தமிழ்நாட்டுத் தேர்தல் களத்தை ‘தி.மு.க. எதிர் த.வெ.க.’ எனக் கட்டமைக்க நடிகர் விஜய் முயல்கிறார். த.வெ.க. கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் நடிகர் விஜய் பேசும்போது, மூன்றாவது அணியான அ.தி.மு.க.வை ‘பா.ச.க. தலைமையில் மற்றும் பலர்’ என மட்டம் தட்டுகிறார். கரூர் பெருந்துயரச் சம்பவத்தில் நடிகர் விஜய்க்காக சட்டமன்றத்தில் நரம்பு புடைக்க வாதிட்ட எடப்பாடியை, அவரது அ.தி.மு.க. கட்சியை ‘ஊழல்வாதிகள்’ என்கிறார் நடிகர் விஜய்.
அ.தி.மு.க.வினரோ கட்டபொம்மன் பாணியில் ‘வயலுக்கு வந்தாயோ? நாற்று நட்டாயோ? மஞ்சள் அரைத்தாயோ?’ எனப் பதில்
தருவதில் வியப்பில்லை. அவர்கள் ‘கட்சி ஆரம்பித்த பின் மக்களை நடிகர் விஜய் எத்தனை முறை சந்தித்தார்?’ எனக் கேட்கும் கேள்விகளில் நியாயம் இல்லாமல் இல்லை. நாம் அறிந்தவரை இரண்டு ஆண்டுகளில் பத்து முறை பொதுவெளிக்கு வந்திருக்கிறார். நடிகர் விஜய் ஒருமுறை கூறுகிறார்: ‘நான் அண்ணா கூறியபடி மக்களைச் சந்திப்பேன்.’
மெரினா
கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகே இந்த வாசகம் சுவரில் பொறிக்கப்பட்டு இருக்கும்: ‘மக்களிடம் செல்; மக்களுடன் வாழ்; அவர்களிடமிருந்து கற்றுக்கொள்; அவர்களை நேசி; அவர்களுக்காகச் சேவை செய்; மக்களுக்குத் தெரிந்ததிலிருந்து தொடங்கு.’
நடிகர்
விஜய், எழுதித் தந்ததை ஏற்றத்தாழ்வுகளுடன் படிப்பவர். தன் கொள்கைத் தலைவர்களுக்குப் பனையூர் கட்சி அலுவலகத்தில் தனியே சென்று மாலை மரியாதை செய்பவர். பொதுவெளிக்கு வராதவர். அவர் ஓர் உள்முகச் சிந்தனையாளர். ஆதாயம் கிடைக்கும் இடங்களுக்கு மட்டும் நகர்கிறவர். தான் பெற்ற பயிற்சியின்படி கையைக் காலை ஆட்டிப் பேசுபவர். சமூக நிகழ்வுகளில் கலந்துகொள்ள விருப்பம் இல்லாதவர். கூட்டமான இடங்களுக்குச் செல்வது இவருக்குப் பிடிக்காது. பிறருடன் பேச விரும்பாதவர். தனிமை விரும்பி. இவை அனைத்தும் த.வெ.க.
தலைவர் விஜய் அவர்களுக்குப் பொருந்திப் போகிறது.
நடிகர்
விஜய் ‘தான் முதல்வர், தன் கட்சி ஆட்சி’ என வெடித்துப் பேசுகிறார்.
விஜய் சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பிரிக்க பா.ச.க.
தயாரித்த அரசியல் வெடி என்கிறார்கள். பற்றி எரிந்த திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து இவர் பேசவில்லை. கடந்த கிறிஸ்து பிறப்புப் பெருவிழா நாளில் வட இந்தியாவில் தாக்கப்பட்ட
கிறித்தவர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. கிராம விவசாயத் தொழிலாளர்களின் நூறு நாள் வேலைத் திட்டம் பற்றிக் கொதிக்கவில்லை. அதில் தேசப்பிதா காந்தியின் பெயர் நீக்கப்பட்டது குறித்து குரல் தரவில்லை. மாநில அரசின் நிதி, விழுக்காடு பங்கீட்டை அதிகரித்தது குறித்து வாய் திறக்கவில்லை. நெல்லை கவின் ஆணவப் படுகொலை குறித்துக் கருத்து கூறவில்லை. ஏனென்றால், குறிப்பிட்ட மேல்சாதி வாக்கில்
பாதிப்பு ஏற்படும் என்ற முன்னெச்சரிக்கையாம்! ஏன்
கோடி கோடியாக ரூபாய் கொட்டப்பட்டு, தனக்காக எடுக்கப்பட்ட ‘ஜனநாயகன்’
பட வெளீயிடு குறித்தும் கள்ள மௌனம் சாதிக்கிறார்; வாய் திறக்க மறுக்கிறார்.
தொலைக்காட்சி
பிரபலமும், திரையிசை அமைப்பாளருமான ஜேம்ஸ்
வசந்தன் நடிகர் விஜய் குறித்து விமர்சிக்கும்போது, “எல்லாரையும் பேச விட்டுட்டு வேடிக்கை பார்க்கிறது என்ன குரூரமான மனம்? படம் வரலைன்னு இரசிகர்கள் கொந்தளிச்சுட்டு இருக்கான்; ஆனா, வாய் திறக்காம இருக்கிறாரு. அவர்களுக்கு அறிவுரை சொல்லவாவது வாய் திறக்கணும். இல்லை! விஜய் மேல ஆத்திரம் வருது. தமிழ்நாட்டு இளைஞர்களைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி வைத்திருக்கார்.
தன் சொந்தப் பிரச்சினைக்கே போராடாதவர், எப்படி மக்கள் பிரச்சினைக்காகப்
போராடுவார்? நடிகர்
விஜய் அவர்களின் இரசிகர்கள் அவரது கதாநாயகப் பிம்பத்தில் மதிமயங்கிக் கிடக்கிறார்கள்” என்கிறார்.
ஒளி
தருகிறது என மின்மினிப் பூச்சி
பின் போய் தொலைந்து போகிறார்கள் மக்கள். தனிநபர் வழிபாடு ஓங்கி இருக்கிறது; துதிபாடி மகிழ்கிறார்கள். அவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்ட கூட்டமாக இருக்கிறார்கள். கதாநாயகப் பிம்பம், நீர்க்குமிழியாய் பறக்க, அது
உடைபடும்போது உண்மையை உணர்வார்கள் என்பதில் ஐயமில்லை. சமூக ஊடகங்களில் செயல்பாட்டாளர்களாகத் திகழும் விஜய் இரசிகர்கள், கற்பனைச் செய்திகளில் வாழ்கிறார்கள். அவதூறு பரப்புவதில் வல்லவர்களாக உள்ளார்கள். கரூர் பெருந்துயரச் சம்பவத்தில் நடிகர் விஜய் டெல்லி விசாரணைக்குச்
சென்றபோது, இரண்டு விஜய் ஆதரவு தொலைக்காட்சிகளே ‘அவர் கைது செய்யப்படுவார்’ எனப்
பொய்ச்செய்தி போட்டுப் பரபரப்புக் கூட்டியது. அதற்குத் த.வெ.க.
கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் சி.டி. நிர்மல்குமார்,
“அது சன் தொலைக்காட்சி அவிழ்த்து விட்ட பொய்” எனத் தன் இரசிகர்களை மடை மாற்றுகிறார். இவர்களது இரசிகர்கள் ‘ஜனநாயகன்’
திரைப்படம் வெளி வராதது குறித்து தமிழ்நாட்டை ஆளும் தி.மு.க.மீது குற்றச்சாட்டு வைக்கிறார்கள். விஜய் இரசிகர்கள் ‘இன்பநிதி படம் வருகிறது, எங்கள் தலைவர் படம் ஏன் வரவில்லை?’ என எதிர்கேள்வி கேட்கிறார்கள்.
விஜய்
இரசிகர்கள், தமிழ்நாட்டு மொழிப்போர் வரலாற்றைக் கூறும் ‘பராசக்தி’
படத்தை வறுத்து எடுத்தார்கள். தங்களுக்குப் பிடிக்காதவர்களைக் குறித்து வலைதளங்களில் அட்டைக்கத்தி ஆட்டத்தை இவர்கள் அழகாகச் செய்வார்கள். ஒன்றிய அரசை நோக்கி விஜய் இரசிகர்கள் கேள்வி கேட்க வேண்டும்; ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தைச் சார்ந்த எவருமே
பா.ச.க.-வை
நோக்கிக் கேள்விகள் எழுப்புவதில்லை என்பது பெரும் ஐயப்பாடாகும்.
நடிகர் விஜய் அவர்களும் தன் கொள்கை எதிரியான பா.ச.க. குறித்து
வாய் திறக்க மறுக்கிறார்.
சமூக
வலைதளங்களில் ஆர்வமுள்ளவர்கள் மோட்டார் சைக்கிள் வீரர் டி.டி.எஃப்,
வாசன் அவர்களைப் பற்றி அறிவார்கள். வாசன் ‘நாளை ஓர் ஊருக்கு வருகிறேன்’
என்று அறிவித்தால், அன்று அவரைக் காண ஆயிரமாயிரம் இளைஞர்கள்
கூடுவார்கள். அவர் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் சாகசங்களில் சட்ட விதிகளை மீறினார். பரபரப்புக் காட்டினார். நீதிமன்றம் அவரது ஓட்டுநர் உரிமத்தை இரத்து செய்து அதிரடி காட்டியது. விஜய் தொலைக்காட்சியின் பொழுதுபோக்கு நிகழ்ச்சியான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கூட ரெட் கார்ட் முறை உள்ளது. எந்த மரபுகளுக்கும் நியாயங்களுக்கும் உட்படாத, நெறியற்ற இரசிகர்கள் எதில் சேர்த்தி? இந்தியத் தேர்தல் ஆணைய விதிகளின்படி பொய்ப்பிரச்சாரம் செய்கிற கட்சியைத் தடை செய்யச் சட்டத்தில் இடமில்லை என்பதே உண்மை.
மக்கள்
ஆட்சியைப் பொறுத்தவரை பலவீனமான அம்சம் ‘குழு மனப்பான்மை’ என்கிறார்
சாக்ரடீஸ். அரசியல் தெளிவற்ற, அரசியல்வயப்படாத ஒரு குழு ‘விஜய் இரசிகர்கள்.’ சிறுபான்மை மக்கள் வாக்கு எங்களுக்கு மட்டும்தான் என்பதும், அவர்களின் ஒரு பொய்ப்பிரச்சாரம். சிறுபான்மை மக்களாகிய நாம் விழித்தெழுந்து இவர்களை அடையாளம் கண்டு வாக்களிப்போம்.
அண்மையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதியரசர்கள் என். சதீஷ்குமார் மற்றும் ஆர். சக்திவேல் அமர்வு, ‘இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வஃக்பு வாரியம் இருப்பதைப் போல, கிறித்தவ ஆலயங்களின் சொத்துகளை நிர்வகிக்க ஏன் ஒரு தனி அமைப்பு இல்லை?’ என்ற வினாவை எழுப்பியுள்ளது. ஒரு வழக்குரைஞரின் பார்வையில், இந்த வினா மேலோட்டமாகச் சமமான நீதியை வலியுறுத்துவது போலத் தோன்றினாலும், கிறித்தவ ஆலயங்களின் சொத்துரிமை வரலாறு மற்றும் இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கும் உரிமைகளின் அடிப்படையில் இது ஆழமான விவாதத்திற்குரியது.
சொத்துகள்: அரசு
வழங்கியதா?
மக்களுடையதா?
இந்து
சமய அறநிலையத்துறை மற்றும் வஃக்பு வாரியம் ஆகியவற்றின் உருவாக்கம் என்பது வரலாற்று ரீதியாக அரசு அல்லது மன்னர்களால் வழங்கப்பட்ட மானியங்கள் மற்றும் பொதுச் சொத்துகளைப் பாதுகாப்பதற்கேற்ப அமைக்கப்பட்டவை. ஆனால், கிறித்தவ ஆலயங்கள் குறிப்பாக, கத்தோலிக்கத் திரு அவை மற்றும் இதர சபைகளின் சொத்துகள் பெரும்பாலும் மிஷனரிகளின் நிதி, அவர்கள் குடும்பங்களின்
தனிப்பட்ட நன்கொடைகள் மற்றும் அந்தந்தப் பகுதி இறைமக்களின் தன்னார்வப் பங்களிப்பால் விலைக்கு வாங்கப்பட்டவை.
இதில்
குறிப்பிடத்தக்க விதிவிலக்கு இருப்பதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். எல்லா இந்து கோவில்களும் அறநிலையத்துறையின்கீழ் வருவதில்லை. பெரும்பாலான கோவில்கள் இன்றும் அறக்கட்டளைகள், தனி குடும்பத்தார், தேவஸ்தானம் எனும் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் பராமரிக்கப்படுகின்றன. மேலும், இசுலாமிய எல்லாச் சொத்துகளும் தர்காக்களும் நிறுவனங்களும் வஃக்பு
வாரியத்தின் கீழ் இருப்பதுமில்லை. அவ்வாறே, சில கிறித்தவ ஆலயங்களும் சொத்துகளும் ‘Cantonment’(கண்டோன்மெண்ட்) எனப்படும் இராணுவ முகாம் உள்ள பகுதி, காவலர் குடியிருப்பு, இரயில்வே குடியிருப்பு போன்ற இடங்கள் அரசினால் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளன. இவை தவிர, கிறித்தவ குறிப்பாக, கத்தோலிக்க ஆலயங்கள், நிறுவனங்கள், சொத்துகள் யாவும் திரு அவையின் நிர்வாக முறையான மறைமாவட்டம், திருத்தலம், பங்கு எனும் அமைப்பின் கீழ் அரசுக்கு வரி செலுத்தும் தனிநபர் அல்லது நிர்வாக அமைப்பின் சொத்துகள். இவை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வஃக்பு வாரியம் எனும் பொதுச்சொத்துகளைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட
அமைப்பு முறையின் கீழ் வருவதில்லை. மேலும்,
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 26 (Article 26), ஒவ்வொரு
மதப் பிரிவினரும் தங்களுக்குச் சொந்தமான சமய மற்றும் அறப்பணி நிறுவனங்களை நிறுவவும் பராமரிக்கவும், அவற்றின் அசையும் மற்றும் அசையாச் சொத்துகளைச் சட்டப்படி நிர்வகிக்கவும் உரிமை வழங்குகிறது.
நீதிமன்றங்களின்
முந்தைய
தீர்ப்புகளும் தெளிவும்
கிறித்தவ
நிறுவனங்களின் சொத்துரிமை குறித்துப் பேசும்போது மேஜர் ஆர்ச் பிஷப், அங்கமாலி எர்ணாகுளம் Vs. பி.ஏ. லாலன் தாரகன்
(2016) வழக்கின்
தீர்ப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது. 2016-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பில் (2016 (Supreme (Ker) 334), ‘கத்தோலிக்கத்
திரு அவை’ இந்தியச் சட்டத்தின் கீழ் ஒரு ‘சட்டப்பூர்வ நபர்’
(Juristic Person) என்பதைக்
கேரள உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. மத நிறுவனங்களின் சொத்துரிமை
தொடர்பான வழக்குகளில் இது ஒரு மிக முக்கியமான முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது.
அதாவது,
திரு அவை என்பது அதன் உறுப்பினர்களிடமிருந்து தனித்து இயங்கும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் திரு அவை தனது சொத்துகளைத் தனது பெயரிலேயே நேரடியாக நிர்வகிக்க முடியும். ஒரு தனி நபரைப் போலவே, திரு அவை தனது சொந்தப் பெயரிலேயே நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும், மற்றவர்கள் தொடரும் வழக்குகளை எதிர்கொள்ளவும் அதிகாரம் பெற்றுள்ளது. மேலும், திரு அவையின் சொத்துகளை நிர்வகிப்பதில் அந்தந்த மறைமாவட்ட ஆயர்கள் அல்லது பேராயர்களே சட்டப்பூர்வ மேலாளர்களாக அங்கீகரிக்கப்படுகிறார்கள்.
இந்த நிர்வாகம் பொதுஅறக்கட்டளைச் சட்டங்களுக்குப் பதிலாக, திரு அவையின் உள்விதிகளான திரு அவைச் சட்டத்தின்படியே நடைபெறும். இந்த உரிமை திரு அவையின் உள்விவகாரங்கள், வழிபாட்டு முறைகள் மற்றும் சொத்து மேலாண்மை ஆகியவற்றில் வெளிநபர்கள் அல்லது அமைப்புகள் தலையிடுவதைத் தடுத்து, அதன் தன்னாட்சி உரிமையைப் பாதுகாக்கிறது.
இந்தத்
தீர்ப்பு, கத்தோலிக்கத் திரு அவை இந்தியச் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கும் அதேவேளையில், தனது தனித்துவமான நிர்வாகக் கட்டமைப்பைப் பேணிக்காக்க வழிவகை செய்வதாகவும் அமைந்துள்ளது.
மேலும்,
பாஷியோ மால்க் Vs. யூனியன்
ஆஃப் இந்தியா (Bacio Malik vs Union of India) எனும் வழக்கு
குறிப்பிடத்தக்கது. அதாவது, பாஷியோ மால்க் என்பவர் ஒரு கத்தோலிக்க அருள்பணியாளர் (Catholic Priest). இந்த
வழக்கு முக்கியமாக ‘சிறுபான்மை அந்தஸ்து’
மற்றும் ‘நிர்வாக உரிமை’ பற்றியது. குறிப்பாக, ஒரு கத்தோலிக்கத் திரு அவையால் நடத்தப்படும் கல்வி நிறுவனத்தில், அதன் திரு அவைச் சட்டப்படி (Canon Law) நியமனங்கள்
மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை எடுக்க அரசு தடை விதிக்க முடியுமா? என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த வழக்கு 1980-களில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இது தொடர்பான முக்கியத் தீர்ப்பு 1983-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பு ‘AIR 1983 Delhi 422’ எனக் குறிப்பிடப்பட்டு 1983 (5) DRJ 105 (Delhi Reported Journal)
பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னாள்களில் வந்த T.M.A. Pai Foundation மற்றும்
P.A. Inamdar போன்ற
மிக முக்கியமான உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு ஒரு வலுவான அடித்தளமாக அமைந்தது. திரு அவைச் சட்டத்தின்படி திரு அவை நிறுவனங்கள் செயல்படுவதைச் சட்டப்பூர்வமாக அங்கீகரித்த ஆரம்பகால வழக்குகளில் இதுவும் ஒன்று.
இவ்வழக்கில் கத்தோலிக்கத் திரு அவையின் கீழ் உள்ள சொத்துகள் அனைத்தும் ‘திருத்தந்தையின் பிரதிநிதிகளான ஆயர்கள் மற்றும் பங்குத் தந்தையர்களால் நிர்வகிக்கப்படுகின்றன. இதில் அரசு தலையிட்டு, இவற்றை ஒரு பொதுஅறக்கட்டளையாக (Public Trust) மாற்ற
முடியுமா? என்ற விவாதம் எழுந்தது. கத்தோலிக்கத் திரு அவையின் சொத்துகள் என்பது தனிநபர்களால் அல்லது வெளிநாட்டு மிஷனரிகளால் விலைக்கு வாங்கப்பட்டவை. இவை ‘இனாம்’ ஆகவோ அல்லது அரசிடமிருந்து தானமாகவோ பெறப்பட்டவை அல்ல என்ற கருத்தை நீதிமன்றம் பதிவு செய்தது. இவ்வழக்கில், இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பிரிவு 26-இன் கீழ், ஒரு மதப் பிரிவினர் தங்களுக்குச் சொந்தமான சொத்துகளைத் தங்களின் மதச் சட்டப்படி (Canon Law) நிர்வகிக்க
முழு உரிமை உண்டு; முறைகேடுகள் நடந்தால் மட்டுமே சிவில் சட்டங்கள் தலையிட முடியுமே தவிர, நிர்வாக அமைப்பை அரசு மாற்றக்கூடாது என டெல்லி உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும்,
இந்த வழக்கு திரு அவை நிர்வாகத்தின் தன்னாட்சி (Autonomy) உரிமை
குறித்து விவாதிக்கிறது. அதாவது, ஒரு கிறித்தவ நிறுவனத்தின் நிர்வாகத்தில் அரசு தலையிடுவது, அந்தச் சமூகத்தின் நிர்வாக உரிமையில் தலையிடுவதாகும் எனத் திரு அவை தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கில் நீதிமன்றம், சிறுபான்மை மத நிறுவனங்கள் தங்களின்
தனித்துவத்தைப் பேணிக் காக்க அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பிரிவு 30-ஐ சுட்டிக்காட்டியது. இறுதியில், ஒரு நிறுவனத்தில்
நிர்வாகக் குளறுபடிகள் இருந்தால், அந்தத் குறிப்பிட்ட பிழையைச் சரிசெய்ய சட்டத்திற்கு அதிகாரம் உண்டு; ஆனால், அந்த நிறுவனத்தின் அடிப்படை நிர்வாக உரிமையை (Right to Administer) அரசோ
அல்லது நீதிமன்றமோ முழுமையாகத் தன்வசப்படுத்த முடியாது; குறிப்பாக, மிஷனரிகளால் தங்களின் சொந்த உழைப்பால் உருவாக்கப்பட்ட சொத்துகளில் அரசு நிர்வாகக் குழுவைத் (Board) திணிப்பது
சட்ட விரோதமானது எனவும் டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அவ்வகையில்,
கத்தோலிக்கத் திரு அவையைப் பொறுத்தவரை, அதன் சொத்துகள் ‘திரு அவைச் சட்டத்தின்படி’ (Canon Law) நிர்வகிக்கப்படுகின்றன.
உச்ச நீதிமன்றமும் பல தருணங்களில், சிறுபான்மையினரின்
கல்வி நிறுவனங்கள் மற்றும் சொத்து நிர்வாகத்தில் அரசு தேவையில்லாமல் தலையிடுவது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது எனச் சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக, ‘சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் என்பது அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட சலுகை அல்ல; அது இந்திய சனநாயகத்தின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதற்கான ஒரு பாதுகாப்பு அரண்’
(T.M.A. Pai Foundation Vs. State of
Karnataka, 2002) என
நீதிமன்றங்கள் தங்கள் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளன.
இந்து அறநிலையத்துறை
மற்றும்
கிறித்தவ
நிர்வாகம்: ஓர் ஒப்பீடு
முதலாவதாக இருப்பது நிதி ஆதாரம். பெரும்பாலான பழமையான இந்துத் திருக்கோவில்கள் மன்னர்களால் கட்டப்பட்டு, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ‘இனாம்’
(கொடை) ஆக வழங்கப்பட்டவை. இவை
பொதுச் சொத்துகளாகக் கருதப்படுவதால் அரசு நிர்வாகம் அவசியமாகிறது. ஆனால், ஆலயங்கள் பெரும்பாலும் சபையினரின் ‘தசம பாகம்’ மற்றும் நன்கொடையால் உருவாக்கப்பட் டவை. இரண்டாவதாக இருப்பது நிர்வாகக் கட்டமைப்பு. கத்தோலிக்கத் திரு அவையில் ‘பங்குப் பேரவை’
(Parish Council) முதல்
‘மறைமாவட்ட மேய்ப்புப்பணிப் பேரவை’
(Diocesan Pastoral Counci) வரை
ஒரு தெளிவான படிநிலை நிர்வாகம் ஏற்கெனவே உள்ளது. ஊழல் அல்லது முறைகேடு நடந்தால், அவற்றைச் சிவில் சட்டத்தின் கீழ் எதிர்கொள்ள ஏற்கெனவே சட்டங்கள் உள்ளன.
நீதிமன்றத்தின்
தற்போதைய
கவலை
என்ன?
சென்னை
உயர்நீதிமன்றம் இந்த வினாவை எழுப்பக் காரணம், தமிழ்நாட்டில் உள்ள சில கிறித்தவச் சபைகளில் நிலவும் உள்நிர்வாகத் தேர்தல் மோதல்கள் மற்றும் நிதி முறைகேடு புகார்களே ஆகும். ஆலயங்களின் பெயரில் இருக்கும் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் பெரும் வணிக நிறுவனங்களாக உருவெடுக்கும்போது, அங்கு நிர்வாகத் தவறுகள் நடப்பதாக நீதிமன்றம் கருதுகிறது.
இருப்பினும், ஒரு தனி வாரியம் (Statutory Board) அமைப்பது
என்பது கிறித்தவச் சமூகத்தின் தன்னாட்சி உரிமையில் (Autonomy) தலையிடுவதாகும்.
இதற்குப் பதிலாக, முறைகேடுகள் நடக்கும் நிறுவனங்களை மட்டும் கண்காணிக்க ஒரு தற்காலிகக் குழுவை நியமிக்கலாமே தவிர, ஒட்டுமொத்தக் கிறித்தவச் சொத்துகளையும் அரசு தன் கட்டுப்பாட்டில் எடுப்பது அரசமைப்புச் சட்டத்தின் 25 மற்றும் 26-வது பிரிவுகளுக்கு எதிராக அமையும்.
மேலும், ‘கிறித்தவ ஆலயச் சொத்துகளைப் பாதுகாக்கத் தனி வாரியம் அமைக்கப்பட வேண்டுமா?’ என்ற கேள்விக்குப் பின்வரும் காரணங்கள் சட்டரீதியான பதிலாக இருக்கின்றது. அதாவது, பிரிவு 30-இன் கீழ் கல்வி நிறுவனங்களை நிர்வகிக்கும் உரிமை ஆலயங்களுக்கு உண்டு. வாரியம் அமைக்கப்பட்டால் இந்த உரிமை பறிபோகிறது. அரசு அனைத்து மதங்களிலிருந்தும் சமமான தூரத்தைப் பேணவேண்டும். ஆலயச் சொத்துகள் பொது மானியத்தால் வந்தவை அல்ல என்பதால், அவற்றில் அரசு கைவைப்பது மதச்சார்பின்மைக்கு எதிரானதாகும். ஆகவே, ஆலயங்களில் நிலவும் நிர்வாகச் சிக்கல்களைத் தீர்க்க அந்தந்தச் சபைகள் தங்கள் உள்விதிமுறைகளைப் (By laws) பலப்படுத்தவேண்டும்.
நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விக்கு அரசு பதிலளிக்கும்போது, கிறித்தவச் சொத்துகளின் தனித்துவமான வரலாற்றுப் பின்னணியையும், அவை இறைமக்களின் சொந்த நிதியால் உருவாக்கப்பட்டவை என்பதையும் தெளிவுபடுத்த வேண்டியது அவசியம்.
நிர்வாகச்
சீர்திருத்தம் தேவைதான். ஆனால், அது தன்னாட்சி உரிமையைப் பலிகொடுப்பதாக, பறிகொடுப்பதாக ஒருபோதும் இருக்கக்கூடாது.
‘படியும் நொடியும்’ என்று கேட்டவுடன் பலர் பயந்து நிற்கிறார்கள். ‘படி’ என்றால் ஒரு பயணம்; ‘நொடி’ என்றால் ஒரு முடிவு. ஆனால், வாழ்க்கைப் படியிலிருந்து நொடிக்கு முடிவதற்காகப் பிறக்கவில்லை; அது நொடியிலிருந்து படியாக உயர்வதற்காகப் பிறக்கிறது.
ஒரு
மனிதனின் வாழ்க்கை முழுவதும் பெரிய நிகழ்வுகளால் மாறுவதில்லை; அது ஒரு சிறிய நொடியால்தான் திசை மாறுகிறது. ஒரு முடிவு, ஒரு முயற்சி, ஓர் ‘இல்லை’ என்று கூறிய கஷ்டமான தருணம். ஓர் ‘ஆம்’ என்று கூறிய துணிச்சல். இந்த ஒரு நொடிதான் அடுத்தப் படியை உருவாக்குகிறது.
டாக்டர்
ஏ.பி.ஜே. அப்துல்
கலாம் கூறினார்: “பெரிய கனவு காணும் மனிதர்களின் கனவுகள் எப்போதும் எல்லைகளைத் தாண்டி நிறைவேறும்” என்று.
இந்தக் கனவுகள் ஒரே நாளில் நிறைவேறவில்லை. ஒரு நொடியிலான முயற்சிகளால் படிப்படியாக உயர்ந்தன. படிகள் எப்போதும் கண்ணில் தெரியும்; ஆனால், அந்தப் படிகளை ஏறச்செய்யும் நொடிகள் அரிதாகவே கவனிக்கப்படுகின்றன.
ஒரு
மாணவனின் வெற்றி, ஒரு நொடி புத்தகத்தைத் திறந்த அந்தத் தருணத்தில் தொடங்குகிறது. ஒரு தொழிலாளியின் உயர்வு, ஒரு நொடி சோர்வைத் தள்ளிவைத்து வேலையைத் தொடர்ந்த அந்தக் கணத்தில் தொடங்குகிறது. ஒரு குடும்பத்தின் மீட்பு, ஒரு நொடி மௌனமாக இருந்து கோபத்தை வென்ற அந்த நேரத்தில் தொடங்குகிறது.
திருவிவிலியம்
மிக எளிமையாகக் கூறுகிறது: “மிகச் சிறியவற்றில் நம்பத்தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார்”
(லூக் 16:10). சிறியது ஒரு நொடி. பெரியது ஒரு வாழ்க்கை. இன்றைய உலகம் பெரிய வெற்றிகளைப் பெரிய மேடைகளில் காட்டுகிறது. ஆனால், அந்த வெற்றியின் அடித்தளம் பலருக்குத் தெரியாத அமைதியான நொடிகளில் போடப்படுகிறது.
புனித
அன்னை தெரேசா ஒருமுறை இவ்வாறு கூறினார்: “சிறிய விஷயங்களில் நம்பிக்கையுடன் இருப்பதே ஒரு பெரிய விஷயம்.”
இந்த
உலகிற்கு அதிகமாகத் தேவையானது ஒரே நாளில் உயர்ந்துபோன மனிதர்கள் அல்லர்; ஒவ்வொரு நாளும் ஒரு நொடி உழைத்த மனிதர்கள்! படியும் நொடியும் எதிரிகள் அல்ல; இவை ஒரே பயணத்தின் இரண்டு முகங்கள்.
நொடி
முயற்சி...
படி
விளைவு!
நொடி
தீர்மானம்...
படி
திசை!
இனி
வரும் நாள்கள் நம்மிடம் பெரிய படிகளைக் கேட்கவில்லை. ஒரு நல்ல நொடியைக் கேட்கின்றன. இன்று சோர்விலும் ஒரு முயற்சி, பயத்திலும் ஒரு துணிச்சல், அவசரத்திலும் ஒரு நேர்மை. அந்த ஒரு நொடிதான் நாளை ஒரு படியாக மாறும். வாழ்க்கை நொடியில் முடிவதற்காக அல்ல; நொடிகளால் உயர்வதற்காக!
படிகள்
ஒருநாள் பின்னால் திரும்பிப் பார்க்கும்போது தெரியும். ஆனால், அந்தப் படிகளை உருவாக்கிய நொடிகள்தான் நம்மை உண்மையான மனிதர்களாக்கும்.
‘ஒரு நொடியின் நேர்மை
ஒரு
வாழ்க்கையின்
உயர்வாக
மாறும்!’
1750-க்குப் பின்பான தொழில் வளர்ச்சி, கடந்த ஆண்டுகளில் வேகமெடுத்து இந்நூற்றாண்டில் நாளுக்கு நாள் பல புதிய தொழில்நுட்பக் கருவிகள் என்று மனித வாழ்க்கை முறையை மாற்றியமைத்து வரும் நிலையில், அரசியலும் அதற்கு விதிவிலக்கல்ல என்றே சொல்லலாம். இரண்டாம் உலகப் போருக்குப் பின் பல நாடுகள் குடியாட்சிக் குடைக்குள் வந்த பிறகு, மக்கள் பெருக்கமும் அபாரத் தொழில் வளர்ச்சியும் அரசியல் கலாச்சாரத்தை மாற்றியமைத்து வருகிறது. மக்கள் ஊடகங்கள், நிறுவனங்களென்று அரசியலில் பங்குபெறுவோரின் நிலையும் உருவாகியுள்ளது.
தனிமனிதனாவது
தடுமாற்றமடையலாம்; ஆனால், இன்று எந்த ஒரு நிறுவனமும் நடுநிலை வகிப்பதாகப் பாசாங்கு செய்யத் தயாராக இல்லை என்பது, அவர்கள் அனைத்துக் கட்சியினருக்கும் தேர்தல் நிதி பகிர்ந்தளிப்பு சான்றாக உள்ளது. ‘வேலை செய்தால் கூலி, வேஷம் போட்டால் காசு’ என்ற வழியில், பெரும் நிறுவனங்களும் தங்கள் நிலையைத் தகுந்தாற்போல் மாற்றியமைத்துக்கொள்வது survival
of the fittest என்ற கோட்பாட்டிற்கு உகந்ததாகவும் உள்ளது. ‘You make me bad and I make you bad’ என்ற ஆங்கிலப் பழமொழிக்கு ஏற்றாற் போல், இவை அரசியல் ஓட்டத்திற்கும், தேர்தல் பணிகளுக்கும் தேவையான இரத்த நாளங்களாக விளங்குகின்றன.
தேர்தல்களில்
ஊடகங்களின் பங்கும் அதிகரித்துக்கொண்டே போகும் நிலையில், ஏ.ஐ.-யின்
வருகை இதற்கு மேலும்
வேகத்தைச் சேர்த்திருக்கிறது. ஏ.ஐ. பற்றி
பல வரையறைகள் இருந்தாலும் அதில்
ஒன்று: ‘ஓர் இயந்திரத்தை அறிவாற்றலுள்ளதாக உருவாக்குவது.’ அந்த அறிவாற்றலைச் சூழலுக்குத் தகுந்த, முற்போக்குடன் சரியான தரத்தோடு இயங்கச்செய்வது. இத்திறனை இன்று அரசியல் கட்சிகள் தங்கள் தேவைக்கு ஏற்ப வளைத்துக்கொள்வதென்பது கைவந்த கலையாகிவிட்டது.
பிரச்சாரத்தில்
ஏ.ஐ.
ஏ.ஐ.-யின் தொழில்நுட்பம்
இப்போது தேர்தலின் முடிவை மாற்றியமைக்கும் சக்தியாகவும் உருவெடுத்து வருகிறது. இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உண்மைக்குப் புறம்பான தகவல்களை வீடியோவாகவும் உண்மையைப்போல் ஜோடித்தும், பரப்புவதன் மூலம், அச்செய்திகள் தேர்தலின் போக்கைக் கைமாற்றிவிடும் கருவியாகவும் அமைந்துவிடுகிறது. இந்த உத்தியைக் கையாள்பவர்களின் நோக்கம் என்னவென்றால், ‘ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பக் கூறினால் அது உண்மையாகிவிடும்’ என்ற
கோயபல்ஸ் கோட்பாடு, இன்றைய அரசியல் பிரச்சாரத்திற்கு ஒத்திருப்பதாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே ‘ஏ.ஐ. அரசியல்’ என்ற
தலைப்பு பேசுபொருளாக இருந்தாலும், குடியாட்சித் தேர்தல் முறையில் ஏ.ஐ.-யின்
புதிய உருவாக்கங்கள் மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது என்று கூறுவதைவிட வேடிக்கை பார்க்கும்படியாக அமைந்துள்ளது.
காலப்போக்கில்
இது தவறான மற்றும் பொய்யான தகவல்களுக்கு ஏற்ற கருவியாக அமைந்து விடவும், குடியாட்சி முறைக்குப் பேராபத்தை உருவாக்கும் என்ற அச்சமும் பலர் மனத்தில் எழுந்துள்ளது. மற்றொன்று, ஏ.ஐ. தவறான
செய்திகளை உருவாக்கவும் பரப்புவதற்கும், பொதுமக்களின் கருத்தாக இல்லாத ஒன்றைத் தங்கள் சுய இலாபத்திற்குப் பயன்படுத்துவதற்கும் ஏற்ற கருவியாகவும் அமைந்திருக்கிறது.
போலியின் கைவரிசை
ஏ.ஐ.-யின் அல்காரிதம்
உதவியினால் உண்மையைப் போன்று, ஆனால் ஜோடிக்கப்பட்ட வீடியோக்களைத் தயாரிக்கக்கூடியவைகளாக இன்று உலகளவில் ஏ.ஐ. வழி
முறைகள், படங்களைச் செய்தித் தொகுப்பாக உருவாக்கும் திறன் படைத்த கருவிகள் பல உள்ளன. இவை
உருவாக்கும் செய்திகள், நிழற்படங்களை வைத்து தங்களுக்குச் சாதகமாக அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட வழி வகுக்கிறது. ஏ.ஐ.-யின்
திறனைப் பயன்படுத்தி
நையாண்டிச் செய்திகளை உருவாக்கலாம். முகநூல், டுவிட்டர், யூடியூப் போன்ற பெரிய வலையமைப்புகள் ஏற்றுக்கொள்ளத்தகாத செய்திகளைத் தவிர்க்க முற்பட்டாலும் எந்த அளவிற்கு அது பயனளிக்கின்றது என்பது தெரியவில்லை.
இந்த நூற்றாண்டில்
போலியான உத்திகள் தேர்தலில் பயன்படுத்தப்படுவதைப் பார்த்தோம்; 2024-இல் உலகளவில் 60-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குத் தேர்தல்கள் நடந்தேறின. சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் மற்றும் வதந்திகளால் பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்படுவது, வன்முறையைத் தூண்டும் கருத்துகள் பரவும் நிலை, பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிப்பதால் தனியுரிமை மீறலுக்கு வழிவகுப்பது போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க முடியவில்லை என்பதே உண்மை.
தேர்தல்
முன்கணிப்புகளைப் பல மாதங்களுக்கு முன்பிருந்தே
காலத்திற்கேற்ப வளைத்து, உள் நோக்கத்தோடு வெளியிடுவதும், இத்தகைய புள்ளி விவரங்களுக்கு மறைமுகமாக அரசமைப்புகள் பிடியிலிருக்கும் சமூக ஊடகங்கள் துணைபோவதும், இது 40-50 ஆண்டுகளுக்கு முன் நடந்த தேர்தலுக்கு நேர்மாறாக இருப்பதைக் கடந்தகாலத் தலைமுறையினரைவிட இக்காலக் கணினித் தலைமுறையினர் நன்கு புரிந்துகொள்கின்றனர்.
ஏ.ஐ.-யின்
அரசியல்
நன்மைகள்
ஏராளமான
தரவுகளை அலசும் திறன் மற்றும் துரித மதிப்பீடு செய்யும் சக்தி என்பவை ஏ.ஐ.-யின்
தனிச்சிறப்பு. இப்படியிருக்க, ஏ.ஐ.-யின்
பதில்பேசி போன்ற பேசும் இயந்திரங்களின் வருகை பொதுமக்கள் அரசியலைப் பற்றித் தீரத் தெரிந்துகொள்வதற்கும், அவ்வாறே அரசியல் தலைவர்களும் பொதுமக்களின் நலன்களை அறிந்து செயல்படுவதற்கும் உதவியாய் அமைந்திருப்பது சமுதாயத்திற்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்று கூறலாம். அரசியலில் மக்களின் முக்கிய எதிர்பார்ப்பு என்பது முன்கூட்டியே தேர்தல் முடிவினைத் தெரிந்துகொள்வது.
இதற்குத் தீர்வாகத் தரவுகளையும் நடைமுறைச் செய்திகளையும் வைத்துத் துல்லியமாக ஏ.ஐ. அல்காரிதம்
முடிவுகளைக் கணக்கிடுகிறது.
மக்களின்
உணர்வு மற்றும் சமூகப் பொருளாதாரப் பின்னணிகளை விவரமாக ஆய்ந்து, அரசுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் தேவைக்கேற்ப தரவுகள் கிடைப்பது இன்று மிக எளிதாகிவிட்டது. அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் அதற்கேற்ப தங்கள் பிரச்சாரத்தை மேற்கொள்ளவும்
உதவுகிறது. போலி பரப்புரைகளைக் கண்டறியவும், சமூக வலை தளங்களையும், மற்ற பொதுச் செய்தித்தளங்களையும் கண்காணித்து, அதற்கான தீர்வு காணவும், திட்ட வல்லுநர்களுக்கு அடிப்படைத் தரவுகளை உடனுக்குடன் கொடுப்பதில் ஏ.ஐ. உதவுகிறது.
அரசியலில்,
மக்களின் மனநிலையைத் தெரிந்துகொண்டு திட்டங்கள் வகுத்திட, அதற்கேற்ப தேர்தல்
உத்திகளை அமைத்திட பழைய மற்றும் நடப்பு நிகழ்வுத் தரவுகளை வழங்குவதிலும் ஏ.ஐ. தொழில்நுட்பத்திற்குப்
பெரும் பங்கு இருப்பதைப் பார்க்கிறோம்.
ஏ.ஐ. இன்று உலகளவில் ஒரு புதுமைப் படைப்பாக அல்லது நம் அன்றாடத் தேவைக்கு என்றில்லாமல், அரசியல் களத்தை மாற்றியமைக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளது. ஏ.ஐ.-யின் மின்னல் வேக தகவல் பரிமாற்றம், துரித அரசியல் கருத்துகள் கட்டமைப்பிற்கு உதவும் கருவியாகவும் அமைந்துள்ளது.
(தொடரும்)
“பள்ளிப் பாடங்களைக் கற்க வேண்டிய வயதில், ஒரு பெண்ணைச் சூழ்ந்துகொண்டு எப்படித் துன்புறுத்துவது என்று நம் சிறுவர்கள் இன்று கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.” - இது ஏதோ ஒரு திரைப்படத்தின் வசனம் அல்ல; இன்றைய இந்தியாவின் கசப்பான எதார்த்தம். சாலைகளில், பேருந்துகளில், வகுப்பறைகளில் என எல்லா இடங்களிலும் பெண்களுக்குப் பாதுகாப்பு அரண் அமைத்துத் தளர்ந்துபோன நாம், இப்போது ‘பெரியவர்களிடமிருந்து மட்டுமல்ல, பத்து வயது சிறுவர்களிடமிருந்தும் நாம் பெண்களைப் பாதுகாக்கவேண்டுமா?’ என்ற கேள்வியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
அண்மையில்
டெல்லியில் நடந்த இரு நிகழ்வுகள் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளன. முதல் நிகழ்வில், 14 வயது சிறுவன் ஒரு வெளிநாட்டுப் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டபோது, காவல்துறை அவனைத் தண்டித்தது. அப்போது அவனது தாய், “நீங்கள் என் மகன்மீது மிகையாக எதிர்வினை ஆற்றுகிறீர்கள்; அவன் வெளிநாட்டுப் பெண்ணை இதுவரை நேரில் பார்த்ததில்லை, அதனால் சிறிது உணர்ச்சிவசப்பட்டுவிட்டான்” என்று
நியாயப்படுத்தினார்.
டெல்லியின்
பஜன்புரா பகுதியில் நடந்த இரண்டாவது நிகழ்வு இன்னும் கொடூரமானது. ஆறு வயது சிறுமியை 10, 13 மற்றும் 16 வயதுடைய மூன்று சிறுவர்கள் ஏமாற்றி அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில் கொடூரம் என்னவென்றால், அந்தச் சிறுமி அண்மையில் இறந்து போன தங்கள் நண்பனின் இளைய சகோதரி. இதில் 10 வயது சிறுவனின் தாய், பாதிக்கப்பட்ட சிறுமியின் நிலையைக் கண்டு துடித்துப் போனார். தன் மகன் ஒரு குற்றவாளி என்பதை உணர்ந்த அந்தத் தாய், எவ்விதப் பாரபட்சமும் இன்றி அவனைத் தானே காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இந்த
இரு தாய்மார்களின் அணுகுமுறையில்தான் நம் சமூகத்தின் எதிர்காலம் ஒளிந்திருக்கிறது. ஒருவர் குற்றத்தைச் சாதாரணமாக நினைக்கிறார்; மற்றொருவர் குற்ற உணர்வில் தவிக்கிறார்.
பெங்களூருவின்
அவலஹள்ளி காட்டில் ‘ஜாகிங்’ சென்ற பெண்ணைப் பார்த்து 10 முதல் 13 வயது சிறுவர்கள் ஆபாசக் கமெண்டுகளை வீசுகின்றனர். ‘இன்ஸ்டாகிராம்’ பிரபலத்தை
ஒரு சிறுவன் தவறாகத் தொடுகிறான். இவை எதார்த்தமாக நடப்பவை அல்ல; வகுப்பறைகளில் பெண் ஆசிரியர்களுக்குப் பணிந்து நடக்க மறுக்கும் மாணவர்கள், அவர்களின் உருவத்தைப் பற்றி ஆபாசமாகப் பேசுவது அதிகரித்துள்ளதாக 2025-ஆம் ஆண்டு ஆய்வு ஒன்று கூறுகிறது.
ஆண்ட்ரூ
டேட் போன்ற இணையப் பிரபலங்கள் பரப்பும் ‘நச்சு ஆணாதிக்கம்’ இன்று
‘ஸ்மார்ட் போன்கள்’ வழியாக நம் வீட்டுக் குழந்தைகளின் படுக்கையறை வரை நுழைந்துவிட்டது. ‘பெண்கள் போகப்பொருள், அவர்களை அடக்கி ஆள்வதே ஆண்மை’ என்ற நச்சுக் கருத்துகளைச் சிறுவர்கள் வேதவாக்காக நம்பத் தொடங்கியுள்ளனர்.
குற்றவாளிகளான
சிறுவர்களைத் தண்டிப்பது ஒருபுறம் இருக்கட்டும்; ஆனால், அவர்கள் ஏன் இப்படி மாறினார்கள் என்று நாம் என்றாவது யோசித்ததுண்டா? இதற்கு விடை நம் வீடுகளுக்குள்ளேயே இருக்கிறது. இந்தியாவில் முப்பது விழுக்காடு பெண்கள் வீட்டு வன்முறையால் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு தந்தை தன் தாயை அடிப்பதையும், அவமரியாதையாகப் பேசுவதையும் பார்க்கும் ஒரு சிறுவன், ‘பெண்களை இப்படித்தான் நடத்தவேண்டும்’ என்ற
தவறான பாடத்தை வீட்டிலேயே கற்கிறான்.
மேலும்,
சிறுவயதில் பாலியல் அல்லது உடல் ரீதியான வன்கொடுமைக்கு ஆளான சிறுவர்களே, வளர்ந்த பிறகு மற்றவர்களை வேட்டையாடும் வேட்டைக்காரர்களாக மாறுகிறார்கள் என்கின்றன ஆய்வுகள். அவ்வாறே, வன்முறை கலந்த ஆபாசப் படங்கள் மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் கருத்துகளைச் சிறுவர்கள் எளிதில் அணுகுவது அவர்களின் மூளையைச் செயலிழக்கச் செய்வதாக வும் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஒரு
பெண்ணை மதிப்பதே உண்மையான ஆண்மையின் அடையாளம். உங்கள் வகுப்பறையில் அமர்ந்திருக்கும் தோழி, உங்கள் சகோதரியைப் போன்றவள் மட்டுமல்ல; அவளும் உங்களைப் போன்ற ஒரு சகமனிதர். அவளது உடலைப் பற்றியோ, உடையைப் பற்றியோ கேலி பேசுவது உங்களை ‘ஹீரோ’ ஆக்காது; மாறாக, உங்களை ஒரு ‘கோழை’யாகவே காட்டும். வகுப்பறையில் மாணவிகள் பேசும்போது குறுக்கிடாமல் செவிமடுங்கள். அவர்களைக் கேலி செய்வதோ, உருவக் கேலி செய்வதோ ஒரு பண்புள்ள மாணவனுக்கு அழகல்ல.
சமூக
வலைதளங்களில் பெண்களை இழிவுபடுத்தும் ‘மீம்ஸ்’ அல்லது வீடியோக்களை இரசிக்காதீர்கள். ஆண்ட்ரூ டேட் போன்ற நச்சுக் கருத்துகளைப் பரப்புபவர்கள் உங்கள் ஆண்மையைத் தவறான வழியில் திசைதிருப்புகிறார்கள் என்பதை உணருங்கள். மேலும், உங்கள் நண்பர்கள் யாராவது ஒரு பெண்ணைத் தவறாகப் பேசினாலோ, துன்புறுத்தினாலோ,
அதைத் தட்டிக் கேட்கும் துணிச்சலை வளர்த்துக்கொள்ளுங்கள். அமைதியாக இருப்பது குற்றத்திற்குத் துணை போவதற்குச் சமம்.
ஒரு
பெண் கூறும் ‘இல்லை’
(சூடி) என்ற சொல்லுக்குப் பின்னால் இருக்கும் வலிமையையும் மரியாதையையும் புரிந்துகொள்ளுங்கள். விளையாட்டாக நீங்கள் செய்யும் ஒரு சிறு அத்துமீறல், ஒரு பெண்ணின் ஒட்டுமொத்த வாழ்நாள் கனவையும் சிதைத்துவிடும் என்பதை நினைவில்கொள்ளுங்கள். டெல்லி பஜன்புராவில் பாதிக்கப்பட்ட அந்த ஆறு வயது சிறுமியின் சிதைக்கப்பட்ட குழந்தைப் பருவத்திற்கு யாரால் நஷ்ட ஈடு வழங்க முடியும்? பத்து வயது சிறுவன் திட்டமிட்டு ஒரு வன்கொடுமையைச் செய்கிறான் என்றால், அங்கே ‘சிறுவன் தானே’ என்ற கருணைக்கு இடமே இல்லை.
வீட்டில்
தொடங்கும் ஒழுக்கமே வீதியில் பிரதிபலிக்கும். பெற்றோர்களே, உங்கள் மகன்கள் பள்ளிப் பாடங்களைப் படிக்கிறார்களோ இல்லையோ, சக மனிதர்களை குறிப்பாக,
பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்கிறார்களா? என்பதைக் கவனியுங்கள். இல்லையெனில், நாம் எதிர்காலத் தலைவர்களை அல்ல; எதிர்காலக் குற்றவாளிகளையே வளர்த்துக் கொண்டிருப்போம்.
நம்
ஆண் குழந்தைகள் வேட்டைக்காரர்களாக மாறாமல், பண்புள்ள மனிதர்களாக வளர நாம்தான் உதவிடவேண்டும். தந்தையர் தங்கள் மனைவியிடம் (தாயிடம்) காட்டும் மரியாதையே, ஒரு மகன் எதிர்காலத்தில் பெண்களை எப்படி நடத்துவான் என்பதைத் தீர்மானிக்கிறது.
பெற்றோர்களே,
வீட்டில் சமத்துவத்தைப் பேணுங்கள். சிறு வயதிலேயே அலைப்பேசியைக் கையில் கொடுத்துவிட்டு விலகி நிற்காதீர்கள். அவர்கள் என்ன பார்க்கிறார்கள்? யாரைப் பின்தொடர்கிறார்கள்? என்பதைக் கண்காணியுங்கள்.
சிறுவர்கள்
கோபப்படும்போது அல்லது ஆக்ரோஷமாக நடக்கும்போது அவர்களை அடிக்காதீர்கள்; மாறாக, அவர்களின் உணர்வுகளை எப்படிச் சரியான வழியில் வெளிப்படுத்துவது, மடைமாற்றுவது என்பதைக் கற்றுக்கொடுங்கள். உங்கள்
மகன் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்தால், ‘சிறுவன் தானே’ என்று நியாயப்படுத்தாமல், அது எவ்வளவு பெரிய தவறு என்பதை அவனுக்குப் புரிய வையுங்கள்.
குழந்தைகளுக்கு
‘நல்ல தொடுதல்’
(Good Touch)
மற்றும் ‘தீய தொடுதல்’
(Bad Touch)
பற்றி வெளிப்படையாகப் பேசுங்கள். இது அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், பிறருக்குத் தீங்கு செய்யாமல் இருக்கவும் உதவும்.
தண்டனைகளைவிட,
வீடுகளில் விதைக்கப்படும் நற்பண்புகளே பாலியல் குற்றங்களுக்கு நிரந்தரத் தீர்வாகும்.
பாசிசம் என்றால் என்ன?
அண்மையில்
வெளிவந்த ‘பரா சக்தி’ எனும் திரைப்படத்தைப் பார்த்தேன். தனிமனித, சமூக உரிமைகள், மானுட மாண்புகளுக்கு எதிரான எந்தத் திணிப்பையும் பாசிசத்தையும் எதிர்க்கும் உந்துணர்வைத் தந்தது அந்தத் திரைப்படம்.
இரண்டாம்
உலகப்போர் காலகட்டத்தில் எழுந்த அரசியல் சித்தாந்தமே பாசிசம். ஒரு குறிப்பிட்ட இனம், சமூகம் அல்லது சமயத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே சமூகத்தில் உயர்ந்தவர்கள்; மற்ற எல்லாரும் அவர்களுக்குக் கீழானவர்கள் எனும் பிரித்தாளும் பார்வை கொண்டது பாசிசம். சமுதாயத்தில் உயர்ந்தவர்களாகக் கருதப்படுகிற எதேச்சதிகாரச் சிந்தனையுடன் செயல்படுபவர்கள் இவர்கள். இவர்களுக்கு எல்லாவற்றிலும் முன்னுரிமையும் இலாபமும் கிடைக்கிறது. இந்தப் பாசிசம் தம் குடிமக்களில் ஒரு பகுதியினரை இரண்டாந்தர மக்களாக வகைப்படுத்தி, அவர்களைக் கொடுமைப்படுத்துகிறது. இதுவே ஜெர்மனியில் ஹிட்லரும் (நாசிசம் எனும் பெயரில்) இத்தாலியில் முசோலினியும் கடைப்பிடித்தது. இந்தப் பாசிச உணர்வு சமயத்தின் பெயரால் 2000 ஆண்டுகளாக இந்தியாவில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் படர்ந்து
வரும்
பாசிசம்
கிரேக்கப்
பாசிசத் திணிப்பை எதிர்த்து மக்கபேயர் தலைமையில் யூதர்கள் போராடியதை திருவிவிலியத்தில் படிக்கும் எவரும் ஈராயிரம் ஆண்டுகளாகச் சமயத்தின் பெயரால், சாதியின் பெயரால் நடத்தப்படும் ஒடுக்குமுறைகளையும் கொடுமைகளையும் எண்ணிப் பார்க்காமல் இருக்க இயலாது. ஆரியச் சாதியத் திணிப்பை உள்வாங்கிய ஒடுக்கப்பட்டோரிடம் ஊறிப் பாயும் சாதிய வெறி, திமிர், ஆணவக்கொலை எனும் இழிவுகள் நம்மை விலங்குகளைவிடக் கீழானவர்களாக மாற்றுகின்றன.
கடந்த
16 ஆண்டுகளாக அரசியல் இலாபத்திற்காகப் பாசிசச் செயல்பாடுகள் தொடர்ந்து பரப்பப்படுகின்றன. 1935-இல் ஹிட்லர் ஜெர்மனியில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டு வந்தார். அதனடிப்படையில் 60 இலட்சம் யூதர்களைக் கொன்று குவித்தார். அதேபோல் இந்தியாவிலும் குடியுரிமைத் திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது. வாக்காளர் சிறப்புத் திருத்தச்சட்டமும் குடியுரிமையைப் பறிப்பதாகவே நடக்கிறது. சிறுபான்மையினர் இந்தியாவில் இனி இரண்டாந்தரக் குடிமக்களே!
வரலாறு ஒழிப்பு
ஒன்றிய
அரசின் புதிய கல்விக் கொள்கையின்படி தென்னிந்திய வரலாறு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக்
கல்வியாளர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட திப்பு சுல்தான், ஹைதர் அலி போன்றோரின் 18-ஆம் நூற்றாண்டில் நடந்த நான்கு ஆங்கிலேய மைசூர் போர்கள் எல்லாம் நீக்கப்பட்டுள்ளன. மிகப்பெரிய செல்வாக்கு மிக்க விஜயநகரப் பேரரசு பற்றிய விரிவான குறிப்புகள் வெட்டப்பட்டுள்ளன. திருவிதாங்கூர் சாணார் புரட்சி, தென்னிந்திய எதிர்ப்பு இயக்கங்கள் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளன. தக்காண சுல்தான்களின் ஆங்கில எதிர்ப்புகள் அழிக்கப்பட்டுள்ளன.
சீரழிக்கப்படும்
பன்முகத்தன்மை
‘செப்பு மொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்’ எனப்
பன்முகத்தன்மையைப் பறைசாற்றினார் பாரதியார். ஆனால், ‘காசி தமிழ்ச்சங்கம் எதற்கானது?’ என்ற கேள்விக்கு பிரதமர் இவ்வாறு பதில் கூறுகிறார்: ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்.’
பல்சமயங்கள்,
மொழிகள், இனங்கள், இலக்கியங்கள், பண்பாடுகள் எனும் பன்முகத்தன்மைதான் இந்தியாவின் அழகு, பெருமை! ஆனால், அதற்குப் பதில் இப்போது ஒரே நாடு, ஒரே இந்தி மொழி, ஒரே சமயம், ஒரே ஆரியப் பண்பாடு எனும் ஆர்.எஸ்.எஸ். கருத்துத் திணிக்கப்படுகிறது.
2024-2026 ஆண்டுகளில்
தமிழ்நாட்டுப் பள்ளிக் குழந்தைகளுக்குத் தரவேண்டிய தொகை 3,548.22 கோடி மோடி அரசால் தரப்படவில்லை. சமஸ்கிருதத்திற்காக 2024 முதல் 2025 வரை ஒதுக்கிய நிதி 2,532.59 கோடி; ஆனால், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியாவுக்கு ஒதுக்கப்பட்ட நிதி வெறும் 147.50 கோடி. இதில் தமிழுக்கு ஆண்டுக்கு 15 கோடி மட்டுமே! சமஸ்கிருதத்தைவிட 22 மடங்கு குறைவாக ஒதுக்கிவிட்டு, காசி தமிழ்ச் சங்கம் பற்றி மோடி துதி பாடிகள் ‘டமாரம்’ அடிக்கின்றனர். கீழடி அகழாய்வை ஒன்றிய அரசு கைவிட்டதோடு, பன்னாட்டு ஆய்வு நிலையங்கள் கீழடியில் கிடைத்த பொருள்களைப் பற்றித் தந்த அறிக்கையைக் கூட வெளியிட மறுக்கிறது ஒன்றிய அரசு.
கலவரமே ஆயுதம்
தோழர்
அந்தோனியோ கிராம்ஷி கூறியதுபோல, மக்கள் எதிரிகள் (பாசிசவாதிகள்) பாசிசத்தைத் திணிக்கக் கலாச்சார மேலாதிக்கத்தைப் பயன்படுத்துகின்றனர். தவறான தகவல்கள் திரித்துக் கூறப்படுவதால், போலி புள்ளி விவரங்கள், வெற்று வெறுப்புப் பேச்சுகள் மூலம் மக்கள் மூளையைச் சலவை செய்கின்றனர். மக்களைத் தூண்டும் கவர்ச்சிப் பேச்சுகளும் பொய்களும் அவர்களது கலை. இந்தியாவில் சமய, சாதிச் சண்டைகளைத் தூண்டுவதும், கஞ்சா போன்ற போதைப் பொருள்களைப் பரப்புவதும் அவர்களே.
இடையறாத
பதற்றத்தில் மக்களை வைத்து, கலவரங்களைத் தூண்டி அதன்மூலம் அரசியல் இலாபம் தேடுகின்றனர். ‘அர்பன் நக்சல்’,
‘தேச விரோதிகள்’,
‘அந்நியக் கைக்கூலிகள்’ என
முத்திரை குத்தி, பொய்வழக்குகளைப்
புனைகின்றனர். குடிமக்களைக் கண்காணிக்க அலைப்பேசி கருவியில் ‘சஞ்சார் சாத்தி’ எனும் உளவு பார்க்கும் கருவியைப் பொருத்தக் கட்டாயப்படுத்துகின்றனர்.
ஆரியப்
பண்பாடே இந்தியப் பண்பாடு, வேதமே அனைத்துத் தத்துவங்களின் உறைவிடம் என கருத்துத் திணிப்புச்
செய்கின்றனர் பாசிஸ்டுகள். சிந்துச் சமவெளி பண்பாட்டை, சரஸ்வதி பண்பாடாகப் பார்க்கின்றனர். இசுலாமியரைக் கூட்டம் கூட்டமாகவும் தனியாகவும் சீண்டி, கூட்டுக் கொலை செய்தனர். 2025 - கிறிஸ்து பிறப்பு விழாவின் போது கிறித்தவர்களையும் சீண்டியுள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் 700-க்கும் மேற்பட்ட கிறித்தவ மறைப்பணியாளர்கள் துன்புறுத்தப்பட்டுள்ளனர். பழங்குடியினர் கூட்டம் கூட்டமாக ‘மாவோயிஸ்டுகள்’ எனும்
பெயரில் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். பட்டியலினத்தவர் குறிப்பாக, பட்டியலினத்துப் பெண்கள் பட்டப்பகலில் பொதுவெளியில் மானபங்கப்படுத்தப்படுகின்றனர்.
எதிர்க்கேள்வி கேட்போரின் வீடுகள் புல்டோசர் கொண்டு தகர்க்கும் போக்கு நியாயப்படுத்தப்படுகிறது.
இப்போது
தமிழ்நாட்டிலும் பாசிசம் தன் சீரழிவுகளைச் செய்யும் துணிவைப் பெற்றுள்ளது. நாம் விழிப்பாய் இருப்போம். ஏனெனில், பாசிசம் எந்த வடிவில் வந்தாலும் எதிர்க்கவேண்டும் எனும் தூண்டுதலை நமது திருவிவிலியத்தின் மக்கபேயர் நூல் நமக்கு ஊட்டுகிறது.