வெள்ளையடிக்கப்படாத சுவற்றில் ஒற்றைக் கீறலோடிருந்த அந்த முகக் கண்ணாடியில், தன் முகம் பார்த்துத் தலைவாரிக் கொண்டு அவசரம் அவசரமாக வெளியே கிளம்பினான் சத்யா. ‘டேய்! கொஞ்சம் சாப்பிட்டுட்டுப் போகலாம்ல’ என்ற தன் தாயின் பேச்சைக் காதில் வாங்கிக்கொள்ளாமல், ‘வந்து சாப்பிடுறேன்மா’ என்று மட்டும் சொல்லிக்கொண்டு போனான்.
அந்த
வீட்டில் என்னவோ எல்லாருடைய முகமும் ஏதோ சோகத்தைப் பிரதிபலித்துக்கொண்டே இருந்தன. சத்யாவுக்குச் சிறுவயதிலிருந்தே பைக் ஓட்டப் பிடிக்கும். வீட்டுச்சுவர் முழுவதும் ரேஸ் பைக்குகளின் கதாநாயகர்கள் சிரித்த முகத்தோடு இருப்பது போன்றே புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருக்கும். சிறு வயது முதலே சிறுகச் சிறுக பைக் வாங்க வேண்டுமென்பதற்காகவே உண்டியலில் சேமித்தும் வந்தான். பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் பைக் வாங்கித் தரவேண்டும் என்று முன்கூட்டியே வீட்டில் சொல்லி வைத்திருந்தான்.
சத்யாவின்
குடும்பம் அப்போது பைக் வாங்கிக் கொடுக்கும் நிலையில் இல்லை. ஆம்னி பஸ் ஓட்டுநராக இருந்த அவனுடைய அப்பா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கோர விபத்துக்குப் பிறகு வீட்டிற்குள்ளேயே முடங்கிப்போனார். கால்களில் முறிவு ஏற்பட்டது. அவருடைய முகம் சிதைந்திருந்தது. எனவே, எப்போதும் ‘மாஸ்க்’ அணிந்திருப்பார். வெளியில் முகம் காட்டவே வெட்கப்பட்டார். அதன் பிறகு வீட்டிலேயே பெட்டிக்கடை ஒன்றை வைத்துக் கொண்டு அன்றாட வாழ்க்கையை நகர்த்தி வந்தார். அவர் அழுவதையும் சிரிப்பதையும் யாரும் கண்டதில்லை. அந்த விபத்திற்குப் பிறகு சத்யாவின் பைக் கனவும் தடைபட்டது. அதன் பிறகு ‘பைக் வாங்கித் தாங்க’ என்று அவன் தன் பெற்றோரிடம் கேட்டதே இல்லை. ஆனாலும், அவனுக்குப் புதிய பைக் வாங்கணும் என்ற ஏக்கம் இருந்தது. மதுரை அருளானந்தர் கல்லூரியில் பி.எஸ்.சி.
பிசிக்கல் சயின்ஸ் படித்து வருகிறான்.
சத்யாவின்
குடும்பத்திலிருந்த ஒரே நம்பிக்கை சாந்தி அக்காதான். ‘கவலைப்படாத உனக்கு நான் ஒருநாள் பைக் வாங்கித்தரேன். கொஞ்சம் பொறுத்துக்கோ’ என்று
தன் தம்பியை அவ்வப்போது தேற்றுவாள் சாந்தி. கல்லூரிப்படிப்பை முடித்திருந்த சாந்திக்கு நிறைய படிக்க வேண்டுமென்று ஆசைதான். ஆனால், வறுமையின் காரணத்தினால் அவளால் மேற்படிப்பிற்குச் செல்ல முடியவில்லை. அருகிலிருந்த டோல்கேட் ஒன்றில் இரண்டு ஆண்டுகளாக ஆபிஸ் கிளர்க்காகப் பணிசெய்து வருகிறாள்.
‘உனக்குப் பிடித்த பைக்க வாங்கிக்கோ. மீதி காச மாதந்தோறும் கொஞ்சம் கொஞ்சமா கட்டலாம்’
என்று ஒருநாள் தான் சொன்னபடியே தன் தம்பி சத்யாவை அழைத்து அவன் கையில் ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தைத் திணித்தாள் சாந்தி. ‘எதுக்குமா பைக்கெல்லாம்? அவனுக்குப் பிறகு வாங்கிக் கொடுக்கலாம். உன் கல்யாணத்துக்குக் கொஞ்சம் சேர்த்துவைச்சா நகை நட்டு வாங்க உதவுமுல?’ தாய் எவ்வளவுதான் சொல்லிப் பார்த்தாலும் சாந்தி கேட்கவில்லை.
அந்தப்
பணத்தைத் தன் கையில் பெற்றுக்கொண்ட சத்யா அப்படியே தன் அக்காவை இறுக அணைத்துக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதான். ‘வீடு
இருக்குற நிலையில் இவனுக்கு இது தேவையா?’ தன் மனைவியிடம் சொல்லிக் கவலைப்பட்டார் சத்யாவின் அப்பா. இருவரின் முகமும் வேதனையில் ஆழ்ந்திருந்தது.
‘ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமா காலையிலேயே சாப்பிடாம போனவன இன்னும் காணலியே. உன் தம்பிக்கு ஒரு போன் போட்டுக் கேளு சாந்தி’ என்று சொல்லிக்கொண்டு சோறு வடிக்கத் தயாரானாள் சத்யாவின் தாய். வீட்டிற்கு வெளியே பட்டாசு சத்தம்; பெருங்கூட்டம். சத்யாவின் நண்பர்கள் புடைசூழ புதிய வண்டி வாசலிலேயே வந்து நின்றது. தன் பெற்றோரிடம் முதலில் காட்டவேண்டும் என்பதனால் மூடப்பட்ட நிலையிலேயே இருந்தது அது.
அக்கம்
பக்கத்து வீட்டார் கண்கள் அனைத்தும் வண்டி மேலேயே வேரூன்றிருந்தன. ‘டேய்! சத்யா வண்டி வாங்கிட்ட? கலக்கு மச்சான்’ பக்கத்து வீட்டு நண்பன் வாழ்த்து சொன்னான்.
சத்யாவின்
முகத்தில் பிரமிப்பு இருந்தது. தான் எதையோ சாதித்ததாக நினைத்தான். தன் பெற்றோரையும், தன் அக்கா சாந்தியையும் அருகில் வரவழைத்து மூடப்பட்டிருந்த துணியைத் தூக்கியெறிந்து வண்டியை அவர்களிடம் காட்டினான். நண்பர்கள் கைதட்ட, பட்டாசு காகித மலர் சொரிய, அந்த நிகழ்வே தடாலடி கொண்டாட்டமாக இருந்தது. எல்லாருக்கும் ஆச்சரியம் என்னவென்றால், அது அவனுக்கான உயர்ரக பைக் இல்லை. தன் தந்தைக்காக அவன் பிரத்யேகமாகச் செய்துபெற்ற நான்கு சக்கர பைக்.
‘அப்பா! இந்தப் பைக்கை அக்காவின் பணத்தை வைத்தும், என் சேமிப்பையும் போட்டு வாங்கினேன். என்னைவிட உங்களுக்குத்தான் இப்போ இது தேவைப்படுகிறது’ என்று
சொல்லி கண்ணீர் வடித்தான் சத்யா. தன் தம்பியின் செயலை நினைத்து சாந்தி அவன் தோளைத்தட்டி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்.
கண்களைத்
துடைத்துக்கொண்டு ‘அப்பா! ஒரு ரவுண்டு ஓட்டிப்பாருங்க. வாங்க’ என்று சொல்லி தன் அப்பாவை அழைத்தான் சத்யா. தன் மாஸ்கை கழற்றியெறிந்து விட்டு தன் முகச்சிரிப்பைத் தன் மகனுக்கு அன்று அவர் பரிசளித்தார். இதற்காகவே இத்தனை ஆண்டுகள் தவமிருந்ததாக உணர்ந்தது அக்குடும்பம். முகம் ஆயிரம் பேசும் என்றாலும், அன்று மட்டும் அங்கிருந்தவர்களின் ஒவ்வொரு முகமும் ஒன்றையே பேசியது. அது மகிழ்ச்சி!
தொடர்பாடல்
(communication) என்பதே உணர்வுகளை, எண்ணங்களை, தகவல்களைப் பகிர்ந்துகொள்வதுதான். ஆயினும், நம் எண்ணங்களையும் உணர்வுகளையும் நூறு விழுக்காடு நம்மால் பிறருக்குக் கடத்தமுடிகிறதா என்றால், அது இல்லை. எனவேதான் தகவல் தொடர்புக்கு, சொல் தொடர்பாடலும் (verbal communication), சொல்லில்லாத் தொடர்பாடலும் (non verbal communi cation) மிக
முக்கியம்.
வளர்ந்து
வரும் இந்த டிஜிட்டல் உலகிலே பிறரோடு பேசுவதற்குப் பதிலாக, குறுஞ்செய்திகளைப் புலனம் (whats app) வழியாகவோ, எஸ்.எம்.எஸ். வழியாகவோ அனுப்புகிறோம். ஆனால், இது நாம் நினைப்பதை அல்லது உணர்வதைச் சரியாக எடுத்துரைப்பதில்லை. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக இன்று பலரும் பயன்படுத்துகின்ற ஒன்றுதான் ‘ஈமோஜிகள்’
(Emojis). தமிழில்
இதனை ‘உணர் சின்னங்கள்’ என்றும்
சொல்லலாம் (இது என் கண்டுபிடிப்பு). எனினும், இங்கு நமது புரிதலுக்கு வேண்டி ‘ஈமோஜிகள்’
என்ற வார்த்தையையே பயன்படுத்துகிறேன்.
பொன்னிற
முகம், சிவந்த கன்னங்கள், முகம் முழுக்க இதயம், அதோடு ஓர் அழகிய சிரிப்பு. காதலைத் தெரிவிக்க, சோகத்தைக் காண்பிக்க, அதிருப்தியை வெளிப்படுத்த என்று ஏராளமான ஈமோஜிகளை நாம் பயன்படுத்துகிறோம். இப்போதெல்லாம் ஈமோஜிகளைப் பிசினஸ் உலகிலும் பலர் மார்கெட்டிங்காகப் பயன்படுத்துகின்றனர்.
ஸ்காட்
இ. பால்மேன் என்பவர் எண்பதுகளில் முதன் முதலில் ‘ஈமோடிகான்ஸ்’ (Emotiocons – Emotions+icon) என்ற பெயரில்
ஈமோஜிகளை வடிவமைத்துத் தன் மின்னணுத் தகவல் தொடர்பிற்குப் பயன்படுத்தியிருக்கிறார். தற்போது நாம் பயன்படுத்துகின்ற ஈமோஜிகள் ‘ஷிகேடகா குரிட்டா’
என்னும் ஜப்பானைச் சேர்ந்தவரால் முதன்முதலில் 2001-ஆம் ஆண்டில் பயன்படுத்தப்பட்டது.
‘Emoji’ என்பதற்கு
ஜப்பானிய மொழியில் ‘E’ என்றால்
படங்கள், ‘moji’ என்றால் எழுத்துருக்கள் என்று பொருள். ஓர் ஆய்வின் அடிப்படையில் இன்று 74 விழுக்காடு அமெரிக்கர்கள் தாங்கள் அனுப்பும் குறுஞ்செய்திகளில் ஈமோஜிகளைப் பயன்படுத்துகின்றார்கள். இன்று சமூக ஊடகங்களிலும், அன்றாட மெசேஜ்களிலும் ஈமோஜிகள் பயன்படுத்தப்படாத குறுஞ்செய்திகள் இல்லை என்றே கூறவேண்டும்.
எல்லாவற்றையும்
வேகமாகவும் சுருக்கமாகவும் கூறவிரும்பும் இத்தலைமுறையினர் குறுஞ்செய்திகளிலும் ஈமோஜிகளிலும் மட்டுமே தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றனர். இதனால் சொல்ல விரும்பும் செய்தி சரியாகப் புரிந்துகொள்ளப்படாத சூழல், மொழிவளம் குன்றுகின்ற நிலை, செய்தியின் தீவிரத்தன்மையை அறிந்திராது கடந்துபோகின்ற போக்கு என்று ஏராளமான தகவல் தொடர்பு இரைச்சல்களை உருவாக்கக்கூடும்.
சக
மனிதர்களிடம் முகமுகமாகப் பேசி, சிரித்து, அழுது, கோபித்து, வெட்கி, உறவாடி மகிழ்வது தொடர்பாடலின் உன்னத நிலையே. இவ்வுணர்வினை எந்த ஈமோஜிக்களாலோ ஸ்டிக்கர்களாலோ கொடுக்கமுடியாது என்பதே உண்மை. (தொடரும்)
1606-இல் இயேசு சபை போர்த்துக்கீசியத் துறவிகளால் அடித்தளமிடப்பட்ட மதுரை மிஷனிலிருந்து உருவான மதுரை உயர்மறைமாவட்டத்தின் ஏழாவது பேராயராகப் பொறுப்பேற்கும் மேதகு ஆயர் அந்தோனிசாமி சவரிமுத்து அவர்களைப் பேராயராகப் பெறுவதில் மதுரை திரு அவை அகமகிழ்கின்றது.
திருவிவிலியத்தில்
7-ஆம் எண் எப்போதும் நிறைவைக் குறிக்கின்றது. அத்தகைய நிறைவோடு, எழுச்சிமிகு புதிய பேராயர் உள்ளே வரட்டும்! வாயில்கள் திறக்கட்டும்! தொன்மைமிகு கதவுகள் உயர்ந்து நிற்கட்டும்! மாட்சிமிகு பேராயர் உள்ளே நுழையட்டும்! (திபா 24:9).
மாட்சிமிகு
பேராயர்கள் மேதகு லெயோனார்டு, மேதகு ஜஸ்டின் திரவியம், மேதகு கஷ்மிர் ஞானாதிக்கம், மேதகு மரியானுஸ் ஆரோக்கியசாமி, மேதகு பீட்டர் பெர்னாண்டோ மற்றும் மேதகு அந்தோனி பாப்புசாமி ஆகிய பேராயர்கள் வழிநடத்திய மதுரைத் திரு அவையின் மந்தையை, இயேசுவின் பெயரால் கரம்பிடித்து வழிநடத்த புதியதொரு பேராயர் மதுரைக்குக்
கிடைத்திருப்பது கடவுளின் திட்டம்!
செயற்கைத்
தொழில்நுட்பம் எல்லா நிலைகளிலும் ஊடுருவும் ஒரு சவாலான காலகட்டத்தில், யூபிலி ஆண்டில் எல்லா நம்பிக்கையாளர்களும்-மறைமாவட்டக் குருக்கள், துறவறத்தார், பொதுநிலையினர் பங்குபெறும் கூட்டொருங்கியக்கத் திரு அவையில் தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் பேராயரின் மேய்ப்புப்பணிகளுக்கு மாமதுரைக் களம் தன்னையே வழங்குகின்றது.
1960-இல் பாளையங்கோட்டை
மறைமாவட்டம் வண்டானத்தில், அமல அன்னையின் திருவிழா அன்று ஆயர் பிறந்ததே ஓர் அதிசயம்தான்! தன்னுடைய திரு அவைச் சட்ட முனைவர் பட்டப் படிப்பை பாரிஸில் முடித்துவிட்டு, பல்வேறு நிலைகளில் தமிழ்நாடு மற்றும் இந்தியத் திரு அவை அளவில் அருள்பணி புரிந்து, 2025, ஆகஸ்டில் இத்தொன்மை வாய்ந்த மதுரை மண்ணில் ஆயர் பொறுப்பேற்றிருப்பது பெருமைக்குரியதே!
அகில
இந்தியத் திரு அவைச் சட்ட வல்லுநர்கள் குழாமின் செயற்குழு உறுப்பினர்களாக இருமுறை ஆயரும், நானும் தேர்வு செய்யப்பட்டுப் பணியாற்றிய காலத்தில் நான் கண்ட ஆயரின் மேன்மைகளையும், அவருக்கு மதுரைத் திரு அவையின் வாழ்த்துகளையும் பதிவு செய்கின்றேன்.
ஆயர் செபவாழ்வு:
ஆயர் பணியைக் கிறிஸ்துவின் மனநிலையில் புரிய முதலில் ஒரு குரு கிறிஸ்துவோடு எப்போதும் இணைந்திருக்க வேண்டும் (யோவா 15:4). இதை நன்கு உணர்ந்து, அதிகாலை 5 மணிக்கே எழுந்து நடைப்பயிற்சியோடு, ஆண்டவரைப் புகழ்ந்து, ஒரு செபமாலை முழுவதுமாகச் செபித்து, உடலையும் மனத்தையும் ஆன்மாவையும் தூய்மையாகப் பாதுகாத்துக் கொள்ளும் (2திமோ 1:6) ஒரு பேராயர் இவர்.
சீரிய சிந்தனை,
போதனையாளர்:
ஆயர் மேய்ப்புப்பணிப் பளு அதிகமிருந்தாலும், மறைமாவட்டச் செய்திமடலில் ஆயருரையையும் கூட்டங்களில் கருத்துரையையும் மறையுரையையும் தானே எழுதி, போதிக்கும் பணியை ஆற்றுபவர் (மாற் 16:15) இவர். திரு
அவைச் சட்டம் பற்றிய நுணுக்கங்களை எடுத்துக் கூறுவதிலும், அதன்படி பங்கில் குருக்கள் சந்திக்கும் மேய்ப்புப்பணி கேள்விகளுக்குச் சரியான விளக்கம் தருவதிலும் மக்களை ஞானத்துடன் வழிநடத்துவதிலும் (சீராக் 44:4) கூர்மதியுடைய அறிஞர் இவர்.
நட்பு: புதிய பேராயர் அவர்கள் மகிழ்ச்சியான, ஆற்றல் பெற்ற, நட்பை வளர்க்கின்ற ஒரு நல்ல குரு. குருத்துவத் தோழமையின், நட்பின் இலக்கணம். அகில இந்தியத் திரு அவைக் கூட்டமைப்பில் பொறுப்பில்
இருந்தபோது ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்பு மீண்டும் கூட்டத்திற்கு ஆயராக வந்தபோதும் அதே நட்புடன், வாஞ்சையுடன் எல்லாரிடமும் பழகியவர். தன்னிடம் படித்த அருள்பணியாளர்கள் பிற மறைமாவட்டங்களிலிருந்து ஆயரை அழைக்கின்றபோது இசைந்து, அந்த குருக்கள் அன்புறவுக்கு முக்கியத்துவம் தரும் ஆயர் இவர் (யோவா 15:15).
எளிமை: ஆயருக்குரிய எவ்வித அதிகாரத் தோரணையையோ அல்லது தேவையற்ற வசதிகளையோ இவர் விரும்புவதில்லை. பேச்சிலும் உறவிலும் எளிமையானவர் (லூக் 2:7).
நிர்வாக நேர்மை-உற்சாகம்:
தன் குரு குழாமிடம் நேர்மையுடனும் உண்மையுடனும் கண்டிப்புடனும் இருந்து வழிநடத்துபவர் (2திமோ 2:24-25). தொலைநோக்குச் சிந்தனையுடன் எல்லாவற்றையும் ஆராய்ந்து, உண்மையைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்கக்கூடிய ஒரு கூர்மதி உடைய ஓர் ஆயர் இவர். மேய்ப்புப்பணியில் வரும் சிக்கல்களுக்குத் திரு அவைச் சட்டத்தின் பின்புலத்தில் சரியான முடிவுகள்
தருபவர்.
திரு அவை
அன்பு:
தன் ஆயர் குழாமோடு நட்பையும் நல்லுறவையும் நாளும் வளர்த்து, திரு அவையின் மேல் கொண்டிருக்கின்ற தன்னுடைய பற்றைச் சொல்லாலும் செயலாலும் வெளிப்படுத்துகின்ற ஆயர் இவர்.
கூட்டொருங்கியக்கத்
திரு
அவை
ஆயர்:
அவரவருக்குரிய அருள்பணி
அலுவல்களைப் பகிர்ந்து கொடுத்து, எல்லாரிடமும் கருத்துக் கேட்டு, இறுதியாக நற்செய்தியின் ஒளியில், தீர்க்கமான முடிவெடுக்கின்ற ஓர் ஆயராக இருப்பதை இந்தத் தொடக்கக் காலத்திலேயே நான் பார்க்கிறேன். ஆயர்
மாமன்ற வழிகாட்டுதலின்படி இந்த யூபிலி ஆண்டில், மதுரை உயர்மறைமாவட்டம் முழுவதையும் அறிந்து, அடுத்த பத்தாண்டுகளுக்கான மேய்ப்புப்பணித் திட்டத்தைத் தயாரித்து, எல்லா நம்பிக்கையாளர்களையும் ஒன்றுபடுத்தி, எல்லாரையும்
கிறிஸ்துவின் அன்பில் இணைத்து, மதுரைத் தலத்திரு அவையை வழிநடத்த வாழ்த்துகின்றோம்.
அரிய
பெரிய மறைப்பணியாளர்களும், மூத்த குருக்களும், பெரும் பேராயர்களும் வழிநடத்திய மதுரைத் திரு அவையானது, இன்று மகிழ்ச்சியுடன் ஏழாவது பேராயர் அவர்களை வரவேற்கிறது. பேராயரோடு சேர்ந்து இந்த மதுரைத் திரு அவையை, ஆண்டவர் இயேசுவின் வழியில் கட்டியெழுப்ப மதுரைத் திரு அவை அருள்பணியாளர்கள் குழாம் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறது.
மதுரை மறைத்தளம் தன்னில் மங்கலத் திலகம் கண்ட நாள் 2025, ஜூலை 5. பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயரும், எமது மதுரை உயர்மறை மாவட்டத்தின் திருத்தூது நிர்வாகியாகக் கடந்த எட்டு மாதங்களாகப் பணியாற்றி வருபவருமான மேதகு ஆயர் முனைவர் அந்தோனிசாமி சவரிமுத்து அவர்களை மதுரை உயர்மறைமாவட்டத்தின் ஏழாவது பேராயராக, திருத்தந்தை லியோ அவர்கள் நியமித்த மகிழ்ச்சியான தருணம் அது. மாமதுரை மறைப்பணித்தளம் பேருவகை கொண்ட நன்னாள் அது!
இறையருளும்
அருள்வளமும் ஆழமான நம்பிக்கையும் கொண்ட மறைப்பணித்தளம் மதுரை உயர்மறைமாவட்டம். சேசு சபையாரின் மறைப்பணித்தளமாகப் பண்படுத்தப்பட்டு, விதையிடப்பட்டு, நம்பிக்கையின் விளைச்சலை மிகுதியாகக் கண்ட புண்ணிய பூமி இது.
தமிழ்
மரபு, சமய வழிபாடு, அரசாட்சி, வணிகம், ஆன்மிகம்... என நீளும் மதுரைக்கான
வரலாற்றுச் சிறப்பில், கிறித்தவத்தின் பங்களிப்புத் தவிர்க்க முடியாதது. சாதி, மத, இன வேறுபாடு இன்றி,
அனைவருக்குமான கல்வி, பொருளாதாரம், மருத்துவம், சமூக மேம்பாடு எனப் பல்வேறு தளங்களில் பன்முக வளர்ச்சியை இம்மண்ணில் முன்னெடுத்தது கிறித்தவம்.
மறைப்பணியில்
ஆழமாக வேரூன்றி இம்மண்ணின் குறியீடாக, அடையாளமாக, முகவரியாக இருப்பவர் இராபர்ட் தெ நொபிலி எனும்
சேசு சபை மறைப்பணியாளர். அதன் நீட்சியாக இன்றும் மதுரை மண்ணின் அடையாளமாக இருப்பது நொபிலி மறைப்பணி நிலையம். அன்றும் இன்றும் ‘நொபிலி’ மதுரை உயர்மறைமாவட்டத்தின் அருள்பணிகளை ஒருங்கிணைக்கும், பணிக்குழுக்களை வழிநடத்தும் தளமாக, குறியீடாக அறியப்படுகிறது. நொபிலி மறைப்பணித்தளத்தின் இயக்குநர் என்ற முறையில் பேராயர் வளாகத்தில் பணிகளை முன்னெடுக்கும் சூழலில் பேராயரோடும், பேராயர் இல்லத்தில் பணிபுரியும் சக குருக்களோடும் நெருங்கி
உறவாடும் வாய்ப்புக் கிட்டுவதால், பல கருத்துகளைப் பெறவும்,
திட்டங்களைத் தீட்டவும் முன்னெடுப்புகளைப் பகிர்ந்துகொள்ளவும் பெரும் வாய்ப்பாக அமைகிறது.
அதன்
அடிப்படையில், கடந்த எட்டு மாதங்களாக உயர்மறைமாவட்டத்தின் திருத்தூது நிர்வாகியாகப் பணியாற்றிய மேதகு ஆயர் அந்தோனிசாமி அவர்களுடன் பணித்திட்டங்கள் சார்பாகவும், மேய்ப்புப் பணி சார்ந்த பல நிர்வாகக் காரணங்களுக்காகவும்,
மேய்ப்புப்பணி நிலையம் முன்னெடுக்கும் பல விழாக்களுக்காகவும் அவரைச் சந்திக்க
வாய்ப்புக் கிட்டியபோதெல்லாம் அவருடைய கருத்துப் பரிமாற்றத்தையும் அறிவுக்கூர்மையையும் தெளிவான ஞானச் சிந்தனைகளையும், திரு அவைச் சட்டம் குறித்த கூர்மையான விளக்கங்களையும், அன்பும் கண்டிப்பும் நிறைந்த நிர்வாகத் திறனையும், மனம் திறந்த கலந்துரையாடலையும், பிறரின் கருத்துக்குச் செவி கொடுக்கும் நல்லெண்ணத்தையும், தீர்க்கமான முடிவெடுக்கும் தன்மையையும் கண்டு வியந்து நின்றேன்!
ஆலமரம்போல
விருட்சம் கொண்டு, பன்முகத் தன்மையில் சிறந்த ஆளுமையாய் விளங்கும் எம் திருத்தூது நிர்வாகியே, எமது உயர்மறைமாவட்டத்தின் பேராயராக நியமனம் பெற்றிருப்பது எமக்குக் கிடைத்த பெரும்பேறு!
தனது
சொந்த மறைமாவட்டமான பாளையங்கோட்டை மறைமாவட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டு காலம் மேய்ப்புப்பணியில் புடமிடப்பட்டவர் இவர். தொய்வில்லாது தீவிர ஈடுபாட்டுடன் மேற்கொண்ட பல்வேறு பணிகளால் மறைமாவட்டம் மலர்ந்து உயர்ந்திருப்பது இவரது நிர்வாகத்தின் தனிச் சிறப்பினைப் பறைசாற்றுகிறது.
இவரது
ஆயர் பணியின் நீட்சியாகப் பணி உயர்வு பெற்று, மதுரை உயர்மறைமாவட்டத்தின் பேராயராகப் பணிப்பொறுப்பேற்பது இவரது ஆளுமைப் பண்பின் கூறுகளை இன்னும் இம்மண்ணில் விரவிடச்செய்யும்.
‘அஞ்சாதே, நம்பிக்கையோடு மட்டும் இரும்’
(லூக் 8:50) என்னும் விருதுவாக்கோடு ஆயர் பணியேற்ற எம் புதிய பேராயர், அதே விருதுவாக்கில் இன்னும் ஆழமாக வேருன்றி, இம்மறைத்தளத்தில் தூய ஆவியாரின் துணைகொண்டு துணிவோடும் தெளிவோடும் பல பணிகளை முன்னெடுக்க
வாழ்த்துகிறோம்!
“என் ஆடுகளைப் பேணிவளர்”
(யோவா 21: 17) என பேதுருவுக்கு உயிர்த்த
நம் ஆண்டவர் இயேசு விடுத்த அழைப்பினைப்போல, ஆண்டவர் விடுத்திருக்கும் இந்த அழைப்பினை ஏற்று, மதுரை உயர்மறைமாவட்டத்தின் பேராயராகப் பொறுப்பேற்கும் எம் புதிய பேராயர் ஆடுகளை அரவணைத்துச் சென்று, மந்தையை மாண்புடன் வழிநடத்தவும், மந்தைக்குரிய மாண்பினைப் பேணவும் முன்னெடுக்கும் அனைத்துப் பணிகளுக்கும் துணை இருப்பதையும், செபத்தில் நினைவுகூருவதையும் உறுதியளிக்கிறோம்!
மதுரை உயர்மறைமாவட்டப்
புதிய பேராயர் மேதகு முனைவர் அந்தோனிசாமி சவரிமுத்து அவர்களுடன் ஒரு நேர்காணல்!
• அன்புப் பேராயர் அவர்களே! முதலாவதாக, தமிழ்நாடு திரு அவையின் தனிப்பெரும் வார இதழான ‘நம் வாழ்வு’ வார இதழின் நிர்வாகத்தினர், வாசகர்கள் சார்பாக உங்களுக்கு எங்களுடைய வாழ்த்துகளையும் செபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்! மதுரை உயர்மறைமாவட்டத்தின் பேராயராகத் திருத்தந்தையால் தாங்கள் நியமிக்கப்பட்டது குறித்துத் தங்களுக்கு ஏற்பட்ட உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்...
“உணர்வுகள் என்று சொல்லும்போது, தொடக்கத்தில் ஒரு குழப்ப நிலையாகத்தான் இருந்தது. அதாவது, மதுரை உயர்மறைமாவட்டத் திருத்தூது நிர்வாகியாகப் பொறுப்பேற்க வேண்டும் என்று திருத்தந்தையின் இந்தியத் தூதர் தொலைப்பேசியில் தொடர்புகொண்டபோது, ‘இது தற்காலிகமானது’ என்றுதான்
குறிப்பிட்டார். ஆகவே, மகிழ்வோடு அதை ஏற்றுக்கொண்டேன். ஆனால், தற்போது மீண்டுமாகத் தொலைப்பேசியில் இந்த நியமனம் குறித்துத் தொடர்பு கொண்டபோது நான் வியப்படைந்தேன்! இது நான் எதிர்பார்க்காத ஒன்று. என்னுடைய பணிகள் திருமுழுக்கு யோவானுடைய பணிகளைப் போன்று வரவிருக்கும் பேராயருக்கான வழியை ஆயத்தம் செய்யும், தயாரிப்புப் பணியாகத்தான் நான் முதலிலே இதை ஏற்றுக்கொண்டேன். அதில் நான் தெளிவாகவும் இருந்தேன். மதுரை உயர்மறைமாவட்ட அருள்பணியாளர்களிடமும் இச் செய்தியை நான் முன்பே தெளிவாகப் பகிர்ந்துகொண்டேன். ஆனால், அங்கேயே பேராயராக நியமனம் பெறும்போது எனக்கு அது பெரும் வியப்பாகத்தான் இருந்தது. ‘முன்பு தற்காலிகமான பணி என்றுதானே குறிப்பிட்டீர்கள்’ என்று
திருத்தந்தையின் இந்தியத் தூதரிடம் வினவியபோது, ‘இது திருத்தந்தையின் ஆணை’ என்று கூறினார். ஆகவே, அதனை வியப்போடு ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒரு சூழலாகத்தான் அமைந்தது.”
• கடந்த எட்டு
மாதங்களாக
மதுரை
உயர்மறைமாவட்டத்தின்
திருத்தூது
நிர்வாகியாகப்
பணியாற்றிய
அனுபவங்கள்
பற்றி
சில
வார்த்தைகள்...
“அது ஒரு நல்ல அனுபவமாகத்தான் அமைந்தது. மதுரையில் குருத்துவக் கல்லூரியில் அதிபராகப் பணியாற்றிய காலங்களில் மதுரையைப் பற்றி அறிவேன். ஆனால், மதுரை உயர்மறைமாவட்டக் குருக்கள், சிறப்பாக நிர்வாகப் பணிகளை அதிகமாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. தற்போது அங்கு நியமனம் பெற்றபோது இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்வதற்கு வாய்ப்பாக அமைந்தது. குருக்கள் அனைவரும் பாசமாக இருந்தார்கள்; நல்ல ஒத்துழைப்புத் தந்தார்கள். சில பிரச்சினைகள் இருந்தன; அதில் தீர்வு காணவேண்டும் என்பதில் எல்லாருமே ஆர்வமாக இருந்தார்கள். மேலும், அவர்கள் மத்தியிலே ஒரு ‘நீதி உணர்வு’ இருந்ததை என்னால் காண முடிந்தது. அதாவது, ‘நமது மறைமாவட்டம் நன்றாக இருக்கவேண்டும்’ என்ற
ஓர் உணர்வு அவர்களிடத்திலே மேலோங்கியிருந்தது. நான் அவ்வப்போது அங்குச் சென்றாலும், பணிகள் சற்றுக் கடினமாக அமைந்தாலும், மகிழ்வாக மன
நிறைவாகத்தான் இருந்தது. பணிகள்
அத்தகைய மகிழ்வைத் தருவதற்கு குருக்களே காரணமாக அமைந்தார்கள்.”
• பாளை மறைமாவட்டத்தின்
ஆயராக
ஆற்றிய
பணிகளை
நன்றியோடு
நினைவுகூரும்
நீங்கள்,
பேராயராகப்
பணி
உயர்வு
பெறும்
இவ்வேளையில்,
பாளையங்கோட்டை இறைச்சமூகத்திற்குத் தாங்கள்
விடுக்கும்
செய்தி...
“பாளையங்கோட்டை மறைமாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகள், 8 மாதங்களாகப் பணியாற்றி இருக்கிறேன். அது பெரும் மகிழ்ச்சியான அனுபவம். அது என்னுடைய சொந்த மறைமாவட்டம். அதே மறைமாவட்டத்தில் குருவாக இருந்தேன்; பின்பு முதன்மைக் குருவாகப் பணியாற்றினேன். ஆகவே, பங்குகளை எல்லாம் நன்கு அறிவேன். அருள்பணியாளர்களை நன்கு அறிவேன். எனவே, பெரும் மகிழ்வோடு பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. அது கடவுள் எனக்குக் கொடுத்த ஒரு கொடையாகவே பார்க்கிறேன். அது ஓர் இறைப்பணி. இந்தக் காலச்சூழலில் அப்பணியை மேற்கொள்ள இறைவன் எனக்குக் கொடுத்த ஒரு வாய்ப்பு. பாளையங்கோட்டை மறைமாவட்டத்தின் முதல் ஆயர் மேதகு இருதயராஜ் அவர்கள் தொடக்கக் காலத்திலிருந்தே மிகச் சிறப்பாகப் பணிகளை மேற்கொண்டிருந்தார்கள். அதன்பிறகு வந்த மேதகு ஆயர் ஜூடு பால்ராஜ் அவர்கள் இன்னும் அடுத்தத் தளத்திற்குச் சிறப்பாக எடுத்துச் சென்றார்கள். அவர்களைத் தொடர்ந்து நான் கடந்த 5 ஆண்டுகள், 8 மாதங்கள் இந்தப் பணிகளைத் திறம்படச் செய்ய இறைவன் எனக்கு ஒரு வாய்ப்பைத் தந்திருந்தார். அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், இறைமக்கள் என யாவரும் இணைந்து
மேற்கொண்ட பல பணிகள் குறிப்பிடத்தக்கவை.
அனைவருடைய நல்ல ஒத்துழைப்பும் நிறைவான அன்பும் கிடைக்கப் பெற்றேன். ஆகவே, பணிகள் மேம்பட வாய்ப்புக் கிட்டியது. அத்தகைய பணிகளைத் தொடர்ந்து இம்மண்ணிலே நிகழ்த்த வேண்டும் என நான் இறைவனை
வேண்டுகிறேன். என்னை மிகவும் நேசித்த, பணிக்கு ஒத்துழைப்பு நல்கிய பாளை மறைமாவட்ட அருள்பணியாளர்களுக்கும் இருபால் துறவியருக்கும் இறைமக்களுக்கும் எனது நன்றியையும் செபங்களையும் உரித்தாக்கிக் கொள்கிறேன். நான் மேற்கொண்டிருக்கும் இந்தப் புதிய பணிக்காகவும், மதுரை உயர்மறைமாவட்டப் பணித்தளத்தில் பணிகள் திறம்பட அமைந்திடவும் எனக்காக வேண்டிக்கொள்ள அன்போடு வேண்டுகிறேன்.”
• தொடக்கக் காலத்தில்
தமிழ்நாட்டின்
மறைபரப்புப்
பணியின்
மையத்தளமாக
விளங்கிய
மதுரை
மறைத்தளத்தில்
இனிவரும்
காலங்களில்
தாங்கள்
முன்னெடுக்கவிருக்கும்
இறையாட்சிப்
பணிகளைப்
பற்றி
உங்களுடைய
கருத்துகளைப்
பகிர்ந்து
கொள்ளுங்களேன்...
“மதுரை உயர்மறைமாவட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு பணித்தளம். தென் தமிழ்நாட்டின் மறைமாவட்டங்களிலேயே தொன்மையானது திருச்சி என்று கூறினாலும், சேசு சபை குருக்களால் உருவாக்கப்பட்ட இந்த மதுரை மறைபரப்புப் பணித்தளம்தான் தென்னகப் பகுதியில் முதல் மறைபரப்புப் பணித்தளமாக விளங்கியது. இன்று உருவாகியிருக்கும் அத்தனை மறைமாவட்டங்களும் இவர்களுடைய மறைபரப்புப் பணியின் விளைச்சல் என்றே கூற வேண்டும். ஆகவே, சேசு சபையாரின் பணிகள் இங்கு அளப்பரிய பணிகள். மேலை நாடுகளிலிருந்து வந்த பல சேசு சபையார்
இங்குப் பணியாற்றினாலும் இராபர்ட் தெ நொபிலி, அருளானந்தர்,
கான்ஸ்டன்டைன் பெஸ்கி எனப்படும் வீரமாமுனிவர் ஆகியோரின் பணிகள் இங்குக் குறிப்பிடத்தக்கவை. தமிழ் கலாச்சாரத்தை, பண்பாட்டை உள்வாங்கிய இறையாட்சிப் பணிகளை அவர்கள் மேற்கொண்டார்கள். மக்களுடைய வாழ்வோடு தங்களுடைய பணி வாழ்வை இணைத்துக்கொண்டார்கள். பிற மதத்தவரோடும் நல்லுறவு கொண்டவர்களாக அடையாளப்படுத்தப்பட்டார்கள்.
அவர்களின் சமூக, ஆன்மிக, கலாச்சார, தமிழ்ப் பண்பாட்டு வளர்ச்சிப் பணிகள் மகத்தானவை. இத்தகைய கூறுகளால்தான் கிறித்தவ மதிப்பீடுகளை அவர்களால் எளிதாக எல்லாத் தளங்களுக்கும் எடுத்துச் செல்ல முடிந்தது.
ஆனால்,
இன்றைய காலச்சூழலில் நேரடியாக மறைபரப்புப் பணி என்பது சவால் நிறைந்தது. ஆனால், மறைபரப்புப் பணிக்காக அழைக்கப்பட்ட நாம் ஒவ்வொருவருமே நம்முடைய முன்னோர்களின் மறைப்பணிக் கட்டமைப்புகளை உள்வாங்கி மீண்டும் மொழி, கலாச்சாரம், பண்பாட்டுக் கூறுகள் வயிலாகக் கிறித்தவ மதிப்பீடுகளை எடுத்துச் செல்லக்கூடிய வழிமுறைகளைக் காணவேண்டும். மற்ற மதத்தவரோடு உரையாடல் மேற்கொள்ள வேண்டும் என்பதும் எனது ஆவலாக இருக்கிறது. மேலும், சேசு சபை மறைப்பணியாளர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவராக நான் பார்ப்பது புனித அருளானந்தர். அவர் இவ்வுயர் மறைமாவட்டத்தின் பாதுகாவலர். அவருடைய மறைப்பணி செயல்பாடு என்பது ‘தியாகம்’ நிறைந்ததாகப் பார்க்கப்படுகிறது. இறையரசு மதிப்பீடுகளுக்காகத் தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்தவர்; மறைச்சாட்சியானவர். அத்தகைய தியாக மனப்பான்மை இன்றைய மறைபரப்புப் பணியாளர்களாகிய நம் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் மலரவேண்டும் என ஆசைப்படுகிறேன். அத்தகைய எண்ணத்தில்
மறைபரப்புப் பணியை மேற்கொள்கின்றபோது, பலரையும் நம்மை நோக்கி ஈர்க்க முடியும் என்று உளமார நம்புகிறேன்.”
• கலை, இலக்கியம்,
தொன்மையான
கலாச்சாரம்,
உலகறியும்
தமிழர்
பண்பாடு,
மதநல்லிணக்கம்
எனப்
பெருமைகொள்ளும்
மதுரை
மண்ணுக்கான
‘பல்சமய
உறவை’ மேம்படுத்தத் தாங்கள்
கொண்டிருக்கும்
கனவுகள்...
“நீங்கள் குறிப்பிட்டதுபோல, இந்த மதுரை மறைப்பணித்தளம் பல்சமய உரையாடலுக்கு மிகவும் பெயர் பெற்றது. சேசு சபை மறைப்பணியாளர்கள் காலந்தொட்டு இன்றுவரை, இங்கு மதநல்லிணக்கம் என்பது பலராலும் வரவேற்கத்தக்கதாகவும் பாராட்டத்தக்கதாகவும் இருக்கிறது. பல்வேறு மறைத்தளங்களுக்கு எடுத்துக்காட்டான ஒரு செயல்பாடாக இங்கு அது பார்க்கப்படுகிறது. அப்பணிகள் தொடரவேண்டும் என்பதும் என்னுடைய விருப்பம். மதத்தைக் கடந்து மக்களின் வாழ்வாதார மேம்பாடு, மனிதநேயம், மனித உரிமைகள் எனப் பல தளங்களில் மக்களுக்கான
அடிப்படைக் கூறுகளைப் பெறுவதற்கு இன்று நல் மனம் கொண்டோர் மதத்தைக் கடந்து மனிதநேயத்தில் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. ஆகவே, மதநல்லிணக்கம் என்பது பெயரளவில் இல்லாமல், உறவாலும் உணர்வாலும் ஒன்றிக்கக்கூடிய வலுவான ஒரு கூட்டமைப்பாக அது மலர வேண்டும் என்பது எனது கனவாக இருக்கிறது. ஒவ்வொரு மதத்திலும் இருக்கக்கூடிய வளமான கூறுகளை, தன்மைகளைப் பகிர்ந்துகொள்ளக்கூடிய ஒரு புரிதலை மற்ற மதத் தலைவர்களோடு இணைந்து பயணிக்கக் கூடிய ஒரு சமூகத்தைப் படைக்க வேண்டும் என்பதும் எனது விருப்பமாக இருக்கிறது. அத்தகைய உறவு, பல சமூகப் பணிகளுக்கு
வழிகாட்டும் என்பதால் அதை முன்னெடுக்க மனதார விருப்பம் கொண்டிருக்கிறேன். மதுரை மண்ணுக்கான இந்தப் பல்சமயக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் என்னைச் சந்தித்தார்கள். அது மிகவும் மகிழ்ச்சிக்குரிய தருணமாக இருந்தது. அவர்களிடமும் நான் இதை வலியுறுத்தியிருக்கிறேன். ‘இணைந்து பயணிப்போம்; சேர்ந்து பல பணிகளை முன்னெடுப்போம்’ என
உறுதி அளித்திருக்கிறேன். மக்களின் மாண்பு காக்கப்பட நாம் ஒன்றிணைய வேண்டும் என அவர்களிடத்திலே வலியுறுத்தியிருக்கிறேன்.”
• ஆன்மிகம் செழிக்கும்
மதுரை
மறைத்தளத்தில்
பொருளாதாரத்தில்
பின்தங்கிய
குடும்பங்கள்,
பிற்படுத்தப்பட்ட,
மிகவும்
பிற்படுத்தப்பட்ட
இலக்கு
மக்களின்
மேம்பாட்டுக்கான
தங்களின்
செயல்திட்டங்களைப்
பற்றிக்
குறிப்பிடுங்களேன்...
“இது இன்று எல்லாப் பணித்தளங்களிலும் நாம் சந்திக்கக்கூடிய ஒரு பெரும் சவால். அவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுப்பது மட்டுமல்ல, அந்த நம்பிக்கை செயல் வடிவம் பெறக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதிலே நான் உறுதியாக இருக்கிறேன். திருத்தூதர் யாக்கோபு குறிப்பிடுவதுபோல, ‘செயல்
இல்லாத நம்பிக்கை செத்ததாகிப் போய்விடும்.’ இவ்வேளையில் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் வெளிக்கொணர்ந்த ‘கடவுள் அன்பாக இருக்கிறார்’ என்னும்
திருத்தூது மடலில் அவர் குறிப்பிடுவதை நினைவுகூர்கிறேன். அதாவது, ‘நாம் ஆண்டவரை அன்பு செய்கிறோம் என்றால், பிறரை அன்பு செய்யாமல், தேவையில் இருப்போருக்கு உதவி செய்யாமல் நம்மால் இருக்க முடியாது’
என்று குறிப்பிடுவார். ஆகவே, தேவையில் இருப்பவருக்கு உதவி என்பது நம்முடைய கிறித்தவ அடிப்படைப் பண்பாகிறது. இப்பணியை மதுரை உயர்மறைமாவட்டத்தில் மேற்கொள்ள தமிழ்நாடு ஆயர் பேரவை முன்னெடுத்திருக்கும் சமூக-பொருளாதாரக் கணக்கீட்டுத் தரவுகள் கிடைக்கின்றபோது மக்களுடைய வாழ்வாதாரம், அடிப்படைத் தேவை, எதிர்காலத் திட்டம் என்பவை எல்லாம் தெளிவுபடுத்தப்பட்டு மறைமாவட்ட மேய்ப்புப்பணி சார்ந்த அமைப்புகள், பல்நோக்குச் சமூக மன்றம், மற்றப் பணிக்குழுக்கள் ஒத்துழைப்போடு கல்விப் பணி, சமூக மேம்பாட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படும் என்பதையும் நான் இவ்வேளையில் குறிப்பிட விரும்புகிறேன். அடிப்படையில் அனைத்துப் பணிகளும் எல்லாரையும் சமூகத்திலே மாண்புமிக்கவர்களாக உயர்த்தவேண்டும் என்பதுதான் எனது அடிப்படை நோக்கமாக இருக்கிறது.”
• யூபிலி 2025-ஆம்
ஆண்டில்
பயணிக்கும்
நாம்,
‘கூட்டொருங்கியக்கத்
திரு
அவையாக’ மலர மதுரை
இறைச்சமூகத்திற்குத்
தாங்கள்
விடுக்கும்
அழைப்பு
என்ன?
“மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் காலத்தின் தேவை அறிந்து திரு அவையின் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுவதற்குத் தந்த ஓர் அற்புதமான அடித்தளம் இந்த யூபிலி-2025 கொண்டாட்டம். இதன் மையச்சிந்தனையாக ‘எதிர்நோக்கின் திருப்பயணிகளாக... கூட்டொருங்கியக்கத் திரு அவையாகப் பயணிப்போம்’ என்று
வலியுறுத்தினார்கள். அதன் அடிப்படையில் கூடிய இந்த மாமன்றம் ஆவணங்களை வெளிக்கொணரக் கூடிய மன்றமாக அல்லாமல், செயல்திட்டங்களை முன்னெடுக்கக்கூடிய ஒரு சிறப்பு மாமன்றமாக அமைந்தது. அதன் செயல்திட்டங்களாகக் குறிப்பிடத்தக்க வகையில், திரு அவையில் எல்லாரையும் மதிக்கவேண்டும், எல்லாரிடமும் உறவாட வேண்டும், எல்லாருடைய கருத்தையும் கேட்டுப்பெற வேண்டும் என்பன அடிப்படையான கூறுகளாக வலியுறுத்தப்பட்டிருக்கின்றன.
இந்த வழிமுறையில் குருக்கள், துறவறத்தார், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் ஒன்றிணைந்து தூய ஆவியின் தூண்டுதலைப் பெற்று, மறைமாவட்ட அமைப்புகள் மூலம் சிறப்பான பணிகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறார். ஆகவே, அதன்
அடிப்படையில் ஒன்றாக இணைந்து, ஆன்மிகத்தில் வளர்ந்து பல திட்டங்களை உயர்மறைமாவட்டத்தின்
வளர்ச்சிக்காக மேற்கொள்ள அனைவரும் இணைந்து பயணிக்க விரும்புகிறேன்.
இதன்
நீட்சியாக, செயல்திட்டமாக ஏற்கெனவே மறைமாவட்டங்களில், பங்குத்தளங்களில் இருக்கின்ற அமைப்புகளை வலுப்படுத்தவேண்டும். நமது புதிய திருத்தந்தை லியோ அவர்கள் திருத்தந்தை பிரான்சிசின் வழிநின்று ‘திரு அவை புனிதர்களின் கூடாரம் அல்ல; பாவிகளின் மருத்துவமனை’ என்று
குறிப்பிடுகிறார். அதாவது, எல்லாரையும் உள்ளடக்கிய, இயேசு குறிப்பிட்டதுபோல ‘நீதிமான்களை அல்ல, பாவிகளையே தேடி வந்தேன்’ என்னும் சிந்தனையில் யாவரையும் உள்ளடக்கிய திரு அவையை உருவாக்க எல்லாரும் இணைந்து செயல்பட அழைக்கிறேன்.”
• பொன்விழா காணும்
‘நம்
வாழ்வு’ வார இதழின்
வாசகர்களுக்குத்
தங்களுடைய
செய்தி....
“நம் வாழ்வு வார இதழ் பொன்விழா காண்பது ஒரு மகிழ்ச்சியான தருணமாக இருக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற பொன்விழாக் கொண்டாட்டத்தில் நானும் கலந்து கொண்டது மட்டற்ற மகிழ்ச்சி தருகிறது. இன்றைய காலச்சூழலில் தொலைத்தொடர்பு அல்லது ஊடகத் தொடர்பு என்பது தவிர்க்க முடியாதது. இன்னும் குறிப்பாக, எண்ணிமத் தொழில்நுட்பத்தில் இன்று ஒருவரை ஒருவர் தொடர்புகொள்ள அவசியமானதாக ஊடகம் பார்க்கப்படுகிறது. அந்தக் கோணத்தில் ‘நம் வாழ்வு’ வார இதழ் அப்பணிகளைத் திறம்பட மேற்கொண்டு வருவது மிகவும் பாராட்டத்தக்கது. குறிப்பாக, ‘நம் வாழ்வு’ வார இதழில் அண்மைக் காலங்களில் வெளிவரும் ஆசிரியர் பக்க கட்டுரை, மற்ற அரசியல்-சமூக விழிப்புணர்வுக் கட்டுரைகள், ஆன்மிகக் கட்டுரைகள் யாவும் மிகச் சிறப்பாக இருப்பது பாராட்டுதற்குரியது. ஆன்மிகத்தை மையம் கொண்ட நமது வாழ்வானது, காலச்சூழலுக்கு ஏற்ப சமூக-அரசியல் தளத்தில் நாம் தெளிவுபெற வேண்டும் என்ற ஒற்றை இலக்கை முன்வைத்து, படைப்புகள் வெளிவருவது பாராட்டுதற்குரியது. உளவியல், தன்னம்பிக்கை கட்டுரைகள், மரியன்னை பக்திமுயற்சி, திருவழிபாட்டுக் குறிப்புகள், மறையுரை, உலகளாவிய திரு அவைச் செய்திகள் எனப் பல மலர்கள் கோர்த்த
பூமாலையாக ‘கதம்பமாக’
இம்மலர் மணம் வீசுவது உண்மையிலேயே பாராட்டத்தக்கது.
ஒரு
சிறு இதழாக இருந்தாலும், பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவது வியப்பளிக்கிறது. இதற்கான உங்கள் பணிகள் குறிப்பிடத்தக்கவை. இப்பணியைத் திறம்பட மேற்கொண்டிருக்கும் முதன்மை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர் குழு உறுப்பினர்களை மனதாரப் பாராட்டுகிறேன். இது இன்னுமாக வளர வேண்டும்; பல்வேறு மக்களுடைய கரங்களிலும் குடும்பங்களிலும் இது தவழ வேண்டும்.
தற்போது
‘Namvazhvu
E-news paper’ வெளிக்கொணர
இருப்பதற்கு எனது வாழ்த்துகள்! இது இன்று காலத்தின் தேவையாகவே பார்க்கிறேன். இளையோர் மற்றும் எண்ணிமத் தொழில்நுட்பத்தில் பயணிக்கும் யாவரையும் நாம் சென்றடைய இந்த முயற்சி பயனளிக்கும் என நம்புகிறேன். உங்களுடைய
பணி தொடர வாழ்த்துகிறேன்.
தமிழ்நாடு
கத்தோலிக்க இறைமக்கள் இவ்விதழுக்குப் பேராதரவு நல்குவதோடு, இதனுடைய வளர்ச்சியில் நீங்களும் பங்களிப்புச் செய்ய அன்போடு வேண்டுகிறேன். எல்லாருடைய கரங்களிலும் இவ்விதழ் தவழவேண்டும்; வாசிப்பு மலர வேண்டும்; புதிய சமூகம் புலரவேண்டும்! என ஆசிக்கிறேன்.”
•
இறுதியாக,
பேராயர்
அவர்களே!
மதுரை
உயர்மறைமாவட்டத்தில்
தங்களின்
பணி
சிறக்க
மீண்டும்
‘நம்
வாழ்வு’ தனது வாழ்த்துகளையும்
செபங்களையும்
உரித்தாக்குகிறது.
தமிழுக்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும் சமய நல்லிணக்கத்திற்கும் நலிந்தோர் சேவைக்கும் பெயர் பெற்றுத் திகழும் ஒப்புயர்வற்ற மறைத்தளம் மதுரை உயர்மறைமாவட்டம். ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட மறைப்பணி வரலாறு கொண்ட இத்தளம், சேசு சபையின் நிறுவுநர் புனித இலொயோலா இஞ்ஞாசியாரின் அன்புத் தோழர் புனித பிரான்சிஸ் சவேரியார் கோவாவிலும், தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளிலும் நற்செய்தி அறிவித்துச் சென்ற சூழலில், தென் தமிழ்நாட்டின் மையப்பகுதிகளில் மதுரையை மையமாகக் கொண்டு தமிழ் வளர்த்த மறைப்பணியாளர்களைக் கண்ட மங்காத மறைத்தளம் இது.
தமிழுக்குத்
தொண்டாற்றி தமிழ் முனிவராகவே வாழ்ந்து தேம்பாவணி காப்பியம் படைத்த வீரமாமுனிவர், தமிழ் உரைநடையின் தந்தை என்று அழைக்கப்பட்ட ‘தத்துவ போதகர்’ அருள்பணியாளர் இராபர்ட் தெ நொபிலி, இராமநாதபுரம்
மறவ நாட்டில் மறைச்சாட்சியாய் மரித்த அருளானந்தர், புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்த திரிங்கால் சாமிகள், கழுகேர்கடையில் வேதசாட்சியாக இன்னுயிர் தந்து, ‘வேதபோதகர்’
என அன்போடு அழைக்கப்படும் அருள்பணி. அகஸ்டின் கப்பலி, பாம்பன்-மண்டபம்-வேதாலை கடற்கரைப் பகுதிகளில் மறை வளர்த்து, சேசு சபையாரின் முதல் மறைச்சாட்சியான அருள்பணி. அந்தோணி கிரிமினாலி, இறைஊழியர் தந்தை லெவே சுவாமிகள்... எனத் தொடர்ந்த சேசு சபையாரின் மறைப்பணித் தொண்டு இன்றும் கல்வி, சமூக, ஆன்மிகத் தளங்களில் ஆழம் கொண்டு மக்களை நம்பிக்கையில் வளர்த்து வருவது நன்றியோடு நினைவுகூரத்தக்கது. இயேசு சபையாரின் மறைப்பணியால் அன்று மதுரை மறைத்தளம் புதிய வடிவம் பெற்றது என்றால் அது மிகையல்ல.
ஏறக்குறைய
80 ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கப்பட்ட மதுரை உயர்மறைமாவட்டம், இதுவரை ஆறு பேராயர்களைக் கண்டிருக்கிறது. அன்றைய ஒருங்கிணைந்த மதுரை உயர்மறைமாவட்டத்தின் எல்லையானது வடக்கில் மேலூர் முதல், தெற்கில் வள்ளியூர் வரையிலும் கிழக்கில் இராமேஸ்வரம் தீவு முதல் மேற்கில் கொடைக்கானல் மலை வரைக்கும் பரந்து விரிந்திருந்தது.
இந்த
உயர்மறைமாவட்டத்தின் முதல் பேராயராகப் பொறுப்பேற்ற பேராயர் ஜான்பீட்டர் லியோனார்டு அவர்கள், எல்லாப் பங்குத்தளங்களிலும், எல்லாப் பெரிய கிளைப்பங்குகளிலும் ஆரம்பப் பள்ளிகளைத் தொடங்கி இவ்வுயர் மறைமாவட்டத்தின் கல்வி மேம்பாட்டுக்கு வழிகாட்டினார். அந்நாளில் ஆன்மிகம், கல்வி, சமூக, மருத்துவப் பணிகள் என யாவற்றையும் உள்ளடக்கிய
ஒருங்கிணைந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அதுவே பின்னாளில் பல்வேறு பணிகளாகக் கிளைபரப்ப, வளர்ச்சி அடைய அடித்தளமாக அமைந்தன.
உயர்
கல்வியை மனக்கண்முன் கொண்டு, உயர்நிலைப் பள்ளிகள் முதல் கல்லூரி வரையிலான உயர்கல்வியை உயர்மறைமாவட்டம் முழுமைக்கும் கொண்டு வந்து சேர்த்த பெருமை இரண்டாவது பேராயர் ஜஸ்டின் திரவியம் அவர்களையே சாரும்! இவருடைய காலத்தில் பாளையங்கோட்டை, சிவகங்கை, மதுரை என எல்லாப் பணித்தளங்களிலும்
எண்ணற்ற புதிய ஆலயங்கள், பள்ளிக்கூடங்கள், மாணவர் விடுதிகள் கட்டப்பட்டன. இவ்வளர்ச்சி இன்னும் விரிவுபட பாளையங்கோட்டை, சிவகங்கை மறைமாவட்டங்களைப் பிரித்து அதனுடைய முழுமையான வளர்ச்சிக்கு வழிகாட்டியவரும் அவரே!
மூன்றாவது
பேராயராகப் பொறுப்பேற்ற பேராயர் கஸ்மிர் ஞானாதிக்கம் அவர்கள் 20 மாதங்கள் மட்டுமே இங்குப் பணியாற்றி, பிறகு சென்னை - மயிலை உயர்மறைமாவட்டத்தின் பேராயராகப் பணிமாறுதல் பெற்றுச் சென்றார். பேராயரின் பணிக் காலம் மதுரை உயர்மறைமாவட்டத்தில் சிறிது காலமே என்றாலும், மேய்ப்புப்பணியில் பல புதிய தடங்களைப்
பதித்துச் சென்ற பெருமைக்குரியவர்.
நான்காவது
பேராயராகப் பொறுப்பேற்ற பேராயர் மரியானுஸ் ஆரோக்கியசாமி அவர்களின் 17 ஆண்டுகாலப் பணித்திட்டங்கள், செயல்பாடுகள் தமிழ்நாட்டையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தன. தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மதுரை, மற்றொரு தலைநகரம் போலவே சமூக, ஆன்மிக, அரசியல் தளங்களில் பல்சமயத் தலைவர்களின் கூடுகையால், அவர்களின் வீரியமான செயல்பாடுகளால், ‘திருவருட்பேரவை’ போன்ற
அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்ட மக்கள் பணிகளால், மதுரை அன்றாடச் செய்தியில் தவிர்க்க முடியாத நகரமாகவே இருந்தது.
அதன்
பிறகு பத்து ஆண்டுகள் உளவியல் மேதையாக குருக்களையும் மக்களையும் ஆன்மிகத்திலும் சமய நல்லிணக்கத்திலும் வழிநடத்தியவர் மேதகு பேராயர் பீட்டர் பெர்னாண்டோ அவர்கள். பேராயரின் வழிநடத்துதலில் புதிய மறைவட்டங்கள், புதிய பங்குகள், புதிய ஆலயங்கள், பள்ளிக்கூடங்கள் என எண்ணற்றவை உருவாக்கப்பட்டன.
தந்தைக்குரிய கரிசனையும், அதிர்ந்து பேசாத பேராண்மையும், தன்னை எதிர்ப்பவர்களையும் அன்பு செய்யும் பேராற்றலும் பேராயரின் அருள்பணி ஆன்மிகத்திற்கு அழகு சேர்த்தன.
ஆறாவது
பேராயராகப் பொறுப்பேற்ற பேராயர் அந்தோனி பாப்புசாமி அவர்களின் நியமனம் மதுரை உயர்மறைமாவட்ட வரலாற்றில் தனித்துவமானது. துணை ஆயராக நியமிக்கப்பட்ட இவர், இத்தனை ஆண்டுகள் பணிக்குப் பிறகு, திண்டுக்கல்
மறைமாவட்டம் உருவாக்கப்பட்டு அதன் முதல் ஆயராகப் பத்து ஆண்டுகள் திறம்படப் பணியாற்றி, மீண்டும் மதுரை உயர்மறைமாவட்டத்திற்குப் பேராயராகப் பணி நியமனம் பெற்றார். ஏறக்குறைய 10 ஆண்டுகள், நான்கு மாதங்கள் மதுரை உயர்மறைமாவட்டத்தைப் பல்வேறு நிலைகளில் வளர்ச்சிக்கான பல திட்டங்களை முன்னெடுத்தவர்
என்ற பெருமைக்குரியவர்.
ஆழமான
ஆன்மிக அடித்தளம் கொண்ட பேராயர் அவர்கள், மேய்ப்புப்பணித் திட்டங்களைக் கூர்மைப்படுத்துவதிலும், எதிர்வரும் சவால்களைத் துணிவோடு சந்திப்பதிலும் தனித்துவமானவர்.
பேராயரின்
பணி ஓய்விற்குப் பிறகு, இவ்வுயர் மறைமாவட்டத்திற்குக் கிடைத்த மற்றொரு கொடை திருத்தூது நிர்வாகி. பாளையங்கோட்டை மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றி வந்த மேதகு ஆயர் அந்தோனி சவரிமுத்து அவர்கள், கடந்த எட்டு மாதங்களாக இம்மதுரை உயர்மறைமாவட்டத்தின் திருத்தூது நிர்வாகியாகப் பொறுப்பேற்று, களச்சூழலை நன்கு அறிந்து, குருக்களுடன் சிறப்பாகக் கலந்து ஆலோசனை கண்டு, தீர்க்கமான முடிவெடுப்பதில் சிறந்ததொரு நிர்வாகியாகத் தன்னை அடையாளப்படுத்தியதுடன், மறைமாவட்டத்தையும் சிறப்புற வழிநடத்தினார்.
இவருடைய
மேலான பணிகளைக் கண்டு பூரிப்படைந்த இறைவன், “இவரே என் அன்பார்ந்த மகன்; இவரே நான் தேர்ந்துகொண்டவர்” என்ற
இறைவாக்கு மெய்ப்படும் வகையில் இவ்வுயர் மறைமாவட்டத்தின் ஏழாவது ஆயராகத் தந்திருப்பது எமக்கு மட்டற்ற மகிழ்ச்சி தருகிறது.
சிறந்த
ஆசிரியராய், ஆன்மிகத் தந்தையாய், வழிகாட்டியாய், ஆழமான இறைப்பற்றாளராய், இயேசுவின் குருத்துவத்தில் மகிமை கண்டவராய், நல்லாயன் இயேசுவின் வழிகாட்டலில் நல்மேய்ப்பராய் வாழ்ந்து வருவதால் இறைவன் இவரை இன்று இந்த உன்னதப் பணிக்கு உயர்த்தி இருக்கிறார். மதுரை உயர்மறைமாவட்டம் பேருவகையோடு மகிழ்ந்து வரவேற்கிறது!
“அஞ்சாதீர்! நம்பிக்கையோடு மட்டும் இரும்” (லூக் 8: 50) என்பது பேராயரின் ஆயத்துவ விருதுவாக்கு! அச்சம் தவிர்த்து நம்பிக்கையில் ஆழப்படவும், மக்களின் வாழ்க்கையில் அச்சத்தைப் போக்கி நம்பிக்கையில் அவர்களை உறுதிப்படுத்தவும் இவ்விருதுவாக்கை முன்னெடுத்து வருகிறார் நம் பேராயர்.
பேராயரின்
இலட்சினையில் நான்கு அடையாளங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
முதலாவதாக, திருவிவிலியம்! நமது இறைநம்பிக்கையின் அடித்தளமாக இருப்பது திருவிவிலியம். அத்தகைய அடித்தளத்தில் மக்களின் நம்பிக்கையைக் கட்டி எழுப்பவும், அதையே மறைப்பணியின் ஊற்றாகக் கொண்டிருக்கவும் திருவிவிலியத்தின்மீது கட்டப்பட்ட திரு அவையை முன்னெடுக்கவும் வருகிறார் பேராயர்.
இரண்டாவதாக,
பாதுகாப்பான ஒரு கரத்தில் இளைப்பாறும் குழந்தையின் அடையாளம். இறைவன் நம்மைப் பராமரிக்கிறார், பாதுகாக்கிறார், நம்மை அரவணைத்துக்கொள்கிறார், நம் பெயரைத் தம் உள்ளங்கையில் பொறித்து வைத்திருக்கிறார் என்னும் பேருண்மைகளைத் தியானிக்கும் வகையில் இறைவனின் பாதுகாப்பை, பராமரிப்பை நாமனைவரும் பெற்றுக்கொள்கிறோம் என்ற பேருண்மையை எடுத்துக்கூறுகிறது இந்த அடையாளம்.
மூன்றாவதாக,
இடம்பெற்றிருக்கும் நங்கூரம், நமது நம்பிக்கையை உறுதிப்படுத்தும் குறியீடாக முன்வைக்கப்படுகிறது. உறுதியான நம்பிக்கையில் நாம் ஆழமாக வேரூன்றி இருக்கிறோம் என்பதை இது அடையாளப்படுத்துகிறது. வாழ்வின் எதார்த்தச் சூழலில் நாம் சந்திக்கும் துன்ப துயரங்கள், வேதனைகள், போராட்டங்கள் காற்றாக, மழையாக,
புயலாக, அலையாக, பேரிரைச்சலாக நம்மைத் தாக்கினாலும், நம்பிக்கையில் ஆழமாக நாம் வேரூன்றி இருக்கும்போது, எளிதில் நாம் வெற்றிகொள்கிறோம் என்பதை எடுத்துக்கூறுகிறது.
நான்காவதாக,
இடம்பெற்றிருக்கும் லில்லி மலர், பேராயர் அவர்கள் தனது பாதுகாவலர் தூய அந்தோனியாரின்மீது கொண்ட பற்றுதலின் வெளிப்பாடாக தூய அந்தோனியாரின் கரங்களில் இருக்கும் லில்லி மலர்போல, தன் பணியும் வாழ்வும் புனிதம் கொண்டதாக அமைய தன்னையே அர்ப்பணிக்கும் அடையாளமாக முன்வைக்கப்பட்டிருக்கிறது.
தன்னையும், தன்னைச் சார்ந்த இறைச்சமூகத்தையும் இறைவார்த்தையின் அடிப்படையில் நம்பிக்கையில் ஆழமாக வேரூன்றி தூய வாழ்வு வாழ அழைக்கும் பேராயரின் பணிவாழ்வு சிறக்க வாழ்த்துவோம், இறைவேண்டல் செய்வோம் !