புனித தெரேசியன் கார்மல் சபையின் நிறுவுநர் அன்னை எலிஸ்வா அவர்களின் அருளாளர் பட்ட நிகழ்விற்காக, CTC சபையின் தலைமை அன்னை மதர் ஷஹிலா CTC அவர்களுடன் ‘நம் வாழ்வு’கண்ட நேர்காணல்:
•
தலைமை அன்னை அவர்களே! தங்களுடைய
சபையின்
நிறுவுநர்
அன்னை
எலிஸ்வா
அவர்கள்
அருளாளராக
உயர்த்தப்பட்ட
நிகழ்வு
பெரும்
மகிழ்வுக்குரியது.
இந்தச்
சிறப்புத்
தருணத்திலே
‘நம்
வாழ்வு’ வாசகர்கள் சார்பாக,
ஆசிரியர்
குழு
சார்பாக
உங்களுக்கு
மனமார்ந்த
வாழ்த்துகளைத்
தெரிவித்துக்கொள்கிறோம்.
தங்களுடைய
சபையைப்
பற்றி,
அருளாளர்
அன்னை
எலிஸ்வா
அவர்களைப்
பற்றி,
அவருடைய
கனவைப்
பற்றி
ஒருசில
கருத்துகளைப்
பகிர்ந்துகொள்ளுங்களேன்?
“அருளாளர் அன்னை எலிஸ்வா கேரளத் திரு அவை வரலாற்றில் தூய ஆவியால் வழிநடத்தப்பட்ட ஓர் அரிய ஆன்மிகத் தாய். மனித ஆதரவுகளோ, திட்டமிட்ட எதிர்கால வரைபடங்களோ இல்லாமல் முழுமையாக இறைவனின் சித்தத்திற்குத் தன்னை ஒப்படைத்த ஒரு பெண்தான் இவர். விதவையான இவரது வாழ்க்கையில், வேதனையிலும் தனிமையிலும் இவர் கண்ட கனவுகளும் பெற்ற அழைப்புகளும் இன்று எங்களுடைய கார்மல் சபை CTC என்ற பெரும் ஆன்மிக இயக்கமாக மலர்ந்துள்ளது.
அன்னை
எலிஸ்வாவின் வாழ்க்கையின் மையம் தூய ஆவியானவரின் வழிநடத்துதல். 14 வருடங்கள் எந்த மனிதத் தூண்டுதலோ, உதவியோ இல்லாமல் தூய ஆவியானவரின் தூண்டுதலால் கடவுளோடு மட்டும் உறவாடியவர்தான் இந்த விதவைப் பெண். இவர் தொடங்கிய ‘TOCD’இன்று
CTC சபை, கார்மேல் ஆன்மிகத்தின் ஆழத்திலிருந்து பிறந்தது. அன்னை எலிஸ்வா கண்ட கனவு ஒரு குறுகிய கால இலக்காக இல்லை; அது எதிர்காலத் தலைமுறைகளை நோக்கிய கனவு ‘இறைவன் மட்டுமே என் வழிகாட்டி’
என்ற உறுதியான நம்பிக்கை. இவர் கண்ட கனவுகள் இன்று ஒரு வாழும் உண்மையாக மாறி, ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையைத் தொட்டு மாற்றி வருகிறது.”
•
அன்னை அருளாளர் எலிஸ்வா அவர்களுடைய கனவை நனவாக்கும்
வண்ணம்
இந்நாளில்
அருள்சகோதரிகள்
தங்கள்
சபையில்
மேற்கொள்ளும்
பணிகளை,
அந்தக்
கனவு
நனவாகிய
தருணங்களை,
இன்னும்
இறையாட்சிப்
பணியில்
ஈடுபாடு
கொண்டிருப்பதைப்
பற்றி
சற்று
விளக்கமாகக்
கூறுங்களேன்?
“எங்கள் சகோதரிகள் பல்வேறு துறைகளில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர்.
கல்விப் பணியில்:
குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பின்தங்கியவர்களுக்குத் தரமான கல்வி வழங்கி, அறிவின் ஒளியைப் பரப்புகின்றனர்.
சமூக சேவையில்:
ஏழைகள், ஆதரவற்றவர்கள், முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக அன்பின் கரங்களாக நிற்கிறார்கள். நோயாளிகளுக்குக் கருணையுடனும் மனிதநேயத்துடனும் சேவை செய்து, கிறிஸ்துவின் குணமளிக்கும் அன்பை வெளிப்படுத்துகின்றனர். செபம், வழிகாட்டல், ஆன்மிக ஆலோசனை மூலம் மக்களை இறைவனுடன் நெருங்கச் செய்கிறார்கள். மத, சமூக வேறுபாடுகளைத் தாண்டி, சகோதரத்துவமும் சமாதானமும் நிலவச் செய்கிறார்கள்.”
•
அண்மையிலே நாம் மாபெரும்
யூபிலி
2025 நிறைவு
செய்திருக்கின்றோம்.
நம்பிக்கையின்
திருப்பயணிகளாக
ஒன்று
கூடியிருக்கின்றோம்.
இப்போது
நாம்
ஒருங்கிணைந்த
திரு
அவையாகப்
பயணிக்கக்
கூட்டொருங்கியக்கத்
திரு
அவையாக
இணைந்து
பணியாற்றவேண்டும்
என்ற
முழக்கத்தை
முன்னெடுத்திருக்கின்றோம்.
இவ்வேளையில்,
தங்கள்
சபையோடு
பொதுநிலையினர்
இணைந்து
ஈடுபடக்கூடிய
சிறப்புத்
தருணங்களைப்
பற்றிச்
சற்றுத்
தெளிவாகக்
கூறுங்களேன்?
“இந்த யூபிலி ஆண்டு 2025 நிறைவு காலத்தில் நாம் அனைவரும் நம்பிக்கையின் யாத்திரையாக ஒன்றிணைந்துள்ளோம். இது வெறும் ஒரு விழா அல்ல; மாறாக, கடவுள் தமது மக்களை எவ்வாறு ஒன்றாக நடக்க அழைக்கிறார் என்பதைச் சிந்தித்து, அதை வாழ்வாக்கும் ஓர் ஆன்மிகப்
பயணம் ஆகும். எங்கள் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், சமூகப் பணிகள் அனைத்தும் கூட்டொருங்கியக்க நிலையில் செயல்படுகின்றன. ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள், பெற்றோர் அனைவரும் பங்கேற்பாளர்களாக, கருத்து பகிர்வு, ஆலோசனை, பொறுப்பு பகிர்வு, மதம், மொழி, கலாச்சாரம் கடந்த ஒற்றுமையுடன் பணியாற்றுகின்றனர்.
இன்றைய
உலகிற்கு எங்கள் துறவற வாழ்வு வழங்கும் முக்கியமான சாட்சி: கேட்பதன் கலாச்சாரம், உரையாடலின் ஆன்மிகம், ஒற்றுமையில் வேறுபாட்டை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு! பலவீனர்களுடன் துணை நிற்கும் மனம் கொண்டு எங்கள் சகோதரிகள் பணியாற்றுகின்றனர்.”
•
‘அறுவடை மிகுதியாக இருக்கிறது,
வேலையாள்களோ
குறைவாக
இருக்கிறார்கள்’ என்னும் இறைவாக்கிற்கேற்ப
இறையழைத்தலை
நீங்கள்
எப்படிப்
பார்க்கிறீர்கள்?
இறைஅழைத்தலைத்
தூண்டுவதற்காக
அல்லது
அவர்களை
உருவாக்குவதற்காக
நாம்
என்ன
முயற்சிகளை
முன்னெடுக்கலாம்
என்று
நீங்கள்
நினைக்கிறீர்கள்?
“துறவற அழைப்பு என்பது மனிதன் தேர்ந்தெடுக்கும் ஒரு தொழில் அல்ல; கடவுள் தனிப்பட்ட முறையில் வழங்கும் ஓர் அழைப்பு; ஓர் அருள். அது ஒருவரின் திறமைகளையும் அறிவையும்விட கடவுளின் விருப்பத்திற்கான திறந்த மனம், சேவைக்கான மனநிலையே முக்கியம்.
அன்னை
எலிஸ்வா, தன் மகள் அன்னாவின் வாழ்வில் துறவற அழைப்பை வளர்த்த விதம், இன்று நமக்கு ஒரு வலுவான முன்மாதிரி. அவர் கட்டாயப்படுத்தவில்லை; கடவுளின் அழைப்பை அன்னா தாமே உணர இடம் கொடுத்தார். செபத்தின் சூழலை உருவாக்கினார். அமைதி, இறைநம்பிக்கை, தியாகம் நிறைந்த குடும்பச் சூழல் போன்றவற்றை வார்த்தைகளால் அல்ல, வாழ்க்கையால் கற்றுக்கொடுத்தார்.
துன்பத்தில்
பொறுமை, துறவற வாழ்க்கையில் நம்பிக்கை, கடவுள்மீது முழு நம்பிக்கை. தாயாக இருந்தாலும், ‘கடவுளின் விருப்பமே முதன்மை’ என்ற மனப்பாங்கை அன்னாவுக்குள் விதைத்தார். இதனால் அன்னாவின் துறவற அழைப்பு சுதந்திரமான அர்ப்பணிப்பாக வளர்ந்தது.”
•
தங்களுடைய சபையின் பாதுகாவலரான
புனித
குழந்தை
இயேசுவின்
தெரசாள்
வழங்கிய
எளிய
வழி
என்னும்
ஆன்மிகமே
இவர்களின்
வழிநடத்துதல்
ஆகும்.
பரந்து
விரிந்த
கலாச்சாரச்
சீர்கேடுகளில்
சிக்கிக்
கொண்டிருக்கின்ற
இளையோருக்கு
எவ்வளவு
அவசியமாக
இருக்கிறது
என்பதைப்
பற்றிக்
கூறுங்களேன்?
“சிறு வழி இன்றைய காலத்திற்கான ஆன்மிக மருந்து. ‘Little Flower’ என்பது சிதறும் கலாச்சாரத்தில் ‘சிறு வழி’ தரும் சிகிச்சை, உடைந்த உறவுகளுக்கான சிகிச்சை. இந்தக் காலத்திற்குத் தேவைப்படுவது உண்மையான அன்பு, நம்பிக்கையுள்ள இதயம், உள்ளார்ந்த நம்பிக்கை... இவையெல்லாம் தருவது ‘சிறு வழி’ ஆன்மிகம். இன்றைய உலகிற்கான கார்மேல் செய்தி, எங்கள் கார்மேல் ஆன்மிகத்தில் Little Flower கூறும்
செய்தி: இந்த உடைந்த உலகைச் சிறிய அன்பு மீட்கும் என்பதாகும். இன்றைய இளையோருக்கும், சிதறும் கலாச்சாரத்திற்கும், மனஅழுத்தம் நிறைந்த மனிதகுலத்திற்கும் ‘சிறு வழி’
- ஒரு
புதிய நம்பிக்கையின் பாதை.”
•
அருளாளராக உயர்த்தப்பட்டிருக்கக்கூடிய
அன்னை
எலிஸ்வா
அவர்கள்
விரைவிலேயே
புனிதர்
நிலைக்கும்
உயர்த்தப்படவேண்டும்
என்று
எங்களுடைய
செபங்களை
உரித்தாக்குகிறோம்.
அவருடைய
புனித
நிலைக்கான
ஆயத்தப்
பணிகள்
பற்றி
கொஞ்சம்
விளக்கமாகக்
கூறுங்களேன்?
“புனிதர் பட்டத்திற்கான அடுத்த நிலை அறிவிக்கப்படுவதற்கு அருளாளர் அன்னை எலிஸ்வாவின் பரிந்துரையால் நிகழும் ஓர் உறுதியான புதுமை தேவை. இந்தப் புதுமை மருத்துவ ரீதியாக விளக்க முடியாத, முழுமையான மற்றும் நிரந்தரக் குணமடைதலாக இருக்கவேண்டும்.
அன்னை எலிஸ்வாவை நோக்கிச் செபித்ததால் மட்டுமே இது நிகழ்ந்தது என்று நிரூபிக்கப்படவேண்டும். தீவிர செபமே புனிதர் நிலைக்கான முதல் படி. சபையின் முக்கியப் பங்கு அன்னை எலிஸ்வாவின் வாழும் சாட்சியாக இருக்கவேண்டும் எங்கள் வாழ்க்கை, பணி, சமூக உறவுகள் அவரின் ஆன்மிகத்தைப் பிரதிபலிக்க வேண்டும். அன்னை எலிஸ்வாவைப் பேசுவது மட்டுமல்ல; அவரைப் போல வாழ்வதே மிகப்பெரிய தயாரிப்பு. ‘புனித அன்னை எலிஸ்வா’ என்று மகிழ்ச்சியுடன் அறிவிக்கும் நாளை நம்பிக்கையுடன் எதிர் நோக்குவோம். வாழ்த்தப்பட்ட அன்னை எலிஸ்வாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.”
•
குழந்தை இயேசுவின் தெரேசாவுடைய
ஆன்மிகத்தில்
பயணிக்கும்
தங்கள்
சபையைப்
பற்றியும்,
அருளாளர்
நிலைக்கு
உயர்த்தப்பட்ட
அன்னை
எலிஸ்வா
அவருடைய
வாழ்வைப்
பற்றியும்,
இந்த
இதழை
வாசித்துப்
பெற்றிருக்கக்கூடிய
‘நம்
வாழ்வு’ வாசகர்களுக்குத் தாங்கள்
கூற
விரும்பும்
செய்தி
என்ன?
“அன்பும் மதிப்பும் கொண்ட ‘நம் வாழ்வு’ வாசகர்களே, இந்த இதழின் பக்கங்களை நீங்கள் புரட்டும்போது, ‘சிறு வழி’ அருளாளர் அன்னை எலிஸ்வாவின் வாழ்க்கை, சேவை, ஆன்மிகம் என்ற மூன்று ஒளிமயமான வாழ்வுச் சாட்சிகளை நீங்கள் சந்திப்பீர்கள். இவை வெறும் வரலாற்றுக் குறிப்புகள் அல்ல; இன்றைய மனிதனுக்கான வாழ அழைப்பு. குழந்தை
தெரேசா நமக்குக் கூறுவது ஒன்றே: ‘பெரிய காரியங்களைச் செய்ய முடியாவிட்டாலும், பெரிய அன்புடன் சிறியதைச் செய்.’ துன்பத்திலும் கடவுளை நம்பும் துணிவு, அமைதியில் பிறக்கும் சேவை, விதவையாக இருந்தபோதும் அர்ப்பணிப்பின் உயரம், தியானத்தில் ஊன்றிய செயல் இவற்றை அன்னை வாழ்ந்து காட்டினார். இந்த இதழை வாசித்த பிறகு, நாம் நம்மிடம் கேட்கவேண்டிய கேள்வி இதுதான்: ‘நான் என் அன்றாட வாழ்க்கையில் சிறு வழியை எப்படி வாழ்கிறேன்? என் குடும்பம், பணி, சமூகத்தில் அன்னை எலிஸ்வாவின் ஆன்மிகத்தை எப்படி வெளிப்படுத்துகிறேன்?’
அன்பார்ந்த
வாசகர்களே, சிறிய
அன்பை நடைமுறையில் மாற்றுவோம். அமைதியில் இருந்து சேவைக்கு நகர்வோம். வார்த்தைகளைவிட வாழ்க்கையால் சாட்சி அளிப்போம். அப்பொழுது ஒவ்வொரு குடும்பமும் ஒரு சிறு கார்மேலாக, ஒவ்வோர் இதயமும் கடவுளின் வாசஸ்தலமாக மாறும். புனிதம் என்பது சிலருக்கான உயரம் அல்ல; அன்புடன் வாழ விரும்பும் அனைவருக்கான பாதை. அருளாளர் அன்னை எலிஸ்வா, நம்மை வழி நடத்தட்டும்.”
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி பா.ச.க.வை நோக்கி வெடித்துப் பேசினார்: “உங்கள் வாழ்நாளில் ஒருபோதும் தமிழக மக்களை நீங்கள் ஆளமாட்டீர்கள்.” இது மோடி மற்றும் அமித்ஷாவிற்கு விடப்பட்ட பகிரங்கச் சவால்!
பா.ச.க.வைப்
பொறுத்தவரை மாநில அரசியலில் ஒரு நிலையற்றத்தன்மை வேண்டும். தொங்கு சட்டமன்றங்கள் அமைய அங்கு வேண்டிய குதிரைப் பேரங்கள் நடத்த, அரசியல் சூழல்களில், தேர்தல் முடிவுகளில் தெளிவில்லாத நிலை அவசியம். சேறு
நிறைந்த குட்டையைக் குழப்பி மீன் பிடிப்பதுபோல மாநிலக் கட்சிகளை வளைக்க வேண்டியது பா.ச.க.வுக்கு அத்தியாவசிய
மற்றும் அடிப்படைத் தேவை. வலையில் விழுந்த அக்கட்சிகளை உடைத்து, மெல்ல வைத்த முதல் அடியை விரிவாக்கி ஆட்சிக் கட்டிலில் அமர்தல் காலத்தின் கட்டாயம். எல்லா மாநிலங்களுக்குமான பா.ச.க.வின் பொதுவான சூத்திரம் இதுதான். 2031-இல் தமிழ்நாட்டில் பா.ச.க.
ஆட்சி என்ற ஆர்.எஸ்.எஸ். செயல்திட்டம் இவ்வாறே வடிவு பெறுகிறது.
ஒரு
மாதிரி மகாராஷ்டிரா கதையைக் காண்போம். தமிழ்நாட்டில் தி.மு.க.வைப் போலவே பால்தாக்கரே ஊட்டிய மொழியுணர்வு, இனவுணர்வால் ஆட்சிக்கட்டிலை அடைந்தது சிவசேனா கட்சி. ஆனால், மத உணர்வு என்ற
பெயரில் பா.ச.க.வுக்கு உற்றத்தோழனாக இருந்தது. 2019, மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில், பா.ச.க.வுடன் கூட்டணி கண்டு 50 இடங்களைப் பிடித்தது. பா.ச.க.
105 இடங்களை வென்றது. நியாயப்படி, தார்மீகப்படி இந்தக் கூட்டணி ஆட்சி அமைக்கவேண்டும். ஆனால், 44 இடங்களைப் பிடித்த காங்கிரஸ் கட்சியும், 54 இடங்களை வென்ற தேசியவாதக் கட்சியும் சிவசேனாவுடன் சேர்ந்து புதிய ஆட்சியை அமைத்தன. பா.ச.க.
நல்ல பொழுதிற்குப் பொறுமை காத்தது. அதற்கான வேளை வந்தது.
2022-இல் சிவசேனாவைச்
சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே என்பவருடன் பா.ச.க.
இரகசியப் பேச்சு வார்த்தைகள் நடத்தியது. சிவசேனா கட்சியை உடைத்தது. சிவசேனா கட்சி ஆட்சி இழந்தது.
பா.ச.க. ஆதரவில்
ஏக்நாத் ஷிண்டே முதல்வரானார். கட்சி, கொடி, சின்னம் அனைத்தும் ஏக்நாத் ஷிண்டேவுக்குப் பா.ச.க.வால் தூக்கித் தரப்பட்டது. பாரம்பரிய சிவசேனா புதிய சின்னத்தில் நின்றது.
2024-இல் அடுத்த
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் வந்தது. ஏக்நாத் ஷிண்டேவுக்கு உரிய மரியாதை தரப்படவில்லை. கேட்ட எண்ணிக்கையில் தொகுதிகளோ, கேட்ட தொகுதிகளோ தரப்படவில்லை. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராகப் பதவி இறக்கப்பட்டார். 2026, சனவரியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களிலும் இதே புறக்கணிப்பு ஏக்நாத் ஷிண்டேவுக்கு நடந்தது. பா.ச.க.வின் எல்லாக் கொத்தடிமை அரசியல் தலைவர்களுக்கும் நாளைய நிலை இதுதான்.
நாம்
2026 தமிழ்நாட்டுத் தேர்தல் களத்திற்குத் திரும்புவோம். தமிழ்நாட்டுத் தேர்தல் களத்தில் நான்கு அணிகள் உள்ளன. ‘இந்தியா’ கூட்டணி தவிர்த்த மூன்று அணிகளும் ‘தி.மு.க.வை வீட்டிற்கு அனுப்புவோம்’ என்ற
பொது முழக்கம் வைக்கிறார்கள். நாம்
தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், அ.தி.மு.க.வில் பா.ச.க.வின்
தலையீடு ‘இந்தியா’ கூட்டணியின் வெற்றி வாய்ப்பைத் தடுக்கும். 2016-இல் ‘வானவில் கூட்டணி’ என அமைக்கப்பட்ட மக்கள்
நலக் கூட்டணி ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிச் சிதறவிருந்த அ.தி.மு.க.வை மீண்டும்
ஆட்சி அமைக்க உதவியது. இரண்டு பொதுவுடைமைக் கட்சிகள், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், தே.தி.மு.க., தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியவை பெற்ற வாக்குகள் வெறும் 6 விழுக்காடுதான். இன்றும் இதேநிலையில் தமிழ்நாட்டுத் தேர்தல் களத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது அணிகளாகக் கணிக்கப்படுபவையும் உள்ளன.
தமிழ்நாட்டில்
பா.ச.க. மற்றும்
அ.தி.மு.க.வின் என்.டி.ஏ. அணி
2024 - பாராளுமன்றத் தேர்தலில் உடைந்திருந்தது. 2026 - சட்டமன்றத் தேர்தல்களில் சற்றேறக்குறைய அதே பழையபடியான புதிய பொலிவைப் பெற்றுள்ளது எனலாம். அதற்கான நிர்ப்பந்தங்கள், அழுத்தங்கள் தனித்தனி திரை மறைவு அரசியலே காரணம்.
ஒரு
காலத்தில் தேசியக் கட்சிகள் தேர்தல் கூட்டணிக்காக ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் சென்று காத்திருந்த காலம் போனது. சம்மனுக்கு ஆஜராகும் குற்றவாளிகள்போல புதுதில்லி அமித்ஷா வீட்டிற்கு அ.தி.மு.க.வினர் நடையாய்
நடக்கின்றனர். இவர்களைக் காணும்போது கொதிநீருக்காகக் குளிர்நீரில் போடப்பட்டு, வெதுவெதுப்பான இளஞ்சூட்டில் மகிழும் தவளையின் நிலைதான் நினைவிற்கு வருகிறது.
அமித்ஷா
‘என்.டி.ஏ. கூட்டணி
ஆட்சி’ என்கிறார்.
ஆனால், எடப்பாடி பழனிச்சாமி அவர்களோ, “நான்தான் தமிழக என்.டி.ஏ. கூட்டணித்
தலைவர், கூட்டணியில் எல்லா முடிவுகளையும் நான்தான் எடுப்பேன், நான்தான் அடுத்த முதல்வர்”
என்கிறார். ஆனால், உண்மையில் என்.டி.ஏ. கூட்டணி
குறித்த அனைத்து முடிவுகளையும் அமித்ஷாவே எடுக்கிறார். “தமிழ்நாட்டில் வெற்றி வாய்ப்பு உள்ள 60 தொகுதிகள் பா.ச.க.வுக்குத்தான்” என
அடித்துக் கூறிவிட்டார் என்பதே தகவல். அவரின் தப்புத்
தாளங்களுக்கு அ.தி.மு.க. அடிமைகளாக ஜதி
பிறழாமல் ஆடுகிறார்கள். தமிழக வெற்றிக் கழகம் என்.டி.ஏ. கூட்டணிக்கு வந்துவிட்டால் ‘நான்தான் அடுத்த முதல்வர்’
என எடப்பாடி கனா காண்கிறார். அதற்கான அனைத்து நகர்வுகளும் நடக்கின்றன. நீதித்துறை, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் என்பதோடு, மத்திய திரைப்படத் தணிக்கைத் துறையும், பா.ச.க.
மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்காக
வேலை செய்கிறது.
தமிழ்நாடு
வந்த அமித்ஷா, மேனாள் அமைச்சர் வேலுமணி மூலம் கூட்டணிப் பேரம் பேசுகிறார். அவரையும், மேனாள் அமைச்சர் தங்கமணியையும் பா.ச.க.
தங்கள் பிடியில் புதிதாக வளைத்துப் பிடித்திருக்கிறது. முன்பே சசிகலா, ஓ. பன்னீர் செல்வம்,
டி.டி.வி. தினகரன்
போன்றோரையும் தங்கள் பிடியில் வைத்துக்கொண்டு, இவர்களை வைத்து அ.தி. மு.க.வை உடைப்பது,
கூட்டணி ஆட்சி என்பது பின் பா.ச.க.
ஆட்சி என மாற்றுவது பா.ச.க.விற்குப்
புதிதான ஒன்றல்ல. பா.ச.க.வின் வழக்கப்படியான நடைமுறைச் செயல்தான். அ.தி.மு.க.வை இதுபோன்ற
நிலைக்குப் பா.ச.க.
நகர்த்திவிட்டது என்பது மறுக்க முடியாத
உண்மை.
பா.ச.க. ஆளாத
மாநிலங்களைக் கைப்பற்றி ‘ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே தலைவர்’ என்ற நிலைக்கு அரசியல் அமைப்பை மாற்றுவார்கள். புதுதில்லியை மையமாகக் கொண்ட அதிபர் ஆட்சி முறை நடைமுறைப்படுத்தப்படும். மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கப்பட்டு, மாநில அரசுகள் உள்ளாட்சி அமைப்புகளாக மாற்றப்படும். பா.ச.க.
ஆளாத மாநிலங்களே பா.ச.க.வின் இந்தச் செயல்திட்டங்களுக்குத் தடைக்கல்லாக உள்ளன. அதனால் மாநில அரசுகளைக் கைப்பற்றுவதில் பா.ச.க.
அதீத ஆர்வம் காட்டுகிறது. அறமற்றச் செயல்களை நடத்துகிறது. ஆர்.எஸ்.எஸ். அதற்கான செயல்திட்டங்களை வடிவமைத்துத் தருகிறது. மதவாதம் பூதாகரமாய் உருமாறுகிறது.
மதவாதம்
சார்ந்த பா.ச.க.
செயல்திட்டத்தில் நீதிபதி குன்ஹா கூறிய வார்த்தைகள் பொருந்திப் போகிறது:
“அநீதிக்கு எதிராகப் போராடாதவன் தூய்மையான கிறித்தவன் அல்லன்.” ஆம், நாம் தெருவில் இறங்கிப் போராடவேண்டாம். 2026-தமிழ்நாட்டுத் தேர்தலில் வாக்குகள் வழியாக நம் வலிமையைக் காட்டுவோம். மதவாதக் கூட்டணியின் எல்லா வடிவுகளையும் விரட்டி அடிப்போம்.
“உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” (மாற் 16:15) என்ற இயேசுவின் கட்டளையைக் கடைப்பிடித்து, உலகின் ஒருமுனை முதல் மறுமுனை வரை மறைபரப்புப் பணியாளர்கள் பல்வேறு காலகட்டங்களில் பணிபுரிந்து வந்துள்ளார்கள் என்பது வரலாறு. 19-ஆம் நூற்றாண்டு வரை மேற்கத்திய நாடுகளிலிருந்து அருள்பணியாளர்கள், துறவியர், பொதுநிலையினரும் கிழக்கு நோக்கி வந்தார்கள். ஆனால், 20-ஆம் நூற்றாண்டில் கிழக்கத்திய நாடுகளிலிருந்து ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா போன்ற நாடுகளுக்குப் புதிய மறைபரப்புப் பணியாற்ற பணியாளர்கள் அதிகம் தேவைப்பட்டார்கள்.
அதன்படியே,
கனடா நாட்டின் ஆதிப் பழங்குடி மக்களிடையே 18 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அருள்பணியாளர் சூசை ஜேசு, மத்திய கனடாவில் சஸ்காட்செவன் மற்றும் மணிடோபாவின் வடக்குப் பகுதிகளை உள்ளடக்கிய சுமார் 7,25,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு பெரிய மறைமாவட்டமான கீவாடின்-லெ பாவின் புதிய
பேராயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
என்ற செய்தி இந்தியாவிலும் குறிப்பாக, தமிழ்நாட்டிலும் இலங்கையிலும், ஏன் கனடா நாட்டிலும் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ‘மூன்றாம் உலக நாடாகக் கருதப்படும் இந்தியாவிலிருந்து ஒருவர் மேற்குலமாகக் கருதப்படும் கனடா நாட்டில் எப்படி ஆயர் ஆனார்? கனடா நாட்டு வெள்ளையின அருள்பணியாளர்கள் இவரை ஏற்றுக்கொள்வார்களா?’ என்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன.
2025, நவம்பர் 17, திங்கள்
அன்று திருத்தந்தை லியோ 54 வயதான அருள்தந்தை சூசை ஜேசு அவர்களை இப்பணிக்கு நியமித்தார். 2007 முதல் கனடாவில் பணியாற்றி வரும் அமலமரி தியாகிகள் (Oblates of Mary Immaculate, OMI) சபையைச் சார்ந்த
இவர், கனடியத் திரு அவைக்கும் பழங்குடிச் சமூகங்களுக்கும் இடையிலான ஒப்புரவு மற்றும் நல்லிணக்கத்தின் தொடர்ச்சியான செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கிறார்.
2022-ஆம் ஆண்டு
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க வருகைக்கு வழிவகுத்த - வத்திக்கானில் நடந்த ஆரம்பக் கூட்டத்திற்கு, பூர்வீக மக்கள் குழுவுடன் அருள்தந்தை சூசை ஜேசு முன்பு சென்றிருந்தார். 2022-ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆல்பெர்ட்டா மாநிலத்தில் எட்மண்டன் நகருக்கு வருகை தந்தபோது அருள்தந்தை சூசை ஜேசு அவர்கள் பணியாற்றிய பழங்குடியின மக்களின் மறைத்தளமான திரு இருதய ஆலயத்திற்கும், தற்போது பணிபுரியும் ஆல்பெர்ட்டா ஏரியில் அமைந்துள்ள புனித அன்னாள் திருத்தலத்திற்கும் சென்று பழங்குடியின மக்களைச் சந்தித்து, அவர்களின் ஆண்டாண்டு கால வரலாற்றுக் குறைகளைக் கேட்டறிந்து ஆறுதல் தந்த நிகழ்வுகளில் அருள்தந்தை சூசை ஜேசு அவர்களின் பங்களிப்பு மிகப் பெரியது.
அருள்தந்தை
சூசை ஜேசு, இந்தியாவின் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம். பரமக்குடி அருகேயுள்ள புஷ்பவனத்தில் 1971, மே 17 அன்று பிறந்தார். சிறு வயதிலிருந்தே இறைவாழ்வில் பெற்றோரால் வளர்க்கப்பட்ட இவர், அமல மரி தியாகிகள் சபையில் சேர்ந்து, இலங்கையில் நவசந்நியாசப் பயிற்சியையும், பெங்களூரு தர்மாவரத்தில் தத்துவயியலும், வட இந்தியாவில் உள்ள
அஸ்டா என்ற இடத்தில் இறையியலும் கற்று 27-07-2000 அன்று காஞ்சிபுரத்தில் குருவாக, சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத் துணை ஆயர் இலாரன்ஸ் பயஸ் அவர்களால் திருநிலைப்படுத்தப்பட்டார்.
2000 முதல் 2007-ஆம்
ஆண்டு வரை வட இந்தியாவின் பலகாட்,
சுரலா கப்பா என்ற இடங்களிலும், தமிழ்நாட்டில் கொம்படி மதுரை பங்குத்தளத்திலும் பணியாற்றினார். 2007-ஆம் ஆண்டு கனடா வந்து கீவாடின் லெ பா என்ற
உயர்மறைமாவட்டத்தில் பெலிக்கன் நேரோஸ் மற்றும் சண்டி பே என்ற இடங்களில்
பங்குப் பணியாற்றினார்.
தாய்மொழியான
தமிழ் மற்றும் ஆங்கிலம், வட இந்திய பணித்தளங்களில்
இந்தி கற்று சரளமாகப் பேசக்கூடிய அருள்தந்தை சூசை, க்ரீ என்ற கனேடியப் பழங்குடியினரின் மொழியையும் சிறப்புடன் கற்று, அம்மொழியிலேயே திருப்பலி நிறைவேற்றி, மறையுரையாற்றி, பாடல்கள் பாடி, மக்களுடன் அளவளாவி, தனது மேய்ப்புப்பணியை கனடா நாட்டில் மேற்கொண்டார். இந்தியாவில் உளவியலில் முதுகலைப்பட்டத்தையும், ஒட்டாவாவில் உள்ள செயிண்ட் பால் பல்கலைக்கழகத்தில் உளவியல் ஆலோசகர் மற்றும் ஆற்றுப்படுத்துநர் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
கனேடிய
குடிமகனான இவர், பழங்குடிச் சமூகங்கள் மற்றும் நகர்ப்புற ஏழைகளின் அர்ப்பணிப்புள்ள அருள்பணியாளராகப் பணியாற்றுகிறார். நகர்ப்புற வீடற்ற மனிதர்களுக்கு மதிய உணவுத் திட்டங்கள், உணவு வங்கி, குளிர்கால ஆடை விநியோகம் மற்றும் கனடா பழங்குடியின மக்களின் சமூக-பொருளாதார-கலாச்சார மேம்பாடு, பிற சமூகங்களிடையே நல்லுறவு மற்றும் ஒப்புரவு உள்ளிட்ட பல முயற்சிகளை இவர்
வழிநடத்தி ஆதரித்துள்ளார். இவர் தனது இரக்கம், கலாச்சார உணர்திறன் மற்றும் நல்லிணக்கம், சமூகக் கட்டமைப்பு மற்றும் மிகவும் பின்தங்கிய மக்களை ஆதரிப்பதில் அசைக்க இயலாத அர்ப்பணிப்புக்காக அறியப்படுகிறார்.
“அவர் மேய்ப்புப் பணியை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் நான் எப்போதும் அவரிடம் ஒரு சிறப்புப் பண்பைக் கண்டிருக்கிறேன்” என்று
தனது மாமாவின் முன்மாதிரியால் ஈர்க்கப்பட்டு, அவர் சார்ந்த அமல மரி தியாகிகள் சபைக் குருவாக உருவாகியுள்ள இவரது மருமகன் அருள்பணியாளர் கிறிஸ்டோபர் கூறுகிறார். மேலும், “அவர் மக்களுடன், குறிப்பாக ஏழைகளுடன் எப்படிப் பழகினார் என்பதை நான் பலமுறை அவதானித்துள்ளேன். அவர் எங்கு சேவை செய்தாலும், சமூகத்துடன் ஒன்றறக் கலந்து, போதிக்கும் கடவுளின் வார்த்தையின் மீதான அவரது அன்பு, என்னை உட்பட பலரை ஊக்கப்படுத்தியது. ஏழைகள் மீதான அவரது நட்பும் அன்பும் எனது பணியில் மிகுந்த உற்சாகத்துடனும் அர்ப்பணிப்புடனும் நான் தொடர்ந்து பணியாற்ற என்னை ஊக்குவிக்கின்றன” என்கிறார்.
எட்மண்டன்
உயர்மறைமாவட்டப் பரிபாலகர் பேரருள்திரு. பால் காவனா அவர்கள் மறைமாவட்ட மக்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளையும் செபங்களையும் தெரிவித்தார். அவர் கூறியது: “அருள்தந்தை சூசை, கடவுள் மற்றும் திரு அவை மீது கொண்ட ஆழ்ந்த அவரது அன்பினால் அவர் செய்கிற பணியின் நிமித்தம் பலரின் நன்மதிப்பையும் மரியாதையையும் பெற்றிருக்கிறார். எட்மண்டனில் உள்ள பழங்குடியினருக்கான திரு இருதயப் பங்கிலும், அண்மையில் புனித அன்னாள் ஏரியில் அமைந்துள்ள திருத்தலத்திலும், ஈனாக்கு என்ற இடத்தில் அமைந்துள்ள இரக்கமிகு கன்னி மரியா ஆலயத்திலும், அலெக்சிஸ் பழங்குடியினர் பகுதியிலும் அன்பு, நம்பிக்கை மற்றும் ஆற்றுப்படுத்துதலின் உண்மையுள்ள சாட்சியாகப் பேரருள்தந்தையின் பணி அமைந்துள்ளது.”
அமல
மரி தியாகிகள் துறவற சபையின் கனடா லெக்கொம்ப் மாநிலத் தலைவர் அருள்தந்தை கென்தோர்சன் பின்வருமாறு பகிர்ந்துகொண்டார்: “சகோதரர் சூசையுடன் பல்வேறு தருணங்களில் பணிபுரியும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. மேலும் அவர் இந்தியாவில் தனது பணியிலிருந்து கொண்டு வந்த பண்புகளான பூர்வீக மொழி மீதான பற்று, கலாச்சாரம் மற்றும் சமூகத்தின் மீதான அவரது ஆழ்ந்த மரியாதையை நேரில் கண்டிருக்கிறேன். கனடாவில் உண்மையுடனும் நேர்மையுடனும் வாழ்ந்தவர். இவரது வலுவான பணி நெறிமுறை, ஆழமான பக்தி, துறவு வாழ்வில் பற்று, எம் சபையில் அர்ப்பணிப்பு மற்றும் திரு அவை மற்றும் அவரது குடும்பத்தினரின் மீதான அவரது அன்பு அனைத்தும் அவர் சேவை செய்யும் விதத்தில் பெரும் பங்காற்றியுள்ளன. எங்கள் சபையில் ஒரு நல்ல அருள்பணியாளரை நாங்கள் இழக்க நேரிடும். ஆனால், அதேவேளையில், கீவாடின்-லெ பா உயர்மறைமாவட்ட
மக்களுக்கும், அவர் தனது தாயகமாகக் கருதும் பரந்த வடக்குச் சமூகங்களுக்கும் இவர் ஓர் ஆசிர்வாதமாக இருப்பார் என்று நான் நம்புகிறேன்.”
2024, டிசம்பர் 30 முதல்
கீவாடின் லெ பா உயர்மறைமாவட்ட
அப்போஸ்தலிக்கப் பரிபாலகராகப் பணியாற்றி வரும் வின்னிபெக் பேராயர் மேதகு முர்ரே சாட்லைன் அவர்களும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்: “அருள்பணியாளர் சூசை இங்கு ஏழு ஆண்டுகள் பணியாற்றினார். மேலும் எங்கள் சமூகங்களை நன்கு அறிவார். பழங்குடியின மக்களின் பங்காகிய திரு இருதய ஆலயத்திலிருந்து நேரடி ஒளிபரப்புச் செய்த திருப்பலிகள் மூலம் குறிப்பாக, ‘கோவிட்’ காலத்திலிருந்து அவரைப் பின்தொடர்ந்து வந்துள்ளனர்” என்கிறார்.
கனடாவில்
வாழும் அனைத்து மக்களுக்கும் தமிழ்மொழி பேசும் அனைத்து மக்களுக்கும் பேரருள்தந்தை சூசையின் ஆயர் பணி இறையாசிரையும் அருளையும் நிறைவாகப் பெற்றுத்தந்து இறைவழியில் வழிநடத்தும் என்று நம்புவோம். தொடர்ந்து அமல அன்னை பரிந்துரையை நாடுவோம்.
“உலகமெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” (மாற் 16:15) என்ற இறைமைந்தன் இயேசுவின் வார்த்தைகளை வாழ்க்கையாக ஏற்று, நம் இந்தியத் திருமண்ணில் நம்பிக்கை வேர்விட, மேற்கத்திய நாடுகளிலிருந்து வந்து உழைத்த எண்ணற்ற மறைப்பணியாளர்களைப் பற்றிய வரலாறு நாம் அறிந்த ஒன்று. ஆனால், காலச்சுழற்சியில் இன்று நிலை தலைகீழாக மாறி, இருக்கின்றது. எங்கிருந்தோ இங்கு வந்து மறைப்பணியாளர்கள் இறைப்பணியாற்றிய நிலைமாறி இன்று நம் இந்திய மண்ணிலிருந்து மேற்கத்திய நாடுகளில் இறைப்பணியாற்றும் அருள்பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அந்த வகையில், நம் தமிழ் மண்ணில் பிறந்து, இறைநம்பிக்கையில் வளர்ந்து, இறையழைப்பை உணர்ந்து, அமலமரி தியாகிகள் சபையில் இணைந்து குருவாகி, இன்று கனடாவில் இருக்கும் மக்களுக்கு அருள்பணி. சூசை ஜேசு அவர்கள் ஆற்றிவரும் பணிகள் போற்றுதற்குரியது.
2007-ஆம் ஆண்டு
ஓர் இளம் துறவியாக கனடா நாட்டிற்குச் சென்று, அங்கிருக்கும் கீவாடின் லெ பா (Keewatin-Le Pas)
என்ற மறைமாவட்டத்தில் வசிக்கும் பூர்வக்குடிமக்கள் மத்தியில் தன் பணி வாழ்வைத் தொடங்கினார். வெறுமனே திருப்பலி நிறைவேற்றுவது மற்றும் அருளடையாளங்களை வழங்குவது என்று தன் பணி வாழ்வை ஓர் எல்லைக்குள் சுருக்கிக்கொள்ளாமல், மக்களோடு மக்களாகத் தன்னை இணைத்துக் கொண்டு, கற்பதற்குக் கடினமான அவர்களின தாய்மொழியாகிய ‘க்ரீ’ என்ற மொழியைப் பயின்று அவர் ஆற்றிய அரும்பணிகளால் இன்றும் அவர்களின் இதயங்களில் நீங்காமல் நிறைந்திருக்கிறார். இப்படித்தான் சென்ற இடங்களில் எல்லாம் நிலவிய கடினமான சூழல்களையும் சவால்களையும் இன்முகத்தோடு எதிர்கொண்டு, தளராது இறைப்பணியாற்றுவதுதான் இவரது சிறப்பியல்பு.
தனிப்பட்ட
விதத்தில் பெலிக்கன் நேரோஸ் (Pelican narrows)
மற்றும் சாண்டி பே (Sandy Bay) ஆகிய
பங்குத்தளங்களில் மக்களுக்கு மத்தியில் இவர் ஆற்றிய பணிகளை நானே கண்ணாரக் கண்டு வியந்திருக்கிறேன். அம்மக்களின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்வுமுறை ஆகியவற்றோடு தன்னையே ஐக்கியப்படுத்திக்கொண்டு, ஒரு சிறந்த மறைப்பணியாளராகத் தன்னைத் தகவமைத்துக் கொண்டார். இது எல்லாராலும் இயலும் என்று கூறமுடியாது. அம்மக்களில் பெரும்பாலானோர், முறையாகக் கல்வி பயில இயலாமல் ஏழ்மையில் இருப்பவர்கள். அவர்கள்மீது தனிக் கவனம் செலுத்தி கனடா நாட்டின் பிற பகுதிகளிலிருந்து நிதிதிரட்டி, அவர்களது ஏழ்மையைப் போக்கி, கல்வியில் உயர பல்வேறு முன்னெடுப்புகளை இவர் மேற்கொண்டார்.
துறவற
வாழ்வின் வாக்குறுதிகளை வாழ்வாக்குவதில் இவர் காட்டுகிற உறுதியும், பணிவாழ்வில் இவர் காட்டுகிற சுறுசுறுப்பும் இவரிடமிருந்து எல்லாரும் கற்கவேண்டிய பாடம்! கனடாவில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு மத்தியிலும், மிகுந்த நேசத்திற்குரிய அருள்பணியாளராக இவர் திகழ்கிறார்.
இவர்
ஆற்றும் மக்கள் பணிகளை இன்னும் மகத்தானதாக்கும் விதமாக, மேய்ப்புப்பணி ஆற்றுப்படுத்துதல் (Pastoral Coun selling) பிரிவில்
முதுகலைப்பட்டம் பெற்ற இவர், இதன் வழியாகவும் மக்களைச் சிறப்பாக வழிநடத்திக் கொண்டிருக்கிறார். தற்போது, எட்மண்டன் மறைமாவட்டத்தில் உள்ள அம்மண்ணின் பூர்வக்குடிமக்களுக்கான திரு இருதயத் தேசியத் திருத்தலத்தில் தொடர்ந்து தன் வாழ்வாலும் வார்த்தைகளாலும் மக்களை இறைநம்பிக்கையில் வளர்த்து வருகின்றார்.
‘எது நடந்தாலும், அது இறைவனின் சித்தம்’ என்று அடிக்கடி இவர் உதிர்க்கின்ற வார்த்தைகள், இறைப்பராமரிப்பில் இவர் கொண்டிருக்கிற அளப்பரிய நம்பிக்கையின் வெளிப்பாடு. இறைவன் தொடர்ந்து இவரைத் தம் பராமரிப்பில் வைத்துக் காக்கவும், இவர் வழியாக இன்னும் பலர் இறைநம்பிக்கையில் வளரவும் இவருக்காகச் செபிக்கிறேன், வாழ்த்துகிறேன்!
அன்புப் பேராயர் அவர்களே, தமிழ்நாடு ஆயர் பேரவையின் அச்சு ஊடகப் பணியகம் வெளிக்கொணரும் ‘நம் வாழ்வு’ கத்தோலிக்க வார இதழ் நிர்வாகத்தினர், ஆசிரியர் குழு மற்றும் வாசகர்கள் சார்பாக உங்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
• உங்களுடைய குடும்பம் மற்றும்
இறையழைத்தல் பற்றிக் கூறுங்களேன்....
“தமிழ்நாட்டில் புஷ்பவனம் கிராமத்தில், உழவுத் தொழில் செய்த திரு. ஜேசு - திருமதி. ஜெயசீலி தம்பதியரின் எளிய குடும்பத்தில் பிறந்தவன் நான். குடும்பத்தில் முதல் பட்டதாரி.
என்
ஆன்மிக வாழ்விற்கு வித்திட்டவர் என் தாயார். அதிகாலை 4.30 மணிக்கே என்னை எழுப்பி செபத்திலும் திருப்பலியிலும் பங்கேற்கச் செய்தார். ஆலயத்தில் வழிபாட்டுத் தலைவராகவும், பாடகர் குழுத் தலைவராகவும் பணியாற்றிய சிறுவயது அனு பவங்கள் என் தலைமைப் பண்பை வளர்த்தன.
மேலும்,
‘மக்களோடு தங்கி அவர்களுக்காக நேரத்தைச் செலவிடும் நல்ல மேய்ப்பனாக இருக்க வேண்டும் என்ற ஆழ்ந்த உந்துதல் மற்றும் சகோதரியின் வழிகாட்டுதலால் அமலமரி தியாகிகள் (OMI) சபையில்
இணைந்தேன்.”
• உங்கள் இறைப்பணி
அனுபவங்கள்
குறித்துப் பகிர்ந்து கொள்ளுங்களேன்...
“வட இந்தியாவில் ஐந்து
ஆண்டுகள் பழங்குடியின மக்களுடன் பணியாற்றினேன். 2007 முதல் கனடாவில் பூர்வக்குடி (First Nations) மக்களிடையே
19 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருகிறேன். நீண்ட காலம் தமிழ்நாட்டிற்கு வெளியே இருந்ததால் தமிழில் உரையாற்றுவது இன்று எனக்குச் சவாலாக இருக்கிறது. அதை நேர்மையுடன் ஏற்கிறேன். Sacred Heart தேவாலயத்தில்
தெருவோர மக்கள், வீடற்றவர்கள், போதைப்பொருளால் பாதிப்புக்குள்ளானவர்களுடன்
இருந்தேன். அன்னை தெரேசாவின் முன் மாதிரியில், மக்களின் கோபமும் வலியும் புரிந்து பணிவிடை செய்தேன். உடல்-மனம்-உள்ளம்-ஆன்மிகம் என்ற நான்கையும் சமநிலையில் பேணுவது அதன் மையம். இயேசு கிறிஸ்து இந்த நான்கு நிலைகளிலும் முழுமையான சமநிலையுடன் வாழ்ந்தவர்; அதையே மக்களுக்கு எடுத்துரைத்தேன்.”
•
நீங்கள்
பணிசெய்ய
இருக்கும்
கீவாடின்
லெ
பா
உயர்மறைமாவட்டம்
பற்றிக்
கூறுங்களேன்...
“கீவாடின் லெ பா உயர்மறைமாவட்டம்
கலாச்சார ரீதியாக மிகவும் வேறுபட்டது. பல்வேறு மொழிகள் பேசும் பல பழங்குடியின மக்களான
மேத்திஸ், க்ரீ, ஒஜி-க்ரீ, டெனே மற்றும் பழங்குடியினர் அல்லாத மக்களின் தாயகமாக அது விளங்குகிறது. மத்திய கனடா பகுதியில் ஜேம்ஸ் விரிகுடாவின் மேற்கே உள்ள பகுதி நீண்ட காலமாக ‘வடக்குக் காற்று’ என்று பொருள்படும் ‘கீவாடின்’
என்று அழைக்கப்படுகிறது.
கனடா
நாட்டில் சஸ்காட்செவன் மாநிலத்தில் உள்ள பெலிகன் நரோஸ் மற்றும் சாண்டி பேயில் உள்ள பழங்குடிச் சமூகங்களுடன் ‘க்ரீ’ மொழியைக் கற்றுக்கொண்டதிலும், அவர்களுடன் பழகி வந்ததிலும் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். பின்னர் எட்மண்டனில் உள்ள பழங்குடியின மக்களின் பங்காகிய இயேசுவின் திரு இருதய ஆலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வரவேற்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. எனது ஆர்வம் ஏழை மக்களை இயேசுவிடம் கொண்டு வந்து, அவர்களுக்கு நற்செய்தி அறிவிப்பதாகும். இது எங்கள் சபையை நிறுவிய புனித யூஜின் மசினோட் அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றுகிறது. இப்போது கீவாடின்-லெ பா உயர்மறைமாவட்டத்தின்
அருள்பணியாளர்களுடன் ஒன்றிணைந்து பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
மக்களின்
ஆயராகப் பணியாற்ற கடவுளின் அழைப்பைப் பெறுவது ஒரு தாழ்மையான அனுபவம். பலவீனமானவர்களை நம்பிக்கையிலும் அன்பிலும் பலப்படுத்தக் கடவுள் தேர்ந்தெடுக்கிறார் என்பதை நான் உண்மையிலேயே உணர்கிறேன். என் இதயம் நன்றியுணர்வு மற்றும் மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது. மேலும், திருத்தந்தையின் இந்த நியமனம் எனது குருத்துவ வெள்ளி விழாவைக் கொண்டாடும் இத்தருணத்தில் வருவது இரட்டிப்பு மகிழ்ச்சியை எனக்குத் தருவதாக அமைகிறது.
இந்த
மறக்கமுடியாத தருணத்தில் என் உணர்வுகளைப் பற்றி நான் சிந்திக்கும்போது, அன்னை கன்னி மரியாவின் வார்த்தைகள் என் நினைவுக்கு வருகின்றன: ‘ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது; என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்; பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.’ என் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கும் குறிப்பாக, எனது மறைந்த தாயாருக்கும், நான் ஒரு குருவாக வேண்டும் என்ற அவர்களின் விருப்பம் மற்றும் தொடர்ச்சியான மன்றாட்டுகள் இப்போது நிறைவேறியுள்ளன.
கனடாவில்
உள்ள பழங்குடியின மக்களுக்குப் பணியாற்ற இந்தியாவிலிருந்து என்னை அழைத்த மேனாள் பேராயர் சில்வைன் லாவோய் OMI அவர்களுக்கும்,
இந்த நாட்டிற்கு ஓர் இளம் அருள்பணியாளரை அழைத்து வந்து பல்வேறு பொறுப்புகளை நம்பிக்கையோடு தந்த, நான் சார்ந்துள்ள அமலமரி தியாகிகள் சபைக்கும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். கனடாவில் நான் பணிபுரிவதற்குத் தேவையான வழிகாட்டுதலையும், மனநல ஆலோசனை மற்றும் ஆற்றுப்படுத்துதல் கல்வியையும் எனக்குத் தந்தார்கள். மேலும், கடந்த ஒன்பது ஆண்டுகளாக நான் பணிபுரிந்த எட்மண்டன் உயர்மறைமாவட்டத்திற்கும், அதிலும் குறிப்பாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 2022-ஆம் ஆண்டு வருகையின்போது என்னை வழிநடத்தி ஆதரவு தந்த மேனாள் பேராயர் ரிச்சர்ட் ஸ்மித் அவர்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன்.”
• பேராயராக, உங்கள்
பணித்தளத்திற்கு
உள்ள
முன்னுரிமைகள்
என்னென்ன?
“கீவாடின் லெ பா உயர்மறைமாவட்டத்தில்
உறவுகளைச் சீரமைத்தல், பொதுநிலைத் தலைமைத்துவத்தை (Lay Leadership) வளர்த்தல்,
உள்ளூர் மொழிகளில் பணியாற்றுவதற்குத் திருத்தொண்டர்களை உருவாக்குதல் போன்றவை என் முன்னுரிமைகள். இந்தப் பணிகள் உன்னதமும் பொறுப்புகளும் நிறைந்தவை. புவியியல் சவால்கள் அதிகம். உங்கள் செபம் எனக்கு மிக அவசியம். உங்கள் செபங்களில் என்னை நினைவு கூருங்கள்.”
• ‘நம் வாழ்வு’ வாசகர்களுக்கு
உங்கள்
செய்தி..
“நம் வாழ்வு’ நெடுங்காலமாய் வெளிவரும் நல்லதொரு வார இதழ் என்பதை நான் அறிவேன். இந்தியாவில் இருந்தபோது நான் அடிக்கடி வாசிப்பதுண்டு. அண்மைக்காலமாக டிஜிட்டல் தரப்பிலும் வருவதை அறிவேன். இவ்விதழ் இன்னும் வளர, நிறைய வாசகர்கள் உருவாக மனதார வாழ்த்துகிறேன். எனது இந்த ஆயர் பணியேற்பு நினைவாகச் சிறப்பிதழ் வெளிக்கொணரும் ‘நம் வாழ்வு’ நிர்வாகத்திற்குச் சிறப்பாக எனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள்
பணி சிறக்க எமது வாழ்த்துகளும் செபங்களும்!
‘தந்தை பெயரால் மைந்தனின் பெயரினால்
தழைக்கும் தூய ஆவியின் பெயரினால்
வந்த
பேர்க்கு ஞான ஸ்நானமும்
வாழு கின்ற நல்வழிக் கோலமும்
தந்து
நீங்கள் போதனை செய்குவீர்
தழுவி எந்தன் மொழிகளைச் சொல்லுவீர்!
எந்த நாளும் யானுமே உம்முடன்
ஏகு
வீர்’ எனக்
கூறினார் நாதனே!’
(இயேசு காவியம்)
என்ற
இயேசுவின் இறுதி கட்டளையான “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” (மாற்
16:15) என்னும் இறைவாக்கை ஒரு மறைப்பணியாளனாக வாழ்ந்து, இன்று அதையே தன் ஆயர் பணிவாழ்வின் மறைவாக்காகக் கொண்டு, பணிசெய்யப் புறப்படும் அருள்பணியாளர் சூசை ஜேசு OMI அவர்களை
‘நம் வாழ்வு’ வாசகர்கள் சார்பாக அன்போடு வாழ்த்துகிறேன்.
பிறர்
நலம் பேணுவதே ஒரு மனித வாழ்வின் ஆகச்சிறந்த அறம். இந்த உயரியத் தத்துவத்திற்கு மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்வது ‘மறைப்பணி’
ஆர்வமும் (Missionary Spirit), அதில்
முழுமையாக ஈடுபடுவதுமாகும். எல்லைகளைக் கடந்த அன்பும் அர்ப்பணிப்பும் முழு ஈடுபாடும் தன்னலமற்ற வாழ்வும், கைம்மாறு கருதாத பணியுமே ஒரு மறைப்பணியாளரின் அடையாளங்களாகத் திகழ்கின்றன.
மறைப்பணி
என்பது வெறும் மதம் சார்ந்த போதனை மட்டுமல்ல; அது ஒடுக்கப்பட்டோரின் கண்ணீரைத் துடைப்பதும், வறுமையில் வாடுவோருக்கு வாழ்வாதாரம் வழங்குவதும், கல்வி எட்டாத இடங்களுக்கு அறிவொளியைக் கொண்டு செல்வதுமாகும். ஒரு மறைப்பணியாளர் தனக்கான வசதியான வாழ்வைத் துறந்து, அறிமுகமில்லாத மனிதர்களுக்காகத் தன்னை அர்ப்பணிக்கிறார். அவர்கள் காட்டும் இந்தத் துணிச்சல் மிகுந்த அன்புதான், உலகெங்கும் உள்ள விளிம்புநிலை மக்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது; இன்றும் ஏற்படுத்தி வருகிறது.
நவீன
உலகில் சுயநலம் மேலோங்கி நிற்கும் சூழலில், எளியவர்களின் குரலாக ஒலிக்கும் மறைப்பணி ஆன்மா பாராட்டுக்குரியது. மதம், இனம், மொழி என்ற எல்லைகளைத் தாண்டி, மனிதநேயத்தைப் பகிரும் ஒவ்வொரு மறைப்பணியாளரும் இவ்வுலகில் அமைதியின் தூதுவர்களே! அவர்களின் அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் தியாகமும் வரும் தலைமுறைக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும்.
அத்தகைய
வழியில், இந்திய மண்ணிலும் இன்று கனடா நாட்டிலும் விளிம்பு நிலை மக்களுடன், பூர்வக்குடிகளுடன், முகவரி இழந்தவர்களுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒரு மாபெரும் மறைப்பணியாளர்தான் புதிய பேராயர் சூசை ஜேசு அவர்கள். தான் பணிசெய்த மக்களோடு மக்களாக உறவாடினார்; அவர்களின் கலாச்சார விழுமியங்களை உள் வாங்கினார்; அம்மக்களின் மொழிகளிலே உரையாடினார்; அவர்களில் ஒருவராக வாழ்ந்து வந்தார். இறைவன் அம்மக்களின் முகவரியை இன்று உலகறியச் செய்துள்ளார்.
இந்திய
மண்ணில், தமிழ்நாடு திரு அவையில், சிவகங்கை மறைத்தளத்தில் விதை கண்ட இளந்தளிர், கனடா மண்ணில் செழித்தோங்குவது நம் மண்ணுக்குப் பெருமை, இம்மறைக்குப் பெருமை; அதுவே மறைத்தூதுப்பணிக்கு மகிமை! பேராயரின் பணிசிறக்க ‘நம் வாழ்வு’ வாழ்த்தி மகிழ்கிறது.
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர் செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்