“பாகிஸ்தானின் கற்பனைக்கு எட்டா வகையில் சரியான தண்டனையை வழங்கியுள்ளோம். இந்தியப் பெண்களின் நெற்றியில் இடப்பட்டுள்ள சிந்தூரை (திலகம்) அழித்தவர்களைத் தவிடு பொடியாக்கியுள்ளோம். பாரதத்தின் சேவகனாய் உங்கள் முன் நிற்கும் மோடி எனும் நான் இன்று தலைநிமிர்ந்து நிற்கிறேன். என் உள்ளம் குளிர்ந்துள்ளது. ஆனால், என் குருதியோ கொதிக்கிறது. இப்போது என் நரம்புகளில் ஓடுவது குருதியல்ல; தாய்மார்களின் திலகம். உலக நாடுகளும் நம் நாட்டின் எதிரிகளும் நம் பெண்களின் சிந்தூர்ப்பொடி, பீரங்கிப் பொடியாக மாறுகையில் என்ன நடக்கும் என்பதைப் புரிந்துகொண்டிருப்பர்.”
‘பாகிஸ்தானுக்குச் சரியான பதிலடி கொடுத்த இந்தியா’ என்ற தலைப்பில் ‘தி இந்து’ நாளிதழில் (23.05.2025) வெளிவந்த பிரதமர் மோடியின் உரையின் ஒரு பகுதி; இது இராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்த நிகழ்வொன்றில் அவர் ஆற்றிய உரை.
மோடியின்
வீரவுரை வெளியான நாளிதழின் ஒரு பக்கத்தில் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் திரு. செயராம் இரமேஷ் அவர்களின் எதிர்வினையையும் இங்குக் குறிப்பிடல் பொருத்தமாக இருக்கலாம். “இராஜஸ்தான் மாநிலத்தில் பிரதமர் ஆற்றிய உரை, திரைப்படங்களில் வரும் வெற்று வசனங்கள் (Filmi Dialogues). மோடியின்
உரையை வெறும் வீர வசனம் என்றும், சினிமாத்தனம் என்றும் குடிமக்களில் எவரும் எளிதில் விமர்சித்து விட முடியாது என்பதை அனைவரும் அறிவர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல்
22-ஆம் நாள் பகல்காமில் இந்தியச் சுற்றுலாப் பயணிகள்மீது நடத்தப்பட்ட தாக்குதல் கொடுமையானது; கண்டனத்திற்குரியது; இக்கோரத்தனமான வன்முறையை நடத்திய வன்முறையாளர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் இரு வேறு கருத்து இருக்க முடியாது. தாக்குதலுக்குள்ளான நாடும், அதன் குடிமக்களும் துயரம் மட்டும் அடைவதில்லை. இவர்களின் சினமும் பழிதீர்க்கும் எண்ணமும் இயல்பானவை. கொல்லப்பட்ட மக்களின் உணர்வோடு ஒன்றிவிட்டதாகக் கருதப்படும் இந்தியப் பிரதமரின் கோப உரையில் நியாயம் இருக்கலாம்; ஆனால், இவ்வுரையைச் சினிமாத்தனமானது என்று விமர்சித்த காங்கிரஸ் கட்சி செயலாளரின் கருத்தை வெற்றுக் கருத்தாகக் கொள்ளமுடியுமா?
பகல்காமில்
நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலின்போது, தனது அயல்நாட்டுப் பயணத்தைப் பாதியில் நிறுத்தித் தாயகம் திரும்பிய பிரதமர், தாக்குதலின் பின்விளைவை விவாதிக்கக்கூடிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ளாத பிரதமர், பீகார் மாநிலத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார். அங்கும் இவர் ஆற்றிய உரையின்போது, எதிரிகள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு இந்தியாவின் எதிர்ப்பு நடவடிக்கை இருக்கும் என்று பேசினார். தாக்குதலுக்கு உள்ளான நாட்டின் பிரதமர் காயப்பட்டுப் போவதில் வியப்பில்லை. ஆனால், செயராம் அவர்களின் கேள்விகளுக்கும் பிரதமர் பதில்தர கடமைப்பட்டுள்ளார்.
மோடி
அவர்களுக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வைக் கூட்ட கேட்டுக்கொண்ட நிலையில், மோடி அரசு மறுத்தது ஏன்? தானாகத் தன் கட்சியினரிடம் பேசும் மோடி, எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டத்தில் பங்கேற்க ஏன் மறுக்கிறார்? அது மட்டுமல்ல, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட மோடி ஏன் மறுக்கிறார்?
பாகிஸ்தான்-இந்தியாவில் எழுந்த போர்ப் பதற்றத்தின்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையீடு செய்து போர் நிறுத்தத்திற்கு உதவியதாகக் கூறிய கூற்றின் உண்மை நிலை பற்றி மோடி இதுவரை எதுவுமே பேசவில்லையே! ஏன்?
சனநாயக
அரசிற்கான தலையாய கடமைகளில் மக்களுக்குப் பதில் கூறவேண்டிய கடமையும் அரசின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையும் உண்டு என்பர். அமெரிக்க அதிபரின் தலையீடு பற்றி இந்திய வெளியுறவுத் துறையும், பிரதமர் மோடியும் கருத்துரைக்கவில்லையே, ஏன்? அரசின் மௌனம் குறித்து எவரேனும் கேள்வி எழுப்பினால், தேசத்தையே அவமதிக்கும் செயலாகவும் தேசத் துரோகமாகவும் சித்தரிக்கப்படுகையில், பொதுவெளி விமர்சனங்களே கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.
சனநாயகம் தரும் பேச்சுரிமை, கருத்துரிமை, ஏன் நடைபெற வேண்டிய சமூக உரையாடல்களே இல்லை எனும் நிலை!
தீவிரவாதிகள்
நடத்திய கோர வன்முறைக்கு இந்தியா காட்டிய எதிர்வினையை எவரும் எதிர்க்கவில்லை; தீவிரவாதம் என்பது மிகப்பெரிய வன்முறை வடிவம் என்பதனையும், வன்முறை வன்முறையைத்தான் பிறப்பிக்கும் என்ற சிந்தனையில் நம்பிக்கையுடைய நாம், ஒரு நாட்டின் இறையாண்மையைத் தகர்க்கும் வகையில் நடத்தப்பெறும் அத்துமீறல்களை நாட்டுப்பற்று மிக்க எவரும் கேள்விக்குள்ளாக்காமலிருத்தல்
சரியன்று என்பதனை ஏற்றுக்கொள்வோம்.
ஆயினும்,
இரு நாடுகளிடையே நிலவிய போர்ச் சூழல் இருவேறு அரசுகளுக்கிடையிலான மோதலாக மட்டும் சித்தரித்தல் எப்போதும் சரியான பார்வையாக இருக்கமுடியாது. மேலும், போர் ஏற்படுத்தும் விளைவுகள் பற்றியும், மக்கள் சந்திக்கும் அழிவு பற்றியும் எவரும் கவலைப்படுவதில்லை. இந்தியா-பாகிஸ்தான் போர்ப்பதற்றத்தின்போதும், சிந்தூர் ஆப்ரேஷனின்போதும் பாகிஸ்தானின் எத்தனை தீவிரவாதிகளின் முகாம்கள் தாக்கப்பட்டன? என்றும், எத்தனை பேர் கொல்லப்பட்டனர்? என்று அறிவிப்பதிலும் பெருமைகொள்ளும் இந்திய அரசு, பதிலடியாக ஜம்மு பகுதியில் பாகிஸ்தான் மக்கள் வாழும் பகுதியில் நடத்திய தாக்குதலையும், இத்தாக்குதலில் சந்தித்த இழப்புகளையும் உரத்துச் சொல்வதில்லை.
உருவாக்கப்பட்ட
இப்போர்ச்சூழலில், புத்தர் தோன்றிய இந்தியாவின் எந்த மூலையிலிருந்தும் ‘போர் வேண்டாம்’
என்ற குரல் எழவே இல்லை. இந்தியாவில் போர்க்குரலை, பாகிஸ்தான் மீதான பதிலடியை ஆதரிப்போர்தான் அதிகம். மக்கள் விரும்புகின்றனரோ என்னவோ, இந்திய அரசு முன்னெடுக்கும் போரை ஆதரித்தாக வேண்டிய கட்டாயம். துளியளவு எதிர்க்குரல் அல்லது விமர்சனம் கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்ளும் அளவுக்கு ஆள்வோர் நடவடிக்கை உள்ளது. ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள், பொதுவெளிகள், குடிமைச் சமூகங்களில் எங்கும் ஒரே அமைதி; போருக்கு எதிரான குரல்கூட வேண்டாம்; கண்முன்னே நடக்கும் போர் நிகழ்வுகளை விமர்சிக்கும் சனநாயக உரிமைக்குக்கூட இடமில்லை.
அசோகா
பல்கலைக்கழகப் பேராசிரியரின் கருத்துரிமை பறிக்கப்பட்டு சிறையிலுள்ளார். சமூக வலைத்தளங்களில் பலர் குறிவைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். அமெரிக்க அதிபரின் மத்தியஸ்தத்தைக் கேள்விக்குள்ளாக்கிய இராகுல் காந்தி பொறுப்பற்றவராக, பாகிஸ்தானின் நண்பராகச் சித்தரிக்கப்படுகிறார். ‘சிந்தூர் ஆப்ரேஷன் போது, இந்தியா இழந்த போர் விமானங்களின் எண்ணிக்கை எத்தனை?’ என்று கேட்ட காங்கிரஸ் தலைவரின் நியாயமான கேள்விக்குப் பதில் இல்லை.
மானுடத்தின்
அமைதியை விரும்பும் மனிதர் எவரும் போரை அனுமதிக்கமாட்டார்; விரும்பவும் மாட்டார் என்பதே பொதுவிதியாயிருக்க, போரை மறுப்போரை, வேண்டாம் என்போரை வெறுப்போடு பார்க்கவும் பகைக்கவும் வேண்டிய நிலை ஏன்? இங்குப் போரை வேண்டாம் என்போர் தேசநலனை அடகுவைப்போராகச் சித்தரிக்கப்படுகின்றனர்; சிறைவைக்கப்படுகின்றனர். ஐதராபாத்தைச் சார்ந்த மென்பொறியாளரான இளம்பெண் இவ்வாறு கூறியதாக ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் வந்த செய்தி இது. “போருக்கான உச்சம் நிறுத்தப்பெற வேண்டும்’
என்று கூறியதாலேயே அவரை மணமுடிக்க மறுத்தேன். இப்பேச்சு அம்மனிதனின் குணத்தில் வெளிப்படும் பலவீனத்தையே காட்டுகிறது.” இப்பெண்ணின் பெயர் ரீட்டா சின்ஹா (‘தி இந்து’ - ஞாயிறு மலர் மே. 18, 2025). உருவாக்கப்பட்டுள்ள போர்ச்சூழல் இரத்த வெறியையும், சண்டைக்கான உணர்வையும் கட்டாயப்படுத்தி விடுவதால் பகுத்தறிவு மழுங்கடிக்கப்படுகிறது.
மக்கள்
இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருந்ததி துரு அவர்களின் இன்றைய போர்ச்சூழல் உருவாக்கியுள்ள நிலை முக்கியமாகும். இவர் ஏற்கெனவே, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசுகளின் போக்கினையும், பொக்ரான் அணுகுண்டு பரிசோதனைக்குப்பின் இருநாட்டு மக்களையும் ஒருங்கிணைத்து உரையாடலுக்கு ஏற்பாடு செய்து வெற்றிகண்டவர், \"பகல்காமில் நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதலின்போது இந்திய உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தது என்ற கேள்வி நமது பொதுவெளியில் விவாதப் பொருளாகாதது வியப்பளிக்கிறது என்றும், இன்று உரையாடலுக்கான வெளி (Space) சுருங்கி
வருதலைக் கவலையோடு வெளிப்படுத்துகிறார். இன்றும் உரையாடலுக்கான வாய்ப்பு இருநாடுகளிலும் உள்ளது. ஆனால், இன்றைய சூழலில் எவரேனும் உறவு பற்றியும், உரையாடல் பற்றியும் பரிந்துரைத்தால் உயிரோடு கொல்லப்படுவர் என்றும் எச்சரிக்கை செய்கிறார். தலைநகரில் செயல்படும் தெற்காசிய ஆவணக் காப்பகத்தின் இயக்குநர் இரவி நாயர் அவர்களின் கூற்றும் இங்குக் கவனிக்க வேண்டுவதாகும்: “போருக்கு ஆதரவாகப் பெரும்பான்மையைக் கட்டமைத்த நிலையிலும், இப்போக்கை எதிர்க்கும் துணிவு என்பது கோழைத்தனமல்ல; அமைதிக்கான நிலைப்பாட்டிற்கு நெஞ்சில் உரம் தேவை. இதுதான் நம் மக்களின் முதன்மைத் தெரிவாக (Choice) இருக்கவேண்டும்” (‘தி
இந்து’18-05-2025). இன்று
எழுப்பப்பட்டு வரும் போருக்கான உச்சக் குரலை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?
பாகிஸ்தான்
தூண்டுதலில் தீவிரவாதிகள் நடத்திய வன்முறையில் இந்தியப் பயணிகள் உயிர் துறந்த நிலையில், இறந்தோரில் ஒருவரைத் தவிர ஏனையோர் அனைவரும் இஸ்லாமியர் அல்லாத ஆண்கள். இந்திய அரசியல் குறிப்பிட்ட மதத்தினரை எதிரிகளாகக் கட்டமைத்து வரப்பட்ட நிலையில், வன்முறையாளர்கள் இசுலாமியத் தீவிரவாதிகளாகவே இருக்க, இவர்கள் இசுலாத்தின் பாகிஸ்தான் அரசால் தூண்டப்பட்ட தீவிரவாதிகளாகத்தான் இருக்கவேண்டும் என்ற திட்டவட்ட வாதமும் வெற்றி பெறுகிறது.
நடந்து
முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின்போது “இந்தியா கூட்டணி வெற்றிபெற்றால் இந்துப் பெண்களின் தாலிகள் பறிபோய்விடும்” என்ற
பிரச்சாரத்தை மேற்கொண்டவர் பிரதமர் மோடி. ஆனால், தற்போது வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்திருப்பது பா.ச.க.
இத்தகைய தாக்குதலின் பின்னணியில் ஆண்கள் மட்டுமே உயிரிழக்க, அவர்கள் மனைவியர் சிந்தூரை இழந்து நிற்பதாகக் கூறி ‘ஆப்ரேசன் சிந்தூர்’
நடத்துவதன் பின்னணியைப் புரிந்துகொள்வதில் சாமானியருக்குக் குழப்பம் நீடிக்கிறது. கொல்லப்பட்ட ஆண்களின் இணையர் அனைவரும் சிந்தூரை இழக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த வன்முறையை நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கம் பயங்கரவாதிகளுக்கு எழவேண்டிய நோக்கத்தின் அவசியமும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.
மேலும்,
இந்தியக் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக, ஓர் அடையாளமாகக் கருதப்படும் சிந்தூரைக் கையிலெடுத்து, அது அரசியல் கருவியாக்கப்படுவதன் சூழ்ச்சியையும் நாம் புரிந்துகொள்ளல் அவசியமாகிறது. தேவிகா எனும் கல்வியாளர் சிந்தூரின் நோக்கம் பற்றிப் பேசுகிறபோது “ஆப்ரேசன் சிந்தூரின்போது மக்கள் மனத்தில் ஆழமான கோபத்தை உருவாக்கியதோடு மற்றொரு கோணத்தில் பார்க்கின்றபோது, பெண்கள் என்றுமே ஆண்களின் அதிகாரத்துக்கு உட்பட்டவர்கள் என்ற கருத்தையும், நியாயப்படுத்தவே உதவுகிறது.” கணவரைக் கொல்லுதல் என்பது மனைவியின் காப்பாளரைக் கொல்லுதல் என்று அர்த்தமாகும். எப்போதுமே அடையாளத்தை வைத்து அரசியல் செய்யும் வல்லமை மிக்க இன்றைய அரசு, சிந்தூர் எனும் அடையாளத்தைக் கையில் எடுத்து உணர்ச்சிகளில் அரசியல் செய்வதில் வியப்பொன்றுமில்லை.
பாகிஸ்தான்
என்னும் பகை நாடு, எல்லை தாண்டி தீவிரவாதிகளுக்கு ஆதரவளித்து வன்முறை யில் ஈடுபடுமானால் எதிர்க்க வேண்டுவதும், ஒடுக்க வேண்டுவதும் அவசியமே. ஆனால், இன்றைய ஒன்றிய அரசின் முஸ்லிம் எதிர்ப்புப் பாகிஸ்தான் எதிர்ப்பின் ஓர் அம்சமாக மாறிவிடக்கூடாது. இந்தியாவின் சிவில் உரிமைக் காப்பமைப்பின் அண்மை அறிக்கையின்படி, பகல்காம் தாக்குதலுக்குப் பின்பு ஏப்ரல் 22-லிருந்து மே மாதம் எட்டாம்
நாள் வரை முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களின் எண்ணிக்கை 184 எனவும், இவ்வெண்ணிக்கையுள் 106 தாக்குதல்கள் பகல்காம் தாக்குதலுக்கு எதிர்வினையென்றே அறிக்கை கூறுகிறது.
பகல்காமில்
தீவிரவாதத்திற்கு இரையானவர்கள் நம் கவனத்துக்குரியவர்கள். இந்நிகழ்வு எப்போதும் நடக்கக்கூடாது என்பதும் நம் கருத்தே எனினும், இரு தேசங்களிடையே எழும் பூசல்களுக்கும் பகைக்கும் வன்மத்திற்கும் போர் மூலமே பதில்
தேட முடியும் என்று கட்டமைக்கப்படும் கருத்தியலையும், அதன் பாரதூர விளைவுகளையும் உரியவர்க்கு எடுத்துச்செல்லும் பணியைச் செய்யப் போவது யார்?
உயர் நீதிமன்றங்களின் அதிகார எல்லை வரையறைக்கு உட்பட்டது. மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் நெல்லையைச் சேர்ந்தவர் நீதிகோரி வழக்குப் பதிய வேண்டும்; ஆனால், அவர் சென்னை உயர் நீதிமன்றம் செல்கின்றார். அங்கு அவரது வழக்கு அவருக்குச் சாதகத் தீர்ப்பு வழங்கக்கூடிய அமர்விற்கு ‘அனுதாபம்’ காட்டுகின்ற நீதிபதிக்கு எப்படியோ செல்கிறது. நீதிபதி அரசுத் தரப்பு வாதங்களைக் கேட்கவில்லை. பதில் மனுத்தாக்கல் செய்ய, அரசுத் தரப்பிற்குக் கால அவகாசம் தரவில்லை. நீதிபதி தீர்ப்பை மைக்கை அணைத்து விட்டு வாசிக்கிறார். மூத்த வழக்கறிஞர் இதைச் சுட்டிக்காட்ட “தீர்ப்பை இணையத்தில் பதிவிடுகிறோம், பார்த்துக்கொள்ளுங்கள்” எனக் கடுமை காட்டுகிறார்.
யார்
இந்த நீதிபதி? மூத்த வழக்கறிஞர்களைத் திறந்த நீதிமன்றத்தில் கடுமையாக விமர்சனம் என்ற பெயரில் மிரட்டியதற்காக ‘பார் கவுன்சிலால்’ குற்றம்
சாட்டப்பட்டவர் என்பதே கடந்த கால வரலாறு. மைக்கேல்பட்டி வழக்கில் அவ்வூர் பெயர் பற்றித் தன் தீர்ப்பில் ஆராய்ச்சியை வழங்கியவர். மாவட்டக் காவல்துறை பெண் அதிகாரி ‘அங்கு மதக் கலவரம் நடக்கத் திட்டம்
தீட்டப்படுகிறது’ என
விசாரணை அறிக்கையில் சொல்ல, அவரைக் கடுமையாகக் கண்டித்து வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி மூக்குடைபட்டவர். வயலூர் அர்ச்சகர் நியமனத் தடை வழக்கில், ‘நான் ஒரு ஸ்மார்த்த பிராமணன், நானே ஆலயக் கருவறைக்குள் நுழைய முடியாது’
என வருணம் போதித்தவர்; தான் ஓர் ஆர்.எஸ். எஸ். எனப் பிரகடனப்படுத்தியவர். இவரிடம் எப்படி நாம் நீதியைத் தேடுவது?
தீர்ப்பைப்
பற்றி விமர்சிக்கலாம். உள்நோக்கம் கற்பித்தால், நீதிமன்ற அவமதிப்பிற்கு உள்ளாகலாம் என்பதே அனைவரின் பெரும் பயம். இது நீதிபதிகளுக்குக் கேடயமாகவும், பெரும் பாதுகாப்பாகவும் இருப்பது கவலை தருவதே.
குடியாட்சி
அமைப்பில் மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றங்கள், நீதிமன்றங்களில் உள்ள நீதி அரசர்கள். ஆனால், பா.ச.க.
ஆட்சியில் நீதிமன்றங்களில் நீதி இல்லை, நீதிக்குத் தண்டனை கிடைக்கிறது. பா.ச.க.
ஆட்சிக்கு வந்தபின் நீதித்துறையைக் காவிமயமாக்கி விட்டது. பூஜை அறையில் இராமர் கோவில் தீர்ப்பு குறித்து பிரார்த்தனை செய்து, தன் மத நம்பிக்கையின் அடிப்படையில்
தீர்ப்பு எழுதுகிறார் சந்திரசூட். அவரோடு அமர்வில் இருந்தவர்களும் ‘ஆமாம் சாமி’ போடுகிறார்கள். சந்திர சூட் பதவி ஓய்வுக்குப் பின்பு டெல்லி சட்டப் பல்கலைக்கழகத்தில் பணியில் அமர்கிறார் . அவரோடு இராமர் கோவில் வழக்கில் நீதி வழங்கிய அனைவருமே அரசுப்
பதவிகளில் அமர்த்தப்படுகிறார்கள்.
நீதிபதி
அசோக்குமார் கோயல் பதவி ஓய்வு
பெற்ற 2018, ஜூலை 06 அன்றே தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவராகப் பதவியேற்கிறார். மற்றொரு நீதிபதி அசோக் பூஷன் தேசியச் சட்ட நிறுவனத் தீர்ப்பாயத்தின் தலைவராக அரசுப் பதவியைப் பிடிக்கிறார். முதலில் அரசிற்கு எதிராகத் துணிந்து தீர்ப்புகளை வழங்கியபின், பாலியல் வழக்கில் சிக்கவைக்கப்பட்ட இரஞ்சன் கோகாய் என்ற இராமர் கோவில் வழக்கு நீதிபதி, மாநிலங்களவை உறுப்பினராக மக்கள் சேவைக்குப் பா.ச.க.வால் கொண்டு வரப்படுகிறார். இன்று அவர் மாநிலங்களவைக்கே வராமல் மட்டம் போடுகிறார் என்பதே அண்மைச் செய்தி.
இராமர்
கோவில் வழக்கு அமர்வில் சிறுபான்மைச் சமூக மக்களுக்குக் குரல் கொடுக்க வாய்ப்பிருந்தும், அதை அன்று மறுத்து
நழுவவிட்ட நீதிபதி அப்துல் நசீருக்குப் பா.ச.க.வால் வழங்கப்பட்ட சன்மானம் ஆந்திரப்பிரதேச ஆளுநர் பதவி.
பா.ச.க. தன்
ஆட்சிக்கு முட்டுக் கொடுத்து, தீர்ப்புகளை வழங்கிய நீதிபதிகளுக்கு அரசுப் பதவிகளை வாரிவழங்குகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஓய்வு பெற்ற முப்பதிற்கும் மேற்பட்ட உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் மற்றும் நீதிபதிகள் பதவியில் தொடர்ந்து பதவி சுகம் பெறுகிறார்கள். அவர்களில் சிலரைப் பார்ப்போம்.
நீதிபதி
அசோக்குமார் கோயல் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்திலும், நீதிபதி அருண்மிஸ்ரா மனித உரிமை ஆணையத்திலும், ஹேமன் குப்தா டெல்லியிலும் பதவியைப் பிடித்தனர். நீதிபதி அஜய் மாணிக்ரான் கான்வில்கர் லோக்பால் அமைப்புக்குத் தலைவரானார். நீதிபதி சித்தரஞ்சன் தாஸ் வெளிப்படையாகக் கூறினார்: “நான் ஆர்.எஸ். எஸ். அமைப்பிலிருந்து வந்தவன். மீண்டும் ஆர். எஸ்.எஸ்.சுக்கே செல்கிறேன்.” அவரது நீதித்துறைப் பணியை, அவரது தீர்ப்புகளை எவ்வாறு
நோக்குவது?
விந்தையிலும்
விந்தை ஒன்று உண்டு. குஜராத்தைச் சேர்ந்த சாதாரண பெண்
வழக்கறிஞர் பேலா மதுர்யா திரிவேதி குஜராத் சட்டத்துறைச் செயலாளராகிறார். பிறகு உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதி அளவு உயர்கிறார். அவரது பணிக்காலத்தில் அரசியல் முக்கியத்துவம்
வாய்ந்த எட்டு வழக்குகள் அவருக்கு வழங்கப்படுகின்றன. அவரைவிட 15 மூத்த நீதிபதிகளைப் புறக்கணித்து, இந்தப் பெண் நீதிபதிக்கு முக்கிய வழக்குகள் பகிரப்படுகிறது. அங்கு வழக்கு ஒதுக்குவதற்கான நடைமுறைக் கையேட்டுச் செயல்முறைகளும் நடவடிக்கைகளும், அலுவலக அடிப்படை விதிகளும்
மீறப்பட்டன. இவருக்கு வழங்கப்பட்ட அனைத்தும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளால் தொடுக்கப்பட்டவை அல்லது பா.ச.க.வுக்கு வேண்டிய முக்கியப்
புள்ளிகளுக்கான வழக்குகள். மாநிலக் கட்சிகளால் சனநாயகம் காக்கப்பட போடப்பட்ட வழக்குகள். அனைத்திலும் பா.ச.க.
விரும்பிய தீர்ப்பை அப்பெண் நீதிபதி வழங்கினார். அதைவிட கொடுமை, மூத்த வழக்கறிஞர்களுடன்
அதிகமாகச் சண்டையிட்டார். ‘பா.ச.க.வுக்கு ஆதரவு’ என்ற ஒற்றைக் கொள்கையில் உறுதியாக இருந்தார். இது குறித்து ‘ஆர்ட்டிகள் 14’ மற்றும் ‘கேரவன்’ போன்ற பத்திரிகைகள் கட்டுரைகளை வெளியிட்டன. அவரது பிரிவு உபசார விழாவைப் பார் கவுன்சில் புறக்கணிக்கிறது என்ற அறிவிப்புத் தரப்பட்டது. நீண்ட நெடிய சமாதானத்திற்குப் பிறகு விழாவில் கலந்துகொண்ட பார் கவுன்சில் தலைவர் கபில்சிபல் வஞ்சப் புகழ்ச்சியாகப் பெண் நீதிபதியின் முரண்பாடுகளைப் பட்டியலிட்டது அண்மையில் நடந்த நிகழ்வு.
நீதித்துறையின்
கண்ணியம் மற்றும் வெளிப்படைத்தன்மை காக்கப்பட வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது. நீதித்துறையானது குடியாட்சித் தத்துவத்தில் பெரும் தூண். அது அடிப்படை அறத்திற்கு உட்பட்டதாகச் செயலாற்ற வேண்டும். 2025, மே 13-இல் பணி ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி சஞ்ஜீவ் கன்னா, நீதிபதிகளின் சொத்து விவரங்களை வெளியிடுவதில் முனைப்புக் காட்டி, வெற்றியும் கண்டார் என்பது மகிழ்ச்சிக்குரிய பதிவு. அவர் பணி ஓய்வு பெற்றபின், ‘எந்த அரசு பதவியையும் ஏற்கமாட்டேன்’ என
அறிவித்தார். அவரைத் தொடர்ந்து இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுள்ள சிறுபான்மைச் சமூகம் சார்ந்த பௌத்தரான பி.ஆர். கவாய்
அவர்களும், ‘நானும் ஓய்வுக்குப்பின் அரசுப் பதவி எதையும்
வகிக்கமாட்டேன்’ எனக்
கூறி ‘ஜெய் பீம்’ எனச் சத்திய முழக்கமிட்டார்.
14-வது
சட்டத்துறை ஆணையப் பரிந்துரைப்படி ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஓய்வு பெற்றவுடன் அரசுப் பதவிகளுக்குச் செல்வது தடுக்கப்பட வேண்டும். இல்லையெனில், பொதுமக்கள் அவர்கள் பணிக்காலத்தில் எழுதிய தீர்ப்புகளை ஐயத்திற்கு உள்ளாக்குவர்.
நீதித்துறையின்
மாண்பைக் காக்க நீதிபதிகள் பணி ஓய்விற்குப் பிறகு எந்த அரசியல் பதவியிலும் இருக்கக்கூடாது என்ற சட்டம் இயற்றப்பட வேண்டும். அது சனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் வலுவூட்டும்.
ஊர் மையத்தின் மரத்தடி வீதியில் ஒரே கூட்டம். போலிஸ் வாகனம் ஒன்று வந்திருந்தது. காவலர்கள் கூட்டத்தை விலக்கிக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் அவரவர் காதுகளில் ஏதேதோ கிசுகிசுத்துக் கொண்டனர். கறுப்புக் கண்ணாடி ஒன்றைச் சட்டையின் நடுபட்டனில் தொங்கவிட்டுக்கொண்டு ஸ்டைலாகப் போலிஸ் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தான் ஆண்ட்ரூ.
ஆண்ட்ரூ.
பி.இ. கல்லூரி பைனல் இயர். நடுத்தர வர்க்கம். வீட்டடிக் குடும்பச்சொத்தில் கொஞ்சம்
இரப்பர் மரங்கள் உண்டு. ஆண்ட்ரூவுக்கு ‘பைக்’னா
ரொம்பப் பிடிக்கும். காலேஜ் பர்ஸ்ட் இயரிலிருந்தே பைக் வாங்கித் தரவேண்டிப் பெற்றோரைக்
கட்டாயப்படுத்தினான். முதலில் மறுத்த பெற்றோர் வேறு வழி தெரியாமல் சம்மதித்துக் கடனை
வாங்கி ஒரு விலையுயர்ந்த பைக்கை வாங்கிக் கொடுத்தார்கள்.
பைக்
வாங்கியதிலிருந்து ஆண்ட்ரூவின் குணமே மாறியது. பயணத்தின்போது அவ்வப்போது ஹெல்மெட் அணிவதில்லை.
அடிக்கடி நண்பர்களோடு பைக் ரைடு. அவன் அந்தக் கிராமத்தின் குறுகலான ரோட்டில் பைக் ஓட்டுவதே
அவ்வளவு பயத்தை ஏற்படுத்தும்.
“உங்கப்
பையனைக் கொஞ்சம் மெதுவாப் போகச் சொல்லுங்க, ரோட்டுல நிம்மதியா நடக்க முடியமாட்டேங்குது” எனப் பலர் ஆண்ட்ரூவின் தந்தையிடம் ‘பராதி’ சொன்னார்கள். வீட்டில் தட்டிக்கேட்டால் தினமும் சண்டை.
ஒருநாள் தன் தாயையே அடிக்கக் கை ஓங்கிட்டான்.
இந்நிலையில்
சில நாள்களுக்கு முன்பாக ஆன்ட்ரூ வீட்டிலிருந்த விலையுயர்ந்த புதிய பைக் திருடப்பட்டிருந்தது.
“என் வீட்டுலயே களவாண்ட அந்தக் களவாணிப் பையன் என் கையில மாட்டுனான் அவ்வளவுதான்...”
ஆண்ட்ரூ
வார்த்தைகளில் கோபம் கொப்பளித்தது தெரிந்தது. கம்ப்ளைண்ட் கொடுத்து இரண்டு வாரங்கள்
ஆகியும் திருடன் பிடிபடவில்லை.
‘இரப்பர்
சீட் திருடிய சிறுவர்களை அடித்துக் கையைக்கட்டித் தெருவில் இழுத்து வந்ததால அதுக்குப்
பழிவாங்க யாராவது திருடியிருப்பார்களோ? பைக்கில் வேகமாக வந்து வித்தைகளைக் காட்டிக்
கடுப்பேத்தியதால யாராவது திருடியிருப்பார்களோ? அவனே மறைத்து வைத்துக்கொண்டு நாடகம்
ஆடுறானோ...’ கூடியிருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொன்றாகக் கற்பனை செய்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
இந்த
நிலையில்தான் திருடன் மாட்டிக்கொண்டான் என்ற செய்தி ஊராரின் செவிக்கு எட்டியது. செயல்முறை
விளக்கத்திற்காகத் திருடனை அழைத்து வந்துகொண்டிருக்கின்றார்கள். எனவேதான், இத்தனை பந்தோபஸ்து
இன்று.
திருடன்
யாராக இருக்குமென்று கண்டறிய எல்லாருக்கும் ஓர் ஆர்வம் இருந்தது. அரை மணி நேரம் கழித்துப்
புழுதியைக் கிளப்பிக்கொண்டு ஒரு பொலேரோ வாகனம் வந்து மரத்தடி வீதியில் நின்றது. மாலை
நேரத்தில் நெடுக வளர்ந்த மரங்களிலிருந்து வெளியேறும் வவ்வால்கள்போல ஆங்காங்கே நின்றவர்கள்
வாகனத்தை நோக்கிப் படையெடுத்தனர். திருடன் வந்தவுடன் அவன் மூஞ்சியில் ஒரு குத்துவிட
வேண்டுமென்று ஆண்ட்ரூ கையை முறுக்கிக் கொண்டிருந்தான்.
போலிஸ்
வாகனத்திலிருந்து ஒருவர் காவலர்களின் பாதுகாப்போடு கீழே இறங்கினார். அவர் அந்த ஊருக்கு
மிகவும் பரிச்சயமானவர். கூடியிருந்தவர்களின் கண்கள் எல்லாம் ஆச்சரியத்தில் கறுப்பு
வெள்ளையாய் பூத்திருந்தன.
‘இவர்
ஏன் பைக்கைக் களவாண்டார்? இவரா இப்படிச் செய்தார்?’ யாராலும் நம்ப முடியவில்லை. நூறு
கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற பைக் இருபது கிலோ மீட்டர் ஸ்பீடுக்கு வந்ததைப்போல முறுக்கி
வைத்திருந்த கையையும் மனத்தையும் ஆண்ட்ரூ தளர்த்தியிருந்தான். மற்றவர்கள் எல்லாரும்
வந்த வேகத்தில் கலைந்து சென்றார்கள். பிடித்து வந்தவரை அங்கேயே விட்டுவிட்டு போலிஸ்
வாகனங்கள் புழுதிப் பறக்க ஊரைவிட்டுக் கிளம்பியது.
ஆண்ட்ரூ
சட்டையில் தொங்கிக்கொண்டிருந்த தூசு படிந்த கறுப்புக் கண்ணாடியைத் துடைத்து மாட்டிக்
கொண்டான். அருகில் யாரும் இல்லாததை உறுதி செய்துகொண்டு போலிஸ் விட்டுச்சென்ற தன் தந்தையைப்
பார்த்து ஒப்பாரிவைத்து அழுதான் அவன்.
“நீ
பைக்ல ஸ்பீடா போறத பாக்க பயமா இருக்குப்பா. அதான் உன் பைக்கைச் சித்தப்பா வீட்ல மறைச்சு
வைச்சேன். இனியாவது கொஞ்சம் ஸ்லோவா போப்பா...” கனத்த குரலில் வெளிவந்த தந்தையின் வார்த்தை
கரும்புகையாய் அவனை நிறம் மாற்றியது.
ஆண்ட்ரூவின்
பைக் திருடப்பட்டது போன்றது அல்ல டேட்டா திருட்டு. இணைய உலகில் எந்தப் பக்கம் திரும்பினாலும்
டேட்டா திருட்டைப் பற்றிய பல விவாதங்கள் மற்றும் கட்டுரைகள் காணக்கிடக்கின்றன. அண்மையில்
டிரண்டிங் ‘கிப்ளி ஸ்டைல் ஆர்ட்’ (Ghibli
Style Art) புகைப்படப்
பதிவுகள்தான். கிப்ளி ஸ்டைல்னா என்னவென்று வாசகர்கள் குழப்பத்தில் இருக்கக்கூடும்.
உங்களுக்காகவே இந்த விளக்கம். ‘சாட் ஜிபிடி’
(Chat GPT)
அறிமுகப்படுத்திய இந்த அப்டேட்டில் உங்கள் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்தால், அது
ஜப்பானிய கார்ட்டூனிஸ்டான ‘ஹாயோ மியாசாக்கியின்’
(Hayao Miyazaki)
பாணியில் அந்தப் புகைப்படத்தைக் கார்ட்டூனாக உருமாற்றித் தருகிறது. இணைய உலகமே ஸ்தம்பித்துப்போகும்
வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட சில நாள்களிலேயே கோடிக்கணக்கில் இணையவாசிகள் தங்கள் புகைப்படங்களைப்
பதிவேற்றம் செய்து, அதனைச் சமூக ஊடகங்களிலும் பகிர்ந்திருந்தனர். இந்த ‘கிப்ளி ஸ்டைல்
ஆர்ட்’ டிரண்டான பிறகு சாம் ஆல்ட்மேன் ‘ஓபன்
ஏஐ’ (Open AI) நிறுவனத்தின் தலைவர் “எப்பா கொஞ்சம்
சில் பண்ணுங்க. எங்க ஊழியர்களைக் கொஞ்சம் தூங்க விடுங்க” என்று
பதிவிட்டிருந்தார்.
இந்த
‘டிரண்டிங்’ பலருக்குப் பிடித்திருந்தாலும், அது
முன்வைக்கும் வலைத்தள ஆபத்துகளை யாரும் எளிதாகக் கடந்துபோக முடியாது. விலைகொடுத்து
வினையை வாங்குகிறோம் என்பதைப்போல, நாமே நம் புகைப்படங்களை ‘ஓபன் ஏஐ’ நிறுவனத்திற்கு இலவசமாகக் கொடுக்கின்றோம். இப்பெரும் தரவுகளே
அந்நிறுவனத்தின் ‘ஏஐ’ மாதிரிகளைப் பழக்குவதற்கான மூலப்பொருளாகி
விடுகின்றது. ‘கிப்ளி ஸ்டைல் ஆர்ட்’ என்னும் வியாபார யுக்தி மூலமாக ‘ஓபன்
ஏஐ’ நிறுவனம் ஏராளமான தரவுகளை இலவசமாகவே பெற்றுள்ளது என்பதை
நாம் எப்போது அறியப் போகிறோம்?
நம்
அந்தரங்கத் தரவுகள் களவாடப்படுகின்றன என்பது ஒருபுறம் இருந்தாலும், ‘ஸ்டுடியோ கிப்ளி’ நிறுவனத்தின் தலைவர் ஜப்பானிய கார்ட்டூனிஸ்டான ஹாயோ மியாசாக்கி
‘ஓபன் ஏஐ’ நிறுவனத்தின் இந்த முயற்சிக்கு அதிருப்தி
தெரிவித்துள்ளார். ‘கிப்ளி ஸ்டைல் ஆர்ட்’ என்னும் தன் பாணியும் படைப்பும் தன்
அனுமதியில்லாமலேயே திருடப்பட்டிருக்கிறது என்றும், அதற்கான இழப்பீடு தனக்குத் தரப்படவில்லை
என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
‘ஏஐ’ தொழில்நுட்பம் அராபியக் கதைகளில் வரும் பூதம்போலும், பறக்கும்
விரிப்புப் போலும் நமக்கு மாயா ஜால வித்தைகளைக் காட்டினாலும் தரவுத் திருட்டும் (Personal Data Stealing),
காப்புரிமைத் திருட்டும் (Copyright Infringement) வெளிப்படையாகவே அரங்கேறுகின்றது.
இந்திய டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு சட்டம், 2023 (The Digital Personal Data Protection Act, 2023) இருந்தும் அதனால் தண்டிக்கப்படுவோர்
எண்ணிக்கை மிகக் குறைவே.
நெதர்லாந்து
ஒழுங்குமுறை ஆணையம் ‘கிளியர் வீயு ஏஐ’ (Clear
View Ai) என்னும் செயற்கை
நுண்ணறிவு நிறுவனத்திற்கு 30.5 மில்லியன் யூரோக்களை அபராதமாக விதித்திருக்கிறது. தரவுத்திரட்டிலுள்ள
(Database)
பயனர்களின் புகைப்பட முகத்தினைத் தனித்துவமான பயோமெட்ரிக் குறியீடாக இந்நிறுவனம் மாற்றி
ஒவ்வொருவரையும் உளவு பார்க்க முனைகிறது என்பது நெதர்லாந்து ஒழுங்குமுறை ஆணையம் முன்வைக்கின்ற
குற்றச்சாட்டாகும். அரசுகளே மக்களின் நகர்வுகளை நவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக்
கொண்டு உளவு பார்க்கிறது என்பாரும் உண்டு.
2019-ஆம்
ஆண்டில் இந்திய அரசு காவல் மற்றும் கண்காணிப்புப் பணிகளுக்காக உலகின் மிகப்பெரிய முக
அளவியல் அமைப்பை (Facial Recognition System) உருவாக்க விருப்பம் தெரிவித்திருப்பதாகவும்,
இந்தியாவின் கண்காணிப்பு உள்கட்டமைப்பை மேலும் தீவிரப்படுத்த அடுத்த ஐந்து ஆண்டுகளில்
ஐம்பது ‘ஏஐ’ ஆல் இயங்கும் செயற்கைக்கோள்களை ஏவத்
திட்டமிட்டிருப்பதாகவும் ‘தி இந்து’ பத்திரிகைச் செய்தி வெளியிட்டிருக்கின்றது.
‘ஏஐ’ ஒரு நொடிப்பொழுதில் நாம் கேட்பதைத் தந்துவிடுகிறது என்று
நாம் பெருமைப்பட்டுக் கொண்டாலும், அது நமக்கு இலவசமாகவோ, எளிதாகவோ கிடைத்துவிடவில்லை;
மாறாக, நம் சொந்த மற்றும் தனிப்பட்ட தரவுகளை அதனிடம் அடமானம் வைத்த பிறகே அதன் சேவையை
நாம் பயன்படுத்த முடிகிறது. “பொருளுக்கான பணத்தைக் கொடுக்கவில்லையென்றால் நீங்களே விலைபொருள்” (If you\'re not paying
for the product you are the product)
என்னும் கூற்றின் உட்பொருளை உணர வேண்டும். இணையத்தில் வலம் வரும் பெரிய நிறுவனங்கள்
அதன் பயன்களை எப்போதுமே விலைபொருளாகவும், அவர்களின் தரவுகளைப் பெரும் சந்தையாகவுமே
பார்க்கின்றது. இதனை அறிந்து கொண்டால் நாம் விலைபோகும் முன்பே அதன் ஆபத்தை உணர்ந்துகொண்டால்
மட்டுமே முன்னெச்சரிக்கையாக இருக்க முடியும்.
“நான் அருண். ஃபாதர் பிரேமும் நானும் பிரண்ட்ஸ். பள்ளியிலிருந்தே அவரை எனக்குத் தெரியும். இப்போ ஃபாதராகி எங்க ஊர்லதான் இருக்காரு. போன வாரத்தோட அவர் எங்க ஊருக்கு வந்து இரண்டு வருசம் ஆச்சு. பள்ளியில ‘நீ’, ‘வா’, ‘போ’னு தான் பேசிக்கிட்டிருப்போம். இப்போ ‘நீங்க’, ‘வாங்க’ன்னு சொல்லுறேன். ஃபாதர்னா எப்போதும் மரியாதை கொடுக்கணும்னு சொல்லியே அப்பா எங்களை வளர்த்தாரு.
ஊர்ல
முக்கியமான பிரச்சினைக்கெல்லாம் என்கிட்ட கேட்டுட்டுதான்
ஃபாதர் முடிவெடுப்பார். நானும் ஃபாதர் ஆகணுமுனு சிறுவயசுல நெனச்சேன். ஆனா முடியல. இப்போ மேரேஜ் பண்ணிக்கிட்டு ஃபாதர் ஆகலாமுனு இருக்கேன். இப்போ நான் கார் ஓனர். எப்போ கார் வேணுமுனாலும் பிரேம், சாரி! ஃபாதர் பிரேம் என்னைத்தான் கூப்பிடுவாரு. நானும் காரை எடுத்துக்கிட்டு வந்திடுவேன். ‘ஆமா! நீங்க இந்தக் காலேஜ்ல என்ன வொர்க் பண்ணுறீங்க?”
எப்படியோ
இப்போதாவது பேச்சை முடித்தானே... என்றிருந்தது உமாவிற்கு. “நான் இங்க பிரின்ஸ்பாலா இருக்கேன்”
என்று சுருங்கத் தன் பதிலைக் கூறிக்கொண்டு தூரத்தில் சிலரோடு பேசிக்கொண்டிருந்த ஃபாதர் பிரேம் அவர்கள் அருகே வந்து கொண்டிருந்ததைக் கவனித்தாள். “காலேஜ் பிரின்ஸ்பால்கிட்டையா இவ்வளவு நேரம் ரீல் சுத்திக்கிட்டிருந்தேன்!” அதிர்ந்து அவ்விடமிட்டு நகர்ந்தான் அருண்.
“ஃபாதர், வந்து எங்களுக்காகச் செபித்ததற்கு ரொம்ப தாங்ஸ்” என்று ஒரு கவரை அவர் பக்கம் நீட்டினாள். ஃபாதர் பிரேம் அதனை வாங்கித் தன் அங்கிப் பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டு விடைபெற்றார். பிரின்ஸ்பால் ஃபாதர்கிட்ட தன்னை மாட்டிவிட்டுவிடுவாரோ என்ற பதற்றத்தோடயே காரை ஓட்டிக்கொண்டு போனான் அருண்.
ட்ராபிக்
சிக்னலில் நின்றிருந்தபோது பெண் ஒருவர் ஒரு கைக்குழந்தையுடன் வந்து ஃபாதர் பக்கமாகக் கார் கதவைத் தட்டினாள். “இவங்களுக்கு வேறு வேலையே இல்ல. இருக்கிற டென்சன்ல நம்ம உயிர வாங்குறாளுங்க” என்று
அலுத்துக்கொண்டான் அருண்.
அந்தப்
பெண் அந்த இடத்தை விட்டுப் போவதாகத் தெரியவில்லை. ஃபாதர் சில்லறை ரூபாய்க்காகத் தன் பர்ஸைத் தேடினார். பர்ஸை எடுத்து வராதது தெரிந்தது. “இவங்களுக்கு நம்ம அஞ்சோ பத்தோ கொடுக்குறதாலதான் அடிக்கடி வந்து நம்மளத் தொந்தரவு பண்ணுறாங்க. இவங்களுக்கும் கொள்ளைக்கூட்டத்திற்கும் லிங் இருக்கு. காசு கொடுக்காதீங்க.” அருண் சும்மா இருந்தாலும் அவன் வாய் சும்மா இருக்கவேயில்லை. எப்போதும் முன்சார்பு எண்ணம் கொண்டே இருந்தான்.
பிரின்ஸ்பால்
உமா கொடுத்த கவருக்குள் கண்டிப்பாக ஐந்நூறு அல்லது ஆயிரம் இருக்கும் என்பது ஃபாதர் பிரேமுக்குத் தெரியும். தன்னிடம் பணம் இருப்பது தெரிந்திருந்தும் கார் கண்ணாடியைக் கீழே இறக்கி “காசு இல்ல, நீ போ” என்றார்.
அந்தப்
பெண் “காசு பணம் வேணாம் சாமி, என் பிள்ளைய ஆசிர்வாதம் பண்ணு” என்று சொல்லிக் கைக்குழந்தையை நீட்டினாள். ஒரு நிமிடம் அதிர்ந்து போனார் ஃபாதர். நாம என்னவோ நினைக்க, இந்தப் பெண் வேறெதுவோ நினைத்திருக்கிறாளே... என்றிருந்தது அவருக்கு. எளிதில் ஒருவரைத் தவறாக நினைத்துவிட்டோமே என்ற குற்றவுணர்வும், பாக்கெட்டில் காசிருந்தும் இல்லை என்று சொல்லிவிட்டோமே என்ற குற்றவுணர்வும் அவரைக் குத்தூசியாய் ஆயிரம் முறை குத்திக் கிழித்துக்கொண்டிருந்தது.
குழந்தையை
ஆசிர்வதித்துவிட்டு அக்குழந்தையின் கண்களைக் கூர்ந்துப்பார்க்கக்கூட முடியாமல் கார் கண்ணாடியை வேகமாக இழுத்தடைத்துக்கொள்ள நினைத்தபோது, தன்னிடமிருந்த இருபது ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினாள் அந்தப் பெண். ஒரு மனிதனை இப்படியும் தண்டிக்கலாமா? ‘இவரை விட்டு விடு போதும்’ என்று சொல்ல வேண்டும் போலிருந்தது அருணுக்கு. “வேணாமா, நீயே வச்சுக்கோ”
என்று சொல்லிவிட்டு வண்டியைக் கிளப்பச் சொன்னார் ஃபாதர்.
ட்ராபிக்
சிக்னல் சிவப்பிலேயே இருந்தது. அந்தத் ‘திக்... திக்...’ நிமிடங்கள் நரகத்தின் கோரப் பிரதிபலிப்பு போலிருந்தது. அங்கிப் பாக்கெட்டுக்குள் இருந்த பணம் அவருக்குப் பெரும் பாறாங்கல்லாய் கனத்தது. பச்சை சிக்னல் விழுந்து கார் கிளம்பியது. கிடைத்த வண்டு ஒன்றைக் கொன்று தின்ன இழுத்துச்செல்லும் கட்டெறும்புகள்போல அதிமிக வாகன நெரிசலில் இழுத்துச் செல்லப்பட்டது அந்தக் கார்.
ஒருவர்
மற்றவரைப் பற்றிய முன்சார்பு எண்ணங்கள் (Bias) ஒருவரின்
நன்மைத்தன்மையை அறியவிடாமல் செய்கிறது. சமூகங்களில் பிரதிபலிக்கும் இத்தகைய மனப்பாங்கு இன்று செயற்கை நுண்ணறிவுத் தளங்களிலும் பரவலாகக் காணக்கிடக்கின்றது. இதனால் பல்வேறு குழப்பங்களும் தாக்கங்களும் பிளவுகளும் சமூகத்தில் ஏற்படுகின்றன.
செயற்கை
நுண்ணறிவு பெரும் தரவுகளை (Big Data) அடிப்படையாகக்
கொண்டே இயங்குகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். இவ்வகைத் தரவுகள் முன்சார்புடையதாக அதாவது ஒரு மொழிக்கோ அல்லது ஒரு சமயத்திற்கோ அதிக முக்கியத்துவம் தருவதாக இருக்குமாயின், அதன் உண்மைத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படும். பெரும்பாலான செயற்கை நுண்ணறிவு மென்பொருள்கள் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் மிகுந்து கிடக்கும் தரவுகளைக் கொண்டே பயிற்சி அளிக்கப்படுகின்றன. எனவே, இயல்பாகவே அவற்றில் அந் நாட்டு மொழிகள், கலாச்சாரம், ஆளுமைகள், கருத்தியல்கள் மிகுந்து காணப்படும். இந்தியா போன்ற நாடுகளின் தரவுகள் அதில் அதிகம் இடம் பெறவில்லை என்பதனாலேயே இதனை ‘பிரதிநிதித்துவ சார்பு’
(Representation Bias) என்கிறோம்.
பல
நேரங்களில் செயற்கை நுண்ணறிவை வடிவமைக்கின்ற நிறுவனங்கள் சமூகத்தை, அதன் சிந்தனைத் திறனை மடைமாற்றம் செய்திட அதன் அல்காரிதச் செயல்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதனால்
நாம் எதைப் பார்க்கவேண்டும்? என்ன சிந்திக்க வேண்டும்? யாருக்கு வாக்குச் செலுத்த வேண்டும்? என்ன வாங்கவேண்டும்? என்பன போன்ற முடிவுகளை எடுக்க நாம் மறைமுகமாக நிர்பந்தப்படுத்தப்படுகிறோம்.
இதனை ‘அல்காரித சார்பு’
(Algorithmic Bias) என்கின்றனர்.
இத்தகைய அணுகுமுறை மனிதர்களுக்கிடையே பாகுபாடுகளையும் பிரிவினைகளையுமே விளைவிக்கின்றன. இதனால் செயற்கை நுண்ணறிவின் ‘சோசியல் இன்ஜினியரிங்’ செயல்பாடு
நம்மை ஆளுமைசெய்து, நம் முடிவெடுக்கும் திறனையும் கட்டுப்படுத்துகிறது.
செயற்கை
நுண்ணறிவுத் தொழில்நுட்பம் இன்னும் முழுமையடையாத நிலையிலேயே மக்கள் பயன்பாட்டிற்கு வந்ததால் பல சிக்கல்கள் நாளுக்கு
நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. செயற்கை நுண்ணறிவு முன்சார்புத்தன்மையற்ற தளங்களாக இருப்பதை அரசுகளும் பெரும் நிறுவனங்களும் உறுதிப்படுத்த வேண்டும். இல்லையேல் மேற்கூறப்பட்ட கதைமாந்தர்களான அருண் மற்றும் ஃபாதர் பிரேம் செய்த தவற்றைச் செயற்கை நுண்ணறிவும் செய்துகொண்டே இருக்கும்.
தமிழ்நாடு இன்று உயர் கல்வித் துறையில் இந்தியாவின் முன்னோடியான மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. கல்வி மேலாண்மை, மாணவர் பதிவு, பெண்கள் கல்வி, திறன் மேம்பாடு மற்றும் சமூகநீதி சார்ந்த புதிய முயற்சிகள் ஆகிய அனைத்திலும் மாநில அரசு பல்வேறு முன்னேற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருவது பாராட்டத்தக்கது. 2025-ஆம் ஆண்டுக்கான தரவுகள் மாநிலத்தின் உயர் கல்வித் துறையில் பெரும் மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றன. இந்த நிலையில் இதன் வளர்ச்சிக்கு வித்திட்டதில் கத்தோலிக்க நிறுவனங்களின் பங்களிப்பு மிகவும் மகத்தானது என்பதை அனைவரும் நன்கறிவர்.
அரசு
தரவுகளின்படி தமிழ்நாட்டின் மொத்த உயர் கல்வி பதிவு விகிதம் (Gross Enrollment Ratio) 48% கடந்துள்ளது. இது இந்திய சராசரி 28% விட
சிறந்த நிலையைக் காட்டுகிறது. குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்கள் உயர் கல்விக்குச் செல்வதற்கான வாய்ப்பு அதிகரித்து வருகிறது. 2021-22-ஆம் ஆண்டு 45% மட்டுமே
அரசுப் பள்ளி மாணவர்கள் உயர் கல்விக்குச் சென்றனர். ஆனால், தற்போது 2023-24-க்குள் அந்த விகிதம் 74% ஆக
உயர்ந்துள்ளது. இது மிகச் சிறப்பான வளர்ச்சியைக் குறிக்கிறது.
பெண்கள்
கல்வியிலும் புதிய வரலாறு உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 1,000 உதவித்தொகை வழங்கப்படுவதால், அவர்கள் உயர் கல்வியில் தொடரும் எண்ணிக்கை 2.09 இலட்சத்தில் இருந்து 4.06 இலட்சமாக இரட்டிப்பு அளவுக்கு உயர்ந்துள்ளது.
பள்ளிகளில்
செயல்படுவது போலவே அரசுக் கல்லூரிகளில் புதிய ‘கல்லூரி மேலாண்மைக் குழுக்கள்’
(IMC) அமையத்
திட்டமிடப்பட்டுள்ளது.
இது பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொழில் வட்டாரப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவாகச் செயல்படும். கல்லூரியின் நிர்வாகத் திறனை உயர்த்த இது ஒரு நல்ல நோக்கம் ஆகும்.
2025-26-ஆம் ஆண்டுக்கான
தமிழ்நாடு பட்ஜெட்டில் உயர் கல்விக்காக ரூ. 8,494 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 15,000 கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட்டு, கட்டட வசதி மற்றும் ஆசிரியர் நியமனம் ஆகியவற்றிற்காக ரூ. 15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
‘நான்
முதல்வன்’ திட்டம்
தற்போது 353 பொறியியல் கல்லூரிகள் மற்றும் 827 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் செயல்படுகிறது. மாணவர்களின் தொழில் சார்ந்த திறன்களை மேம்படுத்தும் வகையில் இந்த முயற்சி ஒரு முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
2025-ஆம் ஆண்டு
தமிழ்நாட்டின் உயர் கல்வித் துறையில் மிகுந்த வளர்ச்சி காலமாக அமைந்திருக்கிறது. மாணவர் பதிவு விகிதம், பெண்கள் கல்வி, திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் போன்றவற்றில் ஏற்பட்ட முன்னேற்றம் மிகத் தெளிவானது.
இந்த
நிலையில் இதன் வளர்ச்சிக்கு வித்திட்டதில் கிறித்தவ குறிப்பாக, கத்தோலிக்க நிறுவனங்களின் பங்களிப்பு மிகவும் மகத்தானது என்பதை அனைவரும் நன்கறிவர். இன்று கத்தோலிக்க மறைமாவட்டங்கள், துறவற சபை நிறுவனங்கள் அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதிக் கல்லூரிகள் பல பின்தங்கிய பகுதிகளில்
ஆரம்பித்து நடத்தப்பட்டு வருகிறது என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி.
இத்தகைய
சூழலில், அரசு உதவி பெற்று கிறித்தவச் சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரிகளில், கத்தோலிக்க ஏழை மற்றும் விளிம்புநிலை மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை
உறுதி செய்ய வேண்டும். சில கல்லூரிகளில் கத்தோலிக்கக் கிறித்தவ மாணவர்களைவிட வசதி படைத்த பலர் அதிகமான வாய்ப்பினைப் பெறுகிறார்கள். இதுபோன்ற சூழலில் ஆயர் பேரவை, மறைமாவட்ட ஆயர்கள், துறவற சபைத் தலைவர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்பதும் பலருடைய எண்ண ஓட்டங்கள்.
உயர்
கல்வி என்பது ஒவ்வோர் இளைஞனின் கனவுகளை நனவாக்கும் கருவி. அத்தகைய வாய்ப்பு அனைவருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும் என்பதே சமுகநீதி. தமிழ்நாடு அரசு கல்விக்காக மேற்கொண்டு வரும் முன்னேற்ற முயற்சிகளில், கத்தோலிக்கக் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு ஓர் அமைதியான புரட்சிபோலவே திகழ்கிறது. கல்வி என்பது நற்செயலின் ஒரு வடிவம் என நம்பும் இந்
நிறுவனங்கள் ஏழைகள், பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் விளிம்புநிலை மாணவர்களுக்கு நம்பிக்கையுடன் எதிர்காலம் தரும் தூண்களாகவே இருக்கின்றன. ஆயினும், இந்தப் பணியில் சில இடர்ப்பாடுகள், பாகுபாடுகள், நிர்வாகச் சவால்கள் இருப்பதையும் நாம் மறுக்க இயலாது. நீதி வழி சென்று, திறந்த மனத்துடன் சவால்களை எதிர்கொண்டு மாற்றங்களை ஏற்படுத்தும் கல்வி நிறுவனங்களின் பணிகள் தொடர வேண்டும். சமத்துவமான, தாராளமான, எல்லாருக்குமான கல்வி வழங்கும் ஒருங்கிணைந்த செயல்திட்டம் எல்லாக் கல்வி நிறுவனங்களிலும் மலர வேண்டும்.
நம்
எதிர்காலத்தின் ஒளிக்கதிர்கள் கல்லூரித் திறவுகோல்களில் ஒளிந்திருக்கும். அந்த ஒளிக்கதிர்களை நோக்கி அனைவரும் செல்ல
வழிகாட்டும் ஒளிவிளக்காக, நமது கல்வி நிறுவனங்கள் என்றும் சுடர்விட்டுக்கொண்டே இருக்கட்டும்!
பொதுநலமா? சுயநலமா? விவசாயிகளின் தற்கொலையா? அரசாங்கத்தின் கடன் தள்ளுபடியா? மனிதன் சுட்டுக் கொல்லப்படுவதா? ஸ்டெர்லைட் காப்பர் கம்பெனி மூடப்படுவதா? சேலம் மக்கள் வாழ்வாதாரம் பாதிப்பதா? எட்டு வழிச்சாலை கைவிடப்படுவதா? மீனவர்களின் வாழ்வு முக்கியமா? மீனவர்களின் இருப்பிடத்தை அழிக்கும் துறைமுகங்கள் முக்கியமா? கலாச்சாரப் பண்பாட்டைக் காப்பதா? கறவை மாடுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதா?
ஏன்
இந்த அமைதி? ஏன் இந்தப் பொறுமை? எவரோ ஒருவர், ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு ஏற்படும்போது வருகின்ற கொந்தளிப்பு, ஏன் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்ப்பாயம் வரவில்லை? அமைதி, பொறுமை, காலதாமதம் இவையெல்லாம் மனிதனின் வாழ்விற்கா? இல்லை, அவனின் அடிமட்ட அழிவிற்கா? ‘தமிழன் என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா!’ தலைநிமிர்ந்து நிற்பதைக் காட்டிலும், தலைகுனிந்து நடப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். ஒவ்வொரு மனிதனும் சிந்திக்க வேண்டும். குற்றம் நடக்கின்ற இடத்தில், குற்றம் என்று தெரிந்தும் அவ்விடத்தில் அமைதிக் காப்பவன் தியாகி அல்ல; மாறாக, அவர் ஒரு தீவிரவாதி என்று நாம் படித்திருக்கிறோம்.
ஆம்!
நாம் ஏன் இன்னும் அமைதி காக்கின்றோம்? அப்பாவி விவசாயிகளின் அழுகுரல் நம்முடைய காதுகளைத் துளைக்கவில்லையா? குண்டுகள் துளைத்து மண்டையிலிருந்து வெளிவந்த இரத்த ஆறுகளில் நம் மனம் ஈரமாகவில்லையா? எத்தனையோ தற்கொலைகள், எத்தனையோ கொலைகள்! ஆனால், ஊடகங்களில் மட்டும் வெளிவரவில்லை... ஏன்? குரல் கொடுக்கும் குரல்களின் அடையாளம் மறைக்கப்படுவதாலா? ஹெல்டர் கேமரா இவ்வாறு கூறுகின்றார்: “நான் ஏழைக்கு உதவி செய்யும்போது என்னைப் புனிதன் என்கிறார்கள்; நானோ இவன் ஏன் ஏழையாக இருக்கிறான் என்று கேள்வி எழுப்பும்போது என்னைப் பயங்கரவாதி என்கிறார்கள்.”
ஒவ்வொரு
மனிதனுக்கும் தனிஉரிமை இருக்கின்றது. மனிதா நீ போராடு! உரிமை
உன் கையில் உள்ளது. எழுதுகோல் எடுத்து வாழ்வுக்கு எழுத்து, மூச்சுக் கொடுப்பவன் நீ! நீ போராளிதான். போராடினால்
மட்டும் போதாது. நாம் எதை முன்வைக்கிறோமோ அதை நாம் முதலில் நடைமுறைப்படுத்த வேண்டும். “செபிக்கும் உதடுகளைவிட, உதவும் கரங்களே மேலானவை” என்கிறார் புனித அன்னை தெரேசா. கோவில் கட்டுவதற்கும், கோபுரம் எழுப்புவதற்கும் உதவுதல் மட்டும் அல்ல நம்பிக்கை வாழ்வு; மாறாக, நம்மை நாடி வருவோருக்கு ஒரு வேளை உண்ண உணவும், குடிக்க நீரும் கொடுத்தலே ஆகும். மனிதா, எதிர்வீட்டு சன்னல் கண்ணாடி உடையும்போது, ‘என் வீட்டுக் கண்ணாடி உடையவில்லை, எனக்கென்ன கவலை?’ என்று இருந்துவிடாதே. இன்று எதிர்வீட்டு சன்னல் கண்ணாடி, நாளை உன் வீட்டுக் கதவுக் கண்ணாடி!
பதவியும்
பணமும் தலைவிரித்தாடும் இக்களத்தில் இரண்டும் இல்லாத நான் என்ன செய்வது என்று எண்ணாதே? அன்று சிறுவன் தாவீது, கோலியாத்தைப் பார்த்து இந்தக் கேள்வியை எழுப்பியிருந்தால் ஆண்டவரின் ஆற்றல் அச்சிறுவனிடமிருந்து வெளிவராமல் போயிருக்கும். அன்று பவுலாக மனமாறிய சவுல், உரோமை ஆட்சியை நினைத்து, இந்தக் கேள்வியை எழுப்பியிருந்தால், இன்று கிறித்தவம் உலகெங்கும் பரவியிருக்குமா?
“எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு” என்ற புனித பவுலடியாரின் வார்த்தைகளை மனத்தில் பதித்து, ‘என்னாலும் செய்ய இயலும்’ என்ற மனப்பக்குவத்தோடு, நம் அயலாருக்கு நம்மால் முடிந்ததைச் செயலாக்கிட முயல்வோம்.
அன்பு
ஆயுதமாகிறது! ஆயுதம் அறமாகிறது!
அநீதிகளை
அழிக்க! ஆணவங்களை ஒழிக்க!
அன்பாய்
வாழ்வோம்! அறமாய்ச் செயல்படுவோம்!
அரசியலில்
ஆன்மிகம் தேவையாகலாம்; ஆனால், ஆன்மிகத்தில் ஒருபோதும் அரசியல் கூடாது. ஏனென்றால், அரசியலும் ஆன்மிகமும் இரண்டும் அவ்வளவு எளிது அல்ல; ஆனால், இரண்டும் பல நேரங்களில் சுயநலத்தை
நாடியே அமைந்துள்ளது. ஆகவே, அரசியலாக இருந்தாலும், ஆன்மிகமாக இருந்தாலும் பொதுநலம் கருதி மக்களுக்காக, மனிதநேயத்திற்காகப் பணிபுரிய வேண்டும். வீறுகொள்! உனது அறிவு எனும் தராசில் ஆன்மிகத்தையும், அரசியலையும் சரிவரப் பேணு! கேள்விக்குறியாய் இருக்கும் உன் வாழ்வு, உலகத்திற்கே ஆச்சரியக் குறியாய் மாறும்.
வாழ்க
வளத்துடன்!