடங்கள். அது அமைதியாக இறைவனின் முன்னால் அமர்வது. ஏனெனில், Wi-Fi சிக்னல் இல்லாமல் போன் செயல்படாததுபோல, இறைவனுடன் இணைப்பு இல்லாமல் உள்ளம் அமைதியாக இருக்காது.

ஒருநாள் முழுவதும் போனைச் சார்ஜ் செய்ய மறக்கமாட்டோம்; ஆனால், பல நாள்களாக நம் ஆன்மா Low Battery நிலையில் இருப்பதைக்கூட கவனிக்காமல் வாழ்கிறோம்.

இந்தக் கட்டுரையை வாசிக்கும் நீங்களும் சில நிமிடங்கள் உங்கள் போனை ஒதுக்கிவையுங்கள். யாருக்காவது அழைத்து, ‘நீங்கள் நலமாக இருக்கிறீர்களா?’ என்று அன்புடன் கேளுங்கள். குடும்பத்தினருடன் மனம் திறந்து பேசுங்கள். சில நிமிடங்கள் அமைதியாக இறைவனுடன் செபத்தில் இணைந்திருங்கள். ஏனெனில், உலகில் நீங்கள் ஆன்லைனில் இருப்பது முக்கியமல்ல; உங்கள் குடும்பத்திற்கும் இறைவனுக்கும் நேரம் ஒதுக்கி இருப்பதுதான் உண்மையில் முக்கியம்.

போனில் Full Charge இருந்தாலும், அன்பில்லாத வாழ்க்கை வெறுமையானதே. இறைவன் இல்லாத இதயம் எப்போதும் Low Battery நிலையில்தான் இருக்கும்.

news
சிறப்புக்கட்டுரை
குறளும் வாழ்வும் (வாரம் ஒரு குறள் – 05)

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு (குறள் 5)

குறள் விளக்கம்

கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துவோரிடம், அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.

சிந்தனை

இருள், அநீதி, தீமை, துன்பம் எதுவும் இறைநம்பிக்கையாளர்களை நெருங்காது. ஏனென்றால், நல்வினை, தீவினை இரண்டும் அவர்களைப் பாதிக்காது. இருவினைகளையும் சமமாக எடுத்துக்கொள்ளும் உறுதியான மனநிலையை இறைவனடி பணிந்தவர்கள் பெற்றிருப்பர்.

புத்தர் மனிதர்களை மூன்று வகையினராகப் பிரித்தார். முதல் வகையினர் பாறையில் செதுக்கிய எழுத்துகளைப் போல அவர்கள் தங்கள் கோபத்தை வெகுநேரம் தக்கவைத்துக் கொண்டிருப்பவர்கள். இரண்டாம் வகையினர் மணலில் எழுதிய எழுத்துகளைப் போல அவர்களுக்கு விரைவில் கோபம் வரும்; சிறிது நேரத்தில் மறைந்துபோகும். மூன்றாம் வகையினர் நீரில் எழுதிய எழுத்துகளைப் போல, அவர்கள் யாருடைய பழிச்சொல்லிற்கும் வதந்திக்கும் கண்ணுறாமல் தங்கள் மனத்தையும் இதயத்தையும் எப்போதும் தூய்மையாக வைத்திருப்பவர்கள்.

புத்தர் குறிப்பிடும் மூன்றாம் வகை மனிதர்கள் எப்படித் தீமையால் பாதிக்கப்படாமல் தங்கள் மனத்தைத் தூய்மையாக வைத்திருக்கிறார்களோ, அதுபோன்ற நிலையை இறைவனோடு நெருங்கிய உறவுகொண்ட உண்மையான இறையடியார் பெற்றிருப்பர். இதனைத் திருவிவிலியம்அன்பும் வாய்மையும் தீவினையைப் போக்கும்அச்சம் ஒருவரைத் தீமையினின்று விலகச் செய்யும்என்று (நீதிமொழிகள் 16:6) குறிப்பிடுகிறது.

கடவுளைத் தனது ஆதாயத்திற்காகத் தேடுவோர் பலர். இன்ப நேரங்களைவிட துன்ப நேரங்களில் மட்டுமே நிம்மதியைத் தேடி இறைச் சமூகத்தைத் தேடுகின்றனர் பலர். ஆனால், நிறை இன்பமாகிய இறைவனின் திருவடிகளை என்றும் மறவாது தேடுவோர், இவ்வுலக இன்ப-துன்பங்களால் பாதிக்கப்படுவது இல்லை.

ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் தீவினையை முற்றிலும் போக்கிவிடும்; நல்வினைகளைப் பெருக்கும். இறையடியாருடைய அன்பும் வாய்மையும் தீவினைகளைப் போக்குவதுடன், நல்வினைகளையும் பெருக்கும். எனவேதீவினை நீங்கி நல்வினை பெருக இறையடி பணிவோம்.

 

news
சிறப்புக்கட்டுரை
போராட்டமா? விளையாட்டா? (இளமை ஒரு சவால்! – 05)

இன்றைய இளைஞரைப் பொதுவாக இரண்டு குழுக்களாகப்  பிரித்துப் பார்க்கலாம். இன்று பெரும்பாலான இளைஞர் வாழ்க்கையை வெறும் விளையாட்டாக எடுத்துக்கொள்கிறார்கள்.

பெற்றோரின் செல்வம், செல்லம், போலி ஆடம்பரம் ஆகியவை இதற்குத் துணை நிற்கின்றன. ஆனால், இந்த விளையாட்டுத்தனம் பின்னால் இளைஞரின் வாழ்வைத்தான் கேள்விக்குறி ஆக்கி விடுகிறது. பிறந்த கையோடு செல்போன்கள், கணினி விளையாட்டுகள், பள்ளிக்குச் செல்வது, நண்பர்களோடு பொழுதுபோக்குதல் என அவர்கள் காலம் கழிகிறது.

ஒரு 17 வயது பையன்அப்பா அவனை எங்கே, என்ன படிக்க வைப்பது? என்று பலரையும் சந்தித்துக் கவலையோடு விசாரிக்கிறார். என்னிடமும் வருகிறார். நான் அந்தப் பையனோடு பேசுகிறேன்: “அரையாண்டுத் தேர்வில் எவ்வளவு மதிப்பெண் வாங்கினாய்?”

ஆசிரியர்கள் குறைவாக மதிப்பெண் போட்டார்கள். அதனால் குறைந்துபோனது...”

எவ்வளவு தம்பி?”

1200க்கு 870”

என்ன படிக்கப் போகிறாய்?”

மருத்துவம்

மருத்துவம் படிக்க இந்த மதிப்பெண் போதுமா?”

அதெல்லாம் அப்பா பார்த்துக் கொள்வார்

அப்பா பக்கத்தில் தலைநிமிர்ந்து நிற்கிறார். பையனுக்குத் தன்மேல் அவ்வளவு நம்பிக்கையாம்! அதில் அவருக்கு அப்படியொரு தற்பெருமை!

எங்கே போகிறோம்? எதிர்காலம் எப்படி இருக்கும்? என்பதே தெரியாத வாழ்க்கைப் பயணம்! இது எங்கே போய் முடியும்? காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

ஆனால், எல்லா இளைஞரும் இப்படி இல்லை. சிலர் தங்கள் வருங்காலம் பற்றிச் சிந்திக்கிறார்கள்; தங்கள் குறிக்கோளை நோக்கி முன்னேற முயல்கிறார்கள்.

இவர்களிடம் குறிக்கோள் இருக்கிறது. ஆனால், இவர்களின் குறிக்கோள் மிகவும் குறுகியதாக அமைந்துவிடுகிறது. இன்று பல இளைஞரின் மையக் குறிக்கோள் பணம்... பணம் மட்டுமே!

எந்தத் தொழிலில், குறைந்த உழைப்பில் அதிகப் பணம் கிடைக்கிறது? இன்று யார் யார் பணத்தை அள்ளிக் குவிக்கிறார்கள்?

ஒரு காலத்தில் பொறியியல்... அப்புறம் மென்பொருள் துறை... இன்று வணிகவியல், எம்.பி.. போன்ற நிதி நிர்வாகத் துறை, என்றும் மங்காத மருத்துவப் படிப்பு (3,000 இடங்களை நோக்கி எட்டு இலட்சம் இளைஞரின் போராட்டம்!)

இவற்றில் ஏன் அதிக ஆர்வம்? தங்களுக்கு இயல்பான ஈடுபாடு இருப்பதாலா? இல்லை... அப்பா சொல்வதால்! நிறையப் பணம் வரும் என்பதால்! வெளிநாட்டிற்குப் போகலாம் என்பதால்!

அடைந்தால் மகாதேவி; அடையாவிட்டால் மரணதேவிஎன்கிற வகையிலான போராட்டம்! பல ஆண்டுப் போராட்டம்!

படிக்க இடம் கிடைக்காதபோது... படிப்பில் சிறப்பாக வெற்றிபெற முடியாதபோது... படித்தவுடன் வேலை கிடைக்காதபோது... வேலையில் பணம் வந்து கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டாத போது...! மன அழுத்தம், வெறுப்பு, தடுமாற்றம், தற்கொலை முயற்சி! இன்றைய இளைஞர்கள் பலர் இத்தகைய தோல்விச் சேற்றில் தவிக்கும் அவலம் நம் கண்முன் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

இப்போது நாம் மையக்கேள்விக்கு வருவோம்... வாழ்க்கை என்பது போராட்டமா? விளையாட்டா? வாழ்க்கை என்பது இரண்டுமில்லை; ஆனால், இரண்டும் கலந்த ஒன்று.

வாழ்க்கை என்பது விளையாட்டுதான். ஆனால், ஓர் அர்த்தமுள்ள விளையாட்டு; குறிக்கோளை நோக்கிய விளையாட்டு. நம்மையும் நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கக் கூடிய விளையாட்டு.

வாழ்க்கை சவால்கள் நிறைந்ததுதான். ஆனால், மிகவும் குறுகிய பணத்தை மட்டும் மையமாகக் கொண்ட போராட்டமல்ல; மற்றவர்களோடு சேர்ந்து நாம் விளையாடும் விளையாட்டுப் போட்டி! இப்படித்தான் விளையாட வேண்டும் என்கிற நியதிகள் நிறைந்த விளையாட்டுப் போட்டி!

இங்கே வெற்றியும் தோல்வியும் அன்றாடச் சந்திப்புகள். அடுத்த வெற்றிக்கு வழி படைக்கும் சந்திப்புகள். ஆகவே, வாழ்க்கைச் சவால்களை மகிழ்ச்சியோடு சந்திப்போம், வெற்றி பெறுவோம்.

வாழ்க்கை என்பது எப்படியாவது வெற்றி பெற்றாகவேண்டிய போராட்டம் அல்ல; வெறும் பொழுதுபோக்கு விளையாட்டும் அல்ல; சரியான வழியில், விதிகளுக்கு உட்பட்டு, சக நண்பர்களோடு விளையாடும் ஒரு விளையாட்டுப் போட்டி!

தோல்விகள் வந்தாலும், விதிகளை மீறாமல் விளையாடுவோம்... வெற்றி பெறுவோம்.

news
சிறப்புக்கட்டுரை
செயற்கை நுண்ணறிவும் மனித மாண்பும்

 வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்

   வாடினேன் பசியினால் இளைத்தே

வீடுதோ ரறிந்தும் பசியறா தயர்ந்த

   வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்

நீடிய பிணியால் வருந்துகின் றோர்என்

   நேர்உறங் கண்டுளந் துடித்தேன்

ஈடின்மா னிகளாய் ஏழைகளாய்நெஞ்

   சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்

என்ற வள்ளலாரின் வரிகளுக்கேற்ப, தான் திருப்பீடம் வகித்த நாள் முதல் வன்முறைப் போராட்டங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு பேராதிக்கம் போன்ற சூழல்களைச் சந்திக்கும் திருத்தந்தை 14-ஆம் லியோ, ‘மாண்புமிகு மானுடம் - செயற்கை நுண்ணறிவு காலத்தில் மனித மாண்பைப் பாதுகாத்தல்குறித்து தன்னுடைய முதல் சுற்றுமடலில் கையெழுத்திட்டுள்ளார்.

மானுட வரலாறு இன்று ஒரு புதிய திருப்பத்தில் நிற்கிறது. தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவும் (Artificial Intelligence) நம் வாழ்வின் மொழியை, உறவுகளை, அதிகார அமைப்புகளை மிக வேகமாக மாற்றி வருகின்றன. இத்தகையதொரு சூழலில் திரு அவையின் சமூகக் கோட்பாடுகளின் (Social Doctrine) ஒளியில் நாம் வாழும் காலத்தைக் கூர்ந்து நோக்க வேண்டியது அவசியமாகிறது.

இதனைத் திருவிவிலியம் காட்டும் இருவேறு காட்சிப் பிம்பங்களை நம் கண்முன் நிறுத்துகின்றார் திருத்தந்தை லியோ. முதலாவது, மனிதனின் பேராசையினாலும், எல்லாரையும் தன் வசப்படுத்தும் ஆதிக்க மனப்பான்மையினாலும் கட்டப்பட்டு, இறுதியில் மனிதநேயமற்ற சிதைவில் முடிந்தபாபேல் கோபுரம் (தொநூ 11:1-9). இரண்டாவது, நெகேமியாவின் வழிகாட்டுதலில் சிதைந்து கிடந்த எருசலேமின் மதில்களை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, கூட்டுப் பொறுப்போடு செங்கல் செங்கலாகக் கட்டியெழுப்பிய எருசலேம் மதில்கள் (நெகே 2:6).

இன்று நம் முன்னே இருக்கும் கேள்வி இதுதான்: நவீனத் தொழில்நுட்பக் காலத்தில் நாம் எதை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்? பாபேல் கோபுரத்தையா? அல்லது எருசலேமின் மதில்களையா?

மனிதன் தன் உண்மையான அடையாளம் சிதைக்கப்படும்போதுதான் அவன் தன கண்களை உயர்த்திப் பார்க்கிறான். காரணம், மனித வடிவெடுத்த இறைவார்த்தையின் மறைபொருளில் மட்டுமே மனித தத்துவத்தின் பேராழம் உண்மையாகவே புலப்படுகிறது என்பதைக் கலக்கத்துடன் பதிவு செய்கின்றார் திருத்தந்தை.

1. தொழில்நுட்ப ஆதிக்கமும்அளவீட்டுஆபத்தும் (The Technocratic Paradigm)

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்தொழில்நுட்ப ஆதிக்கக் கோட்பாடு (Technocratic Paradigm) இன்று உலகமயமாக்கப்பட்ட சூழலில் பேராற்றலோடு பரவி வருகிறது என்று கூறியதையும் இங்கு முன்வைக்கின்றார். இந்தச் சிந்தனை முறை எல்லாவற்றையும்செயல்திறன், கட்டுப்பாடு, இலாபம்ஆகிய மூன்று குறுகிய கணக்குகளுக்குள் மட்டுமே அடக்கிவிடுகிறது.

தொழில்நுட்பம் என்பது வெறும் காகிதக் கத்தி அல்ல; அது நடுநிலையான ஒரு கருவியும் அல்ல; எப்போது தொழில்நுட்பம் மட்டுமே எல்லாவற்றையும் தீர்மானிக்கும் இறுதி அளவுகோலாக மாறுகிறதோ, அப்போது எது முக்கியம்? எது தேவையற்ற குப்பை? என்று அதுவே சட்டம் போடுகிறது.

இத்தகைய சூழலில், இறைவனின் படைப்புகள் அனைத்தும் வெறும் சுரண்டலுக்கான பொருள்களாகவும், மேன்மையான மனிதர்கள் இந்த மாபெரும் இயந்திர அமைப்பின் வெறும் பற்சக்கரங்களாகவும் (Cogs in a system) சுருக்கப்படும் பேராபத்து நேரிடுகிறது.

2. அறிவியலின் வளர்ச்சியும் ஆன்மிக விவேகமும்

செயற்கை நுண்ணறிவு, அறிவாற்றல் அறிவியல் (Cognitive Science), ‘நானோதொழில்நுட்பம், ரோபாட்டிக்ஸ் மற்றும் உயிரித் தொழில்நுட்பம் (Biotechnology) போன்ற கண்டுபிடிப்புகள் மனிதகுலத்தின் வளர்ச்சிக்கும், நம் பொதுவான இல்லமாகிய இந்தப் பூமியைக் காப்பதற்கும் பெரிதும் உதவக்கூடும் என்பதில் ஐயமில்லை. ஆனால், அதிகாரமும் ஆற்றலும் பெருகுவது மட்டுமே எல்லாவற்றையும் சிறப்பாக்கிவிடாது.

உரோமானோ குவார்டினி (Romano Guardini) கூறியதுபோல, “நவீன மனிதன் தனக்குக் கிடைக்கும் பேராற்றலை நல்வழியில் கையாள்வதற்கான தார்மீகப் பயிற்சியைப் பெறவில்லை.”

ஏற்கெனவே திருத்தந்தை புனித ஆறாம் பவுல் எச்சரித்ததுபோல விண்வெளிச் சாதனைகளும் வியத்தகு பொருளாதார வளர்ச்சியும், உண்மையான தார்மீக மற்றும் சமூக முன்னேற்றத்தோடு (Moral and Social Progress) இணைந்து செல்லாவிடில், அவை இறுதியில் மனிதனுக்கே எதிராகத் திரும்பும். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இணையாக அறநெறி வளரவில்லை என்றால், மனிதனிடம் பொருள்கள் மட்டுமே பெருகும். ஆனால், மனிதத்தன்மை பெருகாது (Having more without being more). மனிதர்கள் அவர்கள் செய்யும் வேலைகளையும், கொடுக்கும் பலன்களையும் (Outcomes) வைத்து மட்டுமே மதிப்பிடப்படும் அவலம் நேரிடும்.

3. டிஜிட்டல் உலக அதிகாரக் குவிப்பு

இன்றைய டிஜிட்டல் சூழலில் மற்றொரு முக்கிய ஆபத்தும் நிலவுகிறது. இணையதளங்கள், தரவுகள் (Data) மற்றும் கணினி ஆற்றல் (Computing Power) ஆகியவற்றின் மீதான கட்டுப்பாடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளிடம் இல்லை; மாறாக, அது ஒருசில உலகளாவிய பொருளாதார மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் (Tech Giants) கைகளில் முடங்கிக்கிடக்கிறது.

யார் பேசவேண்டும்? எது உலகிற்குத் தெரிய வேண்டும்? யார் சமூகத்தில் பங்கேற்கவேண்டும்? என்பதையெல்லாம் இந்தச் சில ஆற்றல்களே தீர்மானிக்கின்றன. இந்த அதிகாரக் குவிப்பு பொதுமக்களின் பார்வைக்குத் தெரியாதவாறு மிகவும் மறைமுகமாக (Opaque) இயங்குகிறது. இது சமுதாயத்தில் புதிய அடிமைத்தனங்களையும் புறக்கணிப்புகளையும் ஏமாற்று வேலைகளையும் பெரும் சமத்துவமின்மையையும் உருவாக்குகிறது.

இதனை எதிர்கொள்ள, சமூகக் கோட்பாட்டின் உன்னதக் கொள்கைகளாவன...

மனித நபரின் பிரிக்க முடியாத மாண்பு (Inalienable Dignity).

பொதுநலம் (Common Good).

வளங்கள் அனைவருக்கும் பொதுவானது என்ற கோட்பாடு (Universal Destination of Goods).

துணைமைத் தத்துவம் மற்றும் உலகளாவிய சகோதரத்துவம் (Subsidiarity & Solidarity).

மேற்கண்ட விழுமியங்களைக் கொண்டு நாம் இந்த டிஜிட்டல் கட்டமைப்புகளைச் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும்.

4. செயற்கை நுண்ணறிவும் மானுடத்தின் உன்னதமும்

செயற்கை நுண்ணறிவு என்பது மனித அறிவுக்கு இணையானது என்ற தவறான புரிதலை நாம் முதலில் கைவிடவேண்டும். இந்த அமைப்புகள் மனித புத்திசாலித்தனத்தின் சில செயல்பாடுகளை மட்டுமே நகலெடுக்கின்றன (Imitate). கணக்கீட்டு வேகத்திலும், தரவுகளைக் கையாள்வதிலும் அவை மனிதனை மிஞ்சிய நன்மைகளைத் தரலாம். ஆனால், அவற்றின் ஆற்றல் வெறும்தரவு செயலாக்கத்தோடு (Data Processing) முடிந்துவிடுகிறது.

இயந்திரங்களால் மொழியையோ, ஏன் அனுதாபத்தையோ கூடப் போலியாகச் செய்து காட்ட முடியும். ஆனால், மனிதர்கள் வளரும் ஆன்மிக, உணர்வுப்பூர்வ மற்றும் உறவுச்சார்பு ஞானத்தின் (Wisdom) ஆழத்தை அவற்றால் ஒருபோதும் எட்ட முடியாது.

நம் தலைமுறையின் பொறுப்பு

நற்செய்தியின் (Gospel) ஒளியில் சமூக உறவுகளைக் கட்டியெழுப்புவது என்பது ஒரே நாளில் முடிந்துபோகும் காரியம் அல்ல; அது தலைமுறை தலைமுறையாகக் கிறித்தவச் சமூகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள ஒரு புனிதமான பணி. தூய ஆவியாரின் வழிகாட்டுதலில் திரு அவையானது காலத்தின் அறிகுறிகளை அறிந்து (Signs of the times), மனித உறவுகள் இறையாட்சியின் மதிப்பீடுகளுக்கு ஏற்ப அமைய புதிய வழிகளைத் தேட வேண்டும்.

எனவே, இன்றைய தொழில்நுட்பச் சவால்களைக் கண்டு நாம் அஞ்சத் தேவையில்லை. மாறாக, ஒருவருக்கொருவர் செவிமடுத்து, மனித நேயமிக்க, சகோதரத்துவம் நிறைந்த ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்ப நம் கைகளில் கறைபடியுமென்று அஞ்சாமல், காலத்தின் கட்டுமான களத்தில் இறங்கி உழைக்க முன்வருவோம். அதுவே நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மாண்புமிகு மானுடத்தைப் பாதுகாக்கும் ஒரே வழி.