திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ‘புகழ் அனைத்தும் உமதே’ (Laudati si) என்ற சுற்றுமடலானது, சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அதில் மிக முக்கியமான குறிக்கோளாகச் சுற்றுச் சூழல் ஆன்மிகத்தை அவரது சுற்றுமடல் 6-வது தலைப்பில் வலியுறுத்துகிறார் (பு.உ எண் 216). இதைப்பற்றி விழிப்புணர்வும் சிந்தனையும் நாம் பெறுவது இன்றைய காலத்தின் அறைகூவலும் அறநெறிக் கட்டாயமும் ஆகும்.
ஆன்மிகம்
என்பது குறிப்பிட்ட காரியத்திற்காக நாம் அமைத்திடும் இலக்கும், அந்த இலக்கை அடைந்திட நாம் அமைக்கும் வாழ்க்கைமுறைகளும் ஆகும். சுற்றுச்சூழல் ஆன்மிகத்தின் இலக்கு காயமடைந்த இயற்கையைக் குணப்படுத்தி, நமது பொது இல்லமான பூமித்தாயைப் பேணிக்காப்பதன் மூலமாக, இறையாட்சியைப் படைப்பதாகும்.
இந்த
இலக்கை அடைந்திட நாம் அமைக்கும் இறையியல் சிந்தனைகளும், அதன் அடிப்படையில் உருவாக்கும் செயல்திட்டங்களும் சேர்ந்து சுற்றுச்சூழல் ஆன்மிகம் எனலாம். இக்கருத்தை அவரது சுற்றுமடல் அழகாக எடுத்துரைக்கிறது: “நமது நம்பிக்கையிலும் நற்செய்தி மதிப்பீடுகளிலும் வேரூன்றிய சுற்றுச்சூழல் ஆன்மிகத்தை நான் பரிந்துரைக்கிறேன். இந்த ஆன்மிகம் நமது அன்றாட கிறித்தவ வாழ்வின் சிந்தனை, உணர்வு மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றங்களைக் கொணர்வதாக அமையவேண்டும்” (பு.உ எண் :216) என்கிறார்.
பூமித்தாயின்
அழுகுரல்
இயற்கைச்
சீற்றங்களால் இன்றைய பூமித்தாய் கதறி அழுகிறாள் (பு.உ எண்
: 49). நமது சுயநலத்திற்காகக் காடுகளை அழித்தல், நகரமயமாக்குதல், மட்காத நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துதல், நீர், மின்சாரம் போன்றவைகளைத் தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்துதல், இயற்கை வளங்களை அழித்தல் போன்றவைகளால் பூமித்தாய் காயமடைந்து கதறி அழுகிறாள்.
இயற்கையை
அழிப்பது என்பது நம்மையே அழிவிற்கு உட்படுத்திக்கொள்வதாகும். இதன் விளைவாக நிலநடுக்கம், சுனாமி, வெப்பமயமாதல், எரிமலை வெடிப்பு, புயல், கொரோனா போன்ற இயற்கைப் பேரழிவால் பூமித்தாய் காயமடைந்து கதறி அழுகிறாள். இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்படும்போது மக்கள் எழுப்பும் ஓலக்குரல் பூமித் தாயின் அழுகுரலாய் ஒலிக்கிறது. மக்கள் பெருந் திரளாய் மடியும்போது, நமது இதயம் கனமாகிக் கண்ணீரை வரவழைக்கிறது. இயற்கையைக் காயப்படுத்துவதன் மூலமாக நம்மை நாமே அழித்துக் கொள்கிறோம் என்ற நிலையே நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது. இதற்குப் பதில்மொழியின் முக்கிய அம்சமே சுற்றுச்சூழல் ஆன்மிகம் (பு.உ எண்
: 49).
நமது
தேவைகளுக்கும் வாழ்க்கைக்கும் பூமித் தாய் தரும் கொடைகளைப் பயன்படுத்துவதில் தவறில்லை; ஆனால், நமது சுயநலத்தாலும், ஆடம்பர வாழ்க்கைக்காகவும், அறியாமையாலும் இயற்கையைக் காயப்படுத்துவது மிகக் கொடுமையானது, அநீதியானது, பாவமானது.
இறையியல் பார்வையில்...
இறைவன்
இவ்வுலகில் அனைத்தையும் படைத்தபின் தமது சாயலிலும் உருவிலும் மனிதனைப் படைத்தார். ‘அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்’ என்று
மனிதனிடம் பொறுப்பைத் தருகிறார் (தொநூ 1:26,28). ஆக, இறைவன் படைத்த படைப்பைப் பொறுப்புடன் பேணிப் பாதுகாப்பது என்பது இறைவன் நமக்குத் தந்த கடமையாகும். “ஓய்வு நாளில் உன் மாட்டிற்கும் கழுதைக்கும் ஓய்வு தரவேண்டும்” (விப
23:12) என்றும், “உங்கள் வீட்டின் காளைகளையோ, உங்கள் தொழுவத்தின் ஆட்டுக்கிடாய்களையோ நான் ஏற்றுக்கொள்வதில்லை; ஏனெனில், காட்டு விலங்குகளெல்லாம் என் உடைமைகள்”
(திபா 50: 9-12) என்றும், “அனைத்து உயிர்களே, ஆண்டவரைப் புகழ்ந்திடுக!” (திபா 150:6) போன்ற இறை வார்த்தைகள், இறைவன் இயற்கையோடு ஐக்கியமாகி இருப்பதை உணர்த்துகின்றன.
இயற்கை
இறைவன் வாழும் ஆலயமாக உள்ளது. இயற்கை பாதிக்கப்படும்போது அங்கு இறைமை சிதைவடைகிறது. இயற்கை என்பது இறைமையின் நீட்சியாக உள்ளது (EXTENSION OF DIVINITY). ஆகையால்
இயற்கை அழிக்கப்படும் போது இறை-மனித உறவு பாதிக்கப்படுகிறது. எனவே, இயற்கையை அழிப்பது என்பது அத்துடன் இறைமையைச் சிதைப்பது. ‘நம்மை நாமே அழித்துக் கொள்வது’ என்ற இறையியல் உண்மையே, சுற்றுச் சூழல் ஆன்மிகத்தின் அடிப்படையும் ஆணிவேரும் ஆகும்.
சமுதாயப் பார்வையில்...
இயற்கையைச்
சேதப்படுத்தும்போது அதைச் சார்ந்து வாழும் ஏழை எளிய பூர்வக்குடிமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது (பு.உ எண்:49).
அவர்கள் சப்தம் இன்றி மடிகின்றனர். எனவே, இது சமூக நீதிக்கு எதிரான பாவமாகும். ‘உலகம் நமது பொதுவீடு; அதைப் பாதுகாப்பது நமது கடமை’
(பு. உ. எண் : 1).
எனவே, நமது சுதந்திரத்தைச் சமுதாயப் பொறுப்புடன் பயன்படுத்தவேண்டும். Nature is not only the
extension of divinity and but also humanity. மானிடத்தின் நீட்சியாகவும் இயற்கை அமைகிறது.
உளவியல் சிந்தனையில்...
இயற்கை
என்பது மனிதனின் வாழ்வாதாரம். மனிதனோடு நெருங்கிய உறவையும் சார்புத் தன்மையையும் கொண்டது. மனிதன் இன்றி இயற்கை வாழலாம்; ஆனால், இயற்கையின்றி மனிதன் வாழ இயலாது என்பதை அறிந்து, நமது பொது வீடாகிய இப்பூமியைப் (பு. உ எண் : 1) பொறுப்புடன்
பேணிக்காக்கவேண்டும்.
இயற்கை மனிதனின் வாழ்வைக் காக்கும் தாயாகவும், பாடங்களைப் போதிக்கும் நல்லாசானாகவும் விளங்குகிறது. இயற்கையை இரசித்து மகிழ்வது இறுக்கத்தைப் போக்கும் அருமருந்தாகவும் அமைகிறது.
ஆன்மிகப் பார்வையில்...
இயற்கையின்
அழகை இரசித்து, அதில் இறைப் பிரசன்னத்தைக் கண்டு அதைத் தியானிப்பது ஒரு செபமாகும், ஆன்மிக அனுபவமாகும். இறுக்கம் நிறைந்த இவ்வுலகில், இயற்கையோடு அன்புறவு கொண்டு, அதை நேசித்து, இயற்கை போதிக்கும் மதிப்பீடுகளின்படி வாழ்வது உண்மையான இறுக்கமற்ற இறையாட்சி வாழ்வாகும். இக்கருத்தின் அடிப்படையில்தான் புனித பிரான்சிஸ் அசிசியார் கழுதையை ‘சகோதரன்’ என்றும், குருவியை ‘சகோதரி’ என்றும் மதித்து உறவாடினார். அதுவே நமது சுற்றுச்சூழல் ஆன்மிகத்தின் இலக்காகும் என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ் (பு. உ எண் : 49). இக்கருத்தையே
புனித இஞ்ஞாசியார் தனது ஆன்மிகப் பயிற்சிகளில் இறையன்பை அடைந்திட காட்சித் தியானங்களாகத் தருகிறார் (ஆன்மிகப்
பயிற்சி, எண் 231-237). கடவுளை அனைத்திலும் அனைவரிலும் காணும் ஆன்மிக அனுபூதி நிலையை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
திருத்தந்தை காட்டிய
வழியில்...
• திருத்தந்தை பிரான்சிஸ் நாம் செய்யவேண்டிய சிறிய செயல்திட்டங்களையே பரிந்துரைக்கிறார் (பு.உ எண்
: 211). எடுத்துக்காட்டாக,
நெகிழிப் பொருள்களைக் குறைத்துக்கொள்வது, தண்ணீர் சிக்கனம் காண்பது, மின்விளக்குகளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது, பொது வாகனங்களைப் பயன்படுத்துவது பேன்றவை மிகச் சிறப்பான பலன் அளிக்கும் (பு.உ எண்
: 211).
• சிந்தனை அளவில் மாற்றம் மலர்ந்திடவேண்டும். எனவே, சிறு வயது முதல் சுற்றுச்சூழல்
பற்றிய விழிப்புணர்வும், சுற்றுச்சூழல் கல்வியும் மிக மிக அவசியம். அறிவியல்பூர்வமான அணுகுமுறையில் நமது செயல்திட்டங்கள் அமைந்திட வேண்டும் (பு.உ எண்
: 210).
• நமது மனமாற்றத்திற்கு உதவியாக நம் ஆன்மிக வழிபாட்டு முறைகள் சுற்றுச்சூழல் பார்வையில் நடத்தப்படவேண்டும். எடுத்துக்காட்டாக, விழிப்புணர்வுப் பாடல்கள், திருப்பலிக் கொண்டாட்டங்கள், நவநாள்கள், ஆன்ம ஆய்வுகள், தியானங்கள், பல்சமய வழிபாடுகள் நடத்தப்பட வேண்டும் (பு.உ எண்
: 210, 220).
இளம்
உள்ளங்களிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வையும் கல்வியையும் வளர்த்திடுவோம். இயற்கையைக் காக்கும் அன்றாட சிறு சிறு செயல்களைச் செய்திடுவோம். இறுக்கமற்ற இறையாட்சி வாழ்வினை மலரச் செய்வோம்.
அலுவலகத்தில் மற்ற ஊழியர்கள் அனைவரும் ஒரு புதிய ஃப்ராஜெக்ட்டுக்காகவோ அல்லது அலுவலக விழாக்களுக்காகவோ தேனீக்களைப் போல இரவும் பகலும் சுறுசுறுப்பாக உழைப்பார்கள். ஆனால், ராகவன் மட்டும் எப்போதும் சோர்வாகக் கண்கள் சொருகி, ஏதோ பெரிய நோயாளி போலத் தன்னைத் திரையிட்டுக் கொள்வான்.
“சார்,
அவனுக்குக் கொஞ்சம் உடம்பு முடியல போல... பாவம், அந்த வேலையை நானே பார்த்துக்கிறேன்” என்று சக ஊழியர்கள் தாயுள்ளத்தோடு அவனுக்காகப் பரிந்து
பேசுவார்கள்.
ராகவன்
பயங்கரமான புத்திசாலி. ஒரு ‘கோடிங்’ சிக்கலை மற்றவர்கள் நாள் முழுக்க மண்டையை
உடைத்துக் கொண்டு தேடினால், இவன் கூரிய கத்திபோலச் சில நிமிடங்களில் சிக்கலைத் தீர்த்து
விடுவான். ஆனால், அவனிடம் ஒரு விசித்திரமான தந்திரம் இருந்தது. வேலை என்று வந்துவிட்டால்,
தன் உடம்பை வெயிலில் வதங்கிய கத்தரிக்காய் போல மாற்றிக்கொள்வான்.
“என்ன
ராகவன், இன்னைக்கும் தலைவலியா?\" என்று டீம் லீடர் கேட்கும்போதே, “ஆமா சார், சைனஸ்
பிராப்ளம். நேத்து நைட்டெல்லாம் தூக்கமே இல்லை...” என்பான் சோகமான குரலில்.
உடனே
மேனேஜருக்கும், சக ஊழியர்களுக்கும் அவன் மேல் ஒரு சாப்ட் கார்னர் வந்துவிடும்.
“சரி
சரி, நீங்க இன்னைக்குச் சீக்கிரம் கிளம்புங்க. அந்த டாஸ்க்கை சுனில் பார்த்துப்பான்” என்று அவனுக்கு எப்பொழுதும் ஒரு சொகுசான இடத்தைக் கொடுத்து
விடுவார்கள்.
ஒருநாள்
அந்த நிறுவனத்தின் அமெரிக்கக் கிளையில் ஒரு பெரிய ஃப்ராஜெக்ட்டை வழி நடத்த, திறமையான
ஒரு மேலாளர் தேவைப்பட்டார். அது வெறும் பதவி உயர்வு மட்டுமல்ல; ராகவனின் வாழ்க்கையையே
வாணவேடிக்கையாக மாற்றக்கூடிய ஓர் அரிய வாய்ப்பு.
திறமையின்
அடிப்படையில் பார்த்தால், அந்தப் பதவிக்கு ராகவன்தான் தகுதியானவனாக இருந்தான். மேலதிகாரிகளின்
கூட்டத்தில் அவனது பெயர் பரிசீலனைக்கு வந்தது.
“ராகவன்
ரொம்ப டேலண்டான பையன். அமெரிக்கா ஃப்ராஜெக்டுக்கு அவன்தான் கரெக்ட்!” என்றார் ஓர் அதிகாரி. ஆனால், அங்கிருந்த முதன்மை அதிகாரி, “நீங்க சொல்றது
உண்மைதான். ஆனா, அவனால அங்க இருக்குற குளிரையும், கடுமையான வேலைப் பளுவையும் தாங்க
முடியுமா? அவன் எப்போ பார்த்தாலும் ஏதோ ஒரு நோயாளியைப் போலவே இருக்கானே! அங்கே போய்
அவனுக்கு ஏதாச்சும் உடம்பு முடியாம போனா ஃப்ராஜெக்ட்டே வீணாகிடும்” என்று மறுத்துவிட்டார்.
இறுதியில்,
ராகவனைவிடக் குறைந்த திறமையுடைய, ஆனால் இரும்புத் தூணைப் போலச் சுறுசுறுப்பாக இருந்த
மற்றோர் ஊழியருக்கு அந்த அமெரிக்க வாய்ப்பும், பதவி உயர்வும் வழங்கப்பட்டன. செய்தி
அறிந்த ராகவன் அதிர்ந்து போனான். இத்தனை காலம், தான் சுகமாக இருக்க நினைத்து ஏந்திய
‘அனுதாபம்’ என்ற ஆயுதம், இன்று தன் எதிர்காலத்தையே
பதம் பார்த்துவிட்டதை அவன் உணர்ந்தான்.
அலுவலகத்தில்
எப்போதும் போல அவனுக்குத் தேநீர் கொண்டு வரும் ஊழியர் வழக்கம்போல அதே அனுதாபத்தோடு,
“தம்பி, முகம் ரொம்ப வாடிப் போயிருக்கு. உடம்பு சரி இல்லையா? நீங்க பேசாம இன்னைக்கும்
சீக்கிரம் வீட்டுக்குப் போகலாமே” என்றார். ஆனால், இன்று அந்த வார்த்தைகள் ராகவனின் காதில்
ஈட்டி போலப் பாய்ந்தன. போலி நிழலில் ஒதுங்க நினைத்தவன், இன்று உண்மையான சூரிய அஸ்தமனத்தை
இழந்து பரிதாபமாக அமர்ந்திருந்தான்.
‘சாட்பிஃசிங்’ (Sadfishing) என்பது சமூக ஊடகங்களில் மற்றவர்களின்
அனுதாபம், கவனம் அல்லது ஆதரவைப் பெறுவதற்காக ஒருவர் தனது மனக்கவலை அல்லது தனிப்பட்ட
துயரங்களை மிகைப்படுத்திப் பதிவிடும் செயலாகும். இந்தச் சொல் 2019-ஆம் ஆண்டில் ரெபேக்கா
ரீட் (Rebecca Reid)
என்பவரால் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. தனிப்பட்ட பிரச்சினைகளை மிகைப்படுத்தியோ
அல்லது பொய்யாக உருவாக்கியோ மற்றவர்களின் பரிதாபத்தையும் லைக்குகளையும் கவனத்தையும்
ஈர்க்கும் செயலை அனுதாபத் தூண்டில் அல்லது சாட்பிஃசிங் என்கின்றனர்.
‘சாட்பிஃசிங்’ செய்பவர்களில் சுமார் 40 விழுக்காட்டினர் மருத்துவ ரீதியான
மனச்சோர்வு அல்லது பதற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. குடும்பம் அல்லது
நண்பர்களிடம் நேரடி ஆதரவு கிடைக்காத இளைஞர்கள் (சுமார் 60%) சமூக ஊடகங்களை ஒரு மாற்றாகப் பயன்படுத்துகின்றனர்.
ஆண்களைவிட
பெண்கள் தங்கள் உணர்ச்சிகரமான போராட்டங்களைச் சமூக ஊடகங்களில் அதிகமாகப் பகிர்ந்துகொள்வதாக
ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, சாட்பிஃசிங் என்பது ஒரு கவனத்தை ஈர்க்கும் செயல் மட்டுமல்ல;
அது தீர்க்கப்படாத மன உளைச்சலின் ஓர் அறிகுறியுமாகும்.
பல
நேரங்களில் மக்கள் உண்மையான மன உளைச்சலில் இருக்கலாம். ஆனால், சில நேரங்களில் அது வெறும்
கவனத்தை ஈர்ப்பதற்காக மட்டும் செய்யப்படலாம். ஒரு பதிவு உண்மையான உதவியை நாடுகிறதா?
அல்லது வெறும் அனுதாபத்தைத் தேடுகிறதா? என்பதை நிதானமாகத் தீர்மானிக்கவேண்டும்.
இணையத்திற்கு
வெளியே உள்ள நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் மனக்குறைகளைப் பகிர்ந்துகொள்வதே சிறந்தது
(Offline support). சமூக ஊடகங்களில் கிடைக்கும் தற்காலிக
ஆதரவு நீண்டகால மனநலத்திற்குப் பயன் தராது என்பதை உணரவேண்டும்.
தனிப்பட்ட
வாழ்க்கையின் மிக நெருக்கமான துயரங்களைப் பொதுவெளியில் பகிரும்போது ஏற்படும் ஆபத்துகளைக்
கவனத்தில் கொள்ளுங்கள். மன அழுத்தம் அல்லது தனிமை அதிகமாக இருந்தால், சமூக ஊடகங்களில்
பதிவிடுவதற்குப் பதிலாக முறையான ஆலோசகர்கள் (Counselors) அல்லது மருத்துவர்களிடம் உதவி பெறுவதே
சரியான தீர்வாகும். உண்மையான அங்கீகாரம் என்பது சும்மா எல்லாரும் நம்மைத் திரும்பிப்
பார்க்க வைப்பதில் இல்லை; யாரும் பார்க்காதபோது நாம் காட்டும் உழைப்பிற்கும், நம்முடைய
தகுதிக்கும் மற்றவர்கள் தரும் மரியாதையில்தான் இருக்கிறது.
ஒரு மாலைப்பொழுதில் தோட்டமொன்றில் தரையில் அமர்ந்து இருந்தோம். பெரிய வகை கருந்தேள் ஒன்று மெல்ல ஆடி ஆடி வந்தது. அருகில் நின்றிருந்த உறவினரிடம் தேளை சைகையால் காட்டினோம். அவர் கிராமப்புறத்தைச் சார்ந்தவர் என்பதால் லாரி டயரை அடிப்பாகமாகக் கொண்ட கனத்த செருப்பு அணிந்து இருந்தார். தேளைச் செருப்பால் வேகமாக அடித்தார். தேள் கொட்டியது. செருப்பில் ஓட்டை விழுந்தது. நம் உறவினர் நல்ல பலசாலி என்பதால், நட்டுவாக்காலி எனும் தேளை அடித்துக் கொன்றார். அவர் ‘நட்டுவாக்கலி கொட்டினால் கொட்டிய வேகத்தில் விசம் ஏறும்; வாயில் நுரை தள்ளும்; மரணம் நிச்சயமான ஒன்றாகும்’ என்றார்.
இந்தியாவில்
ஆர்.எஸ்.எஸ். தன்னைச் சமூக அமைப்பு எனப் பிரகடனப்படுத்துகிறது. ஆனால், தேச அமைதியைக் குலைக்கும் கருந்தேளாக வன்முறை வழி, மறைவாகக் கொட்டிக்கொண்டே இருக்கிறது. உயிர்ப்பலிகளை வாங்கிக்கொள்கிறது. தேசப் பிதா காந்தி கொலை முதல் பாபர் மசூதி இடிப்புவரை மதக்கலவரங்களில் ஆர்.எஸ்.எஸ். பங்கு பலமாக இருக்கிறது. 27, செப்டம்பர் 1925 அன்று நாக்பூரில் கே.பி. ஹெட்கேவர்
என்பவரால் இராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (ஆர்.எஸ்.எஸ்.) தொடங்கப்பட்டது. ஆர்.எஸ். எஸ். அமைப்பு, இந்து ஒற்றுமை, ஒழுக்கம், இந்து கலாச்சார மேம்பாட்டிற்காக உழைக்கும். இந்து தேச அரசை உருவாக்கப் பாடுபடும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு படிநிலைகளைக் கொண்டது. ஷாகாக்கள் எனப்படும் உடற்பயிற்சி, கொள்கைப் பிரச்சாரம் சார்ந்த இளைஞர்களின் உள்ளூர்
அமைப்பாகும். இது மாவட்ட, மாநில, தேசிய எனப் படிநிலைகளில் கட்டமைப்புப் பெறுகிறது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்திய தேசத்தை உலகிற்கு வழிகாட்டும்
‘விஸ்வகுரு’ என்கிறது.
ஆர்.எஸ்.எஸ். பார்வையில் பாரதம் ஒரு காலத்தில் அறிவு, ஆன்மிகம், அறிவியல், கலாச்சாரத்தில் உலகிற்கே வழிகாட்டியாக இருந்தது. மீண்டும் அதே நிலையை அடைவதே ஆர்.எஸ்.எஸ். இலக்கு. தனி மனித ஒழுக்கம், குடும்பம், சமூகம், சாதி பேதமற்ற சமூகம்,
சுயசார்பு பொருளாதாரம்,
இந்து கலாச்சாரம் என்பதில் ஷாகாக்கள் வழி இளைஞர்களை வழி நடத்துதல் எனப் பாதை அமைக்கிறது. ‘தர்மம் அரசாண்டால் உலகமே சீடனாகும் சாத்திரங்கள்’ என்கிறது.
தினசரி சங்கல்பமாக ‘இந்து சமூகத்தை ஒருங்கிணைத்து, பரம வைபத்திற்குக் கொண்டு சென்று, உலகிற்கே குருவாக்குவேன்’ எனத்
தன் உறுப்பினர்களை உறுதிமொழி எடுக்க வைக்கிறது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வெளிப்பார்வைக்கு இவ்வாறு அடையாளம் காட்டினாலும், நடத்தையில் பல குண்டுவெடிப்பு நிகழ்வுகளில்
குற்றம் சாட்டப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் அருகே வெடி மருந்து, டெட்டனேட்டர், ஜெலட்டின் குச்சிகள் இருந்தது என்பதில் ஐயப்பாடு உள்ளது. ஆர்.எஸ். எஸ். 30-க்கும் மேற்பட்ட துணை அமைப்புகளைக் கொண்டுள்ளது. பா.ச.க.
அரசியல் அமைப்பு ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பு, வி.ஹெச்.பி.
இந்து கோவில், பசு பாதுகாப்பு, மதமாற்றத் தடுப்பு, பஜ்ரங்தள் இளைஞர் அமைப்பு, சேவா பாரதி கல்வி சேவை, பி.எம்.எஸ்.
விவசாயத் தொழிலாளர் அமைப்பு எனக் கிளை பரப்புகிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கீழ் செயல்படும் அமைப்புகளை ‘சங்கப் பரிவார்’ என்கிறோம்.
வி.ஹெச்.பி. பாபர் மசூதி இடிப்பில் சுவை கண்ட பின், வடநாட்டில் பல மசூதிகளைக் குறிவைத்து,
பல்வேறு கலவரங்களைத் தூண்டுகிறது. தமிழ்நாட்டில் வி.ஹெச்.பி.,
இந்து முன்னணி என்ற பெயரில் திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபமேற்றுவதில் செய்தி கலாட்டாக்கள் யாவரும் அறிந்ததே. வட மாநிலங்களில் கிறிஸ்து
பிறப்பு நாளன்று தேவாலயங்களில் கலவரம் செய்தவர்களும் இவர்கள்தான்.
‘பசு பாதுகாப்பு’ என்ற
பெயரில் தாழ்த்தப்பட்ட மக்களைத் தாக்குவதும் இவர்களே. தேசிய தரப் பட்டியலில் உள்ள புது தில்லி ஜே.என்.யு.
எனப்படும் பொது மத்திய பல்கலைக்கழகமான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளது. அங்கு பாரதிய
சனதாவின் மாணவர்
அமைப்பான எ.பி. வி.பி. சாதி வேறுபாடு பார்ப்பதோடு, கலவரம் செய்கிறது. அதற்கு அங்குப் பணியாற்றும் உயர்சாதி பேராசிரியர்களும் இவற்றிக்குத் துணை போகிறார்கள் என்பதே கசப்பான செய்திகள். ஏ.பி.வி.பி. அலகாபாத்
பல்கலைக்கழகம், மகாத்மா காந்தி வித்யா பீடம், குசராத் பல்கலைக்கழகம்,
கௌகாத்தி பல்கலைக்கழகம் ஆகிய இடங்களிலும் கோலோச்சுகிறது.
இனி
காவி ஆர்.எஸ்.எஸ். வரலாற்றைக் கொஞ்சம் புரட்டுவோம்.
1930-களில் மகாராஷ்டிரா
மாநிலத்திலிருந்து தென் இந்தியாவிற்குத் தன் ஷாகாக்களை, அன்றைய தலைவர் கே.பி. ஹெட்கேவர்
நகர்த்துகிறார்.
1940-இல் சென்னையில் ஆர்.எஸ்.எஸ். கால் வைத்தது. கேரளாவில் பொதுவுடைமைத் தலைவர்களால் ஆர்.எஸ்.எஸ். அடையாளம் காணப்பட்டது. சில மோதல்கள் வெடித்தன. தென்னிந்தியாவில் கேரளம் மற்றும் தமிழ்நாடு
மட்டுமே ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மதவாதப் பணியாற்ற இன்றுவரை சவாலாக உள்ளது. தமிழ்நாட்டில் திராவிடம், தமிழ் தேசியம் என்ற தத்துவார்த்த அரசியல் நிலையை ஆர்.எஸ்.எஸ். முறியடிக்க முடியவில்லை. ‘மாற்றம்’ என்ற பெயரில் ‘தினமலர்’,
‘துக்ளக்’ செய்த
பிரச்சாரப் பலனை தமிழ்நாடு அரசியலின் தேர்தல் காலப் புதுமுகங்கள் பெற்றார்கள்.
இதனிடையே
1948-இல் தேசப்பிதா காந்தி படுகொலையில், 1975-இல் நெருக்கடி நிலை காலத்தில் 1992-இல் பாபர் மசூதி இடிப்பில் ஆர். எஸ்.எஸ். ஒன்றிய அரசால் தடை செய்யப்பட்டது. தடை நீக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். முழுவீச்சில் களம் கண்டது. 2014 முதல் மோடியைப் பிரதமராக அமர்த்தியது. தனது இந்து இராஜ்ஜிய செயல்திட்டங்களில் பாதியளவு நிறைவேற்றிவிட்டது.
தமிழ்நாட்டில்
ஆர்.எஸ்.எஸ். இரண்டு முறை பேசப்பட்டது. 1981-இல் மீனாட்சிபுரம் மதமாற்ற நிகழ்வின்போது மீனாட்சிபுரம் அருகே ஐந்து இலட்சம் பேரைக் கூட்டி, ஆர்.எஸ்.எஸ். இந்து ஒற்றுமை மாநாடு நடத்தியது. இது குறித்து இந்தியா முழுவதும் மதமாற்ற விழிப்புணர்வுப் பிரச்சாரமும் செய்தது. கன்னியாகுமரியை ஆர்.எஸ்.எஸ். தனது கோட்டை என்கிறது. அங்குத் தேசிய கட்சிகளான காங்கிரஸ் கட்சியும், பா.ச.க.
கட்சியும் மக்களிடையே செல்வாக்குப் பெற்றுள்ளது. 2026 - சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இரு தேசியக் கட்சிகள் பெரும்பான்மை தொகுதிகளில் மோதின.
1982-இல் மண்டைக்காடு
நிகழ்வு நடந்தது. அதில் ஆர்.எஸ்.எஸ். பங்கு பெரிய அளவில் உள்ளதாகக் கூறப்பட்டது. அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களால் வேணுகோபால்
ஆணையம் அமைக்கப்பட்டது. ஆணைய அறிக்கை சொல்கிறது: “ஆர்.எஸ்.எஸ். என்பது எதிர்ப்புக் கேள்விகளை அனுமதிக்காத அமைப்பாக இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். நேரடியாகக் கலவரம் செய்யவில்லை; ஆனால், மதவுணர்வைத் தூண்டியது.”
இந்த
வார்த்தைகள்தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முகம் மற்றும் மூகமுடியாகும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வெற்றிகரமாக நூறு ஆண்டுகளைக் கடந்து நூற்றாண்டு விழா கொண்டாடுகிறது. அதன் அடிப்படையில்தான் இக்கட்டுரை அமைகிறது. வாருங்கள்... ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழா குறித்த செயல்திட்டங்களைப் பார்ப்போம். 2025 விஜயதசமி நாளில் இருந்து 2026 விஜயதசமி நாள் வரை கொண்டாட்டங்கள் நடக்கின்றன. நாக்பூர் என்ற ஆர்.எஸ்.எஸ். தலைமைப் பீடத்திலிருந்து அயோத்தியாவிற்கு முக்கிய விழாக்கள் மாற்றப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். அதிகாரப்பூர்வமாக உத்திரப் பிரதேசம், தமிழ்நாடு என்பதைக் குறிவைத்த எங்கள் செயல்திட்டம் உள்ளது என அறிவித்துவிட்டது. மக்களிடம் சென்றடைய
துண்டுப் பிரசுரங்கள் ஆர்.எஸ்.எஸ். இலக்கியங்கள் குறித்தக் கோப்புரைகள், புத்தகங்களை வீடு வீடாக வழங்குதல், ஷாகாக்களை அதிகப்படுத்துதல், இலட்சக்கணக்கான மக்கள் கூடும் இடங்களில் இந்து மாநாடுகள் நடத்துதல், அனைத்துத் துறை முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்கும் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்தல், அனைத்துச் சாதியினரும் பங்கேற்கும், சமூக நல்லிணக்கக் கூட்டங்கள் நடத்துதல்... எனச் சமூகநலன் முகமூடி அணிந்து வருகிறது.
தமிழ்
மண் திராவிட, தமிழ் தேசிய சித்தாந்தங்களில் ஊறிய சமூகநீதி மண். இங்கு ஆர்.எஸ்.எஸ். எவ்வடிவில் வந்தாலும்,
அடையாளம் கண்டு, புறம்தள்ளப்படும் என்பதே வரலாறு.
எண்ணங்கள் நம் வாழ்க்கையைச் சீராக்கிச் செதுக்குவதில் அதிமுக்கியப் பங்கு வகிக்கின்றன. அது நம் செயல்பாட்டைப் புரட்டிப் போடும் ஆற்றல் கொண்டவை.
எண்ணங்கள்
என்பது வெறும் கருத்து மட்டுமல்ல; பல்வேறு பின் விளைவுகளை (நேர்மறை மற்றும் எதிர்மறை) ஏற்படுத்தும் வீரியம் கொண்டவை. இப்படிப்பட்ட எண்ணங்களை நாம் கவனமுடன் கையாண்டால் அதன் பலன் அதிகம். இல்லையென்றால், பின் விளைவுகள் நம்மைப் புரட்டி எடுக்கும்.
அறிவியல்
தரவுகளின் அடிப்படையில் ஒரு நாளைக்கு நமக்குள் 50,000 - 70,000 எண்ணங்கள் வந்துபோகும் எனக் கூறப்படுகிறது. அதை ஒரு மணி நேரத்திற்கு என்று பார்த்தால், சுமார் 300 முதல் 3,000 எண்ணங்கள் வரை இருக்கலாம்.
இது
நமது வேலை, கவனம், மனஅழுத்தம், தூக்கம் மற்றும் மனநிலையைப் பொறுத்து மாறும். பல எண்ணங்கள் மீண்டும்
மீண்டும் வந்து தொல்லை தரும் எண்ணங்களாக இருக்கும். ஆழ்ந்த கவனத்துடன் வேலை செய்யும்போது எண்ணங்கள் குறைந்து ஒரே நேர்கோட்டில் குவிந்து இருக்கும். கவலை அல்லது அதிக சிந்தனைகள் (over thinking) இருக்கும்போது எண்ணங்கள் வேகமாகப் பல விசயங்களுக்கு மாறிக்கொண்டே
இருக்கும்.
இப்படி
நிலையற்ற எண்ணங்களைக் கொண்டுதான் நிலையான வாழ்க்கையை அமைக்கப் போராடுகிறோம். ‘நிலையான, நிம்மதியான வாழ்க்கைக்கு வாய்ப்பே இல்லையா?’ என ஆதங்கம் வேண்டாம்.
அது முடியும்! எப்படி? அதற்குச் சில உளவியல் முறைகளை முறைப்படி அறியவேண்டும். அதை அறியும் ஒரு முயற்சியாக, என் வாழ்க்கையில் இதெல்லாம் நடந்ததற்கு இதுதான் காரணமா? என நம்மை நாமே
ஒரு சுயசோதனை செய்யும் வழி முறையாக, இனி ஒவ்வொரு வாரமும் உங்களோடு உரையாடக் காத்திருக்கிறேன்.
எண்ணங்களை
மேம்படுத்துவதும் மற்றும் செயல்படுத்துவதும் அவ்வளவு எளிதான அணுகுமுறை அல்ல; அதற்குச் சில ஒழுங்குமுறைகளும் விழிப்புணர்வும் ஆர்வமும் அவசியம். இவை
உங்களிடம் இருக்கிறது என்றால் அதை நடைமுறைப்படுத்தி உயர்வு காண இந்தத் தொடர் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
‘வாழ்க்கையைக் கொண்டாடு’
தொடருக்கு நீங்கள் தந்த பேராதரவைப் போல, இந்தத் தொடருக்கும் உங்கள் ஆதரவு நீளும்; உங்கள் எண்ணங்களையும் மனங்களையும் கவரும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கையோடு இனி உங்களோடு உரையாடுகிறேன். தொடர் மூலம் சந்திப்போம், தொடர்ந்து சிந்திப்போம்.
சனநாயகம் எனும் அரசியல் விழுமியத்தின் மிகப்பெரிய உள்ளீடு எது? உலக வரலாற்றில் தோன்றிய அரசமைப்புகளுள் இன்றும் உயர்ந்தோர் அமைப்பாகக் கருதப்பெறுவது சனநாயக அரசே என்பர். சனநாயகத்தை உள்ளடக்கிய சனநாயக அரசு, அதன் வெகுசன வீச்சால் ஆள்வோரின் ஆளும் போக்கால் கறை படிவதுண்டு. எனினும், சனநாயகம் எனும் மாண்புயர் பண்பும், இப்பண்பை உள்ளடக்கியதாகக் கருதப்பெறும் சனநாயக அரசும் இன்றும் குடிமக்களால் போற்றப்பெறும் ஒரு நிறுவனமாகவே கருதப்பெறுகிறது என்பதுதான் உண்மை.
சனநாயகம்
என்ன தந்தது? சனநாயகம் குடிகளைக் (Subjects) குடிமக்களாக்கியது (Citizens).
சனநாயகம் முன்னெடுத்த இம்மாற்றம் ஒரே நாளில் நடந்த மாயாஜாலமல்ல; ஒற்றை மனிதரின் சர்வாதிகாரத்தின்கீழ்,
ஒரே மனிதனின் முடியாட்சி என்ற பெயரில் குடிகளை ஆட்சி செய்து வந்த நிலையில் குடிகளை
ஆற்றல்படுத்தத் தோன்றிய புரட்சிகர மாற்றத்தால் விளைந்த பெருமாற்றம் ‘யாமார்க்கும் குடியல்லோம்’ என்ற எதிர்முழக்கத்தின் வெற்றி இது. தனிமனிதனின் மாண்பையும்,
சமூக அடையாளத்தையும் காக்க ஒரு வரலாற்றுச் சமூகம் முன்னெடுத்த புரட்சிக்குரலின் வெற்றிப்
பரிசே குடியுரிமை எனும் பெருங்கொடையாகும்.
குடிமக்கள்,
சனநாயகம் ஈன்ற பெருஞ்செல்வம். இக்குடிமக்களின் அடையாளம் தெரிவு செய்யும் உரிமையை உத்தரவாதப்படுத்துவதுதான்
தேர்தல். தேர்தல் எனும் சொல் குடிமக்களுக்குச் சனநாயகம் வழங்கியுள்ள பங்கேற்பு எனும்
மதிப்பீட்டை நிறைவு செய்ய தரப்பட்ட ஒரு கருவியே. தெய்வத்தின் தயவில், அத்தெய்வத்தின்
அருளில் கிடைத்த தலைவன் அருளில் குடிகள் வாழ்வதாக நம்பப்பட்ட காலத்தில், ‘மன்னன் உயர்த்தே
மலர் தலை உலகம்’ (புறநானூறு) என்றும் ஏற்கப்பட்ட காலத்தில்,
அனைத்துப் புனைவுகளையும் தாண்டி, குடிமக்களின் வீறுகொண்ட பேரெழுச்சியால் உருவானது சனநாயகம்.
இச்சனநாயகம் உத்தரவாதப்படுத்திய பன்மைச் சமூகங்களின் சமபங்கேற்பு, பங்கேற்பை உண்மையாக்க
உருவாக்கப்பட்ட தேர்தல் முறை; தேர்தலில் உள்ளடங்கியது குடிமக்களின் தெரிவு செய்யும்
உரிமை (Power of Choice).
இந்த மானுட மாண்பின்மீது வைக்கப்பட்ட நம்பிக்கையை (Faith) நாம் போற்றுகிறோமா? அவமதிக்கிறோமா?
சனநாயகத்தில்,
சனநாயகம் காக்க உருவாக்கப்பட்டுள்ள அரசமைப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட
சனநாயகப் பாதுகாப்பு நிறுவனங்கள் (Democratic institutions) இவை எதன்மீதும் நம்பிக்கையற்ற இன்றைய
மதவாத ஆட்சியாளர்களும், அரசியல் அமைப்புச் சட்டத்தின்மீது கைவைத்து உறுதிமொழியெடுத்து
ஆட்சிப் பொறுப்பை ஏற்கின்றன. ஆட்சிப் பொறுப்பேற்க, ஆட்சி தரும் சுகத்தை அனுபவிக்க,
இவர்கள் கையில் கிடைத்த ஆயுதம் சனநாயகமாக இருத்தல் என்பதுதான் இங்குக் கவலை தரும் செய்தியாகும்.
மதவாதம், மத அடிப்படைவாதம் என்பன சனநாயகப் பண்புகளல்ல; மதவாத
அடிப்படையில் அமையும் அரசு, மதப்பெரும்பான்மைவாத அரசாகத்தான் திகழமுடியும். மதரீதியாக
மக்களை அணி திரட்டி, சனநாயகம் தரும் தேர்தல்வழி அமையும் அரசைச் சனநாயக அரசு என்று எப்படி
அழைக்க முடியும்?
எதேச்சதிகார
அரசுகள், மக்களை வெளிப்படையாகவே அவமதிக்கும் பாசிஸ்டுகள் எல்லாருமே சனநாயக வழியில்தான்
ஆட்சியை நிறுவுகின்றன. சனநாயகம் அவமதிக்கப்பட்டு,
சனநாயகத்தின் ஒரு பகுதியான தேர்தல்முறை மூலம் களவாடிப் பெறப்படும் ஆட்சி சனநாயக
ஆட்சியல்ல.
மானுட
மாண்பு, அவர்தம் வாழ்வுரிமை என்பனவெல்லாம் சனநாயகம் வழங்கிய அடிப்படை உரிமைகள். இவ்வுரிமைகளைத்
தாங்கிய அரசமைப்பு நடைமுறைப்படுத்தும் சனநாயக நிறுவனங்கள் தமக்குரிய பணிகளைச் செய்ய
மறுக்கும் நிலையில் அல்லது தடுக்கப்பெறும்போது, பாதிக்கப்படும் குடிமக்கள் இப்போக்குகளைக்
கேள்விக்குள்ளாக்குகின்றபோது, சனநாயகம் தரும் தேர்தல் வழி ஆட்சியை அபகரித்து, ஆட்சி
நடத்தும் எதேச்சதிகாரிகள், உரிமைக் குடிமக்களை ‘நகர்புற நக்சல்கள்’ என்றும், ‘நாட்டு விரோதிகள்’ என்றும்
முத்திரை குத்துகின்றனர், சிறைப்படுத்துகின்றனர், கொலையும் செய்கின்றனர்.
இத்தீய
விளைவுகளுக்கு ஊற்றுக்கண் எது? என்று தேடிப் பார்க்கையில், குடிகளைக் குடிமக்களாக்கி
அழகு பார்த்த சனநாயகமும், சனநாயகம் அளித்த தேர்தல்வழி இவர்கள் பெற்ற அதிகாரமுமே இதற்குக்
காரணமாகின்றன என்பதை அறியலாம்.
சனநாயகத்தின்
அழகு முகமாம் தேர்தல் சிதைக்கப்படுகின்றபோது, அச்சிதைவின் வெளிப்பாடாகிய முறைகேடுகள்
வெறும் ஒழுங்கு பற்றிய பிரச்சினை அல்ல; இது ஒரு வன்முறை! (Violence).
ஓர் உன்னத நெறிமுறை பாதிக்கப்படுகின்றபோது குடிமக்களின் பயனுக்குரியதாக அது இல்லா நிலையில்,
குடிமக்களின் சனநாயக உரிமையே மீறப்படுகிறது. எனவே, சனநாயகத்தின் பெயரால் நடத்தப்பெறும்
வன்முறையும் மீறலும் (Violation) சனநாயகத்தின் முக்கியக்கூறான தேர்தல்
அவமானத்திற்குள்ளாகிறது, அவமானப்படுத்தப்படுகிறது.
“இந்தியச்
சமூக அமைப்புகள் - அது தாங்கிப் பிடிக்கும் சனநாயகம் எனும் மாந்த நெறிக்கு முரணானது” என்பார் அரசியலறிஞர் ரசனி கோத்தாரி. இந்தியச் சமூகத்திலிருந்து
சனநாயகத்திற்கான குரல் எழவில்லையென்றும், சனநாயக நிறுவனங்கள் மேலிருந்து திணிக்கப்பட்டவை
என்றும் அவர் கூறுவார். விடுதலை பெற்ற இந்தியாவில் சனநாயகத்திற்கான குரல் எழவில்லையெனினும்,
இந்தியச் சமூக அமைப்பு சனநாயகத்தைத் தகவமைப்பு செய்ததற்குரியதல்ல எனினும், அன்றைய இந்தியத்
தேசியத் தலைமை பெருத்த நம்பிக்கையோடு இந்தியாவைச் சனநாயகக் குடியரசாக அறிவித்தது.
பெரும்பான்மை
மத அடிப்படையில் இந்நாடு அமையவேண்டும் என விரும்பியவர்களின் குரல் வலுவாக ஒலித்து வந்த
நிலையிலும், இந்நாட்டை ஒரு மதச்சார்பற்ற நாடாக அறிவித்த பெருமையையும் நாம் மறந்துவிட
முடியாது. இன்று ‘மதச்சார்பற்ற இந்தியா’ ஓர் அறிவிக்கப்பெறாத ‘மதம் சார்ந்த
நாடாக’ வேகமாக உருமாறிக் கொண்டிருக்கின்ற எதார்த்தத்தையும்
நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.
இந்தியச்
சமூகத்துள் தேர்தல்முறை வெற்றி பெறுமா? பெறாதா? என்ற ஐயம் எழுந்த நிலையிலும், ‘எல்லாருக்கும்
ஒரே வாக்கு’ என்ற அடிப்படையில் இந்திய அரசு முதல்
தேர்தலை அறிவித்தது. வளர்ந்த நாடுகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கூட எல்லாருக்கும்
வாக்குரிமை கொடுக்கத் தயங்கிய நிலையில், இந்தியா வாக்குரிமையை இருபாலாருக்கும் சமமாக
வழங்கியது. அதுவும் இந்திய மக்களில் எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை பத்து விழுக்காடு
கூட இல்லாத நிலையிலும்கூட அனைவருக்கும் வாக்குரிமை (Right to vote) வழங்கிய சிறப்பு இந்திய அரசுக்கு
உண்டு. உலகின் மிகப்பெரிய சனநாயகத் திருவிழா இந்தியாவில் இந்தியக் குடிமக்களின் துணையோடு
நடத்தப்பட்டது.
இந்தியச்
சமூகம் ஒரு வர்க்கச் சமூகம் மட்டுமல்ல; வர்ணச் சமூகமும் கூட! இந்த நிலையை அறிந்திருந்த
பின்பும், சம உரிமை வழங்கும் வாக்குரிமையைக் குடிமக்களுக்கு உத்தரவாதமாக்கிய இந்திய
அரசைப் பாராட்டுவோம்.
தேர்தல்
எனும் சனநாயக முறைமை உயர்வானது எனினும், போட்டி அரசியலில் (competitive Politics)
தேர்தல் முறைகளில், அதாவது வாக்குச் சேகரிப்பில், வேட்பாளர் தேர்வில் ‘பணநாயக விளையாட்டு’ எனும் பல்வேறு நிலைகளில் உண்மையான சனநாயக முறைமையிலான தேர்தல்
நெறிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டன என்பதை மறக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது.
இலாபம்
தேடி கட்சி மாறுதல், கட்சித் தலைமையைப் புறக்கணித்தல் என்பனவும் ‘ஆயா ராம்... காயா
ராம்...’ என்ற சொல் வழக்குபோல இன்று ஒரு கட்சி, நாளை ஒரு கட்சி என்ற நிச்சயமற்ற நிலை.
இம்மாதிரியான தேர்தல்கால அவலங்கள் நம் தேர்தல் முறையினை, தேர்தல் மூலம் தெரிவு செய்யும்
உரிமை பெற்ற குடிமக்களின் மாண்பைச் சீர்குலைப்பன!
தமிழ்நாட்டில் தலைதூக்கும்
அவலங்கள்
ஆங்கிலத்தில்
‘என்ஜினியரிங்’ (Engineering) என்ற சொல் இந்திய அரசியல் சமூகத்தில்
மிகப் பரபரப்பாக இயங்கி வருவதை அறிவோம். இந்தியாவை ஆளும் பா.ச.க. அரசும், வட இந்திய
மாநிலங்களில் சாதியக் கட்டமைப்பை மறுகட்டமைப்பு செய்வதன் மூலம் தனி வாக்கு வங்கியை
அதிகரித்து வருவதைப் பார்க்கிறோம். ‘Social
Engineering’ என்று அழைக்கப்பெறும் இந்த யுக்தி மூலம்
சாதி அமைப்புகள் ஒருங்கிணைதல் அல்லது மீண்டும் வேறு அணி சேரல் என்ற யுக்தியை முன்னெடுத்து,
தன் வாக்கு வங்கியைப் பலமாக்கி விடுவதைப் பார்க்கிறோம்.
தென்னகத்தில்
பாரதிய சனதாவின் இந்த யுக்தி பெரிய அளவிலான வெற்றியைத் தரவில்லை. ஆனால், பாரதிய சனதா
ஆளும் பல மாநிலங்களில் இம்மாதிரி களேபரங்கள் நிகழ்ந்துள்ளன. எடுத்துக்காட்டாக, பா.ச.க.
பெரும்பான்மை பெறாமலேயே ஏனைய கட்சி உறுப்பினர்களுக்கு ஆசை காட்டி ஆட்சியமைத்த கதை கர்நாடகாவில்
நிகழ்ந்தது; புதுதில்லியில் நடந்தது; மராட்டியத்தில் எந்த ஒளிவு மறைவுமின்றி உருவாக்கப்பட்டது;
இப்போது பா.ச.க. அரசு பெரும்பான்மை பெற்று ஆட்சி நடத்தி வருகிறது. ஏற்கெனவே தலைமைப்
பொறுப்பில் இருந்தவர்களுக்கு இரண்டாம் இடம் கிடைத்தது. அவர்கள் சூழ்ச்சியின் பயனை அனுபவித்து
வருகின்றனர். இம்மாதிரியான அரசியல் தகிடு தத்தங்களுக்கு இதுவரை பலியாகாமல் இருந்த தமிழ்நாட்டு
அரசியல் களம் தற்போது சந்தர்ப்பவாத அரசியலுக்குப் பலியாகி வருகிறது.
மதச்சார்பற்றக்
கூட்டணி சார்ந்த கட்சியினர், மதச்சார்பின்மையைக் காக்க முதல்வர் ஜோசப் விஜய்யோடு கூட்டு.
மதச்சார்பின்மைக்கு எதிரான பா.ச.க.வோடு அணி சேர்ந்த அ.தி. மு.க.வை இரண்டாக்கி, ஓரணியைத்
தன் வசம் இழுக்க முதல்வரே ஓடோடிச் செல்லும் நேர்மை! பிளந்து நின்ற இவ்வணி எதிர்பார்த்தது
நடக்கவில்லை எனும்போது, மீண்டும் ஒட்டிக்கொண்டனர். இவர்கள் வாக்களித்த நம்மைப் பற்றி
என்ன நினைப்பர் என்ற நாணமே இவர்களுக்குக் கிடையாதா?
இந்நிகழ்வுகளுக்கெல்லாம்
உச்சமாக, மக்களால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் நால்வர்
பதவியை இராஜினாமா செய்துவிட்டு, படுவேகமாக த.வெ.க.வில் இணைந்துள்ளனர். த.வெ.க.வில்
இவர்கள் இவ்வளவு விரைவாகச் செல்ல காரணம் என்ன? இவர்கள் தம் தொகுதியில் செலவிட்ட நிதியின்
அளவென்ன? தேர்தல் ஆணையம் மூலம் அரசு செய்த செலவு என்ன? இனியொரு தேர்தலை மக்கள் சந்திக்கவேண்டிய அவசியம் என்ன? இவர்களைத்
தெரிவு செய்த குடிமக்களுக்கு இவர்கள் பதில் கூறவேண்டிய கடமையில்லையா?
பதவியை
இராஜினாமா செய்த நொடியில் ஆளும் கட்சியோடு இணைந்த இவர்களின் பதவி பறிக்கப்பெறவேண்டும்.
இனி எந்தத் தேர்தலிலும் பங்குபெறும் வாய்ப்பு மறுக்கப்பெறவேண்டும். இவர்களின் இராஜினாமாவின் பின்னணியை விசாரணைக்கு உட்படுத்தவேண்டும்.
இந்நால்வரும் தேர்தலை, தேர்தல் தந்த சனநாயகத்தை அவமதித்தவர்கள் என்பதே உண்மை.
அறுபது ஆண்டுகளுக்கு முன் மருத்துவர் என்றால் அவரின் கழுத்தைச் சுற்றி இதயத் துடிப்புமானி, மேஜையில் ஜூரமானி, அருகில் கொதிநீரில் ஊசிக் குழலிருக்கும் (syringe) காட்சியை இன்று வாழும் இரண்டாம் உலகப்போர் தலைமுறையினர் நன்கு அறிவர். இன்று நாம் பயன்படுத்தும் எக்ஸ்ரே, இரத்த அழுத்தமானி, எம்.ஆர்.ஐ. போன்ற பல நவீன மருத்துவக் கருவிகள் பெரிய மருத்துவ நிலையங்களில்தான் இருந்தன.
அன்று
மருத்துவச் சிகிச்சை
என்பது வசதி
படைத்தோருக்கும், காலமெடுக்கும்
செயல்முறையுமாயிருந்தது. மருத்துவம்
அனைவருக்குமானதும் துல்லியமும்
துரிதமுமாக மாறியதற்குக்
காரணம், இன்றைய
ஏ.ஐ.
தொழில்நுட்பம் என்பதில்
எவ்விதச் சந்தேகமுமில்லை.
ஒரு தடுப்பு
மருந்தை (vaccine) உருவாக்க, பல
வருடங்கள் எடுப்பது
நடைமுறை. ஆனால்,
2020-இல் உலக
அளவில் தீயாக
உருவெடுத்த ‘கோவிட்-19’
(COVID-19)
நோயை 2021-லேயே கட்டுப்படுத்த
முடிந்ததற்குக் காரணம்
ஏ.ஐ.
தொழில்நுட்பமே என்று
கூறுகிறார் புகழ்பெற்ற
ஏ.ஐ.
விஞ்ஞானி ரே-கர்ஸ்வெல்.
மருத்துவ உலகில்
நாளுக்கு நாள்
புதியவைகளை உருவாக்கும்
ஏ.ஐ.
நம் வாழ்வின்
ஓர் அங்கமாகிவிட்டது.
வரும் நாள்களில்
சிகிச்சைகள், கருவிகள்
மூலம் நோய்களைக்
கண்டறிதல், ஆராய்ச்சி
என்று பல
பிரிவுகளில் ஏ.ஐ.யின் பெரும்
புரட்சியைக் காண
இருக்கிறோம்.
தரவுகளும்
ஏ.ஐ.
விஞ்ஞானமும்
மருத்துவத்துறையில் நோய்
சார்ந்த தரவுகளுக்கான
ஸ்கேன் அறிக்கைகள்,
இரத்தப் பரிசோதனைகள்
மற்றும் மரபணுத்
தகவல்கள் இன்று
மலைபோல் குவிந்துள்ளன.
இத்தரவுகளைப் பயன்படுத்தி
நோயாளிகளுக்கான சிகிச்சை
முறை பாரம்பரிய
அணுகுமுறையில்தான் இருந்தன.
இன்று அனைவருக்கும்
ஒரே மாதிரியான
சிகிச்சை என்ற
பழைய முறையிலிருந்து
விலகி, துல்லிய
மருத்துவம் (Precision
Medicine) எனும் புதிய
சகாப்தத்தை ஏ.ஐ. உருவாக்கியுள்ளது.
ஒரு மருத்துவர்
தன் வாழ்நாளில்
பல்லாயிரக்கணக்கான நோயாளிகளைச்
சந்தித்து, தரவுகள்
மூலம் அறிவதைவிட,
ஏ.ஐ.யின் கற்கும்
இயந்திரம் (Machine
Learning) அல்காரிதம்கள் மூலம்
சில நொடிகளில்
பல கோடித்
தரவுகளை அலசி
ஆராய்ந்து, தேர்ந்த
சிகிச்சை அளிக்க
முடிகிறது.
ஒவ்வொருவரின் மனித
உடலும், மருந்துகளுக்கு
வெவ்வேறு விதமாக
வினைபுரிவது இயல்பு.
இதற்குக் காரணமான
டி.என்.ஏ.யை ஏ.ஐ.யின் இயந்திரச்
சிந்தனை (Deep
Learning) தொழில்நுட்பம் ஆய்வு
செய்து, ‘எதிர்காலத்தில்
என்ன என்ன
நோய் வர
வாய்ப்புள்ளது?’ என்பதை
முன்கூட்டியே கணிக்கவும்,
அதற்கான மருத்துவம்
அளிக்கவும் முடிகிறது.
இன்று பெருவாரியான
மனிதரைத் தாக்கும்
நோய்களான இதயநோய்,
புற்று, நீரிழிவு,
நுரையீரல் தொற்று,
மறதி நோய்
போன்றவைகளை ஆரம்பநிலையில்
கண்டறிய, உயிர்ச்சேதங்கள் - செலவீனங்களைத் தவிர்க்க
ஏ.ஐ.
தொழில்நுட்பம் பெரிதும்
உதவுகிறது.
பரம்பரை
நோய்கள் - ஏ.ஐ.
மரபணு வரிசைப்படுத்தல்
(sequence) என்பது ஓர்
உயிரினத்தின் (organism) அனைத்துப்
பரம்பரைச் செல்
வகையை முறைப்படி
அறிதல். ஓர்
ஆய்வின்படி, மரபணு
வரிசைப் படுத்தலும்
ஏ.ஐ.யும் இணைந்து
இப்போது ஒரு
குழந்தையின் ஜீன்
(gene) சம்பந்த நோய்களை
24 மணி நேரத்திற்குள்
அறிந்து, தகுந்த
சிகிச்சை அளிப்பது
மருத்துவத் துறையின் புரட்சியாகக்
கருதப்படுகிறது.
மரபணு (Gene)
தரவுகளிலிருந்து ஏ.ஐ. முறையில் நூறு
மடங்கு துரிதமாகவும்
துல்லியமாகவும் ஆய்ந்தறியலாம்
என்பதால், உலகளாவிய
‘ஜெனோம் நிறுவனங்கள்’
(Global genomic
firms), ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் இந்த
ஆராய்ச்சியை மேற்கொள்ள
முற்படுவதாகவும் கூறப்படுகிறது.
ஏ.ஐ.யும்
மரபணுத்தொகையும் (Genome)
மரபணு (Gene)
என்பது மனித
வாரிசின் (hereditary) குறியீடு
ஜெனடிக்ஸ் (Genetics)
என்பது ஜீன்,
அதன் வேறுபாடு
பற்றி ஆராயும்
உயிரியல் பிரிவு.
ஜெனடிக்ஸ் ஆராய்ச்சிக்கு
ஒரு செல்லில்
அடங்கியுள்ள டி.என்.ஏ.க்களின்
(DNA) தொகுப்பான ஜெனோம்
தரவுகள் உதவுகின்றன.
‘ஜெனோமிக்ஸ்’ Genomics) என்பது
மனிதர்களின் ஜீன்கள்,
அவற்றின் தொடர்பு,
சுற்றுச்சூழலோடு இணக்கம்
என்பதன் ஆய்வு.
இன்று ஏ.ஐ., ஜெனோமிக்ஸ், விஞ்ஞானம்
இரண்டும் இணைந்து
செயல்படுதல் இந்நூற்றாண்டின்
மிகப்பெரிய மாற்றத்தின்
தொடக்கமாகக் கருதப்படுகிறது.
இதனால் உலகளவில்
மருத்துவ ஆராய்ச்சி,
சுகாதாரம், வேளாண்மை,
சமுதாயம் என்று
பல திசைகளில்
வியக்கும்படியான மாற்றங்கள்
ஏற்படலாம் என்றும்
எதிர்பார்க்கப்படுகிறது.
ChatGPT போன்ற பேசும்
இயந்திர மாடல்
(LLMs) உரையை வாசிப்பதைப்
போலவே, மரபணு
குறியீடுகளையும் வாசிக்கக்கூடிய
ஒரு ஏ.ஐ. கருவியை ஒரேகான்
பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். மரபணுவை
ஸ்கேன் செய்யும்
இந்த முதல்
கணினி மாடல்,
மரபணு சோடிகளின்
காலத்தைப் பின்னோக்கி
ஆய்ந்து, ‘பொதுவான
மூதாதையர் யார்?’
என்பதைக் கண்டறிய
உதவுதல், இது
வரை மறந்துவிட்ட
வரலாற்றுப் புதையல்களைத்
தோண்டும் கருவியாக
இருக்கும் என்று
கருதப்படுகிறது.
மருத்துவத்துறையில்
ஏ.ஐ.
(AI in Medicine)
மருத்துவத்துறையில் நோயாளிக்குச்
சரியான மருந்தைக்
கொடுப்பது அடிப்படை.
இன்று உலகில்
பாரம்பரிய நோய்கள்
மட்டுமன்றி, புதிய
நோய்களுக்குப் பஞ்சமில்லை
என்ற நாள்களில்
வாழ்கிறோம். பாரம்பரிய
முறையில் ஒரு
புதிய மூலக்கூறைக்
(Molecule) கண்டுபிடித்து,
அது நோய்க்கு
எதிராகச் செயல்படுமா?
எனச் சோதித்து
மருந்தினைக் கண்டறிய
எடுக்கும் கால
அளவும் (human hours),
அதற்கான செலவும்
எவ்வளவு என்று
கணக்கிட முடியாத
சூழலில் ஒரு
மிகப்பெரிய புரட்சியை
ஏ.ஐ.
ஏற்படுத்தி வருகிறது.
ஆயிரக்கணக்கான மூலக்கூறுகளை
நொடிகளில் பகுப்பாய்வு
செய்து, எது
சிறந்த பலனைத்
தரும் என்று
ஏ.ஐ.
மூலம் அறியப்படுகிறது.
உதாரணமாக, 2001-ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவில்
உருவெடுத்த ‘எபோலா’
என்ற பெருந்தொற்று
நோயைக் குணப்படுத்த
ஏற்கெனவே பயன்பாட்டிலிருந்த மருந்துகளில் எது
இந்நோய்க்கு எதிராகச்
செயல்படும் என்பதை
ஏ.ஐ.
மிகக் குறுகிய
காலத்தில் கண்டறிந்து
தொடக்கத்திலேயே கட்டுப்படுத்தியதை எடுத்துக்காட்டாகக் கூறப்படுகிறது.
மருத்துவர்களின் அறிவாற்றலோடு,
ஏ.ஐ.-யின் வேகமும்
சேரும்போது, எதிர்காலத்தில்
குணப்படுத்த முடியாத
பல நோய்களுக்குக்
குறைந்த விலையில்
மருந்துகள் கிடைக்கவும்,
மனிதர்களைப் போன்றே
சிந்தித்து மிகக்
குறைந்த நேரத்தில்
தரவுகளைப் பகுப்பாய்வு
செய்யும் ஏ.ஐ. மருத்துவத்துறையின் வலது
கரமாக விளங்கும்
என்று உணரப்படுகிறது.
ஏ.ஐ.
கொண்டு இயங்கும்
ரோபோ தானியங்கி
முறைகள் அறுவை
சிகிச்சை, நோய்
கண்டறிதல், நோயாளிகளைக்
கண்காணித்தல் (patient monitoring)
என்று பல
பிரிவுகளில் செயலாற்றத்
தொடங்கிவிட்டன. மருத்துவரே
100% தன்
கட்டுப்பாட்டில் இயக்கும்
ரோபோ சிகிச்சை
‘டா வின்சி
அறுவை சிகிச்சை
முறை’ (Da
Vinci surgical system) எனப்படுகிறது.
மருத்துவர்கள் மிகத்
துல்லியமாக அறுவை
சிகிச்சை மேற்கொள்ள
உதவும் இம்முறை,
ஏ.ஐ.யின் இயந்திரச்
சிந்தனை தொழில்நுட்பத்தினால் செயல்படுகிறது. நோயாளிகளின்
பழைய மற்றும்
கிடைக்கும் அன்றாடத்
தரவுகளைக் கொண்டு,
முன்கணிப்பின் மூலம்
சிகிச்சையின் போக்கை
அறியவும் உயர்தர
ஏ.ஐ.
சாதனங்கள் மூலம்
சிகிச்சை பெறுபவரைத்
தொடர்ந்து 24 மணி நேரமும் ஓய்வின்றித்
தொடர்ந்து கண்காணிக்கவும்
துணையாயிருப்பது இதன்
தனிச்சிறப்பு.
ரேடியோலாஜி (Radiology),
இதயம் சம்பந்த
நோய்கள், புற்று
சம்பந்த நோய்கள்
(oncology), கதிர்வீச்சு சிகிச்சை
(Radiation therapy), எம்.ஆர்.ஐ. ஸ்கேன் (MRI using DL models), தீவிரச் சிகிச்சை (ICU Care) என்று பல
மருத்துவப் பிரிவுகளில்
ஏ.ஐ.யின் பங்களிப்பைச்
கூறிக்கொண்டே போகலாம்.
மேற்கூறிய தொழில்நுட்பங்கள் இன்னும் பல
அரிய சாதனைகளைப்
புரியவிருக்கின்றன. இதனால்
பயனடைய நம்மைத்
தயார்படுத்திக் கொள்வோம்.