news
சிறப்புக்கட்டுரை
கடப்பாரை எனும் கவசத்தால்...

தமிழ்நாட்டு அரசியல் களத்தில் இன்று வெகுவாகப் புழக்கத்தில் விடப்பட்டிருக்கும் சொல் கடப்பாரை!

கடப்பாரை எனும் கவசத்தால் (ஆயுதத்தால்) திராவிடத்தை உடைத்துவிடப் போவதாகச் செந்தமிழன் முழங்கியுள்ளார். இவர் உடைத்துவிடக் கருவியாகக் கொள்ளும் கடப்பாரை எனும் கருவிபார்ப்பனியம்என்பதைப் புரியாதவர்கள் இருக்க முடியாது. இந்த அறைகூவலை ஒரு வெற்று முழக்கமாக எடுத்துக்கொள்ளக்கூடாது எனும் ஆதங்கத்தின் விளைவே இக்கட்டுரை.

பார்ப்பனியம் என்பது வெறும் சாதியக் குறியீடு அல்ல; அது ஒரு சித்தாந்தம், வலுவான சித்தாந்தம். வர்ண அடிப்படையிலான வலுவான படிநிலை அமைப்பை எப்படியேனும் கட்டிக்காக்க உறுதி பூணும் சித்தாந்தம். பார்ப்பனியத்தின்மீது கட்டப் பட்ட இந்துத்துவமே இதன் மறுவடிவம். இந்துத் துவம் என்பதும், பார்ப்பனிய மேலாண்மை என்பதும் இக்கொள்கைகளின் அடிப்படையில் உருவாகவிருக்கும் இந்து இராஷ்டிரமும் வேறு வேறல்ல; ‘இந்துத்துவாஎன்று சொல்லை உருவாக்கிய வீரசவார்க்கர் (1923) யாரை இந்து என்றழைக்கிறார்?  ‘இந்துஅடையாளம் என்பது வெறும் நம்பிக்கையில் அல்ல! ஆனால், இது ஒரு கலாச்சாரம், உள்ளுணர்வு (Belonging).

இந்தியாவில் வாழ்வோருக்கு இப்பூமி  பித்ரு பூமி (Father Land) மட்டுமல்லாது, புண்ணிய பூமியாகும் (Holy land). இப்பூமியில் கிறித்தவருக்கும் இசுலாமியருக்கும் இடமில்லை. அவர்களின் புண்ணியத் தலங்கள் இங்கு இல்லை. இங்கு வாழும் அனைத்துச் சாதியினரும் இந்துகளே. சவார்க்கர் தீண்டாமையை எதிர்த்த போதும், சாதி அமைப்பில் சீர்திருத்தம் செய்ய விரும்பினாரே தவிர, ஒழிக்க (To Destroy) விரும்பவில்லை. சாதிய அமைப்பு ஒரு வேலைப்பிரிவு என்பதால், இந்து மதத்திலிருந்து இப்பிரிவை வேரறுக்க முடியாது என்றே நம்பினார். இப்பிரிவு இயல்பானது, இயற்கையானது, ஒற்றுமையை வளர்ப்பது என்று நம்பினார்.

சவார்க்கருக்குப் பின் இந்துத்துவத்தைத் தூக்கிப்பிடித்த எம்.எஸ். கோல்வால்க்கர் (1939) ‘நாம் அல்லது நமது தேசம் பற்றிய விளக்கம் (We or our nationhood defined) என்ற நூலிலும், ‘Bunch of thoughtsஎன்ற நூலிலும், வர்ணப்பிரிவு பாராட்டப் பெற வேண்டுவது எனவும், இது இறைவன் ஆசியால் உருவாக்கப்பட்டது எனவும் (Divinly Ordained) எழுதுகிறார். அம்பேத்கர் மற்றும் பொதுவுடைமையாளர்கள் இவ்வமைப்பைச் சாடுவதைக் கடுமையாகக் கண்டிக்கிறார். கோல்வால்க்கர்சாதியப் படிநிலை, மக்களின் ஒடுக்கும் வடிவமல்ல; இதுதான் பிரபஞ்சத்தின் முறையான ஒழுங்கு (order) என்பார் (ஆனந்த் டெலும்டே, Outlook. Dec.2025).

பார்ப்பனியத்தின் உள்ளடக்கம் என்னவென்பதைத் தமிழர் மட்டுமல்ல, இந்தியத் துணைக் கண்டமே அறியும். இந்தியாவிலும் ஏன் தமிழ்நாட்டிலும் தோன்றிய பக்த இயக்கம், பெரியார் தலைமையில் உருவான சுயமரியாதை இயக்கம், இக்காலகட்டத்தில் அம்பேத்கர் தலைமையில் உருவான தலித் இயக்கம் என்பனவெல்லாம் ஒரு வகையில் கவனித்தால் சாதி எதிர்ப்பு இயக்கங்களே. மானுடரின் மாண்பையும் உரிமைகளையும் காக்கும் வகையில் திடமான சித்தாந்தத் தெளிவோடு உருவாகி, இந்தியச் சமூக அமைப்பில் பெரிய மாற்றத்தை உருவாக்கி வந்த இவ்வெதிர்ப்பு இயக்கங்களுக்கு எதிராகத் தோன்றியதுதான் இந்துகளை மதரீதியாக ஒருங்கிணைக்கும் போர்வையில்இந்துஎன்ற பேரடையாளத்திற்குள் ஒருங்கிணைக்கும் சூழ்ச்சியில் சாதிய அடையாளத்தைக் கட்டிக்காத்து வருவதுதான் இந்துத்துவம்.

இந்துத்துவ இயக்கத்தின் மூலவர்களான சவார்க்கர், கோல்வால்க்கர் தொடங்கி இன்றைய மோகன் பகவத் வரை தேசியம் என்ற பெயரில், இந்தியாவின் பன்மைக் கலாச்சாரப் பண்பை அழித்து, கலாச்சாரத் தேசியம் என்ற பெயரில் இந்து தேசத்தைக் கட்டமைத்து, இந்தியாவின் தேசிய இனங்களின் தனித்துவத்தை மறுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் வெகு வேகமாக நடந்து வருகையில், நமது ஊரில் தமிழ்த் தேசியத்தை வீதியெங்கும் முழங்கிய ஒருவர், தமிழ்த் தேசியத்தின் மாற்று அடையாளமாகத் திகழும் திராவிடச் சிந்தனையை - திராவிடக் கருத்தியலை ஆரியக் கடப்பாரை கொண்டு தகர்க்கப் போகிறாரா?

இந்துத்துவச் சக்திகள், சனாதனிகள் வர்ண பேதம் உருவாக்கும் கெட்டியான படிநிலை அமைப்பைப் புனிதமாகக் கருதுகின்றனர்; சமனற்றச் சமூக அமைப்பைத் தேசியமாகக் கட்டமைக்கின்றனர்; அவ்வப்போது முன்னெடுக்கும் மக்களை உள்ளடக்கிய திட்டங்களால், சனரஞ்சக வாக்குறுதிகளால் ஓரங்கட்டப்பட்ட மக்களை மீண்டும் ஓரங்கட்டுவதோடு, ஒடுக்கப்பெறும் மக்கள் தாம் அடிமையானோம் என்பதை மறக்கச் செய்கின்றனர் (Outlook டிசம்பர் 2025).

காந்தியும், அவரின் காங்கிரஸ் இயக்கமும் முன்னெடுத்த இந்திய தேசியம் எனும் பேரமைப்பு, மாநிலங்களின் தனித்துவம் உணர்ந்து மொழிவாரி மாநிலங்களை உருவாக்கினாலும், மத்திய-மாநில அரசுகளுக்கான தனித்த அதிகாரங்களையும், பொதுவான அதிகாரங்களை வகுத்தாலும், மத்திய- மாநில அரசுகளிடையே உரசல்கள் இருந்தன. இவ்வுரசல்களால்திராவிட நாடுஎன்ற முழக்கமும் எழத்தான் செய்தது.

இன்றைய இந்துத்துவ அரசு முன்வைக்கும்ஒரேஎன்ற ஒற்றை முழக்கத்தின் உள்ளடக்கம் என்ன? ‘ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே தேர்தல்!’ - இம்முழக்கத்தின் உள்ளடக்கம் இவர்களின் காதுகளில் எட்டாமற்போன மாயமென்ன?

உண்மையான தேசியம், உள்ளடக்குவதை (Inclusion) ஒதுக்காது! இந்துத்துவ அரசு முன்வைக்கும் ஒற்றை முழக்கத்தை இவர்கள் எந்தக் கடப்பாரையால் வீழ்த்தப் போகிறார்கள்? ‘ஒற்றைஎனும் முழக்கம் வெறும் எண்ணல்ல; ஒற்றை எதேச்சதிக்காரத்தின் வடிவம். ‘ஒன்றுஎன்பதும், ‘ஒற்றைஎன்பதும் மற்றொன்றின் இருப்பை மறுப்பதால், இப்போக்கினில் சனநாயகம் இல்லை. சனநாயகம் மறுக்கப்படும்போது, தேசிய இனங்களின் உண்மைத்தன்மையானதனித்துவம்  மற்றும் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகும்.

தேசங்களின் நாடாம் இந்தியாவில் தேசிய இனங்களின் நியாயமான கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதோடு, நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைக்கும் எதிரான குற்றமாகக் கருதப்பட்டு, கடுமையான தண்டனைக்கு ஆளாகும் நிலையும் உருவாகும். அதுவும் இன்றைய மதவாத அடிப்படையிலான அரசு மதரீதியான விமர்சனங்களைக்கூட தேச விரோதக் கருத்தாக எடுத்துக்கொண்டு தேச விரோத (Sedition) வழக்கும் தொடுத்துச் சிறைக்கும் அனுப்பி வைப்பதைப் பார்க்கிறோம்.

தமிழ்த் தேசியமும், இந்து தேசியமும் இணைந்து செல்லமுடியாது. இந்தியச் சமூகம், பன்மைச் சமூகம் என்று ஏற்றுக்கொண்டு, பன்மைத்துவம் காக்கப்  போராடுவதுகூட பிரிவினைவாதமாகக் கருதப்படும் சூழல் கண்முன்னே வெட்ட வெளிச்சமாகத் தெரிகையில், கடப்பாரை கொண்டு திராவிடத்தை உடைக்க நினைக்கும் இவர்கள் உணர வேண்டிய பாடமிது.

தமிழ்த் தேசியம் பேசும் இவர்களும், இந்து தேசியம் பேசும் இந்துத்துவர்களும் எங்கேயாவது கருத்தியல் ரீதியாக மோதுவதைப் பார்க்க முடிகிறதா? பரந்துபட்ட இந்தியாவில் இந்து தேசியம் அல்லது கலாச்சாரத் தேசியம் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கலாச்சாரத் தேசியம், பன்முகச் சமூக அமைப்புள் தேசிய இனங்களின் இருப்பை அழிக்க முனையும் என்ற உண்மையை இவர்கள் எங்கேயாவது எடுத்துரைத்ததுண்டா? கலாச்சாரத் தேசியம் என்ற செயலில் முன்னெடுக்கப்படும் அரசின் திட்டங்கள், செயல்பாடுகள் குறிப்பாக, இந்தி மொழி திணிப்பு, சமஸ்கிருத மொழிக்கு அளிக்கப்படும் முன்னுரிமை, தமிழ்நாட்டில் நடைபெறும் அகழ்வாராய்வு உண்மைகளை மதிக்காமை, மதச்சிறுபான்மையின்மீது காட்டப்பெறும் பகை, அவர்களின் நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள், காஷ்மீர் மக்களின் சுயாதீன உரிமைகளைத் தொடர்ந்து மீறிவருதல் என்பனவெல்லாம் இவர்கள் கண்களுக்குப் பிரச்சினையாகவில்லையே!

நெற்றியில் திருநீற்றுத் பொட்டணிந்து முப்பாட்டன் முருகன் புகழ் பாடும் இவர்கள், பெரும்பான்மை மத உணர்வைக் கருவியாக்கி அரசியல் ஆதாயம் தேடும் பெரும்பான்மை  மதவாதிகளின் கொள்கைக்கு ஆதரவாகக் களமாடுகிறார்கள் என்றுதானே எண்ணத் தோன்றுகிறது.

தமிழ்நாட்டில் பேசப்படும் திராவிடம் ஓர் அடையாளமே தவிர, வேறு இல்லை. இன்று வளர்ந்து நிற்கும் பார்ப்பனிய இந்துத்துவ மாடலுக்கு எதிராக மாற்றுக்கருத்தியல் கொள்ளவேண்டிய சூழலில் திராவிடத்தை முன்வைக்கிறோம். திராவிடம் ஏற்றுக்கொண்ட கருத்தியல், தமிழ்த் தேசியத்திற்கு எதிரானதல்ல; திராவிடச் சித்தாந்தம் ஒரு காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது. வடவராகிய ஆரிய ஊடுருவலும்மேல்சாதி ஆதிக்கமும், சாதி ரீதியான பாகுபாடும் நிறைந்து நின்ற சமூக அமைப்பில்திராவிடம்என்ற கடப்பாரை தேவைப்பட்டது. தந்தை பெரியாரும் நீதிக்கட்சியும் திராவிட இயக்கமும் இன்றைய தி.மு.. அரசும் ஆரிய மேலாண்மையை உடைத்தெறிய தேவைப்பட்ட கடப்பாரை அதற்கான வேலையைச் செவ்வனே செய்தது.

கடப்பாரை எனும் கவசம் கொண்டு நாம் வீழ்த்த வேண்டுவது இன்றைய ஆளும் வர்க்கக் கருத்தியல் என்பதாக இருக்க, ‘திராவிடம்என்ற ஒரு சொல்லை, அச்சொல்லை எப்போதும் தாங்கியே செயல்படும் திராவிட மாடல் அரசினைதீய சக்திஎன்று வாய் கூசாமல் நாளும் புலம்பும் கட்சிகள் அனைத்தையும் சனநாயகம், சமத்துவம், சமயச்சார்பின்மை கடப்பாரைகளால் அடித்து நொறுக்கவேண்டிய காலத்தில் சமூக நீதியை, சுயமரியாதையை, பெண் விடுதலையை, மாநில சுயாட்சிக் கோட்பாட்டை உள்ளடக்கமாகக் கொண்ட திராவிடத்தை உடைத்து, உடையுண்ட கற்கள்மீது எதைக் கட்டப் போகிறார்கள்?

மக்களை குறிப்பாக, மதச் சிறுபான்மையினரை நாட்டின் எதிரிகளாக, அந்நியராகச் சித்தரித்து அவர்கள்மீது ஏவப்பெறும் வன்முறைகளை இவர்கள் பார்க்கவில்லை.

சனாதனத்தை ஒழிப்போம்என்று பேசிய ஒற்றை வார்த்தையால் வெகுண்டுபோன சனாதனக் காவலர்கள், தமிழ்நாடே இந்துகளுக்கு எதிரானது என்று வட மாநிலங்களில் பரப்புரை செய்தபோது இவர்கள் எங்கே போனார்கள்?

ஒன்றிய அரசின் புதிய தொழிலாளர் பற்றிய சட்டங்கள், தொழிலாளர் நலம் பாதிக்கப்படும் என்று நாடே கேள்வி எழுப்பி வருகையில்மக்களின் வேலைக்கான 100 நாள் வேலைத்திட்டம் பறிக்கப்பட்டபோது, இத்திட்டத்தில் இடம்பெற்ற காந்தியின் பெயர் களவாடப்பட்டபோது கடப்பாறைகளைக் காணோமே!

கால்டுவெல் மதம் பரப்ப வந்த ஒரு பாதிரி என்றும், அவர் முன்னிறுத்திய திராவிடம் பொய்யானது என்றும் பேசும் இவர்கள், ‘கால்டுவெல், போப் வேறு வேறானவர்கள்என்ற வேறுபாடு கூட தெரியாத நிலையை என்னவென்று சொல்வது?

சங்கப் பரிவாரங்கள், திராவிடம் பற்றிப் பேசிய கால்டுவெல்லை எங்கு வைத்துள்ளதோ, அதே இடத்தில் இவரும் வைப்பதில் வியப்பு எதுவும் இல்லையே!

news
சிறப்புக்கட்டுரை
கார்மலில் என் அழைத்தல்!

ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்!” (திபா 34:8).

என் ஆண்டவர் இயேசுவின் மீது அளவுகடந்த அன்பும், அவரது அன்பைச் சுவைத்துப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும் என் சிறுவயது முதலே எனக்குள் இருந்தன. இதை என் அம்மாவிடம் அடிக்கடி கூறுவேன். ஒருநாள்என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டேன். அதற்கு என் அம்மா, ‘நீ இயேசுவைக் காண துறவியாகச் சென்றால், எப்போதும் ஆண்டவரின் அருகிலேயே இருக்கலாம்என்றார்.

அப்போது நான் பத்து வயது சிறுமி. துறவி என்றால் என்ன என்று கூட அறியாத வயது. இந்நேரத்தில் எங்கள் கிராமத்திற்கு கார்மல் அருள்தந்தையர்கள் புதிதாக வந்தனர். அப்போது இருந்த பங்குத்தந்தையிடம் நான் துறவியாக வேண்டும் என்ற என் விருப்பத்தைக் கூறினேன். தந்தை அவர்கள், ‘முதலில் நன்கு படி; நான் உன்னை அருள்சகோதரிகளிடம் அழைத்துச் செல்கிறேன்என்றார்.

நாள்கள் கடந்தன. இயேசுவின் மீது எனக்கிருந்த பக்தியும் ஆர்வமும் நாளுக்கு நாள் மிகுந்தது. நான் பத்தாம் வகுப்பு படித்து முடித்தவுடன் மீண்டும் என் பங்குத்தந்தையிடம் சென்று கேட்டேன். அப்போது அவர் என்னை கார்மல் அருள்சகோதரிகளிடம் அழைத்துச் சென்றார்.

அங்கிருந்த ஒரு வயது முதிர்ந்த அருள்சகோதரி ஆலயத்தில் அமர்ந்து செபித்துக் கொண்டிருந்தார். அவருடைய செப வாழ்வு என் துறவற வாழ்வுக்கான ஆர்வத்தை மேலும் கூட்டியது. அவர்கள் எனக்குக் குழந்தை இயேசுவின் தெரேசாவின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிக் கூறினார்கள். சிறு வயதிலேயே சிறப்பு அனுமதி பெற்று கார்மல் சபையில் துறவியாகச் சேர்ந்து, நான்கு சுவற்றிற்குள் இருந்து அவர் மேற்கொண்ட கடுந்தவ செப வாழ்க்கையையும், தன்னுடைய செபங்களையெல்லாம் பாவிகளின் மனமாற்றத்திற்காகவும், ஆன்மாக்களை மீட்பதற்காக ஒப்புக்கொடுத்து செபித்ததால் அவர் வேதபோதக நாடுகளின் பாதுகாவலியாக உயர்ந்ததும், நான் விண்ணுலகிற்குச் சென்று மண்ணுலக மக்களுக்கு ரோஜா மலர்மாரி பொழிவேன் என்று கூறிய குழந்தை இயேசுவின் தெரேசாவின் வாழ்க்கை எனக்குள் தீயாகப் பற்றி எரிந்தது. அவர்களைப் போல கார்மல் சபையில் சேரவேண்டும் என்று முடிவு செய்தேன்.

பன்னிரண்டாம் வகுப்பு முடித்ததும் கார்மல் சபையின் சட்டதிட்டங்களைக் கடைப்பிடித்து வாழும் அருள்சகோதரியாக 2008-ஆம் ஆண்டு புனித தெரேசாவின் கார்மல் சபையின் திருவுடை அணிந்து கொண்டேன். அதன் மூலம் என் சபையின் நிறுவுநர் அன்னை எலிஸ்வாவின் வாழ்க்கை வரலாறும் என்னைக் கவர்ந்தது.

இன்பத்திலும்-துன்பத்திலும், வறுமையிலும்-வளமையிலும், நோயிலும்-சாவிலும், இருளிலும்-ஒளியிலும்... எந்நிலையிலும் அஞ்சாது இயேசுவில் சரணடைந்து குழந்தைபோல் அவரது தோளில் சாய்ந்து இறுதிவரை கார்மல் சபையில் உறுதியுடன் வாழ என்னைக் கார்மல் சபையில் அர்ப்பணித்த எம் பெற்றோருக்கு நன்றி கூறி, என் அழைப்பின் சிறு அனுபவத்தைப் பகிர்தலில் மிக்க மகிழ்ச்சி!

news
சிறப்புக்கட்டுரை
அன்னைக்கு என் சாட்சியம்! (ஓர் அருள்சகோதரியின் உண்மை சம்பவம்)

அழியும் நிலையற்ற செல்வத்தை இயேசுவின் அன்பிற்காக விட்டு விட்டு, அழியா ஆன்மாவை உரிமையாக்கிக் கொண்ட அன்னை எலிஸ்வாவிற்கு என் சாட்சியம்.

என் பெயர் சகோதரி அருள் கலா. நான் விமலா மறைமாநிலத்தில் உள்ள ஒரு CTC சகோதரிதூய தெரேசாவின் கார்மல் சபையினால் ஈர்க்கப்பட்டு 1994-இல் பாதம் பதித்தேன். 1997-இல் முதல் வார்த்தைப்பாடு. 2004-இல் இறுதி வார்த்தைப்பாடு.

2011-இல் தொண்டை வலி ஆரம்பமாகி, 2013-இல் புற்றுநோய் என்று உறுதியானது, அப்போது எனக்கு வயது 35.  2014-இல் அதற்கான மருத்துவச் சிகிச்சைகளும் முடிந்தன.

வலியின் காரணமாக மெதுவாகச் சாப்பிடும் வேளையில் உணர்வற்ற நிலை. மருத்துவமனையில் முதலில் வெண்டிலேட்டர் (Ventilator); பிறகு டிரக்கியோஸ்டமி (Tracheostomy) செய்யப்பட்டன. சில மணி  நேரத்திற்குப் பின் இது மருத்துவமனை என்று புரிந்துகொண்டேன்.

நான் மருத்துவரிடம், ‘எப்படிக் காப்பாற்றினீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘கடவுள் காப்பாற்றினார், ஏதோ ஒரு திட்டம் இருக்கிறதுஎன்று கூறினார். அந்த நாள்களில் அன்னை எலிஸ்வாவின் அமைதியும் தியாகமும் என் இதயத்தை ஊடுருவத் தொடங்கியது. 2015-இல் எதுவுமே சாப்பிட முடியாததால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்கள். என் கண்களிலிருந்து கண்ணீரைத் தவிர வேறு எதுவும் வரவில்லை.

ஐந்து நாள்களுக்குப் பின் அறுவை சிகிச்சை செய்த இடம் மீண்டும் திறக்கப்பட்டு (Open) உணர்வற்ற நிலை ஏற்பட்டது. மரணம் (Death), கோமா (Coma), அல்லது பக்கவாதம் (Paralyzed) என எது வேண்டுமானாலும் நேரலாம் என்ற நிலை இருந்தது. ஆனால், இரண்டு மணி நேரத்திற்குப் பின் கண் அசைந்தது. மருத்துவர்கள் மகிழ்ச்சியுற்றுஇது ஓர் அதிசயம் (Miracle) என்று சொன்னார்கள். ‘நீங்கள் கடவுளின் பிள்ளைஎன்றும் கூறினார்கள்.

அன்னை எலிஸ்வா அமைதியிலும் செபத்திலும் தியாகத்திலும் வாழ்ந்ததை நினைக்கிறேன். எனது மௌன மொழி நான் அன்பு செய்யும் கடவுளுக்கு மட்டுமே புரியும். அன்னை எலிஸ்வா பிறர் நலனுக்காக வாழ்ந்தார்கள். உணவின்றி வறுமையினால் வாடும் ஒருவரின் பசியை அகற்ற வேண்டித் தினமும் இயேசுவிடம் நான் வேண்டுவேன்; இப்பொழுதும் வேண்டுகிறேன். சாட்சிய வாழ்வு வெறும் வார்த்தையினால் அல்லாமல், வாழ்க்கையினால் அமையவேண்டும். இயேசுவின் மீதுள்ள அன்பால் எமது அன்னை எலிஸ்வாவின் பரிந்துரையால் 2026-ஆம் ஆண்டில் கால்பதித்து பயணம் செய்கிறேன்.

இயேசுவுக்கு நன்றி!

அன்னை எலிஸ்வா புகழ் ஓங்குக!

news
சிறப்புக்கட்டுரை
CTC-யின் மறைப்பணி

புனித அவிலா தெரேசாவின் கார்மல் சபையான எம் சபை தூய ஆவியின் துணையால், கார்மல் அன்னையின் ஆசியால் ஆன்மிகப் பணியிலும் மறைப்பணியிலும் சிறந்து வேரூன்றி காணப்படுகிறது. செபமும் சேவையும் இணைந்த வாழ்க்கை முறையால், மனித சமூகத்தின் முழுமையான வளர்ச்சிக்காகத் தன்னை அர்ப்பணித்துள்ளது. குறிப்பாக, ஏழைகள், ஒதுக்கப்பட்டவர்கள் மற்றும் கைவிடப்பட்டவர்களின் நலனுக்காக எம் சகோதரிகள் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்றனர்.

கல்விப் பணி

கல்விப் பணி எம் தெரேசாவின்  கார்மல் சபையில் முக்கியமான பணிகளில் ஒன்றாகும். எம் சகோதரிகள் பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களை  நிர்வகிக்கின்றனர். கிறித்தவ மதிப்பீடுகளின் அடிப்படையில் தரமான கல்வியை வழங்குகின்றனர். ஏழைகள் மற்றும் பின்தங்கிய குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளுக்குச் சிறப்புக் கவனம் செலுத்துகின்றனர். மேலும், மாணவர்களின் அறிவு, ஒழுக்கம், ஆன்மிகம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கின்றனர். இந்தப் பணிகளின் மூலம் நல்ல குடிமக்களையும், உறுதியான மற்றும் திடமான நம்பிக்கையாளர்களையும் உருவாக்குகின்றனர்.

மருத்துவப் பணி

இயேசுவின் குணப்படுத்தும் பணியைத் தொடரும் எம் சகோதரிகள் மருத்துவமனைகள், மருந்தகங்கள், சிகிச்சை மையங்கள் மற்றும் முதியோர் இல்லங்களில் சேவை செய்கின்றனர். நோயாளிகள், முதியோர், நீண்ட நாள் நோயாளிகள் ஆகியோருக்குப் பணிவுடன் பராமரிப்பு அளிக்கின்றனர். சுகாதார விழிப்புணர்வையும் அவ்வப்போது கிராமங்களுக்குச் சென்று கற்பிக்கின்றனர். நோயாளிகளுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் ஆன்மிக ஆதரவை வழங்குகின்றனர். இந்த மருத்துவப் பணியை உடல், மனம் மற்றும் ஆன்மாவைச் சீரமைக்கும் பணியாக எம் சபை சகோதரிகள் செய்து வருகின்றனர்.

சமூகப் பணி

சமூக நலனுக்காக எம் சகோதரிகள் ஏழைகள், பெண்கள், குழந்தைகள் மற்றும் ஒதுக்கப்பட்ட சமூகங்களுக்கிடையே பணியாற்றுகின்றனர். மறுவாழ்வு மையங்கள், போதைப்பழக்கம் உள்ளவர்களுக்குச் சிறப்பு ஆலோசனைகள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் நடத்துகின்றனர்.

சமூகத்தின் அடிப்படையான அழகான குடும்பங்களை வலுப்படுத்தி வருகின்றனர். மேலும், திருமணத்திற்கு முன் தயாரிப்பு வகுப்புகள் மற்றும் குடும்ப ஆலோசனைகளை வழங்குகின்றனர். பெற்றோர் வழிகாட்டல் மற்றும் இளைஞர் வளர்ச்சி நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். குடும்பங்களில் நம்பிக்கை மற்றும் மதிப்பைப் பெற்றுத் தரும் கல்வியை வளர்க்க உதவுகின்றனர். சிக்கல்களை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்குத் துணை நிற்கின்றனர்.

சிறைப்பணி

சிறைக் கைதிகளுக்கு ஆன்மிக வழிகாட்டல், ஆலோசனை மற்றும் மன ஆதரவை வழங்குகின்றனர். மேலும், அவர்களுக்கு நம்பிக்கை பகிர்வு மற்றும் மறுவாழ்வு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இந்தப் பணி சமூகத்தின் ஓரங்கட்டப்பட்டவர்களிடையே கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்துகிறது.

இறுதியாக, தூய தெரேசாவின்  கார்மல் சபையான என் சபை தியானமும்-செயலும் இணைந்த வாழ்க்கை முறையால் கிறிஸ்துவின் பணியைத் தொடர்ந்து நிறைவேற்றுகிறது.

செபத்தால் வழிநடத்தப்பட்டு, அன்பால் வலுப்பெற்ற சகோதரிகள், உலகில் இறைவனின் அன்பின் சாட்சிகளாகத் தங்களை அர்ப்பணிக்கின்றனர்.

news
சிறப்புக்கட்டுரை
வெளிச்சமும் இருளும்

தேசிய இனங்களில் பூர்வீகக்குடிகளே மண்ணின் மாந்தர்கள். அவர்கள் மண் சார்ந்த, இனம்  சார்ந்த, மொழி சார்ந்த, பண்பாடு, கலாச்சார, நாகரிகம் சார்ந்த தம் தேசத்தில் முதன்மை மூத்தகுடிகள். அறிவார்ந்த சமூக, பொருளாதார, அரசியல் பின்புலம் கொண்ட ஓரின மக்களாகிய அவர்கள் என்றும் தங்கள் மரபார்ந்த தொன்மையைத் தொலைக்க விரும்புவதில்லை. அவர்களைத் தாய்மொழி ஒரு தாய்ப்பிள்ளைகளாய்க் கட்டமைக்கிறது. தொப்புள் கொடி உறவுகளாய் வாழவைக்கிறது.

1937 முதல் தமிழரின் மொழிப்போர் வரலாறு தொடங்குகிறது. 1948, மற்றும் 1952 ஆகிய  ஆண்டுகளில் மொழிப்போர் மாநாடு, போராட்டங்கள் என உருபெற்றாலும், 1965-இல் உச்சம் பெறுகிறது. இந்தித் திணிப்பு, மும்மொழிக் கொள்கை என ஒன்றிய அரசிற்கு எதிரான போராட்டங்கள் வலுபெறுகிறது. தமிழ்நாடு எங்கும் உள்ள அனைத்துக் கல்லூரி மாணவர்கள்இந்தி எதிர்ப்புச் சங்கம்என்ற பெயரில் ஒருங்கிணைகிறார்கள். 18 மாணவத் தலைவர்கள் போராட்டத்தை வழிநடத்துகிறார்கள். வன்முறை மற்றும் கலவரம் வெடிக்கிறது. இதில் 70 பேர் உயிரிழக்கின்றனர். அதில் இருவர் காவல் துறையினர். ஒரு காவலர் திருப்பூர் ஆற்றுப்பாலம் அருகே கொல்லப்பட்டார். திருப்பூரில் நடைபெற்ற கலவரம் குறித்து, சிறு வயதில் கூறக்கேட்டு அதிர்ந்து  உள்ளோம்.

1965 - மொழிப்போரின் நீட்சியாகப் பல மாணவத் தலைவர்கள் தி.மு..வில் இணைகிறார்கள். தி.மு.. கட்டணம் வசூலித்துக் கொண்டு அரங்கக் கூட்டங்களை நடத்துகின்றது. மாலைநேரப் பல்கலைக்கழக வகுப்புகள் என்ற பெயரில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. பத்திரிகைகள், நாளேடுகள், விழிப்புணர்வு நாடகங்கள், திரைப்படங்கள் என இவை இளைஞர்களைக் கவர்கிறது. 1967 - சட்டமன்றத் தேர்தலில் மாணவத் தலைவர்கள் வெற்றி பெறவும், தி.மு.. ஆட்சியைப் பிடிக்கவும் இளையோரின் தீவிர அரசியல்மயமாக்கப்பட்ட போக்கு ஒரு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது. பிற்காலத்திலே தி.மு.. ஆட்சி அதிகார இழப்பு, எம்.ஜி.ஆரின் அரசியல் செல்வாக்கு எனப் பின்னடைவைச் சந்திக்கிறது. மீண்டுமாக 1980-இல் இளைஞரணி என்ற அமைப்பை உருவாக்கி, 1982-இல் அமைப்பு முழு வடிவம் பெறுகிறது.

இளைஞரணி என்ற அமைப்பிற்குப் பாசறைக் கூட்டங்கள் இரண்டு அல்லது மூன்று நாள்கள் நடக்கின்றன. அதில் கட்சியின் மூத்த தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், ஓய்வுபெற்ற இராணுவ மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்பட்ட பல்துறை அதிகாரிகள், புதிய இளையத் தலைமுறை தலைவர்களுக்குப் பாடம் எடுக்கிறார்கள். புல்வெளிக் காடுகளில், புற்களின்  வேர்கள் சேர்த்திருக்கும் நீர் ஓடையாகி, அருவி விழுந்து நதியில் கலப்பது வரை விளக்குகிறார்கள். குண்டுவெடிப்பு, கலவரங்கள், தற்காப்புகள் கற்றுத் தரப்படுகிறது. அரசியல் தலைவர்கள் சமூக நீதி, மொழிப்போர், காவேரி, முல்லை பெரியார், கச்சத்தீவு பற்றிய வகுப்பு  எடுக்கிறார்கள். அடிப்படை அரசியல் அறிவு புகட்டப்படுகிறது. இதில் வியந்த ஆளுமைகள் தமிழ்நாட்டில் நீதித்துறையில், ஊடகத்துறையில், அரசுத்துறைகளில், ஆட்சியில் முக்கிய முகங்களாக இன்று  மிளிர்வது கண்கூடு.

ஓர் இருநாள் பாசறைக் கூட்டத்தைத் தொடங்கி வைத்து, அதன் மாநிலச் செயலாளர் கூட்ட இடத்திலேயே தங்கியிருக்கிறார். இறுதி இரண்டாம் நாள் மாலை, ஒவ்வோர் ஊரின் மூன்று இளைஞரணி அமைப்பாளர்களும் மாநில அமைப்பாளரிடம், புகைப்படம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்பது நடைமுறை. பாசறையில் கலந்து கொள்வோரின் சுய விவரம் (பயோ-டேட்டா) மாநிலச் செயலாளரிடம் இருக்கும். அவர் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு நிர்வாகிகளையும் அறிந்துகொள்ள இது ஓர் ஏற்பாடு. ஏதாவது குறிப்பிடத்தக்கச் செய்தி இருந்தால், மாநிலச் செயலாளர் நேரடியாக அந்த நிர்வாகியிடம் பேசுவார். தனித்திறமைகள் பற்றிய கேள்விகளும் முன்னெடுப்புகளும் அங்கு நடக்கும்.

ஒவ்வோர் ஊர் பாசறைக் கூட்டத்திலும் அக்கட்சி தோற்றம், வளர்ச்சி, போராட்டங்கள், ஆட்சி, ஆட்சியின் திட்டங்கள் என்ற புகைப்படக் கண்காட்சி அமைக்கப்படும். பயிற்சியாளர்கள் அதைப் பார்க்க வேண்டும் என்பது கட்டாயம். ஒருமுறை வேறு பணிகளில் இருந்த காரணத்தால், அக்கண்காட்சியைக் காணாத இரு  அமைப்பாளர்களை மாநிலச் செயலாளர் கண்டித்துப் பேசியதை நாம் பார்த்திருக்கிறோம்.

இதுபோன்ற கண்காட்சி அவர்கள் தலைமை அலுவலகத்தில் உள்ளது. அதைப் பார்த்த என் நண்பர் பார்வையாளர் புத்தகத்தில் எழுதிய குறிப்பு கட்சித் தலைவரால் குறிப்பிடப்பட்டுச் செய்தியானது. அக்கட்சியில் தலைவர், பொதுச்செயலாளர் உள்ளிட்ட இரண்டாம் கட்டத் தலைவர்கள் கட்சி அமைப்பின் அடிமட்டம் வரை வேரூன்றி இருந்தனர்; தொண்டர்களிடம் பேசிப் பழகினர்.

விழிப்புணர்வு மிக்க இவ்வாறான தமிழ்ச் சமூக மக்களுக்குப் பிராணிகள் நலச்சங்கம், உச்ச நீதிமன்றம் வழி ஜல்லிக்கட்டு தடை வந்தது. 2017, சனவரியில் ஜல்லிக்கட்டுப் போராட்டம் வெடித்தது. 2017, சனவரி 21 ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்நாளிதழ் ‘20 இலட்சம்  மாணவர்கள், இளைஞர்கள், இளம் பெண்கள், சென்னை மெரினாவில் கூடிப் போராட்டம் நடத்தினர்என வருணிக்கிறது. தன்னெழுச்சியாகக் கூடிய கூட்டத்திற்குத் தண்ணீர், உணவு சரியான முறையில் வழங்கப்பட்டன. இயற்கை உபாதை கழிக்க நடமாடும் கழிவறைகள் கொண்டுவரப்பட்டன. அவசரக்கால ஊர்திகள்  நிறுத்தப்பட்டிருந்தன. இரவு தெருவிளக்குகள் வேண்டுமென்றே அணைக்கப்பட்டபோது எந்தச் சலசலப்பும் இல்லை. ஒவ்வொருவரும் தங்கள் கைப்பேசி விளக்குகளை ஒளிரவிட்டு மெரினாவையே வெளிச்சக் காடாக்கினர். 20 இலட்சம் பேர் கலந்துகொண்ட அறவழிப் போராட்டத்தில் இன, மொழி உணர்வுப் பாடல்கள் பாடப்பட்டன; உரைவீச்சுகளும் நடந்தன.

உலகமே வியந்த தமிழ் இளைஞர்களின் போராட்டம் உலக வரலாற்றில் இடம்பெற்றது. உலகளாவிய மானிடச் சமூகத்திற்கு ஒழுங்கிற்கும் கட்டுப்பாட்டிற்கும் கண்ணியத்திற்கும் தமிழ் இளைஞர்களே பாடமாகி இருந்தார்கள். மேலும், தமிழ்நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பத்து இலட்சம் இளைஞர்கள் அமைதி வழியில் போராடினர் என்பது வரலாற்றுப் பதிவு.

வாருங்கள்... வெளிச்சப் பக்கங்களை விட்டு, இருண்ட பக்கத்திற்கு நகர்வோம். தெருக்களில் திரைப்பாடல்களை ஒலிக்கவிட்டு, சிலர் மது மயக்கத்தில் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். காவல்துறை சிறு சிறு சீண்டல் புகார்களால் ஆண்களையும் பெண்களையும் தனித்தனியே பிரித்து நிற்க வைக்கிறது. அவர்களுக்கு அடிப்படை அரசியல் புரிதல் இல்லை. இவர்களை அரசியல் மயமாக்க எவரும் இல்லை. கூட்டமாகக் கூடினால் நாம் ஒரு பெருங் கூட்டத்தில் உள்ளோம், எதையும் செய்ய துணியும் மனோபாவம் மேலோங்கி இருக்கிறது. தத்துவமில்லாத தலைமையால் யாருக்கும், எதற்கும், கட்டுப்படாத, கட்டுப்பட மறுக்கிற, இரசிக மனப்பான்மை வீறுகொள்கிறது.

தமிழ்நாட்டின் முன்னணி நடுநிலை நாளேடு கோபமாகத் தன் தலையங்கத்தில் தன் மென்மை இயல்பு மாறிப் பேசுகிறது. “கேமிரா வெளிச்சத்திலும், விளம்பர வெளிச்சத்திலும் குழந்தைப் பருவம் தொடங்கி, வளர்ந்த நடிகருக்கு, நடைமுறை எதார்த்தமும் அரசியல் அனுபவமும் இல்லாததன்  விளைவுதான் பல அப்பாவிகளின் உயிரிழப்பிற்குக் காரணமாகி இருக்கிறது. கார்ப்பரேட் பாணியில் பல கோடிகள் செலவழித்துத் திரைப்படங்களை விளம்பரப்படுத்தி வெற்றியடைவதுபோல, அரசியல் வியாபாரமும் நடத்தலாம் என முனைந்ததன் பேரில், மரண சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றனஎன்கிறது. தலைவர் உள்பட தொண்டர்கள்வரை நிகழ்விற்குத் தார்மீகப் பொறுப்பு ஏற்காமல், ‘சதிக் கோட்பாடுஎன முழங்குவது இவர்களின்  அடிப்படை அறம் மறந்த அரசியலை வெளிக்காட்டுகிறது.

அடிப்படையில் ஏட்டுக்கல்வி மட்டும் கற்ற  பெரும்பான்மையான இந்த இளையோரை யார் அரசியல்வயப்படுத்துவது? என்பதே நாளைய  தமிழ்ச் சமூகம் எதிர்கொள்கிற பெரும் சவாலாகும்.

news
சிறப்புக்கட்டுரை
அன்னை எலிஸ்வாவின் பாதையில் மருத்துவப் பணியில் எம் மாண்பு!

மருத்துவப் பணி என்பது ஒரு தொழில் மட்டுமல்ல, அது மனித வாழ்க்கையை மதிக்கும் ஒரு புனித அழைப்பு! அந்த அழைப்பின் ஆழமான அர்த்தத்தை எனக்கு உணர்த்தியவர் அன்னை எலிஸ்வா அவர்கள்.

ஏழை, எளிய, புறக்கணிக்கப்பட்ட மக்களின் வலியைத் தன் இதயத்தில் சுமந்து, அவர்களின் வாழ்க்கையில் நம்பிக்கையை விதைக்கவேண்டும் என்ற அவரது கனவே, எங்கள் சபை  மேற்கொண்டு வரும் மருத்துவப் பணிகளின் அடித்தளமாக அமைந்துள்ளன.

அன்னை எலிஸ்வா அவர்கள் மருத்துவச் சேவையை ஒரு தொழிலாக அல்ல; மாறாக, மனித மரியாதையைக் காக்கும் அருள்சேவையாகவே பார்த்தார். நோயால் வாடிய ஏழை மக்களைப் பார்த்தபோது, ‘சிகிச்சை யாருக்கும் மறுக்கப்படக்கூடாதுஎன்ற அவரது உறுதியான எண்ணமே, எங்கள் சபையின் முதல் மருத்துவப் பணியைத் தொடங்குவதற்கான தூண்டுதலாக அமைந்தது. அந்த எளிய தொடக்கமே காலப்போக்கில் வளர்ந்து, இன்று பல உயிர்களைக் காக்கும் பரந்த மருத்துவச் சேவையாக மலர்ந்துள்ளது.

அன்னை எலிஸ்வாவின் கனவுகளின் பயனாக இன்று எங்கள் சபையில் மொத்தம் 50 மருத்துவத் துறைகள் (Medical Departments) செயல்பட்டு வருகின்றன. இதில் மருத்துவமனைகள், மருந்தகங்கள் (Dispensaries), சுகாதார மையங்கள், மறுவாழ்வு மற்றும் மது விடுவிப்பு (De-addiction) மையங்கள் ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் நோய்களை மட்டுமல்லாமல், நம்பிக்கையிழந்த மனித வாழ்க்கையையும் குணப்படுத்தும் சேவையாக விளங்குகின்றன.

இந்த மருத்துவப் பணிகளில், விமலா மறைமாநிலம் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. இம்மறைமாநிலத்தில் செயல்பட்டு வரும் மொத்தம் எட்டு மருத்துவ மையங்கள், மருந்தகங்கள், பெரும்பாலும் தொலைதூர மற்றும் பின்தங்கிய பகுதிகளில் அமைந்துள்ளன. மருத்துவ வசதிகள் எளிதில் கிடைக்காத இந்தப் பகுதிகளில், இந்த மையங்கள் பல மக்களின் உயிர்களைக் காப்பாற்றியுள்ள உயிருள்ள சேவை மையங்களாகத் திகழ்கின்றன.

என் மருத்துவப் பணி

என் வாழ்க்கையில் மருத்துவப் பணியில் ஈடுபடுவது ஒரு பெரும் அருள்பேறாக நான் உணர்கிறேன். குறிப்பாக, மதுப்பழக்கத்திலிருந்து விடுவிக்கும் மறுவாழ்வு (Rehabilitation / De-addiction) பணியில் ஈடுபடுவதன் மூலம், பல மனிதர்களின் வாழ்க்கை முழுமையாக மாற்றம் பெற்றதை நான் நேரில் கண்டுள்ளேன். மதுப்பழக்கம் காரணமாகச் சிதைந்த குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைவதும், நம்பிக்கையிழந்தவர்கள் புதிய பாதையில், மகிழ்ச்சியான மற்றும் பொறுப்புள்ள வாழ்க்கையை வாழத் தொடங்குவதும் இந்தப் பணியின் உயிருள்ள சாட்சிகளாக உள்ளன.