மே மாதம் பிறந்துவிட்டால் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு ஒரே கொண்டாட்டம்தான். ஒரு மாதம் பள்ளிகளில் கோடை விடுமுறை விடப்பட்டவுடன் அவர்கள் மனத்தில் குதூகலம் கொண்டாடும். அவர்களது உள்ளம் வண்ணத்துப் பூச்சிகள்போல வட்டமிட்டுப் பறந்து விளையாடும். ‘எங்கே உல்லாசப் பயணம் போகலாம்?’ என அம்மா- அப்பாவிடம் கேட்டு நச்சரிப்பார்கள். வேலைக்குப் போகிற பெற்றோர்கள் என்றால், ‘இவர்களை எப்படிக் கோடை விடுமுறையில் சமாளிப்பது?’ எனத் திட்டம் போடுவதில் மும்முரமாக இருப்பார்கள். ஆனால், அந்தக் காலத்தில் ஒரே வழிதான். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக் கோடை விடுமுறையில் தம் சொந்த ஊருக்கு அனுப்பி விடுவார்கள். தாத்தா-பாட்டி அரவணைப்பில் சிறிது நாள்கள் வாழ அங்கே அனுப்பிவிடுவார்கள். வீட்டைப் பராமரிக்கும் தாயாக இருந்தால், குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு சொந்த ஊருக்குச் சென்று விடுவதுண்டு.
பிள்ளைகளுக்கு
அந்தச் சொந்த ஊர் பயணம் ஒரு சொர்க்கமான பயணமாக இருந்தது. பல மதிப்பீடுகளையும் வாழ்க்கை எதார்த்தங்களையும்
கற்றுக் கொடுக்கும் பாசறையாக இருந்தது. பொதுவாகச் சொந்த ஊர் என்பது ஒரு கிராமமாக இருக்கும். தாத்தா-பாட்டி மற்றும் சொந்தங்கள் கூடி வாழும் ஒரு கூட்டுக் குடும்ப வாழ்க்கையாக இருக்கும்.
சுதந்திரமாக
ஓடி விளையாடுவதற்குப் பரந்த நிலப்பரப்பு கொண்டது கிராமம். கிராமங்களின் பசுமை கண்களில் ஒட்டிக்கொள்ளும். அந்தச் சிலிர்ப்பு அழகிய அனுபவமாக இருக்கும். அது அவர்களுக்கு இயற்கை அழகை இரசிக்கக் கற்றுக் கொடுத்தது. ஒலிக்கும் குயில்களின் சத்தம் இசையை நேசிக்கச் சொல்லிக் கொடுத்தது. குளத்தில் குளியலாடி, நீச்சல் கற்றுக்கொள்ள ஒரு நல்ல களமாக இருந்தது. தானாக எதையும் கற்றுக்கொள்ள முடியும் என்ற தன்னம்பிக்கையை வளர்த்தது. ஆற்றின் கரை தொட்டு பயமின்றி நீரில் கால் நனைத்து, பயத்தை வெற்றிக்கொள்ளச் சொல்லிக் கொடுத்தது. மரத்தின் அடியில் பல்லாங்குழி ஆட்டம் ஆடி, நம் கலாச்சாரப் பொழுதுபோக்கை அப்பருவத்தில் அறிமுகம் செய்தது.
வண்ணத்துப்
பூச்சி பிடித்து, வரப்புகளில் நடந்து, விழுந்து, எழுந்து, தோல்வியில் எப்படி மீண்டு எழுவது எனப் பயிற்சி கொடுத்தது. கேழ்வரகு, நெற்கதிர் கசக்கி உண்டு, கரும்புச் சாறு பிழிந்து குடித்து, தென்னை மரத்தின் அடியில் இளநீர் குடித்து, நொங்கு தின்றது... இவை இயற்கை உணவின் ருசியை இரசிக்கச் செய்த அனுபவங்கள். நிலாச்சோறு உண்டு, மலர் பறித்துத் தேன் உறிஞ்சி, மழையில் நனைந்து உடல் சிலிர்த்து, இரவில் குளத்தில் நிலா பிம்பம் கண்டு, நிலவைக் கையில் பிடித்த அனுபவம் மனதிற்குள் இருந்த கலை உணர்வைத் தூண்டியது. பட்டம் விட்டு வான்தொட்ட பெருமிதம் குழந்தைகளின்
மனங்களில் ‘வானமே எல்லை’ என்ற நம்பிக்கை விதையை விதைத்தது. கிராமங்களில் புதிய உறவுகள், புதிய நட்புகள் அறிமுகம், குழந்தைகள் மத்தியில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’,
‘எல்லாரும் நம் சொந்தம்’ என்ற மனப்பான்மையில் எல்லாரையும் உள்வாங்கிக்கொள்ளும் மனத்தை உருவாக்கும்.
தாத்தா-பாட்டிகளின் அரவணைப்பு, கிராம மண்வாசனை, எதார்த்தமான எளிய மக்களின் வாழ்க்கை, இயற்கையோடு பின்னிப்பிணைந்த ஓர் அழகிய அனுபவம். நம் கலாச்சாரத்தின் வேர்களின் மணங்களை நுகர்ந்த அனுபவம். இப்படியாக ஒரு முழுமையான சிறப்புமிக்க அனுபவம் குழந்தைகளின் வலுவான மதிப்பீடுகளுக்கு அடித்தளமாக இருந்தது. இந்த அனுபவங்களுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. பல ஆயிரங்கள் செலவழித்தாலும்
இந்த அனுபவத்தை விலை கொடுத்து வாங்க முடியாது. ஆனால், இன்றைய சூழலில் பள்ளிக் குழந்தைகளுக்கு இந்த அனுபவங்கள் சாத்தியமா? என்றால் சந்தேகமே.
இன்றைய சூழலில் குடும்பத்தில் அப்பா, அம்மா இருவரும் வேலைக்குச் செல்லும் பட்சத்தில், இந்தக் கோடை விடுமுறை, சொந்த ஊர் பயணம் கடினமே. படிக்கின்ற இடத்திலேயே பலவிதமான கோர்ஸ், ட்ரைனிங் எனக் கோடை விடுமுறைகள் குழந்தைகளுக்கு மன அழுத்தம் கொடுக்கும்
கோடை விடுமுறையாக மாறிபோனது வருத்தம் அளிக்கிறது.
அந்தக்
காலக் கிராமச் சூழல் கொடுத்த அனுபவம் மீண்டும் குழந்தைகளுக்குக் கிடைக்க
வேண்டும். சுதந்திரமாய் ஆடி, ஓடி, மகிழ்ந்து பல ஆளுமைகளைக் குழந்தைகளுக்கு
அறிமுகம் செய்து வைத்த களமாய் அமைந்தது அந்தக் கிராமியக் கோடை விடுமுறை என்றால் மிகையாகாது.
நம்
வாழ்க்கை வேர்களின் பிரதேசங்களை நம் குழந்தைகளுக்கு அவ்வப்போது காட்டுவது, பழமையில் புதுமையைக் காணும் ஓர் உன்னதமான திசையைக் காட்டும்.
இன்று நம் சமூகம் எதிர்கொள்ளக் கூடிய உடனடிப் பிரச்சினைகளுள் மிகவும் முக்கியமான ஒன்று பணவீக்கம். இப்பணவீக்கம் நாட்டின் பொருளாதாரத்தையும் தாண்டி, நம்முடைய தனிப்பட்ட வாழ்வையும் பாதிக்கின்றது. ஏனெனில், நம்முடைய வருமானமே நம்முடைய வாழ்வின் போக்கைத் தீர்மானிக்கின்றது. பணவீக்கத்தால் விலைவாசி அதிகரிக்கின்றது. இதனால், நம்முடைய அன்றாடத் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் மனக் கலக்கம் அடைகின்றோம். ஆனால், நம்முடைய இம் மனக்கலக்கத்திற்குப் பின்பு மிகப்பெரிய பொருளாதாரச் சிக்கல்களும் வரலாறும் உள்ளன என்றால் அது மிகையாகாது.
ஆதி
மனிதன் காட்டு விலங்குகளை வேட்டையாடித் தன்னுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொண்டான். நாகரிக மலர்ச்சியில், இன்று நாம் பணத்தை வேட்டையாடி நம்முடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றோம். ஆனால், உண்மையில், இப்பணத்தை அதிகளவு குவித்து வைத்திருக்கும் பெரும் முதலாளிகள் ஏழை, எளியோரின் உழைப்பை வேட்டையாடுகின்றனர்; சந்தையை முன்னிலைப்படுத்துகின்றனர்.
இதனால் மனித மனங்களுக்கான மாண்பு சிதைக்கப்படுகின்றது.
பெரு
முதலாளிகளால் ஆட்டிப்படைக்கப்படும் சந்தையைப் பொருத்தே இவ்வுலகமும், அதனுடைய பொருளாதாரமும் கட்டமைக்கப்பட்டுள்ளது. நமக்குத் தேவையா? இல்லையா? என்று யோசிக்காமல், யாரோ ஒருவர் உற்பத்தி செய்யும் பொருளை வாங்கிக் குவிப்பதற்காக நம்முடைய சுயத்தை இழந்து மாய உலகில் வாழ்கின்றோம். நாம் விரும்பும் ஒரு பொருளை வாங்க முடியவில்லை என்றால், அதை நம்முடைய பெரும் இழப்பாகக் கருதவைக்கும் அளவிற்குப் பொருளாதார உலகம், நம்முடைய தனிமனித வாழ்வின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றது.
தனிப்பட்ட
ஒரு மனிதனின் வாழ்க்கை முறையானது அம்மனிதனின் இனம், மதம், மொழி மற்றும் வாழும் சூழல் போன்ற பல்வேறு காரணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றது. இருப்பினும், இக்காரணிகள் அனைத்திற்கும் தொடக்கமாக நம்முடைய பொருளாதாரம் அமைகின்றது என்று புரட்சியின் புதல்வன் காரல் மார்க்ஸ் குறிப்பிடுகின்றார். பொருளாதார அடிக்கல்லின் மீதே சமூகத்தின் பிற தூண்கள் ஊன்றப்பட்டுள்ளன என்கிறார். எனவே, ஒரு சமூகத்தின் நடைமுறைகள், கலாச்சார மாற்றங்கள், தேவைகள் என அனைத்தும் அச்சமூகத்தின்
பொருளாதார நிலையை மையமாக வைத்துதான் நகர்கின்றது. சுருக்கமாகக் கூறின், இச்சமூகத்தில் பணம்தான் அனைத்தையும் முடிவு செய்கின்றது. இக் கூற்றை ஏற்றுக்கொள்வதற்குச் சற்று கடினமாக இருந்தாலும், இக்காலச் சூழலில் இதுதான் உண்மை.
தொடக்கத்தில்
அன்றாடத் தேவைகளை நிறைவேற்ற மனிதன் வாணிபம் புரிந்தான்; இன்று பொருள்களை
வாங்கிக் குவிப்பதற்காகவே வாழும் நிலைக்கு மனிதன் தள்ளப்பட்டுள்ளான். நம்முடைய ஆசைகளை வரிசையாகப் பட்டியலிட்டால், அவற்றில் ‘வாங்க வேண்டிய பொருள்களின்’ பட்டியலே
மிகுந்திருக்கும். ‘வாங்க வேண்டும்’
என்ற ஆவலில் வாழ்வை இழந்து, வாழ்வின் சாரம் புரியாமல் ‘எதற்காக உழைக்கின்றோம்? யாருக்காக உழைக்கின்றோம்?’ என்று தெரியாமல் நம் வாழ்வை நாமே கடினப்படுத்திக் கொள்கின்றோம். எனவே, பொருளாதார உலகுக்கும், நம்முடைய வாழ்வுக்கும் உள்ள பிணைப்பை முதலில் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
பொருள்கள்
மற்றும் சேவைகளின் தேவையும், அதற்கான விலையும் அதிகரிக்கும்பொழுது பணவீக்கம் ஏற்படுகின்றது. 2024-ஆம் ஆண்டின் கணக்கின்படி உலகளவில் 5.8% பணவீக்கமும்,
இந்தியாவில் 5.22% பணவீக்கமும்
உள்ளது. இப் பணவீக்கமானது, பெரும் முதலாளிகளின் தந்திரத்தாலும், அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளாலும் உருவாக்கப்படுகின்றது. இவர்களால் உருவாக்கப்பட்ட பணவீக்கத்தின் சுமையை நடுத்தர மற்றும் ஏழை மக்கள் தங்கள் தோள்களில் சுமக்கிறார்கள்.
முதலாளிகள்
தங்கள் பணத்தைப் பெருமளவு பெருக்க நினைப்பதாலும், அரசாங்கம் பொருளாதாரம் சார்ந்த தன்னுடைய தவறுகளை மறைக்கப் பணத்தை அதிகமாக அச்சிடுவதாலும் பணவீக்கம் ஏற்படுகின்றது. ஏதேனும் ஒரு பொருளின் தேவை அதிகரிக்கும்பொழுது, அப்பொருளின் விலை அதிகரிக்கின்றது. இதனால் அப்பொருளினை வாங்கும் திறன் மக்களிடத்தில் குறைகின்றது. இந்த மாற்றம் இயற்கையாக நடைபெறுவதில்லை; செயற்கையாக
ஏற்படுத்தப்படுகின்றது.
மக்களின்
தேவைகளை விளம்பரங்கள் மூலம் அதிகரிக்கின்றனர். மக்கள் அந்தப் பொருளை வாங்கும்பொழுது, அப்பொருளைச் சந்தைப்படுத்தாமல் மறைத்து வைத்து, அதனுடைய விலையை அதிகரிக்கச் செய்கின்றனர். இதனால் மக்கள் அப்பொருளை அத்தியாவசியப் பொருளாகக் கருதி, அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர். இவ்வாறு பணவீக்கமானது பெரும் முதலாளிகளால் செயற்கையாக ஏற்படுத்தப்படுகின்றது. இந்தச் செயற்கையான பணவீக்கத்திற்குச் சில நேரங்களில் அரசும் துணை நிற்கின்றது. அரசு மக்களின் நலனில் அக்கறை கொள்ளாமல், பெரும் முதலாளிகளை மகிழ்விப்பதற்காகப் பொருளாதாரத் திட்டங்களை வகுக்கும்பொழுதும் அரசு இழப்பைச் சந்திக்கின்றது. இந்த இழப்பின் பாரத்தையும் வரி என்ற பெயரில் மக்கள்தான் சுமக்கின்றார்கள்.
இப்படிப்
பணவீக்கம் அதிகரிப்பதற்குப் பொருளாதார மற்றும் அரசியல் காரணிகளைத் தாண்டி நம்முடைய சமூக நடைமுறைகளும் ஒரு காரணமாக அமைகின்றது. இதன் மூலமாகவே இந்தப் பணவீக்கம் நமக்கு மன ஏக்கத்தைத் தருகின்றது.
மனிதன் சமூகமாக வாழத் தொடங்கிய காலம் முதல் ஏற்றத்தாழ்வுகள் என்பது அவனை ஆட்டிவைக்க ஆரம்பித்துவிட்டது. மனிதன் தன்னுடைய பிறப்பின் அடையாளத்தை மாற்ற முடியாது. எனவே, தன்னுடைய பொருளாதார உயர்வின் மூலம் சமூக மதிப்பைப் பெறுகின்றான். இதைச் சமூகத்தின் உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் விரும்புவதில்லை. இதன் காரணமாகப் பாமரனுக்கும்-பணக்காரனுக்கும் இடையே உள்ள இடைவெளியை அதிகப்படுத்துகின்றனர்; பொருளாதாரச் சமத்துவமின்மையை உருவாக்குகின்றனர்.
இவ்வுலகின்
10% மக்கள்,
76% வளங்களைத்
தங்கள் வசம் வைத்துள்ளனர். அதே வேளையில், இவ்வுலகின் 50% ஏழைகள்,
மொத்தமாக வெறும் 2% வளங்களைத்
தங்கள் உடைமையாகக் கொண்டுள்ளனர். இந்த ஏற்றத்தாழ்வானது பணத்துடனும் பகட்டுடனும் வாழும் வாழ்வைச் சிறந்த வாழ்வாகவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையை இழிநிலையாகவும் உருவகப்படுத்துகின்றது. இதை அடிப்படையாகக் கொண்டுதான் நம் நாட்டில் சாதியமும் பொருளாதாரமும் ஒன்றோடொன்று கலந்து நிற்கின்றது. இது ‘உயர்ந்தோர்-தாழ்ந்தோர்’ என்ற
மனநிலையை உருவாக்குகிறது! இது முற்றிலும் தவறானது. இதுபோன்று சமூகத்தில் ஏற்றப்பட்டுள்ள மாயவலைப் பின்னல்களை மக்களை நசுக்க முதலாளிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
பணம்
படைத்தவருக்கு ஒரு கல்வி, அற்றவருக்கு ஒரு கல்வி. இதுபோன்று மருத்துவம், பொழுதுபோக்கு என்ற அனைத்துத் துறைகளிலும் பணமற்றவருக்கு இரண்டாந்தரப் பொருள்களும் சேவைகளுமே கிடைக்கின்றது. இந்த மாயவலையில் சிக்கிக்கொண்டு, பணவீக்கத்தால் வதைப்படும் மனிதர்கள், தங்கள் வாழ்வின் நிலையை எண்ணி ஏக்கம் அடைகின்றனர். இதற்கும் மேலாக, ‘Elite and Premium’ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி, பொய்யான ஒரு சமூக உயர்வு நிலையை அடைந்து விட்டதாக இன்று சில சிறு பணக்காரர்களும், நடுத்தர வகுப்பினரும் பெருமிதம் அடைகின்றனர். இவையெல்லாம், மதிப்பற்ற ஒரு பொருளை, ‘branded’ என்ற
பெயரில் அதிக விலைக்கு விற்பதற்கான வியாபார யுக்தி என்று அறிந்தும் நாம் அவற்றிற்குப் பலியாகின்றோம்.
இப்பணவீக்கத்திலிருந்து மனஏக்கத்தைக்
களைவதற்கான நடவடிக்கைகளை நாம் ஒரு சமூகப் புரட்சியாக மேற்கொள்ள வேண்டும். இவற்றிற்குப் பொருளாதார, அரசியல், சமூக மற்றும் தனிமனித மாற்றத்தின் மூலமாகவே தீர்வு காணமுடியும். பொருளாதார அளவில் சுய தொழில்களை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இதனால்
வேலைவாய்ப்பின்மை குறைந்து, மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும்.
அரசியல்
அளவில் அனைத்துச் சாராருக்குமான சரியான பொருளாதாரக் கொள்கைகளைத் தீட்ட வேண்டும். ஜிம்பாவே, வெனிசுலா போன்ற நாடுகளைப்போல பணத்தை மேலும் அச்சிட்டுப் பணவீக்கத்தை அதிகரிக்கச் செய்யாமல், ஏற்றுமதியை அதிகரித்து, இறக்குமதியைக் குறைக்க வேண்டும். நாட்டைத் தன்னிறைவு கொண்ட நாடாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சமூக அளவில் நம்மிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகள் போலியானவை என்று உணர்ந்து, அனைவரும் சமமாகக் கருத வேண்டும். ‘எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்’
என்ற சமதர்ம சமுதாயத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசியத் தேவைகள் பொதுத்துறை நிறுவனங்களால் அதிகக் கட்டுப்பாட்டுடன் இயங்க வேண்டும். அனைத்திற்கும் மேலாக, ‘போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்பதை உணர்ந்து, நம்முடைய தேவைகளைக் குறைத்துக் கொண்டு, எளிய வாழ்வு வாழ்வதன் மூலம் பணவீக்கத்தையும், நம்முடைய மனஏக்கத்தையும் தவிர்க்கலாம்.
சித்ராவின் சக்கர நாற்காலி சத்தம் கேட்டவுடன் எழுந்து இடம் கொடுத்து விட்டு நகர்ந்து சென்று படுத்துக்கொண்டது ஜிம்மி. இருபத்தைந்து வயதிலிருந்தே இருசக்கர நாற்காலிக்குள் அடங்கிப்போயிருந்தது சித்ராவின் வாழ்க்கை. அருகாமையில் உள்ள பள்ளியில் மாலை 4 மணிக்கு அலறும் மணியின் சத்தம் சித்ராவிற்கான சிக்னல். அவள் எங்கு இருந்தாலும் பள்ளி மணி அடித்ததும் அந்தச் சக்கர நாற்காலி நகர்ந்து சன்னலோரம் வந்து நிற்கும். வீடு திரும்பும் பள்ளி மாணவர்களின் உற்சாகத் துள்ளல், வரிசை மீறும் ஆட்டோக்கள், ஓடிவரும் மழலையரை அணைத்துக்கொள்ளும் அம்மாக்கள், சாலையோரப் பாட்டிக் கடையில் தேனீக்களுக்குப் போட்டியாய் மொய்த்துக் கிடக்கும் மாணவர்கள், மாணவர்கள் வீடு திரும்பும் முன்பே முண்டியடித்துக் கொண்டு வீடு பறக்கும் ஆசிரியர்கள் என்று சன்னலோரக் கம்பிகளின் வழியாக நிகழும் காட்சிக் குவியலுக்குள் சித்ராவின் கண்கள் யாரையோ எதையோ தேடும்!
“அப்படி
என்னதான் பாப்பியோ? யாரைத்தான் தேடுறியோ? கேட்டா சொல்லவும் மாட்டேங்குற. பார்த்தது
போதும். காப்பி போட்டு வச்சிருக்கேன், எடுத்துக் குடி. ஆறிடப் போகுது.”
கண்டிப்புக்
கலந்த கரிசனையில் சொன்னாள் சித்ராவின் தாய். சித்ரா நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவள்தான்.
தந்தை மஸ்கட்டில் 15 ஆண்டுகள் டிரைவர் வேலை பார்த்து விட்டு இப்போது சென்னைப் புறநகர்
புதிய பேருந்து நிலையம் அருகில் வாடகைக் கார் ஓட்டுகிறார். ஊபர், ஓலா, ராபிடோ ஓட்டங்கள்தான்.
இரவு-பகல் பாக்காம ஓட்டுனா கையில கொஞ்சம் பணம் மிஞ்சும். சித்ராவிற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கால் செயலிழக்கத்
தொடங்கியது. எத்தனையோ மருத்துவமனைகளுக்கு அலைந்து பார்த்தபின்பும் நோய்க்கான காரணம்
தெரியவில்லை. இக்கொடிய நோயினுடைய வீச்சு அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிக் கொண்டிருக்கின்றது
என்பதை எல்லாரும் அறிந்திருந்தனர்.
‘பட்டாம்பூச்சி
பறக்கத் துடிக்கும்போது வாலில் சிறு கல் கட்டி விளையாடும் சிறு பிள்ளைகள்போல கடவுள்
தன்னை விளையாட்டுப் பொருளாக்கி விட்டாரே’ என்று சித்ராவிற்குக் கடவுளின் மேல்
ஒரு கோபம் உண்டு. சன்னல் அருகில்தான் சித்ராவின் பெரும்பான்மையான காலம் சக்கர நாற்காலியில்
கடந்து போனது.
சித்ரா
சிலகாலம் வாழ்ந்து, இறந்தும் போனாள். ஆனால், கடைசிவரை அவளைத் தாக்கிய கொடிய நோய் என்னவென்று
தெரியவில்லை; அவள் சன்னல் கம்பிகளுக்கு வெளியே யாரை அல்லது எதைத் தேடினாள் என்பதும்
தெரியவில்லை. எல்லாம் தனக்குத் தெரிந்தும் வெளியில் சொல்ல முடியவில்லையே என்ற விரக்தியில்
சன்னலோர வெளிச்சக் கீற்றுகளுக்கிடையில் சிறைப்பட்டுக் கிடந்தது சித்ரா வளர்த்த ஜிம்மி.
சித்ராவின்
தேடல் விவரங்களும் அவள் நோய் விவரங்களும் யாருக்கும் தெரியாமல் போனதுபோல, செயற்கை நுண்ணறிவு
செயற்பாட்டு முறைமைகளில் யாருக்கும் தெரியாத அல்லது புரியாத பகுதி என்று ஒன்று உள்ளது.
இதனை ‘பிளாக் பாக்ஸ்’ (Black
box) என்கின்றனர்.
இன்று
செயற்கை நுண்ணறிவு மனித நுண்ணறிவிற்கு இணையாகப் பேசப்படுகின்றது. மருத்துவம், கல்வி,
ஊடகம், தொழில்நுட்பம் என்று இன்று செயற்கை நுண்ணறிவு இல்லாத தளங்களே இல்லை எனலாம்.
எனினும், செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்துகின்ற ‘பிளாக் பாக்ஸ்’ பிரச்சினையினைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமெனில், அது
எப்படி இயங்குகிறது? என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு
செயற்கை நுண்ணறிவு எவ்வாறு இயங்குகின்றது? எங்கிருந்து தரவுகள் பெறப்படுகின்றன? இதனுடைய
தரவுகளின் அளவு என்ன? எந்த நாட்டின் தரவுகள் அதிகமாக உள்ளது? எந்தெந்த மொழிகள் இந்தத்
தரவுத்தளங்களில் உள்ளன? எந்தக் குறிப்பிட்ட கருத்தியல் அதிகமாகச் சேர்க்கப்பட்டுள்ளது?
எந்த ‘அல்காரித’ கோட்பாட்டின் அடிப்படையில் தரவுகளைத்
தேடிக் கண்டறிகிறது? எந்த ‘அல்காரித’ அடிப்படையில் முடிவுகளை எடுக்கிறது?
என்பது போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்காதபோது அதனைச் செயற்கை நுண்ணறிவு உலகில் ‘பிளாக்
பாக்ஸ்’ (Black
Box) என்கின்றனர்.
செயற்கை
நுண்ணறிவின் அடிப்படையே இயந்திரக் கற்றல் (Machine
Learning (LM) எனலாம்.
இம்முறையின்படி ஓர் இயந்திரம் தனக்குக் கொடுக்கப்பட்ட தரவுகளை முழுமையாகக் கற்றறிந்து
கொண்டு, அத்தரவுகளுக்குள் கேட்கப்படும் கேள்விகளுக்குப் புகைப்பட வடிவிலோ, காணொளி வடிவிலோ
அல்லது எழுத்து வடிவிலோ பதில் தருகின்றது. கொடுக்கப்படும் தரவுகள் பெரிதாக இருந்தால்
(Big Data)
பதில்களின் நம்பகத்தன்மையும் அதிகமாக இருக்கும். கொடுக்கப்படும் தரவுகள் அமெரிக்காவைச்
சார்ந்தது எனில், அது தரும் பதில் தரவுகளும் அமெரிக்க வாசம் கொண்டதாகவே இருக்கும்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளின் தொழில்நுட்பக்
கூடங்களில் உருவாக்கப்படுவதால், இயல்பாகவே இத்தாலியிலுள்ள பைசாவின் சாய்ந்த கோபுரம்போல
மேற்கு நாடுகள் பக்கமாக அதனுடைய சார்புத்தன்மையும் (Bias) சாய்ந்தே
நிற்கின்றது. இதனாலேயே செயற்கை நுண்ணறிவு வழியாகப் பெறப்படும் தரவுகளின் உண்மைத்தன்மை
கேள்விக்குள்ளாக்கப்படுகின்றது. இத்தகைய அடிப்படையும் அணுகுமுறையும் இந்தியா போன்ற
வளரும் நாடுகளுக்குப் பெரும் சவாலாக இருக்கிறது. கச்சா எண்ணெயை மையமாகக் கொண்டு உலகப்
போர்கள் உருவானதுபோல பெரும் தரவுகளை (Big Data) மையப்படுத்தி நாடுகளுக்கிடையே சண்டைகள்
உருவாகும் அபாயம் இருப்பதாக அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
பெரும்
தரவுத்தொகுப்பின் (Big Data) முக்கியத்துவம் அறிந்து இந்தியாவின்
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry
of Electronics and Information technology
(Meit) மேற்கொண்டுள்ள முயற்சியின் அடிப்படையில்
இந்தியாவிற்கான தரவுத் தொகுப்பு (National
Data Set) ஒன்று உருவாக்கப்படுவதற்கான
முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ‘ஏ.ஐ. கோஷா’
(A.I. Kosha)
என்னும் இந்தியாவிற்கான இத்தரவுத் தொகுப்பு பல்வேறு இந்தியத் துறைகளின் தரவுகளை அடிப்படையாகக்
கொண்டு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசோ
அல்லது தனியார் நிறுவனங்களோ... யாராக இருந்தாலும் பெரும் தொகுப்பைக் கொண்டு செயற்கை
நுண்ணறிவு மென்பொருளை வடிவமைத்திருந்தாலும், அதன் செயல்பாட்டு முறைமையை அதனைப் பயன்படுத்தும்
பயனர்களுக்கு விரிவாக விளக்கிக்கூறும் தன்மை என்பதே (Explainable AI)
அறநெறியாகும்.
கடைக்குச்
சென்று ஓர் உணவுப்பொருள் வாங்குகிறோமெனில், அந்த உணவுப்பொருள் எங்குத் தயாரிக்கப்படுகிறது?
என்னென்ன பொருள்கள் அதில் சேர்க்கப்பட்டிருக்கின்றன? என்பன போன்ற தெளிவுகளை அப்பொருளை
உருவாக்கும் நிறுவனம் விளக்கிக்கூறுவதும் அதனை அறிந்து கொள்வதும் அதனைப் பயன்படுத்துபவரின்
உரிமையென நான் நினைக்கிறேன். செயற்கை நுண்ணறிவு காலத்தின் கட்டாயம் என்றாலும், அதன்
நெறிப்பாட்டு முறையின் செயல்பாடு அதன் பெரும் தரவுகளின் விவரம் அதனைப் பயன்படுத்தும்
சாமானிய மனிதனுக்கும் விளக்கிக் கூறப்பட வேண்டும் என்ற குரல் மட்டும் தொடர்ந்து உலகின்
ஏதோ ஓர் ஓரத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது.
சன்னல்
திரைகளைத் திறந்தே வைப்போம்; சன்னலோர வெளிச்சம் இருண்டு கிடக்கும் வீட்டை நிரப்பட்டும்.
திருச்சிராப்பள்ளி கிழக்குத் தொகுதியின் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரான திரு. இனிகோ S. இருதயராஜ் அவர்கள், தமிழ்நாடு அரசு சார்பில் மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டது குறித்து ‘நம் வாழ்வு’ வார இதழுக்கு அளித்த சிறப்பு நேர்காணல்:
• சார், வணக்கம்.
முதலில்
உலகின்
140 கோடி
கத்தோலிக்கக்
கிறித்தவர்களின்
ஒப்பற்றத்
தலைவராகத்
திகழ்ந்த
திருத்தந்தை
பிரான்சிஸ்
அவர்களின்
மறைவுச்
செய்தியை
அறிந்து
உடனடியாக
மாண்புமிகு
தமிழ்நாடு
முதல்வர்
அவர்கள்
இரங்கல்
செய்தியும்,
தமிழ்நாடு
சட்டமன்றம்
இரங்கல்
தீர்மானத்தையும்
நிறைவேற்றியது.
குறிப்பாக,
நீங்களும்
தமிழ்நாடு
சிறுபான்மை
நல
அமைச்சர்
திரு.
S.M. நாசர் அவர்களும்
தமிழ்நாடு
மக்கள்
சார்பாக
உரோமைக்குச்
சென்று
திருத்தந்தைக்கு
இறுதி
மரியாதை
செலுத்திவிட்டு
வந்துள்ளீர்கள்.
உங்களுக்கும்,
அமைச்சர்
திரு.
நாசர்
அவர்களுக்கும்,
தமிழ்நாடு
முதல்வர்
அவர்களுக்கும்
‘நம்
வாழ்வு’ வார இதழ்
சார்பாக
நன்றியைத்
தெரிவித்துக்கொள்கிறேன்.
திருத்தந்தை
பிரான்சிஸ்
எல்லாருக்குமே
மிகவும்
பிடித்தமான
ஒரு
தலைவர்.
அவர்களைப்
பற்றி
ஓரிரு
வார்த்தைகள்
கூறுங்களேன்...
“நம் வாழ்வு’ வாசகர்களுக்கு வணக்கம்! உலகம் முழுவதும் இருக்கின்ற கத்தோலிக்கத் திரு அவையின் திருத்தந்தையாக 12 ஆண்டுகள் திரு அவையை அலங்கரித்தவர் திருத்தந்தை பிரான்சிஸ். அவர் இன்று நம்மிடையே இல்லை என்ற மிகக் கடினமான சூழ்நிலையில் இருக்கிறோம். இந்நேரத்தில் தமிழ்நாடு கிறித்தவர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை முதலமைச்சர் சார்பாகவும், என் சார்பாகவும் தெரிவித்துக்கொள்கிறேன்.
திருத்தந்தை
மிகவும் எளிமையான ஒரு மனிதர். அவரைப் பற்றிக் கேள்விப்படும்போது பொதுப் பேருந்தில் பயணித்தவர்; தனக்கான உணவைத் தானே சமைத்து உண்டவர்; திருத்தந்தையாகத் தேர்வான பிறகு, காலங் காலமாகத் திருத்தந்தையர்கள் வாழ்ந்து வந்த வசதியான வத்திக்கான் மாளிகையில் தங்காமல், குருக்களும் கர்தினால்களும் தங்குகின்ற ‘சாந்தா மார்த்தா’
இல்லத்தில் எளிமையாகத் தங்கியவர்; ஏழையாக வாழ்ந்த இவர், ஏழைகள்பால் மிகுந்த கரிசனை கொண்டவர்; புரட்சிகரமான செயல்களைத் திரு அவையில் நடைமுறைப்படுத்தியவர். திரு அவையில் பொதுநிலையினருக்கான பங்கேற்பை ஊக்கப்படுத்தியவர்; பல்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்தவர்களாக வாழக்கூடிய மக்களின் நலனுக்காகக் குரல் கொடுத்தவர்; புலம்பெயர்ந்தவர்களும் நாட்டில் வாழ வாய்ப்பளிக்க வேண்டும் என நாட்டுத் தலைவர்களைக்
கேட்டுக்கொண்டவர்; பல நாடுகளுக்கும் சென்று
அமைதிக்கான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டவர் என்று அவரைப்பற்றிக் கூறிக்கொண்டே இருக்கலாம். உண்மையில் அவர் இந்நூற்றாண்டு கண்ட ஒரு புரட்சியாளர்!”
• திருத்தந்தையின் பணிப்பொறுப்பில்
அவர்
செய்த
புரட்சியான
செயலாக
எதைப்
பார்க்கிறீர்கள்?
“அவரது 12 ஆண்டு காலத் தலைமைப் பணியில் பல மாற்றங்களை முன்னெடுத்தவர்.
அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நாளே திருத்தந்தைக்குரிய ஆடம்பர ஆடைகளை அணிந்து வராமல், சாதாரண அங்கியையும் அவர் ஏற்கெனவே அணிந்திருந்த சிலுவைச் செயினையும் அணிந்து மக்களைச் சந்தித்ததே மிகப்பெரிய புரட்சிதான். பெண்களுக்கான உரிமை திரு அவையில் வழங்கப்பட வேண்டும் எனக் கருதி அவர்களை வத்திக்கானில் மிக உயர்ந்த பொறுப்புகளில் பணியமர்த்தியவர். திருத்தந்தைக்கு வானளாவிய அதிகாரம் உண்டு. அவர் ஒன்றைக் கூறினால் ஒட்டுமொத்தக் கத்தோலிக்கர்களும் ஏற்றுக்கொள்வர். அவருடைய கருத்துக்கு யாரும் மறுப்புக் கூற முடியாது; ‘ஏன் முடிவெடுத்தீர்கள்?’ என்று கேட்கவும் முடியாது. ஆனால், அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்று எண்ணி 2013-ஆம் ஆண்டு மார்ச் 19-ஆம் தேதி திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற அவ்வாண்டே, செப்டம்பர் 28-ஆம் தேதி ‘C-9’ என்ற
கர்தினால்களின் உயர்மட்ட அவையை உருவாக்கி, அக்டோபர் மாதம் முதல் தேதி அதன் முதல் கூட்டத்தை வழிநடத்தினார். இன்று எந்தத் தலைவர் தனக்குரிய அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வார்? திருத்தந்தையின் இந்தச் செயலைப் புரட்சியான ஒரு செயலாகவே நான் பார்க்கிறேன்.”
• நன்றி சார்!
கடந்த
ஆண்டு
திருத்தந்தையை
நேரடியாகப்
பார்க்கக்கூடிய
வாய்ப்பு
உங்களுக்குக்
கிடைத்தது.
பலருக்கும்
கிடைக்காத
ஒரு
வாய்ப்பு
அது.
உங்கள்
இதயத்தைத்
தொட்ட
நிகழ்வு
ஏதேனும்
ஒன்றைக்
குறிப்பிட்டுக்
கூற
முடியுமா?
“கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30-ஆம் நாள் அனைத்துச் சமயத் தலைவர்களோடு திருத்தந்தையைச் சந்திக்கின்ற வாய்ப்பைப் பெற்றேன். எனக்கு மிகப்பெரிய ஓர் ஆச்சரியம் என்னவென்றால், மாபெரும் தலைவர் அவர்; உலகமே பார்த்து வியக்கின்ற தலைவர் அவர்; உலகத் தலைவர்களுக்கு எல்லாம் தலைவராக விளங்கிய அவரைச் சந்திக்கும்போது ஏகப்பட்ட கெடுபிடிகள் இருக்கும் என்று நினைத்தேன். நாங்கள் கிட்டத்தட்ட 100 பேர் கொண்ட ஒரு குழு சென்று, அவரைச் சந்திக்கின்ற வாய்ப்பைப் பெற்றோம். அப்போது அங்குச் சென்றபொழுது எந்தப் பரிசோதனையும் இல்லை. ஓர் இடத்தில் மட்டும் நிறுத்தி, ‘ஏதாவது பொருள்களை வைத்திருந்தால் வைத்துவிட்டுச் செல்லுங்கள்’ என்று
ஒரே ஓர் அறிவுரை மட்டும் கூறினார்கள். அப்போது எங்களோடு வந்திருந்த ஒரு சீக்கிய மதக் குரு ஒருவர் அவருடைய சமய அடிப்படையிலே ஒரு வாள் வைத்திருந்தார். வாள் வைத்திருந்த அவரைப் பாதுகாவலர்கள் திருத்தந்தையைச் சந்திக்க உள்ளே அனுமதிக்கவில்லை. நான் உடனே பாதுகாவலர்களிடம், ‘இது அவர்களுடைய மத அடிப்படையில் வைத்திருப்பதுதான்.
நீங்கள் திருத்தந்தையிடம் போய் தெரிவியுங்கள். அவர் நிச்சயமாக அதை அனுமதிப்பார்’ என்று
கூறினேன். திருத்தந்தையிடம் தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அவர், ‘மத அடிப்படையிலே இருந்தால்
அதை ஒன்றும் செய்ய வேண்டாம். அவரையும் அழைத்து வாருங்கள்’
என்று கூறி, அன்போடு அருகில் நிற்க வைத்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதித்தார்.
எனக்கு
ஒரு 15 நிமிடங்கள் பேசுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. ‘நீங்கள் இந்தியாவிற்கு வருகின்ற பொழுது உங்களை எங்கள் முதல்வர் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பார். நாங்கள் உங்கள் வருகைக்குத் தயாராக இருக்கிறோம்’ என்று
கூறியபோது, ‘வருகிறேன்’
என்று மகிழ்ச்சியோடு கூறினார். அந்தச் சந்திப்பு வாழ்நாளில் கிடைக்கப்பெற்ற பெரும்பேறு!”
• திருத்தந்தையின் அடக்க
நிகழ்வில்
பங்கெடுத்தது
குறித்துப்
பகிர்ந்துகொள்ளுங்களேன்...
“முதலமைச்சர் அவர்கள் நானும், சிறுபான்மை நலத்துறையின் அமைச்சர் அண்ணன் நாசர் அவர்களும் உரோமாபுரி சென்று திருத்தந்தையின் உடலுக்குத் தமிழ்நாடு மக்கள் சார்பாக இறுதி மரியாதை செலுத்திவிட்டு வாருங்கள் என உத்தரவிட்டார்கள். இதற்காக இந்த
ஒட்டுமொத்தக் கிறித்தவ மக்களின் சார்பாக நாங்கள் முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி செலுத்துகின்றோம். முதலமைச்சரின் ஆணைப்படி, கடந்த 25-ஆம் தேதி நாங்கள் உரோமாபுரி சென்று திருத்தந்தையின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினோம். இதெல்லாம் வாழ்க்கையில் கிடைக்காத பெரிய பாக்கியம்! எங்களுக்கான நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. எல்லா ஏற்பாடுகளையும் வத்திக்கான் நிர்வாகம் மிகச் சிறப்பாகச் செய்திருந்தது. அவருடைய அடக்க நிகழ்வுகள்கூட திருத்தந்தையின் இறுதி விருப்பத்திற்கிணங்க மிக எளிமையாகவே நடைபெற்றது.
இந்தியத்
திரு அவை தலைவர்களையும் சந்தித்தோம். ‘தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின்
அவர்கள் தமிழ்நாடு சார்பாகப் பிரதிநிதிகளை அனுப்பி வைத்திருப்பது நெகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது’ என்று
கர்தினால் ஆஸ் வால்டு கிரேசியஸ் அவர்களும், கர்தினால் பசேலி யோஸ் கிளேமிஸ் அவர்களும் கூறினர். தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தனர். இந்நேரத்தில் 267-வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் தலைமைப் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம். மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடைய ஆன்மா இறைவனில் இளைப்பாறட்டும்.”
• மிக்க நன்றி
சார்!
திருத்தந்தையைச்
சந்தித்து
மகிழ்ந்து
உரையாடிய
தருணம்
ஒன்று;
மற்றொன்று
துயரம்
மிகுந்து
உணர்ச்சி
பொங்க அவருக்கு அஞ்சலி செலுத்திய
தருணம்.
இது
ஓர்
உணர்வுப்பூர்வமான
பகிர்வு.
தாங்கள்
பகிர்ந்த
கருத்துகளுக்கு
நன்றி.
உங்கள்
பணி
தொடர
‘நம்
வாழ்வு’ வாழ்த்துகிறது!
நேர்காணல்:
அருள்பணி.
ஞானசேகரன், நம் வாழ்வு துணை ஆசிரியர்
திருத்தந்தை போப் பிரான்சிஸ் 2025-ஆம் ஆண்டை யூபிலி ஆண்டாக அறிவித்தபோது, தன்னார்வலராகப் பணியாற்ற விண்ணப்பித்து, நீண்ட பரிசீலனைக்குப் பிறகு மூன்று மாதங்கள் கழித்து, நான் தன்னார்வலராகப் பணியாற்ற அழைப்பு வந்தது.
மே
மாதம் 2-ஆம் தேதியிலிருந்து 10-ஆம் தேதி வரை பணியாற்ற ஏற்றுக் கொள்ளப்பட்டதும் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வின்பொழுதில் வத்திக்கானில் இருப்பதற்கு வாய்ப்பாக அமைந்தது. மே 3, 4, 5 ஆகிய நாள்களில் புனித பேதுரு பெருங்கோவிலின் உள்ளே திருப்பயணிகளுக்கு உதவி செய்ய நியமிக்கப்பட்டேன். பல நாட்டு மக்களுக்கு
ஆங்கில மொழியில் தகவல்கள் தந்து, அவர்களின் திருப்பயண அனுபவம் சிறப்பாக அமைய உதவும் பணி இது. அதுவே பெரும் அனுபவம்!
மே
6, 7 ஆகிய நாள்களில் புனித பேதுரு சதுக்கத்தில் திருப்பயணிகளை நெறிப்படுத்தி ஆலயத்திற்குள் அனுப்பும் பணி. மே 8-ஆம் நாள் மதிய வேளையில் தன்னார்வப் பணியாளர்கள் இத்தாலியக் காவல்துறையோடு இணைந்து பெரும் எண்ணிக்கையில் வரக்கூடிய மக்களை ஒழுங்குபடுத்தும் பணியை மேற்கொண்டோம்.
இந்நிகழ்வில்
எனக்குப் புனித பேதுரு சதுக்கத்தின் முன்பகுதியில் பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தது. மே 7-ஆம் நாள் இரவு 9 மணி அளவிலும், 8-ஆம் நாள் நண்பகல் வேளையிலும் வெளிவந்த கரும்புகை மக்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தாலும், மக்கள் பெரும் நம்பிக்கையோடு மாலை மூன்று மணியிலிருந்தே புனித பேதுரு சதுக்கம் நோக்கி வர ஆரம்பித்தார்கள். காவல்துறையோடு தன்னார்வப்
பணியாளர்களும் இலட்சக்கணக்கான மக்களை வரிசைப்படுத்திப் புனித பேதுரு சதுக்கத்திற்குள் அனுப்பினோம். மாலை ஐந்து மணிக்குப் புனித பேதுரு சதுக்கம் ஏறத்தாழ நிரம்பி வழிய ஆரம்பித்தது. கூடிய மக்களின் பார்வை முழுக்க புகைக் கூண்டை நோக்கியே இருந்தது. அச்சமயத்தில் சீகல் பறவைகள் புகைக் கூண்டைச் சுற்றி அமர்ந்து கொண்டிருந்தன.
இத்தாலி
நேரம் சரியாக 6 மணி 8 நிமிடத்தில் புகைக்கூண்டிலிருந்து வெண்புகை வர ஆரம்பித்தபொழுதில், புனித பேதுரு
பெருங்கோவில் மணி ஒலிக்க ஆரம்பித்தது. மக்கள் அனைவரும் கைத் தட்டலோடு ‘Viva Papa’, ‘Viva
Papa’ என்று
ஒருமித்தக் குரலோடு புதிய திருத்தந்தையை வாழ்த்த ஆரம்பித்தனர். மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஆரவாரம்.
பல
நாட்டுக் கொடிகள் கூட்டத்தின் மத்தியில் இருந்து வெளிப்பட்டு, திருத்தந்தை உலகளாவியக் கத்தோலிக்கத் திரு அவையின் தலைவர் என்பதை வெளிக்காட்டின. ‘திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்’ என்ற
செய்தி அறிந்ததும் உரோமை நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்து குவிய ஆரம்பித்தனர். இதை முன்கூட்டியே அறிந்திருந்தத் தன்னார்வப் பணிக் குழுக்களின் தலைவர்கள் தகுந்த முன்தயாரிப்போடு இருந்தனர். இருந்தாலும் இலட்சக்கணக்கான மக்கள் புனித பேதுரு பெருங்கோவில் தொடக்கம் முதல் முக்கால் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திபேர் நதிக்கரை வரையிலும் நிறைந்திருந்ததை உணர முடிந்தது. அடுத்த முக்கால் மணி நேரம் மக்களின் ஆரவாரமும் மகிழ்ச்சிக் குரல்களும் ஒலித்துக்கொண்டே இருந்தன.
பிறகு
இன்னிசை வாத்தியக்குழு முன்வர ‘swiss guard’ முப்படையினர் அணிவகுத்து வர, ‘புதிய போப் யாராயிருப்பார்?’ என்ற எதிர்பார்ப்பும் கூட ஆரம்பித்தது. அது கர்தினால் தோமினிக் மம்பார்தி (Cardinal Dominique Mamberti) பெயரை
அறிவிக்கும் வரை நீடித்தது.
திருத்தந்தை
தோன்றும் மாடத்தில் பணியாளர்கள் வத்திக்கான் கொடியைக் கொண்டு அலங்கரித்தனர். பிறகு கர்தினால் தோமினிக் மம்பார்தி மாடத்திற்கு வந்து பாரம்பரியச் சொற்களான ‘Hebemus Papam’ (‘நமக்குத் திருத்தந்தை கிடைத்துள்ளார்’) என்ற
அறிவிப்போடு அமெரிக்க நாட்டைச் சார்ந்த, தற்போது பெரு நாட்டில் பணியாற்றும் இராபர்ட் பிரான்சிஸ் கர்தினால் பிரிவோஸ்ட் ‘14-ஆம்
சிங்கராயர்’ (leo XIV)
என்ற பெயருடன் ஏந்தி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
எனத் தெரிவித்தார். அப்போது மற்ற கர்தினால்கள் அதே தளத்தின் பிற மாடங்களில் கூடிவந்தனர்.
சில
நிமிடங்களில் சிலுவையோடு ஒருவர் முன்வர திருத்தந்தை 14-ஆம் சிங்கராயர் திருத்தந்தைக்கான சிறப்பு உடையுடன் மக்கள்முன் தோன்றி அன்போடு கையசைத்துத் தன்னை தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்ட மக்களின் ஒருமித்த வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டார். “உங்களுக்குச் சமாதானம் உண்டாகுக”
என்று ஆரம்பித்துத் தனது முதல் உரையையும் ஆசிரையும் மக்களுக்கு வழங்கினார். தனது உரையின்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பற்றியும் குறிப்பிட அவர் மறக்கவில்லை.
தனது
உரையை முடித்த பிறகு ‘Viva Papa’ என்ற மக்களின்
மகிழ்ச்சி ஆரவாரத்தை மிகுந்த மகிழ்வுடன் கையசைத்து ஏற்றுக்கொண்ட திருத்தந்தை, மக்களிடமிருந்து விடைபெற்றுச் சென்றார். புனித பேதுருவின் வழித்தோன்றலான திருத்தந்தை 14-ஆம் சிங்கராயர் உலகில் அன்பும் மகிழ்ச்சியும் ஒப்புரவும் நிலைபெற உழைப்பார் என்ற எண்ணம் நம்மிடம் நிறைந்திருந்தது. வெண்புகையைப் பார்த்ததிலிருந்து வந்த பூரிப்பு, புல்லரிப்பு திருத்தந்தை விடைபெற்றுச் செல்லும் வரை நீடித்தது.
இறைவேண்டலை நாம் எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது; அதில் நாம் விழிப்பாயிருக்க வேண்டும் என்று நம்மை எச்சரிக்கிறது இறைவார்த்தை. திரு அவையின் புனிதர்களும் இறைவேண்டல் பற்றிய தங்களின் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டுள்ளனர். எல்லா இறைவேண்டல்களும் இறைவனுக்கு ஏற்புடையன ஆகாது. எனவே, நாம் எச்சரிக்கையாயிருக்க வேண்டும் என்னும் செய்தியைத் திருவிவிலியத்தின் பல இடங்களிலும் பார்க்கிறோம்.
1. முரண்பாடான இறைவேண்டல்:
நம் அனைவருக்குமே பொருந்துகின்ற ஒரு முரண்பாடான இறைவேண்டலை “இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; இவர்கள் உள்ளமோ என்னை விட்டு வெகு தொலையில் இருக்கிறது” (மாற்
7:6) என இறைவாக்கினர் எசாயாவை மேற்கோள்காட்டிச் சுட்டுகிறார் இயேசு. இது குறித்து நாம் எப்போதுமே விழிப்பாயிருக்க வேண்டும்.
2. இறுமாப்பான இறைவேண்டல்:
பரிசேயரும் வரிதண்டுபவரும் இறைவேண்டல் செய்தது பற்றிய உவமையில் இயேசு, “பரிசேயரல்ல, வரி தண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார்; ஏனெனில், தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச்
சொல்கிறேன்” (லூக்
18:14) என்றார். இறைவார்த்தை, இறைவேண்டலில் அதிக ஆர்வம் காட்டுபவர்கள் பிறரை இகழ்ந்து தீர்ப்பிடாமல் கவனமாயிருக்க வேண்டும்.
3. மேலோட்டமான இறைவேண்டல்:
“அவர்களின் உதடுகளில் நீர் எப்போதும் இருக்கின்றீர்; அவர்கள் உள்ளத்திலிருந்தோ வெகு தொலையில் உள்ளீர்”
(எரே 12:2) என்று எரேமியா இறைவாக்கினரும், “தங்கள் உள்ளத்திலிருந்து என்னை நோக்கி அவர்கள் கூக்குரலிடவில்லை” (ஓசே
7:14) என இறைவாக்கினர் ஓசேயா வழியாகவும் நாம் எச்சரிக்கப்படுகின்றோம். நம் இறைவேண்டல்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வருகின்றனவா? என்று ஆய்வு செய்து எப்போதும் விழிப்பாயிருப்போமாக.
4. இறைவனுக்கு ஏற்காத இறைப்புகழ்ச்சி:
பல வேளைகளில் நம்மிடம் காணப்படும் இந்த முரண்பாட்டை தூய யாக்கோபு சுட்டிக்காட்டுகிறார். “தந்தையாம் ஆண்டவரைப் போற்றுவது அந்நாவே; கடவுளின் சாயலாக உண்டாக்கப்பட்ட மனிதரைத் தூற்றுவதும் அந்நாவே. போற்றலும் தூற்றலும் ஒரே வாயிலிருந்து வருகின்றன. என் சகோதர சகோதரிகளே, இவ்வாறு இருத்தலாகாது. ஒரே ஊற்றிலிருந்து நன்னீரும் உவர் நீரும் சுரக்குமா?” (யாக் 3:9-11). எனவே, பிறரன்பில்லாத எந்த இறைவேண்டலும் இறைப்புகழ்ச்சியும் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதை உணர வேண்டும்.
5. தகாத இறைப்புகழ்ச்சி: “பாவிகளின் வாயிலிருந்து வரும் இறைப்புகழ்ச்சி தகாதது. அது ஆண்டவரிடமிருந்து அவர்களுக்கு அருளப்படவில்லை. ஞானத்தினின்று இறைப்புகழ்ச்சி வெளிப்பட வேண்டும். ஆண்டவரே அதை வளமுறச் செய்வார்”
(சீஞா 15:9) என்னும் வரிகள் சில வேண்டல்களை, இறைப்புகழ்ச்சியாக இருந்தாலும்கூட, இறைவன் புறக்கணிக்கிறார் என்று நம்மை எச்சரிக்கின்றன.
6. அறியாமையின் மன்றாட்டு: செபதேயுவின் மனைவி தன் மகன்கள் யாக்கோபு, யோவான் இருவரும் இயேசுவின் ஆட்சியில் வலப்புறமும் இடப்புறமும் அமரும் வரம் கேட்டபோது, இயேசு அவரிடம் “நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை” (மத்
20:22) என்று பதில் கூறினார். ஆம், சில வேளைகளில் இறைவனிடம் என்ன மன்றாட வேண்டும் என்பதை அறியாமல், இறைவனின் பார்வையில் நமக்குத் தேவையற்றவற்றை மன்றாடுகிறோம். “அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள்; அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்” (மத்
6:33) என்னும் இயேசுவின் அறிவுரை நாம் எதற்காக மன்றாட வேண்டும் என்னும் தெளிவைத் தருகிறது.
7. வெளிவேடம் நிறைந்த வேண்டல்:
“நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது வெளிவேடக்காரரைப்போல் இருக்க வேண்டாம். அவர்கள் தொழுகைக்கூடங்களிலும் வீதியோரங்களிலும் நின்றுகொண்டு மக்கள் பார்க்க வேண்டுமென இறைவேண்டல் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள்” (மத்
6:5) என்ற இயேசுவின் எச்சரிக்கை நம்மை விழிப்படையச் செய்யவேண்டும். நமது இறைவேண்டல் வாழ்வு பிறரது பாராட்டை, நன்மதிப்பைப் பெறுவதற்காக அல்ல; மாறாக, இறைவனின் ஏற்பிசைவைப் பெறுவதற்காக என்னும் தெளிவு நம் உள்ளத்தின் ஆழத்தில் பதிய வேண்டும்.
இறைவேண்டலிலும்கூட
சிக்கல்கள் இருக்கின்றன என்பதையே மேற்காணும் இறைமொழிகள் எடுத்துரைக்கின்றன. ஆகையால் “எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்” (லூக்
21:36) என்னும் இயேசுவின் எச்சரிக்கை சொற்களை இதயத்தில் இருத்தி இறைவேண்டல் செய்வோம்.
8. மன்னித்த
பின்
வேண்டுதல்
செய்யுங்கள்:
“நீங்கள் வேண்டுதல் செய்ய நிற்கும்போது யார் மேலாவது நீங்கள் மனத்தாங்கல் கொண்டிருந்தால், மன்னித்துவிடுங்கள்” (மாற்கு
11:25). “உனக்கு அடுத்திருப்பவர் செய்த அநீதியை மன்னித்துவிடு; அவ்வாறெனில் நீ மன்றாடும்போது உன்
பாவங்கள் மன்னிக்கப்படும்” (சீஞா
28:2).
9. பாவங்களை அறிக்கையிட்டு
மன்றாடுங்கள்:
“என் கடவுளாகிய ஆண்டவர்முன் என் பாவங்களை அறிக்கையிட்டு நான் மன்றாடியது; ‘என் தலைவரே! நீர் மாட்சிமிக்க அஞ்சுதற்குரிய இறைவன். உம்மீது அன்புகொண்டு உம் கட்டளைகளின்படி நடப்பவர்களுடன் நீர் செய்துகொண்ட உடன்படிக்கையைக் காத்து அவர்களுக்குப் பேரன்பு காட்டுகின்றீர்!” (தானி 9:4).
10. கட்டுப்பாடுடன் வேண்டுதல் செய்யுங்கள்:
“எல்லாவற்றிற்கும் முடிவு நெருங்கிவிட்டது. எனவே, இறைவனிடம் வேண்டுதல் செய்யுமாறு கட்டுப்பாடோடும் அறிவுத் தெளிவோடும் இருங்கள்”
(1பேது 4:7).