news
சிறப்புக்கட்டுரை
இளம் மயிலும் செயற்கை நுண்ணறிவும்

அழகிய இளம் ஆண் மயில் ஒன்றிற்கு ஓர் ஆசை. ‘எத்தனை நாள்தான் இப்படி இந்தப் பெரிய தோகைகளை வைத்துக்கொண்டு உடல் வலிக்கப் பறந்து பறந்து இரை தேடுவது? இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும்என்று எண்ணிக் கொண்டது. கூண்டுக் கிளிகளுக்கு மேல் எப்போதும் அதற்குப் பொறாமை இருந்தது. ‘ஒரே இடத்தில் ஒய்யாரமாக இருந்து கொண்டு, கிடைப்பதை வயிறுமுட்ட தின்றுகொண்டு வீட்டாரின் தோளிலும் மடியிலும் புரண்டுகொண்டு வாழ்வதில் இந்தக் கூண்டுக் கிளிகளுக்கு இருக்கும் சௌகரியம் என் வாழ்வில் இல்லையேஎன்று ஏங்கித் தவித்தது இளம் மயில்.

ஒற்றைக்காலில் பொழுதெல்லாம் காத்திருந்த நாரைக்கு அயிரை மீனே வாய்க்குள் வந்து மாட்டிக் கொண்டதுபோல இளம் மயிலுக்கு ஓர் அரண்மனை இளவரசனின் அறிமுகம் கிடைத்தது. இளம் அரசனுக்கும் பல நாள்களாக ஒரு மயிலைத் தங்கக் கூண்டிலே வைத்து வளர்க்க வேண்டும் என்று ஆசையிருந்தது. இரண்டு பேரும் சந்தித்துப் பேசிக் கொண்டனர். தங்கள் ஆசைகளை வெளிப்படுத்தினர். இளம் மயில் மிகக் கண்டிப்பாக இளவரசனிடம் சொல்லிவிட்டது: “என்னைத் தேவையில்லாமல் பறக்கச் சொல்லக்கூடாது, பாடச் சொல்லக்கூடாது, ஆடச் சொல்லக்கூடாதுஎன்று. இளவரசனுக்கும் இந்த டீலிங் பிடித்திருந்தது. ஆனால், ஒரே ஒரு கண்டிசன் மட்டும் போட்டான்: “நீ என் தங்கக் கூண்டில் இருந்தாலே போதும்; ஆனால், நான் எப்போதெல்லாம் உனக்கு ஒரு வாய் உணவு தருகின்றேனோ, அப்போதெல்லாம் உன் தோகையிலிருந்து இறகு ஒன்றைத் தரவேண்டும்என்றான்.

இளம் மயில் ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கியது. “என் இறகுகளால் இனி எனக்கு என்ன பயன்? சுவையான அரண்மனை உணவே நான் இருக்கின்ற இடம் தேடி, வேளா வேளைக்கு வந்துவிடுகின்றது. சிறகடித்துப் பறக்க வேண்டிய தேவையில்லை. உழைக்கச் சொல்லுவார் யாரும் இல்லை. இறகுகள் போனால் என்ன? பார்த்துக்கொள்ளலாம்என்று டீலிங்கிற்கு ஒத்துக்கொண்டது.

வீட்டில் புதிதாகக் கார் வாங்கினால் ஊரார் கண்ணே அந்தக் காரின் மேல் இருப்பதுபோல, மயில் வந்த வேளை அந்தப் பெரிய அரண்மனைக்கே ஒரு புதுப்பொலிவு வந்தது. அரசர், அரசி, பணிப்பெண்கள், சிறார்கள் என்று எல்லாரும் தங்கக்கூண்டில் அடைக்கப்பட்ட இளம் மயிலின் அழகிலே மெய் மறந்து போனார்கள். அடிக்கடி வந்து தவறாது பார்த்துச் சென்றனர். இளவரசன் இளம் மயிலுக்கு ஒவ்வொரு முறையும் உணவு கொடுக்கும்போது மறக்காமல் ஒரு மயிலிறகைப் பெற்றுக்கொள்வான்.

காட்டு வெள்ளம் கண்ணில் எதிர்படும் அனைத்தையும் அள்ளிச் சுருட்டிக்கொண்டு ஓடுவதுபோல காலம், பல பகல் இரவுகளைச் சுருட்டிக்கொண்டு ஓடியிருந்தது. பெரும்பாலான தன் இறகுகளை இழந்திருந்த மயில் கொழுத்துப்போய் தன் அழகையும் அடையாளத்தையும் இழந்து, மழித்துவிடப்பட்ட தீக்கோழியைப் போலிருந்தது.

இப்போதெல்லாம் அதனைக் காண யாரும் வருவதில்லை. இளவரசன்கூட தன் வேலையாள்களைத்தான் உணவு கொடுக்க அனுப்புவான். தனிமையிலும் வெறுமையிலும் தவித்திருந்த மயில், தன் முடிவு தவறானது என்று உணரும்போது அதன் உயிரும் தங்கக்கூண்டின் கம்பிகளுக்கிடையே ஊசலாடிக் கொண்டிருந்தது.

மனிதன் தொடக்கக் காலத்திலிருந்தே தன்னை வலிமையானவனாகக் காட்டிக்கொள்ள ஏதாவது துணைக்கருவியை எப்போதுமே பயன்படுத்தி வந்திருக்கின்றான். கற்காலத்தில் கூர்மையான கற்களைப் பயன்படுத்தி வேட்டையாடுவதற்கும் விவசாயம் செய்வதற்கும் பயன்படுத்தி இருக்கிறான். இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் விலங்குகளைப் பழக்கப்படுத்தியும், சக்கரங்களைக் கண்டுபிடித்தும், துப்பாக்கி முதல் அணுகுண்டு வரை பயன்படுத்தியும் தன்னைப் பிறரைவிட வலிமையுள்ளவனாக எப்போதும் காண்பித்திருக்கிறான்.

சிலந்திக்கு எட்டுக்கால்கள் இருந்த போதும், அதனுடைய வசதியான பகுதி அதனுடைய சிலந்தி வலை மட்டும்தான்; அதனைத் தாண்டி அதனால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், மனிதன் அப்படியல்ல; இரண்டு கால்கள் மட்டுமே இருந்தும் கூட அவனால் இருபது கால் பாய்ச்சலில் வசதிப் பகுதியைத் தாண்டியும் பயணம் செய்ய முடியும். இதற்கு அவனுடைய நுண்ணறிவே காரணம்.

மனிதன் எப்போதுமேஇது போதும்என்று தேங்கி விடுவதில்லை. ஒவ்வொரு நாளும் ஒரு படைத்தலில் ஈடுபட்டிருக்கின்றான். இதன் மூலமாகத் தன்னை வலிமையுள்ளவனாகக் காட்ட விரும்புகின்றான். இது தொடக்கத்திலிருந்தே மனிதனின் இயல்பாக இருந்திருக்கின்றது. இதனுடைய தொடர்ச்சியாகவே செயற்கை நுண்ணறிவை நாம் பார்க்கவேண்டும்.

செயற்கை நுண்ணறிவு என்பது கணினியையும் இணையத்தினையும் பயன்படுத்தி, மனித அறிவிற்கு இணையான ஓர் அறிவைச் செயற்கை முறையில் உருவாக்குவது. இது மனிதனின் பணியினை எளிமைப்படுத்துகிறது. சில நேரங்களில் மனிதனையே தன் பணியிலிருந்து வெளியேற்றுகின்றது. செயற்கை நுண்ணறிவு (ai) என்று இன்று பல்வேறு தளங்களில் நாம் பேசினாலும், இத்தகைய சிந்தனை ஆலன் மேத்திசன் டூரிங் (Alan Mathison Turing) என்பவரால் 1940-50-களிலேயே ஆராயப்பட்டது. எனவேதான் இவரைசெயற்கை நுண்ணறிவின் தந்தைஎன்கின்றனர். ‘இயந்திரங்கள் சிந்திக்க முடியுமா?’ (Can machines think?) என்ற டூரிங்கின் கேள்வியே இன்றைய செயற்கை நுண்ணறிவுக்கெல்லாம் அச்சாணியாக அமைந்தது.

செயற்கை நுண்ணறிவை இரண்டாகப் பிரிக்கலாம்: ஒன்றுபலவீனமான செயற்கை நுண்ணறிவு (Weak Artificial Intelligence); இவ்வகை செயற்கை நுண்ணறிவு குறைந்த அறிவுத்திறன் கொண்டும் குறுகிய இலக்கிற்காகவும், குறைந்தபட்ச செயலுக்காகவுமே உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதனாலேயே இதனைநேரோ ஏஐ (Narrow ai) என்றும் கூறுவர். இதன் எடுத்துக்காட்டாகசாட் ஜிபிடிசெயலியைக் கூறலாம். ஒரு குறிப்பட்ட செயலை மட்டும் செய்யும் திறன் கொண்டது. மற்றொன்றுவலுவான செயற்கை நுண்ணறிவு (Strong Artificial Intelligence); இவ்வகை செயற்கை நுண்ணறிவுசெயற்கை பொது நுண்ணறிவு (Artificial General Intelligence -AGI) மற்றும் செயற்கை அதிநவீன நுண்ணறிவு (Artificial Super Intelligence -ASI) போன்றஏஐதொழில்நுட்பத்தினால் செறிவூட்டப்பட்டிருக்கின்றது.

சிந்திக்கும் திறன், புரிந்துகொள்ளும் திறன், கற்றுக்கொள்ளும் திறன், கணக்கிடும் திறன் என்று மனித அறிவிற்கும் ஆற்றலுக்கும் இணையான பண்பை இவ்வகை செயற்கை நுண்ணறிவு கொண்டு விளங்குகின்றது. எனினும், மனித அறிவையும் அதன் அதீத ஆற்றலையும் மிஞ்சிச் செல்ல இந்தச் செயற்கை நுண்ணறிவுக்கு இன்னும் சில காலம் ஆகும் என்றே கருதுகிறேன்.

இன்று மருத்துவத்துறையில், இராணுவத்தில், கல்வித்துறையில், ஊடகத்தில், மனித மேம்பாட்டில், தொழில்புரட்சியில், விண்வெளி ஆய்வில் என்று இன்னும் பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு என்பது அறிவியலின் விஸ்வரூப வளர்ச்சியை முப்பரிமாணக் கோணத்தில் நமக்குக் காட்டுகின்றது. ஒருபுறம் வளர்ச்சி அறிவியலின் புரட்சி என்று மார்தட்டினாலும், மறுபுறம்ஏஐதொழில்நுட்பத்தினால் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் சைபர் குற்றங்கள், நம்பகத்தன்மையை ஏற்படுத்தக்கூடிய போலிச் செய்திகள் மற்றும் காணொளிகள், அதில் இருக்கக்கூடிய நெறிமுறை சார்ந்தக் குழப்பங்கள் நம் மற்றும் நம் பிள்ளைகளின் எதிர்காலம் சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதை இன்றே நமக்கு உணர்த்துகின்றது.

தங்கக் கூண்டும், வேளா வேளைக்குச் சாப்பாடும் என்றிருந்த இளம் மயில் தன் தோகையை இழந்து, தன் தன்மை இழந்து தீக்கோழியான கதையைப் போல, உதவிக்கு வந்தவனே நம்மை உருக்குலைக்க வருகிறான் என்பதைத் தெரிந்து விழிப்பாய் இருப்பது நல்லது.

news
சிறப்புக்கட்டுரை
தூர தேசப் பயணிகள்!

மனித நாகரிக வளர்ச்சி என்பது இடப்பெயர்ச்சியில் ஆரம்பமாகிறது. கண்டங்கள், தேசங்கள் என எல்லைக் கோடுகள் வகுக்கப்பட்டபோது புலம்பெயர்வு நடக்கிறது. உலகில் கோடிக்கணக்கான மக்கள் தலைசாய்க்க இடமின்றிக் காற்றுவெளியில், எல்லை இல்லாக் கடற்பரப்புகளில், பாலைவெளிகளில்  திசை அறியாமல் அகதிகளாய் அலைகிறார்கள். நாடற்ற, வீடற்றஅகதிஎன்ற அம்மக்கள் வானமே வாழும் கூரையாக, தெருக்களில் வெயில், மழை எனப் பரிதவிப்பது நாகரிக உலகச் சமூகத்திற்கான பெரும் சவால்.

ஒரு தேசிய இனமாக வாழும் நம்மைப் போன்ற குடிமைச் சமூக மக்களுக்கு, அகதிகளின் அவலம் அறிய வாய்ப்பு இல்லை. ‘அகதி எனப்படுவோர் அரசியல், மதம், இனம், நாட்டுரிமை காரணங்களால் மனித உரிமை மீறப்படுவதாலும், போர், வன்முறை காரணமாகச் சொந்த நாட்டில் வாழ வழியின்றி, நாட்டை விட்டு வெளியேறுவதாலும், புதிய புகலிடம் தேடுபவர்கள்என்ற வரையறையில் அடங்குவர். இவர்களுக்கு அடுத்த வேளை உணவு, இருப்பிடம், செல்லும் தூரம், சென்று அடைகிற இடம் என எதுவுமில்லை. இவர்கள் திசை தெரியாப் பறவைகள். இது காற்றுவெளிப் பயணம். ஒரு தூர தேசத்து நிலவிற்கான, துயர தேசத்துப்  பயணம். உலகெங்கும் 120 மில்லியன் மக்கள் அகதிகளாக அலைகிறார்கள். இவர்களில் 36 சதவிகித மக்களை ஐரோப்பிய நாடுகள் தஞ்சம் அளித்துக் காக்கிறது.

1967-ஆம் ஆண்டு சர்வதேசச் சமூகம் அகதிகளின் நிலை தொடர்பான, அகதிகளின் மறுவாழ்வை மையப்படுத்திய ஜெனிவா ஒப்பந்தத்தை உருவாக்கியது. மண்ணுரிமை தொடர்பான தேசியங்களின் புதுக் கலாச்சாரத்தால் அகதிகளின் வாழ்வுரிமை இன்றைய நாள்களில் கேள்விக்குறியாகி உள்ளது. மனிதாபிமான அடிப்படையில் ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகள் அகதிகளை வரவேற்ற காலம் மாறி வருகிறது. தற்போது பல நாடுகள் அகதிகளுக்காகவே குடியேற்ற விதிகளைக் கெடுபிடிகளாக மாற்றிவிட்டன.

அனைவருக்கும் நினைவிலிருக்கலாம்... 2010-ஆம் ஆண்டு 40 ஈழத்தமிழர்கள் உள்பட 92 அகதிகள் தஞ்சம் தேடிப் பெரிய படகில் சென்றபோது, படகில் தண்ணீர் புகுந்து, தத்தளித்துக் கொண்டு இருந்தபோது, ஆஸ்திரேலியாவிற்கு அருகே உள்ள கிறிஸ்துமஸ் தீவு அருகே மீட்கப்பட்டார்கள். இதுபோன்ற ஆபத்தான பயணங்களில் இறப்போரின் மொத்த எண்ணிக்கை தரவுகள் எவரிடமும் இல்லை.

2015-ஆம் ஆண்டு அகதிகள் நெருக்கடியின் உச்சத்தில் ஏற்பட்ட கப்பல் விபத்தை கிரேக்க டிராஜடிஎனும் புத்தகம் கண்ணீரால் விவரிக்கிறது. இந்த வாரத் தலைப்புச் செய்திகள் இப்படியாக இருக்கிறது... ‘அகதிகள் கிரீஸ் கடலில் விழுந்து விபத்து, ‘பிரிட்டன் நோக்கிச் சென்ற 115 அகதிகள் மீட்பு, ‘அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து ஆறு இத்தாலியர்கள் பலி, ‘உலகம் முழுவதும் உயிரைப் பணயம் வைத்த அகதிகளின் பயணம் தொடர்கிறது.’ இது குறித்துப் பெரும் கவலை கொள்கிற உலகளாவிய  அமைப்பான யூ.என்.எச்.சி.ஆர். எல்லாத் தேசங்களுக்கும்கடவுளின் துன்பம்என்ற பெயரில் கோரிக்கை வைக்கிறது. ‘அகதிகளுக்கு ஆதரவு தாருங்கள்எனச் சர்வதேசச் சமூகத்திற்கு விண்ணப்பிக்கிறது.

நம் நாட்டில் எல்லையோர மாநிலங்களில் அகதிகள் குறித்த பிரச்சினைகள் உள்ளன. வங்க தேசத்து அகதிகள் குறித்தே குடியுரிமைச் சட்டம் என்ற வாதமும் உண்டு. புதிய குடியுரிமைச் சட்டம் அகதிகளை நிரந்தரக் குற்றவாளிகள் என அறிவிக்கிறது. அவ்விதிகளைப் பயன்படுத்தி அகதிகளை மனிதாபிமானம் இல்லாமல், இந்தியச் சிறையில் அடைக்க வழி கொணரப்பட்டது. தமிழ்நாட்டில் நம் தொப்புள்கொடி உறவுகளான ஈழ அகதிகள், அவர்களின் மறுவாழ்வு குறித்த முன்னெடுப்புகள், எந்த நகர்வுகளும் இன்றி முடங்கியே கிடக்கின்றனஈழ அகதிகள் மூன்று  தலைமுறைகளைப் பார்த்து விட்டார்கள்.

1964-இல் இந்திரா-சிறிமாவோ ஒப்பந்தப்படி இந்தியா, திரும்பிய தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்காவது குடியுரிமை தாருங்கள் என்பதும் தரப்படவில்லை. அவர்களின் எண்ணிக்கை 5,25,000 என்பது குறிப்பிடத்தக்கது.

1983-ஆம் ஆண்டு ஈழ விடுதலைப் போர் உச்சக்கட்டம் பெற்ற காலம். மண்டபம் பகுதியில் ஈழத்து அகதிகள் பதிவு செய்யப்பட்டு திருச்சி, இராமநாதபுரம் போன்ற அகதிகளின் சிறப்பு முகாமிற்கு அனுப்பப்படுவார்கள். இயேசு சபையின் கிழக்காசிய நாடுகளுக்கான அகதிகள் மறுவாழ்வு மையம் இரவு-பகல் பாராமல் ஈழ அகதிகளை மீட்டு, மண்டபம் முகாமில் பதிவு செய்து, சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்குத் துணை நின்றது என்பதையும் நாம் இங்கு பதிவு செய்ய வேண்டும்.

அன்றிலிருந்து இன்றுவரை இனவாத சிங்கள அரசின் கொடுங்கோன்மைக்குத் தப்பி, தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்தோர் எண்ணிக்ககை மூன்று இலட்சம் ஈழத் தமிழர்கள். அவர்கள் 29 மாவட்டங்களில் 108 முகாம்களில் தங்கி உள்ளார்கள். அவர்களில் இன்று 58,492  பேர் அகதிகள் முகாமில் உள்ளார்கள். 33,639 பேர் முகாமிற்கு வெளியேயும் வாழ்கிறார்கள். அவர்களுக்குப் போதிய இருப்பிட வசதி இல்லை. தமிழ்நாடு புலனாய்வுத் துறையாலும், காவல்துறையாலும் அகதிகள் முகாம்கள் ஒரு திறந்தவெளி சிறைச்சாலை என்பதான நிலையே  எனக் குற்றம் கூறப்படுகிறது. இந்திய நாடாளுமன்றத்திலும், பொதுவெளிகளிலும் இவர்களைப்  புதிய குடியுரிமைச் சட்டத்தில் சேர்த்து, இந்தியக் குடிமக்களாக அறிவிக்க  வேண்டும் எனக் குரல்கள் தமிழ்நாட்டில்  எல்லா அரசியல் கட்சிகளிடமும் உள்ளது.

ஒன்றிய அரசு தமிழர்களைப் புறக்கணிப்பது போலவே, ஈழத் தமிழர்களையும் புறக்கணிக்கிறது. நாம் அகதிகள் குறித்துப் பேசும்போது, சொந்த நாட்டு அகதிகளையும் பேச வேண்டும். இவர்களுக்குக் குடியுரிமை மட்டுமே அகதிகளை விட அதிக உரிமையாக இருக்கிறது. இரவு நேரங்களில் வீடற்ற, தலை சாய்க்க இடமில்லா மனநலன் பாதிக்கப்பட்டோர், அனாதைகள், பிச்சைக்காரர்கள் ஆகியோரின் உறக்கத்திற்கான தவிப்பு கவலை தருவது. அவர்களை இரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பூட்டப்பட்ட கடைகள், பொது இடங்கள் என்ற போர்வைகள் மாற்றாய் அமைந்து இருந்தாலும் அவை போதுமானதாக இல்லை.

அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் வீடற்றவர்களுக்காக இரவு தங்குமிடம் அமைத்து, அவர்களைப் பேணுவதைப் பெரும் நகரங்களில் காண முடிகிறது. சென்னையில் இராயப்பேட்டை, டி.டி.கே. சாலையில் பெருநகர சென்னை மாநகராட்சி நகர்ப்புற  வீடற்றோர் காப்பகம் உள்ளது. புதுடெல்லியில் சேசு சபை சார்பாக அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற இருப்பிடமற்றவர்களின் தங்குமிடத்தை இருபது ஆண்டுகளுக்கு முன் கண்டது  நினைவிலாடுகிறது. வேளைநகர் திருத்தலத்திலும் இதுபோன்ற மையம் செயல்படுவது பாராட்டத்தக்கதே.

அன்பு, ஆறுதல், அரவணைப்புத் தேடும் துயர தேச அகதிகளுக்கும், சொந்த நாட்டு அகதிகளுக்கும் ஆதரவு அளிப்போம், அன்பு காட்டுவோம், அரவணைப்போம். நம் சகோதர அன்பில்  மனிதாபிமானம் பூக்கட்டும்; மானுடம் செழிக்கட்டும்!

news
சிறப்புக்கட்டுரை
‘இரக்கத்தின் திருத்தந்தை’ பிரான்சிஸ்

கடவுளின் இரக்கமே நம் விடுதலையும் மகிழ்ச்சியும் ஆகும். இரக்கத்திற்காகவே நாம் வாழ்கிறோம். இரக்கம் இல்லாத வாழ்க்கையை நாம் நினைத்துப் பார்க்க இயலாது. இரக்கமே நாம் சுவாசிக்கும் காற்று. இரக்கத்திற்கு நாம் வேலியிட முடியாது. நாம் மன்னிக்க வேண்டும், ஏனெனில், நமக்கு மன்னிப்பு தேவை.”

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடைய வாழ்க்கையையும் பணியையும் வரையறுக்கிற ஒற்றைச் சொல்இரக்கம்எனலாம். அவருடைய சொற்கள், செயல்கள், பயணங்கள் அனைத்தின் வழியாகத் திரு அவை காயம்பட்டவர்களோடு உடனிருத்தல், மனம் வருந்துவோரை மன்னித்தல், துன்புறுவோருக்காகக் குரல் கொடுத்தல் ஆகியவற்றை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும் என விரும்பினார். இரக்கம் என்பது வெறும் உணர்வு அல்ல; மாறாக, பரிவுள்ளம் கொண்ட கிறிஸ்துவை உடைந்துபோன உலகிற்குத் தருகிற செயல் என்பது திருத்தந்தையின் புரிதல்.

இரக்கம் நிறைந்து தேர்ந்துகொள்ளுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆயர் பணி விருதுவாக்குஇரக்கம் நிறைந்து வரவேற்று தேர்ந்துகொண்டு (இலத்தீன் மொழியில், ‘மிஸெ ரெந்தோ ஆத்குவே எலிஜெந்தோ) என்பதாகும். திருத்தூதரும் நற்செய்தியாளருமான புனித மத்தேயுவின் அழைப்பை மையப்படுத்திய பீட் அவர்களுடைய சிந்தனை வரிகளிலிருந்து இந்த விருதுவாக்கை எடுத்துள்ளார் திருத்தந்தை. ஆண்டவருடைய இரக்கத்தைப் பெற்ற ஒருவர், அதை மற்றவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது இந்த விருதுவாக்கின் அழைப்பாக இருக்கிறது. “ஆண்டவர் நம்மேல் இரக்கம் காட்டுவதில் சோர்ந்துபோவதில்லை. நாம்தான் அவருடைய இரக்கத்தைத் தேடுவதில் சோர்ந்து போகிறோம்என்கிறார் திருத்தந்தை (‘நற்செய்தியின் மகிழ்ச்சி 2013, 3).

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டும் இரக்கத்தின் தூதர்களும்

இரக்கத்துக்கான சிறப்பு யூபிலி ஆண்டை (2015-2016) அறிவித்த திருத்தந்தை பிரான்சிஸ், அதற்கான அறிவிப்பு ஆணையில் - ‘இரக்கத்தின் முகம் (‘மிஸரிகோர்தியே வுல்துஸ்,’ 2015), “இயேசு கிறிஸ்துவைத் தந்தையுடைய இரக்கத்தின் வாழ்கிற முகம்என்று மொழிந்தார். உலகில் உள்ள அனைத்து மறைமாவட்ட முதன்மை ஆலயங்களிலும் யூபிலி கதவுகள் திறக்கப்பட வேண்டும் என்று அறிவித்த திருத்தந்தை, அனைவரும் கடவுளின் இரக்கத்தை உணர்ந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

மேலும், கடவுளுடைய இரக்கத்தின் அடையாளங்களாகத் திகழுமாறு ஏறக்குறைய 800 இரக்கத்தின் தூதர்களை நியமித்து, உலகமெங்கும் அவர்களை அனுப்பினார். திருத்தூதுப் பீடம் மட்டுமே மன்னிக்கக்கூடிய பாவங்கள் சிலவற்றை மன்னிப்பதற்கான அனுமதியை அவர்களுக்கு வழங்கியதோடு, இரக்கம் பற்றிய சிறப்பான மறையுரைகளை ஆற்றவும், ஒப்புரவு அருளடையாளம் வழியாக அனைவரும் இறை இரக்கத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர்கள் கற்பிக்கவும் வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

எழுத்துகளிலும் பணியிலும்இரக்கம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடைய எழுத்துகளிலும் உரைகளிலும் இரக்கம் மையமாக இருந்ததோடு, இரக்கமே அவற்றின் வடிவமாகவும் இருந்தது. ‘நற்செய்தியின் மகிழ்ச்சி (2013) என்னும் திருத்தூது ஊக்கவுரை வழியாக, “திரு அவை காயம்பட்டவர்களோடும் அழுக்கானவர்களோடும் உடன் நிற்க வேண்டும் (எண் 49) என்று அழைத்தார். நல்ல சமாரியன் (லூக் 10) உவமையின் பின்புலத்தில் வரையப்பட்டஅனைவரும் உடன்பிறந்தோர் (‘ஃப்ரதெல்லி தூத்தி,’ 2020) என்னும் சுற்றுமடல் அனைவரோடும் பாராட்டப்பட வேண்டிய சகோதரத்துவத்தை எடுத்துரைப்பதுடன், இரக்கம் ஒன்றே அமைதிக்கு வழிவகுக்கும் என்ற செய்தியையும் தருகிறது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைப் பொருத்தமட்டில் இரக்கம் என்பதே நற்செய்தியின் அடிப்படையும் சாரமும் ஆகும்.  “அவர் நம்மேல் அன்புகூர்ந்தார் (‘திலெக்ஷட் நோஸ், 2024) என்னும் சுற்றுமடல், இயேசுவின் திரு இதயத்தில் பொங்கி வழியும் இரக்கத்தை நோக்கி நம் கண்களைத் திருப்புகிறது.

நீதியில் கனியும் இரக்கம்: வலுவற்றோர் பாதுகாப்பு

இரக்கமும் நீதியும் இணைந்தே செல்கின்றன என்பது திருத்தந்தையின் புரிதல். ‘ஒடுக்கப்படுவோர்மேல் இரக்கம்என்று திருத்தந்தை போதிக்கும் போது, ஒடுக்குபவர்கள் நீதியுடன் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் துணிவுடன் எடுத்துரைத்தார். புலம்பெயர்ந்தோர், வறியோர், போர் மற்றும் ஆள் கடத்தலால் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தைகள், வலுவற்ற பெரியவர்கள் ஆகியோருடைய மாண்புக்கும் தன்மதிப்புக்கும் எதிராக இழைக்கப்படும் அனைத்துக் குற்றங்களும் நீதியோடு தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் திருத்தந்தை உறுதியாக இருந்தார். சிறார் பாதுகாப்புக்கான ஆணைக்குழு அமைத்தார். ‘நீங்கள் உலகுக்கு ஒளியாக இருக்கிறீர்கள் (‘வோஸ் எஸ்திஸ் லுக்ஸ் முன்ந்தி) என்னும் ஆணை வழியாக (2019, 2023) சிறாருக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களுக்கான தண்டனையை உறுதி செய்யுமாறு திரு அவைச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்தார். இரக்கம் என்பது அனைவருக்கும் உரியது என்றாலும், இரக்கத்தின் வழியாகக் குற்றவாளிகள் தப்பிக்கக் கூடாது என்பதிலும் திருத்தந்தை உறுதியாக இருந்தார்.

வறியோர்களுக்கான உலக நாள்

ஆண்டின் பொதுக்காலம் 33-ஆம் ஞாயிறைவறியோர்க்கான உலக நாள்என்று கொண்டாட அழைப்பு விடுத்த திருத்தந்தை (2017), ‘இரக்கத்தின் வழியாகவே நீதியான சமூகம் மலரும்என்று அறிவித்தார். மேலும், புலம்பெயர்ந்தோர் மேலும் வறியோர் மேலும் காட்டுகிற இரக்கம் நாம் அவர்களுக்குச் செய்யும் பிறரன்புப் பணி அல்ல; மாறாக, அவர்களுக்கு நாம் வழங்கும் நீதி என்றும் எடுத்துரைத்தார். லாம்பேதுஸா கடற்கரையில் புலம்பெயர்ந்தோருக்காக அவர் செலுத்திய அஞ்சலி (2013), வங்கதேச நாட்டில் ரோகிங்கியாவிலிருந்து புலம்பெயர்ந்தோர்கள் சந்திப்பு ஆகியவற்றின் வழியாக (2017), ‘வறியவர்களின் கண்ணீர் நம் அனைவருடைய கண்ணீராக மாற வேண்டும்என்றார்.

காயம்பட்ட உலகிற்குக் கட்டுப்போடும் கனிவிரக்கம்

மூன்றாம் உலகப் போர் சிறிய அளவில் பல இடங்களில் நடந்துகொண்டிருக்கிறது என்று அடிக்கடி மொழிந்த திருத்தந்தை உக்ரைன், காசா, சிரியா, சூடான் ஆகிய இடங்களில் நடைபெறுகிற போர்களுக்கு எதிரான சமயத் தலைவரின் குரலாக அல்லாமல், ஒருவர் மற்றவரை அழிக்கத் துடிக்கும் மானுடத்தின் மனச்சான்றாக நின்றார். போர்கள் ஏற்படுத்தும் துன்பம், கண்ணீர், இழப்பு, இறப்பு ஆகியவற்றை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், ஆயுத வியாபாரத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தார். போர்களால் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காகக் கண்ணீர் வடித்தார். திருத்தந்தை காட்டுகிற கனிவிரக்கம் அவருடைய இயலாமையில் எழுந்த உணர்வு அல்ல; மாறாக, அது ஓர் இறைவாக்கினருக்குரிய செயல்.

இரக்கம் நம் வாழ்வாக!

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி, அவர் விடுத்த இரக்கத்தின் அழைப்புக்குச் செவிகொடுத்து அதற்கு வாழ்வு தருவதே. நம் குடும்பங்களிலும் பணித்தளங்களிலும் சமூக உறவுகளிலும் கொஞ்சம் அதிகமாக இரக்கம் காட்டுவதே திருத்தந்தை நமக்கு விடுக்கிற அழைப்பு. நாம் கட்டுகிற பெரிய ஆலயங்களும், நாம் நடத்துகிற பெருநிறுவனங்களும் அல்ல; மாறாக, நாம் எளியோருக்குக் காட்டுகிற சின்னஞ்சிறு இரக்கச் செயல்களே நாம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கிறோம், அறிவிக்கிறோம் என்பதற்கான சான்றுகளாக அமைகின்றன. இரக்கத்தின் தூதராக நம் நடுவில் வலம் வந்த திருத்தந்தை பிரான்சிஸ் நம் அனைவரையும் இரக்கத்தின் தூதர்களாக அனுப்புகிறார்!

news
சிறப்புக்கட்டுரை
படைப்புகளின் பங்காளி பிரான்சிஸ்!

சுமார் 800 வருடங்களுக்கு முன் புனித பிரான்சிஸ் அசிசியார் ஒரு மாபெரும் அபாயச் சங்கை ஊதிச்சென்றார். அதுஇயற்கை-மனிதன் உறவில்ஏற்பட்டிருந்த சறுக்கலைப் பற்றியது; இயற்கைக்கு எதிராக மனிதன் செய்து கொண்டிருந்த செயல்பாடுகளைப் பற்றியது; மனித இனத்தின் அழிவைப் பற்றியது. இப்பேராபத்திலிருந்து மனிதன் தப்பிக்க வேண்டும் என்றால், அவனுடையமனிதச் செயல்பாடுகளில்ஒரு மாபெரும் மாற்றம் தேவை என்று புனித பிரான்சிஸ் சுட்டிக்காட்டினார்.

மனித வாழ்வு அடிப்படையில் நான்கு உறவுகளைச் சீராக வைத்துக்கொள்வதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். இவை நான்குமே ஒன்றாகச் சமநிலையில் பயணிக்க வேண்டியவை. ஒரு நிலையில் விரிசல் ஏற்பட்டாலும், மற்ற நிலைகளையும் சரித்துவிடும் அபாயம் உள்ளது. புனித பிரான்சிஸ் அந்த நான்கு உறவுகளையும் நமக்கு அடையாளம் காட்டுகிறார்:

1. என்னோடு நான் கொண்டுள்ள உறவு

2. நான் கடவுளோடு கொண்டுள்ள உறவு

3. நான் அயலாரோடு கொண்டுள்ள உறவு

4. நான் படைப்போடு கொண்டுள்ள உறவு

தொடக்கத்தில் ஏதேன் தோட்டத்தில் கடவுளுக்குக் கீழ்ப்படியாத காரணத்தால்தான் கடவுளோடு கொண்டிருந்த உறவை மனிதன் முறித்துவிட்டான். அதன் விளைவாக மற்ற மூன்று நிலைகளில் உள்ள உறவையும் மனிதன் முறித்துக் கொள்கிறான். இந்த அவல நிலையைப் புனித பிரான்சிஸ் அசிசியார் நிவர்த்தி செய்யும் முயற்சியில், அதே நான்கு உறவுகளையும் சீராக அமைத்துக்கொள்வதன் மூலம், மீண்டும் கடவுள் நம்மைத் தூக்கி எறிந்த ஏதேன் தோட்டத்திற்கு நாம் திரும்பிவிடலாம் எனும் மாபெரும் நற்செய்தியைத் திரு அவைக்குக் கொடுத்துச் சென்றார். ஆனால், திரு அவையில் பெரிய மாற்றம் வந்தது போல வரலாறு நமக்குக் கூறவில்லை. எதிர்பாராத விதமாக, 800 வருடங்கள் அந்த நான்கு உறவுகளில் மனிதன் என்னென்ன அழிவுகளை உருவாக்க முடியுமோ அவற்றையெல்லாம் செய்து முடித்தான். திரு அவையும் புனித அசிசியார் காட்டிய பாதையில் நடக்க மறந்திருக்கிறது.

அதன் காரணமாக, புனித பிரான்சிஸ் அசிசியாரே மீண்டும்திருத்தந்தை பிரான்சிஸ்எனும் அவதாரத்தை எடுத்து, மார்ச் மாதம் 13-ஆம் நாள் 2013-ஆம் ஆண்டு இப்புவியில் அவதரித்தார் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. அவதாரம் எடுத்த இரண்டு ஆண்டுகளில் 2015, மே 24 அன்று திரு அவையின் வரலாற்றில் முதன்முறையாக ஒரு முழுமையான திருத்தூது மடலைத் தந்திருக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்þ. மொத்தம் 246 பத்திகளைக் கொண்டதுlaudato siஎன்னும் இம்மடல். தமிழில்புகழ் அனைத்தும் உமதேஎன்னும் மொழிபெயர்ப்பு சிறப்பாக இருக்கிறது.

ஏறக்குறைய 2014 ஆண்டுகளாகமனித-இயற்கை உறவைபற்றிய தெளிவான சிந்தனையைக் கொடுக்காத திரு அவை, திடீரென 2015-இல்அறம் செய்ய விரும்புஎன ஒளவையார் கற்பித்தது போல, திருத்தந்தை பிரான்சிஸ் வாயிலாகபுகழ் அனைத்தும் உமதேஎன்னும் அறநூலை வெளியிட்டிருப்பது விந்தையிலும் விந்தை எனலாம். தூய ஆவியானவர் தூண்டுதல் மூலம் நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் விந்தைதானே!

2015-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் சபை பாரிஸ் மாநகரத்தில் 196 நாடுகளை உள்ளடக்கியபருவநிலை மாற்றம் உச்சி மாநாடுஒன்றை நடத்தத் தயாரித்துக் கொண்டிருந்தது. அதன் காரணமாக, திருத்தந்தை பிரான்சிஸ் ஆறு மாதங்களுக்கு முன்பேபுகழனைத்தும் உமதேஎன்னும் சூழல் பாதுகாப்பு அறநூலை வெளியிட்டிருப்பது உண்மையிலேயே ஆவியானவரின் தூண்டுதல் அல்லது புனித பிரான்சிஸ் அசிசியாரின் தூண்டுதல் என்றுதான் கூற வேண்டியிருக்கிறது.

உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் திருத்தந்தை பிரான்சிஸ் எழுதிய நூலைப் படித்து, அதில் கூறப்பட்டிருக்கிற நான்கு உறவுகளும் சம நிலையில் பயணிக்க வேண்டும் என்றால், மனிதச் செயல்பாடுகளில் (Human Activity) ஒரு மாபெரும் மாற்றம் தேவை எனும் நற்செய்தியைப் பகிர்ந்து கொண்டு உலக நாடுகள் தரமான முடிவுகளை எடுத்து இப்புவியைப் பராமரிக்க முடிவு செய்துள்ளனர்.

பாரிஸ் மாநகரில்cop-21’ என்று அழைக்கப்படும் உலக நாடுகள், உலக மதங்கள், உலக மக்கள், உலகப் பொருளாதாரம், உலக விஞ்ஞானத் தொழில்நுட்பம் போன்றவை cop-21 -இல் எடுக்கப்பட்ட தீர்மானங்களைக் கடந்த பத்து வருடங்களாகச் செயல்படுத்தி, அதில் வெற்றியையும் கண்டிருக்கிறார்கள் என்றால், அது திருத்தந்தை பிரான்சிஸ் இப்புவி மேல் காட்டிய அக்கறை என்றுதான் கூற வேண்டியிருக்கிறது. மீண்டும் திருத்தந்தை பிரான்சிஸ் 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4-ஆம் தேதிLaudato Deumஎன்னும் இரண்டாவது சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பற்றிய மடலை உலக மக்களுக்கு வழங்கியுள்ளார். ‘புகழ் அனைத்தும் இறைவனுக்கேஎன்னும் இந்த மடல் மொத்தம் 72 பத்திகளை உள்ளடக்கிய ஓர் அறநூல் எனலாம்.

2023, டிசம்பர் மாதத்தில் மீண்டும் ஓர் ஐக்கிய நாடுகள் சபை பருவநிலை மாற்ற உச்சி மாநாடு துபாயில் நடக்கப்போவதை முன்னிட்டு, ஏழு மாதங்களுக்கு முன்னமே இந்தச் சுற்றுச்சூழல் பராமரிப்பு மடலை வெளியிட்டிருப்பது நாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய ஒன்று. இந்த மடலில் கூறப்பட்ட அறிவுரைகள் உலக நாட்டுத் தலைவர்களுக்குச் சென்று சேரவேண்டிய அவசியத்தில்cop-28’  என்று அழைக்கப்படும் துபாய் மாநாட்டில் மிகச் சிறப்பான விதத்தில் பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களை முன்னெடுக்க இச்செயல் முக்கியமான செயலாக்கத்  திட்டங்களையும் தீர்மானங்களையும் எடுத்துமனிதச் செயல்பாடுகளில் (human activity) ஒரு மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தவை.

2019-ஆம் ஆண்டுபுனித பிரான்சிஸ் பொருளாதாரக் கொள்கைகள் (Economy of Francis) எனும் திட்டத்தைத் திருத்தந்தை பிரான்சிஸ் சுற்றுச் சூழல் பாதுகாப்பு முயற்சியில் கொண்டு வந்துள்ளார். இது சுமார் 11 வாரியங்களை உள்ளடக்கியது. புனித பிரான்சிஸ் அசிசியார் காட்டிய நான்கு உறவுகளின் வெளிப்பாடாக வந்த ஆன்மிகத்தை மையமாகக் கொண்டவை. அந்த 11 வாரியங்களில் ஒரு சில உதாரணங்களாக இதோ:

இயற்கை சக்தி உற்பத்தி

மழைநீர் சேகரிப்பு

கரிம மாசு அற்ற போக்குவரத்து

பசுமை உற்பத்தி

சூழல் அமைப்புகளின் பராமரிப்பு

குப்பை இல்லா உருவாக்கம்

மறுசுழற்சி, மீள் பயன்பாடு (Recycle, re-use)

சுற்றுச்சூழல் கல்வி

சுற்றுச்சூழல் ஆன்மிகம்

சுற்றுச்சூழல் வாழ்வுமுறை

இயற்கை விவசாயம்

இன்று உலகளாவிய அளவில் கிறித்தவ சமயம் இயற்கைப் பராமரிப்புத் திட்டங்களைச் செல்வனே செய்து கொண்டிருக்கின்றது என்றால், அது திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்துக் கொண்ட முயற்சி எனலாம்.

2015-ஆம் ஆண்டுபுகழனைத்தும் உமதேஎன்ற மடல் மூலம் சுமார் 200 கோடி கிறித்தவ மக்களை இப்புவியின் பாதுகாப்புஅக்கறையில்திருப்பிவிட்டவர் திருத்தந்தை பிரான்சிஸ். 2023- ஆம் ஆண்டில் தனதுபுகழனைத்தும் இறைவனுக்கேஎனும் இரண்டாவது சூழல் எழுத்து மடல் மூலம் ஏறக்குறைய 800 கோடி மக்களையும் இப்புவியைப் பாதுகாக்கும் மாமனிதர்களாக மாற்றியவரும் திருத்தந்தை பிரான்சிஸ் ஆவார்.

இறுதியாக, 2019-ஆம் ஆண்டுபுனித பிரான்சிஸ் அசிசியாரின் பொருளாதாரம்எனும் திட்டத்தின் கீழ்படைப்பில் உள்ள ஒட்டுமொத்த உயிரற்ற பஞ்சபூதங்கள், உயிருள்ளவை எனும் நுண்ணுயிரிகள் முதல் மனிதன் வரை கடவுள் உருவாக்கி, அவற்றை நல்லதெனக் கண்டார். அவற்றைக் கடவுள் எவ்வாறு அன்பு செய்கிறாரோ அதைப்போல மனிதனும் அவற்றை நல்லதெனக் காண வேண்டும்; அன்பு செய்ய வேண்டும்எனும் நற்செய்தியை வழங்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைபடைப்பின் பங்காளிஎன்று அழைப்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும்!

 

news
சிறப்புக்கட்டுரை
திருத்தந்தை பிரான்சிஸின் எழுச்சி: திரு அவையில் பெண்களுக்கு மறுமலர்ச்சி

பொதுவாக சமுதாயத்தில் பெண்கள் அடைந்த முன்னேற்றத்தில் பாதியாவது திரு அவையில் உள்ளதா? என்ற கேள்விக்கு, திரு அவை பெண்களுக்கு முன்னுரிமை வழங்குவதில் எதிர்பார்க்கும் அளவில் பெண்களின் பிரதிநிதித்துவம் சொல்லக்கூடிய அளவில் இல்லை என்பதுதான் நிதர்சனம்! எங்குப் பார்த்தாலும் பெண்கள் தங்கள் இருப்பை உறுதி செய்யக் கடின உழைப்பும் முயற்சியும் தேவைப்படுகிறது. 2024-ஆம் ஆண்டில் பெண் பிள்ளைகளைப் பீடச்சிறுமிகளாக நியமித்த பங்குகளும் உண்டு. ஆனால், திரு அவையில் பெண்களின் நிலையை உயர்த்திச் சாதனை செய்தது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மட்டுமே என்று கூறினால் அது மிகையாகாது. திரு அவையில் பல சீர்திருத்தங்களைச் செய்த நம் திருத்தந்தை எவ்வித பயமோ, நெருடலோ இன்றி காலத்தின் அறிகுறிகளை அறிந்து செயல்பட்டவர்.

பெண்களுக்குத் திரு அவையின் முடிவெடுக்கும் தளங்களிலும், தலைமைப் பொறுப்புகளிலும் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் கூட அவர்களுக்கு மறுக்கப்பட்டது - திருத்தந்தை பிரான்சிஸ் திரு அவையின் தலைவராவதற்கு முன்னால்! கத்தோலிக்கத் திரு அவை என்றாலே அது ஆண்கள்தான் என்ற நிலையை மாற்றியவரும், பெண்கள் உலகில் இரண்டாம் நிலை குடிமக்களாகவே நடத்தப்படுகிறார்கள் என்ற பொதுவான கூற்றையும் உடைத்து, தன் 12 வருடகாலத் திரு அவையின் தலைவர் என்ற பொறுப்பிலிருந்து பெண்களையும் திரு அவையின் முடிவெடுக்கும் தளங்களில் பொறுப்பாளர்களாக நியமித்தவர் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை பிரான்சிஸ் துறவற சபைத் தலைவர்களைச் சந்தித்தபோதுபெண்களின் நுண்ணறிவு திரு அவை மற்றும் சமுதாயத்தின் அனைத்து வெளிப்பாடுகளிலும் இன்றியமையாததுஎன்று குறிப்பிட்டார் (இந்திய ஆயர் பேரவையின் தலித் கொள்கை வரைவு 98N VII m).

கூட்டொருங்கியக்கத் திரு அவையின் பயணத்தில் பெண்களின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது என்பதைத் தேர்ந்து தெளிந்து பெண்களுக்கான உரிமைகளையும் இடத்தையும் கொடுத்தவர். பல நூற்றாண்டுகளாக அருள்பணியாளர்கள், ஆயர்கள், கர்தினால்கள் மட்டுமே பங்கேற்று வந்த  திரு அவையின்  கட்டமைக்கப்பட்ட பெரும்பான்மைப் படிநிலைக் குருத்துவத்தைக் கண்டித்தார். அன்னை  மரியாவிற்குத் திரு அவை அளிக்கும் முக்கியத்துவத்தைத் திரு அவையில் பெண்களும் பெற வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார்.

பாதம் கழுவுதல் சடங்கு என்றாலே ஆண்கள்தான் என்ற பாரம்பரியச் சடங்கை மாற்றி 2015-ஆம் ஆண்டு முதல் பெண்கள், நோயாளிகள், சிறையிலிருப்போர் என எல்லா மக்களையும் பொதுக் குருத்துவத்தில் இணைத்து, ‘திரு அவை அனைவருக்குமானதுஎன்ற நிலையை மீண்டும் மீண்டும் உறுதி செய்தார். 2024 -ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28-ஆம் நாள் பெரிய வியாழன் அன்று சிறையில் இருந்த பெண்களுக்குப் பாதம் கழுவி முற்போக்குவாதப் பாரம்பரியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால், திருத்தந்தையின் இந்த உன்னதமான செயல் இன்னும் பல பங்குகளில் இன்றும் செயல்படுத்தப்படவில்லை என்பது வேதனையளிக்கிறது.

திரு அவையில் பெண்கள்...

திரு அவையில் நிகழும் பல்வேறு விழாக்கள் மற்றும் கூட்டங்களில் ஆயர்கள், அருள்பணியாளர்களுக்கு மட்டுமே சிறப்பு இருக்கைகள் தரப்பட்டிருக்கும். அவ்வப்போது மற்ற ஆண்களுக்கும் அந்த வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், அருள்சகோதரிகளும் பெண்களும் இதில் தீண்டத்தகாதவர்களாக அல்லது பிரதிநிதித்துவம் என்ற பெயரில் அமர்த்தப்படுவார்கள். ஆனால், 2019-ஆம் ஆண்டு உரோமில் நடைபெற்ற ஆறு இலட்சம் அருள்சகோதரிகளை உறுப்பினர்களாகக் கொண்ட உலகளாவியத் தலைமைச் சகோதரிகள் சங்கப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட 850-க்கும் மேற்பட்ட அருள்சகோதரிகளைத் திருத்தந்தை பிரான்சிஸ் சந்தித்தபோது, அதன் அப்போதைய தலைவரான ஆப்பிரிக்க அன்னையின் மறைபரப்பாளர்கள் சபை அருள்சகோதரி கார்மென் சம்மூட் அவருக்கு அருகில் அமர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தலைமைத்துவத்தில் பெண்கள்...

பெண்களைப் பங்குப் பேரவைகளில் உறுப்பினராகத் தேர்ந்தெடுப்பதையே விரும்பாத பங்குகள் இருந்தாலும், திரு அவையின் தலைவராகத் திருத்தந்தை பிரான்சிஸின் முற்போக்குச் சிந்தனைகளை அவரின் செயலாக்கத்தை வரலாறு ஒருபோதும் மறந்து விடக்கூடாது. ஆயர் பேரவைகளிலும் தலத் திரு அவைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக இருந்தாலும், வத்திக்கானின் உயர் பதவிகளுக்குப் பெண்களை நியமிப்பதற்குத் திருத்தந்தை பிரான்சிஸ் முன்னுரிமை அளித்தது பாலினச் சமத்துவத்தையும் சமூக மாற்றத்தையும் விரும்பிய மாமனிதர் என்றே  உணர்த்துகிறது.

2016-ஆம் ஆண்டில் வத்திக்கான் அருங்காட்சியகங்களின் முதல் பெண் இயக்குநராக பார்பரா ஜட்டாவை நியமித்தார் நம் திருத்தந்தை.

பிப்ரவரி 2021-இல் திருத்தந்தை பிரான்சிஸ் வத்திக்கானின் ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச் செயலகத்தின் இரண்டு துணைச் செயலர்களில் ஒருவராக அருள்சகோதரி சிவேரியன் நத்தலி பெக்கார்ட்டை நியமித்து, கத்தோலிக்கத் திரு அவையில் அதிர்வலைகளை ஏற்படுத்தினார். 1965 -ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அலுவலகம், உரோமில் மாமன்றங்களை ஏற்பாடு செய்கிறது. மேலும், பெக்கார்ட் மாமன்றங்களில் வாக்களிக்க முடியும் என்ற பேச்சும் இருந்தது.

2022-ஆம் ஆண்டில் அமைதி மற்றும் நீதி பிரச்சினைகளைக் கையாளும் வத்திக்கானின் மேம்பாட்டு அலுவலகத்தில் சகோதரி அலெக்ஸாண்ட்ரா ஸ்மெரிலியை இரண்டாவது அதிகாரியாகத் திருத்தந்தை பிரான்சிஸ் நியமித்தார்.

2022-ஆம் ஆண்டில் உரோமைத் தலைமைச் செயலகம் (Roman Curia) பெண்கள் மற்றும் பொது நிலையினர் வழிநடத்த அனுமதிக்கும் வகையில் வத்திக்கானின் அரசியலமைப்பைத் திருத்தந்தை பிரான்சிஸ் மாற்றியமைத்தார். ஜனவரி 6, 2025 அன்று கன்சோலாதா மறைபரப்பாளர்கள் சபை அருள்சகோதரி சிமோனா பிராம்பில்லாவை அர்ப்பண வாழ்வு நிறுவனங்கள் மற்றும் திருத்தூதர் சார் வாழ்வு சங்கங்களுக்கான வத்திக்கான் பேராய முதல்வராகத் திருத்தந்தை பிரான்சிஸ் நியமித்தார். கத்தோலிக்கத் திரு அவையில் முதல் முறையாகப் பெண்கள் துறவற அவைகளை ஒரு பெண் மேற்பார்வையிடும் நிலைக்கு உயர்த்தியிருக்கிறார்.

நற்கருணையின் பிரான்சிஸ்கன் சகோதரிகள் சபை அருள்சகோதரி இரஃபேல்லா பெட்ரினி, வத்திக்கான் நகர மாநில ஆளுநரகத்தின் முதல் பெண் தலைவராக மார்ச் 1, 2025 அன்று பதவியேற்றார். அவர் கர்தினால் பெர்னாண்டோ வெர்கெஸ் அல்சாகாவிற்கு அடுத்து பதவியேற்றார். அவர் நிர்வாகம், பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் கலாச்சாரப் பாரம்பரிய மேலாண்மை உள்ளிட்ட நிர்வாகத்தை மேற்பார்வையிடுகிறார்.

அதோடு மட்டும் நின்றுவிடாமல், இறைவனின் தாயான அன்னை மரியாவைத் தன் வாழ்விலும் தாயாக ஏற்று அவரை அன்பு செய்த திருத்தந்தை பிரான்சிஸ்  திரு அவையின் அனைத்துத் திருத்தந்தையரும் புனித பேதுருவின் ஆலயத்திற்குள்தான் புதைக்கப்படுவர் என்ற மரபை மாற்றி, தன்னை எளிமையான முறையில் அடக்கம் செய்ய வேண்டுமெனவும், அதுவும் உரோமில் உள்ள தான் எப்போதும் செபம் செய்யும் பெரிய நாயகி மாதா பசிலிக்காவில்தான் தன்னைப் புதைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அன்பில், இரக்கத்தில், புன்னகையில், நீதியில், எளிமையில் அயலாரை நேசித்த, பெண்களை மாண்புடன் நடத்தி, எளிமையை ஊன்றுகோலாய் ஏந்தி நின்ற திரு அவையின் அன்புத் தந்தையின் ஆன்மா மூவொரு இறைவனில் இளைப்பாறட்டும்!

 

news
சிறப்புக்கட்டுரை
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருவழிபாட்டு மாற்றங்கள்

திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களில் புதிய மாற்றங்களை உருவாக்கிய திருத்தந்தை பிரான்சிஸ், திரு அவையின் வாழ்விலும் பணியிலும் பல்வேறு மாற்றங்களை முன்னெடுத்தார். அதாவது, திரு அவையின் உலகப் போக்கு குறைய வேண்டும் என்பதில் கருத்தாய் இருந்த திருத்தந்தை, கோவிட்19-இன் காலகட்டத்தில் உலகில் வாழும் மக்கள் தனிமைப்படுத்தப்படவும் மற்றவரைச் சந்திக்கக்கூடாது என்னும் காலகட்டத்திலும் கிறித்தவ மக்கள் தங்களது திருவழிபாட்டின் உண்மை அழகை மீண்டும் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்த அக்கறையுடன் செயல்பட்டார்.

திருவழிபாட்டில் மாற்றங்கள்

திரு அவையின் வாழ்விற்கு அடிப்படையானது நற்கருணைக் கொண்டாட்டம். அதுவே கிறித்தவ வாழ்வின் ஊற்றும் சிகரமுமாக உள்ளது என்கிறது இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம். அத்தகைய மேன்மை நிறைந்த திருப்பலிக் கொண்டாட்டத்தின் நற்கருணை மன்றாட்டில் அன்னை மரியாவின் பெயருக்குப் பின் புனித யோசேப்பின் பெயர் இடம்பெற 2013, மே 1 அன்று சிறப்பு ஆணை பிறப்பித்தவர் திருத்தந்தை பிரான்சிஸ். கத்தோலிக்கத் திரு அவை இன்றும் ஒவ்வொரு திருப்பலியிலும் புனித யோசேப்பை நினைவுகூர்ந்து இறைவேண்டல் செய்வது குறிப்பிடத்தக்கது.

தந்தையின் இதயத்தோடுஎன்னும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மடலில் (2020) புனித யோசேப்பின் சிறப்புப் பண்புகளைக் கத்தோலிக்க நம்பிக்கையாளர் அனைவரும் உணர்ந்துகொள்ளும் வகையில் விவரித்துள்ளார். குறிப்பாக, அன்பான, கனிவான, கீழ்ப்படிதலுள்ள, ஏற்றுக்கொள்ளும், துணிவுள்ள, படைப்பாற்றல்மிக்க, கடினமாக உழைக்கக்கூடிய, மறைந்திருந்து செயல்பட்ட தந்தையாகவும், அன்னை மரியாவுக்கு நல்ல கணவராகவும், ஆண்டவர் இயேசுவுக்கு நல்ல தந்தையாகவும் இருந்தார் என்பதையும் உலகளாவியத் திரு அவையின் பாதுகாவலர் புனித யோசேப்பு எனவும் அறிவித்தார். அதோடு 2020-ஆம் ஆண்டு டிசம்பர் 8 முதல் 2021 டிசம்பர் 8 வரைபுனித யோசேப்பின் ஆண்டுஎனத் திரு அவையில் அறிவித்து புனித யோசேப்பின் மனநிலையை நம்பிக்கையாளர் அனைவரும் கற்றுக்கொள்ள, கடைப்பிடிக்க, வாழ்ந்துகாட்ட வலியுறுத்தினார்.

உறங்கும் நிலை புனித யோசேப்பின் பக்தியைப் பரவச் செய்தவர். நற்செய்திகளின் பின்னணியில் கடவுளின் தூதர் புனித யோசேப்புடன் கனவின் மூலம் பல்வேறு வகையான உரையாடல்களை மேற்கொண்டார். இவைகளின் மூலம் கடவுள் கவனித்துக்கொள்வார், கடவுளின் உடனிருப்பு உண்டு எனவும், கடவுளின் திட்டத்தை ஏற்றுக் கொள்ளும் மனநிலையை உருவாக்கிக் கொள்ளவும் இந்தப் பக்தி முயற்சி துணைபுரியும் என்பதைத் தனது வாழ்வில் கடைப்பிடித்து நம்பிக்கையாளர் அனைவரும் கற்றுத் தந்துள்ளார்.

கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் உண்மையான கத்தோலிக்க நம்பிக்கையை வளர்க்கவும் அர்த்தம் தேடும் வழிபாடாக நமது வழிபாடு அமையச் சிறந்த வகையில் அருகிலிருந்து அக்கறை காட்டும் கலாச்சாரத்தை உருவாக்குவதில் ஆர்வம் காட்டினார். உலகம் பல்வேறு நிலைகளில் துன்பத்திற்கு உள்ளான நிலையில் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் தங்களது அடிப்படையான நம்பிக்கையை இழந்து விடக்கூடாது என்பதில் கருத்துடன் செயல்பட்டார்.

பெரிய வியாழன் அன்று கத்தோலிக்கத் திரு அவையில் இடம்பெறும் பாதம் கழுவும் சடங்குகளில் மாற்றத்தை வலியுறுத்தினார். 2016-ஆம் ஆண்டு சனவரி மாதம் பாதம் கழுவும் சடங்குகளில் பெண்களும் பங்கேற்கலாம் என்னும் மாற்றத்தை நடைமுறைப்படுத்தியவர். மேலும், பெண்களின் பணியும் வாழ்வும் திரு அவையின் செயல்பாடுகளில் முதன்மை பெற வேண்டும் என்பதில் அதிக அக்கறையும் கவனமும் செலுத்தியவர்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2021-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி வெளியிட்டTraditionis Custodesஎன்னும் ஆவணத்தில் பாரம்பரிய இலத்தீன் திருப்பலியின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் புதிய திருப்பலி முறையே திரு அவையின் வழிபாட்டு முறையில் ஒற்றுமையை உருவாக்கவும், அதனை வலுப்படுத்தவும் சிறந்தது என்பதை வலியுறுத்தினார்கத்தோலிக்கத் திரு அவையின் செயல்பாடுகளில் இலத்தீன் மொழி சிறந்த இடம் வகிக்கிறது. இருப்பினும், பல்வேறு அமைப்புகள் மீண்டும் கத்தோலிக்கத் திரு அவையின் வழிபாடுகள் இலத்தீன் மொழியிலேயே நடைபெற வேண்டும் என்னும் ஆர்வத்தை வெளிப்படுத்திய நிலையில், இந்த ஆவணத்தின் மூலம் நாம் இப்போது பயன்படுத்துகின்ற புதிய திருப்பலி முறையைப் பயன்படுத்தும்போதுதான் திரு அவையில் ஒற்றுமையை உருவாக்கும் வழிகள் உருவாகும் என்பதையும் வலியுறுத்தினார்.

2022-ஆம் ஆண்டுமிக மிக ஆவலாய் இருந்தேன்என்னும் திருத்தூது மடல் வழியாகக் கத்தோலிக்கத் திரு அவையின் ஆயர்கள், அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், துறவியர், நம்பிக்கையாளர் ஆகிய அனைவருக்கும் கொடுக்கப்பட வேண்டிய திருவழிபாட்டுப் பயிற்சி பற்றித் தெளிவுபடுத்துகிறார். திருவழிபாடு கிறிஸ்துவைச் சந்திக்கும் இடம் எனவும், திருவழிபாடுதான் உலகுசார் ஆன்மிக நஞ்சுக்கு மாற்றுமருந்து எனவும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, திருவழிபாட்டு உருவாக்கமும் திருவழிபாட்டின் வழியாக உருவாக்கம் பெறுவதும் அவசியத் தேவை என்பதை அனைவரும் அறிந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார். திருப்பலியும் அருளடையாளக் கொண்டாடங்களும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைச் சந்திப்பதற்கான வாய்ப்பு.

உலகம் அறிவுணர்வு என்னும் நச்சுத்தன்மையால் மயக்குகிறது; அங்கே கடவுளும் இல்லை, அடுத்தவரும் இல்லை. இத்தகைய நிலையிலிருந்து மாற்றம் பெற்று இறைவனுக்கே முதலிடம் தரவேண்டும்; அவரிடம் மன்றாடுவதே நமது முதல் கடமையாகும். இறைவன் தமது சொந்த வாழ்வை நம்மோடு பகிர்ந்துகொள்ளும் இறை ஒன்றிப்பின் முதல் ஊற்று திருவழிபாடு; அதுவே ஆன்மிக வாழ்வின் முதல் பள்ளிஎன்பதை அடிக்கோடிட்டுக் காட்டியவர்.

நற்செய்தி அறிவிப்பில்லாத ஒரு கொண்டாட்டம் உண்மையானதல்ல; அதேபோல நற்கருணைக் கொண்டாட்டத்தில் உயிர்த்த ஆண்டவரைச் சந்திப்பதற்கு வழிவகுக்காத அறிவிப்பும் உண்மையானதல்ல என்னும் உண்மையை ஒவ்வொரு வழிபாட்டுக் கொண்டாட்டமும் உணர்த்துகிறது என்ற உண்மையை உரக்கக் கூறியவர்.

வழிபாடு வெறும் விதிமுறைகளின் இயங்கு தளமாகவோ, கற்பனையான விதிமுறைகளின் படைப்பாற்றலாகவோ குறைத்து மதிப்பிடுவது அல்ல; ஒவ்வொரு கொண்டாட்டதிற்கும் தேவையான கொண்டாட்டத்திற்குரிய கலை தேவைப்படுகிறது. மறையுண்மைகளைத் திருமுழுக்குப் பெற்ற ஒரு நபரே அனுபவிக்க முடியும். ஒவ்வொரு கொண்டாட்டத்திலும் தூய ஆவியார் செயல்படுகிறார் என்பதை உணர அழைக்கப்படுகிறோம். கொண்டாடும் கலைக்கு எதிரானவைகளான இறுக்கமான கடுமை அல்லது எரிச்சலூட்டும் படைப்பாற்றல், ஆன்மிகமயமாக்கும் மாயவாதம் அல்லது நடைமுறைச் செயல்பாட்டுவாதம், அவசரமான சுறுசுறுப்பு அல்லது மிகைப்படுத்தப்பட்ட மந்தநிலை, அலட்சியமான கவனக்குறைவு அல்லது அதிகமான நுணுக்கம், பொங்கி வழியும் நட்பு அல்லது குருத்துவ இயலாமை என்பனக் கொண்டாடும் கலைக்கு எதிரானவைகள் எனக் குறிப்பிட்டு திருவழிபாட்டு மாற்றங்களை மையப்படுத்திய நிலையில் கவனம் செலுத்த அழைப்பு விடுத்துள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்தியுள்ள மாற்றங்கள் ஆற்றல் பெறவும், அவரது ஆன்மா இறைவனில் இளைப்பாறுதல் பெறவும் இறைவேண்டலில் இணைவோம்.