இந்நூற்றாண்டில் மனித குலம் கண்ட ஒரு மாமனிதர் திருத்தந்தை பிரான்சிஸ். இவருடைய திருமடல்கள், ஆவணங்கள், கற்பிதங்கள் பலவற்றை எடுத்தியம்பினாலும், அவற்றில் இயற்கைப் பாதுகாப்பு, மனித மாண்பு, மனித உரிமை, ஆண்-பெண் சமத்துவம், அதிகாரப் பரவலாக்கம், அனைவரும் திரு அவையில் இணைப் பொறுப்பாளர்கள், வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு, எல்லாரும் சகோதரர்கள், திருத்தூதுப் பணியின் முக்கியத்துவம், திரு அவையில் பொது நிலையினரின் மாண்பும் முக்கியத்துவமும், நற்செய்தி அறிவித்தலின் அவசியம், திரு அவை இறை மக்களின் ஒன்றிப்பின் மையம், பொருளாதார மற்றும் அறநெறி தொடர்பான முறைகேடுகள் பற்றிய தெளிவான வரையறைகள், திருமுழுக்கினால் இறை நம்பிக்கையாளர்கள் பெற்ற முப்பணிகளாகிய போதிக்கும்-புனிதப்படுத்தும்-வழிநடத்தும் பணிகளுக்கான அழைப்பு, புலம்பெயர்ந்தோரின் வாழ்வுக்கான வழிகள், இரக்கம் கலந்த நீதியில் தண்டனைகளுக்கான அவசியம், திரு அவைச் சட்டங்களில் காலத்திற்கேற்ற தேவையான சீர்திருத்தங்கள் போன்றவை தனி வெளிச்சம் பெறுகின்றன.
‘நற்செய்தியின் மகிழ்ச்சி’
(Evangelii Gaudium-2013) என்ற
மடல் இன்றைய உலகில் நற்செய்தியை அறிவிக்கும் பணியில் முழு ஆர்வத்தோடு திரு அவை ஈடுபட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. இந்தப் படிப்பினைத் தொகுப்பு 1. திரு அவை மறை அறிவிப்பில் ஈடுபடும் ஒன்றாக மாற்றம் பெறல்; 2. குழுவாக நற்செய்தி அறிவிப்பில் ஈடுபடுதல்; 3. நற்செய்தியை அறிவிக்கும் பணி செய்தல்; 4. நற்செய்தி அறிவிப்பின் சமூகக் கூறுகள்; 5. ஆவியால் நிரம்பிய நற்செய்தி அறிவிப்பாளர்கள் என ஐந்து பிரிவுகளைக்
கொண்டது. இந்தப் படிப்பினைத் தொகுப்பில் கிறித்தவர்களின் சமூகக் கடமைகளையும் அவர் எடுத்துரைக்கின்றார்.
‘இறைவா உமக்கே புகழ்’
(Laudate Si-2015) என்ற
திருமடல் சுற்றுச்சூழல் நெருக்கடியை முன்வைக்கிறது. இத்திருமடல் நவீன உலகு, ஆன்மிக விழுமியங்களின் பாதையில் செல்லவும், பொதுநலனுக்காக ஒத்துழைப்பு வழங்கும் வழிகளைத் தேடவும் அழைப்பு விடுக்கிறது. நம் பொதுவான இல்லமாகிய பூமிக்கோளத்தைப் பராமரித்தல் பற்றிய இத்திருமடல் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற அறைகூவலை விடுக்கின்றது.
‘அன்பின் மகிழ்வு’
(Amoris Laetitia-2016) என்ற
மடலின் வாயிலாக, அன்பு என்றால் என்ன? குடும்பத்தில் ஒவ்வொரு நபரின் பங்கு என்னவாக இருக்க வேண்டும்? என்பதை வரையறுக்கிறார். நமது காலத்தில் - குடும்பம் பல வழிகளில் தாக்குதலுக்கு
உள்ளாகி, குடும்பங்கள் பிளவுகளுக்கு உள்ளாகிற சூழல்கள் அதிகரித்திருக்கின்ற வேளையில், இந்த மடல் மாற்றத்திற்கான ஒரு சக்தி வாய்ந்த மருந்தாக அமைந்துள்ளது. குடும்பத்திற்கும் திரு அவைக்கும் இடையே நிலவும் உறவு பலப்படுத்தப்பட்டு, இன்றைய உலகின் சவால்களை எதிர்கொள்ள சக்தியை வழங்கும் நோக்கத்தில் ஆலோசனைகளை இம்மடல் வழங்கியுள்ளது. ஒரே பாலின இணைவு என்பது திருமணத்திற்குச் சமம் என்கிற பார்வையை நிராகரிக்கும் இம்மடல், அவர்களுக்கு மரியாதைக்குரிய வழிகாட்டுதல் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது.
‘இன்றைய உலகில் புனிதத்திற்கான அழைப்பு’ என்ற துணைத்தலைப்புடன் வெளிவந்த ‘மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் அடைந்துகொள்ளுங்கள்’ (Gaudete et exsultate-2018 -
Rejoice and Be Glad) என்ற
திருத்தந்தை பிரான்சிஸின் மூன்றாவது திருத்தூது மடல் அனைத்து இறை நம்பிக்கையாளர்களும் அவர்களின் நிலை எதுவாக இருந்தாலும், கடவுளால் ஒவ்வொருவரும் அவரவர் வழியில் தூய்மையையும்
புனிதத்தையும் அடைய அழைப்பை விடுக்கின்றது.
‘கிறிஸ்து வாழ்கிறார்’ (Christus vivit-2019)
என்ற திருத்தூது அறிவுரை மடல் அனைத்து இறைமக்கள் குறிப்பாக, இளைஞர்கள் குறித்துப் பேசுகின்றது. திருத்தந்தை இளைஞர்களுக்கு அவர்களின் ஆற்றலையும் அவர்களால் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தையும் நினைவூட்டுகின்றார். மேலும், அவர்களின் குடும்பம், சமூகம், திரு அவை மற்றும் உலகத்திற்காகத் தங்களால் இயன்றதைச் செய்ய அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்.
‘அனைவரும் சகோதரர்கள்’ (Fratelli tutti-2020) என்ற திருத்தூது மடலில் ‘சகோதரத்துவம்’ என்ற
கருத்தை வலியுறுத்துகின்றார். அதிகரித்து வரும் வறுமை, மோதல்கள் மற்றும் சுற்றுச்சூழல் நெருக்கடி உள்ளிட்ட இன்றைய அச்சுறுத்தும் சவால்களைச் சந்திக்க மனிதகுலம் ஒன்றோடொன்று இணைந்திருக்க வேண்டியதன் இன்றியமையாமையையும், கருத்தொற்றுமையில் நிலைத்திருப்பதன் தேவையையும் எடுத்துரைத்துள்ளார்.
‘ஆண்டவரின் ஆவி’
(Spiritus Domini-2021) மற்றும்
‘தொன்றுதொட்டு விளங்கும் திருப்பணி’
(Antiquum Ministerium-2021) என்ற திருத்தூது
மடல்களின் வழியாகப் பொதுநிலையினர் நிலையான வாசகர்கள், பீடத்துணைவர்கள் மற்றும் வேதியப் பணியைப் பெறுவதை உறுதிப்படுத்துகிறது. பொது நிலையினரின் பணி என்பது தற்காலத்தில் நாம் பெற்றிருக்கிற அருள் மட்டுமல்ல; மாறாக, திரு அவையின் மறைபோதகப் பணியில் மிகப்பெரும் உதவியாக இருப்பது என்பதைத் திண்ணமாகத் திரு அவைக்குத் திறம்பட எடுத்தியம்பியுள்ளார்.
உரோமைச்
செயலகத்தைக் (Roman Curia) குறித்த
‘நற்செய்தியை அறிவியுங்கள்’ (Praedicate Evagelium-2022)
என்னும் புதிய திருத்தூதுப்பீட ஆணை மடலின் வழியாக உரோமைச் செயலகத்தை மறைபரப்புப் பணியை மையமாக வைத்துச் செயல்பட அழைப்பு விடுத்தார். இம்மடல் ‘நற்செய்தி அறிவிப்பே திரு அவையின் முதன்மைப் பணி’ என்பதை வலியுறுத்துகின்றது. திருத்தந்தையின் தனிப்பட்ட பிறரன்புப் பணிகளை (Personal Charity) மறுசீரமைப்புச்
செய்தது. தற்போது அது திருத்தந்தையின் பிறரன்புப் பணிக்கான பேராயம் என மாற்றம் பெற்றுள்ளது.
உரோமைச் செயலகத்தில் எந்தத் துறையையும் பொதுநிலையினராக உள்ள எந்த ஆணோ, பெண்ணோ தலைமையேற்று வழிநடத்தலாம் எனத் திரு அவையின் கதவுகளைத் திறந்து வைத்துள்ளார்.
‘கடவுளைப் புகழ்தல்’
(Laudate Deum-2023) என்பது
நல்லெண்ணம் கொண்ட அனைத்து மக்களுக்கும், காலநிலை மாற்றப் பிரச்சினை குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதிய
ஒரு திருத்தூது அறிவுரை மடலாகும். அவரது 2015-ஆம் ஆண்டு சுற்றறிக்கையான ‘Laudate Si’-இன்
தொடர்ச்சியான ஆவணமாக இது கருதப்படுகின்றது. இது சுற்றுச்சூழல் மற்றும் சமூக நெருக்கடிகளை நிவர்த்தி செய்வதன் அவசியத்தையும், தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்கள் மூலம் தாய் பூமியைப் பராமரிக்கும் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
‘எல்லையற்ற மாண்பு’
(Dignitas Infnita-2024) என்ற
மடல் இன்றைய உலகில் மனித மாண்பிற்கு எதிராக நிகழும் குற்றங்களையும் பட்டியலிடுகிறது. குறிப்பாக, கடுமையான வறுமை, போர், புலம்பெயர்ந்தோருக்கு எதிரான வன்முறைகள், ஆள்கடத்தல், பாலியல் குற்றங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கருக்கலைப்பு, வாடகைத்தாய், கருணைக் கொலை மற்றும் தற்கொலைக்கு உதவுதல், மாற்றுத்திறனாளிகளைப் புறக்கணித்தல், பாலினக் கோட்பாடு, பாலின
மாற்றம், எண்ணியல்சார் முறைகேடுகள் (Digital Violence) ஆகியவைகளைப்
பட்டியலிட்டு, அதற்கெதிரான வழிமுறைகளை முன்வைக்கிறது.
திருத்தந்தை
பிரான்சிஸ் ‘Motu Proprio’ என்னும் தன் சுயவிருப்பத்தின் பேரில் வெளியிட்ட ‘ஆண்டவர் இயேசு, இரக்கமுள்ள நீதிபதி’
(Mitis Iudex Dominus Iesus-2015) மற்றும் ‘இரக்கமும்
சாந்தமும் கொண்ட இயேசு’
(Mitis et Misericors Iesus-2015) என்ற
இரு திருத்தூது அறிக்கைகள் வழியாகத் திருமணத்தின் செல்லுபடியாகாத நிலை குறித்து ஆராயும் நடைமுறையில் சீர்திருத்தங்களை வழங்கினார். இந்தத் திருத்தூது அறிக்கைகள், திருமணம் செல்லாது என்பது குறித்து ஆராயும் படிநிலைகள் விரைவானதாகவும் எளிதில் அணுகக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தித் திரு அவைச் சட்டங்களை மாற்றியமைத்துள்ளார்.
‘மகிழ்ச்சியின் உண்மை’
(Veritatis gaudium),
‘இறையியலை மேம்படுத்துவதற்காக’ (Ad Theologiam Promovendam)
போன்ற மடல்கள் இறையியல் என்பது சூழல் சார்ந்ததாகவும், சமூகத்திற்கு ஏற்றதாகவும் இருக்க அழைப்புக் கொடுக்கின்றன. கத்தோலிக்க இறையியல் என்பது சமகால அனுபவம் மற்றும் காலத்தின் அறிகுறிகளுக்கு ஏற்பப் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு புதுப்பிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன. இறுதி ஆவணமாக வெளிவந்த ‘இணைந்து பயணிக்கும் திரு அவையின் கற்பிதங்கள்’ பொதுநிலையினரைத்
திரு அவையில் இணைப்பொறுப்பாளர்களாகப் பொறுப்பேற்கப் பரிந்துரைக்கிறது.
திருத்தந்தை
பிரான்சிஸ் நமது காலத்திற்கான தகுந்த இறைவாக்கினர். அவர் நமக்கு விட்டுச் சென்றிருக்கின்ற இந்தப் படிப்பினைகள் நமது வாழ்வுக்கான படிகள் ஆகட்டும். திரு அவை வாழும் இறையரசாகட்டும்.
மையங்கள் கவர்ச்சிகரமானவை. சாதாரண மனிதர்களின் கவனக்குவியலை எளிதாக ஈர்ப்பவை. சுயமதிப்பையும் மாண்பையும் வெளியில் தேடுபவர்கள் தங்கள் கவனத்தையும் பயணத்தையும் மையம் நோக்கியே திருப்புவர். மையம்தான் இவர்களின் சேருமிடம். மையத்தைத் துறந்தால், தாங்கள் மறைந்துவிடுவோம், மாயமாகிவிடுவோம் என அஞ்சி, மையத்தைப் பற்றுவதையும், பற்றியிருப்பதையுமே தங்கள் குறிக்கோளாகக் கொள்வர். மையத்தில் தங்களை மறைத்துக்கொண்டு, தங்கள் சுயமதிப்பின் கனத்தைச் சார்ந்திருக்கும் இடங்களிலும், பதவிகளிலும் தேடுவர். ஆனால், மானிட மாண்பின் வேர்களை அறிந்தவர்கள், அகத்திலே தங்கள் கவனத்தைச் செலுத்துவர். அசாதாரணமான இந்த மனிதர்களுக்கு மையம் என்பது வாழ்வின் மையமல்ல; ஏனென்றால், இவர்களின் மாண்பின் மகத்துவம் இடம் சார்ந்ததல்ல; மாறாக, ஆளுமை சார்ந்தது. அப்படி மானிட மாண்பின் ஊற்று, அவர்கள் இறை உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்டதிலே என்பதை நன்கறிந்த ‘மக்களின் திருத்தந்தைதான்’ ஆடுகளாகிய நம்மைத் தவிக்கவிட்டுப் பிரிந்த நமது தலைமை ஆயர் பிரான்சிஸ்.
இவரது
அடையாளமும் ஆளுமையும் மதிப்பும் இடம் சார்ந்ததோ, பதவி சார்ந்ததோ அல்ல; அதனால்தான் இவரது வாழ்வியலும் மையங்களைத் தாண்டி, விளிம்புகளை நோக்கியதானது. மையம் என்பது இவரது விளிம்புகளை நோக்கிய பயணத்தின் புறப்பாடு; வெற்று தங்குமிடமில்லை. எனவே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை ‘விளிம்புகளின் வித்தகர்’
என்றழைப்பது பொருத்தமே. ‘விளிம்புகள்’ திருத்தந்தையின்
சிந்தனை, சொல், செயல்களின் மையம் மட்டுமல்ல; மாறாக, அவரது இவ்வுலகப் பயணமே விளிம்புகள். மைய வாழ்வுதான் என்பதைப் பின்வரும் அவரது சான்று வாழ்வின் பரிமாணங்கள் வழியாக நன்கறியலாம்.
புத்தாக்கத் தலைமைத்துவம்
திருத்தந்தை
பிரான்சிஸ் தன்னை வெறும் திருத்தந்தையாக மட்டும் கருதவில்லை; தான் கிறிஸ்துவின் சீடர் என்பதை அடிக்கடி நினைவு கூர்ந்தார். சிலுவையோடு பயணிப்பதையும் சிலுவையோடு கட்டியெழுப்புவதையும் சிலுவையில் இருக்கும் கிறிஸ்துவைப் போதிப்பதையும் உண்மையான சீடத்துவத்துவம் என்றார். தன்னுடைய தலைமைத்துவத்தை, இயேசுவின் வாழ்வு மற்றும் படிப்பினைகளைத் தாழ்ச்சியோடு பிரதிபலிக்கின்ற சுயதுறப்புப் பணிக்கான அழைப்பு என்றார். அதனால்தான் ‘பிரான்சிஸ்’ என்பதைத்
தனது பெயராகத் தேர்ந்ததோடு, எளிமை மூலமாக எழுச்சியை ஏற்படுத்திய ஒரு தலைவராக வாழ்ந்தார். அவரின் தலைமைத்துவத்தைப் பற்றிய கலவையான விமர்சனங்களுக்கு மத்தியிலும், தொடர்ந்து நம்மை வியக்க வைக்கும் ஒரு புத்தாக்கத் தலை மைத்துவத்தை வாழ்வாக்கினார். எல்லைகளை நோக்கிய இவரது பார்வையும், இதயத்திலிருந்து தோன்றிய வார்த்தைகளும் இவரை மானிடர் மையத் தலைவராக வாழ வைத்தன.
விளிம்புகளை நோக்கி...
மருத்துவராக
வேண்டும் என்ற தொடக்க கால விருப்பை உதறாமல், ஆன்மாக்களைக் குணமாக்கும் மருத்துவராகத் தன்னைச் செதுக்கினார். “நோயற்றவர்க்கு அல்ல; நோயுற்றோருக்கே மருத்துவர் தேவை”
(மாற் 2:17) என்பதை உணர்ந்த திருத்தந்தை, மானிட சமூகத்தில் சிதைந்து, உருவமற்று, முகவரியற்று கவனம் பெறாத அனைவரையும் திரு அவையின் பார்வை வட்டத்திற்குள் கொண்டுவர முயன்றார். தீண்டத்தகாதோரைத் தீண்டுவதையும், புறக்கணிக்கப்பட்டோரை உள்ளடக்குவதையும் விரும்பிச் செய்தார். சமூகத்தின் பொருளாதார, கலாச்சார, பண்பாட்டு, ஆன்மிக, சமய, அறநெறி, நிலவியல் விளிம்பிலுள்ளவர்களுக்கு விலாசமும் விடியலும் கொடுத்து, அவர்களையும் கிறிஸ்துவில் ஒளிரச்செய்ய தனது வாழ்வின் எல்லைவரை அவர்களை நோக்கிய தேடலையும் பயணத்தையும் அரவணைப்பையும் தொடர்ந்தார். இவரை ‘விளிம்புகளின் திருத்தந்தை’ என
அழைப்பதில் வியப்பேதுமில்லை.
மானிட மாண்பு
அனைவரும்
ஒரே இறைவனின் சாயலில் படைக்கப்பட்ட சம மாண்புடையவர்கள் என்ற உண்மையை
மதிக்காமையைச் சாடினார். ஏற்றத்தாழ்வே சமூகநோயின் ஆணிவேர் என்றதோடு, அனைவரும் ஒரே உடலாக இருக்கிறோம் என்பதை உரக்கக் கூறினார். இந்த உறுதிப்பாடுதான், நரம்பு நார்க்கட்டியால் பாதிக்கப்பட்ட, உருக்குலைந்திருந்த வினிசியோவைக் கட்டி முத்தமிடச் செய்தது. மேலும், ஒருவரின் வெளி அடையாளங்கள் நிரந்தரமற்றவை; மானிடர் ஒவ்வொருவரும் புனிதமானவர், அன்பிற்குரியர்; அவர்களில் இயேசுவைக் காண அறிவுறுத்தினார்.
நிலவியல் விளிம்புகள்
விளிம்புகளை
நோக்கிப் பயணிக்கும் ஒரு திரு அவைக்குத் தொடர் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். வழக்கமாக அடிக்கடிச் சந்திக்காத நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். ஈராக்கிற்குச் சென்ற (2021) முதல் திருத்தந்தை இவரே. பொறுப்பேற்ற ஒருசில மாதங்களிலேயே (2013) லம்பேடுசா என்ற இத்தாலியத் தீவைப் பார்வையிட்டார். ஐரோப்பாவிற்குப் புலம்பெயர்பவர்களின் தலையாயப் புகலிடமான இந்த இடத்திற்கான பயணம், புலம்பெயர்வோர் மற்றும் அகதிகளுக்கான இவரது நிலைப்பாட்டை வெள்ளிடைமலையாக்கியது. இங்குதான் உலகமயமாகும் கண்டுகொள்ளாமையைக் கடுமையாகச் சாடினார். மேலும், ஆப்பிரிக்கா, ஆசியா, இலத்தீன் அமெரிக்க நாடுகளின் பயணங்கள், உலகின் விளிம்புகளாகக் கருப்படும் மக்களுக்கான இவரது அர்ப்பணத்தின் வெளிப்பாடுகள்.
ஆடுகளின் வாடை
காணாமல்போன
ஆட்டைத் தேடிச்சென்ற நல்லாயனைப்போல, சமூகத்தில் விளிம்பிற்குத் தள்ளப்பட்டக் காயப்பட்டோரைத் தேடிச்சென்று, அவர்களின் காயங்களுக்கு மருந்திடுவதே திரு அவையில் ஆயர்களின் பணி என்பதை அடிக்கடி நினைவூட்டினார். ‘விமானத்தள’
ஆயர்களாக இல்லாமல், சேரிப்புறங்களுக்குச் சென்று ‘ஆடுகளின் வாடையை’ அறிந்து, அவர்களின் துயர் போக்க வேண்டுமென்ற அறிவுறுத்தல், விளிம்பு நிலையினருக்கான அவரது நிலைப்பாட்டின் மற்றொரு சான்று. துறவிகள் மற்றும் அருள்பணியாளர்கள் தங்களது நிறுவனங்களை விட்டு வெளியேறி, எளியோர் மத்தியில் அன்பைப் பகிர்வதே மேன்மையான மேய்ப்புப்பணி என்றார்.
நம்பிக்கையாளர்களின்
முதன்மை
பெரும்பான்மையினரான
கிறிஸ்துவின் நம்பிக்கையாளர்களே திரு அவையின் மையம் என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். குடும்பம் மற்றும் சமூகத்தின் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் கிறிஸ்துவுக்குச் சான்று பகர இவர்கள் அழைக்கப்படுகின்ற னர். அவர்களோடு உடன் நடந்து, ஊக்கமூட்டி, உதவிசெய்து, அவர்களின் முயற்சியிலும் முன்னெடுப்புகளிலும் நம்பிக்கையையும் எதிர்நோக்கையும் அளித்து, இவர்களுக்காகப் பணியாற்ற வேண்டியது, அருள்பொழிவு செய்யப்பட்ட சிறுபான்மையினரின் கடமை. ஆடுகளின்றி
ஆயனில்லை; ஆடுகளுக்காக ஆடுகளோடிருந்தே ஆயன் மேய்ப்புப் பணியாற்றுகிறார்.
ஏழைகளுக்கான திரு
அவை
ஏழையான
கிறிஸ்துவோடும், நற்செய்தியின் தூதுவரான புனித பிரான்சிஸ் அசிசியாரோடும் திருத்தந்தை தன்னை அடையாளப்படுத்தி ஏழையான, ஏழைகளுக்கான திரு அவையே தனது கனவு (2013) என்றார். ஏழைகள் பிறரன்பின் பயனாளிகளல்ல; மாறாக, கிறித்தவ அகமகிழ்வின் படிப்பினைகளைக் கற்றுத்தரும் பள்ளிக்கூடங்கள். எனவே, நமது பாதுகாப்பான சூழல்களிலிருந்து விளிம்புகளை நோக்கிப் பயணித்து, நோயுற்ற குழந்தைகளைப் பேணும் அன்புத்தாய் போல, நாம் ஓரங்கட்டப்பட்ட ஏழைகளுக்காகப் பணியாற்ற வேண்டும். இதுவே காலஞ்சென்ற நமது காவியத் திருத்தந்தைக்கு நாம் செலுத்தும் அர்த்தமுள்ள நினைவஞ்சலி!
‘எதிர்நோக்கு ஏமாற்றம் தராது’ என்ற யூபிலிக்கான ஆணை மடலில், எதிர்நோக்கின் அடையாளங்களாக வறியோரையும் புலம்பெயர்ந்தோரையும் குறிப்பிடுகிறார் நம் திருத்தந்தை பிரான்சிஸ்.
நாளுக்கு
நாள் அதிகரித்து வரும் வறுமையின் புதிய வடிவங்களைப் பார்த்து நாம் பழகிப்போய் விட்டோம். இருப்பினும், உலகின் சில பகுதிகளில் மட்டுமல்லாமல், எல்லா இடங்களிலும் நம்மைச் சுற்றி நாளும் நாம் எதிர்கொள்ளும் கடுமையான சூழ்நிலைகளிலிருந்து நம் கண்களைத் திருப்பிக் கொள்ளக்கூடாது. கண்டுகொள்ளாமல் இருப்பதே அவர்களின் துயரம்.
உலகின்
மக்கள்தொகையில் பெரும்பான்மையினர் - கோடிக்கணக்கானோர் வறியவர்களாக வாழ்கின்றார்கள். அவர்களைப் பற்றி எவ்வளவுதான் பேசினாலும் அவர்களின் பிரச்சினைகள் பெரும்பாலும் கிடப்பில் போடப்படும் ஆவணங்களின் அடியில் இருந்து விடுகின்றன என்பதை (எண் 15) வேதனையோடு திருத்தந்தை குறிப்பிடுகிறார்.
எதிர்நோக்கின்
அடையாளம்
புலம்பெயர்ந்தோர்
வறுமையின்
பல வடிவங்களில் முதல் வடிவமாக நிற்பது புலம்பெயர்ந்தோர் (Dignitas Infinita,40). பன்னாட்டு
மோதல்களால் பாதிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், போர்கள்-வன்முறைகளினால் பாதுகாப்புக்காக அலைகிற சகோதரர்கள்தான் இந்தப் புலம்பெயர்ந்தவர்கள். கல்விக்காக, வேலைவாய்ப்புக்காக, உணவுக்காக, உடைக்காக, உறைவிடத்திற்காக நம்மை அணுகும்பொழுது, அவர்களின் தேவைகளைச் சந்திக்கக்கூடிய சமூகம்தான் கிறித்தவச் சமூகம். தங்கள் இதயக்கதவுகள் தாராளமாய் அவர்களுக்காகத் திறந்திருக்க வேண்டும். இறுதித் தீர்ப்புகள் பற்றிய சிறப்பான உவமையில் உள்ள ஆண்டவரின் வார்த்தைகள் எப்பொழுதும் நம்முடைய இதயங்களில் எதிரொலிக்க வேண்டும்: ‘அந்நியராக இருந்தேன்; என்னை ஏற்றுக்கொண்டீர்கள்’ என்கிற
இயேசுவின் அமுதமொழிகள் நமது வாழ்வின் வழிகளாக மாற வேண்டும்.
புலம்பெயர்ந்தோரின்
வலிகள்
புலம்பெயர்ந்தோர்
வன்முறைகளுக்குப் பலியாகிறார்கள்; பாலியல் தொல்லைக்கு உள்ளாகிறார்கள்; ஆள்கடத்தலுக்கு உள்ளாகிறார்கள்; உளவியல் வலிகளால் மிகவும் நொறுங்கிப் போய் இருக்கிறார்கள். சொந்த நாட்டை விட்டு வருகிறவர்கள் எல்லாரும் சோகத்தில்தான் தமது நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். சொந்த நாட்டில் உரிமைகளை, உடைமைகளை இழந்து இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நடக்கின்ற ஓர் அனுபவம் அது.
புலம்பெயர்ந்தோர்
எதிர்நோக்கின்
மறைபரப்புப்
பணியாளர்கள்
2025-ஆம் ஆண்டான
இந்த யூபிலி ஆண்டில் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் நாளை, வரும் அக்டோபர் 4 மற்றும் 5 தேதிகளில்
கொண்டாடத் திருத்தந்தை அழைப்பு விடுத்தார். இந்த ஆண்டின் மையச்சிந்தனை
‘புலம்பெயர்ந்தோர் எதிர்நோக்கின் மறைபரப்புப் பணியாளர்கள்’ என்பதாகும்.
1914 முதல் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. புலம்பெயர்ந்த அவர்களின் சவால்களை முன்வைத்து இறைவேண்டலுக்கும் செயல்பாட்டுக்கும் செல்ல நம்மைத் தூண்டுகின்ற நாள்கள் இவை. புத்துயிர் அளிக்கும் நம்பிக்கையை, மதிப்பீடுகளை உருவாக்கும் பல்சமய உரையாடலை வளர்க்கும் தளமாகப் புலம்பெயர்ந்தோர் தளமானது அமைந்திருக்கிறது.
புலம்பெயர்ந்தோர்
பெரும் உடைமைகளாகத் தங்கள் திருவிவிலியங்களையும் இறைவேண்டல் புத்தகங்களையும் ஆறு, கடல், பாலைவனம் கடந்து சுமந்து செல்கிறார்கள். இதுதான் அவர்களின் நம்பிக்கை வாழ்வு என்பதைப் புலம்பெயர்ந்தோருக்கான
2024-ஆம் ஆண்டு செய்தியில் திருத்தந்தை குறிப்பிடுகிறார்.
புலம்பெயர்ந்தோருக்குத்
துணை
செய்ய
நல்ல
சமாரியர்கள்
தேவை
திருத்தந்தையின்
சுயசரிதை புத்தகத்தில் அமெரிக்க நாட்டு கர்தினால் ஒருவர் திருத்தந்தையிடம் பகிர்ந்த ஒரு நிகழ்வில், புதிதாய் அருள்பொழிவு பெற்ற இரண்டு அருள்பணியாளர்கள் கர்தினால் அவர்களை அணுகி ‘இலத்தீன் மொழியில் திருப்பலி
நிறைவேற்ற எங்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும்’
என்கிறார்கள்.
‘இலத்தீன் புரியுமா? தெரியுமா?’ என்று கர்தினால் கேட்டதற்கு, ‘புரியாது, தெரியாது; ஆனால், நாங்கள் இலத்தீன் கற்றுக்கொள்வோம்’ என்றார்கள்.
“அது சரி, இலத்தீன் படிப்பதற்கு முன்னால் உங்கள் மறைமாவட் டத்தில் உள்ள வியட்நாமைச் சார்ந்த புலம்பெயர்ந்தோர் எத்தனை பேர் என்பதை அறிவீர்களா? வியட்நாம் மொழியைக் கற்றுக் கொள்வீர்களா? ஸ்பானிஷ் மொழி பேசக்கூடிய மக்கள் அதிகமாக இருக்கக்கூடிய உங்கள் மறைமாவட்டத்தில் ஸ்பானிஷ் மொழியையும் நீங்கள் கற்றுத்தேற வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா? எனவே, முதலில் மக்கள் பணியாற்றுவதற்கு நீங்கள் இருக்கக்கூடிய இடத்தில் தேவையில் இருக்கக்கூடிய வியட்நாம் மொழியையும் ஸ்பானிஷ் மொழியையும் கற்றுக்கொண்டு வாருங்கள். பின்னர் இலத்தீனைப் பற்றிச் சிந்திக்கலாம்” என்று
வழி அனுப்பி வைத்தாராம் அந்தக் கர்தினால்.
இஸ்ரயேல்
மக்களை அடிமைத்தனம், தீராத தொல்லைகள், பாதுகாப்பற்றத்தன்மை, பாகுபாடு, வளர்ச்சிக்கான வாய்ப்பின்மை இவற்றிற்கு மத்தியில் மோசே வழிநடத்தியதைப்போல புலம்பெயர்ந்தோரின் தாகத்தையும் பசியையும் போக்கிப் பாதுகாப்பையும் பராமரிப்பையும் நாமும் இறைத் துணையினால் மோசே போன்று கொடுக்க வேண்டியது நம்முடைய கடமை என்பதை உணர வேண்டும். புலம்பெயர்ந்தோருக்குத் துணை செய்ய, அவர்களைப் பாதுகாக்க நல்ல சமாரியர்கள் இன்று தேவை எனத் திருத்தந்தை பலமுறை அழைப்பு விடுத்துள்ளார்.
புலம்பெயர்ந்து
கொண்டிருப்பவர்
நம்
கடவுள்
2024-ஆம் ஆண்டு
செய்தியில் ‘கடவுள் தம் மக்களோடு நடக்கிறார்’ என்கிற
மையச்சிந்தனையைப் பதிவு செய்து, கடவுள் ஒரு நாளும் ஒரே இடத்தில் அமராதவர் என்றும், கடவுளின் வாக்கு நாத்தானுக்கு அருளப்பட்டபோது “என் ஊழியனாகிய தாவீதிடம் சென்று சொல்: ‘ஆண்டவர் கூறுவது இதுவே; நான் தங்கி இருப்பதற்கான கோவிலை நீ கட்ட வேண்டாம்.
இஸ்ரயேலரை விடுவித்த நாளிலிருந்து இன்றுவரை நான் எந்தக் கோவிலிலும் தங்கியதில்லை. நான் என்றுமே திருக்கூடாரத்திலிருந்து ஒரு கூடாரத்தை விட்டு மற்றொரு கூடாரத்திற்கு மாறி வந்துள்ளேன்’ என்கிறார்
ஆண்டவர்” (1குறி 17:5). எனவே, கடவுள் மக்களோடு பயணிக்கிறார் என்பதை உறுதிபட இது கூறுகிறது.
புலம்பெயர்ந்தோரைச்
சந்திப்பது என்பது கிறிஸ்துவைச் சந்திக்கும் அனுபவமாக மாறுகிறது. கடவுள் நம் கதவுகளைத் தட்டிக்கொண்டு இருக்கிறார். பசியோடு, தாகத்தோடு, வெளியூர் பயணியாய், உடையில்லாதவராய், நோயாளராய், சிறைக்கைதியாய்க் கதவைத் தட்டுகிறார்.
புலம்பெயர்ந்தோர்
என்றாலே பலருக்கு அதிக பயம் தொற்றிக்கொள்வதைப் பார்க்க முடிகிறது. இதை ‘xenophobic mentality’ என்கிறார் திருத்தந்தை (Cf. Fratelli Tutti-39).
கிறிஸ்துவின்
சாயல்கள்
புலம்பெயர்ந்தோர்
தேவையில்
இருப்போர் அனைவருக்கும் கடவுளைத் தரிசிக்கும் வாய்ப்பாக நமது வடிவில் கடவுள் வருகிறார். புலம்பெயர்ந்தோர் உருவில் இறைத் தரிசனத்தை அனுபவிக்கின்ற வாய்ப்பை நாம் ஒவ்வொருவரும் இச்சந்திப்பு வழியாகப் பெறுகின்றோம். புலம்பெயர்ந்தோர் இன்னும் பிற நாடுகளில் உரிமைகள் மறுக்கப்பட்டவராய், கீழானவர்களாய் பார்க்கப்படுகிற போக்கை அறிகிறோம். ஒவ்வொரு புலம்பெயர்ந்தோரும் சக மனிதர்கள்தான் என்று
நினைத்து, எச்சூழலிலும் உரிமைகளையும் உரிய மரியாதையையும் கொடுக்க வேண்டியது நமது கடமை.
சாதி,
இனம், மதம் கடந்து கண்ணியத்தோடு வரவேற்க நாம் கடமைப்பட்டுள்ளோம். புலம்பெயர்ந்தோரைக் காக்க மறுப்பவர்கள் மனச்சாட்சியை ஆய்வுசெய்து, கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும் என்பதையும் மறக்கக்கூடாது (cf. Dignitas Infinita 40, 41).
‘பிரான்சிஸ்’ எனும் பெயருடன் கர்தினால் பெர்கோ லியோ திரு அவையின் தலைமை ஆயராகப் பொறுப்பேற்று ஆறு மாதங்களே ஆகியிருந்தன. அதற்குள் அவருடைய பல மரபுமீறிய முன்னோடிச் செயல்பாடுகள் கத்தோலிக்கத் திரு அவையை அவர் மக்கள் திரு அவையாக மலரச் செய்யப் போகின்றார் என்பதை ஏற்கெனவே முன்னறிவித்துக் கொண்டிருந்தன. தலைமை ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்றே மக்கள் கூட்டத்தின் முன்பு ‘நான் ஒரு பாவி’ என அவர் அறிக்கையிட்டது, புனித வாரத்தில் உரோமையிலுள்ள சிறைச்சாலைக்குச் சென்று அங்கிருந்த பல சமயத்து ஆண்-பெண் குற்றவாளிகளின் காலடிகளைக் கழுவியது என்பன அவற்றுள் சில.
இந்நிலையில்
ஒரு நாள் (30-10-2013) புனித பேதுரு பெருங்கோவில் சதுக்கத்தில் கூடியிருந்த தாத்தா-பாட்டியருக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென 4-5 வயதுள்ள ஒரு சிறுவன் எவ்விதத் தயக்கமும் இன்றி, திருத்தந்தை உரையாற்றிக் கொண்டிருந்த மேடையின்மீது ஏறி வந்தான்; கூட்டத்தைச் சில நொடிகள் கண்ணோட்டம் இட்டான். ஆனால், எத்தகைய தடங்கலோ தடுமாற்றமோ இன்றித் திருத்தந்தை புன்முறுவலுடன் தன் உரையை ஆற்றிக் கொண்டிருந்தார். பின்பு அச்சிறுவன் திருத்தந்தையின் பின்புறம் சென்று அவரது இருக்கையில் ஏறி அமர்ந்து சற்று நேரம் சுற்றுமுற்றும் பார்த்தான். கூட்டத்தினர் அனைவரது முகத்திலும் பெரும் அதிர்ச்சி! ஆனால், திருத்தந்தை அதைக் கண்டுகொள்ளாது தன் உரையைத் தொடர்ந்தார். பின்பு அச்சிறுவன் திருத்தந்தையின் இருக்கையிலிருந்து இறங்கி வந்து உரையாற்றிக் கொண்டிருந்த திருத்தந்தையின் காலைக் கட்டிப் பிடித்தான். திருத்தந்தையும் தன் உரையைத் தொடர்ந்தவாறே அவனது தலைமீது தனது கையை வைத்து அவனுக்கு ஆசி வழங்கினார்.
இத்தகைய
ஒரு நிகழ்ச்சி முன்னைய எந்தத் திருத்தந்தையின் முன்னிலையிலும் அரங்கேறியிருக்க முடியுமென நம்மால் கற்பனைகூட செய்திருக்க இயலாது. ஏனெனில், அத்தகைய நிகழ்வுகள் மக்களிடமிருந்து அவர் சற்றுத் தொலைவில் நிற்க, எவருடைய எத்தகைய இடையூறும் இன்றி உரிய ஒழுங்குமுறைப்படி சீராக நடைபெறும். ஆனால், திருத்தந்தை பிரான்சிஸின் எளிமை, குழந்தைகள்-சிறுவர்கள் உள்பட எல்லாரையும் நெருங்கி இனிதாகப் பழகும் பாணி, மனிதநேயத்தை முன்னிறுத்தி மரபுசார் நெறிமுறைகளைக் கைவிடும் போக்கு, ஆயர்கள் மற்றும் அருள்பணியாளர்கள் தங்களை உயர்நிலையினர் எனக் கருதிக்கொண்டு, மக்களிடமிருந்து அந்நியப்பட்டிருக்கும் நிலையை விடுத்து, அவர்கள் ‘ஆடுகளின் நெடி தங்கள்மீது படிந்திருக்கும் அளவுக்கு அவர்களுடன் தோழமை கொண்டிருக்க வேண்டும்’ (நற்செய்தியின்
மகிழ்ச்சி- 24) என அவர் விடுத்த
தொடர் அழைப்பு என்பவைதாம் மேற்கூறிய நிகழ்வு நடந்தேற வாய்ப்பளித்தன எனலாம். திருத்தந்தையின் இருக்கையில் ஏறி அமர்ந்ததன் வழியாகத் திருத்தந்தை செயல்படுத்த விரும்பிய ஓர் அரிய, அழகான உண்மையை அச்சிறுவன் தன்னை அறியாமலேயே அடையாள முறையில் அனைவருக்கும் உணர்த்திவிட்டான். அது திரு அவையில் அனைவரும் முதன் முதலில் சகோதரர்-சகோதரிகள் என உறவானவர்கள்; சமமான
மாண்பும் பொறுப்பும் உடையவர்கள்; திரு அவையின் இறையாட்சிப் பணியிலும் ஆட்சிப் பொறுப்பிலும்கூட அனைவரும் சம உரிமை உடையவர்கள்
என்பதே.
நீங்கள் யாவரும்
சகோதரர்-சகோதரிகளே!
திரு
அவையின் உறுப்பினர் அனைவரும் தாம் ஆற்றும் பணிகளில்தான் திருநிலையினர்-பொது நிலையினர் என வேறுபடுகிறார்களே அன்றி தங்கள்
சீடத்துவ இயல்பிலோ, இறைவனின் பிள்ளைகளுக்குரிய மாண்பிலோ, இறையாட்சிப் பணியாற்றும் பொதுவான பொறுப்புரிமையிலோ அல்ல; ஏனெனில், அவர்கள் அனைவரும் ‘அரசரும் குருவும் ஆசிரியருமாகிய இயேசு கிறிஸ்துவோடு ஓருடலாக ஒன்றித்திருந்து நிறைவாழ்வு பெற’
(திருமுழுக்குச் சடங்கு) குருக்களாக அருள்பொழிவு பெற்றவர்கள்; திருமுழுக்கில் பெறப்படும் அத்திருநிலைப்பாடு முதன்மையானது மட்டுமல்ல;
அடிப்படையானதும் ஒப்புயர்வற்றதும் ஆகும்.
‘திருமுழுக்குப் பெற்ற அனைவரும் மாண்பிலும் இறையாட்சிப் பணிப்பொறுப்பிலும் சமமானவர்கள்’ என்கிறது
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம். ஆனால், சங்கம் முடிந்து ஐம்பது ஆண்டுகள் ஆன பின்பும் அப்படிப்பினைகளை
நடைமுறைப்படுத்த எத்தனை
தயக்கங்கள், தடுமாற்றங்கள், தடைகள், பின்னடைவுகள்! அவற்றையெல்லாம் தாண்டி, அப்படிப்பினையை நடைமுறைப்படுத்த திருத்தந்தை பிரான்சிஸின் கடந்த 12 ஆண்டுகளாகப் பல்வேறு வகைகளில் முனைந்தார்.
திருநிலையினர்
ஆதிக்கத்தைக்
கண்டித்தவர்
“திருநிலையினர் ஆதிக்கம் ஒரு முள்; ஒரு கொடிய நோய்; அது ஆண்டவரின் மணமகளது (திரு அவையினது) முகத்தைக் கறைபடுத்தும் ஒரு வகை உலகியல் போக்கு; அது புனித நம்பிக்கையாளர்களாகிய கடவுளின் மக்களை அடிமைப்படுத்துகிறது.” இவை திருத்தந்தை பிரான்சிஸ் 2023, அக்டோபர் 25 அன்று ஆற்றிய உரையில் தனது வழக்கத்திற்கு மாறாகப் பயன்படுத்திய கடுமையான சொற்கள். திருநிலையினர் ஆதிக்கத்தை ஒரு பெருந்தீமை எனத் தனது தலைமை ஆயர் பணிக் காலத்தின் தொடக்கத்திலிருந்தே அவர் வன்மையாகத் தொடர்ந்து கண்டித்துள்ளார். “அருள்பணியாளர்களாகிய நாம் பொதுநிலையினரின் மேலதிகாரிகள் அல்லர்; மாறாக, அவர்களுடைய ஆயர்கள்” என்றும் 2024 அக்டோபர் 1-இல் ஆற்றிய உரையில் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
பொதுநிலையினருக்கு
முன்னிலை
பொதுநிலையினரின்
தனி அழைப்பு தங்களது சாட்சிய வாழ்வாலும் நற்செய்தி விழுமியங்களாலும் உலகியல் துறைகள் அனைத்தையும் ஊடுருவி இறையாட்சிக்கு ஏற்ப அவற்றை உருமாற்றுவதே. எனினும், திரு அவையின் அகவாழ்விலும் பணிகளிலும்கூட அவர்களுக்குச் சம உரிமையும் பொறுப்பும்
உண்டு. ஏனெனில் “பொதுநிலையினர் திரு அவையில் விருந்தினர்கள் அல்லர்; அது அவர்களது வீடு. தங்களது வீட்டைப் பராமரிக்க அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்... பொதுநிலையினரும், குறிப்பாகப் பெண்களும், அவர்களுடைய மனித மற்றும் அருள்வாழ்வுசார் திறமைகளும் அருங்கொடைகளும் பங்குகள் மற்றும் மறைமாவட்டங்களின் வாழ்வில் அதிகம் மதிக்கப்படுவது அவசியம்” எனக் குறிப்பிடுகிறார் (2023, பிப்ரவரி 16-18).
பங்குகள்
மற்றும் மறைமாவட்டங்களின் பணிப்பொறுப்புகளில் பொதுநிலையினரையும் தத்தம் அருங்கொடைகளுக்கு ஏற்ப சம உரிமையுடன் பங்கேற்கச்
செய்யும் வகையில் அவரே பல முன்னோடிச் செயல்பாடுகளையும்
ஆற்றியுள்ளார். திரு அவையின் பல்வேறு பணிகளில் பொதுநிலையினரைத் தலைமைப் பொறுப்புடன் பணியாற்ற அழைத்ததுடன், பொதுநிலையினர் திருப்பணிகளையும் பரவலாக்க ஊக்கப்படுத்தினார். மறைமாவட்ட தலைமைச் செயலகங்களில் கீழ்நிலைச் செயலர்களாக மட்டும் அல்ல; பொறுப்புரிமை உள்ள அதிகாரிகளாகப் பொதுநிலையினர் நியமிக்கப்படும் வகையில் வத்திக்கான் பேராயங்களின் முதல்வர்களாக பொதுநிலையினரும் பெண்களும் நியமனம் பெறும் வகையில் புதிய சட்டம் இயற்றினார்.
கூட்டொருங்கியக்கத்
திரு
அவைக்கான
ஆயர்
மாமன்றம்
திரு
அவையில் திருநிலையினரும் பொதுநிலையினரும் சகோதர உறவுடனும் சமத்துவப் பணிப் பொறுப்புடனும் இணைந்து செயல்படத் திருத்தந்தை பிரான்சிஸ் முன்னெடுத்த மாபெரும் முயற்சிதான் 2023-2024 ஆண்டுகளில் நடந்த ஆயர் மாமன்றம். கூட்டொருங்கியக்கத் திரு அவை என்பதை மைய ஆய்வுப் பொருளாகக் கொண்ட அது அடிமட்டத்திலேயே நடந்த கலந்துரையாடல்களில் தொடங்கியது. அனைவருடைய கருத்துகளும் கேட்டு மதிக்கப்பட்டு,
அனைத்து நிலையினருடைய பதிலாள்களுடன் இணைந்து முடிவுகள் எடுக்கும் ஒரு புதிய நடைமுறையை அனுபவம் ஆக்கியுள்ளது. அதனால் இதுவரை ஆயர்கள் மட்டுமே பங்கேற்ற ஆயர் மாமன்றம் அனைத்துலகத் திரு அவையின் மாமன்றம் ஆகியது.
இறுதியாக...
ஆயர்கள்
மற்றும் அருள்பணியாளர்களை முன்னிறுத்தியே இன்றும் செயல்படும் திரு
அவைக்கு அவர்கள் பொதுநிலையினருடன் இணைந்து பயணிக்கும் மக்கள் திரு அவையாக வளரவும் மலரவும் திருத்தந்தை பிரான்சிஸ் பாதை காட்டியுள்ளார். அதே பாதையில் அனைத்து நம்பிக்கையாளர்களும் ஒரே அரச குருத்துவக் குலமாக இணைந்து பயணித்து, இறையாட்சியின் அடையாளமாகவும் கருவியாகவும் செயல்படுவதே வருங்காலத் திரு அவைக்கு அவர் விட்டுச்செல்லும் மாபெரும் அழைப்பும் அறைகூவலும் ஆகும்.
இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கத்திற்குப் பின் திரு அவையில் தேவையான மாற்றங்களையும் மறுமலர்ச்சியையும் தன் தலைமைத்துவப் பணியில் ஏற்படுத்தியுள்ள பெருமையும் புகழும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையே சாரும். ஆடம்பரம் இல்லாமல், ஆதாயம் தேடாமல், எளிமையிலும் பிறரன்பிலும் தன்னை முன்னிலைப்படுத்தி, தனது பணிக்கு ஒரு புதிய முகத்தைத் தந்திருப்பவர் இவர். பணியாற்றும் திரு அவையாக, நம்பிக்கையாளர்களின் சமத்துவ, சகோதரத்துவத் திரு அவையாக, இறைவாக்கினர் திரு அவையாக இன்றைய திரு அவை செயலாற்றிட, இயேசுவின் இறையாட்சி மதிப்பீடுகளை வாழ்வாக்கிச் சான்று பகரும் திரு அவையாக செயல்பட, தன் சீரிய தலைமைத்துவப் பண்புகளால், காலத்தின் அறிகுறிகளை அறிந்து, தேர்ந்து தெளிந்து பல மாற்றங்களையும் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தியவர் திருத்தந்தை பிரான்சிஸ். இவரின் பணிக்காலத்தில் நிகழ்ந்த ‘மாமன்றங்கள்’ திரு அவையில் பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த
12 ஆண்டுகளில் திருத்தந்தையின் சீரிய தலைமைத்துவத்தில், அவரின் சிறப்பான வழிகாட்டுதல் அனைவரையும் உள்ளடக்கிய, ஈடுபாடு நிறைந்த நான்கு (ஆயர்) மாமன்றங்களைக் கண்டிருக்கிறது. இரண்டாம் வத்திக்கான் சங்கம் ஏற்படுத்த விரும்பிய மறுமலர்ச்சியின் மிகச் சிறப்பான முயற்சியாகத் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அவர்களால் 1965-இல் ‘ஆயர் மாமன்றம்’
அமைக்கப்பட்டது.
1967-ஆம் ஆண்டு முதல் ஆயர் மாமன்றம் திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களால் கூட்டப்பட்டது. திரு அவையை வழிநடத்தும் பொறுப்பில், திருத்தந்தைக்கு உதவும் உன்னத நோக்குடன், பங்கேற்புத் திரு அவையாகச் செயல்பட முன்னெடுக்கப்பட்ட ஆயர் மாமன்றம் இன்று மறுமலர்ச்சி கண்டுள்ளது. இது ‘நம்பிக்கையாளர்கள் மாமன்றம்’
என்ற புதிய முகத்தைப் பெற்றுள்ளது. ‘அதிகாரத் திரு அவை’,
‘பணியாளர் திரு அவை’ எனும் புதிய பார்வையைப் பெற்றுள்ளது. தன் செயல்பாடுகளை நியாயப்படுத்தும் திரு அவை என்ற விமர்சனத்தைக் கடந்து, ‘மாற்றங்கள் வழி மறுமலர்ச்சி காணும் திரு அவை’ எனும் புதிய பயணத்தைக் கண்டிருக்கிறது.
குடும்பங்கள்
பற்றிய
மாமன்றம்
(2014-2015)
முதல்
மாமன்றமாகத் திருத்தந்தை பிரான்சிஸ் கூட்டிய மாமன்றம் திரு அவையில் குடும்பங்களின் மாண்பும் மதிப்பீடுகளும் குறித்து விவாதித்தது. வழக்கமாகக் கூடும் ஆயர் மாமன்றங்களின் வரிசையில் இல்லாமல், சிறப்பு ஆயர் மாமன்றமாக இந்த நிகழ்வு நடந்தேறியது. ‘நற்செய்தி அறிவிப்பின் ஒளியில் இன்று திரு அவையில் குடும்பங்கள் சந்திக்கும் பல்வேறு அருள்பணிச் சவால்கள்’
என்ற மையச் சிந்தனையில் முதல் பொது அமர்வு 2014, அக்டோபரில் நடைபெற்றது. தொடர்ந்து அதன் இரண்டாம் பொது அமர்வு 2015, அக்டோபரில் ‘குடும்பங்களின் அழைப்பும் பணியும்’ குறித்து ஆய்வும் ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டது. திரு அவையின் பார்வையில் குடும்பங்கள் மாண்புமிக்கவை; மதிப்பிற்குரியவை; அவைதான் ‘குட்டித் திரு அவைகள்’ என்ற உயர் மதிப்பீடுகள் முன்னிறுத்தப்பட்டன. இன்றைய குடும்ப வாழ்வு பல்வேறு சவால்களைச் சந்திக்கும் சூழலில், குடும்பங்களின் பங்களிப்பும் பங்கேற்பும் திரு அவையின் வாழ்வுக்கும் பணிக்கும் முதன்மையானது என்ற சிந்தனையை இந்த மாமன்றம் வழங்கியுள்ளது.
இரண்டாம்
பொது அமர்வின் சிறப்பான நிறைவு நிகழ்வாக, குழந்தை இயேசுவின் புனித தெரசாவின் பெற்றோர்களான தந்தை லூயிஸ் மற்றும் தாய் செலி மார்ட்டின் இருவரையும் அருளாளர் நிலைக்குத் திருத்தந்தை உயர்த்தினார். இரண்டு பொது அமர்வுகளின் மணிமகுடமாக 2016-ஆம் ஆண்டு ‘அன்பில் மகிழ்ச்சி’
(Amonis laetitia)
எனும் திருத்தூது ஊக்க உரையைத் திருத்தந்தை பிரான்சிஸ் வெளியிட்டு, அனைவரையும் உள்ளடக்கிய திரு அவையாக நாம் பயணிக்க அழைப்பு விடுத்துள்ளார்.
இளையோர் பற்றிய
மாமன்றம்
(2018)
திருத்தந்தை
புனித இரண்டாம் ஜான்பால் அகில உலக இளையோர் மாநாடுகளைத் தொடங்கி வைத்து, இளையோரின் ஈடுபாடு நிறைந்த நம்பிக்கை வாழ்வுக்கு வழிகாட்டியிருப்பது எவ்வளவு சிறப்பானதோ, அதேபோல் 2018-இல் உரோமையில் அக்டோபர் 3-28 வரை நடைபெற்ற ஆயர் மாமன்றத்தில் இளையோரின் நம்பிக்கை வாழ்வுக்கான அழைப்பும், பணிக்கான தேர்ந்து தெளிதலும் கருப்பொருளாக அமைந்திருந்தது. இன்றைய உலகில் இளையோர் எதிர்கொள்ளும் சவால்களான கணினி உலகம், புலம்பெயர்தல், பாலியல் உறவுச் சவால்கள் குறித்து இந்த மாமன்றம் சிந்தித்தது. அதன் அடிப்படையில் 2019-இல் ‘கிறிஸ்து வாழ்கிறார்’ (Christu vivit) எனும் திருத்தூது மடலை வெளியிட்டு, வாழ்வின் மதிப்பீடுகளை முன்னிறுத்தி, இளையோரின் பங்கேற்புக்கும், பணிவாழ்வுக்கும் திரு அவை திறந்த உள்ளத்துடனும் நிறைந்த நம்பகத்தன்மையுடனும் இளையோரை ஏற்றுக்கொள்ள அறிவுரை வழங்கியுள்ளார்.
அமேசான் ஆயர்
மாமன்றம்
(2019)
அகில
உலக பொது ஆயர் மாமன்றம் என்ற வடிவத்தைக் கடந்து, கண்டங்கள் அளவிலான சிறப்பு ஆயர் மன்றங்களின் வரிசையில், 2019 அக்டோபர் 6-27 வரை நடைபெற்ற அமேசான் பகுதிக்கான ஆயர் மாமன்றம் இயற்கை, காலநிலை, சுற்றுச்சூழல் சகோதரத்துவ உலகம் போன்ற இறையியல், அருள்பணி மதிப்பீடுகளை முன்னிறுத்தி, திரு அவையின் நம்பிக்கை வாழ்வு சமூக மாற்றத்தை உள்ளடக்கியது என்ற சிந்தனை இந்த மாமன்றத்தில் முதன்மை பெற்றது. அழிந்து கொண்டிருக்கிற அமேசான் இயற்கை வளத்தையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் அகில உலக நாடுகள் மிகக் குறிப்பாக, வளர்ந்த நாடுகளின் கடமையையும் வலியுறுத்தும் மாமன்றமாக அமேசான் ஆயர் மாமன்றம் நிகழ்ந்தேறியது. 2020-ஆம் ஆண்டு இந்த ஆயர் மாமன்றத்தின் கனவுகளாக சமூகம், பண்பாடு, இயற்கை நலன், ஒருங்கிணைந்த திரு அவை எனும் நான்கு உயர் மதிப்பீடுகளை உள்ளடக்கிய ‘Querida Amazonia’ ஆவணம் வெளியிடப்பட்டது.
கூட்டொருங்கியக்கத்
திரு
அவை
(2023 -2024) மாமன்றம்
1965-இல் தொடங்கப்பட்ட
ஆயர் மாமன்றத்தின் பொன்விழா ஆண்டில் திரு அவை கூட்டொருங்கியக்கத் திரு அவையாகச் செயல்பட வேண்டும் என்பது தூய ஆவியாரின் அழைப்பு எனத் திருத்தந்தை அறைகூவல் விடுத்தார். 2018, மார்ச் 22-ஆம் நாள் அகில உலக இறையியல் மன்றத்தின் உதவியுடன் ‘இன்றைய திரு அவையின் வாழ்விலும் பணியிலும் கூட்டொருங்கியக்கம்’ என்ற
தலைப்பில் இந்த மாமன்றத்துக்கான தயாரிப்புகளைத் தொடங்கி வைத்தார். ஒன்றிப்பு, பங்கேற்பு, பணி என மூன்று முக்கியமான
தாரக மந்திரங்களை முதன்மைப்படுத்திக் கூட்டொருங்கியக்கத் திரு அவைக்கான மாமன்றத்துக்கு அழைப்பு விடுத்தார்.
2021-ஆம்
ஆண்டு தலத்திரு அவைகளில் ‘அனைவருக்கும் செவிமடுத்தல்’ எனும்
முக்கிய நிகழ்வைச் செயல்படுத்த திருத்தந்தை விடுத்த அழைப்பு ஆயர் மாமன்றச் செயல்பாடுகள் தலத்திரு அவைகளில் நிகழ வேண்டிய புரட்சிகரமான செயல்பாட்டைத் தொடங்கி வைத்தது. ஆயர்களும், அருள்பணியாளர்களும் ஆட்சியாளர்கள் எனும் ஆதிக்க மனப்பான்மையை விடுத்து, செவிமடுக்கும் பணியாளர்களாகச் செயல்பட அழைப்பு விடுத்தார். அதிகாரத் திரு அவை, ஆட்சியாளர் திரு அவை எனும் நிலையைக் கூட்டொருங்கியக்கத் திரு அவை எனும் மாற்றுச் சிந்தனைக்கும் செயல்பாட்டுக்கும், இதன்மூலம் புதிய பாதையை, பார்வையை வழங்கினார்.
2022-ஆம் ஆண்டு
கண்டங்கள் அளவிலும் (continental Synods) 2023-ஆம்
ஆண்டு பொதுப் பேரவை எனத் திட்டமிட்டு செயலாற்ற வழிகாட்டினார். 2023, அக்டோபர் 4-ஆம் தேதி முதல் பொது அமர்வு தொடங்கியது. கூட்டொருங்கியக்கத் திரு அவைக்கான மாமன்றத்தை 2024-ஆம் ஆண்டு அக்டோபரில் இரண்டாம் பொது அமர்வாகக் கொண்டு செலுத்தினார். இந்தப் பொது அமர்வில் வாக்களிக்கும் உரிமையை ஆயர்கள் கடந்து அருள்சகோதரிகள், பொதுநிலை சகோதர- சகோதரிகளுக்கும் நீட்டிப்புச் செய்தது ஆயர் மாமன்றத்தின் புரட்சி.
நிறைவாக,
அகில உலக ஆயர் மாமன்றங்கள் 1967-ஆம் ஆண்டு முதல் இதுவரை 16 மாமன்ற நிகழ்வுகளைக் கண்டுள்ளன. ஆனால், திருத்தந்தை பிரான்சிஸ் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் ‘ஈடுபாடு மற்றும் பங்கேற்புத் திரு அவை’ எனும் அடிப்படையான
மாற்றத்தை ஆயர் மாமன்றங்கள் வழி நிகழ்த்தியுள்ளார்.
மாமன்றங்கள்
வழியாக “நீங்கள் என்னிடம் கேட்டறிந்தவை, என் வாழ்வில் நீங்கள் கண்டுணர்ந்தவை யாவற்றையும் கடைப்பிடியுங்கள்; அப்போது அமைதியை அருளும் கடவுள் உங்களோடிருப்பார்” (பிலி 4:9) எனும் செய்தியே திருத்தந்தை பிரான்சிஸ் நமக்கு விட்டுச் செல்லும் பாடம்.
இயேசுவின் இயக்கம் வரலாற்றில் இடையிடையே அவரின் கனவுகளைக் கடந்து விலகிச் சென்றதுண்டு. ஆசிய இயேசுவின் இரத்தம் ஐரோப்பியக் கிண்ணங்களில் ஊற்றப்பட்டதால், ஏழைகள் ஏற்றம் பெற ஏணியாகத் தம்மை மாற்றிக்கொண்ட அவரின் மார்க்கத்தின் மீது ‘பிரபுக்களின் பிரதிநிதி’ என்ற பிம்பம் போர்த்தப்பட்டது. ‘இயேசுவின் மறையுடல்’ என்று சுட்டிக்காட்டப்படும் திரு அவையும் தன்னைச் சில வேளைகளில் அதிகார நாற்காலியோடு நகர்கிற பெருநிறுவனமாய் முன்னிறுத்தப்பட்ட வரலாறும் உண்டு.
அடுத்தவரின்
மாட்டுத்தொழுவத்தில் பிறந்து, தச்சுக்கூடத்தில் வளர்ந்து, நாடோடி வாழ்க்கை நடத்தி, இறுதியில் மாற்றானின் கல்லறையை இரவல் வாங்கித் துயில் கொண்ட ஏழை இயேசுவைத் திரு அவையும் அதன் தலைமைகளும் மறைத்துவிட்ட நிகழ்வுகள் வரலாற்றுப் பிழைகளாக நிகழ்ந்துள்ளதை மறுக்க இயலாது.
21-ஆம்
நூற்றாண்டில் காயப்பட்டு, தன் அடையாளத்தைத் தொலைத்து, திக்குமுக்காடிய திரு அவையின் பயணத்தில் நம்பிக்கை ஒளிக்கீற்றாய்த் தோன்றியவர்தான் திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தூதர் பேதுருவின் வரிசையில் 266-வது வாரிசாக வரலாற்றில் இடம்பிடித்த இவர், தன் வாழ்வாலும் பணியாலும் திரு அவையின் முகத்தை மாற்றிவிட்டார். தடம் மாறிப்போன இயேசுவின் இயக்கத்தை இயேசுவின் மனநிலைக்கு ஏற்ப சரியான தடத்திற்கு நகர்த்தி, அதை வழிநடத்தி வந்த சரித்திரச் சாதனை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையே சாரும்.
ஏழைத்
தொழிலாளர்களை ஏராளமாகக் கொண்டிருந்த, அர்ஜென்டினாவின் பியூனர்ஸ் அயர்ஸ் நகரில், புலம்பெயர்ந்த இத்தாலிய இரயில்வே தொழிலாளி மரியோ ஜோசப் பெர்கோலியோவிற்கு மகனாகப் பிறந்த ஜார்ஜ் மரியோ பெர்கோலியோ, அடிப்படையில் ஓர் ஏழை. ஆகவே, சிறு வயது முதலே ஏழைகள் மீது இரக்கம் இயல்பாகவே இவருக்கு வசப்பட்டது. இளமையில் குடும்பத்தில் பெற்ற அனுபவப் பாடம் மற்றும் வாலிபத்தில் இயேசு சபையில் இணைந்து எளிமையான வாழ்வைத் தனக்கென வகுத்துக் கொண்டது இவரது குருத்துவ வாழ்வுக்குத் தனி அடையாளத்தைத் தந்தன.
இயேசு
சபைத் துறவி, அருள்பணியாளர், ஆயர், பேராயர், கர்தினால், திருத்தந்தை எனப் பணிவாழ்வு பரிணமித்தாலும், ஜார்ஜ் மரியோ தன் அடையாளத்தைத் தக்க வைத்துக்கொண்டு தன்னை ஏழைகளின் பங்காளனாய் வடிவமைத்துக் கொண்டார். இவர் ‘பிரான்சிஸ்’ எனும்
பெயரை அனிச்சைச் செயலாகத் தேர்ந்து கொள்ளவில்லை. அசிசி நகரத்துப் பிரான்சிஸ் செல்வக் குடியில் பிறந்தாலும், கட்டிய ஆடையைக் கூட பிறந்த வீட்டில் வீசிவிட்டு வெறுங்கையராய் வாழ்வை நடத்தியவர். அவர் பெயரை இவர் தேர்ந்து கொண்டபோதே தன் வாழ்வின் அடையாளத்தை உலகிற்கு வெளிப்படுத்தினார்.
வரலாற்றில்
திருத்தூதர்களின், பிரபலமான புனிதர்களின் பெயர்களையே திருத்தந்தையர்கள் தேர்வு செய்வதுண்டு. சிலரது பெயரைப் பல திருத்தந்தையர்கள் தேர்ந்து கொண்டு
வரலாற்றில் தங்களை ஒன்றன்பின் ஒன்றாக வரிசைப்படுத்திக் கொள்வதுண்டு. ஆனால், கடந்த காலத்தில் எவருமே தெரிவு செய்யாத அசிசி நகரத்துப் புனிதரான பிரான்சிஸின் பெயரைத் தேர்வு செய்து தன்னை வித்தியாசமானவராக விலாசப்படுத்திக் கொண்டார். திருத்தந்தையாகத்
தேர்வு பெற்றவுடனே அவர் மொழிந்தவை வரலாற்றுப் பதிவேடுகளில் தடம் பதித்தவை. “என் மக்கள் ஏழைகள் எனவும், தான் அவர்களில் ஒருவன் என்பதையும்...” என்று அவர் குறிப்பிட்டபோது அது உதட்டளவில் மட்டும் நின்றுவிடவில்லை. திருத்தந்தையர்களுக்கான பிரத்யேக மாளிகையில் தங்காமல், நகருக்கு வெளியே இருந்த ‘புனித மார்த்தா இல்லம்’ என்ற பயணியர் விடுதியிலே சாதாரண நபராய்த் தங்கியிருந்து தனது உணவைத் தானே சமைத்து உண்டு வந்தார் என்பது எண்ணிப் பார்க்க முடியாத நிகழ்வு.
இவரது
எண்ணமும் ஏக்கமும் ஏழைகளைப் பற்றியதே என்பதற்கு ஏராளமான உதாரணங்களை எடுத்துக்கூறலாம். அர்ஜென்டினாவின் வறுமை படிந்த வீதிகளை வாழ்வில் தெரிந்திருந்த காரணத்தால், அவர் ஏழைகள்மீது கரிசனை கொண்ட இரக்கத்தின் கவிதையாக இந்த உலகிற்கு அறியப்பட்டார். புலம்பெயர்ந்தவர்களில் பலர் போதிய வருமானம் இல்லாதவர்கள். சிலர் சட்டப்பூர்வ புலம்பெயர்வு பதிவு பெறாத காரணத்தால் அவர்களின் உழைப்புச் சுரண்டப்பட்டது. அர்ஜென்டினா மட்டுமின்றி, அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் புலம்பெயர்ந்தவர்கள் புலம்பல் வாழ்வையே கொண்டிருக்கின்றனர். இந்த நிலையை நெஞ்சுக்குள் சேகரித்து வைத்திருந்த இந்த ஏழைப்பங்காளன், 2015, செப்டம்பர் அன்று அமெரிக்க மண்ணில் காலடி பதித்தபோது, தன் அடையாளத்தையும் நிலைப்பாட்டையும் உறுதிபடக் காட்டினார். தலைநகர் வாஷிங்டனில் வந்து இறங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், அமெரிக்க நாடாளுமன்றப் பிரதிநிதிகளுடன் மனந்திறந்து உரையாடினார். உலக வறுமை, புலம்பெயர்ந்தோர் கண்ணீர், வளரும் வன்முறை, பூமி வெப்பமயமாதல் என்று நீள்கிற மக்கள் பிரச்சினைகளே அவரது உரையை நிரப்பியிருந்தன. அதே அவையின் மேல் தளத்தில் நின்று கூடியிருந்த மக்களை நோக்கிக் கருணை பொங்க அவர் உரை நிகழ்த்தியது, இயேசு மலைமீது ஏறி அமர்ந்து மக்கள் கூட்டத்திற்கு உரையாற்றியது போலிருந்தது.
பத்து
பேர் கூடினாலே ‘மாநாடு’ என்று தலைப்புச் செய்தி வெளியாகும் அமெரிக்க மண்ணில், அவர் இலட்சக்கணக்கான சாதாரண மக்கள்முன் உரையாற்றியபோது கூட்டத்தில் ஒருவனாய் அமர்ந்து உரை கேட்ட நான், கண்ணீரோடு அவர் கருத்துகளை இதயத்தில் அமர்த்திக்கொண்டேன். ஆசி வழங்குவதும் கைகுலுக்குவதும் மறையுரையாற்றுவதுமே சமயத் தலைவர்களுக்கு வழக்கமாகிப்போன நிலையில், திருத்தந்தை பிரான்சிஸ் புலம்பெயர்ந்த மக்களைச் சொந்த மக்களாக ஏற்றுக்கொள்வதுடன் கடவுள் தந்த செல்வத்தை இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளுங்கள் என்று ஒரு கருணைமிக்கத் தகப்பனாக அமெரிக்கர்களைக் கேட்டுக்கொண்டார்.
அமெரிக்கர்கள்
எல்லாரும் ஒரு காலத்தில் அம் மண்ணுக்குப் புலம்பெயர்ந்தவர்களே என்கிற வரலாற்று உண்மையை உரக்கக் கூறினார். முதலாளித்துவமே வேதமான அந்த வல்லாட்சி மண்ணில், எந்தத் தயக்கமும் இன்றி ஏழைகளுக்காக நீதி கேட்டது இந்தச் சோசலிசப் புறா! ஏடுகளை மேற்கோள்காட்டி, சமய உரை நிகழ்த்துகிற சமயத்தலைவர்கள் மத்தியில், வறியோரின் பாடுகளைச் சுட்டிக்காட்டி நீதி கேட்டவர் இவரைத் தவிர வேறு யார் இருக்க முடியும்?
திருத்தந்தை
பிரான்சிஸ் தனது அடையாளத்தைத் தன் நடை, உடை, பாவனைகளில் அடைத்துக் கொண்டார். முன்பிருந்த திருத்தந்தையர் அணியும் மரபு உடைகள், காலணிகள் இவற்றை எளிமையாக்கிக் கொண்டார். தெருக்களின் அறிஞர்கள் என அவர் அன்பொழுக
அழைத்த வீடற்ற ஏழை அகதிகளைக் கொண்டு வந்து வத்திக்கான் வளாகத்தில் குடியமர்த்தினார். புனித வியாழனன்று சடங்காகவே நடந்து முடிகிற பாதம் கழுவுதல் நிகழ்வை எதார்த்தச் செயலாக மாற்றிய இவர் - பெண்கள், கிறித்தவரல்லாதோர், சிறைக்கைதிகள், தெருக்களில் வாழ்க்கை நடத்திய ஏழைகள் ஆகியோரின் காலடிகளைக் கழுவி தன்னை ‘இயேசுவின் பணியாளன்’
என நிறுவினார். ஏழைகளுக்காகக் குரல் கொடுப்பது, அவர்களுக்கு வாழ்வு கொடுப்பது என்பனவற்றை இறையாட்சிப் பணியின் முதன்மையாகக் கொண்ட இவர், இந்த யூபிலி ஆண்டில் ஏழைகள், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினர் யாவரையும் எதிர்நோக்கின் திருப்பயணிகள் கூட்டத்தில் இணைத்துக்கொண்டார். “ஏழைக்கு இரங்குகிறவன் கடவுளுக்குக் கடன் கொடுக்கிறான்” என்ற
வகையில் தன் கருணைமிகு செயல்களால் இவர் கடவுளையே கடன்காரராக்கி விட்டார் என்றே சொல்ல வேண்டும்.
அவ்வாறே,
ஏழைகளுக்காகத் தன்னை ஏழையாக்கிக் கொண்டு, மரபுகளை உடைத்து மானுடத்தை நேசித்த நாசரேத் மரியாவின் மகனைக் குறை கூறிய கூட்டத்தைச் சட்டை செய்யாமல் சரித்திரம் படைத்தது போன்றே திருத்தந்தை பிரான்சிஸின் செயல்பாடுகளும் அமைந்திருந்தன. ஏழைகளின் நாடித்துடிப்பை அறிந்து அவர்களுக்குத் தொண்டாற்றுவதே இயேசுவின் குருத்துவப் பணி என்று எண்பித்த திருத்தந்தை பிரான்சிஸ், அவர் போன்றோ, இவர் போன்றோ, எவர் போன்றோ இல்லாத நிகர் இல்லாத் திரு அவையின் தலைவர்!
கிறித்தவ
மறைக்குள்ளே இருக்கிற ஏழைகள் மட்டுமல்ல இவரது இலக்கு மக்கள்; மறைகளைக் கடந்தும் விளிம்பு நிலையில் இருப்பவர்களை எப்போதும் நெஞ்சிலே சுமந்து களமாடியவர். ஆகவே, தகப்பனை இழந்த குழந்தைகளின் குமுறல் போன்ற நிலையே ஏழைப்பங்காளன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவு நம் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது என்பதே நிதர்சன உண்மை.