news
சிறப்புக்கட்டுரை
“தலை சாய்க்க இடமில்லை...”

அப்பத்தின் வீடுஎனப்படும் பெத்லகேம், தாவீது குலத்துத் தாய்மண். தலைமுறைகளுக்கான பூர்வீகப் பூமி. தாவீது அரசருக்குத் திருப்பொழிவு செய்யபட்ட அரச நகரம். பழைய ஏற்பாட்டு நூல்களில் இறைவாக்கினர்களால்  முன்னறிவிப்பு செய்யப்பட்ட  புண்ணிய பூமி. மீட்பரின் பிறப்பிற்கான பரிசுத்த பூமி. சூசை, மரியாவின் குடிக்கணக்கெடுப்பிற்கான அவர்களின் பயணம் - வாகன வசதிகள் இல்லாத பாலைவனப் பிரதேசத்தில் அக்காலத்தே நெடுந்தூர நடைபயணம்.

புதிய ஏற்பாட்டு நூலில் பாலஸ்தீன நாடு என்ற நிலப்படம் திருவிவிலியத்தில் உண்டு. கலிலேயாவின் நாசரேத்துக்கும், யூதேயாவின் பெத்லகேமுக்கும் உள்ள தூரம் அதிகம். அது வியக்க வைக்கும் நெடுந்தூரம்.

பெத்லகேம் எருசலேமிருந்து தொட்டுவிடும் தூரமே. தெற்கே 10 கிலோ மீட்டர்தான். பாலஸ்தீன நாடு முழுவதும் மலைப்பிரதேசம், பாலைவெளிகள், கடற்கரைகள் என்று பயணிக்கக்கூடிய கரடுமுரடான அமைப்பு கொண்ட நிலப்பரப்பு.

நிறைமாத கர்ப்பிணியான மனைவி மரியாவுடன் பெத்லகேம் சென்ற யோசேப்பு தங்கும் விடுதிகளில் தங்க இடம் தேடினார்; இடம் கிடைக்கவில்லை. திருவிவிலியம் கூறுகிறது... “விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை.” ஊரில் யாரும் உதவ முன்வரவில்லை. எளியோர் என்றும் பிறர் துன்பம் அறிவார்கள். அவ்வகையில் இடையர்கள் உதவ, ஒரு சிறு மலைக்குகையில்- மாட்டுக்குடிலில் மனுமகன்  பிறக்க இடம் கிடைத்தது.

நரிகளுக்குப் பதுங்கு குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலைசாய்க்கக்கூட இடமில்லைஎனும் இறைவாக்கை எண்ணிப்பார்க்கிறேன். எம் சிந்தனைகளோதலை சாய்க்கக்கூட இடமில்லைஎன்ற வார்த்தைகள் காலங்களில் தொக்கி நிற்கிறது.

இஸ்ரேல் அல்லது பாலஸ்தீன நாடுகளில் எந்த நாட்டில் பெத்லகேம் உள்ளது? பெத்லகேம் குறித்த தெளிவான  அரசியல் மற்றும்  வரலாற்றுப் பார்வை நம்மிடம் இல்லை. இதற்கு விடையாக இன்றைய பெத்லகேம் குறித்து செப்டம்பர் 25 தேதியிட்டநம் வாழ்வுமின் நாளிதழில் நமது ஆசிரியர் அருள்முனைவர் இராஜா அவர்கள் எழுதிய சிறப்புச் செய்திக் கட்டுரை வரலாற்றை வாசிக்க வைக்கிறது; அதைப் பகிர வைக்கிறது.

1967-வரை பெத்லகேமின் மேற்குக் கரை இஸ்ரேல் ஆக்கிரமிப்புப் பகுதியாக இருந்தது. 1967-இல் இஸ்ரேலுக்கும்  பாலஸ்தீனத்திற்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தால் பெத்லகேம் பாலஸ்தீனத்தின் கட்டுப்பாட்டில் வந்தது. ஆனால், தற்போது பெத்லகேம் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ளது.

வரலாற்றுப் பதிவுகளின்படி, பெத்லகேம் அரபு நாடுகளில் கிறித்தவர்களின் எண்ணிக்கை அதிகமுள்ள பகுதியாக இருந்தது. பெத்லகேமில் 1950-களில் அரபு நாடுகளின் கிறித்தவர்களில் 86 விழுக்காட்டினர் இருந்தனர். 2022-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 10 சதவிகிதமாகக் குறைந்து விட்டது. இஸ்ரேலின் நிலக் கையகப்படுத்தல் எனும் கட்டாயத்தால் புலம்பெயரும் அவசியம் பெத்லகேம் கிறித்தவர்களுக்கு உருவானது. பெத்லகேமில் கிறித்தவ மக்கள் 2017-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்குப்படி  28,591  என்ற எண்ணிக்கையில் மட்டுமே   வாழ்கிறார்கள். 2023, அக்டோபர் 7 அன்று தொடங்கியப் போருக்குப் பின்பு, சுற்றுலாவை நம்பியிருந்த பெத்லகேமின் பொருளாதாரம் பேரழிவைச் சந்தித்தது. பரிசுப் பொருள்கள், அங்காடிகள், அழகான ஆலிவ் மர வேலைப்பாடுகள், முத்து மற்றும் நகைகளை உற்பத்தி செய்யும் பட்டறைத் தொழில்கள் என எல்லாமே முடங்கின, மூடப்பட்டன. அரசின் தடை உத்தரவுகளால் மக்கள் வெளியே வர முடியாத அவல நிலை ஏற்பட்டது. நகரெங்கும் இருந்த 134-க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை, பொருளாதாரம், பணி சார்ந்த நடவடிக்கைகள் முடக்கப்பட்டன. இதன் உச்சக்கட்டமாக குடிநீருக்குப் பஞ்சம், தண்ணீருக்கு ரேசன் என நிலைமை மோசமானது. பாலஸ்தீனிய மக்கள்  தங்கள் சொந்த இடத்தில் தண்ணீரைத் தோண்டியெடுக்க அனுமதி மறுக்கப்பட்டது. பாலஸ்தீனியர்கள், இஸ்ரேலிய மக்களிடம் தண்ணீரை வாங்கியதால் ஒரு நபருக்கு ஒருநாள் தேவையில் ஐந்தில் ஒரு பங்கை மட்டுமே அவர்கள் தந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலஸ்தீனக் கிறித்தவர்கள் மற்றும் பெத்லகேம் கிறித்தவர்கள் ஆக்கிரமிப்புக் குடியிருப்புகளால் பாதிப்பு அடைகிறார்கள். பாலஸ்தீனியக் கிறித்தவர்களை - மண்ணின் மைந்தர்களை இயற்கை வளப் பகிர்வில் தரப்படும் அழுத்தங்கள் வழி அகதிகளாக உலகம் முழுவதும் தள்ளுகிறது. நான்கு மில்லியன் என்ற எண்ணிக்கையில் உள்ள பாலஸ்தீனியக் கிறித்தவர்கள் இன்று 1,68,000 என வெகுவாகக் குறைந்துள்ளார்கள். கடந்த ஆண்டில் கனடா மற்றும் அமெரிக்காவிற்கு 1000 பாலஸ்தீனியக் கிறித்தவர்கள் குடிபெயர ஒப்புதல் பெற்றுள்ளார்கள். பாலஸ்தீனத்திலும் காசாவிலும் உள்ள அரசியல் சூழல்கள் மாறும்போதுதான் பாலஸ்தீனியக் கிறித்தவர்களைக் காக்க முடியும்; அவர்கள் நிம்மதியாக வாழ வழி ஏற்படும்; புனித பூமியான பெத்லகேமைக் காக்க முடியும் என்பதே நடப்பு நிலை.

சமகால நிலையில் திருத்தந்தை மற்றும் இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும்புனித பூமியைக் காப்போம்என்ற மீட்புக் குரல்கள் பிறக்கின்றன. 2000-2005-ஆம் ஆண்டுகளில்  இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் உச்சம் தொட்டபோது, 2002-இல் தற்கொலைப் படையினர் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குவதைத் தடுக்கும் வகையில்  மேற்குக்கரை சுவர் கட்டப்பட்டது. இது இஸ்ரேலின் நிறவெறியின், இனவெறியின் அடையாளமாகவும், மேற்குக்கரை பிரிவினை தடைச்சுவராகவும்  கூறப்படுகிறது.

இந்தத் தடுப்புச்சுவர் பெத்லகேமை அதன் இதயமான எருசலேமிருந்து பிரிக்கிறது. இது    பெத்லகேமியர்கள் எத்தகைய  பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள் என்பதன் அடையாளமாக உள்ளது என்று பெத்லகேம் மேயர் மஹர் நிக்கோலா கன்வத் அவர்கள் திருத்தந்தையிடம் தெரிவித்துள்ளார். மேலும், பெத்லகேம் ஆயர் திருத்தந்தையிடம்புனித  பூமியில் அமைதி மற்றும் ஒற்றுமைக்காகச் செபிக்கவும், போர் நிறுத்தம்  ஏற்படவும், புனித பூமியில் உள்ள கிறித்தவர்களைப் பாதுகாக்கவும் வழிவகை காண வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாலஸ்தீனிய ஒழுங்குமுறைப்படி, மரபாக பெத்லகேமின் மேயர் கிறித்தவராக இருக்க வேண்டும் என்ற நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. இருந்தாலும், நாளுக்கு நாள் பெத்லகேம் கிறித்தவர்களின் எண்ணிக்கை குறைகிறது என்பதே நடப்புநிலை; இது மேலும் நமக்குக் கவலை தருகிறது.

மரபார்ந்த மானுடச் சமூகம், தேசத்தலைவர்கள் புனித பூமி குறித்த தங்களது வலிமையான கருத்துகள் வழி, மத வழிபாட்டு உரிமையைக் காக்க குரல் எழுப்பவேண்டும். எருசலேம் அழிவுகளிலிருந்து மீண்டு, அமைதிப் பூங்காவாக மாற போதிய அரசியல் சமரசங்கள் தேசங்களிடையே ஏற்படுத்தவேண்டும். எருசலேம் மதங்களின் தலைநகரம் என்பதால், அதன்  புனிதத்தன்மை போற்றப்பட அரசியல் தீர்வுகளுக்கு  உட்படுத்துதல் காலத்தே அவசியமானது.

பாலஸ்தீனத்திற்காக, எருசலேமிற்காக, பாலஸ்தீனிய, பெத்லகேம் கிறித்தவர்களுக்காகச் செபிப்போம்.

news
சிறப்புக்கட்டுரை
கிறிஸ்துமஸ் மென்மைப் புரட்சி!

கிறிஸ்து பிறப்பு விழா என்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வரலாற்றில் நடந்தேறிய ஓர் அழகான நிகழ்வினை நினைவுகூரும் கொண்டாட்டமாக மாறிவிடக்கூடாது. அது இறைமகன் இயேசு விருப்பத்துடனும் அன்புடனும் மகிழ்ச்சியுடனும் அக்கறையுடனும் இவ்வுலகில் ஏழ்மையில் வாழ்வோரின், நொறுக்கப்படுவோரின், வெறுக்கப்படுவோரின், ஒடுக்கப்படுவோரின், மென்மையானவர்களின், பலம் இழந்தவர்களின் வாழ்வில் பங்கெடுக்க எடுத்த நிலைப்பாட்டின் கொண்டாட்டம்! உடனிருப்பின் கொண்டாட்டம்! இயேசு மனுவுடல் ஏற்ற மறைபொருளை, தூரத்தில் நின்றுகொண்டு அதனை வியந்து பார்க்கவேண்டிய இறைவனின் செயலாக நாம் கடந்து செல்லக்கூடாது. மாறாக, அவரது மனுவுடல் ஏற்பினை நாமே நமது அன்றாட வாழ்வில் வாழ்ந்திட, நமக்கு வழங்கப்பட்டுள்ள சவால் மிகுந்த அழைப்பாக ஏற்கவேண்டும், அதனை வாழ்ந்திடவேண்டும்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் இறைவன் பிறந்த மாட்டுத்தொழுவத்தை நாம் அழகுபடுத்தி, ஒளிமயமாக்கி, மிகுந்த வண்ணங்கள் நிறைந்த இடமாக மாற்றி, அதன்மீது வழக்கமாக நமது கண்களைப் பதியவைப்போம். அவற்றைக் கடந்து மாட்டுத்தொழுவம் போன்று ஏழ்மையை, துன்பத்தை, புறக்கணிப்பை அன்றாட கசப்பான நிகழ்வாக-நிதர்சனமாகச் சந்திக்கும் மனிதர்கள்மீது நமது கண்கள் பதியட்டும்.

மனுவுடல் ஏற்பில்-ஏழ்மையே இறைவெளிப்பாடு

பெத்லகேமில் பிறந்த பாலன் இயேசுவிற்கு வசதியும், கவர்ச்சியான கண்கவர் பொருள்களும், சிறந்த மெத்தையும், சிறப்பு அரியணையும், சிவப்புக் கம்பள வரவேற்பும் வழங்கப்படவில்லை. சமுதாயம் புறக்கணித்த இயேசுவின் மனுவுடல் ஏற்பில் அவர்  தேர்ந்துகொண்ட இடமும், அப்பிறப்பினைச் சுற்றி நிகழ்ந்த நிகழ்வுகளும் அவரது தாழ்ச்சியின் வெளிப்பாடுகள். மனுவுடல் ஏற்பின் தாழ்ச்சி என்பது அன்று நடந்திட ஒரு சாதாரண சம்பவம் அல்ல; மாறாக, அதுவே இயேசுவின் நிலைப்பாடு. மனுவுடல் ஏற்பில் அவரின் ஏழ்மையும் தாழ்ச்சியும் இறைமையின் வெளிப்பாடுகள். அங்குதான், அம்மனநிலையில்தான் இறைவன் தம்மை வெளிப்படுத்துகின்றார்.

மனிதகுலத்தின் துன்பத்தை - தமது ஏழ்மையில் பகிர்ந்த இயேசு

அகிலத்தையும், அதில் உள்ள அனைத்தையும் படைத்த இறைவன் ஒரு சிறிய, பலவீனமான, ஏழ்மையான குழந்தையாக இக்கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் நம்மிடம் வருகின்றார். திருத்தந்தை 14-ஆம் லியோ தனது முதல் திருத்தூது ஊக்கவுரையானநான் உன்னை அன்பு செய்தேன்என்னும் ஆவணத்தில்நமது மனித இயல்பின் வரம்புகளையும் பலவீனங்களையும் பகிர்ந்துகொள்ளவே இயேசுவைச் சிறிய குழந்தையாகக் காண்போம். அவரே சிலுவையில் நமது வறுமையையும் இறப்பையும் பகிர்ந்துகொண்டார்எனக் குறிப்பிடுகிறார்.

இயேசுவின் மனுவுடல் ஏற்றல் என்பது சமூகத்தில் பலம் இழந்து நிற்பவர்கள், உரிமையும் மாண்பும் மறுக்கப்பட்டவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்கள் சார்பாக அவர் இருக்கின்றார். அவர்களுக்காகவே மாபெரும் நற்செய்தியாகப் பிறந்திருக்கின்றார். அவர்களின் இருளைப் போக்கும் பேரொளியாக உதிக்கின்றார் (பிலி 2:6-9) என்பதை உணர்த்துகின்றது. உடனிருக்கும் இயேசுவின் இத்தகைய நிலைப்பாட்டினைத் தியானிக்காமல் நம்மால் அர்த்தமுள்ள கிறிஸ்து பிறப்பைக் கொண்டாட இயலாது.

கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியைநான், ‘எனதுஎன்னும் சிறிய வட்டத்தில் குறுக்கிவிட முடியாது. இயேசுவின் பிறப்பினைக் கண்டு நான் மட்டும் மகிழ்வது அல்ல; அவர் நேசித்து, உடனிருக்க விரும்பும் மக்களுடன் நாமும் உடன் பயணிக்க வேண்டும்.

ஆண்டில் சில திருவிழா நாள்களில், யூபிலிக் கொண்டாட்டங்களில் மட்டும் இத்தகைய மனிதர்களுக்கு உதவிட திரு அவை நம்மை அழைக்கவில்லை; மாறாக, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு முடிவுகளிலும் இத்தகையோருடன் உடனிருக்க நாம் அழைக்கப்பட்டிருக்கின்றோம்.

உடனிருப்பது - உணர்வுநிலை அல்ல; வாழ்வு முறை

இயேசு மனிதராகப் பிறந்து, நம்மிடத்தில் வாழ்ந்தார். இயேசுவின் உடனிருப்பு என்பது உணர்வுநிலை அல்ல; அது வாழ்வுமுறை. உணர்வு நிலையாக இருந்தால் காலச்சூழலுக்கு ஏற்ப மங்கிவிடும், மறைந்துவிடும்.

உடனிருத்தல் என்பது கடைநிலை மனிதருக்கு ஒருசில நேரங்களில் உதவுவது மட்டுமல்ல; மாறாக, சமூகமாகச் சிந்தித்து, சமூகமாக இத்தகையோருக்காகச் செயல்படுவது (திருத்தந்தை பிரான்சிஸ், ‘அனைவரும் உடன்பிறந்தோர், 116). “நமது அன்றாடச் செயல்பாடுகளில், அலுவல்களில் அதிக முனைப்போடு ஈடுபடுத்திக்கொண்டு, எனது இத்தகைய பொறுப்புகளால், பணிகளால், வாழ்வு முறையால் ஏழைகள்மீது கவனம் செலுத்தவும், அவர்கள் அருகில் இருக்கவும் என்னால் இயலவில்லை என ஒருபொழுதும் நாம் கூறக்கூடாது (திருத்தந்தை பிரான்சிஸ், ‘மகிழ்ச்சியின் நற்செய்தி 201). இதுவே கிறிஸ்து பிறப்பின் அழைப்பு!

ஏழைகளே இயேசுவைத் தாங்கி நிற்கிறார்கள்

ஏழைகளே கிறிஸ்துவைத் தாங்கி நிற்பவர்கள். அவர்களே நமக்குக் கிறிஸ்துவை வெளிப்படுத்துபவர்கள். அவர்களின் துன்பமான வாழ்வின் சூழலிலும் வெளிப்படும் இறைநம்பிக்கை, எதிர்நோக்கு, மனவுறுதி, விடாமுயற்சி... இவைகளெல்லாம் நமக்கு அவர்கள் கற்பிக்கும் பாடங்கள். எனவே, ஏழைகளே நமது கிறிஸ்துமஸ் ஆசான்கள்.

ஏழைகளில் நாம் கிறிஸ்துவைக் காண, கண்டுபிடித்து, அவர் கரம்பற்ற அழைக்கப்பட்டுள்ளோம். நம் இறைவன் அவர்கள் வழியாக வெளிப்படுத்தும் மறைபொருளை, ஞானத்தை நாம் அறிந்துகொள்ள வேண்டும். நமது குரல்கள் அவர்களுக்காக ஒலிக்க வேண்டும். அவர்களை நண்பனாக்கி, அவர்களின் குரலுக்குச் செவிமடுத்து, இறைவன் அவர்கள் வழியாக உரையாடுவதை உணரவேண்டும். அது ஒருவரின் தனிவிருப்பச் செயல்பாடு அல்ல; மாறாக, இதுவே நற்செய்தியின் மையம் (திருத்தந்தை பிரான்சிஸ், மகிழ்ச்சியின் நற்செய்தி).

இயேசுவின் மனுவுடல் ஏற்பு - ஒரு மென்மைப் புரட்சிக்கு, ஒரு மௌனப் புரட்சிக்கு வித்திட்டது (திருத்தந்தை பிரான்சிஸ், ‘மகிழ்ச்சியின் நற்செய்தி 88). அவரது மனுவுடல் ஏற்புஅவரது மென்மையின் வெளிப்பாடு. ஆனால், அது பலவீனம் அல்ல; அது துணிவின் வெளிப்பாடு. இயேசுவின் மனுவுடல் ஏற்பு ஒரு துணிவான முடிவு. அவரே இன்னும் பலமிழந்த எளியவர்கள், புறம்பே தள்ளப்படுபவர்கள் மத்தியில் அவர்களின் வாழ்வினை மாற்றிட மென்மையான குழந்தையாகப் பிறக்கின்றார். அவர்கள் மத்தியில் பிறக்கும் இயேசுவைக் காண்பதுதான் உண்மையான கிறிஸ்துமஸ்.

கிறிஸ்துமஸ் காலத்தின் சில கேள்விகள்

கிறிஸ்துமஸ் காலத்தில் இயேசுவின் முன்பாக நாம் குனிந்து முழந்தாளிட்டு பின்வரும் கேள்விகளுக்கான பதில்களைத் தேடுவோம்.

நான் பாலன் இயேசுவை அழகான, ஆடம்பரமான, வசதியான இடங்களில் மட்டும் தேடுகின்றேனா? அல்லது துன்பப்படுவோரின் முகங்களில், இருப்பிடங்களில் தேடுகின்றேனா?

என் பங்கில், நகரில், கிராமத்தில், அருகாமையில், வாழ்விடங்களில் மறக்கப்பட்டவர்கள் யார், யார்? நான் அவர்களிடம் சென்று உரையாடி, மனுவுடல் நிலைப்பாட்டினை வெளிப்படுத்த என்ன செய்ய வேண்டும்?

என் கிறிஸ்துமஸ் பகிர்வும், வெளிப்படுத்தும் அக்கறையும் கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாக மட்டும் உள்ளனவா? அல்லது அவர்கள் மீதான ஆழமான அன்பாக, நிலைப்பாடாக மாறுகின்றதா?

இறுதியாக...

கிறிஸ்துமஸ் விழாவின் ஆன்மாவிற்குள் சென்று அதனைக் கொண்டாடிட அன்னை மரியாவுடனும் யோசேப்புடனும் உடன் நடந்து, மேய்ப்பர்களின் அருகில் நாமும் முழந்தாளிட்டு, கைவிடப்பட்டோரின், புறக்கணிக்கப்பட்டோரின் நம்பிக்கையாக, எதிர்நோக்காக, விடிவெள்ளியாக மனுவுடல் ஏற்கும் இயேசுவைக் கண்டு, அவரைத் தாங்கிக்கொள்வோம். இயேசு தம்மை வெளிப்படுத்த விரும்பும் இடத்தில் அவரைத் தேடுவோம்! கண்டு கொள்வோம்!

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்!

news
சிறப்புக்கட்டுரை
புனித யூஜின் டி மாசனெட் துறவற சபையின் இரண்டாவது பொதுப்பேரவை - 2025

புனித யூஜின் டி மாசனெட் துறவற சபையின் (SDM) இரண்டாவது பொதுப்பேரவைக் கூட்டம் கடந்த அக்டோபர் 15 மற்றும் 16 ஆகிய நாள்களில் சென்னை, புனித தோமையார் மலையில் அமைந்துள்ள DMI தேசிய மையத்தில் நடைபெற்றது.

சபையின் நிறுவுநர் நினைவில் வாழும் மதிப்புமிகு பேரருள்பணி. ஜெரார்டு பிரான்சிஸ் OMI அவர்களின் நினைவுகளுடன் தொடங்கிய இக்கூட்டத்தில், பேரவைக்கான ஆன்மிகத் தயாரிப்பை அருள்பணி. ஜெரி சே.. வழிநடத்தினார். அவருடைய உரையாடலும், ஆன்மிகச் சிந்தனைகளும் சபை உறுப்பினர்கள் தூய ஆவியாரின் தூண்டுதலுக்குத் திறந்த மனநிலையுடன் தங்களையே அர்ப்பணிக்க உதவியாக அமைந்திருந்தன.

இப்பேரவையை ஒருங்கிணைத்து வழிநடத்துவதற்காக, செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயரும், இச்சபையின் திரு அவைசார் ஆலோசகருமான ஆயர் மேதகு நீதிநாதன் அவர்கள், செங்கல்பட்டு மறைமாவட்டத்தைச் சார்ந்த அருள்பணி. அருள்ராஜ் மற்றும் மறைமாவட்ட நிதி மற்றும் சொத்துகளின் கண்காணிப்பிற்கான திருத்தூது நிர்வாகி அருள்பணி. டேவிட் குமார் OMI ஆகிய இருவரையும் நியமித்தார். இவர்களின் வழிகாட்டுதலுடன் பேரவை அமர்வுகள் சகோதரத்துவ உணர்வு, தியானம், இறைவேண்டல் மற்றும் உரையாடல் வழியாகச் சபையின் நோக்கத்தையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தின. ஆழமான இறைவேண்டல் மற்றும் தூய ஆவியானவரின் வழிகாட்டுதலின்படி இந்தப் பேரவை சபையின் புதிய தலைவர்களைத் தேர்ந்தெடுத்தது.

இரண்டாவது பொதுப் பேரவையால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது நிர்வாகம்:

பேரருள்பணி. அந்தோனி அடிமை பிரான்சிஸ், SDM  - சபை தலைவர்

பேரருள்பணி. மரிய இராபர்ட் செபாஸ்டின், SDM - முதன்மை அருள்பணியாளர்

அருள்பணி. ஆன்ட்ரூ கஸ்பார், SDM - பொது ஆலோசகர்

அருள்பணி. ஸ்டீபன் குழந்தைசாமி, SDM - பொது ஆலோசகர்

அருள்பணி. கிரண்குமார் பட்டு, SDM - பொது ஆலோசகர்

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மேனாள் நிர்வாகத்தின் அர்ப்பணிப்பு நிறைந்த பணிக்கு நன்றி தெரிவித்ததுடன், புதிதாகக் கொடுக்கப்பட்டுள்ள பணியை மிகுந்த நம்பிக்கையுடனும் ஒற்றுமையுடனும் ஊக்கத்துடனும் செய்வதற்கான தங்கள் உறுதிப்பாட்டைப் புதுப்பித்தனர். சிறப்பாக நடைபெற்ற இந்தப் பொது அமர்வு, தங்கள் சபை நிறுவுநரான பேரருள்பணி. ஜெரார்டு பிரான்சிஸ் OMI அவர்களின் அர்ப்பணிப்பையும், அவரின் எதிர்கால முன்னுரிமைகளையும் மீண்டும் உறுதிப்படுத்தியது.

பேரருள்பணி. அந்தோனி அடிமை பிரான்சிஸ், SDM, சபை தலைவர், புனித யூஜின் டி மாசனெட் துறவற சபை

news
சிறப்புக்கட்டுரை
ஒரு ‘திலெக்சிட் தே’ கிறிஸ்துமஸ்!

தமிழ்நாடு ஆயர் பேரவைத் தலைவரின் கிறிஸ்துமஸ் செய்தி

நமது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் பல்வேறு மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களினாலும், பளிச்சிடும் அலங்காரங்களாலும், விற்பனை சார்ந்த நுகர்வுகளாலும் தனது அடிப்படைத்தன்மையை இழக்கும் அபாயத்தில் இருக்கும் இக்காலத்தில், திருத்தந்தை லியோ அவர்கள் அண்மையில் வெளியிட்ட திருத்தூதருக்குரிய ஊக்கவுரையானதிலெக்சிட் தேகிறிஸ்து பிறப்புத் திருநாளின் அர்த்தத்தைத் தெளிவூட்டுகிறது.

கிறிஸ்துமஸ் என்பது வசதியாக வாழ்பவர்களுக்கான அமைதியான இரவு அல்ல; அது ஒரு தீவனத்தொட்டியிலிருந்து முழங்கும் புரட்சிகர அறிவிப்பு. ஏழைகள், இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் துன்புறுத்தப்படுபவர்கள்மீது கடவுள் கொண்ட அற்புதமான அன்பின் சாட்சியம். கொண்டாட்டத்திலிருந்து ஒன்றிப்பிற்கும், வழிபாட்டிலிருந்து சாட்சியத்திற்கும் நம்மை அழைக்கும் அழைப்பாக அது விளங்குகிறது. முதலில், இச்செய்தி நமக்கு நினைவூட்டுவது, கிறிஸ்துமஸ் நிகழ்வின் மையத்தில் இறைவன் ஏழைகளைத் தேர்ந்தெடுத்ததன் சிறப்பினைக் கொண்டாடுவது. அதிகாரமும் பெருமையும் கொண்ட சத்தத்தால் நிரம்பிய உலகில், எல்லாம் வல்லவரான இறைவன் தமது வருகையைப் பிலாத்துவின் அரண்மனையிலும், எருசலேம் கோவிலின் முற்றங்களிலும் அறிவிக்கவில்லை; மாறாக, மனித வடிவத்தை ஏற்று, தம்மைத் தாழ்த்திக்கொண்டு, தீவனத்தொட்டியில் படுத்திருக்கும் ஒரு குழந்தையின் எளிய நிலையையே அவர் தேர்ந்தெடுத்தார் (பிலி 2:7). ‘திலெக்சிட் தேஇந்த அதிசய உண்மையைத் திடமாக உறுதிப்படுத்தி, “ஏழைகளின்மீது கூர்ந்த கருணை காட்டப்படுவதிலேயே தேவனின் இரக்கமிக்க அன்பு வெளிப்படுகிறதுஎன்று கூறுகிறது.

மேலும், ஏழைகள் நம்முடைய இரக்கப்பணியைப் பெறுபவர்கள் மட்டுமல்லர்; அவர்கள் இறைவார்த்தையைத் தாங்குபவர்களும் ஆவர் என்பதைதிலெக்சிட் தேவலியுறுத்துகிறது. இந்த ஆவணம் அவர்களைநற்செய்தி அறிவிக்கும் ஆசிரியர்கள் (எண் 79) என அழைக்கிறது. ஒதுக்கப்பட்ட சமூகங்களின் உரிமைகளை அவர்கள் தங்கள் பண்பாட்டை வடிவமைக்கத் தகுதியான உள்ளடக்கமானவர்கள் என நாம் அறிந்துகொள்ளவேண்டும் (எண் 100). துன்பங்களில் வழிநடத்தப்பட்ட அவர்களின் அனுபவங்கள்மற்றவர்கள் காணாத மேலான ஞானத்தைஅவர்களுக்கு அளிக்கிறது (எண் 102). இந்த அன்றாட உறுதிமொழியும், கடினச் சூழ்நிலைகளில் இறைவனைத் தேடும் நிலையும், அவர்களின் பற்றும் அவர்களை உண்மையானநற்செய்தி பரப்புபவர்கள்ஆக்குகிறது. பொன், சாம்பிராணி, வெள்ளைப்போளத்துடன் வந்த ஞானிகள், திருக்குடும்பத்தின் வறுமையிலே தமது உண்மையான செல்வத்தைக் கண்டதுபோல, ஆலயத் தொன்மையான போதனைகள் கூறுவதைப் போலவே ஏழைகளிடம் சமுதாயத்திற்குக் கற்பிக்க வேண்டியவை இருப்பதை உணர்கிறோம். முழுமையாக மனிதப் பிரிவினை சார்ந்திருந்த குழந்தை இயேசுவே இந்த முதல் ஆசிரியர். பலவீனத்தில் இறைவனின் வல்லமை வெளிப்படுவதை வெளிப்படுத்துபவர். பெத்லகேம் காட்சியே நமது மனத்தை அசைக்கிறது; அதிகாரத்திற்கு முன் அல்ல; அன்பால் தன்னிச்சையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வறுமையின் ஞானத்திற்கு முன் நம்மைத் தாழ்த்த அழைக்கிறது.

கிறிஸ்துமஸ் காலத்தில் நாம் செய்யும் ஒவ்வொரு சிறிய அன்புச்செயலும் தீவனத்தொட்டியின் முன் வைக்கப்பட்ட காணிக்கைகளின் தொடர்ச்சியே. ஆகவே, நமது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை முடிவாக அல்ல; ஆரம்பமாகக் காணும்படி இந்த மடல் நம்மை அழைக்கிறது. இறைவன் மனிதரான மறையுண்மையை, ஒருவர் மற்றவர் மீதுள்ள அன்பின் மூலம் எதிரொலிக்குமாறு உற்சாகப்படுத்துகிறது. இந்தக் கிறிஸ்துமஸில்திலெக்சிட் தேதீவனத்தொட்டியை நமது கைகளில் ஒப்படைக்கிறது. அது ஓர் அலங்காரம் அல்ல; நம்பிக்கையின் மாறாத அளவுகோல். இங்கே நாம் வசதியானோருக்கான தாலாட்டுகள் கேட்பது இல்லை; ஏழைகளுடன் நிற்க வேண்டிய இறைவனின் முழக்கத்தையே கேட்கிறோம். இந்த எளிய மாட்டுத்தொழுவத்தில் சமுதாயத்திற்கு இறைவார்த்தையைக் கற்பிக்கும் தகுதியைப் பெற்றவர்களையும், அதனை உலகனைத்திற்கும் பரப்புபவர்களையும் கண்டடைகிறோம். இங்கு கிறிஸ்துமஸ் ஒரு செயற்பாட்டு வினையாகிறது. உலகில் இயங்கும் கிறிஸ்துவைக் காண அழைக்கிறது. நம் கிறிஸ்துமஸ் கீதங்களில் பாடப்படும் அன்பு, ஆடையின்றி இருப்போரை உடுத்துவிக்கவும், பசித்திருப்போருக்கு உணவு கொடுக்கவும், புலம் பெயர்ந்தோரை வரவேற்கவும் வேண்டும்; ஏனெனில், அவர்களிலே ஒரு காலத்தில் வீடற்றிருந்த குழந்தையாகிய கிறிஸ்துவையே நாம் வரவேற்கிறோம் என்பதை உலகிற்கு மெல்ல உரைக்கிறதுதிலெக்சிட் தே.’

அனைவருக்கும் ஆசிர் நிறைந்த கிறிஸ்து பிறப்பு விழா வாழ்த்துகளையும், அருள் மிகுந்த 2026-ஆம் ஆண்டின் இறையாசிரையும் உரித்தாக்கிக் கொள்கிறேன்.

news
சிறப்புக்கட்டுரை
அரசியலில் A.I.-யின் தந்திரங்கள் (உலகம் உன் கையில் – 14)

மனிதத் தேவைகள் அதிகரித்துக் கொண்டே போகும் போக்கில், விஞ்ஞானம் (Science) மனிதனைத் தன் திசைக்கே அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது.

விஞ்ஞானம் ஆட்சியாளர்களுக்குத் தேவையான தகவல்களையும் கருவிகளையும் புதிய அணுகுமுறைகளையும் வழங்கி ஆட்சி அமைப்பிற்கு உதவுவது மட்டுமன்றி, ஆட்சியாளர்கள் தகுந்த கொள்கைகளை உருவாக்கவும் முடிவுகளை எடுக்கவும் முக்கியக் கருவியாக விளங்குகிறது.

புதிய தொழில்நுட்பங்களும் கண்டுபிடிப்புகளும் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், புதிய தொழில்களை உருவாக்கவும், பொருளாதார வளர்ச்சியைத் தூண்டவும் உதவுகின்றன. சமுதாயமும் சுற்றுச்சூழலும் (Society and environment) ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து செயல்படுவதையும், விஞ்ஞானம் மனித வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வருவதையும், இம்மாற்றங்கள் பொருளாதாரத்தில் பிரதிபலிப்பதையும் நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

இன்று உலக மக்கள் அனைவரும் ஒரே தரமான வாழ்க்கையைப் பெறாவிட்டாலும், பெரும்பாலானோர் விஞ்ஞான-தொழில்நுட்ப வளர்ச்சியின் பலன்களை அனுபவித்து வருகின்றனர் என்பது உண்மை. விஞ்ஞானமும் தொழில்நுட்ப வளர்ச்சியும் தானாக  வளரவில்லை. நாம் வாழும் பூமியின் இயற்கை வளங்களையும் செல்வங்களையும் முதலீடாக வைத்து அல்லது சில சமயங்களில் அவற்றைச் சிதைத்தும்தான் இந்த முன்னேற்றம் சாத்தியமாகியுள்ளது. இதற்கு நாம் இப்போது சந்தித்துக் கொண்டிருக்கும் காலநிலைமாற்றமே ஒரு சிறந்த சான்று. புவி வெப்பமடைதல், காலநிலை மாற்றம் போன்ற பிரச்சினைகள் இயற்கை வளங்களை அளவுக்கு அதிகமாகவும், அதிகாரத்தில் இருந்தோர் அறிந்தோ அறியாமலோ பின்பற்றிய முறையின் விளைவுகள் என்பதை மறுக்கமுடியுமா?

ஒரு காலத்திலிருந்த மன்னராட்சி (Monarchy) முடிந்து, இப்போது பெரும்பாலும் உலகளவில் குடியரசு (Democracy) முறையே நடைமுறையில் உள்ளது. இதனை எவ்வகையில் நாடுகள் செயல்படுத்தி வருகின்றன என்பது ஒருபுறமிருக்க, விஞ்ஞான வளர்ச்சி அரசியலை மாற்றி வருகின்றதைக் காணமுடிகிறது.

நாம் வாழும் உலகம் கடந்த 100 ஆண்டுகளில் மிகச் சிறியதாகிவிட்டதுபோல் தெரிவதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று விஞ்ஞான வளர்ச்சியினால் ஏற்பட்ட தொலைத்தொடர்பு (Communication), ஊடகம் (Media), வான்வழிப் பயணம் (Air travel) எனலாம்.

சென்ற நூற்றாண்டின் கடைசியில் (1980), .. உருவெடுத்தாலும் அடுத்த பத்து ஆண்டுகளில் இறங்குமுகத்தைக் கண்டது. ஆனால், இந்த நூற்றாண்டின் (2000) தொடக்கத்தில் புதிய திறனுடன் .. தொழில்நுட்பம் இன்று உலகளவிலும், நாடுகளின் ஆட்சி அமைப்பிலும், அரசியல் தேவைகளிலும் பெரும் பங்கு வகிக்கிறது.

ஆட்சிப்பீடத்தைப் பிடிக்க அரசமைப்புகள் எவ்வித உத்திகளையும் கையாளத் தயாராகிவிட்ட நிலையில், இன்றைய வியத்தகு விஞ்ஞான சாதனங்களும் அமைப்புகளும் பழம் நழுவி பாலில் விழுந்தாற்போலக் கிடைத்திருக்கின்றன.

சமூக ஊடகங்கள் (Social media)

பொதுவாக ஊடகங்களும், .. தொழில்நுட்பமும் இணைந்து செயல்படுவதைக் காண்கிறோம். இன்ஸ்டாகிராம், டுவிட்டர், முகநூல், ரெடிட், டிக்டாக் (Instagram, Twitter, Facebook, Reddit, Tik Tok, YouTube, Linked in) என்று பல சமூக வலையமைப்புகள்! தவிர அரசு, தனியார் சார்ந்த தொலைக்காட்சி நிறுவனங்கள், செய்தித்தளங்கள் இவையனைத்தும் செய்தியைப் பகிர்வதும், ஒளிபரப்புவதும் நடைமுறையில் உள்ளன. அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் சமூக ஊடக வலையமைப்புகள், தளங்களைத் தங்கள் அரசியல் தேவைக்குப் பயன்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது. இதன் மூலம் குடிமக்கள் பல்வேறு அரசியல் பிரச்சினைகள் குறித்துத் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் விவாதிக்கவும், குறுகிய காலத்தில் ஏராளமான மக்களைத் தொடர்பு கொள்ளவும், மக்கள் தங்கள் பிரச்சினைகளை ஆட்சியாளர்கள் கவனத்திற்குக் கொண்டு செல்லவும், பொது கருத்துகளை உருவாக்கவும் முடிகிறது.

 இவ்வாறு ஊடகங்கள் ஆட்சியமைப்பில் முக்கியப் பங்காற்றும் (Participationபெரும் சக்திகளாக உருவெடுத்துவிட்டன. சில தொலைக்காட்சிச் சேனல்களை (Channels), அரசியல் கட்சிகளும், தனிமனிதரும் தங்களுக்கென்று சொந்தமாக வைத்திருப்பது நடைமுறையாகிவிட்டது. அரசியல் தேவைக்காகச் செய்திகளை அவர்களாகவே தயாரித்து ஒளிபரப்புவதும், அதில் பிறர் தலையிடமுடியாத நிலையும் இன்றுள்ளது.

வலிமையான சில அரசியல் கட்சிகள், பல தொலைக்காட்சிச் சேனல்களை வசப்படுத்தி அரசியல் செய்திகளைத் தங்கள் கட்சிக்குச் சாதகமாக ஒளிபரப்புவதை மக்களும் பார்த்துப் பழகிக்கொண்டனர்.

தேர்தல் யூகங்கள், முன்கணிப்புகள் என்று கூறி சில ஊடகங்கள் கட்சிகளுக்குச் சாதகமாகப் புள்ளி விவரங்களைச் செய்திகளாக ஒளிபரப்புவது அன்றாட நிகழ்வாகிவிட்டதற்குக் காரணம் தொழில்நுட்பமா? கட்சிகளா? அல்லது கண்டும் காணாமலிருக்கும் பொதுமக்களா? என்ற வினாவிற்குப் பதில் இல்லாத நூற்றாண்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இன்றைய சமூக ஊடகங்கள்போலியில் போலி (Deep Fake) என்னும் கடலில் மூழ்கிவிடும் சூழலில், அரசியல் களத்தில் இத்தொழில்நுட்பம் ஒருபுறம் கவரும்படியான செய்திகள்; மறுபுறம் ஜோடித்த உண்மையற்றவைகளைப் (Misinformationபரப்ப உதவுகின்றன. இதன் விளைவாக, குடியரசுக் கட்டமைப்பில் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதில் மக்கள் குழப்பநிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

ஓர் ஆராய்ச்சியாளர், இன்றைய .தொழில்நுட்ப சமூக ஊடகத்தை அணு தொழில்நுட்பத்துடன் ஒப்பிடுகிறார். எவ்வாறு அணு தொழில்நுட்பம் மின்சக்தி உற்பத்திக்கு நன்மைபயக்கும் அதே வேளையில், அணு ஆயுத உற்பத்தியால் மனிதகுலத்திற்கே ஆபத்தாகவும் அமைந்திருக்கிறதோ, அதேபோன்று ..-க்கும் இரட்டை வேடம் தரித்து அதில் ஆதாயம் தேடப்படுகிறதோ? என்ற கேள்வி எழுவதாகக் கூறுகிறார்.

(தொடரும்)

news
சிறப்புக்கட்டுரை
இஸ்திரிப் பெட்டி (வலையும் வாழ்வும் – 34)

அது ஓர் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கொண்ட பகுதி. வானுயர வீடுகள் இல்லையென்றாலும், இரண்டு மூன்று மாடிகளில் வீடுகள் அட்டைப் பெட்டிகளைப்போல அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு கதையைக் கூறும் வகையில் கவித்துவமாகக் காட்சியளித்தன.

துள்ளியோடும் மான்குட்டியைப்போல பாவாடைச் சட்டையோடு ஏழு வயது ஜாஸ்பின் குதூகலமாக அந்தஅமேஃயீங்அப்பார்ட்மெண்ட் தெருக்களில் தினமும் ஓடித்திரிவாள். ஜாஸ்பினுடைய பெற்றோர் அந்த அப்பார்ட்மெண்ட்காரர்களின் துணிகளுக்கு இஸ்திரிப் போட்டுத் தருபவர்கள். தினமும் வீட்டிலிருந்து குடும்பத்தோடு தங்கள் மூன்று சக்கர சைக்கிளில் வந்துவிடுவார்கள். அந்த மூன்று சக்கர சைக்கிள் இஸ்திரிப் போடுவதற்காகவே நடுவில் பலகை அடிக்கப்பட்டுப் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டிருந்தது.

ஜாஸ்பினும், அவளுடைய தாயும் பின்பக்கமாக அமர்ந்துகொள்ள, அந்த மூன்று சக்கர சைக்கிளை அவளுடைய தந்தை, ஒரு தேரை இழுத்து வருவதைப்போல இழுத்து வருவார். அந்தச் சைக்கிள் ஓட்டிச்செல்வதற்கு ஏற்றதாக இல்லை. ‘அமேஃயீங்அப்பார்ட்மெண்ட் தெருக்களில் செல்வதற்கு ஜாஸ்பினுக்கு ஆர்வமாக இருக்கும். தினமும் வருகிறபோதும் போகிறபோதும், அத்தெருவில் ஓடியாடி விளையாடுகிறபோதும், இஸ்திரி போடப்பட்ட துணிகளை வீடுகளுக்குச் சென்று கொடுத்துவரப் போகிறபோதும் அந்த வீடுகள் அவளுக்குப் பிரமிப்பை ஏற்படுத்தும்.

மஞ்சள் பெயிண்ட் அடித்த வீட்டிற்குமஞ்சணத்திஎன்று பெயர் வைத்தாள். வெள்ளை நிற வீட்டிற்குவெளுப்பி.’ வீட்டின் முன்பாகக் கொடிகள் படர்ந்திருந்த வீட்டின் பெயர்பூங்கொடி. இப்படி ஒவ்வொரு வீட்டிற்கும் அவள் பெயர் வைத்திருந்தாள். சில வீட்டுச் சன்னல்கள் அவளைப் பார்த்துக் கண்ணடிக்கும்; வீட்டு மாடியில் காய்ந்துகொண்டிருக்கும் துணிகள் அவளைப் பார்த்துக் கையசைத்து அழைக்கும். சிலசமயம் அந்த வீடுகளோடு அவள் பேசுவதும் உண்டு. அந்த அப்பார்ட்மெண்ட் தெருக்களில் அவளைத் தெரியாத யாரும் இல்லை, எந்த வீடும் இல்லை.

ஒருநாள் காலைஅமேஃயீங்அப்பார்ட்மெண்ட் எதிர்புறம் இருந்த குடிசை வீடுகளை இடித்துப் போட புல்டோசர் வண்டி ஒன்று வந்து நின்றது. அந்தச் சேரிப்பகுதியில் வாழ்கின்ற மக்கள் எல்லாரும் தங்கள் தலையிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுதனர். சாலையில் அமர்ந்து போராட்டம் செய்தனர். அவர்களுள் ஜாஸ்பினும் ஒருவர்.

அதிகாரிகள் பின்வாங்குவதாக இல்லை. ‘நீங்க இருக்கிறது புறம்போக்கு நிலம்; பிரச்சினை பண்ணாமல் உடனே காலி செய்யுங்கள்என்று அதிகாரி ஒருவர் ஒலிப்பெருக்கியில் கூறிக் கொண்டிருந்தார்.

எங்க வீடுகளை இடித்தால் நாங்கள் எங்கே சாமி போவோம்?’ என்று மூதாட்டி ஒருத்தி அதிகாரி ஒருவரிடம் மன்றாடிக் கொண்டிருந்தார். செவிடன் காதில் ஊதப்பட்ட சங்கு சத்தம் போல, வந்திருந்த அதிகாரிகளுக்கு அங்கிருந்த யார் சொல்லும் கேட்கவில்லை.

வீடுகள் அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்டன. குழந்தைகள் கட்டிய கடற்கரை மாளிகையை ஏதோ பெருத்த கால்கள் மிதித்துச் செல்வதைப் போல, அந்தப் புல்டோசர் இயந்திரம் அந்த ஏழைக் குடில்களை இடித்துப்போட்டுச் சென்றது. மழைக்காலத்தில் முட்டைகளையும் தானியங்களையும் சுமந்து தப்பிச்செல்லும் எறும்புகளைப்போல, ஒவ்வொருவரும் அவரவர் வீட்டின் எச்சங்களைச் சுமந்து கொண்டு புறம்போக்கு நிலம் தேடிச்சென்றனர்.

சில நாள்கள் கழித்து, ‘அமேஃயீங்அப்பார்ட்மெண்டிற்கு வழக்கம்போல ஜாஸ்பினும் அவளுடைய குடும்பமும் மூன்று சக்கர சைக்கிளில் வந்தனர். எப்போதும் துள்ளித்திரியும் ஜாஸ்பின் அன்று பெரும் கவலையில் இருந்தாள். எல்லாரிடமும், ‘இனி நாங்கள் இங்கு வரமாட்டோம்; வேறு இடத்திற்குச் சென்றுவிட்டோம்என்று கூறவும், ‘அமேஃயீங்அப்பார்ட்மெண்டிலிருந்து பெறவேண்டிய பாக்கி ரூபாயைப் பெற்றுக்கொள்ள வந்திருப்பதாகவும் அந்தக் குடும்பம் கூறியது.

அங்குக் குடியிருந்தவர்களில் யாரும் அவர்களைப் பார்த்து, ‘இங்கேயே கொஞ்ச நாள் தங்கிக்கொள்ளுங்கள்; உங்களுக்குச் சிறு இடத்தை ஏற்பாடு செய்து தருகிறோம்என்று ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை. பணத்தைக் கூட யாரும் கூடுதலாகக் கொடுக்கவில்லை.

பத்து ஆண்டுகள் இந்த அப்பார்ட்மெண்டில் உள்ளவர்களுக்குத் துணி இஸ்திரி பண்ணிக் கொடுத்தும் கொஞ்சம்கூட இவர்களுக்கு நன்றியுணர்வு இல்லையேஎன்று அவளுக்குத் தோன்றியது. அங்கிருந்த ஒவ்வொரு வீடும் ஜாஸ்பினுடன் ஏதோ பேச முயற்சித்தன. ஆனால், அவளுக்கு இப்போதெல்லாம் அந்த வீடுகளையும், வீட்டில் உள்ளவர்களையும் பிடிக்கவே இல்லை. அவற்றையெல்லாம் வில்லன்கள் போலவே பார்த்தாள். ‘வெளுப்பிகைகொட்டிச் சிரிப்பதைப் போலிருந்தது. ‘மஞ்சணத்திநக்கலடிப்பதைப் போலிருந்தது. ‘பூங்கொடிஏளனச் சைகை காட்டினாள் என்றே அவளுக்குத் தோன்றியது. ‘இஸ்திரிப்பெட்டி ஒன்றைக் கொண்டு இந்தப் பூமியையே சமப்படுத்திவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!’ என்று எண்ணிக்கொண்டாள். சைக்கிளின் பின்புறத்தில் உட்கார்ந்து அழுதுகொண்டே அந்தஅமேஃயீங்அப்பார்ட்மெண்ட் வீடுகளை ஏக்கத்தோடு பார்த்தவாறே கடந்து சென்றாள் ஜாஸ்பின்.

ஜாஸ்பினைப்போல சமத்துவத்திற்காகவும் சமூக நீதிக்காகவும் மக்களின் பாதுகாப்பிற்காகவும் ஏங்கக்கூடிய ஏராளமான சிறுமிகள் இவ்வுலகில் உள்ளனர். அதிலும் குறிப்பாக, இணையப் பாதுகாப்பு பற்றித் தொடர்ந்து பேசிவருகின்ற அமெரிக்காவைச் சார்ந்த தேஜஸ்வியைப் பற்றிக் கூறலாம். சைபர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை தேஜஸ்வி தொடர்ந்து வழங்கி வருவதால்டைம் (Time) பத்திரிகை அச்சிறுமியின் புகைப்படத்தை 2025, செப்டம்பர் மாத இதழின் அட்டைப்படத்தில் வெளியிட்டுக் கௌரவித்தது.

ஒருமுறை தேஜஸ்வியின் தாத்தாவிற்கு ஈமெயில் ஒன்று அவளுடைய மாமாவிடமிருந்து வந்திருந்தது. அதில், ‘ஏற்கெனவே எனக்குக் கொடுக்கவேண்டிய இரண்டாயிரம் டாலர் பணத்தை உடனடியாகக் கொடுக்கவேண்டும்என்று குறிப்பிட்டிருந்தது. எண்பத்தைந்து வயதான தேஜஸ்வியின் தாத்தாவும், ஏதாவது அவசரத் தேவையாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டு அவசரம் அவசரமாக இரண்டாயிரம் டாலர் பணத்தை ஏற்பாடு செய்தார். பணத்தைத் தயார் செய்துவிட்டு அந்த ஈமெயிலில் குறிப்பிடப்பட்டிருந்த வங்கிக்கணக்கிற்கு அனுப்புவதற்கு முன்பாக தன் மகனிடம் ஒரு வார்த்தைக் கேட்டுவிடலாமே என்று எண்ணி தேஜஸ்வியின் அப்பாவிற்குத் தொலைப்பேசி செய்திருக்கிறார். இது ஏமாற்றுவேலையாக இருக்குமோ என்று நினைத்த தேஜஸ்வி அவளுடைய தாத்தாவிடம் பணம் அனுப்புவதைத் தற்காலிகமாக நிறுத்துமாறு கேட்டுக்கொண்டு, தன் மாமாவிற்குக்கால்செய்து பேசும்போது அவர், ‘அப்படிப் பணம் கேட்கவே இல்லை; சில நாள்களுக்கு முன்பாக என் ஈமெயிலை யாரோஹேக்செய்துவிட்டார்கள்என்று கூறியிருக்கிறார். கடைசியாக இது சைபர் கிரிமினல்களின் வேலை என்பது உறுதியானது.

இந்த நிகழ்விற்குப் பிறகு தேஜஸ்வி இதனைப் பற்றி பல ஆய்வுகளை மேற்கொள்கிறாள். அதில், ‘குறிப்பாக 2024-ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் 8,60,000 சைபர் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றனஎன்றும், அதில் பெரும்பான்மையான குற்றங்கள் அறுபது வயதிற்கு மேற்பட்ட முதியவர்களைக் குறிவைத்தே நடைபெறுவதாகத் தன் ஆய்வில் தேஜஸ்வி அறிந்துகொண்டாள்.

இருளைப் பழிப்பதைவிட, ஒளியேற்றுவது மேல்என்ற கூற்றிற்கேற்ப, தேஜஸ்விqield Seniorsஎன்னும் இணையத்தளம் மூலம் பெரியவர்களுக்கான சிறப்பு வகுப்புகளை நடத்தினாள். தேஜஸ்வியுடைய இந்த முயற்சி சைபர் குற்றங்களிலிருந்து பலரைக் காப்பாற்றியதோடு, பலருக்கும் சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது.

பெரியவர்களிடமிருந்து சிறியவர்கள் கற்றுக்கொள்கின்ற சூழல் மாறி, சிறியவர்களிடமிருந்து பெரியவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய சூழல் இன்று உருவாகிக் கொண்டிருக்கின்றது என்பதை எல்லாரும் ஏற்றுக்கொள்ளதான் வேண்டும்.