மனித வாழ்க்கையின் மூலவேர்களாகவும், பாசத்தின் பாதுகாப்புக் கோட்டையாகவும் இருக்கின்றவர்கள் நம்முடைய தாத்தா-பாட்டிகள். அவர்களின் கைகளில் நாம் பழகிய முதல் நொடிகளில் கதைகள் பிறந்தன. அவர்களின் வார்த்தைகளில் முதன் முதலாய் அறிவு பிறந்தது. மூத்தோர் நாள் என்பது அவர்களுடைய பங்கு, பாசம் மற்றும் பண்பாட்டுக்குரிய பாராட்டுகளை நன்றியுடன் நினைவூட்டும் ஒரு சிறப்பு நாள். இந்நாளில், அவர்கள் இல்லாமல் இவ்வுலகம் எவ்வளவு வெறுமையாக இருக்கின்றது என்பதை நினைத்துப் பார்க்க அழைக்கின்ற தருணம்.
இல்லம்
என்பது கோவில். அதில் முதியோர், பெரியோர், இளையோர், சிறுவர் எனப் பலரும் இணைந்து இருக்கின்றபொழுது அது ஒரு குடும்பமாக அமைகின்றது, கோவிலாக இருக்கின்றது. ஆனால், எங்கே நம்முடைய முதியோர்கள்? எங்கே நம்முடைய தாத்தா-பாட்டிகள்? முதியோர் இல்லத்திலும், மூன்று மகன்களின் இல்லத்திலும் மாதம் ஒரு முறை இருக்கும் சூழலை நினைத்துப் பார்க்கின்ற தருணம் இது.
“முந்தையத் தலைமுறையின் ஆசிர்வாதம், எதிர்காலத்தின் நம்பிக்கையின் விதைகள்!” என்று திருத்தந்தை 14-ஆம் லியோ தாத்தா-பாட்டிகள் பற்றித் தன்னுடைய செய்தி மடலில் கூறுகின்றார். மேலும்,
வாழ்வின் நீண்ட பயணத்தைக் கடந்து, அனுபவங்களின் ஒளியில் ஒளிரும் தாத்தா-பாட்டி என்பவர்கள், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு தூணாக இருக்கின்றனர். நம் மனத்தில் நிறைந்து இருக்கும் பாடல்கள், பழமொழிகள், செபங்கள் மற்றும் பழக்கவழக்கங்கள்... இவைகளெல்லாம் அவர்களால்தான் பசுமையாக இன்று இருக்கிறது.
உலக
தாத்தா-பாட்டிகள் தினம், நம் மூத்தத் தலைமுறையின் பங்களிப்புகளுக்கு நன்றி செலுத்தும் ஓர் அரிய நாள். இவ்விதமான ஒரு நாளில், நாம் அவர்களைப் பாராட்டுவதே இல்லை. நம் உள்ளத்தை அவர்களிடம் செலுத்தி, அவர்கள் சிரிப்பிலும் அமைதியிலும் இறைவனைக்
காணும் ஆசிர்வாதமாக உணர்வதற்கான ஓர் அழைப்பாக இது இருக்கிறது என்றும் திருத்தந்தை தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
“தாத்தா பாட்டியின் செபம் ஓர் இல்லத்தின் பாதுகாப்புச் சுவராகும்.”
“பழமை என்பது பாழ்மை அல்ல; அது நம்மை வழிநடத்தும் ஒளி.”
“வயது கூடினாலும், நம்பிக்கை புதிதாகிறது. அவர்கள் நமக்கான செபக்கதவுகள்!”
பெரியவர்கள்
வீட்டின் கதவுகள் போல. வெளியே புயல் இருந்தாலும், உள்ளே நிம்மதி இருக்கிறது. அவர்களின் வாழ்வில் இருந்த கற்றல்களும் தியாகங்களும், நம் தலைமுறைக்குத் தேவையான ஒளிக்கீற்று. இன்று நாம் நம் தாத்தா-பாட்டிக்கு அருகில் போகவேண்டும், அவர்களின் கைகளைப் பிடித்து, நம் வாழ்க்கையின் ஒரு சிறு பகுதியை அவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். இது ஒரு கடமை அல்ல; இது ஒரு கருணைப்பூர்வமான அழகு. நம் குழந்தைகள், நம் பேரன்கள் இந்த மரபைத் தொடர, இப்போதைய நம் நடத்தைதான் அவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும். பெரியவர்கள் நமக்கு ஓர் ஆசிர்வாதம், வாழும் நம்பிக்கையின் சின்னங்கள்!
“வயது என்பதெல்லாம் எண்கள் மட்டும்; உள்ளத்தில் அன்பு நிறைந்திருந்தால் வாழ்வு அழகு!”
“தாத்தா-பாட்டியின் புன்னகையில் தேவனின் முகம் தெரிகிறது!”
“அவர்களின் நாள்கள் சிரமமானவையாக இருந்தாலும், அவர்களின் நினைவுகள் சீரானவை!”
தாத்தாவும்-பாட்டியும் இல்லாத வீடு, சத்தம் இல்லாத கோவில்போல் இருக்கும். அவர்களின் பரிசுத்தமான அன்பும், அனுபவங்களின் வெளிச்சமும் நம்மை வழிநடத்துகிறது. மூத்தோர் தினம் ஒரு நாளாக மட்டுமல்ல; அவர்கள் வாழ்வில் ஒவ்வொரு நாளும் நம் அன்பையும் கவனத்தையும் வழங்கும் ஒருவிதமான கடமை. அவர்களுக்கு நன்றி கூறுவதும், அவர்களைக் கொண்டாடுவதும் நம் சமூகப் பண்பாடுகளுக்குப் பெருமை சேர்க்கும். அன்பும் மதிப்பும் சேர்க்கும் இந்த நாள், நம் மூத்தோர்களுக்கான புகழின் நாளாக நிலைக்கட்டும்!
பேருந்து நிறுத்தத்தில் காத்துக்கிடந்தார் ஆவுடையப்பன் தாத்தா. ஒரு நாளுக்குக் காலை-மாலையென்று சோமனூருக்கு இரண்டு பேருந்துகள்தான். காலை ஒன்பது மணிக்கெல்லாம் வரவேண்டிய வண்டி இன்னும் வரவில்லை. காலையிலேயே களத்துல பறிச்ச தக்காளிகளை ஒரு கோணிப்பையில் கட்டி சூலூர்ல போய் விற்று வரவேண்டி நின்றுகொண்டிருந்தார் ஆவுடையப்பன் தாத்தா. பத்தரை மணிக்கெல்லாம் சூலூர் சந்தைக்குச் சரக்கை கொண்டுபோனாதான் தக்காளி வியாபாரமாகும்.
நேரம்
ஆக ஆக ஆவுடையப்பன் தாத்தாவிற்கு
ஏதோபோலிருந்தது. “தாத்தா! வரும்போது சிவப்பு கலர்ல பெரிய பலூன் ஒண்ணு வாங்கிட்டு வாங்கோ”
- வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது தன் பேரன் சொன்னது ஞாபகம் வந்தது.
“என்ன பெருசு சூலூருக்கா?” தன் மிடுக்கான சோடாபுட்டிக் கண்ணாடியைச் சரிசெய்துகொண்டே குரல் வந்த திசையை நோக்கித் திரும்பிப் பார்த்தார் தாத்தா.
“யாரது? இராணியா?”
“ஆமா! நானேதான்”
சிரித்துக்கொண்டே
பதிலளித்தாள் அவள்.
இராணிக்கு
இப்போது நாற்பது வயதிற்குமேலிருக்கும். அவள் பிறந்து வளர்ந்த ஊர் கோம்பக்காடு. இளம்வயதில் பள்ளி படிக்கும்போதே சோமனூர்க்காரர் ஒருவரைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டாள்.
“எங்க புறப்பட்டீக? சோமனூர் இராணி” ஆவுடையப்பன் தாத்தாவின் கேள்வியில் கோயம்புத்தூர் குசும்பு கொஞ்சம் ஒளிந்திருந்தது.
“அத ஏன்பு கேட்டுக்கிட்டு?
ஆத்தா சூலூர் சர்கார் ஆஸ்பத்திரில சாகக்கிடக்கிறானு செய்தி வந்துச்சு. அதான் ஓர் எட்டுபோய் பார்த்துக்கிட்டு வந்திடலாமுனு போறேன். அவுக என்ன ஏத்துக்காட்டாலும், அவுக எனக்கு ஆத்தா இல்லாம போகுமா!” பொங்கிவரும் உணர்வை முந்தானையால் பொத்திக்கொண்டு அருகிலிருந்த வேப்பமர நிழலில் அமர்ந்துகொண்டாள் இராணி.
இன்னும்
வேறு சிலரும் பேருந்துக்காக முனங்கியபடியே
காத்துக்கிடந்தனர். காலையிலேயே வெயில் உயிரை உறிஞ்சுவதுபோலிருந்தது. அந்தப் பொத்தல் சாலையில் அவ்வப்போது சைக்கிள்களும் பைக்குகளும் அணிவகுப்பு நடத்தின. ஆனால், ஒன்பது மணி பேருந்து பத்தாகியும் இன்னும் வரவில்லை. ஒருசிலர் திட்டியபடியே வீடு திரும்பினர். ஆவுடையப்பன் தாத்தாவுக்கு மூட்டையில் இருக்கும் தக்காளிகளும், பேரன் கேட்ட சிவப்பு கலர் பலூனும் நினைவுக்கு வந்து தலைக்கிறக்கத்தை ஏற்படுத்தியது. தன் தாயின் சாவுக்கு முன்பாக அவரை ஒருமுறை பார்த்துப் பேசிவிடவேண்டும் என்ற தவிப்பு இராணியின் கண்கள் வழியாக எட்டிப்பார்த்தது. அந்தப் பேருந்து நிறுத்தத்தில் நின்றவர்களின் கண்கள் அந்த ஒற்றைப் பேருந்துக்காய் எதிர்நோக்கி இருந்தன. ஒரு பேருந்து எவ்வளவு கனவுகளைச் சுமக்கிறது? ஒரு பேருந்து எத்தனை உறவுகளுக்குப் பாலமாகிறது? என்பதைப் போன்று, ஓர் இணையம் எத்தனை இதயங்களை இணைக்கிறது! எத்தனை மாணவர்களுக்குப் பல்கலைக்கழகமாகிறது! எத்தனை நாடுகளுக்குப் பாலமாகிறது! எத்தனை வியாபாரங்களுக்குத் தளமாகிறது!
இன்று
இணைய உலகில் பெரும் சக்தியாகவும் இணைப்புப்பாலமாகவும் பேசுபொருளாகவும் இருப்பது ‘கிரிப்டோ கரன்சி’
(crypto currency) ஆகும். கிரிப்டோ
கரன்சி என்பது இணையத்தில் மட்டுமே செல்லுபடியாகும் ஒருவகையான டிஜிட்டல் பணம். எந்த ஓர் அரசின் அல்லது வங்கியின் கட்டுப்பாடு இல்லாமல் இணையம் வழியாக டிஜிட்டல் பணபரிவர்த்தனை செய்ய இயலும். கிரிப்டோ கரன்சி பிளாக்செயின் (block chain) தொழில்நுட்பத்தின் துணைகொண்டு இயங்குகிறது.
பிளாக்செயின் என்பது ஒரு தானியங்கி கணினிப் பதிவேடாகும் (digital ledger). ஒவ்வொரு பரிவர்த்தனையும்
இதில் பதிவு செய்யப்படுகிறது. அனைவரும் இந்தப் பதிவேட்டைப் பார்க்கமுடியும். ஆனால், பதிவேட்டின் தரவுகளை மாற்றமுடியாது.
கிரிப்டோ
கரன்சி இன்று பல பிட்காயின் (bitcoin), எத்தீரியும்
(ethereum), சோலனா (solana), டோஜ்காயின் (Dodgecoin) என்று
பல வகைகளில் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மதிப்பு இருக்கின்றது. இந்த நாணயங்களை வாங்க மற்றும் விற்க பல உலகளாவிய மற்றும்
தேசிய இணையத் தளங்கள் உள்ளன. பைனான்சு (finance), காயின் பேசு (coinbase) போன்ற உலகளாவிய தளங்களிலும், வாஃயீர்எக்ஸ் (wazirX), காயின் டி.சி.எக்ஸ்.
(coin DCX) போன்ற இந்திய தளங்களைப் பயன்படுத்தி கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை செய்யலாம்.
கிரிப்டோ
கரன்சி பரிவர்த்தனையில் இந்தியாவின் நிலைப்பாடு மாறிக்கொண்டே இருக்கின்றது. 2025-இல் உச்ச நீதிமன்றம் ‘கிரிப்டோ கரன்சியைத் தடைசெய்வது என்பது உலக எதார்த்தங்களுக்கு நாம் கண்மூடிக் கொண்டிருப்பதுபோலுள்ளது’ என்று
தனது கருத்தை வெளியிட்டுள்ளது. மெய் நிகர் டிஜிட்டல் சொத்துகள் (Virtual Digital assets)
குறித்த நிலையான வரிக்கொள்கைகள், தெளிவுகள் மற்றும் சட்டங்கள் இந்தியாவில் விரைவில் கொணரப்பட வேண்டும் என்பது அப்பரிவர்த்தனைகளில் ஈடுபடுவோரின் விருப்பமாக உள்ளது. 2023 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் வியாபார முதலீட்டாளர்கள் 6.6 பில்லியன் டாலருக்கும் மேற்பட்ட தொகையைக் கிரிப்டோ சொத்துகளில் முதலீடு செய்துள்ளனர். இது 2030-இல் இன்னும் பல மடங்கு உயரக்கூடும்
என்று கணிக்கப்படுகிறது.
என்னதான்
கிரிப்டோ கரன்சி டிஜிட்டல் உலகில் தவிர்க்க முடியாதது என்று நாம் பேசினாலும், அதில் ஒளிந்திருக்கும் ஆபத்துகளையும் நாம் அறிந்து கொள்ளவேண்டும். கிரிப்டோ கரன்சியின் மதிப்பு எப்போது கூடும்? எப்போது குறையும்? என்று கணிப்பது சிரமம். அரசுகளின் கட்டுப்பாடும் கண்காணிப்பும் இல்லாததனால், இதில் ஏமாற்று வேலைகள் நடக்க வாய்ப்புள்ளது. தீவிரவாதம் மற்றும் நாச வேலைகளுக்குக் கிரிப்டோ கரன்சி அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. இரகசியக் குறியீட்டு எண் (private key) திருடப்பட அல்லது
அது வைக்கப்பட்டுள்ள வாலட் (wallet) தொலைந்துபோக வாய்ப்புள்ளது. இலண்டனைச் சார்ந்த ஜேம்ஸ் ஹோவல் என்பவர் 2013-ஆம் ஆண்டு தொலைத்த இரகசியக் குறியீட்டு எண் இருந்த ஹார்ட் டிரைவை இன்றளவும் தேடிக் கொண்டிருக்கிறார். இன்றைய நாளில் அவர் தொலைத்த பிட்காயினுடைய மதிப்பு 800 மில்லியன் டாலர் என்று கணக்கிடப்படுகிறது.
எத்தனை
டிஜிட்டல் பணபரிவர்த்தனை முறைகள் வந்தாலும், எத்தனை புதிய தொழில்நுட்பங்கள் வந்தாலும் அவை பெரும்பாலும் ஏழை எளியவர்களுக்கு உதவாமல், பணம் படைத்தவர்களையே மையப்படுத்துகின்றது. ஏழை எளியவர்கள் வாழ்வு மேம்படச்செய்யும் தொழில்நுட்பங்கள் என்று வருகின்றதோ, அன்றுதான் தொழில்நுட்பங்களின் புரட்சி எனக் கூறமுடியும். அன்றைய நாள் என்று வருமோ?
1947-இல் இந்தியா சுதந்திரம் பெறுகிறது. அன்று முதல் இன்றுவரை ‘காஷ்மீர் யாருக்குச் சொந்தம்?’ எனும் கேள்வியாலே இந்தியா-பாகிஸ்தான் யுத்தங்கள் தொடர்கின்றன. காஷ்மீர் பகுதிகளை மெல்ல மெல்ல பல்லாயிரக்கணக்கான சதுர மைல் பரப்பில் சீனாவும் பாகிஸ்தானும் ஆக்கிரமித்துவிட்டன. இந்திய அரசாங்கம் இது குறித்து வாய் திறக்க மறுக்கிறது. ‘இது இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே உள்ள பிரச்சினை; மூன்றாம் நாடுகளின் தலையீடு கூடாது’ என்ற இந்தியாவின் நிலையில் டிரம்ப் மண் அள்ளிப் போடுகிறார். தான்தோன்றித்தனமாக ‘நான் பஞ்சாயத்துச் செய்கிறேன்’ என அறிவிப்பது, முட்டுச்சந்தில் இந்திய வெளியுறவுத் துறையை நிறுத்திவிட்டது. காஷ்மீர் பிரச்சினையைச் சர்வதேசப் பிரச்சினையாக்கும் பாகிஸ்தானின் குரலுக்கு டிரம்ப் முட்டுக்கொடுக்கிறார்.
பாகிஸ்தான்
தன் தீவிரவாதத் தாக்குதல்களால் இந்தியாவிற்கு நெருக்கடி கொடுப்பது எப்போதும் வாடிக்கையான செயலாகும். ஏப்ரல் 22 அன்று 5 தீவிரவாதிகள், 26 சுற்றுலா பயணிகளைப் பகல்காம் எனும்
இடத்தில் சுட்டுக்கொன்றனர். இவர்கள் லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை
அமைப்பான எதிர்ப்பு முன்னணி (டி.ஆர்.எஃப்.)
என்ற அமைப்பைச் சார்ந்தவர்கள் எனத் தேசியப் புலனாய்வு அமைப்பு அடையாளம் கண்டது. முதலில் பொறுப்பேற்ற அவ்வமைப்பு, பிறகு தாங்கள் ஈடுபடவில்லை என மறுத்தது. இந்திய
அரசாங்கம் பாகிஸ்தானைத் தொடர்புகொண்டு, அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரியது. பாகிஸ்தான் வழக்கம்போல் கள்ள மௌனம் சாதித்தது.
15 நாள்கள்
மௌனம் காத்த இந்திய அரசாங்கம், மே 7 அன்று ‘சிந்தூர் ஆபரேஷன்’ எனும் நடவடிக்கையை முன்னெடுத்தது. பாகிஸ்தானில் உள்ள ஒன்பது தீவிரவாத முகாம்கள் அடையாளம் காணப்பட்டு, வான்வெளித்தாக்குதல் வழி அழிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் தீவிரவாத அமைப்புகளான லஷ்கர்-இ-தொய்பா மற்றும்
செய்ஷ்-இ-முகமது அமைப்பைச்
சார்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டது.
மே
15-ஆம் தேதி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “முன்பே பாகிஸ்தான் அரசுக்குத் தெரிவித்துவிட்டுத்தான் தீவிரவாத முகாம்களைத் தாக்கினோம்” என்றார்.
மறுநாள் ஜெய்சங்கர் “அப்படிக் கூறவில்லை”
என உள்துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி மறுத்தார். மே 25-இல் ஜெய்சங்கரும், “இத்தகவல் பாகிஸ்தானுக்குக் கூறப்படவில்லை” என
மறுத்தார். முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் செயலற்ற வெளியுறவுத்துறை அமைச்சர்
ஜெய்சங்கர் பதவி விலக வேண்டுமென்ற எதிர்க்கட்சிகளின் குரல் வலுக்கிறது.
எதிர்க்கட்சித்
தலைவர் இராகுல் காந்தி, “சிந்தூர் ஆபரேஷனால் எத்தனை விமானங்கள் இந்திய இராணுவத்திற்கு இழப்பு ஏற்பட்டன? முன்பே தகவல் அளித்ததால் தீவிரவாதிகள் தப்பிவிட வாய்ப்பு உள்ளதே...” எனக் கேள்வி கேட்டார். பாகிஸ்தானும் பதிலுக்கு இந்திய எல்லைப் பகுதிகளில் குண்டு வீசியது. போர் துவங்கிவிட்டது. “நான் கூறியதால் இந்தியா-பாகிஸ்தான் யுத்தம் நின்றுவிட்டது” என்கிறார்
டிரம்ப். ஆம், அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்... “டிரம்ப் மத்தியஸ்தம் செய்யவில்லை; இந்தியாவிற்குப் போர் வேண்டாம் என உத்தரவு போட்டுவிட்டார்” என்பதே!
அது உண்மைதான். பாகிஸ்தானுக்குப் போரைத் தாங்கும் வலுவில்லை. டிரம்பிடம் கெஞ்சி தப்பிவிட்டது.
‘சிந்தூர் ஆபரேஷன்’ குறித்து உலகின் எந்த நாடும் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்திய அரசு ஏழு தூதுக் குழுக்களை அமைத்து உலகெங்கும் ஆதரவு திரட்டியது.
எதிர்க்கட்சித் தலைவரை ஆலோசிக்கவில்லை. பா.ச.க.
தூதுக்குழு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த சசி தரூரை நியமித்து, உள்கட்சிப் பூசலை உருவாக்கியது.
வரலாற்றைத் திரும்பிப் பார்ப்போம்.
2008-ஆம் ஆண்டில்
நான்கு நாள்களில் மும்பையில் நடந்த லஷ்கர்-இ-தொய்பாவின் தீவிரவாதத்
தாக்குதலில் 160 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கோர் காயம் அடைந்தார்கள். அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் 100 நாடுகளுக்குப் பல்வேறு தூதுக் குழுக்களைச் சத்தமில்லாமல் அனுப்பினார். தீவிரவாதிகளின் உலகளாவியப் புகலிடம் பாகிஸ்தான் என உறுதிபட அறிவித்தார்.
பாகிஸ்தானுக்கு உலகளாவியப் பொருளாதார உதவிகளை நிறுத்தினார். இன்று இந்தியா-பாகிஸ்தான் போர் நிற்கிற நாளில், ஒரு மில்லியன் டாலர் கடனை ஐ.எம்.எஸ்.சிடமிருந்து பாகிஸ்தான் எளிதாகப் பெறுகிறது. சர்வதேச அரங்கில் பாகிஸ்தானைத் தனிமைப்படுத்தும் மோடி அரசின் முடிவுக்கு உலகின் எந்த நாடும் ஆதரவு தரவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட எல்லா நாடுகளுக்கும் பாகிஸ்தானின் தீவிரவாத நடவடிக்கைள் புரியும்.
2001-ஆம் ஆண்டு
அல்-கொய்தா அமைப்பு அமெரிக்காவில் இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடத்தியது. அதன் முழு மூளையாகச் செயல்பட்டவர் ஒசாமா பின்லேடன். 2011, மே 2 அன்று பாகிஸ்தானின் அபோட்டா பகுதியில் ஒசாமா பதுங்கியிருந்தபோது அமெரிக்க இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். 1993-ஆம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்புச் சம்பவங்களில் தேடப்படும் நிழல் உலகத் தாதா தாவூத் இப்ராஹிம்கூட பாகிஸ்தானில் இருப்பதாகத் தகவல் கசிகிறது. அவர் முக்கியக் கிரிக்கெட் பந்தயங்களைப் பாகிஸ்தானில் உள்ள விளையாட்டுத்திடலுக்கே வந்து பார்த்தார் என்ற அதிகாரப்பூர்வமற்றத் தகவல்களும் உலா வருகின்றன. பாகிஸ்தான் உலகளாவியத் தீவிரவாதிகளின் புகலிடம் என்பதில்
இரு வேறு கருத்துகள் இல்லை.
பாகிஸ்தானில்
நிலையான அரசு இல்லை. குடியாட்சி இல்லை. இராணுவ ஆட்சி நடக்கிறது. தெற்காசிய
நாடுகளில், புவிசார் அரசியலில், சீனாவைக் காட்டி அமெரிக்காவிடமும், அமெரிக்காவைக் காட்டிச் சீனாவிடமும் பாகிஸ்தானியர்கள் சலுகைகளைப் பெற்றுக்கொள்கின்றனர். இலங்கையும் இந்தியாவிற்கு எதிராக இதே அரசியல் நிலைப்பாட்டில் கொழிக்கிறது.
நமது
பிரதமர் மோடி தனது 11 ஆண்டுகால பிரதமர் பதவிக் காலத்தில் 151 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு 72 நாடுகளுக்குச் சென்றுள்ளார். அமெரிக்காவிற்கு மட்டுமே 10 முறை சென்றுள்ளார். ஆனால், ‘இந்த ஏழைத் தாயின் மகனுக்கு எந்த நாடும் ஆதரவாக இல்லை’ என்பதே பெருங்கவலை. கையறு நிலையில் கனடாவின் ஆல்பர்ட்டா நகரில் நடந்த ‘ஜி-7’ நாடுகளின் மாநாட்டில் அழையா விருந்தாளியாகச் சென்றார். உலகத் தலைவர்களோடு புகைப்படம் எடுத்துத் தன்னை மாபெரும் உலகப் பெருந்தலைவராக மோடி ஊடகங்களால் வெளிச்சம் பெற்றார். கெஞ்சி, கூத்தாடி டிரம்பிடம் பெற்ற காணல் பேச்சு வார்த்தை இரத்தானது. திடீரென டிரம்ப் அமெரிக்கா திரும்பினார். பிறகு வெள்ளை மாளிகையில் பாகிஸ்தான் இராணுவ அமைச்சருடன் மதிய உணவு மற்றும் பேச்சுவார்த்தைக்குத் திரும்பினார் எனத் தெரிய வந்தது.
பிரதமர்
மோடி சீன என்ற நாட்டின் பெயரைப் பொதுவெளியில் சொல்லவும், சீன அதிபரின் பெயரைச் சொல்லவும்
தைரியமற்றவர் என்ற உண்மை சுடுகிறது. நேருவால் முன்னெடுக்கப்பட்ட ‘அணிசேரா நாடுகள்’ என்ற நிலையும் மாறி, இந்திய
வெளியுறவுக்கொள்கை புயலில் சிக்கிய கப்பலாய் மோடி
ஆட்சியில் தவிக்கிறது. தற்போதைய இஸ்ரேல் - ஈரான் யுத்தத்தில் பா.ச.க.
அரசு தன் மதவெறியின் பகுதியாக இஸ்ரேல் பக்கம் சாயும் நிலையில் உள்ளது. இது குறைந்த விலைக்கு இந்தியாவிற்குக் கச்சா எண்ணெய் வழங்கும் ஈரானைக் கோபப்படுத்தும். அதன் பின்விளைவுகளால் இந்தியாவின் பொருளாதாரம் சரியும் என்ற அடிப்படையைக்கூட அறியாமல் உள்ளார்கள்.
மதவாத
அரசியல் நடத்தும் பா.ச.க.
தனது மோசமான அயலுறவுக்கொள்கையால் நாடுகள் இடையே தனித்து
விடப்பட்டுள்ள தன் நிலை அறிய வேண்டும். புதிய அயலுறவுக் கொள்கை உருவாக எதிர்க்கட்சிகளிடம் பேசி, கூட்டு முயற்சியில் நாட்டின் நலனைப் பாதுகாக்கப் புதிய முன்னெடுத்தல்கள் காலத்தின் கட்டாயம்.
அணு விஞ்ஞானிகள், உலகமெங்கும் நடக்கும் அணு ஆராய்ச்சிகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளைப் பதிவு செய்ய ஒரு செய்தி இதழைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள். அதில் ‘பேரழிவின் கடிகாரம்’ (Dooms day Clock) என்ற ஒரு முக்கியமான தகவல் இடம் பெறும். மனிதன் தனது சுயநலத்தால், பேராசையால், இன- மதவெறி போன்ற வெறுப்பின் உந்துதலால், அதிகாரப் போட்டிகளால் நடத்தும் மோசமான நடவடிக்கைகளால் இந்த உலகம் முழுமையாக அழிந்துபோவதற்கு இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது என்பதை அந்தக் கடிகாரம் அறிவித்துக் கொண்டே இருக்கும்.
உலகம்
முழுவதும் அணு ஆயுதப் பீதியில் வாழ்ந்திருந்த 1947-ஆம் ஆண்டு இக்கடிகாரம் உருவாக்கப்பட்டது. அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் ஜப்பானில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணுகுண்டுகள் அமெரிக்க இராணுவத்தால் முதன்முதலில் வீசப்பட்டன. 1949-இல் சோவியத் இரஷ்யா தனது அணு ஆயுதங்களைத் தயாரித்தது. 1952-இல் பிரிட்டனும், 1960-இல் பிரான்சும், 1964-இல் சீனாவும் தங்களுக்கான அணு ஆயுதங்களைத் தயாரித்துக்கொண்டன. 1974-இல் இந்தியாவும், 1990-இல் பாகிஸ்தானும் அணு ஆயுத நாடுகளாகத் தங்களை உருவாக்கிக்கொண்டன. தற்போது இஸ்ரயேலிடமும் வடகொரியாவிடமும் அணு ஆயுதங்கள் இருப்பதாகத் தெரிய வருகின்றது. ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தைப் பெற்றிருப்பதாகவும், அந்நாடு விரும்பினால் உடனடியாக அணு ஆயுதங்களைத் தயாரிக்க முடியும் என்றும் கூறப்படுகின்றது.
தற்போது
உலகம் முழுவதும் பிரயோகிப்பதற்குத் தயாராக அணு ஆயுத நாடுகளில் சுமார் 20,000 அணு ஆயுதங்கள் தயாராக இருப்பதாகத் தெரியவருகிறது. இந்த அணு ஆயுதங்களால் 800 மில்லியன் மக்களைக் கண்மூடி கண் திறப்பதற்குள் தடயங்களே இல்லாமல் முழுமையாக அழித்துவிட முடியும். அதன் தொடர்ச்சியாகப் பூமிப்பந்து முழுவதும் பேரிருளில் மூழ்கும். உலகின் நிலப்பரப்பு முழுவதும் தாவரங்கள் உள்பட உயிரின் அடையாளங்களே இல்லாமல் உறைபனி மூடி, ஆண்டுகள் கணக்கில் கொடுங்குளிர்காலமாகவே இருக்கும்.
1945-லிருந்து அணு
ஆயுதம் பல நாடுகளில் இருந்தாலும்,
அந்த நாடுகளின் ஆட்சியாளர்களும் இராணுவத் தளபதிகளும் பொதுவெளியில் தங்களிடம் இருக்கும் அணு ஆயுதங்கள் பற்றிப் பேசுவதில்லை. அப்படிப்பட்ட பேரழிவுக்கான ஆயுதங்கள் தங்களிடம் இருக்கிறது என்று கூறுவதற்குக்கூட பல நாடுகளின் தலைவர்கள்
தயங்கிய நாள்களும் உண்டு. இந்த ஆயுதங்களினால் ஏற்படக்கூடிய பேரழிவை அறிந்திருந்த பல நாடுகள், தாங்கள்
அணு ஆயுதங்களால் தாக்கப்பட்டால் மட்டுமே தங்களது அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்று தங்களுக்குள் ஒப்பந்தமும் செய்துள்ளார்கள் (No first use agreement).
இரண்டாவது,
உலக யுத்தத்திற்கு பின் ஒரு நாடு மற்றொரு நாட்டின்மீது தாக்குதல் நடத்துவதற்கு முன், ஐக்கிய நாடுகள் சபைக்குத் தாக்குதலுக்கான காரணங்களைத் தெரிவித்து, பாதுகாப்புக் கவுன்சிலின் அனுமதி பெறவேண்டும் என்றெல்லாம் விதிகளை நிறைவேற்றி வைத்துள்ளார்கள். ஆனால், அண்மையில் இப்படிப்பட்ட நடைமுறைகளையெல்லாம் எந்த நாடும் பின்பற்றுவதாகத் தெரியவில்லை. அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுகள் தாங்கள் நினைத்தால், தேவைப்பட்டால் தங்களிடம் இருக்கும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயங்கமாட்டோம் என்று இப்போதெல்லாம் தங்களது எதிரி நாடுகளை மிரட்டுவது சாதாரணமாகிவிட்டது. சில நாள்களுக்கு முன்னர் பாகிஸ்தானிய இராணுவ செனரல் இப்படிப் பகிரங்கமாய்ப் பேசியதை உலகம் முழுவதும் பார்த்தது. தான் சரியான நேரத்தில் தலையிட்டிராவிட்டால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு பெரிய அணு ஆயுதப் போர் நடந்திருக்கும் அன்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறிவருவதை எளிதாகக் கடந்து செல்ல முடியாது. வடகொரிய அதிபர் வாரத்திற்கு ஒருமுறை தங்களிடம் இருக்கும் அணு ஆயுதங்களைத் தென்கொரியாவின் மீது ஏவ எப்போதும் தயார்
என்று கூறுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இரஷ்ய அதிபர் புட்டின்கூட, உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி உதவி செய்யும் ஐரோப்பிய நாடுகள்மீது அணு ஆயுதங்கள் உள்பட அனைத்துவிதமான தாக்குதல்களையும் தொடர இரஷ்யா தயங்காது எனப் பகிரங்கமாகப் பேசினார்.
1991-இல் சோவியத்
இரஷ்யா பல நாடுகளாகச் சிதறுண்டபோது,
பேரழிவின் கடிகாரம் பேரழிவுக்கு 17 நிமிடங்கள் இருப்பதாகக் காட்டியது. கடிகாரம் தோற்றுவிக்கப்பட்ட பின்னர், பேரழிவுக்கான இடைவெளி இவ்வளவு அதிகமாக அதற்கு முன்பும் பின்பும் என்றும் இருந்ததில்லை. தற்போது இக்கடிகாரத்தின் நேரத்தைக் கணக்கிடும் பணியில் உலகம் முழுவதிலுமிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 18 விஞ்ஞானிகள் இடம்பெற்றுள்ளனர். டெல்லி ஐ.ஐ.டி.
பேராசிரியர் உள்பட தெற்கு ஆசியாவைச் சேர்ந்தவர்கள் மூன்றுபேர் தற்போது பேரழிவுக்கான நேரத்தைக் கணக்கிடும்போது புவி வெப்பமயமாகி வருவதால் அதனால் ஏற்படும் பருவநிலை மாற்றங்களையும் கவனத்தில் எடுத்துக்கொள்கின்றனர். மேலும், தற்போது உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்படுகின்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (Artificial Intelligent) மற்றும்
உயிரியல் தொழில்நுட்பம் (Biotechnology) ஆகியவற்றின்
தாக்கங்களையும் கருத்தில் கொள்கின்றனர். இந்தப் புதிய தொழில்நுட்பங்கள் யுத்தங்களின் அத்தனை பரிணாமங்களையும் தலைகீழாக மாற்றியுள்ளன. இவற்றையெல்லாம் ஆராய்ந்து தற்போதைய சூழ்நிலைகளின் அடிப்படையில் உலகின் பேரழிவுக்கு இன்னும் 89 வினாடிகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். 2024-இல் 90 வினாடிகளாக இருந்ததை 2025-இல் 89 வினாடிகளாக மாற்றியுள்ளனர். கடிகாரம் உருவாக்கப்பட்ட நாளிலிருந்து இதுதான் நமக்கும் பேரழிவுக்கும் இடையே மிகக்குறைந்த நேரம். பேரழிவுக்கான கடிகாரத்தின் மூலம் விஞ்ஞானிகள் தருகின்ற எச்சரிக்கை அறிவிப்பின் அபாயத்தை உலக நாடுகள் இன்னும் முழுமையாக உணரவில்லை என்பதே உண்மை.
இரஷ்யா-உக்ரைன் போர், பாலஸ்தீனம்- காசாவின் மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்திவரும் இன அழிப்புத் தாக்குதல்கள்,
ஈரானுக்கு எதிராக இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து நடத்தும் கூட்டுத் தாக்குதல்கள், தன் இருப்பினைத் தக்கவைக்க ஈரான் ஏவுகணைகள் மூலம் நடத்தும் பதில் தாக்குதல்கள், ஐந்து நாள்கள் மட்டுமே நடந்த இந்தியா-பாகிஸ்தான் மோதல்கள், சீனாவுக்கும்-தைவானுக்கும் இடையே எந்த நேரத்திலும் வெடிக்க இருக்கும் யுத்தம், சீனப் பெருங்கடலில் கடல் எல்லைகளை நிர்ணயிப்பதில் சீனாவுக்கும்-ஜப்பானுக்கும், சீனாவுக்கும்-பிலிப்பைன்ஸ் நாட்டுக்கும் இடையே தினசரி நிகழ்வாக நடக்கும் மோதல்கள், அண்டை நாடுகளை அன்றாடம் அச்சுறுத்தும் வடகொரிய நாட்டின் கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைப் பரிசோதனைகள், மோதல்கள் என்று உலகம் முழுவதும் இருக்கின்ற யுத்தப் பதற்றம் எந்த நேரத்திலும் மூன்றாம் உலகப்போராக வெடிக்கும் அபாயம் இருப்பதாகச் சர்வதேச புவி அரசியல் ஆய்வாளர்களும் அரசியல் நோக்கர்களும் கருதுகின்றனர். அப்படி ஒரு பெரும்போர் ஏற்படும்போது, அணு ஆயுத யுத்தம் தவிர்க்கமுடியாத பேரழிவாக உருவாகும் என்பதில் ஐயமில்லை. இதுவரை யுத்தங்களைப் பற்றிச் சிந்தித்திராத நாடுகள்கூட, அப்படி ஒரு யுத்தம் வந்தால் என்ன செய்வது என்று திட்டமிடத் துவங்கியுள்ளன.
உலக
நாடுகள் அனைத்தும் நடப்பு நிதி ஆண்டில் தங்களது பாதுகாப்புக்கான இராணுவப் பட்ஜெட்டை அதிகப்படுத்தியுள்ளன. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இராணுவத்திற்கான நிதி ஒதுக்கீடே தேவையில்லை என்று முடிவெடுத்திருந்த ஜப்பான், கடந்த வாரம் ஓர் ஏவுகணைப் பரிசோதனையை வெற்றிகரமாக நடத்திமுடித்துள்ளது. அண்மையில் நடந்த ‘நேட்டோ’ நாடுகளின் உச்சி மாநாட்டில் அனைத்து உறுப்பினர் நாடுகளும் இராணுவப் பாதுகாப்பு நிதிக்காகத் தங்களது ஒட்டுமொத்தத் தேசிய உற்பத்தியில் கூடுதலாக ஐந்து விழுக்காட்டினை ஒதுக்குவதாக அறிவித்துள்ளன. அணு ஆயுதங்களைத் தாங்கிச்சென்று தாக்கும் 12 அமெரிக்கத் தயாரிப்பு ‘எஃப்-35’ விமானங்களை உடனடியாக வாங்கப்போவதாக ‘நேட்டோ’ உச்சி மாநாட்டில் பிரிட்டிஷ் பிரதமர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.
எரிகிற
வீட்டில் அள்ளியது அனைத்தும் ஆதாயம் என்ற நிலையில் இந்தியாவையும் உலகின் ஆயுதத் தொழிற்சாலைகளில் ஒன்றாக மாற்றுவதற்கு மோடி அரசு பெரும் முயற்சிகளை முன்னெடுக்கிறது. கடந்த நிதி ஆண்டில் இந்தியா 50,000 கோடி பெறுமான ஆயுதங்களைத் தயாரித்து ஏற்றுமதி செய்துள்ளது என்றும், வரும் நாள்களில் அதனை இலட்சம் கோடியாக உயர்த்த இருப்பதாகவும் நமது பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங் பெருமைப்பட்டுக்கொள்கிறார்.
இப்போதெல்லாம்
யுத்தங்களை நடத்துவதற்குப் போர்வீரர்களும், பீரங்கிகளைத் தாங்கிச் செல்லும் டேங்குகளும் தேவையில்லை; தற்போது நடப்பது நட்சத்திர யுத்தம் (Stars wars).
‘ட்ரோன்ஸ்’ என்றழைக்கப்படும்
ஆளில்லாத விமானங்கள், கண்டம் விட்டு கண்டம் தாண்டி ஆயிரக்கணக்கான மைல் தூரங்களை, ஒலியைவிட வேகமாகச் சென்று எதிரியின் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் அதிநவீன ஏவுகணைகள், எதிரி நாட்டின் ரேடார்களின் திரைகளிலேயே தெரியாமல் தங்களையே மறைத்துக் கொண்டு பறக்கும் நவீன ஜெட் விமானங்கள், 35 மணி நேரம் இடைவிடாமல் பறக்கும் விமானங்கள், நடுவானிலேயே எரிபொருளை மற்றொரு விமானம் மூலம் நிரப்பும் வசதி, அணு ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு கடலுக்கடியில் எதிரிகளின் கண்களில் படாமல் ஆயிரக்கணக்கான மைல் பயணம் செய்யக் கூடிய நீர்மூழ்கி கப்பல்கள்... என்று கற்பனையில்கூட எண்ணிப்பார்த்திராத அதிசயங்களையெல்லாம் சாத்தியமாக்கிக் கொடுத்திருக்கும் நவீனத் தொழில்நுட்பங்களால் உலகம் அழிவின் விளிம்பில் நிற்கிறது. எதிரி நாட்டின் இராணுவத் தளங்களை அழித்து, அந்நாட்டின் இராணுவ வீரர்களைச் சரணடையச் செய்வது என்பதெல்லாம் அந்தக் காலம். இப்போதெல்லாம் எதிரிநாட்டு அரசின் தலைவர்களை, அந்நாட்டின் முக்கிய இராணுவத் தளபதிகளை, யுத்தத் தளவாடங்களைத் தயார் செய்து தரும் நிபுணர்களைக் குறிவைத்து, அவர்கள் இருக்கும் இடங்களிலேயே ஏவுகணைகளை வீசி அழிப்பது சாதாரணமாகிவிட்டது. ஈரான் நாட்டின் முக்கியமான தளபதிகளையும் அணு விஞ்ஞானிகளையும் குறிவைத்துக் கொலை செய்த இஸ்ரேல் பிரதமர், அந்நாட்டின் அதிகார உச்சமான ‘காமினியைக் கொலை செய்வதோடுதான் யுத்தம் முடியும்’
என்று கொக்கரித்ததை நாம் எல்லாரும் கேட்டுக் கொண்டுதானே இருந்தோம்!
‘காமினி எங்கே ஒளிந்திருக்கிறார்? என்று எனக்குத் தெரியும். அவரைக் கொல்ல இஸ்ரேலை தான் அனுமதிக்கவில்லை’ என்று
பேசிய டிரம்பின் ஆணவத்தை யாரும் மறக்கமுடியுமா? இதைப் போன்ற ஒரு நிலைமை எல்லா நாடுகளின் தலைவர்களுக்கும் நாளை வரலாம் அல்லவா?!
ஒரு
நாட்டின் பூகோள நிலப்பரப்பு, அதன் மக்கள்தொகை, அந்நாட்டின் இயற்கை வளங்கள், அதன் தொன்மையான நாகரிகம், பாரம்பரியமான கலாச்சாரம் ஆகியவை அந்நாட்டின் தகுதியினையும் பலத்தையும் நிர்ணயிப்பதில்லை. அதனுடைய விஞ்ஞான வளர்ச்சியும் தொழில்நுட்ப மேன்மை மட்டுமே அந்நாட்டின் மேலாண்மை உயர்வுக்குக் காரணம் என்பதே இன்றைய உலகின் எதார்த்தம். ஈரானுடைய இராணுவப் பலத்துக்கும் இயற்கை வளத்துக்கும், அதன் நீண்ட நெடிய வரலாற்றுப் பெருமைக்கும் முன்னால் இஸ்ரேல் ஒப்பிடவே தகுதியில்லாத நாடு. ஆனால், இஸ்ரேல் தன்னிடம் இருக்கும் விஞ்ஞானத் தொழில்நுட்ப வசதிகளால் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள ஈரானை ஆட்டிப்படைக்கின்றது. பொருளாதாரப் பலம் மிக்க சக இசுலாமிய நாடுகள்கூட
அமெரிக்காவுக்கும்-இஸ்ரேலுக்கும் பயந்து ஈரானுக்கு உதவிட முன்வரவில்லை என்பது எவ்வளவு பெரிய கொடுமை? இந்தப் பயங்கரத்தாக்குதல்கள் நடைபெற்றபோது டிரம்பினுடைய பெயரைச் சமாதானத்திற்கான நோபல் பரிசுக்கு ஈரானின் அண்டை நாடான பாகிஸ்தான் பரிந்துரைப்பது காலத்தின் கொடுமை என்பதைத் தவிர்த்து, வேறென்ன கூறுவது?
ஒரு
சாதாரண கிராமப் பஞ்சாயத்துக்கு இருக்கும் அதிகாரமும் செல்வாக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கு இல்லாமல் போனது மிகப்பெரிய துரதிருஷ்டம்! நேரு, குருசேவ், கென்னடி, டிட்டோ, நாசர் போன்ற உலகம் அறிந்த தலைவர்கள் இன்று இல்லை என்பது நம் தலைமுறைக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பு. தவறு செய்கின்ற நாடுகளைக் கண்டிக்கவும், அதன் தலைவர்களின் குற்றங்களைச் சுட்டிக்காட்டவும், மோதல்களில் இருக்கும் நாடுகளின் தலைவர்களை அழைத்து சமரசம் பேசி சமாதானத்திற்கு வழிகாணவும் உலகம் முழுவதும் எந்த அமைப்பும் தலைவர்களும் இல்லை என்பது எவ்வளவு பெரிய சோகம்!
ஐக்கிய
நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் (Security council)
இருக்கின்ற அதிகாரம் மிக்க உறுப்பினர்களில் பெரும்பாலோர் ஆயுதத் தயாரிப்பாளர்களாகவும் விற்பனையாளர்களாகவும் இருக்கிறார்களே... இந்தக் கொடுமையை எங்கே போய் கூறுவது? அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுவது அனைத்துமே அப்பட்டமான பொய் என்று தெரிந்த பின்னரும் கூட அதனைப் பொய் என்று தைரியமாகக் கூறும் பேராண்மை உலகில் எந்தத் தலைவருக்கும் இல்லையே!
காசாவில்
குண்டடிபட்டுச் சிதைந்துகிடக்கும் பிஞ்சுக் குழந்தைகளையும், ஒரு நேர உணவுக்காகச் செத்துமடியும் மக்களையும் ஆயிரக்கணக்கில் பார்த்த பின்னரும்கூட உலக மனச்சாட்சியின் குரல் ஓங்கி ஒலிக்கவில்லையே! பேரழிவை ஏற்படுத்தும் ஏவுகணைத் தாக்குதல்களைச் சினிமாவில் வரும் சண்டைக் காட்சிகள்போல காண்பித்து, அந்த ஏவுகணைகளின் தொழில்நுட்பச் சிறப்புகளை விவாதப் பொருளாக்கி மக்களின் மனத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் பரிதாப நிலைகுறித்துக்கூட சிந்திக்கவிடாமல், ஒட்டுமொத்தச் சமூகத்தின் மனச்சாட்சியையும் மழுங்கடிக்கும் வேலையைத் தினசரி அரங்கேற்றும் ஊடகங்கள் செய்வது வேசித்தனம்தானே!
கடந்தகாலத்
தவறுகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளாமல் மேலும் மேலும் தவறுகளைச் செய்துகொண்டிருப்பது அறிவீனம் அல்லவா! ஒவ்வொரு காலத்திலும் பேரழிவுகளை ஏற்படுத்திய யுத்தங்களால் ஏதாவது நன்மை ஏற்பட்டது உண்டா? இன்று ஈரான் மீது கொடுமையான ‘À2’ குண்டுகளை
வீசிவிட்டு ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் முழுமையும் அழித்துவிட்டோம் என்று அறிவித்த டிரம்பின் குரல் அடங்குவதற்குள், கத்தாரில் அமெரிக்க இராணுவத்தளங்களை ஈரான் தாக்கியது. தங்களது அணு ஆராய்ச்சிச் சொத்துகள் அனைத்தும் பத்திரமாகப் பாதுகாப்பாக இருக்கின்றன என அறிவிக்கின்றது. இப்படித்தான் 2001-இல் ஆப்கானிஸ்தானைத்
தாக்கி தாலிபன்களை ஒழித்துவிட்டோம் என்று அறிவித்தது. இருபது வருடங்களுக்குப் பின்னர் அதே தாலிபன்களிடம் அந்நாட்டை அமெரிக்கா ஒப்படைத்தது. 2003-இல் ஈராக்கில் பேரழிவுக்கான ஆயுதங்கள் இருப்பதாகக் கூறி அதன்மேல் போர் தொடுத்தது. அதைப்போல லிபியாவைக் காப்பாற்றி, அங்கே சனநாயக ஆட்சியை உருவாக்கப்போகிறோம் என்று போர்தொடுத்தது. ஆனால், அமெரிக்கா நடத்திய போர்களால் (வியட்நாம் உள்பட) அவர்கள் விரும்பியதை எங்கேயும் சாதிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.
இந்த
நிதி ஆண்டில் மட்டும் உலக நாடுகள் யுத்தங்களில் செலவுசெய்த பணம் சுமார் மூன்று டிரில்லியன் டாலர். தற்போது நடந்த தாக்குதலில் இஸ்ரேல் அனுப்பிய ஓர் ஏவுகணைக்கான செலவு இரண்டு மில்லியன் டாலர். இப்போது நடந்த ஐந்து நாள் சண்டைக்கு நாம் செலவுசெய்த பணம் 50,000 கோடி. இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில் வரக்கூடிய நாள்களில் இந்தியாவின் இராணுவச் செலவு 20 பில்லியன் டாலராக இருக்கும் என்று அரசு மதிப்பிட்டுள்ளது.
நாம்
இப்போது பாகிஸ்தானை மட்டும் எதிர்கொள்ளவில்லை. பாகிஸ்தானுக்குச் சீனா வாரி வழங்கும் ஆயுத உதவிகளையும் தொழில்நுட்பங்களையும் சீன விண்கோள்கள் தரும் இரகசியத் தகவல்களையும் சேர்த்துச் சமாளிக்கவேண்டும். சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஏற்பட்டுள்ள புதிய நெருக்கமும் உறவும் நமக்கிருக்கின்ற மிகப்பெரிய சவால். பத்து பில்லியன் டாலருக்கு நாம் வாங்கிய பிரான்சின் இரபேல் விமானத்தைச் சீனாவின் ஸ்பைட்டர் ஜெட் சுட்டு வீழ்த்தியது சர்வதேச இராணுவத் தாள்வாரங்களில் மிக முக்கியமான பேசும்பொருளாக மாறியுள்ளது.
இரபேலின்
பங்கு மதிப்புகள் பங்குச் சந்தையில் வேகமாகச் சரிந்துவிட்டது. நாம் எவ்வளவு ஆயுதங்களை வாங்கிக் குவித்தாலும், நாம் நினைத்தபடி பாகிஸ்தானைப் போரிட்டு வெற்றிபெற முடியாது. அது இறுதியில் அணு ஆயுதப்போராகத்தான் முடியும். யுத்தங்களைத் துவங்குவது எளிது. ஆனால், துவங்கிய யுத்தங்கள் முடிவுறுவது கடினம். யுத்தங்களினால் அழிகின்றவர்கள் அனைவரும் பெண்களாய் குழந்தைகளாய் ஏதுமற்ற ஏழைகளாகவே இருப்பதுதான் நிதர்சனம்!
“புதியதோர் உலகம் செய்வோம்... கெட்ட போரிடும் உலகத்தினை வேரோடு சாய்ப்போம்” என்ற
புரட்சிக் கவிஞரின் வார்த்தைகளை இந்த உலகம் கவனத்தில் கொள்ளுமா? பேரழிவை நோக்கி வேகமாக நகரும் பேரழிவின் கடிகார முள்களைத் தடுத்து நிறுத்துமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!
நாம் வாழும் இப்புவியின் எதிர்காலம் யார் கையிலிருக்கப் போகிறது? ‘ட்ரான்செண்டென்ஸ்’ என்ற முற்றிய நிலை ஆன்மாவைச் சிந்திக்கும் ஆன்மிகவாதிகள், மனோதத்துவ வல்லுநர்கள், விஞ்ஞானிகள் மத்தியில் அவர்களுடைய அடிப்படை நம்பிக்கையை அசைப்பதாகக்கூட இருக்கலாம். எல்லாவற்றிற்கும்மேல் அபார நுண்ணறிவின் செயல்பாடுகளுக்கு யார் பொறுப்பேற்பது? கனவு நினைவாகி, நினைவு நிகழ்வாகிறதா?
உலகில்
1700 விஞ்ஞானிகள் சேர்ந்து AGI (Artificial General intelligence)
சாத்தியப்படுமா?
என்று ஆராய்ந்தனர். அவர்களில் பெரும்பாலோருக்குக் கிடைத்த பதில் ‘ஆம்’ என்பதாகும். ‘ஒருமை தொழில்நுட்பம் எப்போது நிகழும்?’ என்ற கேள்வி பலர் மனத்திலும் உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அளவுகோல் இல்லை. அது சீராகவும் அல்லது சூடுபிடித்து, முடுக்கிவிட்ட வேகமாக விரிவடையும் தன்மையும் பெற்றது.
1965-ஆம் ஆண்டு
இன்டெல்லின் இணை நிறுவுநர் கார்டன் மூர் என்பவர், கணினியின் சக்தி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இரட்டிப்பாகும் என்று கணித்தார். இது கடந்த ஐம்பது ஆண்டுகளில் நிகழ்ந்தது. அமெரிக்கக் கணினி விஞ்ஞானியும், தொழில் நிபுணருமான ஏர் கர்ஸ்வெல் ஏ.ஐ.-யில்
ஆதிக்கம் பதித்தவர். 2005-ஆண்டு இவர் ‘ஒருமை அருகாமையிலிருக்கிறது’ என்ற
நூலை எழுதினார். அப்போது ஏ.ஐ. பற்றி
யாருக்கும் அவ்வளவு தெரியாது.
அந்நூலில்,
‘கணினியானது மனித நுண்ணறிவின் தரத்தை 2029-ஆம் ஆண்டுகளுக்குள் அடைந்துவிடும்’ என்றும்,
அது ஒன்றாகி அபார மனிதனாக, ஏறக்குறைய 2045-ஆம் ஆண்டில் உருவெடுப்பதை ‘ஒருமை’ என்று குறிப்பிட்டிருக்கிறார் (computers
would reach human level intelligence by 2029 and merge with computers and
become super humans around 2045 is called singularity). ஏ.ஜி.ஐ.
என்பது, நாம் எப்படி வேலை செய்கிறோம்? வாழ்கிறோம்? நினைக்கிறோம்? என்ற மனிதமூளையின் செயலாற்றலைக் கொண்ட தொழில்நுட்பம். இந்த இலக்கை நோக்கிச் செல்லும் ஆராய்ச்சியின் வேகம், நாம் ஏ.ஜி.ஐ.-யின் எல்லைக்குள் நுழைந்து விட்டதையும், ஏ.எஸ்.ஐ.
(Artificial Super Intelligence-ASI) அடைவது எட்டிய
தூரத்திலிருப்பதையும்
காட்டுகிறதாக உள்ளது. ஏ.ஜி.ஐ.
என்பது உடனே வெளிப்படாவிட்டாலும், அது உருவெடுப்பதையும், அதன் அறிகுறிகளையும் காணமுடிகிறது.
• 2024-ஆம் ஆண்டு செப்டம்பரில் ஆல்ட்மேன், ‘The intelligent
age’ என்ற நூலில், ‘ஏ.ஜி.ஐ.
என்பது மனித வர்க்கத்திற்குக் கிடைக்கும்
கருவியாயில்லாமல், மனித வரலாற்றை உருவாக்கும் புதிய சகாப்தமாயிருக்கும்’ என்று
கூறியிருக்கிறார்.
• ஓர் இயந்திரம் தானே கற்று, புதிய சூழலுக்கு ஏற்ப மாற்றியமைத்துக்கொள்ளும் திறனைப் பெற்றுவிட்டால், அது அதிக ஆற்றலை அடைவதென்பது வெகு தொலைவில் இல்லை என்பதை வெளிப்படுத்துவதாக ஏ.ஜி.ஐ.
பார்க்கப்படுகிறது.
• இதுவரை ஏ.ஐ. அமைப்புகள்
எழுதுவது, நகல் எடுப்பது, நோய்களை அறிவது, போக்குவரத்தை விரிவுபடுத்துவது என்ற செயலாற்றல்களைக் கணினியின் குறுகிய எல்லைத் திறனில் அமைந்திருந்தன. ஆனால், ஏ.ஜி.ஐ.-யின் செயலாற்றல், மாற்றியமைத்துக்கொள்ளுதல், காரணமறிதல், பல்வகைச் சிக்கல்களைத் தீர்த்தல் என்ற திறன்களைப் பெற்றிருக்கும். இதற்கு உதாரணமாக, பேசும் இயந்திரங்களைக் கூறலாம்.
• நுண்ணறிவு என்பது இதுவரை மனிதனுக்கே உரிய தனித்துவப் பண்பாக மதிக்கப்படுகிறது. இந்நிலையில் ஏ.ஜி.ஐ.
என்ற இயந்திரச் செயலியை நம் வாழ்க்கையின் அங்கமாக அது கருவியாகவோ அல்லது பங்காளியாக அல்லது எதிரியாக எவ்வாறு இணைக்கப்போகிறோமோ அதைப் பொருத்தே நம் கலச்சாரத்தை, அடையாளத்தை, முக்கியத்துவத்தை அது பிரதிபலிக்குமென்பது இப்போது நம் கற்பனைக்கு அப்பாற்பட்டதாயுமிருக்கிறது..
ஏ.ஜி.ஐ.
பின்
ஏன்
செல்லவேண்டும்?
மனிதனின்
திறனைவிட கணினியின் ‘அறிவாற்றல் இயந்திரங்கள்’ இப்போதைக்கு
இல்லை என்றாலும், சில ஆராய்ச்சியாளர்கள் மொழி பேசும் இயந்திரங்கள் அப்படி மேம்பட்ட திறனைப் பெற்று உருவாகுவதற்கான சாத்தியக்கூறுகளை வெளிக்காட்டுவதாக நம்புகின்றனர்.
• இன்று வளர்ச்சியடைந்த தொழில்நுட்பங்களான ஏ.ஐ.-யும்
கற்கும் இயந்திரமும் இணைந்து-உதாரணமாக, ஒருவர்
நோபல் பரிசைப் பெற எடுத்துக் கொள்ளும் முயற்சிக்குச் சமமான உழைப்பை ஒரு சில நிமிடங்களில் உருவாக்கிச் சாதிக்கும் திறனைப் பெற்றிருப்பதாகக் கூறப்படுவது இயந்திரச் செயலாற்றலின் வீரியத்தைக் காட்டுகிறது. ஏ.ஜி.ஐ.
பின் செல்வதென்பது ஒரு குருட்டுத்தனமான முயற்சி என்று தோன்றினாலும், இதற்கான சில காரணங்களும் சொல்லப்படுகின்றது.
• மனித அறிவாற்றல் பல ஆயிரம் ஆண்டுகள்
நிலையானதாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், புரிந்துகொள்ளும் திறனை இயந்திரங்களுடன் இணைக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இத்திசையில் எலான்மஸ்க் மேற்கொண்டு வரும் ஆராய்ச்சிகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளன. இயந்திரச் செயலாற்றல் என்பது அல்கோரிதம்கள் ஆய்வுத்திறன் மற்றும் நினைவறை ஆகியவற்றைச் சார்ந்துள்ளது. இவற்றில், ஆய்வுத் திறனும் நினைவறையும் அதிவேகமாக வளர்ந்து வருகின்றன. இயந்திரங்களின் ஆய்வுத் திறனுக்கும் நினைவறைக்கும் ஏற்ற அல்கோரிதம்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன என்பது நாம் ஏதோ ஒன்றை நெருங்கிவிட்டோம் என்பதாகத் தெரிகிறது.
மனிதச் செயலாற்றல்
நிலைத்துவிட்டது;
இயந்திரச்
செயலாற்றல்
வளர்ந்து
கொண்டே
போகிறதா?
மனிதனின்
செயலாற்றல் நிலைத்துவிட்ட நிலையில், இயந்திரச் செயலாற்றல் தொடர்ந்து வளர்ந்து கொண்டே போவதால், இயந்திரங்களுக்குத் தகுந்த வரையறைகள் இல்லையென்றால், அவை மனிதனை மிஞ்சும் தருணம் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். இதுவரை அந்த எல்லையை நாம் எதிர்கொள்ளவில்லை என்பதுதான் இன்றைய நிலை.
• ஒருவேளை இயந்திரங்கள் இப்போது ஊமையாக இருப்பதாகத் தோன்றலாம்; ஆனால், அவை மிக திறனுடன் மிக விரைவில் வளரும் தன்மையைப் பெறும் நிலை எப்போது என்பதுதான் கேள்வி.
• 2022-ஆம் ஆண்டு இத்துறை சார்ந்த 738 வல்லுநர்கள் நடத்திய ஆய்வில், இது 2059-க்குள் சாத்தியப்பட 50% வாய்ப்புகளிருப்பதாக அறியப்பட்டது.
• டெஸ்லா மற்றும் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் என்பவர் இப்போதுள்ள ஆராய்ச்சியின் வேகத்தில் 2030-க்குள் அபார மனிதச் செயலாற்றலை ஏ.ஐ. பெற்றுவிடும்,
இத்தொழில்நுட்பம் மனித இன அழிவிற்கு வழிவகுக்கும்,
அடுத்து என்ன நடக்கும் என்று கணிக்க இயலாது. இதனால் இருண்ட எதிர்காலம் என்றில்லை; ஆனால், ஏ.ஐ.-யின்
வேகமான வளர்ச்சியை ஒளிமயமான திசையில் எடுத்துச் செல்ல முயல்வதாகவும் கூறுகிறார்.
• ஏ.ஐ.-யின்
பிதா என்றழைக்கப்படும் ஜியாப்ரே ஹின்டன் என்பவர் 2024-ஆம் ஆண்டின் இறுதியில் BBC-4 நிறுவனத்திற்குக்
கொடுத்த பேட்டியில், ஏ.ஐ.-யினால்
இன்னும் 30 ஆண்டுகளில் மனித வர்க்கத்தை அழிக்கும் சூழல் உருவாகலாம் என்கிறார். 2024-ஆம் ஆண்டின் பௌதிக நோபெல் பரிசைப் பெற்ற இவர், 10-20% இது நிகழ
வாய்ப்பிருப்பதாகக் கருதுகிறார். எலான் மஸ்க், ஹின்டனின் கூற்றுடன் உடன்படுவதாகவும் கூறுகிறார்.
• தேவைப்படுகிறதோ இல்லையோ, தொழில்நுட்ப வளர்ச்சியை நிறுத்தியதாக இதுவரை சரித்திரமில்லை. ஏ.ஐ.-யின்
எதிர்காலம் பாதி எழுதப்பட்டுவிட்டது. மனிதனும் இயந்திரமும சுமூகமாக இணைந்து இயங்குவதும், அப்படியான எதிர்காலம் நம் அனைவரின் முன்னோக்கப் பார்வையிலும் பொறுப்பிலும், உலகளாவிய ஒத்துழைப்பிலும் இருக்கிறது.
பயன்கள்
‘ஒருமை’யின் மனிதரைவிட, வெகுவேகச் செயலாற்றலினால் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறிப்பாக, மருத்துவம், எரிசக்தி, விண்வெளி ஆராய்ச்சி போன்ற துறைகளில் பல நன்மைகள் கிடைக்கும்
என்று கூறப்படுகிறது. உலகில் ‘ரோபோடிக்ஸ்’ தொழில்நுட்பம்
வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளான பொருள்கள் மற்றும் சேவைப் பிரிவில் செலவை வெகுவாகக் குறைத்து மக்களுக்கு உதவும் என்று எலான் மஸ்க் கூறுகிறார். ரே கர்ஸ்வில் என்ற
அமெரிக்க விஞ்ஞானி, “இந்தத் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் செல்வந்தர்களுக்கு மட்டும் கிடைக்குமென்று நினைக்கவேண்டாம்; உதாரணமாக, கைப்பேசி ஆரம்ப நாள்களில் விலையின் காரணமாகச் சிலரிடமேயிருந்தது. இப்போது யாவரும் பயன்பெறும்படியாகக் கிடைப்பது தொழில்நுட்பங்கள் அனைத்து மக்களும் நலன் பெற அமைந்திருக்கிறது” என்று
கூறுகிறார். ஒரு சில வல்லுநர்கள் இதனை வணிக நோக்குடன் ஏ.ஐ.-யின்
விளம்பரத்திற்காகவும்
பயன்படுத்துவதாகக் கூறுகின்றனர்.
இணையதளம்
செய்தி அனுப்புவதில் செலவினை வெகுவாகக் குறைத்திருப்பதுபோன்று அறிவுத் திறனாய்வதில் செலவினை ஏ.ஐ. குறைக்கும்
என்றும் கூறப்படுகிறது. நன்மை, தீமைகளிருக்க, ஐசக் அசிமோவின் மூன்று ரோபோ விதிகளை நினைவுகூர வேண்டியுள்ளோம். ஒன்று, ரோபோக்கள் மனிதருக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டும்; இரண்டு, மனிதரின் கட்டளைக்கு அடங்கவேண்டும், கெடுதல் விளைவிக்கும் கட்டளையைத் தவிர்த்து மூன்று, மேலிரண்டு விதிகளோடு தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும்.
இரயிலுக்கு நேரமாகிவிட்டது. 1948-ஆம் ஆண்டு ஆகஸ்டு 25-ஆம் நாள் தன் இரு பிள்ளைகளையும் இரு கைகளால் இறுகப் பற்றிக் கொண்டு ஒன்றாம் நம்பர் பிளாட்பார்மிலே வேகமாக நடந்தாள் காயத்திரி. அவளின் பெற்றோர் பிள்ளைகளைக் கூட்டிச்செல்ல வந்திருந்தார்கள். என்றும் இல்லாத வகையில் அன்று சென்ட்ரல் இரயில் நிலையம் மௌனத்தில் மயங்கிக்கிடந்தது.
காயத்திரி
ஒரு சிங்கிள் பேரன்ட்! காலரா நோயினால் தன் கணவனை இரண்டாண்டுகளுக்கு முன் இழந்திருந்தாள். மயிலாப்பூரில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை. ஓரளவிற்குச் சம்பளம். தன் இரு பிள்ளைகளையும் தானே வீட்டில் ஒரு வேலைக்காரப் பெண்ணை உதவிக்கு வைத்துக் கொண்டு கவனித்து வந்தாள். அவளின் நெருங்கிய தோழிகளும், அவ்வப்போது வயதான அவள் பெற்றோரும் வந்துசெல்வர். இந்நிலையில் திடீரென்று அவளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. “காயத்திரி! ஐ ஆம் சாரி!
உங்களுக்குச் செகண்ட் ஸ்டேஜ் கேன்சர்.” அனைத்து ரிப்போர்ட்களையும் சரிபார்த்துக்கொண்டு மூத்த மருத்துவர் ஒருவர் கூறியது காயத்ரியின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது.
மாத்திரை,
மருந்துகள், டிரீட்மெண்ட் செலவுகள்... இதற்கிடையில் தன் பிள்ளைகளின் படிப்பு. காயத்திரிக்கு இது பெரும் மனச்சோர்வைக் கொடுத்தது. “நம்ம நாட்டுல இதற்கு டீரீட்மெண்ட் இல்ல. வெளிநாட்டுல புதுசா கீமியோதெரபி மருந்துகள் கண்டுபிடிச்சிருக்காங்க. இந்த வருசத்துல வந்திடும்”
என்றார் மருத்துவர்.
சில
நாள்களிலேயே பாதி எடை குறைந்திருந்தாள். தன் பெற்றோரை வரவழைத்துத் தன் பிள்ளைகளை அழைத்துப்போகச் சொன்னாள். அவளின் உடலில் ஏற்பட்ட மாற்றம் பிள்ளைகளுக்குத் தெரியக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள். “நீயும் எங்களோடு வந்திடு! உன்ன நாங்க பாத்துகிறோம்” என்று
பலமுறை அவளின் தாய் கூறியபோதும், அவள் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. “இது செகண்ட் ஸ்டேஜ்தான்மா! சரியாகிடும். ஆபீஸ்ல வேல வேற இருக்கு. இங்கேயே டிரீட்மெண்ட் போய்க்கிறேன். பார்த்துக்க. என் பிரண்ட்ஸ்செல்லாம் இங்க இருக்கிறாங்க. நீங்க கவலைப்படாதீங்க” என்பாள்.
கீமியோதெரபி மருந்துகள் மயிலாப்பூருக்கு வரும், தனக்கு மறு வாழ்வு கிடைக்கும் என்று காத்திருந்தாள் காயத்திரி.
தள்ளாடும்
வயதில் பேரப்பிள்ளைகளின் பெட்டிகளையும், தங்கள் பைகளையும் இழுத்துக்கொண்டு இரயிலேறி அமர்ந்தனர் காயத்திரியின் பெற்றோர். பைகளை இருக்கைகளின் கீழ் பத்திரப்படுத்திய தன் தாயைப் பார்த்து மூத்த மகள் அபிராமி, “அம்மா! நீயும் வாமா! ஜாலியா இருக்குமுல’ என்று
தாத்தாவின் தோளில் சாய்ந்துகொண்டே கூப்பிட்டாள். அபிராமிக்கு ஐந்து வயதுதான் ஆகிறது என்று யாரிடம் சொன்னாலும் நம்ப மாட்டார்கள். அந்தளவிற்குப் பேச்சிலும் நடத்தையிலும் அவள் அப்பாவைப்போல கெட்டிக்காரி.
தண்டவாளப்
பொந்துகளுக்கிடையில் ஓடிவிளையாடும் பெருச்சாளிக் கூட்டத்தைப்போல பலரும் அந்தப் பெட்டியின் வழிப்பாதையில் போவதும் வருவதுமாக இருந்தனர். “அம்மா! அஜய்க்குச் சுடுதண்ணீர் வச்சிருக்கேன். அத கொடுங்க” என்று தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தபடியே கூறினாள் காயத்திரி. அஜய் இராகவன் காயத்திரிக்கு இரண்டாம் பிள்ளை. மூன்று வயதுதான் ஆகிறது. ‘தாயைப் பிரிந்து எப்படி இருப்பான்?’ என்ற கேள்விக்கு காயத்திரியிடம் விடையில்லை. “அம்மா! நேரம் ஆச்சு. இப்போ இரயில் கிளம்பும். அபி! அக்கிரமம் பண்ணக்கூடாது. தாத்தா-பாட்டி சொல்லுறதைச் சமத்தா கேட்டு நடக்கணும், சரியா? அம்மா கிளம்புறேன்.”
இதை
காயத்திரி சொல்லும்போது ஏதோ அவளின் பெற்றோர் முகம் வெளிச்சமிழந்திருந்தது. ‘அம்மா! எப்போ வருவீங்க?’ என்ற அபிராமியின் கேள்விக்கு ‘அடுத்த மாதம் வருவேன்’ என்று கூறிக் கொண்டு பிள்ளைகளுக்கு முத்தம் கொடுக்கும்போது, வேகமாக வெளிப்பட்ட கண்ணீரைத் துடைத்துக்கொண்டு விறுவிறுவென விடைபெற்று வெளியேறினாள் காயத்திரி.
இரயில்
பெட்டியிலிருந்து வெளியே வந்த காயத்திரி சன்னலோரமாகப் பிளாட்பாரத்தில் நின்று கொண்டு கையசைவுகளில் அவர்களோடு பேசிக் கொண்டிருந்தாள். போனில் டிரங்கால் போட்டுத் தூரதேசத்திலிருந்து உரக்கப்பேசுவது போலிருந்தது அது. புறப்படும்போது இரயில் எழுப்பிய ஹார்ன் சத்தமும் கரும்புகையும் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது காயத்திரிக்கு. டாட்டா காட்டி, கையசைத்துத் தன் உயிரை வழியனுப்புவதாக உணர்ந்தாள் அவள். கீமியோதெரபி மருந்துகள் ஒருநாள் வரும் என்ற நம்பிக்கையில் காயத்திரி கையசைத்து நின்றாள். ‘அம்மா ஒருநாள் வருவாள்’ என்ற நம்பிக்கையில் பாட்டியின் மடியில் அஜய் இராகவன் கண்ணயர்ந்திருந்தான்.
அறிவியல்
ஒவ்வொரு காலகட்டத்திலும் உலகில் ஒவ்வொரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. பூமியைக் கதிரவன் சுற்றி வருகிறது (Geocentric) என்று
14-ஆம் நூற்றாண்டு வரையிருந்த கோட்பாட்டை 1543-இல் போலந்து நாட்டைச் சார்ந்த நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ் மாற்றியமைத்து, பூமிதான் கதிரவனைச் சுற்றிவருகிறது (Heliocentric) என்ற
அறிவியல் தெளிவை ‘De revolutionibus orbium coelestium’ என்னும் தனது ஆராய்ச்சிக் கட்டுரையின் வழியாக உலகிற்கு எடுத்துரைத்தார்.
15-ஆம்
நூற்றாண்டில் ஜெர்மானியரான ஜோகன்னஸ் கூட்டன்பெர்க் என்பவர் முதன்முதலில் 1440-களில் அச்சு இயந்திரத்தைக் கண்டு பிடித்தார். இவருடைய கண்டுபிடிப்பால் பல அரிய வகை
இலக்கியங்களும் சமயக் கருத்துகளும் வரலாற்றுப் பதிவுகளும் மருத்துவக்குறிப்புகளும் அச்சேறின. சமூக மாற்றத்திற்கும் செய்தி தொடர்புக்கும் இது மிகப்பெரிய அளவில் பங்காற்றியது எனலாம்.
பிரிட்டனில்
பிறந்த சார்லஸ் டார்வின் 1859-இல் வெளியிட்ட ‘ஆன் தி ஆர்ஜின் ஆப்
ஸ்பீஃயீஸ்’ (On the Origin of Species) என்னும் புத்தகம் உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுவரையில் மிகவும் பிரபலமாக இருந்த படைப்புக் கொள்கையினை ஓரங்கட்டிவிட்டு பரிணாமக்கொள்கைப் பற்றிய விவாதங்களை இது முன்வைத்தது.
அறிவியலின்
வளர்ச்சியால் பல தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள்
பெரும் திருப்பத்தையும் உலகளாவிய மாற்றத்தையும் ஏற்படுத்தின. அதில் மிக முக்கியமானது நீராவி இயந்திரம். 1712-இல் தாமஸ் நியூகம்மேன் உருவாக்கிய நீராவி இயந்திரத்தை, 1765-இல் ஸ்காட்லாந்தைச் சார்ந்த ஜேம்ஸ் வாட் என்பவர் மறுசீரமைப்பு செய்து போக்குவரத்து, ஜவுளி உற்பத்தி போன்றவைகளுக்கு அதனைப் பயன்படுத்தி தொழில்புரட்சிக்கு வித்திட்டார்.
தொலைத்தொடர்பிலும்
தொழில்நுட்பம் ஊடுருவத் தொடங்கியது 19-ஆம் நூற்றாண்டில்தான். மனிதன் புறாக்களையும் பிற விலங்குகளையும் தொலைத்தொடர்புக்காகப் பயன்படுத்திக் கொண்டிருந்தபோது, அமெரிக்காவில் 1844-ஆம் ஆண்டு சாமுவேல் மூர்ஸ் என்பவர் மின்சாரத்தால் இயக்கப்படும் ‘டெலிகிராப்’ என்னும்
இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். மூர்ஸ் குறியீட்டைப் (Morse Code) பயன்படுத்தி
டெலிகிராப் உதவியால் செய்திகளைக் கேபிள் வழியாகக் குறியீடாக அனுப்பினார். முதன்முதலில் “எத்துணை அரியன ஆற்றியுள்ளார் கடவுள்!” (WHAT HATH GOD WROUGHT!) (எண்ணிக்கை
23:23) என்னும் திருவிவிலிய வாக்கியமே டெலிகிராப் மூலமாக அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு
கண்டுப்பிடிப்பும் மற்றுமோர் அறிவியல் கண்டுபிடிப்புக்கு அடித்தளமிடுகிறது. அதிலும் குறிப்பாக, மின்சாரம் மற்றும் டெலிகிராப் தொழில்நுட்பம் இன்றைய கணினிக்கு அடிப்படை எனலாம். அன்றைய டெலிகிராப்பில் பயன்படுத்தப்பட்ட மூர்ஸ் குறியீடான ‘.’ (dot) மற்றும் ‘-’ (dash) இன்று
கணினியின் பைனரி குறியீடான ‘0’ மற்றும் ‘1’ ஆக உருமாறியிருக்கின்றது. 21-ஆம் நூற்றாண்டில் விஸ்வரூபம் எடுத்திருக்கும் இணையம் மற்றும் செயற்கை நுண்ணறிவிற்கும் அடிப்படை மின்சாரப் பயன்பாடும் மூர்ஸ் குறியீடும் எனலாம்.
அண்மையில்
ஓப்பன் ஏஐ-யினுடைய தலைவர்
சாம் ஆல்ட்மேன், சாட் ஜிபிடி பயனர்களுக்கு ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். அதில் “யாரும் ‘தயவுசெய்து’ (please)
மற்றும் ‘நன்றி’
(thankyou) என்ற வார்த்தைகளைச் சாட் ஜிபிடில் பதிவேற்ற வேண்டாம். ஏனெனில் அது ஏராளமான மின்சாரத்தைக் கணக்கீட்டிற்குப் பயன்படுத்துவதனால் (Computation) பல
இலட்சம் டாலர் செலவாகிறது” என்றார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஒவ்வொரு வார்த்தையும் டோக்கன் என்னும் குறியீட்டில் கணினியால் புரிந்துகொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக,
ஒவ்வொரு கண்டுபிடிப்பிற்குப் பின்னாலும் வெவ்வேறு காலகட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் அடிப்படையாகவும் அடித்தளமாகவும் இருக்கின்றன. இதுவே தொலைத்தொடர்பு, தொழில், கல்வி, கலை, கலாச்சாரம், மொழி, மருத்துவம் போன்ற துறைகளில் மாபெரும் மாற்றத்தை உருவாக்கி வருகின்றன.
மாற்றம்
ஒருநாளில் நிகழ்வதல்ல; ஓராயிரம் தடைகளைக் கடந்துவருவது. மாற்றம் நடைமுறைகளை உருமாற்றும், கேள்விக்குள்ளாக்கும், விவாதத்திற்குள் தள்ளும். மாற்றத்தை முத்தமிட்டு ஏற்பதும் மறுதலிப்பதும், மாற்றியமைப்பதும் முழு மனித நலனை மையப்படுத்தியே இருக்கவேண்டும். இவ்வுலகில் மாற்றத்தை ஏற்படுத்தும் அறிவியல் கண்டுபிடிப்புகள் அணுகுண்டுகளாகவும் இருந்திருக்கின்றன, ஆற்றுப்படுத்தும் கருவியாகவும் இருந்திருக்கின்றன.
மனித
அறிவு அன்பிலிருந்து பிறக்கும்போது மாற்றம் ஏமாற்றம் தராது!